சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்

100 ரூபாய் சம்பளம், ஆனால் 95 ரூபாய் வருமான வரி என்றால் நம்புவீர்களா? அப்படித்தான் இருந்தது இந்தியா. இந்திராவின் ஆட்சியில் அதிகபட்ச அளவாக 95% வருமான வரி இருந்தது.1
அப்படி கொடூரமான வரி விதிப்பு இருக்கவேண்டிய காரணம் என்ன? பாரதத்தில் நெல், கோதுமை முதலியன விளையவில்லையா? ஆகவே சிங்கப்புர் போல் உணவு தானியங்களைக் கூட இறக்குமதி செய்யவேண்டி இருந்ததா? அதனால் வேறு வழி இல்லாமல் அரசு இவ்வளவு வரி விதித்ததா?

நேருவிய சோஷலிசம் – அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள் – அதே பொருளாதார வித்தை முன்னெடுத்துச் சென்று, அந்த விஷ விதைக்கு உரமிட்டு நீரூற்றி வளர்த்ததன் பயனாக நாட்டின் வருமானம் குறைந்தது – அதனால் இப்படியான கொடும் வரி விதிப்பு என்று செயல்பட்டது நேருவின் புதல்வி இந்திராவின் ஆட்சி.
விவரமாகப் பார்ப்போம்.

விடுதலை அடைந்தவுடன் பண்டித நேரு அவர்கள் வேளாண்மையையும் நாட்டின் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு, தொழிற்சாலைகளைப் பெருக்குவதில் முனைந்தார். அன்றைய சோவியத் குடியரசின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சோஷியலிசமே பாரதம் உய்ய வழி என்று நம்பினார். பொருளாதாரத் திட்டமிடல் மத்தியில் நடைபெறவேண்டும் என்று சோவியத் வழியில், ‘திட்டக்கமிஷன்’ என்னும் பேரதிகாரங்கள் படைத்த நிறுவனத்தைத் துவங்கினார். மாநிலங்கள் தங்களின் வருடாந்திரத் தேவைகளுக்கு திட்டக்கமிஷனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி டெல்லிக்கு வந்து கையேந்தி நிற்க வழிவகுத்தார். ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் முறையையும் கொண்டுவந்து மத்தியத் திட்டமிடல் என்னும் முறையால் நாட்டின் வளர்ச்சிக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறையேனும் தடை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது திட்டக்கமிஷன்.

திட்டமிடல், உற்பத்தி, வழங்கல் அனைத்துமே சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்பது கம்யூனிச சர்வாதிகாரத்தின் சிந்தனை. அதுவே நேருவிய சோஷியலிசத்தின் மையக்கூறாகவும் இருந்தது. ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளும், மாநிலத்தில் செயல்படும் உள்ளாட்சி, பஞ்சாயத்துக்களும் முறையே அதனதன் மேற்பார்வையாளரான அரசுகளிடம் கையேந்தி நிற்க வேண்டும். டெல்லியில் அமர்ந்திருக்கும் திட்டக்கமிஷன் என்னும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அதிகாரிகளின் அமைப்பு, கையேந்தி நிற்கும் மாநில அரசுகளுக்கு தானம் செய்வது போல் ஆண்டுதோறும் நிதி வழங்கும். சோவியத் ரஷ்யாவின் அப்பட்டமான இந்தப் பொருளாதார முறையையே நேருவும் இந்தியாவில் செய்தார்.


சோஷியலிசம் என்னும் பொருளாதார முறையை எப்படியேனும் அமலுக்குக் கொண்டுவந்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, வலுவான பொருளாதார முறையாக முன்னிறுத்த நேரு உறுதி பூண்ட ஆண்டு 1927. பி.யூ.படேல் என்னும் பொருளாதார நிபுணர் சொல்வது, “நேருவின் சோஷியலிசப் பொருளாதார ஈர்ப்புக்குக் காரணம், அவர் 1927ல் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்ததே ஆகும்.” 1932, 1933ல் தனது மகள் இந்திராவிற்குக் கடிதம் எழுதும்போது நேரு சொல்வது: “பழைய ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார முறைகள் உடைந்துவருகின்றன… சோஷியலிசப் பொருளாதார முறைக்கு மாற வேண்டிய காலம் கனிந்துள்ளது.” (Patel 1964; p.245)

சோவியத் ரஷ்யாவிற்கு ஒருமுறை சென்று வந்ததாலேயே பாரதத்தின் பொருளாதார முறையையே மாற்றவேண்டும் என்று முழங்கினார் நேரு. 1936ல் நடந்த காங்கிரசின் 49வது மாநாட்டில்: “இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சோஷியலிசத்தில்தான் அடங்கியுள்ளது என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். இது புது வகையான பொருளாதாரம். அத்தகைய பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை சோவியத் ரஷ்யாவின் மாநிலங்களில் நாம் காணலாம். நமது எதிர்காலம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருப்பது சோவியத் ரஷ்யா என்னும் நாடு இருப்பதாலும் அது செய்துவரும் செயற்கரிய செயல்களாலும்தான். சோஷலிசத்தை வெறும் பொருளாதாரக் கொள்கையாக நான் பார்க்கவில்லை. அது என் மனம், அறிவு அனைத்திலும் வியாபித்திருக்கிறது…” என்றார்.

சோஷலிசம் பற்றி அனைத்துத் தலைவர்களும் நேரு கொண்டிருந்த கருத்தையேதான் கொண்டிருந்தார்களா?

சோஷலிசம் பற்றிய வல்லபாய் படேலின் பார்வை கடுமையானதாகவே இருந்தது. இளம் சோஷலிஸ்டுகள் மத்தியில் பேசுகையில் “சோஷலிசம் பற்றிப் பேசுவதற்கு முன் உங்கள் உழைப்பால் என்ன பொருளீட்டியுள்ளீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று தெரிந்துகொண்டு பின்னர் விளைச்சலை என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று சோஷலிச எதிர்க்குரலை 1950லேயே எழுப்பினார். நேரு காதில் வாங்கிக்கொள்வதாய்த் தெரியவில்லை.

பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் பெரும் பங்காற்றிய அம்பேத்கர் அவர்கள் ‘சோஷியலிசம்’ என்னும் சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறையில் சேர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். பின்னாளில் பாரத மக்கள் தங்களின் அரசு எவ்வகையான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்படும் வேளையில் உறுதி செய்ய முடியாது, எனவே அந்நாளைய பொருளாதாரக் கொள்கையைப் பின்னாளைய மக்களின் மேல் திணிக்கக் கூடாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். சோஷியலிசம் என்னும் சொல்லை மட்டும் அல்ல, செக்யூலரிசம் என்னும் சொல்லையும் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்க்க அவர் முன்வரவில்லை.

அம்பேத்கர் அத்துடன் நிற்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் சொல்கிறார்: “நமது அரசியல் அமைப்புச் சட்டம் தனிமனித எதேச்சாதிகாரத்தை முன்னிறுத்தவில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தையே முன்னிறுத்துகிறது. இது கம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கவில்லை. அதேசமயம் சோஷலிஸ்டுகளுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில், இந்த அரசமைப்புச் சட்டத்தின்படி தனியார்ச் சொத்துக்களை அவர்களால் அவர்கள் இஷ்டப்படி எந்த நஷ்டஈடும் தராமல் நாட்டுடைமையாக்க முடியாது… இதனால் எதிர்க்கிறார்கள்…”

அம்பேத்கர் எவற்றை எதிர்த்தாரோ இந்திரா அவற்றை நடைமுறைப்படுத்தினார். தனது தந்தையின் கொள்கைகளை அடியொற்றி, 1976, இந்திரா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் (ப்ரியாம்பிள்) இந்த இரு சொற்களையும் சேர்த்தார். மன்னர் மானியத்தை ஒரே அடியில் ஒழித்தார். இதனால் கம்யூனிஸ்டுகளுக்கு இடமளித்து நாட்டின் எதிர்காலத்தை இருண்டதாக்கினார்.
சோஷலிசத்தையும் இடதுசாரி சார்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளையும் மிகக் கடுமையாகச் சாடியவர் இராஜாஜி அவர்கள்.
மன்னர் மானிய ஒழிப்பு பற்றி ராஜாஜி இப்படி மனம் வெதும்பிப் பேசுகிறார். “காங்கிரஸ்காரர்கள் பேசுகிறார்கள்: இராமாயணப் பாத்திரம் இராமன் எவ்வளவு பெரிய முட்டாள்! கொடுத்த வாக்கை நிறைவேற்றக் கானகம் சென்றானே! மன்னர்களுக்கு வாக்குறுதி கொடுத்ததுபோல் கொடுத்துப் பின்னர் அவர்களுக்குத் துரோகம் செய்வதுதானே புத்திசாலித்தனம்?” (Swarajya, 27.7.68) மேலும் பேசுகையில், “மன்னர் மானியங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களில் நேருவும் படேலும் காலமாகிவிட்டனர். நான் மட்டும் உயிருடன் இருந்து வாக்கைக் காக்க முடியாமையை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறேன்” என்கிறார். பாரத விடுதலைக்கென்று தங்கள் ஆவியையே பணையம் வைத்த தலைவர்களை சோஷலிசம் என்னும் மாயாவாதத்தால் மனம் ஒடிந்து அழச்செய்த பெருமை, தன்னை சோஷலிஸ்ட் என்று அறிவித்துக்கொண்ட இந்திராவைச் சாரும்.

நேருவும் தான் கொடுத்த வாக்கைக் காக்கவில்லை. தானியங்கள் உற்பத்தி, அவற்றுக்கான விலை நிர்ணயித்தல், கொள்முதல், கூட்டுறவு வேளாண்மை என்று சோஷலிச எதேச்சாதிகாரத்தை நேரு அறிமுகப்படுத்தினார். “இந்த (சோஷலிச) ஓநாய் சங்கிலியால் பிணைக்கப்பட வேண்டும்” என்று கூறிய இராஜாஜி, ‘வன்முறையான சோஷலிசம்’, ‘காந்தீயத்திலிருந்து பின்வாங்குதல்’, ‘நான் ஏன் சிவப்புக்கொடி காட்டுகிறேன்’ என்ற தலைப்புகளில் முறையே ’ஸ்வராஜ்யா’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழ்களில் காட்டமாக எழுதித் தனது ஆழ்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தார்.


பாரதத்தில் நேருவால் அமல்படுத்தப்படும் கூட்டுறவுப் பண்ணைகள், கூட்டுறவு வேளாண்மை முதலியன “ஆழ்ந்த சிந்தனைகளின் பயனால் விளைந்தவை அல்ல” என்றும், “தனிமனித சுதந்திரம் அற்ற, எதேச்சாதிகாரப் போக்குகள் கொண்ட, மனித உழைப்பை அரசாணைகளின் மூலம் பெற்று நடத்தப்படும் கொத்தடிமை முறைகள் நிலவும் கம்யூனிச நாடுகளில் மட்டுமே இவை சாத்தியம்” என்று கடுமையாகச் சாடிய இராஜாஜி, “கம்யூனிஸ்டுகளிடமிருந்து அவர்களது பெயிண்ட் மற்றும் அதைப் பூசும் பிரஷ் இரண்டையும் காங்கிரஸ் கடன் பெறுகிறது” என்று கேலி பேசினார். (Indian Express, 19.1.59)

நேருவின் சோஷலிசப் பற்றும் அவரைப் பின்பற்றிய காங்கிரஸ் அமைச்சர்கள் முதலானோரின் சோஷலிச சத்தியப் பிரமாணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்த வேளையில் அமைச்சர்களும் காங்கிரஸ்காரர்களும் செல்வந்தர்களாவதைப் பார்த்து இராஜாஜி அதிசயித்தார். “காங்கிரஸ்காரர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளனரே, ஏதாவது புதிய தொழில்கள் செய்து வருகின்றனரா?” என்று நையாண்டி செய்தார். (Indian Express, 28.5.56)

எப்படியாவது நாட்டை நேருவிய சோஷலிசப் பாதையில் இருந்து விடுவிக்கவேண்டும் என்னும் நோக்கில் இராஜாஜி தனது 83-வது வயதில் ‘சுதந்திரா’ என்னும் கட்சியைத் துவக்கினார். காங்கிரசின் சோஷலிசக் கொள்கையால் ‘லைசன்ஸ்-பர்மிட்-ராஜ்யம்’ நடைபெறுகிறது என்று கடுமையாகச் சாடிய இராஜாஜி, இதனால் காங்கிரசின் பணக்கார ஆதரவாளர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே வழி வகுக்கப்படுகிறது என்று மனம் வருந்திப் பேசினார்.

திட்டக்கமிஷன் நாட்டின் உற்பத்தியைக் குலைக்கிறது என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்த இராஜாஜி, இந்திராவிடம் அந்த நிறுவனத்தைக் கலைத்து விடும்படி வேண்டினார்.

சோஷலிசக் காதல்கொண்ட காங்கிரஸின் உண்மை நிலை என்ன? தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் என்ன செய்தது? இது பற்றி இராஜாஜி சொல்வது: “நான் சுதந்திரா கட்சியின் தேர்தல் நிதிக்காகப் பிச்சை எடுத்தபோது பெரிய கம்பெனிகளிடம் காங்கிரஸ் எங்களைவிட ஐந்திலிருந்து இருந்து பத்து மடங்கு பணம் பெற்றிருந்தது.” (Swarajya, 11.2.67) ‘பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்’ என்று கம்பன் சொன்னது இதுதான் போல.

அப்படி சோசலிசத்தால் என்னதான் பயன் விளைந்தது? உணவுத்தட்டுப்பாடு நீங்கியதா? மக்கள் மூன்று வேளை உணவு உண்டார்களா? தானிய உற்பத்தி அதிகரித்து, பாரதம் வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்ததா என்றால் இல்லை. 17 ஆண்டுகள் சோஷலிச ஆட்சி செய்த பண்டித நேருவின் மரணத்தின்போது இந்தியா அமெரிக்கச் சட்டம் 480ன் தயவால், அமெரிக்காவிடமிருந்து கோதுமையை மலிவு விலையில் பெற்றுவந்தது. சோஷலிசப் பொருளாதாரம் கொண்டுவந்து கொடுத்தது நித்ய தரித்திரம் மட்டுமே.

நேருவால்தான் தரித்திரத்தை நீக்க முடியவில்லை. இடதுசாரிப் பக்கம் முழுதுமாகச் சாய்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையையே
சோஷலிசத்துக்காக மாற்றிய இந்திராவாவது செய்தாரா? அதுவும் இல்லை. கடைசியில் ‘கரிபி ஹடாவோ’ (ஏழ்மையை நீக்குவோம்) என்று வெற்று வார்த்தைகளுடன் அரசியல் நடத்தினார்.

நாட்டை அழிவுப்பாதையில் கொண்டுசென்ற காங்கிரசின் சோஷலிசக் காதல், இந்திராவின் 95% வருமான வரியையும் தாண்டி நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரழித்தது. அதன் பலனாக 1991ல் சந்திரசேகர் அரசு பாரதத்தின் தங்கக் கையிருப்பை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.நரசிம்மராவின் ஆட்சியில் இராஜாஜியின் கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டன. 2014ல் வந்த நரேந்திர மோதியின் அரசு முதல் வேலையாக திட்டக்கமிஷன் என்னும் வெள்ளையானையைக் காட்டுக்கு அனுப்பியது.

இராஜாஜி மேலுலகில் இருந்தவண்ணம் மகிழ்ந்திருப்பார்.

அடிக்குறிப்புகள்:

உசாத்துணைகள்:
India Since 1980 – Sumit Ganguly, Rahul Mukherji
Dr.Ambedkar’s speech in the Constituent Assembly on 15 November 1948.
Rajaji, a life – Rajmohan Gandhi
The God Who Failed: An Assessment of Jawaharlal Nehru’s Leadership by
Madhav Godbole.

Leave a Reply