Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – கடிதம் 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா

கடிதம் 1
ஓ தியாகிகளே
சுதந்திரதிற்கான
போராட்டம் துவங்கியது முதல்
வழிவழியாக
நாம் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்
.
இதில்
தோல்விகள் நிரந்தரம் இல்லை, வெற்றி நிச்சயம்.
இன்று மே 10ம்
தேதி. இந்தநாளில்தான்
1857ம் ஆண்டு தியாகிகளால் முதல்
சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டது. நம்முடைய அடிமைத்தளையை அறுத்தெறிய நம்
தாய்நாடு வாளேந்திய நாள். விடுதலைக்கான முதல் அடியை நம் தாய்நாடு கொடுத்த நாள்.
பரங்கியரைக் கொல்வோம் என்ற போர்முழக்கம் ஆயிரக்கணக்கான போராளிகளால் எழுப்பப்பட்ட
நாள். மீரட்டில் இருந்த சிப்பாய்கள் டெல்லி நோக்கி தங்கள் புரட்சிப் பயணத்தை
ஆரம்பித்த நாள். தங்கள் புரட்சி போராட்டத்திற்குக் கொள்கைகளை வகுத்து ஒரு
தலைவரையும், ஒரு கொடியையும் உருவாக்கிய நாள். அந்தப் புரட்சிப் போராட்டத்தை ஒரு
தேசியப் போராட்டமாகவும் ஒரு சமயப் போராட்டமாகவும் மாற்றிய நாள்.
தியாகிகளே, உங்களுக்கு பெருமை
உண்டாகட்டும். நம் நாட்டின் மதங்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டபோது நம் இனத்தின்
பெருமையைக் காக்க நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினீர்கள். அதுவரை அணிந்திருந்த
தங்களின் முகமூடிகளை நீக்கி போலிகள் நம் நாட்டை அடிமை சங்கிலிக்குள் பிணைத்தனர்.
இவர்களை நம்பி நம் தாய்நாடு ஏமாந்தபோது
1857ம் வருட போராட்டத்தின் தியாகிகளே,
நீங்கள் நம் தாய்த்திருநாட்டை எழுச்சி அடையச் செய்து நம் தாய்நாட்டின் பெருமையைக்
காக்க ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பி, போர்க்களம்
புகுந்தீர்கள். தெய்வீகமும் தேசியமும் மட்டுமே உங்களது தாரக மந்திரமாக இருந்தது.
உங்களது போராட்டம் மிகச் சரியான ஒன்றுதான். நீங்கள் போராடாமல் இருந்திருந்தால்
ரத்தம் சிந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காதுதான். ஆனால் அடிமைத்தளையில் இருப்பது
அதைக்காட்டிலும் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அடிமைத்தளையை
எதிர்த்துப் போராடாத நம் நாட்டிற்கு விடுதலை தேவை இல்லை, நாம் அடிமையாய்
இருக்கத்தான் லாயக்கு என்று உலகம் நம்மைப் பார்த்து கூறியிருக்கும்.
1857-இலும் கூட நம் பெருமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள நாம் ஒன்றும்
செய்யவில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.
அதனால் இந்த நாளை உங்கள் நினைவுக்கு
காணிக்கையாக்குகின்றோம். இந்த நாளில்தான் நீங்கள் ஒரு புதிய கொடியை உயர்த்திப்
பறக்க விட்டீர்கள், ஒரு புதிய பாதையை வகுத்தீர்கள், அடைய வேண்டிய ஒரு புதிய இலக்கை
வரைந்தீர்கள், நம் தேசத்திற்கு விடிவு வர வேண்டும் என்று சூளுரைத்தீர்கள்.
உங்களுடைய புரட்சிப்போராட்டத்தின்போது நீங்கள்
விடுத்த அறைகூவலை நாங்கள் வழிமொழிகின்றோம். அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற
உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் உழைப்போம். அடிமைத்தளை உடைக்கப்படும் வரை,
நமக்கு சுதந்திரம் முற்றிலுமாக கிடைக்கும் வரை
1857ம் ஆண்டு துவங்கிய
போர் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. சுதந்திரதிற்காக மக்கள் எழுச்சி
அடையும் போதெல்லாம், சுதந்திர வேட்கை நம் தியாகிகளின் மனதில் தோன்றும்போதெல்லாம்
தன் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரே ஒருவன் பழி தீர்க்க எழுந்து
நின்றாலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றுதான் பொருள். புரட்சிப்
போராட்டத்தில் அமைதி ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுதந்திரம் அல்லது வீர
மரணம் என்ற இரண்டில் ஒன்றுதான் நிதர்சனம். உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு
உத்வேகம் அளிக்கின்றன. நீங்கள்
1857ம் ஆண்டு துவங்கிய போரை நாங்கள்
தொடர உறுதியோடுள்ளோம். நீங்கள் நடத்திய போராட்டம் இந்தப் போரின் முதல் கட்டம்
என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் ஏற்பட்ட பின்னடைவு போரில் தோற்றதாக
அர்த்தமாகாது. அதில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா ஏற்றுக்கொண்டதாக உலகம் கூறுமா என்ன?
1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக
போய்விடுமா? நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள்
நிறைவேற்றமாட்டார்களா? இந்திய தேசத்தின் வரலாற்று தொடர்ச்சி முடிந்து
போய்விடவில்லை.
1857ம் ஆண்டு மே 10ம்
தேதி துவங்கிய போர்
1908ம் ஆண்டு மே 1ம்
தேதியிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திரம் அல்லது வீர மரணம் இரண்டில்
ஒன்று கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடந்துகொண்டேதான் இருக்கும்.

எங்களது இந்தப் போராட்டத்தில்,
தியாகிகளாகிய நீங்களே எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றீர்கள். அந்த உத்வேகம்
இல்லையென்றால் பல சிறு வேறுபாடுகளால் சிதறுண்டிருக்கும் எங்களால் ஒன்றுபட்ட எங்கள்
தாய்த் திருநாட்டைப் பார்க்க இயலாது. அந்த ஒற்றுமையை நீங்கள் எப்படி கொண்டு
வந்தீர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். ஹிந்துக்கள் மற்றும்
முகமதியர்களின் இசைவோடு எப்படி பரங்கியரின் அதிகாரத்தை தவிடுபொடியாக்கி சுதேசியை
மக்களிடையே பிரபலப்படுத்தினீர்கள்; சாதி, மதம் போன்ற பிடிப்புகளில் இருந்து மக்களை
எப்படி தேசம் என்ற மேலான பந்தத்தை ஏற்படுத்தினீர்கள்! பகதூர் ஷா எப்படி நாடு
முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார்! மாவீரரான நானா சாஹிப் எப்படி
டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து
தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார்! எப்படி நம் எதிரி ஒற்றுமையாக
இருந்த நம்மைப் பார்த்து, ‘இந்த இந்திய போராட்டத்தின் மூலம் நிர்வாகிகளுக்கும்
வரலாற்று ஆய்வாளர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கலாம்.
ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், பிராமணர்களும் சூத்திரர்களும்,
ஹிந்துக்களும் முகமதியர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இயலும் என்கின்ற
செய்திதான் அது. இந்த நாட்டில் பல்வேறு மதம் மற்றும் இனக்குழுக்கள்
இருக்கின்றபடியால் இங்கு நாம் பாதுகாப்பாக ஆட்சி செய்ய முடியும் என்ற எண்ணம் இனி
செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பரஸ்பர
மரியாதையுடன் மற்றவர்களுடைய செயல்பாடுகளை அணுகுகிறார்கள். நம்முடைய அரசு இத்தகைய
புரட்சிகள் வெடிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மேல்
பத்திரமில்லாமல் நின்று கொண்டிருக்கிறது. இங்கு மதமும் தேசப்பற்றும் இணைந்து
இருக்கின்றது. தேசபற்றை வலியுறுத்தும் மதமும், மதச் சுதந்திரத்தை மதிக்கும்
தேசப்பற்றும் இங்கு இருக்கின்றது என்பதை நமக்கு இந்தப் புரட்சிப் போராட்டங்கள்
அடையாளப்படுத்தி இருக்கின்றன
’ என்று கூறினார்கள்.
இப்பேற்பட்ட ஒரு மாபெரும் போராட்டத்தை
நடத்தத் தேவையான சக்தியையும் அதனை ரகசியமாகச் செய்யகூடிய சூட்சுமத்தையும் எங்களுக்கும்
தாருங்கள். பசுமையான நிலத்தின் அடியில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைக்
குழம்பு இருப்பதை அறியாத எதிரி, அதனை எதிர்கொள்ள தயாரில்லாத நிலையில் இருந்தான்.
அதுபோன்ற சாதுர்யத்தை எங்களுக்கும் தாருங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமம்தோறும்
எப்படிப் புரட்சி பற்றிய செய்திகளை சப்பாத்தி மூலம் பரப்பினீர்கள் என்ற வித்தையை
எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். ஒரே மாதத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு
இளவரசனும், நகரங்கள், சிப்பாய்கள், போலீஸ்கள், ஜமீன்தார்கள், பண்டிட்கள்,
மவுல்விகள் என்று எல்லோரையும் எப்படி இந்தப் புரட்சித் தீ பற்றிக்கொண்டது,
கோவில்களிலும் மசூதிகளிலும் ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற கோஷம் எப்படி விண்ணைப்
பிளந்தது என்பதைக் கூறுங்கள். மீரட் எழுச்சி அடைந்தது, டெல்லி எழுந்தது, பெனாரஸ்
எழுந்தது, ஆக்ரா, பாட்னா, லக்னோ, அலாஹாபாத், ஜாதகல்பூர், ஜான்சி, பாண்டா, இந்தோர்,
பெஷாவரில் இருந்து கல்கத்தா வரையிலும், நர்மதாவில் இருந்து ஹிமாலயம் வரையிலும்
அந்த எரிமலை வெடித்து எல்லோரையும் புரட்சி ஆட்கொண்டது.
ஓ தியாகிகளே, இந்த மாபெரும் புரட்சியை
நடத்தும்போது நம் மக்களிடம் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்னவென்பதையும் எங்களுக்குக்
கூறுங்கள். இந்த மாபெரும் தேசிய வேள்வியில் பங்கு பெறாமல் உங்களுடைய தன்னலமற்ற
போராட்டத்தை நீர்த்து போகும்படி செய்த நபர்களின் சுயநலத்தைப் பற்றியும்
சொல்லுங்கள். ஹிந்துஸ்தானத்தின் தோல்விக்குக் காரணம் ஹிந்துஸ்தானம் மட்டுமே என்பதையும்
கூறுங்கள். பல நூற்றாண்டு கால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற நம் அன்னை வீறுகொண்டு
எழுந்து பரங்கியரைத் தன் வலதுகையால் அவர்கள் தலையில் தாக்கும்போது, அவளுடைய இடதுகை
எதிரியைத் தாக்காமல், அவள் தலையையே தாக்கியதைப் பற்றியும் கூறுவீர். அந்த
அடியினால் அவள் ஐம்பது ஆண்டு காலம் துவண்டு போனதைப் பற்றியும் கூறுவீர்.
ஐம்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் 1857ம்
ஆண்டு நீங்கள் துவங்கிய அந்த சுதந்திர வேட்கை இன்னும் தீரவில்லை. அதன் வைர விழா
கொண்டாட்டங்களின்போது உங்களுடைய கனவுகள் நிறைவேறும் என்று நாங்கள்
உறுதியளிக்கிறோம். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். அதன்மூலம் எங்களுக்கு
உத்வேகம் கிடைக்கின்றது. மிகக் குறைந்த உதவிகளைக்கொண்டு நீங்கள் போரை
நடத்தினீர்கள். அந்தப் போர் வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அது
துரோகத்திற்கும் எதிரான போர். துவாப்பும் அயோத்யாவும் இணைந்து நின்று போர்
புரிந்தது பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஏனைய இந்தியாவிற்கும்
எதிராகத்தான். கடினமான அந்தப் போரை நீங்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்தீர்கள்.
அந்நிய சக்திக்கு எதிரான அந்தப் போரில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றீர்கள். இது
எப்பேர்ப்பட்ட உற்சாகத்தைத் தரக்கூடியது. துவாப்பும் அயோத்யாவும் ஒரு மாதத்தில்
சாதித்ததை இந்துஸ்தானம் முழுவதும் உறுதிப்பாட்டோடு இணைந்தால் ஒரே நாளில் சாதித்து
விடலாம். இது எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால்
உங்களுடைய போராட்டத்தின் வைர விழ
1917ம் ஆண்டு நடக்கும்பொழுது
இந்திய ஒரு சுதந்திர நாடாக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை
எங்களுக்கு இருக்கிறது.
ராணி லக்ஷ்மி பாயின் ரத்தமும் பஹதூர்
ஷாவின் எலும்புகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்கவேண்டி
காத்திருகின்றன. புரட்சிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததனால் மரண
தண்டனை விதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த போராளி பீர் அலி பரங்கியரின் காதில்
படும்படி கூறிய வார்த்தைகள் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. ‘நீங்கள் என்னை இன்று
தூக்கில் இடலாம். என்னைப் போன்ற பலரையும் நீங்கள் தூக்கில் இடலாம். ஆனால் என்னுடைய
இடத்தில் பல ஆயிரம் பேர் வருவார்கள். உங்கள் எண்ணம் ஈடேறாது.’
இந்தியர்களே, இந்த வாக்கியம்
நிறைவேற்றப்பட வேண்டும். தியாகிகளே, நீங்கள் சிந்திய ரத்தத்திற்கு நாங்கள் பழி
வாங்குவோம்.
வந்தே
மாதரம்.

Leave a Reply