Posted on Leave a comment

சினிமாச் சோழர்கள் | கோ.எ.பச்சையப்பன்

அரசியலில் நடிகர்களும், நடிகர்களின் அரசியலும்

“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழுந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”

மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்த உடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பாக்காச் சோழர்
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?

-ஞானக்கூத்தன்!

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு அது. திரையுலகப் பாரம்பரியத்தின்படி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். படத்தின் நாயகன் கமல்ஹாஸனை வாழ்த்தியும், அவர் ‘வேண்டாவெறுப்பாக’ தாங்கி வரும் உலக நாயகன், காதல் மன்னன் (இந்த பட்டம் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒவ்வொரு நாயகனுக்கு இடம்பெயரும்! ஏறக்குறைய சூழற்கோப்பை போன்றது) போன்ற பட்டங்களை விளித்து ரசிகர்கள் கோஷம் எழுப்பியவாறு இருக்க, முதல்வர் முகம் சுளித்தார். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வேறு எவரையும் விட நன்கறிந்தவர் கமல்! ஒலிபெருக்கிக்கு அருகே வந்து கொன்ன வார்த்தை – பீருட்டஸைப் பார்த்து ஜீலியஸ் சீஸர் சொன்ன ‘யூ டூ ப்ரூட்டஸிற்கு’ நிகரானது – “என் ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்லர்!”

உலகில் எந்த ஒரு நாட்டிலும் காணக்கிடைக்காத காட்சி, விடியற்காலையில் வெளியாகும் புதிய திரைப்படமும், அதனைக் காண கண்விழித்துக் கிடக்கும் ரசிகர்களும். தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின்போதும் இதனைக் காணலாம். சினிமாவில் தோன்றும் நாயகனைத் தன்னுடைய ஆதர்ஸமாக ரசிகர்கள் கருதுவதும், தனக்கான போரை அவன் வென்றெடுப்பான் எனக் கருதுவதும் காலங்காலமாக நடப்பதுதான்.

தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் எம்.கே.டி. என சுருக்கமாக விளிக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டார், காஷ்மீர் ரோஜா இதழ்கள் தூவப்பட்ட பன்னீரில் குளித்தார் என்ற செய்திகள் பரவுமளவிற்குப் புகழ்பெற்றவர். இவை உண்மையா எனத் தெரியாது. ஆனால், இவற்றினை உண்மையாக்கும் அளவிற்குப் பொருளாதார வலிமையைப் பெறுவதற்கு ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர்.

எம்.கே.டிக்குப் பிறகு மற்றும் ஒரு மூன்றெழுத்துக்காரர் காரிஸ்மா நடிகராக உருவானார். தன்னுடைய நாயகபிம்பத்தை பாடல், வசனம், இசை, கதையம்சம் என திரைப்படத்தின் அத்தனைக் கூறுகளையும் பயன்படுத்தி துலலியமாககக் கட்டமைத்துக்கொண்டார். அவர் எம்.ஜி.ஆர். 

சமகாலத்தில ரஜினி.

முற்றிய ஜனநாயகம் நிலவும் பாரத தேசத்தில் எந்தத் துறையிலிருந்தும் அரசியலுக்கு வரலாம். திரைத்துறையிலிருந்தும் வரலாம். சினிமாவில் நடித்தவர்கள் என்பதற்காகவே அரசியலில் நுழைய எந்தத் தகுதி இழப்பும் இல்லை என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்தில்லை.

பெரும் உழைப்பின் மூலம் அரசியல்வாதிகள் பெறும் பிரபல்யம், புகழ், விளம்பரம் – இவற்றினைத் தமிழ்கூறு நல்லுலகின் ஊழின்பலனாக, எளிதில் திரைப்படங்கள் வாயிலாக அடையும் நடிகர்கள் அதன் மூலம் பதவிகளைப் பெற விரும்புவது இயற்கையே. காதோர முடி நரைத்தவுடன் மணிமகுடத்தை மகனிடம் தலைமாற்ற விழைந்த தசரதர்கள் வாழ்ந்த இந்த தேசத்தில், தலை முழுக்க வழுக்கையானாலும் பதவியை மகனிடம் (கூட) விட்டுத்தராத அரசியல்வாதிகள் நிறைந்த தேசமாகிப் போனதில் – நடிகர்கள் மட்டும் விதிவிலக்குகளா? அவர்கள் பதவியை விரும்பாத பீஷ்மர்களாக இருக்க நியாயமில்லை.

ஆனால் ‘கனவுத் தொழிற்சாலை’ என சுஜாதாவால் விளிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகத்தில் இரண்டு வெற்றிப் படங்களைத் தந்தவுடன் எப்போது முதலமைச்சராகப் பதவி ஏற்கலாம் என்ற கனவு நடிகர்களுக்கு எப்படி ஏற்படுகின்றது என்பதை விவாதிக்கத்தான் வேண்டும்.

நீங்கள் ஒரு பெரும் அரசியல் தலைவரின் மகனாகவோ – மகளாகவோ அல்லது பேரனாகவோ இல்லாதபட்சத்தில் – ஒரு வளர்ந்த மாநில தேசியக் கட்சியில் பதவியைப் பெற கடும் உழைப்பைச் செலுத்த வேண்டும். பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், நடிகர் என்ற தகுதியொன்று போதும் – நேராக அரியாசனத்தில் அமர்ந்துவிடலாம். கோடம்பாக்கத்திலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எளிய மாற்று வழியில் (பைபாஸில்) அடையும் உத்தியை திரைப் பிரபல்யம் வழங்கிவிடுகிறது.

தமிழ்நாட்டில் நீங்கள் நடிகராகப் புகழ்பெறும் பட்சத்தில் ‘கௌரவ டாக்டர் பட்டங்கள்’ கிடைக்கும். கலைமாமணி, உள்ளிட்ட அரசு விருதுகள் கிடைக்கும். தமிழக அரசியல் கட்சிகள் மத்திய ஆட்சியில் செல்வாக்குப் பெறும் பட்சத்தில் ‘பத்மஸ்ரீ, பத்ம பூஷன்’ உள்ளிட்ட விருதுகள்கூடக் கிடைக்கும்.

மேலும் எதைப்பற்றியும் கருத்துக் கூறலாம். கூடங்குளம் முதல் ஸ்டெர்லைட் வரை, க்ரையோஜனிக் ராக்கெட் எந்திர இயக்கம் முதல் இந்தியப் பொருளாதாரம் வரை கருத்துச் சொல்லலாம். நடிகர்களுக்கு அறிவு, ஆற்றல், சமூகப்பொறுப்பு இல்லையா என்று சிலர் கேட்கலாம். இருக்கிறது. ஆனால், அதே அறிவு செருப்பு தைக்கும் தொழிலாளி முதல் பல்கலைப் பேராசிரியர்கள் வரை கொண்டிருந்தாலும் யார் கருத்தை ஊடகங்கள் எதிரொலிக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் 143 கலைகள் இருந்ததாக ஆய்வாளர் ஆ.கா.பெருமாள் கூறுகிறார். தற்போது அவை 96 ஆகச் சுருங்கிப் போய்விட்டதாக மறைந்த நாடகக் கலைஞர் ந.முத்துசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால், நமது தமிழ்ச்சூழலில் செய்தித்தாள்கள், வார இதழ்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பாருங்கள். சினிமா அன்றி வேறேதும் கலையல்ல என்ற நிலைமை ஏற்பட்டு நாளாகிறது என்பது புரியும்.

கடந்த சில ஆண்டுகளாகக் கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள சீரழிவுகளில் ஒன்று, நடிகர் நடிகைகளைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தல். நர்சரி பள்ளிகள் முதல் நிகர்நிலைப் பல்கலைகள் வரை இதற்கு விதிவிலக்கில்லை. தம் வாழ்நாளில் செம்பாதியைக் கல்விப்புலத்தில் செலவழித்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் போதிக்காத அறத்தை – அறிவை, எட்டாம் வகுப்புக் கூடத் தாண்டாத நடிகர் எப்படி மாணவ சமூகத்திற்கு அளித்திட முடியும் எனத் தெரியவில்லை. தமது கல்வி நிலையங்கள் பொருளாதார ரீதியாக விருத்தியடைய ஆண்டுவிழாக்களில் நட்சத்திரங்களை லட்சங்களை அளித்து அழைத்து வருவதன் மூலம் பல கோடிகளைச் சுரண்ட வித்திடுகிறார்கள் என்பதே உண்மை.

சகல வித்தைகளும் கைவரப்பெற்று ‘பல்துறை மேதை’களாகத் திகழும் இந்தக் ‘கலைஞர்கள்’ தற்போது கோயில் – சாதி – மதம் – மருத்துவமனை போன்றனவற்றுள் எவை முக்கியம் என நமக்குப் பரிந்துரை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். விக்கிரங்களுக்கு அபிஷேகம் எவ்விதம் செய்ய வேண்டும் என்பதை ஒரு சமய அறிஞரிடமிருந்து அல்ல – ‘என்னாச்சி’ எனப் பிதற்றித் திரிந்த மூன்றாந்தர மொண்ணையிடம் இருந்து கேட்டுப் பெறும் அளவிற்கு ‘செயற்கை ஆன்மிக’ வறுமை கொண்டவர்களாக மாறிவிட்டது அவலம்!

சமூகத்திற்குச் சகல வித்தைகளையும் போதிக்கும் இவர்கள், தாம் வாழும் சமூகத்திற்கு தமது அடிப்படைப் பங்களிப்பான ‘தொழில், வருமான வரிகளை’ செலுத்துகின்றனரா என்பதைக் கடவுளே அறிவார். ‘சிவாஜி’ படத்தயாரிப்பின்போது அதன் தயாரிப்பாளர்களான ஏ.வி.எம். சரவணன் ஒரு நேர்காணலில், “இந்தப் பணத்தை முழுக்க முழுக்க வெள்ளைப் பணத்தால் தயாரிக்கத் தீர்மானித்து – வங்கியில் கடன் பெற்றுத் தயாரித்தோம்” என பெருமைபொங்கக் கூறினார் எனில், அதுவரை பொன்விழா கண்ட அந்நிறுவனம் எந்தப் பணத்தில் படங்கள் தயாரித்தது என்ற கேள்வி எழுகிறதல்லவா? போலவே, அவர்களிடம் நடித்த நடிகர்கள் துய்த்த பணம் எவ்வகை என்பதும் சிந்திக்கத் தக்கது.

நானறிந்த வரை, உலகத்திலேயே தீக்குளிக்கும் வழக்கம் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில்தான் உள்ளது என நினைக்கிறேன். இங்கேதான் மொழி, இனம், சாதியின் பெயரால் எளிதில் உணர்ச்சிவசப் பட்டுவிடும் பலகீனர்கள் தம் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர். இந்த எளிதில் உணர்ச்சிவசப்படும் மனமே, தான் ரசிக்கும் கதாநாயகன் மீதான வழிபாட்டு மனோபாவத்தை வளர்த்தெடுக்கிறது. இது ஆராய வேண்டிய சிக்கலான உளவியல். யாருக்காகத் தம் உயிரைத் தத்தம் செய்கின்றனரோ அவர்களை நேரிடையாகப் பாத்திரமாக பிம்பங்கள் வழியே கண்டறிந்து விசுவாசித்தினை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதும் அவலமே. 

மக்களின் மனங்கவர வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல்வாதி, அதனை நிறைவேற்றாவிட்டால் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆனால் அதேபோன்று வாக்குறுதிகளை வசனமாகவோ, பாடலாகவோ அள்ளிவீசும் நடிகன் அது கற்பனை என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ள முடிகிறது.

‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி’ என்றுரைத்து ஆட்சியைப் பிடித்த அண்ணாதுரை பின்னாளில் ‘மூன்றுபடி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என மழுப்பி விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் ‘ஆளுக்கு ஒரு கூடு கட்டுவோம்’ எனப் ‘பாடிய’ எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனாக வெற்றிபெற்றாரே அன்றி, ‘ஏன் வீடு தரவில்லை’ என யாரும் கேட்கவில்லை. இதன் நவீன வடிவமே, சிங்கப்பூரில் ஜி.எஸ்.டி.!

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. இசை, நடனம், இயக்கம் உரையாடல் எனப் பல்வேறு கலைஞர்களின் பலனை, திரையில் முகம் காட்டும் நடிகன்/நடிகை அறுவடை செய்கிறார்கள், தமது சொந்த வாழ்வில் எளிய பிரச்சினைகளைக் கூடக் கையாளத் தெரியாத இவர்கள்தான் நம் தளபதிகள், கலைஞர்கள், உலக நாயகன்கள்.

கலைஞர்கள் நடிக்கட்டும். அவர்கள் மூலம் நாம் பெறக்கூடிய மகிழ்ச்சியும், மனநிறைவும் இயல்பானதாக இருத்தல் வேண்டும். நெருக்கடிகள் நிறைந்த பரபரப்பான வாழ்வின் மன அழுத்தங்களை மறக்க (அது தற்காலிகம் என்ற போதும்) சினிமா பார்ப்பது தவறல்ல. ஆனால் இச்சமூகம் அவர்களிடமிருந்து பெறக்கூடியதும் பயிலக்கூடியதும் மனமகிழ்வின்றி வேறில்லை. நம் எதிர்கால வாழ்வை ஒப்புக்கொடுக்கும் அளவிற்கு அவர்கள் புனிதர்கள் (அ) மெஸேயாக்கள் அல்லர்!

அண்மையில் ஒரு நேர்காணலில், ‘உலகநாயகர்’ என்று சிலரால் அழைக்கப்படும் ஒருவர், ‘ராகுல் ட்ராவிட் ஒரு திராவிடர், பெயரிலியே அதற்கான நியாயம் இருக்கிறது’ என்று சொன்னவுடன், அவருடைய ரசிகர்கள் கைதட்டியதைப் பார்த்தேன். அந்த  ‘அறிவுஜீவி’யின் ரசிகர்கள் இத்தனை ஆண்டுகளாக விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருக்கிறார்களே என்ற பரிதாபம்தான் ஏற்பட்டது.

நான் வாசித்த யுவால் நோவா ஹரார் எழுதிய சேப்பியன்ஸும், ஹோமோடியஸும் மனித இனம் குறித்த வரலாற்றை அந்த ‘அறிவு ஜீவி’ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சினிமாவில் நடித்ததற்காகவே ரிபப்ளிக் சேனல் வரை அவர் கூறுவதைக் கேட்கும். பல்லாயிரம் பக்கங்கள் வாசித்த நான் எழுதுவதை ‘வலம்’ வாய்ப்புத் தராவிட்டால் யார் வாசிக்கப்போகிறார்கள்?

Leave a Reply