Posted on Leave a comment

வி.எஸ்.ராமச்சந்திரன்: நரம்பியலின் ஷெர்லாக் ஹோம்ஸ் -நேர்காணல்: அரவிந்தன் நீலகண்டன் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)

பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் சிப்பிகளைப் பொறுக்கி விளையாடுவதில் எந்த வித ஆச்சரியமும் இல்லைதான். ஆனால், 12 வயதுச் சிறுவன் சிப்பிகளைச் சேகரித்து, அதன் வகைகளைக் கண்டறிந்து சரியாகக் கூறுவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதில் ஒரு சிப்பியின் வகையைச் சரியாகக் கண்டறிய முடியாதபோது, அமெரிக்காவில் இயற்கை வரலாற்றைப் பற்றிய அருங்காட்சியகத்தில் சங்குகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒருவருக்கு அதைக் கேட்டு அவன் எழுதுகிறான். அந்த இளம் சிறுவன் வாழும் பகுதியில் காணப்படாத, அந்த அரிய வகை உயிரினத்தைக் கண்டறிய முடியாமல் அவரும் திகைக்கிறார். அதனால், இந்தப் புதிய கண்டுபிடிப்பை ‘ஆச்சரியகரமானது’ என்று அவர் கருதுகிறார். இதெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு, நத்தை போலச் செல்லும் தபால்களும், இருட்டறையில் கழுவப்படும் புகைப்படங்களும் நடைமுறையில் இருந்த காலம்.

அந்த 12 வயதுச் சிறுவன்தான் டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன் என்று பரவலாக அறியப்படும், சக பணியாளர்களால் ராமா என்றழைக்கப்படும், டாக்டர் வில்லியனூர் சுப்பிரமணியன் ராமச்சந்திரன். பிரிட்டன் அறிவியலாளரும் எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவரை நரம்பியலின் ‘பின்னாளைய மார்க்கோ போலோ’ என்று குறிப்பிடுகிறார். நோபல் விருது பெற்ற எரிக் கண்டெல் ‘மனித மனம் செயல்படும் விதத்தைப் பற்றி பல புதிய பரிமாணங்களை அளிக்கும் பாரம்பரியத்தில் ப்ரோகா, வெர்னிக் போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் வந்தவர்’ என்று அவரைப் பற்றிக் கூறுகிறார்.

 சிறந்த நரம்பியல் நிபுணர்களில் ஒருவரான காலஞ்சென்ற டாக்டர் ஆலிவர் சாக்ஸ், டாக்டர் ராமச்சந்திரனை ‘திறமையான மருத்துவர்களில் ஒருவர் அவர்… அவர் தொட்டதெல்லாம் துலங்கும்’ என்கிறார்.

டாக்டர் ராமச்சந்திரன் அறிவு மறுமலர்ச்சிக்காலத்தைச் சேர்ந்த அறிவியலாளர்களின் உள்ளடக்கமாக விளங்குகிறார். ஒரு சாகசக்கார யாத்திரீகரைப் போல, அறியப்படாத இடங்களில் நுழைந்து, பிரபஞ்சத்தில் நம்முடைய இடத்தைப் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்குகிறார்.

அவருடைய பேச்சை முதலில் நான் சென்னையில், தமிழ் ஹெரிடேஜ் ஃபோரம் என்ற அமைப்பில் கேட்டேன். அதற்கு முன்னணிப் பதிப்பாளரான பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் ‘நியூரோகிருஷ்’-இல் உரையாற்றியதைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து, இந்த வருடம் சென்னையில் கேட்டேன். உள்ளூர்க்காரர்களால் ‘சென்னைப் பையன்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் அவர். பழைய தலைமுறையைச் சேர்ந்த சென்னை மருத்துவக் குழாமின் ஆசிரியர்களும் அடுத்த தலைமுறையின் மருத்துவர்களும் அவரை தங்கள் கல்லூரித் தோழராக நினைவுகூர்கின்றனர். தனது பதின்ம வயதுகளிலேயே ராமச்சந்திரன் கூர்மையானவராகவும் கடும் உழைப்பாளியாகவும் இருந்ததையும், அதனால் அவருடைய கல்லூரித் தோழர்கள் எரிச்சலடைந்ததையும் பற்றி ஒரு மருத்துவர் குறிப்பிட்டார். இருபது வயதுகூடப் பூர்த்தி அடையாத நிலையில், ஒவ்வொரு கண்ணிலும் தெரியும் இரண்டு சிறிய அளவிலான மாறுபட்ட காட்சிகளை மூளை எப்படி ஒன்றிணைக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரையை ராமச்சந்திரன் அனுப்பியபோது, மதிப்புமிக்க அறிவியல் இதழான ‘நேச்சர்’ திருத்தம் ஏதும் செய்யாமல் அதைப் பிரசுரித்தது. இப்போது, அடுத்த தலைமுறை மருத்துவர்களும், மருத்துவ ஆய்வாளர்களும் அவரிடம் வழிகாட்டுதலையும் தூண்டுதலையும் பெறுகின்றனர்.

டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், இந்தியாவின் சட்டத்தை வடிவமைத்த இருவரில் (மற்றொருவர் டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்) ஒருவரான சர் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயரின் பேரன் ஆவார். அவர் தந்தை ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்தவர், தாயார் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இன்று அவர் சான்டியாகோவிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் மூளை மற்றும் அறிவாற்றலுக்கான மையத்தில் இயக்குநராக உள்ளார். தவிர சால்க் கல்வி நிறுவனத்தில் உயிரியல் இணைப் பேராசிரியாகவும் உள்ளார்.

2003ல் அவர் பிரிட்டனில் பிபிசியின் ரெய்த் (BBC Reith lectures) தொடர் உரைகளை நிகழ்த்தினார் – உலகத்தில் மிகவும் மதிக்கப்படும் உரைகளில் ஒன்றாகும் அவை. எப்போதும் ஆர்வம் மிகுந்த சிறுவனின் மனத்தை உடைய அவர், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ஆர்னால்ட் டாய்ன்பே, ஓப்பன்ஹீமர், பீட்டர் மேடவார் போன்றவர்கள் உரை நிகழ்த்திய அந்த மேடையில் தானும் பேசுவதை எண்ணிப் பெருமை அடைந்திருப்பார். நோபல் பரிசு பெற்ற டேவிட் ஹ்யூபெல் டாக்டர் ராமச்சந்திரனின் ரெய்த் உரைகளை “துணிச்சலான, சார்பற்ற, சுயமான, புத்தறிவுடைய கருத்துக்களால் நிறந்தது” என்று குறிப்பிடுகிறார். அந்தத் துறையில் நிபுணத்துவம் இல்லாதவர்களும் அவரைப் போன்ற ‘வாழ்நாளையெல்லாம் மூளையைப் பற்றி ஆராய்வதிலேயே கழித்தவர்களும்’ அந்த உரைகளினால் கவரப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். டாக்டர் ராமச்சந்திரனின் இந்த உரைகள் அதிகமாக விற்பனையாகும் ‘தி எமர்ஜிங் மைண்ட்’ என்ற இதழில் தற்போது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

2012ல், ஸ்காட்லாண்டில் கிஃப்போர்ட் உரைகளை அவர் வழங்கினார். இந்த உரைகள் இயற்கை இறையியல் சார்ந்த தத்துவ இயக்கம் ஒன்றின் ஒரு பகுதியாகும். அறிவியல்-தத்துவ உரையாடலில் நோபலுக்கு இணையாக இது கருத்தப்படுகிறது. ஆனால், நரம்பியலை டார்வினின் ஆய்வுகளின் அடிப்படையில் அணுகும் டாக்டர் ராமச்சந்திரன், அழகியல் போன்ற அடிப்படை மனிதப் பழக்கங்கள் நம்முடைய பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று கருதுபவர். இந்த இயக்கத்தின் மீது அனுதாபம் இல்லாதவர். தனித்தனிக் கட்டங்களில் அடைபட்டுள்ள ‘மென்மையான’ சமூக மற்றும் ‘கடினமான’ பொருள் அறிவியல் ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியை இணைப்பதற்கான பாலமாக நரம்பியல் விளங்குகிறது என்பதைப் பற்றியே அவர் நிகழ்த்திய உரைகள் இருந்தன.

டாக்டர் ராமச்சந்திரன் கலைகளில் ஆர்வமுள்ளவர். சோழர்கால ஐம்பொன் சிலைகளை நேசிப்பவர். கர்நாடக இசையையும், சிற்பங்களையும், சித்திரங்களையும் விரும்புபவர். அழகியல் அனுபவம் மிக்க கலைகளில் உள்ள அவரது விருப்பம் அவரது அறிவியல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. அழகியல் கலை உலகில் அவர் ஈடுபட்டது இந்திய மரபில், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபிநவ குப்தருக்கு அடுத்ததாக முக்கியமான அழகியல் வல்லுநராக அவரை உருவாக்கியுள்ளது. டாக்டர் ராமச்சந்திரன் அழகியல் அனுபவத்திற்கான நரம்பியல் கோட்பாட்டை (வில்லியன் ஹிர்ஸ்டைனுடன் சேர்ந்து) 1999லேயே அறிமுகப்படுத்தினார். (நரம்பழகியல் – Neuroaesthetics என்ற பிரிவு முறையான விளக்கத்தை 2002ல்தான் பெற்றது). நரம்புகளுக்கிடையேயான தொடர்புகளை ஆன்மிக அனுபவங்களோடு இணைக்கும் அவருடைய ஆய்வு அறிவியலாளர் சமூகத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவர் மூளையின் ஜி-மாடுலை (G-Module) கண்டுபிடித்துவிட்டார் என்று கூடக் குறிப்பிடப்பட்டார்.

டாக்டர் ராமச்சந்திரன் கவனமாக, மூளையில் கடவுளோடு தொடர்புடைய ஜி-ஸ்பாட் எதுவும் இல்லை என்று விளக்குகிறார். மதம் என்பது மூளையின் பல பகுதிகளை எட்டும் பல பரிணாமங்கள் உள்ள அனுபவம் என்று கூறும் அவர், அது பற்றிய காரண-விளைவு விவாதத்தில் தாம் ஈடுபடவிரும்பவில்லை என்றும், அது ஊகம் மற்றும் தத்துவ ரீதியான பகுதிக்கு தம்மை இட்டுச்செல்லும் என்றும் கூறுகிறார். “தத்துவம் ஜுலியட்டை உருவாக்கவில்லையென்றால், தத்துவத்தை தூக்கிலிடுங்கள்” என்று புன்னகையுடன் வில்லியம் ஷேக்ஸ்பியரை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

அவருடைய விருப்பங்கள் மூளை அறிவியலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. படிமங்களை ஆய்வு செய்வதில் அவருக்குப் பெருவிருப்பம். வருடாந்திர ‘டக்ஸன் ஜெம் அண்ட் மினரல் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் 2004ம் ஆண்டு, ஒரு டைனசாரின் மண்டையோட்டை சாதாரணமாகக் கவனித்த அவர், அது அன்க்லோஸரஸ் என்ற புதிய வகை தாவர உண்ணி டைனசாராக இருக்கலாம் என்று கருதினார். இது அவரது நண்பரும், தொல்லுயிரியாளருமான க்ளிப் மைல்ஸை அந்த மண்டையோட்டைக் கூர்ந்து ஆய்வு செய்ய வைத்தது. அதன்பின், அன்க்லோஸரஸ் ஒரு புதிய வகையாகக் கண்டறியப்பட்டது. அதற்கு ‘மினோடாரசௌரஸ் ராமச்சந்திரனி’ என்ற பெயரும் வைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சிப்பிகளைச் சேகரிக்கும் சிறுவன், ஒரு டைனசாருக்கு அவனுடைய பெயர் வைக்கப்படும் என்று கனவில்கூடக் கருதியிருக்கமாட்டான்.

டாக்டர் ராமச்சந்திரன் தாம் மூளையியல் நிபுணராக ஆகியிருக்காவிட்டால் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியளராக இருந்திருப்பேன் என்று கூறுகிறார். இன்னும் அவருக்குத் தொல்பொருள் துறையில் விருப்பமுள்ளது. இந்தியத் தொல்பொருள் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் நிபுணர்களின் கண்டுபிடிப்புகள் பரவலாக்கப்படுவதில்லை என்ற வருத்தம் அவருக்கு உள்ளது. அந்தத் துறை வலது – இடது சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது பற்றியும் அவர் வருந்துகிறார்.

ஹரப்பாவின் எழுத்து வடிவங்களைக் கண்டறியும் முதல் மனிதராக தாம் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய பழைய மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான டாக்டர் கே.வி.திருவேங்கடம், நோய்களைக் கண்டறிய நுண்ணிய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியதை அவர் நினைவுகூர்கிறார். எளிய நிகழ்வுகள் மற்றும் நுட்பங்கள் மூலம் இயற்கையின் தீர்வு காணப்படாத மர்மங்களுக்கான தடயங்களை வெளிப்படுத்தக்கூடிய திறன், டாக்டர் ராமச்சந்திரனின் அறிவியல் பயணத்தின் வழிமுறைக்கான அடிப்படையாக உள்ளது. அவருக்கு மிகப்பிடித்த துப்பறியும் நிபுணராக ஷெர்லாக் ஹோம்ஸ் இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

அவருடைய தத்துவம் சார்ந்த தொடர்பு அன்பிலாலும் அதேசமயம் விலகியிருத்தலாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. தத்துவ சார்பு அவருடைய அறிவியலில் குறுக்கிடுவதை அவர் அனுமதித்ததில்லை. ஆனாலும், பரந்த விண்வெளியைப் பற்றியும், நேரத்தையும், ப்ரபஞ்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு தனிமனிதரின் வாழ்வையும், தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய தன்மையையும் பற்றிப் பேசும்போது, மனிதர்கள் சிவனின் நடனத்தின் ஒரு பகுதியே என்று அவர் நம்புகிறார். இது ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் ‘காட் ஆஃப் ஸ்பினோஸா’ தத்துவத்தை ஒத்துள்ளது. பரிணாம வளர்ச்சியடைந்துவரும் உயிரினங்கள், விரிவடைந்துகொண்டிருக்கும் ப்ரபஞ்சம் ஆகியவற்றை உள்ளடக்கிய, பரந்துவிரிந்த முறையின் குறியீடு ஆகும் அது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சிவனின் நடனத்தின் ஒரு பகுதிதான் என்பதை அறிவியலின் மூலம் அறிந்த உணர்வுகளைப் பற்றி உளவியலாளரான சூஸன் ப்ளாக்மோர் வினவியபோது, ‘அப்படி உணர்ந்தது அவரை உயர்த்தியது, தாழ்த்தவில்லை’ என்று கூறினார்.

மனம்-உடல் ஆகியவற்றிற்கு இடையேயான பிரிவு, ப்ரஞ்சு தத்துவவியலாளரான ரெனே டெஸ்கார்டெஸின் பிழை என்று கூறப்படுவது, அரிஸ்டாட்டிலின் தற்காலிக ஆத்மா பற்றிய கருத்து, அவருடைய ஹிந்துத் தத்துவ முறையின் மாயா என்ற கருத்தாக்கம் ஆகியவற்றைப் பற்றிக்கூறும்போது, டாக்டர் ராமச்சந்திரன் ஒன்றையொன்று குறுக்கிடும் அவருடைய அறிவியல் ஆய்வுகளையும் தத்துவத்தையும் சந்திக்கிறார். எனவேதான் நம்முடைய உடல் வடிவத்தை ‘தற்காலிகமான கட்டமைப்பு… உங்களுடைய மரபணுக்களை உங்கள் குழந்தைகளுக்குக் கடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓடு’ என்று அவர் பேசும்போது, அது டார்வினின் கருத்தாக்கத்தோடு இணைந்த மாயையின் வடிவமோ என்று நாம் சிந்திக்கிறோம். “இறையியல் என்னுடைய அறிவியலோடு கலப்பதை நான் அனுமதிப்பதில்லை – ஆனால் சொர்க்கத்திலும் பூமியிலும் உங்களுடைய தத்துவங்களினால் கற்பனை செய்ய முடியாத பொருட்கள் இருக்கின்றன என்றும் நான் நம்புகிறேன்” என்று புன்சிரிப்போடு அவர் கூறுகிறார். அதன்பின் அவரிடம் உள்ள இந்தியர் வெளிப்படுகிறார், “இந்தியத் தத்துவம் கிரேக்கத்தத்துவத்தின் பெரும் கூறுகளைப் பாதித்துள்ளது; பிதோகரஸ் இந்தியா வந்ததற்கான சான்றுகள் உள்ளன” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மதிப்பு மிக்க பன்னாட்டு நிறுவனங்களான ‘ஆல் சோல்ஸ் காலேஜ் ஆக்ஸ்ஃபோர்ட் (அதன் ஃபெல்லோஷிப்களில் லாரன்ஸ் ஆஃப் அரேபியாவும் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனும் அடக்கம்) போன்றவற்றின் உறுப்பினர் பதவியும், ஃபெல்லொஷிப்களும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில், ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஸிஷியன்ஸின கௌரவ உறுப்பினர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் லண்டன் அவருக்கு ஹென்றி டேல் பதக்கத்தை அளித்தது. பத்ம பூஷன் விருதைப் பெற்ற அவர் உலகில் தாக்கம் செலுத்தக்கூடிய 100 முக்கிய மனிதர்களில் ஒருவராக டைம் இதழால் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

மூளை, நினைவாற்றல் ஆகியவற்றின் மர்மங்களைப் பற்றி ஆராயும் அறிவியலாளர், மிகவும் மர்மமான, குழப்பம் தரக்கூடிய வலியை நீக்க தன்னுடைய அறிவைப் பயன்படுத்தும் மருத்துவர், நரம்பு உயிரியலின் வேர்களைக் கண்டறிந்து அதன்மூலம் மனிதத் தன்மைகளின் பல்வேறு வெளிப்பாடுகளை ஒன்றிணைப்பவர், கார்ல் ஸேகன், ஸ்டீபன் ஜே கோல்ட், லூயிஸ் தாமஸ் போன்ற ஒரு அறிவியல் கல்வியாளர், இயற்கையைக் கூர்ந்து கவனிப்பவர், கலைகளின் ரசிகர், இந்தியக் கலாசாரத்தை நேசிப்பவர் என்ற பன்முகத்தன்மை கொண்ட டாக்டர் ராமச்சந்திரன், அறிவின் ஆழங்களை எளிதாகக் தொடக்கூடிய மனத்தைக்கொண்ட ஒரு கருணைவடிவான மனிதர்.

**********

சிறு வயதில் பல துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தது – தொல்பொருள் துறையிலிருந்து, சங்குகளைப் பற்றி ஆராய்வது, வேதியியல் வரை. நரம்பியலை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது எது?

ஒரு மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படைக் கேள்விகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் நரம்பு சம்பந்தமான நோய்வாய்ப்பட்டவர்களை அணுகுவது கடினம். தலையின் உள்ளிருக்கும் மூன்று பவுண்ட் நிறையுள்ள ஜெல்லி எப்படி ப்ரபஞ்சத்தின் அளவைப் பற்றிச் சிந்திக்கிறது அல்லது எப்படி தன்னுடைய இருத்தலின் அர்த்தத்தைப் பற்றி யோசிக்கிறது? தன்னிச்சையாகச் செயல்படக்கூடியது என்று கூறப்படும் ‘நான்’ தன்னைப் பற்றி எவ்வாறு ஆய்வு செய்கிறது? எனவே உங்கள் கேள்வி, “உங்களைப் போல் அல்லாமல், மூளையைப் பற்றிய ஆர்வம் இல்லாமல் மற்றவர்களால் எப்படி இருக்க முடியும்?” என்று இருக்கவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த உயிரியல் நிபுணர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ் க்ரிக் உங்களுடைய பார்வை தொடர்பான ஆய்வுகளை “புதுமையானது நேர்த்தியானது” என்று குறிப்பிடுகிறார். இது நரம்பியலில் நீங்கள் பணிபுரியத் தொடங்குவதற்கு நீண்ட நாட்கள் முன்னால் நடந்தது. 1971ல் எளிய ஸ்டீரியோஸ்கோப்கள் தொடங்கி  2008ல் உங்கள் மடிக்கணினியில் எளிய மாயத்தோற்றங்களை டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரனின் தனித்துவமான முத்திரையோடு செய்தது வரை, நீங்கள் பார்வையைப் பற்றி அத்தனை ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்தீர்கள். இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இது உங்கள் மாமாவின் விருப்பத்தை ஒட்டி, அதனால் தூண்டப்பட்ட ஒன்றா?

உலகப் பிரசித்தி பெற்ற கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் பரமேஸ்வர ஹரிஹரன் மற்றும் சென்னையில் கணித அறிவியல் கழகத்தை நிறுவிய டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் என் மாமாக்கள். இவர்கள் இருவரும், மனிதர்களுடைய கண் பார்வைப்பற்றிய ஆய்வில் எனக்கிருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார்கள். ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவரான என்னுடைய சகோதரர் வி.எஸ்.ரவி கவிதை பாடுவதில் வல்லவர். உமர் கய்யாமின் ‘தி ரூபையத்’லிருந்து கவிதைகள் எடுத்துரைப்பார், அது என்னுடைய இந்தப் பழக்கத்திற்கு அடிகோலியது. ஒரு சிறந்த கவிஞரால் எழுதப்பட்ட கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கம், ஒரு அழகியல் பார்வையை, பொதுவாக வாழ்க்கையிலும் குறிப்பாகப் படிப்பிலும் உங்களுக்கு அளிக்கிறது.

உங்களுடைய ‘ஃபாண்டம் லிம்ப்’ ஆய்வு அந்தத் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்பட்டது. ‘ஃபாண்டம் லிம்பின் முதல் துண்டித்தல்’ ஒரு பிரபலமான அறிவியல் சாதனையாக உள்ளது. அதைப் பற்றி மேலும் சொல்லமுடியுமா?

ஒரு 30 நிமிடங்கள் கொண்ட ஆய்வில் நாங்கள் முதலில் காண்பித்தது, ஒரு கை துண்டிக்கப்பட்டவரின் முகத்தை நீங்கள் தொடும்போது, அந்தத் துண்டிக்கப்பட்ட கை மூலம் உணர்ச்சிகள் வருவதாக அவர் உணர்வார் என்பதை. கரம் துண்டிக்கப்பட்டால், முகத்திலுள்ள தோலின் உணர்வுத் தூண்டல்கள் அடுத்துள்ள நீக்கப்பட்ட கரத்தின் உணர்வுகளை ஆக்கிரமிக்கின்றன. எனவே ஒரு நோயாளியின் முகத்தை நீங்கள் தொடும்போது, அவர் கரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் அறிகிறார். இந்தச் சோதனை அடிப்படையையே புரட்டிப் போட்ட ஒன்றாக இருந்தது. ஏனெனில், சில இஞ்ச்களைக் கடந்து புதிய இணைப்புகள் ஒரு முதிர்ந்த மூளையில் சாத்தியம் என்று அது காட்டியது – அதுவரை இது சாத்தியமில்லாத ஒன்று என்று கருத்தப்பட்டது.

ஆக, உடலின் பிம்பம் மீளுருவாக்கம் செய்யப்படக்கூடிய ஒன்று என்கிறீர்கள், நாம் நினைப்பதை விட விரைவாக மாறக்கூடியதான ஒன்று அது…

ஆம்.

உங்களுடைய ந்யூரோகிருஷ் உரைகளில், வலியைக் குறைக்கக்கூடிய சிகிச்சையின் பலன்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளித்தீர்கள். மிர்ரர் பாக்ஸ் தெரபி எப்படி நோயாளிகளின் வலியைக் குறைக்க / நீக்க உதவுகிறது என்பதன் ஆய்வைப் பற்றி மேலும் விவரங்கள் அளிக்க இயலுமா?

கரம் துண்டிக்கப்பட்ட ஒருவரின் மற்றொரு கரத்தை ஒரு கண்ணாடியின் வலது புறத்தில் வைத்து, அதன் பிரதிபலிக்கும் பிம்பம், வெட்டப்பட்ட இடது கரத்தின் இடத்தில் இருப்பதைப் பார்க்கச் சொன்னோம். இப்போது அந்த வலது கரம் நகர்த்தப்பட்டால், அது வெட்டப்பட்ட கரம் மீண்டும் உருவாகி நகர்வதைப் போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. 60 சதவிகித நோயாளிகளில் இது வலியைக் குறைக்கிறது.

இது போன்ற மிரர் ஃபீட்பாக் தெரபி மற்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறதா?

ஆமாம், துண்டிக்கப்பட்ட கரங்களில் மட்டுமன்றி, சாதாரணமான உறுப்புகளில் ஏற்படும் வலிகளைக் கூட இதனால் குறைக்கமுடியும். விரல் எலும்புகளில் ஏற்படும் ஹேர்லைன் முறிவுக்குப் பிறகு, அந்தக் கையை குணப்படுத்த, உங்களுக்கு வலி, வீக்கம், சிவப்பு நிறமாக அந்த இடம் மாறுதல், சூடு, தற்காலிகமாக செயலிழந்தது போன்ற நிலை அல்லது தன்னிச்சைச் செயல் கட்டுப்படுத்தப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. ஓரிரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த முறிவு குணமாகி இந்த மாற்றங்கள் எல்லாம் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. ஆனால் எலும்பு 2 முதல் 4 சதவிகிதம் வரைதான் குணமாகிறது ஆனால் வீக்கம், வலி, செயலிழத்தல் ஆகியவை தொடர்கின்றன.

இந்த வீக்கம், கை முழுவதும் பரவுகிறது. அதனால் வலி அதிகரிக்கிறது, அந்த இடம் சிவப்பாகிறது, செயலிழக்கிறது. இந்த நிலை பல ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு சிகிச்சை ஏதுமில்லை. முதுகெலும்புக்கு அருகிலுள்ள நரம்பு முடிச்சுகளை வெட்டிவிடுவதன் மூலம் சில சமயம் இதை ஓரளவுக்குக் குறைக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க விதத்தில், நீங்கள் கண்ணாடியிடம் செயலிழந்த கரம் இயங்குவதாகச் சொல்லி, அதன் காரணமாக அது நிஜமாகவே மேஜையில் அது இயங்குவதைப் பார்க்க முடியும். வெப்பம் குறைந்து தோலின் நிறமும் இதன் காரணமாக சில நிமிடங்களில் மாறத்தொடங்குகிறது. மனதிற்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை மிகத்தெளிவாக இது விளக்குகிறது. இந்த சோதனை, கேண்டி மெக்கேப், பீட்டர் ஹாலஜென், பாட்ரிக் வால் ஆகியோரால் ஆக்ஸ்போர்டில் நடத்தப்பட்டது.

இன்னொரு உதாரணம் ‘மிர்ரர் ந்யூரான்ஸ்’களின் கண்டுபிடிப்பின் தாக்கத்தால் உருவானது. உங்கள் மூளையில் உள்ள தொடு திரையிலுள்ள பெரும்பாலான செல்கள் உங்கள் தோலைத் தொடுவதால் தூண்டப்படும்போது, நீங்கள் பார்க்க நேர்ந்தால் உங்கள் நண்பரின் தோல் தொடப்படும்போது 10% செல்கள்தான் தூண்டப்படுகின்றன. உங்கள் மூளை பார்வையின் உள்ளீட்டை வைத்து உங்கள் மூளையின் மெய்நிகர்த் தூண்டலை ஏற்படுத்துகிறது. நீங்கள் நேரடியாக அதை உணராவிட்டாலும், அவரைப் பார்ப்பதால் அந்த உணர்ச்சியோடு உங்களால் இணைய முடிகிறது. ஆனால் உங்கள் கரம் துண்டிக்கப்பட்டால், உங்களால் அவருடைய வலியை உணர இயலும் (ஆனால் கரம் இருக்கும் பட்சத்தில், இது நிகழாது ஏனெனில் அதிலிருந்து வரும் உணர்ச்சிகள் ந்யூரான் பிம்பத்தின் வெளிப்பாட்டை ரத்து செய்துவிடுகிறது). எனவே என்னுடைய மனத்தை என் நண்பனின் மனத்திலிருந்து பிரிப்பது என் தோல்தான். அதை எடுத்துவிட்டால், அவருடைய உணர்ச்சிகளை நான் உணரமுடியும்; எனக்கும் அடுத்தவருக்கும் இடையே உள்ள தடைகளை அது நீக்குகிறது. உங்களூக்கு ஒரு ஃபாண்டம் கை இருந்து உங்களுடைய நண்பரின் கை மசாஜ் செய்யப்படுவதை நீங்கள் காண நேர்ந்தால், உங்களால் ஃபாண்டம் கையில் அதை உணர முடியும். இதனால் என்ன நடக்கிறது? இந்த ஃபாண்டம் மசாஜ் அந்த ஃபாண்டம் வலியை நீக்கி சிகிச்சைக்கு உட்படுகிறது. எங்களுடைய கண்டறிதல்களின் பரவலான விளைவுகளை ஒன்றிணைப்பது, மூளை கணிணியிலிருந்து மாறுபட்ட வகையில் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது; அது ஒரு தொடர் வரிசைப்படி ஆணைகளை நிறைவேற்றுவது அல்ல – அது ஒரு படையைப் போன்ற இயந்திரம், பல தன்னிச்சையான பிணைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. என்னைப் பொருத்தவரையில், மூளை, அசாதரணமான நெகிழ்வுத்தன்மையுள்ள உறுப்பு. அதனுடன் தொடர்புகொண்டவைகளோடு, ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள்ளும், தொகுதிகளுக்கிடையேயும் சூழலின் தன்மைகளைப் பொருத்து மாறிக்கொண்டே இருக்கும் அது. இந்த தொகுதிகள் சூழலோடு மட்டும் மாறிக்கொண்டேயிருக்கும் தன்மையோடு இருப்பதில்லை, அவற்றிற்கு இடையேயும், (கண்ணாடியினால் வலி குறைவது போல) தோலுக்கும் எலும்புக்கும் (ரிஃப்ளெக்ஸ் ஸிம்பதெடிக் டிஸ்ட்ரோபி-இல் இருப்பதைப் போல), மற்ற மூளைகளுக்கு இடையேயும், மிர்ரர் ந்யூரான்களினால், கூட மாற்றம் அடைந்துகொண்டிருக்கின்றன. கணிணியைப் போலல்லாமல், மூளை ஒரு கரையான் புற்றை அல்லது பவழப்பாறை தொகுதியைப் போல உள்ளது. டேனியல் டென்னட் இது போன்ற கரையான் புற்று உதாரணத்தை உருவாக்கினார்.

இது போன்ற “செயல்படும்” பராலிஸிஸ் மற்றும் அதீதமான வலி ஒரு பக்கவாதத்தின் பின்னாலும் ஏற்படலாம். அப்போது இந்த மிர்ரர் செயல்முறை நல்ல பயனை அளிக்கிறது.

நீங்கள் ஆராயும் மற்றொரு விஷயம் ஸினெஸ்தீஷியாவைப் பற்றியது. இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள தொடர்புகளில், ஒன்றின்மேல் ஒன்று படியும் பகுதிதான் நம்மிடையே உள்ள உருவகம் என்பதன் அடிப்படை என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இது ஸினெஸ்தீஷியாவில் பெரியதாகவும் வலியதாகவும் உள்ளது. அதற்கு க்ராஸ்-ஆக்டிவேஷன் மரபணு காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு கவிஞர் உலகை நோக்கி அதிலிருந்து உருவகங்களைக் கண்டறிதல், ஸினெஸ்தேசியாவின் ‘உயர்ந்த’ வடிவம் என்று சொல்லலாமா? ஸினெஸ்தீஷியாவைப் பற்றிய ஆய்வு, இலக்கிய அழகியலின் நரம்பு-உயிரியல் பரிமாணத்தைப் பற்றிய உங்கள் அணுகுமுறையில் உதவியதா?

சுமார் 2 சதவிகித மக்கள் கறுப்பு மையினால் அச்சிடப்பட்ட எண்களை வண்ணங்களோடு சேர்த்து அறிகிறார்கள் – உதாரணமாக 3 சிவப்பாகவும், 5 மஞ்சளாகவும், 7 ஊதாவாகவும் இருக்கலாம், இது ஒவ்வொரு ஸினேஸ்தேட்ஸ்களுக்கும் வேறுபடலாம். ஆனால் அவர்கள் வாழ்வு முழுவதும் இது ஒரே நிலையில்தான் இருக்கும். இது வம்சாவளியாக வருவது. நாங்கள் சில குழுக்களுடன் சேர்ந்து, முதல்முறையாக இந்த விளைவு நிஜமானது என்றும், இது மூளையில் அடுத்தடுத்துள்ள வண்ணங்களைப் பற்றிய பகுதிகளுக்கும் எண்களைப் பற்றிய பகுதிகளுக்கும் இடையே ‘கசியும்’ அல்லது குறுக்கே செயல்படும் காரணியினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும் நிகழ்த்திக் காட்டினோம்.

மூளையின் பகுதிகள் கருவாக இருக்கும்போது ஒன்றுக்கொன்று ‘நெருங்கிய தொடர்புகொண்டவையாக’ உள்ளது. கத்தரிக்கும் மரபணுக்களும், தடைசெய்யும் கடத்திகளும் இந்த நிலையில் இருந்து மாற்றத்தை உருவாக்க ஒரு வளர்ந்த மனிதனின் மூளையில் உள்ள தனித்தனி தொகுதிகளுக்கான காரணமாக அமைகிறது. ஆனால் இந்த மரபணுக்கள் மாற்றமடைந்தால், ஒன்றுக்கொன்று ‘பேசிக்கொள்ளாத’ தொகுதிகள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றன. உதாரணமாக எண்களைப் பற்றிய தொகுதி வண்ணங்களின் தொகுதியான வி4க்கு அருகில் உள்ளது- இதன் காரணமாக எண்கள், எண்களை அறியும் ந்யூரான்களைத் தூண்டும்போது அது வண்ணங்களை அறியும் ந்யூரான்களைச் செயல்படுத்துகிறது – எனவே எண்கள் வண்ணமயமாகத் தெரிகின்றன. இதே குறையுள்ள கத்தரித்தல் அல்லது குறையுள்ள தடைசெய்யும் மரபணுக்கள் மூளை முழுவதும் செயல்படுமானால், மூளையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கருத்துகள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் – அதன் விளைவாக ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கருத்துகளை இணைக்கும் தன்மை ஏற்படும் – அதனை நாம் ‘உருவகம்’ என்கிறோம். இது ஸினெஸ்தீஷியா கவிஞர்களிடத்திலும், கலைஞர்கள் இடத்திலும், படைப்பூக்கம் கொண்ட அறிவியலாளர்களிடமும் பொது மக்களைவிட ஏழு மடங்கு அதிகமாகக் காணப்படுவது ஏன் என்பதன் விளக்கமாக உள்ளது. பயனில்லாத ஸினெஸ்தீஷியா மரபணுவின் மறைமுக நோக்கம் சில மனிதர்களைப் படைப்பூக்கம் கொண்டவர்களாக ஆக்குவதுதான். இது குழுக்களை உருவாக்குவது போல் தோன்றும் – ஆனால் நான் குறிப்பிடுவது அதையல்ல.

 இது, உங்களுடைய பிரபலமான அழகியலைப் பற்றிய எட்டு விதிகளுக்கு இட்டுச் செல்கிறது. அதைப் பற்றி விரிவாக விளக்க இயலுமா?

இங்கே கேள்வி என்னவென்றால், உலகில் பல்வேறு விதமான கலைகளின் பாணிகள் இருந்தாலும் – பொதுவான கோட்பாடுகள் அல்லது அழகியலின் ‘விதிகள்’ உள்ளதா என்பது. ஒரு கோவிலின் முகப்பில் உட்கார்ந்து யோசித்தபோது எட்டு அல்லது ஒன்பது விதிகள் எனக்குக் கிடைத்தன. சமச்சீராக எல்லாம் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பத்தை ஒரு எளிய உதாரணமாகக் கொள்ளலாம். இது குழந்தை கலைடாஸ்கோப்பில் விளையாடும்போதானாலும் சரி, அல்லது ஒரு பெரிய முகலாயச் சக்கரவர்த்தி அவர் மனைவியை மறக்காமலிருக்க அவருக்கு நினைவிடம் ஒன்றை அமைப்பதாக இருந்தாலும் சரி. உலகில் சமச்சீரான விஷயங்கள் நீண்ட நாள் வாழ்க்கையிலிருந்து உருவாகி வந்தது – இரை, உண்ணி, அல்லது இணை – சமச்சீர் உங்களுக்கு ‘முதலில் எச்சரிக்கும் அமைப்பாக’ இருந்து உங்களின் கவனத்தை உயிரியல் ரீதியாகத் தொடர்புடைய விஷயங்களின் மேல் ஈர்க்கிறது. ஒரு கலைக்குத் தேவையான அதமபட்ச விஷயம், அதைக் கவனிப்பது, அது மட்டும் போதுமானதில்லை என்றாலும்.

அதிகமாகச் சொல்லப்படாத உதாரணம் ‘சிகரத்தை நகர்த்துவது’. சதுரத்தைத் தவிர்த்து, செவ்வகத்தைத் தேர்வு செய்ய ஒரு பறவையைப் பயிற்றுவிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படித் தேர்வு செய்தால் அதற்கு ஒரு உணவுப்பொருள் பரிசாகக் கிடைக்கும். அந்தப் பறவை கற்றுக்கொண்ட செவ்வகத்திற்கும் ஒரு நீண்ட மெல்லிய செவ்வகத்திற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அதனிடம் கூறினால், ஆச்சரியகரமாக அது இரண்டாவதைத் தேர்வு செய்கிறது! இது முட்டாள்தனமானதல்ல, பறவையின் மூளை செவ்வகமான ஒன்றைத்தான் தேர்வு செய்யும்படி கற்றதே தவிர, ஒரு குறிப்பிட்ட செவ்வகத்தை அல்ல. ஒரு சோழ நாட்டுக் கலைஞர் இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார். ஒரு சராசரி ஆணின் உருவத்தை சராசரி பெண்ணின் உருவத்திலிருந்து கழித்து, அந்த வித்தியாசத்தைக் கொண்டு ஒரு ‘பெரும் பெண்’, அதாவது பெண்களில் சிறந்தவர் உருவத்தைப் படைக்கிறார். எந்த அளவு ஈர்க்கக்கூடியதாக இருப்பினும், சாதாரண உருவத்தை விட ‘சிறந்த பெண்’ என்பதற்கு பல அளவுகோல்கள் பல உண்டு. தோற்றப்பாங்கு (த்ரிபங்கா), முத்திரைகள் அல்லது சைகைகளை சற்றே மிகைப்படுத்துவதன் மூலம் நிலை, நயம், வசீகரம் ஆகிய தன்மைகளை கலைஞர் உணர்த்துகிறார்- இவை எல்லாம் ஒரு பெண்ணை சிறப்பானவராகக் காட்டுகின்றன. உங்களுக்கு மோதியின் சித்திரம் வேண்டுமென்றால், நூறு ஆண்களின் முகங்களின் சராசரியை எடுத்து, அதை மோதியிலிருந்து கழித்து அந்த வித்தியாசத்தைப் பெரிதாக்குங்கள்.

சுருக்கமான கலைகளுக்காக, ‘கடற்பறவைக் குஞ்சு கோட்பாட்டை’ நான் பயன்படுத்துவேன். ஒரு கடற்பறவையின் குஞ்சு அதன் அம்மாவின் அலகைத் தேடிப்பிடித்துக் கொத்தி, அரைகுறையாக ஜீரணமான உணவை செரிப்பதற்காக அதன் வாயினுள் தள்ளுகிறது. அதற்கு “அலகு என்பது அம்மா”. அலகு நீண்ட மஞ்சள் நிறத்தில், முனையில் சிவப்புப் புள்ளியைக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பு. விலங்குகளின் நடத்தைகளை ஆராயும் நிபுணரான நிக்கோலஸ் டின்பெர்ஜன் ஒரு முனையில் சிவப்பாக இருக்கும் நீண்ட கம்பு அந்தப் பறவைக் குஞ்சின் மூளையை ஏமாற்றும் என்று கண்டறிந்தார் – ந்யூரான்களின் தேவை எப்போதும் மிகச்சரியானதை நோக்கி இருப்பதில்லை என்பதால் இது சாத்தியமாகிறது. ஒரு துருப்பிடித்த சாவிகூட பூட்டைத் திறப்பதற்கு ஒப்பானது இது. இதில் குறிப்பிடத்தக்க கண்டறிதல், ஒரு நீண்ட, மெல்லிய கம்பு, மூன்று சிவப்புப் புள்ளிகளுடன் கூடியது பறவைக் குஞ்சுகளை உண்மையான அலகைவிட அதிகமாக ஈர்க்கிறது. இதற்கு ந்யூரான்கள் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் விதம் காரணமாகும். இந்த மற்றொரு பொருள், அலகைப் போலில்லையென்றாலும் ந்யூரான்களை தீவிரமாகச் செயல்பட வைக்கிறது. கடற்பறவைகளுக்கு கலைக் கண்காட்சி ஒன்று இருந்திருந்தால், ஒரு நீண்ட கம்பை அங்கே வைத்து வழிபட்டு, அவற்றை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்திருக்கும். ஆனால் இது ஏன் என்பது அவைகளுக்கே புரியாத விஷயம். இதுவேதான் ஒரு கலைப் பொருட்களைச் சேகரிப்பவர் ஒரு பெரும் கலைப் படைப்பைச் – பிக்காஸோவையோ அல்லது சோழர்களின் வெண்கலச் சிலைகளையோ – சந்திக்க நேரும்போது நிகழ்கிறது. அது உண்மையான பொருட்களை விட உங்கள் மூளையை பார்வைமூலம் அதிகமாகச் சலனப்படுத்துகிறது.

கடந்த வருடம் இந்திய அழகியலாளரான அபினவ குப்தரின் 1000ஆவது ஆண்டுவிழா. இந்திய இலக்கிய மரபு, ‘விமர்சகர்’ என்ற கருத்தாக்கத்தைக் கொண்டிராவிட்டாலும், ஒரு தேர்ந்த வாசகரை ‘சஹ்ருதயர்’, அதாவது ‘ஒரே மாதிரியான இதயம் படைத்தவர்’ என்கிறது. அபினவ குப்தர் சஹ்ருதயர் என்ற சொல்லை ‘ஒருவருடைய மனமென்னும் கண்ணாடி (மனமுகுரா) அழுக்குகளைக் களைந்து, ஒரு கவிஞரின் இதயத்தின் ஒன்றிணையும் தன்மை கொண்டது’ என்கிறார். இது நவீன கோட்பாடான ‘ந்யூரோஸ்தெடிக்ஸ்’ உடன் ஒத்துப்போகிறதல்லவா? இந்த எட்டு விதிகளைக் கொண்டு எங்களுக்கு நீங்கள் ஒரு புதிய சாளரத்தைத் திறந்தது மட்டுமல்லாமல், அபினவ குப்தரின் மரபை சி.பி.ஸ்னோ கூறும் மூன்றாவது கலாசாரத்திற்கு எடுத்துச் செல்ல உதவி புரிந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?

ஆம். அவர்தான் எல்லாவற்றையும் ஆரம்பித்தவர். அத்தோடு பரத முனிவரின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாட்டிய சாஸ்திரமும் உள்ளது. ஆனால், ஒரு முக்கியமான கண்ணோட்டத்தைத் தருகிறேன். அது உயர்ந்த கலைப்படைப்புகளுக்கும் ஹோட்டல் வரவேற்பறைகளிலும், பெரிய ஷாப்பிங் ப்ளாஸாக்களிலும் பதாகைகளைப் போல் தொங்கும் கலைப் படைப்புகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றியது. இவ்விரண்டிற்குமான வேறுபாடு கலாசாரத்தின் அடிப்படையானதோ அல்லது ஜனநாயக முறைப்படித் தீர்மானிக்கப்பட்டதோ இல்லை. சொல்லப்போனால், பெரும்பாலானோர், உண்மையான படைப்புகளுக்கு நகரும்முன் இந்த ‘பதாகைகளையே’ அதிகமாக ரசிக்கின்றனர். ஆனால், ‘பதாகைகளாக’ இல்லாதவை ‘சிறந்தது’ என்று யார் தீர்மானிக்கிறார்கள்? என்னுடைய அளவுகோல் எதைக்கொண்டு தீர்மானிக்கப்பட்டது என்றால், நீங்கள் பதாகைகளிலிருந்து உயர் கலைகளுக்கு முன்னேற இயலும், ஆனால் உயர்கலைகளிலிருந்து, அதைச் சுவைத்த பின்னர், பதாகைகளுக்குப் பின்னோக்கிச் செல்ல இயலாது. இது கலையின் மர்மங்களை விளக்கும் குறிப்புகளை எனக்கு அளிக்கிறது. அழகியலைப் பற்றி எத்தனை விதமான விதிகளை நீங்கள் அறிந்திருந்தாலும், உங்களுக்குக் கலையைப் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தாலும், பதாகைகளுக்கும் உயர்கலைகளுக்குமான வேறுபாட்டை உங்களால் கண்டறிய இயலவில்லை என்றால், கலையைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை என்றே நான் கூறுவேன்.

கலை அனுபத்தையும் மத ரீதியான அனுபவத்தையும் அளிக்கும் நரம்பியல் அனுபவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா? நமது மதரீதியான அனுபவங்கள் நம்முடைய பரிணாம உயிரியலை அடித்தளமாகக் கொண்டுள்ளதா?

இது இன்னும் ஆராயப்படவில்லை, ஆனால் உண்மையாக இருக்கக்கூடும். காணும் கலையாலோ அல்லது இசையாலோ உணர்ச்சிகளை நுட்பமாகத் தூண்டமுடியும். பிரிவினால் பெருங்குரலெழுப்பும் குழந்தைகளுடைய உச்சக்கட்ட உணர்ச்சியால் தூண்டப்பட்டு, கடற்பறவைக் குஞ்சு பற்றிய கோட்பாட்டின் அடிப்படையைக் கொண்டு, தர்பாரி கானடாவின் ஸ்வரவரிசை உருவாகியிருக்கலாம். பெற்றோரிடமிருந்து பிரியும்போது ஏற்படும் துயரம், ‘கடற்பறவைக் குஞ்சு விளைவின்’ வழியாக கடவுளிடமிருந்து பிரியும் நிலையாக உணரப்படுகிறது. (ஓ, என்னை ஏன் இந்த உலகிற்குக் கொண்டுவந்தாய் – துயரப்படுகுழியில் தள்ளிவிட்டு தனியாகத் தவிக்கும்படி செய்துவிட்டாய்.) ஆனால் இவை எல்லாம் நல்லபடியாக முடியும் என்று எனக்குத் தெரியும். ஆபேரி (உலகின் துயரத்தைப் பிரதிபலிப்பது) பைரவியோடும் (தனிப்பட்ட சோகத்தின் எளிமையான வடிவம்) சுபபந்துவராளி (தவம்) ஆகியவற்றோடு இதை ஒப்பிடலாம். தற்காலிகமான, உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்ட, எழுத்து வடிவம் இல்லாத வலது மூளையின் ‘மொழி’ உணர்ச்சிகளின் நுட்பத்தை வெளிக்காட்டுவதற்காகப் பயன்பட்டிருக்கவேண்டும். பொதுப் பள்ளியில் படித்த ஆங்கிலேயர் ஒருவர் ‘ரியலி’ என்பதை 11 முறைகளில் கூறமுடியும். ‘ஜான், சூசனைத் தள்ளிவிட்டு ஜன்னலின் ஊடே விமானத்தைப் பார்த்தான்?’ என்ற வாக்கியம் ஐந்து மாறுபட்ட பொருட்களை, எந்த இடத்தில் அழுத்தம் தரப்படுகிறது என்பதைப் பொருத்து, அளிக்க முடியும். உதாரணமாக ‘ஜான், சூசனைத் தள்ளிவிட்டு’ என்பதற்கும் ‘ஜான், சூசனை, தள்ளிவிட்டு’ என்பதற்கும் அல்லது ‘ ஜான் சூசனைத் தள்ளிவிட்டு, ஜன்னலின் ஊடே விமானத்தைப் பார்த்தான்’ என்பதற்குமான வேறுபாடுகள்.

நீங்கள் செய்வது, எல்லாவற்றையும் ‘நரம்பு உயிரியலின்’ வடிவமாக சுருக்குவது இல்லையா ?

ஒரு விஷயத்தை அதன் பகுதிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விவரிப்பதன்மூலம் விளக்க இயலாது. உங்களை இணையோடு நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, அவரின் மூளையில் மின்கம்பிகளை வைத்து, அவரின் ந்யூக்ளியஸ் அக்யும்பென்ஸ் மற்றும் செப்டம் செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பதால், அவரின் உணர்ச்சிகளைக் குறைத்துக் கூறுவதாகக் கொள்ளமுடியாது, மாறாக அவர் நடிக்கவில்லை என்பதை அது நிரூபிக்கிறது.

நீங்கள் செலவுபிடிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை விட எளியவற்றையே விரும்புவீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஏதேனும் காரணமுண்டா?

ஏழ்மை உங்களை ‘அறிவாற்றல் மிகுந்தவராக’ ஆக்கி உங்கள் வாழ்வின் முற்பகுதியிலேயே வளங்களைச் சரியாகப் பயன்படுத்தச் சொல்லித் தருகிறது. தவிர அறிவியலின் வரலாறும் எளிமையின் முக்கியத்துவத்தைப் பற்றியே கூறுகிறது. உயர் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தத் துவங்கும் நிமிடத்திலேயே மூலப்பொருளில் இருந்து ஆய்வின் முடிவு வரை பல படிகள் உருவாகின்றன. அதனால் தரவுகளைத் தேவையில்லாமல் மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. செயல்முறை என்பது முக்கியமானது என்றாலும் உங்கள் ஆராய்ச்சி கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் – செயல்முறையினால் செலுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது. கடைசியாக, நவீனமான முறைகள் (குறிப்பாகக் கணிணிகளைப் பயன்படுத்தக்கூடியவை) உங்களை ‘அறிவியல்ரீதியாக’ ஏதோ சாதித்துவிட்டோம் என்று நினைக்கத் தூண்டக்கூடியவை. பீட்டர் மெடவார் கூறியதைப் போல உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமாக அறிவுஜீவித்தனத்தின் குறியீடாக ஆகிவிட்டது.

‘மீம்’ என்ற சொல் டாக்டர் ரிச்சர்ட் டாக்கின்ஸால் 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விரைவிலேயே அது ‘மீமாட்டிக்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய துறையை உருவாக்கியது, தற்போது அது சிறந்த சமூக அறிவியலாளர்களால் கைவிடப்பட்டும் விட்டது. ஆனால், இப்போது இணையத்தின் மூலம் மீம்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகிவிட்டது.

மீம் என்பது சிலேடைக்கும் மேலே – அது மரபணுவுடன் சேர்ந்து ஒலிப்பது. ஆனால் அடிப்படையில் அது மாறுபட்டது. மெண்டல் சித்தரித்ததுபோல, ஜீன்கள் அளவின் அடிப்படையில் பரம்பரைகளுக்குக் கடத்தப்படுகின்றன (தனிப்பட்ட வகைப்படுத்தல்). அவை பரவும்போது மாற்றமடைவதில்லை. மீம்கள் லாமார்கியன் வழியில் – நகலெடுத்தும் கற்பிக்கும் முறை மூலமும் – பக்கவாட்டிலும் (சமமானவர்களுக்கு) செங்குத்தாகவும் (பரம்பரைகளுக்கு) கடத்தப்படுகின்றன. மரபணுக்கள் கடத்தப்படுவது விதிகளுக்கு உட்பட்டு நடப்பது, பல தலைமுறைகளைக் கடந்தது; ஆனால் மீம்களின் பரவல் அப்படியல்ல. போலார் கரடி தனது கம்பளி ரோமத்தைப் பெற பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மரபணுக்களின் இயற்கைத் தேர்வு முறை மூலம் பரிணாம வளர்ச்சி பெற வேண்டியிருந்தது; ஒரு மனிதன், அவனுடைய தாயால் கொல்லப்பட்ட ஒரு போலார் கரடியின் ரோமங்களை எடுத்து அதன் பழக்க வழக்கங்களை பிரதிபலிப்பதை ஒரு மீமாக உருவாக்கலாம். இது ஒரு தலைமுறையிலேயே நிகழக்கூடியது. ஆனால் அதன் பரவல், விதிகளுக்கு முரணானது, குழப்பத்தைத் தரக்கூடியது, கணிக்க இயலாதது – சமூகவியலில் மெண்டலியன் மரபணுவியலைப் போன்ற தெளிவான விதிகள் இல்லை.

தொழில்நுட்பம் பற்றிய நிறைவான உரையாடலில் இருந்து மீண்டும் உங்களுடைய ஆராய்ச்சிக்குத் திரும்புவோம். உங்களுடைய புதிய ஆராய்ச்சி ஆர்வமான – காலண்டர் அக்னோஸியாவைப் பற்றிப் பேசினீர்கள். அது என்ன என்பதை வாசகர்களுக்குக் கூற முடியுமா?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ப்ரான்ஸிஸ் கால்டன், நூற்றுக்கணக்கானவர்களை அவர்களுக்கு முன்னால் ஒரு வருடாந்தர காலண்டர் இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளச்சொன்னார். நம்மில் பெரும்பாலானோர் ஒரு மங்கிய செவ்வகவடிவமான ஒன்றை நம்முடைய முகத்திற்கு நேரெதிராக இருப்பதாக கற்பனை செய்வோம். ஆனால், 50ல் ஒருவர் அவருக்கே உரிய, விசித்திரமான வடிவம் உடைய மிகவும் தெளிவான காலண்டர் ஒன்றை மனதில் கண்டார்கள். உதாரணமாக ஒரு L வடிவமாகவோ அல்லது மார்பின் குறுக்கே செல்லும் ஒரு ஹூலா-ஹூப் போலவோ – இடதுபுறம் டிசம்பரும் வலது புறம்ஜூலையும் இருக்கக்கண்டார்கள்.

வலதுகைப் பழக்கம் உடையவர்களுக்கு மாதங்கள் கடிகாரச் சுழற்சி முறையிலும் இடது கைப்பழக்கம் உடையவர்களுக்கு அவை கடிகாரத்தின் எதிர்ப்பக்க சுழற்சி முறையிலும் இருந்தன. இப்படி ஒரு நோய்க்கூறு இருப்பதையோ அதன் காரணத்தையோ யாரும் நம்பவில்லை. என்னுடைய குழு – என் பட்டதாரி மாணவர்களான டேவிட் ப்ராங், சாய்பட் சுன்ஹரஸ், ஸீவ் மார்க்கஸ், எட் ஹுப்பார்ட் உட்பட – நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விஷயத்தின் மீதான ஆர்வத்தை மீட்டெடுத்தது (ஷான்னா கோல்ஸன், ஸ்டான் டிஹைய்ன், ப்ரைன் பட்டர்வொர்த் ஆகியோரும் கூட). ஒருவர் நிஜமாகவே காலண்டரைப் பார்க்கிறாரா அல்லது மனதின் கண்களால் அதைக் காண்கிறாரா – அதாவது நீங்கள் இப்போது உங்கள் பட்லரின் உருவத்தை மனதில் ஒரு தெளிவில்லாத உருவமாகப் பார்ப்பதுபோல் – என்பதை அறியாமல் பல தசாப்தங்களாக பலர் குழம்பிக்கொண்டிருந்தனர். மூளையின் பிம்பத்தை ஆராயும் பல முயற்சிகள் தெளிவான முடிவெதையும் அளிக்கவில்லை. காலண்டரைப் பார்ப்பது போல் நினைத்துக்கொள்ளுமாறும் மாதங்களின் பெயர்களை தலைகீழாக ஒன்று விட்டு ஒன்றாக, அதாவது அக்டோபர், ஆகஸ்ட், ஜூன் என்று கூறுமாறு நாங்கள் பலரிடம் தெரிவித்தோம். சாதாரணமான மக்கள் இதற்கு 40 விநாடிகள் எடுத்துக்கொண்டனர். ஆனால் காலண்டரைத் தெளிவாகப் பார்ப்பவர்கள் எளிதாக மாதங்களை தலைகீழாக 15 விநாடிகளில் கூறிவிட்டனர்.

பல தசாப்தங்களாக தீர்வுகாணப்படாதது 30 நிமிடங்களில் சித்தரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மேலும் பலரை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பிறகே இதைப்பற்றி உறுதி செய்ய முடியும். இது எதேச்சையாக நிகழ்ந்ததாகக்கூட இருக்கலாம் – தலைகீழாகக் கூறுவதில் பங்கேற்றவர்களுடைய திறன் வேறுபட்டிருக்கலாம், காலண்டரைத் தெளிவாகப் பார்ப்பவர்கள் என்று நாம் கருதிய இருவர், மற்ற எட்டு பேருடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது மிகுந்த திறன் பெற்றவர்களாக இருக்கலாம். நம்முடைய மனதிலுள்ள காலண்டரை அதிகமாக நாம் பொருட்படுத்துவதில்லை என்றாலும் எதிர்காலத்தைத் திட்டமிட அதை நாம் பயன்படுத்துகிறோம். இடது ஆங்குலர் ஜைரஸ் என்பது ஒரு சிறிய கட்டமைப்பு, அது மனிதர்களின் தனிப்பட்ட திறன்களைக் கொண்டிருக்கிறது – கணக்கிடுதல், விரல்களைப் பெயர் சூட்டி அழைத்தல், இடது / வலது வேறுபாடுகள் போன்றவை. வரிசை என்ற கருத்தாக்கம், அது காலத்தைப் பற்றியதாக இருந்தாலும் கூட, மூளையில் இடம்விட்டு நிரப்பப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், எண்களுக்கும் வரிசைகளுக்குமான ஒரு அட்டவணையை உருவாக்க மூளைக்கு நேரம் இருப்பதில்லை. எனவே காலத்தை இடங்களாக அது பிரதிபலிக்கிறது. ஆங்குலர் ஜைரஸை மூளையின் மற்ற ஒரு கட்டமைப்பான ஹிப்போகாம்பஸ் உடன் ஐ.எல்.எஃப் (inferior longitudinal fasciculus) என்ற இழைகளால் ஆன தொகுதி இணைக்கிறது என்பதைக் கண்டு நான் வியந்தேன். இந்த ஹிப்போகாம்பஸ் மூளையின் ஜிபிஎஸ் சிஸ்டம் போலச் செயல்பட்டு இடம் சம்பத்தப்பட்ட ந்யூரான்களையும், அட்டவணை சம்பந்தப்பட்ட ந்யூரான்களையும் தன்னகத்தே கொண்டு, இடம், காலம் ஆகியவற்றிற்கான சிக்னல்களை அளிக்கிறது. எனவே இந்த ஆங்குலர் ஜைரஸ்-ஐஎல்எஃப்-ஹிப்போகாம்பஸ் சிஸ்டம் மூளையின் காலண்டர் என்று நாங்கள் தெரிவித்தோம். இந்த ஆங்குலர் ஜைரஸிற்கோ அல்லது ஐஎல்எஃபிற்கோ ஏற்படும் சேதம், ஒரு புதிய நோய்க்கூறுக்கு, நாம் ‘காலண்டர் அக்னோசியா’ என்ற அழைக்கும் பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். இது எதையும், காலண்டர் உட்பட, வரிசைப்படுத்த சிரமப்படும் நிலையைக் குறிக்கிறது. அண்மையில், ஆங்குலர் ஜைரஸில் சிறு குறையுள்ள, டிஸ்லெக்ஸிக் குறைபாடுள்ள குழந்தைகள் காலண்டர் அக்னோஸியாவின் கூறுகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

இங்கு நாம் காலத்தை ஒரு சுழற்சியாகக் காண்கிறோம், மேற்கத்தியர்கள் அதை நேர்கோடாகக் காண்கிறார்கள். இது போன்றுதான் கலாசாரத் தாக்கம் மூளையில் காலண்டரின் உருவாக்கத்தை நிர்ணயிக்கிறதா?

ஆமாம்; ஜெர்மனியர்களுக்கிடையே இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, இத்தாலியர்களுடையது தெளிவில்லாமல் உள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட ஒருவர் வலதுபக்கம் அவரது தலையைத் திருப்பியபோது, ஹூலா ஹூப் காலண்டர் அவரது மார்பின் முன்பாக நிலையாக நின்றது. ஆனால், அவரது இடதுபக்கக் காலண்டர் குழப்பமாக, தனித்தன்மையோடு இல்லாமல் இருந்தது. அந்தப் பக்கமிருந்த சில மாதங்களின் நினைவுகளும் தெளிவில்லாமல் இருந்தன; அவரது நினைவுகளை எட்டும் ஆற்றல், எந்தப் பக்கம் அவர் நோக்குகிறார் என்பதைப் பொருத்துத் தடைசெய்யப்பட்டிருந்தது. அவர் முன்னால் தொங்கும் ஒரு உண்மையான காலண்டரை அவர் பார்ப்பதற்கு இணையாக அது இருந்தது – ‘எம்பாடீட் காக்னிஷன்’ என்று நாம் அழைக்கும் நிலைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நீங்கள் நரம்பியல் நிபுணராக ஆகியிராவிட்டால், என்னவாகியிருப்பீர்கள்?

சந்தேகமில்லாமல் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக – அதைப்பற்றி ஒரு உயர்வு நவிற்சியிலான வடிவம் எனக்கு உண்டு.

மூளையைப் பற்றிய ஆய்வில் ஆழமாக இறங்கும்போது ஒரு தொல்பொருள் ஆய்வாளராகவோ அல்லது தொல்லுயிரியாளராகவோ உணர்ந்திருக்கிறீர்களா?

நிச்சயமாக! பரிணாம வளர்ச்சியை தொடர்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக மூளை பதிவுசெய்து வந்துகொண்டிருக்கிறது – தொல்பொருள் ஆய்வாளர் பானைகள், ஆயுதங்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி செய்து எடுப்பது போல் மூளையும் ஒரு படிமச் சுரங்கம்.

உங்களுடைய தொல்பொருள் ஆர்வத்தைப் பற்றிப் பேசும்போது, தொல்பொருள் அகழ்வாய்வு இடங்களை மிகுதியாகக் கொண்டிருந்தும், இந்தியா அறிவார்ந்த முறையில் தனது கலாசார மரபைப் பேணாமல் இருப்பதை நாம் காண்கிறோம். இதை எப்படி சரிசெய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியத் தொல்பொருள் துறையின் சிறப்பையும், அது தரும் மகிழ்ச்சியையும் பற்றி நம் குழந்தைகளுக்கு பள்ளியில் கற்றுத்தரவேண்டும்; அவர்களில் பலர் ட்ராயைப் பற்றி அறிந்திருப்பார்கள். இல்லாவிட்டால் எட்டாம் ஹென்றியின் எட்டு மனைவிகளைப் பற்றியாவது (பிரிட்டிஷ் காலனி ஆட்சி- மெக்காலே திட்டத்தின் காரணமாக) அறிந்திருப்பார்கள். ஆனால் கிருஷ்ணர் ஆட்சி செய்த பழமையான நகரமான துவாரகையை எஸ்.ஆர்.ராவ் கண்டறிந்ததைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். துரதிருஷ்டவசமாக, நிதி வசதிகள் இல்லாத காரணத்தாலும் மத ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற காரணத்தாலும் – இந்தியாவில் வெகு சிலரே புதிய அகழ்வாராய்சிகள் தரக்கூடிய விரிவான சாத்தியங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். இதைச் சொல்ல நான் தயங்குகிறேன்; நான் காவிமயமாகிவிட்டேன் என்று என்னைத் தூற்றக்கூடும். ஆனால் நமது நாகரிகத்தைப் பற்றிப் பெருமை கொள்வதையும் மத அடிப்படைவாதத்தையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. மேற்கத்திய நாடுகளில் – பைபிள் அடிப்படையிலான தொல்பொருள் துறை ஒரு வளர்ந்துவரும் துறையாகும் – அது கிறித்துவ அடிப்படைவாதத்தோடு கூட்டும் சேரவில்லை, அதை வெறுத்தும் ஒதுக்கவில்லை.

பழங்காலத்தில் ‘ஏழு பகோடாக்களை’க் குறித்த ஐதீகங்கள் இருக்கின்றன. சுனாமி இரண்டு புதிய பழங்கால இடிபாடுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டு மாமல்லபுரம் கடலடியில் ஏதோ மர்ம நகரம் இருப்பதாக கருதிவிட முடியாது. கடலின் கீழ் கோவில்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்றாலும், இன்னும் தீவிரமாக கடல் அகழ்வாராய்ச்சி அங்கு நடத்தப்படவேண்டும்.

இதற்கு உதாரணங்கள் ஏதும் உண்டா?

பூம்புகாரில் கடலுக்கடியில் பல அகழ்வாராய்ச்சிகள் நடந்தன. அதில் ஒரு பழமையான நகரம் புதைந்து கிடந்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. ஆனால் அது பழங்கதை என்று ஒதுக்கப்பட்டது (ட்ராய் நகரைப் போல). துரதிருஷ்டவசமாக, அதீதமானவற்றோடு வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நமது புராணங்களில் சொல்லப்பட்ட எதுவும் உண்மையில்லை என்று நம்பும், ஆங்கிலேயர் சொல்வதே சரி என்று வாதிடும் கூட்டம் ஒரு புறம். இதற்கு நேர்மாறாக, நமது புராணங்களை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வோர் மற்றொரு புறம். நமது முன்னோர்கள் ஆடம்பரமான விமானங்களில் பறந்தார்கள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். உண்மையான விவாதம் – அதாவது துவாரகாவும் பூம்புகாரும் இருந்ததா என்பது அங்கே மேலும் அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலமே தீர்வு காணக்கூடிய விஷயம். அதற்கு தனியார் தொழில்முனைவோர்களின் நிதி அவசியம். இது தென்கடற்கரைக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாலத்திற்கும் பொருந்தும். இந்தத் தலைப்பு அரசியல் ரீதியாக உஷ்ணத்தைக் கிளப்பிவிடக்கூடியது என்பதால், கல்வியாளர்கள் இதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அருகிலுள்ள சுரங்கங்களில் நீரில் மிதக்கக்கூடிய எரிகற்கள் கிடைப்பது இந்தப் புராணம் உண்மையானது என்று என்னை நினைக்கத் தூண்டுகிறது. இந்தவகைக் கற்கள் ஒரு பாலத்தை நீரில் அமைக்க உதவக்கூடும் என்பது கோட்பாட்டளவில் சரியாகப் பொருந்துகிறது. ஆனால், எனக்கு இந்தியப் புவியியல் பற்றி எதுவும் தெரியாது என்பதையும், நான் இங்கு தவறு செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். மரியாதைக்குரிய கல்வியாளர்களான பிபி லால், பத்ரி நாராயணன் போன்றோர் (முறையே இந்தியத் தொல்பொருள் துறை மற்றும் புவியியல் துறையின் தலைமை இயக்குநர்கள்) இந்தக் கருத்தை ஆதரிக்கின்றனர் (எச்சரிக்கையுடன்). என்னுடைய கவலை எல்லாம் இந்தியாவில் இது போன்ற விஷயங்களைப் பற்றிய ஆர்வம் அதிகம் இல்லை என்பதுதான். இந்தியாவில் பயணம் செய்யும்போதெல்லாம் இதைப் பற்றிக் குறிப்பிடுவேன், ஆனால் எனக்குக் கிடைப்பது ஒரு சங்கடத்தோடு கூடிய புன்முறுவல்தான், ஆச்சரியமும் உண்மையை அறிந்துகொள்ளும் பேரார்வமும் அல்ல. (இது முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் அந்தரங்க வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்கு நேரெதிரானதாக இருக்கிறது.)

புராணங்களில் ஹனுமான் பிறந்ததாகக் கூறப்படும், ஹம்பியின் அருகில் உள்ள கிஷ்கிந்தா நல்லதொரு உதாரணமாக இருக்கக்கூடும். ஹனுமான், வாலி, சுக்ரீவன் ஆகியோரைப் பற்றிய கதைகள் ஹம்பியில் கொட்டிக்கிடக்கின்றன. ராமாயணத்தில் கூறப்படும் பல இடங்கள், அவற்றிற்கான தொலைவுகளோடு இவற்றை நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம். இவை தூரதேசங்களிலிருந்தும் உள்ளூர்க் கதைகளிலிருந்தும் உருவானதாக நாம் எடுத்துக்கொண்டால், அவை கச்சிதமாகப் பொருந்துவதற்கான காரணம் எதுவும் புலப்படவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள கிராமங்களில் கூறப்படும் கதைகளில் வேறுபட்ட வடிவங்கள் பொருந்தி வருவதையும் நாம் காணலாம். உதாரணமாக, சித்திரக்கூடத்திலிருந்து கிஷ்கிந்தா உள்ள தூரம் சரியானதாக உள்ளதா? ராமாயணத்தில் பல குறிப்புகள் காணப்பட்ட போதிலும் அதன் பின்புலத்தில் இலங்கை அதிகமாக ஆராயப்படவில்லை என்றே சொல்லலாம்.

உங்களுடைய துறைக்குத் திரும்புவோம். பெரும்பாலானோர் உங்களை நரம்பியலோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் உங்களுடைய ஆராய்ச்சியின் முதல் பத்துவருடங்கள் பார்வையைப் பற்றியது அல்லவா? டிஎன்ஏ துறையில் புகழ்பெற்ற ஃப்ரான்ஸிஸ் க்ரிக் உங்களுடைய சோதனைகள் எளியவை ஆனால் அறிவார்ந்தவை என்று குறிப்பிட்டார். நோபல் விருது பெற்ற டேவிட் ஹூபெல் உங்களுடைய ஆராய்ச்சியை “துணிச்சலான, சார்பற்ற, அசலான, அறிவார்ந்த ஒன்று, நிபுணர்களாக இல்லாதவர்களும் அதேசமயம் என்னைப் போல மூளையை ஆராய்வதில் ஆயுளைக் கழித்தவர்களும் இதில் ஈர்க்கப்படுவார்கள்.” என்று குறிப்பிடுகிறார். ஏன் உங்கள் துறையை மாற்றிக்கொண்டீர்கள்?

ஏனென்றால் பார்வை பற்றிய ஆராய்ச்சியில் ஏகப்பட்ட நபர்கள் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

உங்களுடைய எந்த ஆராய்ச்சியாவது சர்ச்சைக்குள்ளானதா?

ஐன்ஸ்டீன் – போர் இடையேயான வாதம் அவர்களுடைய ஆய்வுகளை சர்ச்சைக்குள்ளானது என்றா நம்மை முடிவெடுக்க வைக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தத் துறையில் உள்ள அறிவியலாளர் ஒருவர் அவருடைய சகாவால், நிரூபிக்கப்படாதது என்று சொல்லக்கூடிய ஒன்றிரண்டு விஷயங்களைச் செய்திருப்பார். என்னுடைய துறையில், நோவம் சோம்ஸ்கி போன்றவர்கள் சர்ச்சைக்குள்ளானவர்கள் என்று கருதப்பட்டாலும் அவர்களுடைய ஆரம்பகால ஆய்வுகளையும், அறிவையும் கேள்விக்குள்ளாக்க முடியாது. நோபல் பரிசு பெற்ற ஃப்ரான்ஸிஸ் க்ரிக் போன்றவர்களுடைய கோட்பாடுகள் கூட பல முறை விமரிசிக்கப்பட்டிருக்கின்றன (நினைவைப் பற்றிய அவரது கோட்பாடுகள் போன்று). ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது அல்லது உலகம் வெப்பமயமாகிறது போன்றவற்றைக் கூட விமரிசிப்பவர்கள் உள்ளனர். எங்களுடைய அதிபர்கூட வெப்பமயமாதல் கோட்பாட்டை விமரிசிக்கிறார்.

வலுவான பங்களிப்பை நீங்கள் அளித்து உங்களுக்கான உரிய இடத்தையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்திக்கொண்டால், அவ்வப்போது நீங்கள் மேற்கொள்ளும் ஊகத்திலான முயற்சிகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை. என்னுடைய ஸ்டீரியோபோஸிஸ், மோஷன் பெர்ஸப்ஷன், ஷேடிங், ப்ளைண்ட் ஸ்பாட்ஸ், ஸினெஸ்தேஷியா, ஃபாண்டம் லிம்ப்ஸ் போன்றவை காலங்கடந்து நிலைத்து நிற்கின்றன, அந்தந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு ஓரளவு பங்காற்றியுள்ளன. ஆனால், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியிலும் ஆட்டிசத்திலும் மிர்ரர் ந்யூரான் அமைப்பு ஆற்றும் பங்கு பற்றிய என்னுடைய ஊகங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சிலசமயம் ஒரு கருத்து, அது தவறாக இருப்பினும், புதிய ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டு அதன் மூலமாக பயனளிக்கக்கூடியது என்பதையும் நாம் நிலைவில் வைத்திருக்கவேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் வாட்சனிடம் கூறியது போல “மை டியர் வாட்சன், உங்களுடைய எழுத்துக்களைக் கவனமாக நான் படிக்கிறேன். உங்களுடைய வாதங்களிலுள்ள குறைகள் புதிய தீர்வுகளைக் கண்டறிய எனக்குப் பயன்படுகிறது.”

முன்னாள் பட்டதாரி மாணவரான லாரா கேஸ் உடன் நான் ஈடுபட்டுள்ள புதிய ஆய்வு இதைப் போன்றது. ஏ.ஜி.ஐ. என்று அழைக்கப்படும் தனது பாலை மாறி மாறி உணரும் நிலை பற்றிய ஆய்வு இது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடல்ரீதியாகப் பெண்ணாக இருந்தாலும் மனதளவில் ஒரு ஆணாக ஒவ்வொரு வாரமும் தன்னை மாற்றிக்கொண்டு, இல்லாத உறுப்புகளைக் கற்பனை செய்துகொண்டு, ஆணைப் போல் உடை அணிய விரும்புவார். இது வெறுமனே ‘தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்வது’ மட்டும் அல்ல, மூளையின் ஒரு பாதியிலிருந்து மற்றொரு பாதிக்கு மாறும் ஒரு தன்மை என்பதை நாங்கள் ஆய்வு செய்திருக்கிறோம். நம் எல்லாரிடமும் கூட பாலினம் நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கலாம்; நம் எல்லோரிடமும் ஒரு அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். இருந்தாலும் மூளைத் தூண்டல், மூளையைப் படமெடுத்தல் போன்ற ஆய்வுகள் மேலும் நடத்தப்படவேண்டும். இப்போதைய சான்றுகள் கோடிட்டுக்காட்டுகின்றனவே தவிர இறுதியானது அல்ல. திடீரென்று மூளையின் ஒரு பாதியை டிஎம்எஸ் (transcranial magnetic stimulator) தாக்குவது ஒரு மனிதரை பாலினத்தை மாற்றுவதற்கான காரணமாக உள்ளது என்று நாங்கள் ஊகிக்கிறோம்.

உயிரியலுக்கு டிஎன்ஏ ஆற்றிய பங்கைப்போல மிர்ரர் ந்யூரான்கள் மனநலவியலுக்கு பங்காற்றும் – ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை அளிக்கும் என்று உங்களுடைய பிரபலமான கண்டுபிடிப்பைப் பற்றி கூறியிருந்தீர்கள். உங்களுடைய டெல்-டேல் ப்ரெயின் என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுவதும் நாகரிகத்தை செம்மைப்படுத்திய மிர்ரர் ந்யூரான்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி விளக்க முடியுமா?

அவை கண்டறியப்பட்ட உடன், பிரதி மூலம் கற்கும் திறனில் அவற்றின் பங்கு இருக்கலாம் என்று நான் கூறியிருந்தேன். இந்த முறையில் கற்பது உடனடியானது, சோதனை செய்து வெற்றி/ தோல்விகளின் மூலம் கற்கும் திறனிலிருந்து மாறுபட்டது (இயற்கைத் தேர்வு மூலமான கற்கும் முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்). எளிய முறையில் கூறுவதென்றால் இது பரிணாம வளர்ச்சியை டார்வின் முறையிலிருந்து லமார்க்கியன் முறைக்கு மாற்றுகிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இயங்கும் திறனைக் கற்பதற்காகவாவது இது பயன்படுகிறது. தவிர பச்சதாபம் என்ற மற்றவரின் பார்வையிலிருந்து பார்க்கும் தன்மையையும் இது அளிக்கிறது. “மனதைப் பற்றிய கோட்பாடு” – என்பதற்கு ஒரு வடிவம் அளிக்கிறது – இது சர்ச்சைக்குள்ளானது என்றாலும் கூட.

மிர்ரர் ந்யூரான்கள் பொன் விதி (golden rule) போன்ற பிரபஞ்ச அறங்களுக்கு அடிப்படையாக உள்ளது என்பது பற்றி…

நம்முடைய மூளைகள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன – ஒட்டுண்ணி போல.

தொல்பொருள் பற்றிய உங்கள் ஆர்வத்திற்குத் திரும்புவோம். உங்களுடைய மற்ற விருப்பங்கள் என்ன?

எனக்கு சிந்துவெளி எழுத்துருவிலும் ஆர்வம் உண்டு. நரம்பியல் நிபுணர் எரிக் ஆல்ட்ஷூலரும் நானும் சிந்துவெளி எழுத்துருவுக்கும் ஈஸ்டர் தீவுகளிலுள்ள ரோன்கோரோன்கோ எழுத்துருவுக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி வியந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 20 குறியீடுகள் ஒன்று போல உள்ளன – ஆனால் இது தற்செயலானது என்று கல்வியாளர்களால் ஒதுக்கப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இவற்றின் பொருளைக் கண்டறிவதற்கான முறையைப் பற்றிய கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். ஒரு கணிணியைப் பயன்படுத்தி இந்த எழுத்துருக்களில் இரண்டு குறியீடுகள் அடுத்தடுத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இயலும். புவியின் இரண்டு முனைகளில், நான்கு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இருந்தாலும் இந்த எழுத்துருக்களுக்கு இடையே ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும். இதை யாரேனும் ஆராயவேண்டும்.

உங்களுடைய மற்ற ஆர்வங்களுக்கு வருவோம். உங்களுடைய அறிவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாக காண் கலைகளைப் பற்றிய ஆர்வம் உங்களுக்கு உண்டு. ‘ஒரு சென்னைப் பையனாக’ இசையில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?

ஆமாம். கர்நாடக இசையில் உண்டு; என்னுடைய மனநிலையைப் பொருத்தது அது – செம்மங்குடி சீனிவாச ஐயர் அல்லது எம்டிஆர் அல்லது பீம்சென் ஜோஷியை நான் கேட்பதுண்டு. ஒருமுறை செம்மங்குடி சீனிவாச ஐயருடன் நான் நடத்திய உரையாடல் ஹிந்துப் பத்திரிகையில் பிரசுரமானது.

உரைகளை நிகழ்த்தும் போதோ அல்லது படைப்பூக்கச் செயல்களில் ஈடுபடும் போதோ நான் இசை கேட்பது வழக்கம். அவர்களுடைய கற்பனை ஸ்வரங்கள் மனதில் எதிரொலித்து உங்களைத் தூண்டுகிறது – இது அறிவியல் பூர்வமாக ஆராயப்படவில்லை என்றபோதும். மேற்கத்திய இசையைப் பொருத்த வரை அவர்களுடைய சாஸ்திரிய இசையையும் ஜாஸ் இசையையும் கேட்பதுண்டு. அண்மையில் கரோகே கூட எனக்கு அறிமுகமானது.

உங்களை அடிக்கடி ஷெர்லாக் ஹோம்ஸின் விசிறியாகக் கூறுவது உண்டு. சிலர் உங்கள் முறையை அவரது முறையோடு ஒப்பிட்டிருக்கிறார்கள். ஏன்?

பலர் அற்பமானது அல்லது தேவையில்லாதது என்று கருதுபவற்றைக் கொண்டு திருப்பம் தரக்கூடிய முடிவுகளை எடுக்கும் அவரது திறனை வைத்து இருக்கலாம்.

இப்போது ‘டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரனின் நறுக்கு தெரித்தாற் போன்ற கருத்து மொழிகள்’ என பிரத்யேகமாக புகழ் பெற்றுவிட்ட சிலவற்றை வாசகர்களுக்காக சொல்லுங்களேன்.

All philosophy consists of exhuming, unlocking and recanting, what has been done before; and getting surly and riled up about it. (Readers can appreciate the pun: Hume, Locke, Kant, Searle and Ryle are famous philosophers.)

அறிவியல் நாம் அனைவரும் விலங்குகள் என்றே கூறுகிறது. ஆனால் நாம் அப்படிக் கருதுவதில்லை. விலங்குகளின் உடலில் சிறைவைக்கப்பட்ட தேவதைகளாக நாம் உணருகிறோம். நம்முடைய இறக்கைகளை விரித்துப் பறக்க விழைகிறோம். இது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரணமான இக்கட்டு.

எந்த ஒரு குரங்கும் வாழைப்பழத்தைப் பறிக்க முடியும், ஆனால் மனித இனம்தான் நட்சத்திரங்களை எட்டி, அதற்கு என்ன அர்த்தம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு நாடு நாகரிகமானதா இல்லையா என்பதை அதன் செல்வம் படைத்த 10 சதவிகித மக்களிலிருந்து அல்லாமல், கீழான நிலையிலுள்ள 10 சதவிகித மக்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்தே தீர்மானிக்க இயலும்.

உங்களைப் பாதித்த சில மனிதர்கள் யார்?

பாங்காகிலுள்ள சுகும்விட் சாலைக்கு என்னுடைய பெற்றோர்கள் என்னை அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம். அங்கு தாய், கம்போடியன், இந்திய கலைப் பொருட்களைக் கண்டதால் என்னுடைய தொல்பொருள் மற்றும் நரம்பு-அழகியல் தொடர்பான ஆர்வம் தூண்டப்பட்டது. என்னுடைய தாயார் இந்தியாவைப் பற்றிய பாஷம்மின் புத்தகத்தை அளித்தார். இந்தியக் கணிதத்தைப் பற்றிய என்னுடைய ஆர்வத்தை அது கிளறிவிட்டது.

பொ.மு. முதல் ஆயிரமாண்டில் இந்தியாதான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அதிகம் அறியப்படாதது, இட மதிப்பு என்பதையும் அறிமுகப்படுத்தியது நாம்தான் என்பதை. உதாரணமாக 507 என்ற எண் 5 ஐ 100 ஆல் பெருக்கி, 0 வை 10 ஆல் பெருக்கி, 7ஐ 1 ஆல் பெருக்கி வருவது. தவிர இந்தியர்கள் 10 என்ற அடிப்படையைக் கண்டுபிடித்தது (சுமேரியர்கள் கண்டுபிடித்த 60 அடிப்படையைப் போல் அல்லாமல்), பூஜ்யம் என்ற இடமதிப்பு, ஒன்பது தனிப்பட்ட வடிவங்களைப் பயன்படுத்தியது போன்றவற்றைச் சேர்த்தால் கணிதத்தின் பிறப்பினை அறியலாம். ஐன்ஸ்டீன் இந்திய எண் முறையை ‘மனித மனத்தின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு’ என்று வர்ணித்தார். மதிப்புமிக்க மருத்துவர்களான டாக்டர் ரமாமணி மற்றும் டாக்டர் சீதாராம் நாயுடு ஆகியோர்கள் என்னை மருத்துவப் படிப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். பிரிட்டனில், ரிச்சர்ட் க்ரிகோரி, ஹோரஸ் பார்லோ, ஆல் ப்ராடிக் மற்றும் காலின் ப்ளாக்மோர். கால்டெக்கில் ஜான் பெட்டிக்ரூ. இந்தப் பட்டியலில் சேத்தன் ஷா மற்றும் சீதாராம் நாயுடு ஆகியோரையும் நான் சேர்க்கவேண்டும். எனது சென்னை வருகைகளின் போது இந்த இருவருடனும் நீண்ட தத்துவ விவாதங்களில் ஈடுபடுவேன்.

உங்களைப் பெருமைப்படவைத்த விருதுகள் என்னென்ன?

விருதுகளும் கௌரவங்களும் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அவை கேக்கின் மேல் வைக்கப்படும் ஐஸ் போன்றது. அவை என்னாளும் கேக் ஆகாது; கேக் என்பது கண்டுபிடிப்பு. ஒரு நோயாளி மாதக்கணக்கில் அவதிப்படும் வலியை நீக்க ஒரு முறையை நான் கண்டுபிடித்து அது அவரின் வலியை நீக்கும் போது அவரது முகத்தில் தோன்றும் சிரிப்பு 10 விருதுகளுக்கும் ஈடாகாது. உங்களுக்கு ஒரு புதிய வழிமுறை திடீரென்று தோன்றி அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்போது தோன்றும் உணர்ச்சியும் அப்படித்தான்.

பல பெரிய அறிவியலாளர்கள், அவர்களைப் பிரம்மரிஷி என்று அழைக்கவேண்டிய வசிஷ்டர்களுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய சிறுவயது ஹீரோக்களான ரஸ்ஸல், டாய்ன்பீ, மெடவார் போன்றவர்கள் உரையாற்றிய ரெய்த் உரைகளுக்கான அழைப்பு; லண்டனிலுள்ள ராயல் இன்ஸ்டிட்யூஷன் அளித்த ஹென்றி டேல் பதக்கம் ஆகியவை முக்கியமானவை. ராயல் இன்ஸ்டிட்யூஷனின் கௌரவ உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டேன், லண்டனில் உள்ள அதனீயம் க்ளப்பின் வழக்கமான உறுப்பினராகவும் நான் இருக்கிறேன்.

அறிவியலின் மர்மங்களைப் பற்றி அறிய உங்களைத் தூண்டிய புத்தகங்களைப் பற்றி…

உங்களுக்கு ஒரு பட்டியலையே அளிக்க முடியும் – டார்வினின் எக்ஸ்ப்ரஷன் ஆஃப் எமோஷன்ஸ்; கானன் டாயிலின் ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில்ஸ், டாக்கின்ஸின் எழுத்துகள், பீட்டர் மெடவார், ரிச்சர்ட் க்ரிகோரி, ஆலிவர் சாக்ஸ் மற்றும் பலர்.

உங்களுடைய ஃபாண்டம்ஸ் ஆஃப் த ப்ரெயின் மற்றும் த டெல்-டேல் பிரெயின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் சாதாரணமானவர்களுக்கும் உந்துதலாக உள்ளது. பிரபலமான அறிவியல் எழுத்தாளர்களுக்கு- இந்தியாவைப் போன்ற காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு – என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

ஒரு துப்பறிவாளரைப் போன்ற (ஷெர்லாக் ஹோம்ஸ்) அறிவியலின் தன்மைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். ஆர்வத்துடன் எழுதுங்கள். ஏனெனில் ஆர்வம் எளிதில் தெற்றிக்கொள்ளக்கூடியது. அறிவியலின் அழகியலைப் பற்றி விளக்குங்கள்- அறிவியலால் உருவாக்கப்பட்ட பொம்மைகளைப் பற்றிக் கவனம் கொள்ளாதீர்கள். இந்தியக் கல்லூரிகளும் பள்ளிகளும் திறமையான பொறியாளர்களையும் (வன்பொருள் மற்றும் மென்பொருள்) மருத்துவர்களையும் உருவாக்குகிறது. ஆனால் ஒரு நாகரிகம் அடைந்த நாடு என்பதாகத் தன்னை அறிவித்துக்கொள்ள அதற்கு தூய்மையான அறிவியல், கவிதை, கலை மற்றும் கணிதம் தேவை. பொறியியலாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்ல. தினப்பத்திரிகை ஆசிரியர்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இளம் அறிவியலாளர்களுக்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகிறீர்கள்?

அறிவியலின் வரலாறு பற்றிப் பரவலாக வாசியுங்கள்; ஆர்வம் மிக்கோருடன் தொடர்பில் இருங்கள்; எதிர்மறையானவர்களையும் மொண்ணையானவர்களையும் தவிர்த்துவிடுங்கள். அல்டௌஸ் ஹக்ஸ்லி “மொண்ணைகள் நாகரிகத்தின் ஆகப்பெரிய எதிரிகள்; கல்வித்துறையில் உள்ள அத்தகையோர் மிக மோசமானவர்கள்” என்றார். டெட் உரைகளைக் கேளுங்கள். எட்ஜ் இணையதளத்தையும் வோர்ல்ட் வெப் ஆஃப் ஸ்டோரீஸையும் வாசியுங்கள்

வரலாற்றை ஏன் கற்கவேண்டும் என்று உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்?

உங்களது ஆராய்ச்சியை சரியான வரலாற்றுப் பின்னணியில் பொருத்த அது உதவியாக இருக்கும். நீங்கள் தற்போது மேற்கொள்ளும் சிறிய சோதனை நூறாண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளின் ஒரு கண்ணி என்பதை நீங்கள் காணலாம். ஒரு பெரும் பயணத்தின் பகுதி நீங்கள் என்பதை உங்களால் உணரமுடியும். இரண்டாவது, நீங்கள் நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம், வரலாற்றில் பதிக்கப்பட்ட அவர்களுடைய பாணி மற்றும் அவர்கள் சிந்தனை, செயல் ஆகியவற்றை அவதானிக்கலாம்.

UCSD இல் பணிபுரிவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?

நரம்பியலுக்கான மெக்கா அது. அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்ஸிலினால் அளிக்கப்படும் நரம்பியலுக்கான முதல் இடத்தை அது பெற்றுள்ளது. இது UCSD மட்டுமே, சால்க் அண்ட் ஸ்க்ரிப்ஸையும் நீங்கள் சேர்த்துக்கொண்டால் உலகிலுள்ள மதிப்புமிக்க நரம்பியலாளர்களின் எண்ணிக்கை இங்குதான் அதிகம் உள்ளது என்பதைக் காணலாம். அறிவியல் அறிவுக்கு இணை இல்லை, ஆனால் லா ஜொல்லா மற்றும் சான் டியாகோவில் கிடைக்காதது, இந்தியாவில் உள்ளது போன்ற (குறிப்பாக மயிலாப்பூரில்) பழமையும் கலாசார நுட்பங்களும்தான்.

அமெரிக்க கல்வி முறையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம் எதைத் தவிர்க்கலாம்?

நான் இரண்டு உலகங்களில் பயணிக்கிறேன். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் சென்றுவிட்டேன். இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஐஐடிக்கள், என்சிபிஐஆர், புனேயிலுள்ள டிஐஎஃப்ஆர், சிசிஎம்பி போன்ற சில பெரிய கல்விநிறுவனங்களைத் தவிர்த்து ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மாறாக மேற்கில் புனிதத்தன்மையும் தன்னிறைவு அடையும் தன்மையும் காணப்படுவதில்லை. இங்கே நான் இயற்கைக்கு மீறிய எதையும் குறிப்பிடவில்லை. எளிமையான விஷயங்களான, ஒரு புத்தகத்தை தெரியாமல் மிதித்தவுடன் அதை கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்வது போன்றவற்றை, மேற்கில் உள்ளோர் மூடநம்பிக்கை என்று கருதுவதை, நாம் சரஸ்வதியிடம் கேட்கும் மன்னிப்பு என்று சொல்வதைப் பற்றிக் கூறுகிறேன்.

எட்வார்ட் செட், கிழக்கைப் பற்றி புளகாங்கிதமடைந்த விக்டோரிய கால வழக்கத்தைக் குறிக்க ‘ஓரியண்டலிஸம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இருந்தாலும் இந்தியா ஒரு கனவுகளின் நிலம். சொல்லப்போனால், மதத்தைப் பயன்படுத்தாமல் உலகை மகிழ்ச்சியுறச் செய்ய இந்தியா தேவை என்றே நான் கூறுவேன். இரண்டுவிதமான ஓரியண்டலிஸம் இருக்கலாம் – முதலாவது சுற்றுலா வகை (கறி, புனிதப் பசுக்கள், பாம்புப்பிடாரன்கள்) இது மேலோட்டமானது ஆனால் விளையாட்டாகச் செய்யப்பட்டால் ஆபத்தில்லாதது. இரண்டாவது தீவிரமான வகை (இது கிப்ளிங்கின் இந்தியா அல்ல, வில்லியம் ஜோன்ஸின் இந்தியா என்று சிலர் கூறலாம்). காளிதாசரின் சகுந்தலம் அளிக்கும் மனவெழுச்சி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் தியாகராஜரின் பாடல்கள் அளிக்கும் ஆன்மிகம் இந்திய மனங்களில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். இப்போது இந்தியாவின் தேவை வில்லியம் ஜோன்ஸ், தாகூர் போன்றவர்களின் மறுபிறப்புதான். அல்லது இந்திய எழுத்துருக்களைக் கண்டறிந்த பிரின்ஸெப், ஹென்ரிக் ஸிம்மர் (புராணங்கள்) மாக்ஸ்முல்லர் அல்லது ஆனந்த குமாரஸ்வாமி மற்றும் கபில வாத்ஸ்யாயனா (கலை) போன்றோர்தான். பேராசிரியர் எஸ் ஸ்வாமிநாதன், ஆர் கோபு, பத்ரி அடங்கிய எங்கள் குழு ஒன்று ஜோன்ஸின் ஆசியாடிக் சொசைட்டி ஆஃப் இந்தியாவை வேறு ஒரு பெயரில் மீண்டும் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே நாங்கள் சில கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

நமக்குத் தேவையற்றது புகைப்பிடிப்போர் நிறைந்த, ஆங்கில மோகமுள்ளவர்களைக் கொண்ட காபி ஷாப்கள் – இந்திய கலாசாரத்தையும் மரபையும் அவமதிக்கும் அறிவுஜீவிகளைக் கொண்ட இடங்கள். அவர்கள் அதைப்பற்றிய அபிப்பிராயம் இல்லாதவர்களாகக்கூட இருக்கலாம். அல்லது சில அரசியல் இயக்கங்களுடன் சேர்த்துக் குழப்பிக்கொண்டிருக்கலாம். நமது ‘மோசமான எதிரிகளாக’ நாமே இருக்கக்கூடாது. ஒரு இந்திய மேல்நிலைப் பள்ளி அல்லது இளங்கலைப் பட்டதாரி மாணவர் காளிதாசனிலிருந்து ஒரு வரியைக்கூட சொல்ல முடியாதவராக, ஆனால் மனித நாகரிகத்திற்கு எந்த விதப் பங்களிப்பையும் அளிக்காத சர்ச்சில் போன்றவர்களைக் குறிப்பிடுபவராக இருப்பது ஒரு பெரிய ஆச்சரியம்.

பண்டைய நாகரிகங்களில் இந்தியா இரண்டு வகைகளில் தனித்தன்மை வாய்ந்தது; அவ்விரண்டும் கொண்டாடப்படவேண்டியவை, வரும் நாட்களுக்காக போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. முதலாவதாக, அதன் தற்போதைய பழக்கங்கள், அறங்கள், மதக் கோட்பாடுகள் நேரடியான, விடுபடாத, தொடர்ச்சியான நான்காயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்தவையாக இருக்கும் ஒரே நாடு இந்தியா. மேற்கிலும் புராணங்கள் உண்டு, க்ரீக் புராணங்களும் எகிப்திய புராணங்களும் உண்டு. ஆனால் ஸீயஸை இப்போது எவரும் வழிபடுவதில்லை, ஏதெனாவில் கோவில்கள் இல்லை. (ரா தேவதையை எகிப்தியர்கள் வழிபடுவதில்லை). ஏன் இவை முக்கியத்துவம் வாய்ந்தவை? நம்முடைய மரபுகளும் கலாசாரமும் நாம் ‘மனித இயல்பு’ என்று கருதுபவற்றில் 90 சதவிகிதம் கலந்துள்ளது; அவைதான் உலகில் மனிதர்களை வெற்றிகரமானவர்களாக உருவாக்குகிறது. அவை இல்லாவிட்டால் நம்முடைய குணங்கள் ஹோமோ எரக்டஸை விட சிறிதளவே மாறுபட்டிருக்கும். இங்கு நான் ஏற்கெனவே கூறிய ‘மிர்ரர் ந்யூரான்களைப்’ பற்றிச் சொல்ல விரும்புகிறேன். மிர்ரர் ந்யூரான்கள் மூளையில் தனித்தன்மையோடு இடம்பிடித்துள்ளன. கணக்கிடும் தன்மையில் நுட்பமானவைகளாகவும், குரங்குகளை விட மனிதர்களில் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பவையாகவும் உள்ளன. இது புதிய திறன்களை பிரதி எடுப்பதன் மூலம் கற்றுக்கொள்ள உதவுகிறது. இது கலாசாரத்திற்கு முக்கியமான திறன்களை போதிப்பதற்கும் உதவுகிறது. மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்குக் காரணமான வேகமாக மாற்றமடையக்கூடிய மரபணுக் கலாசாரத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்

இரண்டாவது, மேற்கில் நாகரிகத்தின் இழைகளான இசை, காண் கலை, புராணம், மதம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்தவையாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று இணையாமல் தனித்தனியாக உள்ளன. சென்னையில் உள்ள என் வீட்டிலிருந்து வெளியேறி இரண்டு மைல் தொலைவில் உள்ள காபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்கிறேன். அதன் அஸ்திவாரம் 2,000 ஆண்டுகளுக்கு முன் இடப்பட்டது. டாக்ஸி ஓட்டுநரின் பெயர் கணபத். கோவிலில் நுழையும்போது 4,000 ஆண்டுகள் பழமையான வேதங்களை சிறுவர்களின் குழு ஒன்று ஓதிக்கொண்டிருப்பதைக் காணலம்.

கருவறையின் உள்ளே சிவனின் சிற்பங்கள் உள்ளன- ஹரப்பாவின் முத்திரைகளில் உள்ள தெய்வம் இது (பொமு 3,000) – அதைச் சுற்றி வழிபடுபவர்கள் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுகின்றனர். லத்தீன், கிரேக்கத்தைப் போன்ற பழமையான மொழி அது – அதன் இலக்கணம் பாணிணியால் கிறிஸ்து பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னால் வகுக்கப்பட்டது. சில நூறு அடிகள் தொலைவில், ஒரு மனிதர் கணபதியின் சகோதரரான ஸ்கந்தனின் புகழைப் பாடி நடனமாடுகிறார். இந்த நடன வடிவம் – பரத நாட்டியம் பரத முனிவரால் பொமு 3ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.

மேற்கைப் போல அல்லாமல், வாழ்வு மற்றும் கலாசாரத்தின் இந்த இழைகள் அனைத்தும் ஒத்திசைவோடு இயங்குகின்றன. ஒருவருடைய தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக இவை விளங்குகின்றன.

*********

நாங்கள் கோவிலை விட்டு வெளியேறும் போது மல்லிகை, ரோஜா மாலைகளையும் விபூதியையும் விற்பனை செய்யும் கடைவீதிகளைத் தாண்டிச்செல்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். டாக்டர் ராமச்சந்திரன் ஒரு சிறுவனைப் போல ஆர்வத்தை வெளிக்காட்டுகிறார். அவருடைய கழுத்தில் ஒரு கிருஷ்ணரின் டாலர் இருப்பதைக் காண முடிகிறது. கிருஷ்ணர் ஒரு விளையாட்டுப் பிள்ளையும் அதேசமயம் அறிவாளியும் கூட.

ஒரு மூலையில் நாங்கள் திரும்புகிறோம், அங்கே குச்சி (Gucci) கைப்பைகளும் கைக்கடிகாரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பழமையான மற்றும் நவீனமான இந்தியாவிற்கு இடையேயான வேறுபாட்டை இவை எடுத்துக்காட்டுகின்றன. எங்களைக் கடந்து பலர் செல்கிறார்கள். அவர்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம் நான் சொல்ல விரும்புவது, அங்குள்ள பழமையான கோவில் குளத்தையும் கடைக்காரர்களையும் வியப்புடன் கவனித்துக்கொண்டிருக்கும் அவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுள்ள, உண்மையைத் தேடி அலையும் ஒரு பெரிய மனிதர் என்பதைத்தான். ஒரு நாள் அவர் பெயர் இந்தியாவெங்கும் அறியப்பட்டு, வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அறிவியலையும் கலையையும் கண்டறியத் தூண்டுவதாக, மனித இனத்தை மூன்றாவது கலாசாரத்திற்கு – ஏன் நான்காவது கலாசாரத்திற்கு இட்டுச்செல்வதாக விளங்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது அறிவியலையும் கலையையும் இணைக்கும் பாலமாக மட்டுமல்லாமல், ஆன்மிகத்தையும் இணைக்கவேண்டும்.

(ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் வெளியான நேர்காணலின் தமிழ்வடிவம்.)

Leave a Reply