Posted on Leave a comment

வலம் ஆகஸ்டு 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்


வலம் ஆகஸ்டு 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.



Posted on Leave a comment

பால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் – கோபி ஷங்கர்


சமீபத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ‘மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான அன்ஜும் என்ற நபரின் வாழ்க்கையை மையப்படுத்தி தன்னுடைய அரசியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்தப் புத்தகத்தை பொருத்தவரை, ஒரு இடையிலிங்க நபரான கோபி ஷங்கராகிய நான், அருந்ததி ராயின், பால் மற்றும் பாலினப் புரிதல் பற்றிக் கேள்வி எழுப்புகிறேன்.

அன்ஜும் என்ற கதாபத்திரத்தின் பால் அடையாளத்தை மிகவும் கொச்சைப்படுத்தியும், மாற்றியும் அருந்ததி ராய் எழுதியுள்ளார். இதைக்குறித்து என் நெருங்கிய தோழியும் ஆர்கனேசேஷன் ஆஃப் இன்டர்செகஸ் நிறுவனரும் மிகவும் பிரபலமான இன்டர்செக்ஸ் ஆக்டிவிஸ்ட்டுமான (இடையிலிங்கப் பாலின ஆர்வலர்) ஹிடா விலோரியா என்னிடம் கூறியதாவது: “அருந்ததிராய் மிகவும் பிரபல எழுத்தாளர். ஆனால் இவ்வளவு பெரிய எழுத்தாளர் ஒரு ஆய்வுகூட இல்லாமல் இப்படி எழுதியிருக்கிறாரே, அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது. பயங்கரமான வலியையும் தருகிறது. ஏனென்றால், இண்டர்செக்ஸும் மாற்றுப்பாலினத்தவரும் திருநங்கைகளும் ஒன்றல்ல என்று நாம் இவ்வளவுநாள் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் திடீரென்று வந்து இவ்வளவு பெரிய எழுத்தாளர் இப்படியெல்லாம் எழுதலாமா?”

அருந்ததி ராய் புக்கர் பரிசு வாங்கியிருப்பதால் எல்லாவற்றுக்கும் தான் ஒரு அத்தாரிட்டி என்று நினைத்துக்கொள்கிறார் போல. அதனால்தால் இப்படியெல்லாம் எழுதுகிறார். அவர் தன் நாவலில் குறிப்பிட்டிருக்கும் அன்ஜும் என்ற நபரின் பிறப்பு உறுப்பு மற்றும் பால் குறித்து எழுதும்போது, அதில் ஒரு தெளிவில்லை. ஹிஜ்ரா என அவரைக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் இருக்கிற பிராந்தியப் பாலினச் சிறுபான்மையர் பற்றி நான் கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன், பல கருத்தரங்கங்களில் பேசி இருக்கிறேன். ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ என்ற பெயரில் புத்தகமாகவும் அது வெளிவந்திருக்கிறது. இதைப் பற்றி அமெரிக்காவில் இருக்கிற அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வகுப்பு எடுக்கிறேன். தற்போது என்னுடைய உடல்நிலை காரணமாக என்னால் பயணம் செய்ய முடிவில்லை என்பதால், அவர்கள் நான் இருக்கும் மதுரைக்கு வந்து இதைப் பற்றிப் படித்துவிட்டுப் போகிறார்கள். அப்படியிருக்கும்போது, இதைப் பற்றித் தெரிந்துகொள்ள அருந்ததிராய் எங்களைப் போன்றவர்களிடம் கேட்டிருக்கிருக்கலாம். ஏனென்றால் நான் ஒரு இண்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) நபர். என்னுடைய அடையாளத்தை வைத்து வருகிற ஒரு நபரைப் பற்றிய நாவலாக இருக்கிறது இது.

இந்நாவலில் இருப்பது உண்மைச் சம்பவம் அல்ல என்பது எனக்கும் தெரியும். இதில் நான் அருந்ததி ராயின் அரசியல் கோட்பாடுகளை, அரசியல் நம்பிக்கைகளைக் கேள்வி எழுப்பவில்லை. அது அவர் சுதந்திரம். இந்தியப் பிராந்தியப் பாலின சிறுபான்மையர் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே அருந்ததிராய் என்ன தவறு செய்திருக்கிறார் என்பதைப் அறிந்துகொள்ளமுடியும்.

பிறக்கும்போது நமக்கும் இருக்கும் பிறப்பு அடையாளத்தைப் பால் என்றும், வளரும்போது நாம் தேர்ந்தெடுக்கும் பால் அடையாளத்தைப் பாலினம் என்றும் கூறுகிறோம். இதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய பிறப்புறுப்பை வைத்து, அதாவது குரோமோசோம்களை வைத்து அல்லது ஃபினோடைப் ஜினோடைப் என்பதை வைத்து அக்குழந்தை ஆணா அல்லது பெண்ணா அல்லது இடையிலிங்கத்தவரா (இண்டர்செக்ஸ்) என்று நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குழந்தை ஆண் பிறப்புறுப்போடு பிறந்தால் ஆண், பெண் உறுப்போடு பிறந்தால் பெண். இரு வேறு உறுப்புகளும் தெளிவில்லாமல் பிறந்தால் அந்தக் குழந்தை இன்டர்செஸ் (இடையிலிங்கத்தவர்) குழந்தை என்று சொல்கிறோம். இந்தக் குழந்தைக்கு XX அல்லது XY வகையில் குரோமோசோம்கள் இல்லாமல், 14 வேறுபட்ட வகைகளில் மாறுபட்டு அமையலாம்.

இவ்வகைக் குழந்தைகள் ஒரு வருடத்தில் பத்தாயிரம் வரை கொல்லப்படுகிறார்கள். பெண் சிசுக் கொலையைப் பற்றிப் பேசுவது மாதிரி இந்தக் குழந்தைகளின் கொலையைப் பற்றி நாம் பேசுவதில்லை. இதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இது சிசுக் கொலைகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பத்து வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பும் இதற்கான அறிவிப்பை 25 வருடங்களுக்கு முன்னே வெளியிட்டிருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யக்கூடாது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

பால் என்பதை நாம் முடிவு செய்து பிறப்பதில்லை. ஆணா, பெண்ணா என்பது நாம் முடிவுசெய்வது கிடையாது. அப்படியிருக்க திருநங்கைகள், திருநம்பிகள் என்னும்போது, ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறும்போதும், பெண்ணாக இருந்து ஆணாக மாறும்போதும், அவர்களுடைய குரோமோசோம்கள் மாறுவது கிடையாது. பெண் ஆணாக மாறி திருநம்பி என்றும், ஒரு ஆண் பெண்ணாக மாறி திருநங்கை என்றும் பாலின இருமைக் கொள்கையை நிறுவுகிறார்கள். இதனுள்ளே 58 பாலின அடையாளங்களுக்கு மேல் இருக்கின்றன. பால் வேறு, பாலினம் வேறு, பாலின ஈர்ப்பு என்பது வேறு.

இடையிலிங்கத்தவர் ஒருவர் தன்னை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ அடையாளப்படுத்த விரும்புவதில்லை. பால்புதுமையினராகத் (gender queer) தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பலாம். அதாவது ஆணாகப் பிறந்த எல்லோரும் ஆணாக வாழவேண்டிய அவசியம் கிடையாது. பிறக்கும்போது நமக்கும் இருக்கும் பிறப்பு அடையாளத்தை பால் என்றும், வளரும்போது நாம் தேர்ந்தெடுக்கும் பால்அடையாளத்தை பாலினம் என்றும் கூறுகிறோம்.

ஒரு சில இன்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) நபர்கள் தங்களை திருநங்கை என்றும் திருநம்பி என்றும் சொல்வதும் உண்டு. அது மிகச் சொற்ப அளவில் மட்டுமே. அறிவியல் ரீதியில் அதுவும் தவறாகத்தான் கருதப்படும். இந்த ஒரு சூழலில், பாரத நாட்டில் ஒரு கலாசாரம் பால் மற்றும் பாலின அடையாளத்தை மையப்படுத்தித் தோன்றுகிறது. ஒரு மொழி, ஒரு கலாசாரம், ஒரு குடும்பக் கட்டமைப்பு எல்லாமே ஒரு பாலினத்தின் அடிப்படையில் உருவாகின்றன. இவை எல்லாமே சுவாரஸியமான விஷயங்கள். உலகத்தில் எங்கேயுமே பாலினத்தை மையப்படுத்தி கடவுள் வந்தது கிடையது. இங்கே ஒரு பாலினத்தை மையப்படுத்தி கடவுள், பாலினத்தை மையப்படுத்தி அந்தக் கடவுளுக்கான விழாக்கள், பாலினத்தை மையப்படுத்தி ஒரு புதிய மொழி, பாலினத்தை மையப்படுத்தி ஒரு புதிய குடும்பக் கட்டமைப்பு தோன்றியிருக்கிறது. இது, புத்தர் பிறப்பதற்கு முன்பே, மஹாவீரர், சமணர்கள் வாழ்ந்ததற்கு முன்பே, கிட்டத்தட்ட 7,000 வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்த பழம்பெரும் கலாச்சாரம். இந்தியா முழுக்க முந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் பேச்சு வழக்குகளும் இருக்கலாம். அதேமாதிரிதான் இந்தப் பாலின சிறுபான்மைச் சமூகமும். இதில் உள்ளவர்கள் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் மாறுபடுகிறார்கள். பேசுகிற மொழி வேறு வேறு. ஆப்கானிஸ்தான் தொடங்கி பாகிஸ்தான், இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் வரைக்கும் ஹிஜ்ரா என்று அழைக்கப்படுகிறார்கள். உத்திரபிரதேசம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இவர்களை கின்னர் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இவர்களை அரவாணிகள் என்று சொல்கிறோம். இவர்களை கேரளாவில் பகவதிகள், அதாவது பகவதி அம்மனை வழிபடுபவர்கள் என்று கூறுகிறார்கள். ஆந்திரபிரதேசத்தில் எல்லம்மாக்கள் என்றும், கர்நாடகத்தில் ஜெகப்பா என்றும், மேற்கு வங்கத்தில் சஹி பேகி என்றும், வடகிழக்குப் பகுதிகளில் நுபி மான்பி என்றும், ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு பெயர்களில் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கென விழாக்கள் இருக்கின்றன. உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதைவிட முக்கியமானது, கோவா மற்றும் கொங்கன் பகுதியில் நடக்கிற மங்களமுஹி மேளம். நாற்பது நாட்கள் விரதம் இருந்து நடத்துவார்கள். அங்கு கொச்சையான எந்த ஒரு பாலியல் நடவடிக்கைகளும் இருக்காது.

பாலின சிறுபான்மையருக்கு ஒரு தேவதையாக, எங்களுக்கான ஒரு தேவியாக நாங்கள் பார்ப்பது பஜுரா தேவி மாதா. சேவல்மேல் அமர்ந்திருக்கிற ஒரு அம்மா. அந்த அம்மாதான் ஒரு பிரதான தேவதையாக எல்லாருக்கும் விளங்குகிறார்கள். இதைப் போல திருநம்பிகள் காடி என்னும் பழங்குடி இனத்தில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இமயமலைக்குக் கீழே உள்ள சில பகுதிகளிலும் திபெத்திய கலாசாரங்களிலும் பெருவாரியாகக் காணப்படுகிறார்கள். இப்போதும் இருக்கிறது. இவ்வளவு பெரிய கலாசாரப் பின்னணியில்கூட இன்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) மக்களை இவர்கள் உள்ளே சேர்த்துக்கொள்ளவில்லை. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களை மட்டுமே இவர்கள் சமூகத்தின் உள்ளே அனுமதித்தார்கள்.

ஒரு சில இடங்களில் இண்டர்செக்ஸ் குழந்தையாகப் பிறக்கிறவர்களை எடுத்து வளர்த்தாலும்கூட அவர்களுக்கென தனி பெயர் வைக்கிறார்கள். அந்தத் தனிப்பெயர் மா பேடி உசிலி. அவர்கள் பேசகிற மொழி ஹிஜ்ரா ஃபார்ஸி. இந்த மொழி, பார்ஸி, உருது, அரபி, சமஸ்கிருதம், பழங்குடி இனமக்கள் பேசுகின்ற மொழிகள் ஆகியவை கலந்து உருவான ஒரு மொழி. தென்னகத்தில் பேசுகிற மொழியை கௌடி பாஷை என்று சொல்லுவார்கள். இது தமிழ், தெலுங்க, கன்னடம், முக்கியமாக சமஸ்கிருதம், உருது, பிறகு பிரதான பழங்குடி இன மக்கள் பேசுகின்றகள் மொழி ஆகியவை சேர்ந்து உருவான ஒன்று. இதைத் தவிர்த்து அவர்களுக்கென்று ஒரு தனி சைகை மொழியும் இருக்கிறது. இவ்வளவு தனித்துவமான நிறைய விஷயங்கள் இருக்கிற சமூகத்தில் நிறைய மூடநம்பிக்கைகளும் உள்ளன என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

அந்தச் சமூகத்தில் இண்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) மக்களுக்கென ஒரு பெயர் கொடுக்கிறார்கள். அது, அந்தர்லிங்வாஷிஸ். இவற்றில் எங்களுக்கு முக்கியமாக மூன்று பெயர்கள் கொடுக்கிறார்கள். அதில், மா பேடி ஹுசிலி என்பதுதான் மிகவும் பிரசித்தம். ஹிஜ்ரா சமூகத்தில் (அதாவது திருநங்கை அல்லது அரவாணி) இருக்கிறவர்கள் எங்களையே சாமியாகக் கும்பிடுவார்கள். ஏனென்றால், இடையிலிங்கத்தவர்களே உண்மையான மாற்றுப் பாலினத்தவர் என்று சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் பிறக்கும்போதே ஆணுமில்லை, பெண்ணுமில்லை.

சங்க இலக்கியங்களில்கூட கொற்றவைக்குப் பூஜை செய்பவர்கள், இடையிலிங்கத்தவராக இருக்க வேண்டும். ஆணுமாக இருக்கக்கூடாது, பெண்ணுமாக இருக்கக்கூடாது. அப்படியிருக்கிறவர்கள்தான் பழங்காலத்தில் நிறைய பூஜை, வழிபாட்டு முறைகளை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.

இத்தனை வரலாறு இருக்கும்போது அவர்களைப் பற்றி அருந்ததிராய்க்கு எந்தப் புரிதலும் இல்லை. அருந்ததி ராயின் நாவலில் வரும் அன்ஜும் என்பவர் ஒரு இன்டர்செக்ஸ் நபர். அவரை ஹிஜ்ரா என்று அருந்ததி ராய் குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய தவறு. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இடையிலிங்கத்தவர்கள் செய்து வரும் போராட்டங்கள் இதன் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. ஹிஜ்ரா என்றால் வடமொழியில் அரவாணி என்று அர்த்தம். அன்ஜும் பிறக்கும்போது ஒரு ஆண் கிடையாது, பெண்ணும் கிடையாது. பிறக்கும்போதே அவர் ஒரு இண்டர்செக்ஸ் நபர். குறைந்தபட்சம் இதையாவது தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

அன்ஜும் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தித்தான் இந்தப் புத்தகமே எழுதப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் அருந்ததிராய் போன்ற ஒருவர், விருதெல்லாம் வாங்கியிருப்பவர், எழுதுவதை உலகம் நம்பும். ஒருவரின் எழுத்துக்குப் பின்னால் இருக்கிற எந்த ஒரு உசாத்துணைகளையும் (references) நாம் படிப்பதில்லை. அந்த மாதிரி ஒரு உலகத்தில் இருக்கிறோம். பார்க்கிறதெல்லாம் உண்மை, கேட்கிறதெல்லாம உண்மை என்கிற சூழலில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம்ம ஊடகங்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. பல அமெரிக்க ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அருந்ததிராய் பேசுகிறார். திரும்பத் திரும்ப ஹெர்மோஃப்ரோடைட் (Hermaphrodite) என்று சொல்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பே இதை நிறுத்தச் சொல்லி போராட்டம் எல்லாம் நடந்தது. ஒரு நாய் இருக்கிறது. அதை வுமன் டாக் என்று சொல்வோமா, ஃபிமேல் டாக் என்று சொல்வோமா? வுமன் என்பது மனிதர்களைக் குறிக்கிற சொல். அந்த மாதிரி வித்தியாசம்தான் ஹெர்மோஃப்ரோடைட் என்பதற்கும் ஹிஜ்ராக்கும் உள்ள வித்தியாசம்.

ஆங்கில இலக்கியத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரானவர், எங்களைக் குறிக்கும் பால் மற்றும் பாலின வேறுபாடுகளைத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார். ஒரு இண்டர்செக்ஸ் நபரைப் பற்றி எழுத அருந்ததி ராய் இண்டர்செக்ஸ் நபர் அல்ல. நான் இடையிலிங்கத்தவர்கள் பற்றி எழுதும் ஒரு இண்டர்செக்ஸ் மனிதன். எனவே எனக்குத்தான் இதன் வலி புரியும். ஏனென்றால், எங்களைக் குறிப்பதற்கும் பொதுவான சொற்கள் உள்ளன. எங்களை He அல்லது She என்று குறிப்பிட மாட்டார்கள். மாறாக, Ze என்று குறிப்பார்கள். இதை ஆக்ஸ்போர்ட் அகராதியிலேயே சேர்க்க வைத்திருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமே ‘பிறர்’ என்ற ஒரு தெரிவை என்னால்தான் கொண்டு வந்தது. அங்கே கலை மற்றும் நுண்கலையியல் படிப்பில் சேர முயன்றபோது, அவர்களிடம் பிறர் என்ற தெரிவு இல்லை. ஆண் அல்லது பெண் என்ற தெரிவு மட்டுமே இருந்தது. எனக்காக எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ஒவ்வொரு விஷயமும் நாங்கள் போராடி பெற்றுக்கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், எதை நாங்கள் இல்லை என்று சொல்கிறோமோ, அதுதான் நாங்கள் அவர் எழுதிவிட்டார். இதை எங்கள் போராட்டத்துக்கே ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கிறோம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. என்னுடன் சேர்ந்து கட்ரினா கர்காஸஸ் என்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய இன்டர்செக்ஸ் அறிஞரும் சொல்கிறார். இவர் ஒரு பேராசிரியர், இண்டர்செக்ஸ் அத்தாரிட்டி, பால் நிர்ணயம் தொடர்பாக சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் போராடியவர், இண்டர்செக்ஸில் சிறப்பாய்வு செய்த மானுடவியலாளர். இவர் மட்டுமல்ல, மற்றொரு முக்கியமான ஆக்ட்டிவிஸ்ட்டான ஹிடா விலோரியா, முதல் இண்டர்செக்ஸ் அரசியல்வாதியான டானி ப்ரஃபா உள்ளிட்ட பலர், உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் என் குரலை ஆமோதித்தார்கள். இது தொடர்பாக நான் வெளியிட்டிருந்த டிவிட்டில் இவர்கள் மறுமொழி அளித்திருந்தார்கள்.

அருந்ததிராய் தன் நாவலில் எதைப்பற்றி எழுதவேண்டும் என்று நான் பேசவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். அருந்ததிராயை யாராவது ஒருவர் வாடா போடா என்றும் அவர் ஒரு ஆண் என்றும் சொன்னால் அருந்ததிராய்க்கு எவ்வளவு கோபம் வருமோ, அது மாதிரி அவர் என் பாலினத்தைப் பற்றிச் சொல்லும்போது, எனக்கு அவரைவிடவும் கோபம் வருகிறது.

என்னுடைய பால், பாலின அடையாளமானது என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். அதை உணர்ந்துதான் நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால் நான் அது மட்டும் கிடையாது என்றாலும் அது என் வாழ்க்கையின் முக்கியமான அம்சம். ஒரு ஆணைப் பார்த்துப் பொட்டை என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரும். அதேமாதிரி ஒரு பெண்ணை வேறு ஏதாவது சொன்னால் கோபம் வரும். அதுவேதான் எங்களுக்கும். இல்லாத ஒன்றை எங்களை நோக்கிச் சொல்லும்போது எனக்கும் கோபம் வருகிறது. இதை நான் ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கிறேன். அருந்ததிராய் தன் நாவலில் யார் இன்டர்செக்ஸ், யார் ஹிஜ்ரா என்று ஒரு தெளிவான வரையறையைக் கொடுத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. எங்களைப் புரிந்துகொண்டால் மட்டுமே எங்களது வேதனைகளையும் வலிகளையும் புரிந்துகொள்ளமுடியும்.

Posted on Leave a comment

பெண் முகம் [சிறுகதை] – சித்ரூபன்


மலத்தை மிதித்துவிட்ட அருவருப்போடு அவனைப் பார்த்தேன். சிறிது நேரமாகவே பின்னாலிருந்து என்னை ரசித்தபடி மெதுவாக ஒருவன் வந்துகொண்டிருப்பதை முதுகுப்பக்கம் உணரமுடிந்தது. தினமும் இதே நேரத்தில் இதே சாலையில் பின்தொடர்பவன். இன்று மெல்லிய குரலில் அவன் விரசமாக ஏதோ வர்ணித்ததும் கேட்டது. என்னைக் கடந்து வந்து பிரயாசையுடன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான். என் முகத்தை மனதிற்குள் பதியவைத்துக்கொண்டிருப்பான். பிற்பாடு மனைவியுடனோ பிற மகளிருடனோ கூடும்போது என்னை நினைத்துக் கொள்ளுவான். இம்மாதிரி வக்ரமான ஆண்களின் அன்றாட பிரதிநிதியாகத்தான் அவன் தெரிந்தான்.

‘உன்னைக் கருத் தரித்தவளும், கணவனாக வரித்தவளும் என்னைப் போல ஒரு பெண்தான்… அவர்களை மற்ற ஆடவர்கள் காமக்கண் கொண்டு பார்ப்பதை அனுமதிப்பாயா… தரந்தாழ்த்திப் பேசுவதை சகிக்க முடியுமா… பிறன்மனை நோக்காப் பேராண்மை ஏன் உனக்கு இல்லாமற் போயிற்று… உமக்கு நாங்கள் எப்போதுமே ஒரு போதைப் பொருள்தானா.. நாங்களும் மனிதப் பிறவிதானே… எமக்கும் வலி வேதனை எதிர்பார்ப்பு ஏமாற்றம் எல்லாம் உண்டென்பதை அறிய மாட்டாயா ஆண்மகனே…’ கனத்த மனத்தோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் நடந்து வந்து அலுவலகத்தை அடைந்தேன்.

 கணினியை உயிர்ப்பித்து பயோ மெட்ரிக் முறையில் கை விரலை அழுத்தி வருகையை பதிவு செய்து, கண்களை மூடி நீண்ட பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மல்லிகைப்பூ வாசனையுடன் மென்மையாய் என்னைத் தொட்டது ஒரு கரம். என் சிநேகிதி அனுபமா.

 “வணக்கம். என்னப்பா.. காலையிலேயே ஒரு மாதிரி இருக்கே.. ஒடம்பு சரியில்லயா..” என்றாள்.

 “அதெல்லாம் ஒண்ணுமில்ல அனு.. மனசுதான் கிடந்து துடிக்குது…” என்று வரும்வழியில் நடந்ததைச் சொன்னேன்.

 “இது என்ன புதுசாப்பா.. தினமும் எல்லா எடத்துலயும் நடக்கறதுதானே..”

 “அப்டியென்ன ஒரு பார்வை? ரோட்ல போற வர எல்லா பொம்பளைங்களையும் அசிங்கமா கமென்ட்ஸ் வேறே.. செ..“

 “சரி விடுப்பா… எல்லா ஆம்பளைங்களும் அப்டியில்ல…”

 “நிறைய பேர் இந்தமாதிரிதான் அனு.. ஏன்தான் இப்டி அலையறானுங்களோ..”

 “ஓக்கே.. உணர்ச்சி வசப்படாதே..” என்றவாறே என் தோள்பட்டையில் தெரிந்த நாயுடு ஹாலை ரவிக்கைக்குள்ளே தள்ளிவிட்டாள்.

 அப்பொழுது கையில் ஹெல்மெட்டுடன் நுழைந்த லாவண்யா. “ஹாய் ஹாய்.. குமார்னிங்..” என்றாள்.

 “பறக்கும் பாவை வந்தாச்சுப்பா..” என்றாள் அனுபமா. “நீ அவகூட வண்டியில போயிருக்கியா.. அறுவதுக்கு குறைஞ்சு ஓட்டத்தெரியாது அவளுக்கு..”

 “எதுலயும் ஒரு த்ரில் வேணும் அன்ஸ்..” என்றவாறே அருகில் வந்தாள்.

 “லாவண்யா.. ‘அனார்கலி‘ சுடிதார் நல்லாயிருக்குடா…” என்றேன்.

 “ந்யூ இயருக்கு ப்ரணவ் வாங்கி குடுத்தான் மேம்ஸ்..”

 “கலர் காம்பினேஷன் வித்யாசமா இருக்குடி..” என்றாள் அனுபமா.

 “காஸ்ட்லியா இருக்கும்னு நெனைக்கறேன்.. எவ்ளோடா…”

 “தெரியல மேம்ஸ்.. அவன் எனக்குன்னா வெலையே பாக்க மாட்டான்..” என்றாள் கணவனை. “என்ன அன்ஸ்.. நெக்லெஸ் புதுசா இருக்கு…”

 “ஆமான்டி.. ஒரு நகைச்சீட்டு முடிஞ்சுது.. அந்த பணத்துல இதுவும் அவருக்கு மோதிரமும் வாங்கினேன்..”

 “எவ்ளோ சவரன் அனு..”

 “மூணு பவுன்ப்பா… இந்த மாங்கா மாலை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை எனக்கு..”

 “குடை ஜிமிக்கியும் சூப்பரா இருக்கே அன்ஸ்…”

 “அது பழசுதான்டி..” என்றவள் என் புடவையைப் பார்த்து “பெங்கால் காட்டனாப்பா.. எலிகண்டா இருக்கு..” என்றாள்.

 “இல்ல அனு.. மால்குடி..”

 “நான் எப்பவும் ஸிந்தட்டிக் ஸாரிதான் வாங்குவேன்ப்பா.. ஸ்டார்ச் போட வேண்டாம்..”

 “மேம்ஸ்.. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு.. அவ்ளோ யூத்ஃபுல்லா இருக்கீங்க..”

 “ரெண்டு பொண்ணுக்கு அம்மான்னா யாராவது நம்புவாங்களாப்பா…”

 “ஆரம்பிச்சிட்டீங்களா.. இன்னிக்கி கோட்டாவா இது..” என்றேன். 

 அட்டென்டர் எஸ்தர் என்னிடம் வந்து “மேடம்.. மேனேஜர் உங்களை டிக்டேஸனுக்கு கூப்பிடறாரு…” என்றாள்.

 “மேம்ஸ்.. அப்டியே உள்ளே சொல்லிடுங்க… வத்ஸ், கல்ஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் லேட்டா வருவாங்களாம்..” என்றாள் லாவண்யா. அவள் குறிப்பிட்டது வத்ஸலா மற்றும் கலைச்செல்வியை. நான் எழுந்து பின்புறம் புடவைச் சுருக்கத்தை சரிசெய்தவாறே ஷார்ட்ஹேண்ட் நோட் பேனா சகிதம் அவரது கேபினுக்குள் நுழைந்தேன்.

 வழக்கம் போல, ஸர் ஐஸக் பிட்மன் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை என்னால். இருநுாறு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பிறந்து மறைந்த அவரது படத்தைக்கூட நான் பார்த்ததில்லை. இருப்பினும், நோட்ஸ் எடுக்கச் செல்லும் போதெல்லாம் சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்த அவர் ஞாபகம் ஏனோ எனக்குள் படர்ந்து விரியும்.

 பத்தாவது வகுப்பின் போது அப்பா என்னை ‘கலைமகள் வணிகவியல் கல்லுாரியில்’ சேர்த்து விட்டார். அதன் உரிமையாளர் சலபதி ஸார்தான் ஷார்ட்ஹேண்ட் மாஸ்டர். பென்சிலால் ஒரு வட்டம் வரையச் சொல்லி அதன் மீது செங்குத்தாக, கிடந்த வாக்கில், குறுக்காக இருபுறமும் என்று பல கோடுகள் போட்டு பின்னர் அவற்றை தனித்தனி வரிகளாகவும் வளைவுகளாகம் பிரித்து, சாதாரணமாக எழுதினால் ஓர் அர்த்தம், அழுத்தி எழுதினால் இன்னொரு பொருள் என்று விளக்கி dipthong, grammalogue போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். ஸ்டெனோகிராஃபர் எப்போதும் பென்சிலை மட்டுமின்றி ஆங்கில அறிவையும் கூர்மையாக வைத்திருக்க வேண்டுமென்றார்.

 தட்டச்சு பயிற்றுவித்த மார்க்கபந்து ஸாருக்கு ஐம்பது வயதிற்கும். அரதப்பழசான ரெமிங்டன் மெஷினில் டைப் செய்ய கற்றுக் கொடுத்தார். பல வாரங்களுக்குப் பிறகு, சொற்றொடர்கள் அடிக்க கோத்ரெஜ் டைப்ரைட்டருக்கு மாறினேன். pack my box with five dozen liquor jugs என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப டைப்படிக்கச் சொன்னதன் மர்மம் பின்னர்தான் தெரிந்தது. தேர்வில் ‘நிமிடத்திற்கு முப்பது வார்த்தைகள்’ என்ற ஆரம்ப இலக்கிலிருந்து படிப்படியாக உச்ச வேகத்தை எட்டினேன்.

 அவ்விரு ஆசான்களின் மோசமான மறுபக்கம் அவ்வப்போது வெளிப்பட்டதும் அவர்கள் மீதான மரியாதை நீர்க்கத் தொடங்கியது. டைப்பிங் ஸார் என் கைகளை தேவைக்கதிகமாகத் தொட்டுச் சொல்லிக் கொடுத்ததை நான் விரும்பவில்லை. ஒரு மழை நாளில் ஸ்டூலில் அமர்ந்து தனிமையில் டைப்படித்துக் கொண்டிருக்கையில் மார்க்கபந்து என் பின்னால் உரசியபடி குனிந்து இருபொருள்பட ஏதோ சொல்ல என் மதிப்பேணியில் அன்றே சரிந்து போனார்… ஷார்ட்ஹேண்ட் மாஸ்டர் அடிக்கடி ‘உன்னோட curves ரொம்ப அழகா இருக்கு’ என்று சைகையோடு சொன்னது சுருக்கெழுத்தின் வளைவுகளைத்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அதன் உட்பொருள் பிறகே தெரிய வந்தது. சலபதி தினமும் என்னுடைய நோட்டில் ஷார்ட்ஹேண்டிலேயே ஒரு வாக்கியத்தை எழுதிக் கையொப்பமிடுவார். நாளடைவில் அது ‘நான் உன்னை அடைய விரும்புகிறேன்’ என்று தெரிந்ததும் அவர் பற்றிய ஆதர்ச பிம்பமும் கலைந்து போயிற்று… இத்தகைய கசப்புகளும் இன்னபிற சம்பவங்களும் பதின்ம வயதிலேயே என் ஆழ்மனதில் தேங்கி ஆண்களின் மீதான வெறுப்பு விதைகளாக உருவெடுத்தன….

 “இன்ன தேதியிட்ட உங்கள் சுற்றறிக்கையின் படி…” என்று என் சிந்தனையைக் கலைத்தார் மேலாளர். தலைமை அலுவலகத்திற்கான ஆங்கிலக் கடிதத்தை அவர் வேகமாக சொல்லிக்கொண்டே போக நான் சுருக்கெழுத்தில் பதிய வைத்துக்கொண்டேன்.

 உணவு இடைவேளையில் வத்ஸலா ஸ்பெஷலாக கொண்டு வந்திருந்த ஒரு பதார்த்தத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டாள்.

 அனுபமா, “என்னடீ இது.. சக்கரபொங்கலா… ஒரே நெய்யா இருக்கே..” என்றாள்.

 “இதுக்கு பேரு அக்காரஅடிசில்… இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோங்க அனு…”

 “போறும்டி… ஏற்கெனவே ஷுகர் பார்டர்ல இருக்கு…”

  அடுத்து உள்ளங்கையை நீட்டினாள் லாவண்யா. “என்ன மருதாணி எல்லாம் போட்டுண்டு துாள் கிளப்பற… நன்னா பத்தியிருக்கே..” என்றாள் வத்ஸலா.

  “மெஹந்தியை ரசிச்சது போதும்… சீக்கிரம் அந்த ஐட்டத்தைப் போடு…” என்றவள் மூன்று முறை வாங்கி ருசித்து விட்டு “ஸூபர்.. வத்ஸ், இதோட ரெஸிபியை எனக்கு மெயில்ல அனுப்பு.. நாளைக்கே ப்ரணவை ட்ரை பண்ண சொல்றேன்..” என்றாள்.

 “அப்ப கூட, இவ பண்றேன்னு சொல்றாளா பாருப்பா..”

 “அன்ஸ்… அவன் குக்கிங்லயும் எக்ஸ்பர்ட் தெரியுமோ..” என்று சிரித்துக் கண்ணடித்தாள்.

 “மேம் உங்களுக்கு..” என்றவளிடம், “என்ன விசேஷம் வத்ஸலா..” என்றபடி டிபன் பாக்ஸ் மூடியைக் காண்பித்தேன்.

 “இன்னிக்கி கூடாரவல்லி…”

 “மார்கழி இருபத்தேழா…”

 “கரெக்டா சொல்றீங்களே மேம்…” என்று அகலக் கண்களால் வியந்தவள் நகர்ந்து சென்று எஸ்தரிடம் பாத்திரத்தோடு ஸ்பூனை நீட்டினாள்.

 “உங்க சாமி பிரசாதம்னா.. எனக்கு வேணாங்க..”

 “வீட்லே பண்ணதுதான்..” என்று சொல்லியும் அவள் மறுத்துவிட்டாள்.

 அருகிலிருந்த கலைச்செல்வி, “இன்னிக்கி என்ன பண்டிகைன்னு சொன்னே வச்சலா… ‘குலேபகாவலி’யா..” என்று கிண்டலடித்தாள். எப்பொழுதும் இருவருக்கும் ஏழாம் பொருத்தம்.

“அவளை வாயை மூடிண்டு இருக்க சொல்லுங்க மேம்..”

 “வாயை மூடிட்டு எப்டி சாப்டறது..”

 “டாம் அன்ட் ஜெரி சண்டை ஆரம்பிச்சாச்சுப்பா..”

 “மாமிக்கு மீன் குழம்பு வேணுமா கேளுடி..” என்று வத்ஸலாவை மீண்டும் சீண்டினாள்.

 “கல்ஸ்.. எதுக்கு அவளை டீஸ் பண்றே…”

 “இல்லடி.. கல்கட்டாலே ப்ராமின்ஸ்கூட மீன் சாப்டுவாங்க… அதான் கேட்டேன்..”

  நான் பேச்சை மாற்றும் விதமாக “பொங்கலுக்கு ஊருக்கு போலியா கலை..” என்றேன்.

 “போறேன் ஜி.. இன்னிக்கி காலையிலதான் தத்கல்ல டிக்கெட் எடுத்தேன்…”

 “சனிக்கிழமை லீவு போட்டா அஞ்சு நாள் நீ குடும்பத்தோட இருக்கலாம்…”

 “நானும் அந்த ஐடியாலதான் இருக்கேன் ஜி..”

 அடிக்கடி வத்ஸலாவை வம்புக்கு இழுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாலும், கலைச்செல்வி மீது எனக்கு தனிப்பட்ட அனுதாபம் உண்டு. அவளது சொந்த வாழ்க்கையின் சோகப் பக்கங்களை என்னுடன் தனிமையில் பகிர்ந்து கொண்டவள். தினமும் தன்னை நிர்வாணமாக நமஸ்கரிக்கச் சொல்லி ரசித்த கணவனின் குரூர புத்தியையும், ஆடைகளின்றி தன்னைப் படமெடுத்து அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியே மேன்மேலும் வரதட்சணை கேட்டு வருவதையும், குடும்ப மானத்துக்குப் பயந்து காவல் துறையை நாடாமல் மெளனமாக சகித்துக் கொண்டிருப்பதையும் அவள் சொல்லக் கேட்டு மனம் கனத்திருக்கிறது எனக்கு. தென்கோடி தமிழகத்திலிருந்து பதவி உயர்வு மாற்றலில் சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று வருபவள். மனஉளைச்சல்களால் உடைந்து போய் கோழைத்தனமான முடிவெதையும் நாடாமல் இறுதி வரை வாழ்க்கையைப் போராடிக் கழிப்பதென்று தீர்மானமாக வாழும் பெண்.

 ‘தாம்பரம் வரை செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி இரண்டாவது நடைமேடையில் இருந்து புறப்படும்’ என்று மொழிமாற்றம் செய்து ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரக் கடற்காற்று தலைமுடியைக் கலைத்தது. ஐந்தே கால் ‘யூனிட்டை’ பிடிக்க வேண்டி சற்று வேகமாக ரயில் நிலையப் படியேறும்போது எனக்கு மூச்சு வாங்கியது. சென்ற வருடம் கட்டி வளர்ந்ததால் கர்ப்பப்பையை எடுத்தாயிற்று. முன்னதாக இரண்டு பிரசவம், மூன்று கருத்தடைகள். ஹிஸ்ட்ரக்டமி ஆனதிலிருந்தே மூட்டுவலி பழகிப் போனாலும் இன்று ரொம்பவே அசதியாக இருந்தது.

 பெண்கள் பெட்டியில் வழக்கமான இடத்தில் உட்கார்ந்து இளைப்பாறினேன். கட்டுக்கட்டாக கரும்பும் மஞ்சள் கொத்தும் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, பூக்காரிகள் பெரிய மூக்குத்திகளுடன் சாமந்தியைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். ஜன்னலோர முதியவள் நெற்றி நிறைய திருநீறுடன் ‘கோளறு பதிகம்’ வாசித்துக் கொண்டிருக்க, ஒருத்தி கழுத்தில் அடையாள அட்டையுடன் மடிக்கணினியில் முகநுால் மேய்ந்து கொண்டிருந்தாள். அருகாமை பெண்ணின் கறுப்பு கோஷா உடைக்குள் மொபைலின் வெளிச்சம் மங்கலாய்த் தெரிந்தது. பின்னிருக்கையில் இரண்டு மடிசார் மாமிகளின் மெல்லிய உரையாடல் கேட்டது.

 “மாமனாருக்கு ஸ்பெஷலா தளிகை பண்ணனுமா.. என்ன சொல்றே?”

 “ஆமான்டி.. அரளி விதை அரைச்சு விட்டுக் கொழம்பு.. சயனைடு சாத்துமது.. பாதரச பச்சடி.. கள்ளிப்பால் கண்ணமது..”

 “என்ன விளையாடறயா?.. எல்லாம் வில்லங்கமான்னா இருக்கு..”

 “இது அத்தனையும் சாப்டாக்கூட அது மண்டையை போடாதுடி… எவ்ளோ வருஷம் என் உயிரை வாங்கிண்டு இருக்குமோ தெரியல கிழம்..”

 அப்பொழுது லெக்கின்சும் ஸ்லீவ்லெஸும் அணிந்து கையுயர்த்தி கம்பியைப் பிடித்தவண்ணம் வாசலருகில் நின்றிருந்த யுவதியை பிளாட்ஃபார இளைஞர்கள் ஆபாசமாய் பேசுவதறிந்து உள்ளே வந்தமரும்படி சைகை காட்டினேன். பெண் வழக்கறிஞர்கள் இருவர் கையில் கேஸ் கட்டுடன் ‘வெட்டிங்’ பற்றி அளவளாவி வந்தனர். நடுத்தர வயதினள் கோணல் வகிடும், அதீத கண்மையுமாய் மாத நாவலில் மூழ்கியிருக்க, கைதட்டி காசு கேட்கும் மூன்றாம் பாலினர் பயணிகளிடம் யாசித்துக் கொண்டிருந்தனர். கர்ப்பவதியான ஒரு சமணப் பெண் முக்காடுடன் வந்ததும் நகர்ந்து இடமளித்தேன். அவளது தலைமுடி பெண்ணினமே பொறாமைப்படும்படி நீளமாக அடர்த்தியாக இருந்தது. எதிரே வெள்ளையுடை கன்னியாஸ்திரி ‘கிண்டிலில்’ சேத்தன் பகத் படித்துக் கொண்டிருந்தாள்.

 நான் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி நாற்புறமும் பெண்களால் சூழப்பெற்ற பாதுகாப்பான தீவில் இருப்பதாய் உணர்ந்தேன். இந்த ரயில் பெட்டி போல இவ்வுலகமும் மகளிரால் மட்டுமே நிறைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற கற்பனையில் மகிழ்ந்தேன்…. பூ வாசனையும் வியர்வை நெடியும் விபூதியின் நறுமணமும் சென்ட் வாசமும் காற்றில் கலவையாக வந்தது போல மனதிற்குள் சிந்தனைகளும் கோர்வையற்று பின்னிப்பிணைந்தன… பெண்களுக்கு சமநீதி சமத்துவம் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே என்று தோன்றியது… புராண கால ஆதிசேடன் மேல் பரமன் படுத்திருக்க பார்யாள் அவர் காலை பிடித்து விடுவதில் தொடங்கிய பால் பேதம் இந்த ட்விட்டர் யுகம் வரை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.. இதிகாசத் தம்பதி இருவருமே பிரிந்திருந்த போதிலும் தீக்குளித்துத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் சீதைக்கு மட்டும் நேர்ந்ததேன்… ஆண் கடவுளர்கள் தன்னகத்தேயும் இருபுறமும் தேவியர்களை வைத்திருப்பது கண்களுக்குப் பழகிப்போயிற்று.. இருபது வரை ஒரு வீட்டிலும் பின்னர் இறப்பது வரை மறு வீட்டிலும் என்று இடம்பெயர வேண்டிய கட்டாயம் எங்கட்கு மட்டுமே.. கல்யாண அடையாளமாய்க் கயிற்றை சுமப்பதும் விதவையானதும் அதையே துறப்பதும் நாங்கள்தான்… மனைவியானவள் கணவனை விட ஓர் அங்குலமேனும் உயரங்குறைந்தவளாய் இருக்க வேண்டுமென்பது எந்தச் சட்டத்தின் எத்தனாவது விதி… பாலியல் தொழிலில் பெண்ணுக்கு மட்டுந்தான் அவப்பெயரும் சமூகக் கறையும்; அனுபவித்துச் செல்லும் ஆடவனுக்கு எதுவுமேயில்லை.. எந்தவொரு படிவத்திலும் ஆவணத்திலும் he/she என்று அவனுக்கே முதலிடம்.. அனைவருக்கும் பொதுவான ஆண்டவன் சந்நிதானத்தில்கூடப் பெண்பாலுக்கு அனுமதி மறுப்பு..

 வீட்டிற்குள் நுழைந்து டப்பர்வேர் டிபன் பெட்டிகளைத் தேய்க்கப் போடும்போது அலுமினியத் தொட்டி நிறைய சமையல் பாத்திரங்கள் என்னை வரவேற்றன. வேலைக்காரி வரவில்லை போலும். எனக்குக் களைப்பாக இருக்கும் நாட்களில்தான் அவளும் விடுப்பு எடுப்பதாகத் தோன்றியது. புடவையைக் களைந்து உள்ளாடைகளைத் தளர்த்தி விட்டுக்கொண்டு நைட்டிக்கு மாறினேன். துணிகளைப் போட்டு வாஷிங் மெஷினை ஆன் செய்கையில் அதுவும் இயங்கவில்லை. ‘துரதிர்ஷ்டம் எப்போதும் தனியாக வராது’ என்ற ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வந்தது. அத்யாவசியமான உடைகளை கையால் துவைக்க எடுத்தபோது என் இளைய மகளின் பள்ளிச்சீருடையில் உதிரத்திட்டுக்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாய் இருந்தது. நாப்கினை சரியாக வைத்துக்கொள்ள இன்னும் பழகவில்லை. சமீபத்தில் பருவமடைந்த அவளுக்கு இது மூன்றாவது விலக்கு. ‘சைக்கிள்’ சரிதானா என்று மனசு கணக்கு போட்டது. இந்த அவஸ்தையோடு ஏன் நடனப்பயிற்சிக்கு சென்றாள் என்று யோசித்தபடியே துணிகளைப் பிழியும்போது மணிக்கட்டு வலித்தது. பொறுத்துக்கொண்டு அவற்றைக் காயப்போட்டு இரவுணவுக்காக உருளைக்கிழங்கை வேகவைத்து விட்டு கோதுமை மாவை பிசையும்போது செல்போன் ஒலித்தது. கார் ஓட்டச் சென்றுள்ள மூத்தவள் அழைத்தாள்.

 “சொல்லுடா..”

 “மம்மி.. நாளையிலிருந்து ட்ரைவிங் க்ளாஸ் போமாட்டேன்..”

 “ஏன்டா.. நீதானே ஆசைப்பட்டு சேர்ந்தே… என்னாச்சு…”

 “ட்ரைவிங் மாஸ்டர் சுத்த மோசம் மம்மி… நான் கார் ஓட்டிட்டு இருக்கும்போது என் எடது தொடையிலேயே கையை வெச்சிட்டிருக்காரு…”

 “ஒரு பொண்ணுதானே சொல்லிக் குடுக்கறான்னு சொன்னே.. ‘லேடீஸ் டீச் லேடீஸ்’ ட்ரைவிங் ஸ்கூல்தானே..”

 “அந்த மேம் மூணு நாள் வரமாட்டாங்களாம்.. இன்னொரு ஸார் வந்தாரு இன்னிக்கி… என் தொடையை தடவிட்டே இருக்காரு மம்மி.. எனக்கு பிடிக்கவேயில்லை..”

 “அவன் கைமேலேயே ரெண்டு அடி போட வேண்டியதானே…”

 “ஸ்டியரிங்லேந்து கையை எடுக்க பயமா இருக்கு மம்மி..”

 “நிறைய ஆம்பிளைங்க இப்டிதான். வெறி பிடிச்ச நாய்ங்க.. நீயும் நாலு நாள் கழிச்சு க்ளாஸுக்கு போடா…”

 அனுதினமும் ஆண்மைத் தாக்குதல்களை எதிர்கொள்வதிலேயே எமது வாழ்க்கையின் பெரும்பகுதி கரைந்து போகிறது என்று ‘ஃபெமினா’ வில் படித்த கட்டுரை நினைவுக்கு வந்தது. பலாத்கார வன்கொடுமைகள் பற்றி உளவியல் ரீதியாக விளக்கியிருந்தாலும் அவற்றிற்குத் தீர்வு சொல்லாமல் அவசரகதியில் முடித்திருந்தாள் அதன் ஆசிரியை. எனக்கென்னமோ அத்தகைய வக்ரபுத்தி ஆண்களை bobbitize செய்துவிட வேண்டுமென்று தோன்றும். அதன் பின்னரும் அவன் கண்களாலும் மற்ற அவயங்களாலும் மனத்தாலும் பெண்மையைக் களங்கப்படுத்தக் கூடும். எனவே குற்றம் நிரூபணமானவுடன் உயிரைப் பறிப்பதே குறைந்தபட்சத் தண்டனையாக இருக்கும்.. அரசர்களை அடியோடு கொன்று குவிப்பது பரசுராமனின் அவதார நோக்கமாக இருந்தது போல், ஆண் வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதே என் பிறவிப்பயன் என்று ஆழ்மனதில் விபரீத எண்ணம் அடிக்கடி தோன்றி மின்னலாய் மறையும். அது சற்றே மிகையெனப்படுமாதலால் வாழ்நாளில் ஒரு மனிதமிருகத்தையாவது பலியிட வேண்டுமென்ற தீர்மானத்துக்கு வருவேன்… மீண்டும் அந்த சஞ்சிகையை எடுத்து வாசித்தபடியே கண்ணயர்ந்தேன்…

  இரவு வெகு நேரங்கழித்து இரு மகள்களும் தத்தமது அறையில் உறங்கிய பிறகு தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்தார் என் கணவர்.

 “ஹேப்பி ந்யூஸ் டியர்.. எனக்கு ‘ஜிஎம்’ ப்ரமோஷன் கன்ஃபர்மாயிடுச்சு…” என்றார் அதிஉற்சாகமாக, கழுத்து டையை தளர்த்தியவாறே.

 “கங்க்ராட்ஸ்” என்று ஆத்மார்த்தமாக் கை குலுக்கினேன்.

 “லேட்டாதான் ஃபேக்ஸ் வந்தது… கடைசி வரைக்கும் டென்ஷன்.. ஷார்ட் லிஸ்ட் பண்ணதுல எம்பேரும் அந்த கேரளாகாரிபேரும் பாக்கி இருந்தது.. ஸிஈஓ அவளைதான் எலிவேட் பண்ணுவான்னு நெனைச்சேன்.. நல்ல வேளை.. அழகுக்கு கிடைக்கலை.. அறிவுக்குதான் கிடைச்சுது ப்ரமோஷன்.”

  “அப்டி சொல்லாதீங்க.. அவளுக்கும் திறமை இருக்கறதாலதான் இந்த லெவலுக்கு வந்திருக்கா…”

  “ஆஹா.. எக்ஸிக்யூடிவ்ஸை மயக்கற திறமை நிறையவே இருக்கு…” என்றார் நக்கலாக. பெண்களுக்குத் தரப்படும் பதவி உயர்வுகள் தகுதிக்காக இல்லை என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு இவரும் விலக்கல்ல.

  “ஒரு பொண்ணு உங்களைத் தாண்டி மேலே போறதை ஏத்துக்க முடியலே.. அதான் இப்டி கொச்சைப்படுத்தறீங்க..”

  “யம்மா.. தாயே.. உங்க எல்லாருக்கும் உடம்பு பூரா மூளைதான்… ஒத்துக்கறேன்..”

  “எங்களுக்கும் தகுதி இருக்கறதாலதான் எல்லா எடத்துலயும் பிரகாசிக்கிறோம்.. உங்களால முடியாத சிகரங்களை நாங்க தொட்டிருக்கோம்..” என்றேன் பெருமிதத்துடன்.

  “ஆமா.. ஆமா.. நாங்க மேலிடத்துக்கு ஜால்ரா அடிச்சுதான் எல்லா ப்ரமோஷனும் வாங்கறோம்.. போறுமா..” என்று போலியாகக் கும்பிட்டார்.

  “ஆபீஸ்லயே ஒரு லேடிக்கு கீழே வேலை பண்ண முடியலே உங்களாலே… அப்பறம் எப்படி நாட்டுலே ஒரு பொண்ணு தலைமை பீடத்துக்கு வர்றதை ஏத்துக்க முடியும்..”

  “இப்போ பாலிடிக்ஸ் ரொம்ப அவசியமா…” என்றவாறே லுங்கிக்கு மாறினார் “இந்த ந்யூஸ் வந்ததிலிருந்தே ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்..”

  “சரி.. சாப்பிட வாங்க.. சுக்கா ரோட்டியும் ஸப்ஜியும் ரெடியாயிருக்கு..”

  “இல்லப்பா.. ஆபீஸ்ல ஹெவியா ட்ரீட்.. பர்கர் கோக் பீட்ஸா எல்லாம் நிறைய தின்னாச்சு.. வயத்து பசியில்ல..” என்று கண்ணடித்தவாறே என்னை நெருங்கினார்.

  அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டவளாய், “ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னிக்கி வேண்டாமே…” என்றேன்.

  “செலிப்ரேஷன் மூட்ல இருக்கேன் டியர்…”

  “நிறைய வேலை செஞ்சு உடம்பெல்லாம் வலிக்…” என்ற என்னைப் பேச விடாமல் “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்றவாறே இறுக்கி அணைத்தார். என் விருப்பமின்மையையும் மீறி படுக்கையில் வீழ்த்தி என் மேல் படையெடுத்தார். அவருடைய மகிழ்ச்சியான தருணத்தை மறுக்க முடியாமல் வலிகளினுாடே அவரையும் தாங்கிக் கொண்டேன்.

  பிப்ரவரி பதினான்காம் நாள் எஸ்தர் அலுவலகத்தில் இனிப்பும் காரமும் விநியோகித்து “புதுசா வந்திருக்கிற மேனேஜர் ஜாயினிங் பார்ட்டி குடுக்கறார் மேடம்..” என்றாள்.

 அனுபமா மெல்லிய குரலில் “இந்தாளு விடோயராம்ப்பா… சரியான வழிசல் பேர்வழியாம்..” என்றாள்.

  லாவண்யா “நமக்கு வசதிதான் அன்ஸ்… இந்த மாதிரி ஜொள்ஸ்ங்ககிட்ட நிறைய காரியம் சாதிச்சுக்கலாம்..” என்றாள்.

 “ஏன்டி உனக்கு இப்டியெல்லாம் புத்தி போவுது?”

 “இவர் மேல ஒரு கேஸ் இப்பதான் நடந்து முடிஞ்சுது…” என்றேன். “கல்யாண வயசுல பொண்ணு இருக்காம் இவருக்கு..” 

 “புது மேனேஜர் ரொம்ப நல்லவரா இருக்கார் மேம்…” வத்ஸலா கேபினிலிருந்து வெளியே வந்ததும் சொன்னாள்.

 “எப்டி சொல்றே வத்ஸ்.. ”

 “ஒரு ஸ்டேட்மென்ட்ல நிறைய தப்பாயிடுத்து… திட்டுவாரோன்னு பயந்துண்டே போனேன்… ஒண்ணுமே சொல்லலடி… ‘கரெக்ஷன் ஃப்ளூயிட்‘ குடுத்து மாத்த சொன்னார்… அவர் எதிரேயே நின்னுண்டு எல்லாத்தையும் சரி பண்ணி குடுத்தேன்… ‘இந்த மாதிரி ஃபிகர்ஸ் கரெக்ட் பண்ற வேலை எனக்கும் பிடிக்கும்‘னார்… ‘ஸாரி ஸார், அவசரத்துலே இப்பிடி ஆயிடுத்துன்னேன்… ‘பரவாயில்ல இதை நீயே வெச்சுக்க… என்கிட்ட ‘வொய்ட்னர்‘ நிறைய ஸ்டாக் இருக்கு’ன்னார்…”

 அனுபமா “அப்பாவியா இருக்கியே… இவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு..” என்றாள்.

  “அவர் சொன்னதோட இன்னொரு மீனிங் ஒனக்கு புரியல வத்ஸலா..” என்றேன்.

  லாவண்யா யோசித்து “வாவ்… ப்ளேபாய் டைப்பா இந்தாளு… ஸுபர்…” என்றதற்கு “என்ன ஸூபர்… அவர் பேசினதை கேட்டுட்டு இவளும் சும்மா வந்திருக்கா.. நானா இருந்தா நடக்கறதே வேறே…” என்றேன்.

  எஸ்தர் “ஸ்வீட் காரம் வாங்க பணம் குடுக்கும் போது என் கையைத் தொட்டுத் தொட்டு குடுத்தார் மேடம்… பார்வையே சரியில்ல..” என்றாள்.

  வந்த அன்றே சுயரூபத்தைக் காட்டிய புது மேலாளரை விவாதித்துக்கொண்டிருக்கையில் கலைச்செல்வியும் சேர்ந்து கொண்டு பேச்சைத் திசைமாற்றினாள்.

 “இந்த ‘விமன்ஸ் டே’க்கு எல்லாரும் ஒரே கலர்ல புடவை கட்டலாமா அனுா..”

 “நல்ல ஐடியா.. போன வருஷமே நெனைச்சேன்…” என்று நான் வழிமொழிய மற்றவர்களும் ஆமோதித்தனர்.

 “ஸாரிக்கு பதிலா எல்லாரும் சல்வார் போட்டு வந்தா என்ன கல்ஸ்?”

 “வருஷத்துல ஒருநாள் இந்த சாக்குலயாவது புடவை கட்டேன்டி..”

 “எல்லார் கிட்டயும் பொதுவா இருக்கற கலர்ல வரலாம்.. நீலம் ஓக்கேயா..?” என்றேன் என்னிடமுள்ள எம்மெஸ் ப்ளூவை மனதிற்கொண்டு.

 ஒவ்வொருவரும் காப்பர் ஸல்ஃபேட், ஆகாச நிறம், ராமர் கலர், கோபால்ட், மயில் கழுத்து என்று நீலத்தின் வெவ்வேறு சாயல்களில் தத்தமது சேலைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தனர்.

 “இதெல்லாம் சரிப்படாதுப்பா.. புதுசா ஒரே மாதிரி எல்லாரும் வாங்கிப்போம்..” என்றேன்.

 “கரெக்ட் ஜி.. அதான் பார்வைக்கும் நல்லா இருக்கும்..” என்றாள் கலைச்செல்வி.

 “எல்லார் கிட்டயும் பணம் வசூல் பண்றது வத்ஸலா உன் பொறுப்பு… நானும் லாவண்யாவும் வண்டியில போய் ஸாரீஸ் வாங்கிட்டு வரோம்.. எஸ்தர், அன்னிக்கி ஸ்வீட்-ஸ்நாக்ஸ் வாங்கிவர வேண்டியது உங்க வேலை..” என்றாள் அனுபமா.

  நான் “என் டெய்லர் ஃபிட்டிங்ஸ் எல்லாம் கரெக்டா தைப்பான்.. அதை விட முக்யமா, சொன்ன தேதியில குடுப்பான்.. அளவு ரவிக்கையை குடுங்க, எல்லாருக்கும் ப்ளவுஸ் தெச்சிட்டு வரேன்..” என்றேன்.

  கலைச்செல்வி, “எனக்கு எந்த வேலையும் இல்லயா ஜி” என்றதற்கு “நீ வத்ஸலாவை சீண்டாம இருந்தா.. அதுவே போதும்…” என்றேன்.

 மூன்று வாரங்கள் கழித்து ஒரு நாள் அனுபமா மேனேஜர் கேபினிலிருந்து நேரே என்னிடம் வந்து ”என்னப்பா இது அக்கிரமமா இருக்கு.. இந்தாளு ஆபீஸ் கம்ப்யூட்டர்ல..” குரலைத் தாழ்த்தி “போர்னோ பார்த்துட்டு இருக்கார்ப்பா.. செ.. அசிங்கம்..” என்றாள் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டே.

  அதைக் கேட்ட எனக்கும் அதிர்ச்சியாயிருந்தது. “நீ எதுக்கு உள்ளே போனே அனு?”

  “ஒரு செக்ல கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது… “

  “அப்டியே மொபைல்ல அவனையும் மானிட்டரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்திருக்க வேண்டியதானே… ராஸ்கல்..”

  “என் கையில செல் இல்ல… இருந்தாலும் எனக்கு அதெல்லாம் தோணாதுப்பா..”

  “நாம ஹெட் ஆபீஸ்க்கு கம்ப்ளெய்ன்ட் பண்றதுக்கு வசதியா இருக்கும்.. இவனுக்கும் ஒரு பயம் இருக்கும்..”

  “நான் உள்ளே போனதுக்கப்பறமும் அதை அணைக்காம என்னை பார்த்து ஒரு மாதிரி சிரிச்சுட்டே ஸைன் பண்றார்ப்பா..”

  “இந்தாளோட லீலைகள் நாளுக்கு நாள் அதிகமாயிட்டேயிருக்கு.. லாவண்யாகிட்ட அன்னிக்கி ‘டேட்டிங்’ போலாமான்னு கேட்டுட்டு ‘சும்மா வெளையாட்டுக்கு’ன்னு சொல்லி வழிஞ்சான்… முந்தாநாள் கலைகிட்ட ஏதோ வில்லங்கமா பேசி வாங்கி கட்டிட்டான்..”

  “செக்ஷுவல் ஹராஸ்மென்ட் ஆக்ட்ன்னு ஒண்ணு இருக்கே… அதும்படி நாம கம்ப்ளெய்ன்ட் குடுக்கலாமாப்பா..”

  “அதுக்கு இன்டர்நல் கமிட்டி, லோக்கல் கமிட்டின்னெல்லாம் இருக்கு அனு.. விசாரிச்சு தீர்ப்பு குடுக்கறதுக்கு மாசக்கணக்காகும்… ஏதாவது ஓட்டையில சுலபமா தப்பிச்சுடுவான்… இவனை கையும் களவுமா சாட்சியோட பிடிக்கணும்…” என் உள்மனது ‘எதாவது பண்ணு.. உடனே செயல்படு..’ என்று விரட்டியது. கைகள் பரபரத்தன. அன்று பிற்பகலே உள்ளே செல்வதற்கு வாய்ப்பாக எஸ்தர் வந்து மேனேஜர் அழைப்பதாக சொன்னவுடன் ஆக்ரோஷம் குறையாமல் சென்றேன்.

  அறையினுள் நிக்கோடின் நெடி பரவியிருக்க ஆஷ்ட்ரேயில் தீப்புள்ளி தெரிந்தது. ஏதோவொரு கடிதத்தை டிக்டேட் செய்துவிட்டு என்னைப் பெயர் சொல்லி அழைத்து, “இந்த பென் ட்ரைவ்ல இருக்கறதை ப்ரின்ட் எடுங்க… லெட்டரோட அனுப்பணும்…” என்று தொடுவது போல என்னிடம் நீட்டினான். நான் கவனமாக வாங்கிக்கொண்டு அங்கிருந்த கம்ப்யூட்டர் ‘ஸிபியூ‘வின் முன்பக்கம் அதை இணைக்க நான் குனிந்தபோது “அந்த போர்ட் சரியில்ல….” என்று சொல்லி, தானே பின்புறம் அதைப் பொருத்தி அச்செயலை இரட்டை அர்த்தத்தில் வர்ணித்தபோது அவனது விகார மனம் வெளிப்பட்டது. எனக்கு உடம்பெல்லாம் உஷ்ணமாய்த் தகித்தது. கணினி திரையில் கடவுச்சொல் கேட்க, “இதுக்கென்ன பாஸ்வேர்ட்” என்றேன். நமட்டுச்சிரிப்புடன் “கிஸ்மீ” என்றான். “என்ன சொல்றீங்க…” என்று வெகுண்டேன். “பாஸ்வேர்டே அதான்… ‘கிஸ்மீ‘ கே கேப்பிட்டல்..” என்றதும் என் ரத்தக்கொதிப்பு அதிகமாகி கைகள் நடுங்குவதை உணர முடிந்தது.

  இம்மனித மிருகத்தின் செயல்பாடுகள் எல்லை மீறிக்கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது. புகார் செய்து சட்டப்படி தண்டனை வரும்வரை காத்திருக்க எனக்கு பொறுமையில்லை. பல்லாண்டுகளாக என்னுள் படிந்திருந்த ஆண்வர்க்கத்தின் மீதான வெறுப்புக்கோபங்கள் அவனை பலி கொடுக்கச் சொல்லி உரத்தக் கூவின. வெளியே வந்து என்னிருக்கையில் அமர்ந்து ஷார்ட்ஹேண்ட் நோட்டில் kill him kill him என்று சுருக்கெழுத்தில் பக்கம் முழுவதும் அனிச்சையாய் பதிவு செய்து கொண்டிருந்தேன்.

 மனதிற்குள் ஒரு செயல் திட்டம் உருவாகிக்கொண்டிருந்தது. மாலை எல்லோரும் சென்றபிறகு CCTV இணைப்பையும் அபாய ஒலிப்பானையும் துண்டித்த பின்னர் அவனை தேன்பொறியில் சிக்கவைத்து மெய்மறந்த தருணத்தில் உயிரைப் பறிக்க வேண்டும். இதில் என் பங்கு யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தேன்… ஜெனரேடருக்கு பயன்படும் டீசல் கண்ணில் பட்டது. கேன்டீனிலிருந்து மைக்ரோவேவ் ஓவன் கையுறைகளையும், கத்தியையும் எடுத்து வந்தேன்… எரிதிரவத்தை ஊற்றி சிகரெட் லைட்டரால் தீப்பற்ற வைப்பதா, கத்தியால் மார்பில் குத்திக் கொல்வதா, சுழலும் நாற்காலியில் முதுகுக்கு பயன்படும் தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சிழக்க வைப்பதா என்று நான் குழம்பிக் கொண்டிருக்கும் போது அவன் ப்ரீஃப் கேஸோடு வேகமாக வெளியேறினான். வழக்கம்போல பிராந்திய மேலாளரின் அவசர அழைப்பால் சென்றிருக்கக் கூடும். என் திட்டத்தை மறுநாள் செயல்படுத்த ஏதுவாக இந்த வெறியையும் ஆவேசத்தையும் மனதில் தக்க வைத்துக் கொண்டேன்…

 அடுத்த நாள் சர்வதேச மகளிர் தினத்தன்று கருநீல புதுப் புடவையை ஃபால்ஸ் தைக்க நேரமின்றி நான் அப்படியே உடுத்திக் கொள்ள, ஃப்ளீட்ஸ் சரியாக அமையவில்லை. அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எல்லோரும் ஒரே மாதிரி புடவையில் ஆங்காங்கே குழுக்களாக பேசிக் கொண்டிருந்ததில் ஏதோ விபரீதம் தெரிந்தது. மேனேஜர் ஸ்கூட்டரில்அலுவலகம் வரும் வழியில் ஜெமினி அருகே சாலை விபத்தில் பலமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். இறைவனே அவனுக்கு இயற்கையாய் தண்டனையளித்து விட்டது போல் உணர்ந்தேன். நிலைமை கவலைக்கிடமாக இருப்பதையறிந்து நானும் அனுபமாவும் உடனே ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம்.

  Trauma care வார்டின் மூடிய அறையில் அவர் தலையில் கட்டுடன் மயக்க நிலையில் இளம்பச்சை போர்வையில் படுத்திருந்தார். பிராண வாயு செலுத்தப்படுவதும், ‘ட்ரிப்ஸ்’ ஏறிக்கொண்டிருப்பதும் டாக்டர்கள் கூடிப் பேசுவதும் கதவின் சதுரக் கண்ணாடியில் தெரிந்தது. உறவினர்கள் வாசலில் கவலையோடு காத்திருக்க, விபத்து பற்றிக் கேட்டறிந்தேன். ஒரு எதிர்பாராத திருப்பத்தில் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோத, தலைக்கவசம் அணியாத அவர் நிலை தடுமாறி விழந்து தலையிலும் கைகளிலும் பலத்த அடிபட்டு இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் வசமிருந்த மருத்துவமனை கோப்பில் MLC என்று எழுதி அதை அடித்துவிட்டு முதலுதவி கொடுத்த விவரங்களும் ‘தீவிர தலைக்காயம்’ பற்றிய நுணுக்கமான மருத்துவப் பிரயோகங்களும் ரத்த இழப்பை ஈடுசெய்வது பற்றியும் அடுத்தக்கட்ட சிகிச்சைகளுக்கான குறிப்புகளும் காணப்பட்டன. ‘சிடி ஸ்கேன்’ ரிப்போர்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

  வாய்விட்டு அழுதபடி நின்றிருந்த அவரது பெண்ணிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆறுதல் சொன்னேன். “ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் எதாவது தேவைன்னா தயங்காம கேளு..” என்றாள் அனு. தாயில்லாத அப்பெண்ணைப் பார்த்து என் மனம் கரைந்தது. மேனேஜர் மீதான நேற்றைய கொலை வெறி சிறிது சிறிதாக தணியத் தொடங்கியது.

  அருகிலிருந்த பெண்மணி “இவளுக்கு இப்பதான் கல்யாணம் நிச்சயமாயிருக்கும்மா… இந்த சமயத்துல இப்படியொரு அசம்பாவிதம் ஆயிடிச்சே…” என்று கண்ணீருடன் என் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

  “கவலைப்படாதீங்க.. அவருக்கு சரியாயிடும்.. சீக்கிரம் குணமாயிடுவாரு..”

  அறையிலிருந்து வெளிப்பட்ட டாக்டர் நர்ஸிடம் “ப்ளட் ட்ராஸ்ஃப்யூஷனுக்கு ரெடி பண்ண சொன்னேனே..” என்றார் சலிப்புடன்.

  “நம்ம கிட்ட அந்த ரேர் க்ரூப் இல்ல டாக்டர்… எல்லா ப்ளட் பேங்க்லயும் கேட்டு பார்த்துட்டோம்.. கிடைக்கலை..”

  “ரெட் க்ராஸ்ல ட்ரை பண்ணீங்களா…”

  “அங்கயும் இப்ப ஸ்டாக் இல்லயாம் டாக்டர்..”

  “நம்ம டேட்டா பேஸை பார்த்து வாட்ஸப்புல மெஸேஜ் பண்ணுங்க.. யாராவது டோனர் கிடைக்கறாங்களா பாருங்க… சீக்கிரம்..” என்று நர்ஸை விரட்டியவர் உறவினர்கள் பக்கம் திரும்பி “தலையில பலமா அடிபட்டதுல ரத்த சேதம் அதிகமா இருக்கு.. அதை சரிபண்ணிட்டுதான் மேற்கொண்டு சிகிச்சை குடுக்க முடியும்…” என்று சொல்லி நகர்ந்தார்.

  “அவரோடது என்ன க்ரூப்.. பாம்பே ப்ளட் டைப்பா…” என்றேன் நர்ஸிடம்.

  “இல்ல மேடம்… ஏபி நெகடிவ்..”

  “வேற யாரோட ரத்தமும் அவருக்கு ஒத்துக்காதாம்மா..” என்றார் உறவினர் கவலையுடன்.

  “எல்லா நெகடிவ் ரக ரத்தமும் சேரும்… அதுவுமே கிடைக்கறது ரொம்ப கஷ்டம் சார்…”

  “உடனே ரத்தம் குடுக்கலேன்னா உயிருக்கு ஆபத்தா சிஸ்டர்…” என்று அவரது பெண் அழுகையினுாடே கேட்டாள்.

  நர்ஸ் அவளை நேராகப் பார்க்காமல், “ஏறக்குறைய அப்டிதான்..” என்று சொல்ல, அவளது துக்கம் அதிகரித்தது கண்களில் பிரதிபலித்தது.

  ஏற்கெனவே அம்மாவை இழந்து தவிக்கும் அவளுக்கு அப்பாவும் இல்லையென்ற நிலை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் என்னுள் மேலோங்கியது. அவர் மீதான ஆவேசமும் ஆக்ரோஷமும் படிப்படியாக் குறைந்து, என் மூர்க்க குணம் மாறி, மனமிளகியது. ஆண் வர்க்கம் எமக்கெதிராக எத்துணை வன்முறைகளைப் பிரயோகித்தாலும், எம்மினத்தை எவ்வளவு கொச்சைப்படுத்தி, அடக்கி ஆக்ரமித்தாலும் யாம் அவையனைத்தையும் மறந்து மன்னித்து அவர்கட்கு நல்லதையே செய்வோம். அது எங்கள் ஈர மனம். ‘இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யும்’ உயரிய குணம் படைத்தவள் பெண் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாய் உணர்ந்தேன். அவ்விளம் பெண்ணின் எதிர்காலம் கருதி முடிவெடுத்தேன்.

  செவிலியரிடம் நானே வலியச்சென்று, “சிஸ்டர்.. நான் ரத்தம் குடுக்கறேன்… என்னோடதும் ஏபி நெகடிவ் க்ரூப் தான்.. எடுத்துக்குங்க..” என்றேன்.

Posted on 1 Comment

போஜராஜனின் சம்பு ராமாயணம் – பெங்களூரு ஸ்ரீகாந்த்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச்சென்றார். அதற்குப் பின்னர் பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தைப் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது.

பொதுவாக உரைநடையிலோ (கத்யம்), கவிதை வடிவிலோ (பத்யம்) தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில், போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா ||
(பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும் வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்ததுதான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப்பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அதனை நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ ||
(பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்ந்தாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகைப் பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி ||
(பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.

குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது.

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ ||

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்குக் காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம்தான் என்கிறது இந்த ஆயுர்வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்குக் கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில்தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா ||
(பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கி விட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக்கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்றும் அழகாக உருவகப்படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ ||
(பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகிவிட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்தச் சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.

ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்க்கண்டவாறு பேசுகிறான்.

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: ||
(அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டிவிட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு. என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு. இப்படியாக எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை:

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப்படுகிறது.

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் ||
(ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்தக் கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே ||
(ஆரண்யகாண்டம் – 28)

‘பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி, அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாகப் படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது!’ என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமணர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு, அண்ணனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: ||

(கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், ‘பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான்தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்துத் திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப்படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல்’ என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும்போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப்படுகிறது. ராமனுக்குத் தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனைச் சந்தித்து சீதையைச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாகப் பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனையுடனிருந்த ராமலட்சுமணர்கள் மத்தியில் கரைபுரண்டோடிய அவர்களது ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கிவிட்டார்! அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்துப் பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன், பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டம்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: ||
(யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவரை வணங்கி போஜன் தன் எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப்பட்ட சம்பு ராமாயணத்தைப் பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப்படுகிறதுதானே என்று அடக்கத்துடன் கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்குச் சற்றும் குறைவில்லாதவைதான்.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியைக் கற்க விரும்புவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் சம்பு ராமாயணம் அள்ள அள்ளக் குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

Posted on 1 Comment

பிக் பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை – ஹரன் பிரசன்னா

ஹிந்தியில் மிகப் பிரபலமான பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி ஸ்டார்விஜய் தொலைக்காட்சி மூலம் கமல்ஹாசனின் ஆதரவுடன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது. அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் இருப்பதே நாகரிகம். ஆனால் அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஓர் ஆர்வம் எப்போதும் நமக்குள் இருக்கிறது. ஒருவர் இன்னொருவரைப் பற்றி என்ன நினைக்கிறார், என்ன பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளும் குறுகுறுப்பு மோசமானது என்றாலும் மிக இயல்பானது. இத்தகைய வம்பு புரளிகளில் இருந்து ஒதுங்கி நிற்க நினைப்பதுவே வளர்ச்சி. நமக்குள் இருக்கும் இந்தக் குறுகுறுப்பை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சியே பிக்பாஸ்.

வட இந்தியாவில் ஹிந்தியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பட்டபோது நட்சத்திர அந்தஸ்தில் இருந்த சல்மான்கான், அமிதாப் போன்ற பெரிய நடிகர்கள் பங்கேற்றார்கள். தமிழில் இதற்கு ஏற்ற நபர் கமல்ஹாசன் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்து அவரை ஒப்புக்கொள்ளச் செய்வதில் வெற்றியும் பெற்றிருக்கிறது ஸ்டார்விஜய் தொலைக்காட்சி. கமல் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டதன் மூலம் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கூடும். எப்போதும் முதலித்தில் இருக்கும் சன் தொலைக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வரவும் கூடும். பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேரும். இதெல்லாம் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியின் வெற்றி என்று வைத்துக்கொண்டால், இதற்கு இணையான அளவுக்கு கமல்ஹாசனின் வீழ்ச்சி இருக்கும். கமல்ஹாசனுக்குப் பணம் கிடைக்கும் என்பதோடு, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் வரை கமல்ஹாசன் தொடர்ந்து விவாதத்தில் இருப்பார் என்பதெல்லாம் உண்மையே. ஆனால் நட்சத்திர அந்தஸ்து உள்ள கமல்ஹாசன் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், முன்பு இருந்த அதே பார்வையில் மக்களால் பார்க்கப்படமாட்டார். வட இந்தியாவில் அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்ற நடிகர்களுக்கு இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை என்று இதற்கு பதிலாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மாறி நிகழும் என்றே நான் நினைக்கிறேன். தொலைக்காட்சிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு நடிகர் வருவது அவரது வீழ்ச்சி என்றே இங்கே பொருள்கொள்ளப்படுகிறது. இது உண்மையல்ல என்பதெல்லாம் விவாதத்துக்குரியது என்பதுதான் என்றாலும், இதுதான் இன்றைய நிலையில் யதார்த்தமாக உள்ளது.

 இந்நிகழ்ச்சியின் அடிப்படை, அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் துடிக்கும் மனப்பான்மைதான். அதிலும் அடுத்த வீடு ஒரு நடிகையின் வீடென்றால் நமது முழுக்கவனமும் அந்த வீட்டின் மேல்தான் இருக்கும். ஒரு நடிகையின் கதை என்ற ஒரு தொடர் வந்தபோது தமிழகமே அந்த நடிகையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி விவாதித்தது. அந்த நடிகை யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு நடிகையைச் சொன்னார்கள். இன்னொருவரின் அந்தரங்கம் நமக்கெதற்கு என்ற வெட்கம் கிஞ்சித்தும் யாருக்கும் இல்லை. நடிகை என்றாலே ஒரு பொதுப்பொருள் என்கிற மனப்பான்மையே இதில் ஆதாரமாக வெளிப்படுகிறது. தன் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்பதை அடிக்கடி ஜபிக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டிருப்பதுதான் சுவாரஸ்யமான முரண். இதனாலேயே இந்த நிகழ்ச்சி தொடர்பாகப் பல்வேறு சாதகமான கருத்துக்களைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரும் சளைக்காமல் புதியதாக எதோ ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கமல் சொல்லும் முக்கியக் காரணம், இந்நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் அத்தனை பேரும் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது. அதாவது அவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கிறோம் என்று சொல்கிறார். மிக சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கமல் இதனையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அடுத்தவர் பணத்துக்காகவும் புகழுக்காகவும் கையெழுத்துப் போட்டு ஒப்புக்கொண்டாலும், அடுத்தவர் வீட்டுப் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கக்கூடாது என்பதே மேன்மையான நிலைப்பாடு. இதை உரக்கச் சொல்லவேண்டிய கமல், தான் இதில் பங்கெடுப்பதாலேயே, இதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் திரைக்கதை எதுவும் இல்லை என்று கமல் மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயல்கிறார். முப்பது கேமராக்களுடன் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதையும், நூறு நாள்கள் வெளியுலகத் தொடர்பே இல்லை என்பதை எல்லாம் நம்ப வெள்ளந்தி மனது வேண்டும். அப்படி ஒருவேளை மிக நியாயமாக நேர்மையாக இவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அங்கே அவர்கள் பேசுவது எல்லாமே அவர்களாகவே பேசுவது மட்டுமே என்று நம்ப தனியாக இன்னொரு வெள்ளந்தி மனம் வேண்டும். கமல் இருப்பதால் இதில் திரைக்கதை இருக்க வாய்ப்பில்லை என்று சில அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். இவர்களைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. இதில் நடக்கும் ஒவ்வொரு நடிகரின் வசனமும் எழுதப்பட்டுக் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும், யார் எப்படிப் பேசவேண்டும் என்பதில் தெளிவான திரைக்கதை ஒன்று உள்ளது. அதைச் சொல்லிவிட்டால், அதற்குப் பின்பு அந்த நடிகர் தனக்கான திரைக்கதையைத் தானே எழுதிக்கொண்டுவிடுவார். இப்படித்தான் இந்நிகழ்ச்சி நடைபெற முடியும். இந்நிகழ்ச்சி தொடர்பாக கமல் அளித்த பேட்டியில், ‘ஒருவேளை நான் இதற்குத் திரைக்கதை வசனம் எழுதி இருந்தால்’ என்று சொல்கிறார். இப்படிச் சொன்னதன்மூலம் யாரோ ஒருவர் இந்நிகழ்ச்சிக்குத் திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் என்பதை தன்னை அறியாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் பொதுத்தன்மை இப்படி இருக்கிறது. திடீரென்று எதோ ஒரு பிரபலம் பிக் பாஸ் வீட்டில் இன்னொரு பிரபலத்தின் மீது கோபம் கொண்டு என்னவோ சொல்கிறார். இக்காட்சி இத்துடன் முடிவடைகிறது. சில பிரபலங்கள் சேர்ந்து, கோபப்பட்ட பிரபலத்தைப் பற்றித் தவறாகப் பேசிக்கொள்வார்கள். இக்காட்சிக்குப் பின்னர், இன்னொரு இடத்தில், இன்னும் சில பிரபலங்கள் சேர்ந்து கோபப்பட்ட பிரபலம் செய்தது சரிதான் என்று பேசிக்கொள்வார்கள். இப்படியே மாறி மாறி இன்னொருவரைப் பற்றிக் குறை சொல்லிப் புரளி பேசுவார்கள். இதே சண்டையை நான்கைந்து நாள் போடுவார்கள். பின்பு மன்னிப்பு கேட்கும் படலம் ஆரம்பிக்கும். இந்த மன்னிப்பையும் குறை சொல்லி ஒரு கும்பலும், பாராட்டி ஒரு கும்பலும் பேசும். இது நடந்துகொண்டிருக்கும்போதே ஒவ்வொரு பிரபலமும் தன்னைப் பற்றி, தன் நேர்மையைப் பற்றி ஓயாமல் பேசிக்கொள்வார்கள். நடிகைகள் வீட்டில் இருப்பது போல மிக யதார்த்தமாக இருப்பது போன்ற பாவனையுடன் குட்டைப் பாவாடையில் கவர்ச்சி உடையில் வருவார்கள். ஆட்டம் போடுவார்கள். ஒரு நடிகை இன்னொரு நடிகரிடம் காதல் வயப்படுவார். அந்த நடிகர் இந்தக் காதலைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு நடிகையிடம் ஆசை ஆசையாகப் பேசுவார். அடுத்த காட்சியில் தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன நடிகையைப் பற்றிப் புறம் பேசுவார். மனித மனங்களுக்கு உள்ளே கிடக்கும் பொறாமை, கோபம், நம்பிக்கை இன்மை என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்துக் காட்சிகளும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதையே கமல்ஹாசன் சமூகத்துக்குத் தேவையான நிகழ்ச்சி என்கிறார்.

உண்மையில் ஒரு நெடுந்தொடரால் என்ன என்ன மோசமான விளைவுகள் உண்டாகும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த அத்தனை மோசமான நிகழ்வுகளும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியால் கூடுதலாக உண்டாகும். புறம் பேசுதல் நம் அடிப்படை உரிமை என்ற எண்ணம் நம் ஆழ்மனதுக்குள் விதைக்கப்படும். இருக்கும் கொஞ்சநஞ்ச குற்ற உணர்வும் மழுங்கடிக்கப்படும். இந்த நிகழ்ச்சியையே கமல்ஹாசன் தன் நட்சத்திர அந்தஸ்த்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். கமல் இல்லையென்றால் வேறொருவர் அறிமுகம் செய்து வைத்திருப்பார் என்பதும் உண்மையே. அதேசமயம் இதை இன்று தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது கமல்தான் என்பதும் உண்மையே. இந்நிகழ்ச்சியால் நம் ஆழ்மன அழுக்குகள் களையும் என்று நம்பும் அப்பாவிகளே தொடர்ந்து இந்நிகழ்ச்சியைப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்னுமொரு பொழுதுபோக்கு என்று கடப்பவர்களே, இதைச் சரியாகக் கணித்தவர்கள். மாறாக இது சமூகத்துக்கு நல்ல பலன் தரும் நிகழ்ச்சி என்று கொடி பிடிப்பவர்கள் ஏமாளிகள்.

கமல்ஹாசன் இதை நடத்துகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சப்பைக்கட்டு கட்டி இந்த நிகழ்ச்சியில் உள்ள நல்லவற்றையெல்லாம் பட்டியலிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள். பிக்பாஸ் நான் பார்ப்பதில்லை என்று யாராவது சொன்னால் அது போலித்தனமான அறிவுஜீவி பாவனை என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மையில் கமல்ஹாசன் இருப்பதால் இந்நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும் என்று நம்புவதுதான் போலித்தனமான அறிவுஜீவி பாவனை என்பதை இவர்கள் உணர்ந்தார்களில்லை.

இது தொடர்பான பத்திரிகை சந்திப்பில் கமல் இந்நிகழ்ச்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகிறார். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. அதில் உள்ள தேசபக்தி தொடர்பான விவாதங்கள் எல்லாம் நிச்சயம் நாம் பொருட்படுத்த வேண்டியவையே. ஆனால் கிரிக்கெட் போன்ற ஒரு ஆட்டத்தை தான் நடத்தும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியோடு ஒப்பிடுவது எல்லாம் அபத்தம். பணம் பத்தும் செய்யும் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை.

இந்நிகழ்ச்சியை சமூக அந்தஸ்துள்ள நிகழ்ச்சியாக்க கமல் எடுத்த அடவுகளில் முக்கியமானதும் அராஜகமானதும் எதுவென்றால், ‘இந்நிகழ்ச்சி கூட்டுக் குடும்பம் போன்றது’ என்றதுதான். திருமணம் என்பதே தேவையற்றது என்று தன் வாழ்வில் கடைப்பிடித்த ஒருவர் இன்று இந்நிகழ்ச்சிக்காக கூட்டுக்குடும்ப முறைக்கெல்லாம் வக்காலத்து வாங்குகிறார். கூட்டுக் குடும்பங்களின் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் நமக்குப் புதிதல்ல. இன்றைய காலத்துக்கு எது ஒத்துவருமோ அதை நோக்கி நாம் நம் அனுபவத்தின் மூலம் வந்தடைந்திருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் கொட்டப்படும் உணர்வுகள் எல்லாமே கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவித்த பிரச்சினைகள்தான். அதை மட்டுமே கணக்கில் கொண்டு இந்நிகழ்ச்சியைக் கூட்டுக்குடும்பத்துடன் ஒப்பிடுவதைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே முடியும். இன்னும் சொல்லப்போனால், கூட்டுக் குடும்பத்தை உடைக்கவே இந்நிகழ்ச்சி உதவும். ஒருவேளை கமலின் ஆழ்மனத்தில் இந்த ஆசையும் எதிர்பார்ப்பும்தான் இருக்கின்றனவோ என்னவோ.

கமல் போன்ற ஒரு நடிகர் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்திருப்பது நிச்சயம் வருத்தத்துக்கு உரியதே. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களுக்கு வக்காலத்து வேண்டிய அவலமும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அரைவேக்காட்டுத்தனமான வேடிக்கைகளைத் தாங்கிப் பிடிக்கவேண்டிய கொடுமையும் கமலுக்கு நேர்ந்திருக்கவேண்டாம். அதைவிட முக்கியம், மீண்டும் மீண்டும் புறம் பேசி பொய்யாக நடித்து அதையே நேர்மையாகச் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கூட்டத்தின் அலுப்பூட்டும் திரைக்கதையை இயக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு கமல் மேற்பார்வையாளராக வந்திருப்பது, அவர் இத்தனை நாள் உயர்த்திப் பேசிக்கொண்டிருந்த கலை என்பதற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதது, எதிரானது. கமலுக்குப் பணத்துடன் கிடைத்திருக்கும் இந்த தண்டனையே ஆகப்பெரியது.

Posted on 2 Comments

பீஹார்: சில அரசியல் கணக்குகள் – ச.திருமலைராஜன்

பீஹார் இந்தியாவின் வளமான ஆனால் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. நிதிஷ்குமாரின் தலைமை பீஹாருக்கு குண்டர்களின் ராஜ்யத்தில் இருந்து சற்று விடுதலையை அளித்திருந்தது. அந்த அமைதியையும் வளர்ச்சி நோக்குள்ள அரசாங்கத்தையும் தன் சுயநலத்திற்காக ஒழித்தவர் நிதிஷ் குமார். நிதிஷ் குமார் நேர்மையான திறமையான முதல்வர் என்று பேர் எடுத்திருந்தாலும் தனது ஆணவமும், சுயநலனும், திமிரும் கூடிய சுபாவத்தினால் சீரான அரசாங்கத்தைத் தானே குலைத்தார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தவுடனேயே நிதிஷ் வேறு கணக்குகளைப் போட ஆரம்பித்தார். திடீரென்று மதச்சார்பின்மை குல்லாவை அணிந்து கொண்டு பிஜேபி கூட்டணியில் இருந்து பிரிந்து வெளியே வந்தார். அன்றிலிருந்து மீண்டும் பீஹார் பழைய பாதைக்குச் செல்ல ஆரம்பித்தது.

வாஜ்பாய் அரசில் இருந்த பொழுது ஏற்படாத தீட்டு மோடியின் பெயரைச் சொன்னவுடன் வந்த காரணம், நிதிஷ் தன்னை மோடியை விடப் பெரிய தலைவராக நினைத்துக்கொண்டதுதான். எதிர்காலப் பிரதமராக எதிர்க்கட்சிகளினால் தேர்ந்தெடுக்கப் படக் கூடிய ஒரு வாய்ப்பு தனக்கு இருப்பதாக தன்னைக் குறித்து மிகையான ஒரு பிம்பத்தையும் அதன் மூலமாகப் பேராசையையும் வளர்த்துக் கொண்டார். அதன் விளைவாக குஜராத் முதல்வராக மோடி அளித்த வெள்ள நிவாரண நிதியை மறுத்து மோடியை அவமானப் படுத்தினார். மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் ஒரு மதவாதி என்றும் அறிவித்து வெளியேறினார். இதே நிதிஷ்குமார், மோடி பிரதமர் வேட்பாளாராக இல்லாமல் வெறும் குஜராத் முதல்வராக மட்டும் இருந்த பொழுது அவரைப் பாராட்டியுள்ளார். அவர் மீது எந்தவிதமான குற்றமும் கூறியதில்லை. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே அவருக்கு மதச்சார்பின்மையும் மோடியின் மத வெறியும் தீடீர் என்று நினைவுக்கு வந்துவிட்டது.

நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், லாலு கூட்டணியுடன் இணைவதன் மூலமாக அகில இந்திய அளவில், மோடி எதிர்ப்பு கூட்டணிக்குத் தன்னைத் தலைவராகவும் இதைத் தொடர்ந்து வருங்காலத்தில் வேறு வழியின்றி காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் தன்னைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி விடும் என்றும் கனவு கண்டார். அந்தப் பேராசையின் விளைவாகவே அவர் அமைதியாகவும் மரியாதையுடனும் பீஹாரின் வளர்ச்சியுடனும் சென்று கொண்டிருந்த பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு படகைப் பாதியிலேயே கவிழ்த்து விட்டார்.

காங்கிரஸிடம் சரியான தலைமை கிடையாது என்பதினாலும் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சியினரிடம் தன்னை மிஞ்சிய இன்னொரு திறமையான ஊழல் கறை படியாத ஒரு தலைவர் இல்லை என்பதினாலும் 2019ம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தன்னை மட்டுமே பிரதமர் வேட்பாளராக காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் நிறுத்தும் என்றும் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையுடன் மட்டுமே மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி மோடியை அவமதிக்கவும் எதிர்க்கவும் தலைப்பட்டார்.

2014 பாராளுமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் தனித்துப் போட்டியிட்டு தனக்குத் தனியாக இருக்கும் வாக்கு வங்கியை உறுதிப் படுத்திக் கொண்டார். தனித்துப் போட்டியிட்ட பிஜேபி பீஹாரில் 28 இடங்களை வென்றது. லாலுவுடனும் காங்கிரஸுடனும் கூட்டணி வைத்தால் சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி அடையலாம் என்று திட்டமிட்டு கணக்குப் போட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.

நிதிஷ் குமாருக்கு என்று நிரந்தரமான கொள்கைகள் ஏதும் கிடையாது. தனது சுயநலன், தனது அரசியல் கணக்குகள் மட்டுமே அவருக்கு முக்கியமானவை. பீஹாரைப் பற்றியோ அதன் வளர்ச்சி குறித்தோ ஊழலற்ற அரசு குறித்தோ பெரிதாக அக்கறை கொண்டவர் அல்ல. காங்கிரஸ் ஊழல்களின் உறைவிடம் என்பதை நன்கு அறிவார். லாலுவின் குடும்பம் பெரும் கொள்ளைக் கூட்டம் என்பதையும் நன்கு அறிவார். ஆட்சிக்கு வந்த பிறகு லாலுவின் குடும்பம் எப்படியும் அன்றாட அரசாங்கத்தில் தலையிட்டுப் பழைய ரவுடி சாம்ராஜ்யத்தை, ஊழல் பேரரசை மீண்டும் உருவாக்குவார்கள் என்பதையும் நன்கு அறிந்தவர்தான் நிதிஷ். இவற்றையெல்லாம் எப்படியும் ஐந்தாண்டுகள் சமாளித்து விட்டால் அல்லது 2019 வரையிலும் சமாளித்து விட்டால் எப்படியும் 2019ல் எதிர்க்கட்சிகளின் மகாபந்தனக் கூட்டணியின் தலைவராக, பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தித்தான் ஆகவேண்டும் என்று கணக்கிட்டார். ராகுல் காந்தியை வைத்துக் கொண்டு காங்கிரஸால் பாஜகவைச் சமாளிக்க முடியாது என்பது நிதிஷ் குமாரின் கணக்கு. இதை மனதில்கொண்டே ஊழல் மற்றும் அராஜக லாலுவின் குடும்பத்துடனும், பீஹாரில் செல்வாக்கு இழந்து போன காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்தார்.

தான் தந்திரமாகப் போட்ட திட்டங்கள் அனைத்துமே மோடியின் தொடர் வெற்றிகளினாலும் அவருக்கு வளர்ந்து வரும் மக்கள் செல்வாக்கினாலும் உத்தரபிரதேசத்தில் பிஜேபியின் அபரிதமான வெற்றியினாலும் தகர்ந்து விழுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தார் நிதிஷ்குமார். உத்தரபிரதேசத்தில் முலாயம் குடும்பத்தின், மாயாவதியின் தோல்வியும், வட கிழக்கில் வளர்ந்து வரும் பாஜக அலையும் பிற மாநிலங்களில் பாஜகவுக்கு உருவாகும் பெரும் ஆதரவும் அவரை பெரும் அச்சத்தில் தள்ளின. தான் போட்ட கணக்கு பெரும் தப்புக் கணக்கு என்றும் ஒரு பெரும் நரகக் குழியைத் தன் சுயநலத்தால் தோண்டி விட்டதையும் உணர்ந்தார்.

தனது பிரதமர் பதவி கனவு தன் கண் முன்னாலேயே வேகமாக மறைந்து வருவது அவருக்குப் புரிந்தது. அதே சமயத்தில் பீஹாரில் ரவுடிகள் ராஜ்யம் மீண்டும் தலை விரித்தாட ஆரம்பித்ததும் முகத்தில் அடித்தது. ஊழல்கள் பெருகின. லாலுவின் புதல்வர்களும் குடும்பத்தினரும் தங்களது காட்டு ராஜ்யத்தை நிதிஷுக்கு எந்தவிதமான மரியாதையும் அளிக்காமல் தொடர ஆரம்பித்தனர். இந்தியாவின் பிரதமர் கனவு பகல்கனவு ஆகிப் போனது. இதே நிலை நீடித்து, லாலுவின் ரவுடி ராஜ்யத்தின் ஊழல் சாம்ராஜ்யத்தின் கூட்டாளியாகத் தான் தொடர்ந்தால் பீஹாரில் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூடத் தன்னால் வெற்றி பெற முடியாமல் போய் விடும் என்ற அபாயத்தை உணர ஆரம்பித்தார்.

தன் கால்களின் கீழே பெரும் பீஹார் பூகம்பம் ஒன்று லாலுவின் குடும்பத்தாரால் தோண்டப் படுவதை தினம்தோறும் அனுபவித்து வந்தார். ஒரு பக்கம் பிரதமர் கனவு பாழாகிப் போனது, மறுபுறமோ இருக்கும் முதல்வர் பதவிக்கும், தான் இத்தனை ஆண்டு காலமாக கவனமாக உருவாக்கி வைத்திருக்கும் ஊழலற்ற திறமையான அரசியல்வாதி என்ற பிம்பத்துக்கும், தனது ஆதார இருப்புக்குமே பெரும் அச்சுறுத்தல் என்பதைப் புரிந்துகொண்டார்.

சாதுர்யமான தந்திரமான புத்திசாலியான நிதிஷ் தான் தோண்டிய குழியில் இருந்து தானே வெளியேற முடிவு செய்து தன் தலையில் தானே அள்ளிப் போட்டுக் கொண்ட மண்ணில் இருந்து தன்னை மீட்டு, மீண்டும் பழைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காவது தாவி கொஞ்ச நஞ்சம் மீதம் இருக்கும் மரியாதையையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனலில் இட்ட புழுவாகத் துடிக்க ஆரம்பித்தார். அவரது நிலையைச் சரியாக அவதானித்து வந்த அமித் ஷா, மோடி இருவரும் தக்க சமயத்திற்காகக் காத்திருந்தனர். நிதிஷும் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதல் ஆகியவற்றைப் பாராட்டி ஆதரவளித்ததன் மூலமாக மெதுவாக மீண்டும் பாஜக பக்கம் சாயும் தனது ஆசையைத் தெரிவித்து வந்தார். இந்த சமிஞ்கைகளை பாஜக கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டது. நிதிஷுக்குத் தேவையானது அவரது மரியாதைக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் வந்து விடாமல் பக்குவமாக லாலு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிய ஒரு தருணம் என்பதைப் புரிந்து கொண்டனர். நிதிஷ் தனக்கு பாஜக அந்தத் தருணத்தை உருவாக்கித் தரும் என்று காத்திருந்தார். பாஜக உருவாக்கியது. கச்சிதமாகப் அதைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே வெட்டியக் குழியில் இருந்து வெளியேறி மீண்டும் பாதுகாப்பான தனது இடத்துக்கு வந்து விட்டார்.

காங்கிரஸின் தப்புக் கணக்கு

மோடி எதிர்ப்பாளராக மதச்சார்பின்மையின் முகமாக திறமையான ஊழலற்ற ஆட்சியாளர் என்ற பிம்பத்தில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் நிதிஷுக்குத் தங்களை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது என்று காங்கிரஸ் உறுதியாகக் கடைசி வரையிலும் நம்பிக் கொண்டிருந்தார்கள். நிதிஷின் சமிஞ்கைகள் எதையுமே அவர்கள் உரிய கவலையுடன் எதிர் கொள்ளவில்லை. மாறாகக் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற ரீதியில், நிதிஷுக்குத் தங்களை விட்டால் வேறு நாதி கிடையாது என்று நம்ப ஆரம்பித்தார்கள். பண மதிப்பு நீக்க ஆதரவு, பாகிஸ்தான் தளங்களின் மீதான தாக்குதலுக்கான ஆதரவு, ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு, சோனியாவைப் புறக்கணித்து விட்டு மோடியுடன் மதிய உணவுக்குப் போனது என்று அனைத்தையுமே அலட்சியமாக எடுத்துக் கொண்டனர் சோனியாவும் அவரது கட்சியினரும். சில வாரங்களுக்கு முன்பாக ராகுலை விட்டுத் தான் அடுத்த தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் கிடையாது என்று சொல்ல வைத்ததன் மூலம் நிதிஷூக்கு ஆசை காட்டுவதாக நினைத்தார்கள்.

என்னதான் காங்கிரஸ் பிரதமர் பதவி என்னும் கேரட்டை முன்னால் நீட்டிக் கொண்டிருந்தாலும் நாட்டின் நிலவரம், எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள், ஆளும் பாஜக அரசின் வலுவான ஆதரவு அலைகள் ஆகியவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்த நிதிஷ், காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளை நம்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார். நிதிஷ் தங்களை விட்டு எங்கும் போக முடியாது என்ற மதர்ப்பிலும் முட்டாள்தனத்திலும் அரசியல் சாதுர்யம் இன்றி மூழ்கிக் கிடந்தது காங்கிரஸ். மேலும், சோனியா பெரும்பாலும் உடல்நலக் காரணங்களினால் ஒதுங்கியிருக்க, ராகுலுக்கு எதிலும் ஆர்வமோ, அறிவோ, அக்கறையோ, புத்தி சாதுர்யமோ இல்லாமல் போனது மற்றொரு காரணம்.

பீஹார் மாநிலப் பிரச்சினையில் இரு தரப்பையும் அழைத்து ஊழல் குற்றசாட்டிற்குள்ளான லாலுவின் பையன் தேஜஸ்வி யாதவை துணை முதல்வர் பதவியில் இருந்து சில காலத்திற்காவது விலகச் சொல்லி விலக வைத்திருந்தால் நிதிஷுக்கு கூட்டணியில் இருந்து விலகச் சரியான காரணம் கிடைக்காமல், இன்னும் வலுவான காரணம் கிட்டும் வரை கூட்டணியில் தொடர வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனால் ராகுலோ, ‘வந்தால் வரட்டும் இருந்தால் இருக்கட்டும் போனால் போகட்டும்’ என்று விட்டேற்றியாகச் செயல்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியோ அதன் கூட்டணியோ அழிவது குறித்து எந்தவிதமான கவலையும், ‘விடுமுறைகளுக்கு நடுவில் இந்திய அரசியலுக்குள் எட்டிப் பார்க்கும்’ ராகுலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர் கட்சியில் நேரு குடும்பத்தை எதிர்த்துப் பேசும் துணிவும் வேறு எவருக்கும் இல்லை. இந்த நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, எந்தத் தைரியத்தில் நிதிஷ் இந்த மண் குதிரைகளை நம்பி 2019ம் தேர்தல் ஆற்றில் குதிக்க முடியும்? அது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை உணர்ந்த நிதிஷ் எதையும் யோசிக்காமல் பாஜகவிடம் அடைக்கலமாகியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைமையின் இயலாமையும் முனைப்பின்மையும் ராஜ தந்திரமின்மையும் அலட்சியமும் தப்பான ஆணவமான கணக்குகளும் முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன

பாஜகவின் கணக்குகள்

பீஹார் அரசியல் நிலையின்மைகளின் ஒட்டுமொத்தப் பயனை அறுவடை செய்யப் போவது பாஜக மட்டுமே. நிதிஷ் தன் தலையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். பாஜகவோ தன் எதிர்கால வெற்றியை உறுதி செய்து கொண்டுள்ளது. பீஹாரில் பாஜக தனியாகப் போட்டியிட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 40% ஓட்டுக்களையும் 40 இடங்களில் 28 இடங்களையும் கைப்பற்றியது. சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணியினாலும் நிதிஷுக்கு மக்களிடம் இருந்த நம்பிக்கையினாலும் கிட்டத்தட்ட 30% சதவிகிதம் ஓட்டுக்களையும் 58 இடங்களையும் மட்டுமே பெற்றிருந்தது. வலுவான கூட்டணி இருந்த போதிலும் பீஹாரில் பாஜக 30% முதல் 40% வரையிலான ஓட்டுக்களைப் பெறும் வலுவான இடத்திலேயே இருக்கிறது. இருந்தாலும் பீஹாரின் ஜாதீய கணக்குகளினாலும் முஸ்லீம் ஓட்டுக்களினாலும் தனித்து நின்று பெரும்பான்மையைப் பெறும் இடத்தை பாஜக இன்னும் அடையவில்லை. ஒரு வேளை அடுத்த தேர்தல்களில் பாஜக தனியாக நின்றிருந்தால் நிதிஷ் – லாலு ஊழல் கூட்டணியின் மீதான வெறுப்பில் பாஜக தனியாகவும் வெல்லும் நிலைக்குச் செல்லக் கூடும்.

ஆகவே இப்பொழுது நம்பிக்கைத் துரோகியான சந்தர்ப்பவாதியான நிதிஷ் அரசுக்கு பிஜேபி ஆதரவு அளிப்பதை நான் உட்பட அதன் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் அரசியல் என்பது வேறு. வரும் 2019ம் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெறும் தனிப் பெரும்பான்மை வெற்றிக்கு மட்டுமே முயலவில்லை. மாறாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நோக்கிக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த இலக்கை அடையும் எந்தவொரு உத்தியையும் பிஜேபி தவற விடாது. ஏற்கெனவே மணிப்பூர், நாகாலாந்து, கோவா, அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் வாய்ப்புகளைத் தவற விடாமல் கைப்பற்றியதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தச் சூழலில் இந்தியாவின் இந்தி சூழ் (Hindi belt) மாநிலங்களில் ஒன்றான பீஹாரை மீண்டும் கூட்டணியின் மூலமாகவாவது கைப்பற்றுவதை, 2019ல் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை எட்டும் இலக்கின் ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதுகிறது பாஜக. இந்தக் கூட்டணியின் மூலமாக ஏற்கெனவே பாஜகவுக்குத் தனியாக இருக்கும் 40% வாக்கு வங்கியுடன் நிதிஷின் 16% ஓட்டுக்களும் இணையும் பொழுது ஒட்டுமொத்த மாநிலத்தையே மொத்தமாக ஜெயிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தக் கூட்டணியின் மூலமாக ராஜ்ய சபாவில் தனிப் பெரும்பான்மையையும் பாஜக அரசு 2018லேயே அடைய முடியும். இல்லாவிட்டால் அது 2019ல் மட்டுமே சாத்தியமாகும். மேலும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஊழல் கறைபடாத ஆட்சித் திறன் உள்ள ஒரே தலைவரும் கூட பாஜகவின் பக்கம் சாய்வது பாஜகவுக்குப் பிற மாநிலங்களில் பெரும் அளவில் தார்மீக வலுவையும் ஆதரவையும் பெருக்கும். ஒருவேளை ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்பு குஜராத், மபி, ராஜஸ்தான் மாநிலங்களில் அதன் ஓட்டு எண்ணிக்கையையும் அதன் மூலமாக பாராளுமன்ற இடங்களைக் குறைக்குமானாலும்கூட இந்தக் கூட்டணியின் மூலமாக வரும் அதிகப்படியான எண்ணிக்கைகள் அதை ஓரளவுக்குச் சரிக்கட்டவும் கூடும்.

மேலும் பிஜேபிக்கும் நிதிஷூக்கும் சித்தாந்த ரீதியிலான கொள்கை வேறுபாடுகள் எதுவும் பெரும் அளவில் கிடையாது. நிதிஷின் மதச்சார்பின்மை என்பது வெற்று அரசியல் மட்டுமே. பாஜகவின் மீது பெருமளவு எதிர்ப்பு எல்லாம் அவரிடம் இருந்தது கிடையாது. ஏற்கெனவே வாஜ்பாய் அரசில் கூட்டாளியாக இருந்தவர்தான். பாஜகவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த பெரும் தவறை பாஜகவினர் இப்பொழுதைக்கு மறந்துவிட்டு, 2019ம் ஆண்டின் கணக்கை உத்தேசித்து, நீதீஷூடன் கூட்டணி வைப்பதில் அவர்களுக்கு ஏதும் பெரிய தயக்கம் இருக்கப் போவதில்லை.

நிதிஷுடன் இணைவது மூலமாக மோடியின் திறன்மிகு அரசாட்சியை பீஹாரிலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திறமையாக அமல்படுத்தலாம். கங்கைத் தூய்மை திட்டம், மேக் இன் இண்டியா திட்டம், ஸ்வச் பாரத் போன்ற அனைத்துத் திட்டங்களும் பீஹாரிலும், லாலு- காங்கிரஸ் கட்சியினரின் முட்டுக்கட்டைகள் ஏதுமின்றி எளிதாகச் செயல்படுத்தப்படும். இதன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மாநிலமான பீஹாரை, பின்தங்க விடாமல் மோடி அரசாங்கம் அணைத்துச் செல்லும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பிஜேபி காய்களை நகர்த்தியுள்ளது. லாலுவின் அராஜகங்களையும் அவமரியாதைகளையும் தாங்க முடியாத நிலையிலும், தன் பிரதமர் கனவு தகர்ந்துவிட்ட நிலையிலும் நிதிஷ் நிலைகுலைந்து இருந்த தருணத்தை பாஜக நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. நிதிஷின் மன நிலையை அறிந்துகொண்டு அவரது மரியாதைக்குப் பங்கம் வராவண்ணம் கூட்டணி ஆட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை பாஜக ஒன்றன்பின் ஒன்றாக தேர்ந்த சதுரங்க ஆட்டத்தின் காய் நகர்த்துதல் போல நகர்த்தியுள்ளது. லாலுவின் மீதான வழக்குகளை முடுக்குதல், அவரது குடும்பத்தின் முறைகேடான சொத்துக்களை முடக்குதல், லாலுவின் மகன் மற்றும் மகளின் ஊழல்களை வெளிப்படுத்துதல், அவற்றை ரிபப்ளிக் டி வியின் அர்நாப் மூலமாக அம்பலப்படுத்துதல் என்று ஒவ்வொரு கட்டமாக பாஜக மிக சாதுர்யமாகச் செயல்பட்டது. இறுதியில் தான் வெளியேறுவதைவிட வேறு வழியில்லை என்ற நிதிஷின் நிலைப்பாட்டில் நியாயம் உள்ளது போலவும் அவரது வெளியேறல் ஒரு சந்தர்ப்பவாதச் செயலாகத் தெரியாதது போலவும் அதற்கான சூழல்களை பாஜக உருவாக்கி லாலு கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறுவதை அவருக்கு வசதியாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

பாஜக தானாக வலியப் போய் எந்தவொரு கூட்டணியையும் பிரிக்கவில்லை. எவரையும் விலைகொடுத்து வாங்கவில்லை. பீஹாரின் அரசியல் சூழல்களைத் தனக்கும் தேசத்துக்கும் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்த முயற்சியை, காங்கிரஸ் அந்தக் காலத்தில் எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களைக் கலைத்தும், ஆட்களை விலைக்கு வாங்கியும் தன் ஆட்சியைத் திணித்த அயோக்கியத்தனங்களுடன் ஒப்பிடவே முடியாது.

ஆக பீஹார் விஷயத்தில் இந்திய அரசியல் கட்சிகளின் பல்வேறு கணக்குகள் ஒட்டுமொத்தமாக தேசத்திற்கு நன்மையாகவும் வலுவான உறுதியான வளர்ச்சியுடைய பாரதத்தை உருவாக்கும் பாஜகவின் திட்டங்களுக்கு உறுதுணையாகவும் அமைந்து விட்டிருக்கிறது. இதன் மூலமாக நிதிஷ் தனது பிம்பத்தை, மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. பாஜக தன் எதிர்கால வெற்றியை உறுதி செய்து கொண்டுள்ளது. பீஹார் மாநிலம் ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் இருந்து விடுதலை அடையப் போகிறது. பாரத தேசமும் இதன் பயனை அடையப் போகிறது. ஆகவே சில பாஜக ஆதரவாளர்களுக்குத் தனிப்பட்ட வகையில் இது ஒரு கசப்பான முடிவாகத் தெரிந்தாலும் ஒட்டுமொத்த தேச நலனை உத்தேசிக்கும் பொழுது இது ஒரு நல்ல முடிவாகவே அமைந்துள்ளது. ஒரு வேளை ஒரு சில எம் எல் ஏக்களின் விலகல்களினால் நிதிஷின் ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும்கூட அடுத்த முறை மாபெரும் வெற்றியை இந்தக் கூட்டணி சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் அடைந்தே தீரும்.

Posted on Leave a comment

மேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் – அருணகிரி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தது முதலே இஸ்லாமிய பயங்கரவாத வன்முறை துணிவுடன் வெளிவந்து வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மிகச்சமீப நிகழ்வாக, பஸிர்ஹட்டில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சூறையாடல் ஜூலை 4ல் தொடங்கியது. இந்துக்களின் கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்துப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. இந்துக்கோவில்கள் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டன. மம்தா அரசின் அடக்குமுறையும் ரவுடித்தனமும் அதற்கு முந்தைய இடது கம்யூனிஸ்ட் ஆட்சியின் அராஜகங்களுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல என்று ஆகி வரும் நிலையில், மேற்கு வங்க மீடியாக்கள் எதுவுமே இக்கலவரம் குறித்து வாயைத் திறக்கவில்லை. தேசிய ஊடகங்களும் இந்தக் கலவரத்தைப்பற்றிக் கள்ள மௌனம் சாதித்தன. ஏனென்றால் வன்முறையில் இறங்கியவர்கள் முஸ்லீம்களாகவும் பாதிக்கப்பட்டது இந்துக்களாகவும் இருந்ததே. ரிபப்ளிக் டிவியின் அர்னால்ட் கோஸ்வாமி முதன் முதலாக பஸிர்ஹட் கலவர நிகழ்வுகளை நேரடியாகப்பேட்டி கண்டு வெளியிட்ட பின்னரே தேசிய ஊடகங்கள் இந்தக் கலவரத்தைப்பற்றிப் பேசத்தொடங்கின.

சரியான உள்ளூர்ச் செய்திகள் வர விடாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களின் வதந்திகள் செய்திகளாகப் பரவ ஆரம்பித்தன. செய்திகள் வர விடாமல் உள்ளூர் ஊடகங்களை வாயடைத்து வைத்திருந்த மம்தா அரசு, இப்போது சுறுசுறுப்பாக இறங்கி வதந்திகள் பரப்பியதாக உள்ளூர் பிஜேபியின் உறுப்பினர்களைக் கைது செய்தது. சட்டம் ஒழுங்கு குறித்து விசாரிக்க கவர்னர் மம்தாவை அழைத்தபோது மம்தா அவரை வசை பாடத் தொடங்கினார். இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளை வெளிவராமல் அமுக்கி வைத்திருந்த உள்ளூர் செய்தி நிறுவனங்கள், ‘பாஜகவின் வட்டச்செயலர் போல கவர்னர் செயல்படுகிறார்’ என்று மம்தா பேசியதை மட்டும் மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு பெரிய அளவில் செய்தி வெளியிட்டன. இதன் உச்சகட்டமாக முஸ்லீம் கும்பல் ஒன்று ஆர் எஸ் எஸ் ஊழியர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தது. பஸிர்ஹட்டிற்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க பாஜக தலைவர்களுக்கும், இடது கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தமது உடைமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாமல் ‘எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம், மம்தா அரசாங்கம் தம்மைக்காக்க உதவாது’ என்று உணர்ந்த இந்துக்கள், சுயபாதுகாப்பு சிறுகுழுக்களாகத் திரண்டு வருகின்றனர். பஸிர்ஹட்டில் இப்போது நிலவுவது பயங்கரமான அமைதி.

17 வயது பையன் ஒருவன் மெக்காவின் காபா குறித்து பகிர்ந்த ஃபேஸ்புக் செய்திதான் இம்முறை கலவரத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பையனின் வீடு சூறையாடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. அந்தப் பையனின் உறவினர்களுக்குப் பாதுகாப்பு தந்தது அருகில் குடியிருந்த இஸ்லாமியர்கள் என்பது, அரசு கைவிட்டாலும் மனிதாபிமானம் கைவிடவில்லை என்பதை அடிக்கோடிட்டது. ஆனால் அந்தப் பையன் கைது செய்யப்பட்ட பிறகும் வன்முறை நின்று விடவில்லை. மூன்று நாட்கள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்த இஸ்லாமிய வன்முறையாளர்களை அடக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர். ஆனால் வன்முறை நடந்த மறுநாள் மம்தா கட்சியின் எம் எல் ஏவின் ஆணையின் பேரில் 15 இந்துக்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்மீதும் முஸ்லீம் குண்டர்படைத்தலைவர்கள்மீதும் போலீசின் மூச்சுக்காற்று கூட படாமல் பார்த்துக்கொண்டது மம்தாவின் அரசு.

பஸிர்ஹட் என்பது வடக்கு 24 பர்ஹானா என்றழைக்கப்படும் முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதியில் உள்ள ஊர். பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக உள்ளே புகும் முஸ்லீம்களுக்கு அடையாள அட்டை கொடுத்து வாக்காளராக்கி தமது வோட்டுப்பெட்டியில் அவர்களைச் சேகரிப்பதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் என்று அத்தனை கட்சிகளும் போட்டி போட்டுச் செய்து வருகின்றன. விளைவு இன்று மேற்கு வங்கத்தில் 30 சதவீதத்திற்கும் மேலாக முஸ்லீம்கள் வாக்கு வங்கி உள்ளது. கம்யுனிஸ்ட்டுகளிடம் இருந்து வந்த இந்த வாக்கு வங்கி, காங்கிரஸ் அமைத்த சச்சார் கமிட்டி ரிப்போர்ட் மேற்கு வங்க முஸ்லீம் சமூகம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகக் காட்டியதை அடுத்து ஆட்டம் காணத் தொடங்கியது. நந்திகிராமில் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம் விவசாயக்கூலிகள் கொல்லப்பட்டது வெளிச்சத்துக்கு வந்த பின் முஸ்லீம் வாக்கு வங்கியைத் தன் பக்கம் திருப்பவதில் முனைப்பு காட்டினார் மம்தா. முஸ்லீம் ஓட்டு சதவீதமும் ஒரு 10-15 சதவீத அளவு இந்து ஓட்டு சதவீதமும் சேர்ந்து 40% ஓட்டு சதவீதம் பெற்றால் தன் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணக்குப்போட்டு அதில் வெற்றியும் பெற்று ஆட்சி அமைத்தார். ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து முஸ்லீம் அடிப்படைவாதிகளை தாஜாசெய்து, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அரசின் கஜானாவிலிருந்து முஸ்லீம் இமாம்களுக்கு ஸ்பெஷலாக மாத அலவன்ஸ், வீடு வாங்க மானியம், இமாம்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை என்று இலவசங்களை அறிவித்தார். முஸ்லீம்களுக்காகத் தனியாக வங்கி கடன்கள் அறிவிக்கப்பட்டன. முஸ்லீம்களுக்காக ஸ்பெஷல் வேலை வாய்ப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. 75,000 இஸ்லாமிய மாணவர்களுக்குத் தனியாக உதவித்தொகை, கடன் என்று தனிச் சலுகைகளை அறிவித்தார். பத்து சதவீதம் மேல் முஸ்லீம்கள் உள்ள பகுதிகளில் (பெரும்பான்மை மாவட்டங்கள் இந்தக் கணக்கில் வந்து விடும்) உருது மொழிக்கு இரண்டாவது அரசு மொழி என்கிற இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பக்கம் இஸ்லாமியர்களுக்கு மதரீதியான சலுகைகள் தருவது போக, மம்தா அரசு இந்துக்களை ஒடுக்கி அவமதிக்கும் செயலிலும் இறங்கி வருகிறது. மேற்கு வங்க இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை விஜயதசமி. இதன் துர்க்கை பூஜையின் உச்சகட்டமாக துர்க்கை விக்கிரகங்களைக் கடலில் கரைப்பார்கள். இதனை மம்தா அரசு தடை செய்து சட்டம் இயற்றியது. (கோர்ட் தலையிட்டு இந்தத் தடை செல்லாது என்று பிறகு நீக்கியது.) சில பள்ளிகளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுவதைத் தடை செய்தது. சிவ ஸ்தலமான தாரகேஷ்வர் கோவில் தலைமை அதிகாரியாக இஸ்லாமியர் ஒருவரை நியமித்தது. ஆக, ஒரு புறம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குஷிப்படுத்தும் செயல்களைச் செய்துகொண்டே, மறுபக்கம் இந்துக்களின் நம்பிக்கைகளைத் துச்சமாக மதித்து அவமதிக்கும் போக்கையும் மம்தா அரசு கடைப்பிடித்து வருகின்றது. மேற்கு வங்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு ‘சிறுபான்மையினரைத் திருப்தி செய்யும் பொருட்டு இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கை மாநில அரசு கைவிட வேண்டும்’1 என்று குறிப்பிடும் அளவுக்கு மம்தா அரசின் இஸ்லாமிய மதவாத ஆதரவு போக்கு உள்ளது.

இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன:

– மேற்கு வங்க முஸ்லீம்கள் பலர் ஏழைகள். அவர்களை வஹாபி அடிப்படைவாதத்தின்பிடியில் ஒப்புவித்து இஸ்லாமிய மதத்தலைமையின் கீழ் திரளச்செய்வது எளிது. அதன் மூலம் எளிதான மந்தை ஓட்டுவங்கியாக அவர்களை உருவாக்க முடியும் என்பது மம்தாவின் கணக்கு. இந்தக் கணக்கு ஆபத்தானது மட்டுமல்ல. அரசியல் ரீதியாகத் தமக்கு எதிராகவே திரும்பக்கூடியது என்பதை மேற்கு வங்க அரசியல் வரலாறு அவருக்கு உணர்த்தி இருக்க வேண்டும். இதற்கு முன் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகள் இதே யுக்தியைக் கையாண்டு தோற்ற அரசியல் வரலாறு அவர் கண்ணெதிரே இருக்கின்றது. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தாஜா செய்து ஓட்டு வாங்குவது என்பது எந்தக் கட்சிக்கும் அரசியல் புதைகுழியாகவே மாறியுள்ளது. அஸ்ஸாமிலும் சரி, உத்தரபிரதேசத்திலும் சரி – இதே போன்று இஸ்லாமிய மதவாத அமைப்புகளுடன் சமரசம் செய்து கொண்ட கட்சிகள் பின்னர் படுதோல்வி அடைந்துள்ளன. ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் ஒரு கட்டத்திற்கு மேல் இஸ்லாமிய தலைமையில், இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இயங்கும் முழுமையான ஒரு குறுகிய இஸ்லாமிய மதவாத அரசை உருவாக்கவே தலைப்படும். மம்தாவின் மேற்கு வங்கம் அந்த சறுக்குப்பாதையில் ஏற்கெனவே பயணம் செய்யத்தொடங்கி விட்டிருக்கிறது.

– பங்களாதேஷிற்கு கால்நடைகள் கடத்தலின் முக்கியக் கேந்திரமாக விளங்குவது பஸிர்ஹட் உட்பட்ட தெற்கு வடக்கு பர்ஹானாக்கள். இதில் மம்தா அரசின் பங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. இது சாதாரண அளவிலான கடத்தல் அல்ல. ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 25 லட்சம் மாடுகள் கடத்தப்படுகின்றன. ஒரு மாட்டிற்கு 20,000 என்று கொண்டால்கூட, வருடத்திற்கு 5,000 கோடி ரூபாய். இதில் பாதி அளவு – அதாவது 2,500 கோடி – பஸிர்ஹட் வழியாக நடக்கும் கடத்தல். கால்நடைக் கடத்தலைத்தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள் இத்தொழிலை – குறிப்பாக பஸிர்ஹட்டில் இருந்து கடத்தல் தொழிலை வளப்பமாக நடத்தி வரும் இஸ்லாமியர்களைப் பாதித்துள்ளதாகவும், அதன் எதிர்விளைவாக இந்துக்கள் மீதான வன்முறை கலவரம் தூண்டி விடப்பட்டிருக்கலாம் என்கிற செய்திகளும் வெளிவந்துள்ளன. பஸிர்ஹட் உள்ளிட்ட பர்ஹானா மாவட்டங்கள் இரண்டுமே கள்ளப்பணம்,  வெடிகுண்டு மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவற்றின் முக்கிய கேந்திரமாக கடந்த 15-20 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது. இந்தக் கோணத்தில் பார்த்தால், மதவாதம் என்பதுடன் கடத்தல் என்கிற குற்ற சக்திகளும், இஸ்லாமிய அடிப்படையிலான தேசப்பிரிவினை சக்திகளும் கைக்கோர்த்துச் செயல்படும் அபாயம் பெருமளவில் உருவெடுத்துள்ளது புலப்படும். இது இன்னொரு காஷ்மீராக மேற்கு வங்கம் உருவெடுக்கும் நிலையின் ஆபத்தான ஒரு காலகட்டம். ஃபேஸ் புக் போஸ்ட், சமூக வலைத்தளச் செய்திகளைச் சாக்காக முன்வைத்து வைத்து வன்முறை என்பதெல்லாம் இப்படிப்பட்ட தேச விரோத பிரிவினைவாத இஸ்லாமிய மேலாண்மையை நிலைநிறுத்தும் ஒரு யுக்தி மட்டுமே.

மேற்கு வங்கத்தில் இந்துக்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இதற்கு முன் இதே போன்ற கலவரங்கள் கடந்த 18 மாதங்களில் கலியசக், இல்லம்பஜார், ஹாஜிநகர், துலகார், ஜலங்கி, கரக்புர், புர்ட்வான் என்று பல இடங்களில் அரங்கேறியுள்ளன. பஸிர்ஹட் என்பது இந்துக்களுக்கெதிரான வன்முறைத் தொடர் சங்கிலியின் இன்றைய கண்ணி மட்டுமே. இது இங்கே முடியப்போவதில்லை. இந்துக்கள் மீதான வன்முறையைத் தடவிக்கொடுத்து வளரச்செய்து ஆட்சியைத்தக்க வைத்துக்கொண்டு விட முடியும் என்ற மம்தா அரசின் கணக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்கும் தேசநலனுக்கும் அடிக்கப்பட்டிருக்கும் அபாய மணி. மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் இதனை அதி தீவிரமாக அணுகி, முளைவிட்டு வேர் பாய்ச்சத் தொடங்கியிருக்கும் இந்த விஷ விருட்சத்தை இப்போதே கொன்று களைய வேண்டும்.

உசாத்துணை:

1. http://indianexpress.com/article/india/india-news-india/calcutta-hc-lifts-puja-curbs-slams-bengal-bid-to-appease-minorities-3073102/

Posted on Leave a comment

ஜி எஸ் டி: புதிய தொடக்கம் – ஜெயராமன் ரகுநாதன்

ஆகஸ்டு பதினைந்து அளவுக்கு இல்லாவிட்டாலும் ஜூன் முப்பது இரவில் பன்னிரண்டு மணிக்கு உயிர்பெற்ற ஜிஎஸ்டி (GST) நிச்சயம் இந்தியப் பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

“அப்படி என்ன பெரிசா இருக்கு ஜிஎஸ்டியில? மறுபடி மறுபடி சாமானிய மக்களுக்கு தொல்லைதானே? இதெல்லாம் வெறும் ஸ்டண்ட்!”

மிக உரக்கக்கேட்கும் இந்தப் புலம்பலில் உண்மை இல்லை. இப்படிப் புலம்புபவர்கள் ஒன்று அரசை எதிர்க்கும் மனநிலை கொண்டவர்கள் அல்லது இந்த ஜிஎஸ்டியின் முழுப்பரிமாணத்தை அறியாமல் மேம்போக்கான புரிதலுடன் விமரிசனம் செய்பவர்கள். இன்று நாம் பார்க்கும் ஜிஎஸ்டி நிச்சயம் மிகச்சரியான வரி சிஸ்டம் இல்லைதான். கச்சிதம் என்பது முதல் நாளிலேயே வந்துவிடாது. இது ஒரு மிக நல்ல தேவையான ஆரம்பம். இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான மைல்கல்.

இதற்கென இந்த பாஜக அரசைப் பாராட்ட வேண்டுமா?

நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்!

29 மாநிலங்கள் ஏழு யூனியன் பிரதேசங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, எண்ணற்ற தடைக்கற்களைச் சந்தித்து, ஈகோ பிரச்சனைகள், வருமான இழப்பு வாதங்கள், பல உரிமை இழப்புகள் பற்றிய சந்தேகங்கள், பயம் போன்ற கணக்கிலடங்கா விஷயங்களை விளக்க நூற்றுக்கணக்கான கூட்டங்களைக் கூட்டி, ஒருவித ஒற்றுமைக்குள் வரவழைத்து இந்த ஜிஎஸ்டியை தேச முழுமைக்கும் அர்ப்பணித்த இந்த அரசு பாராட்டுக்குரியதே. தனக்கோ தன் கட்சிக்கோ என்ன லாபம் என்று குறுகிய நோக்கிருந்தால் இந்த முயற்சி இந்த அளவுக்கு வந்திருக்காது. பிரதமர் மோடி அவர்களின் ஒருங்கிணைனத நாட்டுநலன் சார்ந்த செயல்களில் இந்த ஜிஎஸ்டி மிக முக்கியமானதுதான்.

எடுத்தவுடனேயே இந்த ஜிஎஸ்டி நன்மைகளைத் தந்துவிடுமா என்னும் சரியான கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். சில தொழில்களும் நிறுவனங்களும் பாதிப்பைச் சந்திக்கும். சில பொருட்களின் விலை குறுகிய காலத்தில் உயரவும் வாய்ப்பு இருக்கிறது. பல இடங்களில் அரசு இயந்திரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகாரிகள் முழுப்புரிதல் இல்லாமல் வர்த்தக நிறுவனங்களைப் பாடுபடுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் சில மாதங்களில் சரியாகி எண்ணெய் போட்ட சக்கரமாய் இந்த ஜிஎஸ்டி சுழல ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பகால சங்கடங்களைத் தவிர்க்க முடியாது. அரசும் அதிகாரிகளும் இதுபற்றி யோசித்து இவற்றைத் தாண்டி ஜிஎஸ்டி யை நல்ல முறையில் நிர்வகிக்கும் திட்டங்களைத் தயார்ப்படுத்தி இருப்பார்கள் என்று நிச்சயம் நம்பலாம்.

ஒருங்கிணைந்த உற்பத்திக் கேந்திரமாக உலக வரிசையில் இந்தியா முந்தி நிற்க வேண்டுமென்றால் இந்த ஜிஎஸ்டி மிக அவசியம். இதன் மூலம் வரி விதிப்பு மற்றும் வரி வசூலில் உண்டாகப்போகும் வெளிப்படைத்தன்மை நம் பொருளாதாரத்தை இன்னும் ஸ்திரமாக்கும். இந்தியாவின் பல மூலோபாய குறிக்கோள்களை (Straegic Objectives) நிறைவேற்ற ஜிஎஸ்டி போன்ற நிர்வாக முறைமை நமக்குத் தேவை.

ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் சைனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து, எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்து, இந்தியாவில் விற்று, வரி ஏய்த்து லாபம் சம்பாதிக்கும் முறை பரவலாக நடந்து வருகின்றது. அதே பொருளை இந்தியாவில் தயாரிப்பவர்களால், இந்த வரி ஏய்ப்பு ஆசாமிகளின் விலையோடு போட்டி போட முடியவில்லை. ஏனென்றால் தயாரிப்பு வரியை அவ்வளவு சுலபத்தில் ஏய்க்க முடியாது.

“சுருக்கமா சொல்லுங்க, இந்த ஜி எஸ் டி எந்த விதத்துல வித்தியாசமானது?”

“உன் கேசையே எடுத்துக்கோ!”

“என் கேசா?”

“ஆமாம்ப்பா! முதல்ல உனக்கு நெறய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களா? நீ பாட்டுக்கு எப்ப யார் வேணுமோ அவங்க கூட சுத்துவே! அது மாதிரிதான் ஜிஎஸ்டிக்கு முன்ன! அதாவது எக்ஸைஸ், கஸ்டம், VAT, சர்வீஸ் டாக்ஸ்ன்னு பல வரிகள்! ஆனா இப்ப? உனக்கு ஒரே ஒய்ஃப்! அது மாதிரி ஒரே ஜிஎஸ்டி!”

“நல்லா இருக்கே இந்த விளக்கம்!”

“இரு கேளு! முன்னல்லாம் நீ சுகந்தியோட சினிமாக்கு போனா உஷாட்ட சொல்ல வேண்டாம். ராகினியோட பீச்சுக்கு போனா நிர்மலாட்ட சொல்ல வேண்டாம். ஆனா இப்ப, மவனே எங்க போனாலும் ஒய்ஃப்ட்ட சொல்லிட்டுதாண்டா போகணும்! அதே மாதிரிதான்! இப்ப என்ன வித்தாலும் ஜிஎஸ்டி கட்டிதாண்டா ஆகணும்!”

ஜிஎஸ்டி வந்துவிட்டால் இந்தக் குறைபாடு முற்றிலும் ஒழிந்துவிடுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி. குறுக்குப் புத்தியுடன் அரசை ஏமாற்றும் வீணர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அந்த வரி ஏய்ப்பினால் முன்பு கிடைத்த லாபம் இப்போது கிடைக்காது. ஏய்ப்பின் சங்கடங்கள் அதிகமாகும். ஜிஎஸ்டியால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதற்கு முன்பான பரிவர்த்தனையின்போது கட்டின வரியை மீட்டுக்கொள்ள முடியும் என்பதால் வரி ஏய்ப்பு விளையாட்டு கஷ்டமாகும்.

“அப்ப இந்த ஜிஎஸ்டி இந்தியாவைக்காக்க வந்த காவல் தெய்வமா?”

இல்லை, இன்னும் இல்லை. கூடிய விரைவில் ஆகிவிடக்கூடும். ‘ஒரு தேசம், ஒரு வரி’ என்பது இன்றே சாத்தியமல்ல. இன்னும் சில ஆண்டுகளில் கூடச் சாத்தியமல்ல. ஆனாலும் மிகக்குறைந்த வரி விகிதக் கட்டமைப்பு என்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் வரப்பிரசாதம்தான்.

அரசாங்கமும் நிர்வாகமும் இந்த ஜிஎஸ்டியை மெருகேற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அனுபவங்களின் மூலம் கிடைக்கும் பாடங்கள் இந்த மெருகேற்றுதலைச் சிறப்பிக்கும். நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்ளும்போது ஜிஎஸ்டியை மேலும் மேலும் இறுக்கமான, குறையற்ற வரி அமைப்பாகப் பலப்படுத்தமுடியும்.

இந்த ஜிஎஸ்டியின் முக்கிய அம்சம், மூல அடிப்படையிலான வரி அமைப்பிலிருந்து (source based tax system) நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாக (destination based tax system) மாற்றியிருப்பதுதான். இது ஒரு மிக முக்கியமான மாற்றமாகும்.

”அப்ப இந்த ஜிஎஸ்டியில் குறைகளே இல்லியா?”

இருக்கிறது!

எந்த ஒரு மாற்றமுமே பல சிக்கல்களைச் சந்திக்கிறது. 1991ல் நரசிம்ம ராவ் ஆட்சியில் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கொண்டு வந்த மாற்றங்கள் மிகப்பெரியவை. நாட்டையே புரட்டிப்போட்டு முன்னேற்றப்பதையில் தள்ளியவை. ஆனால் அதிலும் கூட, முக்கியமான பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த துறைகள் முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவைதான். வங்கித்துறை, பங்கு மார்க்கெட், மத்திய வரி அமைப்பு, தொழில்துறைக்கொள்கை போன்ற மத்திய அரசுத்துறைகளில் மாற்றங்களைச் சுலபமாகக்கொண்டு வர முடிந்தது. எப்போதெல்லாம் மாநில அரசுகளின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் தேவையோ அந்த மாற்றங்கள் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியிருந்தன. இந்த ஜிஎஸ்டியும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இந்தியாவில் நாம் எடுத்துக்கொண்ட இதற்கான காலம் மிக அதிகம். வாஜ்பாயி அரசின் கீழ் யஷ்வந்த் சின்ஹாதான் இதற்கு முதன்முதலில் வித்திட்டார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று! சில வல்லுநர்கள் இந்த ஜிஎஸ்டியும் குறைகள் கொண்டதே என்று சொல்வதற்கான முக்கிய அடிப்படை, இந்த ஜிஎஸ்டியில் இன்னுமே பல வரி விகித அமைப்புகள் இருப்பதுதான். ஒரு நல்ல வரி அமைப்பு என்பது, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில், மூன்றே மூன்று வரி விகித அமைப்புக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். சராசரி வரி விகிதம் (Mean Rate), தகுதி விகிதம் (Merit Rate) மற்றும் தகுதியின்மை விகிதம் (Demerit Rate) என்னும் மூன்றும் ஒரு நல்ல வரி அமைப்பில் இருந்தால் நாட்டின் வருவாய் மேலாண்மை சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இவர்கள் வாதம். அதன்படிப் பார்த்தால் இந்த ஜிஎஸ்டி இன்னும் பல மைல் தூரம் போகவேண்டும்.

இன்னொரு முக்கிய அம்சம் இந்த வரி அமைப்பில் இன்னும் விருப்பக்குறைபாடு (discretion) இருக்கின்றது. உதாரணத்திற்கு தங்கத்திற்கு 3% ஆனால் நோட்டுப்புத்தகங்களுக்கு 12%. ஒரு நல்ல வரி அமைப்பு என்பது சம பங்கும் எளிமையுமாய் இருத்தல் அவசியம். இந்த விருப்பக்குறைபாடு எளிமை மற்றும் சமநிலைக்கு எதிராக இருப்பதை மறுக்க முடியாது.

மூன்றாவதாக நாட்டின் மிக அதிக வருவாய் ஈட்டும் துறைகளான பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் மது, இந்த ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் அரசியல் நமக்குப் புரிந்தாலும் ஜிஎஸ்டியைப் பொருத்த வரையில் இது பெரிய குறைதான்!

இவை தவிர அரசு இன்னும் கவனிக்க வேண்டிய நடைமுறை விஷயங்களும் இதில் இருக்கின்றன.

இந்த ஜிஎஸ்டி நிர்வாகம் இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் கவனிக்கப்படப்போகிறது. ஆக மத்திய மாநில அரசின் உறவுமுறைகள் மிக நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

‘என் ஏரியாவுக்குள்ள நீ நுழைஞ்சுட்ட’ போன்ற கூக்குரல்கள் அதிகம் எழும் வாய்ப்பு இருக்கிறது. பல மாநிலங்களின் வரி அமைப்புக்கள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற தொழில்துறை மாநிலங்களில் வரி அமைப்புக்கள் எப்போதுமே ஸ்திரமானவை. ஆனால் பிஹார் மத்தியப்பிரதேச மாநிலங்களில் அவை அந்த அளவுக்குத் திறமையோ அனுபவமோ வாய்ந்தவை அல்ல. இந்த மாநிலங்கள் உற்பத்தி மாநிலங்கள் அல்ல. ஆனால் நுகர்வோர் நிறைந்த மாநிலங்கள். ஜிஎஸ்டி வரிவிகித அமைப்பு நுகர்வுக்கு மாறியிருப்பதால் பிஹார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தத்தம் வரி அமைப்புக்களைச் சிறப்பாக்க வேண்டும். ஜிஎஸ்டியின் வரி அமைப்பு நிர்வாகமே வருங்காலத்தில் முழுக்க முழுக்க மாநிலங்களின் கடமையாகப் போகக்கூடும். ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் கொள்கை முடிவுகள் மட்டும் டெல்லியில் எடுக்கப்பட்டு, மற்ற எல்லா நிர்வாகச் செயல்களும் மாநிலங்களுக்கு மாறி விடக்கூடும். மாநில அளவில் ஐஏஎஸ் ஆஃபீசர்கள் நிர்வாகம் செய்ய, மத்தியில் ரெவென்யூ ஆஃபிசர்கள் (IRS) நிர்வகிக்க, பல முட்டல் மோதல்கள் எழ வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு வழி என்னவென்றால் ரெவென்யூ சர்வீஸையும் ஐஏஎஸ்போல இந்திய அளவில் உயர்த்தி, மாநில ஜிஎஸ்டி நிர்வாகமும் இந்த ரெவென்யூ ஆஃபிசர்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். இது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய ஃபாரஸ்ட் சர்வீஸும் இப்படித்தான் அகில இந்திய அளவிலான சர்வீசாக மாற்றப்பட்டு இப்போது திருப்திகரமாகச் செயல்படுகின்றது. கொஞ்ச காலமாகவே இந்த அதிகாரத்துவ மாற்றத்திற்கான குரல்களும் டெல்லியின் அரசுச் சுவர்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு வேளை ஜிஎஸ்டிதான் அந்த மாற்றத்திற்கு வழி வகுக்கப்போகின்றதோ என்னவோ?

நரேந்திர மோடியின் அரசு இந்த ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததற்கான கிரீடத்தைச் சூட்டிக்கொள்ளலாமா?

ஜிஎஸ்டியைக் கொண்டுவருவதற்கும், மாநிலங்களுக்குச் சேவை வரி விதிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்ததற்குமான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவந்ததே மோடியின் மிகப்பெரிய சாதனைதான். எனவே அந்தக் கிரீடத்தை நமது பிரதமர் நிச்சயம் சூடிக்கொள்ளலாம்.

மற்றபடி வெற்று வார்த்தைகளால் இந்த ஜிஎஸ்டியைக் குறை கூறுபவர்களைப் பசித்த புலி தின்னட்டும்!

Posted on Leave a comment

விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – அரவிந்தன் நீலகண்டன்

’ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அது பிரிட்டிஷாரை ஆதரித்தது’ – இது ஊடகங்களில் ஒரு சாராரால் அடிக்கடி பரப்பப்பட்டு வருகிறது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இவ்விதமாகக் குற்றம் சாட்டி மங்களூரில் பேசிய உரையை தமிழ்நாட்டில் ஒரு பதிப்பகம் சிறு வெளியீடாக வெளியிட்டுப் பரப்பியது. இணையதளத்தில் அதன் பிடிஎஃப் பெரிய அளவில் சுற்றுக்கு விடப்பட்டது. இதே போன்ற குற்றச்சாட்டுக்களைத் தொகுத்து, இன்னும் கறாராக Wire.in எனும் தீவிர இடதுசாரி இணையத்தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இக்குற்றச்சாட்டுக்களின் சாராம்சம் என்ன?

· ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் தொடக்கக் காலங்களில் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டாலும் கூட பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய பிறகு விடுதலைப் போரிலிருந்து விலகிக் கொண்டார்.


· ஆர்.எஸ்.எஸ் ஒரு அமைப்பாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறவில்லை.


· காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது ஆர்.எஸ்.எஸ் அப்போராட்டத்தில் பங்கு பெறவில்லை. அது பிரிட்டிஷாரை ஆதரித்தது.


டாக்டர். ஹெட்கேவாரும் விடுதலைப் போராட்டமும்

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர். கேசவ பலராம் ஹெட்கேவார், வங்காளத்தில் தம் மருத்துவ படிப்பின்போதே அனுசீலன் சமிதி எனும் புரட்சியாளர் இயக்கத்தில் செயலாற்றியவர். முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷாருக்கு எதிரான அன்னிய நாடுகளின் உதவியுடன் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை ஏற்படுத்த, வெளிநாடுகளில் இருந்த இந்திய விடுதலைப் போராளிகளுடன் இந்தியப் புரட்சியாளர்கள் ஒரு ரகசிய தொடர்பு வட்டத்தை ஏற்படுத்தினர். அம்முயற்சியில் ஹெட்கேவார் ஈடுபட்டார். ஆனால் சரியான ஒருங்கிணைப்பும் பிரிட்டிஷாருக்கு எதிரான அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பும் இல்லாமல் அம்முயற்சி தோல்வி அடைந்தது.

பின்னர் டாக்டர். ஹெட்கேவார் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டார். நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பில் அவர் இருந்தார். காங்கிரஸ் இயக்கம் காந்தி தலைமையில் கிலாபத்தை ஆரம்பித்தது. துருக்கியில் கலீபா அரசு கலைக்கப்பட்டதற்கு எதிரான இஸ்லாமியப் பிரச்சினையை இந்திய விடுதலைப் போராட்டத்துடன் கலப்பது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் அவருக்கு ஐயம் இருந்தது. இருந்தாலும் காங்கிரஸில் அவர் இருந்தபடியால் நாக்பூர் கிலாபத் அமைப்பின் கமிட்டியில் அவர் உறுப்பினராகச் செயல்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை அவர் 1925ல் தொடங்கிய பிறகும் அவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். டிசம்பர் 1929ல் காங்கிரஸ் பரிபூரண சுதந்திரத்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜனவரி 26 1930 பூரண விடுதலை நாளாக நாடெங்கும் கொண்டாடப்படும் என அது அறிவித்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் கிளைகளின் பொறுப்பாளர்களுக்கு ஹெட்கேவார் பின்வரும் சுற்றறிக்கையை அனுப்பினார்:

காங்கிரஸ் பரிபூரண சுதந்திரத்தை தன் குறிக்கோளாக அறிவித்து 26 ஜனவரி 1930ம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட மக்களைக் கோரியுள்ளது. நாம் விடுதலை எனும் நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது இயற்கையாகவே நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகும். அக்குறிக்கோளுடன் உழைக்கும் எந்த அமைப்புக்கும் நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்பது நம் கடமையாகும். எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எல்லாக் கிளைகளிலும் (ஷாகாக்களிலும்) மாலை ஆறு மணிக்கு நம் தேசியக் கொடியான காவிக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்துவோம். விடுதலை என்பதன் உண்மையான பொருளை விளக்குவோம். இந்த இலக்கை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதால் இதனை நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சிக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதன் அறிக்கைகளைப் பொறுப்பாளர்கள் அனுப்ப வேண்டும். (21-ஜனவரி-1930,தேதியிட்ட கடிதம், Rakesh Sinha, Dr Keshav Baliram Hedgewar, Publications Division, 2015, p.95)

அதெப்படி காவிக்கொடியை தேசியக் கொடி என ஹெட்கேவார் குறிப்பிடுகிறார் என்று எவருக்கேனும் ஐயம் ஏற்படலாம். ஹெட்கேவார் இக்கடிதத்தை எழுதியதற்கு ஒரு ஆண்டுக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி 1931ல் தேசியக் கொடியைத் தேர்ந்தெடுக்க அதிகாரப்பூர்வக் குழு ஒன்றை நியமித்தது. அதில் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும் உறுப்பினராக இருந்தார். அக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் அது தேசியக் கொடியாக காவி வண்ணக் கொடியில் நீல இராட்டை பொறித்த கொடியையே பரிந்துரைத்தது. அக்குழுவின் அறிக்கை கூறியது:

எங்கள் குழுவின் பார்வையில் தேசியக் கொடியானது தனித்தன்மை கொண்டதாகவும் கலையழகு கொண்டதாகவும் செவ்வக வடிவத்திலும் வகுப்புவாதத்தன்மை அற்றதாகவும் இருக்க வேண்டும். கொடியின் நிறம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு ஒருமித்த கருத்தே உள்ளது. கொடி ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். அதில் இருக்கும் சின்னம் மட்டும் வேறொரு நிறத்தில் இருக்க வேண்டும். இத்தேச மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக, வேறெந்த நிறத்தையும் காட்டிலும் தனித்தன்மை கொண்டதாக, இந்தப் பழமை வாய்ந்த தேசத்தின் நீண்ட பாரம்பரியத்துடன் இணைந்த ஒன்றாக ஒரு நிறம் உண்டென்றால் அது காவி நிறமாகத்தான் இருக்க முடியும்.

1930ல் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட வன சத்தியாகிரக போராட்டத்தில் அவர் ஈடுபட்டுச் சிறை சென்றார். அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் வயது ஐந்துதான். ஆர்.எஸ்.எஸ் முழுமையான தேச விடுதலை என்கிற இலக்கை ஆதரித்தது. ஆனால் அது அரசியல் இயக்கமல்ல. எனவே அரசியல் இயக்கங்களில் அது ஒரு அமைப்பாகப் பங்கேற்க முடியாது என்ற போதிலும் தனிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அதாவது ஸ்வயம் சேவகர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். காங்கிரஸாக இருந்தாலும் இந்து மகா சபையாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலந்து கொள்ளாது. ஹெட்கேவாரின் இந்த நிலைப்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமல்ல, இந்து மகாசபை தலைவராக அன்று இருந்த சாவர்க்கருக்குமே எரிச்சலூட்டியது.

தனிப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை அதன் கட்டுப்பாடு, தீண்டாமையின்மை ஆகியவற்றுக்காகப் பாராட்டியுள்ளார்கள். இதில் காந்தியும் அடங்குவார். ஆனால் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் தம் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்று சில காங்கிரஸ் தலைவர்கள் (காந்தி அல்ல) விரும்பினார்கள். ஆனால் ஹெட்கேவார் அதை ஏற்கவில்லை.

ஆனால் இயக்கப் பங்கேற்பு இல்லாவிட்டாலும் சங்கம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உதவி அளிக்கத் தயாராகவே இருந்தது. த்ரைலோக்கியநாத் சக்ரபர்த்தி எனும் வங்கப் புரட்சியாளர் ஹெட்கேவாரைச் சந்தித்து இதுகுறித்து உரையாடினார். வருங்காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் பட்சத்தில் அதற்கான தொண்டர்களை அளிக்க ஹெட்கேவார் அவருக்கு உறுதியளித்தார்.1 பகத் சிங்கின் தோழரான ராஜ்குரு ஹெட்கேவாரை அறிவார். சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு தலைமறைவாக ராஜ்குரு இருக்க ஸ்வயம்சேவகர்கள் உதவினர். பின்னர் காங்கிரஸ் பெரும்புள்ளி ஒருவரின் உறவினரால் ராஜ்குரு பிரிட்டிஷாருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

வரலாற்றாசிரியர் முனைவர் காஞ்சான்மோய் மஜும்தார் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். 1935ல் காங்கிரஸ் தம் உறுப்பினர் எவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக இருக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட காங்கிரஸில் ஒரு முக்கியமான தலைவராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டாக்டர் ஹெட்கேவாருக்குத் தூது அனுப்பினார். ஆயுதம் தாங்கிய புரட்சி ஏற்படும் பட்சத்தில் அதற்கு ஆர்.எஸ்.எஸ் உதவி அளிக்க வேண்டுமென்பது போஸின் கோரிக்கை எனக் கூறப்படுகிறது.

‘மாடர்ன் ரிவ்யூ’ (மார்ச் 1941) பத்திரிகை ஹெட்கேவாரின் மரணத்துக்கு ஒருநாள் முன்னர் நேதாஜி போஸ் அவரை மரணப் படுக்கையில் சந்தித்தார் என்பதை ஆவணப்படுத்துகிறது.

’குருஜி’ கோல்வால்கரும் விடுதலைப் போராட்ட காலகட்டமும்

டாக்டர் ஹெட்கேவாருக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் தலைவராகப் பதவி ஏற்றவர் கோல்வால்கர். பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி அகண்டானந்தரிடம் தீக்கை பெற்றவர். அகண்டானந்தர் தீர்த்த யாத்திரை செல்லும்போது சரகாச்சி எனும் இடத்தில் ஏழை இஸ்லாமியச் சிறுமி ஒருத்தி பஞ்சத்தில் படும் கஷ்டத்தைக் கண்டார். ஏழைகளின் துயர் துடைப்பதே ஆன்மிகச் சாதனை என தீர்க்கயாத்திரையை விட்டுவிட்டு சேவையில் களமிறங்கி வாழ்ந்தார். அவரிடம்தான் கோல்வால்கர் தீக்கை பெற்றார். இயல்பாகவே கோல்வால்கருக்கு அரசியலில் ஒரு விலகல் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் அப்போதுதான் கவனம் பெற ஆரம்பித்திருந்தது. குறிப்பாக பிரிட்டிஷ் உளவு அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்ஸைக் கவலையுடன் உற்றுக் கண்காணிக்க ஆரம்பித்திருந்தன. ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாற்றை ’A brotherhood in Saffron’ எனும் தலைப்பில் எழுதிய ஆண்டர்ஸன் & தாம்லே கோல்வால்கரின் மனநிலையைக் குறித்து ‘பிரிட்டிஷ் அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்ய எந்த விதக் காரணத்தையும் தாம் அளித்துவிடக் கூடாது என்பது கோல்வால்கரின் மனநிலையாக இருந்தது’ என எழுதுகின்றனர்.

பொதுவாக இதைக் குறித்து கோல்வால்கரே ஒத்துக் கொள்வதாக அவரது பேச்சிலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்படுவதைக் காணலாம்: “1942லும் பலரது மனதிலும் தீவிரமாக உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. …சங்கம் செயலூக்கமற்ற மனிதர்களால் ஆன அமைப்பு, அவர்களின் பேச்சுக்களெல்லாம் பயனில்லாதவை என்கிற எண்ணம் வெளியிலிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, நம் ஸ்வயம் சேவகர்களுக்கே ஏற்பட்டிருந்தது. அவர்கள் பெருமளவில், 1942 பிரிட்டிஷ் வெளியேற்ற இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடாதது குறித்து அருவெருப்படைந்தனர்.’ சித்தார்த் வரதராஜன் என்கிற அமெரிக்க வாழ் இடதுசாரி நடத்தும் wire.in என்கிற இணைய தளத்தில் அண்மையில் ஆர்.எஸ்.எஸ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என வெளிவந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள கோல்வால்கரின் பேச்சு இது.

ஆனால் இம்மேற்கோள் சொல்லாமல் விட்டுவிடும் இரண்டு முக்கிய வாக்கியங்கள் இப்பேச்சில் உண்டு. “அக்கால கட்டத்திலும் சங்கத்தின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. சங்கம் நேரடியாக எதையும் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தது.”

இதில் முக்கியமான வார்த்தை ‘நேரடியாக’ என்பதுதான். பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸை நேரடியாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்துடன் தொடர்புப்படுத்த எந்தத் தரவும் பிரிட்டிஷ் அரசுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

நேரடிச் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாக ஈடுபடவில்லையே தவிர பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குள் வெளிப்படையாகக் கற்பிக்கப்பட்டதை அதே ஆவணங்கள் கூறுகின்றன.

27 ஏப்ரல் 1942 தேதியிட்ட பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கை: ‘பூனா ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கோல்வால்கர் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் சுயநலத்துடன் செயல்படுவோரைக் கண்டித்து சுவயம்சேவகர்களிடையே பேசினார்.’

28-ஏப்ரல்-1942: இனிவரும் காலகட்டங்களில் சுவயம்சேவகர்கள் தேசத்துக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 2

உள்துறை செயலகத்தில் Pol. F. No. 28/3/43-Pol (I) எனும் இலக்கமிட்ட உளவுத்துறை அறிக்கை ஜபல்பூர் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பிரிட்டிஷ் எதிர்ப்பு பகிரங்கமாக இருந்ததை ஆவணப்படுத்துகிறது. “பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து அகற்றுவதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்” என அங்கே பேசிய அனைவருமே குறிப்பிட்டதாகக் கூறுகிறது. (கவனிக்கவும் முஸ்லீம்களை விரட்டுவதல்ல, பிரிட்டிஷாரை விரட்டுவதே நோக்கம் என, பிரிவினைவாத அலையும், வகுப்பு மோதல்களும் நிலவியபோதும் ஆ.எஸ்.எஸ்ஸுக்குள் பேசியிருக்கிறார்கள்.)

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ’நேரடியாக’ ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் பங்கு பெறவில்லைதான். ஆனால் மறைமுகமாக முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவியதென்பதை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் கூறியுள்ளார்கள். டெல்லி ஆர்.எஸ்.எஸ் தலைவரான லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா அவர்களில் இல்லத்தில்தான் பிரிட்டிஷ் காவல்துறைக்குத் தெரியாமல் விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா அஸஃப் அலி மறைந்திருந்தார். அச்சுத் பட்வர்த்தன், நானா பட்டில் ஆகியோரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் வீடுகளில் மறைந்திருந்து செயல்பட முடிந்தது.

காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்கூட அழிக்கப்பட்ட ஒரு அத்தியாயமும் உண்டு.

ஆகஸ்ட் 16 1942ல் மகாராஷ்டிர மாநிலத்தில் சிமூர் பகுதியில் பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை இங்கு வழி நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள். இந்த எழுச்சி பிரிட்டிஷ் காவல்துறையால் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் எனப் பாரபட்சமின்றி அனைவரும் தாக்கப்பட்டுக் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இதுபோதாதென்று பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிமூர் ஆர்.எஸ்.எஸ் கிளைத்தலைவர் தாதா நாயக் ஒருவர். துப்பாக்கிச் சூட்டிலும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் எழுச்சியின் காரணமாக மூன்று நாட்களுக்கு இங்கு விடுதலையே அறிவிக்கப்பட்டு பிரிட்டிஷாரால் நுழையவும் முடியவில்லை. இறுதியில் ராணுவ போலீஸ் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளே நுழைந்து ஒரு படுகொலையை நிகழ்த்தியது. ஆனால் இது குறித்த செய்திகள் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டது அரசு.

உளவுத்துறை அறிக்கைகளில் சிமூர் கிளர்ச்சிக்கு முக்கியமான காரணியாக இருவர் சொல்லப்பட்டனர். ஒருவர் தாதா நாயக் – இவரே ‘பெருமளவு பொறுப்பு’ எனக் கூறப்பட்டது. இவர் தவிர நான்கு ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட மற்றொருவர் சந்த் துகோஜி மகராஜ். பக்தி இயக்க பாணியில் சமூக சீர்திருத்தங்களைச் செய்தவர். காந்தியர். இவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இவரும் கைது செய்யப்பட்டார். காந்தியவாதியான பன்சாலியின் உண்ணா விரதப் போராலும், இந்து மகாசபைத் தலைவரான நாராயண் பாஸ்கர் கரே ஆகியோரின் முயற்சியாலும் இத்தண்டனைகள் தவிர்க்கப்பட்டன. சந்த் துகோஜி மகராஜ் பின்னாட்களில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை உருவாக்கினார்.

ஆனால் சிமூர் கிளர்ச்சியும் படுகொலையும் பிரிட்டிஷாரால் அன்றும் பின்னர் நேருவியவாதிகளாலும் மறக்கடிக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும். இதன் விளைவாகத்தான் இன்றும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வில்லை என்பதை இன்றும் பரப்ப முடிகிறது.

ஒரு வளரும் இயக்கமாக அன்னிய ஆட்சியால் எப்போதும் தடை செய்யப்படும் ஆபத்தும் அன்றைய காங்கிரஸில் சில பொறாமை கொண்டவர்களால் எவ்வித உதவியும் கிடைத்திராத நிலையும் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போரில் சிறப்பாகவே பங்காற்றியுள்ளது. ஆனால் இப்படியெல்லாம் குற்றம் சாட்டும் இடதுசாரிகள் என்ன செய்தார்கள்?

அதை அடுத்த இதழில் காணலாம்.

1. Satyavrata Ghosh, Remembering our revolutionaries, Marxist Study Forum, 1994 p.57)

2. No.D. Home Pol. (Intelligence) Section F. No. 28 Pol.

Posted on Leave a comment

எங்கே வேலைகள், திறன்கள்?: இந்திய இளைஞர்களின் எதிர்காலம் – ஜடாயு

இந்தியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய எல்லாக் கருத்தாக்கங்களிலும் ‘மக்கள்தொகையின் லாபப்பங்கு’ (Demographic Dividend) என்ற சொல்லாடலைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது எதைக் குறிக்கிறது? சீரான வளர்ச்சி விகித அளவீடுகளின் படி, 2025ம் வருடத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் 65% பேர்கள் 15லிருந்து 59 வயது வரையிலான வரம்புக்குள் இருப்பார்கள். அதாவது உலகிலேயே மிக அதிகமான அளவில் ‘வேலைசெய்யக் கூடிய வயதில் உள்ள மக்களை’க் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் [1]. அதுவும் உலக அளவில், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் புதிய குழந்தைகள் பிறப்புவிகிதம் ஆண்டுக்காண்டு வேகமாகக் குறைந்துகொண்டும், ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் வரும் நிலையில், இந்தியாவின் ‘இளவயதினர் மக்கள்தொகை’ என்பதே நாட்டிற்கு ஒரு பெரும் மூலதனமாக இருக்கும். உலகளவில் திறன்வாய்ந்த பணியாளர்களுக்கான பற்றாக்குறை 5.65 கோடி என்று இருக்கையில், இந்தியா அதன் எல்லா வேலைவாய்ப்புப் பணிகளும் நிரப்பப்பட்டு கூடுதலாக 4.7 கோடி என்ற அளவில் பணிபுரியும் வயதிலுள்ள மக்களைக் கொண்டிருக்கும் [2] (இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை சுமார் 125 கோடி). இதையெல்லாம் கணக்கிட்டுத்தான், நாம் தொடக்கத்தில் கண்ட அந்த சொல்லாடல் உருவாக்கப்பட்டது.

இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில், இத்தகைய மக்கட்பெருக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சவால். இதனை ‘லாபப்பங்கீடாக’ மாற்றுவது என்பது பலரும் நினைப்பதுபோல அவ்வளவு நேரடியானதோ எளிதானதோ அல்ல என்பதே நிதர்சனம். தற்போதைய கணக்குப்படி, 2017ம் ஆண்டில் இந்திய இளைஞர்களில் 30% பேர் எந்தவேலையும் செய்யாமலும், கல்வியிலோ அல்லது தொழிற்பயிற்சியிலோ ஈடுபடாமலும் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன [3]. ஆயினும், இதன் பக்கவிளைவாக பெரிய அளவில் தெருக்கலவரங்களோ, உடல்/மன நிலை பாதிக்கப்படுவதோ அல்லது போராட்டங்களோ எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால், இந்தியாவின் குடும்ப அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் பற்றிய எதிர்பார்ப்புகள் மிகக்குறைவாக இருப்பது, தற்காலிக எடுபிடிவேலைகள், மத்திய மாநில அரசுகள் தரும் அற்பசொற்ப சலுகைகள் இலவசங்கள் போன்ற பல காரணிகளால் இத்தகைய இளைஞர்கள் ஜீவித்திருப்பதும் அமைதியாக நடந்துகொள்வதும் சாத்தியமாகிறது. மற்ற பல நாடுகளில் இதுபோன்ற ஒரு நிலைமையை நாம் கற்பனை செய்யக் கூட முடியாது. ஆனால், இதே நிலைமை தொடர்ந்தால், இத்தகைய இளைஞர்களின் எண்ணிக்கை வருடாவருடம் மேன்மேலும் அதிகரிக்கும். அப்போது இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து ‘லாபப்பங்கீடு’ என்று வர்ணிக்கப்பட்ட விஷயம் ஒரு கொடுங்கனவாகவும் ஆகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தும் கூட, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை வேலைகளில் ஈடுபடுத்த முடியாமைக்கு, தேவையான திறன்கள் அவர்களிடம் இல்லை என்பது ஒரு முக்கியமான ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது தெரியவரும். நாட்டின் பணியாளர் / தொழிலாளர் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், அதில் முறையான பயிற்சியும் திறனும் பெற்றவர்களின் (Formally Trained and skilled workforce) சதவீதம் அமெரிக்காவில் 52%, பிரிட்டனில் 75%, ஜெர்மனியில் 80%, ஜப்பானில் 80%, தென் கொரியாவில் 96%. சீனாவில் கூட, 25%. ஆனால், இந்தியாவில் இது வெறும் 5%தான் [4]. பெருமளவிலான இந்தியத் தொழிலாளர்கள், போதிய திறன்கள் இல்லாமலேயே (Unskilled labor) ஏதேதோ பணிகளில் கிடந்து உழல்பவர்கள்தான்.

இதனை நன்கு உணர்ந்திருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ‘திறன் மேம்பாட்டிற்கான தேசியக் கொள்கை’ (National Policy on Skill Development) ஒன்றை 2009ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி 2022க்குள்ளாக 50 கோடி இளைஞர்களுக்குப் பல்வேறு திறன்களில் பயிற்சியளிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்தத் திட்டத்திற்குக் குறைந்த இலக்குகளே நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான தீவிரம் ஏதுமின்றி மிகவும் தொய்வாகவே இயங்கியது.

2011-12: திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான இலக்கு 46.5 இலட்சம் இளைஞர்கள். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 45.7 இலட்சம்.

2012-13: இலக்கு 72.5 இலட்சம். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 51.9 இலட்சம்.

2013-14: இலக்கு 73.4 இலட்சம். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 76.4 இலட்சம்.

2014ம் ஆண்டு மே மாதம், நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், இலக்கு மிகக் குறைவாக உள்ளது உடனடியாக உணரப்பட்டு, உயர்த்தப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை.

2014-15: இலக்கு 1.5 கோடி. பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 76.1 இலட்சம்.

எனவே, மோதி அரசு இதனைப் பெரிய அளவில் முடுக்கி விடவேண்டும் என்ற எண்ணத்துடன், 2015ல் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக் கொள்கையை (National Policy for Skill Development and Entrepreneurship) அறிவித்தது. ‘திறன் இந்தியா’ (Skill India) என்ற உத்வேகமான வாசகமும் உருவாக்கப்பட்டது. 2022ல் 50 கோடி என்ற முந்தைய அசாத்தியமான இலக்கு, 40.2 கோடி என்று திருத்தப்பட்டது. அடுத்த 7 வருடங்களில், புதிதாக உருவாகி வரும் 10.4 கோடி இளைஞர்களுக்கும், ஏற்கெனவே பல்வேறு விவசாயம் மற்றும் விவசாயமல்லாத துறைகளில் தொழிலாளர்களாக திறன்களின்றி வேலை செய்து கொண்டிருக்கும் 29.8 கோடி பேருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டது. இதற்காக தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் என்று மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டது. தற்போது ராஜீவ் பிரதாப் ரூடி இதன் அமைச்சராக (தனிப்பொறுப்பு) உள்ளார். மேலே கூறப்பட்ட சதவீதங்களும் புள்ளி விவரங்களும் இந்த அமைச்சகத்தின் இணையதளத்திலிருந்து [5] எடுக்கப்பட்டவைதான்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரு வருடங்களிலும் கூட இத்துறையின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்பது சோகம்.

2015-16: இலக்கு 1.25 கோடி, பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 1.04 கோடி.

2016-17: இலக்கு 99.4 இலட்சம், பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 19.6 இலட்சம் (டிசம்பர் 2016 வரையிலுள்ள கணக்குப்படி).

சில விவரங்களைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு தொழில் துறையிலும் எத்தனை பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சாத்தியங்கள் உள்ளன என்று கணக்கிடப்பட்டு, 24 முக்கியத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முதலில் உள்ள 15 துறைகளின் பட்டியல் கீழே [6].

இந்தப் பட்டியலில் மருத்துவத்துறை 18வது இடத்திலும், ஐ.டி. துறை 22வது இடத்திலும், ஊடகம் & பொழுதுபோக்கு 24வது இடத்திலும் உள்ளன. 2017-2022 கால அளவில், விவசாயத்தைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விவசாயத்தில் சுமார் ஒன்றரைக் கோடி வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். விவசாயம் வர்த்தக (கார்ப்பரேட்) மயமாதல் மற்றும் நவீன விவசாய முறைகள் போன்ற காரணங்களால் இது நிகழும் என்று தோன்றுகிறது.

இந்த வேலைவாய்ப்புகளுக்குத் தேவைப்படும் திறன்களைக் கண்டறிந்து பயிற்சியளிக்கும் மையங்களை உருவாக்கி நடத்துவதே திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்குத் தரப்பட்ட பணி. இதற்காக, 50க்கும் மேற்பட்ட திட்டங்களை மற்ற அமைச்சகங்களின் கீழ்வரும் 20-25 மத்திய அரசுத் துறைகளுடனும், மாநில அரசுகளுடனும் இணைந்து திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

சில முக்கியமான திட்டங்கள்:

·     Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)
·     National Apprenticeship Promotion Scheme (NAPS)
·     EAP – STRIVE (Skills Strengthening for industrial value enhancement)
·     EAP – SANKALP
·     பள்ளிகளில் திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல்.
·     1500க்கும் மேற்பட்ட பல்திறன் பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல் (Multi Skill Training Institutes – MSTI).

பிரச்சினைகளும், தீர்வுகளும்

2016-17 நிதியாண்டில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஒட்டுமொத்த நிதி ரூ.8500 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.3000 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
பயிற்சி மையங்களை நடத்த முன்வரும் தனிநபர்களையும் அமைப்புகளையும் தர அடிப்படையில் தேர்வு செய்து பிராஞ்சைஸ் (Franchise) முறையில் அவற்றிற்கு உரிமம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலீடாகக் கடன்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், இவை திரும்பிவாராக் கடன்களாக ஆனதோடு மட்டுமின்றி, பல மையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இது குறித்து அரசு கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகங்களில் தொடர்ந்து திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்த நேர்மறை / எதிர்மறை செய்திகள் கலந்து வந்து கொண்டிருக்கின்றன. போதிய பயிற்சியாளர்களை உருவாக்குதல், பயிற்சிகளின் தரம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். பயிற்சிகளை முடித்தவர்களுக்குப் பணிகள் கிடைப்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் மையங்களின் தரப்படுத்தலும் வழங்கப்படும் தொகையும் நிர்ணயிக்கப்படவேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துகொண்டு வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனியார் தொழில் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. தங்களது பழைய, புதிய பணியாளர்களுக்கான பயிற்சிகளில் இந்நிறுவனங்கள் செலவிடும் தொகையும் தேசத்தின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டின் ஒரு அங்கம்தான். இதனையும் அரசு கணக்கில்கொண்டு தனியார் தொழில் நிறுனங்களையும் இத்திட்டத்தின் பங்காளிகளாக ஆக்க வேண்டும்.

வாகன உற்பத்தி உட்பட்ட பல தயாரிப்புத் துறைகளில் தானியங்கு இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்து மனிதப் பணியாளர்களின் தேவையைக் குறைக்கும் திசையில்தான் தொழில்நுட்பம் சென்று கொண்டிருக்கிறது. ஐ.டி துறையில்கூட, செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence), தானே கற்றுக்கொண்டு இயங்கும் இயந்திரங்கள் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்கள் மனிதப் பணியாளர்களில் ஒரு சாரார் இதுநாள்வரை செய்து கொண்டிருந்த வேலைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பல்வேறு விதமான புதிய சேவைத்துறைகளும் (Service Sector), ஊடகம் போன்ற படைப்பு சார்ந்த துறைகளுமே இனிவரும் காலங்களில் வரும் இளைய தலைமுறையினருக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். அத்தகைய துறைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவைப்படும் திறன்களைப் பயிற்றுவிப்பதும் இந்த அரசுத் திட்டத்தில் முக்கியமான ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.

தற்போது இந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள சில சரிவுகளை வைத்து, இது தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அதைவைத்து இத்தகைய ஒரு திட்டத்தை இழுத்து மூடுவது பேச்சுக்கே இடமில்லை. இதிலுள்ள குறைகளைக் களைந்து கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் கூட தனது இலக்கை இத்திட்டம் அடைந்தே தீரவேண்டும்.

சான்றுகள்:

[1] எர்னஸ்ட் & யங் நிறுவனத்தின் ஆய்வறிக்கை – http://www.ey.com/Publication/vwLUAssets/EY-Government-and-Public-Sector-Reaping-Indias-demographic-dividend/$FILE/EY-Reaping-Indias-promised-demographic-dividend-industry-in-driving-seat.pdf

[2] இந்திய அரசு புள்ளிவிபரம்: http://planningcommission.nic.in/plans/planrel/fiveyr/11th/11_v1/11th_vol1.pdf

[3] ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தகவல் விவரங்கள்: https://www.bloomberg.com/news/articles/2017-07-06/rising-tide-of-india-s-jobless-a-risk-for-modi-before-key-poll

[4] தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் ஆண்டறிக்கை 2015-16 (பக்கம் 9) – http://msde.gov.in/assets/images/annual%20report/Annual%20Report%202015-16%20eng.pdf

[5] http://www.skilldevelopment.gov.in/

[6] தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் ஆண்டறிக்கை 2016-17 பக்கம்-12ல் இந்தப் பட்டியல் உள்ளது – http://msde.gov.in/assets/images/annual%20report/Annual%20Report%202016-2017%20-%20English.pdf