ஆயிரம் பள்ளிகள் மூடல் – ஒரு யோசனை | ராமசந்திரன் கிருஷ்ணமூர்த்திநல்லெண்ணம் என்ற படிக்கட்டின் மீதேறி நரகத்திற்குப் போகலாம் என்று சொல்வார்கள். அநேகமாக நம் நாட்டில் உள்ள பல திட்டங்களும் சட்டங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

கல்வி என்பது வியாபாரம் அல்ல, அது சேவை என்று வரையறை செய்து அரசும் லாபநோக்கிலாத டிரஸ்ட்களும்தான் கல்விக்கூடங்களை நடத்தலாம் என்பது விதி. கல்வி நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது சட்டம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்று தனியார்ப் பள்ளிகள் 25% இடங்களைப் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கவேண்டும், அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்ற திட்டத்தில், ‘எல்லா மிருகங்களும் சமம், ஆனால் பன்றிகள் மட்டும் கொஞ்சம் கூட’ என்றும் ‘விலங்குப் பண்ணை’யில் கூறுவதுபோல. மொழிவழி/ மதவழிச் சிறும்பான்மைக் கல்வி நிலையங்களுக்கு விலக்கு.

அரசு கல்வி நிலையங்களை நடத்துகிறது, தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் நடுத்தரவர்க்கம் அரசுப் பள்ளிகளைக் கைவிட்டுத் தனியார்ப் பள்ளிகளுக்குப் போய் குறைந்தபட்சம் முப்பது வருடங்களாவது இருக்கும். தரமான கல்வியை அரசு பள்ளிகள் அளிக்கவில்லை என்ற கருத்தை இன்றுவரை மாற்றிக்கொள்ள காரணங்கள் இல்லை.

இதற்கு நடுவில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கை இல்லை என்று மூடப்போவதாகத் தகவல். ‘இல்லை, அதனை நூலகமாக மாற்றப் போகிறோம்’ என்று அரசு கூறுகிறது.

இன்று கல்வி என்பது அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார் என்று மூன்று வகையில் இயங்குகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் மட்டும் ஒரு சிறிய மாறுதலை ஏற்படுத்தலாம்.

கல்வி என்பதை சேவை என்றல்லாது, வியாபாரம் என்று வகைப்படுத்திவிடலாம். லாப நோக்கோடு கல்வி நிலையங்களை நடத்தலாம் என்று மாற்றி விட வேண்டும். குறைந்தபட்சம் தனியார்ப் பள்ளிகள் வாங்கும் பணத்திற்குச் சரியான கணக்கும் அதற்கான வரியும் வெளிப்படையாக இருந்தால் போதும்.

கட்டாயக் கல்வி உரிமைத் திட்டம் என்பது ஒரு வடிகட்டிய மோசடி. 25% இடங்களை ஹிந்துப் பள்ளிகள் மட்டும் அளிக்க வேண்டும் என்ற கருத்தே தவறு. அது போக, அந்த மாணவர்களுக்கான பணத்தை இப்படி இடம் அளித்த பள்ளிகளுக்குத் தருவதிலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. எனவே பள்ளிகள் இந்த மாணவர்களுக்கான செலவை மற்ற மாணவர்களுக்குமேல் ஏற்றி வசூலிக்கிறது.

அரசுப் பள்ளிகளை கைவிட்டுத் தனியார்ப் பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி போகிறார்கள் என்றால் அரசுப் பள்ளிகள் செயல் இழந்துவிட்டன என்று அரசே ஒப்புக்கொள்கிறது என்பதுதான் பொருள். யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும் சட்டத்தை இன்னும் வைத்துக்கொண்டிருப்பது அறிவுடைய செயலா?

தற்போது ஒரு மாணவனுக்கு தமிழக அரசு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ இருபதாயிரம் ரூபாய் செலவு செய்கிறது. ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து லட்ச மாணவர்கள் முப்பத்தி ஏழாயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். நேர் சராசரியாக எடுத்தால் பள்ளிக்கு நூற்று ஐம்பது மாணவர்கள்.

மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் மூடும் நிலையில் உள்ள பள்ளிகளைத் தனியார் வசம் ஒப்படைத்து விடலாம். நிலமும் கட்டடங்களும் உள்கட்டமைப்பு வசதியும் அரசின் பங்கு. நிர்வாகம் செய்வது தனியார். பள்ளியை நடத்தப் பொறுப்பேற்கும் தனியார், அரசு நிர்ணயித்த தகுதி உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பணி வழங்கவேண்டும். அவர்கள் அரசுப் பணியாளர்களாக இருக்க மாட்டார்கள்.

பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு ஒதுக்கி விடும். அந்தத் தொகையை நேரடியாகத் தனியார் வசம் ஒப்படைக்காமல், அதிலிருந்து ஆசிரியர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் சம்பளமாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு மாதா மாதம் அனுப்ப வேண்டும். பள்ளியை நிர்வாகம் செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை பள்ளி நிர்வாகத்தை ஏற்றிருக்கும் தனியாருக்கு அரசு வழங்கவேண்டும். தரமாகப் பள்ளியை நிர்வகித்தால் தனியார் நிறுவனம் போல அந்த ஆண்டு முடிந்ததும் நிர்வாகம் செய்பவருக்கு ஒரு ஊக்கத் தொகை வழங்கப்படவேண்டும்.

பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, தூய்மை, சுகாதாரம், மாணவர்களின் கல்வித் தகுதி, ஆசிரியர்களின் தரம் ஆகியவற்றைத் தகுதியான நிறுவனங்கள் மூலம் தர ஆய்வு செய்து, அவர்களின் ஆலோசனைகள் பள்ளியை நிர்வகிக்கும் தனியாரிடம் வழங்கப்பட வேண்டும். ஒரு வேளை அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அரசு அந்தத் தனியாரோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம். அது போல ஆசிரியர் தகுதியில் குறைபாடு இருந்தால் போதிய அவகாசம் அளித்து அவர்கள் தங்களைத் தரமுயர்த்தத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும். அதன் பிறகும் தேவையான தகுதியைப் பெறாத ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்து விடலாம். ஆனால் இந்தச் செயல் பள்ளியை நிர்வகிக்கும் தனியாரின் கட்டுப்பாடற்ற உரிமையாக இருக்கக் கூடாது.

ஒரு உத்தேச கணக்கு:

பாலர் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை – ஆறு வகுப்புகள்.

வகுப்புக்கு மூன்று பிரிவு, பிரிவுக்கு முப்பது மாணவர்கள் என்றால் மொத்தம் 6 X 3 X 30 = 540 மாணவர்கள்.

540 மாணவர்களுக்கு 20 ஆசிரியர்கள். ஆசிரியரின் மாத சம்பளம் ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம். மொத்த வருட சம்பளம் 20 X 12 X 25, 000 = ரூபாய் அறுபது லட்சம்.

உடற்பயிற்சி, ஓவியம், இசை ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்க நான்கு ஆசிரியர்கள். அவர்களின் வருட சம்பளம் 4 X 12 X 25, 000 = ரூபாய் பனிரெண்டு லட்சம்.

துப்புரவுத் தொழிலாளி, காவலர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று மொத்தம் ஆறு பேர். அவர்களின் வருடச் சம்பளம் 6 X 12 X 15, 000 = ரூபாய் பதினோரு லட்சம்.

பள்ளி நிர்வாகியின் சம்பளம் 12 X 50, 000 = ரூபாய் ஆறு லட்சம்.

மொத்தம் சம்பள வகையில் அரசின் பங்களிப்பு தொன்னூறு லட்சம். சராசரியாக ஒரு மாணவனுக்கு அரசின் பங்களிப்பு ரூபாய் பதினாறாயிரத்து எழுநூறு ரூபாய்.

மீதமுள்ள மூவாயிரத்து முன்னூறு ரூபாயில் மாணவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சத்துணவு என்று பயன்படுத்தப்படலாம்.

தற்போது மூடப்படுவதாகப் பேசப்படும் ஆயிரம் பள்ளிகளிலாவது இதனை முயன்று பார்க்கலாம். எவ்வித முயற்சியும் இல்லாமல், பள்ளிகளை மூடுவதும், 25% கட்டாயக் கல்வித் திட்டத்தில் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பதும் என அரசு எடுக்கும் முடிவுகள் பள்ளிகளையும் கல்வியையும் சீர் செய்ய உதவாது. மாறாக இன்னும் மோசமாக்கவே செய்யும்.
Leave a Reply