Posted on Leave a comment

பாஜக ஆட்சியில் தமிழும் தமிழரும் | ஓகை நடராஜன்


2014ம் ஆண்டு பதவியேற்ற பாஜக அரசு அந்த ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்த ஆதரவையும் நலன்களையும் தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் தமிழுக்கும் அளித்து வந்திருக்கிறது.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, சென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தவரை தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஏதோ மந்திரம் போட்டதுபோல் அது நின்று போனது. அது யார் போட்ட மந்திரம்? இந்தச் செயல்பாட்டை அங்கீகரிக்கவோ பாராட்டவோ தமிழகத்தின் ஊடகப் பரப்புரை பலாத்காரத்தினால் அனுமதிக்கப்படவில்லை. கச்சுத் தீவு விவகாரத்தில், இந்தியாவுக்குத் துரோகம் இழைத்த முந்தைய அரசாங்கத்தின் செயல்பாடுகளிலிருந்து, தமிழ்நாட்டு விவகாரங்களில் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு புதிய வீரிய அரசாங்கம் நமக்கு வாய்த்திருக்கிறது. வாய்த்திருந்தாலும் அது உணரப்பட்டதாகவே தெரியவில்லை. இன்னொரு மாயமும் நிகழ்ந்தது. இலங்கை அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தின் வாயிலில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஐந்து தமிழ் மீனவர்களை, 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரோடு மீட்டு அவர்களுக்குப் புணர்வாழ்வு கொடுத்தது பாஜக அரசு. நமது பிரதமர் மோடி நேரடியாகத் தொலைபேசியில் இலங்கைப் பிரதமரை தொடர்புகொண்டு சட்டென இதைச் சாதித்தார். ஆனால் அப்போது சிலரால் உண்மையாகவும் பலரால் ஒப்புக்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டு அத்தோடு மறக்கடிக்கப்பட்ட நிகழ்வாக இது இருக்கிறது.

தமிழக அரசியலின் உயிர்நாடியாக சில உதிரிக் கட்சிகளாலும் முதன்மைப் பிரச்சினைகளில் ஒன்றாக மாநிலக் கட்சிகளாலும் எடுத்தாளப்பட்ட ஒரு பிரச்சினை இலங்கை இனப் பிரச்சனை. தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் ஊரை ஏமாற்றி தமிழ்நாட்டில் அரசியல் செய்கின்ற நீலிக்கண்ணீர் அரசியல்வாதிகளுக்கிடையில் உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும், அங்குள்ள மக்களை அணுகியவர் பிரதமர் மோடி மட்டுமே. 14-03-2015 பாரதப் பிரதமர் தனது இலங்கைப் பயணத்தின் முதன்மை நிகழ்வாக யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான். வடக்கு மாகாணத்தில் இந்திய ஆதரவுத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன் அப்பகுதி மக்களிடம் உரையாடியதன் மூலம் அவர்களுக்கும் தமது ஆதரவை உறுதிப்படுத்தினார். ரயில் பாதைத் திட்டம், வீடமைப்புத் திட்டம் போன்றவற்றைத் திறந்து வைத்துப் பேசினார். இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் சம உரிமைகளுடன் வாழ அதிகமான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் ஓர் இந்திய எதிர்ப்பு மனநிலை இருந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு சென்றார் மோடி. இதையும் இங்குள்ளவர்கள் தங்கள் வன்ம விமர்சனங்களுக்கு உள்ளாக்கத் தவறவில்லை. ஆனால் இந்த நிகழ்வு இலங்கைத் தமிழர்களின் இந்திய எண்ணப் போக்கை மாற்றியது. இங்கு மலிவான ஈழ அரசியல் செய்தவர்களையும் அவ்விஷயத்தில் அடக்கி வாசிக்க வைத்தது.

ஒருமுறை இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்தார். ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு மிக உயர்ந்த பதவியான பாதுகாப்பு அமைச்சர் பதவியை அளித்திருக்கிற இந்த அரசு, திருக்குறளுக்காக பாராளுமன்றத்தில் ஒரு விழா எடுத்திருக்கிறது. 17-12-2015 நமது பாராளுமன்ற நிகழ்வுகளில் ஒரு பொன்னாள். 133 தமிழக மாணவர்கள் திருக்குறள் ஓதவும், தமிழகப் பிரபலங்களுக்கு விருது வழங்கவும், திருக்குறள் பற்றிய உரைவீச்சுகள் ஒலிக்கவுமாக நிகழ்ந்த நிகழ்ச்சி நெகிழ்வை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிகழ்வு இதுவரை நிகழ்ந்ததில்லை. இதற்கான முன்னெடுப்புகளை பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் செய்திருந்தார்.

கடல்கடந்து தம் படைகளைச் செலுத்தி வெற்றிக் கொடி நாட்டிய ராஜேந்திரச் சோழன் தனது நிகரற்ற கடற்படை ஆளுமையை நிலைநாட்டியிருந்தான். ஆனால் இப்பெருமைமிகு மன்னனின் பெயரை நமது கடற்படை தொடர்பிலான எதற்காவது சூட்டும் முயற்சி நிறைவேறாமலேயே இருந்தது. ஆனால் மஹாராஷ்ட்ராவின் பாஜக அரசு காட்டிய முனைப்பினால் அது நிகழ்ந்தது. 29-09-2016 அன்று மும்பையில் உள்ள பிரபலக் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்குத் தமிழ்ப் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை மராட்டிய அரசு அர்ப்பணித்தது. இந்தச் செய்தி கூட தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது அந்த ஊடகத்துறைக்கே வெளிச்சம்.

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் உண்டா? இந்தச் சங்கடமான கேள்விக்குச் சங்கடமான பதில் அல்லவா இருந்தது. மிக அதிகமாக தமிழர்கள் வசிக்கும் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை எடுக்க முயற்சி செய்யப்பட்டு, சிலையும் செய்யப்பட்டு, திறக்கப்படாமல் பல தடைகளைக் கண்டது. அங்கே பாஜக அரசின் எடியுரப்பா முதல்வராக இருந்தபோதுதான் அந்தச் சிலை திறக்கப்பட்டது. அதுவும் பண்டமாற்று முறையில் சென்னையில் சர்வக்ஞர் என்ற கன்னட அறிஞரின் சிலை திறக்கப்பட்டே நிகழ்ந்தது. ஆனால் பாஜக அரசில் கங்கைக் கரையில் 9-12-2016 அன்று, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளையும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் செய்திருந்தார். மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத் சிலையைத் திறந்து வைத்தார். சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு திருவள்ளுவர் பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

முந்தைய அரசின் தவறான சட்டத்தாலும், விலங்கு நல ஆர்வலர்களின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நீதிமன்ற முயற்சிகளாலும் தடைப்பட்டிருந்த தமிழக வீர விளையாட்டு ‘ஜல்லிக்கட்டு’ தமிழகத்தில் அரசு ஆதரித்த ஒரு போராட்டமாக உருவெடுத்தது. இந்தப் போராட்டத்தை தமிழருக்கு எதிரான மத்திய அரசின் மாபெரும் செயல்பாடாகச் சித்தரித்து எல்லா பாஜக எதிர்ப்பாளர்களும் ஒன்று சேர்ந்தனர். அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முழு அரசு ஆதரவோடு மக்கள் போராட்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் பாஜக மத்திய அமைச்சர்கள் பொன் இராதாகிருஷ்ணனும் நிர்மலா சீதாராமனும் மத்திய அரசின் முழு இயந்திரத்தையும் பயன்படுத்தி ஜல்லிக்கட்டுக்கான தடையை தமிழ்நாட்டில் நீக்கினர். 23-01-2017 ஜல்லிக்கட்டுக்கான அனுமதி உத்தரவை தமிழக ஆளுநர் பிறப்பித்தார். இதற்கான தீர்வை முந்தைய ஆண்டே அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அது வீம்புக்காக நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டது. மீண்டும் அதே தீர்வே ஜல்லிக்கட்டு நடைபெற உதவியாக இருந்திருக்கிறது. இவையெல்லாம் மறக்கப்பட்டு இப்போதும் ஜல்லிக்கட்டு மத்திய அரசுக்கு எதிரான பரப்புரை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது விநோதம்தான்.

இலங்கைத் தமிழர் என்று பொதுவாக தமிழகச் சுயநல அரசியல்வாதிகளால் முன்னிறுத்தப்படுபவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். ஆனால் இலங்கை முழுதும் தமிழர்கள் இருக்கிறார்கள். மத்திய இலங்கையில் அதிகமான அளவில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். எந்தத் தமிழக அரசியல்வாதியும் இலங்கை மலையகத் தமிழர்களைச் சற்றும் கண்டுகொள்ளாத நிலையில், அவர்களுக்கான வாழ்வில் அக்கறை கொண்ட மாமனிதராக பாரதப் பிரதமர் திகழ்கிறார், பாஜக அரசு திகழ்கிறது. 12-05-2017 அன்று மத்திய இலங்கையில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களிடம் ஒரு பொதுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் பேசினார். இந்தப் பகுதிமக்களிடம் பேராதரவு பெற்ற இந்த நிகழ்ச்சி அவர்களுக்குப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்திய ஆதரவில் நடத்தப்பெறும் ஒரு மருத்துவ மனையை அவர் திறந்துவைத்தார். ஏற்கெனவே இப்பகுதிக்கு 4,000 வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டித்தருகின்ற நிலையில் மேலும் 10,000 வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதி அளித்தார். 2015ம் ஆண்டில் மோடி இலங்கை சென்றபோதே தங்கள் பகுதிக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோள் மலையகத் தமிழரிடமிருந்து வைக்கப்பட்டது. அவர்கள் எதிர்பார்ப்பை இந்த அரசு நிறைவேற்றியிருக்கிறது.

இலங்கையில் மட்டுமல்ல, தமிழர் வாழும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்கிற, வேலை வாய்ப்புக்காகச் சென்றிருக்கிற வெளிநாட்டுத் தமிழர்களிடமும் பாரதப் பிரதமர் நெருங்கி உரையாடத் தவறுவதே இல்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமது பிரதமர் தமிழ் மொழியைப் பாராட்டத் தவறுவதேயில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழி ஒரு பூரண மொழி என்று பாராட்டினார். மேலும் அன்மையில் தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்றும், தமிழ் கற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் கூடப் பேசினார். குஜராத்தி மொழியில் திருக்குறளைப் பிரதமர் வெளியிட்டார்.

பொதுவாக ஆர்எஸ்எஸ் கொள்கைகள் தேசம் தழுவிய கொள்கைகள். சங்கத்தின் தினசரி வணக்கப் பாடலான ஏகத்மதா மந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணகி, திருவள்ளுவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், கம்பன், ராஜேந்திர சோழன், CV.ராமன், கணிதமேதை இராமானுஜன், பாரதியார் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். பாரதநாட்டின் எல்லாப் பண்பாட்டுக் கூறுகளையும் பேணிக் காப்பதையே இலட்சியமாகக் கொண்டது சங்கம். சங்கத்தின் ஏக்நாத் ரானடே அவர்கள் முன்னெடுத்ததே இன்றைக்குக் கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையாகும். பாஜக, சங்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்தும் அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. தமிழும் தமிழரும் இந்தியப் பாரம்பரியத்தின் பெருமைமிகு அங்கமாகக் கருதுகிற பாரதிய ஜனதாகட்சியின் செயல்பாடுகள் தமிழகத்தில் பரப்பப்படும் பொய்ப்பரப்புரைகளை அடியோடு முறியடித்து, உண்மையை நிலைநாட்ட வேண்டும்.

Leave a Reply