வலம் ஏப்ரல் 2019 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் ஏப்ரல் 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தஞ்சாவூர் ராமரத்தினம் பேட்டி | சுப்பு – கரிகாலன்

2019 தேர்தல் – பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்யா

ஐநாவில் நிரந்தர இடமும் நேருவும் | டாக்டர் ஆண்டன் ஹார்டர், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

சு.வெங்கடேசனின் உரையும் மறுப்பும் | ஜனனி ரமேஷ்

கைபேசியை விவாகரத்து செய்யுங்கள் | ரஞ்சனி நாராயணன்

நியூஸிலாந்து மசூதிப் படுகொலை | அரவிந்தன் நீலகண்டன்

ஓலைப் பத்திரக் கதைகள் | சுஜாதா தேசிகன்

வெப்பம் (சிறுகதை) | ஸிந்துஜா

அஞ்சலி: மனோகர் பாரிக்கர்அஞ்சலி: மனோகர் பாரிக்கர்மனோகர் பரிக்கர் மார்ச் 17ம் தேதி காலமானார். சிறு வயதிலேயே ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்து ஸ்வயம்சேவக் ஆனவர். இறுதி மூச்சு வரை இந்தியாவின் வளர்ச்சி குறித்து யோசித்தவர். தன் உடல்நிலை மோசமானபோதும் தனது பதவிக்குரிய பணிகளைச் செய்துவந்தவர். கோவாவின் எளிய மக்களுக்கான முதல்வராக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
மோதி பிரதமராகப் பொறுப்பேற்றதும் மனோகர் பரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். பாகிஸ்தான் மீதான முக்கியமான சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் மிகப்பெரிய பங்காற்றினார். கோவாவில் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக மீண்டும் கோவாவின் முதல்வரானார். தன் இறுதி மூச்சு வரை கோவாவின் முதல்வராகப் பணியாற்றினார்.

இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கும் தகுதிகள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் என்று புகழப்பட்டவர் மனோகர் பரிக்கர். புற்றுநோயால் அவர் உடல்நலம் நலிந்தது. ஆனாலும் தளராமல் மக்கள் பணியாற்றினார்.
ஐஐடியில் படித்துவிட்டு  இந்தியாவுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தார். 1988ல் பாஜகவுக்கு அவரை அனுப்பி வைத்தது ஆர்எஸ்எஸ். 1994ல் முதன்முறையாக பனாஜி தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். அக்டோபர் 2000ல் கோவாவின் முதல்வரானார். ஐஐடி படித்துவிட்டு முதன்முதலாக முதல்வரான பெருமை இவரையே சேரும். 2002ல் இரண்டாம் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2012ல் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மோடி பிரதம வேட்பாளராக முதன்முதலில் முன்மொழியப்பட்டபோது வெளிப்படையாகத் தன் ஆதரவைத் தெரிவித்தார். மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மார்ச் 2017ல் மீண்டும் கோவாவின் முதல்வராகப் பதவியேற்றார்.
வாழ்நாள் முழுக்க நாட்டுக்காக உழைத்தவர் மனோகர் பாரிக்கர். அவரது நினைவுகள் என்றென்றும் நம்மை வழிநடத்தும்.

வெப்பம் (சிறுகதை) | ஸிந்துஜா


ண்ணன் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையின் இரு பக்கங்களையும் பார்த்து, ஒரு வண்டியும் வரவில்லை என்று நிச்சயம் செய்துகொண்டு, ஒரே ஓட்டமாக சாலையைக் கடந்து எதிர்சாரியை அடைந்தான். அவன் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை உமாவிடம் காண்பிக்க வேண்டும். அவன் வித்யா மந்திரில் ப்ளஸ் டு படிக்கிறான். 

காலையிலிருந்து இந்த ஸ்டேட்மென்ட் சரியாக வரவில்லை. உமா பி.காம் படித்தவள். அவர்கள் இரு குடும்பத்துக்கும் இருபது வருஷப் பழக்கம். அவனுடைய தாத்தா உமாவின் தாத்தாவிடம் ஹிந்து பேப்பரைக் கொடுத்துவிட்டு அவர் பொடி மட்டையிலிருந்து பொடியை சர்ரென்று இழுத்துப் போட்டுக் கொள்வார். வீட்டில் எந்த பட்சணம் செய்தாலும் உமாவின் அம்மா அதைக் கண்ணனின் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பி விடுவாள். கண்ணனின் அண்ணன் சங்கரும் உமாவின் அண்ணன் சந்தானமும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரே டீம். அப்பாக்கள் காலையில் வாக்கிங் போவதில் ஆரம்பித்து இரவு அரசியல் பேசி முடித்து விட்டுத்தான் தூங்கச் செல்வது வழக்கம்.
கண்ணன் உமாவைத் தேடிச் சென்றபோது, அவள் வீட்டுவாசல் திறந்திருந்தது. உள்ளே போனதும் அவன் கண்ணில் பட்ட முதல் ஆள் சந்தானம்தான். 
“என்னடா விடிஞ்சதும் விடியாததுமா உமாவைத் தேடிகிட்டு வந்திட்டியா?” என்று கேட்டான் சந்தானம். வாசலில் கிடந்த நாலைந்து நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தான்.
“ஆமா. அவளைப் பாக்கணும்” என்றான் கண்ணன்.
“அதான் தெரியுதே!” என்றான் சந்தானம். “என்ன விஷயம்?”
“இல்ல. உமா கிட்டதான் கேக்கணும்” என்றான் கண்ணன். 
“உனக்கு அவ பாவாடை நுனியை பிடிச்சுக்கிட்டே அவ பின்னால அலையணும், இல்லே?” என்றான்.
கண்ணன் பதில் பேசாமல் நின்றான்..
சந்தானம் கண்ணன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கினான். அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு “அட, கணக்குதானடா. என்ன டவுட்டு? எங்கிட்ட சொல்லு” என்றான்.
“கணக்கு இல்ல, அக்கவுண்டன்சி.”
“எல்லாம் ஒண்ணுதாண்டா. உனக்கு என்ன பிராப்ளம்?” என்று சந்தானம் அவனைப் பார்த்துச் சிரித்தான்.
கண்ணன் நோட்டைப் பிரித்து ஒரு பக்கத்தை எடுத்து “டாலி ஆக மாட்டேங்குது” என்றான். 
சந்தானம் அதைப் பார்த்தான். நிமிஷங்கள் நகர்ந்தன. பிறகு அவன் கண்ணனிடம் “டோட்டல் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்தியா?” என்று கேட்டான்.
கண்ணன் தலையை ஆட்டினான்.
“நீயே கூட்டிப் போட்டியா?”
“இல்ல. கால்குலேட்டர வச்சுத்தான் போட்டேன்.”
“அதானே பார்த்தேன். நீ ஆயிரத்து நூறுன்னு அடிச்சிருப்ப. அதுல ரெண்டாயிரத்து நூறுன்னு விழுந்திருக்கும். உனக்கு கூட்டறதுக்கு சோம்பல்” என்று அவனிடம் கொடுத்தான்.
“இதுக்குத்தான் நான் சொன்னேன், உமா கிட்ட காமிச்சிக்கிறேன்னு” என்றான் கண்ணன். 
அப்போது சிரிக்கும் சத்தம் கேட்டது. சந்தானம் திரும்பிப் பார்த்தான். உமா.
“போடா போ. உனக்கும் இந்த பொம்பளைகளை சுத்திகிட்டு அலஞ்சாதான் சரியா இருக்கும்” என்று சிரித்தான் சந்தானம்.
“சரி அவன் உன் லுங்கி நுனியை பிடிச்சிக்கிட்டு வரட்டும். அந்தக் கணக்கை போட்டுக் குடுத்துரு” என்றாள் உமா. 
சந்தானம் அவளை முறைத்துப் பார்த்து விட்டு கையிலிருந்த பேப்பரில் ஆழ்ந்தான்.
உமா கண்ணனிடம் “டெபிட்டுக்கும் கிரெடிட்டுக்கும் என்னடா வித்தியாசம் வருது?” என்று கேட்டாள் நோட்டை வாங்கியபடியே.
கண்ணன் அவளிடம் “பதினெட்டாயிரம்” என்றான்.
“ஓ, ரவுண்டு ஃபிகரா? அப்ப ரெண்டால கழிச்சா ஒன்பதாயிரம் வருது. உனக்கு அந்த மாதிரி ஏதாவது…”
கண்ணன் அவளிடமிருந்து அவசரமாக நோட்டைப் பிடுங்கிப் பார்த்துவிட்டு, “ ஒம்பதாயிரம் ஆடிட் பீசு. அது டெபிட்டுல போறதுக்கு பதிலா கிரெடிட்டுல போயிருச்சு. இப்ப சரியா ஆயிரும்” என்று திருத்திவிட்டுச் சிரித்தான்.
“அதாண்டா பாவாட நுனியோட வெற்றி” என்று சந்தானத்தைப் பார்த்துச் சத்தமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் உமா. சந்தானம் திடீரென்று செவிடாகி விட்டவன் போலத் தலையை உயர்த்திப் பார்க்கவில்லை.
“கண்ணா அவ்வளவுதானா? இல்ல வேற ஏதாச்சும் சந்தேகம் இருக்கா?” என்று உமா கேட்டாள்.
“இந்த வராத கடனுக்கு மொதல்ல ஒரு புரொவிஷன் என்ட்ரி போட்டு அப்புறமா அதை சரி பண்ணுறதுதான் சரியாவே வரமாட்டேங்குது” என்றான் கண்ணன்.
“வராத கடனுக்கு எதுக்குடா அக்கவுண்ட்ஸ்?” என்று சிரித்தான் சந்தானம்.
“இவரு விஜய்மல்யாவோட ஃபிரெண்டு. அந்தக் கணக்குதான் இவுருக்கு வரும். விட்டுரு பாவம்” என்று அவனுக்கு வலிப்புக் காண்பித்து விட்டு உமா உள்ளே போகத் திரும்பினாள். “கண்ணா, நீ உள்ளே வா. கிச்சன்ல கை வேலையா இருக்கேன். அங்க உக்காந்து உன் சந்தேகத்தைக் கேளு” என்று அவனைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்
கண்ணன் உட்கார சமையல் அறையில் ஒரு ஸ்டூலைப் போட்டுவிட்டு, அடுப்பில் கொதித்து முடிந்திருந்த சாம்பாரைக் கீழே இறக்கினாள் உமா. கண்ணனிடம் “ஒரு நிமிஷம், இந்தப் புளித்தண்ணியை ஒரு கொதி விட்டு தக்காளியையம் பருப்பையும் விட்டிட்டு வந்திர்றேன். அப்புறம் ஒரு பத்து நிமிஷம் யாரு தொந்திரவும் இல்லாம உன்னோட டவுட்ட கிளியர் பண்ணிரலாம்” என்று சிரித்தாள். அவனும் சேர்ந்து சிரித்தான்.
“அரைக்கப்பு காபி குடிக்கிறியா?” என்றாள். அவன் வேண்டாமென்றான். அவள் “பரவால்ல. ஒரு வாய்தான” என்றாள். அவன் சரியென்றான்.
உமா காப்பியைக் கலந்து எடுக்கும்போது கையில் சுட்டு விட்டது. வலி பொறுக்க முடியாமல் “அம்மா” என்று கத்திவிட்டாள். கண்ணன் பதறிப் போய் “என்ன ஆச்சு உமா?” என்று எழுந்து வந்தான். 
“ஒண்ணுமில்லே. கைல சூடு இழுத்திருச்சு” என்று கையை அவனிடம் காட்டினாள். அவன் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு “பர்னால் இருக்கா?” என்று கேட்டான்.
அப்போது சந்தானம் உள்ளே வந்தான். அவர்களைப் பார்த்து “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அவள் அவனிடம் காயம் பட்டதைச் சொன்னாள். கண்ணன் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தான். 
“சரி அவ கையை விடு. நான் பர்னால் கொண்டு வரேன்” என்று உள்ளே போய் பஞ்சும் பர்னால் பாட்டிலும் கொண்டு வந்தான். 
அவள் கையைப் பஞ்சினால் சுத்தம் செய்து பர்னால் போட்டபடியே “இப்ப எதுக்கு காபி போடப் போனே?” என்று கேட்டான்.
“கண்ணனுக்கு ஒரு வாய் குடுத்திட்டு நானும் குடிக்கலாமின்னு பாத்தேன்” என்றாள். கண்ணனைப் பார்த்து “பயந்திட்டியா?” என்று சிரித்தாள்.
“இவன் எதுக்கு பயப்படப் போறான்?” என்றான் சந்தானம். “ஏண்டா காலேல உங்க வீட்டுல காபி குடுக்கலையா?” என்று கேட்டான்.
“சீ, உளறாதே. நாந்தான் காபி குடின்னு கட்டாயப்படுத்தினேன்” என்றாள் உமா.
சந்தானம் திரும்பச் செல்லுகையில் உமா அவனிடம் “நீ எதுக்கு வந்தே?” என்று கேட்டாள்.
அவன் ஒரு நிமிஷம் திகைத்து “சும்மாதான். தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளே இந்த கலாட்டா” என்றான்.
“சரி. நீயும் வேணா காபி குடிக்கிறியா?” என்று கேட்டாள்.
“இல்ல, எனக்கு வேணாம்” என்றபடி அவன் பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டுச் சென்றான். 
உமா கண்ணனுக்குக் காபியைக் கொடுத்தாள். பிறகு “நான் ரசத்துக்கு வேண்டி செய்யறதை முடிச்சிட்டு வந்திர்றேன். சரியா?” என்று கேட்டுவிட்டு அடுப்பருகே சென்று வேலையைக் கவனித்தாள்.
ஏழெட்டு நிமிஷங்கள் வேலையாய் இருந்துவிட்டு உமா அவனிடம் வந்தாள். அவன் உட்கார்ந்த இடத்துக்கு அருகே இருந்த மேடையில் உட்கார்ந்துகொண்டு சொன்னாள். ”நமக்கு வரவேண்டிய கடன் பாக்கி நிச்சியம் வராதுன்னா வராக்கடன்னு பத்து எழுதிரலாம். வருமோ வராதோன்னு சந்தேகத்தில இருக்கறப்ப சரி கொஞ்சம் பாக்கலாம்னு காத்திருப்போம். அந்த சமயத்துல புரொவிஷன் என்ட்ரி போடறது எதுக்காகன்னா அது நிச்சயம் கிடைக்கிற பாக்கின்னு சொல்ல முடியாதுங்கிறதை எடுத்துக் காமிக்கிறதுக்காகத்தான். இப்ப பாரு. நா போட்டுக் காமிக்கிறேன். நோட்டைக் குடு. இப்பிடி பக்கத்துல வந்து நில்லு. அவ்வளவு தூரத்திலிருந்து உன்னால நான் எழுதறதை பாக்க முடியாது” என்று நோட்டை வாங்கினாள்.
அவள் எழுதுவதைக் கண்ணன் அவள் அருகே நின்று குனிந்து பார்த்தான்.
“ஒன்னோட கையெழுத்து எவ்வளவு அழகாயிருக்கு?” என்றான் கண்ணன்.
“நீயுந்தான் அழகா எழுதறே” என்று சிரித்தாள் உமா.
“என்ன ஒரே சிரிப்பா இருக்கு?” என்று உள்ளே வந்தான் சந்தானம்.
“சொன்னா உனக்கு கோபம் வரும்” என்றாள் உமா. “கோழி குப்பையை கிண்டின மாதிரி கோணாமாணான்னு எழுதுறவன் நீ.”
“ஓஹோ. நீங்கள்லாம் அப்பிடியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி எழுதறவங்களோ?” என்றான் சந்தானம். “கண்ணா, என்னடா கணக்கு கத்துக்கணும்னு சொல்லிட்டு வம்படிச்சிகிட்டு இருக்கியா?’
“இதோ பாரு, உமா எனக்கு சொல்லிக் குடுத்திட்டு இருக்காங்க” என்றான் கண்ணன்.
“சரி தொலை. படிச்சா சரிதான்” என்று பெரிய மனிதன் மாதிரி சொல்லியபடியே வெளியே போனான்.
“இப்ப எதுக்கு இங்க வந்தாப்புல?” என்று உமாவிடம் கண்ணன் கேட்டான்.
“யாரு கண்டா?” என்றாள் உமா. அப்போது செல்போன் அடித்தது. எடுத்து “ஹலோ?” என்றாள்.
எதிர்க்குரல் பேசியதைக் கேட்டு “ஆமாம்மா. அவன் இங்கதான் இருக்கான். வரப்போ உங்ககிட்ட சொல்லிக்கிட்டு வரலையா? ஆமா. அக்கவுண்ட்ஸ்ல சந்தேகம்னு வந்தான். சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்” என்றாள் 
மறுமுனையில் பேசியதைக் கேட்டு “சரி, முடிஞ்சதும் அனுப்பி வைக்கிறேன்” என்று போனைக் கீழே வைத்தாள்.
“உங்க அம்மாதான். ஏன் வரப்ப நீ சொல்லிட்டு வரலையா?” என்று கேட்டாள்.
“அவங்க அப்போ குளிக்கப் போயிட்டாங்க. சங்கர் கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தேன்” என்றான் கண்ணன். 
“அவனும் வீட்டிலே இல்லையாம். அதுனாலதான் இங்க போன் பண்ணிட்டாங்க” என்றாள் உமா. “சரி, இப்ப நான் ரெண்டு ஐட்டம் கொடுக்கிறேன். நீ என்ட்ரி போட்டுக் காமி. உனக்குப் புரிஞ்சுதான்னு பாக்கலாம்”‘ என்று நோட்டில் விறுவிறுவென்று எழுதி அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு எழுந்தாள். அடுப்பருகே சென்று சமையல் வேலையைக் கவனித்தாள்.
கண்ணன் அவள் சொல்லிக் கொடுத்ததை நினைவில் கொண்டுவந்து என்ட்ரி போட்டான். ஆனால் அவை சரியாக வரவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. அவள் சொல்லும்போது புரிந்தமாதிரி இருந்தது. இப்போது எழுதும்போது பலவித சந்தேகங்களை எழுப்பியது.
“என்னடா திருதிருன்னு முழிச்சுகிட்டு உக்காந்திருக்கே?” என்று சந்தானம் குரல் கேட்டது.
அருகில் வந்து நின்ற அவனைப் பார்த்து கண்ணன் சிரித்தான். 
“எதுக்குடா சிரிக்கிறே?”
“இல்ல டவுட்டு இருக்கு. ஆனா உன்னைக் கேட்டு பிரயோஜனம் இல்லியே” என்றான்.
உமா அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தாள். 
“உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா போச்சுடா” என்றான் சந்தானம்.
“உமா. என்னோட மௌத் ஆர்கனை பாத்தியா? அதைத் தேடிகிட்டுதான் வந்தேன்” என்றான் சந்தானம்.
“நேத்தி நீதானே சொன்ன அது ரிப்பேரா இருக்கு ஜெயின் கடைல குடுத்திருக்கேன்னு” என்றாள் உமா.
“ஆ, மறந்தே போயிட்டேன் பாரு” என்று தலையில் அடித்துக்கொண்டான். பிறகு அவளைப் பார்த்து “ கொஞ்சம் புடவையை கீழே இறக்கி விடு. காலுக்கு மேல நிக்குது” என்றான். 
அவள் திரும்பி நின்று அவனை நிதானமாகப் பார்த்தாள். பிறகு மெல்லிய குரலில் “உனக்கு நாளைக்கு வரப் போற பொண்டாட்டி கிட்ட அவ சமைக்கறப்ப தழையத் தழைய புடவையைக் கட்டிக்கிட்டு நிக்கச் சொல்லு” என்றாள்.. 
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோபப்படறே?” என்றபடி அவன் வெளியே போனான்.
“என்ட்ரி சரியா வரலையா கண்ணா?” என்று உமா கேட்டாள். 
கண்ணன் ஆமென்று தலையை ஆட்டினான்.
“சரி, இரு. வேலையெல்லாம் முடிஞ்சிருச்சு. ஒரு நிமிஷத்துல வந்திர்றேன்” என்று ரசப் பாத்திரத்தைக் கீழே இறக்கினாள்.
மேடையின் மீது சிந்தியிருந்த தண்ணீரையும் மற்ற பொருட்களையும் துணியால் துடைத்தாள். பிறகு குழாயினருகே சென்று துணியை அலசி இறுக்கிப் பிழிந்துவிட்டு உலர்த்தினாள். புடவையில் கையைத் துடைத்தவாறே அவனிடம் வந்தாள்.
அவனிடமிருந்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வாசலுக்குச் சென்றாள். கண்ணனும் அவளைப் பின்தொடர்ந்தான். அவள் அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு கண்ணனையும் இன்னொன்றில் உட்காரச் சொன்னாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த சந்தானம் நிமிர்ந்து ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தான்.
“அப்பா! என்ன வெயில்! என்ன சூடு! உஸ்ஸ்” என்றான் கண்ணன் உட்கார்ந்தவுடன்.
“பரவால்ல விடு! வாசல்லேந்து கிச்சனுக்கு ஓடி ஓடி வர வேணாம்ல” என்றபடியே உமா நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து கண்ணனிடம் “டெபிட்டுலையும் கிரெடிட்டுலையும்…” என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

*****


ஓலைப் பத்திரக் கதைகள் | சுஜாதா தேசிகன்


சமீபத்தில் உ.வே.சாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வுச் சம்பவங்களின் தொகுப்பாக, 18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவணப்படுத்துகிறது என்று சொல்லலாம்.
மருது பாண்டியர்கள் வீரம் மிக்கவர்கள். கூடவே, பக்தியும், புலவர்களையும் தம் மக்களையும் காப்பாற்றும் குணமும் படைத்தவர்கள். அதில் மருது பாண்டியரைப் பற்றி கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதை ஒன்றைப் படித்தேன்.

முள்ளால் எழுதிய ஓலை!

மருது பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான சிலரது பகைக்கு இலக்கானார். பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால் தப்பித்தார். ஒருசமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார். வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தியை அந்தரங்க வேலையாள் ஒருவர் வந்து சொன்னபோது வீரத்தால் அவருடைய ரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை இறுகக் கட்டிக்கொண்டு குதிரையில் புறப்பட்டார்.

இதை அறிந்த விரோதிகள் அவரைச் சூழ்ந்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தனர். மருது பாண்டியர் அவர்களைத் தாக்கி அவர்களிடம் அகப்படாமல் தப்பித்து ஒரு கிராமத்துக்கு வந்தார். அவ்வூர் அக்கிரகாரத்தை அடைந்தார். இரவு முழுவதும் உணவு இல்லாமலும், பகைவர்களிடம் போராடியதாலும் அவருக்குப் பசியும் தாகமும் மிகுதியாக இருந்தன.
அங்கே ஒரு கூரைவீட்டின் வெளியே சில குழந்தைகள் நிற்க ஒரு கிழவி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். பாண்டியரின் குதிரை அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது.

கிழவி நிமிர்ந்து பார்த்து, “யாரப்பா ! உனக்கு என்ன வேண்டும்?” என்றாள்
“அம்மா பசியும் தாகமும் என்னை மிகவும் வாட்டுகிறது. ஏதாவது இருந்தால் தரவேண்டும்” என்றார் பாண்டியர்.
“தண்ணீரில் போட்ட பழைய சோறுதான் இருக்கிறது. வேண்டுமானால் தருகிறேன் அப்பா” என்று கிழவி அன்பாகச் சொன்னாள்.
“ஏதாயிருந்தாலும் எனக்கு இப்போது அமிர்தமாகும். பிறகு மற்றொரு விஷயம், நான் இரவு முழுவதும் பிரயாணம் செய்து தூக்கம் இல்லை. அதனால் ஒதுக்குபுறமாகத் தூங்க ஒரு இடம் வேண்டும்” என்றார்.
“இது என்ன பெரிய விஷயம். வீட்டுப் பின்புறம் ஒரு கொட்டகை இருக்கிறது, அங்கே தூங்கலாம். குதிரைக்கும் தீனி தருகிறேன்” என்று அன்போடு பழைய சோறைப் பரிமாறினார். ராஜபோஜனத்தைக் காட்டிலும் அது சிறந்ததாக இருந்தது. பிறகு கிழவி கொடுத்த ஓலைப்பாயொன்றில் படுத்து உறங்கினார்.

விழித்து எழுந்தபோது சூரியன் உச்சியில் இருந்தான். மருது பாண்டியருக்கு உண்ட உணவும் தூக்கமும் ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தன. அவர் மனதில் நன்றி உணர்வு பொங்கி வழிந்தது. அந்தக் கிழவிக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்று துடித்தார்.
“அம்மா!” என்று கிழவியை அழைத்தார். கிழவி வந்தாள்.
“இந்தக் குழந்தைகள் யார்? உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?”
“அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காகப் போயிருக்கிறார்கள். குழந்தைகள் என் பேரக் குழந்தைகள்” என்றாள்.
“சரி, உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்.”
“இங்கே ஏடேது எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியாதப்பா” என்றாள்.

உடனே குதிரைக்காரனைக் கூப்பிட்டு, வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனையோலையையும் வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டுவரச் சொன்னார். கையில் இவை இரண்டும் கிடைத்த உடன், பாண்டியர் ஏதோ எழுதலானார். கிழவி அதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
முள்ளால் எழுதிய அந்த சாஸனத்தைக் கிழவியின் கையில் கொடுத்து, “அம்மா, சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு, அவர் குதிரை மேலேறிக் குதிரைக்காரனுடன் புறப்பட்டார்.

சில நாள் கழித்து கிழவியின் பிள்ளைகள் ஊரிலிருந்து வந்தார்கள். அந்த ஓலையை அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன் சம்ஸ்தானத்து விரோதிகள் மூலம் அவரை எதிரிகள் கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினார்கள்.

பாண்டியரைப் பகைவர்கள் பிடித்துச் சிறையில் வைத்தனர். சிலவருடங்கள் கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உம்முடைய விருப்பம் யாது?” என்று பகைவர்கள் கேட்க, அதற்கு “நான் சிலருக்கு சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ அவையெல்லாம் அவரவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். இது என் பிரார்த்தனை. வேறு எதுவும் இல்லை” என்றார். அவருடைய இறுதி விருப்பத்தைப் பகைவர்கள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள்.

மருது பாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள முள்ளால் எழுதிய ஓலையைக் காட்டினால் ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அனுப்பிவைத்தாள்.

என்ன நடந்தது?  

சீட்டு பெற்ற சீமாட்டி

ஸ்ரீநம்பிள்ளை ( ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்) ஸ்ரீரங்கத்தில் காலக்ஷேபங்கள் செய்துகொண்டு இருந்தபோது கோயிலுக்கு வரும் கூட்டத்தைவிட இவருடைய காலக்ஷேபங்களுக்கு அதிகக் கூட்டம் வரத் தொடங்கியது. “நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ” என்று வியந்தனர்.

அவர் காலக்ஷேபங்கள் அவருடைய திருமாளிகையில் (இல்லத்தில்) நடைபெற்றன. கூட்டம் அதிகமானதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. நம்பிள்ளையின் அடுத்த இல்லத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், பலபேர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள். பக்கத்து அகத்தில் ஓர் ஸ்ரீவைஷ்ணவக் கிழவி வசித்து வந்தாள்.

நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம் ஆசார்யன் திருமாளிகை இடம்பற்றாமல் சிறியதாக இருக்கிறது. உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே” என்றார்.

அதற்கு அந்த அம்மையாரோ, “கோயிலிலே (ஸ்ரீரங்கம்) சாண் இடம் யாருக்கு கிடைக்கும்? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.
இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார்.
நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம் பார்த்தபோது “காலக்ஷேபம் கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். உமது இடத்தைத் தரவேண்டும்” என்று மீண்டும் விண்ணப்பம் செய்தார்.

“அவ்விதமே செய்கிறேன். ஆனால் தேவரீர் பரமபதத்தில் எனக்கு ஓர் இடம் தந்தருள வேண்டும்” என்று பதில் கோரிக்கை வைத்தார் அந்த அம்மையார்.

“நான் எப்படிக் கொடுக்க முடியும்? அதை வைகுண்ட நாதனன்றோ தந்தருள வேண்டும்” என்றார்.

“தேவரீர் பெருமாளிடம் சிபாரிசு செய்து விண்ணப்பம் செய்யலாமே” என்றார்.

“சரி செய்கிறேன்” என்றார் நம்பிள்ளை ஆச்சரியத்துடன்.

“ஸ்வாமி, அடியேன் ஒன்றும் தெரியாத சாது, பெண்பிள்ளை வேறு. அதனால் சும்மா தருகிறோம் என்றால் போதாது. சாஸனமாக எழுதித் தந்திடும்” என்றாள்.

நம்பிள்ளை மேலும் ஆச்சரியப்பட்டு ஒரு ஓலையை எடுத்து,

“அகில ஜகத் ஸ்வாமியும் அஸ்மத் ஸ்வாமியுமான ஸ்ரீவைகுண்டநாதன் இவ்விமையாருக்கு பரமபதத்தில் ஓர் இடத்தைத் தந்தருள வேண்டும் இப்படிக்கு,
திருக்கலிகன்றி தாஸன்,
தேதி, மாதம், வருடம்”

என்று எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தார்.

என்ன நடந்தது?

முடிவுகள்:

1. கிழவி அனுப்பிய ஓலையில் அவள் வசித்த அந்த கிராமத்தையே சுரோத்திரியமாக (இனாமாக வழங்கப்பட்ட நிலம்) பெற்றாள். வீட்டின் கூரையின் மீது இருந்த பனையோலையும் வேலி முள்ளையும் கொண்டு மருது பாண்டியர் எழுதிய அந்தக் காட்சி அவள் கண் முன்னே வந்து சென்றது. பழையது உண்டு, முள்ளால் எழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக் கண்டு வியந்தாள். இன்றும் இந்தக் கிராமம் ‘பழஞ்சோற்றுக் கருநாதனேந்தல்’ என்று வழங்கப்படுகிறது என்பர்.

2. நம்பிள்ளையிடம் பனை ஓலை சீட்டைப் பெற்று சிரஸில் வைத்துக்கொண்டு சந்தோஷமாகத் தம் இருப்பிடத்தை உடனே நம்பிள்ளைக்குக் கொடுத்தார். சீட்டைப் பெற்ற அவ்வம்மையார் மூன்றாம் நாள் திருநாடு அடைந்தார்.

பயன்பட்ட நூல்கள்:

* முள்ளால் எழுதிய ஓலை – உ.வே.சா கட்டுரை தொகுப்பு
* ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை 

நியூஸிலாந்து மசூதிப் படுகொலை | அரவிந்தன் நீலகண்டன்

அண்மையில் (மார்ச் 15, 2019) நியூஸிலாந்தில் க்ரைஸ்ட்சர்ச் என்கிற இடத்தில் இரு கிறிஸ்தவ வெறியர்கள், மசூதிகளில் தொழுகை செய்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் நாற்பது பேரைக் கொன்று குவித்தனர். இச்செய்கை பொதுவாக விரிவான கண்டனங்களைப் பெற்றது. ஆனால் ஒரு சிலர் இதை ஆதரித்து சில ட்வீட்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் சிலர் தங்களை இந்துத்துவர்களாகக் கருதுகிறார்கள்.


அண்மைக்காலங்களாக இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மேற்கத்திய நாடுகளில் பல பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி வருகிறார்கள். பாரிஸ் தொடங்கி அமெரிக்க நகரங்கள் வரை பல அவர்களின் கொடுஞ்செயல்களுக்கு ஆளாக்கியுள்ளன. அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர் கூடும் கேளிக்கை மையமொன்றில் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் உள்நுழைந்து பலரைக் கொன்று குவித்தனர். மேற்கத்திய நாடுகள் அண்மையில் சில பத்தாண்டுகளாகத்தான் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற ஜிகாத்தை சந்திக்கின்றன.

இந்தியா இப்படிப்பட்ட கொடுங்கொலை ஜிகாத்தை கடந்த ஏழு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சந்தித்து வருகிறது. சோமநாத புரம் படுகொலை தொடங்கி கோவை குண்டு வெடிப்பு என்று புல்வாமா வரை நாம் தொடர்ந்து இப்பயங்கரவாதத்தைச் சந்தித்து வருகிறோம். இங்கு இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் வெடித்துள்ளன. ஆனால் இன்றுவரை எந்த மசூதிக்குள்ளும் ஆயுதமேந்திய இந்துக்கள் சென்று இஸ்லாமியரைக் கொன்று குவித்ததில்லை. மாறாக அக்க்ஷயதாம் முதல் காசி கோவில், ஜம்மு ரகுநாதர் கோவில் என இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து இஸ்லாமிய ஜிகாதிகள் அப்பாவி இந்துக்களைக் கொன்று குவித்துள்ளார்கள்.

அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளில் அந்தத் தாக்குதல்கள் பெரிய கண்டனங்களைப் பெறவில்லை. ஏன்? மும்பையில் நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஜிகாதி பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்று குவித்தபோது அமெரிக்காவின் முன்னணி தார்மீகவியல் போதிக்கும் பேராசிரியையான மார்த்தா நஸ்பம் ஏறக்குறைய அதனை நியாயப்படுத்துவது போல நியூயார்க் டைம்ஸில் எழுதினார். 2002ல் இந்து முஸ்லிம் கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அனைத்துக் கஷ்டங்களையும் பட்டியல் இட்டார். மற்றொரு அமெரிக்க லிபரல் ஜிம் லீச், மும்பை தாக்குதல் காட்டுமிராண்டித்தனம் எனs சொன்னவர், சொன்ன கையோடு ஆகவே இதை ஏதோ ஒரு குறிப்பிட்டவர்கள் செய்தார்கள் எனக் கருதக்கூடாது, இதை முடிந்தவரை தேசியப் பார்வையில்லாமல் அணுகவேண்டும் என்று சொன்னார். இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களையும் அமெரிக்க இஸ்ரேலியர்களையும் தாக்கியதில் ஒரு நியாயத்தைக்கூடப் பார்த்திருக்கலாம், ஆனால் இதைத் தேசியத்தன்மையுடன் அணுகக் கூடாது என்று சொன்னார்.

இந்த லிபரல் அமைதிப்புறா பார்வைகள் ஏன் இந்துக்களும் யூதர்களும் படுகொலைச்செய்யப்படும்போது பொங்குவதில்லை, ஆனால் இஸ்லாமியர்கள் அப்படிப் படுகொலை செய்யப்படும்போது பொங்குகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கொஞ்சம் உங்கள் அண்டை வீட்டு லிபரல் ஃபெமினிஸ்டையோ அல்லது இடதுசாரி பேராசிரியரையோ கேளுங்கள். எப்போதெல்லாம் அவர்கள் பாலஸ்தீனியர்களுக்காகப் பொங்கினார்கள் என்று. அவர்கள் ஏறக்குறைய ஒரு காலண்டரையே உங்களிடம் தூக்கித் தருவார்கள். வருஷத்தில் முந்நூற்றைம்பது நாட்களில், முடிந்தால் அறுநூறு நாட்கள் பொங்கியிருப்பார்கள். சரி திபெத்தியர்களுக்காகவோ அல்லது யாஸிதிகளுக்காகவோ ஏதாவது ஒருநாள் ஒரு நிமிட மௌன அஞ்சலியாவது செலுத்தியிருக்கிறீர்களா எனக் கேளுங்கள். அந்தக் கேள்வியிலிருந்தே அவர்கள் உங்களை ஒரு இந்துத்துவ பாசிச அற்பப் பதர் எனக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

இடதுசாரிகள் உலகின் மிக மோசமான வெறுப்புணர்வு பரப்பிகள். ஹிட்லர் காலத்திற்குப் பின்னர் யூத வெறுப்பு வெளிப்படையாகச் செய்ய முடியாத ஒன்று. காலனியக் காலத்துக்குப் பிறகு இந்து மதத்தின் மீது மிஷிநரிகள் செய்தது போல வெறுப்புச் சேற்றை வெளிப்படையாக வாரியிறைக்க முடியாது. எனவே முன்னதைத் தொடர்ந்து செய்ய பாலஸ்தீனிய பிரச்சினை. பின்னதைச் செய்ய ‘சாதியம் பிராமணீயம்’ என்கிற முகமூடி. ஆனால் வெளிப்படுத்தப்படும் வெறுப்பென்னவோ ஒன்றுதான்.

அது அன்னியமானவற்றின் மீதான, நம்மிலிருந்து வேறுபடுபவர்கள் மீதான வெறுப்பு. பன்மைகளையெல்லாம் அழித்தொழிக்கவேண்டும் என்கிற வெறுப்பு.

இந்துத்துவர்களின் நிலைப்பாடு என்ன?

அவர்கள் பன்மையைப் போற்றுகிறவர்கள். அவர்களின் இருப்பை நியாயப்படுத்துவதே பன்மைத்தன்மைதான். அதுவே இந்துத்துவத்தின் அடிநாதம். அவர்கள் எதிர்ப்பது பன்மையை அழிக்கும் ஒற்றைப்படைத்தன்மையான எதையும்.

ஆம். ராமரா அல்லாவா என்பதல்ல இந்துக்களுக்கும் இஸ்லாமியவாதிகளுக்குமான பிரச்சினை. பன்மைக் கடவுளர்களை வணங்கலாம் என்கிற நிலைபாட்டுக்கும் அல்லாவை மட்டுமே வணங்கவேண்டும் என்கிற நிலைபாட்டுக்குமான பிரச்சினைதான் இந்து முஸ்லிம் பிரச்சினை. இது பன்மையைப் பேணும் ஆன்மிகப் பண்பாட்டுக்கும் ஒற்றை மத நம்பிக்கையை மட்டுமே கொண்ட ஒரு விரிவாதிக்கத்துக்குமான பிரச்சினை. இந்த அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்போது க்ரைஸ்ட்சர்ச் படுகொலைக்கு வருவோம்.

க்ரைஸ்ட்சர்ச் படுகொலை என்பது ஏசு மட்டுமே என்கிறவர்களால் அல்லா மட்டுமே என்கிறவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை. இதே போன்ற படுகொலைகளை அல்லா மட்டுமே என்கிறவர்கள் ஏசு மட்டுமே என்கிறவர்கள் மீது பாகிஸ்தான் தொடங்கி ஆப்பிரிக்கா வரை அவர்கள் எங்கே ஆட்சியதிகாரத்துடன் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் சற்றேறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருள்பாலித்த அவதார புருஷர் ஐயா வைகுண்டர் இப்படிப்பட்ட மதங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்னறிவித்திருக்கிறார்:

“நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று
வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்
மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்
அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்

குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்
உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து
மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர்”

விளக்க வேண்டிய அவசியமில்லை. எளிதான தமிழில்தான் அமைந்திருக்கிறது. வான் என்று ஐயா வைகுண்டர் சொல்வது சிதாகாசம். அதை அறிந்தவன் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்று சண்டை போடமாட்டான். உலகமெல்லாம் தொப்பி (இஸ்லாம்) அணிய வைப்போம் என்கிறார் ஒரு மதத்தவர். மற்றொருவரோ கிறிஸ்தவம்தாம் வையகமெல்லாம் இருக்க வேண்டும் என்கிறார். கத்தோலிக்கரோ அவர்களின் சவுக்கத்துக்கே (பாதிரி அங்கி) உலகம் கட்டுப்பட வேண்டுமென்று நினைக்கின்றனர். இதன் விளைவாக ஒருவரையொருவர் குற்றம் உரைப்பார்கள் என்கிறார் ஐயா வைகுண்டர். இறுதியில் ஒருவரை ஒருவர் ஒழித்துக்கொண்டு மடிவார்கள் என்கிறார். இது மிகவும் முக்கியமான அவதானிப்பு. வெறும் பிரசாரம் என்று மதமாற்றப் பிரசாரத்தை அனுமதித்தால் அதனை மறுத்து அடுத்தவனும் பிரசாரம் பண்ணுவான். பிரசாரப் போர்கள் இன்றியமையாமல் எழும். இறுதியில் அது வன்முறையாக, போராக, பயங்கரவாதமாக வெடிக்கும். இன்று க்ரைஸ்சர்ச்சிலும் நேற்று பாகிஸ்தானிலும் இதர ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர் மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையும் இப்படிப்பட்ட வன்முறைதான்.

ஆனால் இந்துக்கள் மீதான ஜிகாத் வேறுவிதமானது. இங்கு இந்துக்களின் அடிப்படை பண்பாட்டுப் பன்மை பேணுதல் மீதுதான் ஜிகாதும் மதமாற்றப் போரும் நடத்தப்படுகின்றன. இந்த பன்மை பேணுதல் என்பது இன்றைய ஜிகாதியத் தோழர்களான மார்க்ஸிய ஸ்டாலினிஸ்ட்களுக்கும், நாளைய ஸ்டாலினிஸ்ட்களான இன்றைய நேருவியர்களுக்கும், நாளைய நேருவியர்களான இன்றைய காந்தியர்களுக்கும், இவர்களுடன் இந்துமதத்தை ஒழிக்கும் வரை பயணிக்கத் தயாராகும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளுக்குமே பிரச்சினையான விஷயம்தான். பன்மை என்பது ஒற்றைப்படைத்தன்மையின் எதிரி. ஒரு புத்தகம், ஒரே தேவகுமாரன், ஒரே மீட்பர், ஒரே இறுதி நபி என்கிற நிலைபாடுள்ள எவருக்கும் இந்துமதம் அழிக்கப்பட வேண்டியதுதான். அதை நேற்று காலனியம் செய்திருந்தால் நம் பங்கு பாதிரி இன்று விதந்தோதியிருப்பார் இல்லையென்றால் செத்தொழிந்துவிட்ட இந்துக்களுக்காகக் கண்ணீர் சிந்தியிருப்பார். என்ன கெட்டுப்போயிற்று, எல்லா இந்துக் கோவில்களும்தான் மியூஸியங்களாக சர்ச் கட்டுப்பாட்டில் இருந்திருக்குமே. ஆனால் அது நடக்காததால் இன்றைக்கு அவர் இந்தியாவுக்குள் மட்டும் ஜிகாதிகளை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சங்கைக்குரிய போப் அவர்கள் யூதர்களுக்கு எதிராக பாலஸ்தீனியர்களை ஆதரிப்பது போல.

அப்படி என்றால் க்ரைஸ்ட்சர்ச் படுகொலையில் இந்துக்கள் கவலைப்பட, கண்டனம் செய்ய என்ன இருக்கிறது?

எந்த மனிதனிலும் இறைவனே இருக்கிறார் என்பதுதான் இந்து சமயத்தின் அடிப்படை. கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ ஏன் மார்க்சியரோ அல்லது நேருவிய நாசியோ, அவரிலும் இறைவன் இருக்கிறார். அவருக்கு ஒரு துன்பம் வரும்போது அவருக்கு உதவுவது இறைவழிபாட்டுக்கு இணையானது. அவருக்கு துன்பம் வரும்போது அவர் துன்பத்தில் அக்கறையின்மை காட்டுவதுகூடட் தவறானது. இறைக்குற்றமே. இயற்கை பேரிடரிலோ அல்லது ஏழ்மை நிலையிலோ உள்ள கிறிஸ்தவரல்லாதவருக்கு ஒரு கிறிஸ்தவ மிசிநரி உதவும்போது அதை அவர் மதமாற்ற நோக்கத்துடன் செய்கிறார். ஆனால் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் இந்துவுக்கோ இந்து அல்லாதவருக்கோ உதவும்போது அதை இறைவழிபாடாகச் செய்கிறார். அப்படித்தான் செய்யவேண்டும், அப்படி மட்டும்தான் செய்யவேண்டும் என்று கூறியவர் பரம பூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்.

மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் ‘ஆரிய’ என்கிற நம் வார்த்தைக்கு இனவாதப் பொருள் கொடுத்தது. அதன்பின் ஒன்றரை நூற்றாண்டுகள் அந்தப் பொருள் கொண்ட ஒரு அரசியல் இனவெறி சித்தாந்தம் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த ஆபாசத்தின் உச்சம்தான் நாசி கட்சி. நாசிகளிடம் மட்டும் ஆரிய இனவாதக் கோட்பாடு இருக்கவில்லை. கத்தோலிக்க இறையியல் ஆவணங்களிலும் நாம் அதைக் காணலாம். ஆனால் இந்த மேற்கத்திய கிறிஸ்தவ ஆரியக் கோட்பாட்டின் அடிப்படை: ‘உன்னிலிருந்து வேறுபட்டவன், உன்னில் கீழானவன் உனக்கு ஆபத்தானவன். அவனை அழி அல்லது அவனை உன் வழிக்கு மாற்று.’

க்ரைஸ்ட்சர்ச் படுகொலையிலும் ஜிகாதி படுகொலைகளிலும் நாம் பார்ப்பது இந்த ஐரோப்பிய அரேபிய ஆரியக் கோட்பாடு.

இந்துக்களிடம் ஒரு ‘ஆரிய’ கோட்பாடு உண்டு. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு கதை.

ஒரு வேடனைப் புலி துரத்தியது. புலிக்குப் பயந்து மரத்தின் மீது ஏறினான் வேடன். அங்கே இருந்தது ஒரு கரடி. புலி கரடியிடம் வேடனைத் தன்னிடம் தள்ளச் சொன்னது. ‘அவன் நம் இனங்களை வேட்டையாடுபவன். நம் எதிரி. அவனை என்னிடம் தள்ளு’. கரடி சொன்னது: ‘இந்த மரம் என் வீடு. இவன் இப்போது என் அதிதி. நான் செய்யமாட்டேன்.’ கொஞ்ச நேரத்தில் கரடி தூங்கிவிட்டது. வேடனிடம் புலி பேசியது. ‘என்ன இருந்தாலும் கரடி ஒரு விலங்கு. அது நான் போனதும் உன்னை முழுதாக உண்ணத்தான் இப்போது உண்ணவில்லை. அதை என்னிடம் தள்ளிவிடு. நான் அதை உண்டு பசியாறிப் போய்விடுவேன். உனக்கும் என்னால் ஆபத்து இல்லை. கரடியாலும் உனக்கு ஆபத்து இல்லை.’ வேடன் இசைந்தான். கரடியைக் கீழே தள்ளிவிட்டான். மரத்திலேயே வாழ்ந்து பழகிய கரடி எளிதில் தாக்குப் பிடித்து கீழே விழாமல் தப்பிவிட்டது. இப்போது புலி கரடியிடம் சொன்னது, ‘பார்த்தாயா அந்த மனிதன் எவ்வளவு வஞ்சகன். இப்போது உன்னையே கொல்ல அவன் தயங்கவில்லை. அவனை என்னிடம் தள்ளிவிடு.’ கரடி சொன்னது, ‘என் தர்மத்தை நான் மாற்ற முடியாது. அவன் என் அதிதி. அவனை நான் கொல்லவோ அல்லது கைவிடவோ முடியாது.’

இந்தக் கதை வான்மீகி ராமாயணத்தில் வருகிறது.

ராமர் வென்றுவிட்டார். மகிழ்ச்சியான செய்தியை அசோகவனத்தில் அனுமன் வந்து அன்னையிடம் சொல்கிறார். அப்படியே சுற்றிப் பார்க்கிறார். சீதைக்கு காவல் இருந்த அரக்கிகள், ராவணன் உத்தரவின் பேரில் சீதையை இம்சித்தவர்கள். அவர்களைத் தண்டிக்க சீதையிடம் அனுமதி கேட்கிறார் அனுமான். அதற்கு சீதை ஒப்புக்கொள்ளவில்லை. ‘அவர்கள் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படிதான் நடந்தார்கள். யார்தான் தவறு செய்யவில்லை?’ என்றெல்லாம் சொல்லி, பிறகு, அனுமனுக்கு இக்கதையை சொல்கிறாள் அன்னை. அவள் சொல்கிறாள்:

‘கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்சின் ந அபராத்யதி’

ஆரியரை வரையறை செய்யும் குணம் கருணை. யார்தான் நம்மில் குற்றமற்றவர். இங்கு அன்னை சொல்லும் கருணை, அனைவரிடமும் காட்டப்படும் கருணை.

ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ராவணனிடம் அன்னை கருணை காட்டவில்லை. ராவணனின் சேனைகளிடம் அன்னை கருணை காட்டவில்லை. அவள் கருணை அரக்கியரிடம். அவர்கள் சூழ்நிலைக் கைதிகள். புல்வாமா படுகொலையைச் செய்த பயங்கரவாதிகளை சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் அழிப்பது கடமை. அதற்காக அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் அடிப்போம் அழிப்போம் என்பது கீழ்மை. ஐரோப்பிய அரேபியத்தின் ஆரியத்தன்மை பிற மனிதரைவிடத் தான் உயர்ந்தவரென்பது. அன்னை சீதையின் இந்து ஆரியத்தன்மை மனிதரிலும் மனிதர் தம்மைவிடக் கீழ் என நினைக்கும் உயிர்களிடத்திலும்கூட வெளிப்படும் கருணையினை அடிப்படையாகக் கொண்டது.

ஜமாத் இ இஸ்லாமி அல்லது தவ்ஹீத் ஜமாத் போன்ற ஒரு அமைப்பின் அல்லது ஜாகிர் நாயக் போன்ற ஒருவனின் பிரசாரத்துக்கு ஆட்படும் ஒரு முஸ்லிம் இறுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவில் ஐக்கியமாவான் என்பது உண்மை. ஆனால் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைத் தாக்கி அழித்த அதே ராணுவ உக்தி ஜமாத் இ இஸ்லாமியிடமோ அல்லது ஸாகிர் நாயக்குடனோ செல்லாது. இங்கு தேவை அந்தப் பிரசாரத்தை எதிர்கொண்டழிப்பது அவர்களின் பெட்ரோ டாலர் குழாய்களை அழிப்பது. நரேந்திர மோதி அதைத்தான் செய்கிறார். ஒவ்வொரு இந்துத்துவனும் அதையே செய்யவேண்டும்.

க்ரைஸ்ட்சர்ச் படுகொலை கண்டிக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட படுகொலைகள் இல்லாமல் ஆக, ‘நான் மட்டுமே உண்மை’ என்கிற மதமாற்ற மதங்கள், தர்மத்தின் உண்மை முடிவிலிப் பன்மை என்பதை உணரவேண்டும். அதுமட்டுமே இப்படிப்பட்ட படுகொலைகள் இல்லாமலாக ஒரே வழி.

கைபேசியை விவாகரத்து செய்யுங்கள் | ரஞ்சனி நாராயணன்

‘இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது: அப்போதுதான் எனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு நான் பால் புகட்டிக் கொண்டிருந்தேன். குழந்தை கவனம் சிதறாமல் பால் அருந்த வேண்டும் என்பதற்காக அறையை இருட்டாக்கி இருந்தேன். அது குழந்தைக்கும் எனக்குமான நெருக்கமான நெகிழ்வான தருணம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சரியாக இல்லை என்று பிறகுதான் உணர்ந்தேன்.

குழந்தை என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கவனம் முழுக்க என்மேல் இருந்தது. ஆனால் என் கவனம் முழுக்க e-bay தளத்தில் எனக்குத் தேவையான பழைய காலத்திய கதவுக் கைப்பிடிகளைத் தேடுவதில் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்கள் நான் இந்தத் தேடலில் என்னை மறந்திருந்தேன். அதன்பின்தான் என் குழந்தை என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் கையிலிருந்த ஸ்மார்ட் போனின் நீலநிற ஒளியில் அவளது சின்ன முகம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவளது கவனம் என் மேல், என் கவனமோ என் ஸ்மார்ட் போன் மேல்! இந்தக் காட்சியை ஒரு வெளி ஆள் போலப் பார்த்தேன். அந்த நொடிகளை இப்போது நினைத்தாலும் என் இதயம் வலிக்கிறது. நிச்சயம் என் வாழ்வு இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளை இந்தப் பழக்கம், இது தரும் போதை, இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளான நடத்தையில் மாறுதல், கவனமின்மை, நரம்பு மண்டலப் பாதிப்பு இவை பற்றிய ஆராய்ச்சியில் கழித்தேன். எப்படி இவற்றைக் கட்டுப்படுத்துவது, ஒரு ஆரோக்கியமான உறவை ஸ்மார்ட் போனுடன் வளர்த்துக் கொள்வது என்பது பற்றி முடிவுக்கு வந்தேன்’ என்கிறார் “How to Break Up With Your Phone: The 30-day Plan to Take Back Your Life” என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் திருமதி காதரீன் ப்ரைஸ் (Catherine Price).


சராசரியாக ஐந்து மில்லியன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் அவர்கள் கையிலிருக்கும் போனுடன் கழிப்பதாக ஒரு தகவல் சொல்லுகிறது. நம்முடைய ஸ்மார்ட் போனுடன் ஆன இத்தகைய உறவு ஒரு ஆரோக்கியமான உறவு இல்லை என்று நம் எல்லோருக்குமே தெரியும்.

சரி, இதற்கு என்ன தீர்வு?

இனி நான் கைபேசியைப் பயன்படுத்தவே மாட்டேன் என்பதல்ல தீர்வு. கைபேசி என்பது நமக்குத் தேவையான ஒன்றாகிவிட்டது. அதனுடனான உறவை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம்? கைபேசியுடனான உறவு நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. நமக்கும் நமது கைபேசிக்கும் ஆன எல்லைகளை மேம்படுத்திக் கொள்ள முடியுமா? ஒரு ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள முடியுமா?

நிச்சயம் முடியும். திருமதி காதரீன் ப்ரைஸ் சொல்லும் வழிகளை நாமும் பின்பற்றிப் பார்க்கலாமே. இதோ அவர் தரும் குறிப்புகள்:

மாற்றி யோசியுங்க:

‘இனிமேல் கைபேசியுடன் நான் கழிக்கும் நேரத்தைக் குறைக்கப்போகிறேன்.’ நம்மில் நிறைய பேர் நினைப்போம். இப்படி நினைப்பதே நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிடும். மாற்றி யோசியுங்கள். கைபேசியில் நான் செலவழிக்கும் நேரம் எனக்குப் பிடித்த, என்னை மகிழ்விக்கும் ஒரு செயலை நான் செய்யாமல் இருக்கும் நேரம் என்று நினைக்க ஆரம்பியுங்கள். ஒரு தோழியுடன் அந்த நேரத்தைக் கழிக்கலாம்; அல்லது புதிதாக ஒரு பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், ஏற்கெனவே தெரிந்த தையல் வேலையைச் செய்யலாம். ஓவியம் வரையலாம். பாதியில் நிறுத்தியிருந்த வேலையை முடிக்கலாம். மனதுக்குப் பிடித்த ஒரு விளையாட்டில் (நிச்சயம் செல்போன் விளையாட்டு அல்ல) நேரத்தைக் கழிக்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

செல்போனில் குறைந்த நேரம் செலவழிக்கப் போகிறேன் என்பதற்குப் பதில் என் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதில் அல்லது என் வாழ்க்கையுடன் அதிக நேரம் செலவழிக்கப் போகிறேன் என்று மாற்றி யோசியுங்கள்.

உங்கள் கவனத்தைக் காசாக்குகிறார்கள், உஷார்!

நமது வாழ்க்கையின் மேல் நமது கவனம் இருக்கவேண்டும். ஆனால் நம் கவனமோ கைபேசி மேல் இருக்கிறது. இந்த நேரத்தில் எனது கவனம் எதன் மேல் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்போது நம் நேரத்தை நாம் எப்படிச் செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது, இல்லையா?

நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பலவிதமான சமூக வலைத்தளங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எதற்காக இவைகளை நமக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும்? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வரும்? எப்போதாவது இதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா? அவர்களுக்கு நமது கவனம் தேவை. நாம் நிறைய நேரம் அவற்றில் செலவிடவேண்டும். அதுதான் அவர்களது நோக்கம். அதில் விளம்பரம் செய்பவர்கள்தான் அவர்களது வாடிக்கையாளர்கள். அவர்களின் மூலம் இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. அதாவது நமது கவனத்தை அவர்கள் காசு பண்ணுகிறார்கள். இப்போது யோசியுங்கள்: உங்களது கவனம் எதில் இருக்கவேண்டும்? வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுவதிலா? கைபேசியில் நேரம் போவது தெரியாமல் மேய்வதிலா?

உங்கள் வாழ்வின் வெற்றி உங்கள் கையில்

உங்கள் குறிக்கோள்களை நினைவுபடுத்தும் தூண்டுகோல்களை உருவாக்குங்கள். அவற்றைப் பயன்படுத்தி வெற்றிக்குத் தயாராகுங்கள். நிறைய நேரம் படிப்பதில் செலவழிக்க வேண்டுமென்றால் உங்கள் படுக்கையறை மேஜையில் ஒரு புத்தகத்தை வையுங்கள். புதியதாகச் சமைக்க வேண்டுமா, அதற்கான சாமான்களை விலாவாரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் கைபேசியின் சார்ஜர் படுக்கையறைக்கு வெளியே இருக்கட்டும். அலாரம் வைக்க என்று தனியாக ஒரு கடியாரம் வாங்குங்கள்.

உங்களை உங்கள் குறிக்கோளிலிருந்து வெளியே இழுக்கும் தூண்டுகோல்களைத் தவிர்த்துவிடுங்கள். உதாரணத்திற்கு சமூகவளைத்தளச் செயலிகளை உங்கள் கைபேசியில் செயலிழக்கச் செய்யுங்கள். தகவல் சொல்லிகளை (notifications) – மின்னஞ்சல் உட்பட – தவிர்த்துவிடுங்கள். சாப்பிடும் நேரங்களில் யார் கைகளிலும் கைபேசி இருக்கக்கூடாது என்பது உங்கள் குடும்பத்தில் எழுதப்படா விதியாக இருக்கட்டும்.

வேகத் தடை

எத்தனை முறை ஜஸ்ட் ஏதாவது வந்திருக்கிறதா பார்க்கலாம் என்று செல்போனைக் கையில் எடுத்துவிட்டு மணிக்கணக்கில் அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்? இந்த வழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். இவையெல்லாம் உங்களிடத்தில் ஒரு அதிருப்தியை உண்டாக்கும். ஐயோ, இவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டோமே என்று உங்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும். சாலையில் எதிர்படும் வேகத் தடை போல செல்போனை கையில் எடுப்பதற்கும் தடைகள் இருக்கட்டும். உங்கள் செல்போனைச் சுற்றி ஒரு ரப்பர்பேண்ட் போட்டு வையுங்கள். அது செல்போனைத் தொடவிடாமல் உங்களைத் தடுக்கும். இல்லையென்றால் உங்கள் லாக்-ஸ்க்ரீனில் ‘போனை எடுத்துப் பார்க்க வேண்டுமா?’ இப்போது என்ன அவசரம்?’, ‘தேவையா?’, ‘எதற்கு?’ போன்ற கேள்விகளைப் போட்டு வையுங்கள்.

உடல்/மனம் சார்ந்த மாற்றங்கள்

கைபேசியில் மும்முரமாக இருக்கும்போது உங்கள் உடல்மொழிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்: எந்த நிலையில் உங்கள் உடல் இருக்கிறது? நேராக, நிமிர்ந்து முதுகு வளையாமல் உட்கார்ந்திருக்கிறீர்களா? நீங்கள் இப்போது உங்கள் கைபேசியில் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? அதைத் தொடரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலில் மனதில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணர ஆரம்பித்தீர்கள் என்றால் கைபேசி தரும் போதையிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் கொள்வது சுலபமாகிவிடும்.

குறிப்பாக கேம்ஸ் ஆடும்போது ஒரு நிலையில் வெற்றி பெற்றவுடன் ஏற்படும் மகிழ்ச்சி, அடுத்த நிலையில் முதல்முறை வெற்றி கிட்டாதபோது ஏற்படும் கோபம் முதலியவற்றைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரேமுறையில் நான்கு அல்லது ஐந்து நிலைகளைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மெதுவாக உங்கள் மனதில் ஏற்படும். அது இயலாதபோது உங்கள் மனநிலையைக் கவனியுங்கள். சாதாரணமாக யாராவது வந்து பேசினால்கூட சுள்ளென்று ஒரு கோபம் பொங்கும். இதெல்லாம் நீங்கள் கைபேசியின் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதன் அறிகுறிகள். ஆரம்பத்திலேயே இந்த ஆட்டங்களிலிருந்து விடுபட்டு விடுங்கள். ‘வெற்றி பெற வேண்டுமா? நண்பர்களிடம் உதவி கேளுங்கள்’ என்று உங்களுக்கு மெல்ல வலைவிரிக்கப்படும். உஷார்!

கைபேசி இல்லா நேரங்கள்

அவ்வப்பொழுது கையில் கைபேசி இல்லாமல் பழகுங்கள். நடைப்பயிற்சியின் போது கைபேசியை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள். மணி பார்க்க கைகடியாரத்தைக் கட்டிச் செல்லுங்கள். அலுவலகத்திற்குப் பேருந்தில் செல்லும்போது ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள். கைபேசியை எடுத்துப் பார்க்கவேண்டும் என்று கை அரிக்கும்; அடக்குங்கள். அந்த அடக்குமுறை உங்கள் உடம்பில், மனதில் என்னென்ன மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என்று கூர்ந்து கவனியுங்கள். அந்த ஆர்வம் சற்று நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

உங்களைக் காக்கும் தொழில்நுட்பம்

நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் கைபேசியைப் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிய பலவித செயலிகள் இருக்கின்றன. அவை காட்டும் பயமுறுத்தும் தகவல்களைக் காணத் தயாராகுங்கள். உங்களை அறியாமலேயே பலமணி நேரங்களை விரயம் செய்திருப்பீர்கள். பிரச்னை கொடுக்கும் வலைத்தளங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல செயலிகள் இருக்கின்றன. சில வலைத்தளங்கள் எத்தனை நேரம் நீங்கள் கைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியும் என்று உங்களைச் சவாலுக்கு அளிக்கும். அதனைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர் எத்தனை நேரம் ‘ஆஃப்லைனில்’ இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லும்.

ஆப்பிள் போன்களில் ஒரு செயலி இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் ‘வாகனம் ஓட்டும்போது தொந்திரவு செய்யவேண்டாம்’ என்று உங்கள் போனில் போட்டுவிடலாம். யாராவது உங்களை நீங்கள் வாகனம் ஓட்டும்போது கூப்பிட்டால் இந்தச் செயலி அவர்களுக்கு ஒரு தயார்நிலைச்செய்தி அனுப்பிவிடும். வாகனம் ஓட்டும்போது பேசிக்கொண்டே செல்வதைத் தடுக்கும் ஒரு நல்ல செயலி இது. ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இந்தச் செயலி இருக்கிறது. நீங்கள் எவ்வளவு நேரம் கைபேசியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் லாக்-ஸ்க்ரீனில் காட்டும் இந்தச் செயலி.

ஒரு தொழில்நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

வெளிஉலக உந்துதல்கள்

பேருந்துகளில் செல்லும்போது அல்லது நடந்து செல்லும்போது மற்றவர்கள் தங்களது கைபேசிகளை எடுத்துப் பார்க்கும்போது உங்களுக்கும் பார்க்க வேண்டுமென்று தோன்றலாம். அப்போது உங்களது நோக்கம் என்ன என்று சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் உங்கள் கைபேசியுடன் ஆரோக்கியமான உறவை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு புதிய ஆரோக்கியமான பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நீண்ட ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டு உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.

இவை எதுவுமே உங்கள் கைபேசியை உங்களிடமிருந்து விலக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்: எத்தனை பேர் தாங்கள் இறக்கும் தருவாயில் ‘நான் முகநூலில் இன்னும் சிறிது நேரத்தைக் கழித்திருக்கலாம்’ என்று சொல்வார்கள்? மறுபடி மறுபடி ஒரு கேள்வியை உங்களிடமே கேட்டுப்பாருங்கள்: ‘இது என் வாழ்க்கை. இதில் எத்தனை நேரம் நான் கைபேசியில் வீணாகக் கழிக்கப் போகிறேன்?’

அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

முப்பது நாட்கள் நீங்கள் இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், உங்கள் கைபேசியை விவாகரத்து செய்துவிடலாம் என்கிறார் திருமதி காதரீன் ப்ரைஸ். முயற்சி செய்யுங்களேன். 

சு.வெங்கடேசனின் உரையும் மறுப்பும் | ஜனனி ரமேஷ்(இந்து) கல்யாண மாலை நிகழ்ச்சியில் ‘இயற்கை அறம்’ என்ற தலைப்பில் சக எழுத்தாளரும், ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளருமான  சு.வெங்கடேசன் ஆற்றிய உரையைக் கேட்டேன்.

(புகைப்படம் நன்றி: விகடன்.காம்)
முதல் பிழை

நீதி நூல்களை மேற்கோள் காட்டிய வெங்கடேசன் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் சம்பிரதாயங்களை, பூஜை புனஸ்காரங்களைக் கடைப்பிடித்துப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர்தான் சொர்கத்தை அடைவார்கள் என்று சாஸ்திர நூல்கள் (அதாவது இந்து நூல்கள்) சொல்கின்றன என்று உரையைத் தொடங்கி உள்ளார