தமிழகத்தில் தாமரை மலருமா? | அரவிந்தன் நீலகண்டன்தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி ஏற்படுமா என்கிற ஒரு வாசகரின் கேள்விக்கு, பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு விஷயம் நடக்குமா நடக்காதா எனச் சொல்லத் தமக்கு முடியாது எனப் பதில் சொல்லியிருந்தார் ‘சோ ராமசாமி.
இந்தியா முழுக்க அலை அடித்துப் பெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஏன் தோல்வி அடைந்தது?
கேரளாவில் சபரிமலை விவகாரம் பெரும் புயலாக வீசியபோது ஒரு நுண்ணிய பிரசாரம் அவிழ்த்து விடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சபரிமலையில் பெண்கள் செல்வதை ஆதரிக்கிறது என்றும், அதற்குப் பின்னால் ஒரு வலதுசாரி சதி இருக்கிறது என்றும் அந்தப் பிரசாரம் கூறியது. சபரிமலை விவகாரத்தில் களத்தில் சங்க அமைப்புகளே இடதுசாரி அரசின் அடக்குமுறையை எதிர்த்து வேலை செய்தன. ஆனால் அதன் அரசியல் அறுவடை பாஜகவிற்குக் கிடைக்கவில்லை. என்றபோதிலும் இந்துக்கள் பல இடங்களில் சிறுபான்மையாகவே ஆகியிருக்கிற கேரளாவில் ஏற்கெனவே சட்டசபையில் தாமரை மலர்ந்திருக்கிறது. அடுத்த சட்டசபைத் தேர்தலில் பாஜக நிச்சயமாகக் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
இனி தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் என்று பாஜக 2014ல் மத்திய அரசை அமைத்ததோ அன்றே அதற்கு எதிரான பிரசாரம் பல தளங்களில் முடுக்கிவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவப் பிரசார அமைப்புகள் இதற்காக மிகக் கடுமையாகச் செயல்பட்டன. கிறிஸ்தவப் பிரசார அமைப்புகள் எனக் கூறியவுடன் தெருவில் நின்று பிரசுரம் விநியோகிக்கிற, அல்லது ‘நோயாளிகளை சொஸ்தப்படுத்துகிறோம் என்று கூவுகிற அல்லேலுயாக்கள் நமது நினைவுக்கு வரலாம். ஆனால் அமைதியாக வெளியே தெரியாமல் செயல்படும் கிறிஸ்தவ ஊடக மையங்கள் உள்ளன. அவை தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள் தொடங்கி நாடக-சினிமா கலைஞர்களை, வெளியே மதச்சார்பின்மை போலத் தெரியும் விஷயங்கள் மூலமாக உள்ளே இழுத்து, அவர்களைக் கடுமையான இந்து வெறுப்பு மனநிலைக்குக் கொண்டுசெல்கிறார்கள். இதில் இந்தப் பிரசாரத்தை உண்மை என நம்பிவிடுகிறவர்கள் உண்டு என்றால், இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பதால் அதனால் பல தளங்களில் லாபம் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுகிற இலக்கியவாதிகள், சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம்.
1998ல் கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்துல்நாசர் மதானியை விடுதலை செய்யவேண்டும் என்கிற விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகளின் பெயர் வரிசையைப் பாருங்கள். மேடையில் கம்ப ராமாயணத்தை மேலோட்டமாகப் பேசியே பெயர்பெற்ற இலக்கிய ஆசாமி, கோவை குண்டுவெடிப்புக்காகச் சிறையில் இருந்த மதானியை விடுதலை செய்ய கையெழுத்திட யோசிக்க மாட்டார். யோகானந்தரின் சுயசரிதையை உருவித் தன்னை சாயாத பாபாவாகக் காட்டுகிற நடிகர் கோவை குண்டுவெடிப்பில் இஸ்லாமியர்களுக்குத் தொடர்பிருக்க முடியாது என்று தமக்கு அமெரிக்காவிலேயே செய்தி வந்ததாகச் சொல்லுவார். இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் காரணம், ஹிந்து சமுதாயத்தின் மீது அக்கறை கொள்வதே ஒருவித எதிர்மறைச் செயல் என்பது போன்ற பிம்பத்தை தமிழ்நாட்டில் பரவவிட்டதே. அந்தக் காரியத்தைக் கமுக்கமாகச் செய்தவர்கள் கிறிஸ்தவ இறையியல் அமைப்புகள். மதுரை இறையியல் கல்லூரிக்கு அழைக்கப்படுவது என்பது நீங்கள் இலக்கியவாதியா இல்லையா என்பதைத் தீர்வு செய்யும் ஒரு முக்கிய மைல்கல். ‘என்னை ஹரிஜன் என அழைக்க நீ யாரடா நாயே எனக் காந்தியைக் கேட்கும் பாடலை இந்த இறையியல் கல்லூரியில் தங்கும் விடுதி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதை ஒரு மூத்த இலக்கியவாதி வெளிப்படுத்தினார். ஆனால் காந்தி என்பவர் இந்துத்துவர்களை அடிக்க மட்டுமே பயன்படுத்தப்படவேண்டிய ஒரு தடி என்பது அனைத்து முற்போக்குகளுக்கும் தெரிந்த பாலபாடம்.
இன்று இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் கிறிஸ்தவ அமைப்புகளின் இதே செயல்முறையைச் செய்ய ஆரம்பித்துள்ளன. உதாரணமாக ஜாமாயத் இ இஸ்லாமி எனும் அமைப்பை எடுத்துக் கொள்வோம். இந்த அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றில் பரவியுள்ள அமைப்பு. அந்தந்த நாட்டின் ஜமாயத் இ இஸ்லாமி அடுத்த நாட்டு அமைப்புடன் தொடர்பற்றது எனக் கூறினாலும்கூட, அது ஒரு சட்ட வசதி ஏற்பாடு என்பதை அந்த அமைப்பினர் அறிவர். அவர்களிடையே கருத்தியல் ஏற்பும் உண்டு. முடிந்தவரை ஒருவருக்கொருவர் ஆதரவும் உண்டு. 1971ல் அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில் வங்காளிகளுக்கு, குறிப்பாக இந்துக்களுக்கு, எதிரான இனப்படுகொலையைச் செய்ததில் அமைப்பு சார்ந்தே அங்குள்ள ஜமாயத் இ இஸ்லாமிக்குப் பங்கு இருந்திருக்கிறது. தென்னிந்தியாவில் ஜமாயத் இ இஸ்லாமியின் ‘மத்யமம் என்கிற ஊடக அமைப்பில் பங்கேற்காத முற்போக்கு இடதுசாரி, இந்து ஞானமரபு எழுத்தாளர்களே இல்லை. இவர்களில் எவருக்கும் இந்த அமைப்பின் தாய் அமைப்பான ‘ஜமாயத் இ இஸ்லாமி குறித்து எவ்வித மனசாட்சி குறுகுறுப்பும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த எழுத்தாள ஊடக மாஃபியா கும்பலும் திருமாவளவன் என்கிற சாதி வெறி பிடித்த ஒரு அரசியல்வாதியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. அதற்கு ஒரே காரணம்தான். திருமாவளவன் மிகக் கீழ்த்தரமாக இந்து மதத்தை வசைபாடி இந்து எதிர்ப்பு மனநிலையைத் தன் சாதியைச் சார்ந்த மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார். அவரைப் பாராட்டுவதன் மூலம் தாங்கள் சார்ந்திருக்கும் இலக்கிய-சினிமா துறையின் நிழல் அதிகாரிகளான கிறிஸ்தவ சர்வதேச அமைப்புகளிடம் குறிப்பிடத்தக்க அதிகார இதர பிற நன்மைகளை இவர்கள் பெற முடியும். தன்னை முற்போக்காக, சாதி மனநிலைகளைக் கடந்தவனாகக் காட்டிக் கொள்ள முடியும். உண்மையில் திருமாவளவனை ஆதரிக்கும் ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். அடிப்படையில் அவர்கள் உள்ளுக்குள் சாதி வெறியர்கள். இன்றைக்கு மேடைக்கு மேடை ஆபாசமாக இந்து மதத்தைப் பேசிவரும் பழ.கருப்பையா தன் சுயசாதிக்குள் சாதி மீறித் திருமணம் செய்தவர்களைத் தள்ளி வைக்கவேண்டும் என்று பேசிய ஒரு வெறியர். இதைப் போலவே சாதி மனப்பான்மை, சாதி குணங்கள் என்று தனிப்பட்ட உரையாடல்களில் பேசிய பலர் திருமாவளவனின் ஆதரவாளர்கள். திருமாவளவனின் சாதிவெறி சாதி அரசியலை, அது இந்து மதத்தை வசைபாடுகிறது என்கிற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கக் கூடிய இந்த அறிவுசீவி மாஃபியா கும்பல், கிறிஸ்தவம் தமிழ்நாட்டில் பரப்பியிருக்கக் கூடிய எயிட்ஸ் நோய்.
எயிட்ஸைப் பரப்பும் சில விசயங்கள் எளிதில் எங்கும் நிலை கொண்டிருப்பதைப் போல, தமிழ்நாட்டில் இந்தக் கருத்தியல் எயிட்ஸ் பரப்புவோர், ஊடகங்களின் அனைத்து இருண்ட மூலைகளிலும் நின்று தங்களைத் தாங்களே விற்க தாங்களே இடைத்தரகர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டின் நவீன பின்நவீன இலக்கியச் சிறப்பு. எனவே சொந்த வாழ்க்கையில் ராகவேந்திரரை வணங்குகிற நடிகருக்குத் திரையில் ராமரையும் ராம பக்தரையும் மோசமாகக் காட்ட எந்தத் தயக்கமும் இல்லை. அது அவர் உரிமை.
ஆனால்… அதே நடிகரை, தமிழ்நாட்டு பாஜக இன்றைக்கும் தன் மீட்பராக நினைப்பதுதான் வேதனை.
ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ளுவோம். இன்றைக்குப் பிரபலமாக இருப்போரில் நூற்றுக்கு 98 சதவிகிதத்தினர் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரசாரத்தையே (நேரடி கிறிஸ்தவப் பிரசாரத்தை அல்ல) தெரிந்தோ தெரியாமலோ, ஆனால் நிச்சயமான சொந்த லாபங்களுக்காக, மேற்கொள்ளக் கூடியவர்கள்தான். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே மேலே வர முடியும். அப்படிப்பட்டவர்களின் பார்வையும் மதிப்பீடுகளும் மட்டுமே பரிசளிக்கப்படும்.
எனவே இங்கிருந்து மக்களுக்குப் பிரசாரம் செல்கிறது. இந்தச் செயல்பாடு எப்போதுமே மேலிருந்து கீழாகச் செல்லும் செயல்பாடு. ஆனால் விளிம்புநிலை மக்கள் அரசியல் என்றே வெளியே சொல்லப்படும். அதை நீங்கள் கேள்வி கேட்டால் நீங்கள் விளிம்புநிலை மக்களின் விரோதிகள் ஆகிவிடுவீர்கள். ஆனால் இந்த விளிம்புநிலை மக்கள் அரசியலின் ஆபாசம், கட்டைப்பஞ்சாயத்து முதல் பெண்களை ஆபாசமாகக் கேலி செய்வது என இருக்கும். இதையெல்லாம் தட்டிக் கேட்டால் நீங்கள் சாதியவாதிகள் ஆகிவிடுவீர்கள். கட்டைப்பஞ்சாயத்துக்கே காந்திய முலாம் பூசும் வாக்கு சாமர்த்தியம் கொண்டவர்கள் கிறிஸ்தவ இறையியல் மையங்களால் வாடகைக்கு எடுக்கப்பட்ட எழுத்துக்கூலிகள். ‘இன்றைக்கு காந்தி இருந்திருந்தால் அந்த பொக்கை வாய் பாரிஸ்டர் மாட்டிறைச்சி சாப்பிட்டு சாராயத்தில் வாய் கொப்பளித்திருப்பார் தெரியுமா எனப் பேசக் கூடிய வித்தார எத்தர்கள்.
ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து இன்றைக்கு வரை எந்த விஷயத்தையும் அதி-உணர்ச்சிபூர்வமாக ஆக்கி, அதை நரேந்திரரின் அரசுக்கு எதிராகத் திருப்பிவிடும் வெகுஜன விளையாட்டு தமிழ்நாட்டில் இந்த மூளைகளிலிருந்து அடுத்த கட்டமாக நடக்கிறது.
இந்தச் சூழலில்தான் தமிழ்நாட்டை வென்றெடுக்க வேண்டியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை மலர்வது உண்மையில் மிக எளிது. கரும்பாறை என்பதாகக் காட்சியளிக்கும் ஒரு மண்ணுருண்டையை உடைக்க வேண்டியது மட்டுமே அதற்கான வேலை. அதைச் செய்ய இங்கே ஒரு செயலின்மை உள்ளது. இந்தச் செயலின்மைக்காக தமிழ்நாட்டின் எதிர்காலம் பாழாகப் போகிறது.
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆதரவுடனும் கிறிஸ்தவ சபை ஆதரவுடனும் திராவிடப் பிரசாரமும் அரசியலும் இங்கு பேயாக வீசியபோது, எவ்வித அமைப்பு ரீதியான பக்கபலமும் இல்லாமல் இந்துத்துவம் பதிலடி கொடுத்தது. திருமுருக கிருபானந்த வாரியார் தம் உரைகளுக்கு நடுவே அவர்களை விமர்சித்தார். அதற்காக அவர் தாக்கப்பட்டார். தேவர் முதல் கோபாலகிருஷ்ணன் வரை தம் திரைப்படங்கள் மூலம் திராவிட இயக்கத்தை எதிர்கொண்டார்கள். இதில் இயக்குநர் சிகரம் என அறியப்பட்ட கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் திரைப்படங்கள் சமுதாய ஒற்றுமை, சாதி வேறுபாடு களைதல் ஆகியவற்றைப் புராண கதையாடல்களுடன் இணைத்தன. இன்றைக்கு அவை அதீத நாடக பாணியாகப் படலாம். ஆனால் அவரது சில உத்திகள் சிறப்பானவை.
உதாரணமாக அவரது வெற்றிப்படமான தசாவதாரம் (1976) திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அத்திரைப்படம் காமராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எமர்ஜென்ஸி அமலில் இருந்தபோது அதுவே ஒரு துணிகர செயல். ஆமை அவதாரத்துக்கு எடுத்துக்கொண்ட கதையில் ‘அதிகார போதையால் இந்திரன் அறிவிழந்ததாகச் சொல்லப்படும் வரிகள் எமர்ஜென்ஸிக்கு எதிராகச் சொல்லப்பட்டு சென்சாருக்குத் தப்பியவை. இங்கு இவை கூட முக்கியமல்ல. உண்மை வாழ்க்கையில் திராவிட இயக்கப் பிரசார நடிகரான எம்.ஆர்.ராதா என்பவரை இரணியகசிபுவாக்கி, இரணியனின் வாதங்களுக்கெல்லாம் பிரகலாதனை பதில் சொல்ல வைத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். அன்றைக்கு இது திரை பிம்பத்தையும் உண்மை அரசியல் நிலைப்பாட்டையும் நுண்ணிய விதமாக இணைத்துச் செய்யப்பட்ட இந்து தர்ம பிரசாரமே. மக்களின் ஆழ்மனதில் ஒரு குழந்தையாலேயே திராவிட இயக்கத்தின் ‘பகுத்தறிவு கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியும் என்பதைப் பதிய வைத்தார் கோபாலகிருஷ்ணன். இன்றைய பார்வையில் அவரது திரைப்படங்கள் பல குறைகள் கொண்டதாக இருக்கலாம். ஆனால் தசாவதாரம் வெற்றிப்படம்.
இத்தகைய ஊடக உக்திகளை, அமைப்பாக இன்று வளரும் இந்துத்துவ சக்திகள் கைக் கொள்ளவேண்டும். அப்படியே அல்ல. அவற்றின் அடிப்படைகளிலிருந்து பரிணமித்து முன்னகர வேண்டும். தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் இருள் நோயின் வெளிப்பாடுகள் இரண்டு: திராவிட நாசியிசமும், தலித் அரசியல் என்கிற பெயரில் நடக்கும் பாசிச அரசியலும். இவை இரண்டையும் அனைத்துத் தளங்களிலும் நாம் எதிர்க்கவேண்டும்.
மிகக் குறைந்தபட்சமாக தமிழ்நாட்டின் இந்துத்துவப் பாரம்பரியத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். சுவாமி சகஜானந்தர், அவரது குருவான கரப்பாத்திரி சுவாமிகள், ஐயா வைகுண்டர், ராமலிங்க வள்ளலார், சுவாமி சித்பவானந்தர் ஆகியோரை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நமக்கென ஒரு ஊடக மையம் தேவை. ம.வெங்கடேசன், டாக்டர்.கிருஷ்ணசாமி, தடா பெரியசாமி, அர்ஜூன் சம்பத் ஆகியோரைக் கொண்ட ஒரு மையக் குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் மக்களைப் பெரிய அளவில் சென்றடைய வேண்டும். இப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டு அது அமைதியாகக் களத்தில் செயல்பட்டாலே போதுமானது.
அதன் தாக்கம் தமிழ்நாட்டில் சதா சர்வகாலமும் ஊற்றெடுக்கும் இந்துத்துவப் பிரவாகத்தை உருவாக்கி, அடைத்து வைத்திருக்கும் மண்ணுருண்டையை உடைத்துவிடும்.

Leave a Reply