ஒரு நொடி [சிறுகதை] – லதா ரகுநாதன்

கண்ணாடியில் தீர்க்கமாகப் பார்த்தாள். கறுப்புக்கண்களில் எப்போதும் தெரியும் மெல்லிய சோகம் ஒரு அழகு. அது பளபளப்பாகத் தெரியும்படி அதில் காணப்படும் ஒரு திரை போன்ற கண்ணீர் அந்தக் கண்களுக்கு வரம். சற்றே தூக்கலான சிறிய மூக்கு, நேர்த்தியான சிவப்பு. சும்மா சொல்லக்கூடாது. அழகுதான்.

ஆனால் இன்று…

ஏதோ ஒரு முன்பகல் நேரம். வேலை, அது எப்போதும் ஒன்றேதான். இப்படிப் போகும்போது ஒருமுறை , திரும்பி வரும்போது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் நின்று, சில போது பற்பசை விளம்பரம் போல் சிரித்து, சில முறை குரங்குபோல் முகம் குவித்து, அட, எல்லாம் கண்ணாடி முன்தான்.

அன்றும் அதே போல் ஒரு நேரத்தில், முகத்தை இப்படிச்செய்து ரசித்துக்கொண்டிருக்கும்போது, அழகிய மூக்கின் கீழ், சிவந்த உதட்டின் மேல், லேசாக கறுப்போடி இருப்பதுபோல் தெரிந்தது. ஒரு கைதேர்ந்த புகைப்படக்காரரின் படைப்பில் தூக்கலாகத் தெரியும் கறுப்பு வெள்ளை போல். ஆமாம்,லேசாகப் பூனைமயிர் போல். அதேதான். வெள்ளை முகத்தில் கொஞ்சம் தெளிவாகவே.

கடவுளே, மீசையா? எனக்கா?

இதற்குப்பின், ஆமாம், நீங்கள் நினைத்தது மிகவும் சரி. கண்ணாடி முன் நிற்கும் காலநேரம் கூடிப்போனது. பார்வையின் ஃபோகஸ், இப்போது இடுப்பில் இருக்கும் மடிப்பு, லேசாக உப்பித்தெரியும் மேல்தொப்பை, சீப்புப்பல்களில் சிக்கிச்சுற்றிய தலை முடி, இவையாவும் இல்லாதுபோய், மேல் உதடு மட்டுமே என்று மாறிப்போனது.

“அம்மா. என்னைப் பாரேன்.” “புதுசா என்ன? பாத்துக்கிட்டேதான் இருக்கேன்.” “முகத்துலே ஏதேனும் மாறுதல்?” “ஏண்டி? பல்லெல்லாம் விழுந்து மொளச்சாசில்ல… இப்ப என்ன கேடு?” “அம்மா… பாரு… உதட்டுக்கு மேல பாரு.” சாளேச்வரம் மிகுதியால் போடப்பட்ட சோடாபுட்டி வழி பூதாகரமாகத் தெரிந்த கண்கள் அவள் மிக அருகில்.

“ஒண்ணுமில்லையே…” “சரியாப்பார்… மீசைமா.”

ஒன்றும் புரியாமல் கண்களை அபாரமாகப் பெரியதாக்கி, திருஷ்ட்டிப் பூசணிக்காய் போல் அளித்த காட்சி, அவளுக்கு கொஞ்சம் குதூகலமளித்தாலும், முகத்தில் உள்ள பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றியதால் சிரிக்காமல் முகத்தைக் கொஞ்சம் கடுமையாகவே வைத்துக்கொண்டாள். “ஆமா… லேசா கருப்போடிதான் கிடக்கு… சொன்னா கேட்டியா? குளிக்கும்போது மஞ்சள் தடவுன்னு எத்தனை முறை சொல்லி இருப்பேன். அப்போதெல்லாம் ஃபாஷன். இப்போ பாரு ஆம்பளை காமாஷி போல… நல்ல வேளை. இப்போதான் வளரத் தொடங்கி இருக்கு. ரெண்டு வேளையும் மஞ்சள் பூசு… உதுந்துவிடும்.”

அன்று ஆரம்பித்தது வினை.

முதலில் மஞ்சள் பெளடரா அல்லது மஞ்சள் கிழங்கா? பெரிய விவாதத்துக்குப் பிறகு கிழங்கு என்று முடிவானது. இரவில் படுக்கப்போகுமுன் முகம் கழுவி, மஞ்சள் விழுது அரைக்கப்பட்டு, முகம் முழுவதும் பூசாமல் வாயைச் சுற்றி மட்டும் கரகரவென்று தேய்க்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் குளிக்கும்போது மறுபடி ஒருமுறை பூசப்பட்டு, சில காலம் ரோட்டில் பிச்சை எடுக்கவரும் ஹனுமான் கணக்காக, வாயைச்சுற்றி சிகப்புக்கலந்த மஞ்சள் நிறத்தோடு அலைந்துகொண்டிருந்தாள்.

மஞ்சள் கிலோகணக்கில் அரைத்துத் தீர்ந்தது மட்டும்தான் நடந்தது. மீசை… நாளொருமேனியும் பொழுதொரு வனப்பும் கூடித்தான் நின்றது.

இந்த ஹனுமான் ரூபம் பெரும் மனக்கஷ்டத்தைக் கொடுக்கத் தொடங்கியபோது, இது அவ்வளவாக உபயோகப்படாத வழி என்றும், அம்மாவை நம்பி தன் அழகைக் கெடுத்துக்கொள்ள கூடாதென்ற சுயஉணர்வும் வந்த ஒருபொழுதில்தான் பக்கத்து வீட்டு மாலதி அக்கா பார்வையில் பட்டாள். காலேஜ் போகும்போது அவள் பின்னால் போகும் ஒரு கூட்டம். திரும்ப வரும்போது மற்றுமொரு கூட்டம். இதுவே போதுமானதாக இருந்தது அவள் அழகி என்பதற்கு.

ஒரு ஞாயிறு மதியம். பாட்டி மற்றும் அம்மாவின் குறட்டை ஒலிகள் கிடுகிடுத்து எகிறும் ஒரு வேளையில், மாலதியின் வீட்டிற்குச் சென்றாள். கைகளில் நெய்ல் பாலீஷ் இட்டு அது காய்வதற்காக வெளியே வெய்யிலில் கைகளைக் காட்டியபடி நிற்கும் மாலதி அக்கா. அதை ப்ளாட்ஃபார்ம் ஓரம் நின்று ரசித்து நின்ற ரங்கு மற்றும் சுப்பு, சப்பை, குள்ள கார்த்தி இவர்களை ஒதுக்கிவிட்டு…

“அக்கா… உள்ளார போலாம் வா… உங்ககிட்ட முக்கியமா பேசணும்.”

மாலதி அதை அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் முக்கியமான செய்தி எதுவாகிலும் இருக்கக்கூடும் என்ற ஆவலில் விருட்டென்று தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி , கூந்தல் அலைகளைப் பறக்கவிட்டாள். அதில் ப்ளாட்ஃபார்ம் ரோமியோக்களின் மனதையும் சிதைக்க விட்ட காட்சி அவள் மனதில் அழுத்தமாகப் பதிந்து, வீடு சென்ற பின் அதைப் பழக்கப்படுத்திப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஒன்றும் ஏற்பட்டது.

பாதி காய்ந்திருந்த கை நகங்களை ஊதியபடி நின்ற மாலதியின் உதடுகளைப் பார்த்தாள். பளபளபள.

“அக்கா. நீதான் எனக்கு உதவணும். என் மேல் உதட்டைப் பாரு. பெரிசா கருகருன்னு வளந்துடுமோ பயமா இருக்குக்கா. என்ன செய்ய. உனக்குதான் எல்லாம் தெரியுமே. ப்ளீஸ் சொல்லுக்கா.”

உற்றுப் பார்த்த மாலதி அசந்தர்ப்பமாய்ச் சிரித்தாள். பின் தன் கை நகங்களை ஊதிக்கொண்டே, “ரேசர்தான். நீதான் ப்ளேட் போடுவன்னு பார்த்தா நீயே ப்ளேட்போடனும் போல இருக்கே.”

“அக்கா, ப்ளீஸ்…” கண்ணீரின் முதல் தளுக்.

“அய்ய… எதுக்கு அழுவற. எல்லாத்துக்கும் வழி இருக்கு. மயிலாப்பூர்லே புதுசா ஒரு ப்யூட்டி பார்லர் திறந்திருக்கு. நான் அங்கேதான் என் ஐப்ரோ திருத்த போகிறேன். போகும்போது இதையும் கேட்டு வரேன். எடுத்துடலாம்.”

மாலதி கேட்டு வந்தாள். ஆனால் இவள் போகவில்லை. இதற்காக மாலதியிடம் பார்லர் சொல்லி அனுப்பிய தொகை மிகவும் அதிகமாக மனதிற்குப்பட்டதாலும், அது ஒரு தடவையோடு நிற்காது என்ற தெளிவாலும் இவள் போகவில்லை. ஐப்ரோ திருத்தப்பட்ட மாலதியின் முகம் அருகில் பார்த்தபோது அங்கே பச்சை ஓடி சற்று விகாரமாகத் தெரிந்து பயமுறுத்தியதும் ஒரு காரணம்.

மீசை அதிகம் வளராவிட்டாலும், அவள் கவலைகளுக்கு ஒரு விமோசனம் வந்தாற்போல் தோன்றியது புயூமைஸ் ஸ்டோன். கல் வடிவத்தில். கைக்கு அடக்கமாக. தூரத்துச் சொந்தம் ஒருத்தி அவளிடம் இதைக் கொடுத்தபின் இட்ட கட்டளை, காலை மாலை இருவேளையும் முகத்தில் வேண்டாத ரோமம் இருக்கும் இடங்களில் க்ளாக் வைஸ்சாக வட்ட சுழற்சியில் பத்துமுறை சுற்றவேண்டும். அதற்கு முன் நன்றாக சோப் இட்டு இடத்தைப் பதப்படுத்தவேண்டும்.

ஆக, ஏதோ லாப் எக்ஸ்பிரிமெண்ட் போன்ற இந்த முறையைப் பயன்படுத்தியபோது, அந்தக் கல்லில் இருந்த துளைகளில் மாட்டிப் பிடுங்கப்பட்ட வலி தாங்காமல் இதுவும் கைவிடப்பட்டது.

செமஸ்டரில் வாங்கிய அதி குறைந்த மதிப்பெண்கள் கூட மனதைப் பாதிக்க இயலா வண்ணம் அவள் மனதில் இருந்தது அந்த ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே. இந்த பிரச்சினையின் அடிவரை சென்று பார்த்துவிடும் நோக்கத்தோடு, இதைப்பற்றிய கட்டுரைகளில் அவள் மூழ்கி இருந்த நேரம்.

“அப்பாவின் சினேகிதருக்கு தெரிந்தவராம். பிள்ளை நன்றாகப் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பாத்தியம். போட்டோ பார்த்து பிடிச்சுடுத்தாம். நாளைக்கு உன்னை பொண் பார்க்க வரலாமான்னு கேட்டு அனுப்பி இருக்கா… படிப்பு முடிச்சு கல்யாணம்ன்னும் சொல்லிட்டா. இன்று நீ காலேஜ் போகவேண்டாம் கேட்டியா…”

அவளுக்குக் கல்யாணம், படிப்பு இதெல்லாம் அவ்வளவாகக் கவலை கொடுக்கக்கூடியது இல்லை. ஆனால் இந்த மீசை? கடவுளே… அவர்கள் வரும்போது தயவு செய்து கரண்ட் இல்லாமல் செய். இருட்டாக இருந்தால் தெரியாது.

“எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பையன் பொண்ணோட கொஞ்சம் தனியா பேச நினைக்கிறான்.”

“பேசலாம். பால்கனி இருக்கு. சேரும் இருக்கு. போய் செளகர்யமா உட்கார்ந்து பேசலாம் கேட்டேளோ…”

“உஷ். அம்மா, பால்கனி வேண்டாம். உள்ளே ரூம்மில் போய் பேசறோம்.”

“சட். சும்மா இரு. தனியா இருளோன்னு கிடக்கு. போ பால்கனிக்கு. இந்த காபியையும் கையிலே கொடு.”

அவளுக்குத்தான் அவனை நேரில் நிமிர்ந்து பார்க்கத் தயக்கம், நாணம், இப்படியாகப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. மேலுதட்டின் மேல் கறுப்போடியதைப் பார்த்துவிட்டால். அந்த பயம். முடிந்தவரை கைகளால் வாயை மூடி, தலையை சாயோசாய் என்று சாய்த்து, வெய்யில் முகத்தில் அடிக்காமல் பார்த்துக்கொண்டு…

நிறைய பயம். நிறைய தடுமாற்றம். நிறைய கேள்விகள். இருவருக்கும். சமர்த்தாக முகம் குனிந்து அமர்ந்திருந்தாள். என்னென்னவோ பேசினார்கள்.

“நான் என்னைப்பற்றிச் சொல்கிறேன். உங்களுக்கு அப்படி இருப்பவரைப் பிடிக்குமா என்று சொல்லுங்கள். அதேபோல் நீங்களும் உங்களைப்பற்றி சொல்லுங்கள்.”

இதெல்லாம் எவ்வளவு சினிமாவில் பார்த்தாகிவிட்டது. சிரிப்பு வந்தது. முகம் துடைப்பது போல் கைக்குட்டையால் வாயை மூடி… பின்னும் மூடி… மூடியபடியே…

“ஆமாம்… சரிதான்” என்று சொன்னாள்.

“எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் பிடிக்கும், உங்களுக்கு?” போன்ற அதிபுத்திசாலியான கேள்விகளின் பிறகு,

“ஏண்டா… நேரம் ஆகிறது. பேசி முடிச்சாச்சா?”

ஒரு வழியாகச் சமாளித்ததாக நினைத்து மகிழ்ந்து எழுந்தபோது,

”சொல்லலாமான்னு தெரியலை. ஆனால் உங்களை போட்டோவில் பார்த்தே நீங்கள்தான் என்று முடிவெடுத்துவிட்டேன். நேரில் பார்க்கும்போது இன்னும் பிடிக்கிறது… யூ நோ… எனக்கு மிகவும் பிடித்திருப்பது உங்கள் உதட்டின் மேல் இருக்கு அந்தப் பூனை முடிகள்தான்.”

தமிழக விவசாயிகளின் போராட்டம் – ராஜா ஷங்கர்

தமிழகத்தில் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னிறுத்திய போராட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டவை. கூலியாகக் கொடுப்பட்ட நெல்லை உயர்த்திக் கொடுக்கச் சொல்லி கம்யூனிஸ்டுகள் தஞ்சாவூரில் நடத்திய போராட்டங்களில் இருந்து, மாட்டு வண்டிகளை நிறுத்தி கோயமுத்தூரை முற்றுக்கையிட்ட போராட்டம் வரை தமிழ்நாடு விவசாயத்தை முன்னிறுத்தி ஏகப்பட்ட போராட்டங்களைக் கண்டிருக்கிறது.

இந்தப் போராட்டங்களை முன்னிறுத்தி விவசாய சங்கத் தலைவர்கள் பெரிய அளவில் அரசியல் பலமும் மக்கள் ஆதரவும் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மை. அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விவசாய சங்கத் தலைவர்களின் ஆதரவைப் பெற போட்டி போட்டார்கள் என்பதெல்லாம் இன்றைக்கு நம்பமுடியாத விஷயங்களாக இருக்கும். உழவர் உழைப்பாளர் கட்சி என அரசியல் கட்சி தொடங்கி தேர்தலிலே போட்டியிட்டார்கள் என்பெதல்லம் இன்றைய விவசாய சங்கத்தினருக்கே ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை.

இன்றைக்கு விவசாயிகள் போராடும் கடன் வசூல், கடன் வசூல் ஏலம் போன்றவைதான் அன்றைக்கும் பெரும் பிரச்சினைகளாக இருந்தன. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதும் அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் விவசாயிகளின் போராட்டமாக இருக்கிறது. ஒரு தேர்தலின் பிரசாரத்தின்போது எம்ஜியார், தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பிரச்சினை அடியோடு ஒழிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். பின்பு எம்ஜியாரின் ஆட்சியில்தான் போராடிய விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை விவசாயிகளின் பிரச்சினையை ‘அடி ஓடு’ ஒழித்தார் எனக் கிண்டலாகவும் பரப்புரை செய்தார்கள்.

முன்பு விவசாயத்தை ஊக்குவிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அணைக்கட்டுகள், கால்வாய்கள், பாசனத் திட்டங்கள், புதிய சாகுபடி முறைகள் எனப் பலவும் காமராஜர் காலத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டன. பின்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பின்தள்ளிவிட்டு இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்று மட்டுமே விவசாயிகளின் நடவடிக்கைகள் சுருங்கின. இதற்கு இன்னொரு காரணம், சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது போல விவசாய சங்கம் ஆரம்பித்தால் பெரும் தலைவராகி விடலாம் என்ற கனவில், ஊருக்கு ஒரு விவசாய சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல நூறு பேர்கள் இன்றைக்குத் தங்களை விவசாய சங்கத் தலைவர் எனச் சொல்லிக்கொள்வதுதான்.

இப்படி நிறைய பேர் விவசாய சங்கத் தலைவர் எனச் சொல்லிக்கொள்வது நல்லதுதானே, போராட நிறைய சங்கங்களும் ஆட்களும் கிடைப்பார்கள் என நினைத்தால் அது தவறு. இப்படி உடைந்த சங்கங்கள் வெறுமனே லெட்டர்பேட் சங்கங்களாக அமைப்புகளாக சுருங்கி ஆள்வோரின் அநியாயங்களைச் சுட்டிக்காட்ட, அதை எதிர்த்துப் போராடத் தவறின.

இதனால் ஆண்ட திராவிடக் கட்சிகளின் மணல் கொள்ளை, ஆறு, ஏரி குளங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது என்ற அதிகார அத்துமீறல்கள் நிகழ்ந்தன. புதிய தடுப்பணைகள் கட்டுவதில் இருந்து மிச்சம் மீதி இருக்கும் நீர் நிலைகளில் பராமரிப்பு பணிகள், மராமத்து பணிகள் என அனைத்தும் ஊழலில் ஊற்றுக்கண்ணாக மாறின. இதைக் கண்காணிக்க வேண்டிய விவசாயிகளோ திராவிடக் கட்சிகள் போட்ட சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் தேடி எங்கேயும் போகவேண்டியதில்லை. தற்போது டெல்லியில் போராடும் நாடகப் போராட்டக் குழுவினரே இதை எல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களிடம் இதை யாரும் ‘ஏன் இதுவரை எதுவுமே போராடவில்லை?’ எனக் கேட்கவில்லை. இதுவரை இல்லாத அவசரம் ஏன் இப்போது? அதற்கும் காரணமிருக்கிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு இலவச மின்சார உதவியுடன் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயத்தைச் சமாளித்தார்கள். ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் ஒன்றும் அட்சயபாத்திரங்கள் அல்லவே?

நிலத்தடி நீர் என்பது மழைபெய்யும் போது பூமிக்கு உள்ளே இறங்கவேண்டும். இல்லையேல் முன்பு பாறைகளிலே சேமிக்கப்பட்ட நீரை எடுக்கலாம். அது வற்றியபின்பு நீர் கிடைக்காது. இதை சமாளிக்கவே நம் முன்னோர்கள் ஏரி, குளங்களிலே சேரும் வண்டல் மண்ணை அகற்றி விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஏரியிலே தேங்கும் நீர் நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். கூடவே விவசாய நிலங்களுக்கு நல்ல உரமும் கிடைக்கும்.

குளத்தை தூர்வாருவதும் கிடையாது. ஆழ்துளைக் கிணறுகளையும் சுரண்டி தண்ணீர் எடுத்தாயிற்று. இனி என்ன ஏமாற்று வேலை செய்வது? இதிலே உள்ளூர் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கமுடியாத நிலையும் கூட. ஏனென்றால் இந்த விவசாய சங்கங்களும் அவர்கள் அடித்த கொள்ளையில் உடந்தை ஆக இருந்தார்கள்.

சென்னை முகப்பேரியில் ஏரி இருந்தது. 8 ஆண்டுகளுக்கு முன்னால். கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி. அதில் 10 அடிக்கும் மேல் மண் கொட்டி நிரப்பி, அரசே வீட்டு மனையாக மாற்றி விற்றது. இது 8 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது. இதுபோலப் பல உதாரணங்கள் உண்டு.

பேருந்து நிறுத்தங்கள், நீதிமன்றக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் ஏரிகளிலும் குளங்களிலுமே கட்டப்பட்டன. மிச்சமிருந்த இடங்கள் வீடு கட்டிக் குடியிருக்க விற்கப்பட்டவை. இதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீர்நிலைகளில்தான் இப்படிப் பிரச்சினை. ஆனால் மழை, புயல், நோய் தாக்குதல் போன்றவற்றில் பயிர் சேதமடைந்தால் அதற்கேனும் அரசு நஷ்டஈடு கொடுக்கவேண்டும் அல்லவா என்ற கேள்வியும் நியாயமானதே. அவை ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வருகின்றன. பயிர்க்காப்பீட்டுத் திட்டம் மற்ற மாநிலங்களில் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. எடுத்துச் சொல்லி நலனைக் காக்கவேண்டிய சங்கங்களோ கடன் தள்ளுபடி எனும் ஒற்றைக்கடுக்காய் வைத்தியத்திலே குறியாய் இருக்கின்றன. நெடுங்காலமாக, மத்திய அரசே உர மானியம், விதைப்பு விதைகள் எனப் பல விஷயங்களைச் செய்து வருகிறது. ஆனால் விவசாயிகள் அவற்றைச் சரியான முறையிலே பயன்படுத்தவேண்டும் அல்லவா?

தற்போதைய டெல்லி போராட்டத்தின் கோரிக்கைகள் என்ன?

விவசாயிகள் எல்லா வங்கிகளிலும் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதுதான் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. எல்லா வங்கிகளும் என்றால் வழக்கமாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் கிராமக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமல்லாது, தேசிய வங்கிகளான பாரத ஸ்டேட் வாங்கி முதலான வங்கிகளிலே வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கேட்கிறார்கள்.

இது சாத்தியமா என சக விவசாய சங்கத் தலைவர்களே கேட்கிறார்கள். காரணம், இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு மேல் போகும். ஏனென்றால் விவசாயி என்பவர் என்ன காரணத்திற்காகக் கடன் வாங்கியிருந்தாலும் எந்த வங்கியிலே வாங்கியிருந்தாலும் கண்டிப்பாக தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கேட்பது எப்படி சாத்தியம்?

தனிப்பட்ட விவசாயிகள் நஷ்டமடைந்திருந்தால், காப்பீடு மூலமோ அல்லது கடனை அடைக்கமுடியாத சொத்து அற்றவராகவோ அறிவித்துக்கொண்டு அதிலிருந்து விடுபடலாம் என்பதுதான் நடைமுறை. விவசாயத்திற்கு மட்டும் கடன் கொடுத்த கிராமக் கூட்டுறவு வங்கிகளின் கடனைத் தள்ளுபடி செய்தால் விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவர். ஆனால் இப்படி ஒட்டுமொத்த வங்கிகளிலும் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்தால் பெரும் விவசாயிகள்தான் பயன்பெறுவர் எனவும், இப்படி ஒரு கடன் தள்ளுபடித் திட்டம் முன்பும் ஒருமுறை அறிவிக்கப்பட்டும் பயன் தரவில்லை எனவும் சொல்லுகிறார்கள்.

சக விவசாய சங்கங்களே ஆதரவு தராத நிலையிலே இன்னொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. அது வருமான வரி ஏய்ப்பு. சென்ற வருடம் இந்தியாவின் மொத்த வருமானத்தை விடப் பலமடங்கு வருமானம் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு வருமான வரிவிலக்கு பெறப்பட்ட பிரச்சினை நாடாளுமன்றத்திலே எழுப்பப்பட்டது ஞாபகம் இருக்கலாம். அதை முன்வைத்து, ஏன் இது வருமான வரி விலக்குச் சிக்கல்களைத் தவிர்க்க அரசியல் பின்னணியிலே செய்யப்படும் நாடகமாக இருக்கக்கூடாது எனவும் கேள்விகள் எழுகின்றன.

அப்படியானால் என்னதான் வழி? உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்றே காலங்காலமாய் வாழவேண்டியதுதானா? அல்லது கார்ப்பரேட் சதி, அந்நிய சதி என்றே போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? என்ன தீர்வு?

விவசாயம் ஒரு வியாபாரமாக, ஒரு தொழிலாகச் செய்யப்படவேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை விவசாயிகளே அல்லது சுயாட்சி கொண்ட விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களே செய்து, தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கவும் முன்வரவேண்டும்.

கோதுமையாக விற்றால் 1% லாபம் கிடைக்கும். மாவாக விற்றால் 5% கிடைக்கும். பிஸ்கெட் ஆக விற்றால் 15% லாபம் கிடைக்கும்.

தேங்காயாக விற்றால் ஒரு காய் 5 ரூபாய்க்கு விற்கலாம். காயவைத்துப் பருப்பாக விற்றால் கிலோ 100 ரூபாய். 100 காய்களுக்கு 10 கிலோ பருப்பு கிடைக்கும். பாதிக்கும் மேல் கிடைக்கும். எண்ணெய்யாக ஆட்டினால்? இரண்டு கிலோ பருப்புக்குத் தோராயமாக ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும் என்றால், லிட்டர் 250 ரூபாய் என வைத்துக்கொண்டால், 10 கிலோ பருப்புக்கு 2,500 ரூபாய். புண்ணாக்கு விற்பது, செக்குக்கூலி, போக்குவரத்து என எல்லாம் சேர்த்தாலும் 10 கிலோ பருப்புக்கு 1,800 ரூ வரை கிடைக்கும் இல்லையா?

இதே போலவே மற்ற தொழில்களிலும் பால் உட்படக் கணக்கு போடலாம். ஆவின் விலையைக் குறைத்துவிட்டது எனவும் பால் விற்கவில்லை எனவும் வழியிலே கொட்டிப் போராட்டம் செய்யும் விவசாயிகளைப் பார்த்திருப்போம் ஏன் சீஸ், பனீர், வெண்ணெய், நெய் தயாரிப்பது எனப் போவதில்லை என்பதுதான் கேள்வி.

பால் ஒரு நாளிலே கெட்டுவிடும். பனீர் ஒரு வாரம் தாங்கும். சீஸ் ஒரு மாதம் வரை தாங்கும். வெண்ணெய் அதேபோல. நெய்யோ பல மாதங்கள் தாங்கும் எனத் தெரிந்திருக்கும்போது, ஏன் குஜராத் அமுல் போல தமிழ்நாட்டில் செய்யமுடியவில்லை? இருக்கும் ஆவின் நிறுவனமோ ஊழலில் திளைத்துத் தடுமாறுகிறதே?

பதப்படுத்தப்பட்டகிடங்குகள், சேமிப்பு நிலையங்கள் என வடக்கே அரசுத் திட்டங்களும் தனியாரும் இணைந்து பெருமளவிலே முன்னேற்றம் காணும்பொழுது இங்கே ஏன் இப்படி என ஏன் யாரும் கேட்கவில்லை? போராடவரவில்லை?

விவசாயச் சங்கங்கள் தாங்கள் விவசாயத்தில் இருக்கிறோம் என நினைக்கவில்லை. ஏதோ இலவசமா மின்சாரம் கிடைக்குத, தானா மழை பொழியுது, விதை போட்டா விளையுது என்ற அளவிலே இருக்கும் வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இருக்காது.

விவசாயத்தை நவீனப்படுத்துவதும், விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதும் அதை விவசாய சங்கங்கள் முன்னெடுப்பதும்தான் தீர்வு.

நாளைய நகரங்கள் – கிஷோர் மகாதேவன்

‘இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் அழிந்தால், இந்தியாவும் அழிந்துவிடக் கூடும்’ என்றார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால் இன்று நாம் காணும் யதார்த்தம் என்ன? உலகெங்கும் மக்கள் பெருந்திரளாகக் கிராமங்களை விட்டு நகரங்களில் குடிபெயர்ந்து வருகிறார்கள். 1991ல் இந்தியாவில் 22 கோடி மக்கள் நகரங்களில் வாழ்ந்து வந்தனர். அந்த எண்ணிக்கை 2011ல் 38 கோடியாக அதிகரித்தது. 2030க்குள் இந்தியாவில் 50 கோடி மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்றும், அந்நகரங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 60% பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்று நம் நகரங்களின் உண்மை நிலை என்ன? இதைப் பற்றி யாரிடமாவது பேசிப் பாருங்கள். ‘திட்டமிடல் பத்தாது’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவார்கள். இந்திய நகரங்களைப் பொருத்த வரையில் திட்டமிடல் என்றால் என்ன? நம் நகரங்கள் எப்படி உருவாகின்றன?

1947க்குப் பிறகு இந்திய நகரங்களின் வளர்ச்சியை இரண்டு பரிணாம நிலைகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசின் மேற்பார்வையில் உருவான நகரங்கள். எந்த நகரத்தையும் அரசு மட்டுமே திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும், யார் எங்கே வாழ வேண்டும் என்பதை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது நேருவின் சோசலிஸ அரசின் நிலைப்பாடாக இருந்தது. சண்டிகர் மற்றும் தில்லியின் சில பகுதிகள் இவ்வாறு உருவாகின. இந்நகரங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கென பிரத்யேகமாக பல குடியிருப்புகள் எழுப்பப்பட்டன. சண்டிகர் இந்தியாவின் ஆதர்ச நகரமாகத் திகழவேண்டும் என்று நேரு கனவு கண்டார்.

ஆனால் 1991க்குப் பிறகு இந்தியா செய்த பொருளாதார சீர்திருத்தங்களால் பல புதிய சாளரங்கள் திறந்தன. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நாடெங்கும் தோன்றின. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். கலாசாரப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. சமூக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. இதன் தாக்கம் இந்திய நகரங்களில் தென்பட்டது. பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் முதலீடு பெருகியது. அப்பகுதிகள் தன்னளவில் தொழிற்பேட்டைகளாக மாறி, நகரங்களோடு இணைந்தன. இந்திய நகரங்களின் வளர்ச்சியில் இரண்டாவது பரிணாம நிலை என்று குறிப்பிடுவது இதைத்தான். சண்டிகரின் மொஹாலி, சென்னையின் மகாபலிபுரம் சாலைப்பகுதி, கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டி போன்றவை இப்படி வளர்ந்தன. இவற்றுள் சில விஸ்வரூபமெடுத்து பெருநகரங்களாக மாறின. இதற்கு எடுத்துக்காட்டாக குர்காவ் கிராமத்தைச் சொல்லலாம். 1990களின் இறுதியில் மேய்ச்சல் நிலமாக இருந்த குர்காவ் கிட்டத்தட்ட தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. 2001ல் குர்காவின் மக்கள்தொகை 8.7 லட்சம். 2011ல் அது இரட்டித்து 16 லட்சம் ஆனது. இத்தனை மக்களுக்கு வசதிகள் வழங்குவது என்பது எந்த அரசுக்கும் இயலாத காரியம். குர்காவ் நகரின் குடியிருப்புகள், சாலைகள், தெருவோர மின்விளக்குகள், பூங்காக்கள் என்று அனைத்தும் தனியார்த் துறையின் முனைப்பால் கட்டப்பட்டன. அங்குள்ள தீயணைப்புச் சேவை கூடத் தனியார்த் துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 2008ல்தான் குர்காவ் நகருக்கென தனி நகராட்சி அமைக்கப்பட்டது.

அப்படியென்றால் குர்காவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? குர்காவின் நிதர்சனம் என்ன? இந்தியாவின் உச்சக்கட்ட செல்வந்தர்கள் பலர் வாழும் குர்காவ் நகரம் இன்று போதுமான நிலத்தடி நீர் இல்லாமல், கழிவுநீர் அமைப்பு இல்லாமல் தவிக்கிறது. அதுமட்டுமல்ல, குறுகிய காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் உண்டாகும் ஏழை-பணக்காரர் வித்தியாசம், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் என பல்வேறு சிக்கல்களுக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.


யதார்த்தம் இப்படியிருக்க, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எல்லாம் வெற்றுக்கூச்சல்தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதே நேரம் நகரங்களை எல்லாம் மேம்படுத்தமுடியாது, அவற்றைக் கைவிட வேண்டியதுதான் என்று நேரெதிராகச் சொல்வதும் நியாயம் ஆகாது.

முதலில் ஸ்மார்ட் நகரம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஸ்மார்ட் நகரம் என்ற சொல்லுக்கு இன்று வரை உலகளாவிய வரையறையோ பொருளோ இல்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நகரமும், அதன் சூழலுக்கு ஏற்ப, அதன் சக்திக்கு ஏற்ப ஸ்மார்ட் நகரம் என்னும் திட்டத்தை வரையறுத்துக் கொள்கிறது. ஸ்மார்ட் நகரத்துக்கு ஐரோப்பாவில் ஒரு வரையறை இருக்குமென்றால், அமெரிக்காவில் வேறொரு வரையறை இருக்கும். இந்தியாவின் புரிதலும் வேறுபட்டு இருக்கும்.

2015ம் ஆண்டு இந்திய அரசு ஸ்மார்ட் நகரத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் 2020க்குள் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். ஸ்மார்ட் சிட்டியில் தடையற்ற நீர் விநியோகம், தடையற்ற மின்சாரம், திடக் கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, மலிவு விலை வீடமைப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கணினி சார் அரசு சேவை (e-governance), சுற்றுச்சூழல் பராமரிப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள், கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அடிப்படைக் கூறுகள் உள்ளன.

ஸ்மார்ட் நகரத்தை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம்?

1. பின் மாற்றியமைப்பு (Retrofit) : நகரத்தில் ஒரு 500 ஏக்கர் பகுதியை ஒதுக்கீட்டு, அப்பகுதியை ஸ்மார்ட் நகரத்தின் கூறுகளோடு பின் மாற்றியமைக்கலாம்

2. மறுவளர்ச்சி (Re-development) : நகரத்தின் ஒரு 50 ஏக்கர் பகுதியை ஒதுக்கீட்டு, அப்பகுதியில் இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தலாம், கட்டடங்களை இடித்துப் புதிய கட்டடங்களைக் கட்டலாம்

3. புது ஸ்மார்ட் நகரம் : புத்தம்புது நிலப்பகுதியை அடையாளம் கண்டு, ஸ்மார்ட் நகரமாக வடிவமைத்துக் கட்டலாம்

4. தொழில்நுட்ப பொருத்தல் : வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல், ஸ்மார்ட் நகரத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பொருத்தலாம். உதாரணமாக கண்காணிப்பு காமிராக்கள், சூரிய ஒளி மின்சாரக்கருவிகள் முதலியன பொருத்தலாம்

ஸ்மார்ட் நகரத் திட்டம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது?

1. மத்திய அரசு ஸ்மார்ட் நகரங்களின் நிபந்தனைகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஸ்மார்ட் நகரங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டது

2. நாடெங்கும் 100 ஸ்மார்ட் நகரங்கள் மாநிலங்களால் பரிந்துரைக்கப்பட்டன. ஒவ்வொரு நகரமும் தன்னை எப்படி ஸ்மார்ட் நகரமாக மாற்றியமைக்கும் என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது

3. நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று இவற்றைப் பரிசீலித்து, சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகின. இதுவரை 74 நகரங்கள் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் இப்பட்டியலில் உள்ளன. 2017ன் முடிவுக்குள் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது இலக்கு

4. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் ஒவ்வொன்றும் ஸ்மார்ட் நகரக்குழு ஒன்றை அமைத்துக்கொள்ளும். இக்குழுவில் முழு நேர தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் இருப்பர். ஸ்மார்ட் நகரம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்குத் தேவையான நிதியை எப்படித் திரட்டுவது, வருவாயை எப்படி வசூலிப்பது, எந்தெந்த தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது போன்ற முடிவுகளை எடுக்க இந்தக் குழுவிற்கு முழு அதிகாரம் இருக்கும்

5. ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்துக்கும் மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக தலா ரூ.194 கோடியை ஒதுக்கீடு செய்யும். அதற்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.98 கோடி வழங்கும். ஆண்டுதோறும் இந்த ஒதுக்கீட்டைப் பெறும் தகுதி இருக்க வேண்டுமெனில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், அரசின் ஸ்மார்ட் சிட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்

6. அரசு முதலீட்டையும் தாண்டி, வேறு பல வழிகளில் நிதி திரட்ட ஸ்மார்ட் நகரக் குழுக்கள் முயலும். உதாரணமாக நிதி நிறுவனங்களிலிருந்து பணம் திரட்டலாம். வரிப்பணத்தில் ஒரு பகுதியைச் செலவிடலாம். தனியார் நிறுவனங்களின் முதலீடு கொண்டு இயங்கலாம்.
மற்ற திட்டங்களை போல ஸ்மார்ட் நகரங்களின் வெற்றியும், அது எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்து இருக்கிறது. இத்திட்டம் வெற்றிபெற முதலில் நகராட்சிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இன்று நகராட்சியின் துறைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்கின்றன. அனேகமாக இதனால் பல திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே தேக்கமடைந்து விடுகின்றன. வளர்ந்த நாடுகளில் நகர மேயர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் நம்மூரில் நகராட்சி மேயர் என்பவர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ பதவி வகிப்பவர். நகரப் பணிகளை நிறைவேற்றுதல், அதற்குத் தேவையான வரி விதித்தல் அனைத்தும் மேயரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இடமிருந்தும் மாநில அரசுகள் ஏனோ அமல்படுத்தாமல் இருக்கின்றன. அடுத்ததாக, எங்கெல்லாம் தனியார்த் துறையின் நிபுணத்துவம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக ஸ்மார்ட் தெருவிளக்கு அமைப்பு, ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்கள், ஸ்மார்ட் மின்சார விநியோகம் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் தொழில்நுட்பம் இருந்தும், பணப்புழக்கம் அதிகம் இல்லாததால் அரசோடு இணைந்து செயல்பட தடையாக இருக்கிறது. இது போன்ற சிறு நிறுவனங்களும், மற்ற பெரு நிறுவனங்களும் முதலீடு செய்ய ஊக்கமும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். ஸ்மார்ட் நகரம் என்றால் நவீன நகரம், நவீன தொழில்நுட்பம் என்று ஒரு புரிதல் இருக்கிறது. நவீனமயமாக்கல் என்பதைத் தாண்டி, நம் பாரம்பரியச் சின்னங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம், தொழில்நுட்பத்தைச் சாதாரண மக்களும் உபயோகிக்கக்கூடியதாக எப்படி அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் யோசித்து வடிவமைக்க வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தும், இந்த ஸ்மார்ட் நகரத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியதே. இந்தப் பரிசோதனை முயற்சியில் அரசு இன்னும் தீவிரமாக இறங்கவேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நகரங்கள் முக்கியப் பங்களிக்கப் போகின்றன. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சார்ந்த மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும். செய்யத் தவறினால் இது நழுவ விட்ட மற்றொரு சந்தர்ப்பமாகவே இந்திய வரலாற்றில் எழுதப்படும்.

*********

உதவியவை :

1. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் : http://smartcities.gov.in
2. இந்திய பொருளாதார அறிக்கை : http://indiabudget.nic.in/es2016-17/echap14.pdf
3. ஏழு நதிகளின் நாடு (புத்தகம்) – சஞ்சீவ் சன்யால்

திராவிட இயக்கம் என்னும் அபத்தம் – ஆமருவி தேவநாதன்

‘திராவிட இயக்கம் என்னும் மாபெரும் தமிழ் மக்கள் படை’ என்னும் பெரும் பொய் பல்லாண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. முதலில் ‘திராவிட’ என்னும் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. அதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் அச்சொல் பயன்படுத்தப்பட்ட பிரபலமான சௌந்தர்யலஹரி ஸ்லோகம் இதோ:

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர கன்யே ஹ்ருதயத:
பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட ஶிஶு ராஸ்வாத்ய ஸததம்
கவீநாம் ப்ரௌடாநா மஜநி கமநீய: கவயிதா

8-9ம் நூற்றாண்டின் ஆதி சங்கரர் இயற்றிய இந்த ஸ்லோகத்தில் சீர்காழியில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ – ‘திராவிடத்தின் குழந்தை’ என்று அழைக்கிறார். முதலில் ‘திராவிட’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டதாகப் பொதுவெளியில் நாம் அறிந்துள்ள பாடல் இது. இதில் ஞானசம்பந்தரும், ஆதிசங்கரருமே தற்கால ‘திராவிட விதி’களின் படி திராவிடர்கள் அல்லர். இருவரும் அந்தணர்கள். ஆதிசங்கரர் ‘திராவிட’ என்னும் சொல்லை ஒரு சாதியையோ, இனத்தையோ குறிப்பிடப் பயன்படுத்தவில்லை.

நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்னும் திருமால் குறித்த 12 ஆழ்வார்களின் பாசுரங்களில், நம்மாழ்வார் எழுதிய ‘திருவாய்மொழி’ பகுதியை ‘திராவிட வேதம்’ என்று அழைப்பது பண்டைய வைணவ மரபு. பின்னாட்களில் பிரபந்தம் முழுமையுமே அப்படி அழைக்கப்பட்டது. ஆழ்வார்களில் முன்னவரான வேளாளர் குலத் தோன்றல் நம்மாழ்வார் குறித்த தனியன் எனப்படும் துதியில் ‘திராவிட வேத சாகரம்’ என்கிற சொல்லாடல் தந்து வியக்க வைக்கிறார் நாதமுனிகள். (ஒன்பதாம் நூற்றாண்டு.)

பக்தாம்ருதம் விஸ்வ ஜனாநு மோதநம்
சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்
நமாம்யஹம் திராவிட வேத சாகரம்

‘திராவிட’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் என்ன?

மனு ஸ்மிருதியில் உரிய காலத்தில் உப-நயனம் (பூணூல் அணிவிப்பது) நடைபெறாத ஷத்ரியன், ‘விராத்ய ஷத்ரியன்’ என்று அறியப்படுகிறான். ஒரு விராத்ய ஷத்ரியனுக்கும், ஷத்ரிய மனைவிக்கும் பிறக்கும் மகன், அவன் வாழும் பிரதேசத்தை வைத்து ‘மல்லா’, ‘கல்லா’, ‘லிக்கிவி’, ‘நட’, ‘கரண’, ‘கஸா’, ‘திராவிட’ என்று வட்டாரங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டான். (மனு ஸ்மிருதி – 10:21, 10:22).

மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் இயற்றப்பட்ட ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூல், தென்னாட்டுப் பிராமணர்களை ‘திராவிட பிராம்மணர்கள்’ என்றே வழங்குகிறது. பல வடநாட்டுப் பிராமணர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘திராவிட்’ என்று சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள். ( கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் போல.) இவர்களின் தென்னகத் தொடர்பை இது தெளிவுபடுத்துகிறது. ஆக, ‘திராவிட’ என்னும் சொல் பிராந்தியத்தைக் குறிப்பது என்பது புலனாகிறது. ( ‘திராவிட இயக்கம்- புனைவும் உண்மையும்’, மலர்மன்னன் பக்: 15.)

சமணப் பிரிவுகளில் ஒன்றான ‘நந்தி கணம்’ சார்ந்தவர்கள் ‘த்ரமிளச் சங்கம்’ அல்லது ‘திராவிடச் சங்கம்’ என்பதாகவே ஒன்றைக் கர்நாடகப் பகுதியில் நிறுவியிருந்ததாகத் தமிழறிஞர் சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் தெரிவிக்கிறார். இதற்குச் சான்றாக அவர் ‘EC Vol.V. Hassan Talku, 131, Arsikera Tq, IEC IV, Gundlupet Tq 27’ என்ற ஒரு சாசனத்தை மேற்கோள் காட்டுகிறார். வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி கி.பி. 5ம் நூற்றாண்டில் மதுரையில் ‘திராவிடச் சங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கினார் என்று தேவசேனர் என்பார் எழுதிய ‘தர்சனாசாரம்’ என்னும் நூலில் காணப்படுகிறது என்றும் சீனி வேங்கடசாமி தெரிவிக்கிறார். வஜ்ரநந்தி, தேவசேனர், தர்சனாசாரம் முதலிய சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்திய சமணர்கள் மதுரையிலும், கர்நாடகத்திலும் ‘திராவிட’ என்னும் பெயர் கொண்ட அமைப்புக்களைத் தென் பாரதத்தில் துவங்கியதால் ‘திராவிட’ என்னும் சொல் பிரதேசத்தைக் குறிப்பதாகும் என்பது தெளிவு.

கி.பி. 1777 – 1819 வரை வாழ்ந்த பிரன்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்னும் ஆங்கில ஆட்சியாளர் தென் பாரதத்தில் பணியாற்றவேண்டுமெனில் தென் மொழிகளில் பயிற்சி வேண்டும் என்று 1812ல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியைத் துவங்கினார். தமிழில் ஆர்வமும் பாண்டித்யமும் கைவரப்பெற்ற இவர், தென்பாரத மொழிகளுக்கிடையே இருந்த ஒற்றுமைகளை ஆய்வு செய்து கண்டறிந்தார். திருக்குறள் மீது தனி அபிமானம் கொண்டிருந்த எல்லீஸ், அதிலிருந்து சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். நாணயம் அச்சடிக்கும் அதிகாரியாக இருந்த அவர், திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம் வெளியிட்டார். ‘எல்லீசன்’ என்று அன்றைய தமிழ் மக்களால் அறியப்பட்ட இவர், ‘நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தைத் துதித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செய்யுள் இயற்றியுள்ளார்’ என்று தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘கிறித்தவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூலில் தெரிவிக்கிறார்.

தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து ஏ.டி.கேப்ம்பெல் (A.D.Campbell) என்பார் எழுதிய நூலிற்கு எல்லீஸ் முன்னுரை எழுதுகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்க்ருதம் முதலிய நான்கு மொழிகளுக்கு ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விவாதிக்கிறார். ( Note to the Introduction and Grammar of the Teloogoo Language by A.D.Campbell, College of Ft.St.George, Madras, 1916.) இவ்வளவு பாண்டித்யம் உடைய ஒருவர், ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆக, ‘திராவிட’ என்னும் சொல், தென் இந்திய மொழிகளை இணைக்கும் ஒரு தொகைச் சொல்லாகக் கூட அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததில்லை என்று அறியலாம்.

ஆனால், பின்னாளில் வந்த கிறித்தவப் பாதிரியார் கால்டுவெல், ‘திராவிட மொழிகள்’ என்கிற பாகுபாட்டை அளித்து, திராவிட மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் தொடர்பில்லை என்பதாக ஒரு பிரிவினைப் பாதையை முன்வைத்தார். மொழித் தொகுப்பைக் குறிக்க ‘திராவிட’ என்னும் பிராந்திய அடையாளத்தைக் கையாண்டு, தேசப் பிரிவினைக்குப் பின்னாளில் வித்திட்ட பலருக்கு வழிகாட்டியாய் இருந்தார் பாதிரியார் கால்டுவெல். (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.)

‘திராவிட’ , ‘திராவிடம் அல்லாத’ என்று இரு பிரிவுகளாக மொழிகளைப் பிரித்தால் மொழிவழியாக பாரத மக்களைப் பிரிக்கலாம், அவர்களைத் தன் மதத்திற்கு மாற்றலாம் என்கிற எண்ணம் கால்டுவெல்லிற்கு இருந்தது. தனது ஒப்பிலக்கண நூலின் முதற்பதிப்பில் எல்லீஸ் பற்றி மேலெழுந்தவாரியாகக் குறிப்பிடும் கால்டுவெல், மூன்றாவது பதிப்பில் எல்லீஸ் பற்றிய குறிப்பை நீக்கினார் என்கிறார் தாமஸ் டிரவுட்மேன் என்னும் மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர். (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras, Thomas R. Trautman.)

கால்டுவெல் அத்துடன் நிற்கவில்லை. ‘The Tinneveli Shanars: Sketch of their religion and their moral condition and characteristics – with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them’ என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். சாணார்கள் வணங்குபவை பேய் பிசாசுகள் என்றும், அவை பிராமணர்கள் வழிபடும் மேனிலைத் தெய்வங்கள் அல்ல என்றும் வாதிடுகிறார். பிராமண , பிராமணரல்லாத என்று இரு பிரிவுகளை உண்டாக்கினால் தென்பாரதம் முழுமையையும் சேசுசபையின் கீழ் கொண்டு வர ஏதுவாகும் என்கிற நோக்கில் செயல்பட்ட பாதிரியார் கால்டுவெல், இன்றைய ‘திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள்’ என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களால் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

சுயமரியாதை இயக்கம், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றெல்லாம் பிராமணர் அல்லாத மேட்டுக்குடி ஜமீந்தார்களின் சங்கங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்டன. பிராமணர் அல்லாதோருக்காக அரசாங்கத்தில் பேசி, வேலை, கல்வி முதலியவற்றில் அதிக இடங்களைப் பெறுவதற்காகத் துவங்கப்பெற்ற இவை, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடிகளாகச் செயல்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியும், விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியும் பல செயல்களில் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. இவற்றின் தலைவர்களுக்குள் மோதல்களும் போட்டிகளும் மலிந்திருந்தன. அப்போது இவ்வியக்கங்களை ஒருவாறு ஒன்றுபடுத்தி அதன் தலைவரானவர் ஈ.வெ.ரா. இந்தியாவின் சுதந்திரத் தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், திராவிட நாடு என்கிற தனி நாடு வேண்டும் என்றும் உரக்கப் பேசி வந்தார் ஈ.வெ.ரா. ‘பாகிஸ்தான்’ கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தபோது, ‘திராவிடஸ்தான்’ என்னும் ஒரு தேசத்தையும் சேர்த்துக் கேட்குமாறு ஈ.வெ.ரா. கேட்டிருந்தார். ஜின்னா அதைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

‘திராவிடஸ்தான்’ கோரிக்கை எடுபடாததாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் திராவிட நாட்டை ஏற்காததாலும், ’திராவிடம்’ என்பது தமிழகத்தை மட்டுமே குறிப்பதாகத் தற்போது பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

ஈ.வெ.ரா.வைத் திராவிட இயக்கத் தலைவர் என்பது போலித்தனத்தின் பேருருவம். கன்னட வைணவரான இவர் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று கூறியவர். சிலப்பதிகாரத்தை விலைமாது எனப் பேசியவர்.1 திருக்குறளை ‘ஆரியப் பார்ப்பன நூல்’ என்று அழைத்தார். பின்னர் பலகாலம் கழித்துத் திருக்குறள் பற்றிய தன் கருத்தை மாற்றிக்கொண்டார். வள்ளுவர் சமணர் எனத் தற்காலத்தில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும், ஆரியப் படையெடுப்பு என்பது வழக்கொழிந்து போன ஆங்கிலேயப் புனைவு என்பதும் வேறு விஷயங்கள்.

ஈ.வெ.ரா.வின் திராவிட நாட்டுப் பற்று, அவர் அதனை வலியுறுத்தி வந்த காலத்திலேயே கேள்விக்குரியதாக இருந்தது. ஒரு பக்கம் திராவிட நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராகப் பேசிக்கொண்டிருந்தார். திசம்பர் 4, 1940ல் சேலத்தில் பேசும்போது ஆட்சி அதிகாரத்தில் பிராமணர் அல்லாதோருக்கு உரிய பங்களித்தால் தமது கட்சியினர் அனைவருடனும் தானும் காங்கிரசில் சேர்ந்துவிடுவதாகக் கூறினார். ஆக, அடைந்தே தீர வேண்டியதாக இருந்த ‘திராவிட நாடு’ ஈ.வெ.ரா.வால் காற்றில் பறக்கவிடப்பட்டது.

ஈ.வெ.ரா.வின் வழி வந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட அண்ணாதுரை ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்னும் கோஷத்தை முன்வைத்தார். ‘தனி நாடு’ கோரிக்கையை முன்வைத்தால் இந்திய அரசு இறங்கிவரும் என்று பகல் கனவு கண்ட அவரை, நேரு 1962ல் ‘தேச துரோகச் சட்டம்’ இயற்றியதன் மூலம் பணியவைத்தார். பின்னர் தனி நாடு கேட்ட அண்ணாதுரை 1967ல் இந்திய இறையாண்மையைக் காக்க உறுதிமொழி எடுத்து இந்தியத் திருநாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வராகி, ‘திராவிட நாடு’ என்னும் நகைச்சுவையை முடித்துவைத்தார்.

இந்தியத் தேசியத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் வெற்றுப் பிரசாரமாக மட்டுமே திராவிட இயக்கக் கோஷம் மாறிவிட்டது தற்கால அபத்தங்களில் ஒன்று. இன்று ‘திராவிட’ என்று துவங்கும் எதனையும் பற்றி நினைக்கும்போது உடனே பளிச்சிடுவது அச்சொல்லைத் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் ஊழல் மட்டுமே என்பது நிதர்சனம்.

*********

உதவிய நூல்கள் :

திராவிட மாயை ஒரு பார்வை – சுப்பு

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – மலர்மன்னன்

அடிக்குறிப்பு:

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51)

“…இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.”

அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக் குரல் – அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

மார்ச் 23ம் தேதி இரவு, அசோகமித்திரனின் மறைவுச் செய்தியைக் கேட்டதும், என்னை ஒரு விதமான ஆற்றாமையும் கோபமும் சூழ்ந்துகொண்டது. ஒரு கலைஞனை ஆன மட்டும் நோகடித்து, அவனுக்குச் சேர வேண்டிய எந்தச் சிறப்பையும் சேரவிடாமல் செய்த நமது அறிவுச்சூழல் மீது வந்த கடுப்பு அது. ரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்ள முகநூலில் கீழ்க்கண்டவாறு ஒரு நிலைத்தகவலைப் பதிவு செய்தேன். “மேலும் ஒரு மேதைக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்தாயிற்று. அற்ப அரசியலின் வெற்றியை ஆர்ப்பரித்துக் கொண்டாடுங்கள். உங்கள் முகாமில் இருக்கும் அரைவேக்காடு துண்டுப் பிரசாரகர் எவராவது எழுதிய அறுநூறு பக்க பிரசாரத்தை அலங்கரித்து யானை மேல் ஏற்றும் பணியை உவகையோடு தொடர்ந்து செய்யுங்கள். காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் சவால் விட மாட்டேன். நீங்கள் அற்பர்கள் என்று உங்களுக்கு எப்போதும் தெரியும். அது போதும்.”

இன்று அசோகமித்திரனின் இலக்கிய ஆளுமையைக் குறித்து ஆராயும்போது அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதும் மிகவும் அவசியம் ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் அசோகமித்திரனை மறுதலித்த தரப்புகள் எவை என்பதை ஆராய வேண்டியது அவரது படைப்புலகை ஆராய்வதை விட முக்கியமானது எனக் கருதுவதற்கு இடமுண்டு. ஏனெனில் அசோகமித்திரனின் படைப்புலகை ஆராய்வதின் வாயிலாக நாமும் அவரது ஆளுமையை ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் மேதைமையை மறுத்த, இருட்டடிப்பு செய்த தரப்புகளைக் குறித்துத் தெரிந்துகொள்வதின் வாயிலாக நமக்கு நம்மைப் பற்றி, நமது அறிவுலகைப் பற்றித் தெளிவான சித்திரம் ஒன்று கிடைக்கும். சற்றே நிதானித்துச் சிந்தித்துப் பார்த்தால் அசோகமித்திரனை நான்கு தரப்புகள் தொடர்ந்து மறுதலித்து இருட்டடிப்பு செய்து கொண்டிருந்தன என்று தோன்றுகிறது. முதலில் முற்போக்குத் தரப்பு. இரண்டாவதாகத் திராவிடத் தரப்பு. மூன்றாவதாக வெகுஜன ஊடகங்கள் மீது கடும் காழ்ப்புக் கொண்ட சிற்றிதழ் அறிவுஜீவிகள் மற்றும் படைப்பாளிகள். நான்காவதாக முதிரா வாசகக் கூட்டம் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டது. இவர்களின் தரப்புகளையும் தவறுகளையும் நாம் பார்க்கலாம்

தமிழ் இலக்கிய சூழலில் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் /இடதுசாரி இலக்கிய அமைப்புகளின் இருப்பும், அவற்றின் பலமும் நன்கறிந்த ஒன்றே. இந்த அமைப்புகள் ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள். இதற்கான காரணங்கள் சில உள்ளன. நல்லதோ கெட்டதோ இடதுசாரி அமைப்புகள் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து, உடனடிப் பலனை எதிர்பார்க்காமல் செய்து வருகின்றனர். இலக்கியக் கூட்டங்கள், பயிற்றரங்குகள், இலக்கியக் கூடுகைகள் என ஏராளமான விஷயங்களை இவர்கள் ஒருங்கிணைக்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக வேறு அமைப்புகள் அதிகமாக இல்லை. இதன் வாயிலாக இவர்களுக்கு ஒரு வித கருத்ததிகாரம் கிடைக்கிறது. இந்தக் கருத்ததிகாரம் மூன்று இடங்களில் பாலமாகச் செயல்படுகிறது. பெரும்பாலும் இளம் வாசகர்களையும்,படைப்பாளிகளையும் அடையாளம் கண்டு கொள்வது இத்தகைய அமைப்புகள்தான். எனவே இவர்கள் மிக எளிதாக அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைத் திறனாய்வு என்ற போர்வையில் இளம் வாசகர்களிடமும் படைப்பாளிகளிடமும் திணித்துவிட முடியும். இதனால் தாம் பல இளைஞர்களும், இடதுசாரி படைப்பாளிகளும் சில மேதைகளை அவர்களது படைப்பில் ஒன்றைக்கூட வாசிக்காமல் நிராகரிக்கிறார்கள். இவர்களை de-radicalize செய்வது மிகவும் சிரமம். இன்னொரு பக்கம் கல்வி நிறுவனங்களில் உள்ள இந்த இயக்கத்தவர்கள் தங்களுக்கு ஒவ்வாத படைப்பாளுமைகளைக் கல்விச்சூழலில் இருந்து விலக்கி வைக்கும் வேலையை மிக திறமையாகச் செய்வார்கள். கருத்தரங்குகளுக்கு அழைப்புகள் வாராது. படைப்புகள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுக்கப்படமாட்டாது. நாவல்கள் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படாது. பல்கலைக்கழக நூலகங்களில் இவர்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்காது. இதில் வேறொரு வேடிக்கையும் உண்டு. அசோகமித்திரன் இடதுசாரிகளை விரோதியாகக் கருதியவர் இல்லை. அத்தரப்பிலிருந்து வரும் நல்ல படைப்புகளையும் அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். பல இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் நெருங்கிய நட்பும் இருந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒரு மார்க்சிய விமர்சகனுக்கு அணுக்கமான கூறுகள் அசோகமித்திரனின் படைப்புகளில் ஏராளமாக உள்ளன. ஆனால் நமக்குத்தான் ஒரு எழுத்தாளர் என்ன எழுதுகிறார் என்பதைவிட எங்கு உறுப்பினராக இருக்கிறார் / உறுப்பினராக இல்லை என்பது மிகவும் முக்கியமாயிற்றே. புஷ் சொன்னது போல் அவர் நம்முடன் இல்லையென்றால் நமது எதிரிதான் என்றே இடதுசாரிகள் தீர்மானம் செய்தனர். இதனால் அசோகமித்திரன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்.

அசோகமித்திரனுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்களைக் கிடைக்க விடாமல் செய்த மற்றொரு குழு, திராவிட அரசியல் சிந்தனைகளைக் கைக்கொண்டிருந்த குறுங்குழு. அசோகமித்திரன் பிராமணராகப் பிறந்தார் என்பதே இவர்களுக்கு போதுமான காரணமாக இருந்தது. போதாதகுறைக்கு அசோகமித்திரனின் நாவல்களில் சாமியார்கள் எல்லாம் வந்தனர். வந்த சாமியார்கள் நல்ல சாமியார்களாக இருந்தது மட்டுமல்லாமல் ஹிந்து சாமியார்களாகவும் இருந்தனர். இது மிகப் பெரிய மூட நம்பிக்கை அல்லவா! எனவே அசோகமித்திரனும் அவரது ‘பிற்போக்குப் பார்ப்பனீய எழுத்துக்களும்’ குறிவைத்துத் தாக்கப்பட்டன. அசோகமித்திரன் சுயவதைப்பிரியனுக்கே உரிய நெஞ்சுரத்துடன் வேறொரு விஷயத்தையும் செய்தார். தமிழ்நாட்டில் பிராமண இளைஞர்கள் ஒடுக்கப்பட்ட யூதர்களைப் போல் உணருகிறார்கள் என்று பொருள்படும் விதமாகப் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறினார். தமிழ்நாட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிராமண வெறுப்பும் இனவாதமும் யாரும் அறியாததல்ல. அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் நாசிகளுக்குச் சற்றும் குறைந்தவர்களுமல்ல. என்ன, நாசிகளுக்குக் கிடைத்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவ்வளவே.
ஆனால் இந்த உண்மையை எந்த ஒரு அறிவுஜீவியும் உரத்துக் கூறியதில்லை. இதனைத் தொடர்ந்து இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மேடைப் பேச்சாளர்கள் தொடங்கி, அவ்வியக்கங்களின் அறிவுஜீவிகள் வரை அனைவரும் அசோகமித்திரனை வறுத்தெடுத்தனர். முற்போக்கு பிராமணரைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் அவர்கள் குற்றங்களைத் துணித்து சுட்டிக் காட்டும் அசோகமித்திரன் போன்றவர்களைத் திராவிட இயக்கத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அசோகமித்திரனுக்கு சாஹித்ய அகாடமி பரிசு வழங்கப்படக்கூடாது எனத் தமிழகத்திலிருந்து கடிதம் சென்றதாகக் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இனி ஏதாவது ஒரு திறமையான ஆவண ஆய்வாளர் வந்தால் ஒழிய இச்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாது. இருப்பினும் அவ்வாறு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கும் எனில் நமக்கு அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (பின்னர் ஒரு திராவிடத் தலைவரின் பாராட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். ஆனால் அந்த் தலைவரின் படைப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இதுதான் ஒரு சாதாரணனின் ஒத்துழையாமைப் போர்). தன்னை எதிரியாகக் கருதிய அரசியல் இயக்கங்கள் வலுவுடன் இருந்த சூழலிலும் கூட அசோகமித்திரன் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தார்.

சிற்றிலக்கிய சூழலிலும் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டவர்கள்தான் அதிகம். அவரது படைப்புகள் மேல் உள்ள விமர்சனங்கள் என்பதைத் தாண்டி அவர் மீதான விமர்சனங்கள்தான் அதிகமாக இருந்தன. அசோகமித்திரனின் அஞ்சலிக் கூட்டங்களில் கலந்துகொண்ட மூத்த விமர்சகர்களிடம் பேசும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. அன்றைய இலக்கியச் சூழலில் வணிக இதழ்கள் X இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு மிக்க கவனத்துடனும் வன்மத்துடனும் கைக்கொள்ளப்பட்டது. வணிக இதழ்களோடு நெருக்கமாக இருந்த படைப்பாளிகள் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக, பணத்திற்கு விலை போனவர்களாகக் கருதப்பட்டனர். இந்தப் பின்னணியில் அசோகமித்திரன் மீது இவர்களது வெறுப்பு படர்ந்தது. எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்தாலும் அசோகமித்திரன் தமது இலக்கியத்தில், இலக்கியச் செயல்பாடுகளில் எந்தச் சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. மத்திய /மாநில அரசு வேலையோ /பரம்பரை வியாபாரமோ /நில புலன்களோ இருந்திருந்தால் பரவாயில்லை. எழுத்தாளர்களுக்கு வாரி வழங்கும் இடத்திலும் அவர் வாழவில்லை. இந்நிலையில் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்க வேண்டுமா? ஆனால் தீவிர இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கு இந்த நியாயங்கள் என்றும் புரியாது.

அசோகமித்திரனை அவசர அவசரமாக நிராகரித்த மற்றொரு தரப்பு முதிரா வாசகர்களுடையது. அவரது ஏதாவது ஒரு நூலை மேலோட்டமாக வாசித்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது என இவரை மேதை என்று அழைக்கிறார்கள்’ எனக் கேட்கும் வாசகர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு விதமான அழகியல் சிக்கல். நம் வாசகர்கள் பலர் அலங்கார நடையையும், அதீத வர்ணனைகளையும் வாசித்துப் பழகியவர்கள். மேடைப்பேச்சு தொடங்கி அனைத்து இடங்களிலும் ஜால வித்தைக்காரனின் லாகவத்தோடு மொழியைக் கையாளும் ஆளுமைகளைப் பார்த்தவர்களுக்கு, மொழிஜாலமே இலக்கியம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையானவையாக, ஆழமற்றவையாகத் தோன்றுவது இயல்பே. நான் கீழ்க்கண்ட உதாரணத்தை இத்தகைய வாசகர்களிடம் கூறுவதுண்டு. தொடர்ந்து சில காலம் உணவு விடுதியில் உண்டு பழகிய ஒரு நபருக்கு, வீட்டில் சமைத்த உணவில் உப்பும் உறைப்பும் குறைவாக இருப்பதாகத் தோன்றும். பிரச்சினை வீட்டு உணவில் அல்ல. உண்பவனின் சுவையுணர்வில்தான்.

இன்று அசோகமித்திரனின் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ஒற்றை நபர் இயக்கமாகவே தம் வாழ்நாளெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அசோகமித்திரன் பயணம் செய்த பாதை தனிமையானது. துணைகளற்றது. கூட்டங்களில் இருந்தும், குழுச் செயல்பாடுகளில் இருந்தும், குழு அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருந்துள்ளார். பொருளாதாரச் சிக்கல்கள், சித்தாந்தம் சார்ந்த எதிர்ப்புகள், ஜாதி வெறியர்களின் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு செவ்வெனே இலக்கியப் பணிகளைச் செய்து வந்துள்ளார். கொஞ்சமே கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தார் என்றால் அவர் வாழ்க்கையே வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் எல்லாத் துன்பங்களுக்கு நடுவிலும், எல்லா எதிர்ப்புகளுக்கு நடுவிலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காமல், சிறு புன்னகையோடு, வாழ்ந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி யார் மீதும் துவேஷம் கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அசோகமித்திரன் ஒருவேளை இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்திருந்தார் எனில் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். எழுத்தாளனைக் குறித்து எழுதக் கூடாது, வம்புகள் கூடாது, எழுத்தைக் குறித்து மட்டும்தான் எழுத வேண்டும் எனக் கூறியிருப்பார். ஆனால் நான் ஏற்கெனவே கூறியது போல இக்கட்டுரையின் நோக்கம் அசோகமித்திரனைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம் சிறுமைகளைப் புரிந்துகொள்வதும்தான்.

அசோகமித்திரன் தமது வாழ்க்கையை எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி எதிர்கொண்டார் என்றாலும் ஒரு எழுத்தாளன் சமூகத்தால் எப்படி நடத்தப்படவேண்டும் என்பது குறித்த அவருக்குத் தீர்க்கமான பார்வை இருந்தது. மெல்லிய நகைச்சுவையோடு, ‘நேஷனல் புக் டிரஸ்ட் கருத்தரங்கு’ (1977) என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“முதலில் கூறியபடியே எல்லாக் கட்டுரைகளுமே உயர்ந்த தன்மை கொண்டதாக இருந்தாலும் பதிப்புத்துறையின் (பிரத்யேகக்) கருத்தரங்கு என்பது போன்றதில் எழுத்தாளர் அசோகமித்திரன் கட்டுரை புள்ளிவிவரமோ மேற்கோள்களோ ஏதும் இல்லாமல் ஒரு தனித்த குரலில் ஒலிப்பதாக இருந்தது. கருத்தரங்கு விவாதத்தில் திரும்ப திரும்ப நினைவுபடுத்தப்பட்ட கட்டுரையும் அவருடையதுதான். வரும் பத்தாண்டுகளிலாவது எழுத்தாளன் சமூகத்தில் உரிய அந்தஸ்து பெறுபவனாக இருக்க வேண்டும் என்று கூறும் அவர் கட்டுரையை அவர் வாசிக்க எழுந்தபோது கருத்தரங்கைத் துவக்கிய அமைச்சர் அரங்கநாயகம் விடைபெற்றுச் சென்றார். அசோகமித்திரன் மேடையை நெருங்கியபோது அதுவரை சுறுசுறுப்பாக இயங்கிய சென்னை டெலிவிஷன்காரர்கள் விடை பெற்றுச்சென்றார்கள். அசோகமித்திரன் மேடையேறிய உடனேயே வானொலிக்காரர்களும் மைக்கைக் கழற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள். ”(பக்கம் 65-66, காலக்கண்ணாடி கலைஞன் பதிப்பகம், 1998.)

இது நடந்து இரண்டு தசாப்தங்கள் ஓடிவிட்டன. அந்த ஒற்றைக் குரலும் விடைபெற்றுவிட்டது. இனிமேலாவது அசோகமித்திரன் வலியுறுத்திய சமூக அந்தஸ்து உண்மையான எழுத்தாளர்களுக்குக் கிடைத்தால் சரி.

அசோகமித்திரன்: நுணுக்கத்தின் மகத்துவம் – ஜடாயு

”எனக்குத் தெரியாது. எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்துத்தான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்றுகொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை. நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை…”

– காலமும் ஐந்து குழந்தைகளும், 1973.

நான் அசோகமித்திரனைச் சந்தித்ததில்லை. சில மேடைகளில் பார்த்திருப்பதோடு சரி. கடைசியாக 2015 நவம்பரில் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழாவில் பார்த்தபோது மிகவும் தளர்ந்து போயிருந்தார். தங்கள் வாழ்வின் முதுமைக் காலங்களில் மகத்தான மனிதர்களின் முகத்தில் மலரக் கூடிய அலாதியான கனிவு அவர் முகத்தில் குடிகொண்டிருந்தது. உடல்ரீதியாக அவர் மிகவும் அசௌகரியமாக உணர்வது தோற்றத்திலேயே தெரிந்தது. அந்த நிலையில் அருகில் சென்று வணக்கம் செலுத்துவதோ கைகுலுக்குவதோ கூட அவரில் இருந்த மென்மையைக் குலைத்து விடும் என்று தோன்றியது. பார்த்ததே மனநிறைவாக இருந்தது.


மறைந்துவிட்ட ஒரு மாபெரும் எழுத்தாளரை எந்த வகையிலெல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும்? மூன்று விதங்களில். முதலாவது, அவர் நேரடியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள். இரண்டாவது அவர் வாழ்க்கை குறித்து பலவிதங்களில் பதிவுசெய்யப்பட்டு நாம் அறியவரும் செய்திகள். மூன்றாவது இந்த இரண்டின் வழியாக நாம் திரட்டிக்கொண்டு, நமது மனதில் தங்கி விடுகின்ற அவரது ஆளுமை. அசோகமித்திரன் விஷயத்தில் அவர் மரணமடைந்த போது, தமிழ் நவீன இலக்கியத்தின் ஒரு ஆகிருதி (icon) என்ற நிலையை அடைந்துவிட்டிருந்தார். அந்நிலையில், அவரது படைப்புகளுடனான போதிய பரிச்சயம் கூட இல்லாதவர்கள், அரசல் புரசலாகக் காதில் விழும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான துணுக்குகளை வைத்துக்கொண்டு அவரை ‘மதிப்பிட்டுக்’ கொண்டிருந்தது, 21ம் நூற்றாண்டில் சமூக ஊடகங்கள் கோலோச்சும் நமது யுகத்தின் ஒரு விடம்பனம். அந்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஒரு சிலராவது மேலெழுந்து அவரது படைப்புகளை வாசிப்பார்கள் என்றால் அது நல்ல விஷயம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை எல்லாம் வாசிப்பார்களா என்று தனது முதுமை நாட்களில் ஒரு சலிப்பை அசோகமித்திரன் வெளிப்படுத்தினார். ஆனால், அவரே தன் வாழ்நாளில் நிறைய எழுதிக் குவித்த, தீவிரமான எழுத்தாளராகத்தான் இருந்திருக்கிறார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 8 நாவல்கள், 20 குறுநாவல்கள், கனமான கட்டுரைத் தொகுதிகள் என்று அவரது படைப்புலகம் நீண்டது, பெரியது.

பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் போன்ற அவரது படைப்புகள் நாவல்கள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், நாவல் என்ற கலைவடிவத்திற்கே உரித்தான, அதன் அடையாளம் என்று விமர்சகர்களால் கூறப்படுகிற பெருங்கதையாடல் (grand narrative) என்ற அம்சம் அவற்றில் அனேகமாக இல்லை. பதினெட்டாவது அட்சக்கோடு நாவலின் களம் பிரம்மாண்டமானது. 1947 தேசப்பிரிவினையின் பின்னணியில் செகந்திராபாதில் நிகழ்ந்த பயங்கரமான அரசியல், சமூக கொந்தளிப்புகள்தான் அதன் பின்னணி. அத்தகைய பெரிய வரலாற்றுத் திரைச்சீலையிலும் (canvass) சந்துரு என்ற பதின்மவயது இளைஞனின் உலகத்தைத்தான் அசோகமித்திரன் மையமாக வரைந்து செல்கிறார். இதே களத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மற்ற பல பிரபல இந்திய நாவல்களில் அந்தக் காலகட்டத்தின் வரலாற்று வன்மங்களும் கொடுமைகளும் நேரடியாக உரத்த குரலில் பதிவு செய்யப் பட்டிருப்பதை ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புலப்படும்.

அந்த நாவலில் ஓர் இடம். தெலுங்கர்களும் உருதுமொழி பேசுபவர்களுமே அதிகமாகப் படிக்கும் அந்தப் பள்ளியில் உள்ள மிகச்சில தமிழ் மாணவர்களில் இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட சந்துருவும் அடக்கம். பிரின்சிபல் உட்பட அனைவரும் கலந்துகொள்ளும் ஒரு ‘தமிழ் மன்ற’ நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக, ‘தமிழில் கடவுள் வாழ்த்துப் பாடு’ என்று ஒரு உடனடி ஆணை ஆசிரியரிடமிருந்து வருகிறது. செய்வதறியாது ஏதேதோ பாடல்கள் நினைவில் அலையடிக்க, கடைசியாக அவனது வாயிலிருந்து கம்மிய குரலில் வெளிப்படுவது ‘எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன…” அப்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சகுந்தலை திரைப்படத்தில் வந்த பாடல். அவன் வியர்த்துப் போய் அதை முனகிவிட்டுச் சென்று அமர்ந்த பின், பேசவரும் ‘செகரட்ரி’ தன் பேச்சு முழுவதும் அந்த ‘சாமிப் பாட்டை’ சிலாகிக்கிறார்.

மேலோட்டமாக வாசித்துச் செல்கையில் ஒரு நகைச்சுவை நிகழ்வு போலத் தோன்றினாலும், இந்த நிகழ்வில் மையமாக உள்ள அபத்தம் (absurdity) நாம் தவறவிட முடியாதது. ஆம், அந்த நகரத்திலும், அது அமைந்துள்ள தேசத்திலும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் காரணமின்றி அவநம்பிக்கையும் வெறுப்பும் கொண்டு அலையும் அபத்தம். அதன் நுட்பமான குறியீடாகவே அந்த இடத்தில் அந்த சம்பவம் வருவதை இலக்கிய வாசகர்கள் உணர முடியும். அசோகமித்திரனின் கலை மேதைமை சந்துரு என்ற சிறிய மனிதனின் சிறிய உலகத்தின் நுண்ணடுக்குகளின் வழியாகவே வரலாற்றின் கனத்தை நுட்பமாகவும் மௌனமாகவும் கூறிச் சென்றிருக்கிறது. பெருங்கதையாடல்கள் மீதிருந்த அவநம்பிக்கை அல்லது ஒவ்வாமை காரணமாக, சிறுகதையையே தனது கலைவெளிப்பாட்டிற்கான உகந்த வடிவமாக அவர் கருதியிருக்கக் கூடும். அவரது குறுநாவல்களும் கூட ஒருவகையில் நீளமாக்கப்பட்ட சிறுகதைகள்தான்.

ஆனால், அசோகமித்திரனுக்கு வரலாற்றுப் பிரக்ஞையோ அரசியல் சிந்தனையோ இல்லை என்பதல்ல இதன் பொருள். அது மிகச் சன்னமான குரலில் படைப்புகளின் ஊடாகத் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம். ‘இன்று’ குறுநாவலில், தில்லியில் தீன்தயாள் மார்க் என்ற சாலையைக் கஷ்டப்பட்டுத் தேடிக்கண்டுபிடிக்கிறான், மரணத்தையும் தற்கொலையையும் பற்றிய சிந்தனைகளுடனேயே உழன்று கொண்டிருக்கும் ‘அவன்’. அறைக்குள் போனதும் தனிமையில் அவனது மன அவசங்களின் ஒரு பகுதியாக கீழ்க்கண்ட பத்தி வருகிறது.

“… அப்புறம் கீழே விழுகிறோம் என்ற உணர்வு. அந்த இமைப்போதில் மனிதனுக்கு இறக்கைகள் முளைத்துவிடக் கூடாதா? மனிதனுக்கு மட்டும் இறக்கைகள் இருந்துவிட்டால் தரையில் ஏன் வாழவேண்டும்? பூமியை முழுக்க பாம்பு, புலிகளுக்கு ஒழித்துக் கொடுத்து விடலாம். தீன்தயாள் உபாத்யாயாவுக்கு இறக்கைகள் முளைக்கவில்லை. அவர் மண்ணில் மோதிப் பிணமாகக் கிடந்தார். அவர் அந்த மண்ணை வெறும் மண்ணென அழைக்கமாட்டார். பாரத மண். இந்த மண் பாரத மக்களுக்கே உரியது. பாரத மக்களென்பவர் யாவர்? சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள். இப்போது இங்கு யார் யாரோ உரிமை கொண்டாடுவதோடு பாரத மக்களின் தலைவிதியை அவர்களுக்குத் தோன்றியபடி கிறுக்கித் திருத்தி எழுதுகிறார்கள். நீ இரண்டாவது மணம் புரிந்து கொண்டால் சிறைக்குப் போவாய். மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் உன் வேலை போய், நீங்கள் எல்லாரும் நடுத்தெருவில் நிற்கவேண்டும். உன் பணம், உன் சொத்து உன்னிஷ்டம் போல் விநியோகிப்பதற்கு அல்ல. உன் மூதாதையரை மதித்துத் தொழுகிறாயா, நீ பிற்போக்குவாதி. நீ மாற்றப்பட வேண்டியவன். உன் வீடுகளையும் ஸ்தாபனங்களையும் புனித ஸ்தலங்களையும் கோயில்களையும் மரபையும் சம்பிரதாயங்களையும் நான் எப்படியும் எதுவும் செய்வேன். இந்தத் தேசத்துக்கு மதச்சார்பு கிடையாது. அதாவது உன் மதத்தின் மேல் சார்பு கிடையாது. ஜெய் ஹிந்த்!

அவன் தண்ணீரைத் தொடாமல் அந்தக் கட்டடத்து வெளியே வந்தான். பனி அருவியாக இறங்கிக் கொண்டிருந்தது. சில கட்டட விளக்குகள் தவிர அந்தத் தெரு பனிச்சாம்பல் பூத்த கரிய நிறத்தில் உருவ நிர்ணயமற்ற அரக்கன் மல்லாந்து படுத்திருப்பது போல இருந்தது…”

1970களின் முற்பாதியில் நடப்பதாக வரும் நாவல் இது. இதில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கான அறிகுறிகள், 1969ல் ஓடும் ரயிலிலிருந்து விழுந்து இறந்த ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் துர்மரணம், காங்கிரசின் செக்யுலரிச கொள்கைகள் ஆகியவற்றைத் தெளிவான அரசியல் பிரக்ஞையுடன் அசோகமித்திரன் பதிவு செய்திருக்கிறார்.

“நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றிப் படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்…”

புலிக்கலைஞன் சிறுகதையில், நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வரும் ஒல்லிப்பிச்சானான ஆட்கள் குறித்து வரும் ஒரு வர்ணனை இது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்களை வதைத்த தாது வருஷப் பஞ்சத்தையும், அத்தகைய ஒரு பஞ்சம் சுபிட்சத்துக்கும் வளத்திற்கும் இலக்கணமான ராமராஜ்யம் அரசு வீற்றிருந்த நாட்டில் நிகழ்ந்ததையும் எல்லாம் மிக இயல்பாகப் போகிற போக்கில் ஒரு கருப்பு நகைச்சுவை (black humor) மூலமாக மிக நுட்பமாக வெளிப்படுத்திச் சென்றிருக்கிறது அசோகமித்திரனது எழுத்து. இப்படி எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

அசோகமித்திரனின் எல்லாப் படைப்புகளிலும் உள்ள இன்னொரு முக்கியமான தன்மை அவற்றின் ஒருமை (integrity). அவரது கதைகளில் உள்ள உரையாடல்களையோ சித்தரிப்புகளையோ உருவி எடுத்து, கதையுடன் தொடர்பில்லாத தனியான ஒரு வடிவத்தை அவற்றுக்கு நாம் தரவே முடியாது. உண்மையில், அத்தகைய சில ‘மேற்கோள்கள்’ வேண்டும் என்று தேடியபோது அப்படி ஒன்றும் எந்தக் கதையிலும் அகப்படாது என்றே தோன்றியது. ஏனென்றால் இரண்டு பக்கங்களுக்கு ஒரு பாத்திரம் தொடர்ந்து பேசிக்கொண்டு போகும் உரையாடல்களையோ அல்லது விவாதங்களையோ அல்லது பொத்தாம்பொதுவாக கதாசிரியர் தன் கூற்றாக ஒரு தத்துவத்தைச் சொல்வதையோ அவர் படைப்புகளில் காண முடியாது. அந்த அளவிற்குக் கச்சிதமான வடிவ நேர்த்தியும் ஒருமையும் கொண்டவை அவை. அபூர்வமாகவே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காணப்படுவது போன்ற மேற்கோள்களைக் காணமுடியும். அதிலும் கூட ‘காலம்’ பற்றிய தத்துவ விசாரம் நான்கு வாக்கியங்களுக்குப் பிறகு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலுக்கு வந்து விடுகிறது.

இதே ரீதியில், மிகச் சாதாரண வாக்கியங்களும் கதையின் சூழலில் ஒரு பேருண்மை போல ஆகிவிடுவதையும் காணமுடியும். ‘இறந்தவர்கள் எப்படி எடைகூடக்கூடும் என்று தெரியவில்லை’ என்பது ஒரு பொதுப்புத்தி சார்ந்த கூற்று. ‘பிரயாணம்’ சிறுகதையில் வாழ்நாள் முழுவதும் தான் மதித்துப் போற்றிய குருநாதர் ஓநாய்களால் கடித்துக் குதறப்படுவதைப் பார்த்தபின், மாபெரும் தர்மக் குழப்பத்துடனும் உயிர்ப்பயத்துடனும் அவரது சடலத்தைப் பனிமலை வெளியில் தூக்கிக் கொண்டு ஓடும் சீடனின் உள்ளத்தில் இந்தக் கூற்று எழும்போது, அதன் கனம் சாதாரணமானதல்ல. ‘அவன்தான் சற்றுமுன்பு புலியாக இருந்தவன்’ (புலிக்கலைஞன்) என்ற கூற்றும் இதே போலத்தான். இதற்குக் காரணம் இந்தப் படைப்புகளில் கூடியுள்ள அபாரமான ஒருமைதான்.

மே 2016ல் வெளிவந்த ‘அந்தரங்கமானதொரு தொகுப்பு’ (நவீன விருட்சம் வெளியீடு) தான் அசோகமித்திரன் பெயரில் அவர் வாழும்போது வெளிவந்த இறுதி நூல் என்று நினைக்கிறேன். தான் எழுதியவற்றில் தனக்கு மிகவும் பிடித்த படைப்புகளை அசோகமித்திரனே தேர்ந்தெடுத்துத் தொகுத்து வந்திருக்கும் அருமையான நூல் இது. இதில் பொதுவாக பல விமர்சகர்களாலும் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்ட ‘பிரயாணம்’, ‘கிணறு’ போன்ற படைப்புகளுக்கு மத்தியில் எனக்கென்று சில ஆச்சரியங்கள் இருந்தன. ‘விருந்து’, ‘முறைப்பெண்’ ஆகிய சிறுகதைகள். இவற்றைப் பற்றி ஒரு இலக்கியக் கூட்டத்தில் குறிப்பிட்டபோது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. இரண்டுமே’சதுரங்கா சொன்னார்’ என்று ஆரம்பிக்கும். மைசூர் / பெங்களூர் பின்னணி கொண்ட, எனக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான கதைகள். இவற்றில் குறிப்பிடப்படும் ‘சதுரங்கா’ என்பவர் ஒரு காலகட்டத்தில் கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த இடதுசாரி / சோஷலிஸ்ட் அறிவுஜீவிக் குழாத்தைச் சேர்ந்த ஒரு உண்மையான எழுத்தாளர் என்றும் பின்பு அறிய நேர்ந்தது. என்னைப் போலவே அசோகமித்திரனுக்கும் இந்தக் கதைகள் விசேஷமாகப் பிடித்தவை என்பது ஒரு வாசகனாக என்னுள் சிலிர்ப்பையும் சிறு பரவசத்தையும் ஏற்படுத்தியது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

உண்மையில் மகத்தான எழுத்தாளர்கள் மீது வாசகர்களுக்கு ஏற்படும் இத்தகைய அந்தரங்கமான நெருக்கம்தான் இலக்கிய ரசனையின் ஒரு முக்கியமான அங்கம். இத்தகைய வாசக பந்தங்களின் வாயிலாகவே, அவரைச் சந்தித்தும் பார்த்துமிராத நாளைய தலைமுறை தமிழ் வாசகர்கள் பலரது உள்ளங்களிலும் அசோகமித்திரன் வாழ்வார்.

(குறிப்பு: ஏப்ரல் 2, 2017 அன்று பெங்களூர் வாசகர் வட்டம் சார்பில் பெங்களூரில் நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின்  கட்டுரை வடிவம் இது. இந்தக் கூட்டத்தின் பதிவுகளை இணையத்தில் https://goo.gl/k9Ydv2 என்ற சுட்டியில் காணலாம்.)