லாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் – அரவிந்தன் நீலகண்டன்அக்டோபர் 30 1928. லாகூரின் வீதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் குழுமியிருந்தார்கள். சைமன் கமிஷனை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது. அதை எதிர்த்து ’சைமனே திரும்பிப் போ’ என்கிற கோஷத்துடன் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அகிம்சை முறையில் அப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எதிர்ப்பு ஊர்வலம் ‘பாரத மாதா வெல்க’, ‘மகாத்மா காந்தி வெல்க’ எனும் கோஷங்களுடன் நடந்து கொண்டிருந்தது.  அந்த ஊர்வலத்தை எப்படியாவது தோல்வி அடைய செய்ய வேண்டுமென்பது பிரிட்டிஷ் அதிகாரிகளின் எண்ணம். அகிம்சையை மக்கள் கைவிட வேண்டும்; ஊர்வலத்தின் ஒழுங்கு குலைய வேண்டும் என்ற நோக்கங்களுடன் காவல்துறை செய்த சீண்டல்கள் அனைத்தும் வீணாகிப் போயின. அதற்குக் காரணம் யார் என்பதை விரைவில் பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். கையில் குடையை வைத்துக்கொண்டு தலையில் தலைபாகை கட்டி நின்ற ஒரு வயதான மனிதர். அவர்தான் மந்திரவாதி போல கூட்டத்தை அகிம்சை வழிப்படுத்தியிருந்தார். அவரை மீறி மக்கள் செயல்பட மாட்டார்கள். அப்போது அவரைத் தாக்கினால் என்ன ஆகும்? நிச்சயம் மக்களின் ஒழுங்கு குலையும். அவர்கள் கண்முன்னாலேயே அவரை அடித்து வீழ்த்தி குற்றுயிரும் கொலையுயிருமாக்கிப் போட்டால் அப்புறம் இவர்கள் இதே அகிம்சையுடன் இருப்பார்களா என்ன! லாகூரின் சீனியர் போலீஸ் சூப்பிரண்டெண்ட் குதிரையிலிருந்தபடி உத்தரவை அனுப்பினார். ‘குடையுடன் நிற்கும் அந்த மனிதனைக் கவனியுங்கள்’.
லாலா லஜ்பத்ராயின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ஃபெரோஸ் சந்த். எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல், ஆனால் உணர்ச்சியுடன் அதன்பின் நிகழ்ந்தவற்றை அவர் வர்ணிக்கிறார்:
ஒடிந்து விழுந்துவிடுகிற தளர்ந்த ஒரு ஜீவனாகத்தான் அவர் இருந்தார். ஆனால் அவரது உள்ளாற்றல் வெல்லப்பட முடியாத ஒன்றாக இருந்தது. ஒரு மனிதனாக நிமிர்ந்து நின்று அடிகளை வாங்க அவரால் முடிந்தது. அவர் ஓடவில்லை. துடிக்கவில்லை. அங்கிருந்து அகலவில்லை. அவரது ஆட்கள் திரும்ப அடிப்பதை அவர் அனுமதிக்கவும் இல்லை. அவரது தளகர்த்தர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர்மீது விழும் அடிகளை தம்மீது ஏந்தினார்கள். ஆனால் அடிகளின் பெரும்பகுதி அவர் மீதே விழுந்தது. அவருடன் இருந்த டாக்டர் கோபிசந்த ஷார்கவா பின்னர் வெறும் சாட்சியாக மட்டுமல்லாமல் மிக அண்மையில் அந்த அடிகள் விழுந்ததை தாமும் வாங்கிக் கொண்டவர் என்கிற முறையில் சொன்னார்: இத்தனை அடிகளை வாங்கிக்கொண்டு அங்கேயே விழாமல் எப்படி ஒரு மனிதனால் நிற்க முடியும்! அவர் அடிகளை வாங்கியபடி கேட்டதெல்லாம் ஒன்றுதான், இப்படி அடிக்கிற அதிகாரியின் பெயர். அதற்குப் பதிலாக மேலும் லத்தி அடிகள் விழுந்தன. மீண்டும் அதே உக்கிரத்துடன் அதிகாரியின் பெயரை அவர் கேட்டார். மீண்டும் மேலும் மேலும் அடிகள்!
அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு அவர் அந்த ஊர்வலத்தின் முன்னணியில் நடந்து சம்பிரதாயமாக ஊர்வலத்தை முடித்து வைத்தார். அதன் பின்னரும் அவர் மருத்துவமனை செல்லவில்லை. அன்று மாலையே பொதுக்கூட்டம். அதில் அவர் கூடியிருந்த மக்களுக்கு, அமைதி காத்து அகிம்சாவாதிகளாக இருந்தமைக்கு நன்றி கூறினார். பின்னர் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகளை அவர் உச்சரித்தார்!
என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கல்லறையில் அறையப்பட்ட ஆணிகள்.
அவரது தேசபக்தி அடிகளால் உடைந்துவிடாத ஒன்றுதான். ஆனால் அவரது வயது முதிர்ந்த உடல் அத்தனை அடிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நவம்பர் 17 1928 இல் லாலா லஜ்பத்ராய் மறைந்தார்.
அவர் வாழ்ந்த வாழ்க்கைத்தான் எத்தகையது!
1907 – பிரிட்டிஷ் அதிகாரிகளின் அச்சமும் பதட்டமும் உச்சங்களில் இருந்தன. 1857 எழுச்சியின் ஐம்பதாவது ஆண்டு. பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் பலவிதமான உளவுத்துறை அறிக்கைகளால் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்கள் புரட்சிக்குத் தயாராக உள்ளனர். அவர்களது தலைவர் லாலா லஜ்பத் ராய். அவரிடமிருந்து ஒரேஒரு வார்த்தை. அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கிராமப்புறங்களில் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வரி கொடுக்காமல் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் தேவையான பொருட்களை விற்பனை செய்யவில்லை. காவல்துறையினரையும் ராணுவத்தினரையும் தேசத்துரோகிகள் என மக்கள் சீண்டுகின்றனர்; அவர்களை ஒதுக்குகின்றனர். அவர்களைப் பதவி விலகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் பின்னால் இருப்பது ஆரிய சமாஜத்தின் ஒரு ரகசியக் குழு. அதன் பின்னால் இருப்பவர்  உளவுத்துறையால் வைஸ்ராய்க்கு அனுப்பப்பட்ட ரகசிய தந்தி கூறியது:
இந்த முழு இயக்கத்தின் தலைமையும் மையமும் லாலா லஜ்பத் ராய் என்கிற கத்ரி வழக்கறிஞர்தான். இவர் பஞ்சாபின் காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு வந்தவர். அவர் ஓர் அரசியல் ஆர்வலர்; புரட்சியாளர்; அவருக்கு உந்துசக்தியாக இருப்பது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அவருக்கு இருக்கும் உக்கிரமான வெறுப்பு.
லாலாஜி என அழைக்கப்பட்ட லஜ்பத் ராய், கத்ரி அல்ல. ஆனால் அவருக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. எனவே அது பிரச்சினை இல்லை. ஆனால் இதன் விளைவாக அவர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். விசாரணை இல்லாமலே. வைஸ்ராய் அதை நியாயப்படுத்தினார். நாடு கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்படும் சூழலில் 1907ல் அவர் தன் தந்தைக்கு எழுதினார்:
அரசாங்கத்தை எதிர்க்கும்போதே தீயுடன் விளையாடுகிறோம் என்று தெரிந்துதான் களத்தில் இறங்குகிறோம்…  விளைவு எதுவென்றாலும் தீரத்துடன் எதிர்கொள்வோம்.
கடல் கடந்து விடுதலை போராட்டத்துக்காக இந்தியர்களை இணைப்பதிலும் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1914ல் அமெரிக்காவில் அவர் செயல்பட்டார். முதல் உலகப்போர் சூழலில் எப்படி இந்தியர்கள் செயல்பட வேண்டுமென திட்டங்கள் வகுத்தார். இங்கிலாந்தின் இடத்தில் ஜெர்மனியை வைக்க, கடல் கடந்து வாழும் சில இந்திய விடுதலைப் போராளிகள் தயாராக இருந்தனர். ஆனால் லாலாஜிக்கு அதில் ஈடுபாடில்லை:
நான் ஒரு இந்திய தேசபக்தன். என் தேசத்துக்கு விடுதலை வேண்டுமென்பது என் நோக்கம். ஆனால் ஜெர்மானியரைப் பொருத்தவரையில் நான் அவர்களை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. …நான் எப்போதுமே ஒரு விஷயத்தை ஏறக்குறையை கண்மூடித்தனமான ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறேன். அன்னியர் உதவியுடன் பெறும் சுதந்திரம் மதிப்பில்லாத ஒன்று.
ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களை அவர் எதிரிகளென்றெல்லாம் கருதவில்லை. மாறாக அவர்கள் அம்முயற்சிகளில் தோல்வி அடைந்து கஷ்டப்பட்ட காலங்களில் உதவினார். அப்படி லாலாஜியிடன் உதவி பெற்றவர்களில் ஒருவர், பின்னாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் உருவாக்கிய எம்.என்.ராய்.
லாலாஜியின் ஆதர்ச இந்தியா அனைத்து மதப்பிரிவினருக்கும் உரியது. ஹிந்து-முஸ்லிம் பிரச்சினை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதென்றே அவர் நம்பினார். 1924ல் லாலாஜி எழுதுகிறார்:
ஒரு வகுப்பினர் அல்லது ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் அப்படியே உள்ளிழுத்துக் கொள்ளப்படுவதை நாம் விரும்பவில்லை. அனைவரும் ஒரு முழுமையில் ஒருங்கிணைவதையே நாம் விரும்புகிறோம்.  அந்த ஒருங்கிணைப்பு எந்தக் குழுவினரையும் எவ்விதத்திலும் குறைக்கக் கூடியதாக இருக்காது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என எவரும் அந்த அடையாளங்களைத் துறந்து இந்தியராக வேண்டியதில்லை. அவர்கள் தம்மை இந்தியராகவும் அதே நேரத்தில் முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இதரர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் தம்மை இந்திய முஸ்லிம்களாகவும் இந்தியக் கிறிஸ்தவர்களாகவும் நினைப்பார்களென்றால் சமூகம் சுமுகமாக இருக்கும்.
ஆனால் இப்படி மதச்சார்பின்மையில் தோய்ந்திருந்த லாலாஜியை உலுக்கும் சில யதார்த்தங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் இஸ்தான்புல் சென்றிருந்தபோது இஸ்லாமிய அகிலம் – கலீபேத் அரசு ஒன்றை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்படுவதைக் கண்டார். அதை உருவாக்கியவர் இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய மௌல்வியான ஒபியத்துல்லா என்பவர். இந்தத் திட்டம் மிகவும் சமத்காரமாக அமைக்கப்பட்டிருப்பதை லாலாஜி கண்டார். ஒபியத்துல்லா திட்டம் (Obeidylluah plan)  என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் முதல் உலகப்போரின் இறுதியில் உருவான ஒன்று. இந்திய தேசியவாதிகளுடன் இணைந்து அவர்களின் பிரிட்டிஷ் எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்தி அதன்மூலம் ஆப்கானிய-இந்தியப் பிரதேசங்களில் ஒரு காலிபேத் இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவதே நோக்கம். அங்கிருந்து விரிவாக்கம் செய்து இஸ்லாமிய அகிலம் ஒன்றை உருவாக்க, பிற இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவது. இந்தியாவில் பிரிட்டிஷாரை விரட்ட ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய அரசரை இந்தியா மீது படையெடுக்க வைப்பது. ஆனால் இந்திய தேசியவாதிகளிடம் பேசும்போது இஸ்லாமிய அகிலம் என்பதை அடக்கி வாசித்து, பிரிட்டிஷ் எதிர்ப்பைப் பிரதானப்படுத்துவது. இத்தனைக்கும் மேலாக இதற்கு ஒருங்கிணைந்த இந்திய எதிர்ப்பு இல்லாமல் இருக்க இந்தியாவில் மொழிவாரி தேசிய இனங்கள் எனும் கோட்பாட்டுக்கு ஆதரவு அளித்து – இந்தியாவைத் தனிதனி குடியரசுகளாக உடைப்பது. (எனவே அவை இந்தியா எனும் அடிப்படையில் இல்லாமல் இஸ்லாமிய காலிபேத்தின் கீழ் எளிதாக வர இயலும்.)
பிரிட்டிஷ் எதிர்ப்பு என்கிற பெயரில் ஆப்கானிய இஸ்லாமியப் படையெடுப்பு இந்தியா மீது ஏற்பட்டால், அதை ஆதரிப்பதாக இந்திய கிலாபத் தலைவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த்னர். அதற்கு மகாத்மா காந்தியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஆக, ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் இந்தியா மீது படையெடுக்கும் ஒரு சாத்தியம் மிக அருகிலேயே இருந்தது. இந்தியா மீதான இஸ்லாமிய ஜிகாத்துக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற பெயரில் சோவியத் யூனியனிடம் ஆதரவு கோருவதும் நிகழ்ந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சாரார் இதன் ஆபத்துக்களைக் கருதவில்லை. ஆனால் லாலா லஜ்பத் ராய் இத்திட்டத்தின் முழுமையான விபரீதங்களை உணர்ந்திருந்தார்.
ஒபியத்துல்லா  திட்டம் குறித்தும் அதன் விபரீத விளைவுகள் நாட்டை துண்டு துண்டுகளாக்கும் என்பதையும் அவர் நேருவிடம் கூறினார். நேரு தன் சுயசரிதையில் லாலாஜி ஏன் ஆப்கானிஸ்தான் காங்கிரஸ் பிரிவை எதிர்க்க வேண்டுமென்று தமக்கு புரியவில்லை என்று எழுதுகிறார். ஒபியத்துல்லா திட்டத்தில் தமக்கு எதுவும் விபரீதமாகத் தெரியவில்லை என எழுதுகிறார்.
ஒபியத்துல்லா  லாலாஜியிடம் அளித்த முன்வரைவு ’இந்திய துணைக்கண்டத்தைப் பல்வேறு தனித்தனி குடியரசுகளாக அறிவிக்கும்’ ஒன்றாக இருந்தது. இந்த முன்வரைவு காபூல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் ஒரு வலிமையான இஸ்லாமிய விரிவாதிக்க சக்தியை ஆப்கானிஸ்தான் முதல் சோவியத் வரை உருவாக்குவதும், வலிமையில்லாத பல்வேறு சிறு சிறு குடியரசுகளாக இந்தியாவை உருமாற்றுவதுமான இந்தத் திட்டத்தை லாலாஜி அதன் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொண்டு அது அபாயம் என்பதை உரக்கப் பிரகடனம் செய்தார்.
1946ல் நேரு இந்த ஆபத்தை உணர்ந்தார். மாஸ்கோவில் கிலாபத் இயக்கத் தீவிரவாத இளைஞர்களாலும் பிரிட்டிஷ் எதிர்ப்பால் வேறெதையும் குறித்துக் கவலைப்படாத இந்திய இளைஞர்களாலும் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட், ஒபியத்துல்லா  திட்டம் போன்ற இந்தியப் பிரிவினைத் திட்டத்தை பிரிட்டிஷார் முன் வைத்தது. அப்போது நேரு, “இப்படி இந்தியாவைச் சிறு சிறு துண்டுகளாக உடைப்பதென்பது, அதனைச் சிறு சிறு துண்டுகளாக வென்று ஒரு சோவியத் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கான முயற்சியே” என்று எழுதினார். இப்படி ஒரு கனவு இஸ்லாமிய அகில கனவில் இருந்தவர்களுக்கு உருவானதையும் அதற்கு சோவியத் ஆதரவை அவர்கள் கோருகிறார்கள் என்பதையும் முன்னறிவித்தவர் லாலா லஜ்பத் ராய்.
தேசபந்து சித்தரஞசன் தாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தம் அச்சத்தை வெளிப்படுத்தினார் லாலா லஜ்பத் ராய்: “இந்தியாவில் உள்ள ஏழு கோடி இஸ்லாமியர்களைக் குறித்து நான் அச்சமடையவில்லை.  ஆனால் இங்குள்ள ஏழு கோடி பேருடன், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின் ஆயுதமேந்திய இஸ்லாமியப் படைகள் சேரும்போது இந்தியாவின் கதி என்ன ஆகும்? எதிர்க்க இயலாத அப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்தால்? நாம் அனைவரும் அழிக்கப்படுவதுதான் விளைவா?”  1946ல் டாக்டர் அம்பேத்கர் லால லஜ்பத் ராயின் எழுத்துக்களை மேற்கோள் காட்டுகிறார். அது ஒரு மிகவும் யதார்த்தமான அச்சம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மதவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை அவர் கண்டார். இஸ்லாமிய மதவாதத்தின் விளைவாக திட்டமிட்ட கலவரங்கள் நடப்பதையும் அதில் பாதிக்கப்படுவோர் ஹிந்துக்களும் சீக்கியர்களுமாக இருப்பதைக் கண்டார். இந்தக் கலவரங்களைத் திட்டமிடுவோரில் பெரும்பாலானோர் கிலாபத் இயக்க அமைப்பாளர்கள். சுவாமி சிரத்தானந்தர் போல இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு துறவி கூட இஸ்லாமிய மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்த்தார். எனவே இந்து ஒற்றுமையின் தேவையை (இந்து சங்கதான்) பிரசாரம் செய்தார்.  அவரது இந்து சங்கதான் என்பது  ஒருபோதும்  மத அடிப்படையிலான அரசு அமைவதல்ல.
சமரசமற்ற சமுதாயச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் லஜ்பத் ராய். தீண்டாமைக்கும் சாதியத்துக்கும் கடும் எதிர்ப்பாளராக இருந்தவர் லாலாஜி. தீண்டாமைக்கான அவரது எதிர்ப்பு ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. இவ்விதத்தில் அவரது பார்வை பாபா சாகேப் அம்பேத்கரின் பார்வைக்கு முன்னோடியாக இருந்தது. ஸ்ரீ அரவிந்தர், லாலா லஜ்பத் ராய், பாபா சாகேப் அம்பேத்கர் மூவருமே சாதி அமைப்பின் ஜனநாயகமற்றத் தன்மையைக் குறிப்பிட்டு அதனை விமர்சித்திருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  தீண்டாமை ஜனநாயக விரோதமான ஒரு செயல்பாடு எனக் கருதிய லாலாஜி, அன்றைய ஆசாரவாதிகளின் ஒரு பாதுகாப்புக் கேடயத்தைக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் தனது செயல்திட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பைச் சேர்ப்பதை ஆச்சாரவாதிகள் எதிர்த்தனர். தீண்டாமை என்பது மதம் தொடர்பானது என்றும், எனவே ஓர் அரசியல் கட்சியின் செயல்திட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பு எடுத்துக் கொள்ளப்படலாகாது என்று அவர்கள் கூறினர். லாலாஜி எழுதினார்:
தீண்டாமை போன்றதொரு மனத்தடை நம்மில் இத்தனை ஆழமாக வேரூன்றி நம் நடத்தையை தீர்மானிக்கும் நிலையில் இருக்கும்போது ஜனநாயகம் என்பதைப் பேசுவதென்பது பயனற்ற விஷயம். நம்மிடமிருந்து மத ரீதியாகவோ செய்யும் தொழில் ரீதியாகவோ வேறுபடுவோரிடம் நாம் இப்படி நடப்பது அவலமான ஒரு விஷயமாகும். …தேசத்தைக் கட்டமைப்பது அறம் சார்ந்த விஷயமாகும். இப்படி இரட்டை வேடத்தன்மையுடன் அதை நம்மால் செய்ய இயலாது. …தீண்டாமை ஒழிப்பைப் பேச வேண்டிய ஒரு நிலையில் நாம் இன்று இருக்கிறோம் என்பதே அவமானகரமான ஒரு விஷயம் என்றால் அதைக் குறித்துப் பேசவே கூடாது, ஆனால் நம் சொந்த சகோதரர்களிடம் நாம் தீண்டாமையைக் கடைபிடிப்போம் என்பது ஒழுக்கக் கேடான  விஷயம்.
தீண்டாமை ஒழிப்பென்பது லாலாஜிக்கு, ‘ஜனநாயகத்துக்கு நாம் லாயக்கானவர்கள்  என்பதற்கான அடிப்படைத் தகுதி’ மற்றும் ’சுயராஜ்ஜியம் அடைவதற்கான முக்கிய தேவை’. அல்லாமல், அது பட்டியல் சமுதாய மக்களுக்குச் செய்யப்படும் சலுகை அல்ல. தீண்டாமை ஒழிப்புக்கு லாலாஜி கூறும் வழிமுறை டாக்டர் அம்பேத்கரின் ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதற்கான முன்னோடியாக இருக்கிறது.  தீண்டாமையை ஒழிக்க நாம் ‘கல்வி, ஒற்றுமை, அமைப்பு’ என்னும் ரீதியில் செயல்பட வேண்டும் என்கிறார் லாலாஜி.
லாலா லஜ்பத் ராய் சைமன் கமிஷனை எதிர்த்தார். ஆனால் அன்றைக்கு பட்டியல் சமுதாயத்தின் முக்கியமான தேசியத் தலைவர்களில் ஒருவரான எம்.சி.ராஜா அவர்கள் அதை எதிர்த்தார். இருந்தபோதிலும் பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக தீவிரமாகப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் என்றும் தம் நெருக்கமான நண்பர் என்றும் லாலாஜியைக் குறிப்பிடுகிறார் எம்.சி.ராஜா அவர்கள். பட்டியல் சமுதாய மக்களுக்கு காவல்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை இந்து மகாசபை தலைவரான எம்.ஆர்.ஜெயகரும், பட்டியல் சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை லாலாஜியும் கொண்டு வந்தார்கள் என்பதை ராவ் பகதூர் எம்.சி.ராஜா குறிப்பிடுகிறார். இது 1928ம் ஆண்டு பிப்ரவரி மாதம். அதே ஆண்டில்தான் லாலாஜி மறைந்தார். அதாவது சமுதாயத் தலைவர்களுடனான கருத்து வேற்றுமைகளைத் தாண்டி பட்டியல் சமுதாய வளர்ச்சிக்காக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர் லாலா லஜ்பத் ராய். 1931ல் வட்ட மேசை மாநாட்டில் எம்.சி.ராஜா உரையாற்றினார். அப்போது ‘ஒடுக்கப்பட்ட இனத்தவரின் நண்பர்’ என்கிற அடைமொழியுடன் லாலா லஜ்பத்ராயை நினைவுகூர்ந்த ராஜா அவர்கள், லாலாஜியின் வார்த்தைகளை அங்கே மேற்கோள் காட்டினார்: “ஹிந்து சமயம் எனும் அழகிய பெயரிலிருந்து தீண்டாமை எனும் கறை முழுமையாகத் துடைக்கப்படாவிட்டால்  இந்தியா சுவராஜ்ஜியம்  அடையும் தகுதியைப் பெறாது.”
தேச முன்னேற்றம் குறித்த லாலாஜியின் பார்வை இன்றைக்கும் கூட முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. முன்னேற்றம் என்பது மேலேயிருந்து கீழே திணிப்பதல்ல என்கிறார் லாலாஜி. எனில் முன்னேற்றம் என்பதுதான் என்ன?  லாலாஜி கூறுகிறார்:
ரயில்வே பாதைகளை அதிகரிப்பது முன்னேற்றமா? ஏற்றுமதி இறக்குமதி புள்ளிவிவரங்கள் முன்னேற்றமா? பெரிய பட்ஜெட் தொகைகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா? அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா? பெரும் கட்டடங்களை பொதுமக்கள் வரிப்பணத்தால் கட்டிப் பெருமை அடைந்து கொள்வதை நாம் முன்னேற்றம் எனச் சொல்லலாமா?  … நமக்குத் தேவை கீழேயிருந்து ஏற்படும் ஒரு பரிணாம வளர்ச்சி.
தொலை நோக்குப் பார்வை, தேசபக்தி, சமுதாய நீதி – என அனைத்திலும் சமரசமற்ற நேர்மையை முன்வைத்து இறுதி வரை போராடியே இறந்தவர் லாலா லஜ்பத் ராய். முழுமையான தேசபக்தர், ஜனநாயகவாதி, இந்துத்துவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர்.
ஆதாரங்கள்:
·         Lajpat Rai, Ideals of Non-Co-Operation and Other Essays, Ganesan Publishers, Madras, 1924
·         Feroz Chand, Lajpat Rai Life and Work, Publications Division, 1978
·         அடிபட்ட லாலா லஜ்பத் ராய் புகைப்படம் நன்றி: Christopher Pinney, “Photos of the Gods’: The Printed Image and Political Struggle in India, Reaktion Books Ltd, 2004
Leave a Reply