Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் (தொடர்) | 6 – மாணவர் போராட்டமும் மசால் தோசையும் | சுப்பு


நான் பத்தாவது படிக்கும் பொழுது வாரியங்காவலில் நயினாவுக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரியங்காவலில் நயினாவும், அம்மாவும் என்னுடைய தம்பிகள் ரவியும், சீனுவும் இருந்தார்கள். நான் வருடத்துக்கொருமுறை விடுமுறை நாட்களில் அண்ணன்மார்களோடு ஊருக்குப் போய் வருவது வழக்கமாகிவிட்டது.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நூல் வாங்குவதற்காக நயினா திருச்சிக்குப் போனார். போன இடத்தில் மாவட்டக் கல்வி அதிகாரியைச் சந்தித்திருக்கிறார். மாவட்டத்தில் அரசு அனுமதியளித்திருந்த உயர்நிலைப் பள்ளி கோட்டாவில் இரண்டு இடங்கள் இன்னும் பூர்த்தியாகாமலிருப்பதாகவும் விண்ணப்பம் செய்வதற்கு அன்றே கடைசி நாளென்றும் அதிகாரி தெரிவித்திருக்கிறார். உயர்நிலைப்பள்ளி அனுமதி பெற 25,000 ரூபாயும், பள்ளிக்கென்று சொந்த மனையும் வேண்டும் என்று தெரிந்து கொண்ட நயினா நூல் வாங்குவதற்காகக் கொண்டு வந்த 25,000 ரூபாயைப் பள்ளிக்கூடத்திற்கென்று செலுத்திவிட்டார். அங்கிருந்தபடியே ஊருக்குத் தகவல் அனுப்பி ஊர்ப் பெரியவர்களை அழைத்து வரச் செய்து முறைப்படி விண்ணப்பமும் தாக்கல் செய்துவிட்டார்.

வாரியங்காவலுக்கும் பக்கத்து ஊரான எலையூருக்கம் இடையில் ஒரு பெரிய மைதானமிருந்தது. இதன் உரிமை பற்றிய தகராறு வெகு நாட்களாக இரண்டு கிராமத்தாருக்குமிடையில் தீராமலேயே இருந்தது. நயினாவின் யோசனைப்படி எலையூர்காரர்களோடு உடனடியாக சமரசப் பேச்சு வார்த்தை நடந்தது. ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தப்படி மைதானத்தை உயர்நிலைப் பள்ளிக்கென்று இரண்டு கிராமத்தாரும் கொடுத்துவிட்டார்கள். பள்ளிக்கு எலையூர் வாரியங்காவல் உயர்நிலைப்பள்ளி என்று பெயரிடப்பட்டது.

பணத்தை ஈடு செய்வதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கிராம வங்கியில் சிறு சிறு தொகையாகக் கடன் விண்ணப்பம் செய்தார்கள். ஒருவருக்கொருவர் காரண்டி. அத்தனை மனுக்களும்; ஒரே சமயத்தில் பரிசீலிக்கப்பட்டு தொகை வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தொகையை அப்படியே நிதியாக வசூலித்து நூல் வாங்கும் தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பாலும் நயினாவின் துணிச்சலான நடவடிக்கையாலும் வாரியங்காவலுக்கு உயர்நிலைப் பள்ளிக்கூடம் வந்தது.

இவ்வளவு திறமையாகச் செய்யப்பட்ட இந்த முயற்சி ஒரு கூட்டுறவு அதிகாரியால் முறைகேடான செயலாகக் கருதப்பட்டு விஷயம் விசாரணைக்குள்ளானது. விசாரணை நடக்கும்போது பதவியிலிருக்க விரும்பாமல் நயினா சங்கப் பதவியை ராஜினாமா செய்தார். நயினாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த சிலர் இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோஷ்டி மனப்பான்மையை வளர்த்தார்கள். நயினாவால் பலன் அடைந்த பலரும் விசாரணை, வழக்கு என்றபோது விலகிக் கொண்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகளாக எந்த மக்களுக்காக உழைத்தாரோ அந்த மக்கள் நன்றியோடு நடந்து கொள்ளவில்லை என்று அறிந்தபோது நயினா மனம் வெறுத்தார். குடும்பத்தோடு புறப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்.

*

இதற்கிடையே பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் நான் வெற்றி பெறுவது வழக்கமாகிவிட்டது. அடுத்து என் கவனம் நாடகத்தின் பக்கம் திரும்பியது. தமிழ் மீடியம் மாணவர்கள் நிறைந்த பள்ளியில் தமிழ் நாடகம் போடுவது பெரிய விஷயமாகாது. ஆகவே, ஷேக்ஸ்பியரின் ‘ஜுலியஸ் ஸீஸர்’ ஆங்கில நாடகம் தயாரானது. நான்தான் வசனகர்த்தா, டைரக்டர். வகுப்பிலேயே சிறந்த நடிகன் என்று கருதப்பட்டவனை ஸீஸராக வசனம் பேச வைத்து ஒத்திகை பார்த்தேன். அவன் தனக்குத் தெரிந்த திறமையைக் காட்டுவதில் குறியாயிருந்தானே ஒழிய, என்னுடைய ஆலோசனையை மதிப்பதாய் இல்லை. இரண்டாம் நாள் ஒத்திகையில் அவனை நீக்கிவிட்டேன். நான் மலைபோல் நம்பியிருந்த இன்னொரு நண்பன் – இவனும் நானும்தான் எங்கள் பள்ளியிலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பவர்கள் – சீசரின் மனைவி வேடத்தில் பையன்தான் நடிக்க வேண்டும் என்று தெரிந்த பிறகு சத்தமில்லாமல் நழுவிவிட்டான்.

ஒரு வாரம் சிரமப்பட்டுத் தயாரித்த நாடகத்தைக் கைவிடுவது மானப்பிரச்சனை ஆகிவிட்டது. திறமைசாலிகளே தேவையில்லை. சொன்னபடி செய்பவன் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போதுதான், நான் ராஜேந்திரனைக் கவனித்தேன். கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். நல்ல வலுவான உடல். இவனை அதிகம் பார்த்ததாக நினைவில்லை. பையன்களிடம் விசாரித்தேன். ராஜேந்திரன் சாந்தோமிலிருந்து வரும் மீனவர் குப்பத்துப் பையன் என்றும், எப்போதும் தாமதமாக வருவானென்றும், மதியம் அநேகமாக வகுப்பில் இருக்க மாட்டான் என்றும் அறிந்தேன். அவனை அணுகி ஆங்கில நாடகத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் தயங்கியவன் நான் கொடுத்த தைரியத்தில் ஒத்துக்கொண்டான். அவனைப் பரிசோதனை செய்வதற்காக ஒரு பக்க அளவு வசனத்தைக் கொடுத்து மனப்பாடம் செய்து வரச் சொன்னேன். மறுநாள் அதைக் கச்சிதமாக ஒப்பித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நானும், ராஜேந்திரனும், மற்ற நண்பர்களும் கடுமையாக உழைத்தோம். தினசரி ஒத்திகை. இடைவிடாத பயிற்சி.

பள்ளி நிறுவனர் தினத்தில் ஜுலியஸ் ஸீஸர் அரங்கேறியது. நான் ஆண்டனியாக நடித்தேன். ஆண்டனி வீர உரை ஆற்றும்போது மக்கள் கோபமுற்றுக் குரல் கொடுப்பது தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக நாலைந்து மாணவர்களை நாடகம் பார்க்கும் ஜனங்களுக்கு நடுவில் அங்கங்கே அமரச் செய்திருந்தேன். ஆண்டனியின் உரையால் ரோமாபுரி மன்னன் வீறுகொண்டு எழ வேண்டுமென்பது ஏற்பாடு. வேடிக்கை பார்க்கும் ஜனங்களுக்கு இந்த விவரம் தெரியாது. முக்கியமான கட்டத்தில் யாரோ மாணவர்கள் கலாட்டா செய்கிறார்கள் என்று நினைத்து, சட்டையைப் பிடித்திழுத்து கீழே உட்காரவைத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடைஞ்சல்கள் இருந்தாலும் நாடகம் அமோகமாக வரவேற்கப்பட்டது.

*

இந்த வருடம்தான் தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. போலீஸின் அடக்குமுறையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்திற்கு வெகு ஜனங்கள் ஆதரவு அளித்தார்கள். நானும் இந்த சமயத்தில் தி.மு.க. ஆதரவாளனாயிருந்தேன்.

பெரியப்பா சுதந்திரக் கட்சி. அண்ணன்மார்கள் கல்லூரி மாணவர்கள் என்ற முறையில் போராட்டத்தின் முன்னணியிலிருந்தார்கள். ஆகவே, இந்தி எதிர்ப்பு என்பது நியாயமாகவும், சுலபமாகவும் என்னால் செய்யக்கூடிய ஒன்றாயிருந்தது. பொருளற்ற வகையில் சொற்களை அடுக்கி நீண்ட வாக்கியங்களைப் பேசுவதும், எழுதுவதும் மொழி வளர்ச்சியென்ற பெயரில் நடந்தது. காங்கிரஸ்காரர்களும் பொது மக்களோடு எந்த வகையிலும் தொடர்பு இன்றி சயம்பிரகாச மேட்டுக்குடியினராகத் திரிந்தார்கள். தீக்குளிப்பு போன்ற செயல்களால் ஆவேசப்பட்டு இளைஞர்கள் இந்தித் திணிப்பிற்கு எதிராகத் திரண்டார்கள்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று எங்கள் பள்ளியில் மாணவர்கள் முடிவெடுத்தோம். இந்த மாதிரி போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளும் மரபு இல்லை என்பதால் அவர்கள் வகுப்பறைக்குள் இருந்தார்கள். “யார் உண்ணாவிரதம் இருப்பது” என்ற கேள்வி எழுந்தபோது நாற்பது பேர் பெயர் கொடுத்தார்கள். ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் நாற்பது பேர் மட்டும் உண்ணாவிரதம் என்பது கௌரவப் பிரச்சனை ஆகிவிட்டது.

நான் கேட்டேன் “உண்ணாவிரதத்தை முடிக்கும்பொழுது என்ன கொடுப்பீங்க?”.

“லெமன் ஜுஸ்” என்று பதில் வந்தது.

“அதான் நாற்பது பேர் பெயர் கொடுத்துருக்கான். மசால் தோசை குடுத்தா நிறைய பேர் சேருவாங்க” என்றேன் நான்.

“அதுக்கெல்லாம் பணம் இல்லையே” என்பதுதான் பதில்.

வாக்குவாதத்தை இந்த அளவில் நிறுத்திவிட்டு நான் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருந்த ஹோட்டலுக்குப் போனேன். ஹோட்டல் உரிமையாளர் தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதனின் தம்பி. மாணவர்களிடம் அன்பாகப் பேசுவார்.

அவரிடம் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைச் சொல்லிவிட்டு உண்ணாவிரதம் முடியும்போது ஹோட்டல் சார்பாக மசால் தோசை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அவர் “எத்தனை மசால் தோசை” என்று கேட்டார்.

பின்னாலிருந்து ஒரு நண்பன் என் சட்டையைப் பிடித்து இழுத்தான். நான் அதைப் பொருட்படுத்தாமல் “பசங்கல்லாம் ரொம்ப கோவமா இருக்காங்க. நூறு மசால் தோசை வேண்டும்” என்றேன்.

தகராறு வேண்டாமென்று நினைத்தோ அல்லது தமிழ் பற்றின் காரணமாகவோ அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதற்குள் ‘நூறு மசால் தோசை விசயம்’ பள்ளிக்கூடம் முழுவதும் பரவிவிட்டது. உண்ணாவிரதப் பட்டியலில் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது.

மீண்டும் ஹோட்டலுக்கு போய் கோரிக்கை வைப்பது நன்றாக இருக்காது என்பதால் சில மூத்த மாணவர்கள் மசால் தோசையைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

 … தொடரும்

Leave a Reply