Posted on Leave a comment

சீரூர் மட விவாகரம் | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

சமீபத்தில் சர்ச்சைக்குரிய முறையில் இறந்த சிரூர் மட பீடாதிபதி லக்ஷ்மிவர தீர்த்தரின் உள்ளுறுப்புகளைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். ஆகஸ்ட் மாத இறுதியில் அந்தப் பரிசோதனை முடிவுகள் ஊடகத்தில் கசிந்தன. பரிசோதனையின் முடிவு அனைவருக்கும் நிம்மதியைத் தருவதாக இருந்தது. லக்ஷ்மிவர தீர்த்தர் கல்லீரல் வீக்கத்தினால் (லிவர் ஸிரோசிஸ்) இறந்திருக்கிறார் என்று பரிசோதனை முடிவுகள் கூறுவதாக செய்திகள் வந்தன. ஒரு விறுவிறுப்பான மர்மராடகம் முடிவிற்கு வந்ததுபோல இருந்தது.

ஒரு முன்கதை.

சுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் ஒரு மாத்வ மடாதிபதி தனது மடத்திலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து உடுப்பி வந்து சேர்ந்தார். காலையில் செய்ய வேண்டிய ஆஹ்னீக காரியங்களைச் செய்தார். பிறகு உடுப்பி அஷ்ட மடத்து மடாதீசர் ஒருவரைக் காணச் சென்றார். தன்னைப் போலவே அவரும் துறவிதான். இருப்பினும் பல மடங்கு அதிகமாக சாதுர்மாச்யம் செய்தவர். எனவே உரிய மரியாதையைச் செய்தார். பிறகு தனியே பேச வேண்டும் என்றார். இருவருமாக மத்வ சரோவரத்தின் கரைக்குச் சென்றனர். பரஸ்பரம் உரையாடத் தொடங்கினர். பெரியவருக்கு விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும் என்று வந்தவர் நினைத்துக் கொண்டார். ஆனால் பெரியவர் முகத்தில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. இருவருக்கும் இடையே கீழ்க்கண்டவாறு உரையாடல் நடந்தது. ஒரு வசதிக்கு அந்த இரண்டு மடங்களின் தலைவர்களையும் பெரியவர் என்றும் சின்னவர் என்றும் குறிப்பிடுவோம்.

சின்னவர்: மனதில் குழப்பம்.

பெரியவர்: குழப்பம் நல்லதற்குத்தான். குழம்பினால் தெளிவு வரும்.

சின்னவர்: அரசல்புரசலாக எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே.

பெரியவர்: அரசல்புரசலாகத் தெரிய வருவதற்கெல்லாம் நாம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

சின்னவர்: சரி. …குறித்துத்தான்

பெரியவர்: கேள்விப்பட்டேன். அடிக்கடி உங்களைப் பார்க்க வருவதாக.

சின்னவர்: அவருக்கு வேறு எண்ணம் இருக்கிறது.

பெரியவர்: இதெல்லாம் வருவதுதான். நான் பேசிப் புரிய வைக்கிறேன்.

சின்னவர்: எனக்கும் அவர் பேசுவதில்…

பெரியவர்: அது சரி, சில மந்த்ர ஜபங்கள், சாதனைகள் எல்லாம் உண்டு.

சின்னவர்: ம்.

பெரியவர்: ஒன்றும் குழப்பம் வேண்டாம் ஸ்வாமிகளே. இன்றே யோக ஆஞ்சநேயர் மந்தரத்தை எழுதித் தருகிறேன்.

சின்னவர்: இல்லை.

பெரியவர்: மனச்சஞ்சலங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

சின்னவர்: ஸ்வாமிகளே, அவளை மறக்க முடியவில்லை என்பதல்ல என் பிரச்சினை.

பெரியவர்: பிறகு

சின்னவர்: எனக்கு மறக்க விருப்பம் இல்லை.

பெரியவர்: சத்யமேவ ஜயதே!

சின்னவர்: என்னைத் தவறாக நினைக்கக்கூடாது. இனி நான் என்ன செய்ய?

பெரியவர்: அவள் நினைவுடன்… பூஜை செய்வதை விட, நாராயண ஸ்மரணையோடு அவளுடன் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருப்பதே மேல். உடனடியாக நீங்கள் ஒரு வாரிசை நியமிக்க வேண்டும்.

*

நான் இங்கே குறிப்பிட்ட உரையாடல் நிஜமாக நடந்த ஒன்று. திருமணம்  செய்து கொள்ள விரும்பியவர் அப்போதைய சுப்ரமண்யா மடத்தின் மடாதிபதி. அவர் கலந்தாலோசித்தது பேஜாவர் பெரியவரிடம். துறவறத்திலிருந்து வெளியே வர அவர் முடிவு செய்து மறுநிமிடம் பேஜாவர் சுவாமிகள் சுப்ரமணியா மடத்தின் ஆராதனா மூர்த்திகளைத் தன் வசத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாகப் புதிய சாமியாருக்கான தேடல் தொடங்கியது. ஒரு இளைஞன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவனுக்கு தீக்ஷை வழங்கப்பட்டது. சுப்ரமண்யா மடத்துப் பீடாதிபதி முன்னிலையில் பேஜாவர் வழிகாட்டுதலில் அனைத்துச் சடங்குகளும் நடந்து புதிய சாமியார் வந்ததும், பழையவர் அதிகாரபூர்வமாக மடத்திலிருந்து துறவறத்திலிருந்தும் விலகிக்கொண்டார். அவரை சமுதாயம் ஒதுக்கி ஒன்றும் வைக்கவில்லை. தான் விரும்பிய, தன்னை விரும்பிய பெண்ணை அவர் மணம் புரிந்து இன்று பிரபல சங்கீத வித்வானாக வலம் வருகிறார். யாருக்கும் எந்தக் கசப்பும் இல்லை.

*

மாத்வர்களின் மடங்களை இரண்டாகப் பிரிக்கலாம். துளு பிரதேச தெள்ளுவ மடங்கள் மற்றும் கட்டே மேலே மடங்கள் என்றழைக்கப்படும் கன்னடப் பிரதேச மடங்கள். ஸ்ரீராகவேந்திர மடம், ஸ்ரீ வியாசராஜ மடம், ஸ்ரீபாதராஜ மடம் போன்றவை கட்டே மேலே மடங்கள். இவற்றில் பீடாதிபதியாக வருபவர் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் இருந்து நேரடியாகவும் வரலாம். (உதாரணம்: ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்தர்) அல்லது க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்தும் வரலாம் (உதாரணம்: ஸ்ரீராகவேந்திர தீர்த்தர்). ஆனால் தெள்ளுவ மடங்களில் உள்ள பீடாதிபதிகள் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் இருந்து நேரடியாகத் துறவறம் ஏற்கும் வழக்கமே உள்ளது. அதிலும் அஷ்டமடங்களில் மடாதிபதியாக இருப்பவர்கள் பாலசன்யாசி என்னும் வகையைச் சேர்ந்தவர்கள். உடுப்பி அஷ்டமடங்கள் (பேஜாவர், பலிமாரு, அடமாரு, புட்டிகெ, சோதே, கனியூரு, சிரூர், கிருஷ்ணாபுரம்) மத்வாசாரியரால் ஸ்தாபிக்கப்பட்ட தனித்தன்மை மிக்க ஆன்மீக நிறுவனங்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் உடுப்பி கிருஷ்ணருக்குத் துறவிகளாலேயே நித்திய பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதன் பொருட்டுதான் மத்வர் பர்யாயம் என்னும் முறையைக் கொண்டு வந்தார். அதாவது ஒவ்வொரு மடத்தைச் சார்ந்தவர்களும் தலா இரண்டு மாதங்கள் உடுப்பி க்ருஷ்ணருக்குப் பூஜை செய்வார்கள். இந்த முறையை வாதிராஜர் இரண்டு வருடங்கள் என்று பிறகு மாற்றினார். ஒரு மடாதிபதி தனது பர்யாயமான இரண்டு வருடங்கள் பூஜை செய்தார் எனில் அவருக்கு மீண்டும் முறை வர பதினான்கு வருடங்கள் ஆகும். அதேபோல் உடுப்பி அஷ்ட மடங்கள் இடையே த்வந்த மடம் என்னும் வழக்கத்தையும் மத்வர் உருவாக்கினர். எட்டு மடங்களையும் நான்கு குழுக்களாகப் பிரித்தார். அதாவது இரண்டு இரண்டு மடங்களாகப் பிரித்தார். உதாரணத்திற்கு சீரூர் மடமும் ஸோதே மடமும் த்வந்த மடங்கள். இதில் ஒருமடத்தின் மடாதீசர் திடீரென்று இறந்துபோனால் மற்றொரு மடத்தலைவர் அடுத்த பீடாதிபதியை நியமிப்பது போன்ற காரியங்களைச் செய்வதற்கு உரிமையுள்ளவராகிறார். இந்தப் பின்னணியில் இப்போதுள்ள பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

*

நடந்த விவகாரங்களைப் பார்க்கும்போது ஒரு சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன. சிலர் கூறுவது போல மடங்களைச் சீர்திருத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சட்டத்துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் இத்தகைய சம்வங்கள் நடப்பது முதல் முறை அல்ல என்று நன்றாகத் தெரியும். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னரும் இத்தகைய விவகாரங்கள் சில மடங்களில் நடந்திருப்பதைச் சில நீதிமன்றத் தீர்ப்புகள் வாயிலாக நாம் அறியலாம்.

தவறு தனி நபர்கள் மேல்தானே தவிர்த்து மட அமைப்பின் மீதோ பால சந்யாச முறையின் மீதோ அல்ல. முன்கதையில் நான் சொன்னவாறு, திரு வித்யாபூஷண் செய்தது போல லக்ஷ்மிவர தீர்த்தர் உண்மையை ஒப்புக்கொண்டு துறவறத்தில் இருந்து வெளியே வந்திருக்கலாம். வித்யாபூஷண் மட்டுமல்ல, பேஜாவரின் அஷ்டமடங்களில் ஒன்றான சீரூர் (ஷிரூர்) மடத்தின் பீடாதிபதியாக இருந்த, 55 வயதில் கடந்த ஜுலை மாதம் மரணம் அடைந்த லஷ்மிவர தீர்த்தர், சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தது அவர் மரணத்தில் மட்டும் அல்ல. எட்டு வயதில் பால துறவியாகப் பீடத்திற்கு வந்தவர். 47 வருடங்கள் பீடாதிபதியாக இருந்து மூன்று பரியாயங்களை முடித்துள்ளார். ஏறத்தாழ கடந்த 25/30 வருடங்களாகவே அவர் சர்ச்சைகளின் மத்தியில்தான் இருந்தார்.

லக்ஷ்மிவர தீர்த்தரை குறித்து நான் முதலில் கேள்விப்பட்டது சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது குடும்ப புரோகிதர் நான் உடுப்பிக்குப் போய் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறி, உடுப்பியைக் குறித்தும், அங்குள்ள மடங்கள், மடாதிபதிகள் குறித்தும் விவரித்தார். அப்போது மேற்படி சாமியாரின் பெயரைச் சொல்லி அவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்பதால் அவரைச் சந்திக்க வேண்டியதில்லை என்று கூறினார்.

பிறகு கடந்த இருபது வருடங்களில் பலமுறை அவரைக் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களைக் கேள்விப்பட்டேன். ட்ரம்ஸ் வாசிப்பது, கடலில் நீச்சலடிப்பது போன்றவற்றில் மட்டும லக்ஷ்மி தீர்த்தருக்கு ஆர்வம் இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. அவர் விஷயங்கள் எல்லாம் உடுப்பியில் ஊர் அறிந்த இரகசியமாகவே இருந்தது. இந்நிலையில் குடிப்பழக்கத்தின் காரணமாக அவர் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. ஒரு பெண்மணி மடத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாகப் பேச்சு அடிபட்டது. மற்றொருபுறம் சாமியார் மடத்தின் வருவாயிலிருந்து பல கோடி ரூபாய்களை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ததாகவும் பேச்சு அடிபட்டது. 2018ம் வருடம் ஆரம்பம் முதலே ஏராளமான பிரச்சினைகள் லக்ஷ்மிவர தீர்த்தருக்கு வரத்தொடங்கின. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட முயன்றார். பாஜகவிடம் தன்னை வேட்பாளராக அறிவிக்கும்படிக் கேட்டார். யோகியையும் கர்நாடக லிங்காயத் மடாதிபதிகளையும் அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு முன்மாதிரியாகக் காணவேண்டும் என்று கூறினார். தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியதும் ஊடகங்களின் வெளிச்சம் இவர் மேல் பாய்ந்தது. அந்த வெளிச்சத்தில் இவரது தவறுகள் அனைத்தும் முழுதும் தெரிந்தது. ஒரு வழியாகத் தனது வேட்புமனுவை பின்வாங்கிக் கொண்டு ஒதுங்கினார்.

மற்றொருபுறம் தான் நம்பிக்கைக்குரியவராகக் கருதிய ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் தன்னைப் பல கோடிகள் ஏமாற்றி விட்டதாகவும் அந்தப் பணத்தை மீட்க வேண்டும் என்றும் பூத ஆவேசத்தில் ஆடும் மருளாடியிடம் இவர் கேட்டுக்கொண்ட காணொளி வெளியானது. இதன் மூலம் பல கோடி ரூபாய் விவகாரம் உண்மை என்று தெரிந்தது. வேறு ஒரு ஆடியோவும் வெளியானது. இதில் லக்ஷ்மிவர தீர்த்தர் தனது ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தியும் பேஜாவர் உட்பட்ட ஏனைய மடாதிபதிகள் அனைவர் மீதும் சேற்றை அள்ளி வீசி இருந்தார். ஒரு கட்டத்தில் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என்று மறுத்தார்.

இத்தனை நாட்கள் பல விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருந்த ஏனைய ஏழு மடத்தைச் சார்ந்த மடாதிபதிகள் ஒன்று சேர்ந்து லக்ஷ்மிவர தீர்த்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். அவரிடம் உடனடியாகப் பட்டத்தைத் துறக்கும்படி கூறினர். அதனால் தான் ஒரு செல்லாக் காசாகி விடுவோம் என்று எண்ணி லஷ்மிவரர் மறுத்தார் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிரூர் மடத்தின் பூஜா மூர்த்திகளை உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் ஒப்படைத்திருந்தார் லக்ஷ்மிவரர். இந்த மூர்த்திகளைத் திருப்பிக் கேட்டபோது அவற்றைத் திருப்பிக் கொடுக்க ஏனைய மடாதிபதிகள் மறுத்துவிட்டனர்.

வேறொருவர் மடாதிபதியான பிறகே அவற்றைத் திருப்பித் தர முடியும் என்று அவர்கள் கூறினர். தான் நீதிமன்றத்தை அணுகப் போவதாக பேட்டி கொடுத்தார். பேஜாவர் பெரியவர் லக்ஷ்மிவரரின் மதுபானப் பழக்கம் போன்றவற்றைக் கண்டித்துப் பேட்டி கொடுத்தார். வாழ்ந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்கிற கதையாக லக்ஷ்மிவரர் மரணமும் அனைவருக்கும் தலை வலியைத் தந்தது. ஜூலை மாதம் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கடும் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நினைவு திரும்பாமல் இறந்து போனார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மணிப்பால் கஸ்தூரிபாய் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. உடனடியாக ஏராளமான சதி கோட்பாடுகள் பரப்பப்பட்டன. சாமியாருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் ஊடகத்தில் வெளியாகின.

ஊடகங்கள் மடத்திற்கு தினமும் வந்து போய்க்கொண்டிருந்த அந்த மர்மப் பெண்மணியின் கைவரிசை என்றனர். வேறு சிலர் சாமியாரின் பணத்தை மோசடி செய்த நபர்கள்தான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட வேறு இரண்டு மடங்களின் (இவர்கள் சுமார் 10/20 வருடங்களுக்கு முன்னர் உடுப்பி துறவிகளிடம் துறவறம் பெற்றவர்கள்) தலைவர்கள் ஏனைய ஏழுமடத்தின் பீடாதிபதிகள் மீதும் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்ட பெண்மணியும் ரியல் எஸ்டேட், வணிகர்களும் ஷெட்டி என்னும் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்தப் புதுமடங்களின் தலைவர்களும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனவே இவர்களின் குற்றச்சாட்டு திசைதிருப்பல் முயற்சியாகச் சிலரால் கருதப்பட்டது.

பொறுமை இழந்த பேஜாவர் லக்ஷ்மிவரரின் மதுப்பழக்கம், பெண்கள் தொடர்பு குறித்து வெளிப்படையாகக் குற்றம் சாட்டி லக்ஷ்மிவரருக்குக் குழந்தைகள் உண்டு என்றும் கூறினார். மேலும் தன் மீது ஏதாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலகத் தயார் என்றும் பேஜாவர் கூறினார். லக்ஷ்மிவரதீர்த்தர் மீது பல வருடங்களுக்கு முன்னரே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறியதாகத் தெரியவில்லை.

பழைய பட்ட சிஷ்யர் வித்யாவிஜயர் உட்பட பலர் துறவறத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்கள் யாரையும் மாத்வ சமூகம் ஒதுக்கி வைக்கவோ, சிறுமை செய்யவோ முயலவில்லை. சுப்ரமண்யா மடாதிபதியாக முன்னர் இருந்த வித்யாபூஷண் இப்போது பிரபலப் பாடகராக எல்லோராலும் மதிக்கப்பட்டு வாழ்கிறார். வித்யாவிஜயர் இன்று ஒரு முக்கியமான மாத்வ பண்டிதராக இருக்கிறார். துறவறத்திலிருந்து வெளியே வந்தவர்கள் என இவர்களை யாரும் ஏளனமாகப் பார்க்கவில்லை. லக்ஷ்மிவர தீர்த்தரும் துறவறத்தில் இருந்து வெளியே வந்து குடும்பஸ்தனாக வாழ்ந்திருக்கலாம். தனக்குத் தகுதி இல்லை என்று தெரிந்தும் மடாதிபதியத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்துதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். ஒரு துளி நேர்மை வரலாற்றையே புரட்டி போட்டிருக்கும்.

இன்னொரு பக்கம் ஏனைய மடாதிபதிகள் 20 வருடங்களுக்கு முன்னரே லக்ஷ்மிவரருக்கு நெருக்கடி கொடுத்து அவரை வெளியேற்றி இருக்கலாம். அதை விட்டுவிட்டு லக்ஷ்மிவரரின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்ததற்கான பலனாக ஊடகங்கள் முன்னர் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்த்தவ மிஷனரிகளின் பாணியில் சமூகசேவை, கல்லூரிகள் என்றெல்லாம் பாரம்பரியமான மடங்கள் இறங்கும்போது தவறான நபர்கள் மிக எளிதில் மடத்துடன் தொடர்பினை உருவாக்கிக் கொள்கின்றனர். மடங்களும் மடாதிபதிகளும் இக்கட்டில் சிக்க இதுவும் ஒரு காரணம். ஏதாவது சீர்த்திருத்தம் வேண்டும் எனில் அது மடங்கள் இன்னும் கடுமையாகத் தங்கள் அனுஷ்டானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். 

Leave a Reply