காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் – புத்தக விமர்சனம் | சுப்பு


காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு.நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவெட் லிமிடெட், டிசம்பர் 2018. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நம் நாட்டில் ஆங்கில மருத்துவத் துறையின் வளர்ச்சி பற்றிய செய்திகளை மருத்துவர் நரேந்திரன் கூற முற்பட்டிருக்கிறார். இத்தகைய முயற்சியில் இது ஒரு முன்னோடியான நூல் என்று கூறலாம்.

காலனிய மருத்துவம் பற்றிப் பேசும் போது, காலனிய அரசியல், பொருளாதார, கலாசார, இலக்கியத் தகவல்கள் நூலின் கருப்பொருளுக்குத் தேவைப்படும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதலில், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவத்சல பாரதி வழங்கியுள்ள கருத்துரையைப் பாராட்ட வேண்டும். நூலின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய செய்தியையும் கனச் சுருக்கமாக அவர் எழுதியிருப்பது நூலுக்குப் பெருமைதான்.

ஆங்கிலேய மருத்துவம் சுதேசி மருத்துவ முறைகளை கபளீகரம் செய்து விட்டது. ஆங்கிலேயர் உலகையெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள வேண்டுமென்ற பேரவாவின் அடிப்படையில் அவர்களது மருத்துவக் கொள்கை வரையறுக்கப் பட்டது என்பதை ஆசிரியர் சான்றுகளோடும் தரவுகளோடும் நன்கு விளக்குகிறார். இந்தியாவின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அவர்களது மருத்துவத்தை அவர்களுக்காக நிலை நிறுத்த இங்கு இருந்த மதக் கொள்கைகள், கலாசாரம் இவைகளைக் கருத்திற் கொண்டு துப்புரவு, சுகாதாரம் என்ற இரு பெரும் பண்பளவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களது மருத்துக் கொள்கைகள், மருத்துவ முறைகள் வகுக்கப்பட்டன. இதில் இந்தியாவின் பெரு நகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு என்ற நான்கினுள் அக்காலத்தில் பொட்டலாகக் கிடந்த சென்னையில் மருத்துவத்தை அதிகம் வளர்த்தனர் ஆங்கிலேயர். ஸ்டான்லி மருத்துவ மனை கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்றும் கீழ்பாக்கம் மருத்துவ மனை இலண்டன் கஞ்சித்தொட்டி மருத்துவ மனை என்றழைக்கப்பட்டதும், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மதநம்பிக்கையின் காரணமாக மறுப்பு தெரிவித்ததும், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில், இனப் பாகுபாடுகள் இருந்தமையும் ஆசிரியர் விவரிக்கும்போது எப்படி ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்தாண்டே தம் வாழ்வைப் பெருக்கிக் கொண்டனர் என்ற வஞ்சகம் புரிகிறது.

சுதேசி மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் தடுத்தனர். அதோடு ஆங்கிலேய மருத்துவமும் சுதேசிகளுக்குக் குறைந்த அளவே பயன்படுமாறும் பார்த்துக் கொண்டனர். இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு இடையிலேதான் தமிழ்நாட்டில் தஞ்சை மன்னர் சரபோஜி, பண்டிட் கோபாலாசார்லு, கேப்டன் சீனிவாசமூர்த்தி போன்ற சில பொதுநல நோக்குடையவர்களால் சுதேசி மருத்துவம் வேரற்றுப் போகாமல் நோயாளிகளுக்கு ஓரளவேனும் பயன்பட்டது என்கிறார் மருத்துவர் நரேந்திரன்.

காலனிய கால மருத்துவத்தைப் பற்றிய புத்தகத்தில் ஆசிரியர் சற்றே பின் காலனியத்தைப் பற்றியும் தொட்டிருக்கிறார், இந்த நூலில் மருத்துவர் ரங்காசாரி பற்றி சிறிய குறிப்பே இருக்கிறது. ஆரியம்-திராவிடம் என்ற அரசியற் கொள்கை பொய் என்று நிரூபணம் ஆன பின்னும் அதைப் பற்றிய குறிப்பு இந்நூலில் இடம் பெற்றிருக்கக் கூடாது. அதே போல யேல் பல்கலைக் கழகத்தில் முதல்வர் அண்ணாதுரை உரையாற்றினார் என்பதும் சர்ச்சைக்குரிய விஷயம்.

இந்தப் புத்தகத்திலிருந்து சில முக்கியமான பக்கங்கள் :

“மதராஸ் ஏப்.டபிள்யூ.எல்லீட்ஸ் என்பவர் அம்மைக் குத்துதல் குறித்த ஒரு சமஸ்கிருதப் பாடலை ஒரு பழைய தாளில் எழுதி, இது பழங்காலத்திலே நடைபெற்றதுதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தி அம்மை குத்துதலை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதே போன்றே மதராஸ் டாக்டர் அண்டர்சன்னும் பொய்யான செய்திகளைக் கூறி அம்மை குத்த வழிகண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.” பக்கம்-164

“மதராஸில் உள்ளூர் மொழியில் மருத்துவம் கற்பிக்கும் முயற்சிகள் எப்போதும் ஊக்குவிக்கப்படவில்லை இதற்கு மாறாக வங்காளம், பம்பாய் போன்ற இடங்களில் உள்ளூர் மொழி வழி மருந்துவக் கல்வி அளிக்கப்பட்டது. ஆனால் மதராஸில் கீழ்மட்ட மருத்துவ உதவியாளருக்குக்கூட ஆங்கிலவழிக் கல்வியே அளிக்கப்பட்டது.” பக்கம்-88.

“டாக்டர் கேப்டன் ஜீ.சீனிவாசமூர்த்தியால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேதம் குறித்த உஸ்மான் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தன. மேலும் இவ்வறிக்கையில் மருந்து கொடுத்து குணமாக்கும் மருந்துவம் சிறப்பாக உள்ளது. அது சிக்கனமானது. நமக்குப் போதுமானது. என்று கூறியது” பக்கம்-209.

Leave a Reply