ஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் – லக்ஷ்மணப் பெருமாள் 

உலகில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. நவீன உலகப் பொருளாதார மயமாக்கல் காலத்தில் ஆங்கிலம் உலகின் தொடர்பு மொழியாக முற்றிலுமாக நிலை கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் உள்ளூர் ஆட்சி மொழிக்கு அடுத்தபடியாக ஆங்கிலமே இரண்டாம் மொழியாகப் பார்க்கப்படுகிறது. உலகின் புவி வெப்பமயமாதல் மாநாட்டில் தொடங்கி, விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் தமது தாய்மொழிக்கு அடுத்தபடியாக உலகின் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படுகிறது. பழங்கால இந்தியாவில் சம்ஸ்கிருதத்தில் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அதைப் போல சமஸ்கிருதம் படித்த பண்டிதர்கள், சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பல காவியங்களை, இதிகாசங்களை, தமது சொந்த மொழியில் மொழியாக்கம் செய்தனர். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் அனைத்தும் ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்படுகின்றன. தமது தேசத்தின் பிறமொழிகளில் அவை மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை.

உலகம் முழுவதும் ஆங்கிலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஆங்கிலவழிக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2 பில்லியன் குழந்தைகள் ஆங்கில வழியில் படிக்கின்றனர். வேலைவாய்ப்பு என்ற ஒற்றை மூல மந்திரமே அரசு, சமூகம், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரையும் ஆங்கிலவழிக் கல்வி என்ற மோகத்தினுள் தள்ளியுள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு நாட்டின் அரசும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழிவழிக் கல்விக்கொள்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதனால் குறைந்த எண்ணிக்கையில் பல மொழிகளைப் பேசும் மக்களின் மொழிகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகையால் பெரும்பாலான மொழிகள் அழிந்து வருகின்றன.

உலகில் 7,103 மொழி பேசுபவர்கள் உள்ளனர். ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு மொழி அழிந்து வருகிறது என்பதே சோகமான விஷயம். இந்தியாவில் தற்போது 780 மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 220 இந்திய மொழிகள் அழிந்துள்ளன. தற்போது 197 இந்திய மொழிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. பெரும்பாலும் இச்சிறுபான்மை மொழி பேசும் மக்கள் பழங்குடிகள் அல்லது மலைவாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசே 1971க்குப் பிறகு 10,000 க்கும் குறைவான மக்கள் பேசும் மொழியைக் கணக்கில் கொண்டு வருவதை நிறுத்தியுள்ளது. மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறுபான்மையினர் பேசும் மக்களின் மொழியை உயிர்ப்பிக்க அரசு உதவுகிறது. மேலும் இந்திய அரசின் செம்மொழிகளாக 22 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. போரோ (Boro) மற்றும் மெய்தி (Meitei) மொழிகள் கூட அழியும் அபாயத்தில் உள்ளன. இவை இரண்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் உள்ளன. மொழிகளின் அழிவிற்கு நவீன கல்வி முறையும், மக்கள் இடம் பெயர்தலும், பல மொழிகளுக்கு எழுத்துரு இல்லாமல் இருப்பதும், அரசின் நடவடிக்கைகளும்தான் மிக முக்கியக் காரணங்கள். ஒரு தலைமுறை மறையும் போது அம்மொழியும் மறைகிறது.

 இந்தியாவின் மொழிகள் மற்றும் பண்பாடு காப்பாற்றப்பட, மத்திய, மாநில அரசின் கல்விக் கொள்கையில் உடனடி மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை ப்ரீகேஜியிலிருந்து ஆரம்பிப்பது மிகத் தவறான கல்விக் கொள்கையாகும். வீட்டில் பேசும் மொழிக்கும் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் மொழிக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. மத்திய அரசு இந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது கூட எந்த வகையிலும் பலன் தரக்கூடியதல்ல. வேலை வாய்ப்பைக் கருத்திற்கொண்டே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர்.

இந்தியாவில் 17% குழந்தைகள் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றனர். ஐந்து (2008-09 to 2013 -14 ) ஆண்டுகளில் ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-09 ல் ஆங்கில வழிப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. 2013-14 ல் அவ்வெண்ணிக்கை 2.9 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் சேர்க்கை அதிகமாகியுள்ளது. இதன் பொருள், தென்னிந்தியாவில் ஆங்கில மோகம் இல்லை என்பதல்ல. இம்மாநிலங்களில் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை இந்தி பேசும் மாநிலங்களை விடப் பல மடங்கு அதிகம் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாநில வாரியாக: காஷ்மீரில் 99.9%, கேரளா 49.2%, டெல்லி 48.6%, ஆந்திரா 44.1%, தமிழ்நாடு 41% இமாச்சலப் பிரதேசம் 30%. காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லியின் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சராசரி 54%. வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் 80-90% மாணவர்கள் ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கின்றனர்.

பீகாரில் 4700% மாணாக்கர் சேர்க்கை ஐந்து வருடங்களில் ஆங்கிலவழிப் பள்ளியில் அதிகரித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலவழிப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஜெயலலிதா, ஏழை மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில வழியில் படிக்கலாம் என அறிவித்த மூன்று ஆண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சம். இந்தியா முழுமைக்கும் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துகொண்டே வருகிறது.

 மத்திய அரசும் மாநில அரசும் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை வைத்திருக்கும் வரையில் இந்தியாவில் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இன்னபிற மொழிகள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்த மொழிகள் அழிவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் கணினி காலக்கட்டத்தில் இம்மொழிகளில் உள்ள அத்தனையையும் சேமிக்க இயலும். அதற்கான தட்டச்சு முறைகள்கூட வளர்ந்து விட்டுள்ள காலகட்டம் என்பதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அவ்வாறானால் ஏன் இந்த மொழிகளின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று கேட்கலாம்.

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையாவது தாய்மொழிவழிக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டும் இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால சந்ததிக்கு வரலாற்றுச் சொற்களோ, கலைச் சொற்களோ தெரியாமல் போகும். கணித மற்றும் அறிவியல் சொற்களுக்கான அர்த்தம் கூடத் தெரியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. கணித மற்றும் அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் இருப்பது தெரியாமல் போகும். இப்போதே நிலைமை கிட்டத்தட்ட இப்படித்தான் உள்ளது. இது தொடர்ந்தால் என்ன ஆகும்? தமிழில் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் தமிழிலும் எழுதப்படும். இன்னும் சொல்லப்போனால், ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழ் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் படிப்பதால், தமது தாய்மொழியைக் கூடப் பிழையில்லாமல் எழுதத் தெரியாத சந்ததி உருவாகி இருக்கும். தசம எண்கள், மின்னோட்டம், மின்னூட்டம், மின் காந்தப் புலம் என தமிழில் வார்த்தைகள் இருப்பது கூடத் தெரியாத சந்ததியை உருவாக்குவதில்தான் நமது அரசுகளின் கல்விக் கொள்கை உள்ளது.

நம்மை நாமே முட்டாளாக்குவது என்பது எது தெரியுமா? மத்திய அரசு இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்பது போல நடிப்பதும், போலியாக இங்குள்ளவர்கள் இந்தியை எதிர்ப்பதும்தான். உண்மையில் தாய்மொழிக் கல்வியோடு இந்தியாவின் ஒரு மொழியையும், ஆங்கிலத்தையும் ஒரேயொரு பாடமாகக் கொண்டு வராத வரையில் அத்தனையும் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவாத ஒன்றுதான். பள்ளியில் தாய்மொழியை மழுங்கடிக்கச் செய்யும் கல்விக் கொள்கையை வைத்துக்கொண்டு இந்திய மொழிகள் வளரும் என்பது நம்பும்படியாக இல்லை.

மொத்தத்தில் ஆங்கிலம் வளரும். தாய்மொழியைப் பிழையின்றி எழுதும் தலைமுறையையும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தாய்மொழிச் சொற்களைத் தெரியாத சமூகத்தையும், ஆங்கில வழியில் படிப்பதால் எதிர்கொள்ள நேரிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை. சம்ஸ்கிருதத்தைப் பாதுகாக்க மெனக்கெடுவது போல, அரசே தமிழில் ஆவணப்படுத்தவும், தமிழ் ஆர்வலர்கள் இணையத்தில் ஆவணப்படுத்தவும் செய்ய வேண்டிய கட்டாயம் வரலாம். ஒரே ஆறுதல் தமிழ் பிராந்திய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருப்பதே அதன் வாழ்வை நிர்ணயிக்கிறது. இந்திய அரசின் அலுவல் மொழி திணிக்கப்படுவதை எதிர்ப்பதில் பிழையில்லை என்று சொல்லும் தமிழ்நாட்டில்தான் ஆங்கிலவழிப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆங்கிலம் ஒரு வணிக மொழியாக இருக்கலாம். ஆனால் பண்பாட்டு மொழியாக இருக்க முடியாது. ஆங்கிலம் பணப் பரிமாற்றத்திற்கு உதவலாம். ஆனால் நிச்சயமாக பிராந்திய மொழிகளையும் பண்பாட்டையும் காலப்போக்கில் அழிக்கும்” என்கிறார் மைசூரில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ரகுநாத். பண்பாடு வீழ்வதற்கு மிக முக்கியக் காரணமாக அவர் முன்வைப்பது தாய்மொழிவழிக் கல்வி இன்மையைத்தான். பண்பாட்டுக் கல்வியை அழிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது ஆங்கிலவழிப் பள்ளிக்கல்விக் கொள்கை என்கிறார். தாய்மொழியில் படிப்பதே பண்பாட்டையும் பேணிக் காக்கும் என்கிறார்.

உலகின் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அரசே வேலை வாய்ப்பு என்பதைக் காரணம் காட்டி ஆங்கில வழிப் பள்ளிக் கல்விக் கொள்கையைக் கையில் வைத்திருக்கும் வரை எந்த இந்திய மொழியின் வளர்ச்சியும் சாத்தியமில்லை. ஒரு தேசத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டுமானால், அந்த தேசத்தின் மொழி அழிந்தால் போதும். அதன் பின்னர் அது கடலில் மூழ்கிய கதையாகவே இருக்கும். அறிவியல்பூர்வமாக தாய்மொழியில்தான் தொடக்கப்பள்ளி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பல ஆய்வுகள் வந்தும், ஆங்கில மோகம் நோக்கி இந்திய சமூகம் செல்வதால் நிச்சயம் பிராந்திய மொழி நலிவுறவே செய்யும். இவற்றை சரிசெய்வது அரசின் கைகளில்தான் உள்ளது. மாறாக அரசுப் பள்ளியிலும் ஆங்கிலவழிக் கல்வி என்ற கொள்கை முடிவுகளையே அரசு எடுக்கிறது. கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். கட்டாயம் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்விக் கூடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளரும். இல்லையேல் உள்ளூர் அரசியல் சண்டைகள் மட்டுமே மிஞ்சும்.

***** 

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/lsquoEnglish-a-threat-to-local-languagesrsquo/article16572399.ece

http://timesofindia.indiatimes.com/india/Number-of-children-studying-in-English-doubles-in-5-years/articleshow/49131447.cms

http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/is-premature-english-making-india-a-super-dunce/

http://blogs.economictimes.indiatimes.com/cursor/why-english-should-not-be-the-medium-of-instruction-in-india/

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/seven-decades-after-independence-many-small-languages-in-india-facing-extinction-threat/articleshow/60038323.cms

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/seven-decades-after-independence-many-small-languages-in-india-facing-extinction-threat/articleshow/60038323.cms

https://thewire.in/144855/india-endangered-languages-need-to-be-digitally-documented/

Leave a Reply