சீனா உலக நாடுகளால் தண்டிக்கப்பட வேண்டும் | எஸ்.நடராஜன்

2020ம் ஆண்டு உலக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் தரும் என்று எதிர்பார்ப்போடு துவங்கியது. புதிய தொழில்நுட்பம், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பினை ஏராளமானோருக்கு வழங்குதல், அனைத்துப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விவாசயத் துறையில் தன்னிறைவை நோக்கி நகர்வது என்று பல எதிர்பார்ப்புகள். உலகில் ஒவ்வொரு நாடும் வேளாண் பொருட்களை அதிக அளவிலே உற்பத்தி செய்து, தன் நாட்டின் தேவைக்குப் போக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்ற கனவு இருந்தது. ஆடு, மாடு மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பல மடங்குப் பெருக்கம் என மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையே உலக மக்கள் 2020ல் எதிர்பார்த்தனர். ஆனால், காலம் தனது கடமையை வேறு விதமாக நிறைவேற்றுவதற்குக் காத்திருந்தது என்பதை நாம் பின்னர்தான் தெரிந்து கொண்டோம். 

Continue reading சீனா உலக நாடுகளால் தண்டிக்கப்பட வேண்டும் | எஸ்.நடராஜன்

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் | எஸ்.நடராஜன்உலகில் எந்த ஒரு வல்லரசு நாடோ அல்லது வளர்ந்து வரும் நாடோ, தன் நாட்டு எல்லைகளையோ, சற்று தொலைவில் உள்ள தனக்குச் சொந்தமான தீவுகளையோ கட்டிக் காப்பது அதன் கடமை மற்றும் உரிமை ஆகும். உலகப் புகழ்பெற்ற ரஷ்யத் தரைப்படை தளபதி ஒருமுறை, “ரஷ்ய நாட்டிற்குத் தனது எல்லைகளை விரிவாக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ரஷ்ய மக்களுக்கு எது சொந்தமானதோ, எது அவர்கள் உழைப்பால் உருவானதோ அவற்றைத் தீவிரமாகவும் உறுதியாகவும் சமரசத்திற்கு இடமின்றியும், பாதுகாத்து நிற்பார்கள்” என்று கூறி உள்ளார்.
அனுதினமும் தனது நாட்டிற்குச் சொந்தமான இடங்களையோ அல்லது தீவுகளையோ ஒரு நாட்டின் அதிபர் தனது வீரர்களின் மூலம் பராமரிக்காமல் பாதுகாக்காமல் விட்டு விடுவார் என்றால் அப்பகுதியை எதிரி நாடு ஆக்கிரமித்துக் கொள்ளும்.

நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை தமக்குச் சொந்தமான பகுதிகளை படைவீரர்களின் மூலம் பாதுகாத்து வருகிறது. இருப்பினும் ஒரு சில நேரங்களில் ஏற்பட்ட கவனக்குறைவால் சீனாவிடம் அக்‌ஷாய் சின் என்ற பகுதியை இழந்தோம் காஷ்மீரின் சிறு பகுதியை பாகிஸ்தானிடம் இழந்தோம். அப்பகுதி இன்று ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

1947ல் நம் நாட்டிலிருந்த 556 சுதேச சமஸ்தானங்களை உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் ஒன்றாக இணைத்து சாதனை நிகழ்த்தினார். இந்திய யூனியனோடு இணைய மறுத்த ஹைதராபாத், ஜூனாகாட் சமஸ்தானங்களை ராணுவ நடவடிக்கை மூலம் இணைத்தார். நமது தற்போதைய யூனியன் பிரதேசமான கோவாவை போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்க, ஆப்ரேஷன் நோவா என்ற திட்டத்தின்படி நமது ராணுவத்தை அனுப்பி அதனை நமது நாட்டோடு இணைத்தார். அதன் மூலம் உலக நாடுகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டமும் பெற்றார்.

தீராத தலைவலியாக இருந்த ஜம்மு காஷ்மீரின் 370 மற்றும் 35 ஆவது சிறப்புப் பிரிவை திரும்பப் பெற்று தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி எதிர்காலத்தில் அதன் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளார்.
பிரெஞ்சு தளபதி நெப்போலியன் ஒரு முறை “முதலில் பிற நாடுகளை நான் வெற்றி கொள்வேன். அதற்கான காரணங்களை வரலாற்று ஆசிரியர்கள் பிறகு கண்டுபிடிக்கட்டும்” என்றான். மற்ற நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பது, அண்டை நாடுகளோடு சமாதான சகவாழ்வு என்ற நமது கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல; அது மன்னிக்க முடியாத சர்வதேச சட்டத்தை மீறிய செயல் ஆகும் என்பதை உணர்ந்த நமது ஆட்சியாளர்கள், உலகில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுடன் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளனர். காமன்வெல்த், சார்க், ஆசியன் கூட்டமைப்பு நாடுகளும் நமது நாட்டால் அதீதப் பயன் பெற்றுள்ளன.

ஆதிகாலம் தொட்டே இந்தியப் பெருங்கடல் முழுவதும் நம் நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே இருந்து வந்தது. 73,42,7000 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இக்கடல் பகுதியின் மேற்கில் விக்டோரியா மற்றும் அமிராண்டே போன்ற தீவுகளும், வடக்குப் பகுதியில் மாலத்தீவுகள், இலங்கை மற்றும் பாலி போன்ற சிறு தீவுக் கூட்டங்களும், தெற்குப்பகுதியில் காகோய் தீவுக்கூட்டமும், வடமேற்குப் பகுதியில் லட்சத் தீவுகளும் அமைந்துள்ளன. இக்கடல் பகுதியில் தாமிரம், துத்தநாகம், புரோமியம் போன்ற பொருள்கள் அபரிமிதமாகக் கிடைத்த வண்ணம் உள்ளன. இறால் போன்ற விலை உயர்ந்த மீன்கள் மற்றும் கடல் சார் உணவுப்பொருட்கள் இப்பகுதி மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன.

அண்டை நாடுகளின் நிலம் மற்றும் கடல் பிரதேசங்களைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வரும் சீன நாடு, இந்தியப் பெருங்கடல் பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. சீனாவின் பொருளாதாரக் கொள்கை என்பது எந்த ஒரு நாட்டிலிருந்தும் தான் இறக்குமதி செய்யும் பொருட்களை விடப் பத்து மடங்கு தரம் குறைந்த மலிவான பொருட்களை ஏற்றுமதி செய்வதே ஆகும். மேலும் கோடிக்கணக்கான டாலர்களை சில நாடுகளுக்குக் கடனாகக் கொடுத்து உதவி செய்வது, பின் காலப்போக்கில் அந்நாடு அசலையும் வட்டியையும் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கும்போது அந்த நாட்டின் முக்கிய நகரத்தையோ துறைமுகத்தையோ தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது. இச்செயலை ஆங்கிலத்தில் Dept Trap என்று குறிப்பிடுவர்.


இவ்வகையில் இலங்கைக்கு சில கோடி டாலர்கள் கடன் கொடுத்து அந்நாட்டின் துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. 2017ம் ஆண்டிலிருந்து 2019 ஆகஸ்ட் வரை இத்துறைமுகத்தில் சீனாவின் நவீன போர்க் கப்பல்களும் அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களும் மூன்று முறை வந்து சென்றுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நாடுகள் சற்று அச்சம் அடைந்தன என்பது உண்மையே.

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பல, நூற்றுக்கணக்கில் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் முகாமிட்டு லட்சக் கணக்கான டாலர் மதிப்புள்ள மீன்களைப் பிடித்துச் செல்கின்றன. மத்திய அரசு கடலோரக் காவல் ரோந்துக் கப்பல்களின் மூலமும், உளவு விமானங்களின் மூலமும், போர்க் கப்பல்களின் மூலமும் கண்காணித்து அவ்வப்போது சீனாவிற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறது.

2018ம் ஆண்டு மாலத்தீவிற்கு 3,06.000 சீனச் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது அதே மாலத் தீவிற்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்த சீனர்கள் அங்கு செலவு செய்த ரூபாயை விட இந்தியர்கள் கூடுதலாகச் செலவு செய்ததாக அதே புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சீனாவின் இந்தியப்பெருங்கடல் மீதான ஆக்கிரமிப்பு எண்ணத்தை நன்கு புரிந்து கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு அப்பகுதியில் உள்ள சின்னஞ்சிறு நாடுகள் மற்றும் தீவுகள் ஆகியவற்றிற்கு நிதி உதவி செய்வது, ஆசியப் பொருளாதார மண்டலத்துடன் அவற்றை இணைப்பது ஆகியவற்றின் மூலம் அனைத்துத் துறைகளிலும் அவற்றை முன்னேற்றுவது என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் ராணுவ விற்பன்னர்கள் இந்தியாவிற்கே சொந்தமான இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிப் படகுகள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை அத்துமீறி நுழையாமல் இருக்க கீழ்க்கண்ட ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
1. இந்திய – அமெரிக்க மற்றும் இந்திய அமெரிக்க ஆஸ்திரேலியக் கடற்படைப் பயிற்சியினை வருடத்திற்கு இருமுறையாவது இக்கடற்பகுதியில் நடத்தவேண்டும்.

2. இந்திய நாட்டின் நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள் மற்றும் உளவு விமானங்கள் ஆகியவற்றை இந்தியக் கடற்பகுதியில் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

3. அக்னி ரக ஏவுகணைகள் மற்றும் பிரம்மாஸ் போன்ற ஏவுகணைகளை இந்தியக் கடல் பரப்பு முழுவதையும் குறி வைத்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கவேண்டும்.

4. இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தாங்கள் கலந்துகொள்ளும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் ‘இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஊடுருவல்’ குறித்து விரிவாக உரையாற்ற வேண்டும்.

5. இந்தியப் பெருங்கடலில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் சீன மீன்பிடிப் படகுகள் ஊடுருவாமல் இருக்கக் கண்ணிவெடிகளை மிதக்க விடவேண்டும்.

தைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன்
சீன அதிபர் ஜின்பிங் அண்மையில் ‘சீன ராணுவம் விரைவில் அனைத்து வித நடவடிக்கைகள் மூலம் தைவானைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும்’ என்று அறிவித்துள்ளார். சீன அதிபரின் இவ்வித அறிவிப்பானது உலக நாடுகளின் தலைவர்களை சற்றே ஆத்திரப்பட வைத்துள்ளது.

அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் சீன ஆட்சியாளர்களுக்கு அவர்களுடைய மூதாதையர்களிடம் இருந்து வந்து சேர்ந்த மரபணுக் கோளாறே ஆகும். தனது தரை மற்றும் கடல் எல்லைகளில் உள்ள சுமார் 16 நாடுகளின் பிரதேசங்களை சீன ராணுவம் அனுதினமும் ஆக்கிரமித்து வருகிறது. திபெத், மங்கோலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட வியட்நாம், தென் வியட்நாம், வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, நேபாளம் போன்றவை இதில் அடங்கும். இந்த நாடுகளின் நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை சீன அரசு உரிமை கோர இதுவரை எந்தவித முகாந்திரமும் ஆதாரமும் இல்லை என்று உலகின் சிறந்த அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீன ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், எப்பொழுதேனும் உலகின் எந்தப் பகுதியிலேனும் ஒரே ஒரு முறை நடந்து சென்றாலும் அப்பகுதி முழுவதும் தமக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் சுபாவம் சீன ஆட்சியாளர்களுக்கு இயல்பாகவே உள்ளது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஒரு சில காலகட்டத்தில் சீனாவை ஆண்ட மஞ்சு வம்சத்து அரசர்கள் அண்டை நாடுகளான திபெத் மற்றும் மங்கோலியா மீது ஆதிக்கம் செலுத்த தமது படைகளை அங்கு அனுப்பியபோது இயல்பாகவே வீரம் செறிந்த திபேத்தியர்களும் மங்கோலியர்களும் சீனத் துருப்புக்களைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். குதிரை ஏற்றம் வாள் வீச்சு மற்றும் யுத்த கலைகளில் தேர்ச்சி பெற்ற மங்கோலியர்கள் சீனத் துருப்புகளை துவம்சம் செய்து அவர்களின் போர் சிந்தனையை மறந்து போகுமாறு செய்தனர். இருப்பினும் மக்கள் தொகையில் பல்கிப் பெருகிய சீனர்கள் அவ்வப்போது மங்கோலியாவில் ஊடுருவி தீராத தலைவலியை ஏற்படுத்தி வந்தனர்.

1959ம் ஆண்டு சீனத் துருப்புகள் திபெத் நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டன. அதன் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது எண்பதாயிரம் சீடர்களுடன் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்தார். நமது மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா என்ற நகரத்தில் அவர்களுக்கு தங்க இருப்பிடமும் உணவும் அளித்து இந்திய அரசு பாதுகாத்து வருகிறது. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்திற்காக 1962ம் ஆண்டு நம் நாட்டின் மீது படையெடுத்தது. அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 60,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா அபகரித்துக் கொண்டது. மேலும் அம்மாநிலத்தின் தவாங் மாவட்டத்தையும் தெற்கு திபெத் என அழைத்து தன்னுடைய பிரதேசம் எனக் கூறி வருகிறது. சீனாவின் ஆக்ரோஷத்தைப் பார்த்து பயந்துபோன அப்போதைய மத்திய அரசு திருக்கயிலாய மலையையும் மானசரோவர் ஏரியையும் சீனாவிற்குத் தாரை வார்த்து விட்டது.

ஸ்ரீ ராமபிரானின் முன்னோர்கள், ஸ்ரீகிருஷ்ணர், பீமன், அர்ஜுனன் மற்றும் சைவ சமயப் பெரியவர்களான சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர், காரைக்கால் அம்மையார், ஔவையார், சீக்கிய மதகுரு குருநானக் ஆகியோர் திருக்கயிலை மலை சென்று ஈசனைத் தரிசனம் செய்துள்ளனர். 1962ல் இருந்து அம்மலைக்குச் செல்லும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமிருந்தும், யாத்திரை வாரியாக பில்க்ரிமேஜ் டேக்ஸாக  ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்தொகை ரூபாய் 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. சீனாவின் இச்செயலால் இந்து மதப் பற்றாளர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

1969ம் ஆண்டு ரஷ்யாவிற்குச் சொந்தமான சென்பவோ என்ற தீவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனத் துருப்புக்கள் திடீரென்று நள்ளிரவில் புகுந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 90 ரஷ்ய ராணுவ வீரர்களைக் கொண்டு அதைக் கைப்பற்றிக் கொண்டது. பொழுது விடிந்ததும் டாங்கிகள் சகிதம் நுழைந்த ரஷ்ய ராணுவம் 2000 சீனர்களை சல்லடையாகத் துளைத்து, அத்தீவை மீட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்ய நாடு விதிக்கும் எந்த நிபந்தனையையும் மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு வருகிறது.

சின்னஞ்சிறு நாடான தைவான் சீனாவின் தென்கிழக்குத் திசையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 36,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்நாடு. 2000ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 23 மில்லியன். வருடாந்திரப் பொருளாதார உற்பத்தி ஜிடிபி 311 பில்லியன் டாலர். தனிநபர் வருமானம் 13838 டாலராக வளர்ந்துள்ளது. 1971 அக்டோபர் 26 வரை ஐநா சபையின் உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகவும் இருந்த தைவான், நமது பிரதமர் நேருவின் முன்மொழிதலாலும் உலக நாடுகளின் நிர்பந்தத்தாலும் ஐநாவில் தான் வகித்த இரு பதவிகளையும் சீனாவிற்கு விட்டுக்கொடுத்தது. அந்நாட்டை அவ்விரு பதவிகளையும் ஏற்கச் சொல்லி விட்டு வெளியேறிவிட்டது. உலகின் முக்கிய அமைப்பான ஐநாவில் தன்னை இடம்பெற வைக்க தைவான் செய்த உதவியை மறந்து நன்றி கொன்றுவிட்டு சீனா தைவானை ராணுவ நடவடிக்கை மூலம் இணைத்துக் கொள்ளப் போவதாக மிரட்டுகிறது.1961ம் ஆண்டு சீன அதிபர் மா சே துங் தைவானைத் தனது நாட்டு ஏவுகணைகள் மூலம் தாக்கி இணைத்துக்கொள்ள அறிவிப்பு செய்து அதற்கான பூர்வாங்க வேலையில் ஈடுபட்டிருந்தது. அப்போதைய ரஷ்ய அதிபர் குருஷேவ் தைவானை இணைக்க சீனா தன்னுடைய ஏவுகணைகளை கொண்டு தாக்கினால் ரஷ்ய ஏவுகணைகள் சீனாவை அதே வழியில் தாக்கும் என எச்சரிக்கை விடுத்தார். வேறு வழியின்றி சீனா அம்முயற்சியிலிருந்து பின் வாங்கியது.

ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அருகில் உள்ள அண்டை நாடுகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற, உலகில் எந்த ஆட்சியாளர்களுக்கும் புரியாத தெரியாத வினோதமான சித்தாந்தத்தை சீன ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். 1950ம் ஆண்டுகளிலிருந்து சீன ஆட்சியாளர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்கா தனது தெற்கு ஆசியாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் தைவானையும் இணைத்து தனது அதி நவீன ஏழாவது கடற்படையை தைவான் பிரதேசத்திற்கு அருகில் நிலைநிறுத்தியது.

1987ம் ஆண்டு தைவான் அதிபர் சியான் சிங் குவேர், சீனர்களின் நெருங்கிய உறவினர்கள் தைவானின் இருந்தால் அவர்கள் சீனாவிற்கே சென்று குடியேறி விடலாம் என அறிக்கையும் வெளியிட்டார். 1995ல் தைவானின் அதிபராகப் பதவி ஏற்ற லீ டெங் ஹூய் ஆரம்பத்தில் சீன ஆட்சியாளர்களோடு சுமுக உறவு கொண்டிருந்தாலும், கடைசியில்  தைவான் தனிநாடாகும் என்ற எண்ணத்தை வெளியிட்டார். 2000ம் ஆண்டு பதவி ஏற்ற ஜனநாயக முன்னேற்றக் கட்சி டி.டி.பி., தனது அறிக்கையே தைவானின் சுதந்திரம் எனப் பிரகடனப்படுத்தியது. அமெரிக்கா தைவானுக்கு உதவ முடிவு செய்து சீன நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும் அதிநவீனப் போர் விமானங்களை தைவானுக்கு சப்ளை செய்தது. சீனாவின் எச்சரிக்கையை மீறி அதிபர் லீ டெங் ஹூய்யைத் தனது நாட்டுக்கு சிறப்பு விருந்தாளியாக அழைத்துச் சென்றது.

இதனால் சீனாவின் பார்வை தைவானின் மீது கடுமையாக இருந்ததால், ஜனநாயக முன்னேற்றக் கட்சி சீன அரசு ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை இணைக்காமல் இருந்தால், தனிநாடு என்ற கோரிக்கையை தைவான் விட்டுவிடும் என அறிக்கை வெளியிட்டது. மேலும் மேலும் தைவானின் சர்வதேசத் தொடர்புகளை விரிவுபடுத்த வெளிநாடுகளில் உள்ள பல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டது.

தைவானில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறி அமெரிக்க குடிமகன்களாகிவிட்ட தைவானியர்கள் நாடு திரும்பினால் தைவான் அரசின் உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தது. அவற்றை செயலிலும் காட்டிவிட்டது தைவான். ‘சீனா என்பது சீனாதான். தைவான் என்பது தைவான்தான்’ என்று அறிவிப்பு செய்து இரண்டும் வெவ்வேறு நாடுகள் எனப் பிரகடனப்படுத்தியது. தைவான் நாட்டு பாஸ்போர்ட்டுகளில், ‘சீனாவில் அச்சடிக்கப்பட்டது’ என்ற வாசகம் நீக்கப்பட்டு, ‘தைவானில் அச்சடிக்கப்பட்டது’ என மாற்றி அமைக்கப்பட்டது. தைவானின் ராணுவப் புள்ளிவிவரப்படி 2001ல் இருந்து 2010 வரை 116.6 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா சீன எதிர்ப்பையும் மீறி தைவானோடு பொருளாதார ஒப்பந்தம் செய்தார் மற்றும் அதிநவீன எஃப்16 போர் விமானங்களை தைவானுக்கு வழங்கினார்.

நவீன விஞ்ஞானத்தில் தனது நாட்டை முன்னேற்றி வரும் சீன ஆட்சியாளர்கள், தைவானை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமாகவும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தைவானின் தற்போதைய அதிபர் அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை உடனடியாக வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அக்கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு என்று சில முக்கியக் கடமைகள் உள்ளன. வலிமை குறைவான நாடுகளை மிரட்டல் விடும் நாடுகளிடமிருந்து பாதுகாப்பதும் ஒன்றாகும். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது பூடான் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தியத் துருப்புக்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்து சீனத் துருப்புக்களை அங்கிருந்து வெளியேறுமாறு செய்தன. இச்செயல் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் ராணுவ நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் முதுகெலும்பை முறித்து 20 நாடுகளின் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களை மீட்டுக் கொடுத்த பெருமை இந்தியக் கடற்படையே சாரும். சீனச் சரக்குக் கப்பலும் மீட்கப்பட்டது.  எதிரிக்கும் ஆபத்தில் உதவ வேண்டும் என்ற இந்திய சித்தாந்தத்தை உலகம் தெரிந்துகொண்டது. எத்தியோப்பியா, லெபனான், காங்கோ, இலங்கை போன்ற நாடுகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட நமது முப்படையினரின் சாகசச் செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 

சீன நாட்டிற்கு உலக அரங்கில் ஆக்கிரமிப்பாளன் என்ற பெயரோடு தரம் குறைந்த பொருட்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது என்றும், உலக நாடுகளுக்கு 10 மடங்கு ஏற்றுமதி, ஆனால் ஒரு மடங்கு மட்டுமே அந்நாடுகளிலிருந்து இறக்குமதி என்ற சற்றும் நியாயமில்லாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்றும் அவப்பெயர் உண்டு.

நியாயம் வெல்லும், அதர்மம் படுதோல்வி அடையும் என்ற விதியின்படி சீனா தோல்வியடைவது உறுதி. இந்திய நாடு தைவானுக்குத் தேவையான பொருளாதார ராணுவ உதவிகளை வல்லரசு நாடுகளிடம் நன்கு கலந்து ஆலோசித்துச் செய்ய வேண்டும். இது நமது கடமையும் கூட.