Posted on Leave a comment

அழகிய சிக்கிம் – ஹரி வெங்கட்

பொதுவாகவே இந்தியாவின் வடகிழக்குப் பகுதி குறித்து ஊடகங்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும்
ஒருவித மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். எந்நேரமும் பிரிந்து விழக்கூடிய வலுவில்லாத
ஒற்றை நூலால் பிணைக்கப்பட்டுள்ள பகுதி என்ற கதையைத் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறார்கள்.
அந்தப் பகுதிக்கு நேரில் சென்று வருவதே சிறந்த விஷமுறிவுச் சிகிச்சையாக இருக்க முடியும்.
மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமானநிலையம் இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில்
உள்ளது. சென்னையிலிருந்து பாக்டோக்ரா சென்று, சிலிகுரி வழியாக, கேங்டாக் சென்றேன்.
இந்திய ராணுவத்தின் பரவல் சிலிகுரியில் அதிகம். புவியியல் ரீதியாக அதன் முக்கியத்துவம்
அப்படி. நேபாளம், பூட்டான், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் நுழைவாயில்
அது. சுக்னா பகுதியின் சமதளத் தேயிலைத் தோட்டங்கள் எனக்குப் புது அனுபவம். மதிய நேர
வெயில் அச்செடிகளின் பச்சையை இன்னும் மெருகூட்டியிருந்தது. சிறப்பான சாலைகள். மலைப்பகுதியின்
சாலைகள் கூட மோசமில்லை.
சிக்கிம் தாந்திரீக பூமி. மலையைச் சுற்றி ஏறியபடி கார் கேங்டாக் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
மரத்தைச் சுற்றி ஊறியபடி உச்சியை அடைய நினைக்கும் பாம்பைப் போல்.
சிக்கிம் எல்லையின் நுழைவாயிலில் கொஞ்சம் கெடுபிடி அதிகம். மாநிலத்தினுள் நுழைபவர்களின்
விவரங்களைக் கேட்டுவிட்டு உள்ளே அனுமதிக்கிறார்கள். குறிப்பாக பங்களாதேஷிகளைத் தவிர்க்கவே
இந்த அணுகுமுறை என்றார் எங்கள் வாகன ஓட்டுநர். வார இறுதியில் வாகனங்களின் எண்ணிக்கை
அதிகமாதலால் சிக்கிம் எல்லைக்கு 10 கி.மீட்டர் தூரத்தைக் கடக்க 2 மணி நேரம் ஆனது. ஒவ்வொரு
வாகனத்தையும் நன்கு சோதித்து அனுப்புகிறார்கள். நடக்கக் கூட யோசிக்க வேண்டிய சாலையில்
கார் சென்றது. இரவு 7 மணிக்குச் சென்றடைய வேண்டிய இடத்தை 10 மணிக்குச் சென்றடைந்தோம்.
ஹோட்டல் மேலாளர் எங்களுக்கு உணவைத் தயாராக வைத்திருந்தார். கொடுக்க வேண்டிய பணத்தை
மெதுவாக வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். பிறகு கேட்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்துக்
கொடுத்தபோது புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டார்.
நாதுலாவிற்கான பயணம் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒன்று. இந்திய-சீன எல்லையின்
ஒரு முக்கியமான பகுதி நாதுலா. பூட்டானுடனான எல்லையும் உண்டு. இந்திய-சீனப் படைகள் பலமாக
மோதிக்கொண்டு, இருதரப்பிற்கும் பலத்த சேதங்கள் நேர்ந்த வரலாறு கொண்ட இடம் இது.
14,000 அடி உயரத்தில் உள்ள இடம். ராணுவத்தால் அமைக்கப்பட்ட சிறப்பான சாலைகள். சிறு
சிறு குன்றுகள் மீது இரு நாட்டு ராணுவமும் முகாமிட்டு எதிர்த்தரப்பைக் கண்காணிக்கின்றன.
அடுத்த அடி வைத்தால் நீங்கள் சீனாவிற்குள் இருப்பதற்கான சாத்தியமுள்ள இடம் வரை அனுமதிக்கிறார்கள்.
நான் சென்றபோது மூன்று டிகிரி தட்பவெப்பம். சில சமயங்களில் அதற்கும் கீழே. குளிர் காற்று
தொடர்ச்சியாக முகத்தில் அறைந்தது. உதடுகள் உறைந்துவிட்டதைப் போலிருந்தன. ஒரு வார்த்தை
உதிர்க்க கூடச் சில விநாடிகள் யோசிக்க வேண்டியிருந்தது. மிகக் குறைந்த ஆக்ஸிஜன் நிலவும்
இடம் அது. இதயத்தின் மீது பெரும் கல் ஒன்றை வைத்ததைப் போல் கனத்தது. நடையின் இயல்பான
வேகம் காணாமல் போனது. சாதாரண மனித
நடவடிக்கைகள் எதுவும் மட்டுப்படும் அந்த இடத்தில் 24 மணிநேரமும் இருப்பது என்பது என்
கற்பனைக்கு எட்டாதது. ஆனால் இந்திய ராணுவம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
நாதுலாவின் சிறு சிறு மலைகள், அதன் பள்ளத்தாக்குகளை நிரப்பும் ஏரிகள். பிரபலமான
சாங்மோ ஏரி நவீன இந்திய வழக்கத்தை ஒட்டி அசிங்கப்படுத்தப்பட்டிருந்தது. ஏரியைச் சுற்றிக்
கும்பலாகக் கூடிக் கூச்சலிட்டு சுற்றுலாப் பயணிகள் ’என்ஜாய்’ செய்தனர். இயற்கை பெரும்
போராட்டத்தால் இன்னும் தன் அழகைத் தக்கவைத்திருக்கிறது.
கேங்டாகின் கைவினைப் பொருட்களின் ம்யூசியம் செல்ல முடிந்தது. பல்வேறு கைவினைப்
பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ’தாங்கா’ எனப்படும் திபெத்திய பெளத்தத்
துணி ஓவியங்கள் போதிசத்வர்களை, மண்டலங்களைக் காட்சிப்படுத்துபவை. திபெத்தில் பரவலாக
இருந்த கலை, இப்போது இந்தியாவின் வடகிழக்கில் எஞ்சியிருக்கிறது என்று சொல்லலாம். இந்த
ஓவியங்கள் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் துவங்குகின்றன. ஒரு வகைமாதிரியை மையமாகக் கொண்டிருக்கின்றன.
இந்த வகைமாதிரி (pattern) ஓவியத்தின் பிறபகுதியிலும் எதிரொலிக்கிறது. பலமுறை பலகோணங்களில்
அடுக்கப்படுகிறது. Fractal எனும் மாதிரியை நினைவுபடுத்துகிறது. எந்த ஒரு ஓவியமும் பல
துண்டுகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டும் தனக்கான அளவீடுகளைக் கொண்டது.
இத்துண்டுகள் அதன் சரியான கணக்கு அளவுகளின் படி அமையும் போது அந்த ஓவியம் தன் முழுமையை
அடைகிறது. திபெத் ஓவியங்கள் குறித்து எவ்விதப் பரிச்சயமும் இல்லாத என்னால் புரிந்து
கொள்ள முடிந்தது இதுவே. சிக்கிம் அரசால் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. நான் சென்றிருந்தபோது
பள்ளி மாணவர்கள் இக்கலை குறித்து ஓவியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
கேங்கடாகிலிருந்து பெல்லிங் நோக்கிப் பயணம் துவங்கியது. நாம்சி வழியாகச் சென்றேன்.
சிவனும் போதிசத்வ பத்மசாம்பவரும் இப்பகுதியில் நிறைந்துள்ளனர். ஒரு மலை முகட்டில் சிவனுக்கான
மாபெரும் சிலை. ‘சார்தாம்’ (char dham – நான்கு புனிதத் தலங்கள்) என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவெங்கும் சிவனின் முக்கியமான கோயில்களின் மாதிரிகள் அடங்கிய மிகப்பெரும் காம்பெளக்ஸ்.
அங்கிருந்த மற்றொரு மலைமுகட்டில் குரு பத்மசாம்பவருக்கு மாபெரும் சிலை. இந்து மதமும்,
தாந்திரீக திபெத்திய பெளத்தமும் சிக்கிம் நிலத்தின் பெரு மதங்கள். குரு பத்மசாம்பவர்
எனும் போதிசத்வர் இந்நிலத்தின் முக்கியமான கடவுள். சாம்பவர் குலத்தின் அரசர். போதிசத்வ
நிலையை அடைந்தவர். சாம்பவ குலத்தில் பிறந்த ஒருவரை வடகிழக்கு மற்றும் திபெத் பகுதியைச்
சேர்ந்த பிற குலமக்களும் கடவுளாக ஏற்கின்றனர். சிவனை நினைவுபடுத்தும் திரிசூலம் ஏந்தியவர்.
திபெத்திய பெளத்தத்தின் 8 குறியீடுகளில் சங்கும் சக்கரமும் அடக்கம். போதிசத்வர் முன்
வைக்கப்படும் 7 கிண்ணங்களும் (சில சமயங்களில் 8) தினமும் பூஜை செய்யும் சாமானிய இந்துவால்
புரிந்துகொள்ளக்கூடியதே.
மேற்குலக இறக்குமதியான முரணியக்கம் எனும்
கருத்து, வன்முறைக்கு ஒரு நியாயத்தை அளித்து அதை வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தும்
கருவியாக பார்க்கிறது.
இரு தரப்பும் ஆயுதம் தரித்துச் சண்டையிட்டுப் பின்
சமாதானம் நிலவும் சாத்தியம் குறித்த கற்பனை எந்தவொரு எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கும்
குறைந்ததல்ல. ஓர் உயிர் (அல்லது) கருத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பிறரை அழிப்பதன்
அவசியத்தைக் குறித்துச் சிந்திக்கும் மேற்குலகின் நீட்சியே, விலங்குகளின் வன்முறையை
அழகியல்தன்மையுடன் காட்சிப்படுத்தும் இன்றைய டிஸ்கவரி சேனல். இந்திய வரலாற்றெழுத்து
இன்றுவரை இக்கருத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றின் நகர்வை நியாயப்படுத்த
சண்டைகள் குறித்த கற்பனைகள் அவசியமாகின்றன. அதன் உச்ச சாத்தியம் இந்து எதிர் பெளத்தம்
குறித்த வரலாற்றெழுத்து. இந்த மத/கலாசார முகிழ்ப்புகள் வன்முறையால் நிகழ்ந்திருக்க
சாத்தியமில்லாதவை. இதைச் சாத்தியமாக்கிய ஊடுபாவுகளை அறிய முரணியக்கத்தால் முடியாது.
இன்னும் கொஞ்சம் கையை நீட்டினால் கஞ்செஞ்ஜங்கா மலையைத் தொட்டுவிட முடியும் எனும்
பிரமையைக் கொடுப்பதுதான் பெல்லிங்கின் (Pelling) சிறப்பு. ஊரின் எந்தப் பகுதியில் இருந்தாலும்
அம்மலையை வெகு அருகில் காணமுடியும். அம்மலையின் பிரமாண்டத்தை அறியத்தரும் முக்கியமான
இடம் அது. மற்றபடி திபெத்திய பெளத்தம் இங்கும் செழித்திருக்கிறது.
சிக்கிம் எங்கும் காணக்கூடிய ஒரு விஷயம், நீருடனான அதன் பிணைப்பு. திஸ்தா
(Teesta) மற்றும் பல்வேறு நதிகள் அம்மாநிலத்தின் குறுக்கும் நெடுக்கும் பரவியுள்ளன.
இம்மாநிலத்துள் செல்லும் வழியெங்கும் சிறு சிறு நீர் அருவிகள் வழிந்து ஓடுகின்றன. இத்தகைய
வளமான நீராதாரத்தால் மொத்த மாநிலத்தின் நீர்த் தேவையும் எளிதாகக் கையாளப்படுகிறது.
திஸ்தா நதியிலிருந்து கிடைக்கும் மின்சாரம் சென்றடையாத பகுதியே இம்மாநிலத்தில் இல்லை.
எஞ்சும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மலைகள் சூழ்ந்த சிக்கிம்மில்
கட்டடங்களுக்கும் குறைவில்லை. இருந்தும் இயற்கை பாதிக்கவில்லை. தொலைத்தொடர்புச் சிக்கல்
இல்லை. சிக்கிமின் கலாசாரத்தைக் காக்கும் பொருட்டு நிலஉரிமை குறித்து அம்மாநில அரசு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு மதத்தைச் சேர்ந்தவர் விற்கும் நிலம் அதே மதத்தைச்
சேர்ந்த மற்றொரு நபருக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். பிற இந்திய மாநிலங்களில் வசிப்பவர்கள்
நிலம் வாங்க முடியாது. லீசுக்கு மட்டும் எடுக்கலாம். அதன் விவசாயம் முழுக்க முழுக்க
இயற்கை முறையை மட்டும் சார்ந்திருக்கிறது. இருசக்கர வாகனங்களை அரிதாகவே காண முடிகிறது.
(‘பனிக் காலத்தில் வழுக்கி விடும்.’) அதன் சுற்றுலா மற்றும் புவியியல் முக்கியத்துவத்தைத்
தாண்டி, சிக்கிம் இந்தியாவின் பெருமைக்குரிய இடங்களில் ஒன்று. சீனாவால் துரத்தப்பட்ட
திபெத்திய பெளத்தம் சிக்கிமில் செழித்திருப்பதைக் காணமுடிகிறது. திபெத் சுதந்திரம்
அடையும்போது தன் கலாசாரத்தை மீட்க இந்தியா மட்டுமே அதன் நம்பிக்கை. நேபாள மொழியும்
அதன் மக்களும் இங்கு வெகு இயல்பாக வாழமுடிகிறது. வருங்காலத்தில் சீனாவால் நேபாளம் நெருக்கடியைச்
சந்தித்தால் அப்போதும் சிக்கிம் அவர்களை ஏற்கும்.
எல்லாவகையிலும் சிக்கிம் நகரின் எதிர்முனையில் டார்ஜிலிங்கை நிறுத்தலாம். மிகக்குறைந்த
நிலப்பகுதியில் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டம். அதற்குக் குறையாத நான்கு சக்கர வாகனங்கள்.
நீண்ட வாகன வரிசைகள். பொறுமையற்று ஒலி எழுப்பியபடி இருக்கும் வாகனஓட்டிகள். ஊரின் பெரும்பாலான
சாலைகள் ஒருவழி போக்குவரத்திற்கு மட்டுமே. 70-80 களில் உறைந்து நின்றுவிட்ட ஊர். வங்காளிகள்,
திபெத் அகதிகள், நேபாளிகள் நிரம்பிய ஊர். நேபாள மொழியே அதிகம் பேசப்படுகிறது. இந்த
ஊர் என்னை அதிகம் கவரவில்லை. Toy Train-ல் இருந்த சில தருணங்களைத் தவிர.
திபெத்திய பெளத்தம் நிலவும் மற்றொரு முக்கியமான இடம் இது. திபெத்திய அகதிகளுக்கான
முக்கிய மையமும் கூட. அவர்கள் நிர்வகிக்கும் நெசவுகூடத்திற்குச் செல்ல முடிந்தது. அழகான
வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களையும், தங்கள் கலாசாரத்தை அழிக்க முயலும் சீனாவின் மீதான
கோபத்தையும் வெளிப்படையாகவே காணமுடிந்தது. தற்போதைய தலாய் லாமா தன்னுடைய வாரிசாக அறிவித்த
ஒரு சிறுவனை சீன அரசாங்கம் கடத்திச் சென்று ரகசியமாக வைத்துள்ளது. அதைக் கண்டிக்கும்
சுவரொட்டிகள், சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை நிராகரிக்கக் கோரும் கோஷங்கள்
என்று எதுவும் மறைவில் இல்லை. சீன எதிர்ப்பு என்பது கம்யூனிச எதிர்ப்பும்தான். கம்யூனிசத்தை
விமர்சிக்கும் ஜெயபிரகாஷ் நாராயணின் சொற்களைப் புகைப்படச் சட்டகமாக்கி வைத்துள்ளனர்.

நன்கு பராமரிக்கப்படும் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு
புலி புல்லைத் தின்று கொண்டிருந்தது. 30 வருட ஆட்சியில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள்
சாதித்தது என்ன என்று இனி ஒரு பயல் கேட்டு விடமுடியாது!
Leave a Reply