சில பயணங்கள் சில பதிவுகள் – 16 | சுப்புவிதி
வஞ்சிரம் வலையை யாரும் வாங்குவதாயில்லை. குப்புமாணிக்கத்தின் முயற்சியால் அரங்கத்திலிருந்து பணம் வந்தது. துங்கபத்ரா தொழிற்சாலையும் அரசாங்க நிர்வாகத்திலிருந்ததால் அங்கே பராமரிப்பு சரியில்லை. நெய்யப்பட்ட வலையும் தரமானதாய் இல்லை. இதைவிட நவீனமான மெஷின் ஒன்று கோவாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. கவலை மீனைப் பிடிப்பதற்காகக் கவலை வலை தயாரிப்பதென்றும், அதற்காகக் கோவா போய் வருவதென்றும் முடிவாயிற்று. இதற்குள் கடன் தொல்லை அதிகமாகி வட்டி கட்டுவதற்கே மாதம் இரண்டாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. ஓரளவுக்கு மேல் கடன் வாங்க முடியாததால் சீட்டு எடுக்கத் துவங்கினோம். ராஜேந்திரன் பெயரால் சீட்டு, என் பேரால் சீட்டு, தவிர சீட்டு எடுப்பதற்கென்றே சில பினாமிகள் வேறு. எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடிகளைப் பற்றிக் கவலைப்படாமல் சீட்டை எடுத்துவிடுவோம். பாதிப் பணத்துக்குமேல் போய்விடும். தவணை முறைதானே சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இதை ஆரம்பித்துப் பிறகு சீட்டுக் கட்டுவதற்காகவே சீட்டு எடுக்க வேண்டிய நிலைமை. குப்பத்திலேயே சீட்டு எடுத்தால் ஓரளவுக்கு மேல் சந்தேகமாகிவிடும் என்பதால் கம்பெனிச் சீட்டுகளில் சேர்ந்தோம். கையில் நல்ல பணப்புழக்கம் இருந்ததால் செலவுக்குக் கவலையில்லை. செலவுக்குக் கவலை இல்லாததால் கூட இருந்த கூட்டத்திற்குக் குறைவில்லை.
இந்த நேரத்தில் கோவா பயணம் வியாபார ரீதியில் வெற்றிகரமாக முடிந்தது. எல்லா விதமான நவீன மெஷின்களோடு ஒரு தொழிலதிபர் அங்கே ஒரு வலை தயாரிப்புத் தொழிற்சாலையைத் துவக்கியிருந்த நேரம் அது. அதிக விளம்பரம் இல்லாததால் அந்தத் தொழிற்சாலையில் தயாரித்த வலைகளை அவரால் விற்பனை செய்ய முடியாதிருந்தது. சென்னையிலோ வலைக்காக முன்பணம் கொடுத்துவிட்டு மாதக் கணக்கில் மீனவர்கள் காத்திருக்கிறார்கள். கோவாவிலோ தயாரிக்கப்பட்ட வலை விலை போகவில்லை. இது எங்களக்குப் பொற்காலமாக அமைந்தது. முதலீடு இல்லாமலேயே எங்களால் ஆயிரக்கணக்கில் வியாபாரம் செய்ய முடிந்தது. கோவா வலையும் மிகவும் தரத்துடனிருந்ததால் நாங்கள் வைத்ததுதான் விலை. 
அடுத்த இரண்டு வருடங்கள் நான் மாதத்திற்கு இருபது நாட்கள் கோவாவில் தங்கினேன். ராஜேந்திரன் சென்னையிலிருந்து விற்பனையைக் கவனித்துக் கொண்டான். அவனுடைய வரவு செலவுகளைக் கவனிக்க எனக்கு நேரமில்லை. நானும், என் பங்கிற்கு ஆடம்பர ஓட்டல்களில் தங்க ஆரம்பித்தேன். சென்னையிலிருந்த நாட்களில் கோவாவோடு தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் டெலிபோன் வைத்துக்கொண்டேன். இருபத்து மூன்று வயதில் எனக்குக் கிடைத்த வசதிகள் என்னை மாற்றிவிட்டன. ஒரு கையில் வில்ஸ் பில்டர். இன்னொன்றில் பெர்ரி மேசன். சிங்கப்பூர் சட்டையும், டபுள் நிட் பேண்டும், நீள முடியும் என்னை அலங்கரித்தன. தனியாகப் போனாலும் டாக்ஸியில்தான் சவாரி.
ராஜேந்திரனின் தங்கைக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. சுக துக்கங்களில் எங்களுக்குச் சம பங்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் நானே முன்னின்று எல்லாச் செலவுகளையும் செய்தேன். ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்பட்டு மிக ஆடம்பரமாக செய்யப்பட்ட திருமணத்தால் எங்கள் புகழ் ‘ஓஹோ’ என்று வளர்ந்தாலும், எக்கச்சக்கமாகக் கடன் வாங்கி விட்டிருந்ததால் நிதி நிலைமை கவலைக்கிடமானது.
அடிக்கடி கோவாவுக்குப் போய் வந்ததில் வெளிநாட்டாரோடு பழகும் வாய்ப்பிருந்தது. பஞ்சிமிக்கு அருகில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஹிப்பி பீச் என்ற கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடைபெறும். ஒரே நேரத்தில் நூறு கோஷ்டிகள் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பாடலைப்பாடி இசைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த சுதந்திர பூமியில் ஆடைகள் அனாவசியம் என்ற அபிப்பிராயத்தில் சிலர் உலவிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அருகில் போக முடியாது. குளிப்பது என்ற இந்தியப்பழக்கத்தை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. சினிமாவில் வரும் தேவலோகக் காட்சி போல் இந்த இடத்தில் அடுப்பப் புகையும், கஞ்சா நெடியோடு நிறைந்திருக்கும். நானும் இரண்டு முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
ஒரு வாரம் கழித்து இந்தப் பெண் என்னை ஓட்டலில் வந்து சந்தித்தாள். ஜெர்மனியிலிருந்து பணம் வந்துவிட்டதாகவும், தான் ஊருக்குப் போவதாகவும் கூறினாள். நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டேன்.
கோவாவிலிருந்து ரயிலில் பெங்களூர் வழியாகச் சென்னை வர வேண்டும். முதல் நாள் காலை புறப்பட்டு மறுநாள் இரவு சென்னை வரலாம். இந்த ரயிலில் என்னோடு வருபவர்களில் யார் சென்னை வரை பயணம் செய்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வேன். அதிலும் வெளிநாட்டாரிடம் நானே வலியச் சென்று பேச்சுக் கொடுப்பேன். நான் சீட்டைவிட்டு எழுந்து போகும்போது என் பெட்டிப் படுக்கைகளையும், வலை மூட்டைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டுமல்லவா?
ஒருமுறை ஒரு ஆங்கிலேயன் என்னுடன் பயணம் செய்தான். தத்துவ மாணவனான அவன் கோவாவைப் பார்த்த பிறகு ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய உரையைக் கேட்பதற்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தான். வண்டி புறப்பட்டதிலிருந்து சென்னை வந்து சேரும்வரை எனக்கும், இவனுக்கும் இடையே இடைவிடாத வாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. விதி என்று ஒன்று உண்டு. அதில் யாரும் தப்ப முடியாது என்பதை அவன் மீண்டும் மீண்டும் விளக்க முயன்றான். எனக்கு விதியில் நம்பிக்கையில்லை. நாங்கள் தூக்கியெறிந்துவிட்ட விஷயங்களை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று சொல்லிவிட்டேன்.
ரயில் சென்னைக்கு வந்தபோது பேய் மழை. ட்ராக்கில் தண்ணீர் நிற்பதால் ரயிலை பேசின் பிரிட்ஜிலேயே நிறுத்திவிட்டார்கள். போர்ட்டரின் உதவியில்லாமல் நானும் இவனுமாய் எங்கள் லக்கேஜைத் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம். வீட்டுக்குப் போன் செய்தால் பஸ் வசதி இல்லாததால் நான் அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டுமென்று அண்ணன் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை மதிக்காமல் ஒரு ஆட்டோவை வாடகை பேசினேன். ஆட்டோவில் உள்ளே நானும், ஆங்கிலேயனும். நாங்கள் நகர முடியாதபடி பெட்டி, படுக்கைகள், வலை மூட்டை. ரோட்டில் வண்டிகளே இல்லை. தெரு விளக்கும் இல்லை. வேகமாக வந்த ஆட்டோ ரிசர்வ் வங்கி சப்வேக்குள் இறங்கிவிட்டது.
டிரைவர் யோசியாமல் செய்த காரியத்தால் தண்ணீர் மளமளவென்று ஏறியது. டிரைவரும் ஆங்கிலேயனும் தண்ணீரில் குதித்து இடுப்பளவு நீரில் நின்று கொண்டு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்கள். நான் இறங்க முடியாதபடி என்னைச் சுற்றி பெட்டி, படுக்கை. ஆட்டோ டிரைவரும், ஆங்கிலேயனுமாய்ச் சேர்ந்து ஆட்டோவைத் தள்ளிக்கொண்டு மேலே வந்தார்கள். மேலே வந்ததும் ஆட்டோ டிரைவர் இஞ்சினை சுத்தம் செய்து கொண்டிருந்தான். நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். ஆங்கிலேயன் என் அருகில் வந்து ‘இப்போது நீ விதியை நம்புகிறாயா? இன்றிரவு நான் உன்னை வண்டியில் வைத்துத் தள்ள வேண்டுமென்பதுதான் என் விதி’ என்றான்.
நொச்சிக்குப்பத்துக்குப் பக்கத்தில் ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது. இந்த ரெஸ்டாரன்ட் முதலாளி எனக்கு வேண்டியராவார். சென்னையிலிருக்கும் போதெல்லாம் நான் இங்கேயே தங்கியிருப்பேன். திடீர் ஐஸ்வர்யத்தை என்ன செய்வதென்னு நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது பணத்தைக் கரைக்க இந்த ரெஸ்டாரென்ட் உதவியது. அவ்வப்போது இதற்கு நான் பைனான்ஸ் செய்வதுமுண்டு. நானும், ராஜேந்திரனும் இங்கே புதுமுறை டிப்ஸ் ஒன்றை அமல்படுத்தினோம். சாப்பிட்டுவிட்டு, அட்டென்டென்ஸ் ரிஜிஸ்தரை எடுத்துவரச் செய்து வரிசையாக ஆளுக்கு ஒரு ரூபாய் டிப்ஸ் கொடுப்போம். தண்ணீர் இழுப்பவனிலிருந்து, மாவு ஆட்டுபவன்வரை எல்லோரும் சேர்ந்துதானே ஒரு தோசையை உருவாக்குகிறார்கள். ஆகவே, எல்லோருக்கும் சமமாக டிப்ஸ் கொடுக்க வேண்டுமென்பது, ராஜேந்திரனின் சித்தாந்தம். எனக்கும் இது நியாயமாகப்பட்டது.
ரெஸ்டாரென்டில் வாடிக்கையாளர் உபயோகப்படுத்தும் டெலிபோன் காசைப் போடுவதற்கு ஒரு உண்டியல் இருந்தது. இந்த உண்டியல் ஒருநாள் திருட்டுப் போய்விட்டது. முதலாளி ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து குறி பார்த்தார். மந்திரவாதி தெற்கே இருப்பவன்தான் திருடியிருக்கிறான் என்று கூறிவிட்டான். தெற்கே ஜானகிராமன் என்ற காபி மாஸ்டர் இருந்திருக்கிறான். ஜானகிராமன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த விஞ்ஞான யுகத்தில் மந்திரவாதியின் பேச்சை நம்பி ஒரு தொழிலாளியைப் பழி வாங்கிவிட்டார்கள் என்ற கோபத்தில் ஜானகிராமனை என்னோடு வைத்துக் கொண்டேன். என்னுடைய தொழிலில் எனக்கே வேலையில்லாதபோது ஜானகிராமன் செய்வதற்கு ஒன்றுமில்லை. தினமும் பகலில் என் வீட்டுக்குப் போய் சாப்பாடு எடுத்துவர வேண்டும். மற்றபடி நான் சிகரெட் குடித்தால் அவன் குடிக்க வேண்டும். நான் வேறு ஏதாவது குடித்தால் அவனுக்கும் அதுவே. மூன்று வேளை சாப்பாடும், சகல செலவும் போக மாத சம்பளம் இருநூறு ரூபாய்.
வேலையிலிருக்கும்போதே ஜானகிராமன் ஒரு குப்பத்துப் பெண்ணிடம் வம்பு செய்துவிட்டான். என்னுடைய தலையீட்டால் உதை வாங்காமல் தப்பித்தான். ஜானகிராமன் என்னைத்தான் அதிகமாகக் கவனிக்கிறான் தன்னைக் கவனிக்கவில்லை என்ற எண்ணம் ராஜேந்திரனுக்கு ஏற்பட்டு, அவனும் ஒரு பையனை நியமித்துக் கொண்டான். இவ்வாறு என்னால் போஷிக்கப்பட்ட ஜானகிராமன் ஒரு நாள் குப்புமாணிக்கம் வீட்டில் நான் வைத்திருந்த கணிசமான தொகையோடு காணாமல் போனான்.
ஜானகிராமனிடம் நான் பணத்தைப் பறிகொடுத்த செய்தி ரெஸ்டாரென்ட் முதலாளிக்குத் தெரிந்தவுடன் அவர் எனக்கு ஆள் மூலம் அழைப்பு விடுத்தார். நான் அவரைச் சந்தித்தேன். ‘ஜானகிராமன்தான் டெலிபோன் காசைத் திருடினான் என்பதை ஒருவன் என்னிடம் சொல்லிவிட்டான். தகவல் கொடுத்தவனை அடையாளம் காட்ட விரும்பாததால் மந்திரவாதி சொல்வதுபோல் ஒரு செட்அப் நானே செய்தேன். நீ இதைப் புரிந்து கொள்ளவில்லை. இவ்வளவு நாட்கள் என்னோடு பழகியிருந்தும் என்னிடம் கேட்காமலேயே நீ முடிவு எடுத்துவிட்டாய். உனக்கு புத்தி வரட்டும் என்று நானும் விட்டுவிட்டேன். இதுதான் விஷயம்’ என்றார். 
இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு நான் கோவாவுக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன். வண்டி குண்டக்கல் ஸ்டேஷனுக்கு வெளியே வந்துவிட்டது. நான் எஞ்ஜினைப் பார்த்தபடி ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தேன். அப்போது ரயில்வே ட்ராக் ஓரமாக ஜானகிராமன் நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். அவ்வளவுதான். வண்டியிலிருந்து என்னுடைய பெட்டிகளை வெளியே வீசி எறிந்தேன். வண்டியிலிருந்து குதித்துவிட்டேன். ரயில் என்னைக் கடந்து சென்றுவிட்டது. பெட்டிகளை எடுத்து ஓரிடத்தில் வைப்பதற்குள் ஜானகிராமன் என்னைப் பார்த்துவிட்டான். எனக்கும் அவனுக்கும் நூறு கஜம் இடைவெளி. தண்டவாளம் மேட்டிலிருந்தது. இரண்டு பக்கமும் ஆறு அடிப் பள்ளம். பள்ளத்திற்கு அப்பால் ஒருபுறம் வயல். இன்னொருபுறம் சாலை. அதன் மறுபக்கம் வீடுகள். பெட்டியை ஏதாவது ஒரு வீட்டில் கொடுத்துவிட்டு இவனைப் பிடிக்கலாம் என்ற யோசனையுடன் பெட்டியைத் தூக்கினேன். ஜானகிராமன் அங்கே கிடந்த சரளைக்கற்களை எடுத்து நான் நகர முடியாதபடி வீசினான். கல்லடியிலிருந்து தப்புவதற்காக பள்ளத்தில் இறங்கினேன். ஜானகிராமன் கற்களை வீசிக்கொண்டே, தண்டவாளத்தின்மீது ஓடி மறைந்து போனான். பிறகு நான் குண்டக்கால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி கான்ஸ்டபிள் ஒருவரை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு ஜானகிராமனைத் தேடினேன். அவன் கிடைக்கவில்லை.
நான் எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் வாங்கினாலும் என் வீட்டாருக்கு அதனால் லாபம் இல்லை. வீட்டுக்கென்று நான் பணம் கொடுத்ததில்லை. ஒருநாள் மொத்தத் தொகையாகக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஒரே ஒருநாள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அம்மாவும், நயினாவும் சண்டை போட்டுக் கொண்டதில் அம்மா உணர்ச்சிவசப்பட்டுக் கீழே விழுந்துவிட்டாள். நாக்கு இழுத்துக் கொண்டது. பேச முடியவில்லை. அம்மாவை ஒரு டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு போய் ஒவ்வொரு டாக்டராகக் காட்டினேன். யாரும் எனக்குத் திருப்திகரமான வகையில் பதில் சொல்லவில்லை. வீட்டுக்கே வந்துவிட்டேன். ஒருநாள் சஸ்பென்ஸுக்குப் பிறகு அம்மாவுக்குப் பேச்சு வந்துவிட்டது.
வியாபார விஷயமாக நான் கோவா போயிருந்தபோது சென்னையில் பெரியப்பா காலமாகிவிட்டார்.
தொடரும்…
***
Leave a Reply