மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு


கத்தோலிக்க மத அதிகார பீடமான வாடிகன் இந்த வருடம் செப்டம்பர் 4 அன்று மதர் தெரசாவை ‘புனிதர்’ என்று அறிவித்தது. எல்லாத் தமிழ் ஊடகங்களும் மெய்சிலிர்ப்புடனும் புளகாங்கிதத்துடனுமே இச்செய்தியைப் பரப்பின. அத்தருணத்தில் சமூக வலைத்தளங்களிலும் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ போன்ற பிரபல இந்திய ஆங்கில ஊடகங்களிலும் மதர் தெரசா குறித்த முக்கியமான, ஆதாரபூர்வமான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அது எதுவும் துரதிர்ஷ்டவசமாகத் தமிழர்களை வந்தடையவில்லை. அந்த அளவுக்கு ‘அன்பின் அடையாளம்’ ‘சேவையின் திருவுருவம்’ என ‘அன்னை’ தெரசாவைப் பற்றிய ஒற்றைப்படையான பிம்பம் இங்குக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

“கல்கத்தா நகரத்தில் நாள்தோறும் அலைந்து குப்பைமேடுகளிலிருந்தும் சாக்கடை ஓரங்களிலிருந்தும் ஆதரவற்றவர்களைத் தான் சுமந்து வந்ததாகவும், 9,000 ஏழைகளுக்குத் தினமும் உணவளித்ததாகவும், நிர்மல் ஹிருதய் (முற்றிய நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக மதர் தெரசாவால் தொடங்கப்பட்ட இல்லம்) என்ற இல்லத்தை நாடி வந்தவர்கள் ‘அழகிய மரணத்தை’ (Beautiful Death) தழுவியதாகவும் மதர் தெரசா உலக அரங்குகளில் அறிவித்துக் கொணடார். ஆனால் இவற்றைப் பற்றி ஆராய்ந்து தேடித்துருவிப் பார்த்தால் முழு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உண்மை நிலவரம் இதற்கு நேர்மாறாக இருக்கிறது” என்கிறார் டாக்டர் அரூப் சாட்டர்ஜி.

Mother Teresa: The Final Verdict, Author: Aroup Chatterjee,
Publisher: Meteor Books, 415 pages.

கல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1950-60களில் வளர்ந்தவர் அரூப் சாட்டர்ஜி. 1970-80களில் தீவிர இடதுசாரி செயல்வீரராக இருந்தவர். இன்றுவரை பகுத்தறிவுவாதியாகவும், நாத்திகராகவும் தொடர்பவர். மருத்துவக் கல்லூரியில் பயிலும் காலத்தில், மதர் தெரசா பணியாற்றியதாகச் சொல்லப்படும் இடங்களில் நேரடியாக நோயாளிகளுடனும், சேரி மக்களுடனும் பழகியவர். 1985ல் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்து மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியபோது, மதர் தெரசாவின் உலகளாவிய புகழின் ஒரு பகுதியாக இந்தியாவைப் பற்றியும் குறிப்பாக கல்கத்தா நகரம் பற்றியும் மிகவும் திரிக்கப்பட்ட மலினமான சித்தரிப்புகளும் மதிப்பீடுகளும் சேர்ந்தே பரவியிருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். அப்போது மதர் தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் அதைத் தொடர்ந்து பாரத ரத்னாவும் வழங்கப்பட்டு அவரைப் பற்றிய புனித பிம்பம் ஏறக்குறைய முழுமையடைந்து விட்டிருந்தது. அந்த நிலையில் மதர் தெரசாவின் பணிகளைப் பற்றிய உண்மைகளை உலகத்தின் முன் வைக்கவேண்டும் என்ற தேடலுடன் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மதர் தெரசாவுடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று அங்கு பணி செய்யும் கன்யாஸ்திரீகள், நோயாளிகள், பொதுமக்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டார். அதன் விளைவாக அவர் திரட்டிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.


‘மதர் தெரசா நடத்திய இல்லங்களில் எந்தக் குறைந்தபட்ச மருத்துவப் பயிற்சியும் இல்லாத பணியாளர்கள், 10-15 வருடம் காலாவதியான மருந்துகளை எந்தப் பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் நோயாளிகளுக்குச் செலுத்தி வந்தனர். ஊசிகள் அடிப்படைச் சுத்திகரிப்புக் கூடச் செய்யப்படாமல் 10 முதல்15 வரையிலான நோயாளிகளின் உடலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. அடிப்படைச் சுகாதார முறைகள் கூடக் கடைப்பிடிக்கப்படாமல் நோய்க்கிருமிகள் சூழ்ந்த போர்வைகள் உபயோகிக்கப்பட்டன’ என்பன போன்ற பல விஷயங்கள் தெரிய வந்தன.

நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதையும் வாழ வைப்பதையும்விட ‘அழகிய மரணத்தை’ நோக்கி அழைத்துச் செல்வதே மதர் தெரசாவின் மைய நோக்கமாக இருந்தது. ஆனால், அந்த மரணங்கள் நோயாளிகளுக்கு மிகக் குரூரமானதாகவும், வலிமிகுந்ததாகவும் இருந்தன. 1992ல் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேர்காணலில்[1], 1952 முதல் நிர்மல் ஹிருதய் இல்லத்தில் மரணமடைந்த 29,000 பேரை தான் ஞானஸ்நானம் செய்து கடைத்தேற்றியதாக மதர் தெரசா பெருமையுடன் கூறினார். 1990களில் நிர்மல் ஹிருதய் இல்லத்தில் தன்னார்வலராகச் சென்று பல மாதங்கள் பணிபுரிந்த லான்ஸெட் மருத்துவ சஞ்சிகையின் ஆசிரியர் ராபின் ஃபாக்ஸ் அந்த இல்லத்தின் பீதியூட்டும் மருத்துவக் குறைபாடுகளைத் தனது பதிவுகளில் உறுதி செய்துள்ளார்.

ஆனால் இத்தகைய விமர்சனங்களை மதர் தெரசாவின் அமைப்பு பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. கியூபாவில் பிறந்து அமெரிக்காவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்த ஹெம்லி கோன்சாலிஸ் 2008ம் ஆண்டு சேவை புரிவதற்காக இதே இல்லத்திற்கு வந்தபோது அங்குள்ள மருத்துவச் செயல்பாட்டின்மையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததைப் பதிவு செய்திருக்கிறார்.

அரூப் சாட்டர்ஜி கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனமான சேனல்-4 1994ம் ஆண்டு ‘நரகத்தின் தூதுவர் (Hell’s Angel)’ என்ற ஆவணப் படத்தை உருவாக்கியது [2]. பிரிட்டனின் புகழ்பெற்ற சமூக சிந்தனையாளரான கிறிஸ்டஃபர் ஹிட்சன்ஸ் தொகுத்து வழங்கிய இந்தப் படம் ஒளிபரப்பானபோது பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மதர் தெரசா மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம் அவரது மதிப்பீடுகளும் தொடர்புகளும் குறித்தது. விளம்பரத்திற்காகவும், நன்கொடைகளுக்காகவும் கிறிஸ்தவமதச் சாய்வு காரணமாகவும் அன்றைய காலகட்டத்தின் சர்வாதிகார அரசியல் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து நட்பில் இருந்தார்.

“அன்பைத் தனது சொற்களால் மட்டுமல்ல, செயல்களாலும் வெளிப்படுத்துபவர்” என்று ஹைட்டி (Haiti) நாட்டின் செல்வங்களை முழுவதும் கொள்ளையடித்தவரும், தனது அரசியல் எதிரிகளைக் கொன்று அந்த உடல்களை நாய்களுக்கு வீசுமளவு குரூர எண்ணம் கொண்டவருமான கொடுங்கோல் ஆட்சியாளர் ஜீன் க்ளாவுட் டுவாலியர் (Jean-Claude Duvalier) குறித்து அவர் புகழாரம் சூட்டினார். அவர் அளித்த உயர் விருதையும் ஏற்றார்.

அமெரிக்கப் பொதுமக்களின் பல மில்லியன் டாலர்களைக் கொள்ளையடித்து ஏமாற்றிய முன்னணி மோசடியாளரான சார்லஸ் கீட்டிங் (Charles Keating) என்பவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவரது நடத்தை குறித்து உயரிய நற்சான்றிதழை மதர் தெரசா அளித்தார். கீட்டிங் சிலபல மில்லியன் டாலர்களை நன்கொடையாகவும் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தை மதர் தெரசாவின் அமரிக்கப் பயணங்களின் போதும் அளித்து வந்தவர்.

1984ல் இந்தியாவையே உலுக்கி, 2,500க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட போபால் விஷவாயுக் கசிவின் போது, அங்கு நேரடியாகச் சென்ற மதர் தெரசா அந்தப் பேரழிவை ‘விபத்து’ என்று வர்ணித்தார். பாவத்தின் சுமையே விபத்திற்குக் காரணம் என்றார். அந்தப் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனம் குறித்து ஒரு சிறு கண்டனத்தைக்கூட வெளிப்படுத்தாதது மட்டுமல்ல, அதன் தலைவரான ராபின் ஆண்டர்சனைத் தப்பிக்க வைக்கும் திரைமறைவு வேலைகளுக்கு ஊக்கம் தரும் வகையில், ‘இந்திய மக்கள் அவரை மன்னிக்க வேண்டும்’ என்று உபதேசித்தார். ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிடி’ நிறுவனத்திற்கு நன்கொடைகளாகக் குவிந்திருந்த பல மில்லியன் டாலர் நிதியிலிருந்து ஒரு காசு கூட இந்தப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கான நிவாரணத்திற்காக மதர் தெரசா அளிக்கவில்லை. இந்தத் துயரம் எந்த அளவிற்கு உங்களைப் பாதித்துள்ளது என்று கேட்கப்பட்டபோது, “விபத்து இங்கு நடந்துள்ளதால் உங்கள் மனம் மிகவும் துயரப்படுகிறது. உலகெங்கும் நடக்கும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகளில் ஏற்படும் உயிரிழப்புகளை எண்ணிப் பாருங்கள்” என்று பதிலளித்தார் மதர் தெரசா[3].

அந்த மாபெரும் மானுட சோகத் தருணத்திலும் மனித நேயத்தைவிட ‘கருக்கலைப்பு பாவம்’ என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதமே மதர் தெரசாவின் மனதில் கோலோச்சியது என்பது அவரது ஆளுமையை அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதல்ல. அணுஆயுதப் போட்டியும் மற்ற பல அபாயங்களும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், நோபல் பரிசு ஏற்புரை உட்பட எல்லா இடங்களிலும் “கருக்கலைப்புகள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய குந்தகம் விளைவிக்கின்றன” என்று அவர் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருந்தார். இந்தியாவில் இந்துமதத் தலைவர் ஒருவர் இதே போன்று ஒரு கருத்தைக் கூறியிருந்தால் அது எந்த அளவுக்கு எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதுதான். ஆனால் மதர் தெரசா விஷயத்தில் அறிவியலுக்கும் அடிப்படைப் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அவரது அபத்தக் கருத்துக்கள் வெளியில் சொல்லப்படாமலேயே பூசிமெழுகப்படுகின்றன.

மதர் தெரசாவின் வாழ்நாளிலும், அதற்குப் பின்பும் அவரது அமைப்புகளுக்கு வந்து குவிந்த பணமெல்லாம் என்ன ஆயிற்று என்பது ஒரு மிகப் பெரிய மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்த பல உண்மைகளை ஸ்டெர்ன் என்ற ஜெர்மானிய இதழில் வெளிவந்த ‘மதர் தெரசா: அவரது மில்லியன்கள் எங்கே சென்றன’ (2003) என்ற கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது [4]. இந்தக் கட்டுரை குறிப்பிடும் சில விவரங்கள்:

உலக அளவில் மதர் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள். இந்த வசூல் பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசா பெயரிலான அமைப்புகள் எதுவும் இந்த அளவுக்குப் பெரும் நிதியைச் செலவழித்தப் பெரிதாக எதையும் செய்வதாகத் தெரியவில்லை. சிஸ்டர்கள் நடத்தும் இந்த அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை – முக்கியமற்றவை – எல்லா நாடுகளிலும், உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.

சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது. இந்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

மதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991ல் அவரது அமைப்புக்கு வந்த வரவில் 7% மட்டுமே செலவழிக்கப் பட்டது. மீதமுள்ள பணம் எங்கே போனது? அதில் ஒரு பகுதியைப் பிற நாடுகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல் செய்த விவரங்கள் சொல்கின்றன. எந்த மேல்விவரமும் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம் – அங்குள்ள வாட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அந்தப் பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.

சரி. இவ்வளவு குறைபாடுகளும் மோசடிகளும் இருந்தபோதும் கூட, அவர் எந்தப் பிரதிபலனும் கருதாது இந்திய சமூகத்திற்குச் சேவை செய்தாரில்லையா என்று வெள்ளந்தியாகக் கேட்டு உணர்ச்சி வசப்படும் பாமரர்கள் நிறைந்த நாடு இது. ஆனால், மதர் தெரசா தனது வாய்மொழியிலேயே அதை மறுத்திருக்கிறார். “பெருவாரியான மக்கள் சமூக சேவகர் என்று என்னைக் குறித்து எண்ணிக் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகர் அல்ல. நான் ஏசுவுக்காக ஊழியம் செய்பவள். கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்புவதும் மக்களை அதன்பால் திருப்புவதுமே எனது மையமான பணி” என்று நவீன் சாவ்லாவுக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெளிவாகவே அவர் குறிப்பிட்டிருக்கிறார். (நவீன் சாவ்லா இந்தியாவின் முன்னாள் தேசியத் தேர்தல் ஆணையர். கிறிஸ்தவத்தின் தீவிர ஆதரவாளர். மதர் தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.)

இந்தியாவில் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களை – உதாரணமாக தொழுநோயாளிகள் – மற்ற எல்லாரும் கைவிட்டுவிட்டபோது அன்னை தெரசாதான் சேவை செய்தார் என்று ஒரே ஒரு நோயாளிக்கு அருகில் மதர் தெரசா நிற்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஊடக பிரசாரம் அன்றி வேறில்லை. அல்பேனியாவிலிருந்து கல்கத்தாவின் வீதிகளுக்கு வந்த தெரசாவைப் பற்றிச் சொல்லப்படும் அளவுக்கு மிக வெற்றிகரமான வழக்கறிஞர் தொழிலையும் செல்வச் செழிப்பையும் துறந்து தனது வாழ்நாள் முழுவதையுமே தொழுநோயாளிகளுக்காக அர்ப்பணித்த இந்தியாவின் மாபெரும் சமூகப் பணியாளர் பாபா ஆம்டே குறித்து நமக்குக் கூறப்படுவதில்லை என்பதுதான் சோகம். அவருக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது. எந்த விதமான விளம்பரங்களையும் புகழுரைகளையும் விரும்பாது தன்னலம் கருதாமல் உழைத்தவர் பாபா ஆம்டே.

மதர் தெரசாவின் வருகைக்கு சில பத்தாண்டுகள் முன்பு மேற்குலகிலிருந்து இன்னொரு பெண்மணி இந்தியாவை நாடி வந்தார். அதே கல்கத்தா நகரின் காலரா பீடித்த தெருக்களிலும் சேரிகளிலும் நோயுற்ற மக்களுக்குத் தொண்டாற்றினார். பல எதிர்ப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் இடையில் நவீன இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை அந்த நகரில் தொடங்கினார். அது இன்றளவும் இயங்கி வருகிறது. கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கும், அறிவியலாளர் ஜகதீஷ் சந்திரபோசுக்கும் தேசபக்தியையும் பெண் விடுதலையையும் சுதேசி அறிவியலையும் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் குருவாக விளங்கி வழிகாட்டினார் அவர். தாகூரின் கல்விப் பணிகளுக்கு உறுதுணையாக நின்றார். தன்னை முழுமையாகவே இந்தியாவிற்கு அர்ப்பணித்துக்கொண்ட, சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாதான் அந்தப் பெண்மணி.

1984ல் மதர் தெரசா தமிழ்நாட்டுக்கு வந்த போது தமிழகத்தின் மாபெரும் மக்கள் தலைவரான எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர் வெற்றிகரமாக அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். அந்தத் திட்டத்தை மதர் தெரசா புகழ்ந்தது ஒரு மிகப் பெரிய விஷயமாக சிலாகிக்கப்பட்டது. ஆனால் உண்மையில், மதர் தெரசா செய்ததாகச் சொல்லப்படும் எந்த ஒரு ‘சேவை’ப் பணியை விடவும் மிகப் பெரிய சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக எம்.ஜி.ஆரின் திட்டம் இருந்தது. 1988ல் அவரது மறைவுக்குப்பின்னரே பாரத ரத்னா விருது எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது.

புத்தர், மகாத்மா காந்தி, விவேகானந்தர், அப்துல் கலாம் போன்ற ஆளுமைகளுடன் இணைத்து, உண்மைக்கு முற்றிலும் மாறாக, மத உணர்வுகளைத் தாண்டி மனித நேயத்தை முன்நிறுத்தியவர் என்ற பிரசாரத்துடன் மதர் தெரசாவும் இந்திய வெகுஜன பிரக்ஞையில் முன்னிறுத்தப்படுகிறார். அதை முழுமைப்படுத்துவதற்கான ஓர் இறுதி முயற்சியே தற்போது சூட்டப் பட்டுள்ள புனிதர் பட்டம். அதை நன்கு உணர்ந்தும் கூட, அரசியல் சரிநிலைகளைப் பேணுவதற்காகவும், அநாவசியமான சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவும் நரேந்திர மோதியின் தலைமையிலான மத்திய அரசு தனது வெளியுறவுத் துறை அமைச்சரைப் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு அனுப்பியது துரதிர்ஷ்டவசமானது.

சகோதரி நிவேதிதாவை நாம் பெருமளவு மறந்து விட்டோம். வரலாற்றின் போக்கில், பாபா ஆம்டேயும் எம்.ஜி,ஆரும் பிரதேச அளவிலான நாயகப் பிம்பங்களாக நிலைபெற்றிருக்கிறார்கள். ஆனால், மதர் தெரசாவுக்கு, இந்திய அளவிலான, உலகளாவிய பிம்பம் கிடைத்திருக்கிறது. அவரது கிறிஸ்தவப் பின்னணி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுத் தந்ததும், அந்தப் பரிசு குறித்த அளவுக்கதிமான மதிப்பும், அந்தப் பரிசின் பின்னுள்ள ஐரோப்பியமையவாத அரசியலை மக்களில் பெரும்பாலோர் அறியாதிருப்பதும் இதற்குக் காரணங்கள்.

இதைவிடவும் முக்கியமாக, வறுமையிலும் அறியாமையிலும் சீர்கேட்டிலும் உழலும் இந்தியச் சமூகத்தை உய்விப்பதற்காகத் தூய வெள்ளையாடை அணிந்து தூய வெள்ளையினத்தைச் சேர்ந்த தேவதை சிலுவையை ஏந்திக் கொண்டு வந்திருக்கிறாஸ்ர் என்ற கருத்தாக்கத்தை ஆழ்மனதிலும் பதியவைப்பதாக மதர் தெரசாவின் பிம்பம் இருக்கிறது. தங்களைப் பற்றிய தாழ்வுணர்விலிருந்தும், காலனிய அடிமைத்தனத்தில் விளைந்த சிந்தனைகளிலிருந்தும் இன்னமும் முற்றிலும் வெளிவராத கணிசமான இந்திய வெகுஜன மனங்களுக்கு மதர் தெரசாவின் அந்தப் பிம்பம் உவப்பானதாகவே இருக்கும். அத்தகைய மனநிலையை இன்னும் நீடிப்பதற்கும் அது துணைபுரியும்.

தனது ஆய்வு முடிவுகளையும் விமர்சனங்களையும் விரிவாகத் தொகுத்து ‘மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு’ என்ற நூலை அரூப் சாட்டர்ஜி எழுதியிருக்கிறார். தங்களது சுயத்தைப் பற்றிய பிரக்ஞையும், பண்பாட்டுணர்வும் கொண்ட இந்திய மனங்களின் கவனம் அந்தத் தீர்ப்பின் மீதே குவியுமேயன்றி புனித பிம்பங்களின் போலித் தோற்றங்களில் மயங்காது.

சான்றுகள்:

[1] https://www.youtube.com/watch?v=DMwBBgTkAdg

[2] https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4

[3] http://swarajyamag.com/politics/recall-bhopal-tragedy-to-know-real-teresa

[4] இந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு : http://www.tamilhindu.com/2015/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-2/

-oOo-
Leave a Reply