கர்நாடக இசையில் கிறித்துவப் பாடல்கள் | சுதாகர் கஸ்தூரி

அண்மையில், கர்நாடக இசையில் பெரியவர்கள் பாடிய கீர்த்தனைகளில் காணப்படும் இந்துக் கடவுள்களின் பெயரை மாற்றி கிறித்துவக் கடவுளின் பெயரை நுழைத்து மாற்றப்பட்ட பாடல்களை சில பாடகர்கள் பாடியதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

இப்படிப் பாடுவதை எதிர்க்கும் பலருக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் ஸ்நாநப் ப்ராப்தி கூடக் கிடையாது. (அதாவது, இறந்தால், ஒரு முறை குளிக்கும் அளவுக்குக் கூடத் தொடர்பில்லை). பின் ஏன் எதிர்க்கிறார்கள்?

இரு காரணங்கள் உண்டு.

1. அவர்கள் தனிமனிதர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஒரு அங்கம். எனவே தனிமனித உளவியல் பாங்குகளுடன், கூட்டுத் தொகையான சமூக உளவியல் பாங்குகளும் சேர்ந்திருக்கின்றன.

2.முழுமையாகத் தொகுபடு உளவியல் என்பது, தனது தனியமைப்புகளின் கூட்டுத்தொகையினை விட அதிகமானது என்கின்ற ஜெஸ்டால்ட்டு பரிசோதனை உளவியல் (Gestalt experiment approach) கண்ணோட்டத்தின் தாக்கம்.

கலாசாரம் என்பதை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். பாரம்பரியக் கலாசாரம் (Traditional culture), புதிய கலாசாரம் (modern culture) எனப் பிரிக்கப்படுவதில், பாரம்பரியக் கலாசாரம் மிகமெதுவாக மாறுகிறது. புதிய கலாசாரம் வேகமாக மாறுகிறது. இரு வகையான கலாசாரங்களும் மாறுகின்றன.

மாற்றம் என்பது எப்போதும் நல்லதுக்கு என்பதல்ல. வளர்சிதை மாற்றப் பரிணாம வளர்ச்சியில் ‘நொந்தது சாகும்’. நவீனம் என்பது எப்போதும் வளர்ச்சியை நோக்கிய பயணமுமல்ல. (நமது ஊடக எண்ணங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.) எது வளர்ச்சி என்பது பெரிய கேள்வி. சிகரெட் புகைப்பது என்பது சிதைமாற்றத்தைக் கொண்டுவந்தது. வாகனத்துறையில் வந்த மாற்றம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன் பின்னான தொலைத்தொடர்பு மாற்றம் உலகினை இணைத்தது. இவை வளர்மாற்றத்தைக் கொண்டுவந்ததின் எடுத்துக்காட்டுகள். அனைத்து மாற்றத்திலும் சமூகம் தன் எதிர்வினையைக் காட்டத்தான் செய்தது.

மாற்றம் என்பதும் நவீனம் என்பதும் ஒன்றல்ல என்பதை அறியவேண்டும். நவீனம், பழையதை அழித்தோ மாற்றியோதான் வரவேண்டுமென்பதில்லை. புதியதாக வரலாம். சிறிது சிறிதாக நிகழலாம் அல்லது குறிப்பிட்ட காலத்தில் பரவலாக நிகழலாம்.

சமூகம், தன் கலாசாரத்தில் மாறுதல்களைப் புகுத்திப் பார்க்கும். மாற்றம், வளர்முறையில் கலாசாரத்தை மாற்றுமானால், வெகுவாக ஏற்றுக்கொள்ளப்படும். வயலின் என்ற மேற்கத்திய இசைக்கருவியை கர்நாடக இசை ஏற்றுக்கொண்டது இப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சியின் விளைவே. மண்டோலின், கிளாரினெட் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவில் பிற கருவிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை (கிட்டார்). சிதை மாற்றம் என்பதை நாம் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே கொள்ளவேண்டும்.


புதிய கலாசாரம் என்பது மாற்றங்கள் கொண்ட பாரம்பரியமோ அல்லது புதிதாக முளைத்து வந்ததாகவோ இருக்கலாம். மாற்றுகிறேன் பார் என்பதாக வலுக்கட்டாயமாகக் கொண்டுவரும் மாற்றங்கள் எதிர்க்கப்பட மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

1. சமநிலையில் இருப்பதை அல்லது வளர்நிலை முறையில் மாறி வருவதை மாற்றம் சிதைக்கிறது.

2. மாற்றம் வரும் காரணிகளின் அடிப்படை நோக்கம், மாறும் பொருளை வளர்ப்பதாக இல்லை.

3. மாறுதல் தரும் தாக்கம், மற்றொரு பண்பை எதிர்நிலையில் மாற்றுகிறது.

இதில் ஏதேனும் ஒன்று அல்லது பல காரணங்கள் தாக்கமடைந்தால் மாற்றம் எதிர்க்கப்படும்.

கர்நாடக இசையில் இன்று பிற மதப்பாடல்கள் பாடப்படுவதை மாற்றமென சமூகம் ஒத்துக்கொள்கிறதா எனில்:

1. கர்நாடக இசை பெரிதாக வளர்ந்த நிலையில், அதன் வளர்நிலை மாற்றத்தைப் பிற மதப்பாடல்கள் பாடும் மாற்றம் சிதைக்கவில்லை. இதனால் மட்டும் பாடல்களை ஏற்றுக்கொண்டுவிடலாமெனச் சொல்லிவிட முடியாது. மற்ற காரணிகளையும் பார்ப்போம்.

2. மாற்றம் கொண்டுவரத் தூண்டிய அடிப்படை நோக்கம் மதமாற்றத்தினை வளர்த்தல்; இந்து மத அடையாளமான கர்நாடக இசையை அடையாள நிலையிலிருந்து அகற்றுதல். இந்த இரண்டும், கர்நாடக இசையை வளர்மறை நிலையில் கொண்டுசெல்லும் நோக்கத்தில் இல்லை. ஒரு புதிய ராகமோ, புதிய செழுமையான கீர்த்தனைகளோ இயற்றும் நோக்கம் இந்த மதமாற்ற இயக்கங்களுக்கு இல்லை. பியானோ, கிட்டார் போன்று, அவர்களுக்கு கர்நாடக இசையும் ஒரு ஊடகம் அவ்வளவே. இத்தோடு, முன்பு இயற்றப்பட்ட கீர்த்தனைகளில், இந்துக் கடவுள்களின் பெயரை மட்டும் மாற்றி, காப்பி அடித்து கீர்த்தனைகளை பிறமதப் பிரசாரமாக ஆக்கிவரும் சிந்தனையே அடிப்படை இயக்கச் செயலாக்கம் என்பதால் இந்நோக்கங்கள் வளர்மறை மாற்றங்களைக் கொண்டுவரவில்லை.

3. மாற்றத்தைக் கொண்டு வரும் காரணி மதமாற்றம். இந்து மதத்தின் அடையாள நிலையிலிருந்து கர்நாடக இசையை மாற்றுதல் என்பதன் தாக்கம், சமூகத்தில் மதமாற்றப் பிரசாரத்தையும், பிற மதங்களின் சிதைவையுமே முன்வைப்பதால், இந்தியச் சமூகத்திற்கு நன்மையை விடத் தீமையே அதிகம் விளையும்.

மூன்று காரணங்களில் இரண்டு எதிர்மறையாக இருப்பதாலும், இச்செயலாக்கங்களின் எதிர்பார்ப்பு சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் இருப்பதால் இம்மாற்றங்கள் எதிர்க்கப்படுகின்றன.

பரந்த மனப்பான்மை என்பதற்கும், இம்மாற்றங்கள் எதிர்க்கப்படுவதற்கும் தொடர்பில்லை என்பது மேற்சொன்ன காரணங்களால் விளங்கும். எதிர்க்கும் இந்துக்கள் பொறையற்றவர்கள், குறுகிய மனம் படைத்தவர்கள் என்றும் விஷமத்தனமாகப் பிரச்சாரம் செய்யப்படுவது மிகத் தவறானது மட்டுமல்ல, இது சமூகத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தி, பரஸ்பர வெறுப்பையே வளர்க்கும். மத அடிப்படையில் மக்கள் இரு கூறாகப் பிரிந்து போக இது வழிவகுக்கும்.

நாம் செய்யக்கூடியது என்ன? மாற்றத்தின் இம்மூன்று காரணங்களை ஆழ்ந்து பார்த்து,பொங்கும் உணர்ச்சிகளைத் தள்ளி வைத்து ஆலோசிக்கலாம். சமூக ஊடகங்களில் கருத்தைப் பகிர்வோர் இதனைச் செய்யவேண்டியது மிக அவசியம். விஷமத்தனமாக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளை பகிரங்கமாக எதிர்ப்பதும், அவ்வூடகங்களைத் தவிர்ப்பதும், தவிர்ப்பைப் பிறரிடம் பகிர்வதும் நம் கடமை.

Ref: Introducing Pshychology – Nigel C Benson.


Leave a Reply