மறைநீர் – ஹாலாஸ்யன்


என் உயர்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர், நீரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் ரொம்ப அழகாக ஒரு வாக்கியம் சொன்னார். “Water has no business to be a liquid.” நீரானது திரவ நிலையில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சால்கோஜென்ஸ் chalcogens என்று அறியப்படுகிற ஆக்ஸிஜன் தொகுதித் தனிமங்களில் ஆக்ஸிஜன் மட்டும் அந்தக் குடும்பத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடங்காமல் திரிகிறது. அத்தொகுதித் தனிமங்கள் ஹைட்ரஜனோடு வினைபுரிந்து கிடைக்கிற மூலக்கூறுகள் எல்லாம் வாயுக்களாக இருக்கவேண்டும் என்னும் கட்டுப்பாடு இருக்கையில், ஹைட்ரஜன் பிணைப்பு hydrogen bonding என்னும் ஒரு விந்தையின் காரணமாக இதன் கொதிநிலை மட்டும் நூறு டிகிரியாகி அறை வெப்பநிலையில் நீரை ஒரு திரவமாக நிலைநிறுத்தியிருக்கிறது. அந்தப் பண்பு இல்லாமல் நீரானது ஒரு வாயுவாக இருந்திருந்தால் பூமி எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. கடல்கள் இல்லை, பாசிகள் தாவரங்கள் இல்லை, ஒளிச்சேர்க்கை இல்லை, கிட்டத்தட்ட உயிர்களே இல்லை. ஆதலால் நீர், பூமியில் உயிருக்கு ஆதாரமாக இருக்கிறது. இன்று வரை பிற கோள்களில் நாம் திரவ நிலையில் நீர் இருக்கிறதா என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறோம். காரணம் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் நீர் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. உயிர்களுக்கு மட்டுமில்லை; பூமியின் வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைப்பது, பருவக்காற்றுகள், நில அமைப்பு என நீர் நம் பூமிக்கு மிகவும் அவசியமானது.

இதெல்லாம் அதிகபட்சம் பன்னிரண்டாங்கிளாஸ் படித்த ஆளுக்குத் தெரிந்திருக்கும். ஐந்தாவது படிக்கும் ஒரு குழந்தையிடம் நீரை எதற்கெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால், குடிக்க, குளிக்க, சமைக்க, துலக்க என்று பதில் எழுதி மார்க் வாங்கிக்கொண்டு போய்விடும். தண்ணீரின் பயன்பாடு என்பது நமக்குத் தெரிவது அவ்வளவுதான். உலகம் முழுக்க நீரின் உபயோகத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வேளாண்மை, தொழிற்சாலை, வீட்டு உபயோகம். இந்த மூன்றுக்குள் எப்படியும் எல்லாப் பயன்பாடும் வந்துவிடும். சுழலும் ஏர்ப்பின்னது உலகம் என்பதால் 70% நீர் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. சுமார் 22% தொழிற்சாலை, 8% சதவிகிதம் மட்டுமே வீட்டு உபயோகம். இதெல்லாம் உலகளாவிய புள்ளி விவரங்கள்.
சரி. கொஞ்சம் யதார்த்தம் பேசுவோம். இரண்டு உழக்கு சாதம் வைக்க எவ்வளவு நீர் தேவைப்படும்? என்ன அரிசி என்று எதிர்க்கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. எப்படியும் ஆளுக்கு ஒரு கணக்கு சொல்வார்கள். உண்மை என்ன தெரியுமா. தோராயமாய் 1000 லிட்டர். இரண்டு உழக்கு அரிசிக்கு குக்கரில் 1000 லிட்டர் தண்ணீர் வைக்க முடியாதுதான். ஆனால் இந்தக் கணக்கு, வயலுக்கு நீர்ப் பாய்ச்சி, உழுது, விதைத்து, மருந்தடித்து, தீட்டி, உறைபோட்டு, கடையில் இருந்து வாங்கி வந்து, கடைசியில் நீங்கள் குக்கரில் அரிசியோடும், குக்கரிலும் ஊற்றும் நீரையெல்லாம் சேர்த்துதான். குக்கர் வைக்க மட்டும் ஆகும் நீரை கணக்கில் இருந்து ஒதுக்கினாலும் அது பெரும் அளவல்லவா? இப்படி நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நீர் மறைந்திருக்கிறது. அது அதன் உற்பத்தியில் செலவாகி இருக்கலாம். கழுவிச் சுத்தப்படுத்துதலில் செலவாகி இருக்கலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு போகையில் செலவாகி இருக்கலாம். வாகன எரிபொருட்களாக நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் இப்படி எல்லாமே எண்ணெய் வயல்களில் நீரை உட்செலுத்தி உறிஞ்சப்படுபவைதானே. அதிலும் நீர் செலவாகி இருக்கிறதல்லவா? ஆக பெட்ரோலியத்தையும் தண்ணீரால் அளக்க முடியும். இப்படி ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நீர் மறைந்திருக்கிறது. அது வெளியே தெரியாது. இதைத்தான் மறைநீர் என்கிறார்கள். Virtual water.


இந்தக் கோட்பாட்டை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது ஜான் ஆந்தனி ஆலன் அல்லது டோனி ஆலன். லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியர். அடிப்படையில் அவர் ஒரு நிலவியல் அறிஞர். இந்த மறைநீர்க் கோட்பாட்டை நிறுவியது அவர்தான், மத்தியக் கிழக்கு நாடுகளில், உணவை இறக்குமதி செய்வது மூலம் நீரைச் சேமிக்கலாம் என்று சொன்னவர். இந்தக் கோட்பாட்டுக்காக அவருக்கு 2008ம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் வாட்டர் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. அந்த விருது ஒரு சூழியலுக்காக வழங்கப்படுகிற நோபல் பரிசு போல.

நீர் உபயோகத்தை மறைநீர்க் கோட்பாடு மூன்று விதமாகப் பிரிக்கிறது. நீலநீர் blue water, பச்சை நீர் green water, சாம்பல் நிற நீர் gray water. இந்த நிறங்களின் பெயரால் சொல்லப்படும் லிட்டர் கணக்கு அளவீடுகள் திரும்பப் பயன்படுத்த முடியாமையைக் குறிக்கின்றன. நீல நீர் என்பது பூமியின் பரப்பில் அல்லது நிலத்துக்கு அடியில் கிடைக்கிற நன்னீர். ஆறு, குளம், கிணறு, ஏரி இவையெல்லாம். பச்சை நீர் என்பது மழை நீர். மறைநீரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு நிச்சயம் பச்சை நீர்க் கணக்கு வரும். சாம்பல் நிற நீர் என்பது ஏதேனும் ஒரு காரணியால் மாசுபடுகிற நீர். அது பூச்சிக்கொல்லி உரம் என வேளாண்மை சார்ந்ததாகவோ அல்லது வேதிப்பொருள், கழிவு எனத் தொழிற்சாலை சார்ந்ததாகவும் இருக்கலாம்.


சில மறைநீர் கணக்குகள் பிரமிக்க வைப்பவை‌. ஒரு பொருளின் உற்பத்திக்கு எப்படியும் எங்கேயாவது நீர் தேவைப்படுகிறது. நாம் விலையாகக் கொடுப்பது பணம் மட்டுமல்ல, நீரும்தான்.

ஓர் உதாரணம் பார்ப்போம். போகிற போக்கில் எடுத்து மாட்டிக்கொண்டு போகிற ஒரு பருத்திச் சட்டை. பருத்தி உற்பத்திக்குத் தேவையான பச்சை நீரும், நீல நீரும் ஆயிரக்கணக்கான லிட்டர். மேலும் உணவுப் பயிர்களை விடப் பணப் பயிர்கள் அதிக நீர் வேண்டுபவை. காவிரி தமிழகத்திற்குக் கிடைக்காமல் போனதில் மாண்ட்யா பகுதிகளில் சிறுதானியம் விளைந்த வயல்களில் கரும்பு ஆகியவை விளைவிக்க ஆரம்பித்ததுதான். அவை மழைநீர், நிலத்தடி நீர், பிற பாசன நீர் போன்றவற்றை பகாசுரனாய் உறிஞ்சும். பார்க்கப்போனால் பருத்தி ஒரு கார்போஹைட்ரேட். செல்லுலோஸால் ஆன இழைகளைக் கொண்டது. அந்த செல்லுலோஸ் உருவாகும் ஒளிச்சேர்க்கை வினையில் நீர் ஒரு முக்கியமான வினைபொருள். நீர் இல்லாமல் செல்லுலோஸ் வராது. இதைத்தவிர அள்ளி இறைக்கப்படுகிற உரம், பூச்சிக்கொல்லிகள் சாம்பல் நிற நீர் கணக்கில் வரும். அடுத்தாக அறுவடை செய்த பருத்தியை விளைநிலத்தில் இருந்து ஆலைகளுக்குக் கொண்டு செல்லுதல், அங்கு பருத்தியைக் கழுவுதல், mercerization எனப்படும் பருத்தியை மிருதுவாக்கும் வினைக்குச் செலவாகும் நீர், பின்னர் சாயமேற்றி நெய்தல் ஆகியவற்றில் செலவாகும் நீர், கடைகளுக்குக் கொண்டு செல்ல ஆகும் எரிபொருளின் பின்னிருக்கும் நீர், இவை எல்லாம் ஒரு பருத்திச் சட்டைக்குப் பின்னால் இருக்கும் மறைநீர். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கணக்குப் போட்டால் ஒரு சட்டைக்கு 2,700 லிட்டர் தண்ணீர் கணக்கு வருகிறது. இது உற்பத்திக்கு மட்டும். இதனை இன்னும் அந்தச் சட்டையின் ஆயுட்காலம் முடியும் வரை இழுத்தாலும் அது இன்னும் ஓர் ஆயிரம் லிட்டர் வரை கணக்கு வரலாம். சட்டைக்குள் 2700 லிட்டர்.

உண்மையில் பகீரென்று இருப்பது இறைச்சிதான்.

மறைநீர்க் கோட்பாட்டில் இறைச்சி என்பது இரட்டை வேலை. ஏற்கெனவே உணவுப் பொருள் உற்பத்தி என்பது ஏகப்பட்ட ஆயிரம் லிட்டர்களைக் குடித்திருக்க அதை ஒரு மிருகத்திற்குப் போட்டு வளர்த்து அதன் இறைச்சியை உண்பது என்பது சிக்கலே. ஆனால் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் சைவ சாப்பாடு என்பது கட்டுப்படியாகாது. இடமில்லை என்பது நிதர்சனம். ஆனால் இறைச்சிகளுக்காக இயங்கும் பண்ணைகள்தான் எமன்கள். மாட்டிறைச்சி என்ற உதாரணத்தை எடுத்துக்கொண்டால், பிறந்ததில் இருந்து கொல்லப்படும் வரையில் ஒரு மாடு தோராயமாய் 1,300 கிலோ தானியங்களைத் தின்கிறது. அதைத்தவிர 7,200 கிலோ வைக்கோல் மற்றும் பிற தீவனங்களைத் தின்கிறது. இந்த இரண்டிற்கும் மறைநீர் கணக்கு 30,60,000 லிட்டர்கள். இதனைத்தவிர அது நீராகவே 24,000 லிட்டர் நீரை அருந்துகிறது. கொன்று, இறைச்சியைப் பதனப்படுத்துதலுக்கு ஒரு 7,000 லிட்டர்கள். மறைநீர் மட்டும் 30,91,000 லிட்டர்கள். இத்தனையும் செய்தால் ஒரு மாட்டில் இருந்து 200 கிலோ இறைச்சி கிடைக்கும். வகுத்தால் ஒரு கிலோ இறைச்சிக்கு 15,400 லிட்டர் மறைநீர். சென்னையில் ஓடுகிற ஒரு தண்ணீர் லாரி 12,000 லிட்டர்கள். ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லாரிக்கு மேல் தண்ணீர் செலவாகிறதல்லவா? சடாரென்று சமணராகி மொத்த உலகையும் கொல்லாமைக்கு மாற்றக் கட்டளையிடும் முன்னர் சற்றுப் பொறுங்கள்.

தினம் காலை டபுள் ஸ்ட்ராங்குக்கும் கூடுதலாய் மேலே கொஞ்சம் டிகாக்ஷன் ஊற்றி, கொதிக்கக் கொதிக்கக் தொண்டைக்குள் ஊற்றிக்கொள்கிறோமே காபி, அதனிடம் மாட்டிறைச்சிப் பண்ணைகள் பிச்சை வாங்க வேண்டும். ஒரு கிலோ காப்பிப் பொடிக்கு 18,900 லிட்டர் மறைநீர். பில்டரில் ஊற்றுகிற வெந்நீரை விட இந்தக் கணக்கு சுடுகிறதோ?

செம்மறி ஆடு – 10,400 லிட்டர்
பன்றி – 6,000 லிட்டர்
ஆடு -5,500 லிட்டர்
கோழி -4,200 லிட்டர்
சீஸ் – 3,180 லிட்டர்
அரிசி – 2,500 லிட்டர்
சோயா – 2,145 லிட்டர்
கோதுமை -1,830 லிட்டர்
சர்க்கரை – 1,780 லிட்டர்
பார்லி – 1,425 லிட்டர்
சோளம் – 1,200 லிட்டர்

மேலே உள்ளவை எல்லாமே ஒரு கிலோவுக்கு செலவாகும் மறைநீரின் அளவு, லிட்டர்களில்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் இப்படி மறைநீர் விலை போட முடியும். இதனைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் லேப்டாப்பில சுமார் 60 லிட்டர் மறைநீர். இது அச்சேறப்போகும் தாளில் கிலோவுக்கு சுமார் 10 லிட்டர்.

அப்படி இப்படி மொத்தமாய் ஒரு நாளுக்கு ஒருவருக்குக் குடிக்க, குளிக்க என சுமார் முந்நூறு லிட்டர் நேரடியாக நீரைப் பயன்படுத்துகிறோம். மறைநீரையும் சேர்த்தால் ஒருநாளுக்கு எவ்வளவு தெரியுமா தலைக்கு மூவாயிரத்து இருநூறு லிட்டர்கள்.

 ரொம்ப விஜயகாந்த் படம் மாதிரி போகாமல், இதில் என்ன சிக்கல் என்று பார்க்கலாம். பத்தாயிரம் வருடப் பழக்கத்தில் என்ன பிரச்சினை? இறைச்சியும் வேளாண்மையும் ஆதிகாலத்தில் இருந்து நாம் செய்ததுதானே. ஏன் இதனைப் புதிதாக ஒரு பிரச்சினையாகப் பார்க்கவேண்டும் என்று கேள்வி வரும். அன்றெல்லாம் உணவுப் பொருள் ஏற்றுமதி இந்த அளவில் கிடையாது. ஏன், உடை ஏற்றுமதியே இந்த அளவு கிடையாது. தேவையைத் தவிர உபரிதான் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இன்று பொருளாதாரங்கள் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தைச் சார்ந்திருக்கின்றன. அவை அரசியலைப் பாதிக்கின்றன. வேளாண்மை, உற்பத்தி என்று இருந்த ஒரு பொருளாதாரத்தின் அச்சு இன்றைய தேதிக்கு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை அச்சாகக் கொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது.

அதாவது, பொருளாதாரம் விரிவடையும் முன்னர், சென்னையில் உற்பத்திக்குச் செலவான மறைநீர் சென்னையிலேயே பெரும்பான்மையாகக் கொள்முதல் செய்யப்பட்டது. அதிகபட்சம் அந்த நாட்டின் தலைநகர் வரை செல்லும். மிகச்சிறிய அளவிலான பொருட்களே கடல்கடந்து சென்றன. ஆனால் இன்று உலகம் முழுக்க பல நகரங்கள் ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருக்கின்றன. அவை கப்பலில் ஏற்றி அனுப்புவது பொருள் மட்டுமல்ல. நீரும் சேர்ந்துதானே. அதாவது என் நகரத்தில் இருந்து ஒரு பொருளை நான் ஏற்றுமதி செய்கையில் என் நகரத்து நீரையும் நான் ஏற்றுமதி செய்கிறேன்.

இஸ்ரேல் நாட்டில் வளமெல்லாம் இருந்தும், ஆரஞ்சுகள் பயிர் செய்யப்படுவதில்லை. காரணம் ஒரு க்ளாஸ் சாறு தரும் ஆரஞ்சை உற்பத்தி செய்ய ஆறு க்ளாஸ் நீர் வேண்டியிருக்கிறது. அதனால் இஸ்ரேல் ஆரஞ்சுகளை இறக்குமதி மட்டுமே செய்கிறது. இதன் மூலம் அது தன் மறைநீரைச் சேமிக்கிறது. அதனால் நாம்பாட்டுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கிறதென்று ஏற்றுமதி செய்துகொண்டே போனால் நீரும் காணாமல் போகுமல்லவா? அப்பொழுது அதற்கு என்ன செய்யலாம்?

     அரசு சில கொள்கைகளை இதனைப் பொருத்து மாற்றி அமைக்க வேண்டும். மறைநீர் அதிகம் செலவாகும் பொருட்களை விடக் குறைவாகச் செலவாகும் பொருட்களை ஊக்கப்படுத்தலாம். அவர்களுக்கு மானியம் அளிக்கலாம்

     நம் தேவை அதிகமின்றி ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்கும் உணவுப் பயிர்களை, பணப்பயிர்களைக் குறைத்துக்கொண்டு வேறு மாற்றுகளை யோசிக்கலாம்

     பெரும்பண்ணைகளில் இருந்து வருகிற பதப்படுத்திய இறைச்சியை விட, அந்த அந்த ஊரின் இறைச்சிக் கடைகளில் இறைச்சி கொள்முதல் செய்யலாம். சிறிய அளவிலான இறைச்சிக் கூடங்கள் பண்ணைகள் அளவுக்கு நீரை உறிஞ்சுவதில்லை

     சில பொருட்களைச் செலவானால் போகிறது என்று இறக்குமதி செய்துவிடலாம். பணம் நாளை திரும்ப வரலாம். ஆனால் நீர் வருமா என்பது சந்தேகமே.

     ஏற்றுமதி வாணிபத்தை மட்டுமே நம்பியிருக்கிற நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். கார் உற்பத்தி போன்ற மறைநீர் முழுங்கி மகாதேவன்களைக் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கவேண்டும்.

     எரிபொருள் உற்பத்தியிலும் நீர் இருப்பதால், எவ்வளவுக்கு எவ்வளவு எரிபொருள் சேமிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரையும் சேமிக்கிறோம் என்று அர்த்தம்.

     தொழிற்சாலைகள் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த முடியாத சாம்பல் நிற நீரை வெளியிடுவதால் அவற்றின் தரக்கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டும். நீர் சுத்திகரிப்புச் சட்டங்களையும் தண்டனைகளையும் இன்னும் கடுமையாக்க வேண்டும்.

     இதனைத்தவிர நேரடிப் பயன்பாட்டில் இருக்கும் நீரையும் முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்


இதுதான் நாட்டுக்கும் நாமிருக்கும் பூமிக்கும் நல்லது. நாம் ஒரு நாளில் போர் போட்டு உறிஞ்சுகிற, பம்ப் போட்டு இறைக்கிற, கழிசடையாய் ஆக்கி அனுப்புகிற நீரை, பூமி அதே அளவு கீழே கொண்டு போய்ச் சேர்க்க சில மாமாங்கங்கள் ஆகும். ஆகவே மறைநீரையும் கொஞ்சம் மனதில் வைப்போம்.
Leave a Reply