பூணூலில் தூக்குமாட்டிக்கொள்ளும் திராவிட இனவெறி | பி.ஆர். ஹரன்


(வலம் ஜூலை-2018 இதழுக்காக இந்தக் கட்டுரையை பி.ஆர்.ஹரன் தனது மறைவுக்கு இரண்டு நாள் முன்பாக அனுப்பியிருந்தார்) 
தமிழ் தலைமகன் என்கிற பெயரில் டுவிட்டரில் உலாவும் ஒருவர், கமல்ஹாசனிடம், “நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு கமல்ஹாசன், “நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல்”. அதனாலேயே அதைத் தவிர்த்தேன்என்று பதில் சொல்லியிருந்தார்.
இந்தச் சிறிய சம்பாஷணையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவதாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தமிழறிவு”. “தமிழ் தலைமகன்என்கிற பெயரில் உலா வருபவரின் தமிழறிவு பல்லிளிக்கின்றது. அவருடைய கேள்வியில் பிழைகள் இருக்கின்றன. அவருக்குப் பதிலளித்த தமிழ் கலைஞரோ, படிக்கும் நூலைப் பற்றிக் கேட்டால், அணியும் முப்புரி நூலைப் பற்றிப் பதிலளிக்கிறார். இவர் தன்னைக் கவிஞராக வேறு காட்டிக்கொள்பவர். இந்த மாதிரி சாதாரணமான ஒரு கேள்வியைக்கூட பிழையின்றிக் கேட்கத்தெரியாதவர்களும், சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லத் தெரியாதவர்களும்தான் இன்று தமிழகத்தில்தமிழ்வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவதாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்இனவெறி”. சாதாரணமான தமிழ் நூல் பற்றிய கேள்விக்கு முப்புரிநூலை அசிங்கப்படுத்தும் விதமாகப் பதிலளித்து, தன்னுடைய தாழ்வு மனப்பான்மையையும், முட்டாள்தனத்தையும், அடையாள நெருக்கடியையும் ஒருங்கே வெளிக்காட்டிக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகாலத்திற்கும் அதிகமான ஆட்சியில், தமிழறிவு அதலபாதாளத்திற்கும், இனவெறி ஆகாயத்திற்கும் சென்றுள்ளன. இதில் தமிழறிவைப் பற்றி வேறொரு சமயம் பார்ப்போம். இப்போது இந்தக் கட்டுரையில் திராவிட இயக்கத்தின் இனவெறியைப் பற்றி, குறிப்பாக பிராம்மண துவேஷத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கமல்ஹாசன் பிராம்மண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் பிராம்மண கலாசாரத்திற்கு விரோதமாகவே வளர்ந்தவர். ஆயினும், முதல் திருமணத்தைப் பிராம்மண முறைப்படி செய்துகொண்டவர். இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமணங்களை திருமணம் என்கிற சடங்குகள் இல்லாமல் செய்துகொண்டவர். சட்டப்படிப் பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை. மூன்று மனைவிகளும் அவரை விட்டு விலகிவிட்டனர்.

இவர் பல ஆண்டுகளாகத் தன்னைப் பகுத்தறிவுவாதியாகவும் ஈவெராவின் சீடராகவும் முன்னிலைப் படுத்திக்கொள்பவர். ஆயினும் திராவிட இயக்கத்தினர் இவரை முழுமையாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இவரும் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் எல்லாம் பிராம்மணப் பண்பாட்டையும், பிராம்மணர்களையும் கொச்சைப்படுத்தியும், எள்ளி நகையாடியும் செய்திருக்கிறார். பேட்டிகளிலும் அவமதித்துப் பேசியுள்ளார். முதுகு சொறிவது தவிர பூணலினால் வேறு எந்தப் பயனும் இல்லை என்றெல்லாம் பேசியிருக்கிறார். அப்படியிருந்தும் திராவிட இனவெறியாளர்கள் இவருக்கு அங்கீகாரம் கொடுத்தபாடில்லை. இவரை இன்னும் பிராம்மணராகவே பார்க்கின்றனர்.
தற்போது முழுநேர அரசியலுக்கு வந்து, கட்சியும் தொடங்கிவிட்ட நிலையில், தன்னைப் பகுத்தறிவுவாதியாகவும், மதச்சார்பின்மைவாதியாகவும், ஈவெரா மண்ணின் திராவிடனாகவும் காட்டிக்கொள்ள வேண்டிய சூழலில், மேற்கண்ட டுவிட்டர் கேள்விக்குப் பதிலளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த மாதிரியான தொடர் நடத்தை இவர் அடையாள நெருக்கடியில் (Identity Crisis) சிக்கித் தவிக்கிறார் என்பதையே காட்டுகிறது.
கமல்ஹாசனைப் போன்ற கோழைகள் இவ்வாறு கோமாளித்தனங்களில் ஈடுபடுவதற்கு, திராவிட இயக்கம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வளர்த்துவந்துள்ள, ஆரியதிராவிட கட்டுக்கதைகளும், பிராம்மணத் துவேஷமும்தான் காரணம். கமல்ஹாசனின் கோமாளித்தனமான முட்டாள்தனமான இந்தப் பேச்சின் பின்னணியில் இருக்கும் பிராம்மணத் துவேஷ அரசியலைப் பார்ப்போம்.
கடந்த வருடம் (2017) ஜூலை மாதம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்கிற தீவிரவாத அமைப்புபன்றிக்குப் பூணல் அணிவிக்கும்போராட்டத்தை அறிவித்திருந்தது. பெரும்பாலும் பிராம்மண சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் ஆவணி அவிட்டம் பண்டிகைக்கு (07.08.2017) எதிராக இந்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும், சென்னையில் குறிப்பாக பிராம்மணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூரில் சமஸ்கிருதக் கல்லூரி வாசலில் இந்தப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அந்தத் தீவிரவாத அமைப்பினர் அறிவித்திருந்தனர். நிறைய இடங்களில் சுவர்களில் இந்த அறிவிப்பை எழுதியிருந்தார்கள்.
இந்த அறிவிப்பு வெளிவந்த ஜூலை 18ஆம் தேதி அன்றே பல ஹிந்து அமைப்பினர், காவல்துறைக்குப் புகார் மனுக்கள் அனுப்பினர். தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறை இந்தப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், முன்நடவடிக்கையாக அவ்வமைப்பினரைக் கைது செய்யவேண்டும் என்றும் கோரியிருந்தனர். காவல்துறையும் அவ்வமைப்பினரை வைத்தே அவர்கள் எழுதிய சுவர் சித்திரங்களையும் அறிவிப்புகளையும் அழிக்கச் செய்தனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்தும் கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர். அவ்வமைப்பு போராட்டத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆயினும் பயனில்லை.
காவல்துறை எச்சரிக்கையாக ஆகஸ்டு 7ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஆயினும், மயிலாப்பூரில் அல்லாமல் ராயப்பேட்டை அருகே அவ்வமைப்பினர் சிலர் பன்றிக்குட்டிகளுக்குப் பூணல் அணிவித்து அவற்றின் வாயையும் திறக்கமுடியாமல் கட்டிவைத்து, கயிற்றினால் அவற்றை இழுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலிஸார், ஒன்பது பேரைக் கைதுசெய்து, பன்றிக் குட்டிகளையும் அவர்களிடமிருந்து விடுவித்தனர். இந்தப் போராட்டத்தில் மூச்சுமுட்டி ஒரு பன்றிக்குட்டி இறந்துபோனது.

7ஆம் தேதியன்று சந்திர கிரகணம் இருந்ததால், அதனால் ஏற்படும் தோஷத்தைத் தவிர்ப்பதற்காக, அன்று கொண்டாடப்படவிருந்த ஆவணி அவிட்டம் பெரும்பான்மையான சம்பிரதாயங்களால் அடுத்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது இந்தத் தீவிரவாத அமைப்பினருக்குத் தெரியாமல்போனது நகைமுரண். அதோடு கூட, ஹிந்து மதத்தில் பிராம்மணர்கள் மட்டுமல்லாமல், செட்டியார்கள், ஆச்சாரிகள், வன்னியர்கள் போன்ற பல்வேறு சமுதாயத்தவர்களும் பூணல் அணிபவர்கள்; அவர்களும் ஆவணி அவிட்டம் அன்று பூணல் மாற்றிக்கொள்கிறார்கள் என்கிற தகவல்களும், நிரந்தரமாகப் பூணல் அணியாத பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான ஹிந்துக்களும் குறிப்பிட்ட சுக, துக்க நிகழ்ச்சிகளில் பூணல் அணிந்தே சடங்குகளைச் செய்கிறார்கள் என்கிற தகவலும், பட்டியல் வகுப்புகளில் கூட சில சமுதாயத்தவர்கள் (குயவர்கள் போன்றவர்கள்) பூணல் அணிபவர்கள் என்கிற தகவலும் இந்தப்பகுத்தறிவுப் பகலவன்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, இந்தப் போராட்டம் பெரும்பான்மையான ஹிந்து சமுதாயத்தவர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த அமைப்பினர் கூடிய விரைவில் தெரிந்துகொள்வார்கள். அப்போது தங்கள் இயக்கத்தின் அழிவை கண்ணெதிரிலேயே காண்பார்கள்.
தமிழகத்தில் பிராம்மணத் துவேஷம் என்பது இன்று நேற்று வந்த விஷயம் அல்ல. திராவிடர் கழகம் ஆரம்பித்த நாள் முதல் வளர்க்கப்பட்டு வருகின்றது. சொல்லப்போனால், தி.. தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே பிராம்மணத் துவேஷம் அன்னிய சக்திகளால் விஷவித்தாக விதைக்கப்பட்டிருந்தது. அன்னிய சக்திகளின் ஆதரவுடன் .வெ.ரா 1925ஆம் ஆண்டு தேச விரோத இயக்கமாகத் தொடங்கியதுதான்சுயமரியாதை இயக்கம்”. அதே பிராம்மணத் துவேஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதை அஸ்திவாரமாகக்கொண்டு தன்னுடைய ஆரியதிராவிட இனவெறி அரசியலைக் கட்டமைக்கத் தொடங்கியது அவ்வியக்கம்.
சமூகநீதியையும், ஜாதி ஒழிப்பையும் முக்கிய குறிக்கோள்களாகச் சொல்லிக்கொண்டாலும், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் பிராம்மணர்களையே குற்றம் சொல்லி அவர்கள்மீது பழி சுமத்திய .வெ.ரா, பிராம்மணர்களையும், பழங்காலம்தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்துமத சடங்கு சம்பிரதாயங்களையும், கலாசாரப் பழக்கவழக்கங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்ற தன்னுடையஉயரியநோக்கத்திற்காகவும், அதன் மூலம் அரசியல் லாபம் பெறுவதற்காகவும், தன் சுயமரியாதை இயக்கத்தைப் பெரிதும் பயன்படுத்தினார். “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடித்துக் கொல்லுஎன்று தன் சமூகச் சீர்திருத்தக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார். அவருடைய தலைமையில் தெருமுனைக் கூட்டங்கள், நாடகங்கள் மூலம் பிராம்மணத் துவேஷம், இந்துமத எதிர்ப்பு, பிரிவினைவாதம் போன்ற தேச விரோதக் கொள்கைகள் தமிழகமெங்கும் பரப்பப்பட்டன. இந்த சுயமரியாதை இயக்கமே பின்நாட்களில் திராவிடர் கழமாக உருவானது.
1949ல் .வெ.ராவின் போக்கு பிடிக்காமல் திராவிடர் கழகத்தை விட்டு வெளியே வந்த அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். இயக்கத்திலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தாலும், பின்பற்றிய கொள்கைகளில் மாற்றம் இல்லை. தி..வில் இருந்த பிராம்மணத் துவேஷம் தி.மு..விலும் தொடர்ந்தது. தெருமுனைப் பிரசாரங்கள், சினிமாக்கள் மூலம் பரப்பப்பட்டது. .வெ.ராவும் அண்ணாவும் காலமான பிறகு, கருணாநிதியும் வீரமணியும் பிராம்மணத் துவேஷக் கொள்கையை மேலும் தீவிரமாக்கினர். .வெ.ரா இருந்தபோதே ஆரம்பித்துவிட்ட பிராம்மணர்கள் மீதான, பூணலை அறுப்பது, குடுமிகளை வெட்டுவது போன்ற தாக்குதலும் வன்முறையும், கருணாநிதிவீரமணி கூட்டணியில் மேலும் பயங்கரமாகத் தொடர்ந்தன. பிராம்மணர்கள் வெளியில் வரவே பயப்படும் சூழலும் ஏற்பட்டது.
ஆனால், கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த பிறகு, பிராம்மணர்கள் மீதான தாக்குதல்கள் பெருமளவு குறைந்துபோய் நாளடைவில் நின்றே போனது. திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கையான நாத்திகத்தை முழுவதுமாகப் புறக்கணித்தது .தி.மு.. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் பேராதரவு .தி.மு.கவுக்குக் கிடைத்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சில தடங்கல்களை எதிர்கொண்டு அடக்கி கட்சியைக் கைப்பற்றி ஆட்சியையும் பிடித்த ஜெயலலிதாவின் ஆட்சியிலும் பிராம்மணர்கள் மீதான தாக்குதல்கள் இல்லாமல் இருந்தன.

ஆயினும், 2006ஆம் ஆண்டு மீண்டும் தி.மு. ஆட்சி உருவான பிறகு, பிராம்மணத் துவேஷம் முன்னுக்கு வந்தது. பிராம்மணர்கள் மீதான தாக்குதல்களும் வன்முறையும் மீண்டும் ஆரம்பித்தன. பிராம்மணத் துவேஷத்தை வைத்தே தன் நாத்திக, ஹிந்து விரோத அரசியல் கோட்டையைக் கட்டிய .வெ.ராவின் சிலையை, உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் மனங்களைப் புண்படுத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ஆலயத்தின் முன்பு வைத்துத் திறந்தனர் திராவிடர் கழகத்தினர். அதற்கு முழு ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் நல்கியது கருணாநிதியின் தி.மு. அரசு. “தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கத்து ரங்கநாதனையும் பீரங்கி வைத்துத் தகர்க்கும் நாள் என்னாளோ, அன்னாளே எங்களுக்குப் பொன்னாள்என்று கூக்குரலிட்டு வந்த திராவிட இனவெறிக் கூட்டம், அவ்வாறு செய்ய முடியாததால், அதற்குப் பதிலாக .வெ.ராவின் சிலையை ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக வைத்தது.
ஸ்ரீரங்கத்தில் செய்ததுபோல தமிழகத்தில் மேலும் 128 கோயில்கள் முன்பாக .வெ.ராவின் சிலைகளை வைக்கப்போவதாக வீரமணி அறிவிக்க, அதற்குத் தங்கள் அரசு அனைத்து ஒத்துழைப்பும் தரும் என்று கருணாநிதியும் அறிவித்தார். சிலைக்குத் திறப்பு விழா நடப்பதற்கு முன்பாகவே ஹிந்து மக்கள் கட்சியினரால் அதன் தலை துண்டிக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. கருணாநிதி அரசு அவ்வழக்கில் பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துத் தன்னுடைய துவேஷத்தைக் காட்டிக்கொண்டது. .வெ.ராவின் சிலைகளைக் கோயில்கள் முன்பாக வைப்பதைக் கண்டித்து அவர் பத்திரிகை அறிக்கை வெளியிட்டதற்காக சில உடைப்பு வழக்கில் அவர் பெயரைச் சேர்க்கத் துணிந்தது கருணாநிதி அரசு. பின்னர் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி அவர்களின் எச்சரிக்கைக்குப் பிறகு ஸ்வாமிஜியின் பெயர் நீக்கப்பட்டது. பிறகு அதற்கெனவே தயாராகச் செய்து வைத்திருந்ததைப்போல வெண்கலச் சிலையை ஒரே நாளில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள் திராவிடர் கழகத்தினர்.
அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டையில் ஏப்ரல் 20, 2007 அன்று பி. மனோகரன், மீரான் ஹுஸ்ஸேன் ஆகிய இருவர் .வெ.ராவின் சிலையைச் சேதம் செய்தனர். அதன் விளைவாக தமிழகத்தில் பல இடங்களில் மடங்கள் மற்றும் கோயில்கள் மீது திராவிடர் கழகத்தினரும் தி.மு.கழகத்தினரும் .தி.மு.கவினரும் தாக்குதல் நடத்தி வன்முறையில் இறங்கினர். பிராம்மணர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
தஞ்சை பெருவுடையார் கோயில் குருக்கள் ஒருவரைத் தாக்கி அவரின் பூணலையும் குடுமியையும் அறுத்தனர். நெய்வேலி வில்லுடையான்பட்டு முருகன் கோயில் குருக்களாக இருந்த 74 வயது குருமூர்த்தி என்பவர் மீது 10 திராவிடர் கழக குண்டர்கள் கடுமையான தாக்குதல் நடத்தினர். அவரின் குடுமியையும், பூணலையும் அறுத்து, அவருடைய 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பிடுங்கிக்கொண்டு கோயில் விநாயகர் சிலையையும் உடைத்துச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய வீட்டிற்குள் புகுந்து, அவருடைய மகன் ஞானஸ்கந்தனையும், அவருடைய சகோதரர் மகன் கணேசனையும், பேரன் கோபிநாத்தையும் அடித்து அவர்களின் பூணலையும் குடுமியையும் அறுத்தனர். சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபமும் வன்முறைக்குப் பலியானது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு அங்கிருந்த கடவுளர் சிலைகள் உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். சேலம் சங்கர மடத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கும் தெய்வச் சிலைகள் உடைக்கப்பட்டன. இவ்வாறு தமிழகத்தில் பல இடங்களில் பிராம்மணர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முத்துப்பேட்டையில் .வெ.ரா சிலையைச் சேதம் செய்தவர்கள் இருவருமே பிராம்மணர்கள் இல்லை. ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் அப்பிராம்மணர். அப்படியிருக்க தி. குண்டர்களும் தி.மு. குண்டர்களும் பிராம்மணர்களை ஏன் தாக்கவேண்டும்? சிலையைச் சேதம் செய்தவர்களில் ஒருவர் முஸ்லிம் எனும்போது, மசூதிகளின் மீதோ அல்லது முஸ்லிம் மௌலவிகள் மீதோ ஏன் தாக்குதல் நடத்தவில்லை? இதிலிருந்தே, .வெ.ரா சிலையைச் சேதம் செய்தது இவர்களே நடத்திய நாடகமாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழத்தானே செய்கிறது? ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அம்மாநிலத்தை ஆளும் முதல் அமைச்சரின் தலையாய கடமையாகும். ஆனால் கருணாநிதியின் ஆட்சியில் பிராம்மணர்களுக்கு என்றுமே பாதுகாப்பு இருந்தது கிடையாது.
2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத் தலைமைச் செயலருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குருக்கும் இடையே நடந்த டெலிபோன் பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .தி.மு. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டன. அரசின் நடவடிக்கையையும், முதல் அமைச்சரின் ராஜினாமாவையும் கோரின. அப்போது கர்நாடக மாநிலத்தில் இதேபோல் நடந்த டெலிபோன் ஒட்டுக்கேட்ட சம்பவத்தில் அப்போது கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவைச் (பிராம்மணர்) சுட்டிக்காட்டிப் பேசிய கருணாநிதி, “என்ன செய்வது? இந்த முதல்வர் பூணல் அணிந்தவர் இல்லையே! கடவுளின் முகத்தில் இருந்து தோன்றிய ஜாதியைச் சேர்ந்தவர் இல்லையே! கால்களிலிருந்து தோன்றிய ஜாதியைச் சேர்ந்தவர்தானே!” என்று தன்னுடைய மேதாவிலாசத்தை வெளிக்காட்டினார்.
அதேபோல 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம், உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் தடைசெய்தபோது, அப்போதைய நீதிபதிகள் இருவரையும் அவமதிக்கும் விதமாக, “லட்சக்கணக்கானோரின் தலைவிதியை இரண்டு அல்லது மூன்று பேர் தீர்மானிப்பதா? தடை விதித்த இரண்டு நீதிபதிகளும் பூணல் அணிந்த ஆரியர்கள்என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியும், தி. தலைவர் வீரமணியும் அறிக்கை வெளியிட்டனர்.
அனைத்து ஜாதி அர்ச்சகர்சட்டத்தைக் கொணர்ந்த தி.மு. அரசு, அர்ச்சகர்களுக்கான ஓராண்டு பயிற்சி முகாம்கள் நடத்தியது. அப்போது பயிற்சி பெறுபவர்கள் பூணல் அணியத் தேவையில்லை என்று அரசாணை வெளியிட்டுத் தன்னுடைய பிராம்மணத் துவேஷத்தை மீண்டும் வெளிக்காட்டிக்கொண்டார் கருணாநிதி.
இந்துக் கடவுளரைக் கொச்சைப்படுத்துவதையே தொழிலாகக்கொண்டிருக்கும் இவர்களின் மேதாவிலாசம், பிராம்மணனாகப் பிறந்த ராவணனைத் திராவிடனாகவும், க்ஷத்ரியரான ராமரை ஆரியராகவும் வர்ணித்தபோது வெளிப்பட்டது. தி.மு.கவின்முரசொலி’ இதழும், தி.கவின்விடுதலை’ இதழும் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பிராம்மணத் துவேஷத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இரு பத்திரிகைகளும் பிராம்மணர்களை அவமதிக்காத நாள் இல்லை என்றே சொல்லலாம்.
பிராம்மணத் துவேஷத்தையே வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து அரசியல் நடத்திய .வெ.ரா, தன்னுடைய சுயநலன் என்று வரும்போது பிராம்மணரான ராஜாஜியின் ஆலோசனைகளின்படியே செயல்பட்டார். கருணாநிதியும் தன்னுடைய சுயநலனுக்காகத் தன்னைச் சுற்றி, மருத்துவர் முதல் யோகா ஆசிரியர் வரை, பிராம்மணர்களையே வைத்துக்கொண்டார். இவர்களுடைய குடும்பத்துப் பெண்கள் தாலியணிந்து, கோயில்களுக்குச் சென்று வழிபட்டு, இல்லங்களில் பூஜைகள் செய்து, வாழ்கின்றனர். இவர்கள் வீட்டுக் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஆங்கிலமும் ஹிந்தியும் கற்று படிக்கின்றனர்.
இவர்களுடைய பிராம்மணத் துவேஷம், கடவுள் மறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு, சுயமரியாதை திருமணம், ஜாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் எல்லாம் ஊருக்கு உபதேசம்தானே தவிர, இவர்கள் பின்பற்றுவதற்கில்லை. நாட்டையும் மக்களையும் ஏமாற்றி, போலித்தனமான அரசியல் செய்துவந்த இவர்கள் இன்று சாயம் வெளுத்து, தோலுரிக்கப்பட்டு அசிங்கமாக நிற்கிறார்கள்.
இவர்கள் சென்ற ஆண்டு நடத்திய பன்றிக்குப் பூணல் அணிவிக்கும் போராட்டம் நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றது. குறிப்பாக இளையதலைமுறையினர் இவர்களின் இனவெறி அரசியலைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். திராவிட இனவெறி இன்று பூணலில் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளது. இது தெரியாமல் நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல, கமல்ஹாசன் உளறிக்கொட்டித் தானே அசிங்கப்பட்டிருக்கிறார். தமிழகம் கைகொட்டி எள்ளிநகையாடிச் சிரிக்கின்றது! அரசியல் தலைவராக வலம் வரவேண்டியவர் அரசியல் கோமாளியாக நடந்துகொண்டு வருகிறார்.
ஆதாரங்கள்:
1.   பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது
Read more at:
 http://tamil.oneindia.com/news/tamilnadu/9-periyarist-held-panrikku-poonool-podum-porattum-292052.html
5.   தினமலர் – 23 ஏப்ரல் 2007 : – (https://groups.yahoo.com/neo/groups/anti_hindu_watch/conversations/topics/86 )

பாரதி யார்? – முதல் மேடை அனுபவம் | பி.ஆர்.ஹரன்


எட்டு மாதங்களுக்கு முன்னால், இசைக்கவி ரமணன், “ஹரன்! பாரதி பற்றிய ஒரு நாடகத்தின் திரைக்கதை விவாதம் (Script Reading) இருக்கு. வந்து உனது கருத்துக்களைச் சொல்” என்றார். Script reading இரண்டு முறை நடந்தது. ரமணன் அண்ணாவும் திருமதி தர்மாராமனும் (இயக்குநர் SBS ராமன் அவர்களின் மனைவி) படித்தார்கள். அருமையான வசனங்கள். இசைக்கவி பாரதிக்கடலில் மூழ்கி வசன முத்துக்களை வெளிக்கொணர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் பாவத்துடன் படிக்கும்போதே சில காட்சிகளில் கண்கள் பனித்தன. காட்சி அமைப்புகள் பற்றியும் கூடவே கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

பாரதியாக ரமணன் அண்ணாவும் செல்லம்மாவாக தர்மாஜியும் நடிக்கப்போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம். இருவரும் திறம்படச் செய்வார்கள் என்பதும் தெரியும். குவளைக் கிருஷ்ணன் பாத்திரத்திற்குப் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் விஜய் சிவா என்று ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தனர். அவர் நடிக்கக் கூடியவர் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஆயினும் ரமணனும் இயக்குநர் ராமனும் தேர்ந்தெடுத்ததாலும், கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களில் அவருடைய பங்காற்றலைப் பார்த்ததாலும், அவர் மீது முழு நம்பிக்கை பிறந்தது.

அதன் பிறகு அண்ணாவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, மற்ற பாத்திரங்களுக்கும் நல்ல திறமையானவர்கள் அமையவேண்டும் என்று பராசக்தியிடம் என் பிரார்த்தனையைச் சமர்ப்பித்துவிட்டு எப்பொழுதும்போல் என் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு வாரம் கழித்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “ஹரன்! ‘பாரதி யார்?’ நாடகத்தில் ஒரு பாத்திரம் ஏற்கச் சம்மதமா?” என்று கேட்டார். “அண்ணா! எனக்கு மறதிப் பிரச்சினை உண்டு. அதனால்தான் தொலைக்காட்சி விவாதங்களில் கூடக் கலந்துகொள்வதில்லை. மேடையில் பேசும்போது குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசிவிடலாம். ஆனால் மேடை நாடகத்தில் முடியுமா என்று தெரியவில்லை. வசனத்தை மறந்துவிட்டால் நன்றாக இருக்காது. என்னால் மற்றவர்களுக்கும் கஷ்டம். வேண்டாம்” என்றேன்.

“இல்லை ஹரன். சிறிய கதாபாத்திரம்தான். மண்டையம் ஸ்ரீனிவாசாச்சார் பாத்திரம். இரண்டே இரண்டு காட்சிகள்தான். வசனமும் கொஞ்சம்தான். உன்னால் நிச்சயம் முடியும். எனக்குத் தெரியும்” என்று ஊக்கமளித்தார். நானும் ஒப்புக்கொண்டேன்.

சேலம் சுப்பிரமணிய நகர் சாரதா தொடக்கப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது, ராமாயணம் நாடகம் போட்டார்கள். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களால் ராமாயணக் கதாநாயகன் “ஸ்ரீ ராமன்” வேடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் ஈடுபாடு காட்டாமலும் வசனங்களை மனப்பாடம் செய்யாமலும் இருந்ததால், ஒற்றை வரி (இரண்டே வார்த்தைகள்) வசனம் மட்டுமே கொண்ட மந்திரி வேடத்திற்குத் தள்ளப்பட்டதுதான் என்னுடைய முந்தைய நாடக அனுபவம்..

‘பாரதி யார்?’ நாடகத்தின் வசன ஒத்திகை ஆரம்பித்தது. அவரவர்களின் வசனங்களை அனைவருக்கும் மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார் இயக்குநர் ராமன். ஏற்ற இறக்கங்களுடன் காட்சிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகளைக் காண்பித்து வசனங்கள் பேசிப் பயிற்சி செய்தோம். இந்த வசன ஒத்திகை சுமார் மூன்று வாரங்களுக்குச் சென்றது. பார்த்துப் படிப்பது முடிந்து ஒவ்வொருவராக மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்தோம்.

அத்தனை வசனங்களை பாரதியும், செல்லம்மாவும் பேசுவதைப் பார்த்து எனக்கும் நம்பிக்கை வந்தது. மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்துவிட்டேன். இதனிடையே ஆரம்பத்தில் சில நாட்கள் செல்லம்மாவின் அண்ணன் அப்பாதுரையாகவும், சுப்பிரமணிய சிவாவாகவும் நடிக்க வேண்டியவர்கள் ஒத்திகைக்கு வர இயலாத சூழலில் அவர்களின் வசனங்களையும் பேசவேண்டி வந்தது.

என்னையும் அறியாமல் நாடகத்தில் முழுவதுமாக ஒன்றிப்போனேன். “நீங்கள் அப்பாதுரை, சிவம் வசனங்களையும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அவற்றை ஏற்று நடிக்க வேண்டி வரலாம்” என்று ராமன், ரமணன் இருவரும் சொன்னார்கள். சரி என்று அதற்கும் என்னைத் தயார் செய்துகொள்ள ஆரம்பித்தேன். நல்ல வேளையாக கிரி டிரேடர்ஸ் ரங்கநாதன் அப்பாதுரையாக வந்து சேர்ந்தார். திறமையான செய்தி வாசிப்பாளராகவும், பாடகராகவும் அறியப்பட்டிருந்த ரங்கநாதன் அருமையாக வசனம் பேசுவதைப் பார்த்தவுடன் நல்ல பொருத்தமான ஒருவர் குழுவில் சேர்ந்துள்ளார் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது.


பின்னர் சுப்பிரமணிய சிவம் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போகவே, அந்த வேடத்தை நான் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரமான யதுகிரி (மண்டையம் ஸ்ரீனிவாசாச்சார் மகள்) பாத்திரத்திற்குப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் ராதிகா சுரஜித் அவர்களின் மகள் கிருத்திகா சுரஜித் பொறுப்பேற்றுக்கொண்டார்.

எட்டையபுரம் மஹாராஜாவாக டாக்டர் ஆர்.எல்.ராஜா அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். ராஜா என்னுடைய நெடுநாள் நண்பர். நான் பத்திரிகை உலகிற்கு வருவதற்கு முன்னால் விற்பனைப் பிரிவில் வேலையில் இருந்தபோது, அவருடன் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். அப்போது நாங்கள் விற்பனை தொடர்பான கருத்தரங்கங்களில் Topic Presentations செய்யும்போது அவற்றைக் கிட்டத்தட்ட ஒரு நாடகம் போலவே செய்வோம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு நினைவுபடுத்தி, உன்னால் இங்கும் நன்றாகச் செய்ய முடியும் என்று அவரும் என்னை ஊக்கப்படுத்தினார்.

குழுவில் கடைக்குட்டியாக வளரும் கவிஞன், பாரதியைப் பெரிதும் நேசிக்கும் இளைஞன், தம்பி விவேக் பாரதி, பாரதி தாசனாகவும், கனகலிங்கமாகவும், பம்பாட்டியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டான்.

ஏற்கெனவே அறிமுகமான நண்பர் விட்டல் நராயணன் வ.உ.சிதம்பரமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வானவில் பண்பாட்டு மையத்திலும், பாரதி விழாக் குழுவிலும் பொறுப்பில் இருந்தமையால் அவற்றையும் கவனித்துக்கொண்டு, ஒத்திகைகளிலும் கலந்துகொண்டு ஓயாமல் உழைத்தார்.

அரசவைப் புலவராகவும், சிஐடியாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீகணேஷ் சின்னத்திரையில் பிரபலம். நாயனக்காரர், ரௌடி தம்பலா, வண்டிக்காரர் என்ற பாத்திரங்களை ஏற்றுக்கொண்ட பரமேஸ்வரன் ஹரிஹரன் எஸ்.பி கிரியேஷன்ஸின் ‘அந்த நாள்’ நாடகத்திலும் நடிப்பவர். அரசவைப் புலவரின் மனைவி கோமுவாகவும், நெல்குத்தும் பெண்ணாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட சரண்யா, சகோதரி நிவேதிதையாக பொறுப்பேற்றுக்கொண்ட தீபா, எட்டையபுரம் மகாராணி பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் புவனா, வக்கீலாகவும் பாகவதராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட தர்மராஜன் மற்றும் ஸ்ரீவத்ஸன், கலா, ஆறுமுகம், யுவராஜ் என்று நடிகர்கள் அனைவரும் மற்றும் பின்னணியில் திறமையாகப் பணிபுரிந்தவர்களும் புதிய நண்பர்களாகக் கிடைத்தது மற்றொரு சந்தோஷம்.

பிறகு ஒத்திகைகள் வேகம் பிடித்தன. வசன ஒத்திகை முடிந்து தள ஒத்திகைக்குள் நுழைந்தோம். ஒத்திகைகள் பெரும்பாலும் கலாட்டாக்கள்தான். ராமன் அவர்கள் வீட்டிலேயே கூடத்தில் ஒத்திகை நடத்தினோம். விரைவிலேயே ‘பாரதி யார்?’ குழு ஒரு குடும்பமாக மாற்றம் கண்டது. ஒவ்வொரு நாள் ஒத்திகையின் போதும் அவரவர்கள் இனிப்புகளும் தின்பண்டங்களும் கொண்டுவருவதும், ராமன், தர்மா ராமன் தம்பதியர் அவர்களின் விருந்தோம்பலும், ஒத்திகைக்கு முன்பும் பின்பும் களைகட்டின. மாலை தேநீர் முதல் இரவு உணவு வரை அனைத்தும் தயார் செய்யப்பட்டு ரகளையாகத்தான் ஒத்திகைகள் நடக்கும்.

காட்சிகளுக்குத் தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டதும், அவற்றைக் காட்சிக்குக் காட்சி மாற்றியமைப்பதிலும் ஒத்திகை தேவை என்பதால், வீட்டுக் கூடத்திலிருந்து மொட்டை மாடிக்கு ஒத்திகைத்தளம் மாற்றப்பட்டது. மழை நாட்களில் மீண்டும் வீட்டுக் கூடத்திலேயே ஒத்திகை நடந்தது.

இதனிடையே பாடல்களும் இசையும் பதிவு செய்யப்பட்டன. ராமன் – தர்மா ராமன் தம்பதியரின் மகன் வீணைக்கலைஞர் பரத்வாஜ் ராமன் அருமையாக இசை அமைத்திருந்தார். விஜய் சிவா, இசைக்கவி ரமணன், சைந்தவி பிரகாஷ், அனந்து, டாக்டர் காயத்ரி கண்ணன், வைஜயந்தி, ‘கிரி’ ரங்கநாதன் ஆகியோர் அருமையாகப் பாடியிருந்தனர்.

ஷோபனா ரமேஷ், லலிதா கணபதி ஆகியோர் தங்கள் நடனக் குழுவினருடன் ஒத்திகையில் சேர்ந்துகொண்டனர். ஆகவே, இசை, நடனம் ஆகியவற்றுடன் ஒத்திகைப் பார்த்தது மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது.

அந்தப்பக்கம் ஒத்திகை நடக்கும்போது, இந்தப்பக்கம் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்போம். சிலர் கைப்பேசியும் கையுமாக இருப்பார்கள். யாராவது பேசிக்கொண்டிருந்தாலோ, கைப்பேசியும் வாட்ஸப்புமாக இருந்தாலோ இயக்குநர் ராமனுக்குக் கோபம் வந்துவிடும். காட்சியில் இல்லாதவர்களும் ஒத்திகை செய்யப்படும் காட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். அவர் அந்தப்பக்கம் காட்சியில் கவனம் செலுத்தும்போது, மீண்டும் இந்தப்பக்கம் குசுகுசுவென்று பேசுவதும் கைப்பேசியில் தட்டுவதும் தடவுவதும் தொடரும். மீண்டும் வேகமாக வந்து எல்லோரையும் கடிந்துகொண்டு, தன்னைச் சாந்தப்படுத்திக்கொள்ள ஒரு லட்டையோ அல்லது சமோசாவையோ வாயில் போட்டுக்கொண்டு போவார்.

எங்களுடன் இந்தப்பக்கம் பேசிக்கொண்டும், அந்தப்பக்கம் டைரக்டரிடம் தான் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பது போலக் காட்டிக்கொண்டும் தர்மாராமன் அசத்துவார். அதிலிருந்துதான் அவரின் நடிப்புத்திறமையைப் புரிந்துகொண்டேன். அரசவைப் புலவராக நடிக்கும் ஸ்ரீகணேஷ் தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களையெல்லாம் பகிர்ந்துகொள்வார். நடனமாடும் குழந்தைகளுடன் விடுகதைகளும் puzzles, Riddles போன்றவையும் கேட்டுக்கொண்டு விளையாடிக்கொண்டு இருப்போம்.

இவை எல்லாவற்றிலும் கலந்துகொண்டும், அதே சமயத்தில் இனிப்புகளையும் காரங்களையும் காலி செய்துகொண்டும் இருப்பான் தம்பி விவேக் பாரதி. பாரதி ரமணன்தான் பாவம். முதல் மற்றும் கடைசிக் காட்சிகள் தவிர மற்ற அனைத்துக் காட்சிகளிலும் இருப்பதால் அவரால் இந்தக் கலாட்டாக்கள் எதிலும் கலந்துகொள்ள முடியாது. கலாட்டாக்கள், ரகளைகள், தமாஷ்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தோம் என்பது சத்தியம். பாரதமாதாவுக்கும், பாரதிக்கும் செய்யும் சேவையாக அர்ப்பணிப்புடன் ஒத்திகை பார்த்தோம். அதன் முழுப்பயனையும் அரங்கேற்றத்தின் நிறைவில் பெற்றோம். 

டிசம்பர் 9ம் தேதி (2017) வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழா துவக்கம். துவக்க விழாவின் முதல் நிகழ்ச்சியாக தி.நகர் பாரத் கலாச்சார் அரங்கில் நாடகத்தை அரங்கேற்றம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

எனவே, நிறைவாக 6, 7 தேதிகளில் பாரத் கலாச்சார் அரங்கிலேயே முழு ஒப்பனைகளுடன் ஒத்திகை பார்த்தோம். 8ம் தேதி அனைவருக்கும், ஒரு நாள் ஓய்வு தேவை என்பதால் ஒத்திகையை ரத்து செய்தோம்.

முன்னோட்டங்களுக்கு வந்த வரவேற்புகளையும் கருத்துகளையும் பார்க்கும்போதே, அரங்கம் நிறைந்துவிடும், இருக்கைகள் இல்லாமல் பார்வையாளர்கள் நின்றுகொண்டும் பார்க்க நேரிடும் என்று எதிர்பார்த்தோம். நாடக அரங்கேற்றமான 9ம் தேதி சனிக்கிழமை அன்று அதே போலவே ஆயிற்று. ஒரு சில முக்கிய மனிதர்களுக்கே (VIPs) கூட இருக்கைகள் இல்லாமல் போய், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும்வரை அவர்கள் நின்று கொண்டு பார்க்க வேண்டியதாகிவிட்டது.

அரங்கேற்ற நாள் காலையிலிருந்தே வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்திருந்தன. தொடர் ஒத்திகைகள் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருந்தாலும், அரங்கேற்றத்திற்குச் சற்று முன்னால் மேடையின் பக்கவாட்டிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் படபடப்பது காதிலும் கேட்க ஆரம்பித்தது.

மூடியிருந்த திரைக்குப் பின்பக்கம் குழுவினர் அனைவரும் வட்டமாக நின்று கைகோர்த்து எங்கள் பிரார்த்தனையை கணபதிப் பெருமானுக்குச் செலுத்தியவுடன் படபடப்பு மறைந்து தைரியம் எழுந்தது. வசனங்களை மனதில் சொல்லிப்பார்க்கும்போது, தங்குதடையின்றி வந்தன. நாம் நன்றாகச் செய்து விடுவோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன் சுற்றிலும் பார்த்தபோது, ஒவ்வோர் மூலையிலும் ஒவ்வொருவர் தங்கள் வசனங்களைச் சொல்லி நடித்துப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அனைவரும் ஒருமனதாக நாடகம் வெற்றி பெறவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் இயங்கிக்கொண்டிருந்தோம்.

கவிமாமணி ரவி அவர்களின் சுருக்கமான அருமையான அறிமுகமும் ராஜ்குமார் பாரதியின் பிரார்த்தனைப் பாடலும் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தன.

தொடக்கக்காட்சியில் முதல் வசனம் நான்தான் பேசவேண்டும். ஒழுங்காகத் தொடங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு நல்லபடியாகப் பேசிமுடித்தேன். அதன் பிறகு நாடகம் முடியும் வரை ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தன. பங்கேற்ற அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்தனர். நான் பங்கு பெறாத காட்சிகளை மேடையின் பக்கவாட்டில் மறைந்திருந்து பார்த்தபோதும், அவைகளுக்குப் பார்வையாளர்கள் அளித்த வரவேற்பைக் கண்டபோதும் பெருமிதமாக இருந்தது. நடித்தவர்கள் யாருமே தொழில்முறை நடிகர்கள் கிடையாது என்பதுதான் சிறப்பான விஷயம். பலருக்கும் என்னைப்போலவே இதுதான் முதல் மேடை அனுபவம்.

பின்னணியில் எல்.இ.டி. திரையில் காட்சிகள் அரங்கேறும் பின்னணி நேரலையாகக் காட்டப்படுவது மேலும் மெருகூட்டியது. அது நாடகத்திற்குக் கூடுதல் மதிப்பைக் கொடுத்தது. Thandora Event கதிர் தன் குழுவினருடன் அருமையாகச் செய்திருந்தார். அதே போல பேபி சார்லஸின் ஒளி அமைப்பு அட்டகாசமாக இருந்தது. எல்லாமாகச் சேர்ந்து நாடகத்தை ஒரு முழுமையான விருந்தாகப் பார்வையாளர்களுக்கு வழங்கின.

நாடகத்தைக் கண்டு களித்தோர் அனைவரும் இசைக்கவி ரமணனிடம் பாரதியின் அவதாரத்தை தரிசித்தனர்; தர்மா ராமனிடம் வித்தியாசமான, இதுவரை கண்டிராத செல்லம்மாவின் மறுபக்கத்தைக் கண்டனர்; விஜய சிவாவிடம் குவளைக் கண்ணனின் நவரசங்களையும் கண்டு களித்தனர்; கிருத்திகாவிடம் பாஞ்சாலி முதல் யதுகிரி வரையிலான புதுமைப்பெண்களைக் கண்டனர். இவ்வாறு ஒவ்வோர் பாத்திரப் படைப்பிலும் உண்மைத் தன்மையையும் யதார்த்தத்தையும் கண்டனர்.

காட்சிகள் அமைப்பிலும், பின்னணியில் இயங்கிய ஒலி/ஒளி காட்சிகளிலும் இயக்குநர் ராமனின் திறமையைக் கண்கூடாகப் பார்த்தனர். இசையிலும் பாடல்களிலும் பரத்வாஜ் ராமனின் திறனை வெகுவாக ரசித்தனர். சிறுமிகள் உட்பட நடன மங்கையரின் நடனங்கள் காண்பவர் மனதைக் கொள்ளைகொண்டன. 

நாங்கள் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது நாடகம்.

நாடகம் நிறைவடைந்ததும் மேடையில் நாடகக் கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்களும், மாநிலங்கள் அவை உறுப்பினர் இல.கணேசன் அவர்களும், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி அவர்களும் மனமாரப் பாராட்டியது மனதுக்கு நிறைவைத் தந்தது. தெரிந்தவர், தெரியாதவர் என்று அனைத்துப் பார்வையாளர்களும் மேடைக்கு வந்து கைகுலுக்கிப் பாராட்டியது உற்சாகத்தையும், பெருமிதத்தையும் ஒருங்கே தந்தது.

நாடகம் முடிந்தவுடன் நேரில் கிடைக்கப்பெற்ற பாராட்டுகளும், நல்ல விமரிசனங்களும், இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

பிரபல நாடகக் கலைஞர் கிரேசி மோகன் குழுவில் பல வருடங்கள் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள அருமை நண்பர் எஸ்.வி.பத்ரி தற்போது மும்பையில் இருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, “நாங்கள் நடித்து ரிடையர் ஆகிவிட்டோம். நீங்கள் ரிடையர் ஆனபிறகு நடிக்க வருகிறீர்களா?” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டு, வாழ்த்துத் தெரிவித்தார்.

நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் நண்பர் ‘திராவிட மாயை’ சுப்பு அவர்கள் போனில் கூப்பிட்டு, “ஹரன்! நீ நேர்மையானவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சரியான நடிப்புப் பேர்வழியாக இருக்கிறாயே!” என்று தனக்கே உரிய பாணியில் பாராட்டினார்.

அதற்குப் பிறகு சென்னையில் 6 இடங்களிலும், கோவை மற்றும் மதுரையில் இரண்டு முறையுமாக மொத்தம் ஒன்பது முறை அரங்கேற்றம் ஆகிவிட்டது. சில பாத்திரங்களில் சிலர் நடிக்க வர முடியாத சூழ்நிலைகளில் அவ்வப்போது புதிய நண்பர்கள் வந்து நடிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு V.V.பாலசுப்பிரமணியன், கணபதி, ப்ரியங்கா ரகுராமன், உமா ராமசாமி, வித்யா நாயர், ஸ்ருதி, ராதாகிருஷ்ணன், ஆர்த்தி விட்டல் போன்றவர்களும் குழுவில் இணைந்துள்ளார்கள். நடனக் குழுக்களும் மாறியுள்ளன. தொடர்ந்து பல ஊர்களிலிருந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

பராசக்தியின் அருளிலும், பராசக்தி மைந்தனின் ஆசியிலும் “பாரதி யார்?” மேலும் பல ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அரங்கேறும்; பாரதியின் புகழ் உலகமெங்கும் மேலும் பரவும் என எதிர்பார்க்கலாம்.

பராசக்தி மைந்தனுக்கும் பாரத மாதாவுக்கும் வணக்கம். வந்தேமாதரம். 
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: அளப்பரிய பணிகளும் அருகதையற்ற தேசமும் | பி.ஆர்.ஹரன்


ஏழைகளுக்கு உணவளியுங்கள்; தேவையுள்ளவர்களைக் கவனியுங்கள்; கல்வியற்றவர்க்குக் கல்வியறிவைக் கொடுங்கள்; அவர்கள் அனைவரும் திருப்தியாக சம்பாதித்துக் கௌரவமான வாழ்க்கை வாழ வழிவகை செய்யுங்கள்; உங்கள் முயற்சியால் அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு கைப்பிடி உணவும் நீங்கள் எனக்குச் செய்யும் பிக்ஷா வந்தனம் ஆகும்.

– காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

மும்மூர்த்திகள்

ஸ்ரீ ஆதிசங்கரர், ‘நகரேஷு காஞ்சி’ என்று நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்டு வரும் காஞ்சி மாநகரில் நிறுவிய ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக, அனைவராலும் ‘மஹா பெரியவா’ என்று போற்றி வணங்கப்பட்ட பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 1907ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 13ம் தேதியன்று பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடெங்கும் பல்லக்கிலும், பின்னர் கால்நடையாகவும் சுற்றுப்பயணம் செய்து, பாரத தேசத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், வேத நாகரிகத்தையும், சனாதன தர்மத்தையும் மக்களிடையே போதித்து வந்தார். ‘முற்றும் துறந்த துறவி’ என்கிற பதத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்.

1954ம் ஆண்டு மார்ச்சு மாதம் 22ம் தேதி அன்று, தஞ்சை மாவட்டத்தின் ‘இருள் நீக்கி’ என்கிற கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியனைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு சன்யாஸ தீக்ஷை அளித்து, அவரைத் தனக்கு அடுத்த பீடாதிபதியாக ‘ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று நாமகரணம் சூட்டி நியமித்தார். குருவின் காலடியைப் பின்பற்றி அவருடன் இணைந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபடலானார் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இருவரும் இணைந்தே நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ‘மஹா பெரியவா’ என்றும் ‘புதுப் பெரியவா’ என்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருவரையும் போற்றி வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தில் பிறந்த ஸ்ரீ சங்கரநாராயணனைத் தன் சீடராக ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ஜெயேந்திரர், அவருக்கு 1983ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி அன்று, தன்னுடைய குருவான மஹா பெரியவாளின் அனுக்ரஹத்துடன், தீக்ஷை அளித்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் என்று நாமகரணம் சூட்டி, காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது ஆச்சாரியாராக நியமித்தார்.

அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியன்று மஹா பெரியவா சித்தி அடைகின்றவரை, ஏறக்குறைய பத்து ஆண்டுகள் மும்மூர்த்திகளாக மூன்று ஆச்சாரியார்களும் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டனர். மூன்று ஞான சூரியர்களின் ஒளிவெள்ளத்தில் அருள் பெற்ற பக்தர்கள், மஹா பெரியவா, புதுப் பெரியவா ஆகியோருடன் சேர்த்து ஸ்ரீ சங்கர விஜயேந்திரரை ‘பால பெரியவா’ என்று போற்றி வழிபட்டு ஆனந்தித்தனர். மூன்று பீடாதிபதிகள் ஒரே சமயத்தில் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டது என்பது காஞ்சி காமகோடி பீடத்தில் மட்டுமே நடந்துள்ள விசேஷமாகும்.

காஞ்சி சங்கர மடம் உலகப்புகழ் பெற்று மகோன்னதமான நிலைக்கு உயர மஹா பெரியவாளுடன் இணைந்து செயல்பட்டு, அவருக்குப் பின்னர் மேலும் பல்வேறு தளங்களில் மடத்தின் பணிகளை விரிவாக்கம் செய்த பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28ம் தேதி புதன்கிழமையன்று (சுக்ல பக்ஷ த்ரயோதஸி) சித்தி அடைந்தார். மார்ச்சு ஒன்றாம் தேதி அவருடைய பிருந்தாவனப் பிரவேசம் மஹா பெரியவா பிருந்தாவனத்தின் அருகிலேயே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12ம் தேதிவரை வேத பாராயணங்கள், பஜனைகள் என்று பலவிதமாக ஸ்ரத்தாஞ்சலிகள் நடைபெற்று, 13ம் தேதியன்று ஆராதனை நிறைவடைந்தது.ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாகச் சிறப்புப் பெற்றவர்

பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பல தனிச் சிறப்புகள் பெற்றவர். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு அடுத்தபடியாக பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர். நான்கு முறை பாரதத்தை வலம் வந்தவர். 51 சக்தி பீடங்கள், 7 முக்தித் தலங்கள், 12 ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்கள் ஆகியவற்றைத் தரிசனம் செய்து 7 புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்தவர். நேபாளம், சீனம் மற்றும் வங்க தேசம் ஆகிய வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப் பெற்றவரும் இவரே!

1974ம் ஆண்டு நேபாள அரசின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக நேபாளம் சென்றார். ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாக நேபாளத்திற்குச் சென்ற சங்கராச்சாரியார் என்கிற பெருமையும் பெற்றார். அங்குள்ள அனைத்து க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்தார். பெரியவாளின் ஆலோசனையின் பேரில் நேபாள மன்னர் பசுபதிநாத் ஆலயத்தின் நுழைவில் ஸ்ரீ ஆதிசங்கரர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார். மேலும் ஆச்சாரியாரின் மற்றொரு ஆலோசனையின்படி, நேபாள-இந்திய எல்லையில் மிர்கஞ்ஜ் எனுமிடத்தில், ‘உலகின் ஒரே ஹிந்து நாட்டிற்கு வரவேற்கிறோம்’ என்கிற வரவேற்பு வளைவை நிறுவினார் நேபாள மன்னர். அந்த வளைவை 1988ல் திறந்து வைத்தார் ஸ்ரீ ஜெயேந்திரர்.

சீன அரசின் அழைப்பின் பேரில் 1998ல் கைலாயம் செல்லும்போதும் நேபாளத்திற்கும் சென்று அரசு விருந்தினராக மன்னர் பிரேந்திராவால் மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, அந்நாட்டின் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கைலாயத்திற்கும் மானசரோவருக்கும் சென்றார். ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாக கைலாயத்திற்கும், மானசரோவருக்கும் யாத்திரை சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவரே! சீன அரசு அவரைப் பிரதம விருந்தாளியாகப் பாவித்து பலத்த பாதுகாப்பும், விமரிசையான மரியாதைகளும் ஏற்பாடு செய்தது. கைலாயப் பாரிக்கிரமத்தின் தொடக்கத்திலும் நிறைவிலும் (14000 அடிகள் உயரத்தில்) ஆதிசங்கரரின் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார். அவர் அங்கே சென்ற தினம் குரு பூர்ணிமா தினம் என்பதோடு மட்டுமல்லாமல் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையாக நேர்ந்தது. மிகவும் ஆனந்தத்துடனும் பக்தியுடனும் மானசரோவரில் ஸ்நானம் செய்துவிட்டு குரு பூர்ணிமா தினத்தன்று செய்யப்படும் ‘வியாச பூஜை’ செய்தார். அதன் பிறகு மனநிறைவுடன் அருளாசி வழங்கியபோது, சீனப்பயணத்திற்கு விஸா (VISA) கிடைக்கப் பதினைந்து நாட்கள் தாமதம் ஆனதால், குரு பூர்ணிமா தினத்தன்று கைலாய மானசரோவரில் வியாச பூஜை செய்யும் பாக்கியம் கிடைத்தது இறைவனின் அருளே என்று கூறினார்.

பின்னர் 2001ல் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்திற்கு வெள்ளி மற்றும் தங்கத்தினாலான வில்வங்களைக் காணிக்கையாக அளித்தார், பாதரச லிங்கத்தை பனி ஆவுடையார் மீது வைத்து வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசம் சென்று, சக்தி பீடமான டாகேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அடுத்ததாக அந்த ஆலயத்திற்குச் சென்ற சங்கராச்சாரியார் என்கிற பெருமையைப் பெற்றார். ஆலய வாயிலுக்கு ‘சங்கராச்சாரியார் வாயில்’ என்று பெயர் சூட்டியதோடு மட்டுமல்லாமல், அங்கே ஒரு வரவேற்பு வளைவு நிறுவி அதற்கு ‘ஜெயேந்திரா வளைவு’ என்கிற பெயரையும் சூட்டியது வங்கதேச அரசு.

ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் லடாக் பகுதியில் சிந்து நதிக்குப் பூஜை செய்யும் கைங்கர்யத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் குரு பூர்ணிமா தினத்தன்று சிந்து பூஜை நடந்து வருகின்றது.

ஸ்ரீநகருக்கும் ஜம்முவிற்கும் இடையே உள்ள ரம்பான் என்னும் இடத்தில் சரஸ்வதி தேவிக்கு ஓர் ஆலயம் நிறுவினார்.

ஹிமாலய யாத்திரையின்போது, கேதார்நாத் ஆலயத்திற்கு ஸ்படிக லிங்கம் வழங்கினார். ஆதிசங்கரர் சன்னிதியில் பளிங்குக் கல்லில் ஆதிசங்கரரின் ஸ்லோகங்களைப் பொறிக்கச் செய்தார். திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைகளை அச்சிட்டுப் படங்களாக ஆக்கி அவ்வாலயத்தில் மாட்டச் செய்தார். பத்ரிநாத், பஞ்ச பத்ரி, பஞ்ச ப்ரயாகைகள், ரிஷிகேஷ், ஹர்த்வார் போன்ற பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.

யுகதர்மம் காத்த ஜகத்குரு

ஸ்ரீ ஜெயேந்திரர் செய்துள்ள தர்மப்பணிகள் ஏராளமானவை, அளப்பரியவை. காலமாற்றத்திற்கு ஏற்ப, யுகதர்மத்தை நோக்கமாகக் கொண்டு, அதே சமயத்தில் ஆச்சாரங்களுக்கும் மரபுகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் உட்பட்டு, மடத்தின் அணுகுமுறைகளை சற்றே வித்தியாசமாக மாற்றி அமைத்துக்கொண்டார். இதனால் மடத்தின் சேவைகள் பல தளங்களில் பெரிதும் விரிவடைந்தன. தேசத்தின் மூலைமுடுக்களில் இருக்கும் மக்களையெல்லாம் போய்ச்சேர்ந்தன.

வேத ரக்ஷணம்

தன்னுடைய குருவான ஸ்ரீ மஹா பெரியவாளின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ மடத்தின் கிளைகளை நாடெங்கும் நிறுவினார். தற்போது பாரதத்தில் மொத்தம் 40 இடங்களில் சங்கர மடத்தின் கிளைகள் உள்ளன. அதே போல 30க்கும் அதிகமான இடங்களில் வேத பாடசாலைகள் நடந்து வருகின்றன. புரிந்துணர்வின் அடிப்படையில் நேபாளத்திலும் வேத பாட சாலைகளை மடம் நடத்தி வருகின்றது. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட், வேத தர்ம சாஸ்த்திர பர்பாலன சபா, கலவை பிருந்தாவன டிரஸ்ட் போன்ற பல அறக்கட்டளைகள் மூலம், வேத பாடசாலைகளை நடத்தி, வேதம் பயிலும் மாணாக்கர்களுக்குச் சகல வசதிகளும் செய்து வருகின்றது சங்கர மடம். வேதம் படிக்கும் மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி, பரீட்சைகள் வைத்து, வேத பண்டிதர்களை உருவாக்கி வருகின்றது. வைதீகத்தில் ஈடுபட்டு வருபவர்களின் நலனையும் பலவிதங்களில் காப்பாற்றி வருகின்றது. வைதீகத்தில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. வயதான வைதீகர்களுக்கும் வேத பண்டிதர்களுக்கும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.

அத்வைத சபா, ஸ்ரீ ஆதிசங்கரா அத்வைத ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளை அமைத்து அவற்றின் மூலமாக அத்வைதத் தத்துவங்களைக் கற்றுக்கொடுக்கவும் பரப்பவும் வழிவகை செய்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். த்வைத, விசிஷ்டாத்வைத தத்துவங்களைக் கற்ற பண்டிதர்களையும் வரவழைத்து, கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தி அவர்களுக்கும் மரியாதைகள் செய்து, அம்மடங்களுக்கும் சென்று அம்மடங்களின் ஆச்சாரியார்களைச் சந்தித்து பரஸ்பரம் மரியாதைகள் செய்து, ஏற்றுக்கொண்டு, நல்லதொரு சுமுகமான நட்பான சூழ்நிலைகளையும் ஒற்றுமையையும் உருவாக்கியவர் ஸ்ரீ ஜெயேந்திரர்.

சம்ஸ்க்ருதக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்காக அமரபாரதி பரிக்ஷா சமிதி போன்ற அமைப்புகளைத் தொடங்கினார். தபால் வழிக் கல்வியாகவும் சம்ஸ்க்ருதம் கற்றுத்தரப்படுகிறது. பகவத் கீதை, காவியங்கள், காப்பியங்கள், இலக்கணம் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. ‘சம்ஸ்க்ருதஸ்ரீ’ என்கிற பத்திரிகையும் நடத்தப்படுகின்றது.

தமிழ் வளர்ச்சியிலும் மடத்தை ஈடுபட வைத்துள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். தமிழ் இலக்கியவாதிகளையும், புலவர்களையும், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் அளித்து, நலவுதவிகளும் விருதுகளும் அளித்து வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பல தமிழ் நூல்களையும் தொடர்ந்து பதிப்பித்து வருகின்றார்கள். பள்ளி மாணவர்களுக்கு திருமுறைகள், திவ்யப் பிரபந்தங்கள், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றைக் கற்பித்துப் போட்டிகளும் நடத்தப்பட்டுப் பரிசுகளும் தரப்படுகின்றன. குழந்தை மாணாக்கர்களுக்கு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன.

ஆலயப் பாரம்பரியம் காத்தல் 

புதிய கோவில்களைக் கட்டுவதைவிட, பாழடைந்துள்ள பழைய கோவில்களைப் புனருத்தாரணம் செய்து பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாடு கொண்டவர் ஸ்ரீ ஜெயேந்திரர். நூற்றுக்கணக்கான பாழடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்தவர். அந்த மாதிரி பாழடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்யும் கைங்கர்யத்தில் பொதுமக்களையும் ஈடுபட வைத்து அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணருமாறு செய்தவர். தன்னுடைய வாழ்நாளில் நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்தவர்.

காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலுக்குப் பொன்கூரை வேய்ந்தார். தங்க ரதமும் வெள்ளி ரதங்களும் அளித்தார். சிதம்பரம் நடராஜருக்கு வைரங்கள் பதித்த குஞ்சித பாதம் அளித்தார். திருப்பதி பெருமாளுக்கு வைர க்ரீடம், வைர மாலை, வைர பூணல், தங்க அபய ஹஸ்தங்கள், தங்கப் பாதங்கள் ஆகியவற்றை மடத்தின் சார்பாக அளித்துள்ளார். சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லத்தைப் புதுப்பித்தார். பழனியில் முருகனுக்கு வெள்ளி வேலும், விநாயகருக்கு வெள்ளிக் கவசமும் அளித்தார். பிள்ளையார்பட்டி விநாயகருக்கு முத்துமாலை அளித்துள்ளார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்குத் தேர் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காசியில் காமகோடீஸ்வரர் கோவிலைக் கட்டினார். காலடியில் ஆதிசங்கரர் கீர்த்தி ஸ்தம்பமும், பிரயாகையில் ஆதி சங்கரர் ஆலயமும் நிர்மாணித்தார்.

1984ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, ராஜ ராஜ சோழனுக்குத் தங்கக் க்ரீடம் அளித்ததோடு மட்டுமல்லாமல், கோவிலில் நிரந்தர பூஜை நடைபெற ஏதுவாக ஒரு அறக்கட்டளையும் தொடங்கி வைத்தார். அவ்வமயம், அம்மன்னனின் 80 கல்வெட்டுகளைச் சேகரித்து, அவற்றை ‘சிவபாத சேகரனின் கல்வெட்டுகள்’ என்று புத்தகமாக வெளியிட்டார். இது போன்று நாடெங்கும் இருக்கும் ஏராளமான கோவில்களுக்கு எண்ணற்ற கைங்கர்யங்கள் செய்துள்ளார்.

ஆலயம் சார்ந்த பாரம்பரியத் தொழில்களையும் அந்தத் தொழில்களில் ஈடுபடும் சமூகத்தவரும் முன்னேற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அதற்கேற்றவாறு பல திட்டங்களையும் வகுத்தவர். சிலை வடிக்கும் சிற்பிகள், ஓதுவார்கள், உபன்யாசகர்கள், நாதஸ்வர தவில் வித்வான்கள், சிவாச்சாரியார்கள், கிராமக் கோவில் பூஜாரிகள் போன்றவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் ஸ்வாமிகள்.

சிற்பக் கலை வளர்ச்சிக்கென, சிற்பக் கலைப் பயிற்சிப் பாடசாலையை நடத்தி வருகின்றது சங்கர மடம். அதே போல ஆகம சாஸ்த்திரத்தைப் போற்றி வளர்க்கும் விதமாக ஆகமப் பாடசாலைகளையும் நடத்தி வருகின்றது. ஓதுவார்களும், உபன்யாசகர்களும் ஒவ்வோர் ஆண்டும் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளும் நலத்திட்டங்களும் உதவிகளும் அளிக்கப்படுகின்றன.

கிராம தேவதைக் கோவில்கள் பராமரிக்கப்படுவதிலும் விசேஷமான அக்கறை கொண்டவர் ஸ்வாமிகள். கிராமக் கோவில்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்தவர். தாம் மேற்கொள்ளும் யாத்திரைகளின் போது கிராமக் கோவில்களுக்கு சென்று நேரில் அவர்கள் குறைகளைக் கண்டறிந்து, கேட்டறிந்து அவற்றை நீக்கியவர். குறிப்பாக ஹரிஜனங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அதிகம் செய்தவர். அவர்களுக்குக் கோவில்கள் கட்ட நிதியுதவி மட்டுமல்லாமல் விக்ரஹங்களும் அளித்து உதவியவர். கிராமக் கோவில் பூஜாரிகளுக்குப் பூஜைகள் முறையாக எப்படிச் செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடு செய்தவர். அவர்களுக்கும் பல நலத்திட்டங்களை ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து செய்தவர்.

ஒரு வேளை பூஜைக்கும் நைவேத்யத்திற்கும் இயலாத நிலையில் இருக்கும் பல கோவில்களுக்கு இரண்டு வேளை விளக்கேற்றவும், ஒரு வேளை நைவேத்யம் செய்யவும் ‘க்ஷேத்ர பரிபாலன சங்கம்’ என்கிற அமைப்பை அவர் தோற்றுவித்து இன்றும் அதன் சேவை நடைபெற்று வருகிறது.

ஆலயங்களில் நந்தவனத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு துளசி, வில்வம் போன்ற செடிகளும் மரங்களும் வளர்க்க ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆலய நந்தவனங்களில் மூலிகைச் செடிகளும் வளர்க்கப்பட ஏற்பாடுகள் செய்துள்ளார்.

கோ சம்ரக்ஷணம்

பசு பாதுகாப்பு அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு தர்மம். ஒவ்வோர் ஆலயத்திலும் பசு மடம் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். அதற்காகப் பாடுபட்டதோடு மட்டுமல்லாமல், செயல்படுத்த உதவிகளும் புரிந்தவர். நாடெங்கும் பல கோ சாலைகள் நிறுவியுள்ளார். பல்வேறு சேவை அமைப்புகளுக்கு கோ சாலைகள் நிறுவ ஊக்கமும் உதவியும் அளித்துள்ளார். இந்தியாவில் பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பிரதமரிடமும், அரசியல் தலைவரிடமும் வலியுறுத்தி வந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பசுவதைத் தடைச் சட்டம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்தவுடன், அதற்காக ஒரு ஆணையம் அமைத்து, உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் வாஜ்பாய். பசு மட்டுமல்லாமல் அனைத்துவகைக் கால்நடைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்று போகுமிடமெல்லாம் பேசி அறிவுறுத்தி வந்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர்.

கல்விச்சேவை

ஸ்ரீ ஜெயேந்திரரின் கல்விச்சேவை சொல்லி மாளாது. மஹா பெரியவாளின் ஆலோசனைப்படி வேத பாடசாலைகளும், ஆகம பாடசாலைகளும் நிறுவியது மட்டுமல்லாமல், நவீன கல்விச்சாலைகளும் நிறுவியுள்ளார். பள்ளி மாணாக்கர்களுக்கு தேவ பக்தியும், தேச பக்தியும் சொல்லித்தரப்பட வேண்டும் என்றும், அறிவியலும் கலாசாரமும் இணைந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பியவர்.

பல ஊர்களில் சங்கரா பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. மேநிலை வகுப்புகள் வரை உள்ளன. சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் வேதம் படிக்கும் மாணவர்கள் CBSE பாடத்திட்டத்துடன் நவீன கல்வியையும் கற்கும் விதமாகப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் மாணவர்களுக்கு என்று தனியாக காஞ்சிபுரம், கலவை மற்றும் ஹர்த்வாரில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

ஸ்ரீ ஜெயேந்திரரின் கல்விப் பணிகளின் மணிமகுடமாகத் திகழ்வது 1993ம் ஆண்டு அவர் தொடங்கிய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தான். கலை, அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என்று அனைத்துப் பாடத்திட்டங்களும் கற்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ சக்ரத்தின் வடிவில் கட்டப்பட்டுள்ள ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி சர்வதேச நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்’ வேதாந்தம், நியாய சாஸ்திரம், மந்த்ர சாஸ்த்திரம், தந்த்ர சாஸ்த்திரம், ஜோதிட சாஸ்த்ரம், இலக்கியம், இலக்கணம் என்று இரண்டு லக்ஷத்திற்கும் அதிகமான நூல்களுடன் இயங்கி வருகின்றது. செப்புப்பட்டயங்களையும், ஓலைச் சுவடிகளையும், கல்வெட்டுகளையும் Digital முறையில் சேமித்து வைக்கும் பணியையும் செவ்வனே செய்து வருகின்றது. ஆயுர்வேதக் கல்லூரியும் இயங்கி வருகின்றது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு மூலிகைச் செடிகளை வளர்த்து ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. அந்த மருந்துகளை விற்று வரும் நிதி, அந்த மக்களின் நலனுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

மருத்துவச் சேவை

ஸ்ரீ ஜெயேந்திரரின் மருத்துவச் சேவையும் வியந்து பாராட்டத்தக்கது. 1916ம் ஆண்டு மஹா பெரியவாள் கும்பகோணத்தில் ஒரு ஆயுர்வேத மருந்தகத்தையும், தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனையையும் ஆரம்பித்தார். அப்போது தொடங்கிய காஞ்சி மடத்தின் மருத்துவ சேவை ஸ்ரீ ஜெயேந்திரரின் முயற்சியால் பெரிதும் வளர்ந்து இன்று நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்குத் தரமான சிகிச்சையும் பூரண ஆரோக்யத்தையும் வழங்கும் விதமாகத் திகழ்கின்றது.

சென்னையில் நலிவடைந்த நிலையில் இருந்த Child Trust மருத்துவமனையை எடுத்து அதைத் தரம் மிகுந்த மருத்துவமனையாக மாற்றியமைத்துள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 17 இடங்களுக்கும் மேலாக ஹிந்து மிஷன் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில ஆயுர்வேத மருத்துவமனைகள்.

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவத்தில் சரித்திரம் படைத்து வருகின்றது. கோயமுத்தூரில் காஞ்சி சங்கரா கண் சங்கம் நிறுவியுள்ளார். கண் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரச்சாரம் மேற்கொண்டு இன்று தேசம் முழுவதும் மக்கள் கண் தானம் செய்ய முன்வருவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர்.

பின்தங்கியுள்ள இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளின் நலனுக்காக கௌஹாத்தியில் ஸ்ரீ காஞ்சி சங்கரா சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் கீழ் இயங்கும் ஸ்ரீ சங்கரதேவ நேத்ராலயா அப்பகுதி மக்களுக்கு கண்மருத்துவம் நல்ல முறையில் அளித்து வருகின்றது.

நேபாளத்தின் எல்லையில், பிகார் மாநிலம் மதுபானியில் ஒரு கண் மருத்துவமனை துவக்கினார். ஹிமாலயத்தில் பத்ரிநாத் போகும் வழியில் ஒரு பொது மருத்துவமனை நிறுவினார். கொல்கத்தாவில் ஒரு காஞ்சி சங்கரா மருத்துவ மையம் உள்ளது. ஒடிஷாவில் கடந்த 2016ம் ஆண்டு, 12வது சங்கரா கண் மருத்துவமனை ஸ்ரீ ஜெயேந்திரர் முன்னிலையில் முதல்வர் நவீன் பட்நாயக்கினால் தொடங்கி வைக்கப்பட்டது.

சமுதாய முன்னேற்றம்

திருப்பதி வெங்கடாஜலபதி சன்னிதியில் தியானம் இருக்கும்போது அவருக்குக் கிடைத்த உத்தரவின் படி, 1987ம் ஆண்டு அவர் தொடங்கிய ‘ஜன கல்யாண்’ என்னும் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகின்றது. தனிமையில் இருக்கும் பெண்மணிகளுக்கு சுய வேலை வாய்ப்புத் திட்டத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கைகால்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. ஜன கல்யாண் மூலம் குடிசைத் தொழில்கள் ஏழை மக்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியும், புடவை, திருமாங்கல்யம் போன்ற முக்கியமான பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஹரிஜனங்களுக்குப் பல ஏக்கர் நிலங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுய வேலைப்பாடு திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்களும் வழங்கப்படுகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களும் அமைக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றன.

அனாதைப் பெண் குழந்தைகளுக்கென ஒரு விடுதியும் காஞ்சிபுரத்தில் இயங்கி வருகின்றது, மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதியும் பள்ளியும், காஞ்சிபுரத்திலும் ஹர்த்வாரிலும் நடத்தப்படுகின்றன. தமிழகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல இடங்களில் ஆதரவற்ற முதியோருக்கான இல்லங்கள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றப் பெண்களுக்கான இல்லங்களும் கலவை, காஞ்சிபுரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் உள்ளன. ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள் காப்பகங்களும் நடத்தப்படுகின்றன.

காஞ்சி மூதூர் அர்ச்சகர் நல அறக்கட்டளை என்னும் அமைப்பின் மூலம் ஏழை கோவில் அர்ச்சகர்களுக்கும் கிராமக் கோவில் பூஜாரிகளுக்கும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகின்றது. முதிய வயதான வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

ஏழை மக்களுக்காக கஞ்சிபுரத்திலும் மற்றும் பல ஊர்களிலும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. பரமாச்சாரியார் ஆசிகளுடன் தொடங்கப்பட்ட ‘பிடி அரிசி’ திட்டம் ஸ்ரீ ஜெயேந்திரரால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த சூழ்நிலைகளில் அந்தப் பகுதிகளில் உடனடியாகப் பல உதவிகளைச் செய்ய நிரந்தர உத்தரவிட்டுள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் குஜராத் மாநிலம் பூகம்பத்தினால் பாதிப்புக்குள்ளானபோது, பல்வேறு உதவிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு கிராமங்களை தத்து எடுத்துக்கொண்டு அவற்றை முழுவதுமாக புனர்நிர்மாணம் செய்து எழுப்பியது காஞ்சி மடம். அதே போல கார்கில் யுத்தத்தின் போதும் ராணுவ வீரர்களின் நலனுக்கு உதவி செய்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாய மக்களுக்கு இலவசமாகக் கண்சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஜீவன் தாரா கிணறு திட்டம் என்கிற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் பலவிடங்களில் குடிநீருக்காக கிணறுகள் வெட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ‘ஜீவாத்ம கைங்கர்யம்’ என்கிற அமைப்பின் கீழ் அனாதைப் பிரேதங்களுக்கு சாஸ்த்திரப் பிரகாரம் அந்திமக் காரியங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

சமய நல்லிணக்கம்

1976ம் ஆண்டு பரமாச்சாரியார் ஆசிகளுடன் ‘உலக ஹிந்து மன்றம்’ (World Hindu Council) என்னும் அமைப்பைத் தொடங்கினார் ஸ்ரீ ஜெயேந்திரர். அதன் கீழ், முதல் ஹிந்து மாநாட்டை நடத்தினார். ஹிந்து சமய மன்றத்தின் உறுப்பினர்கள் 700 பேர் மற்றும் இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, ஃபிஜி தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து 1000க்கும் அதிகமானோர் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள், சைவ சித்தாந்தம், விஷ்ணு பக்தி, சங்க இலக்கியத்தில் ஹிந்துமதக் கோட்பாடுகள், கல்வெட்டுகளில் ஹிந்துமதம், போன்ற தலைப்புகளில் பல அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. மாலையில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும், பஜனைகளும் நடத்தப்படன. ஹிந்து மதத்தைப் பற்றிய ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது.

உலக ஹிந்து மன்றத்தின் சார்பில் 1977ம் ஆண்டு மதுரையில் ‘உலக சமய, தத்துவ, கலாசார மாநாடு’ பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. உலகத்தில் உள்ள மதங்களிடையே நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில், பல்வேறு மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் விளக்கப்பட்டன. இந்து மதம், திபேத்திய பௌத்தம், ஜென் பௌத்தம், ஜைனம், ஜொராஸ்ட்ரிய மதம், இஸ்லாம், கிறிஸ்துவம், கிரேக்க மற்றும் எகிப்திய மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்டனர்.

ஹிந்து ஒற்றுமையும் மத நல்லிணக்கமும்

1981ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஹரிஜன சமூகத்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டபோது, தேசமே அதிர்ச்சிக்குள்ளானது. அரசுகளின் நடவடிக்கையை எதிர்பார்க்காமல், உடனடியாக அங்கே பயணம் மேற்கொண்டு, அம்மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து மேலும் பலர் மதம் மாறுவதைத் தடுத்தார். இரு மதத்தினருக்கும் ஏற்படவிருந்த மோதல்களையும் தவிர்க்கச் செய்தார்.

மீனாட்சிபுரம் மட்டுமல்லாமல் அதற்கு முன்பும் பின்பும், அவருடைய யாத்திரைகளில் ஹரிஜனங்கள் வாழும் பகுதிகளில் சென்று அம்மக்களை நேரில் சந்திப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். தன்னுடைய சுற்றுப்பயணங்களின் போது தீண்டாமையை ஒழித்து, ஜாதி வேறுபாடுகள் அற்ற ஒற்றுமையை ஹிந்துக்கள் மத்தியில் வளர்க்கும் விதமாகச் செயல்பட்டார்.

அதே போல அயோத்தி ராம ஜன்மபூமி விஷயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பேச்சு வார்த்தைகளும் இரு மதத்தவர்களிடையே பெரிதும் நம்பிக்கையையும் இணக்கத்தையும் ஏற்படுத்தின. பேச்சு வார்த்தையின் மூலம் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்பி, செயலிலும் ஈடுபட்டார். இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் அவர்மேல் பெரும் நம்பிக்கை கொண்டு அவருக்கு ஒத்துழைப்பு தந்தனர். இன்று ஒரு பக்கம் நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் பல தலைவர்கள் பேச்சு வார்த்தையிலும் சமரச முயற்சியிலும் தீர்வு காண முயல்வதற்கு ஸ்ரீ ஜெயேந்திரர் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளமே காரணம்.

முஸ்லிம் மக்கள் அவர் மேல் பெரிதும் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு, அவர் சித்தி அடைந்தவுடன் அவர்கள் மடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதும், அவருக்காகப் பிரார்த்தனை செய்ததுமே சான்று.

திராவிட இனவாத இயக்கங்களையும், அவற்றுக்குப் பின்னே இருந்து அவற்றை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் அன்னிய சக்திகளையும், அவர்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துக்களையும் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். நாட்டில் நிலவும் போலி மதச்சார்பின்மையையும், மதச்சார்பின்மை என்கிற பெயரில் ஹிந்து தர்மத்திற்கு விரோதமாகப் பல தளங்களில், பல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் அறிந்திருந்தார். இவர்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு, நிதியுதவியும் செய்துகொண்டு, இந்த தேசத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் அன்னிய சக்திகள் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார்.

இவைகளை முறியடிக்கும் விதமாகவே அவருடைய சமூகப்பணிகள் நிறைவேறின. ஹிந்து சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்பட்டால் தீய நோக்கம் கொண்ட சக்திகள் செயலிழந்து போய்விடும் என்கிற உறுதிப்பாட்டுடன் ஹிந்து சமூகத்தை முன்னேற்றுவதிலேயே கவனத்தைச் செலுத்தினார். காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் எந்த அளவுக்கு ஆன்மீகத் தளத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினாரோ, அந்த அளவிற்குச் சமூகத் தளத்தில் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் புரட்சியை ஏற்படுத்தினார்.

துன்பம் மிகு ஒன்பது வருடங்கள்

காஞ்சி பீடத்தின் கீழ் இருக்கும் அனைத்து அறக்கட்டளைகளின் மூலம், ஆன்மீகம், கலாசாரம், கல்வி, மருத்துவம், சமூகம் போன்ற துறைகளில் பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குப் பெரிதும் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையானவற்றைக் கிடைக்குமாறு செய்ததால், அன்னிய மத நிறுவனங்களின் மதமாற்ற மதப்பிரச்சார குறிக்கோளுக்குப் பெரும் தடை ஏற்பட்டது. எனவே, அன்னிய சக்திகள் பெரிதும் ஆத்திரம் கொண்டன. காஞ்சி பீடத்தையும் ஆச்சாரியார்களையும் ஆபத்தில் சிக்கவைத்து அழிக்கும் நோக்கத்துடன், ஊடகத்துறை மற்றும் அரசு இயந்திரத்தின் உதவியுடன் பெரும் முயற்சியில் இறங்கின. மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டு அவர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு, பொய் வழக்கும் தொடரப்பட்டது, ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க அரசு (2004) அவரைத் தீபாவளித் திருநாள் அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. பால பெரியவா ஸ்ரீ விஜயேந்திரரை இரண்டாவது குற்றவாளியாக அறிவித்து 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கைது செய்தது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் இதற்கெல்லாம் சாதகமாக அமைந்தது.

ஹிந்து விரோத சக்திகள் குதூகலித்துக் கொண்டாடின. கைதுப் படலங்கள் தொடங்கியது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை, அன்னிய சக்திகள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து நாத்திகவாத, மதமாற்ற, பிரிவினைவாத, போலி மதச் சார்பின்மைவாத சக்திகளும் இணைந்து ஹிந்து தர்மத்தை அடியோடு குலைக்கும் எண்ணத்துடன் காஞ்சி பீடம் மீதும் பீடாதிபதிகள் மீதும் கடுமையான அவதூறுகளைப் பரப்பின. ஹிந்து விரோத ஊடகங்களின் மூலம் கடுமையான துவேஷப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாளிதழ்களும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பொய்யும் புளுகும் புனைச்சுருட்டும் கலந்த அவதூறுகளை விஷமத்தனமாக வீரியத்துடன் பிரச்சாரம் செய்தன. 2500 வருட பாரம்பரியம் மிக்க ஒரு ஹிந்து மத நிறுவனத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் பயங்கரமான பிரச்சார உத்திகளைக் கட்டவிழ்த்து விட்டன. உலகிற் சிறந்த ஆன்மிக நிறுவனமாக இயங்கிக் கொண்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் என்கிற உன்னத நிறுவனம் தன் பொலிவை இழக்கும் அளவுக்குச் சம்பவங்களும் பிரச்சாரங்களும் நடந்தேறின.

இதனிடையே, உள்ளுக்குள் இருந்தபடியே மடத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இறங்கிய சதிகாரர்களும் இருந்தனர். பீடாதிபதிகளைப் பதவியில் இருந்து இறங்கச் சொன்னார்கள் சில துரோகிகள். வெளியே மடத்தின் நெருங்கிய பக்தர்களாகக் காட்டிக் கொண்டு, பொதுவில் மடத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்துகொண்டு, அதே சமயம் மடத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டனர் சில தீயவர்கள். குருத் துரோகத்திற்கு பிரய்யச்சித்தமும் மன்னிப்பும் கிடையாது. இவர்களின் கதியை இறைவனே தீர்மானிப்பான்.

ஹிந்து அமைப்புகளும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆரம்பத்தில் ஏதோ பெயருக்குச் சில ஆர்பாட்டங்கள் நடத்தியதோடு சரி. அந்த அமைப்புகளுக்கு, தர்மத்தைவிட அரசியல் பெரிதாகப்பட்டது. ஆச்சாரியார்களைவிட ஆச்சாரியார்களுக்குத் தீங்கிழைத்த அரசியல் தலைமைகளின் நட்பும் கூட்டணி உறவும் தேவைப்பட்டது. மொத்தத்தில் இந்த தேசமே ஆச்சாரியார்களைக் கைவிட்டது; தோல்வியுறச் செய்தது.

இருப்பினும், அனைத்து விதமான சதிகளையும், பிரசாரங்களையும், வழக்கையும் இரு குருமார்களும் தைரியமாகச் சந்தித்தனர். உண்மையான குருபக்தி கொண்ட சில நல்லுள்ளங்கள் உறுதியுடன் ஆச்சாரியார்களுக்குத் துணையாக நின்றனர். தைரியமாகச் சதிகாரர்களை எதிர்த்து மடத்திற்கு ஆதரவாக
இயங்கினர். தங்களுடைய சொந்த வாழ்க்கையை மறந்து மடத்தின் தினப்படிச் செயல்பாடுகள் நின்றுவிடாமல் தொடரும் வண்ணம் உழைத்தனர். மடத்தைப் பாதுகாத்தனர். தர்மத்தைக் காத்து நின்றனர்.

ஒன்பது ஆண்டுகாலமாக சித்ரவதை அனுபவித்து வந்த உண்மையான பக்தர்களின் கண்ணீர் துளிகளுக்கும் தினப்படிப் பிரார்த்தனைக்கும் பலன் கிடைத்து. 2013ம் ஆண்டு நீதி நிலைநாட்டப்பட்டது. தர்மம் வென்றது.

அத்தனை விதமான அராஜகத் தாக்குதல்களையும் அமைதியாகத் தாங்கிக்கொண்டு, சிறையில் பட்ட துன்பங்களையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், சட்டத்தின் மாண்பை மதித்து வழக்கு விசாரணைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பையும் அளித்துக்கொண்டு, தங்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளையும் தொடர்ந்து செய்துகொண்டு, ஒன்பது ஆண்டுகளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த ஆச்சாரியார்களின் ஆன்ம பலம், நிலைகுலைந்து போன பக்தர்களுக்கும் பெரும் பலமாகத் துணை நின்றது என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீ ஜெயேந்திரர் இந்த தேசத்திற்குச் செய்துள்ள ஏராளமான எண்ணிலடங்கா தர்மப்பணிகளை வியந்து நோக்கும்போது, அவருக்குத் துன்பம் ஏற்பட்ட காலத்தில் இந்த தேசம் அவருக்குத் துணையாக நில்லாமல் போனதையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனவேதான், இந்த தேசம் அவருடைய அருளைப் பெற அருகதையற்ற தேசமாக எனக்குத் தோன்றுகிறது.
குறிப்புகள்:

Jagathguru Sri Jeyendra Saraswathi Swamiji – An Offering by Sri.P.R.Kannan, M.Tech., Navi Mumbai,www.kamakoti.org

கோவில் சொத்துக்கள்: உயர் நீதிமன்ற உத்தரவு | பி.ஆர்.ஹரன்

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டவை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்கர்கள் போன்று பழங்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களால் கட்டப்பட்டவை. அவ்வாறு தாங்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு அம்மன்னர்கள், நிலங்கள் முதலான சொத்துக்களை ஏராளமாகக் கொடுத்தனர். மன்னர்கள் மட்டுமல்லாமல், பின்வந்த நாட்களில் நிலச்சுவான்தார்களும், செல்வந்தர்களும்கூடக் கோவில்களுக்குப் பலவிதமான சொத்துக்களைத் தானமாகத் தந்துள்ளனர். அந்தச் சொத்துக்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் கோவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், பல்வேறு திருவிழாக்களும் உற்சவங்களும் கொண்டாடுவதும், பசுமடங்கள் கட்டிப் பசுக்களை பராமரிக்கவும் வேண்டும் என்பதே தானமளித்தவர்களின் நோக்கமாகும். மேலும் கோவில் சம்பந்தப்பட்ட, ஹிந்து சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாகும்.


கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும் கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம்.

கடந்த பல ஆண்டுகளில், கோவில் சொத்துக்கள் குறைந்தும் அழிந்தும் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்கவேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளதைக் காண்கிறோம். ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால்தான் இந்த நிலை என்பது தெளிவு. உதாரணத்திற்கு, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களின் கணக்கை எடுத்துக்கொள்வோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் – 5 ஆகஸ்டு 2014). திராவிட மாயையில் கோவில் நிலங்கள் தொடர்ந்து காணாமல் போகின்றன என்பதற்குச் சமீபத்திய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.


காணாமல் போன சிவகங்கை சூரக்குடி கோவில் நிலங்கள்

சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் ஆவுடைநாயகி அம்பாள் சமேத தேசிகநாத ஸ்வாமி திருக்கோவிலின் நிலங்களை முத்துச் செட்டியார் என்பவர் மோசடி செய்து விற்றுள்ளார். இது சம்பந்தமாகக் கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த 2016 நவம்பர் மாதம் அறநிலையத்துறை ஆணையருக்கு மனு அளித்திருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர், “உடனடியாக விசாரணை நடத்தி கோவில் நிலங்களை மீட்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று பரமக்குடியில் உள்ள அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், உதவி ஆணையரோ, அந்த உத்தரவின்படி நடந்துகொள்ளாமல், சிவில் நீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு வழக்குத் தொடரும்படி பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அறங்காவலர் லட்சுமணனின் பிரதிநிதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவு

மனுவை இம்மாதம் (ஃபிப்ரவரி) 12ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “உதவி ஆணையர் அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கத்தையும், சட்டத்தின் நோக்கத்தையும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கத் தவறிவிட்டார். அறநிலையத்துறையின் ஒப்புதல் பெறாமல் சொத்துக்களை விற்க அனுமதித்தால் அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கமே பாழாகிவிடும்” என்று கூறி உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே தமிழகக் கோவில்களின் சொத்துக்களில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போயுள்ளதையும் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், “ஒவ்வொரு பகுதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் சொத்துக்களை மீட்கத் தங்கள் அதிகாரங்களை ஆணையரும் இணை ஆணையர்களும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடந்த 2014ம் வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவின் பேரில் அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த இரண்டாவது முறையாக அளிக்கப்படும் இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நீதிமன்றம் தயங்காது” என்று கூறி வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் அம்சங்கள்

இரண்டு வாரங்களுக்குள் கோவில் சொத்துக்களை மீட்கும் விதமாக பரமக்குடி உதவி ஆணையர் விசாரணை நடத்தி மேல்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கோவில் நிலங்களுக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பெயர்களில் பட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தகவல்களைச் சேகரித்து நான்கு வாரங்களில் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சட்ட விரோதமாக தனிப்பட்ட பயனாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ள கோவில் நிலப் பட்டாக்களை மீண்டும் கோவில் பெயருக்கு மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்துத் தாசில்தார்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோருக்கு வருவாய்த்துறைச் செயலர் உத்தரவிட வேண்டும். அறநிலையத்துறையிடமிருந்து எழுத்துப் பூர்வ அனுமதி இல்லாமல் கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படக் கூடாது.

அனைத்துக் கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கோவில்களின் சொத்துக்கள் விற்பனை, குத்தகை மற்றும் அடைமானம் செய்யப்பட்ட விவரங்களையும், அவற்றுக்கு அறங்காவலர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் பற்றிய விவரங்களையும் நான்கு வாரங்களில் அறிக்கையாக ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்

அறங்காவலர்கள் வசம் உள்ள சொத்துக்கள், சட்ட விரோதமாக மூன்றாம் நபர்கள் பெயர்களில் உள்ள சொத்துக்கள், அனுமதியுடனும் அனுமதியின்றியும் விற்கப்பட்டுள்ள சொத்துக்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகிய விவரங்களைச் சேகரித்து ஆறு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

கோவில் சொத்துக்கள் (விற்பனை, குத்தகை) விஷயத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆணையர் ஆராய வேண்டும்.

கோவில் சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கும் குத்தகைக்கும் விடப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு கீழ்நிலை அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க உடனடி விசாரணை செய்யுமாறு உதவி ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் வசம் உள்ள சொத்துக்களை உடனடியாக ஒப்படைத்துவிடும்படியும், அவ்வாறு ஒப்படைக்காத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சிவகங்கை கோவில் விஷயம்

சிவகங்கை கோவில் நிலங்கள் வழக்கு விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், முத்துச் செட்டியார் என்கிற கோவிலுக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் கோவில் நிலங்களை விற்பனை செய்துள்ளார் என்பதுதான். பரம்பரை அறங்காவலருக்குத் தெரியாமல் நடந்துள்ள விற்பனையாகும் இது. அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவி இன்றி இந்த விற்பனை நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது தெளிவு.

மற்ற சில கோவில்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆராய்ந்தால், கோவில் நிலங்களின் மோசடி விற்பனைகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம் என்கிற உண்மை உறுதி செய்யப்படுகிறது. இவ்வுண்மையைக் கவனத்தில் கொண்டுதான் நீதிபதி மகாதேவன் மேற்கண்ட சிறப்பான உத்தரவை இட்டுள்ளார்.

சட்டமும் கோவில் சொத்துக்களும்

இந்து அறநிலையத்துறைச் சட்டத்தின்படி கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவிலை நிர்வாகம் செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு எந்தக் கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 47வது பிரிவின்படி கோவில்களுக்கு அறங்காவலர்கள் அமைப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத்தவறிய தமிழக அரசும் அறநிலையத்துறையும், அவர்கள் இஷ்டத்திற்கு அறங்காவலர்களுக்குப் பதிலாக அவர்கள் இடத்தில் ‘பொருந்தும் நபர்கள்’ (Fit Persons) என்கிற பெயரில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிலரையே நியமிக்கின்றன. ஆனால் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் அரசு அலுவலர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க இடமோ அதிகாரமோ கொடுக்கப்படவில்லை.

அறங்காவலர்கள் என்று யாரும் இல்லாதபோது, கோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்கும், விற்பதற்கும், வாடகைக்கோ குத்தகைக்கோ விடுவதற்கும் செயல் அலுவலருக்கோ, உதவி/துணை/இணை ஆணையருக்கோ, பொருந்தும் நபருக்கோ சட்டப்படி அதிகாரம் இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 23வது பிரிவு ஆணையருக்கு மட்டும் குறைந்தபட்சமாக மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. அவரும் கூட, குறிப்பிட்ட சொத்து எதற்காகக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தேவையான வருமானம் வருகிற அளவில்தான் அந்தச் சொத்தைக் கையாள வேண்டும்.

இந்து அறநிலையத்துறை சட்டம் 45வது பிரிவின்படி ஆணையர் செயல் அலுவலரை நியமித்தது செல்லாது. இதை சிதம்பரம் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆகவே, அந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் இருக்கும் செயல் அலுவலர்களின் நியமனமும் செல்லாததாகிவிடுகிறது. எனவே, அந்தச் செயல் அலுவலர்கள் கோவில் சொத்துக்களைக் குத்தகைக்கு விடவோ குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யவோ அதிகாரம் அற்றவர்கள் ஆவார்கள்.

இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 78, 79 மற்றும் 79-C பிரிவுகள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கும், வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை வசூல் செய்வதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான அதிகாரமும் உரிமையும் அளிக்கின்றன. அந்த அதிகாரங்களைக் கொண்டும் தேவையான அலுவலர்களைக் கொண்டும் கோவில் நிலங்களை சரிவர நிர்வாகம் செய்யாமல் இருப்பது, அறநிலையத்துறை தன்னுடைய ஊழல் நிறைந்த திறமையற்ற நிர்வாகத்தை ஒத்துக்கொள்வதாகும்.

அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. மேலும், D.Dis.No.2599/58, dated 1st February 1958 – D.Dis.No.2311/58, dated 7th April 1958 படி, கோவில் நிலங்களையும், மனைகளையும், கட்டிடங்களையும் வாடகைக்கு விடும்போது, அவற்றை உள்வாடகைக்கு விடக்கூடாது என்றும், அந்நிலங்களில் வாடகைதாரர்கள் எந்தவிதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்றும் விதிகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட தேதியில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பிலும், வாடகை அறிவிப்பிலும் இந்த விதிகளைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு ஆண்டும் ‘கேட்பு, வசூல், நிலுவை பதிவேடு’ என்கிற ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அதில் சொத்தின் பயனாளிகள் மற்றும் வாடகை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இருக்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறை சட்டம் 29ம் பிரிவின்படி கோவிலைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அடங்கிய பதிவேடு (Ledger 29) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 30ன் படி, அப்பதிவேடும் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் கூட்டல்கள், கழித்தல்கள் கணக்கில் கொண்டு (Updating) சரி செய்யப்படவேண்டும். சட்டப்பிரிவு 31ன் படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவேடு (Ledger 29) முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும். 

மேற்கண்ட சட்டங்களையும் விதிகளையும் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்களைப் பார்த்தோமானால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவிற்குக் கோவில்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது புரியும். தமிழ் ஹிந்துக்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பாராட்ட வேண்டும்.

தங்களுடைய அரை நூற்றாண்டுக்கும் மேலான நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்வதற்கான ஒரு நல்வாய்ப்பாக அறநிலையத்துறையும், தமிழக அரசும் இவ்வுத்தரவைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் மக்களின் மதிப்பைப் பெற முடியும். ஆனால் அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட அரசுகளின் செயல்பாடு நமக்கு அந்த நம்பிக்கையைத் தரவில்லை. எனினும், தமிழக அரசுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று கோவில்களில் உள்ள கடவுளர்களை வேண்டிக்கொள்வோம்.

கோயில் நிலத்தில் பேருந்து நிலையமா? – பி.ஆர். ஹரன்

நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரிக்கு அருகே உள்ளது நந்திவரம் கிராமம். உண்மையில் பல்லவர் காலத்தில் நந்திவரம் என்கிற பெயரில் இருந்த பெரும்பகுதியே இன்று கூடுவாஞ்சேரியாக மாறியுள்ளது. இங்கே புகழ் பெற்ற சிவஸ்தலம் இருந்ததால் நந்திகேச்சுரம் என்று பெயர்பெற்று, பின்னர் நந்திவரம் என்று மருவியது. நந்தி வழிபட்ட சிவபெருமான் என்பதால் நந்தீஸ்வரர் என்று இறைவன் பெயர். இறைவி சௌந்தர்யநாயகி. மூன்றாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில் என்பதாலும் நந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நந்திவனம் என்று இவ்வூரின் பகுதியைத் தல புராணம் சொல்கிறது. காடுகள் மண்டிக்கிடந்த இப்பகுதி நந்திவனம் என்று வழங்கப்பட்டதாயும், பசுக்களை வளர்த்து வந்த ஒருவரின் பசு தினமும் மந்தையில் இருந்து விலகி வந்து அவ்வனத்தில் இருந்த ஒரு புற்றின் வாயிலில் பாலைச் சுரந்து சென்றதாகவும், அதைக் கண்ட பசுவின் சொந்தக்காரர் அந்தப் புற்றுக்குள் ஒரு சிவலிங்கத்தைக் கண்டதாகவும், அப்போது அச்சிவபெருமானுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்யச் சொல்லி அசரீரி கேட்டதாகவும், அதன்படி அவர் மன்னனிடத்துச் சொல்ல, மன்னன் நந்திவர்மன் அங்கே இறைவனுக்குக் கோயில் எழுப்பியதாகவும் தல புராணம் கூறுகின்றது. பசுக்களின் சொந்தக்காரர் புற்றைக் கலைக்க ஆயுதம் உபயோகப்படுத்தியதால், உள்ளிருந்த லிங்கத்தின் மேல் பட்டுள்ள வெட்டுக் காயம் இன்றும் காணப்படுகின்றது.

நந்தி தீர்த்தம் எனும் திருக்குளம் இருக்கின்றது. ஸ்தல விருக்ஷம் வில்வம். நூறு வருடங்களுக்கு மேலாக பிரமாண்டமாக வளர்ந்துள்ள நாகலிங்க மரம் ஒன்றும் உள்ளது. நடராஜர் சபையும் உள்ளது. பைரவர், வீர்பத்ரர், சூரிய பகவானும் உள்ளனர். இத்தலம் அப்பரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.

கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம்

இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயிலின் நிலத்தில் புறநகர் பேருந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்குத் தமிழக அரசு முடிவு செய்து அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஆன்மிக ஆர்வலர்களுக்கும் கோயில் பக்தர்களுக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை எடுத்துக்கொள்ளாமல், கோயில் நிலத்தைக் கையகப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற விதி எண் 110ன் கீழ், தமது அரசின் பல்வேறு திட்டங்களை அறிவித்தபோது, ரூபாய் 376 கோடி செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1894’ அடிப்படையில், வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை, அரசாணை (GO Ms. No.184) 10.07.2013 அன்று வெளியிட்டது. நிர்வாக அனுமதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை நில நிர்வாகத்துறை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டது.


 இந்நிலையில், ‘நிலம் கையகப்படுத்தல், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியேற்றத்தில் இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம் – 2013’ 2014ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அமலுக்கு வந்தது. ஆனால், அந்தச் சட்டத்திற்கான அரசு விதிகள் தயாரிக்கப்படாமல் இருந்த நிலையில், நிலம் கையகப்படுத்தல் இயலாத காரியம். எனவே, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் பரிந்துரையை தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1894, 17(2) பிரிவின்படி பரீட்சித்துச் செயல்படுத்த இயலாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குக் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நில நிர்வாகத்துறை ஆணையரின் கடிதம் (Letter No: S2/12637/2014) 2014ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே, நிலம் கையகப்படுத்த இயலாத சூழலில், சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்தபடி, புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20.54 ஹெக்டேர் நிலமும், அதனையொட்டி இருக்கும் அரசுப்புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டு, அந்நிலங்களில் புறநகர் பேருந்து நிலையம் கட்டலாம் என்று செங்கல்பட்டு வருவாய்க் கோட்ட அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட குறிப்புகளைச் சுட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையத் துணைத்தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அவர்கள், ‘நந்திவரம் கிராமம் அருள்மிகு நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20.54 ஹெக்டேர் நிலம் தேசிய நெடுஞ்சாலை 45-ஐ ஒட்டி இருப்பதாலும், அது தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்த வேண்டிய நடைமுறைகள் தேவையில்லை. தமிழகத்தின் தென்பகுதிக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகவும் உள்ளது. எனவே, அந்நிலத்தை எங்களுக்கு விற்பதன் மூலமோ அல்லது நீண்டகால குத்தகைக்கு அளிப்பதன் மூலமோ, தங்கள் துறைக்கும் பயனளிக்கும் விதமான வழிமுறைகளை ஆலோசித்து சம்மதம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அப்போதைய இந்து அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் வீர சண்முக மணிக்குக் கடிதம் (Letter No: NT1/331/2013) ஜனவரி 28, 2016 அன்று அனுப்பினார்.


 மேற்கண்ட கடிதத்திற்குப் பதிலாக, இந்து அறநிலையத்துறை ஆணையர், ‘குறிப்பிட்ட நிலத்திற்கான புல எண்கள், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலருக்குச் சந்தை மதிப்பிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அது இதுநாள்வரை கிடைக்கப்பெறவில்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலரின் சந்தை மதிப்பினை வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியருக்கு விவரம் தெரிவித்து சந்தை மதிப்பினை அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் விரைவில் பெற்றளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலருக்குப் பதில் கடிதம் (Letter No: 5828/2016) 27 ஜூலை 2016 அன்று அனுப்பியுள்ளார்.

அரசியல் சாஸன மற்றும் சட்ட மீறல்கள்

தமிழக அரசின் மேற்கண்ட முயற்சி அரசியல் சாஸன க்ஷரத்துக்களையும் இந்து அறநிலையத்துறை சட்டப் பிரிவுகளையும் மீறுவதாக இருக்கின்றது.

முதலாவதாக, ‘ஒரு கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கோயிலின் தெய்வத்துக்குச் சொந்தமானது’ என்கிற உண்மையைப் பல மாநில உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் உறுதி செய்துள்ளன. ஆகவே, நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களும் சொத்துக்களும் அக்கோயிலின் தெய்வமான நந்தீஸ்வரருக்கு உரியவைதான்.

இரண்டாவதாக, நந்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிபவர்கள் சிவாச்சாரியார் எனப்படும் மத உட்பிரிவினர். எப்படி சிதம்பரம் கோயில் தீக்ஷிதர்கள் மத உட்பிரிவினராகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளதோ, அதேபோல சிவாச்சாரியார்களுக்கும் சிறப்பு உரிமைகள் உள்ளன. சிவச்சாரியார்கள் மத உட்பிரிவினர் என்பதை அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியல் சாஸனத்தின் 26வது க்ஷரத்து, ‘மதம் மற்றும் அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிர்வாகம் செய்வதற்கும், அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும், அவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்களை சட்டப்படி நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு மத உட்பிரிவினருக்கும் (Religious denomination) உரிமையும் மதச்சுதந்திரமும் உண்டு’ என்பதை உறுதி செய்கிறது. எனவே, நந்தீஸ்வரர் கோயில் மத உட்பிரிவுக் கோயிலாகிறது. அது மட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் சொத்துக்கள் மீதான உரிமைகள் அடிப்படை உரிமைகளின் கீழ் வந்துவிடுகின்றன.

மூன்றாவதாக இந்து அறநிலையத்துறை (1959) சட்டத்தின் 34வது பிரிவு, ‘கோயில் நிலங்களைக் கையகப்படுத்தப்படுவது கூடிய மட்டும் தவிர்க்கப்பட வேண்டும். மற்ற வழிகளை முயற்சி செய்த பிறகு மாற்று நிலங்கள் கிடைக்காத, வேறு வழியில்லை என்கிற நிலையில், பொதுநன்மைக்கும் கோயிலுக்கும் பயன் ஏற்படும் என்று இருந்தால் மட்டுமே கோயில் நிலங்களைக் கையகப்படுத்தலாம்’ என்று தெளிவாகக் கூறுகிறது. 26.09.1984 தேதியிட்ட அரசு ஆணையும் (எண் 1630) இதை உறுதி செய்கிறது.

மேலும், அறநிலையத்துறைச் சட்டத்தின் 78ம், 79ம் பிரிவுகள்  கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுப்பது போன்ற கோயிலுக்குப் பயனளிக்கும் சிறப்பான அதிகாரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கின்றன. கோயிலுக்குப் பயனில்லாத வகையில் அதன் நிலங்களை விற்பதற்கு அல்ல.

அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பதைக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. கோயிலின் பயன் கருதிச் செயல்படும் அறங்காவலர்கள் இல்லாத நிலையில் வெறும் அரசு ஊழியர்களான நிர்வாக அலுவலர்கள் போன்றவர்கள் கோயில் சொத்துக்களைக் கையாளுவதும் அவற்றை விற்பனை செய்வதும் குற்றமாகும்.

ஆலய வழிபடுவோர் சங்கத்தின் நடவடிக்கை

அரசியல் சாஸனத்திற்கு விரோதமான இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறது ஆலய வழிபடுவோர் சங்கம். அதன் தலைவரான டி.ஆர். ரமேஷ் அவர்கள் நந்தீஸ்வரர் கோயில் நிலத்தை புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக கையகப்படுத்தக் கூடாது என்று கூறி, அறநிலையத்துறை ஆணையருக்கும், முன்னாள் ஆணையருக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேற்கண்ட அரசியல் சாஸன க்ஷரத்து, இந்து அறநிலையத்துறைச் சட்டப் பிரிவுகள், அரசு ஆணைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மேற்கூறப்பட்ட அரசு அதிகாரிகள் நந்தீஸ்வரர் கோயில் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், மீறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

புறம்போக்கு நிலங்கள் நிறைய இருக்கும் அந்தப் புறநகர் பகுதியில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்துவது தவறு என்பதை உணர்ந்து தமிழக அரசு அதற்கேற்றார்போல மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.

அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்களும் அறநிலையத்துறை நிர்வாகமும் – பி.ஆர்.ஹரன்

தமிழகத்தில் பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டது. பெரும்பான்மையான ஆலயங்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விஜயநகர மன்னர்களால் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டவை. அவ்வாலயங்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல் அம்மன்னர்கள் அவற்றிற்கு ஏராளமான சொத்துக்களையும் வழங்கியிருந்தனர். நிலங்கள், தோப்புகள், மனைகள், கட்டடங்கள், வெள்ளி, தங்கம், நகைகள் என்று பலவகையான சொத்துக்கள் கோவில்களுக்கு உண்டு.

இந்நிலையில், கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம். ஏன், கோவில் விக்கிரகங்கள் கூடக் கொள்ளையடிக்கப்படுகின்றன. அயல்நாடுகளுக்குக் கடத்தி விற்கப்படுகின்றன.

இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளது. ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால், கோவில் சொத்துக்கள் குறைந்துகொண்டு வருகின்றன; அதனால் அவற்றின் மூலம் கிடைக்கவேண்டிய வருமானமும் குறைந்துகொண்டு வருகின்றது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமணக் கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக 2014ம் ஆண்டு அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் – 5 ஆகஸ்டு 2014).

திராவிட மாயையில் கோவில் நிலங்கள் காணாமல் போவதற்கும், வருவாய் வராமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில். அது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்கள்

சென்னையில் உள்ள பழமையான கோவில்களில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலும் அடங்கும். 1959ம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் இந்து அறைலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது இக்கோவில்.

இந்தக் கோவிலுக்குச் சொந்தமாகத் தற்போது வணிக மனைகள் 1,80,374 சதுர அடிகள்; குடியிருப்பு மனைகள் 11,16,445 சதுர அடிகள்; வணிக மனைகள் 89,550 சதுர அடிகள்; குடியிருப்புக் கட்டிடங்கள் 52,738 சதுர அடிகள் உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக மனைகளிடமிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தொகை ரூபாய் 739.37 லட்சம்.

குடியிருப்பு மனைகளிடமிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தொகை ரூபாய் 420.68 லட்சம்.

ஆனால் இன்றைய வழிகாட்டி மதிப்பின்படி (ஒரு சதுர அடி குறைந்தபட்சம் சுமார் 8,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட) சில ஆயிரம் கோடிகளுக்குச் செல்லும்.


சட்டத்துக்குப் புறம்பான விற்பனை

தற்போது இருக்கும் இந்தச் சொத்துக்குச் சம அளவிலான சொத்து ஏற்கெனவே சட்டத்திற்குப் புறம்பாகக் கடந்த பல ஆண்டுகளில் தனியார்களுக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டது.

இதில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையை ஒட்டிய சொக்கட்டான் சாலையில், 10 கிரவுண்ட் (சர்வே எண்.451/1,452/1) நிலங்களை (கிட்டத்தட்ட 10 கிரவுண்ட் அளவிலான நிலங்கள்) அப்போது தர்மகர்த்தாவாக இருந்தவரும், செயல் அலுவலராக இருந்தவரும் சேர்ந்து போலிப் பத்திரங்கள் தயார் செய்து தனியாருக்கு விற்றுவிட்டனர்.

1978ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பரம்பரை அறங்காவலர், அதே பகுதியில் இருந்த ஒரு கிறிஸ்தவருக்கு விற்றுள்ளார். அந்தக் கிறிஸ்தவர் 06.12.1968 அன்று முதல் கோவில் நிலத்தில் வாடகைதாரராக மட்டுமே பதிவு செய்யப்பட்டவர். இவர் ஏற்கெனவே இருந்த குத்தகைதாரரிடம் உள்வாடகைக்குச் சென்றவர். அந்தக் குறிப்பிட்டக் குத்தகைதாரர் சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவின்படி, நிலத்தை வாங்குவதற்கான உரிமை பெற்றவர். ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரம்பரை அறங்காவலர் அவருடைய குத்தகையை ரத்து செய்யுமாறு கோரி 1974ம் ஆண்டு, வழக்கு (O.S.No:1186) தொடர்ந்துள்ளார்.

பிறகு, மேல்குறிப்பிடப்பட்ட கிறிஸ்தவர் அந்நிலத்தை (I.A.No: 7389 of 1974) சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவின்படி விற்பனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மனு செய்தார். அதனைத் தொடர்ந்து 15 ஜூலை 1976 அன்று நகர சிவில் நீதிமன்ற 5வது துணை நீதிபதி குறிப்பிட்ட சொத்தை ரூ.2,700/-க்கு அவருக்கு விற்பனை செய்யுமாறு கோவில் அறங்காவலருக்கு இறுதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்பேரில், கிறிஸ்தவர் ரூ.2,700ஐ 30-12-1976 அன்று நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, நகர சிவில் நீதிமன்ற 10வது துணை நீதிபதி முன்பு, அந்நிலத்தைத் தன் பெயருக்குப் பதிவு செய்து விற்பனைப் பத்திரம் (Sale Deed) அளிக்க உத்தரவிடுமாறு மனு (CMP 1150 of 1977) சமர்ப்பித்தார். அதன்படி நகர சிவில் நீதிமன்றமும் உத்தரவிட, பரம்பரை அறங்காவலர், அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, சர்வே எண் 452/1 நிலத்தில் இருந்த சொத்துக்கள் முழுவதையும் அந்தக் கிறிஸ்தவர் பெயருக்குப் பதிவு செய்து விற்பனைப் பத்திரமும் அளித்துள்ளார்.

கோவில் சொத்துக்களை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ விடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. அவற்றை விற்க அனுமதி இல்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகத் துறை அலுவலர்களின் உதவியோடு தர்மகர்த்தா விற்றுள்ளார். இந்தச் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்க அந்த தர்மகர்த்தாவின் மனைவி, “எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று நோட்டீஸ் அடித்து நுங்கம்பாக்கம் பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஆலயங்களைச் சுற்றி அமைந்துள்ள கோவில் நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணைதான்.

அரசு ஆணை எண் 4508 (05-12-1957) மற்றும் அரசு ஆணை எண் 689 (18.03.1957) ஆகியவற்றில், கோவில் நிலங்களை விற்றுக் கிரயம் செய்யக்கூடாது என்றும், குத்தகைக்கு மட்டுமே விடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு குத்தகைக்கு விடும்போது, மாற்று மதத்தவருக்கு விடக்கூடாது என்றும் குறிப்பிடப்படுள்ளது. மாற்று மதத்தவருக்கு விடும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் கோவில் திருவிழாக்களும் மற்ற நிகழ்ச்சிகளும் பாதிக்கப்படலாம், சுமுகமாக நடைபெறாமல் போகலாம் என்கிற காரணத்தால், ஆணையர் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், குத்தகைக்கு எடுப்பவரும் மாற்று மதத்தவருக்கு மறுகுத்தகைக்கோ வாடகைக்கோ விடக்கூடாது என்றும், மாற்று மதத்தவரைக் குடியேறவும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டமும், அரசு ஆண்களும் தெளிவாக இருக்கின்றபோது, பரம்பரை அறங்காவலரும், கிறிஸ்தவ வாடகைதாரரும் அறநிலையத்துறை அலுவலர்கள் உதவியுடன் மேற்கொண்ட இந்தச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை நகர சிவில் நீதிமன்றமும் எப்படி அனுமதித்தது என்பதும் இங்கே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

கோவில் நிலத்தில் மசூதி

அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மற்றொரு இடத்தில் ஒரு இஸ்லாமியர் வாடகைதாரராக இருந்தார். பிறகு அவ்விடத்தில் மசூதி ஒன்றைக்கட்ட முயற்சித்தார். அதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவரை வெளியேற்றக் கோரி ஒரு மனு (No: 136 of 1971) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் வாடகையும் சரியாகக் கொடுக்காமல் இருந்தார். ஆயினும் அந்த இஸ்லாமியர் சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவை உபயோகித்து அந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிக்கொண்டார். தவணை முறையில் வாடகைக் கொடுப்பதற்கு ஏற்பட்ட தாமதத்தையும் அங்கீகரிக்கக் கோரி மனு (M.P. 203 / 1980) ஒன்றைச் சமர்ப்பித்து அதையும் சாதித்துக்கொண்டார். அவ்வாறு அவர் செய்வதற்கு அப்போதைய பரம்பரை அறங்காவலரும், அறநிலையத்துறை அலுவலர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் பதிவாளர் அதற்கான விற்பனைப் பத்திரத்தைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.

அதன் பிறகு அந்த இஸ்லாமியர் அந்தச் சொத்தை நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கம் என்னும் அமைப்பிற்கு விற்பனை செய்தார். அவ்வமைப்பு அவ்விடத்தில் மசூதி ஒன்றை எழுப்பியது. பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பகுதியில், மாநகராட்சியின் அனுமதியின்றி ஒரு மசூதியைக் கட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது. கோவில் நிர்வாகம், இஸ்லாமியருக்கு ஆதரவாக அளித்த மனுவை (A.S.No.87/1993) ஏற்றுக்கொண்ட சென்னை மாநகர சிவில் நீதிமன்றம், கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமலே விற்பனைப் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், விற்பனைப் பத்திரம் கொடுப்பது போன்ற சிறு வழக்குகள் நீதிமன்றப் பதிவாளரின் அதிகார எல்லைக்குள் இல்லை என்றும் கூறி, சட்டத்திற்குப் புறம்பான அந்த விற்பனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விற்பனைப் பத்திரம் செல்லாது என்பதால், இஸ்லாமிய நபர் நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கத்திற்கு அந்தச் சொத்தை விற்றதும் செல்லாது என்று கூறி, இரண்டு மாதங்களுக்குள் அந்தச் சொத்தைக் கோவில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவை உபயோகித்து விற்பனைப் பத்திரம் பெற்றாலும். அதே சட்டத்தின் 9(1)(b) பிரிவின்படி, சொத்தின் விலையில் ஒரு தவணையைக் கட்டாமல் விட்டாலும், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்கிற குறிப்பையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, குறிப்பிட்ட இஸ்லாமியரும், நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி G.ஜெயச்சந்திரன் அவர்கள், சொத்தின் விற்பனையும், மசூதி கட்டப்பட்டதும் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், சொத்தைக் கோவில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை உறுதி செய்து இவ்வருடம் (2017) ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று உத்தரவிட்டார்.

அதாவது கோவில் பரம்பரை அறங்காவலரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பாக மாற்று மதத்தவருக்கு மோசடிகள் மூலம் விற்பனை செய்த கோவில் சொத்தை, மீண்டும் பெறுவதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட வேண்டியிருந்தது.

அரசின் அக்கறையின்மை

2003ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சி.பி.ராமசாமி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துக்களை மீட்டுள்ளதாகச் சட்டசபையில் தெரிவித்தார், ஆனால் சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 2009, 2010, 2011 ஆண்டுகளில் கேட்டபோது அவர் சட்டசபையில் கூறியது பொய் என்பதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போர், யாரிடம் வாடகை கொடுக்கின்றனர், என்ன விதமான ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களும் அறநிலையத் துறையிடம் இல்லை. கோவிலுக்குச் சொந்தமான இடங்கள், போலி பட்டாக்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன என்பதை, 2010ல் அப்போதைய அறநிலையத் துறை ஆணையரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அறநிலையத்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையமும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. அதாவது, 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடத்தப்பட்ட விசாரணையில், 451/1 மற்றும் 452/1 ஆகிய சர்வே எண்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிடில் துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிப்படக் கூறியுள்ளது


இவ்வாறான சூழ்நிலையில், ஹிந்து ஆலய வழிபடுவோர்கள் அனைவரும், 21 செப்டம்பர் 2015 அன்று ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவைச் சந்தித்தனர். கோவிலில் உள்ள ஆவணங்களைச் சரிபார்க்க வந்த அந்தக் குழுவினரைச் சந்தித்த பக்தர்கள் தங்கள் அதிருப்தியையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். கோவில் சொத்துக்களை விரைவில் மீட்டால் அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை போன்ற வருமானத்தைக் கோவிலின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று தங்கள் கருத்தையும் தெரிவித்தனர்.

தற்போது அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலின் நிலங்களையும் சொத்துக்களையும் மீட்க வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. அறலையத்துறையின் அலட்சியமான நிர்வாகத்திற்கு அகஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றே உதாரணமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஒரு கோவிலில் மட்டுமே இவ்வளவு பிரச்சினை என்றால், மாநிலம் முழுவதும் உள்ள 36,000க்கும் மேற்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றின் கணக்குகளையும் சரிபார்த்து விசாரணை செய்தால் எவ்வளவு பூதங்கள் புறப்படும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அடிக்குறிப்புகள்:


ஆதாரம்: தினமலர் 9 மே 2013 http://www.dinamalar.com/news_detail.asp?id=709082

தினமலர் 5 ஆகஸ்டு 2014 http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126

https://indiankanoon.org/doc/148856916/

வந்தே மாதரம்: தேசத்தின் உணர்வு, தேசியத்தின் ஆன்மா – பி.ஆர்.ஹரன்கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் மாதம் ஒரு முறையும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்டது.

எதிர்பார்த்தது போல, முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும், திராவிட இனவெறி அமைப்புகளும், போலி மதச்சார்பின்மை கடைப்பிடிக்கும் கட்சிகளும் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இவ்விஷயத்தை அலசி ஆராய்வதற்கு முன்பு இந்த உத்தரவின் பின்னணியைத் தெரிந்துகொள்வோம்.

வழக்கும் உத்தரவுகளும்

பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய வீரமணி என்பவர், வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்கிற கேள்விக்கு வங்காள மொழி என்று சரியான பதிலைத் தந்திருந்தாலும், சம்ஸ்க்ருத மொழி என்பதே சரியான பதில் என்று கூறி அவருக்குத் தரப்பட வேண்டிய மதிப்பெண் வழங்கப்படாததால், அவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒரு மதிப்பெண்ணில் தேர்வை இழந்த அவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன், “நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து, வந்தே மாதரம் பாடல், வங்க மொழியில் எழுதப்பட்டது உறுதியாகிறது. பின், இந்தப் பாடல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாடலில், சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட்டாலும், வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சரியான விடை அளித்ததற்காக, கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற, மனுதாரருக்கு உரிமையுள்ளது. அவருக்கு, ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 54.12 மதிப்பெண் பெற்று, பணி நியமனம் பெற்றிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரை பொருத்தவரை, 58.57 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆதிதிராவிடர் பொதுப் பிரிவில், ஏதாவது காலியிடத்தில், மனுதாரரை நியமிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் மேலும், “நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தேசபக்தி மிக முக்கியம். சுதந்திரப் போராட்டத்திற்காகப் பலர் தங்கள் உயிரை, குடும்பத்தைத் தியாகம் செய்துள்ளனர். வந்தே மாதரம் போன்ற தேச பக்திப் பாடல்கள், மக்கள் மத்தியில் மன உறுதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இந்த நவீன உலகில், நம் வாழ்க்கை முறை மாறியுள்ளது. சில நேரங்களில், நம் தேசத்தை நாம் மறந்துவிடுகிறோம். அதை உணர்ந்துதான், திரை அரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கவும், அதற்கு மரியாதை செலுத்தவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, பொதுநலன் கருதி, ஒவ்வொரு மக்களின் மனதிலும், தேச பக்தி உணர்வை ஊட்டும் விதத்தில், கீழ்க்கண்ட உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது” என்று கூறி பின்வரும் உத்தரவுகளை இட்டார்:

     அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும்; பாட வேண்டும். வாரத்தில் ஒரு நாளாக, திங்கள் அல்லது வெள்ளியில் இதை மேற்கொள்ள வேண்டும்

     மாதம் ஒரு முறையாவது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும்; ஒலிபரப்ப வேண்டும்.

     வந்தே மாதரம் பாடலின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பை, அரசு இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்ய, பொது தகவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்படுகிறது

     இந்த உத்தரவின் நகல், அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படவேண்டும். அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்

     வந்தே மாதரம் பாடலை பாடுவதில் அல்லது ஒலிபரப்புவதில், யாருக்காவது அல்லது எந்த அமைப்புக்காவது பிரச்சினை இருந்தால், அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், அவ்வாறு பாடாமல் இருப்பதற்கு உகந்த காரணங்கள் இருக்க வேண்டும்.

எதிர்ப்பு

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா, “நம் நாட்டில் ஏற்கெனவே ‘ஜன கன மன’ தேசிய கீதமாக இருக்கும்போது ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடச் சொல்வது குழப்பங்களை ஏற்படுத்தும். வேறொரு கோரிக்கையை வைத்துத் தொடரப்பட்ட வழக்கில் தொடர்பில்லாமல் ஒரு தீர்ப்பை வழங்குவது நீதி பரிபாலனத்திற்கு உகந்தது அல்ல. இப்பாடலை இஸ்லாமியர்களால் ஒருபோதும் பாட இயலாது. சமூக நல்லிணக்கத்தை விரும்பும் எவரும் இப்பாடலைப் பாட முன்வரமாட்டார்கள். எனவே சென்னை உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அறிக்கை விட்டுள்ளார்.

அல்லாவை ஏக இறைவனாகக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் இதைப் பாட இயலாது என்று வேண்டுமானால் இவர் கூறலாம். அவ்வாறு கூறுவதை அனுமதிப்பதும், ஏற்றுக்கொள்வதும் இந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்முன் வைக்கப்பட வேண்டியவை. ஆனால், சமூக நல்லிணக்கத்தை விரும்பும் எவரும் இப்பாடலைப் பாட முன்வரமாட்டார்கள் என்று இவர் கூறுவது சரியல்ல. அப்படியென்றால் வந்தே மாதரம் பாடலைப் பாடுபவர்கள் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் என்று இவர் சொல்கிறாரா? இது மிகவும் தவறான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் கூட.

எதிர்பார்த்ததைப் போல முஸ்லிம்களின் வாலைப் பிடித்துக்கொண்டு நடைபோடும் திராவிடர் கழகம் இவருக்கு ஆதரவு அளித்தது. கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “பன்கிம் சந்திர சாட்டர்ஜீ எழுதிய ‘ஆனந்தமடம்’ என்கிற வங்காள நாவலில் இடம்பெற்ற இப்பாடலில் ஹிந்து மதத்தில் முப்பெரும் தேவியராகப் போற்றப்படும் பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய பெண்கடவுள்கள் துதிக்கப்படுகின்றனர். ஆகவே அல்லாவை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் இந்தப் பாடலைப் பாட முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்படும் மதச்சார்பின்மைக்கு விரோதமானது. எனவே நீதிமன்றம் இவ்வுத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அறிக்கை விட்டுள்ளார்.

அவர் தன் அறிக்கையில் மேலும், “இந்தப் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுவர முயன்றபோது ரபீந்திர நாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் அனுமதிக்க முடியாது என்று உறுதியாகக் கூறினர்” என்று ஒரு பச்சைப் பொய்யையும் கூறியுள்ளார். ரபீந்திரநாத் தாகூர் இசையமைத்து மனம் ஒன்றிப் பாடிய பாடல் வந்தே மாதரம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் வந்தே மாதரத்தைத் தன் அதிகாரப்பூர்வப் பாடலாகக் கொண்டது. அதனுடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடலைத் தொடர்ந்து ஒலிபரப்பச் செய்தார் நேதாஜி. உண்மை இப்படியிருக்க, அவர்கள் எதிர்த்தனர் என்று வீரமணி அபாண்டமாகப் பொய் பேசுகிறார்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பும் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி வழக்கு தொடரப் போவதாகக் கூறியுள்ளது.

மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், சமாஜ்வாதி போன்ற போலி மதச்சார்பின்மைக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எதிர்ப்பு புதியதல்ல

வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பு புதியதல்ல. 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பாடல் பாடியதன் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அப்போதே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தியோபாண்டைச் சேர்ந்த ‘தருல் உலூம்’ (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். பிறகு 03-11-2009 அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய ‘ஜமாத் உலமா-இ-ஹிந்த்’ (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது. அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று அப்போது சிதம்பரம் கூறியிருந்தாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படைக் காரணம், 1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலைத் தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளிவைக்கப் பயன்படுத்தப்பட்ட, நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் ‘போலி மதச்சார்பின்மை’ மற்றும் ‘சிறுபான்மையின தாஜா அரசியல்’ ஆகிய கொள்கைகள்தான்.

காங்கிரஸ் கட்சியின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ‘வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரிசமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

சுதந்திரம் பெற்றபின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் ‘தேசியம்’ (Nationalism) குறைந்து ‘போலி மதச்சார்பின்மை’ (Pseudo Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்குத் தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குத் தாஜா செய்து, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி ஆகிய கொள்கைகளைக் கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்துபோனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்றும் தேசியவாதமும் வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன பாடலும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்கக் காரணமாக அமைந்தது. பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ நம் தேசிய கீதத்தைவிட அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப்படுவது நின்றுபோனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்றுதான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை. மாநிலக் கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு, சிறிதும் தேசப்பற்று இன்றி, வந்தே மாதரம் பாடலை, அதற்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தைத் தராமல், புறந்தள்ளின. அரசுக் கல்வி நிலையங்களிலும், சிறுபான்மையினர் அரசு உதவியுடன் நடத்தும் கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது அறவே நின்று போனது.

வந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: ஸ்ரீ பன்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்ச்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: கர்சன் பிரபுவின் ‘வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ‘சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ‘வந்தே மாதரம்’ பாடல்.

ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.

மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்றபோது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கியபடியே உயிர் நீத்தார்.

1906: ‘பஞ்சாப் சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.

அதே ஆண்டு மார்ச் மாதம் ‘பரிசல் பரிஷத்’ தொடங்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த, மாநாடு பாதியிலே நின்று போனது.

ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ‘வந்தே மாதரம்’ தினசரியைத் தொடங்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மைச் சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ போலி சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ‘தடங்கல்’ போன்று அவர்களால் பார்க்கப்பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக ‘ஜன கன மன’ இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் ‘சாரே ஜஹான் ஸே அச்சா’வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் சாஸன நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “ ‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், நம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாகவும் இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டுக் கூறினார். அரசியல் சாஸன நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(மேற்கூறப்பட்ட தகவல்கள், கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, பத்மா சுந்தரம் அவர்களின் ‘என்னபடம் எஜுகேஷனல் பப்ளிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள ‘வந்தேமாதரம் ஆல்பம்’ (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான வார்த்தைகளை விளக்கி கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.)

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ‘பாடலாம்’ என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதைதானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997ம் ஆண்டு பரத் பாலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதேபோல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின்போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உண்மையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றாண்டின்போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் பாராட்டப்படவேண்டிய உண்மையே.

வந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பது அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப்படவில்லை என்றாலும், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடித் தாய்நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளபடியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான நிலைப்பாடு.

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்துக் குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். நம் அரசியல் சாஸனத்துக்கு மரியாதை அளிப்பது நம் கடமை.

வந்தே மாதரம்!

சத்தீஸ்கர் தாக்குதல்: இடதுசாரி பயங்கரவாதம் – பி.ஆர்.ஹரன்சென்ற ஏப்ரல் மாதம் 24ம் தேதி மதியம் 12.30 மணியளவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் வனப்பிரதேசத்தில் சாலை போடும் பணி நடந்துகொண்டிருந்த இடத்திற்குப் பாதுகாப்பாக இருந்த மத்திய சேம காவல் படையின் (CRPF) மீது 300க்கும் மேற்பட்ட நக்ஸலைட்டுகள் கெரில்லா முறையில் தாக்குதல் நடத்தி 25 காவல் படையினரைச் சுட்டுக் கொன்றனர். அவர்களின் ஆயுதங்களையும் தொலைத் தொடர்புச் சாதனங்களையும் கடத்திச் சென்றுள்ளனர். மத்திய சேமக் காவல் படையினரின் மீதான இந்தக் கொலைவெறித் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சேமக் காவல்படையின் மீதான தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார். அரசின் தீவிரமான நடவடிக்கைகளினால் கடுமையாக ஒடுக்கப்பட்டுச் செயல்பட முடியாமல் இருந்த நக்ஸலைட்டுகள் விரக்தியின் உச்சத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும், நக்ஸல் மற்றும் மாவோயிஸ பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தாக்குதல் விவரங்கள்

சுக்மா மாவட்ட வனப்பிரதேசத்தில் காலாபத்தர் என்ற இடத்தினருகே பர்காபால் என்ற இடத்திற்கும் ஜாகர்குண்டா என்ற இடத்திற்கும் இடையே மிகவும் தேவையான முக்கியமான சாலை போடும் பணி நடந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட 100 பேர்கள் கொண்ட மத்திய சேமக் காவல் படையினர் இரண்டாகப் பிரிந்து சாலையின் இரு முனைகளிலும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். தாக்குதல் நடத்தும் பொருட்டு மாவோயிஸ்டுகள் சில உள்ளூர் கிராமவாசிகளை அனுப்பி வேவு பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான், படைவீரர்கள் மதிய உணவுக்காகத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடந்த தாக்குதலில் பெண் மாவோயிஸ்டுகளும் பங்குபெற்றுள்ளனர். மாவோயிஸ்டுகள் சிறு குழுக்களாகப் பிரிந்து பலவிடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவ்வாறு தாக்குதல் நடந்தபோது உள்ளூர்வாசிகளைக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சிந்தாகுஃபா-பர்காபால்-பேஜி ஆகிய இடங்கள் இணையும் அந்தப் பகுதி நக்ஸல் பயங்கரவாதத்திற்குப் பெயர் பெற்றது; நக்ஸலைட்டுகள் அதிகம் புழங்கும் பகுதி. ஏற்கெனவே பலமுறை இந்தப் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

12 அல்லது 13 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டனர் என்று மத்தியப் படையினர் கூறினாலும் ஒருவருடைய உடலும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. பலியான 25 வீரர்களில் நால்வர் (பத்மநாபன், செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன்) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மத்திய சேமக் காவல் படையினர் சந்திக்கும் சவால்கள்

நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் அதிகமாகப் புழங்கும் வனப்பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமானால், அப்பகுதிகளில் சாலைகள் அமைத்து அவற்றை ஊரகப்பகுதிகளுடன் இணைப்பது அடிப்படை மற்றும் அவசியத் தேவையாகும். அவ்வாறு சாலைகள் அமைக்கப்படும்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் படையினர் ‘சாலை திறக்கும் குழுவினர்’ (ROPs – Road Opening Parties) என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளாகச் சொல்வது:

· இதில் எதிர்பாராத விஷயம் என்று எதுவும் இல்லை. சாலை திறக்கும் குழுவினர் எப்போது எங்கே செல்கிறார்கள் என்பதெல்லாம் மாவோயிஸ்டுகளுக்குத் தெரிந்துவிடுகின்றது.

· படையினரில் 25% வீரர்கள்தான் சாலையினூடே நகர்கிறார்கள். மற்றவர்கள் பார்வைக்கு அப்பால் வனத்தினூடே வருவார்கள். இடையே ஒரு குன்றோ அல்லது சாக்கடைப் பள்ளங்களோ எதிர்ப்படும்போது அவர்களுக்கு மேற்கொண்டு முன்னேறிச் செல்வது கடினமாக இருக்கும். அந்த மாதிரியான இடங்களைக் கொரில்லாத் தாக்குதல்களுக்கு மாவோயிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

· இரும்புத்தாதுக்கள் நிறைந்த பகுதிகளில் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் அடிக்கடி இயங்காமல் போவதுண்டு. குண்டுகளைக் கண்டறிவது கடினம். அந்த மாதிரியான சூழ்நிலைகளை மாவோயிஸ்டுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர்.

· கோடைக் காலங்களில் பாதுகாப்புப் படையினர் மரங்கள் இருக்கும் நிழற்பகுதிகளில் இளைப்பாறுவதற்காக ஓய்வெடுப்பர். அந்த மாதிரியான பகுதிகளில் மரங்களுக்கிடையே அழுத்தக் குண்டுகளை (Pressure Bombs) வைத்து இயக்குவார்கள் மாவோயிஸ்டுகள்.

· மதிய உணவுச் சமயங்களை சாதகமானவையாக மாவோயிஸ்டுகள் கருதுகின்றனர். அந்தச் சமயத்தில் படைவீரர்கள் பொதுவாக மரங்களின் அடியில் தங்களைத் தளர்த்திக்கொண்டு இருப்பர் என்பதால் தாக்குதல் நடத்துவது மாவோயிஸ்டுகளின் வழக்கம். ஏப்ரல் 24ம் தேதி நடந்த தாக்குதல் அப்படி நடத்தப்பட்டதுதான்.

· இது ஒருவிதமான சலிப்பூட்டும் பணி. எந்தவிதமான அங்கீகாரமோ, வெகுமானமோ, பயனோ கிடைக்காத பணி. குண்டுகளையும், கண்ணி வெடிகளையும் கண்டுபிடித்துப் பல உயிர்களைக் காப்பாற்றினாலும், ஒரு சிறு சறுக்கல் நேர்ந்தாலும் விளைவுக்கான முழுப் பொறுப்பும் படையினர்தான் ஏற்கவேண்டும். இது கால்பந்தாட்டத்தில் கோலியின் பொறுப்பு போன்றது.

· கடும் வெய்யிலில் கடுமையான சூழ்நிலைகளில், ‘இரவு நேரம்’ ‘இருளின் மறைவு’ போன்ற வசதிகள் அற்ற சூழலில் மேற்கொள்ளப்படுவதால், இது மிகவும் கடினமான பணியாகும்.

· கோடைக் காலங்களில் முகாம்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும். படையினர் குளிப்பது என்பது மிகவும் அபூர்வமான செயலாகும். பலநாட்கள் குளிக்காமல் இருக்க வேண்டியிருக்கும்.

· பலவிடங்களில் தொலைத்தொடர்பு இருக்காது. குடும்பத்தினருடனோ, நெருங்கிய உறவினர்களுடனோ பேச முடியாமல் போவதால் மிகவும் மன அழுத்தம் ஏற்படுவதுண்டு.

· கொசுத்தொல்லைகள் நிரந்தரப் பிரச்சனை.


மாவோயிஸ்டு-நக்ஸலைட்டு இயக்கம்

இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழித்து, 1967ல் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு) கட்சி இரண்டாக உடைந்து அதிலிருந்து இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) கட்சி உருவாயிற்று. ஆரம்பத்தில் மேற்கு வங்கத்தில் உருவான இந்தக் கட்சி, தலைமறைவான தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மற்ற மாநிலங்களிலும் பரவ ஆரம்பித்தது. பகிரங்க அரசியலுக்கு வராமலும், அதன் மேல் நம்பிக்கை இல்லாமலும், மறைமுக தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்த இயக்கம், மலைப்பகுதியில் இருக்கும் வனவாசி மக்களையும் மற்ற ஊரகப் பகுதிகளில் இருக்கும் அப்பாவி ஏழை மக்களையும் நாட்டுக்கு எதிராகத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, கிட்டத்தட்ட 28 மாநிலங்களில் இந்த இயக்கத்தவர் பரவியிருந்தனர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் பரவியிருந்த 40% நிலப்பரப்பு ‘சிவப்பு இடைவழி’ (Red Corridor) என்று குறிப்பிடப்பட்டது.

இவர்கள் ‘மக்கள் விடுதலை கொரில்லாப் படை’ (People Liberation Guerilla Army), ‘மக்கள் போர்க் குழு’ (Peoples War Group) போன்ற பெயர்களில் ஆயுதங்கள் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடினார்கள். அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் பொது மக்களைக் கொல்லவும் இவர்கள் தயங்கியதில்லை. இவர்களுடனான சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கான காவல்படையினர் இறந்துள்ளனர். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் இவர்களுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கை எடுத்து வெற்றி பெற்றனர். ஆந்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் இவர்களின் இயக்கம் மிகவும் குறைக்கப்பட்டு, சத்தீஸ்கார், பிகார், ஜார்கண்ட், கேரளா, மேற்குவங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் மட்டும்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்திய பத்து வருடத் தாக்குதல்கள்

11 மார்ச் 2017: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் தாக்கியதில் 12 மத்திய சேமக் காவல் படையினர் பலியானார்கள்.

19 ஜூலை 2016: பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் 10 மத்திய சேம காவல் படையினர் கொலப்பட்டார்கள்.

20 ஜூலை 2015: பிகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டட வளாகத்தில் 2 விலைமதிப்புள்ள கார்கள், 1 டிராக்டர், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிக்கப்பட்டன. அந்த வளாகமே சூறையாடப்பட்டது.

14 ஜூன் 2014: பிகார் மாநிலம் ஜாமுயி மாவட்டத்தில் தான்பாட்-பாட்னா ரயில் 500 மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டது. மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர். 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். குண்டுகளும் வெடித்தனர்.

10 ஏப்ரல் 2014: பிகார் லோக்சபா தேர்தல் சமயத்தில் ஒரு ஜீப்பைக் குண்டு வைத்துத் தாக்கியதில், ஜீப் தூக்கி வீசப்பட்டு அதில் பயணம் செய்த இரு சி.ஆர்.பி.எஃப். கமாண்டோக்கள் இறந்தனர்; 6 பேர் படுகாயமுற்றனர்.

11 மார்ச் 2014: சத்தீஸ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.

28 ஃபிப்ரவரி 2014: சத்தீஸ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 6 போலிசார் கொல்லப்பட்டனர்.

2 ஜூலை 2013: ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஒரு காவல்துறைக் கண்காணிப்பாளரும் ஐந்து போலிசாரும் கொல்லப்பட்டனர்.

25 மே 2013: சத்தீஸ்கார் மாநிலம் தர்பா பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், மாநில அமைச்சர் மஹேந்திர கர்மா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

18 அக்டோபர் 2012: பிகார் மாநிலம் கயாவில் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணிவெடித் தாக்குதலில் காவல்துறையினர் 6 பேர் இறந்தனர், 8 பேர் படுகாயமுற்றனர்.

29 ஜூன் 2010: சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல்லப்பட்டனர்.

8 மே 2010: சத்தீஸ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் குண்டு துளைக்காத காரை வெடித்துச் சிதறச் செய்ததில் 8 சி.ஆர்.பி.எஃப். படையினர் இறந்தனர்.

6 ஏப்ரல் 2010: சத்தீஸ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். படையினர் மீது நடத்தப்பட்ட கொரில்லாத் தாக்குதலில் 76 பேர் கொலப்பட்டனர்.

4 ஏப்ரல் 2010: ஒடிஷா மாநிலம் கோரபூர் மாவட்டத்தில் சிறப்புக் காவல்படையினர் 11 பேர் கொல்லப்பட்டனர்.

15 ஃபிப்ரவரி 2010: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்டத்தில் சில்டா என்கிற இடத்தில் இருந்த முகாமின் மீதான தாக்குதலில் கிழக்கு எல்லைப்புற ரைஃபில் (EFR – East Frontier Rifles) படையினர் 24 பேர் கொல்லப்பட்டனர்.

8 அக்டோபர் 2009: மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் லஹேரி காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 போலிசார் கொல்லப்பட்டனர்.

26 செப்டம்பர் 2009: சத்தீஸ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தால்பூரில் உள்ள பைராகுடா கிராமத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் பாலிராம் கஷ்யப்பின் மகன்கள் கொல்லப்பட்டனர்.

4 செப்டம்பர் 2009: சத்தீஸ்கார் மாநிலம் வனப்பகுதியில் ஆடேட் கிராமத்தில் 4 கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.

27 ஜூலை 2009: சத்தீஸ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணிவெடி வைத்து 6 பேர் கொல்லப்பட்டனர்.

18 ஜூலை 2009: சத்தீஸ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஒரு கிராமவாசி கொல்லப்பட்டார். பிஜப்பூர் மாவட்டத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு ஜீப் கொளுத்தப்பட்டது.

23 ஜூன் 2009: பிகார் மாநிலம் லகிசராய் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தங்களுடைய இயக்கத் தோழர்கள் நால்வரைத் தப்பச் செய்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

16 ஜூன் 2009: ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் பந்தல்கண்ட் என்கிற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் 11 போலிசார் கொல்லப்பட்டனர். மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 4 போலிசார் கொல்லப்பட்டனர்.

13 ஜூன் 2009: ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ அருகே குண்டுவெடி மற்றும் கண்ணிவெடித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்.

10 ஜூன் 2009: ஜார்கண்ட் மாநிலம் சரண்டா வனப்பகுதியில் 9 போலிசார் சி.ஆர்.பி.எஃப், படையினருடன் சேர்த்து தாக்கப்பட்டதில் அனைவரும் படுகாயமுற்றனர்.

22 மே 2009: மஹாராஷ்டிரா மாநிலத்தின் காட்சிரோலி காடுகளில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 போலிசார் கொல்லப்பட்டனர்.

22 ஏப்ரல் 2009: ஜார்கண்ட் மாநிலத்தில் 300 பயணிகளுடன் கூடிய ரயில் கடத்தப்பட்டது. ஜார்கண்டிலிருந்து லதேஹர் என்னும் ஊருக்குக் கடத்திச் சென்று அங்கிருந்து தப்பித்துச் சென்றனர் மாவோயிஸ்டுகள்.

13 ஏப்ரல் 2009: ஒடிஷா மாநிலம் கொராபூர் மாவட்டத்தில் உள்ள பாக்ஸைட் சுரங்கங்கள் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டன. அதில் 10 துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டார்கள்.

16 ஜூலை 2008: ஒடிஷா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கிய போலிஸ் வாகனம் தூக்கியெறியப்பட்டது. அதில் பயணம் செய்த 21 போலிசார் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

29 ஜூன் 2008: ஒடிஷா மாநிலத்தில் உள்ள பலிமேலா அணையில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த ஒரு படகின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதில் 38 படைவீரர்கள் உயிரிழந்தனர்.

மாவோயிஸ்டு மற்றும் நக்ஸலைட்டுகளின் தேச விரோத செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் சார்ந்துள்ள கம்யூனிஸக் கொள்கைதான். பொதுவாகக் கம்யூனிஸ்டுகளின் சரித்திரத்தையும், குறிப்பாக சீனத்து மாவோ, ரஷிய ஸ்டாலின், அர்ஜெண்டினாவின் சே குவேரா, கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோர்களின் வரலாற்றையும் கூர்ந்து கவனித்தோமானால் வன்முறையையே கொள்கையாகக் கொண்ட இயக்கம் கம்யூனிஸம் என்பது தெளிவாகத் தெரியும். பலகோடி அப்பாவி மக்கள் மேற்கூறப்பட்ட கம்யூனிச சர்வாதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும், கம்யுனிஸக் கொள்கையின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் சின்னாபின்னம் அடைந்து அழிந்துள்ளன, மேலும் அழிந்து வருகின்றன என்பதும் புரியும்.

இந்தியாவிலேயே கூட 34 ஆண்டுகளுக்கும் மேலாக, 1977 முதல் 2011 வரை மேற்குவங்கத்தில் ஆட்சி புரிந்த கம்யூனிஸ்டுகள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இறப்புக்கும், கொஞ்சம் கூட முன்னேற்றமே இல்லாமல் எப்பொழுதும் வன்முறை நிகழ்வதற்கும், இஸ்லாமிய பயங்கரவாதம் பெருகுவதற்கும் காரணமாக அமைந்தார்கள். கேரளத்திலும் அவர்கள் ஆட்சியில் வன்முறையும், பேரழிவும்தான் நடந்தேறி வருகின்றன.

ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் எல்லாம் நக்ஸலைட்டுகள் மாவோயிஸ்டுகளை அவிழ்த்துவிட்டு, தலைமறைவாக தேச விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது கம்யூனிஸ்டுகளின் யுக்தி. இந்தியாவின் வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும், ஆன்மிகப் பாரம்பரியத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்நியக் கொள்கையை இந்தியாவின் மீது திணிக்க முயலும் கம்யூனிஸ்டுகளின் நோக்கமே இந்தியாவை உடைத்துச் சின்னாபின்னப்படுத்துவதுதானோ என்கிற சந்தேகம் பலமாக எழுகின்றது. இப்படிச் செயல்படும் கம்யூனிஸ்டுகளுக்கு உலகின் பல இடங்களில் இருந்து உதவிகள் கிட்டுகின்றன. கம்யூனிச நாடுகளான சீனா, ரஷ்யா, போன்றவைத் தொடர்ந்து மறைமுகமாக உதவி வருகின்றன.

இந்தியாவை உடைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அந்நாடுகளின் கிறிஸ்தவ சபைகள்), மத்தியக் கிழக்கு நாடுகள் (அந்நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள்), அவர்கள் மூலமாக இந்தியாவில் இயங்கும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் (NGOs), ஆகியவை இந்தக் கம்யூனிஸக் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நிதியுதவியும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து வருகின்றன.

உதாரணத்திற்கு மதமாற்றத்திற்காக மலைப்பிரதேசங்களைக் குறிவைத்து இயங்கும் சர்ச்சுகளும், கிறிஸ்தவ NGOக்களும் அந்த மலைப் பிரதேசங்களில் மறைந்து இயங்கும் நக்ஸலைட்டு மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளன. அப்பாவி வனவாசி மக்களை மதம் மாற்றுவதற்கு அவர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் தேச விரோதச் செயல்களுக்கு இவை உதவி செய்கின்றன. மூளைச் சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்ட மக்கள்தான் பாதுகாப்புப் படைகள், மத்திய சேம காவல் படைகள் ஆகியோரைப் பற்றிய தகவல்களை மாவோயிஸ்டுகளுக்குத் தெரிவிக்கிறார்கள் என்கிற தகவல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கசிந்த வண்ணம் இருக்கின்றது.

ஒடிஷா மாநிலம் கந்தமால் என்னுமிடத்தில் தீவிரமாக நடைபெற்றுவந்த கிறிஸ்தவ மதமாற்றங்களைப் பெரிதும் தடுத்து வந்த, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த லக்ஷ்மணானந்த சரஸ்வதி என்னும் துறவியை 2008ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அவருடைய ஆசிரமத்தைத் தாக்கி அவருடன் பணிபுரிந்து வந்த மேலும் நான்கு பேரையும் கொன்றனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான தொடர்பு வெளிவரத்தொடங்கியுள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்திலும் கிறிஸ்தவ மதமாற்றம் மலைப்பகுதியின் வனவாசிகளிடம் பரவலாக நடைபெற்று வருகிறது.

அறிவு ஜீவிகள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு இடதுசாரிகளிடமும் கிறிஸ்தவ சர்ச்சுகளிடமும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து நட்புறவும் கொண்டிருந்தார். அதனால் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்கள் நாடெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஊடுருவிப் பதவிகளில் அமர்வதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது காங்கிரஸ் அரசு. உண்மையில் அதை ஊக்குவித்தது என்று கூடச் சொல்லலாம். அவரே கூட பல விஷயங்களில் இடதுசாரிக் கொள்கையுடன் இருந்தார். அவரைத் தொடர்ந்து இந்திராவும் அவ்வாறே நடந்துகொண்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸ் அரசுகளே ஆட்சி புரிந்து வந்ததால், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், ஊடகங்களிலும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாகவே ஊடுருவி உயர்ந்த பதவிகளில் அமர்ந்து, நிர்வாகத்தையும் கைப்பற்றினர். இதன் காரணமாக, கல்விக் கொள்கையும், பாடத்திட்டங்களும் அவர்களாலேயே தயாரிக்கப்பட்டன. இந்தியாவின் கலாசாரத்திற்கு எதிராகவும், இந்தியாவின் உண்மையான வரலாற்றைத் திரித்தும், இந்தியாவின் மீது படையெடுத்து அடிமைப்படுத்திய அந்நியர்களைப் புகழ்ந்தும் பாடத்திட்டங்களை அமைத்தனர். அது இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.

அறிவுஜீவித் தளத்தில் உள்ளவர்களும், அரசு சாரா அமைப்புகளும், மதச்சார்பின்மை, மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்கிற பெயர்களில் பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், கம்யூனிஸ வன்முறை ஆகியவற்றுக்குப் பேராதரவு தந்து, பெரும் தீனி போட்டு வளர்த்து வருகிறார்கள். இதற்கு சமீபத்திய இரு உதாரணங்களைக் காட்டலாம்.

புரட்சி ஜனநாயக முன்னணி (Revolutionaru Democratic Front) என்கிற தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தந்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக, தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய்பாபா என்பவருக்கு, அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, சென்ற மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் பிரஷாந்த் ரஹி என்கிற பத்திரிகையாளரும், ஹேம் மிஷ்ரா என்கிற ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவரும் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.

இதே போல பிரபல மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் வரதராஜனின் மனைவி நந்தினி சுந்தர் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இவர் மாவோயிஸ்டு இயக்கங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வருபவர். சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதி வனவாசிகளிடையே மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தருமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மா மாவட்டத்தில் பாகேல் என்கிற வனவாசி ஒருவரை மாவோயிஸ்டுகள் கொலை செய்தனர். அவரின் மனைவி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை, கொலை செய்த மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த நந்தினி சுந்தர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. நந்தினி சுந்தருடன் ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனா பிரசாத் என்பவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைகள்

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் சட்ட விரோதமாக இயங்கி வந்த இருபதாயிரத்துக்கும் அதிகமான தேச விரோத NGOக்களின் உரிமத்தை ரத்து செய்து அவற்றுக்கு அனுமதி மறுத்து, அவற்றின் வங்கிக்கணக்குகளையும் கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அவற்றுக்கு வந்துகொண்டிருந்த வெளிநாட்டு நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இதனால் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டு NGOக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளன.

கடந்த நவம்பர் மாதம் ரூ.1000 மற்றும் ரூ.500 ஆகிய கரன்ஸி நோட்டுகளைச் செல்லாதவையாக அறிவித்து, கறுப்புப்பணம் மற்றும் கள்ளப்பணம் புழங்குவதைப் பெரிதும் முடிவுக்குக் கொண்டுவந்தது. இதனால் தீவிரவாத, பயங்கரவாத, பிரிவினைவாத மாவோயிஸ்டு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாவோயிஸ்டு பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கார் போன்ற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட பஸ்தார் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சாலைகள், பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளால் அனாதையாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஈடுபாட்டுடன் கல்வி கற்கின்றன. சுகாதார வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்தக் காட்டுப்பகுதிக்கும், ஊரக, நகரப் பகுதிகளுக்குமான இணைப்பு வேகமாக ஏற்பட்டு வருகின்றது. வனவாசிகளின் மனப்பாங்கிலேயே ஒருவிதமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் முனைவோர்களாக விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளைக் கல்விகற்க அனுப்புகிறார்கள். காவல் நிலையங்களும் கட்டப்படுகின்றன. செல்போன் கோபுரங்களும் கட்டப்படுகின்றன. இன்னும் இரண்டே ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதி மாவோயிஸ்டுகள் அற்ற பகுதியாக மாறிவிடும் என்று உறுதியாக நம்பப்படுகின்றது.

இப்படிப் பலவிதமான வளர்ச்சிப் பணிகளையும் அதற்கு வனவாசி மக்கள் பெரும் ஆதரவு தருவதையும் கண்டு மாவோயிஸ்டுகள் கடும் எரிச்சல் அடைந்து வருகின்றனர். வனவாசி மக்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதையும், தங்களின் தலைமறைவு நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள் குறைந்து வருவதையும் எண்ணி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். தங்களால் முன்போல் செயல்பட முடியாமல் போகிறதே என்கிற எரிச்சலில்தான் அவர்கள் சமீபத்திய தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசுகள் மேலும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

மாவோயிஸ்டுப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்துவது மட்டுமல்லாமல் மேலும் சில நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் அதற்கு மாநில அரசுகளும் உதவி செய்ய வேண்டும்.

இரண்டு மாதங்களாகத் தலைமை (Director General – CRPF) அற்று இருக்கும் மத்திய சேமக் காவல் படையின் தலைமைப் பதவிக்குத் தகுதியான அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும்.

நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்கள், அவர்களின் தாக்குதல்களை முறியடிப்பது போன்ற பலவிதமான நடவடிக்கைகளுக்குத் தேவையான முறையான ராணுவப் பயிற்சியை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்காக ராணுவ அதிகாரிகளை நியமித்துப் பயிற்சி மையங்களையும் தொடங்க வேண்டும்.

ராணுவம், துணை ராணுவம், பாதுகாப்புப் படைகள், மத்திய சேமக் காவல் படைகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆயுதங்கள் தருவித்து, பெரிதும் ஊக்குவிக்க வேண்டும்.

2005ல் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வனவாசிகள் சேர்ந்து தாங்களாகவே தொடங்கிய ‘சல்வா ஜுடும்’ (Salwa Judum) என்கிற படை, மாநில அரசின் ஆதரவுடன் நன்றாக இயங்கி வந்தது. ஆனால், இடதுசாரி அறிவுஜீவிகளும், அப்போதைய மத்திய அரசும் சேர்ந்து அதைப் பெரும் பிரச்சினையாக ஆக்கி, பலமான அரசியலுக்கு உள்ளாக்கி, உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராகத் தடை பெற்றனர். அந்தப் படையில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான வனவாசிகள், மாவோயிஸ்டுகளுக்குப் பயந்து இன்றும் தங்களுடைய கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் அரசுக் காப்பகங்களில் அகதிகளாக இருக்கின்றனர். ஆனால் தற்போது மத்திய சேமக் காவல் படையே ‘பஸ்தார் படை’ (Bastariya Battallion) என்கிற வனவாசி இளைஞர்களைக் கொண்ட படையை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றது. பயிற்சி முடிந்ததும் அந்த இளைஞர்கள் மத்தியக் காவல் படையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். அதைப்போல பயிற்சிப்படைகள் மற்ற மாவோயிஸ்டுப் பகுதிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவென்றால் நகர்ப்புறங்களில் இருக்கும் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அறிவுஜீவித் தளத்தில் இருக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல்கலைப் பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரே இவர்கள். இவர்களை ‘நகர்ப்புற மாவோயிஸ்டுகள்’ என்று சொன்னலும் தகும். இவர்கள்தான் அரசுக்கு எதிராகவும், மாவோயிஸ்டுப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், சர்வதேச அளவில் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த அரசியல் அமைப்பை உருவாக்கிய ஜனநாயகத்திற்கு எதிராகவே இயங்குகிறார்கள். மனித உரிமை என்கிற பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தைச் செய்கிறார்கள். அவர்களுக்குப் பலவழிகளில் நிதியுதவியும் பெற்றுத் தருகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகள், சிறுபான்மையின மத அமைப்புகள், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துகொண்டு இயங்கி வருகிறார்கள். நீதித்துறையிலும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாக அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அது அளிக்கும் சுதந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்தி நாட்டின் ஜனநாயகத்துக்கே சவாலாக அறிவுஜீவித் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நகர்ப்புற மாவோயிஸ்டுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். அதற்காகத் தேவைப்பட்டால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கூட கொண்டுவரவேண்டும்.

மாவோயிஸ்டுகளுக்கும், கம்யுனிஸ்டு கட்சிகளுக்கும், கம்யூனிசக் கொள்கைக்கும் ஆதரவான கருத்துக்களத்தையும், நிதிமூலத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தாலே மாவோயிஸ்டு இயக்கத்தைப் பூண்டோடு அழித்துவிட முடியும். நாடெங்கும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேகமாக அழிந்து வருகின்றன என்பதைக் கடந்த மூன்றாண்டுகளில் நடந்த தேர்தல்கள் நிரூபிக்கின்றன. இது நல்ல முன்னேற்றம். மூன்றே மாநிலங்களில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் அழித்துவிட்டால் இந்தியாவிற்குப் பெரும் நன்மை விளையும். இவ்வுண்மையை மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள். ஆகவே, இந்தியா இடதுசாரி பயங்கரவாதத்தை விரைவில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.

உதவிய பக்கங்கள்:


அயோத்தியில் ராமர் கோவில்: இறுதிக்கட்டத்தில் ராமஜன்ம பூமி வழக்கு – பி.ஆர்.ஹரன்

பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக என்று கூடச் சொல்லலாம், தீர்வு ஏற்படாமல் இருக்கும் அயோத்தி ராமஜன்ம பூமிப் பிரச்சினை பற்றிய வழக்கில், அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி சுமுகமான தீர்வு காண முயற்சி எடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி, “ராம ஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவேண்டும். அதற்காக அவ்வழக்கை அவசர வழக்காகக் கருதி தினப்படி விசாரணை செய்து விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும்” என்று கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்1. அதனை அப்போது ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவரையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொண்டது.

அந்த வழக்கு, கடந்த மார்ச் மாதம் 21ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது2. அப்போது, “இந்தப் பிரச்சினை மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். ஆகவே சம்பந்தப்பட்டத் தரப்பினர் அனைவரும் கலந்து பேசி சுமுகமானத் தீர்வை எட்ட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நேரில் ஆஜராகியிருந்த சுப்பிரமணியன் ஸ்வாமி, “நான் முஸ்லிம் தரப்பினரை அணுகினேன். ஆனால் அவர்கள் சமரசப் பேச்சு வார்த்தைக்குத் தயாரில்லை; நீதிமன்றத்தின் தலையீடு தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், சுமுகமான தீர்வு காண அவரையே மீண்டும் முயற்சி மேற்கொள்ளுமாறு கூறியது. அதோடு மட்டுமல்லாமல், “சம்பந்தப்பட்ட தரப்பினர் தேர்ந்தெடுக்கும் மத்தியஸ்தர்கள் கொண்ட குழுவுக்கு நானே வேண்டுமானாலும் தலைமை வகித்து உதவுகிறேன். இல்லையெனில் வேறு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலும் குழுவை அமைக்க இந்நீதிமன்றம் உதவும்” என்று தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திவிட்டு மீண்டும் மார்ச் 31ம் தேதி தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு ஸ்வாமியைக் கேட்டுக்கொண்டனர் நீதிபதிகள்.

அதன்படி மார்ச் 31ம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றம் கூடியபோது, தினப்படி விசாரணை செய்து விரைவில் வழக்கை முடிக்கக் கோரினார் சுப்பிரமணியன் ஸ்வாமி. அதற்கு மறுத்த உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கைத் தள்ளி வைத்துள்ளது3.

இவ்வழக்கை மேற்கொண்டு ஆராய்வதற்கு முன்னால், ராமஜன்ம பூமியின் வரலாற்றையும், வழக்கின் பாதையையும் தெரிந்துகொள்வது நம்முடைய புரிதலுக்கு உதவும்.ராமஜன்ம பூமியின் வரலாறு4

  
·   பாரத இதிகாசம் ராமாயணம்: ராமர் அயோத்தியில் பிறந்தார்.

·   திரேதா யுகத்தில் மஹாராஜா குஷா என்பவர் ராமர் கோவில் கட்டினார்.

·   துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணர் இக்கோவிலுக்கு வந்தார்.

·   விக்கிரமாதித்தர், சமுத்திர குப்தர், போன்ற மன்னர்களும் இக்கோவிலில் வழிபட்டிருக்கிறார்கள்.

·   1527 – முகலாய மன்னர் பாபர் பாரதத்தின்மீது படையெடுத்தார்.

·   1528 – பஃதேஹ்பூர் சிக்கிரி என்ற இடத்தில் ராணா சாங்ராம் சிங் என்பவரால் பாபர் தோற்கடிக்கப்பட்டு புறமுதுகிட்டு அயோத்தி வந்தார்.

·   ராமர் கோவிலில் பாபாஜி யாமாநந்தஜி என்னும் மகான் ஒருவர் வாழ்ந்து பூஜைகள் செய்து வந்தார். அவரிடம் கஜால் அப்பாஸ் முசா அஷிகான் கலந்தர் ஷா என்னும் பஃக்கீர் ஒருவர் சீடரானார். அவரைத் தொடர்ந்து ஜலால் ஷா என்ற பஃக்கீரும் பாபாவிடம் சீடர் ஆனார். ஆயினும் அவர்கள் தீவிர முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்கள் ராமர் பிறந்த இடத்தில் வாழ்ந்தாலும் அங்கு ஒரு மசூதி கட்டவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்கள். அயோத்தி வந்த பாபர் இரு பஃக்கீர்களையும் சந்தித்து ஆசி பெற்று மீண்டும் 6 லட்சம் வீரர்களைத் திரட்டி ராணா சாங்ராம் சிங்கைத் தோற்கடித்தார். பஃக்கீர்கள் இருவரும் ராமர் கோவிலை அழித்து அங்கு மசூதி கட்ட வேண்டும் என்று பாபருக்கு ஆலோசனை கூறினர். பாபர் படை வீரர்கள் கோவிலை அழிக்கத் தொடங்கிய போது, பாபாஜி ராமர் முதலிய விக்கிரகங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினார். கோவில் பூசாரிகள் பாபர் படையினரின் வாள்களுக்கு இறையாகினர். கோவில் தாக்கப்பட்டதை அறிந்த ஹிந்து மன்னர்களும் மக்களும் திரண்டு வந்து மீண்டும் போர் புரிந்தனர். பாபர் படையில் பீரங்கிகள் இருந்ததால் அவரே மீண்டும் வெற்றி பெற்றார். அவருடைய தளபதி மீர்பாகி மசூதியைக் கட்டி முடித்தார்.

·   பின்னர் பாபர், ஹுமாயூன், அக்பர் மற்றும் ஔரங்கசீப் காலங்களிலும் அதற்குப் பின்னரும் ஹிந்துக்கள் ராமர் கோவிலுக்காகத் தொடர்ந்து பலமுறை போராடி வந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

·   1853 – மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தனர்.

·   1859 – ஆங்கிலேயர் ஆட்சியில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனியாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

ராமஜன்ம பூமி வழக்குகள் வந்த பாதை5

 

·   1885 – மஹந்த் ரகுவர்தாஸ் கோவில் கட்ட ஆங்கிலேய அரசிடம் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

·   1886 – ஹிந்துக்களுக்குச் சொந்தமான இடத்தில் மசூதி (ஜன்மஸ்தான் மசூதி) கட்டப்பட்டிருப்பதாக பைஃசாபாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

·   1936 – முஸ்லிம்கள் வழிபாடு நடத்துவதை நிறுத்தினர்.

·   1949 டிசம்பர் 22/23 – சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் விக்கிரகம் வைக்கப்பட்டது. இரு தரப்பினரும் அவ்விடத்திற்கு உரிமை கோரி நீதிமன்றம் செல்ல, வளாகத்துக்குப் பூட்டு போடப்பட்டது.

·   1950 – கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ஸ ராமச்சந்திரதாஸ் ஆகியோர் வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர். உள்பகுதி பூட்டப்பட்டு வளாகத்தில் மட்டும் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது.

·   1959 – சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய உரிமை கோரி நிர்மோஹி அகாரா அமைப்பும் மஹந்த் ரகுநாத் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர். பூஜை செய்ய உரிமையும் கோரினர்.

·   1961 – பிரச்சினைக்குரிய இடம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று கூறி சன்னி வக்ஃப் வாரியம் உரிமை மனு தாக்கல் செய்தது.

·   1984 – ராமர் கோவில் இயக்கத்தை வி.ஹி.ப/ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க தொடங்கினர்.

·   1986 – பிரச்சினைக்குரிய உள்பகுதியில் பூஜை நடத்த அனுமதி கேட்டு ஹரிசங்கர் துபே என்பவர் வழக்கு தொடர்ந்தார். பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து பூட்டிய கதவுகள் திறக்கப்பட்டன.

·   1989 – ராமர்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி அனுமதியளித்தார். விஷ்வ ஹிந்து பரிக்ஷத் துணைத்தலைவர் முன்னாள் நீதிபதி தேவகி நந்தன் அகர்வால், பகவான் ராமரின் ‘அடுத்த நண்பர்’ என்ற முறையில் சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்தார்.

·   1990 – சோமநாதபுரத்திலிருந்து அயோத்திக்கு ரத யாத்திரை தொடங்கினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி. யாத்திரை பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வி.பி.சிங் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை பா.ஜ.க திரும்பப் பெற்றது.

·   1992 டிசம்பர் 6 – கோவில் கட்ட வந்த கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

·   2003 மார்ச் 5 – அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபர்மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளுமாறு தொல்லியல்துறைக்கு உத்தரவு அளித்தது. அனைத்து வழக்குகளும் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
·   2003 ஆகஸ்டு 22 – தொல்லியல்துறை தன்னுடைய அகழ்வாராய்ச்சி அறிக்கையை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

·   2010 ஜூலை – வழக்கு விசாரணை முடிவடைந்தது. செப்டம்பர் 24ல் தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டது.

·   2010 செப்டம்பர் – தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு ஒருவாரம் தீர்ப்பைத் தள்ளி வைத்து, பின்னர் விசாரணை செய்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

·   2010 செப்டம்பர் 30 – உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டன. முதலாவது, பாபர் கட்டடத்தின் நடுவில் உள்ள கட்டடத்தின் கீழ் குழந்தை ராமரைப் பிரதிஷ்டை செய்துள்ள இடமே ராமரின் ஜன்மஸ்தானம். இவ்விடத்தை ஹிந்துக்களுக்குக் கொடுக்கவேண்டும். மற்றவர் எந்த இடையூறும் செய்யக்கூடாது. குறிப்பிட்ட இடம்தான் ராமஜன்ம பூமி என்கிற நம்பிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது க்ஷரத்தின் (மதச் சுதந்திரம்) பாதுகாப்பைப் பெறுகிறது. இரண்டாவது, சர்ச்சைக்குரிய கட்டடம் முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டது என்று முஸ்லிம் தரப்பு நிரூபிக்கவில்லை. ஆனால் தொல்லியல்துறை அளித்துள்ள ஆதாரங்களிலிருந்து, சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு கோவில் இருந்துள்ளது என்பதும் அது இடிக்கப்பட்டுள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது. மூன்றாவது, சன்னி வக்ஃப் வாரியத்தின் உரிமை மனுவும், நிர்மோஹி அகாரா அமைப்பின் உரிமை மனுவும் கால வரம்பிற்குள் வராததால் நிராகரிக்கப்படுகின்றன. ஸ்ரீ ராம் விராஜ்மானின் உரிமை மனு ஏற்கப்பட்டு ராமரின் ஜன்மஸ்தானம் தற்போது பாபர் கட்டடத்தின் நடுப்பகுதியின் அடியில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆயினும், ஸ்ரீ ராம் விராஜ்மானுக்கு மூன்றில் ஒரு பங்கும், நிர்மோஹி அகாராவுக்கு மூன்றில் ஒரு பங்கும், சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் என சர்ச்சைக்குரிய இடம் பிரிக்கப்படுகிறது.

·   டிசம்பர் 20106 : அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் மூன்றில் ஒரு பாக பூமியை சன்னி வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து, அகில இந்திய ஹிந்து மகாசபாவின் தலைவர் ஸ்வாமி சக்ரபாணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அலஹாபத் நீதிபதி தரம் வீர் ஷர்மா அவர்கள் அளித்த “ராமஜன்ம பூமி பிரிக்கப்படாமல் ஹிந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும்” என்கிற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் தன் மனுவில் வைத்தார். அதேபோல சன்னி வக்ஃப் வாரியமும், ஜமியாத்-உலெமா-இ-ஹிந்த் என்கிற அமைப்பும், அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சட்டத்திற்கு விரோதமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்றும் அதன் இடிபாடுகள் அங்கேயே இருப்பதாலும், அதன் அஸ்திவாரம் வலிமையாக இருப்பதாலும், மீண்டும் நிலத்தை முஸ்லிம்களுக்கே வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தன7.

·   மே மாதம் 9-ம் தேதி 2011: அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, தற்போது இருக்கின்ற நிலையே ராமஜன்ம பூமியில் தொடரவேண்டும் என்று உத்தரவிட்டது.

·   7, ஆகஸ்டு 20158: – பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி, “உத்திரப்பிரதேச அரசு தினமும் ராமஜன்ம பூமிக்கு வரும் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணமாக இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால் குடிநீர், கழிப்பறைகள், போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் பக்தர்களுக்குச் செய்து தரவில்லை. ஆகவே தினமும் ஸ்ரீ ராமபிரானைத் தரிசிக்க ராமஜன்ம பூமிக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரச்சொல்லி உத்தரவிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அவர் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று உத்திரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

இறுதிக்கட்டம்


இறுதியாக ஃபிப்ரவரி 2016ல் சுப்பிரமணியன் ஸ்வாமி வழக்கை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மற்றொரு மனு சமர்ப்பித்த பிறகுதான் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி சுமுகமான தீர்வை எட்டவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை ஹிந்துத் தரப்பினர் வரவேற்றிருந்தாலும் முஸ்லிம் தரப்பினர் அவ்வளவாக ஈடுபாடு காண்பிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி சுப்பிரமணியன் ஸ்வாமி முயற்சி செய்த பிறகும் எதிர்பார்த்தபடி அதற்குப் பலன் கிட்டவில்லை. பலன் கிட்டாது என்பது உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் அது ஏன் இப்படி ஒரு அறிவுறுத்தலைச் செய்தது என்கிற கேள்வி இந்திய மக்கள் அனைவர் மனங்களிலும் எழுவது இயல்புதான்.

உச்ச நீதிமன்றம் தேவையில்லாமல் இப்படி ஒரு அறிவுறுத்தலைச் செய்திருக்கிறது. அதைப்பற்றி விவாதிப்பதற்கு முன்பு அலஹாபாத் உயர் நீதிமன்றம் செய்த ஒரு தேவையில்லாத செயலைப் பார்ப்போம். அது அளித்த தீர்ப்பில், சன்னி வக்ஃப் வாரியத்தின் உரிமையைக் காலவரம்பிற்குள் வரவில்லை என்று நிராகரித்தாலும், அதற்கு சர்ச்சைக்குரிய இடத்தில் மூன்றில் ஒரு பங்கை அளித்துள்ளதுதான் தேவையில்லாத செயலாக இருக்கின்றது.

1961ல் தான் சன்னி வக்ஃப் வாரியம் முதல் முதலாக வழக்கில் நுழைகிறது. அப்போதே அதன் மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த அளவுக்கு இப்பிரச்சினையில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை. 1886ல் ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம் ராமரின் ஜன்ம ஸ்தானத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளது. அந்த மசூதியை ஜன்மஸ்தான் மசூதி என்றே முஸ்லிம்களும் குறிப்பிட்டு வந்துள்ளனர். 1936ல் அங்கே தொழுகை செய்வதையும் நிறுத்தியுள்ளனர். மேலும், அகழ்வாராய்ச்சியில் ராமஜன்ம பூமியில் கோவில் இருந்தது என்று தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை இடித்து அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும், சர்ச்சைக்குரிய கட்டிடம் முகலாய மன்னர் பாபரால்தான் கட்டப்பட்டது என்று முஸ்லிம் தரப்பினர் நிரூபிக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, ஹிந்துக்கள் ராமஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்டலாம் என்று தெளிவாகவே தீர்ப்பு தந்திருக்க வேண்டும். அவ்வாறு தீர்ப்பளிக்காமல், பிரச்சினையை முடிக்க மனமில்லாமல், உரிமையில்லாத சன்னி வக்ஃப் வாரியத்திற்கும் மூன்றில் ஒரு பங்கை அளித்து முஸ்லிம் தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டது தேவையில்லாதது.

அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டைக் காட்டிலும் தெளிவில்லாமல் இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு. உச்ச நீதிமன்றம் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அலசி ஆராய்ந்து, அதிலுள்ள தெளிவில்லாத அம்சங்களை மட்டும் தெளிவுபடுத்தித் தீர்ப்பளித்திருக்க வேண்டும். சொல்லப்போனால், சன்னி வக்ஃப் வாரியத்துக்கு மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தது மட்டுமே தெளிவில்லாத அம்சம். மற்றபடி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருந்துள்ளது. ஆகவே மேலும் தெளிவுபடுத்தி பிரச்சினைக்கு முடிவான தீர்ப்பை வழங்குவதே அதன் கடமையாகும். ஆனால் அவ்வாறு தன் கடமையைச் செய்யாமல், மீண்டும் அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி முடிவெடுங்கள் என்று குழப்பமான ஒரு உத்தரவை அளித்திருப்பது, பிரச்சினையை மேலும் அரசியலாக்கத்தான் வழிவகுக்கும். பலமுறை பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு முடிவுக்கு வரமுடியாமல்தான் நீதிமன்றங்களுக்கே பிரச்சினை வந்துள்ளது. அப்படியிருக்க பிரச்சினையை முடிக்காமல் மேலும் இழுத்தடிப்பது நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு அழகல்ல. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லதல்ல.

ஹிந்து தர்மத்தைப் பொருத்தவரை, கோவில் என்பது இறைவன் வசிக்கும் இடம். பிராணப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டுவிட்டால் அதுவே இறைவனின் நிரந்தர வாசஸ்தலமாக ஆகிவிடுகின்றது. கோவில் இடிக்கப்பட்டாலும் அந்த இடம் இறைவனின் இடம் என்கிற உண்மை மாறுவதில்லை. ஆனால் மசூதிகள் அப்படியல்ல; அவற்றில் பிராணப் பிரதிஷ்டை என்பது கிடையாது. உருவ வழிபாடே கிடையாதே! முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். அவர்களுக்குக் குறிப்பிட்ட நேரம்தான் முக்கியமே தவிர இடம் முக்கியமல்ல. மத்தியக் கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பல மசூதிகள் அரசாங்கத்தாலேயே இடிக்கப்படுகின்றன. சௌதி அரேபியாவில் முகம்மது நபி அவர்கள் தொழுத மசூதியையே அரசு இடித்துள்ளது. அப்படியிருக்க இங்கே 1936க்குப் பிறகு தொழுகையே நடத்தாமல் பாழடைந்த நிலையில் முஸ்லிம் மக்களே புறக்கணித்த ஒரு கட்டடத்தை வைத்து அரசியல் செய்வது கொஞ்சம் கூட நியாயமே கிடையாது. ஆகவே, நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இந்துக்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மார்ச் 31ம் தேதி கூடிய உச்ச நீதிமன்றம் சுப்பிரமணியன் ஸ்வாமியின் வேண்டுகோளை நிராகரித்து, தேதி குறிப்பிடாமல் வழக்கைத் தள்ளிவைத்துள்ளது. தொடர்ந்து என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு மத்தியஸ்தக் குழுவை அமைக்குமா என்றும் தெரியவில்லை. அப்படிச் செய்தால் அது நீதிக்கு வழிவகுக்கும் காரியமாக இருக்காது. மாறாக நீதியை மறுக்கின்ற காரியமாகத்தான் இருக்கும்.

வரலாற்றை நோக்கினால் கோவில் இடிக்கப்பட்டு கோவிலின் இடிபாடுகள் மீதுதான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாக இருக்கின்றது. இவ்வழக்கின் பாதையை நோக்கினால், ஒவ்வொரு நிலையிலும் ஹிந்துக்கள் பக்கமே ஞாயம் இருப்பதும், நீதிமன்றங்கள் அதை உறுதிப்படுத்தி வருவதும் தெளிவாகத் தெரிகிறது. அப்படியிருக்க மேலும் பேசுவதற்கு இவ்வழக்கில் ஒன்றுமில்லை.

நிறைவாக ஒரு விஷயம். இது வெறும் கோவில் பற்றிய பிரச்சினை அல்ல; வெறும் மதவுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது அவற்றையெல்லாம் மீறியது. ராமாயணம் இந்த தேசத்தின் இதிகாசம். இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருள். இந்த தேசத்தின் உயிர்நாடி ராமாயணம். இந்த தேசத்தின் கலாசார மாண்பு. இந்த தேசத்தின் தன்மானம். இந்த தேசத்தின் சுயமரியாதை. இந்த தேச மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் வரலாற்று நாயகன் ஸ்ரீராமன். இந்த தர்ம பூமியில் ‘ராமோ விக்ரஹவான் தர்மா’ என்று தர்மத்தின் மொத்த உருவமாகப் போற்றப்படுபவன் ஸ்ரீராமன்.

அவனுடைய பூமியில், அவன் பிறந்த பூமியில், அவன் அரசாண்ட பூமியில் அவனுக்கு ஆலயம் இல்லையென்றால் அது தர்மத்திற்கே அடுக்காது! அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் எழும்புவது இந்த தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும். இந்த தேசத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். இந்த தேசத்தில் உள்ள இந்துக்கள் மட்டுமல்ல, மாற்று மதத்தினர் உட்பட அனைவருக்கும் பெருமை தரக்கூடியது ராமர் கோவில். இந்த தேசத்தில் உள்ள மாற்று மதத்தவர் அனைவரும் மேற்கிலிருந்தோ, மத்தியக் கிழக்கிலிருந்தோ வான்வழியாக வந்து குதித்தவர்கள் அல்ல. அனைவரும் இந்த தேசத்தின் வித்துக்களே. அனைவரின் முன்னோர்களும் இந்துக்களே. அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் அனைவருக்கும் பெருமையே.

சான்றுகள்:


‘Subramanian Swamy’s Ayodhya plea to be heard by Supreme Court next week


அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சு.சுவாமி புதிய மனு!


SC on Ayodhya: Give & take a bit
அயோத்தி பிரச்னைக்கு சமரசத் தீர்வு: உச்ச நீதிமன்றம் யோசனை


Supreme Court to Subramanian Swamy on Ayodhya: Will hear it later, we thought you were party to it


அயோத்தி வழக்கை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
4.  தினமணி – 1 அக்டோபர் 2010.
5. தினமணி – 1 அக்டோபர் 2010.
Hindu Mahasabha moves SC against part of Ayodhya verdict


Sunni Waqf Board moves Supreme Court against high court’s Ayodhya order


SC allows repairing of facilities at makeshift Ram Lalla Temple in Ayodhya

பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் – பி.ஆர்.ஹரன்


“வேளாண்மை பற்றிப் பேசும்போது ‘கால்நடைப் பண்ணை’ என்று நாம் சொல்வதில்லை. ‘பசுப்பாதுகாப்பு’ என்றுதான் சொல்கிறோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் கால்நடைப் பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் நம்மிடம் கால்நடைப் பண்ணைகள் இல்லை; நம்மிடம் பசுப்பாதுகாப்புதான் இருக்கின்றது. பசுக்களைப் பாதுகாப்பது! தர்மத்தின் பாதுகாப்பு என்றால் பசுப்பாதுகாப்பும்தான்! நம் அரசியல் சாஸனம் வழங்கியுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் பசுப்பாதுகாப்பும் ஒன்று. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பசுவதையைத் தடைசெய்து சட்டம் இயற்றலாம். பசு என்பது ‘உபலக்ஷணம்’. உபலக்ஷணம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும். ஆகவே, விலங்குகள் நமக்குத் துன்பம் தராமல் இருக்கின்றபோது நாமும் அவற்றுக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும்.”

– பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி  

 

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாடுகளின் தோலை நீக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சில ஹரிஜன மக்களை, பசுப்பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் சில நபர்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்தச் சம்பவம், போலி மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் முன்னணி ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. மத்திய அரசைக் கண்டித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தின. இவர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்துக்குச் சற்றே தளர்ந்து கொடுத்த பிரதமர், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “சில இடங்களில் நடந்த ஹரிஜன மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் எனக்கு மிகுந்த வலியையும் மனவேதனையையும் தருகின்றன. பசுப் பாதுகாப்பாளர்கள் என்கிற போர்வையில் சமூகவிரோதிகள் இயங்கி வருகின்றனர். பெரும்பாலானோர் பகலில் பசுப்பாதுகாப்பாளர்களாகவும் இரவில் சமூக விரோதிகளாகவும் இருக்கின்றனர். பசுப்பாதுகாப்பு இயக்கத்தைத் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் போலிகள் அடக்கப்படவேண்டும்1 என்று பேசினார். பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆதரவு தந்தது.
பிரதமரின் இந்தப் பேச்சு போலி மதச்சார்பின்மை பேசுபவர்களின் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், உண்மையான பசுப்பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும், பிராணிகள் நல சேவகர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தது. உண்மையாகவே பசுப்பாதுகாப்புக்குப் போராடுபவர்கள் ஆங்காங்கே தொல்லைக்கு உள்ளாயினர். இதனால் சங்பரிவார் அமைப்புகளுள் ஒன்றான விசுவ ஹிந்து பரிஷத் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஹரிஜன மக்கள் சிலரின் மீதான தாக்குதல் சம்பவமும், அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் செய்த துவேஷப் பிரசாரமும், பிரதமரின் பேச்சும், அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவும் வி.ஹெச்.பி எதிர்ப்பும், உண்மையான பசுப்பாதுகாப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளும், பசுவதை பற்றிய விவாதத்தை மீண்டும் தேசியக் களத்தில் முன்வைத்துள்ளன.

பா.ஜ.கவின் பிரதான கொள்கை


தற்போது நாட்டை ஆண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து மிகவும் முக்கியமாக முன்வைத்த கொள்கைகளில் பசுவதைத் தடுப்பு முதன்மையானது. அக்கட்சியினுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இந்தக் கொள்கைப் முதன்மையாகப் பிரகடனப்படுத்தப்படும். ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் 1998 முதல் 2004 வரை நடத்திய கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை.
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும், நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பேசிய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்தக் கொள்கையைத் தவறாமல் முன்வைத்தார். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக் கொள்கைக்கு எதிராகவும் பேசி, அது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் வாக்களித்தார்2. இவ்விரண்டு கொள்கைகளும் மீண்டும் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.
ஆயினும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பசுவதைத் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இறைச்சிக் கொள்கையிலும் (Meat Policy) எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பா.. அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிதும் கூடியது; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதலிடத்தைப் பிடித்தது.3
பசுவதைத் தடுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொள்கை ஆகிய இரண்டு விஷயத்திலும் மோடி ஆதரவாளர்களிடையே கூட கொஞ்சம் அதிருப்தி நிலவி வருகின்றது. ஆயினும், கூடிய விரைவில் பிரதமர் இவ்விரண்டு விஷயங்களிலும் நடவடிக்கை எடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் பசுவதை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்துதான் பசுவதைப் பற்றிப் பேசுகிறது. பசு மட்டுமில்லாமல் அனைத்துக் கால்நடைகள் பற்றியும் கூறுகிறது.
“பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை நவீன மற்றும் விஞ்ஞானபூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று ‘வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு’ என்கிற தலைப்பின் கீழ் அரசியல் சாஸனத்தின் 48-வது பிரிவு குறிப்பிடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனக்கென ஓர் அரசியல் சாசனம் இயற்றுவதற்கு ஏதுவாக ஓர் அரசியல் சாசனப் பேரவை (Constituent Assembly) அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தில் 166 நாட்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட்டு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டது. அவ்வாறு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதைக்கு எதிரான சட்டத்தை இயற்றி அதை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்காமல், அரசியல் சாஸனத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகளில் மட்டும் வைத்தது அரசியல் சாஸனப் பேரவை.
அவ்வாறு செய்ததன் மூலம், பசுக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்துப் பெருக்கவும், பசுவதையைத் தடுக்கவும், பசுவைத் தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் இந்நாட்டின் உன்னத கலாசாரத்தைக் காப்பாற்றவும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை இழந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரத கலாசாரத்தில் பசுவின் பெருமை

பாரத தேசத்தில் வேதகாலம் தொடங்கி பசுவைத் தெய்வமாகவும் தாயாகவும் போற்றி வழிபடும் பண்பாடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று ஆரம்பித்து, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், வரலாறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து, இன்றைய நவீன இலக்கிய நூல்கள் வரை, பசுவின் பெருமையும், ஆராதித்துப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய கடமையும் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.  
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்பதும் இந்த தேசத்தின் பண்பாடு. திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும்; ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வார்ப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களையும் தானியங்களையும் வைப்பதும், இந்துக்களின் பண்பாட்டில் வேதகாலம் தொட்டு ஊறிப்போன வழக்கங்களாகும். தொன்றுதொட்டு மனித இனத்துக்குப் பெரிதும் பயனளிக்கும் மற்ற உயிரினங்களையும், தாவர இனங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர் இந்துக்கள்.
வேறெதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையைப் பசுமாட்டிற்கு மட்டும் இந்த தேசம் அளித்துள்ளது. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், அதைப் பெற்ற தாய்க்கு ஈடாகக் கருதி கோமாதா என்று போற்றுவது இந்த பாரத தேசத்தின் கலாசாரம்.
இந்தப் பிரபஞ்சமே தெய்வத்தினால் படைக்கப்பட்டதாக நாம் நம்புவதால், ஒவ்வொரு படைப்பிலும் தெய்வாம்சத்தைக் காணும் பண்பாடு நம்மிடையே தொன்றுதொட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாம் பசுவை முப்பத்து முக்கோடி தேவர்களின் மொத்த வடிவமாகக் காண்கிறோம். ஒவ்வொரு படைப்பிலும் உள்ள தெய்வ அம்சத்தைத் தேடிக்கொண்டிருக்காமல் தெய்வாம்சம் பொருந்தியதாக நன்றாக அறியப்பட்டுள்ள பசுவை வழிபடுவதே ஞானம் என்கிற எண்ணத்தின் விளைவாகத்தான் பசு வழிபாடு பிறந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்த காலம் போய்விட்டது. ஆனால் பசு வழிபாடு தொடரவேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு கோவிலின் அங்கமாகப் பசுமடம் இருந்து வந்துள்ளது. கோவில் மட்டுமல்லாமல், வெளிப்புறங்களிலும் கோசாலைகள் அமைக்கப்படுகின்றன. கோவில் பசுமடங்களிலும், வெளிப்புற கோசாலைகளிலும் சென்று பொதுமக்கள் பசு வழிபாடு செய்து வருகின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நியப் படையெடுப்புகளாலும் அவர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்ததாலும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியில் பசுவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டன. நாம் நமது கலாசாரத்திலிருந்து வழுவ ஆரம்பித்தோம். அதன் விளைவாகத் தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கப்பட்டு வந்த பசு, பெரும் துன்பங்களுக்கு ஆளானது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதையைத் தடுக்கவும், நமது உன்னதக் கலாசாரத்தை மீட்டெடுக்கவும், சட்டம் இயற்றக் கிடைத்த வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை நழுவவிட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் பாராளுமன்றத்தில் இந்த விஷயம் தொடர்பாக விவதங்கள் நடந்தபோதெல்லாம் அன்றைய பிரதமர்களான நேருவும், அவருக்குப் பிறகு அவர் மகள் இந்திராவும் பசுவதையை ஆதரிக்கும் விதமாகவே நடந்துகொண்டனர். சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடுப்பு விஷயத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்ருமாறு:
1947: பசுவதைத் தடையை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்கு நேரு தலைமையிலான இந்திய அரசு சர்தார் தத்தார் சிங் (இன்றைய அமைச்சர் மேனகா காந்தியின் தாத்தா) தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு, பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற கால்நடைகளை, பயன் தருபவை, பயன் தராதவை, உற்பத்தி செய்பவை மற்றும் உற்பத்தி செய்யமுடியாதவை என்று அவற்றின் தரத்தைப் பிரித்து, பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தது.
* இந்தியாவின் சுபிட்சம் அதன் கால்நடை வளத்தைச் சார்ந்துள்ளது.
* கால்நடை வதையை முழுவதுமாகத் தடை செய்தால்தான் தேசத்தின் ஆன்மா திருப்தியடையும்.
* கால்நடை வதை இந்தியாவில் விரும்பத்தகாததாக இருப்பதால் அதன் மீதான தடையை சட்டத்தின் மூலமாக அமுல்படுத்த வேண்டும்.
* சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து முழுவதுமாகக் கால்நடைவதைத் தடைசெய்யப்பட வேண்டும்.
* அதுவரை பயன்பாட்டில் இருக்கும் அனைத்துக் கால்நடைகள் வதையும் முற்றிலுமாகத் தடை செய்யப்படவேண்டும்.
அதாவது, கால்நடை வதையை முழுவதுமாகத் தடைசெய்து சட்டம் இயற்றிய பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அதை அமுல்படுத்த வேண்டும். அதுவரைப் பயனற்ற கால்நடைகளை கொல்ல அனுமதிக்கலாம் என்று கூறியது.
அப்போதைய பிரதமர் நேரு, முழுமையான தடையை நிராகரித்தார். அதே சமயத்தில் பயன்தராத உற்பத்தி செய்யமுடியாத கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கலாம் என்கிற பரிந்துரையை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டார்.
1948: உத்தரப்பிரதேச அரசு அமைத்த குழுவானது, இந்திய அரசு 1947ல் அமைத்த சர்தார் தத்தார் சிங் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுகொண்டு ஆதரவு அளித்தது.
1950: உத்திரப் பிரதேச மாநில அரசு, பசுவதைத் தடைக்கு ஆதரவளித்ததைப் பொறுக்கமுடியாத பிரதமர் நேரு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடுமையான கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “வதைக்கப்பட்ட கால்நடைகளின் தோலுக்கு, இயற்கையாக மரணம் அடைந்த கால்நடைகளின் தோலை விட மதிப்பு அதிகம். ஆகவே நல்ல மதிப்புள்ள தோல்களே நல்ல விலையைப் பெற்றுத்தரும். கால்நடைகள் வதைக்கப்படாத நிலையில், நல்ல விலை பெற்றுத்தரக்கூடிய மதிப்புள்ள தரமான தோல் சந்தையில் கிடைக்காது. எனவே, கால்நடைகளின் மீதான முழு தடையானது, ஏற்றுமதியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலின் நலனுக்கு எதிராகவும் இருக்கும்என்று குறிப்பிட்டார்.4 ஆயினும், பாராளுமன்றத்தில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
1954: பசு மற்றும் அனைத்துக் கால்நடைகளின் வதை தடை செய்யப்படவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதாவின் மீதான விவாதத்தின் இறுதியில், தடை செய்யப்படவேண்டும் என்று கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஏற்பட்டு மசோதா நிறைவேறும் நிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் மசோதாவிற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நேரு, கால்நடை வதைத்தடை மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டார்5. அவருடைய அச்சுறுத்தலுக்கு அவர் எதிர்பார்த்த உடனடியான பலன் கிடைத்தது. ஆம், மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, இரண்டு வருடங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மசோதா, ஒரே ஒரு நபரின் அச்சுறுத்தலால் திரும்பப் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம், “கால்நடைவதை மீதான முழுமையான தடை சாத்தியமில்லை. கால்நடைத் தீவனம் நாட்டில் உள்ள 40% கால்நடைகளுக்குத்தான் போதுமானது, மிச்சமுள்ள 60% கால்நடைகள் வதைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தது.
1955: உத்திரப்பிரதேச அரசு பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றி அமல்படுத்தியது. ஆனால், மூடிய டப்பாக்களில் வைக்கப்பட்ட மாட்டிறைச்சியை விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கலாம் என்று அறிவித்தது.  
1966 நவம்பர் 7: சாதுக்கள், சந்நியாசிகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் உடனடியாகப் பசுவதைத் தடை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தில்லி பாராளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு அபினவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஆதரவளித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா, அந்தப் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லி அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.எல்.நந்தாவுக்கு உத்தரவிட்டார். சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புரி சங்கராச்சாரியார் நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகளும், ஆச்சார்யா வினோபாபவேவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த இந்துக்களைச் சாந்தப்படுத்த 1947ல் தன் தந்தை என்ன செய்தாரோ அதையே மகள் இந்திராவும் செய்தார்6.
1967: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.சர்கார் தலைமையில், புரி சங்கராச்சாரியார் ஜகத்குரு நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குருஜி கோல்வல்கர், அப்போதைய இரு மாநில முதல்வர்கள் சரன்சிங், டி.பி.மிஸ்ரா, மற்ற மாநிலங்களின் கால்நடைத்துறை அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய சக்தி வாய்ந்த உயர்நிலைகுழுவை அமைத்தார் இந்திரா. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் வெளியிடப்படவே இல்லை!
1976: தேசிய வேளாண்மை ஆணையம் பின்வரும் பரிந்துரைகளை அளித்தது:
* பால் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், தரமான இறைச்சிக்காகவும் எருமைகள் வளர்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
* எருமை இறைச்சி ஏற்றுமதியைப் பெருக்கும் விதமாகத் தேவையான நடவடிக்கைகளை துணிவோடும் ஊக்கத்தோடும் எடுக்க வேண்டும்.
* உபயோகம் இல்லாத ஆண் எருமைக் கன்றுகளுக்கு ஊட்டம் கொடுத்துக் கொழுக்க வைத்து, இறைச்சியின் தரத்தை அதிகரிக்கும் வகையில் தேவையான மேல் நடவடிக்கைகளை எடுத்து, எருமை இறைச்சி ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.
இந்த அறிக்கையே இந்திய அரசின் கொள்கை ஆனது!
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பின்பற்றி, பல மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மாட்டிறைச்சி சாப்பிடுவது மற்றும் அதை வியாபாரம் (உள்நாடு மற்றும் ஏற்றுமதி) செய்வது ஆகியவற்றைத் தங்கள் கலாசாரமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டவர்களுக்கு எந்தவிதத்திலும் தடங்கல்கள் இல்லாதவாறு, தேவையான ஓட்டைகளுடனேயே அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
1998ல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடை தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் போகவே, காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பசுவதைத் தடை செய்யப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். உடனடியாக பிரதமர் வாஜ்பாய், முந்தைய பிரதமர்களைப் போலவே தானும் பசுவதைத்தடை பற்றி ஆய்வு செய்வதற்கு, வரலாற்று ஆய்வாளரும் காந்தியவாதியுமான தரம்பால் தலைமையில் தேசியக் கால்நடை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் 2002ல் தன் அறிக்கையை அளித்தது. அதில், “1967ல் அமைக்கப்பட்ட சக்திவாய்ந்த உயர்நிலைக் குழு அளித்த அறிக்கை அரசின் ஆணவக் காப்பகங்களில் எங்கும் காணப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

தர்மத்தின் பாதுகாப்பு பசுப்பாதுகாப்பும்தான்

சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடையை நோக்கி இவ்வளவு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்த பிறகும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசுகள் இந்நாட்டின் தர்மத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் விதமாக, பசுவதைத் தடை விஷயத்தில் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. ஆனால் அதற்கு நேரெதிராக, பசுக்கள், எருமைகள், காளைகள், கன்றுகள் என்று அனைத்தும், உயர்தரத் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், ஏற்றுமதி வியாபாரத்திற்காகவும் வதைக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவே கசப்பான உண்மை!
பசுக்கள், காளைகள், எருமைகள், கன்றுகள் ஆகியவற்றைக் காப்பாற்றிப் பாதுகாப்பது நமது தர்மத்தின்படி இன்றியமையாதது. ஏனெனில் நமது பாரம்பரியம் வயிறு வளர்ப்பதையே பிரதானமாகக் கொண்டதல்ல. மாறாக பலவீனர்களையும் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகும். கோசம்ரக்ஷணம் அல்லது பசுப்பாதுகாப்பு என்பது பசுக்களை மட்டுமின்றி, காளைகள், எருமைகள், காளைக்கன்றுகள், எருமைக்கன்றுகள் ஆகிய அனைத்துக் கால்நடைகளையும் காப்பதுதான். நமது தர்மத்தின்படி, அவைகள் இருக்க வேண்டிய இடங்கள் வயல்களும், கோவில்களும், கோசாலைகளும்தானே தவிர கசாப்புக் கூடங்கள் அல்ல!
உசாத்துணைகள்:
1. http://www.thehindu.com/news/national/Cow-vigilantes-%E2%80%98anti-social%E2%80%99-Modi-breaks-his-silence/article14556739.ece, http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-blasts-cow-vigilantes-calls-them-anti-social-2958427/
2. http://www.thehindu.com/news/national/other-states/modi-fears-a-pink-revolution/article5864109.ece
3. http://www.thehindu.com/news/national/india-on-top-in-exporting-beef/article7519487.ece
4. https://en.wikipedia.org/wiki/Cattle_slaughter_in_India