Posted on Leave a comment

அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி – ஹரன் பிரசன்னா


கலைக்கான படங்களில் பிரசாரமும் பிரசாரப் படங்களில் கலையும் முக்கியமானவை. உண்மையில் ஒரு கலைப்படத்தில் உள்ள பிரசாரத் தன்மையும் பிரசாரப் படத்தில் உள்ள கலைத்தன்மையும் ஒரு திரைப்படத்தின் விவாதங்களைப் பல முனைகளுக்கு எடுத்துச் செல்ல வல்லவை. கலைப்படத்தில் உள்ள பிராசரத்தையும் ஒரு பிராசரப் படத்தில் உள்ள கலைத்தன்மையையும் சேர்த்தோ தனித்தனியாகவோ எதிர்கொள்வது எளிதானதல்ல. இவை இரண்டும் சரியாகப் பொருந்திப் போகும் ஒரு படம், பிரசாரவாதிகளின் கனவாகவே இருக்கும்.

அறம் இப்படியானதொரு படம். இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை ஒரு தரமான திரைப்படம் என்று சொல்லும்படியான தன்மையுடன் இயக்குநர் கோபி நயினார் இயக்கி இருக்கிறார். எப்படி ஒரு திரைப்படத்தில், தவிர்க்கமுடியாத பிரச்சினைகளையும் இந்திய எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இணைக்கமுடியும் என்பதை மிக அழகாகச் செய்து காட்டி இருக்கிறார்.

இந்த மாதிரியான படங்களின் அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தரமான மற்றும் உணர்வு ரீதியான திரைப்படம் என்ற வகையில் மட்டும் புரிந்துகொள்ளும் சாமானியர்களை, மிக எளிதாக இந்திய எதிர்ப்பு அரசியல் அவர்களது பிரக்ஞை இன்றியே சென்று சேரும். இதுதான் இந்திய எதிர்ப்புப் பிரசாரப் படங்களின் நோக்கம். ஆனால் இதைச் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. கொஞ்சம் பிரசாரம் தூக்கினாலும் படத்தை சாமானியர்கள் நிராகரித்துவிடுவார்கள். பல படங்கள் இப்படி வெற்றுப் பிரசாரப் படங்களாகவே தேங்கிவிடும். கலைத்தன்மை மட்டும் அதிகரித்து மாற்றுத் திரைப்படமாகத் தோன்றினால் அது சாமானியர்களுக்கான படமல்ல என்கிற ஒரு கருத்து உருவாகிவிடும். பிரசாரப் படங்கள் சாமானியர்களிடம் இருந்து விலகுமானால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாது. இரண்டும் இல்லாமல் அந்தரத்தில் அலையும் படங்களாகப் பல படங்கள் அமைந்துவிடும்.

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இந்திய எதிர்ப்பு என்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக பிரசாரம் செய்திருக்கிறார் கோபி நயினார்.

*

பொது மக்களுக்கு எதிரான ஒரு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியது. மக்களிடம் அந்த அரசுக்குரிய பிரச்சினைகளைக் கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். கூடவே அது பொதுமக்களின் கடமையும்கூட. ஆனால் எந்த அரசை எந்தக் காரணங்களுக்காக அம்பலப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. காரணங்களைக் கண்டுகொண்டு அதற்குப் பொறுப்பான அரசை எதிர்ப்பதுதான் சரியான அரசியல். ஆனால் இங்கே முற்போக்கு என்னும் முகமூடியில் நடப்பதெல்லாம், எந்த அரசை எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு, பின்பு அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி அந்த அரசின் மீது சுமத்துவது.

இப்படிச் செய்வதிலாவது ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கவேண்டும். ஆசை வெட்கம் அறியாது என்பதைப் போல, மாநில அரசுக்குரிய பொறுப்புக்களைக் கூட மத்திய அரசின் குற்றப்பட்டியலில் சேர்ப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. காரணம் மத்தியில் இருப்பது ஹிந்து ஆதரவு மற்றும் ஹிந்துத்துவ ஆதரவு அரசு. மோதியின் தலைமையிலான இந்த அரசைக் குறை சொல்வதுதான் ஒரே நோக்கம். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு பிரச்சினையும் மத்திய அரசின் பிரச்சினையாகக் காட்ட போலி முற்போக்காளர்கள் தயாராகவே இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் இதைச் செய்வார்கள். திரைப்படம் என்பது இன்னும் ஒரு ஊடகம். வலுவான ஊடகம். அதை நேர்மையற்ற முறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபி நயினார்.

 *

ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, அந்த ஊரை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை, புறக்கணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஹிந்துத்துவவாதிகளும் இப்படியான ஒரு அநியாயத்தை ஏற்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மையான பொறுப்பு யாருக்கு உள்ளது? மாநில அரசுக்குத்தானே? ஆனால் ராக்கெட் விடும் மத்திய அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை என்கிற பிரசாரம் படம் முழுக்கப் பரப்பப்படுகிறது. அதைவிட முக்கியமாக மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பாகிறது.

ஆழ்துளைக் கிணற்றுக் குழியில் குழந்தை விழுந்துவிடுகிறது. அடிக்கடி இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். இது போன்ற செய்திகள் தரும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இதுபோன்ற செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான்கைந்து நாள் தூக்கம் இழந்து தவிப்போம். இப்படிக் குழந்தைகள் விழுவதும் இறப்பதும் பெரிய கொடுமை. இதற்கான பொறுப்பை உண்மையில் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்பதல்ல. வேறொரு வகையில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

ஏன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு குழந்தை சாகும்போதும் எதாவது நிவாரணப் பணம் கொடுக்கும் அரசு, இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்விதான், அப்படி குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்ற, குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான கருவிகளை மத்திய மாநில அரசுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பது. இந்த மூன்றுமே முக்கியமானவைதான். கோபி நயினார் மூன்றாவது கேள்வியை மட்டும் மையமாக்கி மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்குகிறார். கருவிகள் கண்டுபிடிக்கப்படாதது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மை என்றாக்கி அத்தகைய இந்தியாவை எல்லா விதங்களிலும் எதிர்க்கலாம் என்பதை நோக்கிப் போகிறார்.

மத்திய அரசைப் பொறுப்பாக்குவதால் மாநில அளவில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் முதல் குஞ்சு குளுவான் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மாநில அரசியலில், அதுவும் கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்த வரை வெளிப்படையாக மாநில அரசியலைக் கேள்வி கேட்டு இவர்களுக்குப் பழக்கமில்லை. அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறார்கள்.

*

திண்ணைப் பேச்சுக்காரர்கள் வம்பளக்கும்போது எதாவது ஒன்றை எதோ ஒன்றுடன் கோர்த்துப் பேசுவார்கள் என்பதைப் பார்த்திருப்போம். ராணுவத்துக்குக் கோடி கோடியாகச் செலவழிக்கிறோம், ஆனால் தெருவில் பாதுகாப்பில்லை என்பது தொடங்கி, சைன்ஸ் சைன்ஸ்னு சொல்றாங்க, 21ம் நூற்றாண்டுன்னு சொல்றாங்க, ஒரு குழந்தையைக் காப்பாத்த முடியலை என்பார்கள். இதில் மேம்போக்கான நியாயம் உள்ளது என்பது சரிதான். ஆனால் நியாயம் மேம்போக்காக மட்டுமே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

இந்தத் திண்ணை வம்பின் ஒரு பரிமாணத்தை மட்டுமே இயக்குநர் அறம் படத்தில் காட்டி இருக்கிறார். பல கோடி ரூபாயில் ராக்கெட் விடும் அரசுக்கு ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை என்றால், ராக்கெட் ஒரு கேடா என்பதுதான் கம்யூனிஸ இயக்குநரின் புலம்பல். ராக்கெட் விடுவதும் அதனால் வரும் நன்மைகளை மக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் வேறு. குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பது வேறு. ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தும் அரசு குழந்தையைக் காப்பாற்ற கவனம் செலுத்தாது என்று சொன்னால் அது அயோக்கியத்தனமே. குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு ராக்கெட் விடுவது மோசடி என்பதும் இதற்கு இணையான இன்னுமொரு அயோக்கியத்தனமே.

எல்லோருக்கும் ஏற்பில்லாத நீர்ப் பற்றாக்குறை, ஆழ் துளைக் கிணறு பிரச்சினைகளையெல்லாம் ராக்கெட் விடுவதோடு தொடர்புபடுத்தி மத்திய அரசையும் எனவே இந்தியாவையும் அதை ஆதரிப்பவர்களையும் அராஜகவாதிகளாகச் சித்திரிக்கிறார் இயக்குநர்.  ராக்கெட் விடுபவர்களை ஆதரிப்பவர்களும் நீர்ப்பற்றாக்குறையையும் ஆழ் துளைக் கிணற்றில் குழந்தைகள் இறக்கும் பிரச்சினையை எதிர்க்கத்தானே செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதோடு ராக்கெட் விடுவது என்னவோ ஒரு அவசியமற்ற வேலை என்பதான எண்ணத்தை வெகுஜனங்களின் மத்தியில் விதைக்க பெரிய அளவில் மெனக்கெடுகிறார். இவை எல்லாமே ஆபத்தான மற்றும் நியாயமற்ற போக்குகள்.

இந்தப் போக்குகளின் ஊடே இன்னும் இரண்டு அநியாயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஒன்று, ஐஏஎஸ் அதிகாரி முட்டாள்தனமாக உணர்ச்சிப் பெருக்கில் செயல்படுவதுதான் சரி என்பதோடு, யோசித்து யதார்த்தமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் எல்லாம் முட்டாள்கள், அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள் என்கிற பார்வையைப் படம் நெடுகிலும் கொண்டு வந்தது. இன்னொன்று, அறிவியல் என்பதே அவசியமற்றது, மாறாக அசட்டு நம்பிக்கையே தேவையானது என்ற பார்வை.

ஐஏஎஸ் அதிகாரியாக நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வாழ்நாள் வேடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த ஐஏஎஸ் கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கம்யூனிஸ்ட்டின் கனவு என்பதைத் தாண்டி எந்த வகையிலும் யதார்த்தம் கொள்ளவில்லை. குழந்தை உயிருக்குப் போராடும்போது மக்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று அரசு ஊழியர்களையே கேள்வி கேட்பதும் மக்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு குழந்தையை உள்ளே செலுத்துவது என்று முட்டாள்தனமான முடிவெடுப்பதும் என இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ரஜினியோ அஜித்தோ தன் எதிரிகளை ஆயிரம் பேரை ஒரே ஆளாகத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கற்பனைகள்கூட ஆபத்தில்லாதவை. அவற்றில் முட்டாள்தனம் மட்டுமே உண்டு, அதற்குப் பின்னால் அரசியல் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஐஏஎஸ் கதாபாத்திரத்தின் அசட்டுத் துணிச்சலுக்குப் பின்னே, ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கும் அரசியல் உள்ளது. ஆளும் வர்க்கம் புனிதமானது அல்ல. அதே சமயம் அந்தப் புனிதத்தன்மையைக் கேள்வி கேட்பது முட்டாள்தனத்தின் வழியாகவோ, மக்களை உணர்வுரீதியாக மட்டுமே தூண்டிவிடும் முயற்சிகளின் வழியாகவோ இருக்கக்கூடாது. கோபி நயினார் எவ்விதத் தர்க்கமும் இன்றி இந்தியாவின் அறிவியல் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் மனம் போன போக்கில் மட்டுமே அணுகுகிறார்.

மத்திய அரசுக்கு எதிரான ஒரு போக்கு ஒருவேளை சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அதை அப்படியே இந்தியாவுக்கு எதிராகக் கட்டமைக்கவேண்டும் என்பது மட்டுமே கோபி நயினாரின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. மத்திய அரசுக்கு எதிரானவர்கள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் கருத்துக்கும், இந்தியாவின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அதே கருத்தைச் சொல்லும்போது அது எதிர்கொள்ளப்படும் விதத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே தீரும்.

இந்த எதிர்ப்பில் பிற்போக்குத்தனமான கருத்துகளைச் சொல்வதோடு உதவ வரும் அரசு இயந்திரங்களையும் கேலி பேசுகிறார் இயக்குநர். தன் மனைவி மயக்கம் போட்டு விழும்போது மருத்துவர்களின் உதவி தேவையில்லை என்பதை நியாயப்படுத்தும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம் என்றொரு கிராமம் எல்லா சமயத்திலும் முடிவெடுக்க முடியுமா? இத்தனைக்கும் ஒரு குழந்தை குழியினுள்ளே விழுந்ததும் அனைத்து அரசு இயந்திரமும் விழுந்தடித்துக்கொண்டே அங்கே வருகிறது. அங்கேயே நிற்கிறது. இப்படிக் குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்றத் தேவையான வசதிகளும் கருவிகளும் இல்லை என்று அந்த அரசு இயந்திரமும் கவலைப்படத்தான் செய்கிறது. இதையெல்லாம் தன்னை அறியாமலேயே படத்தில் பதிவு செய்திருக்கிறார் கோபி நயினார்.

இத்தனைக்குப் பிறகும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் விதமாகவும் மறைக்கும் விதமாகவும் இந்திய எதிர்ப்பு இந்தப் படத்தில் மையச் சரடாகப் பின்னப்பட்டுள்ளது. காவல் துறையின் உதவி, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய அரசு அதிகாரியான ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு (மடத்தனமாக நடந்துகொண்டபோதும் உள்நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவதுதான்) என எல்லாவற்றையும் பின் தள்ளி, இந்திய எதிர்ப்புக் குரலும் அறிவியலைக் கிண்டலடிக்கும் அறிவீனக் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.

இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குடித்துவிட்டு, குழியினுள் விழுந்த குழந்தையின் தந்தையைப் பார்த்தும் காவல்துறையைப் பார்த்தும் பேசிக்கொண்டே இருக்கும். குழந்தையின் தந்தையைப் பார்த்து, இவங்க நம்ம குழந்தையைக் காப்பாத்த மாட்டாங்க என்றும் அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கேலி செய்தும் புலம்பிக்கொண்டே இருக்கும். அக்கதாபாத்திரம் வேறு யாருமல்ல, முற்போக்காளர்கள் என்ற பெயரில் அவநம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கும் நபர்களின் உருவம்தான். இந்திய எதிர்ப்பையே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் நபரின் பிரதிபலிப்புதான் அந்தக் கதாபாத்திரம். ஒருவகையில் அவர் இயக்குநர் கோபி நயினார்தான்.

*

1990ல் மாலூட்டி என்றொரு மலையாளத் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்றது. அச்சு அசலாக ‘அறம்’ திரைப்படத்தின் அதே கதைதான். ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லக் குழந்தை ஆழ் துளைக்காகத் தோண்டப்பட்ட கிணற்றுக் குழியில் விழுந்துவிடும். அதை எப்படித் தூக்குகிறார்கள் என்பதே கதை.

‘அறம்’ திரைப்படத்தைப் போலவே முதல் காட்சிகளில் கணவன் மனைவியின் கூடல் காட்சிகளெல்லாம் வரும். மாலூட்டியில் அக்காட்சிகள் மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கும். ‘அறம்’ படத்தில் இக்காட்சிகள் மிக யதார்த்தமாக உள்ளன. இக்காட்சிகளில் வரும் நடிகை, இப்படத்தின் கதாநாயகி நயன்தாராவின் நடிப்பையும் தாண்டிச் செல்கிறார். ‘அறம்’ படத்தைப் போலவே ‘மாலூட்டி’ படத்திலும் காவல்துறை, அரசு இயந்திரம் என எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவார்கள். எனவே ‘அறம்’ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை என்ற வகையில் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆனால் அக்களத்தைத் தன் அரசியலுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘மாலூட்டி’ படத்தில் இத்தகைய அரசியல் எதையும் பரதன் முன்வைக்கவில்லை. ஒரு கடினமான நேரத்தில் பொது மக்கள் சொல்லும் குறைகளும் புலம்பல்களும் காட்டப்படத்தான் செய்தன. ஆனால் அப்படியே அவை வளர்ந்து இந்திய வெறுப்புத் தோற்றத்தைக் கைக்கொள்ளவில்லை. அங்கேதான் ‘அறம்’ அரசியல் படமாகிறது.

*

‘அறம்’ திரைப்படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கில் மனம் வெறுத்துத் தன் வேலையை ராஜினாமா செய்யும் ஐஏஎஸ் அதிகாரி எம்எல்ஏ ஆகிறார். அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் கொள்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்கமுடியும் என்று யூகிக்கலாம். அல்லது சுயேச்சையாக வென்றிருக்கலாம் என்று தர்க்கம் செய்யலாம். எப்படி இருந்தாலும் அது இயக்குநரின் கனவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரி அரசுக்கு எதிராக மனம் நொந்து அரசுப் பணியில் இருந்து விலகி அரசின் அங்கமாகவே மாறும் ஒரு கனவு. உண்மையில் இந்தக் கனவு இன்றும் சாத்தியம் என்பதுவே இந்தியா நமக்களித்திருக்கும் கொடை. ஆனால் இயக்குநர் இந்தக் கனவைச் சொல்ல இந்திய எதிர்ப்புக்கான களத்தை அமைத்துக்கொள்கிறார். ராக்கெட் விடுவதைக் கேலி செய்யும் காட்சிகள் உணர்வு ரீதியாக மக்களைத் தன்வயப்படுத்த மட்டுமே. உண்மையில் நமக்குத் தேவை, ராக்கெட் விடுவதும்தான், இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதும்தான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பதும், ஒன்று நிகழும் வரை இன்னொன்று நிகழ்வது ஒரு கேடா என்று சொல்வதும், அறிவுபூர்வமான தர்க்கங்களல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். இந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே அறம் போன்ற திரைப்படங்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்கமுடியும்.

Posted on Leave a comment

பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாண்டுகள் – B.K. ராமச்சந்திரன், ஹரன் பிரசன்னா


“நாடாளுமன்றத்தில் பணியாற்றாமலேயே ஒரு மாநிலத்திலிருந்து நேரடியாகப் பிரதமராக ஒருவர் உயர்வது என்பது சாதாரண விஷயமல்ல” என்று பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொல்லி இருக்கிறார். பிரதமருக்குரிய பொறுப்புகளை உணர்ந்துகொண்டு அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்கு அரசியல் குறித்த பெரிய புரிதல் தேவை. அதை அடைவதற்கு கடும் உழைப்பு அவசியம். மோதியின் அயராத உழைப்பைப் பற்றி பிரணாப் முகர்ஜி வியந்து குறிப்பிடுகிறார்.

மோதியின் உழைப்பைப் பற்றிக் கிண்டலாக மீம்கள் வருவதை நாம் பார்த்திருப்போம். அதைக் கண்ட நொடியில் சிரித்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மோதியின் அயராத உழைப்பும் அதைச் செயல்படுத்தத் தேவையான அர்ப்பணிப்பும் நமக்குப் புரியலாம்.

தொடர்ச்சியாக வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பன்னாட்டு உறவுகளில் பிரதமர் மோதி செய்திருப்பது கற்பனைக்கு எட்டாத சாதனை. சுற்றி இருக்கும் சிறிய நாடுகளிடம் இந்தியா ஒரு பெரியண்ணன் தோரணையில் நடந்துவருவதுதான் வழக்கமாக இருந்தது. பன்னாட்டு உறவு என்பது இப்படி இருக்கமுடியாது. இருக்கக் கூடாது.

மோதி பிரதமரான பின்னர் மேற்கொண்ட பயணங்களின் மூலம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளுடனான நம் உறவு பெரிய அளவில் மேம்பட்டிருக்கிறது. இதுவரை எந்த ஒரு பிரதமரும் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களைச் சந்தித்ததில்லை என்னும் தாழ்வை நீக்கிய முதல் பிரதமர் மோதியே. அதேபோல் மலேசியத் தமிழர்களின் பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய பிரதமரும் மோதி மட்டுமே. இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல. மக்கள் சேவை என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இவையெல்லாம் செய்யத்தக்கவை.

தொடர்ச்சியான பயணங்களுக்கு நடுவில் அவர் இந்தியாவுக்குள்ளே இருக்கும் அரசியலையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் என்றால் அதற்கான பிரசாரத்தையும் செய்யவேண்டும். இவை அனைத்தையும் திறம்படச் சமாளிக்கும் ஓர் உறுதியான பிரதமரை சமீபத்தில் இந்தியா பார்ப்பது மோதியிடம் மட்டுமே.

எந்த ஒரு முக்கியமான அரசியல் தலைவரின் அரசியல் வாழ்க்கையும் எப்போதும் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். மோதியின் அரசியல் வாழ்வோ கூடுதல் சிக்கல்கள் கொண்டது. எப்போதும் எதிர்ப்பாற்றில் நீந்தியபடியே இருக்கவேண்டிய தேவை அவருக்கு எப்போதும் இருந்தது. இன்றுவரை அப்படித்தான். அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தது முதல் பிரதமரானது வரை அவர் பல சவால்களையும் கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு அவற்றை வென்றிருக்கிறார்.

காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் சலிப்புற்று வளர்ச்சியைக் கொண்டு வரும் ஒரு பிரதமர் வரமாட்டாரா என்று ஏங்கிக் கிடந்த காலத்தில், வளர்ச்சி என்னும் கோஷத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டார் மோதி. மக்கள் அவரை நம்பினார்கள். அவர் மக்களை நம்பினார். பின்னர் நடந்தது வரலாறு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரும்பான்மை அரசு மோதி தலைமையில் அமைந்தது. இன்று இருக்கும் தலைவர்களில் மக்களுடன் நேரடியாகப் பேசும் ஒரே தலைவர் மோதி மட்டுமே. இதுவே கண்ணுக்கெட்டிய வரையில் எதிர்க்கட்சிகளே இல்லை என்னும் ஒரு மாயத்தைக் கொண்டு வருகிறது. இது முழுக்க மாயம் அல்ல, கொஞ்சம் உண்மையும்கூட.

சமையல் எரிவாயு மானியத்தை இயன்றவர்கள் கைவிடவேண்டும் என்று மோதி கோரியபோது நிறையப் பேர் ஏளனம் செய்தார்கள். ஆனால் இன்று கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி பணம் இதில் சேமிக்கப்பட்டு உள்ளது. பல புதிய குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு கிடைத்திருக்கிறது. கிராமப்புறங்களுக்கு சமையல் எரிவாயு சென்று சேர்ந்திருக்கிறது. மக்களை நம்பும் ஒரு பிரதமரால் மட்டுமே இது சாத்தியம். சமையல் எரிவாயுவுக்கான மானியம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதன் மூலமும் ஆதார் எண்ணை சமையல் எரிவாயு கணக்குடன் இணைத்ததன் மூலமும் பல முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.

மூன்றாண்டு கால மோதியின் ஆட்சியில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இத்தனைக்கும் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தீவிரமான செயல்பாடுகளை மோதியின் அரசு எத்தருணத்திலும் கைவிடவே இல்லை. இப்போதும் இந்தியாவின் வளர்ச்சியே மோதி அரசின் தார்மிக மந்திரமாக உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு என்னும் அம்சத்தில் எள்ளளவும் சமசரமில்லை என்பதை மோதி தெளிவாக உணர்த்தி வந்துள்ளார். மோதி பிரதமராகப் பதவியேற்றதுக்குப் பின்னர் பன்னிரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு பெரிய நாட்டில் நூறு கோடிப் பேருக்கும் மேற்பட்டவர்கள் வாழும் தேசத்தில் இத்தாக்குதல்கள் மிகக் குறைவானவை. மோதி இத் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்டித்தார் என்பதோடு எதிர்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விடுகிறார். தாக்குதல்கள் குறித்து மோதி தப்பித்துக் கொள்ள முயலவில்லை. சமரசமற்ற நடவடிக்கை தேவை என்று வெளிப்படையாக அறிவிக்கிறார். தேசத்தின் பாதுகாப்பு என்பது மத்திய அரசின் பங்குக்கு உரியது மட்டுமல்ல. மத்திய அரசோடு இணைந்து மாநில அரசும் செயல்படவேண்டியது முக்கியம். இதை இந்த அரசு தெளிவாகப் புரிய வைத்திருக்கிறது.

இந்திய ராணுவம் நிகழ்த்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நம் பலம் என்ன என்பதையும், நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் நம் தீவிரமான நிலைப்பாடு என்ன என்பதையும் நம் எதிரிகளுக்குப் புரியவைத்திருக்கிறது. இந்தியா வெறும் வாழைப்பழ நாடல்ல என்று உலக அரங்கில் இந்தியா அழுத்தமாகப் பதிவு செய்தது அத்தருணத்தில்தான். சீனப் பிரச்சினையை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாண்டு வருகிறது இந்திய அரசு.

மாநிலங்களுக்கான உரிமைகளைப் பொருத்தவரையில் ஜி.எஸ்.டி விவகாரத்திலும் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் மத்திய அரசு உரிய அக்கறையுடன் செயல்பட்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடைபெற்றதற்கான முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் என்றாலும், அப்போராட்டம் வெற்றியடைய காரணமாக இருந்தவர்கள் பிரதமர் மோதியும் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமுமே. ஜி.எஸ்.டி வரியை பல்வேறு மாநிலங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி எதிர்த்தபோது அனைத்தையும் எதிர்கொண்டு மாநிலங்களின் குரலையும் உள்ளடக்கி ஜி.எஸ்.டி வரியை அறிமுக செய்தது இந்திய அரசு.

கருப்புப் பணம் ஒழிப்பில் உண்மையுடன் செயல்பட்ட ஒரே அரசு மோதியின் அரசு மட்டுமே. பண மதிப்பு நீக்கம் என்னும் டீமானிடைஷேசன் என்ற முடிவை எடுப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. நாட்டின் மீதான நிஜமான அக்கறை உள்ள தலைவர் மட்டுமே எடுக்கமுடியக்கூடிய முடிவு அது. ஒரு வகையில் தான் சார்ந்த அரசியல் கட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் பணையம் வைக்கும் செயல். மோதி அதைச் செய்தார். டீமானிட்டைஷேசனின் மிக முக்கியமான பயன், இன்று பணத்தைக் கோடி கோடியாகப் பதுக்குவது அத்தனை எளிதானதல்ல என்று அனைவரும் புரிந்துகொண்டதுதான். கருப்புப் பண ஒழிப்பில் இது முதல்படி மட்டுமே. இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகம் உண்டு. ஆனால் மக்களின் இன்னல்களைக் காரணம் காட்டி டீமானிட்டைசேஷனை எள்ளி நகையாடுபவர்கள் ஒன்றை உணர மறுக்கிறார்கள். டீமானிட்டைஷேசனுக்குப் பிறகு நடந்த பெரும்பாலான தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றே வருகிறது. மக்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களை தங்கள் நாட்டுக்காக என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதனால்தான் மோதி, மக்களுடன் நேரடியாகப் பேசும் தலைவர் என்று சொல்லப்படுகிறார்.

பண மதிப்பு நீக்கத்தின் பலன்கள் இப்போது தெரியத் தொடங்கி இருக்கின்றன. வீடு வாங்குவதற்கான வட்டி விகிதம் 9.5%த்தில் இருந்து 8.2%ஆகக் குறைந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின்போது, எவ்விதக் கருப்புப் பணமும் இல்லாதபோதும் தங்கள் பணத்தையே எடுக்கக் கஷ்டப்பட்டவர்கள் நடுத்தர மக்களே. அவர்கள் பட்ட கஷ்டத்துக்கான பலன் இது என்று சொல்லலாம்.

சுவிட்ஸர்லாந்தில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கணக்கிட்டால் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்ச ரூபாய் தரலாம் என்று மோதி தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னது இங்கே திரிக்கப்பட்டது. ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக மோதி சொன்னார் என்ற பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. ஆனால் 2019 ஆண்டு வாக்கில் சுவட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிடும் சாத்தியம் உள்ளது. அதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. கருப்புப் பண விஷயத்தில் இந்த அரசு நிதானமாகவும் உறுதியாகவும் செயல்படுவதை இது காட்டுகிறது.

மோதி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் நாட்டை விட்டே செல்லவேண்டியதுதான் என்று செய்யப்பட்ட அத்தனை பிரசாரங்களும் இன்று வலுவிழந்து போயுள்ளன. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் எளிதாக பாஜக இந்திய அளவில் வெற்றி பெறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எவ்வித தனிப்பட்ட மத ரீதியிலான அச்சுறுத்துல்களும் இல்லை. “மோதியினால்தான் நான் இங்கே உங்கள் முன்னர் நிற்கிறேன்” என்று சொன்ன கத்தோலிக்க பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் தாலிபனால் கடத்தப்பட்டவர். இதேபோல், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட பாதிரியார் டாம் உசுண்ணாலில் என்பவர் இந்திய அரசின் முயற்சியால் காப்பாற்றப்பட்டார். இந்திய கத்தோலிக்க பிஷப் சபை மோதிக்கும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறது. இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ ஹிந்துக்களோ, நம்மை ஒன்றிணைப்பது இந்தியப் பெருமிதமே.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தங்களைப் பற்றி பெருமையாகவும் மரியாதையாகவும் உணரத் தொடங்கி இருப்பது மோதி பிரதமரான பின்னரே. ஒரு ட்வீட் மூலம் மிக எளிமையாக ஒரு இந்திய அமைச்சரைத் தொடர்புகொண்டு உதவி பெறமுடியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி இருந்தால் யாரும் நம்பி இருக்கமாட்டோம். ஆனால் அது இன்று தினம்தோறும் நடக்கும் ஒரு நிகழ்வாகி இருக்கிறது.

இந்தியா முழுமையையும் சாலைகளால் ஒருங்கிணைப்பது என்ற தொடர் நிகழ்வில் இந்திய அரசு செய்துவரும் செயல்கள் பிரமிக்கத்தக்கவை. அதாவது, இது செயல்படும் அரசு. வாய்ஜாலத்தில் காலத்தை ஓட்டும் அரசல்ல.

மோதி தலைமையிலான அரசு நாள் ஒன்றுக்கு 41 கிலோமீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கி நாள் ஒன்றுக்கு 22 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகளை அமைத்திருக்கிறது. 2016-2017ம் ஆண்டு காலகட்டத்தில் 8,200 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி, குஜராத்தில் கோகோ மற்றும் தாகெஜ் இடையே மோதி தொடங்கி வைத்த படகுப் போக்குவரத்து. கிட்டத்தட்ட 350 கிமீ தூரப் பயணம் இதனால் 31 கிலோமீட்டராகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் துறைமுகங்களை நவீனமாக்கி அவற்றை ஒருங்கிணைக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறன.

குஜராத் மாநிலத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாக உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்காளம் என்று தொடர்ந்து சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் என்று கடந்து மணிப்பூர் மிசோரம் வரை சாலை வழியாக இணைக்கும் பாரதமாலா திட்டம் என்றும், இந்தியாவின் துறைமுகங்களை நவீனமயமாக்கி, புதிய துறைமுகங்களையும் அதோடு இணைந்த கடல்சார் பொருளாதார மண்டலங்களையும் உருவாக்கும் பணி சாகர்மாலா திட்டம் எனவும் பெயரிடப்பட்டு, இந்தியாவின் உள்கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கின்றன.

மோதியின் அரசியல் பிரசங்கங்களைப் பார்த்தால் புரியும். ஒரு பக்கம் அரசியல் எதிர்ப்பாளர்களை வாட்டி எடுத்தாலும், இன்னொரு பக்கம் வளர்ச்சி அரசியலை முன்வைத்துக்கொண்டே இருப்பார். வளர்ச்சி அரசியலை முன்வைத்து தேர்தலை சாமர்த்தியமாக எதிர்கொண்ட முக்கியமான அரசியல்வாதி மோதியே. அதைச் செயலிலும் செய்து காட்டியதுதான் அவரது சாதனை. இன்றைய நிலையில் ஒரு அரசியல்வாதி நல்லது செய்வார் என்று தோன்றினாலும் போதும், மக்கள் ஆதரவு அவருக்கே. செய்து காட்டுவது என்பது அடுத்த படி. மோதி இந்த இரண்டு படிகளையும் நிதானமாகக் கடந்துகொண்டிருக்கிறார்.

மோதியின் பயணத்தில் இன்னொரு முக்கியமான திட்டம், முத்ரா கடன் திட்டம். ஒருவர் (அல்லது பதிவுசெய்யப்பட்ட கடன் வழங்கும் அமைப்பு) தொழில் தொடங்க வங்கியின் மூலம் ஐம்பதினாயிரம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கும் திட்டம் இது. இதன்மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. முத்ரா திட்டத்தை தமிழகம் முழுமைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் முழுமையான வெற்றி என்பது மாநில அரசுகள் அவற்றை எப்படிச் செயல்படுத்துகின்றன என்பதில் உள்ளது. இதையே நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.

சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை இந்தியாவே பெரிய அளவில் திரும்பிப் பார்த்தது, மோதி குஜராத்தின் முதல்வராக இருந்தபோதுதான். அதற்கு முன்பும் சூரியனும் சூரிய ஒளியும் இந்தியாவில் இருக்கவே செய்தன. மோதி பிரதமரானதும் இந்தியா முழுமைக்குமான சூரிய ஒளி மின் உற்பத்தி கடந்த ஆண்டுகளைவிட ஆறு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மின் சேமிப்பும் மின் உறுபத்தியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளது. நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு துளியும் உற்பத்தி செய்ததற்குச் சமம். நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேலான எல்.ஈ.டி பல்புகள் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் மின் செலவு குறைக்கப்பட்டுள்ளது. குண்டு பல்புகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

ஜன் தன் என்ற திட்டத்தை மோதி அரசு கிராமம் தோறும் கொண்டு சென்றது. கோடிக் கணக்கில் கணக்குகள் தொடங்கப்பட்டன. பல்லாண்டுகளாக இந்தியாவின் ஏழை எளிய மக்கள் வங்கிகளை நெருங்காமலே இருந்த நிலையை மாற்றி அவர்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டு வந்தது மோதி அரசின் மிகப்பெரும் சாதனை. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், முப்பது கோடி மக்கள் வங்கிச் சேவைக்குள் வந்து உள்ளனர். அவர்கள் மூலம் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் எண்ணை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோது பாஜக எதிர்த்தது, ஆனால் இன்று மோதியின் அரசே எல்லாவற்றிலும் ஆதாரை இணைக்கச் சொல்கிறது என்பது எல்லோரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. யார் எதைச் செய்கிறார்கள் என்பதோடு அதை எப்படிச் செய்கிறார்கள் என்பது முக்கியம். இன்று ஆதார் எண்ணைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யமுடியும் என்று மோதியின் அரசு காட்டி இருக்கிறது. டிஜிடல் பண வர்த்தனைகள் கூட ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மிகச் சுலபமாக, பாதுகாப்பாகச் செய்யமுடிகிறது. ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்ததால் இது சாத்தியமாகி இருக்கிறது. ஆதார் எண் திட்டத்தை முதலில் கைவிட இருந்தது மோதி அரசு. நந்தன் நீல்கேனி இத்திட்டத்தின் தேவையை மோதிக்குச் சொல்கிறார். மோதி புரிந்துகொள்கிறார். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் இது என்று மோதி யோசிக்கவில்லை. பாஜக எதிர்த்தது என்பதால் இத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. நாட்டுக்குத் தேவை, இதனால் பயன் கிடைக்கும் என்று உறுதியாக துறைசார் நிபுணர்கள் சொல்வதால் உடனே மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறது. ஓட்டரசியல் மட்டுமே செய்யும் தலைவர்களுக்கு நடுவில் நாட்டுக்குத் தேவை என்பதால் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தலைவராக மிளிர்கிறார் மோதி. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், நந்தன் நீல்கேனி, 2014ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிக் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டுத் தோற்றவர்.

பண மதிப்பு ஒழிப்பு, ஜன் தன் திட்டம், ஆதார் எண் இணைப்பு – இந்த மூன்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் மோதி எத்தனை பெரிய ஒரு ஆட்டத்தை ஆடி இருக்கிறார் என்பது புரியும். இந்த மூன்று திட்டங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. ஒன்றைச் செய்தால்தான் மற்றவற்றில் வெற்றி அடைய முடியும். தொலைநோக்கும் எடுத்த முடிவில் நிலைத்து நிற்கும் நிலைப்பாடும் ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் எடுத்த முடிவைச் செயல்படுத்தித் தீரும் தீவிரமும் இல்லாத ஒரு தலைவரால் இவற்றை ஒருங்கிணைத்து யோசிக்கவே முடியாது. அதைச் செய்ய முடியக்கூடிய ஒரே தலைவர் மோதி.

ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்கீழ் இரண்டரை கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

அதேபோல் ஜி.எஸ்.டி மூலம் மறைமுக வரிவிதிப்பை இந்த அரசு பலமடங்கு உயர்த்தி இருக்கிறது. பணமதிப்பு ஒழிப்பு மூலம் நேரடி வரியை அதிகமாக்கி இருக்கிறது. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் இத்திட்டங்களின் பின்னால் உள்ள நோக்கம் புரியும். இந்த வரிவிதிப்புகள் இருந்தால் மட்டுமே நலத்திட்டங்கள் சாத்தியம். ஊழலே குறி என்று இருந்திருக்கும் ஒரு அரசு இதையெல்லாம் செய்யத் தேவை இல்லை. ஊழல் செய்வது எளிது. ஊழலற்ற நேர்மையான மக்கள் அரசை நடத்துவதுதான் கடினம்.

கரியின் மூலம் செயல்படும் அனல்மின் நிலையங்களுக்கான கரி வாங்குவதில் இருந்த ஊழல் மற்றும் குழறுபடியை இந்த அரசு சரி செய்திருக்கிறது. மிக வெளிப்படையான, வலைத்தளம் மூலமான ஏலம் மூலம் ஊழலை ஒளித்திருக்கிறது இந்த அரசு. ப்யூஷ் கோயலின் முக்கியமான சாதனை இது. இதே திட்டம் காங்கிரஸ் காலத்தில் எப்படிச் செயல்பட்டது என்றும் அது மன்மோகன் சிங்குக்கு தீராத களங்கத்தை உருவாக்கியது என்பதையும் நாடே அறியும். இதுவே காங்கிரஸுக்கும் மோதி தலைமையிலான அரசுக்கும் உள்ள வேறுபாடு.

இவை எல்லாவற்றையும்விட, இந்த அரசின் மிக முக்கியமான சாதனை, ஊழலற்ற அரசு. மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மோதி அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது காங்கிரஸ் தலைவர்களும் அவர்களுடன் கூட்டணியில் இருந்த பிற கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் செய்த ஊழல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. மன் மோகன் சிங்கின் மீது குற்றச்சாட்டு சொல்லமுடியாது என்று சொல்பவர்கள், அவரது அரசில் நடந்த ஊழல்களுக்கும் அவரே பொறுப்பு என்பதை மறந்துவிடுகிறார்கள். மோதி அரசில் ஊழலே இல்லை என்றால், மோதியின் அமைச்சர்களிடமும் ஊழலே இல்லை என்றே பொருள். தனி நபரும் அரசும் ஊழலற்று இருப்பது இந்தியாவின் இன்றைய உடனடித் தேவை. அதை நோக்கி இந்தியா நகரத் தொடங்கி இருக்கிறது. இது மோதி செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களைக் களைந்துவிட்டு இந்தியா அடுத்த கட்டத்துக்குச் செல்வது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. மோதி அதற்கான அடிப்படைகளை மிகச் சிறப்பாக நிறுவி இருக்கிறார். மோதியின் திட்டங்களில் மக்களுக்கு இன்னல்கள் நேர்ந்திருக்கலாம். சில திட்டங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டப் பட்டிருக்கலாம். இவையெல்லாம் மறுப்பதற்கில்லை. ஆனால் இத்திட்டங்களுக்குப் பின்னால் இருப்பது, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு நிஜமாகவே கொண்டு செல்ல விரும்பும் ஒரு தலைவரின் அர்ப்பணிப்பு. நல்ல நோக்கம். இதில் ஐயம் கொள்வது நியாயம் அல்ல. கடந்த கால காங்கிரஸின் திட்டங்களுக்கும் மோதியின் திட்டங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு இதுதான். இதற்காகவே கடுமையாக உழைக்கிறார் மோதி. இந்த உழைப்பையே பிரணாப் முகர்ஜி தன் நேர்காணலில் குறிப்பிட்டார். இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டுப்பற்றும் சேரும்போது மோதியை யார் எதிர்த்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள். அதை வரலாற்றில் நாம் காண்போம்.

தரவுகள்:
https://timesofindia.indiatimes.com/india/NDA-regime-constructed-50-of-national-highways-laid-in-last-30-years-Centre/articleshow/20869113.cms | http://www.hindustantimes.com/india-news/government-constructs-22-km-of-roads-per-day-misses-target-of-41-km-by-half/story-nLLJazVO6TZlzgx7lIu7iO.html | http://www.thehindu.com/business/Industry/pace-of-laying-of-roads-rises-to-22-km-daily-in-2016-17/article18113295.ece | https://www.joc.com/international-trade-news/infrastructure-news/asia-infrastructure-news/indian-port-development-program-makes-strides_20170110.html | http://www.firstpost.com/india/sagarmala-project-proposes-14-coastal-economic-zones-across-india-3130866.html | http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=159037 | http://www.india.com/news/india/udan-scheme-list-of-45-new-airports-over-70-new-routes-announced-today-5-airlines-make-the-cut-1976363/ | https://en.wikipedia.org/wiki/List_of_airports_in_India#Tamil_Nadu | http://trak.in/info/2790-indian-railways-suresh-prabhu-achievements/ | http://www.financialexpress.com/india-news/narendra-modis-top-10-signature-infrastructure-projects-to-power-new-india/613121/ | https://www.macquarie.com/cn/about/newsroom/2016/infrastructure-improvement-in-india | https://www.bloomberg.com/news/articles/2017-02-01/modi-plans-59-billion-rail-road-push-as-bombardier-ge-invest | https://www.pmjdy.gov.in/account | http://www.livemint.com/Opinion/wfertnZlyGRTmGiyGnJLrI/The-admirable-success-of-the-JanDhan-Yojana.html | https://economictimes.indiatimes.com/news/economy/policy/narendra-modis-mudra-yojana-generates-5-5-crore-jobs-says-report/articleshow/60435774.cms | http://www.livemint.com/Industry/cTycVe4kwGtmRNjvowf8BO/Ujjwala-scheme-for-LPG-connections-now-has-25-crore-benefic.html | https://timesofindia.indiatimes.com/business/india-business/plugging-lpg-subsidy-leaks-leads-to-rs-21000-crore-savings/articleshow/57022255.cms | http://www.newindianexpress.com/business/2017/apr/10/indias-solar-power-generation-capacity-crosses-12-gw-energy-minister-1592126.html | http://www.independent.co.uk/environment/india-solar-power-electricity-cancels-coal-fired-power-stations-record-low-a7751916.html | https://economictimes.indiatimes.com/industry/energy/power/over-25-crore-led-bulbs-distributed-under-ujala-scheme-eesl/articleshow/59635515.cms | http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/ | https://economictimes.indiatimes.com/news/economy/finance/direct-benefit-transfer-leads-to-rs-50000-crore-savings-for-government-in-3-years/articleshow/57240387.cms | http://www.electionpromisestracker.in/governments/central-government/
Posted on Leave a comment

நேதாஜி மர்ம மரணம்: ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை – ஹரன் பிரசன்னா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த கதைகள் இன்னும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்கின்றன. சிறு வயதில் காற்றில் வரும் செய்திகள் பலவற்றில் நாம் மயிர்க்கூச்செரிய கேட்டவற்றுள் ஒன்று, சுபாஷ் உயிருடன் இருக்கிறார் என்பதும், அவரை யாரோ நேரில் பார்த்தார்கள் என்பதும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுபாஷ் எப்படி உயிருடன் இருக்கமுடியும் என்கிற உண்மையை எல்லாம் தாண்டி அவர் குறித்த கதைகள் தந்த பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அந்த பரபரப்பை அப்படியே தக்க வைத்திருக்கிறது ‘நேதாஜி மர்ம மரணம் – ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை’ புத்தகம். ரமணன் எழுதிய இப்புத்தகத்தை, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

சுபாஷ் மரணம் குறித்துக் கேள்விப்பட்ட கதைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்திருக்கிறது இந்நூல். ஆதாரம் உள்ளவை, ஆதாரம் அற்றவை என அனைத்தும். சுபாஷைச் சுற்றி இத்தனை கதைகளா என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம், சுபாஷ் எப்படித்தான் செத்தார் என்கிற குழப்பம் மீண்டும் நம்மை அசரடிப்பது ஒரு பக்கம். மொத்தத்தில் அட்டகாசமான திரில்லரைப் படித்தது போன்ற அனுபவம்.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், திரைப்படங்களில் வரும் புனைவுகளுக்கும் மேலானவை. நிஜம் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கும்போது, அதன் பின்னணி என்ன, அதன் வரலாறு என்ன, ஆதாரம் என்ன என்று யோசித்துக்கொண்டே இருப்போம். வரலாறு எதையும் மிகக் கவனமாகத் தீர்த்து வைப்பதில்லை. வரலாற்றில் நிரப்பப்படாத இடைவெளிகளே நம் கவனத்தை ஈர்ப்பவை. சுபாஷின் மரணத்தில் கிடைக்கும் நிரப்பப்படாத இடைவெளிகளை ஒட்டி உருவாக்கப்பட்டிருக்கும் கதைகளுக்கு அவரவர் பார்வையில் தரும் ஆதாரங்கள் அபாரம். ஒவ்வொன்றையும் படிக்கும்தோறும் இதுதான் சரி என்கிற முடிவுக்குள் அமிழ்கிறோம்.

நேருவுக்கு சுபாஷ் மரணம் அடையவில்லை என்கிற எண்ணம் உள்ளூர இருந்தது என்பதற்கான ஆதாரங்களை ஆசிரியர் பற்பல இடங்களில் கொடுக்கிறார். அப்படி ஒரு எண்ணம் நேருவுக்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் நிச்சயம் சுபாஷ் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதை நாடாளுமன்றத்தில் நேரு அறிவிக்கிறார். அந்த நேருவும் உண்மைதான். சுபாஷின் உடலைப் பார்க்காத அவரது உறவினர்கள் இறுதிவரை, இன்றுவரை கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். சுபாஷ் இறந்ததும் மௌண்ட்பேட்டன் அமைக்கும் ஒரு கமிஷன் அதன் முடிவைச் சில மாதங்களில் (1946ல்) சொல்கிறது. பின்னர் மேற்கு வங்கத்தின் அழுத்தத்தை அடுத்து நேரு ஒரு கமிஷனை அறிவிக்கிறார். கமிஷன் திட்டவட்டமாக சுபாஷ் இறந்துவிட்டார் என முடிவைச் சொல்கிறது. இந்திரா பிரதமரானபோது இன்னுமொரு கமிஷன். அந்த கமிஷனில் தங்கள் கருத்துகளில் பலவற்றை மாற்றியும் முரண்பட்டும் பதிவு செய்கிறார்கள் முந்தைய கமிஷனில் கருத்துச் சொன்னவர்கள். ஆனால் இந்த கமிஷனும் சுபாஷ் இறந்ததை உறுதி செய்கிறது. வாஜ்பாய் காலத்தில் இன்னுமொரு கமிஷன்! இந்த கமிஷனும் சுபாஷ் இறந்ததை உறுதி செய்தாலும் டோக்கியோவில் புத்தக் கோவிலில் உள்ளது அவரது அஸ்திதானா என்பதை உறுதி செய்யமுடியாது என்றும் சொல்கிறது. இவற்றையெல்லாம் மிகச் சரியாகவும் துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இந்நூலைப் படியுங்கள்.

நூலின் முதல் சில பக்கங்களில் சுபாஷின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. சுபாஷின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை மிக அழகாக விவரிக்கிறார் ரமணன். இந்த வரலாற்றைப் பதிவது இந்தப் புத்தகத்தின் மூல நோக்கம் அல்ல என்றாலும், இதை வாசித்துவிட்டு, சுபாஷின் மரணத்தில் உள்ள மர்மக் கதைகளை வாசிக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது உண்மைதான். இந்நூலில் ஆங்காங்கே சொல்லப்படும் சிறிய நுணுக்கமான விவரங்கள் மிக முக்கியமானவை. உதாரணமாக, ப்ளாக் ஹோல் ட்ராஜடி. இந்திய வரலாற்றில் நாம் மறந்து போனவை எத்தனை எத்தனையோ என்கிற எண்ணத்தைக் கொண்டு வந்தது இந்தக் குறிப்பு. இன்னொரு குறிப்பு, நம் தேசிய கீதமான ஜனகனமன முதன்முதலில் இசையாக இசைக்கப்பட்டது சுபாஷின் முயற்சியால்தான் என்கிற குறிப்பு. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜனகனமன பியானோ இசையில் ஒலிக்கப்படுகிறது.

ஹிட்லரின் உதவிக்காக சுபாஷ் காத்திருப்பதும் ஹிட்லர் தன்னைப் பயன்படுத்தப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் சுபாஷ் மனம் நொந்து போவதுமான அத்தியாயம் சுபாஷின் தொடக்ககால அரசியலையும் அதன்வழியே அவரது அசைக்கமுடியாத நாட்டுப்பற்றையும் பறைசாற்றுகிறது. ஸ்டாலின், ஹிட்லர் எனத் தொடர்ச்சியாக ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார் சுபாஷ். எப்படி எப்படியோ திட்டங்கள் தீட்டுகிறார். அத்தனையும் ஹிட்லர் அரசால் மறுக்கப்படுகின்றன. ஹிட்லர் மெயின் காம்ஃபில் இந்தியா பற்றிய எழுதி இருக்கும் குறிப்பில் திருத்தம் கேட்கிறார். அதுவும் ஹிட்லரால் மறுக்கப்படுகிறது. பின்பு ரஷ்யாவுக்குச் செல்ல உதவி கேட்கிறார். ஏன் ரஷ்யாவுக்கு என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை. அது அப்படித்தான் என்பதே வரலாற்றில் பதில்.

மாறுவேடத்தில் சுபாஷ் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் காட்சிகள் இன்றளவும் ஆச்சரியத்தை வரவழைக்கக்கூடியவை. காங்கிரஸ் தலைவராக சுபாஷ் வென்றதும், காந்தியுடனான கருத்து வேறுபாட்டால் அவர் ராஜினாமா செய்வதும், அதைத் தொடர்ந்த நீண்ட அரசியல் பயணத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதும் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக, ஜப்பானுக்குச் செல்லும் விமான விபத்தில் சுபாஷ் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறார். பின்னர் கதைகள், கற்பிதங்கள், யூகங்கள், கமிஷன்கள்.

சுபாஷைப் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடச் சொல்லி நடந்த நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அண்மையில் (2016) அவற்றுள் சில வெளியிடப்பட்டன. அதில் உள்ள தகவல்கள் தரும் பின்னணி என்ன என்பதை ஆராய்வதே இந்த நூலின் முக்கிய நோக்கம். அதிலுள்ள தகவல்களைப் படிக்கும்போது சுபாஷின் மரணம் குறித்த முடிவுகள் இன்னும் அதிகக் குழப்பத்துக்குள்ளாகின்றனவே தவிர எவ்வித வெளிச்சமும் கிடைக்கவில்லை என்பதுவே உண்மை.

தற்போது வெளியான ஆவணங்களில் முக்கியமான செய்திகள் என்று ஆசிரியர் ரமணன் ஐந்து குறிப்புகளைச் சொல்கிறார். அவற்றைத் தொகுத்து, 1968 வரை நேதாஜியின் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்று சொல்லலாம். சுபாஷ் இறந்ததை அறிவித்த நேருவின் அரசு ஏன் கண்காணிக்கவேண்டும் என்று தொடங்குகிறது ஐயம். அப்படியென்றால் எங்கோ உள்ளூர நேருவுக்கு சுபாஷ் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்ததா என்கிற கேள்வி எழுகிறது.

சுபாஷின் நிதியும் தங்கமும் என்னவாயின என்பது குறித்தும் கதைகள் உலவுகின்றன. ‘ஷா நாவாஸின் அறிக்கை சொன்னதும் சொல்லாததும்’ என்கிற முக்கியமான அத்தியாயத்தில் இவை விவரிக்கப்படுகின்றன. சுபாஷின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் கமிஷனால் கடைசி வரை அவர் இறந்த இடத்துக்குச் (தைவான் அல்லது ஃபர்மோஸா தீவு) சென்று ஆராயமுடியவில்லை. ஒவ்வொரு அரசும் (பாஜக உட்பட) இதைச் செய்யமுடியாது என்று அறிவிக்கிறது. அதேபோல் ரஷ்யாவின் ஆவணங்கிடங்குக்குச் செல்லவே முடிவதில்லை. ஷா நாவாஸின் கமிட்டியில் ஒருவரான சுபாஷின் சகோதரர் சுரேஷ் போஸ் இந்த கமிட்டியின் அறிக்கையை ஏற்காமல் தன் கருத்துகளைத் தனியே வெளியிடுகிறார். மீண்டும் தொடங்குகின்றன குழப்பங்களும் யூகங்களும்.

போர்க்கைதியாக சுபாஷ் அறிவிக்கப்பட்டிருப்பதால்தான் அவர் உயிருடன் இருந்தும் தன்னை அறிவித்துக்கொண்டு வெளிவரத் தயங்குகிறார் என்றொரு தியரி. இதை நானும் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு ஒப்பந்தம் தனக்குத் தெரிந்து இல்லை என்றும் அப்படி ஒருவேளை இருந்தாலும் அது இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்றும் இதை சுபாஷ் ஒருவேளை உயிருடன் இருந்தால் அவரிடம் தெரிவிக்கலாம் என்ற ரீதியிலும் நேரு அறிவிக்கிறார். சுபாஷ் மரணம் குறித்து அமைக்கப்பட்ட கமிஷன்களுக்கே இதுதொடர்பான தெளிவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். மிகச் சமீபத்தில்தான் (2002) சுபாஷின் பெயர் போர்க்கைதிகள் பட்டியலில் இல்லை என்றும் அதற்கான காரணங்கள் என்ன என்றும் வெளியாகிறது.

1961ல், ஸ்வாமி சாரதானந்த் தான் சுபாஷ் என்கிற புரளி எழுகிறது. ஒரு கட்டத்தில் ஆசிரமமே தங்களுக்கும் சுபாஷுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறது. நேரு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதை விசாரிக்கும் எம்பி ஒருவர், இவருக்கும் சுபாஷும் தொடர்பில்லை என்று நேருவிடம் சொல்கிறார்.  மீண்டும் கமிஷன் அமைக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. வேறு வழியின்றி ஒருநபர் கமிஷன் அறிவிக்கப்படுகிறது. கோஸ்லா கமிஷன். கோஸ்கா கமிஷனில் சாட்சியங்கள் அடிக்கும் பல்டிகள், முன்பின் முரணான தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன. இந்நூலின் மிக முக்கியமான அத்தியாயம் இதுவே. அதில் ஒரு சாட்சி (ஷைபுயா) சொல்வது: “நான் இப்போது சொல்வதிலும் முன்பு சொன்னதிலும் ஏதாவது மாற்றங்கள் இருந்தால், முன்பு சொன்னதையே எடுத்துக்கொள்ளுங்கள்.”

சுபாஷ் மரணக் கதைகளின் உச்சம் அடுத்து 1988ல் துவங்குகிறது, கும்நாமி பாபாவின் (பெயரற்ற பாபா) வருகையுடன். இந்நூலின் ஆசிரியருக்கே இவர்தான் சுபாஷாக இருக்குமோ என்கிற சந்தேகம் உண்டோ என்கிற ஐயம் வாசிப்பவருக்கு ஏற்படும் வண்ணம் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. படிக்கும் எனக்கும் அந்த சந்தேகம் வந்தது. அந்த அளவுக்குப் பல கதைகள். நிராகரிக்கமுடியாத கதைகள். சுபாஷின் உறவினர்களில் சிலர் இந்த பாபாதான் சுபாஷ் என்று நம்பி இருக்கிறார்கள். இவர் இறந்தபோது இவரிடம் இருந்த ஆவணங்களில் சிலவும் பயன்படுத்திய பொருள்களுள் சிலவும் சுபாஷினுடையவை என்று நம்பி இருக்கிறார்கள்.

அடுத்த சுற்றுக் கதைகள், சுபாஷுக்கு பாரத் ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டபோது (1990) தொடங்குகின்றன. இறந்ததற்குப் பிறகு வழங்கப்படும் விருது என்று அரசு அறிவிக்க, அதை எதிர்த்துப் போராட்டங்கள், கேள்விகள். அரசு (1997) பின்வாங்குகிறது. டோக்கியோவில் ரெங்கோஜி கோவிலில் இருக்கும் அஸ்திக் கலயத்தை இந்தியா கொண்டு வர ஐக்கிய முன்னணி அரசு முயற்சிக்க, அவர் இறந்ததே உறுதியாகாத நிலையில் எப்படி அஸ்தியைக் கொண்டு வரலாம் என்கிற ரிட் மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வரும் தீர்ப்பைத் (1998) தொடர்ந்து இன்னுமொரு விசாரணை கமிஷன். ‘அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடிக்க, ஏற்கெனவே போடப்பட்ட கமிஷன்கள் மரணம் என்று உறுதி செய்த விஷயத்தை ஆராய மீண்டும் ஒரு கமிஷன்” என்று எழுதுகிறார் ரமணன். இந்த முகர்ஜி கமிஷன் பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறது. இந்த கமிஷனில் கர்னல் லக்ஷ்மியின் முன்பின் முரணான பதிவுகள் இன்னுமொரு குழப்பம். முகர்ஜி கமிஷனின் அறிக்கை, சந்தேகங்களை சந்தேகங்களாகவே விட்டிருக்கிறது. இப்படி விடுவதற்காகவா இத்தனை செலவழித்து ஒரு கமிஷன் என்று நாடாளுமன்றத்தில் அமளி.

இந்நூலின் கடைசி அத்தியாயம் பாஜகவைக் குறை சொல்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக கால்பதிக்கவே இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது என்ற தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. சுபாஷின் உறவினர்களை தன் அரசியலுக்கு மோடி பயன்படுத்திக்கொண்டுவிட்டார் என்கிறது இந்த அத்தியாயம். ரகசிய ஆவணங்களை மோடி அரசு வெளியிடத் தயங்கக் காரணம் என்ன என்று பட்டியலிடுகிறார் ஆசிரியர். ஆனால் மோடி அரசு ஆவணங்களை வெளியிட்டுவிட்டது. இந்த அத்தியாயம் முன்பே எழுதப்பட்டு, மோடி அரசு ஆவணங்களை வெளியிட்ட பின்பு திருத்திச் சேர்க்கப்பட்டது போன்று வாசகனான எனக்குத் தோன்றியது.

இறுதியாக – மிகச் சொற்பமாக வரும், சுபாஷின் மனைவி எமிலியைக் குறித்த வரிகள் கண்களில் நீரை வரவழைத்துவிட்டன. அவர், சுபாஷின் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் உள்ளவையாக இந்நூலில் சொல்லப்பட்டிருப்பதைப் படித்தபோது கண்களில் நீர் திரையிட்டது. தன் சிறு குழந்தை அனிதா நடக்கத் துவங்கியது, பள்ளிக்குப் போனது எனச் சிலவற்றை எமிலி கடிதத்தில் எழுதி இருக்கிறார். நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்படிப் போற்றினாலும் தகும்.

Posted on Leave a comment

அவர்கள் அப்படித்தான் – ஹரன் பிரசன்னா


அப்பட்டமான வணிகத் திரைப்படங்கள் தரும் கலைச்
சீரழிவை விட நாம் அதிகம் பயம்கொள்ளவேண்டியது, விருதுத் திரைப்படங்கள் அல்லது மாற்றுத்
திரைப்பட முயற்சிகள் என்ற போர்வையில் வரும் முதிராத் திரைப்படங்களையே. தமிழில் இதுபோன்ற
முயற்சிகள் முற்போக்கு வேடம்தாங்கி வருவதை நாம் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். குற்றம்
கடிதல் போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாக சமீபத்தில் வந்த திரைப்படம் ‘கடுகு.’ கடுகுதானே
என்று தள்ளிவிட்டுப் போய்விடமுடியாது.
புலிவேஷம் போட்டு ஆடும் கலைஞன் ஒருவனைச் சுற்றி
எடுக்கப்பட்டிருக்கும் கதை. புலிவேஷம் போடும் கலை பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவனுக்குள்
இருக்கும் மனிதத் தன்மையை மட்டுமே மையமாகக் கொண்டு மற்ற வலையைச் சுற்றி இருக்கிறார்கள்.
ஒரு முற்போக்குத் திரைப்படத்துக்கு வேண்டிய அத்தனை பின்னணிகளும் கச்சிதமாக வைக்கப்பட்டிருக்கிறன.
கதாநாயகி சிறுவயதிலேயே பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவள். இன்னொரு சிறுமி அமைச்சர் ஒருவரால்
பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறாள். சிறுமியைக் காப்பாற்றச் செல்லும் கதாநாயகி
வன்புணர்வு செய்யப்படுகிறாள். சிறுமி தற்கொலை செய்துகொள்கிறாள். இப்படிச் செல்லும்
கதையில் அரசியலுக்காக எம்.எல்.ஏ ஆசைக்காக தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும்
காணாமல் இருப்பதோடு, ஒரு கட்டத்தில் அதற்காக உதவவும் செய்யும் பாத்திரமும் உண்டு. இவற்றை
எல்லாம் மனிதத் தன்மையோடும் தன் இயலாமையோடும் எதிர்க்கிறார் கதாநாயகன்.
இப்படத்தில் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் உண்டு.
சிறுமியை வல்லுறவு செய்ய முற்படும் காட்சி பதட்டம் கொள்ள வைக்கிறது. ஆனால் கதாநாயகனாக
வரும் ராஜகுமாரன் வெளந்தியாக நடிப்பதாக நினைத்துக்கொண்டு நடித்து நம்மை வன்கொலை செய்கிறார்.
தனியாளாகப் படத்தைச் சிதைக்கிறார். இறுதிக்காட்சிகள் ஒரு வணிகப்படத்துக்குரிய கதாநாயக
பிம்பத்தைத் தூக்கிப் பிடித்து அதுவரை இருந்த போலி யதார்த்தத்தையும் துறக்கின்றன. ஒரே
காட்சியில் தன் தவறை உணரும் நடிகர் பரத், அமைச்சரை ஒரே நொடியில் கொலையும் செய்கிறார்.
இப்படித்தான் இருக்கின்றன நம் மாற்று முயற்சிகள். தங்களுக்குள்ளே ஊறிக் கிடக்கும் வணிகத்
திரைப்பட ஆசையை முற்றிலுமாக மறக்கவும்முடியாமல், காதலித்த பெண்ணை நினைத்துக்கொண்டே
மனைவியுடன் காலம்தள்ளும் வகையில் இவர்கள் படம் எடுக்கிறார்கள்.
ஆனால், இந்த மாற்று முயற்சிகளில் இவர்கள் சிலவற்றை
மட்டும் மறப்பதே இல்லை. ஹிந்து மதத்தைப் பற்றிய விமர்சனங்களும், மற்ற மதங்களை மெல்ல
பின்னணியில் தூக்கிப் பிடிக்கும் முயற்சிகளுமே அவை. ‘கடுகு’ திரைப்படத்தில் குழந்தைகள்
வேடமிட்டுக் கேள்விகள் கேட்கின்றன. மூன்று மதச்சின்னங்கள் அணிந்த குழந்தைகள் அக்கேள்விகளை
எதிர்கொள்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லா மதங்களின் மீதும் கேள்விகள் வைக்கப்படுகின்றன
என்ற போர்வையில் இயக்குநர் விஜய் மில்டன் ஒரு குழந்தை பாத்திரம் மூலம் மிகத் தெளிவாக
ஒரு கேள்வியைக் கேட்கிறார். “எல்லா இடத்துலயும் சாமி இருக்குன்னா கோவில் எதற்கு? அதுலயும்
இன்னொரு கோவிலை இடிச்சுட்டு அங்க கோவில் எதுக்கு?” என்பதுதான் கேள்வி. அதாவது இத்தனை
தூரம் நாடே விவாதித்த, உச்சநீதிமன்றம் வரை சென்று முதலில் அங்கே கோவில் இருந்ததற்கான
ஆதாரங்களை அகழ்வாராய்ச்சி நிரூபித்துள்ளது என்பது போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்களையெல்லாம்
ஒதுக்கி, ஒரே கேள்வியில் ஒரு பொதுப்புத்தியைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் விஜய் மில்டன்.
இப்படித்தான் பொதுப்புத்தியைப் பயன்படுத்திக்கொள்வதும், பொதுப்புத்தியை உருவாக்குவதும்.
இந்நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி, கிறித்துவப் பள்ளி.
அதாவது, தமிழ்த் திரைப்படங்களின் முற்போக்காளர்கள்
தங்கள் திரைப்படங்களில், கிறித்துவர்களுக்கும் அன்புக்கும் சேவைக்கும் இடையே ஒரு பாலத்தையும்
பொதுப்புத்தியையும் தொடர்ச்சியாக உருவாக்கி வருவதை நாம் பார்க்கலாம். நம்மையுமறியாமல்
நமக்குள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் கருத்து இது. கமல் போன்ற நடிகர்கள் ஹிந்து என்றால்
அவனைக் கெட்டவனாகக் காண்பிப்பதையும், கிறித்துவர் என்றால் அவர் சேவையாளர் என்றும் காட்டுவதைப்
பார்த்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படி காட்சி வருகிறது. சேவை மனப்பான்மை கொண்ட
ஆசிரியை கிறித்துவ பள்ளியில் வேலை செய்கிறார். அது என்ன பள்ளி? எப்படி இப்படி கலைகளுக்கெல்லாம்
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அப்படி ஒரு பள்ளி எங்கே உள்ளது? தனியார் பள்ளியா?
அரசுப் பள்ளியா? தனியார் பள்ளி என்றால் யார் நடத்துகிறார்கள்? கருணையே வடிவான அப்பள்ளிக்கு
வருவாய் என்ன? அப்பள்ளியின் நோக்கம்தான் என்ன? இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? வழக்கத்திலிருந்து
மாறிச் செயல்படும் ஒரு பள்ளி கிறித்துவப் பள்ளியாக இருப்பது முற்போக்குக்கு எத்தனை
வசதி.
சிறுமி தற்கொலை செய்துகொள்ளும் காட்சி மிக முக்கியமானது.
என்ன செய்தும் சிறுமியின் அகமனபாதிப்பு போகாததால், அச்சிறுமியின் தாய் (முதல் தேர்வு
தர்காதான், தர்காவில் தண்ணீர் தெளித்தும் குணமாகாததால் என்று புரிந்துகொள்ள ஏதுவாக
ஒரு வசனம் வருகிறது) கருப்பசாமி கோவிலுக்குக் கூட்டிச் செல்கிறார். கோவிலின் பூசாரி,
“என்கிட்ட வந்துட்டேல்ல, எல்லாம் சரியாகிடும்” என்று சொல்லி, பரிகாரம் சொல்கிறார்.
கோவில் குளத்தில் மூன்று முறை முங்கினால் சரியாகும் என்கிறார். இரண்டாம் முறை முங்கும்போதே
தற்கொலை செய்துகொள்கிறாள் சிறுமி. அக்காட்சியின் இறுதிச் சட்டகம் ஒரு தேவாலயத்தின்
சிலுவையில் உறைகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஹிந்துக்கடவுகள் கைவிட்டதை கிறித்துவம்
பார்த்துக்கொண்டுள்ளது என்றா? தர்காவில் குணமாகவில்லை என்றாலும் சாகாத சிறுமி, கோவிலின்
பரிகாரத்தில் செத்துப் போக முடிவெடுக்கிறாள் என்றா? எல்லா மதங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
சிறுமி செத்துப் போகிறாள் என்றா? இயக்குநரின் புத்திசாலித்தனமான பதிலும், முற்போக்கு
ஆதரவாளர்களின் சாக்கும் இந்த பதிலாகத்தான் இருக்கும். ஆனால் எப்படி எல்லா மதங்களும்
பார்க்கும்போது சாகும் ஒரு சிறுமியின் சாவுக்காட்சி இந்து மத நேர்ச்சையின்போது மட்டும்
சரியாக நிகழ்கிறது? அதற்கு முன்பு எத்தனையோ காட்சிகளில் அச்சிறுமி தற்கொலை செய்து கொள்ளாதது
ஏன்? இங்கேதான் உள்ளது பொதுப்புத்தியை உருவாக்கும் சாமர்த்தியம்.
‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தில் புரோகித பிராமணரைத்
திட்டும் கம்யூனிஸ முற்போக்குவாதி, கிறித்துவ வீட்டில் சேவையைக் கண்டதும் மனம் சாந்தம்
கொண்டு அமைதியாகப் பேசுவதும், கர்த்தர் பார்வைக்குத் தெரிவதைவிட சமீபிக்கிறார் என்று
பைக் கண்ணாடியில் கவிதைத்துவமாகக் காட்டுவதும் சும்மா இல்லை. எல்லாவற்றிலும் ஒரு தெளிவான
கணக்கு உள்ளது. செல்லுபடியாகும் கணக்கு.
இந்து மதம் தன்னைத்தானே எப்போதும் விமர்சித்துக்கொண்டும்
புதுப்பித்துக்கொண்டும் உள்ளது. எனவே முற்போக்குப் போர்வையில் உள்நோக்கத்தோடு செய்யப்படும்
விமர்சனங்களில்கூட உண்மை இருக்குமானால் அதை ஹிந்து மதம் ஏற்றுக்கொண்டு, அதையும் கடந்து
செல்லும் என்பதை நாம் வரலாற்றில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஒருவகையில் இவ்விமர்சனங்கள்கூட
ஹிந்து மதத்துக்கு வளம் சேர்ப்பவையே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஹிந்துக்களுக்கு
உண்டு. இப்பக்குவம் இல்லாத மதங்களை நோக்கிப் பேசுவதே உண்மையான முற்போக்கு எண்ணத்தின்
முதன்மையான பணியாக இருக்கவேண்டும். நோக்கம் உண்மையான முற்போக்கு எண்ணம் இல்லை என்றால்,
இப்படி எளிமையான இலக்காக இந்து மதத்தை மட்டுமே குறை சொல்லத் தோன்றும். ஏனென்றால் ஹிந்து
மதத்தைப் பற்றிக் குறை பேசுவதுதான் பாதுகாப்பானது. இதை மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்
போலி முற்போக்காளர்கள்.
அனைத்து முற்போக்காளர்களும் தங்களுக்கு நேரம்
போகாத போதெல்லாம் கொண்டாடும் திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில்
வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கும். நான் பார்க்கும் பிரதியில்தான் கோளாறோ என்ற சந்தேகம்
வந்து நண்பர்களைக் கேட்டேன். படத்திலேயே அப்படித்தான் என்றார்கள். பர்தா போட்டுக்கொண்டு
ஒரு முஸ்லிம் பெண் பேசும் காட்சி அது. படத்தில் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு விமர்சித்த
உயர்தர முற்போக்காளர் இயக்குநர் ருத்ரய்யா எப்படி இதை மட்டும் ம்யூட் செய்தார்? தோன்றும்போதெல்லாம்
விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் ஒருவராவது இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்களா என்று
தேடினேன். யாரும் மூச்சே விடவில்லை. இஸ்லாம் பெண்ணின் கருத்தை அப்படியே வெளியிடுவது
அத்தனை புத்திசாலித்தனமல்ல என்று முற்போக்கு இயக்குநருக்குப் புரிந்திருக்கிறது. என்ன
வேண்டுமானாலும் சொல்லிவிட்டு தைரியமாக எதிர்த்து நிற்க ஹிந்துக்கள்தான் வசதி. ருத்ரய்யா
ஏன் இப்படிச் செய்தார் என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் விளக்கம் கொடுத்தார்.
பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களின் குரல் நசுக்கப்பட்டிருப்பதை சிம்பாலிக்காகக் காட்ட
முயன்றாராம் ருத்ரய்யா. சொன்னவர் பொய் சொல்பவரில்லை. எனவே அவருக்காக இதை ஏற்றுக்கொண்டாலும்
சில கேள்விகள் மிச்சமிருக்கின்றன. இப்படி சிம்பாலிக்காகக் காட்டவே தான் அந்தக் காட்சியில்
குரலில்லாமல் வைத்ததாக ருத்ரய்யா எங்காவது பதிவு செய்திருக்கிறாரா? இல்லை! அந்தப் படம்
எப்படி எடுக்கப்பட்டது, என்ன என்ன கஷ்டங்கள் எதிர்கொள்ள நேர்ந்தது, சாப்பாடு போடக்
கூட காசில்லாமல் எப்படி கஷ்டப்பட்டுக் கலையைக் காப்பாற்றினோம் என சகலத்தையும் பதிவு
செய்த அத்திரைப்படக் குழுவினருக்கு இதை மட்டும் பதிவு செய்ய இன்றுவரை நேரம் கிடைக்கவில்லை.
படம் வந்து நாற்பது வருடங்கள்தான் ஆகிறது, இன்னும் நேரம் கிடைத்த பாடில்லை. என்ன சொல்ல? 
அவர்கள் அப்படித்தான்.
********* 
Posted on 1 Comment

பிக் பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை – ஹரன் பிரசன்னா

ஹிந்தியில் மிகப் பிரபலமான பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி ஸ்டார்விஜய் தொலைக்காட்சி மூலம் கமல்ஹாசனின் ஆதரவுடன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது. அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் இருப்பதே நாகரிகம். ஆனால் அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஓர் ஆர்வம் எப்போதும் நமக்குள் இருக்கிறது. ஒருவர் இன்னொருவரைப் பற்றி என்ன நினைக்கிறார், என்ன பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளும் குறுகுறுப்பு மோசமானது என்றாலும் மிக இயல்பானது. இத்தகைய வம்பு புரளிகளில் இருந்து ஒதுங்கி நிற்க நினைப்பதுவே வளர்ச்சி. நமக்குள் இருக்கும் இந்தக் குறுகுறுப்பை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சியே பிக்பாஸ்.

வட இந்தியாவில் ஹிந்தியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பட்டபோது நட்சத்திர அந்தஸ்தில் இருந்த சல்மான்கான், அமிதாப் போன்ற பெரிய நடிகர்கள் பங்கேற்றார்கள். தமிழில் இதற்கு ஏற்ற நபர் கமல்ஹாசன் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்து அவரை ஒப்புக்கொள்ளச் செய்வதில் வெற்றியும் பெற்றிருக்கிறது ஸ்டார்விஜய் தொலைக்காட்சி. கமல் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டதன் மூலம் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கூடும். எப்போதும் முதலித்தில் இருக்கும் சன் தொலைக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வரவும் கூடும். பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேரும். இதெல்லாம் ஸ்டார்விஜய் தொலைக்காட்சியின் வெற்றி என்று வைத்துக்கொண்டால், இதற்கு இணையான அளவுக்கு கமல்ஹாசனின் வீழ்ச்சி இருக்கும். கமல்ஹாசனுக்குப் பணம் கிடைக்கும் என்பதோடு, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் வரை கமல்ஹாசன் தொடர்ந்து விவாதத்தில் இருப்பார் என்பதெல்லாம் உண்மையே. ஆனால் நட்சத்திர அந்தஸ்து உள்ள கமல்ஹாசன் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், முன்பு இருந்த அதே பார்வையில் மக்களால் பார்க்கப்படமாட்டார். வட இந்தியாவில் அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்ற நடிகர்களுக்கு இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை என்று இதற்கு பதிலாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மாறி நிகழும் என்றே நான் நினைக்கிறேன். தொலைக்காட்சிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு நடிகர் வருவது அவரது வீழ்ச்சி என்றே இங்கே பொருள்கொள்ளப்படுகிறது. இது உண்மையல்ல என்பதெல்லாம் விவாதத்துக்குரியது என்பதுதான் என்றாலும், இதுதான் இன்றைய நிலையில் யதார்த்தமாக உள்ளது.

 இந்நிகழ்ச்சியின் அடிப்படை, அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் துடிக்கும் மனப்பான்மைதான். அதிலும் அடுத்த வீடு ஒரு நடிகையின் வீடென்றால் நமது முழுக்கவனமும் அந்த வீட்டின் மேல்தான் இருக்கும். ஒரு நடிகையின் கதை என்ற ஒரு தொடர் வந்தபோது தமிழகமே அந்த நடிகையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி விவாதித்தது. அந்த நடிகை யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு நடிகையைச் சொன்னார்கள். இன்னொருவரின் அந்தரங்கம் நமக்கெதற்கு என்ற வெட்கம் கிஞ்சித்தும் யாருக்கும் இல்லை. நடிகை என்றாலே ஒரு பொதுப்பொருள் என்கிற மனப்பான்மையே இதில் ஆதாரமாக வெளிப்படுகிறது. தன் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்பதை அடிக்கடி ஜபிக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டிருப்பதுதான் சுவாரஸ்யமான முரண். இதனாலேயே இந்த நிகழ்ச்சி தொடர்பாகப் பல்வேறு சாதகமான கருத்துக்களைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரும் சளைக்காமல் புதியதாக எதோ ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கமல் சொல்லும் முக்கியக் காரணம், இந்நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் அத்தனை பேரும் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது. அதாவது அவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கிறோம் என்று சொல்கிறார். மிக சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கமல் இதனையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அடுத்தவர் பணத்துக்காகவும் புகழுக்காகவும் கையெழுத்துப் போட்டு ஒப்புக்கொண்டாலும், அடுத்தவர் வீட்டுப் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கக்கூடாது என்பதே மேன்மையான நிலைப்பாடு. இதை உரக்கச் சொல்லவேண்டிய கமல், தான் இதில் பங்கெடுப்பதாலேயே, இதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் திரைக்கதை எதுவும் இல்லை என்று கமல் மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயல்கிறார். முப்பது கேமராக்களுடன் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதையும், நூறு நாள்கள் வெளியுலகத் தொடர்பே இல்லை என்பதை எல்லாம் நம்ப வெள்ளந்தி மனது வேண்டும். அப்படி ஒருவேளை மிக நியாயமாக நேர்மையாக இவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அங்கே அவர்கள் பேசுவது எல்லாமே அவர்களாகவே பேசுவது மட்டுமே என்று நம்ப தனியாக இன்னொரு வெள்ளந்தி மனம் வேண்டும். கமல் இருப்பதால் இதில் திரைக்கதை இருக்க வாய்ப்பில்லை என்று சில அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். இவர்களைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. இதில் நடக்கும் ஒவ்வொரு நடிகரின் வசனமும் எழுதப்பட்டுக் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும், யார் எப்படிப் பேசவேண்டும் என்பதில் தெளிவான திரைக்கதை ஒன்று உள்ளது. அதைச் சொல்லிவிட்டால், அதற்குப் பின்பு அந்த நடிகர் தனக்கான திரைக்கதையைத் தானே எழுதிக்கொண்டுவிடுவார். இப்படித்தான் இந்நிகழ்ச்சி நடைபெற முடியும். இந்நிகழ்ச்சி தொடர்பாக கமல் அளித்த பேட்டியில், ‘ஒருவேளை நான் இதற்குத் திரைக்கதை வசனம் எழுதி இருந்தால்’ என்று சொல்கிறார். இப்படிச் சொன்னதன்மூலம் யாரோ ஒருவர் இந்நிகழ்ச்சிக்குத் திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் என்பதை தன்னை அறியாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் பொதுத்தன்மை இப்படி இருக்கிறது. திடீரென்று எதோ ஒரு பிரபலம் பிக் பாஸ் வீட்டில் இன்னொரு பிரபலத்தின் மீது கோபம் கொண்டு என்னவோ சொல்கிறார். இக்காட்சி இத்துடன் முடிவடைகிறது. சில பிரபலங்கள் சேர்ந்து, கோபப்பட்ட பிரபலத்தைப் பற்றித் தவறாகப் பேசிக்கொள்வார்கள். இக்காட்சிக்குப் பின்னர், இன்னொரு இடத்தில், இன்னும் சில பிரபலங்கள் சேர்ந்து கோபப்பட்ட பிரபலம் செய்தது சரிதான் என்று பேசிக்கொள்வார்கள். இப்படியே மாறி மாறி இன்னொருவரைப் பற்றிக் குறை சொல்லிப் புரளி பேசுவார்கள். இதே சண்டையை நான்கைந்து நாள் போடுவார்கள். பின்பு மன்னிப்பு கேட்கும் படலம் ஆரம்பிக்கும். இந்த மன்னிப்பையும் குறை சொல்லி ஒரு கும்பலும், பாராட்டி ஒரு கும்பலும் பேசும். இது நடந்துகொண்டிருக்கும்போதே ஒவ்வொரு பிரபலமும் தன்னைப் பற்றி, தன் நேர்மையைப் பற்றி ஓயாமல் பேசிக்கொள்வார்கள். நடிகைகள் வீட்டில் இருப்பது போல மிக யதார்த்தமாக இருப்பது போன்ற பாவனையுடன் குட்டைப் பாவாடையில் கவர்ச்சி உடையில் வருவார்கள். ஆட்டம் போடுவார்கள். ஒரு நடிகை இன்னொரு நடிகரிடம் காதல் வயப்படுவார். அந்த நடிகர் இந்தக் காதலைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு நடிகையிடம் ஆசை ஆசையாகப் பேசுவார். அடுத்த காட்சியில் தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன நடிகையைப் பற்றிப் புறம் பேசுவார். மனித மனங்களுக்கு உள்ளே கிடக்கும் பொறாமை, கோபம், நம்பிக்கை இன்மை என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்துக் காட்சிகளும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதையே கமல்ஹாசன் சமூகத்துக்குத் தேவையான நிகழ்ச்சி என்கிறார்.

உண்மையில் ஒரு நெடுந்தொடரால் என்ன என்ன மோசமான விளைவுகள் உண்டாகும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த அத்தனை மோசமான நிகழ்வுகளும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியால் கூடுதலாக உண்டாகும். புறம் பேசுதல் நம் அடிப்படை உரிமை என்ற எண்ணம் நம் ஆழ்மனதுக்குள் விதைக்கப்படும். இருக்கும் கொஞ்சநஞ்ச குற்ற உணர்வும் மழுங்கடிக்கப்படும். இந்த நிகழ்ச்சியையே கமல்ஹாசன் தன் நட்சத்திர அந்தஸ்த்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். கமல் இல்லையென்றால் வேறொருவர் அறிமுகம் செய்து வைத்திருப்பார் என்பதும் உண்மையே. அதேசமயம் இதை இன்று தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது கமல்தான் என்பதும் உண்மையே. இந்நிகழ்ச்சியால் நம் ஆழ்மன அழுக்குகள் களையும் என்று நம்பும் அப்பாவிகளே தொடர்ந்து இந்நிகழ்ச்சியைப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்னுமொரு பொழுதுபோக்கு என்று கடப்பவர்களே, இதைச் சரியாகக் கணித்தவர்கள். மாறாக இது சமூகத்துக்கு நல்ல பலன் தரும் நிகழ்ச்சி என்று கொடி பிடிப்பவர்கள் ஏமாளிகள்.

கமல்ஹாசன் இதை நடத்துகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சப்பைக்கட்டு கட்டி இந்த நிகழ்ச்சியில் உள்ள நல்லவற்றையெல்லாம் பட்டியலிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள். பிக்பாஸ் நான் பார்ப்பதில்லை என்று யாராவது சொன்னால் அது போலித்தனமான அறிவுஜீவி பாவனை என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மையில் கமல்ஹாசன் இருப்பதால் இந்நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும் என்று நம்புவதுதான் போலித்தனமான அறிவுஜீவி பாவனை என்பதை இவர்கள் உணர்ந்தார்களில்லை.

இது தொடர்பான பத்திரிகை சந்திப்பில் கமல் இந்நிகழ்ச்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகிறார். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. அதில் உள்ள தேசபக்தி தொடர்பான விவாதங்கள் எல்லாம் நிச்சயம் நாம் பொருட்படுத்த வேண்டியவையே. ஆனால் கிரிக்கெட் போன்ற ஒரு ஆட்டத்தை தான் நடத்தும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியோடு ஒப்பிடுவது எல்லாம் அபத்தம். பணம் பத்தும் செய்யும் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை.

இந்நிகழ்ச்சியை சமூக அந்தஸ்துள்ள நிகழ்ச்சியாக்க கமல் எடுத்த அடவுகளில் முக்கியமானதும் அராஜகமானதும் எதுவென்றால், ‘இந்நிகழ்ச்சி கூட்டுக் குடும்பம் போன்றது’ என்றதுதான். திருமணம் என்பதே தேவையற்றது என்று தன் வாழ்வில் கடைப்பிடித்த ஒருவர் இன்று இந்நிகழ்ச்சிக்காக கூட்டுக்குடும்ப முறைக்கெல்லாம் வக்காலத்து வாங்குகிறார். கூட்டுக் குடும்பங்களின் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் நமக்குப் புதிதல்ல. இன்றைய காலத்துக்கு எது ஒத்துவருமோ அதை நோக்கி நாம் நம் அனுபவத்தின் மூலம் வந்தடைந்திருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் கொட்டப்படும் உணர்வுகள் எல்லாமே கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவித்த பிரச்சினைகள்தான். அதை மட்டுமே கணக்கில் கொண்டு இந்நிகழ்ச்சியைக் கூட்டுக்குடும்பத்துடன் ஒப்பிடுவதைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே முடியும். இன்னும் சொல்லப்போனால், கூட்டுக் குடும்பத்தை உடைக்கவே இந்நிகழ்ச்சி உதவும். ஒருவேளை கமலின் ஆழ்மனத்தில் இந்த ஆசையும் எதிர்பார்ப்பும்தான் இருக்கின்றனவோ என்னவோ.

கமல் போன்ற ஒரு நடிகர் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்திருப்பது நிச்சயம் வருத்தத்துக்கு உரியதே. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களுக்கு வக்காலத்து வேண்டிய அவலமும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அரைவேக்காட்டுத்தனமான வேடிக்கைகளைத் தாங்கிப் பிடிக்கவேண்டிய கொடுமையும் கமலுக்கு நேர்ந்திருக்கவேண்டாம். அதைவிட முக்கியம், மீண்டும் மீண்டும் புறம் பேசி பொய்யாக நடித்து அதையே நேர்மையாகச் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கூட்டத்தின் அலுப்பூட்டும் திரைக்கதையை இயக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு கமல் மேற்பார்வையாளராக வந்திருப்பது, அவர் இத்தனை நாள் உயர்த்திப் பேசிக்கொண்டிருந்த கலை என்பதற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதது, எதிரானது. கமலுக்குப் பணத்துடன் கிடைத்திருக்கும் இந்த தண்டனையே ஆகப்பெரியது.

Posted on Leave a comment

இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் – ஹரன் பிரசன்னா

இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல்
ஹரன் பிரசன்னா
செப்டம்பர் 29ம் தேதி காலையில் இந்தியா முழுக்க நெருப்புப் பற்றிக்கொண்டது போன்ற ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக அறிவித்ததை ஒட்டி ஊடகங்களும் இந்திய நாட்டின் குடிமக்களும் பெரும் பரபரப்படைந்தார்கள். அறுவை சிகிச்சையின்போது குறிப்பிட்ட இடத்தை மட்டும் துல்லியமாகக் கண்டுபிடித்து அறுத்து சிகிச்சை (சர்ஜரி) செய்து மூடிவிடுவது போல, வேறு எதையும் தொந்தரவு செய்யாமல் எதிரி இலக்கை மட்டும் துல்லியமாகக் கண்டுபிடித்து அழித்தொழிக்கும் இத்தகைய தாக்குதலை ரணசிகிச்சைத் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) என்று அழைக்கிறார்கள்..
இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் இந்திய எல்லையைத் தாண்டி நடைபெற்றது என்று அறிவிக்கப்பட்டதுதான் அனைவரின் உற்சாகத்துக்கும் காரணம். கார்கில்
போரின்போதுகூட இந்தியப் படைகள் எல்.ஓ.சி எனப்படும் எல்லையைத் தாண்டிச் சென்று
தாக்குதல் நடத்தியதில்லை என்று
சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம், இப்படி தாக்குதல் நடத்தியதை இந்திய ராணுவம் வெளிப்படையாக அறிவித்திருக்கவில்லை. இந்த முறை எல்லையைத் தாண்டி இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வரை பாகிஸ்தானின் பகுதிக்குள் ஊடுருவிச் சென்று தீவிரவாதிகளின் லான்ச் பேட் முகாம்களை இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 முதல் 40 வரையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக இருந்தவர்கள். பொதுவாக தீவிரவாத முகாம்கள் என்பன இந்தியாவின் எல்லையில் இருந்து 40 கிமீ தூரத்தில் இருப்பவை. அவை மிகப் பிரத்யேகமான முகாம்கள் அல்ல. சில கூடாரங்கள் அமைக்கப்பட்டு அங்கு தீவிரவாதிகள் கிராம மக்களோடு கலந்திருப்பார்கள். இந்தியாவில் ஊடுருவ வேண்டிய நேரம் வரும்போது, லாஞ்ச் பேட் என்றழைக்கப்படும் முகாம்களில் ஒன்றுகூடி அங்கிருந்து பிரிந்து சென்று இந்தியாவுக்குள் நுழைவார்கள். லாஞ்ச் பேட் என்பது சில சமயங்களில் பாகிஸ்தானின் ராணுவ முகாமாகவும் இருக்கக்கூடும். இத்தகைய லாஞ்ச் பேடுகளை குறிவைத்து இந்த முறை இந்திய ராணுவம் ரகசியமாகத் தாக்கியது. ஆறு முதல் ஏழு லாஞ்ச் பேடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடப்பதற்குப் பத்து நாள்களுக்கு முன்பு செப்டம்பர் 18ம் தேதி, ஊரி தாக்குதல் நிகழ்ந்தது. ஊரி என்பது ஜம்மு
காஷ்மீரில் உள்ள எல்லை நகரம். கடந்த இரு பத்துவருடங்களில் இந்திய எல்லையில்
தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இதற்குத் தகுந்த பதிலடி தரப்படவேண்டும் என்கிற எண்ணம் இந்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இருந்ததில் வியப்பில்லை. பெரும்பாலான இந்தியர்களும் இந்தியாவின் சார்பில் இந்தக் கொடூரமான தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தரப்படவேண்டும் என்றே நினைத்தார்கள்.
இந்த ஊரி தாக்குதலில் குறைந்தது 19 ராணுவ வீரர்களும் ராணுவ உதவியாளர்களும் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முழுக்கப் பதற்றம் நிலவியது. இது இந்தியாவுக்கு நேரடியாகவே விடப்பட்ட சவால் என்று ஊடகங்கள் பேசின. மோதி பிரதமராக இருக்கும்போது நடக்கும் இத்தாக்குதலுக்கு மோதி தகுந்த பதிலடியைத் தருவார் என்ற எண்ணம் பொதுவாக நிலவியது. ஆனால் இது அத்தனை எளிதான விஷயமல்ல.
ஒரு போர் என்று வந்தால் இந்தியாவால் பத்து நாள்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கமுடியும் என்று சிஏஜி அறிக்கை தெரிவித்திருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டினார்கள். இடையில் வாஜ்பேயி அரசு பொறுப்பேற்றிருந்த காலங்கள் தவிர, ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதில் அதிக அக்கறை காட்டவில்லை. ராணுவ வணிகத்தில் தனக்கு வரும் பங்கைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்பட்டிருக்கும் ஓர் அரசாக அது இருந்தது என்று, வெளிப்படையாகத் தன் பெயரைச் சொல்ல விரும்பாத ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி சொன்னார். மோதி பிரதமராகப் பதவியேற்று மூன்று வருடங்களே ஆகியுள்ளது. இந்நிலையில் நம் ராணுவத்தின் பலம் என்ன என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் சி..ஜியின் அறிக்கை மேம்போக்கானது என்றும் இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கும் ஒட்டுமொத்த இந்தியப் படையும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டால் இந்தியாவால் பத்து நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கமுடியும் என்றே அதைப் பொருள் கொள்ளவேண்டும் என்ற சரியான விளக்கம் ராணுவ அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது. சி..ஜியின் அறிக்கை ஒரு தியரி, ஒரு ஊகம் சார்ந்த (hypothetical) வாதம் என்று ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். எப்படி இருந்தாலும் இந்திய அரசு ராணுவத்தின் தேவையை நிறைவேற்றுவதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது என்பதை ஊரி தாக்குதல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.
நேரம் போகாமல் ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு வேலைக்குச் சென்றிருக்கவில்லை. அவர்கள் அங்கே தங்கள் உயிரைப் பணையம் வைத்துப் போராடுவது, இந்தியாவுக்குள் நாம் நம் ஜனநாயக உரிமைகளுடன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழத்தான். தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு அங்கே அவர்கள் செத்துக் கொண்டிருப்பது, நாம் நம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்யத்தான். எனவே இந்த ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும். இதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் துணை நிற்கவேண்டும்.
ஊரி தாக்குதல் நடந்து பத்து நாள்களுக்குப் பிறகு வெளிப்படையான தீவிரவாத அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே இது மிக அவசரமாக இந்திய மக்களைத் திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று சொல்லமுடியாது என்பதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். பத்து நாள்கள் என்பது திட்டம் தீட்டப் போதுமான காலம். மிகக் கவனமாக செயல்திட்டம் தீட்டி, எந்த நேரத்தில் துவங்கி எப்போது முடிக்கவேண்டும் ஆகியவை யெல்லாம் உறுதியாக வடிவமைக்கப்பட்டு, எந்த எந்த வீரர்கள் எதை எதைச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். அதை இம்மி பிசகாமல் செயல்படுத்தி இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள எந்த ஒரு அமைப்பாலும் இந்திய வீரர்கள் ஊடுருவுவதைக் கண்டறியவே முடியவில்லை. தாக்குதல் நடந்து முடிந்து இந்திய ராணுவம் அறிவிக்கும் வரை யாருக்கும் இத்தாக்குதல் பற்றித் தெரியவில்லை. ஊடகங்கள் அதுவரை, ‘ஏன் ஊரி தாக்குதல்களுக்கு மோதி அரசு பதிலடி தரவில்லைஎன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. தங்களுக்குத் தெரியாமலேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததை இந்த ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் ஒருவழியாக சமாளித்துக்கொண்டு சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் இந்திய அரசுக்கு ஆதரவாக நின்றன ஊடகங்கள். பெரும்பாலான கட்சிகளும் இத்தாக்குதலை வரவேற்றன. உண்மையில் அவர்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. அந்த வகையில் அரசியல் ரீதியாக இந்திய அரசின் மிக பாதுகாப்பான காய் நகர்த்தலாக இது அமைந்துவிட்டது.
இந்திய அரசியல் கட்சிகள், இந்திய மக்கள் மற்றும் ஊடகங்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க இந்திய அரசுக்கு ஆதரவாக வரும் செய்திகளைப் பார்த்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மெல்ல கேள்வி எழுப்பத் தொடங்கின. இந்தத் தாக்குதல்
நடந்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. கெஜ்ரிவால் காணொளி
ஆதாரம் வேண்டும் என்று கேட்டார்.
ராணுவத்தின்
நடவடிக்கைகளை
மற்ற சாதாரண மற்றும் பொதுவான நிகழ்வுகளோடு ஒப்பிடுவது அறிவுபூர்வமானதல்ல. ஒரு ராணுவம் தன் ரகசியத்தைக் கடைப்பிடித்தே ஆகவேண்டியது மிக முக்கியம். அந்த வகையில் ராணுவம் என்ன செய்தி மக்களுக்குத் தெரியவேண்டும் என்று நினைக்கிறதோ அதை மட்டுமே வெளியிடும். எப்போதும் எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தேவையான மாதிரி பயன்படுத்திக்கொள்ளும் ஊடகத்தை இந்த முறை இந்திய ராணுவம் தனக்குத் தேவையானது போலப் பயன்படுத்திக்கொண்டது என்பதுதான் உண்மை. இதைப் புரிந்துகொண்ட ஊடகங்கள் செய்வதறியாது திகைத்துப் போயின.
எதையும் ‘போராட்டக்
களத்தில் இருந்து நேரடியாக’ ஒளிபரப்பியே பழக்கப்பட்ட ஊடகங்களுக்கு, இத்தாக்குதலின்
போது தாங்கள் அங்கு இல்லையே என்ற ஏக்கமே பல்வேறு கேள்விகளாக வெளி வந்தது. ஆதாரம்
வேண்டும் என்ற கேள்வி பூதாகரமானபோது இந்திய ராணுவம் காணொளியை
வெளியிட இந்திய அரசுக்கு அனுமதி அளித்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசியல் கட்சிகள், கேள்வி கேட்டது சந்தேகத்தால் அல்ல, தாக்குதலை மறுக்கும் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிப்பதற்காகத்தான் என்று சொல்லி நழுவின.
பாகிஸ்தான் இப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று மறுத்தது. எல்லைப் பகுதியில் எப்போதும் போன்ற சண்டைகளே நடந்தன என்றும் அதில் இரண்டு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்றும் சொன்னது. அதே சமயம் இத்தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தரும் என்று சொல்லவேண்டிய கட்டாயத்திலும் இருந்தது. ஆனால் தாக்குதல் நடந்ததை, எல்லையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் நேரில் பார்த்ததாகவும், வெடிகுண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகளில் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.(1)
இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலர் ஜெர்மனியின் தூதருடன் பேசிய ஆடியோவில் உள்ள தகவல்கள் பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டன. அதில் இந்தியச் செயலர் இப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஜெர்மனியின் இந்தியத் தூதர் அதிகாரபூர்வமாக மறுத்திருக்கிறார். இப்படி ஒரு பேச்சே நடைபெறவில்லை என்றும் இது அடிப்படையற்றது என்றும் அவர் உறுதி செய்திருக்கிறார். இப்படி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் அடிப்படையற்ற அவதூறுகள் உடனுக்குடன் ஆதாரத்துடன் அதிகாரபூர்வமாக மறுக்கப்பட்டு வருகின்றன.(2)
பாகிஸ்தான் இந்த வெளிப்படையான சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு எப்படி பதிலடி தரப்போகிறது என்பதை எதிர்கொள்ள நிச்சயம் இந்தியாவும் தயாராகவே இருக்கும். ஆனால் மோதியின் தொடர்ச்சியான சளைக்காத வெளிநாட்டுப் பயணங்களால் உலக அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தாண்டி இந்தியாவை மீறி பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு பெறுவது பெரிய சவாலாகவே இருக்கும்.
இதற்கு முன்பு இப்படி சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்றதில்லை என்ற கூற்றை காங்கிரஸ் மறுத்திருக்கிறது. தி ஹிந்து 2011ல் நடந்த ஆப்பரேஷன் ஜிஞ்சர் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.(3) மனோகர் பரிக்கர் இது பற்றிய தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். கவர்ட் ஸ்ட்ரைக்ஸ் என்றழைக்கப்படும் ரகசியத் தாக்குதல்கள் வேறு. அது எப்போதும் இந்திய ராணுவத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. அதாவது தேவைக்கேற்ப ராணுவம் தன் முடிவில் தாக்குதல் நடத்திவிட்டுப் பின்னர் அரசுக்குச் சொல்வது. ஆனால் ஊரி தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் அப்படியானதல்ல. அரசு முடிவு மேற்கொண்டு ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்வது. அந்தவகையில் இது முதன்முதலாக நடந்த தாக்குதலே. அதுமட்டுமல்ல, இனியும் இத்தகைய தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்பு உண்டு என்றும் ராணுவம் தன் நிலையைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஊரி தாக்குதலைத் தொடர்ந்து மோதி பாகிஸ்தானியர்களுக்கு விடுத்த செய்தி மிக முக்கியமானது. பாகிஸ்தானின் அப்பாவிப் பொதுமக்கள் வேறு, பாகிஸ்தான் அரசு வேறு என்று சொன்ன மோதி, இந்தியா கணினி மென்பொருளை இந்தியாவெங்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும்போது ஏன் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது என்று தன் ஆட்சியாளர்களைப் பாகிஸ்தானியர்கள் கேள்வி கேட்கவேண்டும் என்றும் கூறினார்.
அதோடு, “இந்தியா
போருக்குத் தயாராக உள்ளது. அந்தப் போர், வறுமைக்கு எதிரான போர். பாகிஸ்தானின்
இளைஞர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் போரை நாம் தொடங்குவோம். பாகிஸ்தானின் குழந்தைகளே, கல்வி அறிவின்மைக்கு எதிரான போரை நாம் மேற்கொள்வோம். யார் வெல்கிறார்கள் எனப் பார்ப்போம்என்று பேசினார். இறுதியாக, ஊரித் தாக்குதலில் உயிரிழந்த 18 ராணுவ வீரர்களின் தியாகமும் வீணாகாது என்றும், உலக அரங்கில் தீவிரவாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த தன் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்தியா பயன்படுத்தும் என்றும் சொன்னார். செப்டம்பர் 29ம் தேதி இந்தியா தனது பதிலை உறுதியாக உலகுக்கு அறிவித்திருந்தது.
இந்தியாவின் முன் இரண்டு பாதைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இரண்டிலும் வலுவாக இந்தியாவால் செல்லமுடியும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதை பாகிஸ்தானே இனி முடிவு செய்யவேண்டும்.
உசாத்துணைகள்:
அடிக்குறிப்புகள்:

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை

சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் விதைத்துவிட்டிருக்கும், இன்றும் விதைத்துக்கொண்டிருக்கும் கருத்துகளை ஆய்வுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதி எதிர்ப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். திராவிடத்துக்கு ஆதரவான நூல்கள் ஒரு பக்கம் மலை போல் குவிந்துகிடக்க, திராவிட இயக்கத்தை மிகக் கறாராக வரலாற்றுப் பின்புலத்துடன் விமர்சித்து அதன் இடத்தை இறுதி செய்யும் நூல்கள் வெகு சொற்பமானவையே.

இன்னும் சொல்லப்போனால் 30 வருடங்களுக்கு முன்பு வெளி வந்த நூல்களை விட்டுவிட்டு, கடந்த 10 வருடங்களில் வெளிவந்த மிக இந்நோக்கில் முக்கியமான நூல்கள் எவை என்று கேட்டால், நம்மால் சட்டென்று பதில் சொல்லிவிடமுடியாது. அந்த அளவுக்கு தமிழ்நாடு திராவிடக் கருத்துகள் தீரப் புதைக்கப்பட்டிருக்கும் ஓர் இடம் என்றாகிவிட்டது.

இந்நிலையில் சுப்பு எழுதியிருக்கும் திராவிட மாயை (பாகம் 2) நூல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்ஹிந்து வலைத்தளம் (இதற்கும் தி தமிழ் ஹிந்து பத்திரிகைக்கும் எத்தொடர்பும் இல்லை. தி தமிழ் ஹிந்து என்றொரு தமிழ் நாளிதழ் வருவதற்கும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே TamilHindu.com தன் பணியைச் செய்து வருகிறது) ‘போகப் போகத் தெரியும்’ என்ற தொடரை வெளியிட்டது. அது ‘திராவிட மாயை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. திராவிட மாயை (பாகம் 1) தொடராகவும், பின்பு புத்தகமாக வந்தபோதும், பெரும் பரபரப்பையும் பலவித விவாதங்களையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, திராவிட மாயையின் இரண்டாம் பாகம் துக்ளக் இதழில் தொடராக வெளிவந்தது. இரண்டு வருடங்கள் துக்ளக் இதழில் தொடர்ந்து வெளிவந்த தொடர்கள் மிகக் குறைவே. திராவிட மாயையின் இரண்டாம் பாகம் அச்சிறப்பையும் பெற்றதோடு, பல்வேறு தரப்பினரையும் சென்று சேர்ந்தது.

சுப்புவின் எழுத்துப் பாணி அலாதியானது. எதையும் மிகவும் ஆழமாக, விரிவாகச் சொல்லாமல், மிகக் குறைவான வார்த்தைகளில் செறிவான ஆனால் குறைவான பின்னணியில் சொல்லுவது. மிக வேகமான நடையில் செல்லும் கட்டுரைகளின் இடையிடையே வந்து விழும் நையாண்டியான விமர்சனங்கள் என வாசகரை முழுக்கத் தன் பக்கம் ஈர்க்கக்கூடியது. திராவிட மாயை புத்தகம்முழுக்க சுப்புவின் இந்த மாயாஜாலத்தை நாம் பார்க்கலாம்.

சுப்புவின் இன்னொரு முக்கியமான திறமை, குற்றச்சாட்டுகளை எங்கிருந்து எடுக்கிறார் என்பது. இந்நூல் முழுக்க திராவிட இயக்கத்தின், திராவிட இயக்கத்தவர்களின் புரட்டுகளையும், முன்பின் தொடர்பின்றி அவர்கள் பேசுவதையும், பேச்சுக்கும் செயலுக்கும் இடையே உள்ள அராஜகமான முரண்களையும், வரலாற்றுப் புரிதலின்றி மேடைதோறும் முழங்கும் வீராவேசங்களின் போலித்தனத்தையும் சுப்பு பட்டியலிடுகிறார். ஒவ்வொரு கட்டுரையும் திராவிட இயக்கத்தின் பொய்யையும் பித்தலாட்டத்தையும் விரிவாகச் சொல்கிறது என்றால், கட்டுரைக்குள்ளே கிளை கிளையாக சட்டென்று சொல்லிச்செல்லும் விமர்சனங்கள் தனி. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுப்பு ஆதாரங்களை திராவிட இயக்கத்தவர்களின் புத்தகங்களில் இருந்தே எடுக்கிறார் என்பதுதான் சுவாரஸ்யம். எதிர்த்தரப்பு நூல்களிடம் இருந்து ஆதாரங்களைத் தருவதில் என்ன திறமை இருந்துவிடமுடியும்?

அப்படி இவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை எத்தனை நூல்களில் இருந்து எடுத்திருக்கிறார் என்பதைப் பார்த்தால் அசந்துபோய்விடுவோம். அத்தனை நூல்களைப் படித்திருக்கிறார். திராவிட இயக்கத்தவரைப் பற்றி எந்த நூல் இருந்தாலும், திராவிட இயக்கத்தவர் எழுதிய எந்த நூலாக இருந்தாலும், அதை வாங்கி வாசித்திருக்காவிட்டால் இத்தனை ஆதாரமான கேள்விகளை இவரால் கேட்டிருக்கமுடியாது. இத்தனைக்கும் அந்த நூல்கள் மிக அதிகம் பேசப்பட்ட நூல்களாகக் கூட இல்லை. ஆனாலும் அதைத் தேடிப் பிடித்து பொறுமையாகப் படித்து, அதில் தனக்குத் தேவையான ஒரு கருத்தைச் சட்டென்று பிடித்து அதையே ஆதாரமாக்கித் தன் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

ஓரிடத்தில் டி.எம். நாயர் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை ஆதரித்தவர் என்கிறார். அந்த டி.எம். நாயரின் சென்னை ஸ்பர்டாங் சாலை சொற்பொழிவைப் பாராட்டி ‘திராவிட இயக்க வரலாறு’ நூலில் இரா.நெடுஞ்செழியன் சொன்னதைப் பதிவு செய்கிறார். ஒரு சித்திரம் நமக்கு மெல்ல உருவாகி வருகிறது. இந்நூல் முழுக்க இப்படிப் பல சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பல பத்திகளில் சுப்புவின் நகைச்சுவை கொடிகட்டிப் பறக்கிறது. நகைச்சுவை வரிகளின் ஊடே ஊசி போல் விமர்சனத்தையும் பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் வைக்க சுப்பு தவறுவதில்லை. ஒரு பத்தி எழுத்தாளரின், குறிப்பாக விமர்சகர்களின் அதி முக்கியத் தேவை இது. அதை சுப்பு மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்.

சுப்புவின் நீ்ண்ட நெடும் அனுபவமும் இந்த நூலுக்கு மிகவும் உதவி இருக்கிறது. அந்த வகையில் திராவிட இயக்கத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் வகை நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது. ஈவெரா, அண்ணாத்துரை, கருணாநிதி, வீரமணி, கண்ணதாசன், முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் என எந்த ஒரு தலைவரையும் பற்றிய முக்கியமான அதிகம் வெளித்தெரியாத குறிப்புகள் இந்நூலில் உள்ளன.

தனித் தமிழ் ஆர்வலர்கள் ஹிந்துப் பெயர்களை மாற்றுகிறார்களே அன்றி, இஸ்லாமியப் பெயர்களை மாற்றுவதே இல்லை என்பதாகட்டும், டால்மியாபுரம் பெயரை மாற்ற நடத்தப்பட்ட போராட்டத்தைப் போல் ஹார்விபட்டி பெயரை மாற்றப் போராட்டம் நடத்தப்படவில்லை என்பதாகட்டும், கால்டுவெல்லின் உண்மை முகத்தைப் பதிவு செய்வது, கிறித்துவத்தில் உள்ள சாதிப் பிரச்சினைகளை ஆதாரத்துடன் சொல்வது, திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து இன்றுவரை வெறுப்புக்கு ஆளாகும் பிராமணர்களின் பங்களிப்பை வெளிப்படுத்துவது, ஓம் சின்னம் இந்திய நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது என்று திடீரென்று சீற்றத்துடன் கிளம்பிய வீரமணியை நகைச்சுவையுடன் எதிர்கொள்வது, கருணாநிதியின் போலி நாத்திகத்தை பகிரங்கப்படுத்துவது, இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவகையில் திராவிட இயக்கத்தின் பொறுப்பற்ற அரசியலைப் பட்டியலிடும் ஒரு தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.

மேடையில் மட்டும் சீர்திருத்தம் பேசிவிட்டு தன் குடும்பத்துக்குள் பாரம்பரியத்தை விட்டுக்கொடுத்துவிடாத தலைவர்கள் இந்நூலில் ஆதாரத்துடன் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அண்ணாத்துரையைப் பற்றி ‘அறிஞர்’ என்ற பெயரில் இன்று பரப்பப்படும் யேல் பல்கலைக்கழகக் கதையைப் பற்றி எம்.எஸ். உதயமூர்த்தியின் வார்த்தைகளை வாசிக்கும்போது திராவிட இயக்க ஆதரவாளர்கள் தலைவர்களுக்கும் ஒரு படி மேல் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.

மேடையில் ஏறினால் என்ன பேசுகிறோம் என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை என்பது ஜீவானந்தத்தைப் பற்றி அண்ணாத்துரை சொல்லும் ‘ஜீவாவுக்குக் காது கேட்காது’ என்பதன்மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘காமராஜரின் முதுகுத் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம்’ என்று மேடையில் திராவிடத்தவர்கள் முழங்கியதைக் கேட்டதாக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதிவு செய்திருப்பதை இன்னுமொரு உதாரணமாகக் கொள்ளலாம்.

இந்நூலில் தெறிக்கும் நகைச்சுவைக்கு உதாரணமாக,சங்கரலிங்கனாருக்கே தெரியாமல் ‘சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்றாக்கவேண்டும்’ என்ற கோரிக்கை புகுத்தப்பட்ட கட்டுரையைச் சொல்லலாம். இன்னொரு இடத்தில் ‘திராவிடர் கழகம் என்ற கம்பெனியில்’ என்று எழுதுகிறார் சுப்பு. திராவிடர் கழகம் பற்றிய முழுதான விமர்சனத்தை இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையுமே ஓர் அரிய தகவலைக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நூலின் குறைபாடுகள் என்று பார்த்தால், மிகக் குறைவான செய்திகளைத் தந்தி போல் சொல்லிச் செல்வது, பலவகைகளில் வாசகர்களுக்குப் பல கேள்விகளை உண்டாக்குகிறது. அக்கேள்விகளுக்கான பதில்கள் மிகப் பெரிய தேடலாக அமைகின்றன. சிலவற்றுக்குச் சட்டென்று பதிலே கிடைப்பதில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘நான் முன்னரே சொன்னது போல’ என்ற ரீதியில் சொல்லப்படும் முன் அத்தியாயச் சுருக்கங்கள் ஒரு கட்டத்தில் பெரும் அலுப்பை ஏற்படுத்துகின்றன. இவையெல்லாம் மிகப் பழமையான உத்திகள். துக்ளக்கில் எழுதுவதால் இது தேவைப்பட்டிருக்கலாம். ஒரு நூலாக வரும்போது இவையெல்லாம் தேவையற்றவை.

சுப்பு குறிப்பிடும் பல ஆதார நூல்களில் எந்தப் பக்கத்தில் அந்த ஆதாரம் உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் ஒரு சிறு ஆதாரத்தைப் பார்க்க ஒரு முழுநூலையும் படிக்கவேண்டியது அவசியமாகிவிடும்.

மற்றபடி, கண்டு கொள்வோம் கழகங்களை, ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் போன்ற அரிதான விமர்சனத் தொகுப்புகளின் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல்களில் ஒன்று திராவிட மாயை.

திராவிட மாயை ஒரு பார்வை (பாகம் 2), ஆதாரம் வெளியீடு, ரூ 160.

-oOo-