கேரளத்துச் சுவரோவியங்கள்: வனப்பும் எழிலும் சிறப்பும் | அரவக்கோன்சுவர் ஓவியப்படைப்பில் கேரளத்துக்கு நீண்டவரலாறு உள்ளது. பொ.யு. ஏழு எட்டு நூற்றாண்டுகளிலிருந்து அது தொடங்குகிறது. வடக்கில் ராஜஸ்தான் சுவர் ஓவியங்களுக்கு இணையான சிறப்புப் பெற்றவை. ஆலயங்கள், அரசு மாளிகைகள் கிறிஸ்துவ தேவாலயங்கள் என்று அவை ஏராளமாக இன்றளவும் நம்மிடையே உள்ளன.
சுவர் ஓவியங்களின் தொடக்கமாக இன்றையத் தமிழ் மாநிலத்தில் உள்ள கன்யாகுமரி மாவட்டத்தில் திருநந்திக்கரா என்னும் இடத்தில் அகழ்ந்து உருவான குகைக்கோயிலில் உள்ளதைக் கூறலாம். பொ.யு. 7-8ம் நூற்றாண்டுகளில் பல்லவர் அகழ்ந்து உண்டாக்கிய இந்தக் குகை ஆலயம் முதலில் சமணத்துக்கானதாக இருந்துள்ளது. இதில் உள்ள ஓவியங்கள் பொ.யு. 9-12 நூற்றாண்டுகளில் தீட்டப்பட்டவை. பொ.யு.13-14ம் நூற்றாண்டுகளுக்கிடையில் தீட்டப்பட்ட காந்தளூர், பிஷரிக்காவு பகவதிஅம்மன் ஆலயம் (கோழிக்கோடு), பார்த்திவபுரம் (கன்யாகுமரி), திருவிக்ரமபுரம் (திருவனந்தபுரம்) சுவர் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. கேரளத்துச் சுவரோவிய, சிற்ப பாணி பெரிதும் பல்லவ பாணியைப் பின்பற்றினவைதான் என்பது திருநந்திக்கரா குகைக்கோயிலில் காணப்படும் ஓவியங்களின் வழியைக்கொண்டு நாம் புரிந்துகொள்ளமுடியும்.

பொ.யு.14-16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் கேரளச் சுவர் ஓவியத்தின் பொற் காலம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. மட்டஞ்சேரி அரசு மாளிகையில் உள்ள இராமாயண, கிரிஜா திருமண சுவர் ஓவியங்களும், வடக்குநாதன் ஆலயம், (திருச்சூர்) செம்மந்திதா சிவன் ஆலயம், (திருச்சூர்) குடமலூர் தேவி ஆலயம் (கோட்டயம்), தொடிக்களம் (கண்ணூர்) சிவன் ஆலயச் சுவர் ஓவியங்களும் நேர்த்திக்கு உச்சம் தொட்டவை என்று சிறப்பிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பையனூர்க்காவு, திருசக்ரபுரம், கோட்டக்கல் ஆலயங்கள், பத்மநாபபுரம் அரசு மாளிகை ஓவியங்கள் உருவாயின. பொ.யு.14-17 நூற்றாண்டுக் கேரளச் சுவர் ஓவியங்களை இந்தியச் சுவர் ஓவிய வரலாற்றின் இறுதிப்பகுதி என்று என்று இந்தியச் சுவர் ஓவிய வரலாறு கூறுகிறது.
பொ.யு.15 ஆம் நூற்றாண்டில் நாராயணன் என்பவரால் படைக்கப்பட்ட தந்திர சமுச்சயமற்றும் ஸ்ரீகுமாரரின் (16-பொ.யு.) சிற்ப சாஸ்திரம்’ (ஆலயக் கட்டடக்கலை இலக்கண நூல்கள்) இரண்டும்தான் இந்த ஓவியர்களால் பின்பற்றப்பட்ட நூல்கள். சிற்ப சாஸ்திரம்நூலில் ஆலயக் கட்டமைப்பு, ஓவியத்துக்கான இலக்கணம் ஆகியவை பற்றி விவரங்கள் உள்ளன. தென்பகுதிக்கு, குறிப்பாகக் கேரளத்துக்கு இதுதான் சிற்பக்கலை நூல். கேரளச்சுவர் ஓவியங்கள் சித்ர சூத்ரஓவிய இலக்கண நூலைப் பெரிதும் பின்பற்றிவிதமாகவே உள்ளன. தமக்கான தனியான அணுகுமுறையும், குறியீடுகளும், வண்ணத்தொகுப்பும், தோற்ற வடிவமும், கட்டமைப்பும் கொண்ட அவை, இந்தியாவின் மற்ற எந்தச் சுவர்ப்பாணியாலும் பாதிக்கப்படாது விலகியே இயங்கியது.
அரசு மாளிகைகள்
மட்டஞ்சேரி அரசு மாளிகை
கேரளத்து அரச மாளிகைகளும் ஆலயங்களும் அமைப்புமுறையிலும் தோற்றத்திலும் பெரும் ஒற்றுமையைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாற்புறமும் சரியும் கூரையும், அவற்றின்மேல் வேயப்பட்ட மங்களூர் ஓடுகளும், கூரையைத் தாங்கும் கனத்த நீண்ட மரஉத்திரங்களும், அதைத்தாங்கி நிற்கும் சிற்பவேலைப்பாடுகள் கூடிய மரத்தூண்களும் என்று அவை விளங்குகின்றன. மரச்சிற்பங்களைப் படைப்பதிலேயே அவர்களின் அக்கறை இருந்துள்ளது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடும், கர்நாடகமும் அந்த நிலத்து சிந்தனையில் இடம் பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

பரபரப்பான துறைமுகத்தைக் கொண்டது கொச்சி. கொச்சி நிலப்பகுதி பெரும்படப்பு ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது. அது கொச்சி மன்னர்களின் தலைநகரம். மட்டஞ்சேரி அம்மன்னர்களின் அரசு மாளிகை. உணவுக்கு மணமும் காரமும் சேர்க்கும் கருமிளகு, இஞ்சி ஏலக்காய் போன்ற பொருள்களை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் போர்த்துகீசிய வர்த்தகர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த தருணம் அது. கள்ளிக் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சமுத்ரீ (ஸாமரின்) மன்னருடன் கொச்சி மன்னருக்கு இருந்த பகையைப் பயன்படுத்திக் கொண்டனர் போர்ச்சுகீசியர். தங்கள் பாதுகாப்புக்காக ஒரு கோட்டையே கட்டிகொண்டு அதில் வசித்தார்கள். ராணுவமும் பாதுகாப்புக்கென இருந்தது. கொச்சி அரசர்களின் ஆதரவுடன் வர்த்தகம் செய்த அவர்கள் அரசு விவகாரங்களில் மன்னர்களை ஏறத்தாழத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது மன்னராக விளங்கியவர் வீர கேரள வர்மா தம்புரான் (1552-55-பொ.யு.) அவரது பரிவுப் பார்வையில் தொடர்ந்து இருக்கும் விதமாகவும் அவரை மகிழ்விக்கும் விதமாகவும் மட்டஞ்சேரியில் ஒரு பெரிய மாளிகையைத் தம்செலவில் எழுப்பி அதை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அத்துடன் ஒரு தங்கக் கிரீடமும் பரிசளித்தனர். பொ.யு. 1663ல் டச்சு நாட்டிலிருந்தும் கடல் வர்த்தகம் செய்ய வர்த்தகர்கள் கொச்சியில் வந்து இறங்கினர். போர்ச்சுகீசியரை அகற்றி அந்த இடத்தைத் தமது வசமாக்கிக் கொண்டனர். மட்டஞ்சேரி மாளிகையை விரிவாக்கம் செய்து கூடுதல் எழில் சேர்த்தனர். இதனால் பின்வந்த ஆண்டுகளில் அது டச்சு மாளிகை என்றும் அழைக்கப்பட்டது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் அது கொச்சி மன்னர்கள் வசித்த மாளிகையாக விளங்கியது. இந்த மன்னர் வரிசையில் பரிக்ஷித் தம்புரான்தான் கடைசி. அவர் ஒரு ஆண்டுமட்டுமே அரியணையில் இருந்தார். 1949ல் கொச்சி திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட்டது.
மட்டஞ்சேரி மாளிகை நடுக்கட்டு எனப்படும் நான்கு மாளிகைகளைக் கொண்டது. அவற்றின் நடுவில் உள்ள பெரிய திறந்தவெளியில் மன்னர்களின் குலதெய்வமான பழையனூர் பகவதி ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் உட்புறம் முழுவதும் மரச்சிற்பவேலைப்பாடு கொண்ட கூரையும் அதைத்தாங்கும் தூண்களும் உள்ளன. கற்பலகைபோன்றே தோற்றம் கொண்ட நிலத்தில் பதியப்பட்ட பலகைகள் மரம் எரித்த கரி, எரித்த தேங்காய் ஓடு, சுண்ணாம்பு, பழச்சாறு, மஞ்சள் நீக்கப்பட்ட முட்டையின் வெள்ளை திரவம், ஆகியவற்றைக் கலந்து உருவானவை. சிவனுக்கும் தனி ஆலயம் இந்த வளாகத்தில் உள்ளது.
16-17ம் நூற்றாண்டுகளில் மாளிகையின் அறைச் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இராமாயணம், மஹாபாரதம் இரண்டிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகள் ஓவியங்களாயின. அவை நிலத்திலிருந்து கூரைவரை உள்ள சுவர்ப்பரப்பில் பிரிக்கும் கலைவடிவப் பட்டைகளுடன் அடுத்தடுத்து உள்ளன. ஓவியக் காட்சிகளைப் பிரிக்கும் கோடுகளே அரை அடி அகலம் கூடியது. அவற்றில் மலர்கள், பறவைகள் கோலவடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இதை ராஜஸ்தான், முகலாய சிற்றோவியங்களில் காணப்படும் எல்லைக் கோடுகளுடன் ஒப்பிடலாம்.
தொடக்கமாக, 16ம் நூற்றாண்டில் குழலூதும் கண்ணனின் கோகுல லீலைகள் ஓவியமாயின. (வேணுகோபாலன் கதைகள்.) தொடர்ந்து பின்வந்த ஆண்டுகளில் அவற்றின் இடையிடையே இராமாயண காவியத்திலிருந்து எடுக்கப்பட்ட தொடர் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டஆத்யாத்ம ராமாயணம்என்னும் மலையாள மொழிக் காவியத்தில் உள்ள விவரங்களைப் பின்பற்றி ஓவியமாயின என்னும் அழுத்தமான கருத்து உண்டு.
தசரதர் குழந்தை வேண்டி செய்யும் புத்திரகாமேஷ்டி யாகம்தொடங்கி இராமர் இலங்கைப் போருக்குப் பின் அயோத்தி மீள்வதுவரையான நிகழ்வுகள் தொடர் ஓவியங்களாகி உள்ளன. 300 சதுர அடிகளைக் கொண்ட48 ஓவியங்களைக் இங்கு காணலாம். காட்சிகளைப் பிரிக்கும் பட்டைக் கோடுகள் ஓவியத்தின் காட்சித் தொடர்ச்சியை இடையூறு செய்யவில்லை. கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்தில் உள்ள நாயக்கர் கால இராமாயண ஓவியத் தொடருடனும் இதை உடன் வைத்துப் பார்க்கலாம். இரண்டின் கருப்பொருளும் ஒன்றுதான் என்றாலும் இரண்டுக்கும் இடையே உள்ள ஓவிய சிந்தனை வழியும் வண்ணத்தொகுப்பு வழியும் பெரும் வேறுபாட்டைக் கொண்டுள்ளதை அறியமுடியும். ஒன்றையொன்று பாதிக்கவில்லை என்பதிலிருந்து கலைஞர்களின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமை தெரிகிறது. அதற்கான காரணம் அறிவது கலை வரலாற்று ஆய்வாளருக்கானது.
தனி ஓவியங்கள்
ஐந்து தலைகொண்ட தனது படத்தை விரித்து உயர்த்தி ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுந்தநாதர் எனப்படும் மாலவன் அமர்ந்திருக்கும் ஓவியம் 6ஆம் நூற்றாண்டு பாதாமி குகை விஷ்ணு சிலையை நினைவுபடுத்துகிறது. திருப்புணித்துரா ஆலயத்தில் உள்ள பூர்ணத்தயேசர் விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஓவியத்தின் பாதிப்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். தாமரை மலர்மீது அமர்ந்த இலக்குமி ஓவியமும் காணப்படுகிறது. இவையெல்லாம் பின்னர் சேர்க்கப்பட்டவை.
காளிதாசனின் குமாரசம்பவம்காவியத்திலிருந்து சிவனும் உமையும் கைலாய மலையில் வீற்றிருக்கும் காட்சி, கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கியிருக்கும் காட்சி, படுத்திருக்கும் கிருஷ்ணர் தன்னைச்சுற்றி இருக்கும் கோபியருடன் ஈடுபடும் பாலுறவுக் காட்சி, அரசரின் பள்ளி அறைச் சுவரில் சிவனும் உமையும் ஆரத்தழுவியவிதமாக உள்ள காட்சி போன்றவை 18-19ம் நூற்றாண்டுக்கானவை.
நாராயணமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தன் எம்பராந்தி என்னும் ஓவியரால் பெரும் எண்ணிக்கையிலான ஓவியங்கள் தீட்டப்பட்டதாக Corporation of chochin என்னும் இணையதளத்தில் ஒரு குறிப்பு உள்ளது.
பத்மநாபபுரம் அரசு மாளிகை
கேரளத்தின் தென்கோடிப்பகுதியை திருவிதான்கோடு வேநாடு அரசர்கள் ஆட்சிசெய்து வந்தனர். கல்குளம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் இருந்த அரசரின் மாளிகை மண்ணாலானது. 14ம் நூற்றாண்டிற்கானது. மன்னர் இரவிப்பள்ளி இரவிவர்மா குலசேகரப் பெருமாள் (பொ.யு.1592-1609). ‘தச்சு சாஸ்திரம்என்னும் நூலை முன்மாதிரியாகக் கொண்டு அதை பொ.யு.1602ல் மரமாளிகையாகப் புதுப்பித்துக் கட்டுவித்தார். 1550-1750களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இது மன்னர்கள் வசித்த மளிகையாக விளங்கியது. 1729-1758களுக்கு இடையில் மன்னராக இருந்த அனிசம்திருநாள் மார்த்தாண்டவர்மா மாளிகையில் பல எழில் கூடிய பகுதிகளை உருவாக்கி, தமது குலதெய்வமான பத்மநாபனுக்குக் காணிக்கையாக்கி அதன் முந்தையப் பெயரான கல்குளம் மாளிகை என்பதை மாற்றி பத்மநாபபுரம் மாளிகை என்று பெயர் சூட்டினார். 1600-1790களில் அதுதான் திருவிதாங் கோடு அரசின் தலைநகரமாகச் செயற்பட்டது. 1795ல் மன்னர் கார்த்திகைத்திருநாள் இராமவர்மா (1758-1798) தலைநகரைத் திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். ஆனால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா பத்மநாபபுரத்திலேயே தொடர்ந்து. என்றாலும் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி ஆலயத்தைச் சுற்றிக் குடியிருப்புக்கள் வளர்ந்து விரிவடைந்ததால் பத்மநாபபுரம் மெல்லத் தனது முக்கியத்துவத்தை இழந்தது.

மன்னர் சுவாதித்திருநாள் இராமவர்மா (1813-1846) ஆட்சிக்காலத்தில் இந்த நவராத்திரித் திருவிழா திருவனந்தபுரத்துக்கு இடம்பெயர்ந்தது. பத்மநாபசுவாமி ஆலயத்துக்கு அருகில் புதிதாக எழுப்பப்பட்ட குதிரை மாளிகையில் நவராத்திரி மண்டபத்தில் நிகழத்தொடங்கியது. 1850களுக்குப்பின் பொதுமக்கள் பத்மநாபபுரத்துக்குச் செல்லும் பொதுவழி மூடப்பட்டது. மக்களிடம் மாளிகையில் பேய் நடமாட்டம் உள்ளதாக ஒரு செய்தி பரவியது. திருவிதாங் கோடு அரசின் கடைசி மன்னரான சித்திரைத்திருநாள் பலராமவர்மா அவரது அன்னை ராஜமாதா சேதுபார்வதி அம்மாள் திவான் சர் சி.பி.ராமசாமி ஐயர், அப்போது அரசின் கலைப்பகுதியின் வழிநடத்துபவராக இருந்த J.H.Cousins நால்வரும் இணைந்து அரசு அருங்கட்சியகத்தின் தலைமைப் பொறுப்பாளர் வாசுதேவப்பொதுவாள் மேற்பார்வையில் 1934ல் இம்மாளிகையை அருங் காட்சியகமாக மாற்றினர். இந்தியா விடுதலை அடைந்தபின் மொழிவாரி மாநிலங்கள் உண்டாக்கப்பட்டன. இம்மாளிகைப் பகுதியான கன்யாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மாளிகைப் பராமரிப்பு கேரள அரசிடம் ஒப்புவிக்கப்பட்டது. இன்றளவும் அது தொடர்கிறது. மிகநேர்த்தியாகப் பராமரிக்கப்படும் மாளிகை புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதற்கொப்பான மாளிகை உலகில் வேறு இல்லை என்று புகழப்படுகிறது.
மரத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த மாளிகையில் உள்ள மரச்சிற்பங்கள் சிற்பியின் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் தெரிவிக்கின்றன. அறைகளை உண்டாக்கமட்டுமே செங்கல் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. வேற்று நிலத்து கலைப்பாணி கலக்காமல் கேரளச் சிற்பவழி மட்டுமே கொண்டுள்ள இம்மாளிகையில் இந்நிலத்தில் விளையும் மரங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. மரச்சிற்ப வேலைப்பாடுகளைக்கொண்ட மாளிகை என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு உள்ள நவராத்திரி விழா மண்டபத்தில் தூண்கள் கல்லால் ஆனவை. அவற்றில் விளக்கைக் கைகளில் ஏந்தியபடி நிற்கும் பெண் சிற்பங்கள் உள்ளன. விழாக்கால நிகழ்ச்சிகள் இங்குதான் நிகழ்ந்தன. அனைத்து விளக்குகளும் ஒளிரும் மண்டபத்தை கற்பனை செய்து பார்த்தால் கனவுலகம் போனதுபோலத் தோன்றுகிறது.
இங்கு உள்ள சுவர் ஓவியங்கள் கேரளப்பாணி படைப்புச் சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்துமதம் சார்ந்த இதிஹாசம் புராணம் போன்றவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் நிகழ்வுகளையும் கடவுளரின் பல்வேறு தனித்த தோற்றங்களையும் சுவரப்பரப்பு முழுவதும் நெருக்கி அடைத்தவிதமாக ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. தையம், கொடியாட்டம், கதகளி போன்ற ஆலயம் சார்ந்த நாட்டியங்களிலும் ஆலயத் திருவிழாக் காங்களில் நிலத்தில் கடவுளர் உருவத்தை வரைந்து வண்ணப்பொடிகள் கொண்டு தூவி ஓவியமாக்குவதும் இவற்றில் பிரதிபலிக்கின்றன. மானுடன் விலங்கு போன்றவற்றின் உருவங்கள் மிகைப்படுத்தப்பட்ட அளவில் பெரியதாகக் காணப்படுகின்றன. அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள் உடலை றைக்கும் விதமாக உள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணத் தொகுப்பு பளீரென்று எதிரெதிர் வண்ணங்களின் கூட்டமைப்பில் உள்ளன. வண்ண அடர்த்திகொண்டு உருவங்களின் முப்பரிமாணம் உண்டாக்கப்பட்டுள்ளது. இயற்கையினின்றும் விலகிய உடற்கூறு கொண்ட உருவங்கள் ஓவியத்தில் அடைத்த விதமாகவும் கூட்டமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. உருவங்களின் முகங்களிலும் ஒரு பொதுத்தன்மை பின்பற்றப்பட்டுள்ளது. உருவங்களை உண்டாக்கும் கோடுகள் தடையற்றதும் பிசிரற்றதும் திடமானதுமானதுமாக ஓவியனால் கையாளப்பட்டுள்ளன. அவை ஒயில் கூடியவை. ஓவியனின் மனத்தெளிவை வெளிப்படுத்துபவை.
காமத்தைக் கூறும் ஓவியங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டுள்ளன. கடவுளர், மானுடர், விலங்குகள் என்று வேறுபாடின்றிக் காணப்படும் புணர்ச்சிக் காட்சிகள் உடலுறவு வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதாகவே இடம்பெற்றுள்ளன. கடவுளருக்கும் எளிய மனிதனுக்கும் உள்ள நுண்ணிய கோடு அகற்றப்படுகிறது. மதமும் கலையும் இங்கு ஒன்றாக பிணைந்துவிடுகிறது. இவற்றில் தேவைக்கதிகமாக உருவங்கள் இடம்பெற்றுள்ள தோற்றம் தெரிகிறது. ஆனால், திப்பெத் தங்க்கா ஓவியங்களிலும் இவ்வித ஓவியக் கட்டமைப்புத்தான் உள்ளது. சிலபோதுகளில் ஓவியன் ஒரு கருவிபோல உருவங்களை மீண்டும் மீண்டும் படியெடுப்பது போலவும் நினைக்க வைக்கிறது.
கிருஷ்ணாபுரம் மாளிகை
ஆலப்புழா மாவட்டத்தில் காயாங்குளம் என்னும் கிராமத்தில் உள்ளது கிருஷ்ணாபுரம் மாளிகை. பொ.யு. 1746ல் ஒடநாடு திருவிதாங்கோடு அரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போரில் திருவிதாங்கோடு மன்னர் மார்த்தாண்டவர்மா வெற்றிபெற்றார். இந்தப் பகுதியைத் தனது ஆளுமையின் கீழ் கொணர்ந்தார். வீர ரவிவர்மா (பொ.யு. 1700-1775) எழுப்பியிருந்த மாளிகையை முற்றிலுமாக இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக ஒரு மாளிகையைக் கட்டினார். கேரளக் கட்டடப் பாணியுடன் மேலைநாட்டுப் பாணியும் கலந்தது உருவானது அந்த மாளிகை. அருகில் ஆலயம், குளம் போன்றவையும் உருவாயின. குளத்தின் அடியில் ஆபத்துக்காலத்தில் மன்னர் தப்பிச் செல்ல சுரங்க வழியும் உண்டு என்பர். பதினாருக்கெட்டு எனப்படும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட இம்மாளிகை 22 அறைகளைக் கொண்டது. மரக்கதவுகளில் நாதாங்கிகூட மரத்திலேயே செய்து பொருத்தப்பட்டுள்ளது. தரைத்தளம் மரப்பலகைகளால் ஆனது. மாடிப்படிகளின் அமைப்பு பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளது. மாளிகையின் நடுவில் உள்ள பெரிய நீர்த்தொட்டி வெப்பத்தை எப்போதும் தணிக்கும் விதமாக உள்ளது. காலப்போக்கில் மாளிகைப் பராமரிப்பு இல்லாமல் கேட்பாரற்றுப் போயிற்று. சுற்றியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு கதவு போன்ற மரப் பொருள்கள் களவாடப்பட்டன. 1950ல் பத்மநாபபுரம் மாளிகையின் குறு வடிவம் இது என்று புகழப்படும் இம்மாளிகை கேரள அரசால் மராமத்து செய்யப்பட்டு கலைக்கூடமாக மாற்றி அமைக்கப்பட்டது.
இங்கு உள்ள கஜேந்திர மோட்சம்சுவர் ஓவியம் அளவில் மிகப்பெரிது. அறையின் ஒரு பக்கத்துச் சுவர் முழுவதும் பரவியிருக்கும் அது இப்போது கலைக்கூடமாக மாற்றிய பகுதியில் உள்ளது. ஓவியத்தின் உயரம் 9.8 அடிகள். கேரளத்துச் சுவர் ஓவியங்களிலேயே இதுதான் தனித்த பெரிய ஓவியம் என்னும் குறிப்பும் உள்ளது. ஓவியத்தில், முதலையின் பிடியில் இருந்து வேழத்தை விடுவிக்க கருடனின்மேல் அமர்ந்தவாறு வானில் தென்படும் விஷ்ணு, மையமாகக் காணப்படுகிறார். அவரைத்தொழும் முனிவர்கூட்டம், பல்வகை விலங்குகள், வனத் தாவரங்கள், யாளி போன்ற கற்பனை விலங்குகள் சுற்றிலும் இடம் பெற்றுள்ளன. கீழ்ப்புறத்தில் குழந்தை கிருஷ்ணனும் கோபியர்களும் காணப்படுகின்றனர்.
ஆலய ஓவியங்கள்
புண்டரீகபுரம் ஓவியங்கள்
கோட்டயத்தில் தலயோலப்பரம்பு என்னும் இடத்துக்கு அருகில் உள்ள சிறு குன்றின்மீது புண்டரீகபுரம் ஆலயம் உள்ளது. கருவறையில் கருடன்மீது பூதேவியுடன் வீற்றிருக்கும் விஷ்ணு சிலை உள்ளது. கற்பகத் தருவின் கீழ் வீற்றிருக்கும் சிவபார்வதி, மகிஷனை அழிக்கும் மூர்க்கமான துர்க்கை, குழந்தை கிருஷ்ணனின் குறும்புகள், மானுடரை அச்சுறுத்தும் யக்ஷி, இராம பட்டாபிஷேகம், சிவ தாண்டவம், புரவியின் மீது அமர்ந்துள்ள சாஸ்தா என்னும் ஐயப்பன் போன்ற காட்சிகள் ஓவியங்களாயிருக்கின்றன. மட்டஞ்சேரி பத்மநாபபுரம் ஓவியங்கள் போல இவை பரவலாக அறியப்படவில்லை ன்றாலும் அவற்றுக்கு இணையானவைதான் இவையும். இவ்வோவியங்கள் தோராயமாக 18ம் நூற்றாண்டில் தீட்டப்பட்டவை.
கோட்டக்கல் வெங்கடதேவர் சிவ ஆலய ஓவியங்கள்
ஆயுர்வேத மருத்துவத்துக்குக் கோட்டக்கல் என்று இன்று அறியப்படும் கோட்டக்கல் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோழிக்கோடு சாமரின் (சமுத்ரி) மன்னர்களின் கிழக்குப் பகுதியின் முக்கிய இடமாக இருந்தது. அதற்கு முன்னர் அது வலுவநாடு அரசரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்தது.
இந்த ஆலயத்தில் உள்ள ஓவியங்கள் பொ.யு. 1866-1878 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தீட்டப்பட்டவை. ஆலயத்தின் தெற்குச் சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம், பொருள் உதவி செய்தவர், ஓவியர்களின் பெயர்கள் போன்ற விவரங்கள் காணப்படுகின்றன. நீண்ட சுவர் முழுவதும் காட்சித்தொடர் உள்ளது. சுவரை சிறுபகுதிகளாகப் பிரித்தும் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களின் வண்ணத்தொகுப்பும் கோடுகளின் திண்மையும் காண்போரின் கண்களுக்குத் தப்பாது. சைவமும் வைணவமும் இணைந்த சாக்த வழிக்கானது இவ்வாலயம். இங்கு இரண்டு வழி ஓவியங்கள் உள்ளன. அனுபவமும் முதிர்ச்சியும் கூடிய ஓவியரின் படைப்புகளும், வண்ணத்தேர்வின் சிறப்பும் காணப்படுகின்றன. சிவன், மோஹினி, கருடன், சக்தி, பூதேவியை ஏந்திய வராகர் போன்ற ஓவியங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
எட்டுமானூர் ஓவியங்கள்
கோட்டயம் நகரித்திலிருந்து வடக்காகப் பயணித்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எட்டுமானூரில் உள்ள சிவன் ஆலயத்தை அடையலாம். இந்த ஆலயத்தின் சிவன் உருவம் காண்போரை அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட சரபமூர்த்தியாகும். கல், மரம் இரண்டிலும் சிற்பங்களைக் கொண்டது. ஆலயத்தின் தெற்கு நுழைவாயிலில் வெளிப்புற உட்புறச் சுவர்களில் அளவில் பெரிய ஓவியங்கள் உள்ளன. இவற்றின் வனப்பைப்பற்றி ஆனந்த குமாரசாமி, ஸ்டெல்லா க்ராமரிஷ், சி.சிவராமமூர்த்தி போன்ற கலை வல்லுர்கள் விரிவாகப் பேசியுள்ளனர். இந்த ஓவியங்களில் தனித்து விளங்குவது நடராஜர்தான். இந்த ஓவியம் தெற்குப்புற உட்சுவரில் உள்ளது. 217 செ.மீட்டர் உயரமும், 360 செ.மீட்டர் அகலமும் கொண்டது. தாள சம்ஸ்போதிதாஎன்று நாட்டிய சாஸ்த்திரத்தில் பரதமுனிவரால் விவரிக்கப்பட்ட தோற்றம் கொண்டுள்ளது. 16 கரங்கள் உள்ள நடமாடும் சிவனைச் சுற்றி பூத கணங்களும், வானோரும், முனிவர்களும் காணப்படுகிறார்கள். அவர்களின் விழிகளில் பக்தியும் வியப்புக்கூடிய மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. விஷ்ணு மழவை முழக்குகிறார். இந்திரன் குழல் ஊதுகிறான். பிரமன் நூலிலிருந்து பாடலை இசைக்கிறார். சிவனின் வலப்புறத்தில் வேதாளத்தின் மீது அமர்ந்துள்ள காளி, மூஷிகத்தின் மீது வீற்றிருக்கும் விநாயகர், வலப்புறத்தில் மூன்று தேவியர், மயில்மீது முருகன், கைகூப்பிய நந்தி என்று ஓவியம் முழுவதும் உருவங்கள் காணப்படுகின்றன.
வடக்குச்சுவரில் வாசுகியின் மீது சயனிக்கும் திருமாலின் உருவம் உள்ளது. 246 செ.மீட்டர் உயரமும் 580 செ.மீட்டர் அகலமும் கூடிய பெரிய ஓவியம் இது. இதிலும் ரிஷிகளும் வானோரும் சேஷசாயியை சூழ்ந்துகொண்டு களிக்கிறார்கள். விஷ்ணு தமது வலதுகரத்தால் சிவலிங்கத்தின்மீது மலர்களைத் தூவும் விதமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சூழ்ந்துள்ளவரின் இடையே சிவனும் காணப்படுகிறார்.
நுழைவாயிலின் வெளிபுறச்சுவரில் சிறிய ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் எது என்று உறுதியாகக் கூறவியலாது. 16ம் –18ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடைவெளிகளுடன் அவை தீட்டப்பட்டிருத்தல் வேண்டுமென்பது ஆராய்ச்சியாளர் கருத்து.
ஆனால் இப்போது உள்ள ஓவியங்கள் மீட்டுருவானவை. பழைமையின் எழில் அகன்று விட்டவை. அவற்றின் புராதன அடையாளமும் காணாமல் போய்விட்டது.
வலியபணயர்காவு பத்ரகாளி ஆலயச் சுவரோவியங்கள்
ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் கிராமத்துக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த ஆலயம் பம்பா நதியின் சிற்றாறுக்கும் பெருமலைக்கும் இடையே உள்ளது. பத்ரகாளியை மையதெய்வமாகக் கொண்டது. சப்தமாதர் சிலைத்தொகுப்பு கருவறையில் வழிபடப்படுகிறது. சாக்தம் சார்ந்த தாந்திரிக வழிபாடுகள் அண்மைக்காலம்வரை வெளியாரின் தொடர்பின்றி நடந்து வந்துள்ளன.உன்னி நீலி சந்தேசம்என்னும் 14ம் நூற்றாண்டு நூல் தாந்திரிக வழிபாட்டுமுறை பற்றி விரிவாகச் சொல்கிறது. உக்கிரமான காளியை மகிழ்வித்து அமைதிப்படுத்தும் வழிமுறைகள் அவை. அந்த நூலைப் பின்பற்றி வழிபாடுகளும் வேள்வியில் உயிர்ப்பலிகளும் (யானை உட்பட) நிகழ்ந்தன. ஆலயத்தினுள் நுழையும்போது இப்போதும் ஒருவித அச்ச உணர்வு தோன்றுவதாகப் பலரும் கூறுகிறார்கள்.
சதுர வடிவில் அமைந்துள்ள சப்தமாதர் ஆலயச் சுவர்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன. தேவி மஹாத்மியம், வைஷ்ணவ புராணம், பாகவதம் போன்ற நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட காட்சிகள் ஓவியமாகியுள்ளன. அகோர சிவன், மஹிஷாசுர மர்த்தனி, கிராத அர்ச்சுனப்போர், தாமரைமலர்மீது வீற்றிருக்கும் ஐந்து தலைகளும் பத்துக்கரங்களும் கொண்ட திரிபுரசுந்தரி, உமையுடன் கூடிய சிவன், நடமாடும் சிவன், நரசிம்ஹர், வேட்டைக்குச்செல்லும் சாஸ்தா, புரவியின்மேல் வீற்றிருக்கும் பார்வதி, திரௌபதி திருமணம், கிருஷ்ணலீலைக் காட்சிகள், பத்ரகாளி என்று கடவுளரின் பெரும் கூட்டம் சுவரை நிறைக்கிறது.
தெற்குச்சுவரை மஹிஷாசுர மர்த்தனியின் ஓவியம் நிறைக்கிறது. அருகில் சப்தமாதரின் ஓவியமும் உள்ளது. அதில் எழுவரும் அவரவர்க்குரிய ஊர்திகளில் அமர்ந்திருக்கிறார்கள். சூரிய நாராயணர் ஓவியம் அதிகம் காணப்படாத ஒன்று. சூரியனின் உருவம் சுவரின் மையமாக மற்ற உருவங்களைக் காட்டிலும் பெரிதாக ஓவியமாகியுள்ளது.
அருகில் உள்ள சிவ ஆலயத்து கிழக்குப்பகுதிச் சுவரில் இராம இராவணப் போர், இராவணன் மரணம், மந்தோதரியின் புலம்பல், சீதையின் மீட்பு, இராமர் முடிசூடல் ஆகிய இராமாயணக் காவியக் காட்சிகள் காணப்படுகின்றன. பொதுவாக இராமாயணக் காட்சிகள் கேரளத்து ஓவியங்களில் பரவலாகக் காணப்பட்டபோதும், இங்கு உள்ளவை அவற்றின் ஓவிய வனப்புக்குப் பெயர்போனவை. உருவங்களை உண்டாக்கும் கோடுகளின் நேர்த்திக்கும், ஒத்தவிதமான வண்ணத் தேர்வுக்கும் இவை புகழப்படுகின்றன. இந்த ஓவியங்கள் படைக்கப்பட்ட காலத்தை முடிவுசெய்வது கடினம். எனினும் காளி ஆலய ஓவியங்கள் முன்னவை என்றும் சிவ ஆலய ஓவியங்கள் பின்னவை என்றும் இரு கால கட்டங்களில் தீட்டப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்.
இவையன்றி செம்மந்தத்தா (திருசூர்) மஹாதேவ ஆலயம், கோட்டயம் குடமலூர் தேவி ஆலயம், கன்னூர் தொடிகளம் சிவன் ஆலயம், (150 ஓவியங்கள் 700 ச.அடிகள் சுவர்ப்பரப்பு) கோழிக்கோடு பிஷரிக்காவு பகவதி ஆலயம், முஞ்சிரை பார்த்திவபுரம் இங்கெலாமும் சுவர் ஓவியங்கள் உள்ளன.
சில சுவையானதும் தெரிந்துகொள்ளவேண்டியதுமானவை:
ஓவியங்களைக் கட்டும் எல்லைக்கோட்டுக்கு பஞ்சமாலைஎன்னும் பெயர் உண்டு. அவை
01- பூதமாலா (பூதகணங்களின் வரிசை), 02- மிருகமாலா (விலங்குகளின் வரிசை) 03- வனமாலா (மலர்களின் தொகுப்பு) 04- பக்ஷிமாலா (பறவைகளின் வரிசை) 05-சித்ரமாலா (பல்வேறு கோலவடிவங்களின் தொகுப்பு)
இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ இடம்பெறுகின்றன.
இந்த ஓவியங்களில் வண்ணத்தொகுப்பும் பேசப்படவேண்டிய ஒன்றுதான். சில்பரத்னாவில் கூறியுள்ளபடி ஒளிரும் முதன்மை வண்ணங்களான சிவப்பு, பச்சை, மஞ்சள் கருப்பு, வெள்ளை ஆகிய ஐந்து நிறங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கல் சிவப்பு, மண் மஞ்சள், நீலம் இல்லாத பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள்தான் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வண்ணங்களுடன் மரப்பிசின், இளநீர் போன்றவற்றைக் கலப்பது வண்ணம் சுவரிலிருந்து உதிராமல் இருக்கச் சேர்க்கப்படும் பசையாகும். பொ.யு. 6-7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சித்ரசூத்ரஓவிய இலக்கணநூலிலும் இந்த வண்ணத் தொகுப்புமுறை சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply