அஞ்சலி: மனோகர் பாரிக்கர்மனோகர் பரிக்கர் மார்ச் 17ம் தேதி காலமானார். சிறு வயதிலேயே ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்து ஸ்வயம்சேவக் ஆனவர். இறுதி மூச்சு வரை இந்தியாவின் வளர்ச்சி குறித்து யோசித்தவர். தன் உடல்நிலை மோசமானபோதும் தனது பதவிக்குரிய பணிகளைச் செய்துவந்தவர். கோவாவின் எளிய மக்களுக்கான முதல்வராக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
மோதி பிரதமராகப் பொறுப்பேற்றதும் மனோகர் பரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். பாகிஸ்தான் மீதான முக்கியமான சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் மிகப்பெரிய பங்காற்றினார். கோவாவில் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக மீண்டும் கோவாவின் முதல்வரானார். தன் இறுதி மூச்சு வரை கோவாவின் முதல்வராகப் பணியாற்றினார்.

இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கும் தகுதிகள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் என்று புகழப்பட்டவர் மனோகர் பரிக்கர். புற்றுநோயால் அவர் உடல்நலம் நலிந்தது. ஆனாலும் தளராமல் மக்கள் பணியாற்றினார்.
ஐஐடியில் படித்துவிட்டு  இந்தியாவுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தார். 1988ல் பாஜகவுக்கு அவரை அனுப்பி வைத்தது ஆர்எஸ்எஸ். 1994ல் முதன்முறையாக பனாஜி தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். அக்டோபர் 2000ல் கோவாவின் முதல்வரானார். ஐஐடி படித்துவிட்டு முதன்முதலாக முதல்வரான பெருமை இவரையே சேரும். 2002ல் இரண்டாம் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2012ல் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மோடி பிரதம வேட்பாளராக முதன்முதலில் முன்மொழியப்பட்டபோது வெளிப்படையாகத் தன் ஆதரவைத் தெரிவித்தார். மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மார்ச் 2017ல் மீண்டும் கோவாவின் முதல்வராகப் பதவியேற்றார்.
வாழ்நாள் முழுக்க நாட்டுக்காக உழைத்தவர் மனோகர் பாரிக்கர். அவரது நினைவுகள் என்றென்றும் நம்மை வழிநடத்தும்.

Leave a Reply