வலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்

வலம் ஜூன் 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.
தமிழகத்தில் தாமரை மலருமா? | அரவிந்தன் நீலகண்டன்

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் – ஓர் ஆய்வு | லக்ஷ்மணப் பெருமாள்

2019 தேர்தல் – தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி | ஹரன் பிரசன்னா

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் – பகுதி 2 | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

வேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்

சில பயணங்கள் – சில பதிவுகள் – பகுதி – 20 | சுப்பு

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 2) | தமிழில்: ஜனனி ரமேஷ்

ஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும், அசுரச் சரிவும் | ஜெயராமன் ரகுநாதன்

அம்பையிடம் இருந்து ஒரு கடிதம்

பீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்

வர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா? (புத்தக அறிமுகம்) | சுப்பு

அந்தமானில் இருந்து கடிதங்கள் – சாவர்க்கர் (கடிதம் 2) | தமிழில்: VV பாலா

சேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு

சேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு


Image result for pratap chandra sarangi
2019 மே 30ம் தேதி மோதி 2.0 அரசின் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக சம்பிரதாயமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.  பிரதாப் சந்திர சாரங்கி என்ற பெயர் கூறப்படும் போது கூட்டத்திலிருந்து மாபெரும் கரவொலிகளும் பாரத்மாதா கீ ஜெய் கோஷங்களும் எழுகின்றன. அந்த ஒடிசலான மனிதர் மேடையில் நடந்து வரும்போது,  மோதி, அமித் ஷா இருவரும் கைகூப்பி பணிவோடு வணங்குகின்றனர்.  இத்தகைய பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய ஒதிஷா பாஜக தலைவர்களுள் ஒருவரான 64-வயது சாரங்கி, இந்திய அரசின் கால்நடைகள், பால்வளம், மீன்வளம் & சிறு-குறு-தொழில் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சராக அறிவிக்கப் பட்டிருக்கிறார்.  இவரது  அப்பட்டமான எளிமையும்,  நேர்மையும், தன்னமலமற்ற சேவையும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஒதிஷாவின் பலாஸோர் (Balasore) பாராளுமன்றத் தொகுதியில்  பிஜு ஜனதா தளக் கட்சியின் ரவீந்திர ஜேனா என்ற பிரபல தலைவருக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் சாரங்கி. இதற்கு முன்பு  2004 மற்றும் 2009 தேர்தல்களில் வென்று தனது சொந்த ஊரான நீலகிரியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
1955ல் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 1975ல் பட்டப் படிப்பை முடித்த சாரங்கிக்கு, சிறுவயது முதலே ஆன்மீக நாட்டம் இருந்தது.  ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.  தனது இருபதுகளிலேயே, சன்னியாசியாகும் விருப்பத்தைத் தனது குருவும் அப்போதைய பேலூர் ரா.கி.மடத் தலைவருமான சுவாமி ஆத்மஸ்தானந்தாவிடம் தெரிவித்தார்.  அவரது மனப்பாங்கு துறவறத்திற்கு முற்றுலும் தகுதியானது என்று சுவாமிஜி கருதினாலும்,  ஒரு மகனாக விதவைத் தாயாரை இறுதிக் காலம் வரை கவனித்துக் கொள்ளும் முதன்மையான தார்மீகக் கடமை அவருக்கு உண்டு என்று அறிவுறுத்தி சன்னியாசம் தர மறுத்து விட்டார்.  மக்களுக்கு, குறிப்பாக அவரது பிரதேசத்தில் வாழும் பழங்குடி மக்களான வனவாசிகளுக்கு தன்னமலமற்ற சேவை செய்வதன் மூலமே தெய்வீக நிலையடையலாம் என்று ஆசிர்வதித்தார்.  தனது சேவைப்பணிகளுடன் கூட, 2018ல் தனது தாயாரின் மறைவு வரை சாரங்கி அவரை அருகிருந்து கவனித்து பணிவிடை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குருவின் ஆணையை ஏற்ற சாரங்கி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் முழுமையாகத் தன்னை இணைத்துக் கொண்டார். கண சிக்ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பலாஸோர், மயூர்பஞ்ச் மாவட்டங்களின் வனவாசி மக்களுக்காக  ஸமர் கரா கேந்திரா எனப்படும் பள்ளிகளைத் தொடங்கினார்.  இவை படிப்படியாக வளர்ந்து அப்பகுதிகளில் கணிசமான வனவாசி மக்களுக்கு  தரமான கல்வியை அளித்து வருகின்றன. இதோடு கூட, அடிப்படை சுகாதாரம், கிராமியத் தொழில் அபிவிருத்தி, வனவாசிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்று பல தளங்களில் அவர் செயலாற்றி வருகிறார்.   ‘நானா’ (மூத்த சகோதரர்) என்று அப்பகுதி மக்களால் பிரியத்துடன் அழைக்கப் படும் சாரங்கியின் சேவையைப் பற்றிய விவரங்கள் எந்தப் படாடோடமும் இல்லாமல் கிராம மக்களின் பேச்சுகள் செவிவழிச் செய்திகள் வழியாகவே பரவின. அதன்பின்பு பா.ஜ.க அவரைத் தலைவராக முன்னிறுத்தியது. அரசியல் தலைவராக ஆனபிறகும் அவர் தனது தேர்ந்தெடுத்த இலட்சிய வாழ்க்கையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் இயல்பாகவே வாழ்ந்து வந்தார்.  சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது தனக்குக் கிடைத்த நிதி, சம்பளம், அதன்பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் சேவைப்பணிகளிலேயே செலவிட்டார்.  2019 தேர்தலின் போதுதான்,  ஓலைக்கூரை வேய்ந்த குடிசை வீடே அவரது வசிப்பிடமாக இருப்பதும்,  கட்சிப் பணிகளுக்கும் பிரசாரத்திற்கும் தனது சைக்கிளிலேயே அவர் சென்று வந்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒதிஷாவிற்கு வெளியே பரவலாகத் தெரிய வந்தன. ஒதிஷாவின் கந்தமால் போன்ற பழங்குடியினர் மாவட்டங்களில் தலைவிரித்தாடிய கிறிஸ்தவ மிஷனரிகளின் மதப்பிரசார, மதமாற்ற செயல்பாடுகளும்  அதற்கான வனவாசி சமூகங்களின் எதிர்வினைகளும் 1990கள் தொடங்கி வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன.  சாரங்கி செயலாற்றும் பகுதிகளில் அதன் பாதிப்பு தீவிரமாக இல்லாததற்குக் காரணம்  இத்தகைய சேவைப்பணிகளும், அதனுடன் இணைந்த அவரது அரசியல் பின்னணியுமே ஆகும்.
சாரங்கி அமைச்சரானதைத் தொடர்ந்து,  இந்து விரோத செக்யுலர் ஊடகங்கள் அவருக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை உடனே ஆரம்பித்து விட்டன.  1999ல்  ஒதிஷாவின் கியோஞ்சார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற ஊரில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரியும் அவரது மகன்களும் ஜீப்பில் எரித்துக் கொல்லப் பட்ட வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது.  இந்தப் படுகொலையை விசாரணை செய்வதற்காக அமைக்கப் பட்ட வாத்வா கமிஷன் ஸ்டென்ய்ஸ் அந்தப் பகுதிகளில் சில ஆண்டுகளாகவே கடும் மதமாற்றப் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளதையும் அதனால் கணிசமான அளவில் வனவாசிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளதையும் பதிவு செய்தது. சி.பி.ஐ விசாரணையைத் தொடர்ந்து 2003ல் தாராசிங் உள்ளிட்ட 12 பேரை குற்றவாளிகளாக விசாரணை நீதிமன்றம் உறுதி செய்தது.  தாராசிங் பஜ்ரங்க் தள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறியவர்;  மற்றபடி இந்தக் குற்றச்செயலுக்கும்  பஜ்ரங்க தளம் அமைப்பிற்கும்  எந்த தொடர்பும் இல்லை. இது தனிப்பட்ட அளவில் திட்டம் தீட்டிச் செய்யப் பட்ட வன்முறைச் செயல் என்று நீதிமன்றம் தெளிவாகவே கூறியிருக்கிறது [1].  இந்நிலையில், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில்  பஜ்ரங்க தளம் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் சாரங்கி இருந்ததால்,  அவருக்கும் அந்தச் சம்பவத்தில் தொடர்பு உண்டு  என்று முற்றிலும் ஆதாரமற்ற அவதூறு பிரசாரம் செய்யப் படுகிறது.  அவர்மீது உள்ள கிரிமினல் வழக்குகள் அரசியல் விரோதம் காரணமாகப் பதியப்பட்டவையே அன்றி அவற்றுக்கும் இந்த வன்முறைச் சம்பவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை.  காங்கிரஸ், இடதுசாரி, திருணமுல் போன்ற இந்துவிரோத கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் மற்றும் இந்து சமூக சேவகர்கள் மீது  பொய்வழக்குகளைப் போடுவதை ஒரு வழக்கமாகவும் உத்தியுமாக வைத்திருக்கின்றனர் என்பது நன்கு தெரிந்ததுதான் (சமீபத்திய சபரிமலை விவகாரத்தின் போது கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் மீது அங்குள்ள பிணராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு ஒரே வருடத்திற்குள் 200க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளைப் போட்டிருப்பது ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் ஆளாகியுள்ளது).   இத்தகைய அவதூறுப் பிரசாரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
சம்ஸ்கிருத மொழியில் நல்ல புலமையும்,  அதன்மீதான ஆழ்ந்த பற்றும் சாரங்கியின் ஆளுமைக்கு இன்னொரு சிறப்பான பரிமாணத்தை அளிக்கின்றன.  சம்ஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் முக்கியமான காரியகர்த்தராக உள்ள சாரங்கி, வனவாசி மக்களிடத்திலும் சம்ஸ்கிருதக் கல்வியைப் பரவலாக்கியுள்ளார். அவரது முயற்சிகளால் சுமார் 100க்கும் மேற்பட்ட வனவாசி இளைஞர்கள் பட்டப்படிப்பில் சம்ஸ்கிருதத்தை முக்கியப் பாடமாகப் பயிலும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். சிலர் திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சம்ஸ்தான் போன்ற பிரபல சம்ஸ்கிருத உயர்கல்விக் கூடங்களிலும் பயில்கின்றனர்.   சமீபத்திய தேர்தல் வெற்றிக்குப் பிறகு தூர்தர்ஷனில் வந்த சம்ஸ்கிருத நேர்காணலில்  இனிய, எளிய சம்ஸ்கிருதத்தில் தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் சமூக, சிந்தனைகளை அவர் பகிர்ந்து கொண்டார் [2].  “மீனவப் பெண்ணின் திருமகனாக அவதரித்த வியாசர்தான் வேதங்களைத் தொகுத்து நெறிப்படுத்தினார்.  மீனவர்கள், வனவாசிகள் உட்பட இந்து சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வேதம் பயின்று ஞானம் பெறுவதற்கான அதிகாரமும் தகுதியும் உண்டு” என்ற தனது கருத்தையும் விளக்கினார்.  உண்மையில் அவரது குடும்பப் பெயர் ஷடங்கீ என்பதும், அது ஒதிஷா உச்சரிப்புடனான ஆங்கிலத்தில் Sarangi என்று ஆகியுள்ளதும், இந்த நேர்காணலில்தான் எனக்குத் தெரிய வந்தது. ஷடங்கீ  என்றால் ஆறு வேத அங்கங்களையும் பயின்றவர்கள் என்பது பொருள் (சதுர்வேதி என்பது போல).  ஒரு ரிஷியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கர்மயோகிக்கு மிகவும் ஏற்ற பெயர்தான்.  
அரசியல் களத்தில் பணபலம்,  வாரிசு உரிமை, அதிகார பின்னணி போன்றவை அப்பட்டமாகக் கோலோச்சி வரும் சூழலில்,  பிரதாப் சந்திர சாரங்கி என்ற மனிதரின் மாபெரும் எழுச்சி  தியாகம், சேவை, இலட்சியவாதம், எளிய வாழ்க்கை ஆகிய விழுமியங்களின் மீதான இந்திய மக்களின் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது என்றே கூறலாம்.
*
சுட்டிகள்:

அந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) – சாவர்க்கர் | தமிழில்: VV பாலா


(புகைப்படம் நன்றி: சாவர்க்கர் ஸ்மார்க்)
இரண்டாவது கடிதம்
அன்புள்ள சகோதரா!
18 மாதங்கள் கழித்து எனக்கு பேனாவையும் மையையும் தொடும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் எனக்கு எழுதுவதே மறந்து போகும் நிலை கூட வரலாம். இந்தத் தாமதம் உன் ஏக்கத்தை அதிகரித்திருக்கும். ஆனால் ஜூலை மாதம் நம் அன்பிற்குரிய பாபா அவர்களின் கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும். அதனால் ஒரே நேரத்தில் இரு கடிதங்களையும் அனுப்பாமல் இடைவெளி விட்டு அனுப்பினால் உனக்கும் அது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேன். நீ மருத்துவப் படிப்பு சேர்ந்து நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி. உனக்கு அந்தப் படிப்பு பிடித்திருக்கிறதா? என்னைப் பொருத்தவரையில் அது ஒரு புனிதமான படிப்பு. நீ மருத்துவம் மட்டுமில்லாமல் உடற்கூறு அறிவியலையும் உன்னுடைய விசேட பாடமாக எடுத்துப் படித்தால் நன்று. இதனை ஒரு தொழிலாகக் கருதாமல் சேவையாகக் கருது. இதன் மூலம் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் முதல் நாகரிக மேன்மக்கள் வரை எல்லோரும் மதிக்கும் பணி இது. ஆத்மா குடியிருக்கும் கோவிலான உடலைப் பற்றிய படிப்பு. ஆத்மாவைப் பற்றிய படிப்பிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
உன்னுடைய சென்ற வருடப் புத்தக தேர்வுகள் மிகச் சிறப்பாக இருந்த. மொரோபந்த், பாரத், விவேகானந்தர், எல்லாம் தரமான புத்தகங்கள். நான் கேட்ட புத்தகங்களில்ஜேய மீமாம்சம் மற்றும்அஜேய மீமாம்சம் மட்டும் வரவில்லை. என்ன காரணம்? நான் இந்த வருடத்திற்கு ஒரு பட்டியல் அனுப்பி இருக்கிறேன். ஆனால் எனக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பத்து ரூபாய்க்கு மேல் செலவு செய்யவேண்டாம். ஒருவேளை நான் கொடுத்த பட்டியலின் விலை அதற்கு மிகுமானால் கடைசியில் உள்ள புத்தகங்களைத் தவிர்த்து விடு. எல்லாமே புதுப் புத்தகங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பழைய புத்தகங்கள் கிடைத்தாலும் வாங்கி அனுப்பு.
உனக்கு பெங்கால் பிடித்திருக்கிறதா? நவராத்திரி பண்டிகை விடுமுறை முடிந்து நீ பெங்கால் திரும்பியதும் கிட்டத்தட்ட பெங்காலி பாபுவாகவே மாறியிருப்பாய் என்று நினைக்கிறேன். மராத்தி மொழி நினைவிருக்கிறதா? வேறு எதையும் இழக்காமல் பார்த்துக் கொள். அந்த புத்திசாலி பெங்காலிகள் உன் இதயத்தைத் திருடி விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு பெங்காலி என் சகோதரனின் மனைவியாக அமைந்தால் எனக்கும் சந்தோஷமே. பல மாகாணங்களில் இருக்கும் ஹிந்துக்கள் இப்படித் திருமண உறவு கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். அதே நேரம் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை மணப்பது இந்தத் தருணத்தில் நம் தேசத்திற்கு நல்லதல்ல என்றும் நான் நினைக்கிறேன்.
எனதருமை பால் (Bal), என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்கிறேன். என் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது. இந்தச் சிறைக்கு வந்த பிறகு என்னுடைய உடம்பிற்கு எந்தப் பெரிய பிரச்சினையும் வரவில்லை. இங்கு வரும்போது என்ன எடை இருந்தேனோ அதே எடையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஒரு சில விஷயங்களில் வெளியில் இருக்கும்போது இருந்ததை விட இங்கு நன்றாகவே இருக்கிறேன். சிறை ஒரு ஆளை நன்றாகவும் ஆக்கும், சீரழிக்கவும் செய்யும். யாரும் இங்கு வரும்போது எப்படி இருந்தார்களோ அதேபோல வெளியே செல்லும்போது இருக்க முடியாது. வெளியே வரும்போது மேலும் நன்றாகவோ அல்லது மேலும் மோசமாகவோதான் வருவார்கள். அதிர்ஷ்டவசமாக என்னுடைய மனம் இங்குள்ள சூழலுக்கு விரைவிலேயே பழகிக்கொண்டு விட்டது. வெளிப்புறத்தில் அமைதியில்லாமல் இருக்கும் இயற்கை சிறைக்குள்ளே அமைதியாக இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இப்படிப்பட்ட சூழல் மாற்றங்களுக்கு நம் மனம் பழகிக்கொள்வது என்பது இயற்கை நமக்குக் கொடுத்த வரம் என்று நான் சொல்வேன்.
நான் அதிகாலையிலும் பிறகு மாலையிலும் சிறிது நேரம் பிராணாயாமம் செய்வேன். பிறகு நன்றாக உறங்குவேன். அப்படி உறங்குவது எனக்கு நல்ல ஓய்வைத் தருகிறது. மனம் மிகுந்த அமைதியை அடையும். காலையில் எழுந்திருக்கும் போதுதான் நாம் சிறையில் மரப்பலகையில் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு வரும். மனிதர்களுக்கே உரித்தான சாதாரண இலக்குகளும் ஆசைகளும் எனக்கு இப்போது குறைந்துகொண்டு வருகின்றன. நல்லதொரு கொள்கைக்காக உழைத்தோம் என்ற திருப்தி என் மனதுக்கு இருக்கிறது. அதனால் என் மனது சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கிறது. சில நேரம் விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், திடீரென்று என்னை பம்பாய் அல்லது லண்டன் மாநகரத்தில் இறக்கிவிட்டால், ‘ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் தீப்பிடித்து எரியும் வீடு போல் இருக்கிறது என்று சாகுந்தலத்தில் வரும் ரிஷிகுமாரனுடன் நானும் சேர்ந்து கதற வேண்டி இருக்கும்.
நாம் கேள்விப்படும் புரளிகளை எல்லாம் வைத்து ஒருவேளை வெளியில் இருந்திருந்தால் நம் வாழ்க்கை மேலும் பயனுற இருந்திருக்குமோ என்ற எண்ணம் வரலாம். ஆனால் வெளியில் இருப்பவர்கள் அதிகம் வேலை செய்கிறார்களாக இருக்கலாம், ஆனால் உள்ளே இருப்பவர்கள் அதைவிட கூடுதலாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள். என் அன்பிற்குரிய பால், இங்கு நாங்கள் படும் துன்பங்களும் தீவிரமான பணிக்கு ஈடானதுதான் என்பதையும் புரிந்துகொள்.
நான் அதிகாலை ஐந்து மணிக்கு மணி அடித்ததும் எழுந்து கொள்வேன். அதைக் கேட்டதும் எனக்கு நான் தோ கல்லூரியில் உயர்படிப்பு படிக்கின்றாற் போல ஒரு உணர்வு வரும். பிறகு காலை பத்து மணி வரையில் எங்களுக்குக் கடுமையான பணி  இருக்கும். என் கைகளும் கால்களும் கொடுக்கப்பட்ட வேலையைத் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருக்கும். என் மனமோ இங்குள்ள கண்காணிப்புகளை எல்லாம் தாண்டி கடல் மலை என்று ரம்மியமான விஷயங்களில் மட்டும், தேனைக் குடிக்கும் வண்டு போல அலைந்துவிட்டு வரும். அதன் பிறகு நான் சில வரிகளை எழுதுவேன். பிறகு பன்னிரண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவு உட்கொள்வோம். பிறகு மீண்டும் வேலை. நாலு மணி முதல் ய்வு. இந்த நேரத்தில் படிப்பேன். இதுதான் இங்குள்ள தினசரி வாழ்க்கை.
நம் தாய்நாடு எப்படி உள்ளது என்பதை உன் பதிலில் கூறு. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கின்றதா? 1910ல் அலஹாபாத்தில் செய்ததைப் போல வருடா வருடம் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்களா? டாடா அல்லது கப்பல் நிறுவனம் அல்லது புதிய மில்கள் போன்று தேனும் ஸ்வதேசி நிறுவனங்கள் புதிதாக உருவாக்கி இருக்கின்றனவா? சீனக் குடியரசு எப்படி இருக்கிறது? ஒரு கனவு நனவானது போல இருக்கின்றது அல்லவா? இது வரலாற்றில் ஒரு முக்கியத் தருணம். சீனாவின் இந்த மாற்றம் ஒரு நாளில் வந்தது அல்ல. 1850ம் ஆண்டில் இருந்து அவர்கள் இதற்காகப் பாடுபட்டுகொண்டு இருக்கிறார்கள். சூரியன் உதிக்கும் வரை அது எங்கிருந்து வருகிறது என்பது நம் கண்களுக்குத் தெரியாது அல்லவா, அதுபோல. பெர்சியா, போர்சுகல், எகிப்து இவற்றின் நிலை எப்படி இருக்கின்றது? தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா? புதிய கவுன்சில் மூலமாக ஏதேனும் முக்கியச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதா? உதாரணத்திற்கு உயர்திரு கோகலே அவர்கள் கொண்டு வந்த கல்வி மசோதா. நம் மதிப்பிற்குரிய திலகர் எப்போது விடுதலை செய்யப்படவிருக்கிறார்?
நீ என் கடிதத்தை எனது ஆருயிர் யமுனாவிடம் காண்பித்தாயா? அவளுக்கு எல்லாவற்றையும் மொழிபெயர்த்துக் கூறு. இன்னும் சில வருடங்கள்தான். அதிகபட்சம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு ஒரு புதிய விடியல் பிறக்கும். ஆகவே என் அருமை மனைவியே, எப்போதும் போல் உன் வாழ்க்கையை உன்னதமாக நடத்து. அன்பிற்குரிய அண்ணிக்கு என் மரியாதையும் நமஸ்காரங்களும். ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக என்னை வாழ்த்திக்கொண்டிருப்பவர் அவர். என் நெஞ்சம் முழுக்க மற்றொருவரும் நிறைந்திருக்கிறார். சில காரணங்களுக்காக நான் இப்போது அவருடைய பெயரைக் கூற இயலாது. நான் அவர்கள் எல்லோருடைய நினைவாகவே எப்போதும் இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறவும். அவர்களை நான் எப்படி மறப்பேன்? சிறையில் இருக்கும் ஒருவனால் எதையும் மறக்க இயலாது. புதிய அனுபவங்கள் எதுவும் இல்லாதபொழுது மனது பழைய நினைவுகளிலேயே உழன்று கொண்டிருக்கும். எனவே சிறையில் இருக்கும்போது நம் நினைவில் இருப்பவை எல்லாவற்றையும் திரும்ப திரும்ப அசை போட்டுக் கொண்டிருப்போம். அதனால் மறந்து போனவர்களும் கூட நினைவுக்கு வருவார்கள். எனதருமை நண்பர்களே, சிறையில் நாங்கள் வற்றாத கண்ணீருடன் இருக்கிறோம். யாரேனும் வந்து ஆறுதலாகப் பேசி அன்புடன் எங்கள் கண்ணீரைத் துடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறோம். சிறையில் இருக்கும்போது எப்படி என்னால் எதையும் மறக்க இயலும்? என் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் எல்லோரிடமும் என் அன்பான விசாரிப்பைக் கூறவும். ரத்த பந்தங்கள் சிலர்கூட நம்மை விட்டு வெட்கி விலகியபோது, கூட நம்முடன் இருந்து நமக்குப் பக்கபலமாய் இருந்தவர்களை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன் என்று கூறவும். சிறையில் இருந்து வரும் கடிதம் ஆதலால் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். என் ஒரே சகோதரிக்கும் என்னுடைய ஒரே நம்பிக்கையான வசந்திற்கும் என்னுடைய ஆசிர்வாதங்களைக் கூறவும். மாமி, குட்டி சாம்பி ஆகியோரிடமும் விசாரித்ததாக கூறவும்.
இப்படிக்கு,

உன்னுடைய அன்பான சகோதரன்
தாத்யா.


வர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா? (புத்தக அறிமுகம்) | சுப்பு

வர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா?, ச.ஆரோக்கியசாமி, பாபா பதிப்பகம், 3473 – 1, தெற்கு 2ம் வீதி, புதுக்கோட்டை – 622001, விலை: ரூ.140.00


ஒரு கொள்கை, ஒரு சித்தாந்தம் ஆகியவற்றைத் தமக்குரியதாக வரித்துக்கொண்டு அதைப் பொதுமக்களிடம் கொண்டுசெல்வது என்பது ஜனநாயக வழிமுறை. இயக்கங்களைப் பற்றிய ரூல் புக் இதைத்தான் சொல்கிறது, ஆனால் திராவிட இயக்கங்களின் செயல்பாடு இப்படியிருந்ததில்லை.
திராவிடக் கருத்தியல் என்பது தமிழ்ச் சமூகத்தில் வெகுவாகப் பரவிவிட்டதாலும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்றொடர்கள் மாற்றுத் தரப்பிலும் புழங்குவதாலும் ஆட்சியதிகாரம், கல்வி நிலையங்கள், ஊடகங்கள் எல்லாமே அந்தப் புகைமூட்டத்தில் சிறைபட்டிருப்பதாலும் எது உண்மை, எது மாயை என்று பிரித்தறிய முடியாத சூழல் இங்கு நிலவுகிறது.
இந்த இருட்டுப் பிரதேசத்தில் ஒளியேற்றுவதற்கான முயற்சியைப் பலர் செய்திருக்கிறார்கள். தோழர் பி.ராமமூர்த்தி எழுதிய ‘ஆரிய மாயையா திராவிட மாயையா – விடுதலைப் போரில் தமிழகம் இதில் முக்கியமான ஒன்று, இதே வரிசையில் இப்போது வந்திருக்கிறது ச.ஆரோக்கியசாமியின் புத்தகம்.
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, இந்தி எதிர்ப்பு, இந்தியா எதிர்ப்பு என்கிற போர்வையில் பிராமண எதிர்ப்பை முன்வைத்த ஈ.வெ.ரா மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“கடவுள் இல்லை என்று சொல்கிற நீங்கள் இந்து சமயக் கடவுள்களை மட்டும் விமர்சிப்பது நியாயமா?
இதற்கு ஈ.வெ.ரா கொடுத்த பதில் அவ்வளவு கௌரவமாக இல்லை.
“இந்துக் கடவுள்கள் மட்டும்தான் வைப்பாட்டி வைத்திருக்கிறார்கள். மற்ற மதங்களில் அப்படியில்லை.
இதற்குப் போட்டியாக அகர வரிசையில் ஒவ்வொரு மதத்தையும் எடுத்துக்கொண்டு முறைப்படியாக ஒரு வைப்பாட்டி பட்டியல் தயாரித்துவிட்டு அந்தத் தரத்தின் அடிப்படையில் மதங்களை மதிப்பீடு செய்யலாம். நமக்கு அது உசிதமாகப்படவில்லை.
அதற்குரிய தகுதியோடு அந்தப் பதிலை ஒதுக்கிவிடுகிறோம், ஆனால் ஈ.வெ.ரா சம்பந்தப்பட்ட எல்லாக் கேள்வி பதில்களையும் அப்படிச் செய்துவிட முடியாது. அவரால் உருவாக்கப்பட்ட அல்லது உருவேற்றப்பட்ட சில பிம்பங்கள் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றுவிட்டன. அவற்றை எதிர்கொள்வதற்கு விரிவான பதிவுகள், உரைகள் அல்லது புத்தகங்கள் அவசியமாகின்றன. அத்தகைய அவசியமான பணியைச் செய்திருக்கிறார் ச.ஆரோக்கியசாமி.
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவை இந்தியாவில் மட்டும்தான் இருக்கின்றன என்பது திராவிட இயக்கத்தால் நூறாண்டுகளுக்கு மேலாகச் சொல்லப்பட்டு வரும் பொய். இதை மறுத்து எழுதியிருக்கிறார் ஆரோக்கியசாமி.
இனி வருவது ச.ஆரோக்கியசாமியின் கருத்து.
வருணங்கள் என்பது வேலைப் பிரிவினை அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பு. இது உலகம் முழுவதுக்கும் உள்ள பொதுவான அம்சமாகும். அரசர்கள், மதகுருமார்கள், வணிகர்கள், உழைப்பவர்கள் அல்லது அடிமைகள் என்பதுதான் அந்தப் பிரிவு. இந்தியாவில் இது பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. கிரேக்கம், பாபிலோனியா, ரோம், எகிப்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ருசியா, சீனா, ஜெர்மனி என்று எங்கெங்கெல்லாம் அரசர்கள் ஆட்சி நடைபெற்றதோ அங்கெங்கல்லாம் இந்த நான்கு வர்ண வேலைப் பிரிவினைகள் இருந்தன.
இந்து மதம் போலவே புத்த மதமும், கிறித்துவ மதமும், முகமதிய மதமும் இந்த வேலைப். பிரிவினை முறையை ஆதரித்து அங்கீகரித்துள்ளன. உழைக்கும் மக்களை அடக்கிவைத்திருந்த அரசாட்சிக்கெதிராக எந்த மதமும் போராட்டம் நடத்தியதாக சரித்திரச் சான்றுகள் இல்லை…
“அரசன், அடிமை இருவருமே இன்ப துன்பங்களை அனுபவிப்பதாக புத்தர் தெரிவித்தார் என்று டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது. புத்தருடைய செல்வாக்கு இருந்த காலத்திலும் அது செல்லுபடியான இடத்திலும் அரசர்களும், அடிமைகளும் இருந்திருக்கிறார்கள். தவிர தீண்டாமைக்கெதிராக புத்தர் போராடியதாக எந்த ஆதாரமும் இல்லை.
பல நூற்றாண்டுகளாக கிறித்துவ மன்னர்கள் அனைவருமே நான்கு வர்ணங்களைப் பாதுகாத்து வந்துள்ளனர். நபிகள் நாயகம் முஸ்லீம் மதத்தைப் பரப்பிய காலத்திலும் மற்ற நாட்டோடு போர் புரிந்த காலத்திலும் அடிமை முறையும் தீண்டாமையும் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
முஸ்லீம் மதத்திலும் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைத்து அடையாளப்படுத்துகிற பழக்கம் இருக்கிறது. இது உட்பிரிவுகளுக்கும் பொருந்தும். முஸ்லீம் மதத்தில் அறுபத்தி நாலு பிரிவு இருக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதை ஆய்வுக்குட்படுத்தினால் செய்யும் தொழிலால் உருவான சாதிப் பெயர்களாக இருக்கின்றன. அங்கேயும் சாதிய அடுக்குகள் உண்டு. உயர்வும் தாழ்வும் உண்டு. திருமண உறவு முறைகள் அந்தந்த சாதிக்குள்ளேயே நடக்கின்றன.
இந்தியாவில் சூத்திரர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள் என்றால் அடிமை முறையில் நிலவிய நாடுகளில் கருப்பர்களை, நீக்ரோக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைத்தார்கள்.
இந்தியா முழுவதுமே தலித்துகளைத் தலைநிமிர்ந்து நடக்கவைத்தது யார்? கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில், மராட்டியத்தில், பிகாரில் தலித்துகள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு விதை விதைத்தவர் யார்? அங்கெல்லாம் பெரியார் போய் பிரசாரம் செய்தாரா. காந்திஜி அல்லவா தலித்துகளைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தார். கலப்பு மணம் என்றால் ஆணோ, பெண்ணோ இருவரில் ஒருவர் ஹரிஜனாக இருந்தால் மட்டுமே அதை கலப்பு மணம் என்பேன் என்றார் காந்திஜி.
தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தைத் தயாரித்துச் சட்டமாக்கியது காந்திய காங்கிரஸ் என்பதை நாம் மறக்கக்கூடாது.
என்கிறார் ச.ஆரோக்கியசாமி.
ஆரோக்கியசாமியின் வாதங்களைக் கிள்ளிக்கொடுத்திருக்கிறேன். அதை வாங்கிப் படித்து அள்ளிக்கொள்ள வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.

பீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்

‘வாழ்ந்து கெட்ட மனிதன் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ‘வாழ்ந்து கெட்ட ஊர் கேட்டதுண்டா?
சும்மா சொல்லக்கூடாது, செம்மையாக வாழ்ந்து, இன்று சக்கையாகிப் போன ஒரு நிலம்தான் பீகார். பல வருடங்களாக இந்தியாவின் கீழ்நிலை மாநிலங்களில் ஒன்றாகத் தவறாமல் இடம்பிடிக்கும் மாநிலம் பீகார்.
அறிக்கைகளை, புள்ளி விவரங்களை எல்லாம் ஓரமாய் வையுங்கள். ஒரு பீகாரி எப்படி இருப்பார் என உங்கள் மனதில் ஒரு உருவத்தைக் கற்பனை செய்யுங்கள். அந்த மாநிலத்தின் நிலை சட்டெனப் புரிந்துவிடும்.
சமீபத்தில் ‘சிறந்த ஆளுமை மிக்க மாநிலங்கள் என அதிகாரபூர்வ பட்டியல் ஒன்று வெளியானது. வழக்கம்போல பீகார் கடைசி இடம்.
ஆனால், வரலாற்றைப் படிப்பவர்களுக்குப் புரியும், ஒரு காலத்தில் பீகார்தான் அகண்ட பாரத தேசத்தின் முக்கிய அடையாளமாகத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
பீகார் என்பதன் அர்த்தம் விஹார் என்ற சொல்லில் இருந்து வந்தது. விஹாரம் என்றால் இருப்பிடம். புத்தர் ஞானம் பெற்ற புத்த கயா இன்றும் பீகாரின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. புத்தரின் ‘விஹாரம் என்பதே மருவி பீகார்/பீஹார் என்றானது. உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றான புத்த மதம் இங்கிருந்தே தொடங்குகிறது.
அதன் நிலப்பரப்பின் சிறப்பு என்றும் அழியாத பல பேரரசுகளையும், பிரம்மாண்ட நகரங்களையும், மாபெரும் வரலாற்று மனிதர்களையும் இன்றும் தன்னுள்ளே புதைத்து வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறது.
மகாபாரதத்தில் சொல்லப்படும் அங்க தேசம் என்பது இன்றைய பீகார்தான். மாவீரன் கர்ணனுக்கு துரியோதனன் அரசனாக முடிசூடி அழகுபார்த்த மகா நிலம். இராமாயணத்தில் சொல்லப்பட்ட மிதிலை அரசும் இன்றைய பீகார்தான். எப்பேர்ப்பட்ட புண்ணிய பூமியாக இருந்திருந்தால் சீதையே பூமியிலிருந்து குழந்தையாக உதித்திருப்பாள். அது மட்டுமா, பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றான விதேக தேசமும் இந்த பீகார்தான்.
சரி, புராணங்களை விடுங்கள், பொது யுகத்திற்கு வருவோம். இந்தியாவின் ஆதாரபூர்வ முதல் சாம்ராஜ்ஜியமான மகத சாம்ராஜ்யத்தின் மன்னன் அஜாதசத்ரு உருவாக்கியதுதான் பாடலிபுத்திரம் எனும் தேவலோக நகரம். இன்றைய பாட்னா.
தொடர்ந்து, இந்தியாவின் மாபெரும் நிலப்பரப்புக்கு மூத்த சொந்தக்காரன் என, தனக்கென ஒரு மௌரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி முதன்முதலாக பரந்த பாரத தேசத்தைக் கட்டியாண்ட சந்திர குப்த மௌரியன் உருவானது இந்த பீகாரில்தான். சந்திர குப்தரின் நீட்சியாக அவரது பேரன் பேரரசன் அசோகர் பாடலிபுத்திரத்தை ஒரு சொர்க்கமாகவே மாற்றியிருந்தான்.
(நாளந்தாவின் சிதைவுகள், நன்றி: விக்கிபீடியா)
உலகமே பாடலிபுத்திரத்தை அதிசயமாகக் கண்ட கனவு நாட்கள் அவை. அன்றைய காலகட்டத்தில் பாடலிபுத்திரம்தான் உலகின் மிகப்பெரிய நகரம்.
ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல, கல்வியிலும், கலாசாரத்திலும் உலக நாடுகளுக்கெல்லாம் ஒளியை வழங்கியவர்கள் அன்றைய பீகாரிகள். உலகின் தலைசிறந்த, மூத்த பல்கலைக்கழகங்களான நாளந்தாவும், விக்கிரமஷீலாவும் உருவானது அங்கேதான். பாரத தேசத்திலிருந்து மட்டுமல்ல, சீனம், பாரசீகம் முதல் ரோம் வரை கல்வி கற்பதற்காகவே நாளந்தாவை நோக்கி மக்கள் வெள்ளம் குவிந்த பொற்காலம் அவை. 5ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டு வரை பல தேசங்களின் புகழ்பெற்ற கல்வியறிஞர்கள் நாளந்தாவின் மாணவர்களே. (இன்று அடிப்படைக் கல்வியறிவில் கூட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது பீகார் என்பதுதான் கசப்பான உண்மை.)
மூன்றாம் நூற்றாண்டின் மகத தேசத்தின் பட்டப்பெயர் என்ன தெரியுமா, அயல் நாட்டவர் இந்த நிலத்தை ‘தங்கப் பறவை என்றே அழைத்தனர்.
இந்த உலகிற்கே ஆட்சி அதிகாரத்தின் அகராதியாகவும், மேலாண்மை தத்துவத்தின் கிரீடமாகவும் விளங்கும் அர்த்தசாஸ்திரத்தை இதே பூமியில் இருந்துதான் அருளினார் சாணக்கியர். அறிவியல், விஞ்ஞானம், கணிதம், வானவியல், பொருளியல், தத்துவம், சமயம் என ஒட்டுமொத்த உலகிற்கும் ஒளி வழங்கிக்கொண்டிருந்த தங்க நிலம்தான் இன்றைய இருண்ட பீகார் மாநிலம்.
பொது யுகத்திற்கு முன்னர் ஆண்ட வஜ்ஜி வம்சத்தினர், ‘வைஷாலி எனும் வடக்கு பீகார் நகரம் ஒன்றைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர், உலகின் பழமையான ஜனநாயக முறை ஆட்சியைப் பின்பற்றியவர்கள் என்ற வரலாற்றுப் பெருமையைத் தாங்கி நிற்கின்றார்கள்.

(பாடலிபுத்திரம், நன்றி: விக்கிபீடியா)
6ம் நூற்றாண்டில் மேலும் ஒரு மாமனிதர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். பாவம், அவருக்கு அறிவியலைக் கண்டுபிடிக்கத் தெரிந்ததே ஒழிய அதனை சொந்தம் கொண்டாடும் சுயநலக்கலை தெரிந்திருக்கவில்லை. வானவியலை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து ஆராய்ந்து பல உண்மைகளை பாரதமெங்கும் உரக்க ஒலித்தவர், அவர்தாம் ஆரியபட்டர். பல ஆதாரத் தகவல்களின் பிதாமகனாக இருந்த ஆரியபட்டர் இன்றைய கல்வியறிவில் பின்தங்கிய பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் பிறந்தவரே.
பல சாம்ராஜ்ஜியங்கள் உதாரணமாகக் காட்டும் கனவு தேசம், பல அயல்நாட்டு எதிரிகளைத் தொடர்ந்து தன்னை நோக்கிப் படையெடுக்கச் சுண்டியிழுத்து மண்ணைக் கவ்வ வைத்த செல்வ செழிப்பான தங்க நகரம், பல தத்துவங்களையும் அறிவியலையும் தோற்றுவித்த ஒளி பொருந்திய தேசம், தமது வாழ்நாளில் ஒரு முறையாவது பாடலிபுத்திர நகரின் அழகைக் கண்ணார கண்டுவிடமாட்டோமா எனப் பிற நாட்டு மக்களை ஏங்க வைத்த சொர்க்கபுரி, இன்னும் இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இரண்டாயிரம் வருடங்களாக இவ்வளவு அசைக்க முடியாத புகழையும், பெருமையும், அறிவையும், ஆற்றலையும் தன்னகத்தே வைத்திருந்த ஒரு மகாநிலம் எப்படி வெறும் இருநூறு ஆண்டுகளில் இந்த இழிநிலைக்குச் சென்றது? இன்று எங்கு பார்த்தாலும் பீகாரிகள் வெறும் தினக்கூலிகளாகவும், கல்வி, பொருளாதாரத்தில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குப் பின்தங்கிய கடைநிலை அடிமைகளாகவும், சிலர் கொள்ளைக்காரர்களாகவும் மாறிய அவலம் எப்படி நிகழ்ந்தது?
பல காரணங்கள் உண்டு என்றாலும் மிகவும் வெட்டவெளிச்சமான காரணம் என்ன தெரியுமா?
காலனி ஆதிக்கத்தில் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்த பீகாரில் ஒரு முக்கியப் புரட்சியைச் செய்தது ஆங்கிலேய அரசு. DE-INDUSTRIALIZATION.
இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக விளங்கிய அங்க-வங்க தேசங்களான பீகாரும், வங்காளமும் முக்கியமாக நம்பியிருந்தது நூல் நூற்பு ஆலைகளையும், நெசவுத்தொழிலையும், பின் விவசாயத்தையும்தான்.
பிரிட்டிஷ் காலத்திலும் அதற்கு முன்பும் கல்கத்தா என்பது உலகிற்கே நெசவு நூல்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மாபெரும் துறைமுகம். அதன் பாதிக்கும் மேற்பட்ட உற்பத்தி நிகழ்ந்து வந்தது பீகார் மாநிலத்தில்தான். இதர தொழில்கள் மீதி.
இந்தியாவில் காலனி ஆதிக்கம் நூறு சதவிகிதம் பரவியதும் ஆங்கிலேயர்கள் முதலில் கைவைத்தது இங்குதான். திட்டம்போட்டு அவர்கள் நிகழ்த்திய அடக்குமுறைப் பொருளாதாரக் கொள்கைகள் கைத்தறி நெசவாளர்களை நிர்மூலமாக்கியது. அதேபோல தழைத்தோங்கியிருந்த விவசாயம், நிலச் சுவான்தாரர் முறையின் மூலம் அழியத் தொடங்கியது.
18ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் சுதந்திரமாக இயங்கிவந்த வட இந்தியர்களை, குறிப்பாக பீகார், வங்காள மக்களின் சுய சம்பாத்தியத்தின் மீதும், அளவற்ற செல்வச் செழிப்பின் மீதும் குறிவைத்து ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
‘நிரந்தர குடியேற்றம் எனும் அந்தச் சட்டம்தான் சத்தமில்லாமல் வரலாற்றையே திருப்பிப்போட்டது. மக்களுக்கு (குறிப்பாக விவசாயிகளுக்கு) எந்தவொரு நிலமும் சொந்தம் கிடையாது, அனைத்து நிலங்களும் ஜமீன்தார்களுக்கே சொந்தம். பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளாக இந்த ஜமீன்தார்களே வரி வசூல் செய்வர். இந்த நில ஜமீன்தார்களின் குறிக்கோள் விவசாய நிலத்திற்கு வரி வசூலிப்பது மட்டும்தான், விவசாயத்தை வளர்ப்பது அல்ல. இப்படியொரு சட்டத்தை ஜமீன்தார்களும் மனமுவந்து ஏற்றனர், எந்த வேலையும் செய்யாமல் வரி வசூல் செய்து தருவதற்காகவே ஆங்கில அரசு இவர்களை நன்றாக ‘கவனித்து அவர்களது சின்ன கஜானா எப்பொழுதும் நிரம்பியே இருக்கும்படி பார்த்துக்கொண்டது.
இதனால், பெரும் செல்வங்கள் அனைத்தும் பிரிட்டிஷாரின் பெரிய கஜானாவுக்குச் சென்றன. வறுமை இந்தியாவுக்கு வந்தது. சுயநலத்தால் இதனைக் கடைசிவரை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் அன்றைய ஜமீன்தார்கள் செய்த மாபெரும் தவறு.
பின்னர் மெல்ல மெல்ல இந்த வரி வசூல் முறையை அப்போதைய மெட்ராஸ் மாகாணம் வரை விரிவுபடுத்தினார்கள். ஆனால், இதில் பயங்கரமாக அடி வாங்கியது என்னமோ பீகார்தான். இந்த கோபம் மக்களுக்கு உள்ளுக்குள்ளேயே புழுங்கியிருக்க, 1857ல் மீரட்டில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் பெருமளவில் பங்குபெற்றனர் பீகாரிகள்.
ஆங்கில அரசையும், மேற்கத்திய கலாசாரத்தையும் மிகப்பெரிய அளவில் வெறுத்தனர். அதன் பலனை வெகு சீக்கிரமே அறுவடையும் செய்தனர் (அதன் வழியே வந்த எதனையும் மனதளவில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதன் தொடர்ச்சியாகவே 19, 20ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியையும், நவீனத்துவத்தையும், புதிய யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்து தோல்வியைத் தழுவினர்).
அதுமட்டுமல்ல, கங்கை நதிக்கரையின் நாகரிகமாக விளங்கிவரும் ஒரு பகுதியான பீகார், அதன் நதிக்கரை நாகரிகத்தையும் நாளடைவில் இழந்தது. தீவிர ஆங்கிலேய எதிர்ப்பு என்பது தீவிர ஆங்கில மொழி எதிர்ப்பாகவும் மாறியது.
இதனாலேயே இந்தியை ஆராதித்து ஆங்கிலத்தை முழுமூச்சுடன் எதிர்த்தனர். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் அனைத்திலும் இது தொடர்ந்தது. (உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் பெருமளவில் வர்த்தக ரீதியிலான வளர்ச்சியைத் தழுவாமல் போனதற்கு அவர்களது ஆங்கில மறுப்பும் பிடிவாதமான இந்தி ஆராதனையும் ஒரு முக்கியக் காரணம்).
நாளடைவில் நாடெங்கும் ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு மெல்ல மெல்ல நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், பீகார் மக்களால் அதன் பிடியிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியவில்லை. சாதிய ஆதிக்கம் தடுத்தது.
நெசவாளர்கள், விவசாயிகள், கடைநிலை கூலித்தொழிலாளிகள் மீதான தங்களது அதிகாரம் என்றும் கைநழுவிவிடாமல் பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர் பீகாரின் நிலப்பிரபுக்கள். இதே நிலை வேறு சில அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்தாலும் இந்த அளவுக்கு மோசமாக இருக்கவில்லை.
இன்னும் ஏராளமான தொழில்கள் மேலும் மேலும் நசுங்கிய நிலையில், பல பீகாரிகள் வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்களது குடிப்பெயர்ச்சி அண்டை மாநிலங்களோடு நிற்கவில்லை. புதிய தொழில்களைத் தேடி ஃபிஜி, மொரிஷியஸ் உட்பட பல வெளிநாடுகளுக்கும் படையெடுத்தனர்.
இதனாலேயே பீகார் தனது மிஞ்சியிருக்கும் அறிவுச்செல்வத்தையும் மெல்ல மெல்ல இழந்தது. 1921ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி ஏறத்தாழ பத்தொன்பது லட்சம் மக்கள் வறுமையால் பீகாரை காலி செய்தனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இன்னும் பல்வேறு காரணங்கள் தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு பீகாரை சீர்குலைத்துள்ளன.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் நிகழ்ந்த கொடுமைகள் ஒருபுறம் இருக்கட்டும், விடுதலை பெற்றும் இன்னும் ஏன் அவர்களால் நிமிர முடியவில்லை? காரணங்கள்: இழந்தவைகளைத் திரும்பப்பெற மறந்தனர், சிதைந்த தொழில்களை மீட்டெடுக்காமல் விட்டனர், சாதி மேலும் தலைதூக்கியது. இன்றுவரை அங்கே அனைத்தையும் நிர்ணயிப்பது சாதிதான், ஆட்சி உட்பட. அதனாலேயே அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும் சாதியைக் காக்க முனைந்தனரே தவிர, நாட்டைச் சீர்திருத்த முயலவில்லை, முடியவில்லை.
அதே சமயம் ஆட்சியாளர்களின் குறைதான் என்று ஒரேயடியாகப் பழிபோட்டுவிடவும் முடியாது, மக்களும் சாதி ஆதிக்கமுறையிலிருந்து வெளிவர முயலவில்லை.
நிலப் பண்ணை முறை சார்ந்த, மானியம் சார்ந்த பொருளாதாரத்தைச் சுற்றி மட்டுமே இயங்கி வருகின்றனரே தவிர உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் சந்தை சார்ந்த பொருளாதாரத்திற்கு அவர்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. சமூகம் சார்ந்த அரசியல்தான் அங்கே நிகழ்கிறதே தவிர சமூக ஒருமைப்பாடு நிகழத் தவறிவிட்டது. பீகார் மாநிலத்தை ஒரு விஷயம் இத்தனை ஆண்டுகள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அது சாதியும் சாதி சார்ந்த அரசியலும் தான். இதன் நடுவே கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வரும் ஜனத்தொகை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது.
இதனாலேயே அங்கே தரமான கல்விக் கூடங்கள் அமையவில்லை, நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அமையவில்லை. தொழில் நிறுவனங்கள் பீகார் என்றாலே காத தூரம் ஓட ஆரம்பித்தனர். தரமான சாலைகள் இல்லை. மாவட்டங்களை இணைக்கும் ரயில் பாதைகள் குறைவு. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதே இல்லாமல் போனது. இப்படி ஒரு நாடு/மாநிலம் இருந்தால் என்ன ஆகும்? பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் ஊரில் பயங்கரவாதம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆதிக்கவாத மக்களின் மீதான ஆயுதம் தரித்த போராகவே மாறியது. அதற்கு அடித்தளம் இட்ட இடம்தான் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி (இதுவே நக்சல் பெயர்க்காரணம்) எனும் சிறு கிராமம். அந்தச் சிறிய கிராமத்தில் தொடங்கிய சிறு தீப்பொறி 1950, 60களில் மத்திய கிழக்கு இந்தியா முழுவதும் விரவிப்படர்ந்து நக்சல் மாவோயிஸ்ட்டுகளின் எழுச்சியாக விஸ்வரூபமெடுத்தது. இதனால் அப்பாவிகளும் பலியாகும் அவலம் உருவாகித் தொடர்ந்து வருகிறது.
நக்சல்களின் ஆரம்பம் என்னவென்று இணையத்தில் தேடிப் பாருங்கள், அது கொண்டுபோய் நிறுத்துமிடம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தரும். எனினும் நக்சல்கள் தங்கள் கால்களை ஆழ ஊன்றி நின்ற இடம் மத்திய பீகார் (அப்பொழுது ஜார்க்கண்ட் பிரிந்திருக்கவில்லை). இன்றும் பீகாரின் 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்தவை. எந்தவொரு வளர்ச்சியையும் விரும்பாமல் அனைத்தையும் ஆயுதத்தின் மூலமே சாதிக்கும் எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்துத் தவறான பாதையில் ஒருங்கிணைப்பதிலேயே சிலர் குறியாக இருந்தனர், இருக்கின்றனர்.
சமீப காலங்களில் அவர்களின் பயங்கரவாத வேலைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், முழுவதும் குறைந்தபாடில்லை. பீகார், ஜார்க்கண்ட் மக்களும் இதுபோன்ற நக்சல்களால்தாம் அழிவையே சந்திக்கிறோம் என்பதை உணர்ந்து தற்போது மெல்ல அதிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளனர். ஆனால் இன்னும் ஆட்சியாளர்கள் அவர்களைத் தலைநிமிர்த்த எடுக்கும் முயற்சிகள் கேள்விக்குறியே!
பீகார் என்பது வளர்ந்து வரும் இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தின் நிலைதான் என்று கடந்து செல்ல முடியாது, செல்லவும் கூடாது.
வருங்கால இந்தியாவின் வளர்ச்சி வருங்கால பீகாரின் வளர்ச்சியையும் உள்ளடக்கியே இருக்கிறது. நிலையான அரசாங்கம், பக்குவப்பட்ட அரசியல் நிலைப்பாடு, சீர்திருத்தப் பொருளாதாரம் என இப்போதுதான் பீகார் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிப் பாதையை நோக்கித் திரும்ப முயல்கிறது. இது தொடர்ந்தால் மட்டுமே நல்ல எதிர்காலம் அமையும்.
பீகாரின் இறங்குமுகம் தொடங்கியது தவறான பொருளாதாரக் கொள்கைகளால் என்றால், அது விடாமல் தொடர்ந்ததன் காரணம் மக்கள் சுதாரிக்காமல் தவறான பாதையில் செல்லக் காரணமாக இருந்த ஒரு சில இயக்கங்கள். இந்த நிலை மாறட்டும்.
பீகார் என்பது எங்கோ நடந்த, நடந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பிழையல்ல, வரலாற்றின் ஏடுகளில் உதாரணமாகத் திகழ்ந்த தலைசிறந்த நாடுகள் கூட தவறான வழிநடத்தலால் தடம் மாறி அழிவை நோக்கி வேகமாகச் சென்றுவிடும் என்பதற்கான எச்சரிக்கை மணி.

அம்பையிடம் இருந்து ஒரு கடிதம்

‘வலம் மே 2019 இதழில் அரவிந்தன் நீலகண்டனின் ‘தேவையா இந்துத்துவ அறிவியக்கம்? என்ற கட்டுரையில் என் பெயரைக் குறிப்பிட்டுச் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைக் குறித்துத்தான் இந்தக் கடிதம்.
கட்டுரை ஓர் இடத்தில் இவ்வாறு கூறுகிறது:
“…அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அவர் அதை இந்தப் பதிலுடன் இணைத்துப் பார்க்கவில்லை. ஏதோ வேலை கிடைக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் பின்னாட்களில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘ஏன் சாவர்க்கரின் பெயரைச் சொன்னீர்கள்? நீங்கள் வித்யார்த்தி பரிஷ்த்தா என்ற ஐயம் அன்றைக்கு உங்கள் மீது ஏற்பட்டது…
ஒரு விரிவுரையாளர் வேலைக்கான பேட்டியில் நான் சாவர்க்கர் பெயரைக் குறிப்பிட்டதும் வேலை கிடைக்காததும் உண்மைதான். என்னைப் பேட்டி எடுத்த பேராசிரியர் சாவர்க்கர் பெயரைக் குறிப்பிட்டது குறித்து என்னிடம் கேட்டார் அப்போது. பிறகு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் விமர்சன நோக்கில் பேசிக்கொண்டிருந்தபோது வேறு யாரோ கேட்டது பிறகு குறிப்பிட்டிருக்கும் கேள்வி. அந்தக் கேள்வியில் சாவர்க்கரைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. வித்யார்த்தி பரிஷத் குறித்துத்தான் இருந்தது. இரு வேறு காலகட்டத்தில் இரு வேறு நபர்கள் கூறியது ஒரு நிகழ்வில் வருவதுபோல் கட்டுரையில் உள்ளது.
பிறகு எனக்கு ICHRல் வேலை கிடைத்தது எனக்கு இந்துத்துவ தொடர்பு ஏதுமில்லை என்று உறுதி செய்துகொண்ட பின்னர்தான் என்று கட்டுரை குறிப்பிடுகிறது. இதுவும் சரியில்லை. எழுபதுகள் பற்றியும் எமர்ஜன்ஸியில் இருந்த அனுபவங்கள் பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் அரவிந்தன் நீலகண்டனிடம் பேசியிருக்கிறேன். அவற்றின் காலவரிசையை இதில் மாற்றிப்போட்டுக் குழப்பியிருக்கிறார். நான் ICHRஇலிருந்து வெளிவந்து இரு ஆண்டுகள் ஆராய்ச்சி நல்கை பெற்று அதன்பின் மீண்டும் டெல்லி வந்த பிறகுதான் விரிவுரையாளர் பேட்டிகளுக்குப் போகிறேன். அதனால் ICHR வேலைக்கு முன்னால் எனக்கு இந்துத்துவ தொடர்பு ஏதுமில்லை என்று உறுதி செய்துகொண்டது எல்லாம் நடந்திருக்க சாத்தியமே இல்லை. நான் கூறுவதைப் புரிந்துகொள்வதில் அவருக்குக் குழப்பம் நேர்ந்திருக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் மார்க்ஸியவாதிகள் கல்வித்தளத்தை முற்றிலும் ஆக்கிரமித்திருந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதை நான் பலமுறை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அது வேறு விஷயம். எனக்கு மார்க்சியவாதிகளைக் குறித்து இருந்த விமர்சனங்கள் என் ‘சக்கர நாற்காலி கதையில் வரும். ஆனால் மார்க்சிய வரலாற்றாசிரியர்களான டி.டி.கோசாம்பி, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாபர் இவர்களை நான் பெரிதும் மதித்தேன். அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை மார்க்சியவாதிகள் கல்வித்தளத்தை ஆக்கிரமித்திருந்தார்கள் என்று கூறுவதைப் பற்றியது அல்ல என் இந்தக் கடிதம். அவர் என்னைக் குறிப்பிட்டுச் சில விஷயங்களை அதில் கூறியிருப்பதைத் தெளிவுபடுத்தத்தான் இக்கடிதம். பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதை அவர் ஒருவிதமாக உள்வாங்கி அவற்றை வேறுவிதமாக மனத்தில் இணைத்து எழுதியிருக்கிறார். ‘சொல்வனம் கட்டுரையை அனுப்பும் முன் என்னிடம் காட்டி அனுமதி பெற்றார். இதற்கும் அப்படிச் செய்திருக்கவேண்டும். நம் எல்லோர் வாழ்க்கையுமே அரசியல்படுத்தப்பட்டதுதான். அவை எல்லாமே தரவுகள்தாம். ஆனால் அவை தரவுகளாக்கப்படும்போது தகவல் குழப்பம் இருக்கக்கூடாது.
கட்டுரைக்கு முகப்புப் படமாக என் படத்தைப் போட்டது என் அனுபவங்களைப் பிரதானமாக்கிய கட்டுரை இது என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். அப்படிப் பிரதானப்படுத்தவேண்டிய அளவுக்கு முக்கியமான நபர் இல்லை நான், அப்போதும் இப்போதும். டெல்லியின் சிக்கலான கல்வி வெளியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த பலரில் ஒருத்தி. இப்போது உள்ள உபிந்தர் சிங் போன்றவர்கள் அப்போது இல்லை. அப்போது என் போன்றோர்களைக் கனிவுடன் நோக்கி வேலை வாய்ப்புகளைத் தந்தது டாக்டர் பார்தசாரதி குப்தா போன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிலிருந்த பேராசிரியர்கள்தாம். எந்தக் கல்லூரியில் டாக்டர் பார்த்தசாரதி குப்தா விரிவுரையாளர் வேலைக்காகத் தேர்வுப் பேட்டி எடுக்க வருகிறாரோ அங்கு எந்தவிதச் சார்பும் இல்லாத தேர்வு நடைபெறும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தது. இப்படிப் பல நினைவுகள் பலருக்கு. என்னுடையது அதில் ஒரு துளி அவ்வளவுதான்.

– அம்பை 

ஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயராமன் ரகுநாதன்“எக்ஸ்க்யூஸ் மீ! மணி ஏழாச்சே! இன்னுமா போர்டிங் ஆகலை?
“இல்லை. கிளம்ப அரை மணி ஆகும்!
“லேட்டா? நீங்க அனௌன்ஸ்மெண்ட் பண்ணலியே?
“அதான் இப்ப சொல்றோமே, போதாதா?
இது ஒரு வகை அனுபவம்.
“ப்ளீஸ்! ஒரு கிளாஸ் தண்ணீர்!
“இப்ப முடியாது! இந்த சர்வீஸ் முடிந்தவுடன் தருகிறேன்!
“மிஸ்! நான் குடிக்க தண்ணீர் கேட்டேனே?
“சாரி! இன்னும் அரை மணியில லேண்டிங்! அதனால முடியாது!
எழுபதுகளில் இந்தியன் ஏர்லைன்ஸில் பிரயாணம் செய்த துரதிஷ்டசாலிகளைக் கேட்டால் ஒரு பாட்டம் அழுவார்கள். வேற கதி இல்லாமல் எல்லாவித சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டும் இந்திய ஏர்லைன்சில்தான் பயணம் பண்ன வேண்டிய ஒரு காலத்தில், வாராது வந்த மாமணிதான் ஜெட் ஏர்வேஸ்.
புத்தம் புது விமானங்கள், சிக்கென்று உடை உடுத்திய நடுவானக் கன்னிகள், அபார பணிவு கலந்த சேவை, சுவையான உணவு, சிரித்த முகத்துடன் பதில் என்று விமானப் பயண அனுபவத்தையே தலைகீழாக மாற்றிப்போட்ட ஜெட் ஏர்வேஸ். சரியான நேரத்துக்குக் கிளம்பி சரியான நேர்த்தில் சென்றடைந்து விமானப் பயணத்துக்கென தனி அளவுகோலையே ஏற்படுத்தினார்கள்.
1992ல் ஆரம்பித்த ஜெட் ஏர்வேஸ் அடுத்த வருடத்திலேயே 6.6% சந்தைப்பங்கைப் பிடித்ததோடு அன்றி, அதற்கடுத்த வருடத்திலேயே அதை 42%க்கு உயர்த்தியது. ஆரம்பித்த முதல் வருடத்திலேயே ஜெட் ஏர்வேஸில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 730,000 பேர்கள்! முழுக்க முழுக்க வாடிக்கையாளர் சேவையையே மையமாக வைத்து இயங்கியதாலேயே இந்த அசுர வளர்ச்சி அடையமுடிந்தது. இவ்வளவு தரமான சேவை அளித்தும் ஜெட் ஏர்வேஸினால் லாபம் சம்பாதிக்க முடிந்ததன் காரணம், அவர்களின் செலவுக்கட்டுப்பாட்டு முறைமை. அப்போது இந்தியன் ஏர்லைன்ஸின் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஒரு விமானத்துக்கு 397ஆக இருக்க, அதே விகிதம் ஜெட் ஏர்வேஸில் 163 மட்டுமே! வெகு விரைவிலேயே வெளிநாட்டுக்கும் சேவை ஆரம்பித்துவிட்ட ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் 2004-2006ம் வருடம் பன்னாட்டு விமானப்பயணச் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்படும் அளவுக்குப் பாராட்டப்படுபவரானார். கிட்டத்தட்ட இந்தப் பொறுப்பில் அவர் 2016 வரை இருந்தார் என்பது விசேஷச்செய்தி!
2007ல் ஏர் சஹாரா என்னும் சின்ன விமான நிறுவனத்தை 507 மில்லியன் டாலர் (ரூ 3500 கோடி) கொடுத்து வாங்கிய ஜெட் ஏர்வேஸ், அதற்கு ஜெட் லைட் என்று பெயர் மாற்றி இயக்க ஆரம்பித்தது.
2013ல் ஜெட் ஏர்வேஸின் வளர்ச்சிக்கு உதவ தலைவர் நரேஷ் கோயல் அபுதாபியைச் சேர்ந்த எடிஹாத் ஏர்வேஸுக்கு (Etihad Airlines) தன் 24% பங்குகளை அளித்து 379 மில்லியன் டாலர்களைப் பெற்றார். அன்றைய தேதியில் ஜெட் ஏர்வேஸிடம் 55 விமானங்கள் ஓட, ஒரு கோடி பேர் பயணம் செய்திருந்தனர். அதன் வரவு 9800 கோடி ரூபாயாக உயர்ந்து லாபகரமான விமான நிறுவனமாகத் திகழ்ந்தது.
ஆனால் கடந்த சில வருடங்களாக ஜெட் ஏர்வேஸின் நிதி நிலைமை படிப்படியாக வலுவிழந்து இன்று மொத்தமாக மூடப்படும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது. 2018ம் ஆண்டு ஜெட்டுக்கு இருந்த சந்தைப்பங்கு 16.6%. ஆனால் ஒரே வருடத்தில் இந்த ஜனவரியில் அது 13.3% ஆகக் குறைந்துவிட்டது. போட்டி நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விஸ்தாரா போன்றவை படிப்படியாக முன்னேற, ஜெட் மட்டும் இறங்குமுகமாகவே நழுவிக்கொண்டிருக்கிறது.
கடுமையான பணத்தட்டுப்பாடும் விஷமாய் ஏறும் கடன் சுமையுமே முக்கிய காரணங்கள் என்கிறார்கள் விற்பன்னர்கள். சமீப காலங்களில் பெரும் சரிவைச்சந்தித்த விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸைவிட ஜெட் ஏர்வேஸின் சரிவு மிகப்பெரியது. ஜெட்டின் கடன் சுமை போன வருடம் ரூ 8411 கோடி கிங்ஃபிஷருடைய கடன் சுமை அதுவும் ஏறும் வட்டியினால், ரூ 7524 கோடி. ஜெட்டின் பணியாளர்கள் எண்ணிக்கை 16000. ஆனால் கிங்ஃபிஷரிலோ 5700 பேர்தான். மேலும் கிங்ஃபிஷரிடம் 69 விமானங்கள் இருக்க ஒரு நாளைக்கு 370 விமானச்சேவைகள் செய்து வந்தது. ஆனால் ஜெட்டிடம் 119 விமானங்கள் இருக்க, ஒரு நாளைக்கு 600 விமானச்சேவைகள் செய்து வந்தது. இதனாலேயே ஜெட்டின் வீழ்ச்சி படு வேகமாக நிகழ ஆரம்பித்தது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக விற்பன்னர்கள் சொல்லுவது நரேஷ் கோயலின் நிர்வாக பாணிதான். அவர் கடுமையான நிர்வாக முறைகளையும் தான் சொல்லுவதுதான் செய்யப்படவேண்டும் என்னும் சர்வாதிகாரப்போக்கும் ஜெட்டில் மேலாண்மையைப் பாதித்தது. அவருடன் கூடப் பணிபுரிந்த பல மிக நல்ல நிர்வாகிகள் இந்தப் பாணி பிடிக்காமல் விலகிவிட்டனர்.
கோயலின் இந்த மேலாண்மை ஒரு காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே போட்டியாக இருந்தபோது செல்லுபடியாயிற்று. ஆனால் பல தனியார் விமானச்சேவைகள் வந்துவிட்ட பிறகு மாறிவிட்டிருக்கும் சூழலில் நரேஷ் கோயலால் தன் நிறுவனத்தை முன்போல லாபகரமாகச் செயல்பட வைக்க முடியவில்லை.
ஸ்பைஸ் ஜெட் கூட சில வருடங்களுக்கு முன்பு கடுமையான சோதனைகளைச் சந்தித்தது. ஆனால் அதன் தலைவர் அஜய் சிங் நிறுவனத்தை விரைவிலேயே நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார். காரணம் ஸ்பைஸ் ஜெட்டிடம் இரண்டே வகையான விமானங்கள் இருந்தன. குறைவான பன்னாட்டுப் பயணங்கள் மற்றும் உள்நாட்டிலும் அதிகச் சிக்கல்கள் இல்லாத போக்குவரத்து. எனவே ரூ 1500 கோடி ரூபாய் அதிக முதல் செலுத்தி நிர்வாகத்தைச் சீரமைத்து ஸ்பைஸ் ஜெட் விரைவிலேயே லாபகரமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஜெட் ஏர்வேஸால் அவ்வளவு சுலபமாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பது வல்லுநர்களின் கருத்து.
ஏற்கெனவே இந்திய விமானச்சேவை சஹாரா, ஏர் இண்டியா மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் வீழ்ச்சிகளைப் பார்த்துவிட்டது. இப்போது ஜெட்டும் வீழுமானால் அது எல்லோருக்குமே – வங்கிகள். அரசு, பயணிகள் மற்றும் ஜெட் ஏர்வேஸுக்கு பெரும் இழப்புதான்.
சமீபத்தில் சில வங்கிகளும் அரசும் முனைந்து ஜெட் ஏர்வேஸின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். கோயல் தலைமைப்பீடத்திலிருந்து இறக்கப்படலாம். புது நிர்வாகிகள் சேர்க்கப்பட்டு, வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, விமானங்கள் குறைக்கப்பட்டு சீராக இயங்கினால் ஜெட் ஏர்வேஸ் மீண்டுவிடலாம் என்கிறார்கள். இதன் ஆரம்பமாக போன வருடத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளால் ரூ 500 கோடி வரை செலவினங்கள் குறைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு நடுவில் ஜெட் ஏர்வேஸின் பணியாளர்கள் ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர வாய்ப்புத்தர வேண்டும், ஜெட் ஏர்வேஸின் விமான லைசென்ஸை ரத்து செய்யக்கூடாது என்றெல்லாம் கோரிக்கை வைத்துப் போராட்டம் செய்வதோடு நீதிமன்றத்துக்கும் போயிருக்கின்றனர்.
மிக நன்றாகச் செயல்பட்டு வந்த விமான நிறுவனம் நிர்வாகச் சீர்கேடால் மூடப்படுவது இந்தியாவின் வர்த்தக நிலைமைக்கு நல்ல செய்தி அல்ல. உலகெங்குமே பல விமான நிறுவனங்கள் கடும் சங்கடங்களைச் சந்தித்து வருகின்றன. ஆனால் அவற்றைச் சீராக்குவதில் வங்கிகளும் அரசும் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும். ஜெட் மீண்டு வந்து விமானச் சேவையைத் தொடர்வது விமான நிறுவனங்களின் ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்து இந்திய விமானப்பயணத்தின் விஸ்தீரணத்தை, முக்கியமாகப் பன்னாட்டு விமானச் சேவையைப் பலப்படுத்தி, பொருளாதார நன்மைகளைப் பெருக்கக்கூடும்.
அந்த நீல வண்ண கம்பீர விமானங்களும் மாறாத புன்னகையுடன் சுடச்சுட அருமையான உணவுத்தட்டை உங்கள் கையில் வைத்து ‘எஞ்சாய் யுவர் மீல் என்னும் மென்மையான சேவையும் மீண்டும் தொடர ஜெட் ஏர்வேஸை வாழ்த்துவோம்.

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 2) | தமிழில்: ஜனனி ரமேஷ்

(a) அக்ரணி அல்லது இந்து ராஷ்டிரம்
இந்தியாவிலுள்ள ஏனைய இந்து சங்கடன தலைவர்களைப் போலவே நானும் இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களிலும் புதிய மகாசபா தினசரிகளைத் தொடங்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் உதவியும் அளிக்க முயன்று வருகிறேன். அதேபோல் இந்து சித்தாந்தத்தைப் பரப்ப ஆப்தேவும், கோட்சேவும் மராத்தி தினசரியைத் தொடங்க நீண்ட காலமாகவே முனைந்ததுடன், இது தொடர்பாக எனது தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும் வலியுறுத்தி வந்தனர். பத்திரிகை தொடங்குவதற்குத் தேவையான தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும், முன்னணி மற்றும் பொறுப்புள்ள இந்துத் தலைவர்களிடமிருந்து அவர்கள் பெற்றது தெரிய வந்தவுடன், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் நானும் ரூ 15,000/- அளிக்க ஒப்புக்கொண்டேன்.
முதலாவதாக இந்த முன்பணம் கடனாகத் தரப்படுவதால், ஆப்தே மற்றும் கோட்சே இருவரும் கூட்டாக உறுதிப் பத்திரம் (Promissory Note) எழுதித் தர வேண்டும்; இரண்டாவதாக நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகப் (Limited Company) பதிவு செய்யப்பட வேண்டும்; மூன்றாவதாக நான் கொடுத்த கடன் அந்நிறுவனத்தில் பங்குத் தொகையாக மாற்றப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து இருவருமே கூட்டாகக் கடன் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தனர். ‘இந்து ராஷ்ட்ர ப்ரகாஷன் லிமிடெட் என்ற பெயரில் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு செய்ததுடன் எனது கடனும் பங்குத் தொகையாக மாற்றப்பட்டது.
பிரபல மற்றும் வசதியான இந்துத் தலைவர்கள் ரூ 5000 முதல் ரூ 10000 வரை அளித்துள்ளது பதிவாகி உள்ளது. சேத் குலாப் சந்த் ஹீரா சந்த் (சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் சேத் வால்சந்த் ஹீராசந்த் சகோதரர்), போர் (Bhor) மாகாண முன்னாள் அமைச்சர் ஷிங்க்ரே, சங்க்லி மில் உரிமையாளரும் கோடீஸ்வரருமான விஷ்ணு பந்து வேலாங்கர், கோலாபூர் சினிமா பிரபலம் ஸ்ரீமான் பால்ஜி பெண்டார்கர், போர் (Bhor) மன்னர் ‘நகர் பூஷன் என்ற பட்டமளித்துக் கௌரவப்படுத்திய தோப்தே, ஸ்ரீமான் சந்திரசேகர் அகாஷே, பாராமதி ராவ் பகாதூர் ஷெம்பேகர், ஸ்ரீமான் சேத் ஜுகல்கிஷோர் பிர்லா (கோட்சே கடிதம் ஜி-74 டி.29 பார்க்கவும்) உள்ளிட்ட பலர் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளுக்குக் கணிசமான தொகையை அல்லது இந்து ராஷ்ட்ரத்த்துக்கு நன்கொடையை வழங்கி இருக்கின்றனர்.
மேற்கூறிய பத்தியில் காணப்படும் விவரங்கள் அனைத்தும் ப்ராக்ஷிக்யூஷன் தரப்பு சாட்சியில் உள்ளன (P.W. 57, பக்கங்கள் 233, 234, 243, 254; பி P.W. 60, பக்கம் 320; P.W. 86, பக்கம் 420 மற்றும் கோட்சே & ஆப்தே கடிதங்கள் பக்.277–பக்.293). அக்ரணி பத்திரிகைக்கு மட்டுமின்றி, விக்ரம் மற்றும் ஃப்ரீ இந்துஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்குத் தார்மீக ஆதரவையும், நிதி உதவியையும், இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நான் வழங்கி வருவதாக கோட்சேவே ஒப்புக் கொண்டுள்ளார் (G.-70 பக்கம் 293 பார்க்கவும்).
மேற்கண்ட விவரங்களிலிருந்து அக்ரணி பத்திரிகைக்கு நான் உதவியதற்குக் காரணம் அது ஆப்தே – கோட்சே நிறுவனம் என்பதால் அல்ல என்றும், மகாசபா கட்சி பத்திரிகை என்பதால்தான் என்றும், அதற்கு நான் மட்டுமின்றி இந்து சங்கடனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பொறுப்புள்ள கௌரவமிக்கத் தலைவர்களும் உதவி உள்ளனர் என்பதும் தெளிவு.
(b) அக்ரணி கொள்கை முழுவதும் கோட்சே மற்றும் ஆப்தேவின் கட்டுப்பாட்டில்
அக்ரணி பத்திரிகையை கோட்சேவும், ஆப்தேவும் சொந்தப் பத்திரிகையாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து பத்திரிகையின் கொள்கை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இருப்பினும் பரவலாகப் பிரபலமடைவதற்காகப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக அல்லது நிறுவனராக அல்லது ஆதரவாளராக நான் இணைய வேண்டுமெனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதும் நான் உடன்படவில்லை. எனது தலைமையில் உருவான இந்து மகாசபாவின், ‘சாவர்க்கர்–வாதம் என்று அவர்களால் அழைக்கப்படும் எண்ணங்களின் பிரதிநிதியாகவும், அதன் சார்பில் இந்தியா முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான நலம் விரும்பியாகவும், ஆதரவாளராகவும் மட்டுமே இருப்பேன் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினேன். இந்தப் பத்திரிகையைப் பொருத்தவரையிலும்கூட இந்த அடிப்படையில்தான் ஆதரவளிப்பேன் என்று சொன்னேன்.
அக்ரணி தினசரியில் எனது நிழற்படம்
இருப்பினும் இந்து மகாசபையின் தலைவர் என்ற முறையில் எனது நிழற்படத்தை அவர்களது தினசரியின் முதல் பக்கத்தில் வெளியிட ஆப்தேவும், கோட்சேவும் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். இந்தியாவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பல இந்து-எண்ணம் கொண்ட தினசரிகளும் அவற்றின் முதல் பக்கங்களில் எனது நிழற்படத்தை வெளியிட்டு வருகின்றன. எனவே இதில் ஆட்சேபகரமான விஷயம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ப்ராசிக்யூஷன் தரப்பு அவரது தொடக்க உரையில் எனக்கும் அந்தத் தினசரியின் கொள்கைக்கும் ஏதோ நேரடித் தொடர்பு இருப்பதுபோல் இதை முக்கிய விஷயமாகக் குறிப்பிட்டுள்ளார். தினசரிகளின் ஒவ்வொரு இதழின் முதல் பக்கத்திலும் இதுபோல் நிழற்படங்களை வெளியிடுவது இந்தியாவில் சாதாரண விஷயம். மகாத்மா காந்தி பிரபலமாக இருந்த காரணத்தால் அவரது நிழற்படத்தை தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஆனால் இந்த தினசரிகள் குறித்த எந்த விவரமும் காந்திக்குத் தெரியாது. அவற்றைப் படித்ததும் இல்லை. பூனாவைச் சேர்ந்த ‘கேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் லோகமான்ய திலகருடைய நிழற்படம் நிரந்தரமாகவே இடம் பெறும். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி நல்ல மனநிலையிலுள்ள யாரும் எந்தவொரு நீதிமன்றத்திலும் மறைந்த லோமான்ய திலகருக்கும், இன்றைய கேசரியின் பத்திரிகையின் கொள்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல மாட்டார். சட்டப்படியும், நியாயப்படியும், தலைவர்களின் நிழற்படங்களை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்தான் பொறுப்பே தவிர, ஆசிரியரின் கொள்கைகளுக்கு நிழற்படத்தில் இருப்பவர் பொறுப்பாக மாட்டார்.
இன்னுமொரு நம்பத்தகுந்த ஆதாரமாக, அக்ரணியின் நிர்வாகத்தோடும், கொள்கையோடும் (இந்து ராஷ்டிரம்) என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பொறுப்பைத் தனிப்பட்ட முறையில் நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்கான ஆவணத்தைப் ப்ராசிக்யூஷன் தரப்பே அளித்துள்ளது. கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் கூட்டாக நான் எழுதிய கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர் (SGA-# Exhibit பக்கம் 302 பார்க்கவும்).
கடிதத்தை நான் எழுதியதற்கான சூழல் இதுதான். ஒரு வருடத்துக்குப் பிறகு ஆப்தேவும், கோட்சேவும் தினசரியைத் தொடங்கி அதற்கான அச்சகத்தையும் முடிவு செய்தனர். பிறகு என்னைச் சந்தித்துப் பத்திரிகையின் கொள்கையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தினர். ஒப்பந்தத்தில் என் பெயரை எழுத அனுமதிக்குமாறு அல்லது நிறுவனராக அல்லது புரவலராக இருக்க ஒப்புக் கொண்டால், அச்சகத்தை நல்ல விலையில், எளிதாக வாங்க முடியும் என்றும் வேண்டினர். அவர்கள் சொன்ன காரணங்களுக்காகவே நான் சம்மதிக்கவில்லை. அவர்கள் சென்ற பிறகு சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, வேறெந்த காரணத்தினாலோ, எனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதால், தினசரியின் கொள்கை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதுவது நல்லது என்று நினைத்தேன். இதனைத் தொடர்ந்த உரையாடலின்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டுச் சொல்ல வந்தது மறந்து போகாமல் இருக்க இந்த விஷயத்தை எழுத்தில் தெளிவுபடுத்தச் சொன்னேன். அதாவது அக்ரணியின் கொள்கை உங்கள் இருவருக்கு (கோட்சே மற்றும் ஆப்தே) மட்டுமே சொந்தமாகவும், பிரத்யேகமாகவும், நிபந்தனையற்றும் இருப்பதை ஒப்பந்தத்தில் எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
(c) ‘அக்ரணியில் நான் எழுதவே இல்லை
ஆப்தேவும், கோட்சேவும் அக்ரணியின் முதல் இதழ் முதற்கொண்டே சிறு குறிப்பையேனும் எழுத வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தனர். எனது கட்டுரைகளைச் சிறப்புத் தலையங்கப் பத்திகளில் வெளியிடுவதாகவும் கூறினர் (கோட்சேவின் கடிதம் G-61 தேதி 10 மார்ச் 1944 பக்கம் 291 பார்க்கவும்). ஆனால் அக்ரணி பத்திரிகைக்காக நான் எதுவுமே பிரத்யேகமாக எழுதவும் இயலவில்லை, எழுதவும் இல்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள கட்சித் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் எதையேனும் எழுதித் தருமாறு என்னைத் தொடர்ந்து வேண்டி வந்துள்ளன. ஒரு சிலவற்றுக்கு மட்டும் எழுதி, மற்றவைகளுக்கு எழுதாமல் இருந்திருந்தால் நான் நடுநிலை தவறியவனாகி இருப்பேன். இந்து சங்கடன இயக்கப் பணிகள் அதிகமிருந்த காரணத்தாலும், அதற்காகத் தனிப்பட்ட முறையில் எழுதுவதற்கும் ஏராளம் இருந்ததாலும், வேறு எந்தப் பத்திரிகைக்கும் எழுதுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துக்கொண்டு மறுத்து வந்தேன். எனது அறிக்கைகளும், கட்டுரைகளும், பொதுவான பத்திரிகைச் செய்திகளாகப் பத்திரிகை முகவர்களால் அதிக எண்ணிக்கையில் வெளியாகிக் கொண்டிருந்ததால், தனியாக எந்தப் பத்திரிகைக்கும் பிரத்யேகமாக எழுத வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அந்த வகையில் அக்ரணி நான் கையொப்பமிட்டு வெளியிட்ட பத்திரிகைச் செய்திகளையும், குறிப்புகளையும், சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளது. இவற்றைத் தவிர அக்ரணிக்காக நான் தனியாக வேறெதையும் எழுதவில்லை. இதற்காக நான் வருத்தப்பட்டேன் என்றாலும் அக்ரணி பத்திரிகையை விதிவிலக்காகக் கருத முடியவில்லை. இதற்காகச் சில நேரங்களில் ஆப்தேவும், கோட்சேவும் என் மீது வருத்தப்பட்டார்கள். இது சந்தேகத்துக்கு இடமின்றி, மறுக்க முடியாத உண்மை என்பதை கோட்சேவும், ஆப்தேவும் எனக்கு எழுதிய கடிதங்களை ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சிகளாகச் சமர்ப்பித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு மொழிபெயர்ப்பு கீழ்க்கண்டவாறு:-
G-70 என்று குறிப்பிடப்பட்டுள்ள கோட்சேவின் கடிதம் (Exhibit பக்கம் 293) கூறுவதாவது:
‘அக்ரணி தினசரி பத்திரிகைக்கு நீங்கள் எந்தப் பிணையையும் பெறாமல் வெறும் கடன் உறுதிச் சீட்டின் (promissory note) அடிப்படையில் மிகப் பெரிய தொகையாக ரூபாய் பதினைந்தாயிரம் அளித்திருக்கிறீர்கள்.
‘இம்மாதம் 25ம் தேதி, அதாவது இன்றிலிருந்து 25 நாள்கள் கழித்து ‘அக்ரணி தினசரி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அச்சகத்துக்காக வசதியான சில ஆதரவாளர்களிடமிருந்து மூலதனத்தைப் பெற்றுள்ளோம்.
‘அக்ரணி குறித்த நிதி நிலவரத்தை உங்களுக்கு (சாவர்க்கர்) கூறியபோது உங்களுக்குக் கொடுத்த கடன் உறுதிச் சீட்டை (promissory note) நாங்கள் கிழித்துப் போடச் சொன்னோம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது…
‘கடந்த திங்கள் கிழமை ஸ்ரீமான் குலாப் சந்த் இங்கே வந்திருந்தார். அவருடன் நாங்கள் பேசினோம். ஒரு மாத காலத்துக்கு ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பியிருந்தார்…
‘கணிசமான நிதி அக்ரணி தினசரிக்கு வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது என்றாலும் ‘விக்ரம் மற்றும் ‘ஃப்ரீ இந்துஸ்தான் பத்திரிகைகளுக்கும் உங்கள் உதவி தேவைப்படுவதால், உங்கள் கவனத்துக்குக் கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு வர விரும்புகிறேன்.
‘இந்தப் பத்திரிகையில் நீங்கள் கூடுதலாக ரூபாய் பத்தாயிரம் முதலீடு செய்வதுடன் ஒட்டுமொத்தத் தொகைக்கு அதாவது ரூபாய் இருபத்தைந்து ஆயிரம் மீது ஆண்டுக்கு மூன்று சதவிகிதம் வட்டி வசூலிக்க வேண்டும் என்பதும் எனது கருத்தாகும்.
‘இப்போது நான் இந்த தினசரியின் மற்றொரு பாகம் (அம்சம்) பற்றி எழுதுகிறேன். காந்திஜியின் ‘ஹரிஜன் பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் பல்வேறு தலைப்புகளில் குறைந்தபட்சம் பத்து பத்திகளுக்கு காந்தியின் சொந்தப் பெயரில் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆனால் ‘அக்ரணி பத்திரிகைக்கு உங்கள் (சாவர்க்கர்) எழுத்து மூலம் சின்னஞ்சிறு பலன் (பெருமை) கூட கிடைக்கவில்லை. ‘கேசரி பத்திரிகைக்கு (லோகமான்ய) திலகர் மூலம் அதாவது அவரது எழுத்துக்கள் மூலம் நேரடிப் பலன் கிடைத்தது. ‘ஹரிஜன் பத்திரிகையில் காந்தியே (கட்டுரைகள்) எழுதுகிறார்…
‘இப்போது இருப்பதை விடவும் உங்கள் உடல் ஆரோக்கியம் தேறிய பிறகு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரேயொரு கட்டுரையேனும், அரசியல் அல்லது இந்து மதம் பற்றி மட்டுமின்றி, புரட்சி, எந்திரமயமாக்கல், இயற்பியல், நுண்ணறிவு, இலக்கியம், வரலாறு, தத்துவம், கவிதை என பல்வேறு தலைப்புகளில் எழுதுங்கள். இரு கைகளையும் கூப்பி உங்களைத் தாழ்மையுடன் தொடர்ந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
‘எழுத்துக்கான சன்மானம் குறித்து உங்களிடம் (சாவர்க்கர்) பேசுவது நாகரிகமாக இருக்காது. ‘அக்ரணி பத்திரிகைக்குப் பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதத் தொடங்கிய பிறகு ‘அக்ரணி மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவும், பக்திக்காகவும் தரச் சித்தமாக இருக்கிறோம். உங்களுக்கு (சாவர்க்கர்) மாதம் ரூபாய் நூறு அனுப்பி வைக்கிறோம்.
எனது எழுத்துக்கான சன்மானம் தொடர்பாகப் பணம் கொடுக்கும் யோசனை நேர்மையாக ஆனால் வேடிக்கையாக இருந்தாலும், அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதவுமில்லை, ஏற்கெனவே பட்டியலிட்ட காரணங்களுக்காக மேற்கொண்டு பண உதவி செய்யவுமில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(d) கோட்சேவும், ஆப்தேவும் என்னுடன் பயணித்தனர்
என்னுடனான சுற்றுப் பயணங்களில் குழுவினருடன் கோட்சேவும், சில தருணங்களில் ஆப்தேவும் பங்கேற்றனர் எனறு ப்ராசிக்யூஷன் தரப்பு தெரிவித்துள்ளது. ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சிப்படுத்தி உள்ள கோட்சே எனக்கு எழுதிய பதினேழு கடிதங்களுள், கோட்சே என்னுடன் பயணிக்க விரும்பினார் மற்றும் பயணித்தார் என்பதை நிரூபிக்க மட்டுமே நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்துக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளது. நான் எப்போது பயணித்தாலும் ஒவ்வொரு இடத்திலும் பிரபலத் தலைவர்களும், ஏராளமான ஊழியர்களும் என் குழுவுடன் இணைந்து பயணிப்பார்கள். குழுவின் அளவும் எண்ணிக்கையும் சில நேரங்களில் அதிகமாகும்போது எனது பயணத்துக்காகச் சிறப்பு ரயில் பெட்டிகள் பதிவு செய்யப்படும். கடந்த எட்டு ஆண்டுகளில் இதுபோல் நூற்றுக்கணக்கில் நீண்ட பயணங்களை மேற்கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியுள்ளேன். இவற்றுள் அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு பயணங்களில் மட்டுமே கோட்சேவும், ஆப்தேவும் என்னுடன் வந்திருப்பார்கள். பண்டிட் நாதுராம் என்னுடைய பயணக் குழுவில் அவராகவே விருப்பப்பட்டு இணைந்தார் என்பதையும், தொடர்ந்து அவர் முன்வைத்த பல அழுத்தமான கோரிக்கைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டார் என்பதையும், சில தருணங்களில் ஆர்வமுள்ள மற்ற தன்னார்வத் தொண்டர்களுக்குச் சம அளவு வாய்ப்பளிக்க வேண்டியிருப்பதால் கோட்சே வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதையும் நிரூபிக்க ப்ராக்சியூஷன் தரப்பு சமர்ப்பித்துள்ள கடிதங்களே ஆதாரம். மேற்கூறியவை அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்க கோட்சேவின் கடிதங்களிலிருந்து சில பத்திகளைக் கீழே தர வேண்டியது அவசியமாகிறது. ப்ராசிக்யூஷன் தரப்பே இக்கடிதங்களைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது:
1941 நவம்பர் 10 (G-26 Exhibit பக்கம் 278) கடிதத்தில் கோட்சே எழுதியதாவது:
“அஸ்ஸாம் பயணத்தில் கலந்துகொள்ள நான் எப்போது பம்பாய்க்கு வரவேண்டும் என்பதையும் உங்கள் (சாவர்க்கர்) பயணத் தேதியையும், ரயில் விவரங்களையும் எனக்குக் கடிதம் மூலம் முன்கூட்டியே தயவுசெய்து தெரிவியுங்கள். உங்களுடன் (சாவர்க்கர்) பயணிக்கும்போது உங்கள் மூலம் இந்து சபா குறித்த அனுபவத்தையும், கல்வி அறிவையும் பெற மராட்டியத்திலுள்ள பல நல்ல ஊழியர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்…நேற்று சதாரா பாரிஸ்டர் விதால் ராவ் கரந்திகர் இது குறித்த தனது ஆர்வத்தை என்னிடம் கூறியதுடன், அவரது விருப்பத்தைக் கடிதம் வாயிலாக உங்களுக்கு (சாவர்க்கர்) தெரிவிக்கவும் பணித்தார். இந்தப் பயணத்தின்போது தனது செலவுகளைத் தானே பார்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்… உங்களுடன் (சாவர்க்கர்) பதினைந்து நாள்கள் செலவிட ஆசைப்படுவதாகவும், அதற்கான அவரது பயணச் செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறார். எனவே உங்கள் பயணத்தின்போது அவரை இணைத்துக் கொள்ள உங்கள் சம்மதத்தைத் தர வேண்டும் என்பது என் எண்ணம்…
1942 ஆகஸ்ட் 21 கோட்சே எழுதிய கடிதத்தில் G-38 (Exhibit பக்கம் 281) உள்ளவை பின்வருமாறு:
“…29ஆம் தேதி நடைபெற இருக்கும் செயற்குழுக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்குமென எண்ணுகிறேன். …இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் (சாவர்க்கர்) மற்றவர்களையும் (உறுப்பினர் அல்லாதவர்களையும்) அழைத்துள்ளீர்கள். எனவே இந்தக் கூட்டத்துக்கு நான் வருவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை எனில், உங்களுடன் வரவிருப்போருடன் என்னையும் இணைத்துக் கொள்ளச் சாத்தியப்படால் எனக்கும் மகிழ்ச்சியே.
1942 ஆகஸ்ட் 24 கோட்சே எழுதிய கடிதத்தில் G-39 (Exhibit பக்கம் 282) உள்ளவை பின்வருமாறு:
“தில்லி அமர்வு மிக முக்கியமானது என்பதால் தலைவர் (சாவர்க்கர்) குழுவின் உறுப்பினராக என்னையும் உடன் அழைத்துச் செல்வது குறித்துப் பரிசீலிக்கவும்.
கோட்சே எழுதிய கடிதத்தில் G 43 (Exhibit பக்கம் 284) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“கான்பூரில் நீங்கள் தலைமை ஏற்கும் கூட்டத்துக்கு உங்களுக்கு முன்பாகவே நான் சென்று இந்துப் பிரசாரத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். ஆனால் மற்றவர்கள் அவர்களை அனுப்ப உங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை நான் அறிவேன். இதன் காரணமாக எனது பெயரை நீங்கள் நீக்க வாய்ப்புள்ளது. எனவே ஐக்கிய மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய என்னை நினைவில் வைத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும்.
கோட்சே எழுதிய கடிதத்தில் (G-45 Exhibit பக்கம் 286) கூறுவதாவது:
“தில்லி செயற்குழுக் கூட்டத்துக்கு நீங்கள் (சாவர்க்கர்) செல்லும்போது உங்கள் குழுவுடன் நானும் தில்லி வர விரும்புகிறேன். ரயிலில் பணியாளரின் டிக்கெட்டிலோ, உங்கள் குழுவிடமுள்ள இரண்டாம் வகுப்பு டிக்கெட்டிலோ பயணிக்க ஆர்வமாக உள்ளேன்.
எனது செயலாளர் மற்றுமொரு தருணத்தில் கோட்சேவுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்:
“தலைவருடன் தில்லி செல்ல விரும்பும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. ஆனால் ஏற்கெனவே திரு பகவத்தை எங்களுடன் (சாவர்க்கர் குழு) அழைத்துச் செல்ல முடிவெடுத்ததால் இம்முறை உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை (SG-5 Exhibit பக்கம் 299 பார்க்கவும்).
சில தருணங்களில் பயணங்களின்போது எங்கள் குழுவினருடன் ஊடகப் பிரதிநிதியாக கோட்சே கலந்துகொண்டு பல்வேறு பத்திரிகையில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார். இதை ஏனைய பத்திரிகையாளர்களும் செய்துள்ளனர். அவர்களுள் ஒருவராகத்தான் கோட்சே இருந்துள்ளார்.


தொடரும்…

சில பயணங்கள் – சில பதிவுகள் – பகுதி – 20 | சுப்பு


பித்தெடுத்தவன் காதலிஅவசர நிலையின்போது கொள்கை வேறுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய லோக் தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜன சங்கம், சோசலிஸ்ட் கட்சி, அகாலிதளம் போன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சித்தலைவர்களும், இந்த வட்டத்திற்குள் வெளியே இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆனந்த் மார்க், நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சிறையில் இருந்தனர்.
சிறைவாசம் இவர்களிடையே உரையாடலைச் சாத்தியப்படுத்தியது. எதேச்சாதிகாரத்தை எதிர்க்க ஒருமித்த நடவடிக்கை அவசியம் என்ற கருத்து சிலரிடம் எழுந்தது. ஜனதா கட்சிக்கான ஜனனம் இதுதான்.
இந்நிலையில் இந்திராகாந்தி, ‘அவசரநிலை தளர்த்தப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். சிறையிலிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயபிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபாளினி ஆகியோரின் ஆசியோடு உருவானது ஜனதா கட்சி. ஜன சங்கத்தின் அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி, ஸ்தாபன காங்கிரசின் மொரார்ஜி தேசாய், சோசலிஸ்ட் கட்சியின் பிஜு பட்நாயக், சரண்சிங், காங்கிரசில் இருந்து வெளியேறிய பாபு ஜெகஜீவன்ராம், தி.மு.க.விலிருந்து வெளியேறிய இரா. செழியன் ஆகியோரின் ஆளுமை இதற்கு வலு சேர்த்தது.
தமிழ்நாட்டில், ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டது. எதிரணியில் அ.இஅ.தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி.
மார்ச் 1977 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற வேண்டுமென்று நான் கடுமையாக உழைத்தேன். ஆர்.எஸ்.எஸ்., தி.மு.க., மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்புடைய இளைஞர்களெல்லாம் ஒன்று சேர்ந்து இரவு பகலாகத் தேர்தல் வேலை செய்தோம். வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நிதி வசூலித்தல் போன்ற எல்லாத் தேர்தல் வேலைகளையும் கச்சிதமாகச் செய்தோம். தி.நகரில் ஜெகஜீவன்ராம் பேசுவதற்காக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன் அங்கே கூடியிருந்த மக்கள் முன்னிலையில் நாங்கள் ‘ஜனதா பாலிஷ் போட்டோம். தங்களுடைய செருப்பையும், ஷூவையும் பாலிஷ் செய்து கொள்ளுமாறு நாங்கள் மக்களைக் கூவி அழைத்தோம். மக்களும் பாலிஷ் போட்டுக் கொண்டுத் தாராளமாக நிதி உதவி செய்ததில் ஒரு மணி நேரத்தில் 400 ரூபாய் சேர்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்தக் கூட்டம், இந்த நிதியை நாங்கள் மேடையில் சேர்ப்பதற்காக விலகி வழிவிட்டது. மேடையேறி நிதியை நாங்கள் மு.கருணாநிதியிடம் ஒப்படைத்தோம்.
நாங்கள் முழு நம்பிக்கையோடு வேலை செய்தாலும் தி.மு.க. தென்சென்னை தொகுதியில் தோல்வி கண்டது. இருந்தாலும் ஜனதா கட்சி அகில இந்திய அளவில் வெற்றி பெற்று அரசு அமைத்தவுடன், ஆர்.எஸ்.எஸ். வேலைகளை பகிரங்கமாகவும், இன்னும் பரந்த அளவிலும் செய்ய முடிந்தது.
அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, கண்மூடித்தனமாகச் செலவு செய்துவிட்டதாலும் ஒரு வருட காலம் கவனிக்காமல் விட்டுவிட்டதாலும் வலை வியாபாரம் கை நழுவிப்போய்விட்டது. மீண்டும் வலை வியாபாரத்தைத் துவக்க முடியவில்லை. கோவா மிஷினுக்கு இப்போது ஆர்டர்கள் அதிகமாகிவிட்டதால் எங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு இப்போது மரியாதை இல்லை. வியாபாரத்தில் எங்களுக்குப் போட்டியாய் இருந்தவர்களும் கோவா வலையைக் கொண்டு வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கண்ணன் (அடையார் ஆர்.எஸ்.எஸ்.) மீன்பிடிக்கும் விசைப்படகு ஒன்றை வாங்க விரும்பினான். இந்தக் கண்ணனும் நானும்தான் முன்பே விவேகானந்தர் நினைவாலயத்தின் புத்தகத்தை வெற்றிகரமாக விற்பனை செய்திருந்தோம். நானும் கண்ணனும் ராஜேந்திரனும் கூட்டாளிகளாகச் சேர்ந்து ஒரு மீன்பிடிப் படகை வாங்கினோம். படகு வாங்குவதில் நான் ராஜேந்திரனை நம்பியே இறங்கினேன். வாங்கின தொகைக்கு மேல் இந்தப் படகு எங்களுக்குச் செலவு வைத்தது. எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாததால் எங்களுக்குள் சச்சரவு ஏற்பட்டது. மிகுந்த பிரயாசைக்குப் பிறகு படகு தயாரானது. படகிற்கு ராஜேந்திரன் விருப்பப்படி ‘அஸ்வத்தாமா என்று பெயரிடப்பட்டது. என்னுடைய விருப்பப்படி படகின் பின்பக்கம் கடற்கொள்ளைக்காரர்களின் சின்னம்போல் குறுக்கே இரண்டு வாட்களும் இடையே ஒரு மண்டை ஓடும் வரையப்பட்டன. அப்போது சென்னை ராயபுரத்திலிருந்த படகுகள் எல்லாம் மீன் பிடிப்பதற்காக ஆந்திராவுக்குப் பயணப்பட்டன. நாங்களும் போவதென்று முடிவு செய்தோம்.
இதற்கிடையே நான் என்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு அடையாரிலிருந்து பெசன்ட் நகருக்கு வந்துவிட்டேன். பெசன்ட் நகரில் ராகவன் என்ற நண்பனுடைய ப்ளாட்டில் குடியேறினேன். இந்த வீட்டில் நான் இரண்டு வருடங்கள் இருந்தேன். ராகவன் விஷ்ணுவுடைய அண்ணன், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தான். கடற்கரை ஓரமாக இருந்த இவனுடைய வீடு ஆர்.எஸ்.எஸ். வேலைகளுக்குப் பயன்பட்டது.
ராகவன் பிரம்மச்சாரிக்கட்டை. கொடை வள்ளல். இந்த வியாபார உலகத்தில் இவரைப் போன்றவர்கள் அபூர்வம். ராகவனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு உடுப்பி ஓட்டல் இருந்தது. உடுப்பி ஓட்டலில் ஏதாவது தொழிலாளிக்கு வேலை போய்விட்டால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ராகவனை நம்பி வரலாம். ராகவன் வீட்டில் அவர்கள் தங்கிக் கொள்ளலாம். இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடலாம். இருக்கிற, அதாவது ராகவனிடம் இருக்கிற காசையும் சிகரெட்டுக்கோ, சினிமாவுக்கோ பகிர்ந்து கொள்ளலாம். எந்தப் பிரச்சினையுமில்லை. மாதக் கடைசியில் மட்டும் பற்றாக்குறை வரும்போது ராகவனுக்குக் கோபம் வரும். சத்தம் போடுவான். அதுவும் கொஞ்ச நேரத்திற்குத்தான். பிறகு இப்படிச் சத்தம் போட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் வட்டிக்குக்கடன் வாங்கி எல்லோரையும் சினிமாவுக்குக் கூட்டிப்போவான். நான் இங்கே வந்தபோது இந்த ரீதியில் இரண்டு வாலிபர்கள் இங்கேயிருந்தார்கள்…
பெசன்ட் நகரிலிருந்து ஒருநாள் சைதாப்பேட்டைக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். பஸ்ஸில் வந்த ஒரு காங்கிரஸ் நண்பனைக் கலாட்டா செய்து கொண்டிருந்தேன். அவன் தமாஷாக பஸ்ஸில் இருந்தவர்களைப் பார்த்து, ‘ஐயா நீங்களே பாருங்களையா என்று நீதி கேட்டான். பின் சீட்டில் இருந்த ஒருவன் என்னோடு சேர்ந்து அவனைக் கேலி செய்தான். நான் என் ஸீட்டை விட்டு எழுந்து பின் சீட்டுக்காரனுக்குக் கை கொடுத்து ‘வெல்கம் என்றேன். இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தப் பின் சீட்டுக்காரனை நண்பனொருவன் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகம் செய்தான். நாங்கள் ஏற்கெனவே பஸ் பிரயாணத்தில் சந்தித்து விட்டோமென்று கூறினேன்.
நங்கநல்லூரிலிருந்து புதிதாக பெசன்ட் நகருக்குக் குடிவந்துள்ள அவன் பெயர் ரமணன் (இன்று இசைக்கவி ரமணன்) என்று தெரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் விளையாட்டுகள் முடிந்த பிறகு எல்லோரும் சுற்றி உட்கார்ந்துகொண்டு உரையாடுவோம். அன்று ரமணனைப் பேசச் சொன்னபோது, “எனக்குப் பேசவராது. ஒரு கவிதை சொல்கிறேன் என்றான். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இருட்டில் ஒருவரையொருவர் சரியாகப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. ‘வீசும் ஒளிவிழிப்பார்வையில் என்று துவங்கிய கவிதை எனக்கு அதிர்ச்சி வைத்தியமாயிற்று. சில நிமிடங்களில் கவிதை முடிந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியாமல் செயலிழந்து போனேன். அந்த வார்த்தைகளிலிருந்து ஏதோ ஒரு சக்தி புறப்பட்டு என் நரம்புகளில் பின்னிக் கொண்டது. நான் அதுவரை அனுபவித்திராத சில உணர்வுகளை அப்போது அனுபவித்தேன். கூட்டம் முடிந்தவுடன் ரமணன் என் பக்கத்தில் இருந்தான். யாரோ ஒரு பையன் ரமணனிடம் என்னைக் காட்டி, “ஜீயும், ஒரு கவிஞர்தான் என்றான். நான் வெட்கத்தில் தலையைக் குனிந்துகொண்டேன்.
ரமணனை சந்தித்தவுடனே எனக்கு மற்ற விஷயங்களிலிருந்த பிடிப்பு விலக ஆரம்பித்தது. மணிக்கணக்கில் ரமணன் சொல்வதை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்னொருவர் சொல்வதை நான் உன்னிப்பாகக் கவனித்தல் என்பது முதன்முறையாக நிகழ்ந்தது. ரமணனுடைய இசைத் திறன், மொழி வளம், கற்பனைப் பெருக்கு இவற்றில் கட்டுண்டு வேறு சிந்தனைகளை நான் அகற்ற விரும்பினேன். புதியதொரு பொன்னுலகத்தில் நான் அடியெடுத்து வைத்தேன்.
பெசன்ட் நகரின் கடற்கரையும், சவுக்குத் தோப்பும் எங்கள் வாசஸ்தலங்களாயின. நேரம் போவது தெரியாமல் வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் நாங்கள் உலாவருவோம். பெரும்பாலும் ரமணன்தான் பேசுவான், நான் இடையிடையே. கௌரிசங்கர் என்ற இன்னொரு நண்பனும் கலந்து கொள்வான்.
திருவான்மியூர் கலாஷேத்திராவில் ஒரு ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி உள்ளது. அங்கே ‘பாரதி யார்? என்ற தலைப்பில் பேசும்படி ரமணனை அழைத்திருந்தார்கள். அன்று ரமணன் பேசிய பேச்சை நான்தான் எழுதிக் கொடுத்தேன். சௌகரியமான முறையில் மேற்கோள்களைத் திரட்டி, என்னுடைய அன்றைய அரசியல் கொள்கைக்கு ஏற்றவாறு அந்த உரையை அமைத்திருந்தேன். கிட்டத்தட்ட பாரதியார் ஹிந்துராஷ்டிரத்தை ஆதரித்தார் என்ற தொனியில் அது இருந்தது.
ரமணன் பேசும்போது அங்கிருந்த மாணவிகளுடன் நானும் கௌரியும் உட்கார்ந்திருந்தோம். அவன் விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டபோது அங்கிருந்த கிறித்துவ கன்யாஸ்திரிகள் கண் கலங்கியதை நான் பார்த்தேன். எனக்கு அது நம்பமுடியாத காட்சியாக இருந்தது. நடுவில் சந்தேகம் வந்ததும் ரமணன் அங்கிருந்தபடியே எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஒரு விஷயம் தனக்குத் தெரியவில்லை என்பதை எப்படி ஒருவன் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள முடியும் என்பது எனக்கு அதிசயமாக இருந்தது.
நானும் ரமணனும் அவன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். நன்றாக ஆரோக்கியமாக இருந்தவனுக்கு என் கண் முன்னே ஜுரம் வந்துவிட்டது. எதனால் இப்படி என்று நான் கேட்டதற்கு “அம்மா வேலைக்காரிய திட்றா என்றான். ஒருவர் இன்னொருவரைத் திட்டுவதனால், மூன்றாமவருக்கு ஜுரம் வருகிறது என்பது எனக்குப் புதுமையாயிருந்தது.
என்னை அறியாமல் எனக்குள் ஒரு ரசவாதம் அப்போது நடந்து கொண்டிருந்தது. இதற்குக் காரணம் ரமணன் ஏற்படுத்திய தாக்கம்தான் என்பதை நான் முதலில் உணரவில்லை. போகப்போக அது புலப்பட்டது. ஒருநாள் மாலைப்பொழுது பெசன்ட் நகர் சுடுகாட்டை ஒட்டியுள்ள வீதியில் நானும் ரமணனும் பேசிக்கொண்டிருந்தோம். தன்னுடைய நங்கநல்லூர் வாசத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தவன், அங்கே உள்ள நண்பர்களைப் பற்றி விவரித்துக்கொண்டே வந்தவன், காளியைப் பற்றிய கவிதை ஒன்றைச் சொல்லிவிட்டு அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டு வருவதற்குள் “பராசக்திதான் இதைக் கொடுத்தாள் என்று சொல்லி முடித்தான்.
இருட்டிவிட்டது என்பதாலும், அப்போதே சென்ட்ரலுக்குப் போய் நான் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதாலும் அவனிடம் விடைபெற்றேன். எங்களுடைய மீன்பிடிப்படகு அஸ்வத்தாமாவை ஆந்திராவில் இருக்கும் நிஜாம் பட்டினத்திற்குக் கடல்வழியாக அனுப்பியிருந்தோம். அதோடு சேர்ந்து கொள்வதற்காக ரயில் பயணம். ஆனால் விஷயம் அங்கேதான் தொடங்கியது.
ராகவன் வீட்டுக்கு வந்து பெட்டியை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி சென்ட்ரலுக்கு வந்தேன். ரயிலில் ஏறினேன். கண்ணனும் என்னோடு சேர்ந்துகொண்டான்.
பெசன்ட் நகர் சுடுகாட்டில் தொடங்கி ரயில் பயணம் வரை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஒரு கேள்வி என் மூளையில் தொத்திக்கொண்டது. ‘ரமணன் பராசக்தியைப் பார்த்தானா, பராசக்திதான் கவிதையைக் கொடுத்தாளா, ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டுக்கொண்டு தவறாமல் வெற்றிலையையும், புகையிலையையும் வாயில் குதப்புகிறவனால் பராசக்தியைப் பார்க்க முடியுமா? இப்படியான கேள்விகள் என் சிந்தனைப் போக்கை கட்டிப்போட்டுவிட்டன. இன்றுவரை எனக்குப் புரியாத ஒரு காரணத்தால் அப்போது எனக்கு அதுவே மிக முக்கியமான விஷயமாகப்பட்டது.
உடன் வந்த கண்ணன் எவ்வளவோ பேச்சு கொடுத்தாலும் என் மனம் அதில் ஒட்டவில்லை. ஒரு கட்டத்தில் ஏதோ சரியில்லை என்பதை யூகித்துக்கொண்ட கண்ணன் “என்ன யோசிக்கிற என்றான். கண்ணனைத் தவிர்ப்பதற்காக “கவிதை எழுதப்போகிறேன் என்றேன். சொல்லிவிட்டேன் என்பதற்காக பேப்பரையும் பேனாவையும் கையில் எடுத்தேன். கண்ணன் அங்கிருந்து விலகி மேல்-பர்த்தில் படுத்துக்கொண்டான்.
கவிதை எழுதி நமக்கு அதிகப் பழக்கம் இல்லை. ஒன்றிரண்டு முயற்சிகள் செய்ததுண்டு. அதற்காகப் பாராட்டப்பட்டதும் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் காதல், கந்தசஷ்டி விரதம் என்று ஏதோ ஒரு பின்னணி இருந்தது. இப்போது இரவின் நிசப்தத்தில் ஓடுகிற ரயிலும் ஓடாமல் நின்றுவிட்ட என் புத்தியும்தான் துணை. கவிதை என்பது கடவுள் உலகத்தின் திறவுகோல் என்பது போலவும், அது ரமணனின் கைவசம் இருப்பது போலவும், முயன்றால் நாமும் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது போலவும் ஒரு தீர்வு அரும்பியது. தெளிவு தெரிந்தது.
வெகுநேரம் மனதில் வெற்றிடத்தை உணர்ந்தேன். எல்லா அசைவும் ஆட்டமும் வெளியில்தான்! உள்ளே இருக்கும் மைதானத்தில் ஓட்டமில்லை. அந்த நள்ளிரவுப் பொழுதைப் புறந்தள்ளிக்கொண்டு புறப்பட்டது கவிதை.
பித்தெடுத்தவன் காதலி.


தொடரும்…

வேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்


தமிழரசனின் வேலை அவன் மனைவி செல்விக்குப் பிடிக்கவில்லை.
“என்ன வேலை இது? ரெண்டு கிழங்களுக்கு வீட்லெ எடுபிடி வேலை செய்துகிட்டு?
“அப்படிச் சொல்லாதே செல்வி. அவங்கதான் எனக்கு ஆரம்பத்திலேர்ந்து எல்லாமே. கிராமத்திலேர்ந்து இங்கே மாறி வந்தப்ப, கூடவே என்னையும் கூட்டிக்கிட்டு வந்தாங்க. படிக்க வசதியில்லாத நெலையிலே, இங்கெயே அவங்க வீட்லயே வெச்சுக்கிட்டாங்க. ஒரு டிகிரி வாங்கவும், கம்ப்யூட்டர் கத்துக்கவும் உதவினாங்க.
“அதுக்காக…. அவங்க வீட்லயே வேலை செய்யணும்னு ஏதாவது எழுதியிருக்கா? வெளி உலகத்துல ஆபீஸ், பிஸினஸ்ன்னு ஒண்ணும் கெடையாதா? நாளைக்கு, வீடு வாசல்ன்னு வாங்க வேண்டாமா?
“அதான் சாப்பாடு போட்டு, சம்பளமும் தராங்களே செல்வி?
“நானும்தான் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன். எனக்கு பி எஃப், கிராசுவிட்டி எல்லாம் ஒரு சேமிப்பா வரும் – உனக்கு?
“ம்… உனக்கு அந்த வேலைக்கு அஞ்சு லட்சம் சொளையா குடுத்து வாங்கினது. மாசம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, உயிரே போறா மாதிரி வேலை. கூடவே, பசங்களை திட்டக்கூடாது, கடுமையா ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு ஆயிரம் ரூல்ஸ். இதுக்கு நடுவிலே, சென்சஸ் எடுக்கறது, எலெக்‌ஷன் ட்யூடின்னு டார்ச்சர் வேற.
“அதுக்கு என்ன செய்யறது. நிரந்தர வேலை எங்கே கிடைக்குது? சாதி சர்டிபிகேட்டு அது இதுன்னு ஆயிரம் கேக்கறாங்க – பணம் வேற செலவு செய்யணும். எல்லாம் செய்தாலும் வேலை நிச்சயமில்லே. இப்பத்திய நிலை அப்படித்தானே இருக்குது? ம்.. எங்கப்பா சொன்னா, அந்தப் பெரிய மனுஷன் உனக்கும் ஒரு வேலை வங்கித் தருவாரு…
“பத்து லட்சம் கொடுத்தா செய்யறேன்னாராம்! உனக்காகக் கொடுத்த அந்தப் பணத்த பொரட்ட எவ்வளவு சிரமப்பட்டோம்? அதுவும் அந்த ஐயாதான் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு. இப்போ இது வேறயா?
அன்றாடம் இந்த உரையாடல் ஏதாவது ஒரு வடிவில் சண்டையாக நடந்துகொண்டே இருக்கும். எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதைப் போல, செல்வியின் உறவினர்களும் அவ்வப்போது வந்து ‘என்னதான் சொன்னாலும், ஆபீஸுக்குப் போறா மாதிரி ஆகுமா? என்னவோ எடுபுடி வேலைக்கு, கிளியாட்டம் பொண்ணக் குடுத்துட்டோம் என்று செல்வியின் சீற்றத்தை விசிறிவிட்டுப் போவார்கள்.
தமிழரசன் தனது கம்ப்யூட்டர் அறிவால் நிறைய வேலைகள் செய்பவன். புத்தகங்களுக்கு லே அவுட் செய்வது, முகநூலில் பதிவது, ப்ளாக்கில் எழுத உதவுவது என எல்லாம் அத்துப்படி. 
அவனை ஆதரித்த சங்கரன் தம்பதியினர், தனியாக ஒரு ஃப்ளாட்டில் வசிக்கின்றனர். எண்பது வயது தாண்டிய சங்கரன் ஒரு நல்ல இலக்கியச் சிந்தனையாளர், எழுத்தாளர். ஏதோ தாசில்தார் உத்தியோகம். ரிடையர்மெண்டுக்குப் பிறகு சென்னை வந்து விட்டார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக எழுதி வருபவர். பக்கம் பக்கமாகக் கையால் எழுதியவர், இப்போது சொல்லிச் சொல்லி, லாப்டாப்பில் பதிவிடுகிறார். கதை, கட்டுரை எனத் தன் ப்ளாக்கில் எழுதுவதும், முகநூலில் பதிவதும் அவருக்கு எளிதாகிவிட்டன. மாத, வார சஞ்சிகைகளில் நகைச்சுவையாக எழுதுவதும் அவருக்குப் பிடித்தமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முழுவதுமாக உதவுவது தமிழரசன்தான். ஒரு வேலை என்பதைவிட, தனக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியும், ஆத்ம திருப்தியும் அடைந்தான் அவன். 
சங்கரன் செல்லும் எல்லாக் கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் உடன் செல்வது, புகைப்படம் எடுப்பது, வங்கி, வெளியூர் செல்வது என எல்லாவற்றுக்கும் தமிழரசனே பெற்ற பிள்ளையைப்போல அவருடன் வலம் வந்தான். வேளை தவறாமல் டிபன், காபி, சாப்பாடு எல்லாம் சங்கரனுடன் தமிழரசனுக்கும் தருவது சங்கரனின் மனைவிதான். வீட்டுப் பண்டிகைகள், விசேஷங்கள் அனைத்துக்கும், வீட்டுக்கு வரும் சங்கரனின் மகனுக்கும், மகளுக்கும் தமிழரசனே எல்லா உதவிகளையும் செய்வான். 
சங்கரனின் வலது கரம் தமிழரசன்தான். எழுதுவதில் மட்டும் அல்லாமல், மருந்து மாத்திரை எடுத்துக் கொடுப்பது, புத்தகங்கள் வடிவமைப்பது, எல்லாமே அவன்தான்.
மகன், மகள் இருவருக்கும் அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு, தன் மனைவியுடன் தனியாக வாழ்வதில்தான் சுதந்திரமாக உணர்ந்தார் சங்கரன். அந்த சுதந்திரத்தில் தலையிடாத தமிழரசனை அவருக்குப் பிடித்திருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. வீட்டிற்கு வருவோர் போவோர், புத்தகப் பதிப்பாளர்கள், சங்கரன் நண்பர்கள் என எல்லோருக்கும் தமிழரசனைத் தெரியும் – அவன் மூலமாகவே அவரைத் தொடர்பு கொள்வது எளிது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
மாதம் பிறந்தால், தமிழரசனின் வங்கிக் கணக்கில் ஒரு கணிசமான தொகையைச் செலுத்திவிடுவார் சங்கரன். தமிழரசனின் திருமணத்துக்குப் பிறகு, அந்தத் தொகை இரட்டிப்பானது.
இதெல்லாம் செல்விக்குப் புரிவதேயில்லை. தன் கணவனும், நல்ல உடை, கூலிங் கிளாஸ், கையில் தங்கக் கடிகாரம், கழுத்தில் தங்கச் சங்கிலி எல்லாம் அணிந்து, மோட்டார் பைக்கில் ஒரு ஆபீஸ் போவதைப் பார்க்க ஆசைப்படுகிறாள்.
“என்ன செல்வி, மாப்பிள்ளை அந்த எழுத்தாளர் வீட்டிலேயே பழியா கெடக்கிறாரு? மாமாகிட்ட சொல்லி நல்ல வேலை ஒண்ணு வாங்கிக்கலாமில்லே? இப்போ நல்ல நல்ல வாய்ப்பெல்லாம் அரசாங்கம் நமக்குக் கொடுக்கிறாங்கள்ள?
தமிழரசன் மறுத்துவிட்டான். “பெரியவரு கூடத்தான் இருப்பேன். அவருக்கு உதவி செய்யறதுதான் என் வேலை. அவர்கிட்டே நெறைய்ய கத்துக்கிறேன். அவர் மூலமா வெளி வேலைங்களும் எனக்குக் கெடைக்குது. அந்தம்மா என்னெ பெத்த புள்ளையாட்டம் அன்பா கவனிச்சுக்கிறாங்க. எனக்கு ஒரு கொறையும் இல்லே.
செல்விக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இரண்டு வருஷமா இதே போர்தான். கையில் குழந்தை வேறு. குழந்தை பிறந்தபோது, சங்கரன் தம்பதியினர் குழந்தைக்குத் தங்கச் சங்கிலி போட்டதையும், கை நிறைய பணம் கொடுத்ததையும் செல்வி மறக்கவில்லை. ஆனாலும், தமிழும் தன் பிறந்த வீட்டு ஆண்களைப்போல், வெள்ளையும் சொள்ளையுமாய் ஆபீஸ் செல்லாதது ஒரு பெரிய குறையாகவே பட்டது.
அந்த மாத இதழுக்கு அனுப்ப வேண்டிய கட்டுரைக்குத் தாமதம் ஆகிவிட்டது. தமிழரசன் கம்ப்யூட்டரில் டைப் அடித்து, மெயில் செய்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்ப, வழக்கத்தைவிட நேரம் அதிகமாகிவிட்டது. இந்தப் பரபரப்பில், செல்வியைக் கடைக்கு அழைத்துப் போகக் கொடுத்திருந்த வாக்கு மறந்துவிட்டது.
வீடு அலங்கோலமாகக் கிடந்தது. கோபமாகச் செல்வி. “போய்ருய்யா, அவங்களோடயே போய்ரு. உனக்கு எதுக்குய்யா பொண்டாட்டி, கொழந்தை எல்லாம்? ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள். என்ன சொல்லியும் கேட்காமல், இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, விடுவிடுவென்று மணப்பாக்கத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். ‘செல்வி, செல்வி கூப்பிட்டவாறு பின்னாலேயே ஓடினான் தமிழரசன். எதிரில் வந்த ஆட்டோவில் ஏறித் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள் செல்வி.
தமிழரசன் இரவு முழுதும் தூங்கவில்லை. தான் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல, கேட்காமல் தனக்குத் திருமணம் செய்து வைத்த சங்கரன் ஐயா மீது கோபமாக வந்தது. இவர்களுக்கு என்னதான் வேண்டும்? புரியாமல் குழம்பினான். குழந்தை கபிலனின் சிரித்த முகம் மனதை மேலும் வருத்தியது.
மறுநாள் தமிழரசனின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த சங்கரனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. சங்கரன் மனைவியும், “தோ பாரு தமிழு, உன்னையே நம்பி தாலியக் கட்டிக்கிட்டு வந்திருக்கா செல்வி. என்னதான் பொறந்த வீட்டுக்குப் போனாலும், அங்கெ அவளுக்கோ, உனக்கோ மரியாதை இருக்காது. அவள் சந்தோஷமும் முக்கியமில்லையா? அவ என்ன கேக்கறா? வேற நல்ல வேலைக்குத்தானே போகச் சொல்றா? குடும்பத்தைத் தவிர வேற எதுவுமே முக்கியமில்ல தமிழு. பேசாம அவ சொல்றா மாதிரி அவ மாமாகிட்ட சொல்லி அந்த வேலைக்கே போயிடேன் என்றாள் ஆதரவாக.
சங்கரனும், “ஆமாம் தமிழு, அரசு உத்தியோகம்தான் புருஷ லட்சணம். எனக்கு சனி, ஞாயிறுலே வந்து எல்லாம் செய்துடேன். எனக்கும் வயசு ஆறது, நவீன எழுத்துக்களோட போட்டி போட முடியும்னு தோணல்லெ. ஏதோ ஆத்ம திருப்திக்கு எழுதறேன். வாரத்தில் இரண்டு நாள் வந்து உதவி செய்யேன், அதுபோதும் என்று அன்புடன் சொன்னார்.
தமிழரசனுக்கு மனம் கேட்கவில்லை. மேலும் சமீபத்தில்தான் சங்கரனுக்கு சர்க்கரை வியாதி அதிகமாகி, சிறுநீரகமும் முரண்டு பிடிக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் இவர்களைத் தனியே விட தமிழரசனுக்கு மனமில்லை. 
ஆனாலும், செல்வியின் பிடிவாதமும், அவள் வீட்டு மனிதர்களின் வற்புறுத்தலும், தமிழரசனை நிலைகுலையச் செய்தன. சங்கரன் தம்பதியினரின் அறிவுரையிலும் நியாயம் இருப்பதாகப் பட்டது. 
பெரிய மனிதரின் செல்வாக்கு, கை மாறிய தொகை, சரியான நேரத்தில் விழுந்த காலியிடம் எல்லாம் சேர்ந்து, தமிழரசனை, செல்வி விரும்பிய அரசுப் பணியில் அமர்த்தின. மறுநாளே மலர்ந்த முகத்துடன், செல்வி வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வேலை ஒன்றும் பெரியதாக இல்லாவிட்டாலும், தமிழரசனுக்குக் கொஞ்சம் மனதில் குறுகுறுப்பு இருந்தது. சீனியாரிட்டி, தகுதிகளை மீறிக் கிடைத்த வேலையினால் ஏற்பட்ட குற்ற உணர்வு. எல்லோரும் தன்னையே கவனிப்பது போலிருந்தது. வேலை நேரத்தில், வீண் அரட்டையிலும், சாப்பிடும் இடத்திலும் பொழுதைக் கழிக்கும் அலுவலர்களைக் கண்டாலே எரிச்சலாய் வந்தது. சிறையில் இருப்பதைப் போல் இருந்தது தமிழுக்கு. சங்கரன் ஐயாவுடன் செய்த வேலையில் இருந்த சுதந்திரமும் விருப்பமும் இங்கு இல்லாதது மனதில் ஒரு வெறுமையைக் கொடுத்தது.
பகல் முழுவதும் அலுவலகம், மாலையிலும் வார இறுதியிலும் சங்கரன் வீடு எனத் தன் வேலைகளைக் கவனித்து வந்தான் தமிழரசன். 
வயதும் நோயும் சங்கரனைப் படுக்கையில் தள்ளின. வீட்டிலேயே இருபத்திநாலு மணிநேரமும் நர்ஸ், மருந்து, மாத்திரைகள், வாரம் ஒரு முறை டாக்டர் விசிட் என சங்கரனை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் அவரது குழந்தைகள். தமிழரசனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் இருந்தான்.
அன்று காலையில் அலுவலகம் சென்றவுடன், அன்றைய செய்தித்தாளில் வந்திருந்த செய்தி உண்மை எனத் தெரிந்தது. வேலை வாங்கிக் கொடுத்த பெரிய மனிதர் மற்றும் தமிழரசனின் இரண்டு மேலதிகாரிகள் மீது ஊழல் புகார் – விசாரணை. அதிகாரிகள் வேலை இடைநீக்கம் என அலுவலகமே இறுக்கமாயிருந்தது. தனக்கு என்ன மாதிரி அரசு ஆணை வருமோ என்ற மனக்கலக்கமும் தமிழரசனுக்கு இருந்தது. சாப்பிடும் இடம், மரத்தடி, காரிடர் எல்லா இடங்களிலும் இதே பேச்சாய் இருந்தது. மறைமுகமாகத் தனக்கும் சஸ்பென்ஷன் தகவல் வரலாம் என்ற பேச்சும் காதில் விழுந்தது. அரசியல் புயலில் யாருக்கு என்ன இழப்பு வரும் என்று யாரால் கூறமுடியும்?
அமைதியாக, மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்துகொண்டிருந்த நாட்கள் தமிழரசனின் மனதில் வந்து போயின. இப்போது தினமும் ஒருவித மன இறுக்கத்துடன் வேலைக்கு வர வேண்டியிருந்தது. மேலதிகாரிகள் கூப்பிடும்போதெல்லாம் மெமோ கொடுப்பதற்குத்தானோ என்று அச்சமாய் இருந்தது. வாங்குவதைப் போலவே, லஞ்சம் கொடுப்பதும் குற்றம்தான் என்று தெரிந்தும், இந்த வேலையை வாங்கியதில் வருத்தம் இருந்தது. வேலைக்கு மட்டுமன்றி, இப்போது தன் தலைக்கே ஆபத்து வந்துவிட்டதைப் போல் உணர்ந்தான். சங்கரன் ஐயா சொல்லும் ‘எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்கணும் என்னும் வார்த்தைகளில் புதைந்துள்ள உண்மை உள்ளத்தைச் சுட்டது. 
லேசான தலைவலி. அரை நாள் விடுப்பில் வீட்டிற்குக் கிளம்பினான். பையில் செல்வி வாங்கிக் கொடுத்த புது போனில் செய்தி வந்தது. சங்கரன் மறைந்து விட்டார். ‘ஐயா, உங்க கூடவே இருந்திருந்தா, நிம்மதியா இருந்திருப்பேனே என்று அழுது அரற்றினான் தமிழரசன்.
சங்கரனின் காரியங்கள் முடிந்து, ஒருநாள் தமிழரசனை அவர் மகன் கூப்பிட்டனுப்பினார். “தமிழு, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உன் மேலதான் ரொம்பப் பிரியம். தன் புத்தகங்கள் விற்று வருகின்ற ராயல்டிலே பாதிய உனக்குக் கொடுக்கணும்னு உயில் எழுதியிருக்கார். தன்னோட ஃபிக்சட் டெபாசிட் ரூபாய் ஐந்து லட்சத்துக்கு, உன்னையே நாமினியா போட்டிருக்கார். உனக்கு எப்போ வேணுமோ அப்போ எடுத்துக்கலாம். எனக்குத் தனியா ஒரு லெட்டர்லே, நீ விரும்பினா, என் கம்பெனியிலேயே வேலை கொடுக்கவும் சொல்லியிருக்கார் என்று தெரிவித்தார். மனதில் பாரம் அழுத்த, ஹாலில் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த சங்கரனை விழுந்து வணங்கினான் தமிழரசன்.
விசாரணைக் கமிஷன் தன் வேலையைச் செய்தது. தமிழரசனுக்கு வேலை போனது. விசாரணை முடியும் வரை உள்ளூரிலேயே இருக்க உத்தரவாகியது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் விசாரணைக் கமிஷன் முன் ஆஜர் ஆவது ஒரு வேலையாகிப் போனது. 
செல்விக்கு இப்போதெல்லாம் தன் கணவன் மோட்டர் பைக்கில் வேலைக்குப் போவது பிடிப்பதில்லை.