Posted on Leave a comment

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா



முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன்
ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல்
20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத்
துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை
இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே.
காஷ்மீரில்
பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்!
அன்புள்ள ஸ்ரீ ராஜீவ் காந்தி,
April 21, 1990
இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுத வைத்துவிட்டீர்கள். கட்சி
அரசியலில் இருந்து தொடர்ந்து நான் விலகியே இருந்து வந்திருக்கிறேன். இருக்கும் கொஞ்சம்
திறமையையும் ஆற்றலையும், சில ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய பயன்படுத்தவே விரும்புகிறேன்.
சமீபத்தில் மாதா வைஷ்ணவோ தேவி கோவில் வளாகத்தை மேம்படுத்த உதவியது போல. இப்படிச் செய்து
நம் கலாசார மறுமலர்ச்சிக்கு உதவவில்லை என்றால், விரைவாக அழிந்துவரும் இதுபோன்ற அமைப்புகளைக்
காப்பாற்ற முடியாமலேயே போய்விடும். இந்த அமைப்புகளின் உன்னதமான நோக்கங்கள் (அவை சட்ட
அல்லது நீதி அமைப்புகளாக இருந்தாலும்) அதன் சாரத்தை இழந்துவிடும். நீதியின் ஆன்மாவும்
உண்மையும் இன்றைய அரசியல் சூழலால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.
நீங்களும் உங்கள் நண்பர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர்
தொடர்பாகப் பொய்யான ஒரு சித்திரத்தை வரையப் பார்க்கிறீர்கள். உங்கள் கட்சியின் மூத்த
உறுப்பினர்கள் ஷிவ் ஷங்கர் மற்றும் என்.கே.பி.சால்வே போன்றவர்கள், வெளிப்படையாக உங்கள்
அறிவுறுத்தலின் பேரில், எனக்கெதிரான மனநிலையை உருவாக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
துர்க்மன் கேட்டில் 14 வருடங்களுக்கு முன்பு நடந்த பழைய நிகழ்ச்சியைக் கையில் எடுக்கிறார்
ஷிவ் ஷங்கர். என்.கே.பி.சால்வே எனது பேட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிராக மதவாதக்
குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை!
மணி சங்கர் ஐயரும் சில பத்திரிகைகளில் தன் விஷக் கருத்துகளைப்
பதிவு செய்கிறார். ஆனாலும், இந்தத் தொடர்ச்சியான மூர்க்கமான தவறான தகவல் அம்புகளுக்கு
பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஒட்டுமொத்தமாகப் பொய்களைச் சொன்ன சில பத்திரிகைகளுக்கு
மட்டும் சரியான தகவல்களை எப்போதாவது எழுதினேன். எனது நோக்கம், இந்த நாட்டுக்கும் வரலாற்றுக்கும்
நான் செய்யவேண்டியதாக நம்பும் கல்வி மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகத்தில் மட்டும்
இவற்றை எழுதினால் போதும் என்பதுதான்.
ஆனால், ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்களில் நீங்கள் பேசியவற்றின்
சில பகுதிகளை என் நண்பர்கள் காட்டினார்கள். இதுதான் எல்லை என்று அப்போதுதான் நினைத்தேன்.
உங்கள் திரிபுகளுக்கான நோக்கங்களைச் சொல்லாவிட்டால், நீங்கள் என்னைப் பற்றிய தவறான
எண்ணத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுக்கப் பரப்புவீர்கள் என்பதை உணர்ந்தேன்.
எச்சரிக்கை மணி
1988 தொடக்கம் முதலே, காஷ்மீரில் சூழத் துவங்கி இருக்கும் புயல்
பற்றிய ‘எச்சரிக்கை மணி’களை உங்களுக்கு அனுப்பத் துவங்கி விட்டேன் என்பதை நினைவுறுத்த
வேண்டுமா என்ன? ஆனால் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கத்தினருக்கும்,
இந்த எச்சரிக்கையைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இதுகுறித்த தரிசனமோ இல்லை. இவற்றைப் பொருட்படுத்தாமல்
இருப்பது, உண்மையான வரலாற்றுப் பரிமாணத்துக்குத் தீங்கிழைப்பது என்று அவர்களுக்குத்
தெளிவாகத் தெரியும்.
உதாரணமாக சில எச்சரிக்கை மணிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஆகஸ்ட் 1988ல், வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழலை ஆய்வு செய்த பின்னர், இப்படித்
தொகுத்துச் சொல்லி இருந்தேன்: “குறுங்குழு மதவாக்காரர்களும், அடிப்படைவாதிகளும் அதிகம்
வேலை செய்கிறார்கள். நாசவேலைகள் அதிகரிக்கின்றன. எல்லை தாண்டி நடக்கும் விஷயங்களின்
நிழல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இன்னும் நிறைய நடக்கலாம்.”
ஏப்ரல் 1989ல் உடனடி நடவடிக்கை வேண்டி தீவிரமாகக் கெஞ்சினேன்.
நான் சொன்னேன்: “சூழல் மிக வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது. இனி மீட்கவே முடியாது
என்னும் ஒரு புள்ளியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களாக, பெரிய அளவில்
தீவைத்தல், துப்பாக்கிச் சூடு, வேலை நிறுத்தம், உயிரிழப்பு என வன்முறை தலைவிரித்தாடுகிறது.
நிலைமை கை மீறிப் போய்விட்டது. ஐரிஷ் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது பிரிட்டிஷ்
பிரதமர் டிஸ்ரேலி சொன்னார், ‘முதல்நாள் உருளைக் கிழங்கு, மறுநாள் போப்’ என்று. காஷ்மீரில்
இன்று இதே நிலைதான். நேற்று மக்பூல் பட், இன்று சத்தானின் வேதங்கள் (சாத்தானிக் வெர்சஸ்).
நாளை அடக்குமுறை நாளாக இருக்கும். பிறகு வேறொன்றாக இருக்கும். முதலமைச்சர் தனித்து
விடப்பட்ட தீவு போல் இருக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும்
செயலிழந்துவிட்டார். ஒருவேளை அரசியலமைப்பு ரீதியிலான சடங்குகள் செய்யவேண்டியது மட்டுமே
பாக்கியாக இருக்கலாம். அவர் மீது சேறு நிறைந்திருக்கிறது. அவரை ஆதரிப்பது ஆபத்தானது.
இவரது தனிப்பட்ட பிறழ்ச்சிகள்கூட இவரது பொது வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறது. இந்தச்
சூழல், செயல்திறன் மிகுந்த தலையீட்டை எதிர்நோக்கி நிற்கிறது. இன்றே செயல்படுவது சரியானது.
நாளை என்பது தாமதம் என்றாகிவிடக்கூடும்.”
துணைவேந்தர்களின் பெருக்கம்
மே மாதத்தில் மீண்டும், வளர்ந்துகொண்டே போகும் என் தவிப்பை வெளிப்படுத்தி
இருந்தேன். “இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு துணைவேந்தரின் வெற்றியிலும்
அவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களது பகைமை மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத்
திருப்பிவிடப்படுகிறது.” ஆனால் நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. உங்களது செயலின்மை மர்மமாக
இருந்தது. இதற்கு இணையான இன்னொரு மர்மம், இரண்டாம் முறையாக நான் நியமிக்கப்பட்டபோதும்
இருந்தது. எப்படி நான் சட்டென மதவாதி ஆனேன்? முஸ்லிம் எதிரியானேன்? இன்னும் என்னதான்
இல்லை?
ஜூலை 1989ல் நான் ராஜினாமா செய்தபோது, ஒரு வெறுப்பும் இல்லை.
தென் டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்.
பெரும்பாலும் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்த பொதுவான வெறுப்பு எனக்கு இருந்ததால்,
அந்த வாய்ப்பை நான் மறுத்தேன். ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் இரண்டாவது முறையாகப் பதவி
ஏற்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்குமானால் நீங்கள் நேரடியான அணுகுமுறையின்
மூலம் என்னைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட இனி திரும்பவே
முடியாது என்னும் புள்ளியை அடையும் முன்பாக நான் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசித்திருப்பேன்.
பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது.
(நன்றி:
Indian Express)
ஒருவேளை நீங்கள் உண்மையையும் எப்போதும் ஒரேபோல் இருப்பதையும்
நல்ல குணங்களாகக் கருதாமல் இருந்திருக்கலாம். நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்
சத்யமேவ ஜயதே என்னும் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் என்று நினைத்திருக்கலாம். அந்த
வார்த்தைகள், நம் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி நியாயமான வழிகளில் உண்மையான இந்தியாவை
உருவாக்க உதவும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அதிகாரம்
மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அதிகாரம், எந்த வழியிலும் சரி, என்ன
விலை கொடுத்தாலும் சரி!
நான் இங்கே வருவதற்கு முன்பும் பின்பும் நிலவும்
சூழ்நிலைகளின் நிதர்சனத்தை, நீங்களும் உங்கள் நண்பர்களும் தவறான வழியில்
திரிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், ஜனவரி 19, 1990ல் கவர்னர் ஆட்சி
அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இங்கே ஒட்டுமொத்தமாக மனரீதியிலான ஒப்புதல்
இருந்தது. டிசம்பர் 8, 1989ல் டாக்டர் ருபையா சயீத்தின் கடத்தலுக்கு ஒரு நாள்
முன்பு கூட, இந்த மாநிலத்தை பயங்கரவாதக் கழுகு முழு மூர்க்கத்துடன் சுழன்றடித்தது.
11 மாதத்தில் 351 வெடிகுண்டு வெடிப்புகள் உட்பட 1600 வன்முறைச் செயல்கள் அரங்கேறின.
1990 ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை, இங்கே 319 வன்முறைச் செயல்கள், 21 தாக்குதல்கள்,
114 வெடிகுண்டு வெடிப்புகள், 112 தீ வைப்புகள், 72 கும்பல் வன்முறைகள் நிகழ்ந்தன.
நாசவேலைக்காரர்கள் இங்கே அதிகார அமைப்பை முற்றிலும்
கைப்பற்றியதைக் கவனிக்க ஒருவேளை நீங்கள் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.
உதாரணமாக, உளவுத்துறை தந்த துப்பை அடிப்படையாகக் கொண்டு ஷாபிர் அஹ்மது ஷா
செப்டம்பர் 1989ல் கைது செய்யப்பட்டபோது, ஸ்ரீநகர் உதவி கமிஷ்னர் அவரைக் காவலில்
வைக்கத் தேவையான வாரண்ட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனந்த்நாக் என்னும்
உதவி கமிஷ்னரும் இதே போன்றே நடந்துகொண்டார். அதோடு, மாநிலத்தின் வழக்கை நடத்த
அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது பொறுப்பை அரசாங்கத்திடமும்
கூடுதல் அட்வகேட் ஜெனரலிடமும் தள்ளிவிட அவர் முயன்றார். அவர்களும் ஆஜராகவில்லை!
 
நவம்பர் 22 1989ல் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டெடுப்பின்போது
என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ‘வாக்களிப்பவருக்கு
இது தரப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அதனருகில் தொலைக்காட்சிப் பெட்டிகள்
வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த எவரும்,
அதிகாரத்தை மீறிச் செயல்படும் இந்த அறிவிப்பை நீக்க எந்த ஒரு நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
இணை அமைச்சராக இருந்த சேர்ந்த குலாம் ரசூல் கர்-ரின் சொந்த
ஊர் சோபோர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோல், லெஜிஸ்லேடிவ்
கவுன்சிலின் சேர்மனான ஹபிபுல்லாவுக்கும், முன்னாள் நேஷனல் கான்ஃபரன்ஸ் எம்.பியும்
இணை அமைச்சருமான அப்துல் ஷா வகிலுக்கும் இதுதான் சொந்த ஊர். இருந்தாலும் சோபோர்
நகரத்தில் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகின. அன்றைய காங்கிரஸ் (ஐ) அமைச்சர்
இஃப்திகார் ஹுசைன் அன்சாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும்
பட்டாணில் ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. இதுதான் இந்த மாநிலத்தைச் சேர்ந்த
உங்கள் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடும். இருந்தும் நீங்கள் நினைக்கிறீர்கள்,
நாச வேலையையும் தீவிரவாதத்தையும் இத்தகைய அரசியலாலும் நிர்வாகத்தாலும் எதிர்கொள்ள
முடியும் என்று.
 
நம்பிக்கை இழந்த காவல்துறை 
அந்த சமயத்தில் காவல்துறை நம்பிக்கை இழந்தது. உளவுத்துறை
விரைவாக செயலற்றுப் போனது. டோபாக் (TOPAC) போன்ற நாசவேலைகள் குறித்த செய்திகளை
சேவை அமைப்புகளில் ஊடுருவி இருந்தவர்கள் கொண்டு வந்தபோது, டாக்டர் அப்துல்லா
வெளிநாடு போய்க்கொண்டிருந்தார். பயங்கரமான தீவிரவாதிகள் 70 பேரை விடுதலை
செய்துகொண்டிருந்தார். இவர்கள் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி
பெற்றவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளோடு தொடர்பில்
இருந்தவர்கள். பாகிஸ்தானுக்குச் செல்லவும் வரவும் உதவும் குறுக்கு வழிகளை
அறிந்தவர்கள். தலைமை நீதிபதியால் கண்காணிக்கப்படும் மூன்று நபர்கள் அடங்கிய
அறிவுறுத்தல் மன்றம் இவர்களைக் காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
 
அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ததால்,
நாசவேலை மற்றும் தீவிரவாத வலைப்பின்னலில் அவர்களால் முக்கியமான பதவிகளைப் பிடிக்க
முடிந்தது. இதனால் தீவிரவாதத்தின் சங்கிலித் தொடர் ஒன்று முழுமையானது. இவர்கள்
மீண்டும் பாகிஸ்தான் போய் அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொலைகளிலும்
ஆள்கடத்தல்களிலும் மற்ற தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவனான, கேண்டர்பாலைச் சேர்ந்த மொஹமத் தௌத் கான், அல்
பகர் என்னும் ஒரு தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான். 2500 காஷ்மீர் இளைஞர்களை
அந்த அமைப்பில் பங்கெடுக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினான். 70 தீவிரவாதிகளை விடுவித்து
அதனால் ஏற்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு யாரைக் குற்றம் சொல்லவேண்டும்? ‘ஜக்மோகன்
காரணி (Factor) என்று நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களே இக்கேள்விக்கு
பதிலளிக்கட்டும்.
 
கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், ஜனவரி 19,
1990க்கு முன்பு அந்தத் தீவிரவாதி தலைவனாகிவிட்டான். பொதுமக்களின் மனதை
ஆக்கிரமிக்கும் அளவுக்கு, அவனுக்குத் தேவையான களம் அமைத்துக்
கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு கடலில் மீன் போல அவனால் நீந்தமுடியும். அதற்குப் பின்
கடல் அவனைச் சூழ்ந்துகொள்வதால் என்ன ஆகிவிடும்?
 
காஷ்மீர் தொடர்பான உங்களது எல்லாக் கவனக்குறைவுப்
பாவங்களையும் நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்களது சின்னத்தனமான
அரசியலுக்காக இதைச் செய்கிறீர்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் ஒரு வாக்கு
வங்கி உருவாக்குவதைத் தாண்டி இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. காஷ்மீர் முஸ்லிம்
இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த காஷ்மீர் மக்களும் நான் முதன்முறை ஏப்ரல் 26 1984 முதல்
ஜூலை 12 1989 வரை கவர்னாக இருந்தபோது என் மீது கொண்டிருந்த மரியாதையைக் குலைக்க
நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள். எல்லா உண்மைகளையும் தாண்டி,
தாக்குப் பிடிக்க முடியாத ஆதாரங்களைக்கொண்ட உங்கள் தனிப்பட்ட பிரகடனங்கள் மூலம்
என்னை முஸ்லிம்களின் எதிரி என்று முத்திரை குத்தத் தொடங்கினீர்கள்.
 
இந்த நேரத்தில், ‘டெல்லி என்னும் சுவர்களுக்குட்பட்ட நகரம்:
ஷாஜஹானாபாத்தை உயிர்ப்பித்தல்’ (Rebuilding Shahjahanabad) என்ற என் புத்தகத்தில்
முன்வைத்த மூன்று முக்கியமான யோசனைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர
விரும்புகிறேன்: ஒன்று, ஜாமா மசூதி மற்றும் ரெட் ஃபோர்ட்டுக்கு இடையே பசுமைப்
பகுதியை உருவாக்குவது தொடர்பானது. இரண்டாவது, நாடாளுமன்ற வளாகத்தையும் ஜாமா மசூதி
வளாகத்தையும் இணைக்கும் சாலையை உருவாக்குவது. மூன்றாவது, நகரின் கலாசாரத்தைப்
பறைசாற்றும் வகையில், பழம்பெரும் பண்பாட்டை புதுமையான வடிவத்தில் வெளிப்படுத்தும்
வகையில், மாதா சுந்தரி சாலை – மிண்ட்டோ சாலைக்கும் இடையே இரண்டாவது ஷாஜஹானாபாத்தை
உருவாக்குவது. இந்த யோசனைகளெல்லாம் முஸ்லிம் எதிரியான ஒருவனின் சிந்தனையில் வருமா
என்ன என்று உங்களைக் கேட்கிறேன்.
 
நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்தல் 
காஷ்மீர முஸ்லிம்களிடையே எனக்கிருக்கும் பிம்பத்தைக்
குறைக்கும் வகையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம்
செய்கிறீர்கள். எம்.பியான என்.கே.பி. சால்வே மே 25 1990ல் ராஜ்ய சபாவில் செய்தவையே
இதற்கான ஆதாரம். பாம்பேவின் வாரப் பத்திரிகையான தி கரண்ட்டில் நான் கொடுத்ததாகச்
சொல்லப்படும் பேட்டியை (அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை) முன்வைத்து, சால்வே
கொஞ்சம்கூட நியாயமற்ற கருத்துகளைக் கூறினார்: “மதச்சார்புக்கு ஒரு வகையான மாதிரி
உண்டு. அதை உணரமுடியும். எனவே அவர் (கவர்னர்) தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும்
நீக்கும் போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீக்குவதான மகிழ்ச்சியில்
இருக்கிறார். தற்போது கவர்னர் தனது தகாத கொடிய வெறுப்புச் செயலுக்கு அதிகப்படியான
வெட்கமற்ற செயல் ஒன்றையும் செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள
ஒவ்வொருவரையும் போராளி என்று சொல்லி இருக்கிறார்.”
 
எனக்கு சால்வேவைத் தெரியும். அவர் செய்தது அவராகவே செய்தது
என்று நான் நினைக்கவில்லை. அவரது பின்னணிக்கும் பயிற்சிக்கும் தொடர்பற்ற ஒன்றை
அவர் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எந்த
ஒருவரும், அதுவும் சால்வேவைப் போன்ற முக்கியமான ஜூரி, இப்படி ஒரு பேட்டி என்னால்
தரப்பட்டதா என்ற சிறிய விஷயத்தை முதலில் பார்த்திருக்கவேண்டும். ஒருவேளை பேட்டி
தரப்பட்டிருந்தால், என்னைக் குறிப்பவை உண்மையிலேயே என்னால் சொல்லப்பட்டதா என்றும்
பார்க்கவேண்டும். வெளிப்படையான அவசரம் இதிலேயே தெரிகிறது. இந்தப் பிரச்சினை மே 25
அன்று எழுப்பப்பட்டது. இந்த வாரப் பத்திரிகையின் தேதி மே 26-ஜூன் 2 1990 என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் நான் கொடுக்காத இந்தப் பேட்டியை அடிப்படையாக
வைத்து நீங்கள் மே 25 அன்றே ஒரு கடிதத்தை அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி
இருக்கிறீர்கள். மதவெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை கவர்னராக
வி.பி.சிங் நியமித்ததாக நீங்கள் விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்தக் கடிதம் மே 25
அன்று பரவலாக வெளிவரும்படியும் பார்த்துக்கொண்டீர்கள்.
 
மார்ச் 7 1990ல் நடைபெற்ற ஸ்ரீநகருக்கான அனைத்துக் கட்சிக்
கூட்டத்தின்போது, நான் 370வது பிரிவை 1986லேயே ரத்து செய்ய விரும்புவதாக நீங்கள்
சொன்னீர்கள். இந்த காலகட்டம் முக்கியமான காலகட்டம். தீவிரவாதத்துக்கு எதிராக நான்
போராடிய கடுமையான காலகட்டம். நாசவேலைகளின் தீய வெளிப்பாடுகளுக்குப் பின் ஜனவரி 26
1990ல் நிலைமை கொஞ்சம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம். நீங்கள் நினைத்தீர்கள்,
உண்மையை எனக்கெதிராகத் திரிக்க இதுதான் சரியான சமயம் என்று. உங்களது இந்தச் செயல்
பொறுப்பானதா பொறுப்பற்றதா என்பதை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
1986 ஆகஸ்ட் – செப்டெம்பரில் நான் உண்மையிலேயே சொன்னது: ‘370வது
பிரிவு என்பது, சொர்க்கத்தின் இதயத்தில் ஒட்டுண்ணிகள் பெருக இடமளிக்கும் களம்
அன்றி வேறில்லை. இது ஏழைகளை ஒட்டிக்கொள்கிறது. அவர்களைக் கானல் நீர் போல
ஏமாற்றுகிறது. அதிகார வர்க்கத்தினருக்கு நியாயமற்ற முறையில் பணத்தைக் கொண்டு
வருகிறது. புதிய சுல்தான்களின் ஈகோவை விசிறிவிடுகிறது. சுருக்கத்தில், இது
நீதியற்ற ஒரு நிலத்தை உருவாக்குகிறது, ரத்தமும் முரண்பாடுகளும் நிறைந்த ஒரு
நிலத்தை உருவாக்குகிறது. வஞ்சகமும் போலித்தனமும் வாய்ப்பேச்சும் கொண்ட ஒரு அரசியலை
உருவாக்குகிறது.
 
நாசவேலைகளை இது பெருகச் செய்கிறது. இரண்டு நாடுகள் என்ற
ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தியா என்னும்
கருத்தாக்கத்தை இது மூச்சுமுட்டச் செய்கிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான
சமூக, கலாசாரப் பார்வையை இது மறைக்கிறது. தீவிரவாத நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக
இது அமையக்கூடும். இதன் அதிர்வுகளால் ஏற்படும் எதிர்பார்க்கவே முடியாத விளைவுகளை
நம் நாடு முழுவதும் உணரக்கூடும்.
 
நான் சொல்லி இருந்தேன், ‘370வது பிரிவை நீக்குவது அல்லது
அமலாக்குவது பிரச்சினை தொடர்பான அடிப்படையான விஷயத்தை மறந்துவிட்டோம். அது, இது
தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் வரும் காலங்களில், ஆளும் அரசின்
கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இது மாறும். அதிகாரத்திலும்,
நீதித்துறையிலும் சில தனிப்பட்ட லாபங்களுக்கு இது பயன்படுத்தப்படும்.
அரசியல்வாதிகளைத் தாண்டி, செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க வசதியான ஒன்றாக இதைப்
பார்க்கிறார்கள். இந்த மாநிலத்துக்கு ஆரோக்கியமான நிதிச் சட்டங்கள் வருவதை இவர்கள்
அனுமதிப்பதில்லை.
 
சொத்து வரி, நகர்ப்புற சில வரம்புச் சட்டம், கொடை வரி
மற்றும் பல நல்ல சட்டங்கள் இந்த மாநிலத்தில் 370வது பிரிவைக் காரணக் காட்டி
அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் 370வது பிரிவு தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது,
தங்களுக்கான நீதியை மறுக்கிறது, அதேபோல் பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுக்குக்
கிடைக்கவேண்டிய நியாயமான பங்கைத் தடை செய்கிறது என்பதைப் பொது மக்கள் உணராத
வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.’
 
என் நிலைப்பாடு என்னவென்றால், 370வது பிரிவு என்னும் தடைச்
சுவரின் மூலம் காஷ்மீரத்து மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையான நிலை
அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். இது தொடர்பாக ஏகப்பட்ட யோசனைகளை நான்
தெரிவித்திருந்தேன். அதேபோல், சீர்திருத்தம் மற்றும் நிர்வாக மறு கட்டமைப்பு
தொடர்பாகவும் சொல்லி இருந்தேன். இவை கண்டுகொள்ளப்படவில்லை. மிகச் சிறந்த வாய்ப்பு
வீணடிக்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் என் கருத்தை வலுப்படுத்தி
இருக்கின்றன. அதாவது 370வது பிரிவும் அதன் உபரி விளைபொருளான ஜம்மு காஷ்மீருக்குத்
தனி அரசியலைமப்புச் சட்டம் என்பதும் போகவேண்டும். இது சட்டத்தாலும்
அரசியலைப்பாலும் செய்யப்பட முடியக்கூடியது என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. நம்
கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலான காரணங்களாலும், நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவை
என்பதாலும் இது போகவேண்டும் என்கிறேன். ஊழல் மேட்டுக்குடியினரின் தொடர்ச்சியான
வளர்ச்சிக்கு மட்டுமே இந்தப் பிரிவு உதவுகிறது. இது இளைஞர்களின் மனதில் தவறான
கருத்தைக் கொண்டு வருகிறது. மாநில ரீதியான பதற்றத்தையும் மோதல்களையும் இது
உருவாக்குக்கிறது. சுயாட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாலும், நிதர்சனத்தில்
அது சாத்தியமில்லை.
 
தனித்துவம் மிக்க கலாசாரம் கொண்ட காஷ்மீரை இந்தப் பிரிவு
இல்லாமலேயே பாதுகாக்கமுடியும். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தைச்
சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டால் அவர்களது உரிமைகள் பறிபோகும் என்பது
பிற்போக்குத்தனமானது. 44 வருடங்களாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களது
எளிய அடிப்படை உரிமையும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இது
எல்லாவற்றுக்கும் மேலே, பரந்து விரிந்த இந்தியாவின் பன்முகத் தன்மையின் தேவையோடும்
நிதர்சனத்தோடும் இது பொருந்தி வரவில்லை.
 
இன்றைய இந்தியாவின் தேவை, இந்தியாவின் ஆன்மாவையும்
ஆசைகளையும் குலைத்து, வலிமையற்ற தலைமையால் ஒரு சிறிய ‘வாழைப்பழ குடியரசாக’
மாற்றப்படும் வெற்று இறையாண்மை அல்ல. மாறாக, நீதியின்பாலும் நியாயத்தின்பாலும்,
உண்மையையும் நேர்மையும் கருணையும் கொண்ட புதிய சமூக, அரசியல் மற்றும் கலாசார
இந்தியாவே தேவை. தூய்மையான தீவிரமான துடிப்பான உள்ளார்ந்த அமைப்புதான் வேண்டும்.
இதுவே உண்மையான சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், உண்மையான எழுச்சியை அனைவருக்கும்
தரும்.
 
நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற
மாநிலங்கள் கூடுதல் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கும்போது, அவர்கள் தனித்துப்
போகவேண்டும் என்ற பொருளில் அதைக் கேட்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அதிகாரப்
பரவலாக்கலை விரும்புகிறார்கள். இதனால் நிர்வாகத்தையும் வளர்ச்சிப் பணிகளையும்
விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் சேவையின் தரம் கூடும். காஷ்மீரில்
370வது பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்க எழும் கோரிக்கை, அதாவது 1953ல் இருந்து
நீர்த்துப் போகாமல் இருப்பதாகச் சொல்லப்படும் ‘அசலான தூய்மை’, வேறொரு நோக்கத்தில்
இருந்து உருவாகி இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு
தெளிவான தந்திரம் இது. தனி நாடு, தனிக் கொடி, முதலமைச்சருக்கு பதிலாக ஒரு பிரதமரை
வைத்துக்கொள்ள விரும்புவது, கவர்னருக்குப் பதிலாக சாத்ர்-இ-ரியாசாத்தை
வைத்துக்கொள்வது, கூடுதல் அதிகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவது போன்றவற்றுக்காகத்தானே
ஒழிய, மக்களுக்கான நன்மைக்காகவோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவோ அல்லது
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை அடைவதற்காகவோ அல்ல. நியோ எலைட்டுகள் என்று
அறியப்படும் ‘நியோ ஷேக்’குகளின் தேவைகளுக்காகத்தான்.
 
வாக்கு வங்கியின் காவலாளியாகவே தொடர விரும்புபவர்கள்
தொடர்ந்து சொல்வார்கள், 370வது பிரிவு என்பது நம்பிக்கையின்பாற்பட்டது என்று.
அதற்கு மேல் சொல்லமாட்டார்கள். அவர்களை அவர்களே இப்படிக் கேட்டுக்கொள்வதில்லை:
நம்பிக்கை என்றால் என்ன? அதன் காரணம் என்ன? இந்திய அரசியலைமைப்புக்குள் இந்த மாநிலத்தைக்
கொண்டு வந்து அதற்கு கூடுதல் ஒளியுள்ள, கூர்மையான நம்பிக்கையைத் தரவேண்டாமா?
இப்படித் தருவதன் மூலம் இதை கூடுதல் நீதியும் அர்த்தமும் கொண்டதாக்கவேண்டாமா?
 
இதே ரீதியில்தான், ‘வரலாற்றுத் தேவையும் சுயாட்சியும்’
இவர்களால் அணுகப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் இவற்றுக்கான பொருள் என்ன?
வரலாற்றுத் தேவை என்பது, காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதி என்று, அதீதமாகச்
செலவு செய்து ஒரு கையால் ஒரு காகிதத்தில் எழுதித் தருவதும், நிதர்சனத்தில்,
இன்னொரு கையால் தங்கத் தட்டில் எழுதித் தருவதுமா? சுயாட்சி என்றால் என்ன? அல்லது 1953க்கு
முன் அல்லது 1953க்குப் பின் என்று சொல்லப்படும் நிலை உணர்த்துவதுதான் என்ன?
காஷ்மீரத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்ல இது வழிவகுக்காதா: ‘நீ அனுப்பு, நான்
செலவு செய்கிறேன். ஊழல் மிகுந்த, உணர்ச்சியற்ற, தன்னலம் மிகுந்த குழு ஒன்றை நான்
உருவாக்கினாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி டாமோக்ளெஸ்ஸின் வாள் உன் தலை
மீது தொங்கினாலும், நீ இல்லை என்று சொல்லக்கூடாது.’
 
(அடுத்த இதழில்
முடிவடையும்)

Leave a Reply