சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்

“எந்த ஊர் நீங்கள் எல்லாரும்?” என்று சீனமொழியில் கட்டைக் குரலில் கேட்ட டாக்சி ஓட்டுநரிடம் “இந் து” என்றேன். “ஓ..” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். சீன மொழியில் இந்தியர்களை “இந் து” என்றுதான் அழைப்பார்கள். “மோதி.. மோதி… நலமா?” என்றார்.  “நலமாக இருக்கிறார்” என்றேன். மோதியைப் பற்றி எதோ சிரித்துக்கொண்டே சொன்னார். நான், மாண்டரின் எனக்குக் கொஞ்சம்தான் தெரியும், சில வார்த்தைகள்தான் பேசமுடியும், நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் புரியவில்லை என்றேன். அவர் “பரவாயில்லை… நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள்” என்றார். இந்தப் பயணம் முழுவதுமே நான் சந்தித்த அத்தனை பேரும், எனக்குத் தெரிந்த சீன மொழியில் பேச முயற்சி செய்த போதெல்லாம், ஒரே ஆச்சரியமும் வியப்புடனும் என் சொற்பிழைகளை எல்லாம் விடுத்து என்னைப் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தைவிட சீன மொழியில் பேசுவதே சௌகரியமாக இருந்தது.

சீனாவில் காலடி வைத்ததிலிருந்து முதலில் தெரிவது கடலலை போன்று அலை அலையாக முகங்கள் முகங்கள், எங்கும் முகங்கள். குழந்தைகளுக்கு ஈடாக வயது முதிர்ந்தவர்களும் ஏராளமாகத் தென்பட்டனர். முதியவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியத்துடன், உடல் தளர்வின்றி இருப்பதாகப்பட்டது. அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது, எல்லோருமே ஒரு மாதிரி இரைந்து சத்தமாகப் பேசுவதாகப் பட்டது. சாலை நடுவில், பக்கத்தில் நிற்பவரிடம் கூட சாதாரணமாகப் பேசுவதைவிடக் கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொள்கிறார்கள். மேலும், இருவர் பேசும்போது, அவர்கள் பேசுகிற தொனியை மட்டும் கவனித்தால் கிட்டத்தட்ட சண்டை போட்டுக் கொள்வது போலவும், சிறிது நேரத்தில் இவர் அவரை அடித்து விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் ஏதாவது சாப்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

பீஜிங்கில் அகலமான சாலைகள். எட்டு அல்லது பத்து வழிச் சாலைகள் அதிகம் தென்பட்டன. நகரைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து வட்டச்சாலைகள் அமைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓரிடத்தில் நாங்கள் சென்ற ஒரு எட்டு வழிச்சாலை திடீரென்று முட்டுச் சந்தாகி விட்டது. அது இன்னும் முழுவதுமாக அமைக்கப்படவில்லை, பணிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். பீஜிங் நகரத்துக்குள் பெரிய சாலையமைப்பு பணிகள் எதுவும் நடக்காவிட்டாலும், அங்கங்கே பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காகவென்றே மேலும் பல கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.


சாலைகளில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பெரும்பான்மையான மக்கள், சைக்கிள், மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையே உபயோகிக்கின்றனர். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஆயிரக்கணக்கில் இது போன்ற எலக்ட்ரிக் சைக்கிள்கள் இரைந்து கிடக்கின்றன. இரு பெருநிறுவனங்கள் இந்த சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். யாரும் சைக்கிள்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. மொபைல் செயலியில் சைக்கிள் மீது உள்ள கோட்-ஐ (Code) ஸ்கேன் செய்து இயக்கினால் சைக்கிள் பூட்டு திறந்து கொள்கிறது. பின்பு எவ்வளவு தூரம் செல்லவேண்டுமோ சென்ற பின் அங்கேயே சைக்கிளை விட்டுவிட்டுச் சென்று விடலாம். எவ்வளவு தூரம் சென்றோமோ அதற்குரிய தொகை நமது கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு விடும். குளிர் காலத்தில் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் மீது கோட் (Coat) மாதிரி ஒன்றைப் போடுகிறார்கள்.

சைக்கிளைத் தவிர பயணம் செய்வதற்கு ஊபர் மாதிரியான டாக்சிகளும், சப்வே ட்ரெயினும் செயல்படுகின்றன. இது தவிர பேருந்துகளும் உள்ளன. பேருந்துகள் சில இடங்களில் மின்சார ரயில் போல் மேலே மின்கம்பிகளைத் தொட்டுக் கொண்டும், அது இல்லாத இடங்களில் டீசலிலும் செல்லுகின்றன. எல்லோரும் பயமுறுத்தியதைப் போல, மாசு, புகை, மூச்சுத் திணறல் எதுவுமே நான் சென்ற பகுதிகளில் இல்லை. அங்கேயே வாழும் சீனர்களில் பலர் கூட மாசைக் கட்டுப் படுத்தும் மாஸ்க் அணிவதைப் பரவலாகக் காணமுடியவில்லை. ஓரளவு மாசு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. சாலையில் கண்ட மற்றொரு விஷயம், நடந்து செல்பவர்களுக்கு அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் சிக்னல் இல்லாதபோதும் குறுக்கே சாலையைக் கடக்க முயற்சிக்கும்போதும், யாரும் கோபப்பட்டு ஹாரன் அடித்து எரிச்சலை வெளிப்படுத்தவே இல்லை. பொதுவாகவே பல நிமிடங்கள் சாலையில் காத்திருக்கும்போதும், திடீரென்று யாராவது குறுக்கே செல்ல நேரிட்டாலும் யாரும் கோபப்படவே இல்லை.

*

அமெரிக்க நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் தனியாகவும், கடைகளும் அரசு அலுவலகங்களும் தனியாகவும் இருக்கும். ஆனால் பீஜிங்கில் நமது இந்திய நகரங்களைப் போலவே குடியிருப்புப் பகுதிகளும், அலுவலகங்களும் பெருவிற்பனைச்சாலைகளும் (mall) அருகருகே இருக்கின்றன. தெருக்களின் பெயர்கள், சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் உள்ளன. ஆனால் கடைகள், விற்பனைப் பொருட்கள், எதிலுமே சிறிதும் ஆங்கிலம் கிடையாது. ஓரிடத்தில் கொஞ்சம் பாலும் தயிரும் வாங்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் தயிர் என்றால் அதில் இனிப்பு சேர்க்கப்பட்டது மட்டுமே கிடைக்குமாம், வெறும் தயிர் கிடைப்பதில்லை. எங்கும் அசைவ மயம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தானே சமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

சீனாவின் மக்கள் தொகையோ நூற்று முப்பது கோடி. அவர்களில் நூறு கோடிப் பேர் அசைவம் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், எத்தனை கோடி மிருகங்கள் தினமும் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன, ஒரு வருடத்தில் எத்தனை மிருகங்கள் அழியும் என்று கணக்கிட்டால் வியப்பாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் கே.எஃப்.சி, மெக்டோனாட்ஸ் போன்ற உணவகங்களில் பன்றிக் கறி கிடைக்கிறது. இந்த உணவகங்கள் எல்லாமே உள்ளூர் பாணியில் உள்ளன. வால்மார்ட் போன்ற பெருவிற்பனைக் கூடங்களில் உயிருடன் உள்ள கடல் வாழ் உயிரினங்களை விற்கிறார்கள். சீனர்கள் உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எல்லா வீதிகளிலும் ஒன்றிரண்டாவது உணவகங்கள் உள்ளன.

சீனாவிலிருந்து ஆங்கிலேயர் எப்படித் தேயிலை பயிர்களைத் திருடி இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து நண்பர்களுடன் பேசினோம். இரண்டாம் உலகப்போரின்போது சீனப் போர்க் கைதிகளை நமது உதக மண்டலத்திற்குக் கொண்டுவந்து தேயிலை பயிரிட ஆங்கிலேயர் பயன்படுத்திய விவரம் குறித்தும் பேசினோம். ஹுவான் சுவாங், இ சிங் போன்ற யாத்திரிகர்கள் குறித்து பேச்சு தொடர்ந்தது. ஹுவான் சுவாங் நன்கு அறியப்பட்டவர், பள்ளிகளில் பாடங்களில் அவரது பயண விவரங்கள் உண்டு என்று எங்கள் சீன நண்பர் தெரிவித்தார்.

*

இரும்புத் திரை நாடு என்பார்கள். சீனாவிற்கு செல்லும்முன்பே எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்று விரிவாகச் சொல்லி இருந்தார்கள். மதத்தைப் பரப்புதல், மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வருகிறவர்கள், சந்தேகப்படும் வகையில் நிறைய பிரசுரங்கள் புத்தகங்கள் எடுத்து வருகிறவர்கள் போன்றவர்களைக் கூட சீன நாட்டுக்குள் உள்ளே நுழைய விடமாட்டார்கள். பௌத்த விஹாரங்கள் கூட சுற்றுலா செல்லும் இடம் போலச் செயல்படுகின்றன. சர்ச்சுகளும் அப்படித்தான். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பிஷப்புகள் வாடிகனின் பிரஜைகள், அவர்கள் எதாவது குற்றச்செயலில் ஈடுபட்டாலும் முதலில் வாடிகனில் அனுமதி வாங்கித்தான் கைது செய்ய முடியும் என்று சொல்வர். ஆனால் சீனாவில் சர்ச் அந்நாட்டு கம்யூனிச அரசுக்கே தன் விசுவாசம் என்று அறிவித்துவிட்டுத்தான் செயல்படுகிறார்கள். சீனர்களிடையே பெரும்பாலான கிறிஸ்தவ மதமாற்றம், தாய்வானிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் வருகிற சீனர்களிடமிருந்தே ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில், டிவி சானல்கள் எல்லாமே சீன மொழியில்தான் இருந்தன. பிபிசி மற்றும் CNBC சேனல்கள் மட்டுமே ஆங்கிலம். அதிலும், செய்திகளில் சீனா குறித்து ஏதேனும் செய்தி இருந்தால் உடனே அந்த சானல் பல நிமிடங்களுக்குக் கருப்பாகி முடங்கி விடுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில்தான், ஹாங்காங்கில் ஒரு மாணவர் குழு, தொழிலாளர்களுக்காகப் போராட்டத்தில் இறங்கி இருந்தது; பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை ஒருவர் புகார் அளித்தும், அவரே கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் செய்திகள் பிபிசியில் வரும்போதெல்லாம் முடங்கியது. சீன மொழி சானல்களில் நான் பார்த்தவரை எல்லாமே நேர்மறையான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. ஒரு கிராமத்தில் எப்படி விவசாயம் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது, எப்படி அங்கே எல்லாரும் செல்வந்தர்கள் ஆகி வருகிறார்கள் என்பது மாதிரியான செய்திகளே. சைனா டெயிலி போன்ற செய்தித் தாள்களிலும் இதே நிலைதான். உலகச் செய்திகளில் கூட எப்படி எல்லா நாடுகளும் சைனாவுக்கு சாதகமாக உள்ளன, அல்லது எதிராக நடந்துகொள்ளும் நாடுகள் எச்சரிக்கப்படுகின்றன என்பது போன்ற செய்திகளே காண முடிந்தது.

நான் பழகிய அளவில் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. இந்தியாவைக் குறித்து மிகக் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். நமக்கு பாகிஸ்தான் போல, சீனாவுக்கு ஜப்பான். ‘பொதுவாக நாங்கள் ஜப்பான் குறித்து எதுவும் பேசவே மாட்டோம். ஜப்பான் மீது ஆழ்ந்த வருத்தமும் கோபமும் உள்ளது’ என்றார் என் நண்பர்.

*

நாங்கள் சென்றிருந்த நேரம் Moon festival என்ற பண்டிகைக் கொண்டாட்டம். இந்தியாவில் புரட்டாசி பௌர்ணமி தினத்தை சரத் பூர்ணிமா என்று கொண்டாடுவர். சீனாவில் இந்த நாள் ஒரு அரசு விடுமுறை நாள். மதம், நம்பிக்கைகள் என்று எதுவும் இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அதற்கு முதல்நாள் சீனப் பெருஞ்சுவரைக் கண்டு வந்திருந்தோம். சீனப் பெருஞ்சுவர் சிறிய குன்றுகளின் மீது வளைந்து வளைந்து செல்கிறது. பல இடங்களில் அதற்கு அடியில் சுரங்கம் (tunnel) அமைத்தும், சில இடங்களில் அதன் குறுக்கேயும் சாலைகள் அமைத்துள்ளனர்.

நாங்கள் சென்ற பகுதியில், இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களைப் போன்றே கசகசவென்று கடைகள். ஆனால் நடைபாதைகள் படு சுத்தமாக இருந்தன. சுவரின் மீது ஏறி நடந்து செல்ல பல படிகள் ஏற வேண்டி இருந்தது. பல இடங்களில் புதிதாக சிமென்ட் / கான்க்ரீட் போட்டுப் பராமரித்திருந்தனர்.  ஒரு பக்கம் ஒரு காவல் கோபுரத்தில் இருந்து இன்னொரு காவல் கோபுரத்துக்கு ஓட்டப்பந்தயம் கூட நடந்து கொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களில், டிக்கட் வாங்கும்போது இந்தியர்களுக்கு ஒரு விலை, வெளிநாட்டினருக்கு ஒரு விலை என்று வைத்திருப்பார்கள். அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாருக்குமே ஒரே விலைதான்.

அதற்கும் முந்தைய தினம், பேலஸ் ம்யூசியம் என்கிற Forbidden Cityக்கு சென்றோம். (அண்மையில்தான் மோதி இங்கே வந்து சென்றார்). தஞ்சை பெரிய கோவிலைப் போல நான்கைந்து மடங்கு பெரிய அரண்மனை இது. ஒரு காலத்தில் அரச குடும்பம் வாழ்ந்த இடம். மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டின்கூரை அமைப்பை வைத்தே ஒருவரின் சமூக மதிப்பை கூறிவிடலாமாம். சாதாரண மக்கள் வீட்டுக் கூரைகள் கருப்பு/பழுப்பு நிறத்தில் இருக்கும். அரசர்களின் வீடுகள் மட்டும் கூரை மஞ்சள் நிறத்தில் பொன்னைப் போன்று இருக்குமாம். இங்கேயும் அரண்மனைக்குள் அப்படித்தான் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. அகன்ற ஒரு மைதானம், அதைக் கடந்ததும் அகழி, அதைத் தாண்டியதும் காவல் கோபுரங்களுடன் கோட்டைக் கதவு, அதைப் பூட்ட உபயோகிக்கும் பன்னிரண்டு அடி நீள ஒற்றை மரத்துண்டு, அதற்குப் பின் அரச தர்பார். அங்கே தரையில் டிராகன், சிங்கம், புலி போன்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அரசர்கள் அதன் மீது நடந்தது வருவார்களாம். அங்கங்கே ஐந்தடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவில் பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்கள், நீர் சேமிக்கவாம். அரசர்கள் உபயோகித்த பொன்னாலான சிம்மாசனங்கள் கூட அங்கே வைத்திருக்கிறார்கள்.

சென்ற இடமெல்லாம் ஏராளமான கூட்டம், முக்கியமாக கொரியர்கள் நிறைய இங்கே சுற்றுலா வந்திருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு இந்தியர் குழுவையும் கண்டேன்.

அடுத்து நான் பார்த்த பகுதி, சீனாவின் தேசிய அருங்காட்சியகம். இங்கே சீனாவில் கிடைத்த பழங்காலப் பொருட்கள், பழங்கால மக்களின் எலும்புத் துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் உபயோகித்த புத்தகங்கள், மூங்கில் துண்டுகள் என்று பலவும் இருக்கின்றன. ஏராளமான வெண்கலம், தங்கம், பிற உலோகங்களில் செய்த விதவிதமான புத்தர் சிலைகள், பௌத்த மதத் தேவதைகளின் பிரதிமைகள் பலவும் இங்கே அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன. அவற்றின் பெயரை சம்ஸ்க்ருத உச்சரிப்பு மாறாமல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நான் பேசிய பல சீன நண்பர்களுக்கு இந்து மதம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு பௌத்தம்தான் மிகவும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. பாலி மொழி குறித்து ஒரு சீன நண்பர் பல விவரங்கள் கூறினார். ஆனால் அவருக்கு சம்ஸ்க்ருதம் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தேசிய அருங்காட்சியகத்திற்கு அருகிலேயே தியானன்மென் சதுக்கம், அரசினர் மாளிகைகள் பலவும் உள்ளன. என்னுடன் வந்த சீன நண்பர் பயபக்தியுடன்  இங்கேதான் சேர்மன் இருக்கிறார். இதற்கு முன்பு சேர்மன் மாவோ இங்கிருந்துதான் அலுவல்களைக் கவனிப்பார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். 1989ம் ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி லேசாகக் கேட்டேன், அது எப்போதோ பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்தது, இப்போது அதெல்லாம் யாருக்கும் நினைவில் கூட இருப்பதில்லை என்று நகர்ந்து விட்டார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாதுகாப்பும் பலமாக உள்ளது. எக்காலத்திலும் பாஸ்போர்ட், ஐடி கார்டு இல்லாமல் செல்லக் கூடாது. யாரையும் எங்கேயும் நிறுத்தி சோதனை செய்வார்கள். ஏன் இத்தனை பலமான சோதனைகள், இங்கே தீவிரவாதிகள் குறித்து பயமா என்றேன். தீவிரவாத நிகழ்வுகளை விட, ஏதாவது போராட்டங்களே அடிக்கடி நிகழும், உடனே காவல்துறை வந்து அடக்கிவிடும் என்றனர். நான் சென்ற ஒரு வாரத்துக்குள் எனக்கு அப்படி எதுவும் சிக்கலான அனுபவம் நேரவில்லை.

இந்திய நகரங்களில் பெரும்திரளான மக்களின் நடுவே இருக்குபோது ஒரு நிம்மதியற்ற நிலை இருப்பதாக எனக்குப் படும். எதிலும் ஒரு அச்சம், தற்காப்பு, சுயலாபம், உயர்ந்தது தாழ்ந்தது என்று உணரமுடியாத நிலை, அலட்சியம் எல்லாம் தென்படும். பீஜிங்கில் நான் பார்த்தவரை, எரிச்சல்படாத டாக்சி ஓட்டுநர்கள், அவசரப்படாத வாகனங்கள், பொதுமக்களிடம் விதிகளை மீறாத பழக்கங்கள் இவையே என்னைக் கவர்ந்தன. நாட்டின் தலைநகரமாகையால் இப்படி இருக்கலாம், வேறு பல நகரங்களையும் கிராமங்களையும் சுற்றித் திரிந்து பார்த்தால்தான் அந்த மக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.


போஜராஜனின் சம்பு ராமாயணம் – பெங்களூரு ஸ்ரீகாந்த்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச்சென்றார். அதற்குப் பின்னர் பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தைப் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது.

பொதுவாக உரைநடையிலோ (கத்யம்), கவிதை வடிவிலோ (பத்யம்) தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில், போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா ||
(பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும் வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்ததுதான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப்பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அதனை நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ ||
(பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்ந்தாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகைப் பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி ||
(பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.

குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது.

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ ||

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்குக் காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம்தான் என்கிறது இந்த ஆயுர்வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்குக் கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில்தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா ||
(பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கி விட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக்கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்றும் அழகாக உருவகப்படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ ||
(பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகிவிட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்தச் சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.


ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்க்கண்டவாறு பேசுகிறான்.

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: ||
(அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டிவிட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு. என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு. இப்படியாக எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை:

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப்படுகிறது.

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் ||
(ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்தக் கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே ||
(ஆரண்யகாண்டம் – 28)

‘பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி, அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாகப் படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது!’ என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமணர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு, அண்ணனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: ||

(கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், ‘பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான்தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்துத் திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப்படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல்’ என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும்போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப்படுகிறது. ராமனுக்குத் தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனைச் சந்தித்து சீதையைச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாகப் பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனையுடனிருந்த ராமலட்சுமணர்கள் மத்தியில் கரைபுரண்டோடிய அவர்களது ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கிவிட்டார்! அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்துப் பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன், பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டம்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: ||
(யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவரை வணங்கி போஜன் தன் எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப்பட்ட சம்பு ராமாயணத்தைப் பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப்படுகிறதுதானே என்று அடக்கத்துடன் கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்குச் சற்றும் குறைவில்லாதவைதான்.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியைக் கற்க விரும்புவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் சம்பு ராமாயணம் அள்ள அள்ளக் குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் – பெங்களூரு ஸ்ரீகாந்த்


காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்
பெங்களூரு ஸ்ரீகாந்த்
இளம்பிறை போல் வளைந்துள்ளன
மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள்
வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது
நகக் கீறல்களென.
தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை
சுவைக்கிறது வண்டு.
தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக்
கொம்புகளால் வருடுகிறது ஆண்மான்.
கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக்
களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி.
தாமரைக் குருத்தை நீட்டித்
தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம்.
பெருமரங்களின் திரண்ட கிளைகளைத்
தழுவுகின்றன
செறிந்த மலர்முலைக் கொத்துக்களும்
அசையும் தளிர் இதழ்களும் கொண்ட
பூங்கொடிகள்.
புஷ்பமதுவால் சுழலும் கண்களுடன்
வியர்வை துளிர்க்கப் பாடுகிறாள் அவள்.
பாட்டுகளுக்கு நடுவில் அவள் முகத்தை முத்தமிடுகிறான்
கிம்புருஷன்.
மாந்தளிரின் சுவையூறும் குரலில்
இனிதாகக் கூவுகிறது ஆண்குயில்
முகம் திருப்பிச் செல்லும் இவளது தற்செருக்கை உடைக்கும்
மன்மதனின் வசந்தகால ஆணை என.

(காளிதாசனின் குமாரசம்பவத்திலிருந்து, மொழியாக்கம்: ஜடாயு)

காவியம் எதற்கு? காவியத்தைப் படைப்பதனாலோ படிப்பதனாலோ என்ன பயன்? இந்தக் கேள்விக்கு பழைய கவிஞர் ஒருவர் இவ்வாறு பதில் சொல்கிறார்.

காவ்யம்ʼ யச²ஸே அர்த்த²க்ருʼதே வ்யவஹாரவிதே³ சி²வேதர க்ஷதயே |
ஸத்³ய: பரநிவ்ருʼதயே காந்தாஸம்ʼமிததயா உபதே³ச²யுஜே ||

“காவியம் இயற்றுவதிலும் வாசிப்பதிலும் ஆறு நன்மைகள் உண்டு. புகழ் கிடைக்கும். செல்வம் சேரும். நடைமுறையில் எண்ணங்களை வலுவாக வெளிப்படுத்த இயலும். மங்கலம் உண்டாகும். அமங்கலம் விலகும். கவிதை இன்பத்தை அனுபவித்து மனமகிழ்வு அடையலாம். விடை தெரியாத சிக்கல் ஏற்படும்போது, உற்ற மனைவி சொல் போன்ற நல்லுரையைக் காவியத்திலிருந்து பெறலாம்” என்கிறார் கவிஞர். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று வாழ்க்கையில் அடையவேண்டியவையாக உள்ள நான்கிலும் உன்னதத்தை எடுத்துக் காட்டும் காவியங்களுக்கு நமது வரலாற்றில் குறைவில்லை. அவற்றில் முதன்மையானவை காளிதாசனின் காவியங்கள்.

புரா கவீநாம்ʼ க³ணநா ப்ரஸங்கே³ கநிஷ்டிகாதி⁴ஷ்டித காளிதா³ஸ: |
அத்³யாபி தத்துல்ய கவேரபா⁴வாத் அநாமிகா ஸார்த²வதீ ப³பூ⁴வ ||

“முன்பொருமுறை கவிஞர்களை வரிசைப்படுத்த எண்ணி, சுண்டு விரலை நீட்டி காளிதாசன் என்ற பிறகு, அவனுக்கு இணையாக அடுத்து யாரைச் சொல்வது என்று பார்த்தால், யாருமே கிடைக்கவில்லை. அதனால் மோதிரவிரல் அநாமிகா (பெயரற்றது) என்று பெயர் பெற்றது.”

சம்ஸ்கிருதத்தில் மோதிர விரலுக்கு அநாமிகா என்று பெயர். அதை வைத்து சாமர்த்தியமாக புனையப் பட்ட கவிதை இது.

“ஓ இணையற்ற கவியே
அன்றொரு ஆடிமாதத்தின் அற்புத நாளில்
எப்போதென்று தெரியாத ஒரு வருடத்தில்
நீ மேகதூதம் எழுதினாய்
உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே
கருமை பூசிய ஆழ்ந்த ஒலியுடைய மேகம் போல
பிரிய நேர்ந்த காதலரின் தாபங்களை
இடியோசையாய் எடுத்துரைக்கும்”

– காளிதாசனைக் குறித்து ரவீந்திரநாதத் தாகூர்

நம் காலத்துக்கு வெகு அருகில் வாழ்ந்து மறைந்த தாகூர் மட்டுமல்ல, நமது வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்கள் அனைவரிடமுமே காளிதாசனின் பாதிப்பு உண்டு. அதனால் தான் கவி குல குரு என்றே சம்ஸ்கிருத மரபில் அவனை அழைக்கிறார்கள்.

இவ்வளவு பெருமை உள்ள கவியரசன் தன்னை எப்படி கருதிக் கொள்கிறான் தெரியுமா?

மந்த³: கவியஶ:ப்ரார்தீ² க³மிஷ்யாம்யுபஹாஸ்யதாம்|
ப்ராம்ʼஶுலப்⁴யே ப²லே லோபா⁴து³த்³ப³ஹுரிவ வாமன:||

“கவிஞர்களுக்கே உரிய பெருமையை விரும்பி மந்தனான நானும், எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டு துள்ளித் துள்ளிக் குதித்து ஏமாந்து நகைப்புக் கிடமாகும் குள்ளனின் நிலையை அடைவேனோ” என்கிறான்.


உவமை என்றால் காளிதாசனின் உவமைகளே (உபமா காளிதாசஸ்ய) என்றொரு வழக்கு உண்டு. எத்தனை கோணத்திலிருந்து ஒப்பு நோக்கினாலும் பொருந்தக் கூடிய உவமைகள் அவை.

ரகுவம்சத்தின் முதல் கவிதை:

வாக³ர்தா²விவ ஸம்ப்ருக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே |
ஜக³த: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஶ்வரௌ ||

சொல்லும் பொருளும் என இணைந்த
தொல்லுலகின் தாய்தந்தையரை,
பார்வதி பரமேஸ்வரரை,
சொல்லையும் பொருளையும் அறிந்திடவேண்டிப்
பணிகிறேன்.

எத்தனை அழகிய, ஆழமான உவமை! பார்வதி பரமேஸ்வர தம்பதியர் இருவர் மீதும் கவிஞருக்கு இணைபிரியாத, பேதமற்ற பக்தி உண்டு என்பது இப்பாடலில் வெளிப்படுகிறது. காளிதாசன் என்ற பெயருக்கு காளியின் தாசன் என்று பொதுவாக அர்த்தம் சொல்வர். காலிந் என்றால் காலனை வென்றவன், சிவன் என்றும் பொருள். எனவே சிவபெருமானுக்கு தாசன் என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.
காளிதாசனின் கவித்திறன் சம்ஸ்க்ருதம் என்ற மொழிக்குள் அடைபட்டதன்று. ஏனெனில் அவனது கவிதைகளின் விழுப்பொருள் நமது பாரதப் பண்பாட்டில் ஊன்றித் திளைத்த ஒன்றாகவே இருக்கும். மறைந்த சம்ஸ்க்ருத மேதை டாக்டர் V. ராகவன் கூறுகிறார் – “Kalidasa represents the quintessence of Indian culture and heritage; and whether it is a native who wants to partake of it or an outsider who seeks an authentic message of it, to both of them Kalidasa is most satisfactory and at the same time the most attractive exponent of it”. தமிழ் உட்பட எல்லா பாரத மொழிகளிலும் அவனுக்குப் பின்வந்த கவிஞர்களிடம் காளிதாசனின் தாக்கம் காணக் கிடைக்கிறது என்று இந்திய இலக்கிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக குமாரசம்பவத்தில் ஒரு கவிதை:

ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மஸு தாடி³தாத⁴ரா:
பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேதி³ரே
சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:

“மழையின் முதல் துளிகள் அவளின் கண் இமைகளில் சிறிது தங்கின.பின் அவள் மார்பகங்களில் சிதறின. இறங்கி அவள் வயிற்று சதைமடிப்பு வரிகளில் தயங்கின. வெகுநேரத்திற்குப் பின் அவள் நாபிச் சுழியில் கலந்தன.”
கம்பராமாயணத்திலும் இதே உவமையைக் காணலாம்.

திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ

(அயோத்தியா காண்டம், நகர்நீங்குபடலம்)

“கண்களினின்று புறப்பட்ட கண்ணீர் ஆறு மிகுதியான குங்குமக் குழம்பையும் சிவந்த சாந்தினையும் நடுநடுவே சேறாகப் பொருந்தப் பெற்று மாதரின் முத்து மாலைகளை இழுத்தது. நெருங்கிய தனங்களில் விழுந்து நீங்கி மேகலை அணிந்த இடையில் சென்று சேர்ந்தது.”
காளிதாசனுக்கு முன்பு மேகதூதம் போல காதல் தூது என்பதைக் கொண்ட காவியங்கள் வடமொழியில் இல்லை. ஆனால் தமிழில் சங்க இலக்கியங்களில் தூது விடும் பாடல்கள் உண்டு. ஒருவேளை காளிதாசனும் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்து அதிலிருந்து உந்துதல் பெற்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ரகுவம்சத்தில் பல இடங்களில் பாண்டியர்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. அதிலொன்று இது –

தி³ஸி² மந்தா³யதே தேஜோ த³க்ஷிணஸ்யாம்ʼ ரவேரபி |
தஸ்யாம்ʼ ஏவ ரகோ⁴: பாண்ட்³யா: ப்ரதாபம்ʼ ந விஷேஹிரே | |

தக்ஷிணாயன காலம். சூரியன் தெற்கு திசையில் வருகிறான். அப்போது சூரிய ஒளி மங்கியதாக இருக்கிறது. இதற்கு, சூரியன் பாண்டியர்க்கு அஞ்சி ஒளி குன்றியதாக கூறுகிறார். அவ்வளவு வீரம் செறிந்த பாண்டியர்களும் மாமன்னன் ரகுவுக்குப் பணிந்தனராம்.

காளிதாசனின் காவியங்களையும் தமிழ் இலக்கிய நூல்களையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சி எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழ்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர்களே அத்தகைய ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். அத்தகைய ஆய்வு மேற்கொள்ளப் பட்டால் அது பல புதிய செய்திகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

கவிஞர்கள் தாம் மதிக்கும் விரும்பி ரசிக்கும் முன்னோடிகளின் கருத்துக்களையும் வாசகங்களையும் தாமும் எடுத்தாண்டு அவர்களுக்கு மரியாதை செய்வது வழக்கம் தான். ஒரு சுவாரசியமான உவமையின் வாயிலாக இதைக் காளிதாசன் கூறுகிறான்.

அத² வா க்ருʼதவாக்³த்³வாரே வம்ʼஶே(அ)ஸ்மின்பூர்வஸூரிபி⁴: |
மணௌ வஜ்ரஸமுத்கீர்ணே ஸூத்ரஸ்யேவாஸ்தி மே க³தி: ||

ஆயினும், முன்னிருந்த புலவோர் செய்த
சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும்,
ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே
நூல் செல்வது போல்.

அதாவது, ரகுவம்சத்தில் ஒவ்வொரு அரசனின் வரலாறும் இணையற்ற இரத்தினமாக இருக்கிறது. என் முன்னிருந்த வால்மீகி போன்ற பெரியோர் அந்த இரத்தினங்களுக்கு அவர்களது வைரம் போன்ற படைப்புகளால், துளையிட்டு உள் நுழைந்து வெளிவந்தனர். அத்தகைய துளைகளுக்குள் நுழைந்து வெளிவந்து அவற்றை இணைக்கும் சரடு போன்றது தான் என் முயற்சி. பத்தொன்பது அத்தியாயங்களுடன், ஆயிரக்கணக்கான அழகழகான கவிதைகளுடன் ஒரு மகா காவியத்தைப் படைத்த கவியிடம் எத்தனை அடக்கம்!

ரகுவம்சத்தில் இந்துமதியின் சுயம்வரக் காட்சி. சுயவரத்துக்கு பல தேசத்து அரசர்களும் வந்து அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் இந்துமதியின் அழகில் மயங்கி அவளை தன்னை நோக்கி ஏற்பதற்காக சில சைகைகளைச் செய்து கவனத்தை ஈர்க்கின்றனர். அப்போது இளவரசி ஒவ்வொருவராகப் பார்வை இடுகிறாள்.

ஸஞ்சாரிணீ தீ³பஶிகே²வ ராத்ரௌ யம்ʼ யம்ʼ வ்யதீயாய பதிம்ʼவரா ஸா |
நரேந்த்³ரமார்கா³ட்ட இவ ப்ரபேதே³ விவர்ணபா⁴வம்ʼ ஸ ஸ பூ⁴மிபால: ||

இந்துமதி ஒவ்வொரு அரசனையும் நெருங்கும்போது மகிழும் அவ்வரசன் அவள் அடுத்து நகர்ந்து விட, நமக்கு மாலையிடவில்லையே என்று வருந்தி களையிழந்து போகிறான். இக்காட்சி, இருபுறமும் அழகழகான மாளிகைகள் கொண்ட ராஜவீதியில் தீபம் ஒன்று எடுத்துச் செல்லப் படும்போது, ஒவ்வொரு மாளிகையும் பிரகாசம் அடைந்து, அந்த தீபம் நகர்ந்தபின் இருளடைவதைப் போல இருந்ததாம். இந்துமதியை தீபச்சுடராகவும், வந்திருக்கும் அரசர்களை அவள் வாசம் செய்யப்போகும் மாளிகையாகவும் ஒப்பிட்டது சிறந்த உவமையாக ரசிக்கப் படுகிறது.

இந்துமதி சுயம்வரத்தில் ரகுவின் புதல்வனான அஜனைத் தேர்ந்தெடுத்து மணம் புரிகிறாள். சிலகாலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து தசரதனை மகனாகப் பெற்றெடுக்கிறார்கள். பின்பு ஒரு நாள் திடீரென்று இந்துமதி இறந்து விடுகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் வரும் கவிதைகள் தன் அன்புத் துணையை இழந்த காதலனின் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்துவதில் இணையற்றவையாகக் கருதப் படுகின்றன.

“அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்று விட்டது. கலைந்த கூந்தலோடு, பேச்சடங்கிய உன் முகம்!

நீ எனக்கு மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்கையில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத் தான் அபகரிக்கவில்லை?..

நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே, என் கண்ணீரும் கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?”

(ஜடாயுவின் மொழியாக்கத்திலிருந்து)

காளிதாசனின் பெண் பாத்திரங்கள் வலிமையாகவே படைக்கப்பட்டுள்ளன. கல்வியில், அழகில், நிர்வாகத் திறனில் எதிலும் அபலைகளாக அப்பெண்கள் இல்லை. குறிப்பாக மாளவிகாக்னிமித்ரம் என்ற நாடகத்தில், கௌசிகியின் பாத்திரம். அவள் கணவனற்றவள், சகோதரனையும் பறிகொடுக்கிறாள், ஆனால் அறிவிற் சிறந்தவளான அவள் மனம் தளரவில்லை. எல்லாக் கலைகளிலும் கல்வியிலும் சிறந்தவளான அவள் தான் அரசவையில் முக்கிய இடம் பிடிக்கிறாள். கௌசிகியின் பாத்திர அறிமுகம் இவ்வாறு அமைகிறது:

மங்க³லாலங்க்ருʼதா பா⁴தி கௌசி²க்யா யதிவேஷயா |
த்ரயீ விக்³ரஹவத்யேவ ஸமமத்⁴யாத்மவித்யயா || 13||

“அழகிய ஆபரணங்களுடன் அரசியும் பின் தொடர்ந்து சந்நியாசினியான கௌசிகியும் வருவது, வேதத்தைத் தொடர்ந்து உபநிஷதம் வருவதைப் போன்று இருந்தது.”

காளிதாசனின் காலத்தில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் அரசில் பங்கு பெற்றார்கள், துறவும் பூண்டார்கள், விரும்பியதை அடைவதில் பாகுபாடு, வேறுபாடுகள் இல்லை. நடைமுறைக் கல்வியும், ஆன்மீகக் கல்வியும் பெண்களுக்குத் தடை செய்யப் படவில்லை என்பதே இங்கு நமக்குக் கிடைக்கும் சித்திரம். இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், எந்தப் பெண்ணுக்கும் ஜாதி, வர்ண வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் காளிதாசனின் காவியங்களில் கூறப்படவில்லை. இளவரசியான மாளவிகா, பணிப்பெண்ணாகவும் இருக்கிறாள். அதனை அவள் கீழ்மையாகக் கருதவில்லை. சகுந்தலா துஷ்யந்தனின் அவையில், இன்னொரு பெண்ணால் தூஷிக்கப்படுவதை எதிர்த்து சுயமரியாதையுடன் வாதிடுகிறாள். காளிதாசன் நமக்குக் காட்டும் பெண் பாத்திரங்கள், நமது இன்றைய பல முன்முடிவுகளைத் தகர்ப்பதாகவே அமைந்துள்ளன.

**********
காளிதாசன் உஜ்ஜைனி பட்டணத்தில் விக்கிரமாதித்தன் அவையில் வீற்றிருந்தான் அல்லது தாரா நகரத்தில் போஜராஜன் அவையில் இருந்தான் என்பன போன்ற கதைகள் பல உண்டு. காளிதாசன் எந்த அரசனின் காலத்தில் இருந்தான் என்பது யாருக்கும் தீர்மானமாகத் தெரியாது. அகச்சான்றுகளும் இல்லை. எப்படியாயினும் அவன் மன்னரைப் பாடிப் பரிசு பெரும் கூட்டத்தைச் சேர்ந்த புலவனல்ல.

அவன் வாழ்ந்த காலம் பாரதத்தின் பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். அப்போது பாரதப் பண்பாடு செல்வ வளத்தில் மிகுந்திருந்தாலும் துறவறத்தையும் உயர்வாக எண்ணிக் கொண்டாடியது. ஆடம்பரத்தையும், செல்வச் செழிப்பையும் மட்டுமே பெரிதாக எண்ணி அதனைத் தேடி ஓயாமல் ஓடுவதை நம் பண்பாடு ஊக்குவிக்கவில்லை. காளிதாசனின் கவிதைகளில் இத்தகைய விழுமியங்களைத் தொடர்ச்சியாகக் காணலாம்.

சாகுந்தலத்தில் துஷ்யந்தனின் ராஜ போக வாழ்க்கையை விட கானகத்தில் முனிவர்கள் வாழும் சூழலும் அதன் அழகுமே அதிகம் இடம் பிடிக்கிறது. குமார சம்பவமும் காடு, இயற்கை சூழ்நிலையில் நிகழ்வதே. ரிது சம்ஹாரம் இயற்கையைக் கொண்டாடுவதே. ரகுவம்சத்தில் தேவருலகம் வரை ரதத்தில் சென்று வரக்கூடிய அரசனாக இருந்தும், திலீபன் காட்டில் முனிவரின் குடிலில் உள்ள காமதேனுவுக்கு பணிவிடை செய்ய நேரிடுகிறது. ராமனின் வரலாறும் அரச போகம் துறந்து காட்டில் வாழ்வதில் தான் பெரும்பகுதி செல்கிறது. எத்தனையோ மகாராஜர்கள் பராக்கிரமசாலிகள் பேசப் படும்போதெல்லாம், தவ வலிமையும் எளிமையும் உள்ள முனிவர்களும் முன்னிறுத்தப் படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகள் திரும்ப திரும்ப வருவதன் பின்னால் உள்ள சிந்தனை கவனத்திற்குரியது.

காளிதாசன் வானவில்லின் ஏழு வண்ணங்களைப் போல் ஏழு சிறந்த படைப்புகளை நமக்கு படைத்து அளித்திருக்கிறான். மூன்று நாடகங்கள், இரண்டு சிறு காவியங்கள், இரண்டு பெருங்காப்பியங்கள். அவனது கவிதை அத்தனை எளிமையானது, புரிந்து கொள்ளக் கூடியது. அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளது.

பத³வீம்ʼ காளிதா³ஸஸ்ய லலிதாம்ʼ ம்ருʼது³லை: பதை³: |
ந ச²க்னுவந்த்யஹோ! க³ந்தும்ʼ பச்²யந்தொ(அ)பி கவீச்²வரா: ||

“கண்ணெதிரே காளிதாசன் கடந்து சென்ற பாதை வெகு எளிதாகத் தெரிந்தும் அஹோ! கவியரசர்களால் அப்பதம் அடைய முடியாமல் இருக்கிறதே.”

இதில் ‘பதம்’ என்பது காலடி, உயர்ந்த நிலை (பதவி), சொல் ஆகிய மூன்று அர்த்தங்களையும் தரும். காளிதாசனின் பதத்தை அடைவது மிகவும் அரிது என்று கவிஞர் கூறுகிறார். இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானது.

ஆதிகவியின் முதல் கவிதை – பெங்களூர் ஸ்ரீகாந்த்

கவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ புறத்திலும் அகத்திலும் காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனாகவும்,  சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயாகவும், புயலில் அலைவுறும் மரமாகவும், சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களாகவும் பல தோற்றங்களை ஒரே கவிஞனால் சமைக்க முடிவதற்குக் காரணம், காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே அவன் ஆகி விடுவதால் தான். அறிவைக் கொண்டு எழுதும் கவிதைகளை விட, ஆன்மாவிலிருந்து பிறக்கும் கவிதைகளே மேம்பட்டவையாக இருக்கின்றன என்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.

கவிதை புனைவது இருக்கட்டும். கவிதையைப் படித்து உணருவதற்கே எதையும் தூலமாக மட்டுமே அறியும் தட்டையான பகுத்தறிவு உதவாது. எத்தனையோ விசித்திரங்களை, அழகுகளை, அவலங்களை அது தரும் மனவெழுச்சிகளை ஆன்மாவால் கண்டுணரும்போது, இறைத்தன்மையைக் கூட உணரமுடியும். ஆனால் அதை தருக்கம் தரும் அறிவால் மட்டும் காணும்போது வெறுமையே எஞ்சுகிறது. நமது புராண இலக்கியங்களை ஆழ்ந்து படிக்கும்போது இது புரியும்.

ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் பாடல் உலகைப் படைத்த பிரமனையே ஒரு ஆதி கவிஞனாகத் தான் உருவகப் படுத்துகிறது (”தேனே ப்³ரஹ்ம ஹ்ருʼதா³ய ஆதி³கவயே”). அத்தகைய மகா கவிஞனான பிரம்மன் ஒரு மனிதனைச் சந்திக்க வருகிறான். அந்த மனிதனும் சாதாரணமானவன் அல்ல, இறைநிலை எய்தியவன். மனிதன் இறைத்தன்மையை அடையும் சில தருணங்களில் தான் மனிதனால் இறைவனைச் சந்திக்க முடிகிறது. பிரம்மனே இறங்கி வந்து சந்தித்த அந்த தருணத்தில் தான் அந்த மனிதன் தானே புதியதாக ஒன்றைப் பிறப்பித்திருக்கிறான். அது என்ன என்று அவனுக்கே இன்னும் சரிவர தெரியவில்லை. கிமித³ம் வ்யாஹ்ருதம் மயா? என்ன செய்திருக்கிறேன் நான்? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறான்.

There is pleasure in poetic pains which only poets know என்கிறார் வேர்ட்ஸ்வொர்த். வால்மீகி என்னும் அந்த மனிதனை பிரம்மன் கண்ட தருணத்தில் இருவரும் ஒன்றிப் போனார்கள். ஒருவர் தூலமான உலகைப் படைப்பவர். இன்னொருவர் நுண்ணிய மன உணர்வுகளை உருவாக்கும் கவிதை உலகைக் படைப்பவர்.  இவ்விருவரும் சந்திப்பதே ஒரு கவித்துவமான நிகழ்வுதான்.

***
வால்மீகி முனிவர் பிரசேதஸ் என்பவரின் பத்தாவது பிள்ளை. சில புராணக் கதைகளின்படி காட்டில் வேடனாகவும், திருடனாகவும் இருந்தவர். பின்னர் ஒரு காலகட்டத்தில் மனம் மாறுதல் அடைந்து துறவு கொண்டு, நீண்ட நெடிய காலம் தவம் மேற்கொள்கிறார். தவத்தின் பலனாக அவர் இவ்வுலகில் இன்பமோ, வேறொரு உலகத்தில் சுகமோ தேடியதாகத் தெரியவில்லை. மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து எழுந்து வந்த அவரது வாழ்வில், தேடல் என்பது மனித வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள், அவற்றுக்கு காரணமாக அமையும் நல்வினை தீவினை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர் மனம் ஏங்குகிறது.

ஒரு நாள் நாரதரைச் சந்திக்கிறார். நாரதர் பிரம்மனின் பிள்ளை என்று புராணங்கள் கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது. நாரதரிடம் வால்மீகி கேட்கும் சில கேள்விகளே நமக்கு அவரது தேடலை உணர்த்துகின்றன. இவ்வுலகில் தற்சமயம் வாழும் உன்னதமான மனிதன் யார்? நல்ல குணம் பொருந்தியவனாகவும், வீரனாகவும், தருமம் மிகுந்தவனாகவும், உண்மையும் உறுதியும் உள்ளவனாகவும், நல்ல செயல்கள் செய்தவனாகவும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாகவும், கல்விமானாகவும், ஏற்றத்தாழ்வு பாராமல் எல்லோரையும் ஒன்றாக எண்ணக் கூடியவனாகவும், தன்னை வென்றவனாகவும், கோபத்தை அடக்கியவனாகவும், வானுறையும் தேவரும் போர் புரிய அஞ்சுபவனாகவும் இருப்பவன் யார்? இவ்விதம் உள்ள மனிதன் குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்கிறார் வால்மீகி.

இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்றால் இறைவனே மனிதனாக வந்தால் தான் உண்டு. அப்படி இறைவன் மனிதனாக வந்து வாழ்ந்த கதையைத் தான் சுருக்கமாக நாரதர் வால்மீகிக்குச் சொல்கிறார். தான் கேட்ட ராமனின் வாழ்க்கைச் சம்பவங்களை எண்ணிய படியே வால்மீகி தன் சீடருடன் தமஸா நதியின் கரையில் நடந்து செல்கிறார். அப்போது ஒன்றுடன் ஒன்று கூடிக் களித்துக் கொண்டிருக்கும் இரு புறாக்களைக் காண்கிறார். அன்பின், ஆசையின், இன்பத் தேடலின், அறத்தின் இணைநிலை அது. அந்நிலையில் சட்டென ஆண் புறா அம்பு தைக்கப் பட்டு இறந்து விழுகிறது. இணைந்திருந்த அந்த பறவைகளில் ஒன்றை நோக்கி ஒரு வேடன் அம்பெய்தி இருப்பதை வால்மீகி காண்கிறார். தன் இணை இறந்து வீழ்ந்ததை எண்ணிக் கதறிப் புலம்புகிறது பெண் புறா. இந்தக் காட்சி வால்மீகியைத் துணுக்குறச் செய்கிறது. அவர் வாயினின்று உடனே சாபச் சொல் வெளிப்படுகிறது. .

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³ம: ஶாஶ்வதீ: ஸமா: |
யத்க்ரௌஞ்ச மிது²நாதே³கமவதீ⁴: காமமோஹிதம் ||

வேடனே! இணையான கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை நீ கொன்றதால்,
இனி எக்காலத்திலும் நீ நிலையாக இருக்க மாட்டாய் (மரணம் அடைவாய்)!

வால்மீகியின் எண்ணமும் காட்சியும் இணைந்து மிகுந்த சோகத்தில், வால்மீகியின் நாவிலிருந்து எழுந்த இந்த கவிதையே ஆதி முதல் கவிதை என்று கருதப் படுகிறது.. ராமாயணம் கருணை,  சோகம் ஆகிய ரசங்களைப் பிரதானமாகக் கொண்ட காவியம் என்பதற்கு இந்த கவிதை வித்தாக அமைகிறது.

பெரும் அநியாயம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மனித மனத்தை உலுக்கி அதன் அபத்தங்களைக் காட்டும் காவியங்கள் ராமாயணத்துக்குப் பின்னரும் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ராமாயணமே அவற்றுக்கு முன்னோடியாக உள்ளது. ***

வால்மீகிக்கு முன்பே வேத இலக்கியங்களில் சந்தங்கள் (சந்தஸ்) இருந்தாலும், அனுஷ்டுப் சந்தஸாக இருந்த இலக்கணம் அனுஷ்டுப் ஸ்லோகமாக மாறியது வால்மீகியிடம் தான். மேலும் எழுத்தில் வடிக்க முடியாத ஸ்வரங்கள் உள்ள வேத கவிதைகளில் இருந்து மாறுபட்டு, ஸ்வரங்கள் இல்லாமல் இலக்கியங்கள் உருவாக்கப் பட முன்னோடியாக அமைந்ததும் வால்மீகியின் ராமாயணம் தான். தமிழில் மரபுக் கட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக புதுக்கவிதை பிறந்ததைப் போன்ற ஒரு உருவாக்கம் தான் இது.  பின்னாளில் ராமாயணத்தை ஒற்றியே, வேத இலக்கணத்தின் சந்தங்கள் யாவும் கவிதைக்கு உகந்த சந்தங்களாக மாறின. இத்தகைய கவிதைகள் ஸ்லோகம் என்ற பெயரைப் பெற்றதும் அப்போதுதான். வால்மீகியின் சோகத்திலிருந்து பிறந்து தான் ஸ்லோகம்.

ஶோகார்தஸ்ய ப்ரவ்ருʼத்தோ மே ஶ்லோகோ ப⁴வது நான்யதா²|
(பாலகாண்டம் 1-2-18)

சோகத்தினால் பிறந்தது ஸ்லோகம் ஆகட்டும்.

ஸ: அனுவ்யாஹரணாத் பூ⁴ய: ஶோக: ஶ்லோகத்வம் ஆக³த: |
(பாலகாண்டம் 1-2-40)

அதனைத் திரும்ப திரும்ப இசைத்ததால் சோகம் ஸ்லோகம் ஆனது.

வேதக் கவிதைகளின் சந்தங்கள் ஒரே போல அமைந்தது இல்லை. ஆர்ஷப் ப்ரயோகம் அல்லது ரிஷியின் பயன்பாடு என்ற சமாதானத்துடன் அவை இலக்கண ஒழுங்குகளை மீறுவதாகவே இருந்தன. ஆனால் வால்மீகியின் ராமாயணத்திலிருந்து தான் கவிதைகள் சந்த ஒழுங்கு பெறுகின்றன.

வால்மீகியின் அந்த முதல் கவிதைக்கு இலக்கணப் படி சந்தி பிரித்து, நேரடி அர்த்தம் பார்க்கும்போது அதன் பொருள் இவ்வாறு அமைகிறது: ஏ திருவற்ற வேடனே (ஹே அம நிஷாத³), தன் இணையுடன் காமத்தில் மூழ்கி இருந்த புறாக்களில் ஒன்றை வீழ்த்திக் (காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம்), கொன்றாய் (அவதீ⁴). ஆகையால், நீ (த்வம்) பல ஆண்டுகள் நிலைத்த நிலையை (ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ) மா க³ம: (அடையமாட்டாய்).  பறவை இணைகளில் ஒன்றைக் கொன்ற வேடனை நீ நீண்ட நாட்கள் இருக்க மாட்டாய் என்று சபிப்பதாக இது அமைந்துள்ளது.

இங்கே சற்று யோசிக்க வேண்டும். வால்மீகி போன்ற ஒரு மாமுனிவருக்கு வேட்டையாடுதல் பற்றி தெரியாதா? வேடன் தன் தொழிலைச் செய்ததற்கு மரணத்தையே சாபமாக கொடுப்பது ஏன்? வால்மீகி ராமாயணத்தின்படி  ராமனே வேட்டையாடி இருக்கிறார். மாமிசம் உண்டிருக்கிறார். வாலியிடம் உன்னைக் கொன்றது வேட்டையாடுவது போலத் தான் என்று வாதிட்டிருக்கிறார்.

ப்ரமத்தானப்ரமத்தான்வா நரா மாம்ʼஸார்தி²னோ ப்⁴ருʼஶம்|
வித்⁴யந்தி விமுகா²ம்ʼஶ்சாபி ந ச தோ³ஷோ(அ)த்ர வித்³யதே ||
(கிஷ்கிந்தா காண்டம் 4.18.38)

“மாமிசத்தை விரும்பக்கூடிய மனிதர்கள், கவனமுடைய/கவனமில்லாத மிருகங்களை வேறு பக்கம் நோக்கிக் கொண்டிருந்தாலும், கொல்கிறார்கள். இதில் தோஷம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே வேடன் ஒரு பறவையைக் கொன்றதற்காக மட்டும் வால்மீகி மகரிஷி சாபம் இட்டிருக்க முடியாது. இங்கே தான் காம மோஹிதம் என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது. தன் இணையுடன் சேர்ந்து இருக்கும் நிலையில் காமத்தில் மூழ்கி உள்ள நிலையில் என்று கூறும் போது, மரணத்தை விட கொடுமையான துன்பத்தை, அந்த இணைப் பெண் பறவைக்குக் கொடுத்ததற்காகவே சபிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணாகிய சீதையின் துன்பமே ராமாயணக் கதையாக உருவாகி உள்ளது. சீதையைப் போலவே அந்தப் பறவை துன்பப்படுவதை அவர் உணர்ந்ததாலேயே வேடனுக்குச் சாபம் அளித்திருக்கக் கூடும்.

ஒப்பு நோக்கில், மஹாபாரதத்திலும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. காட்டில் வேட்டைக்குச் சென்ற பாண்டு, இரண்டு மான்கள் கூடி இருக்கும் நிலையில் ஒரு மானை அம்பால் அடித்து விடுகிறான். உண்மையில் ஒரு ரிஷி குமாரன் மான் உருக்கொண்டு தன் இணையுடன் சேர்ந்து இருந்த நிலை அது. இறக்கும் தருவாயில் தன் மனித உருப்பெற்ற ரிஷி குமாரன், சபிக்கிறான்.

ம்ருʼக³ரூபத⁴ரம்ʼ ஹத்வா மாம் ஏவம்ʼ காமமோஹிதம் |
அஸ்ய து த்வம்ʼ ப²லம்ʼ மூட⁴ ப்ராப்ஸ்யஸீத்³ருʼஶம ஏவ ஹி ||
(மஹாபாரதம் ஆதிபர்வம்)

“மூடனே, காம மோகத்தில் இந்த மிருகத்தினுடைய உருத்தரித்த என்னைக்கொன்று, இதே போன்ற என் நிலையை (மரணத்தை) நீயும் அடைவாய்”.

அதனாலேயே பாண்டு பின்னொருநாள் மனைவியுடன் கூடும் சமயத்தில் இறக்க நேரிடுகிறது. அக்காலத்தில் வேட்டையாடும் போது, இணையாக சேர்ந்து இருக்கும் மிருகங்களை கொல்லக் கூடாது என்ற தர்மம் இருந்திருக்கிறது.

***
வால்மீகியின் இந்த முதல் கவிதைக்கு வேறு பலவிதமாக அர்த்தங்களையும் அளிக்கிறார்கள்.  ராம காவியத்தின் தொடக்கமாக வரும் இந்த ஸ்லோகம், வால்மீகியின் சோகத்தில் எழுந்த சாபமாக அமைந்தது பாரம்பரிய உரையாசிரியர்களுக்கு உவப்பாக இல்லை. ஆகவே சொற்களைப் பிரித்து அர்த்தம் கூறும் தொழில் நுட்பத்தில் தேர்ந்த அவர்கள் இதற்கு வேறு விதமாகவும் சுவாரசியமாகப் பொருள் கூறுகிறார்கள்.

மா  என்றால் திரு.நிஷாத என்றால் இருப்பிடமாக இருப்பவர் (நிஷீத³ந்தி அஸ்மின் இதி நிஷாதோ³ நிவாஸ: ). அதாவது, திருவற்ற வேடன் என்று முன்பு கொண்ட பொருள் திருமகளின் உறைவிடமாக உள்ள திருமால் என்று ஆகிவிடுகிறது.

மாநிஷாத³ த்வம் ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ க³ம:

திருமகளின் உறைவிடமான திருமாலே, நீ பல்லாண்டு நீடித்த நிலையை அடைவாய்.

யத் காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴

ஏனெனில் காமத்தால் மதியிழந்து (சீதையை அபகரித்த) இரட்டையரில் (ராவணன் – மந்தோதரி) ஒருவரைக் கொன்றாய்.

ராவணனைக் கொன்று மூவுலகையும் காத்ததால் என்றென்றும் நிலைபெற்ற தன்மையை அடைவாய் என்று மங்கள வாழ்த்துச் சொல்வதாக கோவிந்தராஜரின் உரை கூறுகிறது.

மற்றொரு உரையில் இந்த ஒரு ஸ்லோகத்திலிருந்தே ராமாயணத்தின் ஏழு காண்டங்களில் உள்ள உட்பொருளும் உரைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதாவது  மா நிஷாத³ என்பது ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த பால காண்டத்தையும், ப்ரதிஷ்டா²மக³ம: ஶாஶ்வதீ: ஸமா: என்ற சொற்களில் ராமன் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரச போகத்தை தியாகம் செய்து பெரும்புகழ் அடைந்த அயோத்யா காண்டத்தையும், க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴ என்ற சொற்களில், ஆரண்யகாண்டத்தில் ராமனும் சீதையும் பிரிந்ததையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி – தாரை இணைகளில் வாலியின் வதமும், ராமனும் சீதையும் பிரிவுத் துயர் படும் சுந்தர காண்டமும், ராவணன் – மந்தோதரி இணையில் ராவண வதம் நிகழும் யுத்த காண்டமும், ராமனை சீதை நிரந்தரமாக பிரியும் உத்தர காண்டமும் குறிப்பால் உணர்த்தப் படுவதாக கூறப் படுகிறது.

வேறொரு உரை இந்த சம்பவங்களில் நவரசங்களும் இருப்பதாகக் கூறுகிறது. ஆரம்பிக்கும்போது, காட்டு வர்ணனையில் சாந்த ரசமும், கிரௌஞ்ச பறவைகளின் களிப்பில் சிருங்கார ரசமும், ரௌத்திரம், பயம் ஆகிய ரசங்கள் வேடன் ஆண் பறவையை அடித்துக் கொன்ற நிகழ்விலும், இணையை இழந்து கதறும் பறவையின் ஓலத்தில் பீபத்ஸ (அருவருப்பு) ரசமும், தன் இணையைப் பிரிந்தது குறித்த சோகத்தில் கருணா ரசமும், இதையெல்லாம் கண்டு அதிசயிக்கும் கவி, அவரைக் காண படைப்பின் கடவுளின் வருகை ஆகியவற்றில் அத்புத ரசமும் வெளிப்படுவதாகக் கூறுகிறது.

***

ஆதி கவி முதல் கவிதை சமைத்த அந்த தருணத்திற்காக முதலில் பிரமனின் பிள்ளையான நாரதர் வருகிறார். பின்னர் பிரமனின் மனைவி சரஸ்வதி ஸ்லோக ரூபமாக வால்மீகியின் நாவில் வருகிறாள். பின்னர், இணையற்ற ஒரு காவியத்தை உலகுக்கு தருமாறு கேட்க பிரம்ம தேவனே வருகிறார். அப்படிப் பிறந்த காவியத்துக்கு இன்றளவும் மனித மனத்தைத் தொடும் மகத்தான ஆற்றல் இருப்பதில் வியப்பில்லை. ஆதி சங்கரர் கவி என்கிற சொல்லுக்கு க்ராந்த தர்சி என்று விளக்கம் கூறுகிறார். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் வாழ்வை ஆழமாகவும் அகலமாகவும் உணரக்கூடியவர். இந்த அடைமொழி வால்மீகிக்கு சாலப் பொருந்தும்.

“ராமாயணக் கதையின் உட்கருத்தில், அதன் ஆன்மாவில் எல்லோராலும் நுழைந்து விட முடிவதில்லை. ஆனால் அப்படி நுழைந்தவர்கள் அதற்குப் பிறகு இந்த உலகில் தோன்றிய வேறு எந்த காவியத்தையும் ராமாயணத்துக்கு மிஞ்சியதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்கிறார்  ஸ்ரீஅரவிந்தர். . நவீனயுகத்தின் நுகர்வுக் கலாசாரத்தில் கவிதைக்கு இடமிருக்குமா என்று விசனப் படவும் செய்கிறார் –   “வரலாற்றின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த மக்களைக் கொண்ட இறந்த காலத்தின் முடிவற்ற அமைதியிலிருந்து, அந்த கால கட்டத்தை உணர்த்தவும், மறைந்து விட்ட மாந்தர்களின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தவும் ஒரு சில குரல்கள் மட்டுமே எழுகின்றன. இக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தான் கவிஞர்கள். எது நேரடியாக உபயோகப் படுத்த முடிகிறதோ, நுகர்வின்பத்திற்கும், அதிகார பலத்திற்கும் எது இட்டுச் செல்கிறதோ அதற்கே மனிதர்கள் மதிப்பளிக்கும் இக்காலத்தில், நுகர்வுக் கலாசாரமும், அறிவியல் சிந்தனைகளும் நமது ஆன்மாவை வற்ற வைத்து விட்ட நிலையில், கவிதை என்பதையே ஒதுக்கி வைத்து அலட்சியப் படுத்தும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறோம். ஓவியம், சிற்பம் போன்ற பழங்கால கலைகளை நம்மால் தற்காலத்தில் எப்படி ஒருக்காலும் அதே சிறப்புடன் உருவாக்க முடியாதோ அதே போல கவிதை எனும் மகத்தான கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இச்சமூகம் கவிஞர்களின் உபயோகத்தை மறந்து விட்டது”

ஆனால், ராமகாதை இன்றளவும் காலத்தை வென்று நிற்கிறது. ”மலைகள் ஆறுகள், கடல்கள் எத்தனை காலம் இருக்குமோ, அத்தனை காலம் இந்த உலகில் உன் ராமாயணக் கவிதை வாழும்” என்று படைப்புக் கடவுளான பிரம்மனே அன்றோ வால்மீகியை வாழ்த்தியிருக்கிறார் !