Posted on Leave a comment

சீரூர் மட விவாகரம் | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

சமீபத்தில் சர்ச்சைக்குரிய முறையில் இறந்த சிரூர் மட பீடாதிபதி லக்ஷ்மிவர தீர்த்தரின் உள்ளுறுப்புகளைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். ஆகஸ்ட் மாத இறுதியில் அந்தப் பரிசோதனை முடிவுகள் ஊடகத்தில் கசிந்தன. பரிசோதனையின் முடிவு அனைவருக்கும் நிம்மதியைத் தருவதாக இருந்தது. லக்ஷ்மிவர தீர்த்தர் கல்லீரல் வீக்கத்தினால் (லிவர் ஸிரோசிஸ்) இறந்திருக்கிறார் என்று பரிசோதனை முடிவுகள் கூறுவதாக செய்திகள் வந்தன. ஒரு விறுவிறுப்பான மர்மராடகம் முடிவிற்கு வந்ததுபோல இருந்தது.

ஒரு முன்கதை.

சுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் ஒரு மாத்வ மடாதிபதி தனது மடத்திலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து உடுப்பி வந்து சேர்ந்தார். காலையில் செய்ய வேண்டிய ஆஹ்னீக காரியங்களைச் செய்தார். பிறகு உடுப்பி அஷ்ட மடத்து மடாதீசர் ஒருவரைக் காணச் சென்றார். தன்னைப் போலவே அவரும் துறவிதான். இருப்பினும் பல மடங்கு அதிகமாக சாதுர்மாச்யம் செய்தவர். எனவே உரிய மரியாதையைச் செய்தார். பிறகு தனியே பேச வேண்டும் என்றார். இருவருமாக மத்வ சரோவரத்தின் கரைக்குச் சென்றனர். பரஸ்பரம் உரையாடத் தொடங்கினர். பெரியவருக்கு விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும் என்று வந்தவர் நினைத்துக் கொண்டார். ஆனால் பெரியவர் முகத்தில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. இருவருக்கும் இடையே கீழ்க்கண்டவாறு உரையாடல் நடந்தது. ஒரு வசதிக்கு அந்த இரண்டு மடங்களின் தலைவர்களையும் பெரியவர் என்றும் சின்னவர் என்றும் குறிப்பிடுவோம்.

சின்னவர்: மனதில் குழப்பம்.

பெரியவர்: குழப்பம் நல்லதற்குத்தான். குழம்பினால் தெளிவு வரும்.

சின்னவர்: அரசல்புரசலாக எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே.

பெரியவர்: அரசல்புரசலாகத் தெரிய வருவதற்கெல்லாம் நாம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

சின்னவர்: சரி. …குறித்துத்தான்

பெரியவர்: கேள்விப்பட்டேன். அடிக்கடி உங்களைப் பார்க்க வருவதாக.

சின்னவர்: அவருக்கு வேறு எண்ணம் இருக்கிறது.

பெரியவர்: இதெல்லாம் வருவதுதான். நான் பேசிப் புரிய வைக்கிறேன்.

சின்னவர்: எனக்கும் அவர் பேசுவதில்…

பெரியவர்: அது சரி, சில மந்த்ர ஜபங்கள், சாதனைகள் எல்லாம் உண்டு.

சின்னவர்: ம்.

பெரியவர்: ஒன்றும் குழப்பம் வேண்டாம் ஸ்வாமிகளே. இன்றே யோக ஆஞ்சநேயர் மந்தரத்தை எழுதித் தருகிறேன்.

சின்னவர்: இல்லை.

பெரியவர்: மனச்சஞ்சலங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

சின்னவர்: ஸ்வாமிகளே, அவளை மறக்க முடியவில்லை என்பதல்ல என் பிரச்சினை.

பெரியவர்: பிறகு

சின்னவர்: எனக்கு மறக்க விருப்பம் இல்லை.

பெரியவர்: சத்யமேவ ஜயதே!

சின்னவர்: என்னைத் தவறாக நினைக்கக்கூடாது. இனி நான் என்ன செய்ய?

பெரியவர்: அவள் நினைவுடன்… பூஜை செய்வதை விட, நாராயண ஸ்மரணையோடு அவளுடன் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருப்பதே மேல். உடனடியாக நீங்கள் ஒரு வாரிசை நியமிக்க வேண்டும்.

*

நான் இங்கே குறிப்பிட்ட உரையாடல் நிஜமாக நடந்த ஒன்று. திருமணம்  செய்து கொள்ள விரும்பியவர் அப்போதைய சுப்ரமண்யா மடத்தின் மடாதிபதி. அவர் கலந்தாலோசித்தது பேஜாவர் பெரியவரிடம். துறவறத்திலிருந்து வெளியே வர அவர் முடிவு செய்து மறுநிமிடம் பேஜாவர் சுவாமிகள் சுப்ரமணியா மடத்தின் ஆராதனா மூர்த்திகளைத் தன் வசத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாகப் புதிய சாமியாருக்கான தேடல் தொடங்கியது. ஒரு இளைஞன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவனுக்கு தீக்ஷை வழங்கப்பட்டது. சுப்ரமண்யா மடத்துப் பீடாதிபதி முன்னிலையில் பேஜாவர் வழிகாட்டுதலில் அனைத்துச் சடங்குகளும் நடந்து புதிய சாமியார் வந்ததும், பழையவர் அதிகாரபூர்வமாக மடத்திலிருந்து துறவறத்திலிருந்தும் விலகிக்கொண்டார். அவரை சமுதாயம் ஒதுக்கி ஒன்றும் வைக்கவில்லை. தான் விரும்பிய, தன்னை விரும்பிய பெண்ணை அவர் மணம் புரிந்து இன்று பிரபல சங்கீத வித்வானாக வலம் வருகிறார். யாருக்கும் எந்தக் கசப்பும் இல்லை.

*

மாத்வர்களின் மடங்களை இரண்டாகப் பிரிக்கலாம். துளு பிரதேச தெள்ளுவ மடங்கள் மற்றும் கட்டே மேலே மடங்கள் என்றழைக்கப்படும் கன்னடப் பிரதேச மடங்கள். ஸ்ரீராகவேந்திர மடம், ஸ்ரீ வியாசராஜ மடம், ஸ்ரீபாதராஜ மடம் போன்றவை கட்டே மேலே மடங்கள். இவற்றில் பீடாதிபதியாக வருபவர் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் இருந்து நேரடியாகவும் வரலாம். (உதாரணம்: ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்தர்) அல்லது க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்தும் வரலாம் (உதாரணம்: ஸ்ரீராகவேந்திர தீர்த்தர்). ஆனால் தெள்ளுவ மடங்களில் உள்ள பீடாதிபதிகள் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் இருந்து நேரடியாகத் துறவறம் ஏற்கும் வழக்கமே உள்ளது. அதிலும் அஷ்டமடங்களில் மடாதிபதியாக இருப்பவர்கள் பாலசன்யாசி என்னும் வகையைச் சேர்ந்தவர்கள். உடுப்பி அஷ்டமடங்கள் (பேஜாவர், பலிமாரு, அடமாரு, புட்டிகெ, சோதே, கனியூரு, சிரூர், கிருஷ்ணாபுரம்) மத்வாசாரியரால் ஸ்தாபிக்கப்பட்ட தனித்தன்மை மிக்க ஆன்மீக நிறுவனங்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் உடுப்பி கிருஷ்ணருக்குத் துறவிகளாலேயே நித்திய பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதன் பொருட்டுதான் மத்வர் பர்யாயம் என்னும் முறையைக் கொண்டு வந்தார். அதாவது ஒவ்வொரு மடத்தைச் சார்ந்தவர்களும் தலா இரண்டு மாதங்கள் உடுப்பி க்ருஷ்ணருக்குப் பூஜை செய்வார்கள். இந்த முறையை வாதிராஜர் இரண்டு வருடங்கள் என்று பிறகு மாற்றினார். ஒரு மடாதிபதி தனது பர்யாயமான இரண்டு வருடங்கள் பூஜை செய்தார் எனில் அவருக்கு மீண்டும் முறை வர பதினான்கு வருடங்கள் ஆகும். அதேபோல் உடுப்பி அஷ்ட மடங்கள் இடையே த்வந்த மடம் என்னும் வழக்கத்தையும் மத்வர் உருவாக்கினர். எட்டு மடங்களையும் நான்கு குழுக்களாகப் பிரித்தார். அதாவது இரண்டு இரண்டு மடங்களாகப் பிரித்தார். உதாரணத்திற்கு சீரூர் மடமும் ஸோதே மடமும் த்வந்த மடங்கள். இதில் ஒருமடத்தின் மடாதீசர் திடீரென்று இறந்துபோனால் மற்றொரு மடத்தலைவர் அடுத்த பீடாதிபதியை நியமிப்பது போன்ற காரியங்களைச் செய்வதற்கு உரிமையுள்ளவராகிறார். இந்தப் பின்னணியில் இப்போதுள்ள பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

*

நடந்த விவகாரங்களைப் பார்க்கும்போது ஒரு சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன. சிலர் கூறுவது போல மடங்களைச் சீர்திருத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சட்டத்துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் இத்தகைய சம்வங்கள் நடப்பது முதல் முறை அல்ல என்று நன்றாகத் தெரியும். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னரும் இத்தகைய விவகாரங்கள் சில மடங்களில் நடந்திருப்பதைச் சில நீதிமன்றத் தீர்ப்புகள் வாயிலாக நாம் அறியலாம்.

தவறு தனி நபர்கள் மேல்தானே தவிர்த்து மட அமைப்பின் மீதோ பால சந்யாச முறையின் மீதோ அல்ல. முன்கதையில் நான் சொன்னவாறு, திரு வித்யாபூஷண் செய்தது போல லக்ஷ்மிவர தீர்த்தர் உண்மையை ஒப்புக்கொண்டு துறவறத்தில் இருந்து வெளியே வந்திருக்கலாம். வித்யாபூஷண் மட்டுமல்ல, பேஜாவரின் அஷ்டமடங்களில் ஒன்றான சீரூர் (ஷிரூர்) மடத்தின் பீடாதிபதியாக இருந்த, 55 வயதில் கடந்த ஜுலை மாதம் மரணம் அடைந்த லஷ்மிவர தீர்த்தர், சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தது அவர் மரணத்தில் மட்டும் அல்ல. எட்டு வயதில் பால துறவியாகப் பீடத்திற்கு வந்தவர். 47 வருடங்கள் பீடாதிபதியாக இருந்து மூன்று பரியாயங்களை முடித்துள்ளார். ஏறத்தாழ கடந்த 25/30 வருடங்களாகவே அவர் சர்ச்சைகளின் மத்தியில்தான் இருந்தார்.

லக்ஷ்மிவர தீர்த்தரை குறித்து நான் முதலில் கேள்விப்பட்டது சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது குடும்ப புரோகிதர் நான் உடுப்பிக்குப் போய் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறி, உடுப்பியைக் குறித்தும், அங்குள்ள மடங்கள், மடாதிபதிகள் குறித்தும் விவரித்தார். அப்போது மேற்படி சாமியாரின் பெயரைச் சொல்லி அவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்பதால் அவரைச் சந்திக்க வேண்டியதில்லை என்று கூறினார்.

பிறகு கடந்த இருபது வருடங்களில் பலமுறை அவரைக் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களைக் கேள்விப்பட்டேன். ட்ரம்ஸ் வாசிப்பது, கடலில் நீச்சலடிப்பது போன்றவற்றில் மட்டும லக்ஷ்மி தீர்த்தருக்கு ஆர்வம் இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. அவர் விஷயங்கள் எல்லாம் உடுப்பியில் ஊர் அறிந்த இரகசியமாகவே இருந்தது. இந்நிலையில் குடிப்பழக்கத்தின் காரணமாக அவர் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. ஒரு பெண்மணி மடத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாகப் பேச்சு அடிபட்டது. மற்றொருபுறம் சாமியார் மடத்தின் வருவாயிலிருந்து பல கோடி ரூபாய்களை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ததாகவும் பேச்சு அடிபட்டது. 2018ம் வருடம் ஆரம்பம் முதலே ஏராளமான பிரச்சினைகள் லக்ஷ்மிவர தீர்த்தருக்கு வரத்தொடங்கின. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட முயன்றார். பாஜகவிடம் தன்னை வேட்பாளராக அறிவிக்கும்படிக் கேட்டார். யோகியையும் கர்நாடக லிங்காயத் மடாதிபதிகளையும் அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு முன்மாதிரியாகக் காணவேண்டும் என்று கூறினார். தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியதும் ஊடகங்களின் வெளிச்சம் இவர் மேல் பாய்ந்தது. அந்த வெளிச்சத்தில் இவரது தவறுகள் அனைத்தும் முழுதும் தெரிந்தது. ஒரு வழியாகத் தனது வேட்புமனுவை பின்வாங்கிக் கொண்டு ஒதுங்கினார்.

மற்றொருபுறம் தான் நம்பிக்கைக்குரியவராகக் கருதிய ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் தன்னைப் பல கோடிகள் ஏமாற்றி விட்டதாகவும் அந்தப் பணத்தை மீட்க வேண்டும் என்றும் பூத ஆவேசத்தில் ஆடும் மருளாடியிடம் இவர் கேட்டுக்கொண்ட காணொளி வெளியானது. இதன் மூலம் பல கோடி ரூபாய் விவகாரம் உண்மை என்று தெரிந்தது. வேறு ஒரு ஆடியோவும் வெளியானது. இதில் லக்ஷ்மிவர தீர்த்தர் தனது ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தியும் பேஜாவர் உட்பட்ட ஏனைய மடாதிபதிகள் அனைவர் மீதும் சேற்றை அள்ளி வீசி இருந்தார். ஒரு கட்டத்தில் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என்று மறுத்தார்.

இத்தனை நாட்கள் பல விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருந்த ஏனைய ஏழு மடத்தைச் சார்ந்த மடாதிபதிகள் ஒன்று சேர்ந்து லக்ஷ்மிவர தீர்த்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். அவரிடம் உடனடியாகப் பட்டத்தைத் துறக்கும்படி கூறினர். அதனால் தான் ஒரு செல்லாக் காசாகி விடுவோம் என்று எண்ணி லஷ்மிவரர் மறுத்தார் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிரூர் மடத்தின் பூஜா மூர்த்திகளை உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் ஒப்படைத்திருந்தார் லக்ஷ்மிவரர். இந்த மூர்த்திகளைத் திருப்பிக் கேட்டபோது அவற்றைத் திருப்பிக் கொடுக்க ஏனைய மடாதிபதிகள் மறுத்துவிட்டனர்.

வேறொருவர் மடாதிபதியான பிறகே அவற்றைத் திருப்பித் தர முடியும் என்று அவர்கள் கூறினர். தான் நீதிமன்றத்தை அணுகப் போவதாக பேட்டி கொடுத்தார். பேஜாவர் பெரியவர் லக்ஷ்மிவரரின் மதுபானப் பழக்கம் போன்றவற்றைக் கண்டித்துப் பேட்டி கொடுத்தார். வாழ்ந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்கிற கதையாக லக்ஷ்மிவரர் மரணமும் அனைவருக்கும் தலை வலியைத் தந்தது. ஜூலை மாதம் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கடும் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நினைவு திரும்பாமல் இறந்து போனார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மணிப்பால் கஸ்தூரிபாய் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. உடனடியாக ஏராளமான சதி கோட்பாடுகள் பரப்பப்பட்டன. சாமியாருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் ஊடகத்தில் வெளியாகின.

ஊடகங்கள் மடத்திற்கு தினமும் வந்து போய்க்கொண்டிருந்த அந்த மர்மப் பெண்மணியின் கைவரிசை என்றனர். வேறு சிலர் சாமியாரின் பணத்தை மோசடி செய்த நபர்கள்தான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட வேறு இரண்டு மடங்களின் (இவர்கள் சுமார் 10/20 வருடங்களுக்கு முன்னர் உடுப்பி துறவிகளிடம் துறவறம் பெற்றவர்கள்) தலைவர்கள் ஏனைய ஏழுமடத்தின் பீடாதிபதிகள் மீதும் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்ட பெண்மணியும் ரியல் எஸ்டேட், வணிகர்களும் ஷெட்டி என்னும் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்தப் புதுமடங்களின் தலைவர்களும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனவே இவர்களின் குற்றச்சாட்டு திசைதிருப்பல் முயற்சியாகச் சிலரால் கருதப்பட்டது.

பொறுமை இழந்த பேஜாவர் லக்ஷ்மிவரரின் மதுப்பழக்கம், பெண்கள் தொடர்பு குறித்து வெளிப்படையாகக் குற்றம் சாட்டி லக்ஷ்மிவரருக்குக் குழந்தைகள் உண்டு என்றும் கூறினார். மேலும் தன் மீது ஏதாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலகத் தயார் என்றும் பேஜாவர் கூறினார். லக்ஷ்மிவரதீர்த்தர் மீது பல வருடங்களுக்கு முன்னரே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறியதாகத் தெரியவில்லை.

பழைய பட்ட சிஷ்யர் வித்யாவிஜயர் உட்பட பலர் துறவறத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்கள் யாரையும் மாத்வ சமூகம் ஒதுக்கி வைக்கவோ, சிறுமை செய்யவோ முயலவில்லை. சுப்ரமண்யா மடாதிபதியாக முன்னர் இருந்த வித்யாபூஷண் இப்போது பிரபலப் பாடகராக எல்லோராலும் மதிக்கப்பட்டு வாழ்கிறார். வித்யாவிஜயர் இன்று ஒரு முக்கியமான மாத்வ பண்டிதராக இருக்கிறார். துறவறத்திலிருந்து வெளியே வந்தவர்கள் என இவர்களை யாரும் ஏளனமாகப் பார்க்கவில்லை. லக்ஷ்மிவர தீர்த்தரும் துறவறத்தில் இருந்து வெளியே வந்து குடும்பஸ்தனாக வாழ்ந்திருக்கலாம். தனக்குத் தகுதி இல்லை என்று தெரிந்தும் மடாதிபதியத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்துதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். ஒரு துளி நேர்மை வரலாற்றையே புரட்டி போட்டிருக்கும்.

இன்னொரு பக்கம் ஏனைய மடாதிபதிகள் 20 வருடங்களுக்கு முன்னரே லக்ஷ்மிவரருக்கு நெருக்கடி கொடுத்து அவரை வெளியேற்றி இருக்கலாம். அதை விட்டுவிட்டு லக்ஷ்மிவரரின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்ததற்கான பலனாக ஊடகங்கள் முன்னர் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்த்தவ மிஷனரிகளின் பாணியில் சமூகசேவை, கல்லூரிகள் என்றெல்லாம் பாரம்பரியமான மடங்கள் இறங்கும்போது தவறான நபர்கள் மிக எளிதில் மடத்துடன் தொடர்பினை உருவாக்கிக் கொள்கின்றனர். மடங்களும் மடாதிபதிகளும் இக்கட்டில் சிக்க இதுவும் ஒரு காரணம். ஏதாவது சீர்த்திருத்தம் வேண்டும் எனில் அது மடங்கள் இன்னும் கடுமையாகத் தங்கள் அனுஷ்டானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். 

Posted on 2 Comments

காலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

காலா
திரைப்படம் தொடர்பான அனைத்து விவாதங்களும் முதலில் எழுப்பப்படும் கேள்வி ஒரு
திரைப்படத்திற்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்க
வேண்டுமா என்பதுதான்
. ஒரு திரைப்படம், அதுவும் வெகுஜனங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்
எடுக்கப்பட்ட திரைப்படத்தை நாம் ஒரு பரப்புரை ஆயுதமாகத்தான் கருதவேண்டும்
. எனவே அதனைக் குறித்து விவாதிப்பதும், அதன் பரப்புரை அம்சங்களைக்
கட்டுடைப்பதும் அவசியமானதாகும்
.
காலா திரைப்படம் குறித்து விவாதிக்கும்போது அத்திரைப்படம்
கட்டி எழுப்ப முயலும் மதம்
, சித்தாந்தம் மற்றும் அரசியல் சார்ந்த
பரப்புரைகளை
/ சித்திரங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
காலாவும் மதமும்:
தனிப்பட்ட வாழ்வில் பெரும் ஆன்மிகவாதியாகத் தன்னை முன்னிறுத்தும் ரஜினிகாந்த்
எப்படி இந்தத் திரைப்படத்தில் நடித்தார் என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி
. நாத்திகமோ, ஹிந்து மதத்தின் மீதான விமர்சனமோ ஒரு பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஹிந்து மதத்தில் நாத்திகம் என்பதை பொருட்படுத்தத்தக்க ஒரு
எதிர்தரப்பாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருதி வந்துள்ளோம்
. காலாவில் வரும் மதம் சார்ந்த கருத்துகளில் பிரச்சினை என்னவென்றால் அது
தமிழகத்தில் மட்டும் காணப்படும் தக்கையான ஹிந்து வெறுப்பு நாத்திகம் என்பதுதான்
. படத்தில் ரஜினி அதாவது காலாகடவுள் நம்பிக்கையற்றவராக காண்பிக்கப்படவில்லை. ஹிந்துமத நம்பிக்கையற்றவராகத்தான் காட்டப்படுகிறார். முதலில் வரும் பாடல் காட்சியில் ரஜினி நமாஸ் செய்வது தெளிவாகக் காட்டப்படுகிறது. அதேபோல் பின்னர் வில்லனிடம் பேசும்போதும் குதா…” என்று தொடங்கும் வசனத்தைக்
கூறுகிறார்
. படத்தில் பல ஹிந்து கதாபாத்திரங்கள் கழுத்தில்
இஸ்லாமியபாணி தாயத்தை அணிந்துள்ளனர்
. ரஞ்சித் முன்வைக்கும் போலி
பகுத்தறிவுதான் படத்தை கேலிக்குரியதாக்குகிறது
.

திரைப்படத்தில்
எங்கெல்லாம் ஹிந்து மதத்தை சிறுமை செய்ய முடியுமோ அங்கெல்லாம்
சிறுமை செய்துள்ளார்
. சில உதாரணங்களை பார்க்கலாம்.
1. படத்தில் வரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அனைவரும் நெற்றியில் ஆஞ்சநேயர்
குங்குமம் என்று தமிழகத்தில் அறியப்படும் செந்தூரத்தை அணிந்துள்ளனர்
. செந்தூரம் என்பது ஆஞ்சநேய பக்தர்கள் அணியும் சின்னம். அது ஹிந்து இயக்கத்தவர்கள் மட்டுமே அணியும் சின்னம் அல்ல. நெல்லையில் 90% ஹிந்துக்கள் நெற்றியில் இது
இருக்கும்
. உபயம்: கெட்வெல் ஆஞ்சநேயர். ஆனால் இத்திரைப்படம் செந்தூரத்தை ஏதோ ரவுடிகளின் சின்னம் என்பதுபோல சித்தரித்துள்ளனர். இதே இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். காலாவின் முன்னாள் காதலி நீங்கலாக அனைத்து இஸ்லாமிய கதாபாத்திரங்களும்
இஸ்லாமிய சின்னங்களை அணிந்துள்ளனர்
. ஜீன்ஸ் அணிந்துள்ள இஸ்லாமிய
யுவதி கூட தலையை ஹிஜாபால் மறைத்துள்ளார்
. ஒரு சின்னத்தைக் கேவலப்படுத்துதல்
அதற்கெதிராக மற்றொரு சின்னத்தைப் புனிதப்படுத்துதல் என்னும் அற்ப பரப்பியல்
விளையாட்டு இது
. இரு சமூகங்களையும் பிரிக்கும் சூழ்ச்சி என்றுகூட
கூறலாம்
.
2. இதேபோல் வில்லன் தொடர்ந்து தனது
தரப்பை நியாயப்படுத்த கீதையின் வசனங்களைச் சொல்கிறார்
. “கிருஷ்ணர் ஏற்கெனவே கூறினார்….”, “போரில்
கிருஷ்ணன் செய்ததுதான்
…” என்றெல்லாம் தனது தவறை
நியாயப்படுத்துகிறார்
. ஏனைய புனித நூல்கள் போரைக்
குறித்து சொன்னவற்றை வசனமாக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை
. இவ்வாறு வெறுப்பை வளர்க்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல நம் கருத்து.
3. ‘ராவணகாவியம்’, ‘அசுரன் என்ற அழைப்பு ஆகியவற்றைக் காட்டி, இறுதிக் காட்சி வன்முறை
வெறியாட்டத்தில் பின்னணியாக ராமகாதையின் வரிகளை ஓடவிட்டிருப்பது மற்றொரு கீழ்மை
.
4. காலாவின் போராட்டத்தில் இஸ்லாமியர் கலந்துகொள்கிறார்கள். வெள்ளை உடை அணிந்த பெந்தகோஸ்தே ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஹிந்துக்கள், அர்ச்சகர்கள் யாரும் கலந்து
கொள்ளவில்லை
. ஹிந்து இயக்கங்கள் அதற்கு எதிராகவும் இருக்கின்றன. எதற்கு இத்தகைய ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி?
5. ‘காலா என்னும் பெயரே வடமொழி மூலத்தைக் கொண்டது. வேதத்தில் அச்சொல் வருகிறது. ஸ்ரீராமனை காலாம்போதர… ’ என மந்திர நூல்கள்
வர்ணிக்கின்றன
. (அதாவது கார்மேகத்தின் வர்ணம்
கொண்டவன் என்று
.) இருப்பினும் இவை அனைத்தையும்
ஹிந்து மதத்திற்கு எதிராகத் திருப்பி போலி பரப்புரை உரையாடல்களை உருவாக்குகிறார்
இயக்குநர்
.
6. ஆஞ்சநேயர் குங்குமத்தை மட்டும் அல்ல. ஆஞ்சநேயரையும்
கீழ்மைப்படுத்தும் விதமான காட்சிகள் உண்டு
. இறுதிக் காட்சிகளில் வரும்
வில்லனின் உடல்மொழியையும் அந்தக் கதாபாத்திரம் பயன்படுத்தும் கதையை ஒத்த
ஆயுதத்தையும் பார்த்தால் இது புரியும்
.
7. வில்லனின் நிறுவனத்தின் பெயர் ‘Manu Builders’. இதற்கு நான் விளக்கவுரை தரவேண்டியது இல்லை.
8. அந்தண வெறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி? ஆகவே வில்லனின் பெயரில் சித்பவன் அந்தணர் துணைப்பெயரான அய்யங்கர்
இணைக்கப்பட்டுள்ளது
.
ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி? சரி, ஏனோ காழ்ப்புணர்ச்சி என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்கு மாற்றாக இயக்குநர் எதை வைக்கிறார்?
. படம் முழுவதும் புத்தர் சிலைகள் வருகின்றன. இயக்குநருக்கும்
அறிவுஜீவிகளுக்கும் தெரியாத
விஷயம் என்னவென்றால் பௌத்தம் ஜாதி அமைப்பை ஏற்கிறது
என்பதுதான்
. லஸிதி வஸ்தார சூத்திரத்தில் போதி சத்துவர் அந்தண/சத்ரிய உயர்குலத்தில்தான் பிறக்க முடியும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. Y.Krishnan எழுதிய ‘Buddhism and the caste system’
என்னும் கட்டுரையை
(Journal of the International Association of
Buddhist studies vol.a. Number 1)
வாசித்தால் தலை சுற்றும். வைதீக ஹிந்து மதப்பிரிவுகளில் இரு பிறப்பாளர் அல்லாதவர்களுக்கு மோக்ஷ உபாயமாக
புராணங்கள் கூறப்பட்டுள்ளன
. தொல் பௌத்தத்தில் அப்படியான
வழிமுறை கூட இல்லை
. திரு.அம்பேத்கருக்கு ஓரளவிற்கு இது
தெரியும்
. அதனால்தான் அவர் ஒரு புது பௌத்த பிரிவை உருவாக்கினார். ‘நவயானா என்ற பெயரில் திரு.அம்பேத்கர் பௌத்தத்தின் ஆதாரக் கொள்கையான கர்மாவையும் மறுபிறப்பையும்
நிராகரித்தார்
. (இவற்றை ஏற்றுக்கொண்டால்
ஜாதியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
.) இவை இல்லாத ஒரு பௌத்தம் பௌத்த
மதமே அல்ல என்பது செவ்வியல் பௌத்தர்கள்
மற்றும் ஆய்வாளர்களின்
கருத்து
. இதைப்பற்றி எல்லாம் இயக்குநர் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை
.
. இதைத் தவிர திரு.அம்பேத்கரின் உருவச்சிலையும், .வே.ரா.வின் உருவச்சிலையும் படம்
முழுக்கக் காட்டப்படுகின்றன
. இஸ்லாம் குறித்த திரு.அம்பேத்கரின் கருத்து என்ன, ஏன் அவர் இந்திய ராணுவத்தில்
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறையக் கூடாது என்றார்
, இஸ்லாமிய அரசியலுக்கும் ஜனநாயக அமைப்பிற்கும் இடையேயான முரண் குறித்த திரு.அம்பேத்கரின் வாதம் முதலியவற்றை இயக்குநர் வசதியாக மறந்துவிட்டார்போல. (‘ஹிந்துத்துவ அம்பேத்கர் நூலை ஏனையோர் வாசிக்கலாம்.) பட்டியல்
இனத்தவர் மற்றும் இஸ்லாமியர் குறித்த ஈ
.வே.ரா.வின் கருத்தை நான் கூறவேண்டிய
தேவை இல்லை
.
காலாவின் குலதெய்வம் காலாச்சாமிதானே. எனவே ஹிந்துக்களின் சிறுதெய்வ வழிபாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறதே என்ற
கேள்வி எழும்
. இதிலும் ஒரு விஷமம் உண்டு. சமுத்திரக்கனி காலாச்சாமி பிரசாதம் என்று கூறி காலாவை கள் அருந்தச் செய்கிறார். பின்னர் காலாவின் மனைவியும் மகனும் கொல்லப்படும்போது காலாவே தான்
கள்ளுண்டதனால்தான் அதனைத் தடுக்க முடியாமல் போனது என்கிறார்
. நுட்பமாகச் சொல்லப்படும் செய்தி என்ன? ஹிந்து மத எதிர்ப்பாளர்களும்
மிஷனரிகளும் சிறு தெய்வ வழிபாட்டை முன்னெடுப்பதற்கு முக்கியமான காரணம்
என்னவென்றால் சிறு தெய்வ வழிபாடுகளில் இத்தகைய விஷமங்களைச் செய்யலாம் என்பதுதான்
. மறைமுகமாக குறுதெய்வங்களை வழிபடுவதால் அபாயமே உண்டு என்பது அல்லவா படம்
சொல்லும் செய்தி
?
குழந்தைகளை போராட்டக்களத்திற்குக் கொண்டுவருவது என்னும் கண்டிக்கத்தக்க
வழக்கம் சில ஆண்டுகளுக்கு
முன் ஐஐடி .வெ.ரா. வாசக வட்டம் பிரச்சினையில்
தொடங்கியது
. இதனை அப்போதே கவிஞர் தாமரை போன்றவர்கள் கூட
கண்டித்தனர்
. இன்று இது அனைத்து சமூக விரோத சக்திகளும்
பயன்படுத்தும் தந்திரமாக மாறியுள்ளது
.
இத்தகைய நிலமோசடி விஷயங்களில் சாதாரணமாக பெரும்பங்கு வகிக்கும் அரசு சாரா
நிறுவனங்களையும்
(NGO) ஆட்சியாளர் தரப்பையும் (அப்பகுதி ச..) மிக மெலிதாகதான் கண்டிக்கிறார்.
நாஞ்சில் நாடனின் எட்டு திக்கும் மதயானை தொடங்கி ஜெயமோகனின் புறப்பாடு வரை பல படைப்புகளிலும் சொல்லப்பட்டிருக்கும் தாராவி ஜாதிப் பிரச்சினைகள் ஆக மொத்தம் ஒரு வரியே இந்தப் படத்தில்
வருகிறது
. இந்தப் பிரச்சினையைக் குறித்தெல்லாம் பேசாமல் எத்தகைய
சமூகநீதி திரைப்படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார் என்று புரியவில்லை
.
ஹிந்து மதத்தை திரைப்படங்களில் சிறுமைப்படுத்த முயல்வது புதிது ஒன்றும் இல்லை. இத்தகைய முயற்சிகளுக்கு ஹிந்துக்கள் என்றும் அறிவுசார் தளத்தில் மட்டுமே
எதிர்வினையாற்றியுள்ளனர்
. இனியும் அப்படித்தான். ஆனால் இத்தகைய திரைப்படங்கள் ஒரு சில சிறுபான்மையினரையும், விளிம்பு நிலை மக்களையும் தவறாக வழிநடத்தி தனிமைப்படுத்தி அவர்களின்
வளர்ச்சியைத் தடுத்துவிடுமோ என்பதுதான் நம் கவலை
. ‘மெட்ராஸ் திரைப்படத்தில் நாம் கண்டது திரைக்கலையில் புதிய
அழகியலை
, ஆவணப்படுத்தப்படாததை ஆவணப்படுத்திய நம்பிக்கை நட்சத்திரமான
ரஞ்சித்தை
. ஆனால் காலாவில் இருப்பது வெறுப்பின் தேய்வழக்கை
உமிழும் ஒருவர்தான்
. தவறான சித்தாந்த ரஞ்சித் கலையை
பலிவாங்கிவிட்டார்
.

Posted on Leave a comment

பாலகுமாரன்: ஒரு பெருந்துவக்கத்தின் மறைவு | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

11 வயது 12 வயது இருக்கும் போது எனக்கு இரண்டு பிரதான பொழுதுபோக்குகள் இருந்தன: ராஜேஷ் குமாரின் நாவல்களை வாசிப்பது; எங்கள் ஊர் பிரபு உணவகத்தில் மூக்கு முட்ட அசைவ உணவை உண்பது. பழைய புத்தகங்களை விற்கும் கடையும், மேற்படி அசைவ உணவு விடுதியும் அருகருகே இருந்ததினால் இந்த இரண்டு விஷயங்களையும் ஒருங்கே செய்வது என் வழக்கம். அக்காலகட்டத்தில் அந்த உணவு விடுதியில் பணிபுரிந்த பலரும் நல்ல வாசகர்களும் கூட.

சிறுவனான நான் எத்தகைய புத்தகங்களை வாசிக்கிறேன் என்பதில் என் வீட்டாரைப் போல அவர்களுக்கும் ஆர்வம் இருந்தது. அவர்களில் பலர் ராஜேஷ் குமாரை வாசிப்பதை ஊக்குவிக்கவும் செய்தனர். ராஜேஷ் குமாரின் எழுத்தில் ஆபாச வர்ணனைகள் இருக்காது என்பது ஒரு முக்கியக் காரணம். அங்குப் பணிபுரிந்தவர்களில் ஒருவர் மட்டும் பாலகுமாரனின் நாவல்களை ஓரிரு வருடங்களுக்குப் பிறகு நான் வாசிக்கத் தொடங்கவேண்டும் என்று கூறியவண்ணம் இருப்பார். ஏனையவர்கள் பாலகுமாரனைக் கொஞ்சம் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அவரது எழுத்தில் இருக்கும் பாலியல் சார்ந்த விஷயங்கள் / மெல்லிய ஆபாசம் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பாலகுமாரன் என்னும் பெயரை நான் கேட்டது இக்காலகட்டத்தில்தான்.

வெகுவிரைவில் அசைவ உணவையும், ராஜேஷ் குமாரையும் விட்டு வெளியே வந்தேன். (ஆனால் இன்றளவும் துப்பறியும் கதைகளின் ரசிகன்தான்.) வாடகை நூல் நிலையம் ஒன்றில் பாலகுமாரனின் நாவல்களைக் கண்டபோது, பழைய உபதேசத்தால் உந்தப்பட்டு அவரது நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன். பாலகுமாரனின் நாவல்களில் வரும் மாந்தர்களை ஒத்த நபர்களை நான் எனது வாழ்க்கையில் எதிர்கொள்ளத் தொடங்கியிருந்த காலம் அது. கணவனை இழந்த மகளிடம் கறாராக, தனது வீட்டில் குடியிருக்க வாடகை வாங்கும் தாயை நேரில் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை பாலகுமாரனின் நாவலிலும் காண முடிந்தது. வித விதமான மனிதர்கள், அவர்களது செயல்கள், குணநலன்கள், சிறுமைகள் ஆகியவற்றை நிஜ வாழ்விலும், பாலகுமாரனின் படைப்புகளிலும் காணத் தொடங்கினேன். நிஜ வாழ்க்கையில் காண்பவற்றைப் படைப்புகளிலும், படைப்புகளில் வாசிப்பதை நிஜ வாழ்விலும் பொருத்திப் பார்த்து மனிதர்களைப் புரிந்து கொள்ள முயன்றேன். அதில் பயன் இருந்ததா இல்லையா என்பதை விட அக்காலகட்டத்தில் எதோ ஒரு வகையான ஆறுதலை இந்த முயற்சி தந்தது எனலாம்.

வேறு ஒரு உபரி பயனும் இருந்தது. பாலகுமாரனின் வார்த்தைகளில் சொல்வது எனில் ‘மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க’ தொடங்கினேன். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் அவரது எழுத்துக்களில் இருந்த மிஸ்டிக் தன்மையும் என்னைக் கவர்ந்தது. பிராணயாமம், மந்த்ர ஜபம் போன்ற விஷயங்களைக் குறித்த அவரது எழுத்தைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். Arthur Avalon அறிமுகமானது அவர் வழியாகத்தான். பாலகுமாரனின் ஆன்மீக, சமூக, சரித்திர நாவல்கள் அனைத்தையும் ஒருமுறையாவது வாசித்திருப்பேன். அவரை விட்டு நான் விலகத் தொடங்கியது அவர் புராணக் கதைகளை மறுஆக்கம் செய்து எழுதத் தொடங்கியபோதுதான்.

பாலகுமாரனையும் அவரது படைப்புகளையும் மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. மாபெரும் எழுத்தாளர் என்று கூறுவதும் சரி, ஒரே அடியாக வணிக எழுத்தாளர் என்று நிராகரிப்பதும் சரி, அநீதியாகவே முடியும். கடந்த 30 / 40 ஆண்டுகாலத் தமிழ் வாசகனின் வாசிப்புப் பரப்பில் அவரது இடம் முக்கியமானதும் அசட்டை செய்ய முடியாததும் ஆகும்.

பாலகுமாரன் பெரும்பாலும் வணிகப் பத்திரிகையில்தான் எழுதினார். வணிகப் பத்திரிக்கையுலகில் பிழைக்கச் செய்யவேண்டிய பல சமரசங்களை அவர் செய்யவேண்டி இருந்தது என்பதில் மறுப்பு ஏதும் இல்லை. எழுதும் அளவைக் கொண்டே பிழைப்பு என்பதால் அவரது சில படைப்புகள் தட்டையாக, யூகிக்கத் தக்கதாக இருந்தன என்பதிலும் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால் இந்த நிலை என்பது எழுத்தை முழுநேர தொழிலாகக் கொள்ளும் எந்த எழுத்தாளனுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படுவதே. ஆனால் இதை அனைத்தையும் தாண்டி பாலகுமாரனின் படைப்புகளில் ஒரு உயிர் இருந்தது. அதற்குக் காரணம் அவற்றில் இருந்த உண்மைதான். அவரது படைப்புகள் பலவும் உண்மை நிகழ்வுகள்தாம்.

தனது அனுபவத்தையோ, அல்லது தனக்கு தெரிந்தவர் வாழ்வில் நடந்தவற்றையோ ஒரு கதாசிரியன் எழுதும்போது, நடந்த நிகழ்வைச் சொல்வதோடு நிற்காமல், அதன் வாயிலாக ஒரு தரிசனத்தை வழங்க வேண்டும் என்பது இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை விதி. இது பலருக்கும் பல நேரங்களில் கை கூடுவதில்லை. படைப்பாளி வெறும் கதைசொல்லியாக இருந்தாலும் அக்கதை வாசகனை எதாவது ஒருவகையில் பாதிக்கவே செய்யும். அன்றும் இன்றும் தீவிர இலக்கிய ஆக்கங்களையும் மெய்யியல் நூல்களையும் வாசிக்கிறேன். ஆனாலும் பாலகுமாரனை மறுதலிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதில் இன்னொரு வேடிக்கையான விஷயமும் உண்டு. பாலகுமாரன் தன்னை ஒரு இலக்கியவாதியாக முன்வைப்பதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. (அவர், தாம் ஒரு இலக்கியவாதியை விட மேலான இடத்தில் இருப்பதாகவே கருதிக்கொண்டார். அவரது பெரும்பான்மையான வாசகர்களுக்கும் அத்தகைய எண்ணமே இருந்தது.)

பாலகுமாரன் Arthur Hailey யைப் போல ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களைச் சேர்த்து அதனை மய்யமாக வைத்துப் புதினங்களைப் படைப்பதிலும் வல்லவராக இருந்தார். உதாரணம் :பயணிகள் கவனிக்கவும் நாவல். இது அத்தனை எளிதான விஷயம் அல்ல. ஜோ டி க்ரூஸ், தாம் வாழ்க்கை முழுக்கப் புழங்கிய கப்பல் சரக்கு போக்குவரத்தைக் குறித்து எழுதிய அஸ்தினாபுரம் நாவலில், துறை சார்ந்த உலகிற்குள் வாசகனைக் கொண்டுவரமுயன்று தோற்றதை நாம் இங்கே எண்ணி பார்க்கவேண்டும்.

பாலகுமாரன் ஹிந்து மதம் சார்ந்த சடங்குகளையும், வாழ்க்கை முறையையும் வெகு ஜனங்களிடம் கொண்டு சேர்த்தார். திராவிட இயக்கங்களின் தாக்கத்தால், ஜபம் செய்வது, பூஜை செய்வது என்பதைக் குறித்தெல்லாம் பேசுவது கூட நாகரீகமானது அல்ல என்பது பொதுப் புத்தியில் இருந்துவந்த காலத்தில் பாலகுமாரன் வித விதமான ஜெப முறைகளைப் பிரபலப்படுத்தினார். ஹிந்துவாக வாழ்வது பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்கினார். உதாரணத்திற்கு, உச்சிஷ்ட கணபதியை குறித்து பெரும்பாலான தமிழர்கள் தெரிந்து கொண்டது அவரது ‘என் இனிய யக்ஷிணி’ நாவல் வழியாகத்தான். இத்தகைய விஷயங்களில் பாலகுமாரன் நூறு சதவீதம் சரியான தகவல்களைத் தந்தார் என்று கூற முடியாது. இருந்தாலும் இத்துறைகளில் ஆர்வம் உடையவர்களுக்கு அவரது படைப்பு ஒரு வாசலாக இருந்தது. அதே போல பாலகுமாரன் தமது படைப்புகள் வாயிலாக இளைஞர்களை நம்பிக்கையோடு கடுமையாக உழைக்க ஊக்குவித்தார். வேறு எந்த சுயமுன்னேற்ற நூல்களையும் விடச் சிறந்தவை பாலகுமாரனின் நாவல்கள்.

பாலகுமாரனிடம் தனிப்பட்ட முறையில் பழகி பிறகு விரோதியானவர்களும், கசப்படைந்தவர்களும், ஏமாற்றம் அடைந்தவர்களும் ஏராளம் என்று அறிவேன். ஒரு படைப்பாளியைத் தெய்வமாக, குருவாக, வழிகாட்டியாக மாற்ற முயல்பவர்கள் விதி அதுதான். படைப்பிற்கு வெளியே இருப்பவன் படைப்பாளியல்ல, சாதாரண மனிதன்தான் என்னும் உண்மையை உணர்ந்துகொண்டால் இந்தச் சிக்கல் இருக்காது.

பாலகுமாரனின் மறைவு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றிடத்தை உருவாகியுள்ளது என்பது நிதர்சனம். அதனை நிரப்புவது எளிதல்ல.

*

Posted on Leave a comment

நம்பிக்கைகள், நம்பிக்கைச் சிதைவுகள் மற்றும் நியாயப்படுத்தல்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

சுமார் அறுபது வருடங்களுக்கு முன் சமூக உளவியல் துறையில் ஒரு புதிய கோட்பாடு உருவானது. பொதுவாக சமூகவியல், உளவியல் போன்ற துறைகளில் கோட்பாடுகளுக்கு நீடித்த ஆயுள் இருப்பதில்லை. Leon Festinger என்னும் உளவியல் ஆய்வாளர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் Cognitive Dissonance என்னும் கருத்தை / கோட்பாட்டை முன் வைத்தார். அது இன்றளவும் மிகவும் சமூக உளவியல் துறையில் பலமான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. (அவரது மற்றொரு கோட்பாடு Social Comparison Theory.) சமூகவியலும் உளவியலும் இணையும் புள்ளியில்தான் சமூக உளவியல் என்னும் துறை உருப்பெறுகிறது. தனி நபருடைய உளவியல் என்றல்லாமல் ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் கூட்டு முடிவுகளின் உளவியலை, கூட்டு முடிவுகளின் இயங்குதலை ஆராய முயல்கிறது. இத்துறையில் இருக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கான செலுத்தி வரும் கோட்பாடுதான் Cognitive dissonance. Cognitive dissonance என்ற பதத்தை நேரடியாக மொழிபெயர்ப்பது சற்று சிரமம்தான். ஒரு நபரின் நம்பிக்கைகளுக்கும் அவரது செயல்களுக்கும் இடையே எப்போதும் ஒருமை இருக்காது. ஒரு நபர் தான் காத்து வரும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப எப்போதும் செயல்பட முடியாது. ஒருவர் கட்டிக்காத்து வரும் லட்சியத்திற்கும் அவரது செயல்பாடுகளுக்கும் இடையே வரும் ஒத்திசைவு இன்மையையே cognitive dissonance என்று சொல்வோம். அனைத்து நபர்களுக்கும் தங்கள் எண்ணப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இல்லாவிட்டால் ஒத்திசைவு இன்மை ஏற்படும். இந்த ஒத்திசைவு இன்மையைச் சரிசெய்ய அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்குப் பல வழிகளையும் கையாள்வார்கள்.

ஒரு உதாரணத்துடன் விளக்க முயல்கிறேன். தான தர்மம் செய்வது நல்ல விஷயம் என்று எண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் உதவி கேட்டாலும் அவருக்குத் தவறாமல் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை ஒருவர் உங்களிடம் ஆதரவற்றோர் இல்லத்திற்காக ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் அவருக்குப் பணம் கொடுக்கமுடியவில்லை. இந்தச் சூழலால் உங்கள் நம்பிக்கைக்கும் உங்கள் செயலுக்கும் இடையே ஒரு முரண் ஏற்படும். அந்த dissonanceஐ அதாவது ஒத்திசைவு இன்மையைச் சரி செய்ய முயல்வீர்கள். குறைந்த அதன் வீரியத்தைக் குறைக்க முயல்வீர்கள். இதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன. ஒன்று நம் செயல்பாட்டினை மாற்றலாம். அதாவது இந்த ஒருமுறை போகட்டும், அடுத்த முறையில் இருந்து தவறாமல் பணம் கொடுப்பேன் என்று முடிவு எடுப்பது. இரண்டாவது, நமது மனநிலையை லேசாக மாற்ற முயலலாம். மூன்றாவதாக அது எத்தனை முக்கியமான விஷயம் அல்ல என்று நமக்கு நாமே சமாதானம் கூறலாம். உ.ம். அப்போது உங்களிடம் பணம் ஏதும் இல்லை அல்லது உதவி கேட்டவன் மேல் நம்பிக்கை இல்லை என்பவைபோல. இத்தகைய சமாதானங்கள் ஒத்திசைவின்மையைக் குறைக்கும் ஓரளவு மன ஆறுதலையும் தரும்.

இதனை இரண்டு வரலாற்றுச் சம்பவங்கள் வாயிலாக இன்னும் தெளிவாக விளக்கலாம். இன்று Seventh Day Adventist என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கிறித்தவ மதப்பிரிவை உருவாக்கியவர்களில் அல்லது உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வில்லியம் மில்லர் (William Miller). பழைய ஏற்பாட்டில் உள்ள தானியேல் 8:14 வரியை அடிப்படையாக வைத்து ஒரு தீர்க்க தரிசனத்தைக் கூறினார். அதனை தீர்க்கதரிசனம் என்றுகூட கூறக்கூடாது. ஒரு புதிரின் விடையைக் கூறினார் என்று கூறலாம். 22.10.1844 அன்று இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்றும் 1840களில் கூறிவந்தார். இதனை நம்பிய வேறு பல கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மில்லருடன் சேர்ந்து அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். கிறிஸ்தவ இறையியலின் அடிப்படைகள் அறிந்த அனைவருக்குமே தெரிந்த விஷயம் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் வருகை என்பது இறுதி தீர்ப்பு நாளைக் குறிக்கும் என்பது. அதாவது இரண்டாம் வருகையோடு உலகம் அழந்துவிடும். நான் 22.10.1844 அன்று இயேசு கிறிஸ்து மீண்டும் வரவில்லை என்பதைச் சொன்னது பலிக்காமல் போய்விட்டதால் அவரது மதக்குழு அப்படியே கலைந்திருக்கும் என்றுதானே எண்ணுகிறீர்கள்? அதுதான் இல்லை. பலர் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு வெளியேறினாலும் உள்வட்ட நம்பிக்கையாளர்கள் தானியேல் 8:14 விடத் தயாராக இல்லை. அந்த வரிக்கான விளக்கம் சரிதான் என்றும், கிறிஸ்து அந்த நாளில் பூமிக்கு வருவார் என்று கணித்தது மட்டுமே தவறு என்றும் கிறிஸ்து சொர்க்கத்தின் ஒரு பகுதியில் இருந்து மேற்பட்ட மற்றொரு பகுதிக்குச் சென்ற நாள் அதுவென்றும் விளக்கங்களைக் கொடுக்கத் தலைப்பட்டனர். இது மட்டும் அல்லாமல் அந்த மாபெரும் வீழ்ச்சியில் இருந்து Seventh Day Adventists என்னும் மிகப்பெரிய கிறிஸ்தவ மத நிறுவனத்தையும் கட்டி எழுப்பினார். குறிப்பிட்ட தினத்தன்று தமது தலைவர் சொன்னபடி நடக்கவில்லை என்பதால் ஏற்பட்ட cognitive dissonanceஐ சமாளிக்கத்தான் அத்தனை தத்துவ விளக்கமும் என உளவியலாளர் கருதுவார்.

Cognitive Dissonance கோட்பாட்டை முன்வைத்த Festinger ஒரு ஆய்வை மேற்கொண்டு தமது வாதத்தை நிரூபித்துள்ளார். 1950களில் ‘Seekers’ என்ற பெயரில் உள்ள UFO + மத குறுங்குழுவிற்குள் ஊடுருவி ஆராய்கிறார். Dorothy Martin என்ற சிகாகோ பெண்மணி இந்தக் குழுவில் மீடியமாகச் செயல்படுகிறார். இவருக்கு க்ளாரியன் என்ற கிரகத்தில் இருந்து செய்திகள் வருவதாகக் கூறுகிறார். அச்செய்திகள் 21-2-1954 அன்று இரவு உலகம் அழிந்துவிடும் என்றும் Seekers குழுவினரை மட்டும் Clarion கிரகத்தில் இருந்து ஒரு விண்கலம் வந்து காப்பாற்றும் என்றும் கூறப்படுகிறது.

Seekers இச்செய்தியைக் கொண்டு பிரபலமடைய முயலவில்லை. மாறாக அவர்கள் முடிந்தமட்டும் தங்கள் இடையேயே இச்செய்தியை வைத்துக் கொள்கிறார்கள். Festinger ஆட்கள் மிகுந்த சிரமத்தோடுதான் அக்குழுவில் ஊடுருவுகின்றனர். குழு உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு 20.12.1954 அன்று ஒரு இடத்தில் கூடி விண்கலத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

21ம் தேதி பிறந்த பிறகும் எந்த விண்கலமும் வரவில்லை. உடனடியாக டாரதிமார்டின் ஒரு தற்காலிக விளக்கத்தைக் கூறுகிறார். உறுப்பினர்களிடம் உலோகப் பொருட்கள் இருந்ததுதான் விண்கலம் வராமைக்குக் காரணம் என்கிறார். தங்களுடைய வைக்கப்பட்ட பற்கள் உட்பட அனைத்து உலோகப் பொருட்களையும் உறுப்பினர்கள் வெளியே ஏறிகின்றனர். 21.12.1954 அன்று உலகமும் அழியவில்லை விண்கலமும் வரவில்லை. தங்கள் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள ஒத்திசைவின்மையை (Cognitive Dissonance) அவர்களால் தாங்க முடியவில்லை. ஏதாவது தீர்வு வந்தாக வேண்டும். சிறிது நேரத்தில் மீடியம் டாரதி ஒரு புதுச் செய்தி கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். இவர்களுடைய பிரார்த்தனையையும் நம்பிக்கையையும் பார்த்து மகிழ்ந்த கடவுள் பூமிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துவிட்டார் என்றும் அதனால்தான் உலகம் அழியவில்லை என்றும் கூறுகிறார். ஒத்திசைவின்மை ஓரளவு சமன்படுத்தப்படுகிறது. உறுப்பினர்களும் நிம்மதி அடைகின்றனர். உடனடியாக இந்த விளக்கத்தை அனைவருக்கும் சொல்லவும் முயல்கின்றனர். அந்தக் குழுவும் 1991கள் வரை துடிப்பாகவே இயங்கி வந்தது. இந்த விவகாரத்தை ‘When Prophecy Fails: A Social and Psychological Study of a Modern Group That Predicted the Destruction of the World’ என்னும் நூலில் விளக்கியுள்ளர்.

உலகு எங்கிலும் மக்கள் நம்பிக்கை உடையும்போது, அவர்கள் நம்பிய அறங்களுக்கு மாறாகச் செயல்பட வேண்டி வரும்போது ‘Cognitive Dissonance’ஐ எதிர்கொள்கின்றனர். இந்த ஒத்திசைவின்மையை எப்படிச் சரிசெய்வது என்பதில் அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றனர்.

Cultural Studies துறையிலும் இலக்கியத்திலும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களில் ஒரு இடம் வரும். சியாமளி தனது கணவனையும் குழந்தையையும் விட்டு காதலனுடன் ஓடிப்போகத் தீர்மானம் செய்வாள். ஓடிப்போகத் திட்டமிட்ட அன்று காலையில் சாமர்த்தியமாகக் கணவனை குழந்தையையும் விலங்குக் காட்சி சாலைக்கு அனுப்பி வைப்பாள். கணவனை விட்டு வருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் குழந்தையை, அதுவும் பெண்குழந்தையை விட்டு வருவது அப்படி அல்லவே. ஓடிப்போனவள் மகள் என்ற பட்டத்தை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டி இருக்கும், சியாமளிக்குத் தாய்மை என்ற கருதுகோளில் இருந்து தான் விலகத் தீர்மானித்ததால் Cognitive Dissonance வருகிறது. போதாக்குறைக்குக் காதலனும் அதனைக் குறித்துக் கேட்கிறான். சியாமளி நூதனமான முறையில் இந்த ஒத்திசைவு இன்மையைச் சரி செய்ய முயல்கிறாள். குழந்தை தன் குடும்ப ஜாடை இல்லை என்கின்றாள். குழந்தைகளுக்கு க்ரூர குணம் என்கிறாள். இதெல்லாம் Dissonanceஐக் குறைக்க அவள் எடுக்கும் முயற்சிகளே.

ஒரு வகையில் பார்த்தால் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலே இந்த cognitive dissonance ஐ அடிப்படையாகக் கொண்டதுதான். இரண்டு இடதுசாரிகள் தாங்கள் நம்பும் சித்தாந்தம் பிறழ்கிறது என்னும்போது dissonanceம் அதனை எதிர்கொள்ளும் விதமும்தான் இந்த நாவல் என்று கூறலாம்.

சுராவின் வார்த்தைகளில் கூறுவது எனில் பலரும் மனிதனுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக ஊடகங்கள் மக்கள் தங்களுக்கு ஏற்படும் cognitive dissonance ஐக் குறைப்பதற்கான வழிமுறைகளைச் சுட்டிக்காட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் முயல்கின்றன. சமீபத்திய சர்ச்சைக்குரிய படமான ‘லஷ்மி’யை இவ்விதத்தில் பார்க்கலாம். கற்பு என்பது வள்ளுவர் காலம், சிலப்பதிகார காலம் தொட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் ஒரு அறம். திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்பது தவறானது என்பது நமது மனதில் ஆழப்பதிந்த விஷயம். எனவேதான் திருமண பந்தத்திற்கு வெளியே உள்ள உறவைக் குறித்த குற்றவுணர்ச்சி நம்மவர்களிடையே உண்டு. அதுதான் நம் பண்பாட்டையும் காக்கிறது. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவைக் குறித்து கனவு காண்கின்றவர்கள், அதில் ஈடுபடுகிறவர்களுக்குக் கடுமையான cognitive dissonance ஏற்படுகிறது. இதற்கு ஆறுதல் அளிக்கும் முயற்சியைத்தான் மேற்படி குறும்படம் செய்கிறது. அதாவது விவாகரத்து வேண்டாம் பொருந்தாத திருமணம் உறவு என்றபோது எப்போதாவது வேலிதாண்டுவதில் தவறில்லை என சொல்ல முயல்கிறது. Dissonance ஐ குறைப்பதற்கான வாதங்களைத் தருகிறது. அதுதான் அப்படத்தின் பிரபலத்தன்மைக்குக் காரணம்.

எல்லா விதமான அறமீறல்களுக்கும் நியாயம் கற்பிக்க முயல்வது மனித இயல்பே. இதில் தங்களைத் தாங்களே முட்டாள் ஆக்கிக் கொள்வதும் ஒரு பகுதி. அதற்கான உளவியல் ரீதியான அடிப்படை cognitive dissonanceல் உள்ளது. என்ன, இனி வரும் காலத்தில் ஒழுங்காக இருப்பவர்கள் அனைவரும் அசமந்தங்கள் என எதிர்தரப்பினர் கூறாமல் இருந்தால் சரிதான்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையின் இறுதி வடிவைத் தயாரித்துக்கொண்டு இருக்கும்போது குஜராத் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஒரு கட்சியின் வெற்றியைப் பார்த்து எதிர் தரப்பினர் வாக்களிக்கும் இயந்திரத்தை எந்த வித முகாந்திரமும் இல்லாமல் குறை கூறுகின்றனர். இதுவும் cognitive dissonanceதானோ?

Posted on Leave a comment

எரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு சர்ச்சை – அனீஷ் கிருஷ்ணன் நாயர்


சமீபத்தில் ஒரு அரசியல் தலைவர் இறந்தபோது அவரது உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு வழியாகப் புதைப்பது என்று முடிவு செய்து அம்முறையில் இறுதி சடங்கையும் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் இன்றளவும் புதைத்தது தவறு என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அரசியல் தலைவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே தங்களது இறுதிச் சடங்குகளைக் குறித்தும் அவை நடத்தப்பட வேண்டிய முறை குறித்தும் தெளிவாக எழுதி வைத்திருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் பெருங்குழப்பம்தான்.

இத்தகைய சர்ச்சைகள் புதிதல்ல. பதினேழாம் நூற்றாண்டிலேயே இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தச் சர்ச்சை பன்னிரண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கிறது.

இதனை தஞ்சை சரஸ்வதி மஹால் ஆவணங்கள் வாயிலாக அறியலாம். சரஸ்வதி மஹால் சேகரிப்பில் ‘ஞபரமானந்தயோகி சரித்திரம் (பூர்ணபிரம்மானந்த யோகி கூற்று)’ என்னும் பதினேழாம் நூற்றாண்டு ஆவணம் உள்ளது.

தஞ்சை மராத்திய பேரரசைச் சேர்ந்த மன்னன் ஷாஹாஜி போன்ஸ்லே 1684 முதல் 1712 வரை ஆண்டவர். முஹாலயப் படைகளுக்கு எதிராக வெற்றிகரமான பல தாக்குதல்களை நடத்தியவர். கலை இலக்கியப் புரவலர். இவரது மரணத்திற்குப் பிறகு அவரது பூத உடலைத் தகனம் செய்வதா புதைப்பதா என்று குழப்பம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த சில விஷயங்கள் ‘சமாதிலிங்க பிரதிஷ்டை விளக்கம்’ என்னும் பெயரில் மஹால் வெளியிட்ட நூலின் பின்னிணைப்பாக உள்ளது. இவற்றைத்தான் மேற்கண்ட ஆவணம் விவரிக்கிறது.

ஷாஹாஜி இறந்த செய்தி கேட்டதும் பரப்பிரம்மானந்த யோகி (அவரது சீடர் பூரணப்பிரம்மானந்த யோகியும் உடன் வர) வல்லத்தில் இருந்து தஞ்சை கோட்டைக்கு வந்து கோட்டை ஹவில்தாரான சீத்தப்பராவிடம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘சகசிராசீபரர் சரீர வாசம் விட்டு தவலோகம் போனார். அவர் நமக்கு ஆன்மபந்து. அவர் வாசம் பண்ணின கோயில் மந்திரபிண்டமான படியினாலே அவர் கோயிலான மந்திரபிண்டத்தை சமாதியிலே வையுங்கள்.’

ஹவில்தார் துரையிடம் கேட்டுத் தக்கபடிச் செய்வதாக கூறுகிறார். இங்கு துரை என்பது அடுத்த பட்டம் ராஜாவைத்தான் குறிக்கும் என்று எண்ணுகிறேன். துரை பரம்பரையாக நடக்கும் சம்பிரதாயத்தை மாற்றக்கூடாது என்கிறார். “இப்போது நூதனமாக ஒன்று செய்தால் பூர்வீகம் தவறி போகும்” (78) என்று கூறி ஷாஹாஜியின் உடலைத் தகனம் செய்து விடுகிறார்.

இவ்வாறு அரசரது உடல் புதைக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டதை அறிந்த பரப்பிரம்மானந்த யோகி மிகவும் வருத்தம் அடைகிறார். அவர் ஹவில்தாரைக் கண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“சம்பிரதாயம் பார்த்தீர்களே தவிர மகிமை அறியாது போனீர்கள்… இராசாவுக்கும் தேசாதிபதிக்கும் மண்டலாதிபதிக்கும் ஆகிய இவர்களிடத்திலே சிவம் மாத்திரை போது இருக்கும். சகஜிராசீசுபரர் சதாசிவ பிரம்மம். அவர் வாசம் பண்ணின கோயில் மந்திரபிண்டமான திருக்கோவில். அது தகனமான தோஷம் பதினாறு வருடம் வருத்துமே இராசாவுக்கு ஆகாதே. இராக்சியத்துக்கு ஆகாதே.”

இவ்விடத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது. யோகி அரசனின் உடலை எரிக்கக் கூடாது என்று கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சிலர் கூறுவது போல மன்னர் இறுதி நாட்களில் சன்னியாசம் எடுத்துக் கொண்டார் என்பது உண்மையாக இருக்கலாம். அதனால்தான் மன்னனை ‘சதா சிவ பிரம்மம்’ என்று கூறி இருக்கலாம். இல்லையெனில் அரசர்கள் விஷ்ணு அம்சம் என்ற நம்பிக்கை இருப்பது போல, அரசர்கள் சிவ அம்சம் (‘மாத்திரை அளவு சிவம் இருக்கும்’) என்ற நம்பிக்கை கூட அரசன் உடலை எரியூட்டக் கூடாது, புதைக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியதற்குக் காரணமாக இருக்கலாம். அரசனிடம் சிவ ஸ்வரூபம் உள்ளது என்பது சோழர் காலம் தொட்டு, அதற்கும் முன்பிலிருந்தே இருக்கும் நம்பிக்கை எனக் கொள்ளலாம். முன்னர் அரசர்களுக்கு அவர்களைப் புதைத்த இடத்தில் பள்ளிப்படை கோவில்கள் இருக்கும. பள்ளியடைதல் எனில் உறங்குதல் என்றும் இவ்விடத்தில் நீங்காத உறக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் பள்ளிப்படை கோவில்களில் ஆதிசைவர் பூஜை செய்யவில்லை. காளாமுகர்கள்தான் பூஜை செய்துள்ளனர்.

ஹவில்தார் நடந்த விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்து பரிகாரம் கேட்கிறார். பரமானந்தயோகி தக்க பரிகாரத்தைக் கூறுகிறார். தனது சிஷ்யனான பூரணபிரம்மானந்த யோகியை பதினாறு வருடம் தஞ்சை நகரில் தவம் இருக்க வைப்பதே தக்க பரிகாரம் என்கிறார். அவ்வாறு தியான சமாதியாகிய தவத்தில் அவர் சகலருக்கும் நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வார் எனவும், அவரது தியானத்திற்கும் தவத்திற்கும் இடையூறு வராமல் காக்க வேண்டியது ஹவில்தார் சீத்தப்பாராவின் பொறுப்பு என்றும் கூறி ஸ்ரீங்கத்திற்குச் சென்று விடுகிறார்.

அவ்வாறு பூர்ணபிரம்மானந்த யோகி தவம் செய்து வருகையில் சீத்தப்பாராவ் இறந்து விடுகிறார். ஆனாலும் அவரது மகன் வைத்தியோசி ஹவில்தார் யோகியைப் பராமரித்து வருகிறார். ஆனால் தவம் இடையில் தடைபடுகிறது. யோகி, “…சமாதி நின்று போய் அடியேனையும் பட்டணம் விட்டு வெளியே கொண்டு போய் பத்திரம் செய்து விட்டார்கள்” என்கிறார். எதற்காக அவர் காவலில் வைக்கப்பட்டார் என்பது சொல்லப்படவில்லை. பிறகு வைத்தியோசி ஹவில்தார் உதவியுடன் திரும்பி தஞ்சைக்கு வருகிறார்.

இதற்கிடையில் காவேரி சம்மந்தமான பிரச்சினை ஒன்று வருகிறது. அனேகமாக நாயக்கர்கள் மற்றும் தஞ்சை மராட்டியர்கள் இடையே நீர் பகிர்தல் மற்றும் உபரிநீரை வெளியேற்றுதல் தொடர்பான சச்சரவாக இருக்கக் கூடும். இவ்விஷயத்திலும் சிஷ்ய யோகி தலையிடுகிறார். அவர் “…அதனால் திருச்சிராப்பள்ளிக்குப் போய் சமூக மீனாட்சி நாயக்கரைக் கண்டு விசயரருரங்கச் சொக்கநாத நாயக்கருக்கும் பயபக்தி வரத்தக்கதாய் தாகீதை செய்து…” என்று கூறுகிறார்.

ஒரு வழியாக 16 வருடம் முடிகிறது. தவக்காலம் முடிந்ததால் சாந்தி செய்து முறையாகப் பரிகாரச் செயல்களை முடிக்க வேண்டும் என்கிறார். இது விஷயமாக ஆறு முறை அரண்மனைக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. செய்தி பலர் வழியாக எழுத்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றால் எந்தப் பயனும் இல்லாததால் சிஷ்ய யோகி நேரடியாக அரண்மனைக்குச் சென்று ஒரு தாக்கீதைக் கொடுக்கிறார். அதன் பிரதி வழியாக நாம் அறிந்து கொண்ட விவரங்கள்தான் மேலே சொன்னவை.

மேற்கண்ட ஆவணத்தை நவசரித்திரக் கோட்பாடு (New Historicism) வழியாக அணுகலாம். Pramod. K. Nayar , From Text to Theory : A Hand book of Literary and Cultural Theoryல் கூறிய இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. “In New Historicist readings, texts (both literary and non-literary) are material practices and not simply linguistic acts because they actively shape a collective imagination and identity.” (108).

2. “Cultural forms such as literary texts embody social relations and power structures in a society and age…” (109).

இவ்விரண்டு கருத்துக்களையும் மேற்கண்ட ஆவணத்தில் பொருத்திப் பார்க்கும் போது சில கருத்துக்கள் தெளிகின்றன.

1. தஞ்சை மராத்தியர் ஆட்சியிலும் சைவ யோகிகள் பலமாகத்தான் இருந்தனர்.

2. மன்னர் உடலை எரிப்பதா புதைப்பதா என்று வந்த சர்ச்சை இரண்டு கலாசாரங்கள் மற்றும் மரபுகள் மோதி இணையும் / பிரியும் இடத்தில் உருவாவதுதான்.

3. அதிகாரிகள் யோகிகளை வருடகணக்கில் வைத்துப் பராமரிப்பதைச் சுமையாகக் கருதவில்லை.

4. ஹவில்தாரால் பராமரிக்கப்படும் யோகிகள் கூட அரச நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை.

5. ஹிந்து மதம் என்றுமே பாரதத்தை இணைக்கும் சரடாகவே இருந்துள்ளது. சைவரான யோகி கூறியதை வைணவ நாயக்கர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

6. ஆன்மிகவாதிகள் முக்கிய பிரச்சினைகளில் தூதுவர்களாகச் செயல்பட்டு சமரசம் செய்துள்ளனர்.

7. அரச வாரிசுகளுக்குத் தங்களுக்குமுன் ஆட்சி புரிந்தவர்களின் இஹலோக பரலோக வாழ்க்கையைக் குறித்து அதிகம் அக்கறை இருக்கவில்லை.

வரலாற்றின் விசித்திரமே அது மீண்டும் மீண்டும் தன்னை நிகழ்த்திக் கொள்வதில்தான் உள்ளது. இந்தச் சுழற்சியில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கிய கேள்வி.

Posted on Leave a comment

அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக் குரல் – அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

மார்ச் 23ம் தேதி இரவு, அசோகமித்திரனின் மறைவுச் செய்தியைக் கேட்டதும், என்னை ஒரு விதமான ஆற்றாமையும் கோபமும் சூழ்ந்துகொண்டது. ஒரு கலைஞனை ஆன மட்டும் நோகடித்து, அவனுக்குச் சேர வேண்டிய எந்தச் சிறப்பையும் சேரவிடாமல் செய்த நமது அறிவுச்சூழல் மீது வந்த கடுப்பு அது. ரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்ள முகநூலில் கீழ்க்கண்டவாறு ஒரு நிலைத்தகவலைப் பதிவு செய்தேன். “மேலும் ஒரு மேதைக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்தாயிற்று. அற்ப அரசியலின் வெற்றியை ஆர்ப்பரித்துக் கொண்டாடுங்கள். உங்கள் முகாமில் இருக்கும் அரைவேக்காடு துண்டுப் பிரசாரகர் எவராவது எழுதிய அறுநூறு பக்க பிரசாரத்தை அலங்கரித்து யானை மேல் ஏற்றும் பணியை உவகையோடு தொடர்ந்து செய்யுங்கள். காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் சவால் விட மாட்டேன். நீங்கள் அற்பர்கள் என்று உங்களுக்கு எப்போதும் தெரியும். அது போதும்.”

இன்று அசோகமித்திரனின் இலக்கிய ஆளுமையைக் குறித்து ஆராயும்போது அவர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதும் மிகவும் அவசியம் ஆகிறது. இன்றைய சூழ்நிலையில் அசோகமித்திரனை மறுதலித்த தரப்புகள் எவை என்பதை ஆராய வேண்டியது அவரது படைப்புலகை ஆராய்வதை விட முக்கியமானது எனக் கருதுவதற்கு இடமுண்டு. ஏனெனில் அசோகமித்திரனின் படைப்புலகை ஆராய்வதின் வாயிலாக நாமும் அவரது ஆளுமையை ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் மேதைமையை மறுத்த, இருட்டடிப்பு செய்த தரப்புகளைக் குறித்துத் தெரிந்துகொள்வதின் வாயிலாக நமக்கு நம்மைப் பற்றி, நமது அறிவுலகைப் பற்றித் தெளிவான சித்திரம் ஒன்று கிடைக்கும். சற்றே நிதானித்துச் சிந்தித்துப் பார்த்தால் அசோகமித்திரனை நான்கு தரப்புகள் தொடர்ந்து மறுதலித்து இருட்டடிப்பு செய்து கொண்டிருந்தன என்று தோன்றுகிறது. முதலில் முற்போக்குத் தரப்பு. இரண்டாவதாகத் திராவிடத் தரப்பு. மூன்றாவதாக வெகுஜன ஊடகங்கள் மீது கடும் காழ்ப்புக் கொண்ட சிற்றிதழ் அறிவுஜீவிகள் மற்றும் படைப்பாளிகள். நான்காவதாக முதிரா வாசகக் கூட்டம் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டது. இவர்களின் தரப்புகளையும் தவறுகளையும் நாம் பார்க்கலாம்

தமிழ் இலக்கிய சூழலில் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் /இடதுசாரி இலக்கிய அமைப்புகளின் இருப்பும், அவற்றின் பலமும் நன்கறிந்த ஒன்றே. இந்த அமைப்புகள் ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள். இதற்கான காரணங்கள் சில உள்ளன. நல்லதோ கெட்டதோ இடதுசாரி அமைப்புகள் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து, உடனடிப் பலனை எதிர்பார்க்காமல் செய்து வருகின்றனர். இலக்கியக் கூட்டங்கள், பயிற்றரங்குகள், இலக்கியக் கூடுகைகள் என ஏராளமான விஷயங்களை இவர்கள் ஒருங்கிணைக்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக வேறு அமைப்புகள் அதிகமாக இல்லை. இதன் வாயிலாக இவர்களுக்கு ஒரு வித கருத்ததிகாரம் கிடைக்கிறது. இந்தக் கருத்ததிகாரம் மூன்று இடங்களில் பாலமாகச் செயல்படுகிறது. பெரும்பாலும் இளம் வாசகர்களையும்,படைப்பாளிகளையும் அடையாளம் கண்டு கொள்வது இத்தகைய அமைப்புகள்தான். எனவே இவர்கள் மிக எளிதாக அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைத் திறனாய்வு என்ற போர்வையில் இளம் வாசகர்களிடமும் படைப்பாளிகளிடமும் திணித்துவிட முடியும். இதனால் தாம் பல இளைஞர்களும், இடதுசாரி படைப்பாளிகளும் சில மேதைகளை அவர்களது படைப்பில் ஒன்றைக்கூட வாசிக்காமல் நிராகரிக்கிறார்கள். இவர்களை de-radicalize செய்வது மிகவும் சிரமம். இன்னொரு பக்கம் கல்வி நிறுவனங்களில் உள்ள இந்த இயக்கத்தவர்கள் தங்களுக்கு ஒவ்வாத படைப்பாளுமைகளைக் கல்விச்சூழலில் இருந்து விலக்கி வைக்கும் வேலையை மிக திறமையாகச் செய்வார்கள். கருத்தரங்குகளுக்கு அழைப்புகள் வாராது. படைப்புகள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுக்கப்படமாட்டாது. நாவல்கள் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படாது. பல்கலைக்கழக நூலகங்களில் இவர்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்காது. இதில் வேறொரு வேடிக்கையும் உண்டு. அசோகமித்திரன் இடதுசாரிகளை விரோதியாகக் கருதியவர் இல்லை. அத்தரப்பிலிருந்து வரும் நல்ல படைப்புகளையும் அவர் அடையாளம் காட்டியிருக்கிறார். பல இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் நெருங்கிய நட்பும் இருந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒரு மார்க்சிய விமர்சகனுக்கு அணுக்கமான கூறுகள் அசோகமித்திரனின் படைப்புகளில் ஏராளமாக உள்ளன. ஆனால் நமக்குத்தான் ஒரு எழுத்தாளர் என்ன எழுதுகிறார் என்பதைவிட எங்கு உறுப்பினராக இருக்கிறார் / உறுப்பினராக இல்லை என்பது மிகவும் முக்கியமாயிற்றே. புஷ் சொன்னது போல் அவர் நம்முடன் இல்லையென்றால் நமது எதிரிதான் என்றே இடதுசாரிகள் தீர்மானம் செய்தனர். இதனால் அசோகமித்திரன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்.

அசோகமித்திரனுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்களைக் கிடைக்க விடாமல் செய்த மற்றொரு குழு, திராவிட அரசியல் சிந்தனைகளைக் கைக்கொண்டிருந்த குறுங்குழு. அசோகமித்திரன் பிராமணராகப் பிறந்தார் என்பதே இவர்களுக்கு போதுமான காரணமாக இருந்தது. போதாதகுறைக்கு அசோகமித்திரனின் நாவல்களில் சாமியார்கள் எல்லாம் வந்தனர். வந்த சாமியார்கள் நல்ல சாமியார்களாக இருந்தது மட்டுமல்லாமல் ஹிந்து சாமியார்களாகவும் இருந்தனர். இது மிகப் பெரிய மூட நம்பிக்கை அல்லவா! எனவே அசோகமித்திரனும் அவரது ‘பிற்போக்குப் பார்ப்பனீய எழுத்துக்களும்’ குறிவைத்துத் தாக்கப்பட்டன. அசோகமித்திரன் சுயவதைப்பிரியனுக்கே உரிய நெஞ்சுரத்துடன் வேறொரு விஷயத்தையும் செய்தார். தமிழ்நாட்டில் பிராமண இளைஞர்கள் ஒடுக்கப்பட்ட யூதர்களைப் போல் உணருகிறார்கள் என்று பொருள்படும் விதமாகப் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறினார். தமிழ்நாட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிராமண வெறுப்பும் இனவாதமும் யாரும் அறியாததல்ல. அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் நாசிகளுக்குச் சற்றும் குறைந்தவர்களுமல்ல. என்ன, நாசிகளுக்குக் கிடைத்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவ்வளவே.
ஆனால் இந்த உண்மையை எந்த ஒரு அறிவுஜீவியும் உரத்துக் கூறியதில்லை. இதனைத் தொடர்ந்து இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மேடைப் பேச்சாளர்கள் தொடங்கி, அவ்வியக்கங்களின் அறிவுஜீவிகள் வரை அனைவரும் அசோகமித்திரனை வறுத்தெடுத்தனர். முற்போக்கு பிராமணரைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் அவர்கள் குற்றங்களைத் துணித்து சுட்டிக் காட்டும் அசோகமித்திரன் போன்றவர்களைத் திராவிட இயக்கத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அசோகமித்திரனுக்கு சாஹித்ய அகாடமி பரிசு வழங்கப்படக்கூடாது எனத் தமிழகத்திலிருந்து கடிதம் சென்றதாகக் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இனி ஏதாவது ஒரு திறமையான ஆவண ஆய்வாளர் வந்தால் ஒழிய இச்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாது. இருப்பினும் அவ்வாறு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கும் எனில் நமக்கு அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (பின்னர் ஒரு திராவிடத் தலைவரின் பாராட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். ஆனால் அந்த் தலைவரின் படைப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இதுதான் ஒரு சாதாரணனின் ஒத்துழையாமைப் போர்). தன்னை எதிரியாகக் கருதிய அரசியல் இயக்கங்கள் வலுவுடன் இருந்த சூழலிலும் கூட அசோகமித்திரன் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தார்.

சிற்றிலக்கிய சூழலிலும் அசோகமித்திரனைத் தவறாக எடை போட்டவர்கள்தான் அதிகம். அவரது படைப்புகள் மேல் உள்ள விமர்சனங்கள் என்பதைத் தாண்டி அவர் மீதான விமர்சனங்கள்தான் அதிகமாக இருந்தன. அசோகமித்திரனின் அஞ்சலிக் கூட்டங்களில் கலந்துகொண்ட மூத்த விமர்சகர்களிடம் பேசும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. அன்றைய இலக்கியச் சூழலில் வணிக இதழ்கள் X இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு மிக்க கவனத்துடனும் வன்மத்துடனும் கைக்கொள்ளப்பட்டது. வணிக இதழ்களோடு நெருக்கமாக இருந்த படைப்பாளிகள் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக, பணத்திற்கு விலை போனவர்களாகக் கருதப்பட்டனர். இந்தப் பின்னணியில் அசோகமித்திரன் மீது இவர்களது வெறுப்பு படர்ந்தது. எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்தாலும் அசோகமித்திரன் தமது இலக்கியத்தில், இலக்கியச் செயல்பாடுகளில் எந்தச் சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. மத்திய /மாநில அரசு வேலையோ /பரம்பரை வியாபாரமோ /நில புலன்களோ இருந்திருந்தால் பரவாயில்லை. எழுத்தாளர்களுக்கு வாரி வழங்கும் இடத்திலும் அவர் வாழவில்லை. இந்நிலையில் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்க வேண்டுமா? ஆனால் தீவிர இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கு இந்த நியாயங்கள் என்றும் புரியாது.

அசோகமித்திரனை அவசர அவசரமாக நிராகரித்த மற்றொரு தரப்பு முதிரா வாசகர்களுடையது. அவரது ஏதாவது ஒரு நூலை மேலோட்டமாக வாசித்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது என இவரை மேதை என்று அழைக்கிறார்கள்’ எனக் கேட்கும் வாசகர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு விதமான அழகியல் சிக்கல். நம் வாசகர்கள் பலர் அலங்கார நடையையும், அதீத வர்ணனைகளையும் வாசித்துப் பழகியவர்கள். மேடைப்பேச்சு தொடங்கி அனைத்து இடங்களிலும் ஜால வித்தைக்காரனின் லாகவத்தோடு மொழியைக் கையாளும் ஆளுமைகளைப் பார்த்தவர்களுக்கு, மொழிஜாலமே இலக்கியம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையானவையாக, ஆழமற்றவையாகத் தோன்றுவது இயல்பே. நான் கீழ்க்கண்ட உதாரணத்தை இத்தகைய வாசகர்களிடம் கூறுவதுண்டு. தொடர்ந்து சில காலம் உணவு விடுதியில் உண்டு பழகிய ஒரு நபருக்கு, வீட்டில் சமைத்த உணவில் உப்பும் உறைப்பும் குறைவாக இருப்பதாகத் தோன்றும். பிரச்சினை வீட்டு உணவில் அல்ல. உண்பவனின் சுவையுணர்வில்தான்.

இன்று அசோகமித்திரனின் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ஒற்றை நபர் இயக்கமாகவே தம் வாழ்நாளெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அசோகமித்திரன் பயணம் செய்த பாதை தனிமையானது. துணைகளற்றது. கூட்டங்களில் இருந்தும், குழுச் செயல்பாடுகளில் இருந்தும், குழு அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருந்துள்ளார். பொருளாதாரச் சிக்கல்கள், சித்தாந்தம் சார்ந்த எதிர்ப்புகள், ஜாதி வெறியர்களின் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு செவ்வெனே இலக்கியப் பணிகளைச் செய்து வந்துள்ளார். கொஞ்சமே கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தார் என்றால் அவர் வாழ்க்கையே வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் எல்லாத் துன்பங்களுக்கு நடுவிலும், எல்லா எதிர்ப்புகளுக்கு நடுவிலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காமல், சிறு புன்னகையோடு, வாழ்ந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி யார் மீதும் துவேஷம் கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அசோகமித்திரன் ஒருவேளை இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்திருந்தார் எனில் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். எழுத்தாளனைக் குறித்து எழுதக் கூடாது, வம்புகள் கூடாது, எழுத்தைக் குறித்து மட்டும்தான் எழுத வேண்டும் எனக் கூறியிருப்பார். ஆனால் நான் ஏற்கெனவே கூறியது போல இக்கட்டுரையின் நோக்கம் அசோகமித்திரனைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம் சிறுமைகளைப் புரிந்துகொள்வதும்தான்.

அசோகமித்திரன் தமது வாழ்க்கையை எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி எதிர்கொண்டார் என்றாலும் ஒரு எழுத்தாளன் சமூகத்தால் எப்படி நடத்தப்படவேண்டும் என்பது குறித்த அவருக்குத் தீர்க்கமான பார்வை இருந்தது. மெல்லிய நகைச்சுவையோடு, ‘நேஷனல் புக் டிரஸ்ட் கருத்தரங்கு’ (1977) என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“முதலில் கூறியபடியே எல்லாக் கட்டுரைகளுமே உயர்ந்த தன்மை கொண்டதாக இருந்தாலும் பதிப்புத்துறையின் (பிரத்யேகக்) கருத்தரங்கு என்பது போன்றதில் எழுத்தாளர் அசோகமித்திரன் கட்டுரை புள்ளிவிவரமோ மேற்கோள்களோ ஏதும் இல்லாமல் ஒரு தனித்த குரலில் ஒலிப்பதாக இருந்தது. கருத்தரங்கு விவாதத்தில் திரும்ப திரும்ப நினைவுபடுத்தப்பட்ட கட்டுரையும் அவருடையதுதான். வரும் பத்தாண்டுகளிலாவது எழுத்தாளன் சமூகத்தில் உரிய அந்தஸ்து பெறுபவனாக இருக்க வேண்டும் என்று கூறும் அவர் கட்டுரையை அவர் வாசிக்க எழுந்தபோது கருத்தரங்கைத் துவக்கிய அமைச்சர் அரங்கநாயகம் விடைபெற்றுச் சென்றார். அசோகமித்திரன் மேடையை நெருங்கியபோது அதுவரை சுறுசுறுப்பாக இயங்கிய சென்னை டெலிவிஷன்காரர்கள் விடை பெற்றுச்சென்றார்கள். அசோகமித்திரன் மேடையேறிய உடனேயே வானொலிக்காரர்களும் மைக்கைக் கழற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள். ”(பக்கம் 65-66, காலக்கண்ணாடி கலைஞன் பதிப்பகம், 1998.)

இது நடந்து இரண்டு தசாப்தங்கள் ஓடிவிட்டன. அந்த ஒற்றைக் குரலும் விடைபெற்றுவிட்டது. இனிமேலாவது அசோகமித்திரன் வலியுறுத்திய சமூக அந்தஸ்து உண்மையான எழுத்தாளர்களுக்குக் கிடைத்தால் சரி.

Posted on Leave a comment

தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? – பீட்டர் ஸிங்கர் – தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

பீட்டர் ஸிங்கர் (Peter Singer) மெல்போர்னில் பிறந்தார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்ற இவர், சமகாலத் தத்துவவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி அறம் (bioethics) சார்ந்த துறையின் பேராசிரியராகவும், மெல்போர்ன் பல்கலையில் தத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். ‘அறம்’ என்பதுதான் இவரது முக்கிய ஆய்வுக் கருதுகோள். தத்துவம் மற்றும் அறம் சார்ந்த விவாதங்களை தமது குறும் பத்திகள் வாயிலாகத் தினசரி வாசகர்களிடம் சேர்த்தது இவரது தனிச்சிறப்பு. Ethics in the Real World என்னும் புத்தகம் இத்தகைய 86 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் ஒரு சில கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுபவை.
இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை வாஷிங்டன் போஸ்ட் இதழில் 2012ம் வருடம் வெளிவந்தது. இக்கட்டுரையை Frances Kissing என்னும் அறிஞர் மற்றும் செயல்பாட்டாளருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இன்று சுற்றுச்சூழல் செயல்பாடு என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. பல நேரங்களில் இத்தேசத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் என்னும் பெயரில் சுற்றி வருகின்றனர். (இவர்களில் ஒரு சில நபர்களை A Dictionary of Fashionable Nonsense செல்லமாக ‘தர்பூசணி’ என்றழைக்கிறது; வெளியே பச்சை, உள்ளே சிவப்பு!) இத்தகைய சூழ்நிலையில்தான் பீட்டர் ஸிங்கர் நமக்கு வழி காட்டுகிறார். பன்னாட்டு நிதி உதவியுடன் செய்யப்படும் பெரும் போராட்டங்கள்தான் சுற்றுச்சூழலைக் காக்கும் என்றில்லை. தனி நபர்களின் உணவுத் தேர்வுகளும் சுற்றுச்சூழலைக் காக்க உதவும் என்பதை ஸிங்கர் தெளிவுபடுத்துகிறார். மேலும் ஸிங்கரின் கட்டுரை நமக்குப் போலிகளை இனம் காணவும் உதவுகிறது.

 ரியோ டே ஜெனிரோவில் நடக்கும் ‘நீடித்திருக்கும் வளர்ச்சி’ (sustainable development) தொடர்பான கூடுகையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு இதே நகரில் இவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். அன்று, இங்கு முதல் ‘புவி மாநாடு’ (Earth Summit) நடந்தது. அன்றிலிருந்து இன்று வரை இக்கூடுகைகளின் குறிக்கோள்  பைங்குடில் வாயுக்களின் (பசுமைவீடு வாயுக்கள் Greenhouse gases) வெளியேற்றத்தைக் குறைப்பதன் வாயிலாக, மிகக் கடுமையான வறுமையில் வாழும் 1.3 பில்லியன் ஏழைகளுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த ஆய்வுதான். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், ‘வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை, வாழ்வுரிமையை அபாயத்திற்குள்ளாக்காமல் நாம் அறத்தோடு வாழ்வது எப்படி?’ என்பது இத்தகைய கூடுகைகளின் குவிமையப் பொருள். இதுதான் அவர்களது செயல்திட்டத்திலும் இருக்கிறது.

ஆனால் எங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அவர்களது உணவுப் பட்டியலில் என்ன இருக்கிறது என்பதுதான். குறிப்பாக, புவி வெப்பமாகுவதற்கும் பருவ நிலை மாற்றத்திற்கும் முக்கியக் காரணியான மாமிச உணவு இக்கூட்டத்தில் பரிமாறப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். நாங்கள் அதனைக் கண்டுபிடிக்க முயன்றோம்.
எங்கள் மின்னஞ்சலுக்கு முதலில் கிடைத்தது, அலட்சியமும் பெருமிதமும் கலந்த ஒரு பதில். எங்கள் கேள்வியை அலட்சியம் செய்தனர். பெருமிதத்தோடு இந்த நிகழ்வு ‘முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் நடத்தும் முயற்சி’ என பதிலுரைத்தனர். ஐ.நா. மக்கள் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “பிரேஸில் அரசும், ஐ.நா. செயலகமும், இந்நிகழ்வை முழுப் பசுமை நிகழ்வாக நடத்துவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. மாநாட்டில் அச்சடிக்கப்பட்ட தாள்கள் / புத்தகங்கள் ஆகியவற்றின் பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. யாராவது சிறப்புக் கோரிக்கை வைத்தால்தான் அவ்விடத்தில் வைத்து தேவை அடிப்படையில் அச்சிடுவது (Print on Demand) முறையில் அச்சிட்டுக் கொடுப்போம். அனைத்து ஆவணங்களும் மின்னாவணங்கள்தான். மேலும் பிளாஸ்டிக் பிரச்சினைகளையும் சரி செய்ய பிரேஸில் அரசு முயன்று வருகிறது.”
இன்னும் அழுத்திக்கேட்டபோது, ஐ.நா. மக்கள் தொடர்பு அதிகாரி, ‘ஆர்கானிக் உணவுகளைப் பரிமாறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றும் கூறினார்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் ஆடுமாடுகள் / கால்நடைகள், பட்டியில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் அதே இன மிருகங்களைவிட அதிக அளவு மீத்தேனை (ஒரு பவுண்ட் இறைச்சிக்கு) வெளியேற்றுகின்றன.
1972ம் வருடத்திலிருந்து ஐ.நா. சபை, சுற்றுச்சூழல் கருத்தரங்குகளை நடத்துகிறது. ஆரம்ப காலங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலின் மேல் இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை விவாதப் பொருட்களாக இருந்தன. 1990களில் இக்கருத்தரங்குகளின் குவிமையம் புவி வெப்பமயமாதலாக மாறியது. முதல் ரியோ சந்திப்பில் (1982ல்) ஐக்கிய அமெரிக்கா உட்பட 189 நாடுகளும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும், அபாயகரமான பருவ நிலை மாற்றத்தையும் சரி செய்வதற்கான / குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறின.
ஆனால் இம்முயற்சியில் இவர்கள் பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளனர். இப்போது பைங்குடில் வாயுக்களின் அளவு ஏற்கெனவே அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டதாகப் பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்துப்படி நாம் இன்னும் இருபது வருடங்களுக்குள், திரும்பி வர இயலாத அளவிற்குப் பேரழிவின் சூழலுக்குள் சிக்கிக்கொண்டு விடுவோம். அதன்பிறகு என்ன செய்தாலும் பருவ மாற்றத்தினால் வரும் பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியாது.
ரியோ+20 சந்திப்பில் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. இந்நிலையில் மாநாட்டிற்கான உணவுப் பட்டியலில் இருந்து மாமிச உணவு வகைகளை நீக்குவதுதான் மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். மாமிச உணவு வகைகளை நீக்குவதோடு மட்டும் அல்லாமல் அந்நீக்கத்தைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தவும் வேண்டும்.
மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும், மாமிச உணவு எவ்வாறு பருவநிலை / கால மாற்றத்திற்கு முக்கியமான காரணி என்பது தெரியவேண்டும். மாமிச உணவினால் ஏற்படும் மாசு ஒப்பீட்டளவில் வெகு விரைவில் தீர்க்கத்தக்க பிரச்சினை. மாமிச உணவை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதன் வாயிலாக, நாம் பருவ மாற்றத்திற்கு எதிராகப் போராடலாம். அடுத்த இருபது வருடங்களுக்குள் செய்யத்தக்க, செயல்பட வாய்ப்புள்ள மிகச் சிறந்த நடவடிக்கை இதுதான்.
2006ல் வெளியான ‘கால்நடைகளின் நீண்ட நிழல்’ என்னும் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை, இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பது என்பது கடும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை (உள்ளுரில் இருந்து உலகளவில்) உருவாக்குவதில் முதல் இரண்டு அல்லது மூன்று காரணிகளுக்குள் ஒன்றாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அதனை அடிப்படையாகக்கொண்டு பருவ நிலை ஆய்வாளர்களான ராபர்ட் குட்லாண்ட் மற்றும் ஜெஃப் அன்ஹாங் ஆராய்ச்சிகளைச் செய்தனர். அவர்கள் ஆராய்ச்சி, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியது. கால்நடைகளும் மீத்தேன் செறிவுள்ள அவற்றின் உபபொருட்களும்தான் 51% வாயு வெளியேற்றத்திற்குக் காரணம் என்பதுதான் அது. குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு இறைச்சிதான் காரணம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஐ.நா. சபையும், ரியோ மாநாட்டில் பங்கேற்கும் செயல்பாட்டாளர்களும், பன்னாட்டுப் பிரதிநிதிகளும் சேர்ந்து மாநாட்டின் அனைத்து விருந்துகளில் இருந்தும், பஃபேக்களில் இருந்தும், காலை, மதிய, மாலை உணவுகளில் இருந்தும் இறைச்சியை முற்றிலும் நீக்கினால், ஐ.நா. சபை உலகைக் காக்கும் விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறது என மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பசுமை மாநாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வில், இறைச்சி நீக்கம் என்பது ஒரு இரண்டாம்  தரமான யோசனையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு விதப் பேசக்கூடாப் பொருளாகக் கருதப்படுகிறது.
எங்கும் எதிலும் சுற்று சூழல் ஆர்வலர்களின், புவி வெப்ப மயமாவதில் உள்ள அபாயங்களைக் குறித்த பரப்புரைகளை நாம் காணலாம்/கேட்கலாம். ஆனால் இவர்களின் பரப்புரை நட்சத்திரங்கள் யாரும் இறைச்சியைத் தவிர்ப்பது குறித்துப் பேசுவதே இல்லை. சமீபத்தைய கூடுகை ஒன்றில் பெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றிச் சன்னதத்துடன் பேசினார். உணவு இடைவேளையின் போது ossobucco என்னும் இறைச்சி உணவைப் பலமுறை கேட்டு வாங்கி உண்டார். இத்தகைய அதீத இறைச்சி உணவினால் வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறித்துக் கேட்டபோது, வெட்கமின்றி, தன்னால் ஒருபோதும் இறைச்சி உணவைக் கைவிட முடியாது எனக் கூறினார்.
இது பிரச்சினையின் ஒரு பகுதி, வளர்ந்த நாடுகளில் இறைச்சி உண்ணுதல் என்பதை மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் ஒரு பகுதியாக, குறியீடாகக் கருதுவதில் உள்ளது. இத்தகைய உணவு முறையைக் கைக்கொள்ளுதலைத்தான், அது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை வீரியமிழக்கச் செய்தாலும், வளரும் நாடுகளும் தமது லட்சியமாகக் கருதுகின்றன.
அந்த அளவிற்கான தேவையை நிறைவு செய்ய வேண்டும் எனில், இப்போது இருப்பதைவிட (60 பில்லியன்) இரு மடங்கு (120 பில்லியன்) அளவிற்குக் கால்நடை எண்ணிக்கையை 2050ல் உயர்த்த வேண்டியிருக்கும் என FAO (Food and Agriculture Organization of the United Nations) கருதுகிறது. இத்தகைய ஒரு நிலை, புவி வெப்பமயமாதலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தானிய உற்பத்தியின் மீதும் கடும் அழுத்தத்தை உருவாக்கும். இந்த அளவிற்கு, கால்நடைகளுக்கு உணவளிக்கும் அளவிற்கு, அவற்றின் உற்பத்தியையும் பெருக்க வேண்டும் அல்லவா?
அறிஞரும், ‘உலகிற்கு உணவூட்டல்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியருமான வால்காவ் ஸ்மில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“வளர்ந்த நாடுகளில் இப்போது உள்ளவர்கள் உண்ணுவதைப் போல உலகில் உள்ள அனைவரும் உணவு அருந்துவது என்பது மிகக் கடினம். அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், உலகில் இருப்பதை விட 67% அதிகமான அளவு விளை நிலம் தேவைப்படும். தொடர்ந்து பைங்குடில் வாயுக்கள் வெளியேறுவதால், வரும் சில தசாப்தங்களில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை பருவ நிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசு குழு கூறியுள்ளது. அவை:
1. லத்தின் அமெரிக்காவில் 70 மில்லியன் மக்கள் குடி நீர் இல்லாமல் துன்பப்படுவார்கள். பல விவசாயிகள், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால், பாரம்பரியப் பயிர்களைக் கைவிடுவர்.
2. ஆப்பிரிக்காவில் 250 மில்லியன் மக்கள் நீர்த் தட்டுப்பாட்டால் துயருறுவர். அங்கு கோதுமை பயிரிடும் விவசாயம் முற்றிலுமாக அழிந்து போகும்.
3. ஆசியாவில் 100 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்ட உயர்வால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைவான மழையால் வங்கதேசத்திலும் சீனாவிலும் நெல் விளைச்சல் பாதிக்கப்படும்.
4. இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 23 இஞ்ச்கள் உயரும் எனக் கருதப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் தீவுகளும், நாடுகளும் அப்படியே மூழ்கும், மறையும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே மாலத்தீவுகள் புதிய நாடு ஒன்றை விலைக்கு வாங்குவதற்காகப் பணத்தை சேமித்து வருகிறது.”
இறைச்சி உற்பத்தியையும், உண்ணுதலையும் குறைத்தல் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்பதற்கும், ஆகவே மேலே கண்ட பெருந்துயர்களைத் தடுக்க வாய்ப்புண்டு என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஆனால் பல கட்ட, பல வாரப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் ரியோ மாநாட்டின் வரைவு அறிக்கையில் இறைச்சி குறித்த எந்தத் தீர்மானமும் இல்லை. அதற்குப் பதிலாக புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதையும், பயன்படுத்துவதையும் குறைப்பதற்கான அவசியத்தைப் பற்றி அறிக்கை பேசுகிறது. முக்கியக் குற்றவாளியைப் பற்றி ஏதும் பேசவில்லை.
சுற்றுச்சூழல் நட்சத்திரங்களுக்கு / தலைவர்களுக்கு இந்த மாநாட்டில் பல சவால்கள் உள்ளன. அவர்கள் தங்கள் தட்டில் இருந்து இறைச்சியை எடுக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது.


Posted on 6 Comments

பைரப்பாவின் ’பித்தி’: பெருந்துயர்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

நான் பைரப்பாவின்
பெயரை முதல்முறை பார்த்தது ஜெயமோகனின் புத்தகத்தில்தான். கன்னட இலக்கியம் என்றாலே கிரீஷ்கர்னாட்,
ஆனந்த மூர்த்தி என்றுதான் கல்விபுலத்தில் பேசுவார்கள். அவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள்
அல்லவா? பைரப்பாவின் பெயர் அதிகமாகப் புழங்கியது இல்லை. பைரப்பாவின் படைப்புகளுள் நான்
முதலில் வாசித்தது ‘ஆவரணா.’ பின்னர் ‘வம்சவ்ருக்ஷ’, ‘மந்த்ரா’, ‘பர்வம்’ எனத் தேடித்தேடி
படிக்கத் தொடங்கினேன். பைரப்பாவைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள முயன்றபோது அதிகம்
தகவல்கள் கிடைக்கவில்லை. தத்துவப் பேராசிரியர், சாஹித்ய அகாதமி பரிசு பெற்றவர், இடதுசாரி
இலக்கிய ஏதேச்சாதிகாரத்திற்கு எதிரானவர் என்ற அளவில்தான் சில இணையக் கட்டுரைகள் கிடைத்தன.
இந்நிலையில் பெங்களூருவில் ஒரு சிறு புத்தகக் கடையில் புத்தக அடுக்குகளைக் குடைந்துகொண்டு
இருந்தபோது பைரப்பாவின் சுயசரிதையான ‘பித்தி’யின் (Bhitti) ஆங்கில மொழிபெயர்ப்பு சிக்கியது.
எஸ்.ராமஸ்வாமி மற்றும் எல்.வி.சாந்தகுமாரி ஆகியோர் இணைந்து மொழிபெயர்த்த இந்த 660 பக்கப்
புத்தகத்தை நான் வாசித்த ஆகச்சிறந்த சுயசரிதைகளில் ஒன்று என்று எந்தத் தயக்கமும் இல்லாமல்
சொல்வேன்.


I
பித்தி என்ற கன்னட
வார்த்தைக்கு இங்கே சித்திரச் சீலை என்பது நெருக்கமான ஒரு பொருளைத் தரும்.
பைரப்பா ஷானுபோகர்களாக
(ஊர் கணக்கர்கள் மற்றும் மிராசுதாரர்கள்) இருந்த பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவர்.
பெரிய குடும்பம். ஆனால் அதிக அளவு வருமானம் இல்லை. ஷானுபோகர்தான் நில அளவீடு, குத்தகைக்
கணக்கு, வரி வசூல் போன்றவற்றை ஒழுங்கு செய்ய வேண்டும். ஆனால் பைரப்பாவின் தந்தைக்கு
இதிலெல்லாம் ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் ஊரைச் சுற்றுவதிலும் உணவகங்களுக்குச் சென்று
விதவிதமாக உண்பதிலும்தான் இருந்தது. பொறுப்பு என்பது சிறது கூட இல்லை. தலைமுறை தலைமுறையாக
இருக்கும் பதவியும் பறிபோய், பிச்சை எடுக்க வேண்டிய நிலை வருமோ என்ற எண்ணம் பைரப்பாவின்
தாயாருக்கு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்மணியே குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு
ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, ஒரு ஷானுபோகர் செய்ய வேண்டிய கணக்கு வழக்கு பார்க்கும்
வேலையைச் செய்கிறார். ஆண்களை விடவும் தெளிவாக ஆவணங்களைப் பராமரிக்கிறார். பைரப்பாவின்
தந்தை பெயருக்குத்தான் அதிகாரி. ஆனால் கிராம அதிகாரி செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும்
பைரப்பாவின் தாய்தான் செய்கிறார்.
தீண்டாமை, ஜாதிப்
பாகுபாடு ஆகியவற்றைக் குறித்து பைரப்பா காட்டும் சித்திரம் விசித்தரமானது. பிராம்மணர்கள்
பிராம்மணரல்லாத ஜாதியை சார்ந்தவர்கள் வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
எதையும் உண்ணக்கூடாது என்ற கட்டுப்பாடு மிகத்தீவிரமாக இருந்த காலம்.
ஒருமுறை
பைரப்பா அவரது பிராம்மணரல்லாத நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து உணவருந்தி விடுகிறார்.
இதனைத் தெரிந்துகொண்ட வைதீக வாத்தியார் ஏகக்கலாட்டா செய்கிறார். விஷயம் கேள்விபட்ட
பைரப்பாவின் அம்மா அவரது நண்பரின் தாயைத் திட்டுகிறாள். உணவு கொடுத்ததற்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்
தெரியுமாறு கொடுத்ததற்கு. ‘ஏதாவது தூணுக்குப் பின்னாலோ அல்லது வீட்டிற்குள்ளேயோ வைத்துக்
கொடுத்திருக்க கூடாதா’ (பக்கம் 13) என்று கேட்கிறார்.
ஜாதி ரீதியான பாகுபாடு என்பது
1940களில் நாம் நினைத்ததைப் போன்று இறுக்கமானதல்ல.
பிளேக் அவரது ஒரு
சகோதரனையும் ஒரு சகோதிரியையும் வாரிச் செல்கிறது. இந்த அகால மரணங்கள் பைரப்பாவைக் கடுமையாகப்
பாதிக்கின்றன. இதற்குப் பிறகு, பள்ளிப் படிப்பிற்காக பைரப்பாவை அவரது அம்மா தமது அண்ணனிடம்
ஒப்படைக்கிறார். போலிஸ்காரராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வைதீக/கோவில் காரியங்களில்
ஈடுபட்டு வரும் மாமாவிடம் சிக்கி பைரப்பா படாத பாடுபடுகிறார். ஒருமுறை மாமாவையும் ஒரு
வேலைக்காரப் பெண்மணியையும் கோவிலுக்குள் வைத்து ரசாபாசமான கோலத்தில் பார்த்துவிடுகிறார்.
அதற்குப் பிறகு அடி உதை அதிகமாகிறது. இதைத் தொடர்ந்து பைரப்பாவிற்குக் கடவுளைக் குறித்த
கேள்விகள் எழுகின்றன. கோவிலை அசுத்தப்படுத்தும், அவ்விடத்தைக் கள்ள உறவிற்குப் பயன்படுத்தும்
தன் மாமாவைத் தண்டிக்காத கடவுள் எத்தகைய கடவுள் என எண்ணுகிறார்.
மாமாவின் சித்திரவதையிலிருந்து
எப்படியாவது தப்பிக்க வேண்டும், தனது அம்மாவுடன் ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த
வேளையில்தான் அடுத்த இடி இறங்குகிறது. ஒருநாள் காலையில் பள்ளி செல்லும் வழியில் செய்தி
வருகிறது. பிளேக் நோயில் சிக்கி பைரப்பாவின் தாய் இறந்துவிட்டிருக்கிறார். தாளமுடியாத
துயருடன் அம்மாவின் கிராமத்திற்குச் செல்கிறார். தம்பி, தங்கைகள், பாட்டி மட்டுமே இருக்கிறார்கள்.
தந்தை எங்கு சென்றார் எனத் தெரியவில்லை.மிகுந்த துயருடன் இறுதிச் சடங்குகளைச் செய்து
முடித்துவிட்டு மாமாவின் ஊருக்குச் செல்கிறார். அவரது தாயின் மரணத்தோடு குடும்பத்தின்
பொருளாதார நிலை இன்னும் மோசமாகிறது. ஷானுபோகர் பதவி மற்றொருவர் வசம் செல்கிறது. இக்காலகட்டத்தில்
நடந்த விஷயங்களை அவர் தமது ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் பதிவு செய்துள்ளார்.

II
மாமாவின் கொடுமை
தாங்காமல் வரான்ன முறையில் தனது படிப்பைத் தொடர முடிவு செய்கிறார். சில ஆசிரியர்கள்
பரீட்சைக்கான பணத்தையும் பள்ளிக் கட்டணத்தையும் கட்ட முன்வருகின்றனர். உணவுக்கு வரான்னம்.
வரான்ன முறை என்பது அந்தக் காலத்தில் ஏழை மாணவர்கள் இடையே இருந்த ஒரு பழக்கம். ஒவ்வொரு
நாளும் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு மதிய உணவு வேளையில் உணவு உண்ணச் செல்வார்கள். ஏழு
நாட்களுக்கு ஏழு வீடுகள். வசதியான பலரும் இதனை ஒரு தர்ம காரியமாக எண்ணிச் செய்து வந்தனர்.
பைரப்பாவும் இந்த முறையைக் கைக்கொண்டார். தினம் ஒரு வீடு என்று ஏழு வீடுகளைப் பிடித்துக்கொண்டார்.
ஆனால் அதிலும் பல பிரச்சினைகள். சில வீடுகளில் பெண்கள் இதனைக் கூடுதல் செலவாகவும் சுமையாகவும்
கருதினர். சில வீடுகளில் பிச்சைக்காரனைப் போல நடத்தினர். சில வீடுகள் பள்ளியிலிருந்து
வெகு தொலைவு. வரான்ன நாட்களில் நடந்த வேடிக்கையான விஷயம் ஒன்றை பைரப்பா கூறுகிறார்.
அவர் சென்ற வீடுகளில் ஒரு வீடு செல்வச் செழிப்பான வீடு. அங்கு உள்ளவர்கள் பைரப்பாவைத்
தங்களுடன் சமமாக அமர்ந்து உணவு உண்ணுமாறு வற்புறுத்துவார்கள். அவர்கள் கனமான காலை உணவை
உண்டிருப்பதால் எந்தப் பொருளை மதிய உணவிற்குப் பரிமாறினாலும் ஒரு கரண்டி கூட எடுத்துக்கொள்ளாமல்,
போதும் போதும் எனக்கூறி விடுவார்கள். காலை உணவே செரிக்காமல் இருக்கும் அவர்களுக்கு
ஒரு கரண்டி உணவு போதும். ஆனால் முந்தைய நாள் மதிய உணவிற்குப் பிறகு முழுதாக 24 மணி
நேரம் கழிந்து உணவிற்காகக் காத்திருக்கும் பைரப்பாவின் நிலை? வேலையாட்களும் சிறிதளவுதான்
பரிமாறுவார்கள்.
இப்படிச் சிக்கிச்
சீரழிந்து கொண்டிருந்கும் பைரப்பாவிற்கு ஹோட்டல் முதலாளி ஒருவர் ஒரு யோசனையைக் கூறுகிறார்.
‘நீ பிராம்மணனாகப் பிறந்தவன்தானே?
உனக்குப் பிச்சை எடுத்துப் படிக்க என்ன தயக்கம்?’
மதுக்கர விருத்தி என்று கூறுவார்கள்.
‘நான்கு வீட்டிற்குச் சென்று கைப்பிடி அரிசியை பவதி பிக்ஷ தேஹிம் எனக்கூவிப் பெற்றுக்கொள்.
பதினைந்து நிமிட வேலை. வெறும் அரிசி என்றால் மக்களும் தருவார்கள். பின் உனது வசதிப்படி
நேரம் கிடைக்கும்போது சமைத்துச் சாப்பிட வேண்டியதுதானே’ என்று கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட
பைரப்பா மறுநாளில் இருந்து தம் உணவிற்காக வீடு வீடாகச் சென்று யாசிக்கத் தொடங்குகிறார்.
அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு சமைத்து உண்டுவிட்டு அவசர அவசரமாகப் பள்ளி
சென்று படிக்கிறார். இதற்கிடையே தனி வகுப்புகளும் எடுத்து, தனது தம்பி தங்கைகளுக்கும்
பணம் அனுப்புகிறார். ஆனால் இதற்கும் ஒரு பிரச்சினை வருகிறது. ஒருநாள் பைரப்பாவின் தந்தை
அங்கு வந்து அவரிடம் பணம் கேட்கிறார். தானே பிச்சை எடுத்துப் படிப்பதைச் சுட்டிக்காட்டி
பைரப்பா மறுக்கிறார். உடனே பைரப்பாவின் அப்பா, ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் சென்று,
பைரப்பாவிற்கு இன்னும் உபநயனம் (பூணூல் அணியும் சடங்கு) ஆகவில்லை; ஆதலால் அவனுக்குப்
பிச்சை இடக்கூடாது; மேலும் பைரப்பா அணிந்திருப்பது கள்ளப் பூணூல் எனக் கூறி அதற்கும்
வேட்டு வைக்கிறார்.
III

இதற்கிடையில் அடுத்த
பெருந்துயர் வருகிறது. பைரப்பாவின் தம்பியும் பிளேக் நோயால் பலியான செய்தி வருகிறது.
அப்போது அந்தச் சிறுவனுக்கு வெறும் ஏழு வயதுதான் ஆகி இருந்தது. எண்ணற்ற கனவுகளோடு இருந்தான்.
பைரப்பாவிற்கு விரைவில் வேலை கிடைத்துவிடும்; அதன் பிறகு ஒருவேளை உணவையாவது திருப்தியாக
உண்ணலாம் என் எண்ணி இருந்தான். இரவோடு இரவாக ஊர் போய்ச் சேர்ந்த போது, அவரது பாட்டியும்
தங்கையும் மட்டுமே இறந்த உடலுக்குக் காவலாக இருப்பதை பைரப்பா காண்கிறார். அக்கம்பக்கத்துக்கு
வீடுகளில் உள்ளவர்கள் யாரும் உதவ வரவில்லை. துக்கம் விசாரிக்கக் கூட இல்லை. தம்பியின்
மரணம் ஒரு புறம் வேதனையைத் தந்தால் மறுபுறம் அவனது இறுதிச்சடங்கை எப்படிச் செய்வது
என்ற கேள்வி பைரப்பாவை மிரட்டுகிறது. வழமைபோல் அவரது தந்தை செலவுக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார்.
ஏனைய உறவினர்களும் கையை விரித்துவிட்டனர்.
கரடி என்றழைக்கப்படும்
பழைய பணியாள் ஒருவர் மட்டும்தான் உதவி செய்கிறார். அவர் குருப சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம்
சென்று நிலவரத்தைக் கூறிச் சிறிது விறகை வாங்கி வருகிறார். கரடியின் உதவியோடு இறுதிச்
சடங்குகளைச் செய்யத் தொடங்குகின்றனர். சடங்குகளின் ஒரு பகுதியாக வாய்க்கரிசி போடுவதற்குக்
கூட வீட்டில் அரிசி இல்லை. மறுபடியும் கரடிதான் உதவுகிறார். அங்கும் இங்கும் அலைந்து
கெஞ்சிக் கூத்தாடி மூன்று பிடி அரிசியை வாங்கிக்கொண்டு வருகிறார். வாய்க்கரிசி இட்ட
பிறகு பைரப்பா தமது தம்பியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு சுடுகாட்டிற்குச் செல்கிறார்.
விறகுகளைச் சுமந்துகொண்டு கரடியும் உடன் வருகிறார். தீ மூட்டிய பிறகு, பைரப்பாவே இரவு
முழுவதும் சிதைக்கருகில் இருந்து நாய் நரி எதுவும் உடலைக் கௌவிக் கொண்டு போகாதவாறு
காவல் புரிகிறார்.
IV

அகால மரணங்கள், விடாது துரத்தும்
துயரம் ஆகியவை பைரப்பாவைத் தத்துவம் நோக்கிச் செலுத்துகின்றன. எனவே அவர் கல்லூரியில்
தத்துவத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார். அவரது விண்ணப்பத்தைப்
பரிசீலித்த துறைத்தலைவருக்கும் அவருக்குமான விவாதம் குறிப்பிடத்தக்கது. துறைத்தலைவர்
கூறுகிறார்: “நண்பரே, தத்துவத்தால் உங்களுக்கு சாப்பாடு கிடைக்காது என்பது உங்களுக்குத்
தெரியாதா? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே. உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும்
என விரும்புகிறேன்.”
பைரப்பாவின் பதில்: “தத்துவத்தால்
சாப்பாடு கிடைக்காது என்றால், நான் ஒரு ஹோட்டலைத் திறந்து சாப்பாட்டைச் சம்பாதித்துவிட்டுப்
போகிறேன். மரணம், நேர்மை, தர்மம், வாழ்க்கை மதிப்பீடுகள், கடவுள், வாழ்வின் லட்சியம்
போன்ற பிரச்சினைகள் என்னைக் கொன்றுகொண்டிருக்கின்றன. நான் தத்துவத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக்
காரணம், இக்கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டடையத்தான்.

இதுவரை அவரைத் துரத்தித் துன்புறுத்தி
வந்த துரதிர்ஷ்டம் இப்போது வேறு ஒரு வடிவை எடுக்கிறது. அது பிராம்மண வெறுப்பு. பைரப்பாவின்
சுயசரிதையின் மூலம் கர்நாடகத்திலும் தமிழகத்திற்கு சற்றும் குறையாத அளவு இந்த இன வெறுப்பு
இருந்தது எனத் தெரிகிறது. பல்கலைக்கழகத்திலுள்ள சில்லறை முற்போக்குப் பேராசிரியர்கள்
எல்லாம் தத்துவத் துறையையே அந்தணர்களின் கூடாரமாகத்தான் பார்க்கிறார்கள். அத்துறையில்
மாணவர்கள் யாரும் சேராதபடி உள்ளடி வேலைகளைச் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தத்துவத்
துறையை சமூகவியல் துறையுடன் இணைக்கவும் செய்கிறார்கள். பைரப்பா பல்வேறு தொல்லைகளுக்கு
ஆளாகிறார். மிகுந்த துயர்களுக்கு இடையேயும் சிறப்பாகக் கற்கும் அவருக்கு எந்த உதவித்தொகையும்
கொடுக்கப்படவில்லை. ஆனால் பொழுதுபோக்கிற்காகக் கல்லூரிக்கு வரும் பெரிய செல்வந்தர்களின்
பிள்ளைகளுக்கு உதவித்தொகைகள் வாரி வழங்கப்படுகின்றன. அவர்கள் அத்தொகையை சிகரெட் குடிப்பதற்கும்,
ஊர் சுற்றுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இது குறித்து முறையிடும் பைரப்பாவிற்கு மூத்த
பேராசிரியர் ஒருவர் அளிக்கும் பதில்: “பிராம்மணர்கள் இதுவரைக்கும் அனுபவித்ததெல்லாம்
போதும். இனி அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவிடமாட்டேன்.”

பைரப்பா தங்க மெடலுடன் தேர்ச்சி
பெறுகிறார். ஆனால் அந்தத் தங்க மெடலைக் கூடப் பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் அவரால்
பெற முடிகிறது. பைரப்பாவிற்கு அந்த மெடலை, இன வெறுப்பினால் கொடுக்க விரும்பாத பல்கலைக்கழகம்,
அவ்வருடத்திலிருந்து தத்துவத்திற்கான மெடலையும் சமூகவியல் மாணவனுக்குத்தான் கொடுக்கவேண்டும்
என்று சட்டம் இயற்றுகிறது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் வழிக்கு வருகிறார்கள்.
V

வேலைக்குச் செல்வத்திலும், பின்னர்
வேலை செய்த இடங்களிலும் கூட ஏராளமான இடர்ப்பாடுகளை பைரப்பா சந்திக்கிறார். இதற்கிடேயே
இலக்கிய உலகிலும் பிரவேசிக்கிறார். கதை சொல்லுதல் என்பது பைரப்பாவிற்குச் சிறு வயதிலிருந்தே
இருக்கும் ஆற்றல். ஒருகாலகட்டத்தில் ஊர்ஊராகச் சென்று கதைசொல்லியும் தமது கல்விக்கான
கட்டணத்தைச் சேர்த்திருக்கிறார். இந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. இலக்கிய உலகத்திலும்
ஜாதி மற்றும் சித்தாந்த நிலைப்பாடுகளுக்காக குறிவைத்துத் தாக்கப்படுகிறார் பைரப்பா.
1975 பைரப்பாவின் Daatu நாவல் சாஹித்ய அகாதமி பரிசைப் பெறுகிறது. இது அவரைத்
தொடர்ந்து தாக்கி வந்த முற்போக்கு முகாமைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கு எரிச்சலைத் தருகிறது.
தினமும் இரவு நேரத்தில் அவரது வீட்டை நோக்கிக் கற்கள் வீசப்படுகின்றன.
காவல்துறையில் புகாரளித்தும் எந்தப் பயனும் இல்லை.
வேறு வழியில்லாமல் பைரப்பா தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார். அவரது
மனைவி இச்சம்பவத்தால் பயந்து பதற்றமடைந்து உறங்காமல் இருக்கத் தொடங்குகிறார். இதனால்
அவரது மனைவி உறக்கமின்மை நோய்க்கு ஆளாகி சுமார் இரண்டு வருடங்கள் மனநல மருத்துவரிடம்
சிகிச்சை பெற நேரிடுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் குற்றவாளிகளைக்
கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் இரு எளிய தலித் இளைஞர்கள். அவர்களுக்கும் பைரப்பாவிற்கும்
எந்தப் பகையும் இல்லை. ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள், அந்த இளைஞர்களை அழைத்து, பைரப்பா
தமது Daatu நாவலில் தலித்துக்களைக் குறித்துத் தவறாக எழுதி இருப்பதாகக் கூறி அவருக்கு
ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று என மூளைச்சலவை செய்திருக்கின்றனர். அப்போது அவசரகால
நிலை என்பதால் போலீஸாருக்கு வானளாவிய அதிகாரம் இருந்தது. போலீசார் பைரப்பாவிடம் இந்த
இளைஞர்களையும், அவர்களைத் தூண்டிவிட்ட அறிவுஜீவிகளையும் தடுப்புக்காவலில் வைத்து ஒரு
பாடம் புகட்டலாம் என்று கூறுகின்றனர். ஆனால் பைரப்பா அந்த அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை
பாதிக்கப்படக்கூடாது என்றுகூறி அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துகிறார்.

கன்னட இலக்கிய உலகில் நிலவி வந்த
ஏராளமான சில்லறை அரசியல்களை, ஒரு சிறு புன்னகையுடன் பைரப்பா சுட்டிக் காட்டுகிறார்.
அவரது குரல் எப்போதும் இலக்கிய உலகில் உள்ள குழு அரசியலுக்கு எதிராகவே இருந்தது. பைரப்பா
கூறுகிறார்: “இலக்கியம் ஒருகாலும் கூட்டு முயற்சியாக/குழு வெளிப்பாடாக இருக்கமுடியாது.
அது ஒரு அமைப்புச் செயல்பாடும் அல்ல. ஒவ்வொரு எழுத்தாளனும் அவனவனது உணர்வுக்கும் பார்வைக்கும்
தக்கவாறு எழுத வேண்டும்.” (பக்கம் 584). அவரை ஓர் இலக்கிய இதழின் ஆசிரியராக்க முயன்றவர்களிடம்,
“இலக்கிய இதழ் நடத்துவது இலக்கியத்தை உருவாக்க உதவும் என்று தோன்றவில்லை. இதழ்கள் இலக்கியப்
படைப்பாற்றலுக்குத் தடையாக இருக்க வாய்ப்பு அதிகம்” (பக்கம் 584) என்று கூறுகிறார்.
எந்த ஒரு விஷயத்தை நிராகரிப்பதற்கு முன்னும் அதனை ஐயமின்றி முழுமையாகக் கற்றுத் தெரிந்திருக்கவேண்டும்
என்பதும் அவரது கருத்து.

VI

பைரப்பாவையும்
அவரது படைப்புகளையும் இலக்கிய அரசியல்வாதிகள் அவர்களால் முடிந்த அளவிற்கு இருட்டடிப்பு
செய்தனர். இன்றளவும் பைரப்பா கர்நாடகத்திற்கு வெளியே அதிகம் விவாதிக்கப்படாததற்கு,
அவருக்கு எதிராக வெறுப்பரசியல் செய்த யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி முக்கியக் காரணம். ஆனால்
இத்தகைய இருட்டடிப்புகளைத் தாண்டி, பல வாசகர்கள் பைரப்பாவைக் கண்டடைந்திருக்கின்றனர்.
இலக்கியம் என்பது ஓர் அரசியல் செயல்பாடு அல்ல என்பதற்கு இது ஒரு சான்று. இன்று
Subaltern Autobiography என்பது உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய வகையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதற்கான இந்திய வரைமுறைகள் மிகவும் குறுகலானவை. பின்காலனிய திறனாய்வாளர்கள் அந்தணக்
குலத்தில் பிறந்து, பேராசிரியராகப் பணிபுரிந்து, இடதுசாரி அரசியல் சார்பு நிலைகள் இல்லாமலிருக்கும்
ஓர் ஆண் எழுத்தாளனை, Subaltern அல்லது விளிம்பு நிலை வாழ்க்கையை வாழ்ந்தவன் என்று ஏற்றுக்
கொள்ளவே மாட்டார்கள். ஆனால் பைரப்பாவின் சுயசரிதை இத்தகைய முன்முடிவுகளைத் தகர்க்கும்
ஆற்றல் பெற்றது. பைரப்பாவிடம் இருக்கும் ஆச்சரியப்படத்தக்க குணம், வாழ்க்கையில் அவருக்குப்
பெரும்தீங்கு செய்தவர்களைக் குறித்துக்கூடக் கசப்போடு எழுதவில்லை என்பதுதான். தவிர,
துயர்களின் நடுவே தத்தளித்த காலங்களிலும் அவர் சுயபச்சாதாபத்தில் மூழ்கவில்லை. மேலும்
பைரப்பா தமது சுயசரிதையினூடே ஒரு மாற்று வரலாற்றையும் கூறுகிறார். உதாரணம்: கிராமங்களில்
ஜாதி வேறுபாடு என்பது பெயரளவிற்குத்தான் இருந்தது. தமக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம்
பைரப்பா உதவி கேட்பது, கல்லே கௌடா, கரடி போன்ற பிற சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம்தான்.

இந்தக் காரணங்களுக்காக அவரது ‘பித்தி’ தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும்.
Posted on Leave a comment

தமிழகத்தில் பள்ளிக்கல்வி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

தமிழகத்தில் பள்ளிக்கல்வி
அனீஷ் கிருஷ்ணன் நாயர்
தமிழகத்தில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பே ஒரு தேய்வழக்காகிவிட்டது. இந்தத் தலைப்பில் ஒரு விவாதத்தை நடத்த தேநீர்க் கடைகளில்கூட யாரும் தயாராக இல்லை. கல்வி வணிக மயமாகிவிட்டது என்று உரத்துக் கூவிவிட்டு அனைவரும் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். வடமாநிலங்களில் நடக்கும் தேர்வு மோசடிகளை நக்கல் செய்யும் வேளையில் நமது மாநிலத்தின் நிலையைக் குறித்து யாரும் யோசிப்பது இல்லை.
வணிக மயம்என்று கூறிவிட்டு நம் கண்முன் தெரியும் நோய்க் குறிகளை அசட்டை செய்ய முடியாது.
கடந்த மாதத்தில் நடந்த இரண்டு நீதிமன்ற வழக்குகள் நமது கல்விமுறையில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சம் இட்டுக் காட்டுகின்றன. இரண்டு நீதிமன்ற வழக்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டுமே தகுதி /நுழைவுத் தேர்வு தொடர்பானவை.
NEET(National
Eligibility
Cum Entrance Test)
மற்றும் TET (Teacher
Eligibility Test)
ஆகியவை குறித்த வழக்குகளையும், அதன் பின்புலத்தையும் ஆராய்ந்தால் நாம் அதிர்ச்சி அடைவோம்.
            I
முதலில் நாம்
NEET
தொடர்பான தீர்ப்பைக் குறித்து பார்ப்போம்.(1) உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஒன்றினை மத்திய அரசு அறிவித்தது. நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்தது. மருத்துவக் கல்வியில் புழங்கும் கோடிகளைப் பற்றி நமக்குத் தெரியும்.
NEET
என்பது நிர்வாக இடங்களில்கூட ஒருவிதமான தர வரிசை உருவாக வழி செய்கிறது. அதாவது நிர்வாகிகள் தங்கள் விருப்பப்படி நன்கொடை வாங்கிக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது. இத்தகைய ஒரு தேர்வை அனைவரும் கைதட்டி வரவேற்றிருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன? பெற்றோர்களும் மாணவர்களும் பதறிப் போனார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு இறுதி வரை போராடியது. கருணாநிதி முதல்வர் ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டினார்.
NEET
ல் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குப் பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார்.
ஒரு நுழைவுத் தேர்வை எழுதி அதன் வழியாக மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் நமக்கு என்ன
பிரச்சினை?[
1]. வேறு எங்கும் இல்லாத, மிகச்சிறந்த சமச்சீர்க் கல்வி முறையில் அடிப்படைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டவர்களாகிவிட்ட நமது மாணவ மாணவியர் இதில் கலந்து வெற்றி வாகை சூடலாமே! நமது பாடத்திட்டம் மத்திய அரசின் பாடத்திட்டத்தைவிடத் தரமானதாக இருக்கிறது என்றால் தமிழக மாணவர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வு மிக எளிதானதாக அல்லவா இருக்க வேண்டும்?
நமது பாடத்திட்டம் மத்திய அரசின்
CBSE
பாடத்திட்டத்துக்கு இணையாகத் தரமாக இல்லை என்றால் ஏன் அது சீர் செய்யப்படவில்லை? இதையல்லவா அரசும் மக்களும் யோசிக்க வேண்டும். அதனை விட்டு உச்ச நீதிமன்றத்தில் கருணை மனு போடுவதால் என்ன பயன்?
இரண்டாவது வழக்கு இன்னும் வேடிக்கையானது. இது ஆசிரியர் தகுதித் தேர்வைக் குறித்தது.
TET
என்றழைக்கபடும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தங்களுக்கு விலக்குத் தரவேண்டும் எனக் கோரி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தொடுத்த வழக்கு[2].
RTE (Right To Education)
என்றழைக்கப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என மத்திய அரசின் அமைப்பான
NCTE
அறிவித்தது(3). இத்தேர்வில் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களைச் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்,
2010
ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இது அவசியம். இதனை எழுதித் தேர்ச்சி அடைவதில் என்ன சிக்கல்?
சிறுபான்மையினரால் நடத்தப்படாத அரசு உதவி பெறும் பொதுப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு ஈடான சம்பளத்தை, அரசு உதவி பெறும் சிறுபான்மைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பெறுகிறார்கள். ஒரே விதமான சம்பளம், ஒரே
பாடத்திட்டம், ஒரே பதவி. ஆனால் தகுதித் தேர்வில் மட்டும் விதிவிலக்கு வேண்டும்.
இதுதான் கோரிக்கை.
அரசியலமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டி, உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றது.
[
இத்தகைய தீர்ப்புகள் விளைவுகளைக் குறித்து
Oxford Handbook of The Indian Constitution
நூலில்
K. Vivek Reddy
எழுதிய “Minority
Educational Institutions”
என்னும் கட்டுரை சிறப்பாக விளக்குகிறது.]
ஏனையப் பெரும்பான்மை /தனியார்ப் பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்களும் இந்தத் தீர்ப்பை பொறாமையுடன் எதிர்கொண்டனர். ஒட்டுமொத்தமாக
TET
ஒழித்தால் அவர்களுக்கு நிம்மதி. தரத்தைக் குறித்துச் சிந்தித்தவர்கள் வெகு சிலரே.
தகுதித் தேர்வை எதிர்க்கும் ஆசிரியர்களும் நுழைவுத்தேர்வுகளை எழுத விரும்பாத மாணவர்களும் இணைந்து உருவாக்கும் சித்திரம் புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானது.
            II
னியார்ப் பள்ளிகளின் தில்லுமுல்லுகள், கோழிப்பண்ணை பாணி பயிற்சி ஆகியவற்றைக் குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வித்தை காட்டும் குரங்கிற்கு வித்தைக்காட்டியால் எத்தகைய துயரங்களும் நீங்காத பாதிப்புகளும் ஏற்படுமோ, அத்தகைய துயரங்களும் பாதிப்புகளும் பெரும்பாலான தனியார்ப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஏற்படுகின்றன.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கதை வேறு. சில விதிவிலக்குகளைத் தவிர்த்துவைத்தால் குடுமி அடித்தால் மொட்டைகதைதான். கற்பித்தலைக் கைகழுவி விடுவது, அல்லது மாவட்டக் கல்வி அதிகாரி/ஆட்சித் தலைவர் போன்றவர்கள் தரும் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல், பாடங்களை எடுப்பதற்குப் பதிலாக, தேர்ச்சி அடையத் தேவையான குறுக்கு வழிகளை மாணவர்களுக்குக் காட்டிக்கொடுப்பது.
கடுமையான கல்வி அதிகாரிகள் வந்தால் ஆசிரியர்கள் திருந்துவார்கள் எனச் சிலர் எண்ணுகின்றனர். நடப்பதோ அதற்கு நேர்மாறான விஷயம். உதாரணத்திற்கு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துமாறு ஓர் ஆங்கில ஆசிரியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், அவர் சில தில்லுமுல்லுகளைச் செய்யத் தொடங்குவார்.
Precise writing
என்னும் சுருக்கி எழுதுதலை ஒரே நிமிடத்தில் கற்றுக்கொடுத்துவிடுவார்.
ஒரு வரியை விட்டு ஒரு வரியை எழுதுஎன்று மாணவர்களிடம் கூறி விடுவார். பத்தி சுருங்குவதற்கு முன்பாகவே மாணவர்களின் அறிவு சுருங்கிவிடும். ஆனால் மதிப்பெண்கள் ஓரளவு கிடைக்கக்கூடும். அத்தகைய மதிப்பெண்களைக் கொண்டு, தேர்ச்சியைக் கொண்டு யாருக்கு என்ன லாபம்?
            III
ள்ளிக் கல்வியில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனில் நாம் பல அடிப்படை விஷயங்களை, நமது அரசியல் சரிநிலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, சரிசெய்ய வேண்டும்.
முதலில் நம்முன் நிற்கும் கேள்வி என்னவென்றால் இன்று எத்தகைய நபர்கள் ஆசிரியர் பணியைத் தேர்வு செய்கின்றனர் என்பதுதான். ஒரு காலத்தில் தலைசிறந்த மாணவர்கள்தான், அவர்களது ஆசிரியர்களால் ஈர்க்கப்பட்டு ஆசிரியப் பணிக்கு வருவார்கள். இன்று உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள எத்தனை ஆசிரியர்கள் பல்கலைக்கழக அளவில் முதன்மை இடங்கள் பெற்றிருந்தார்கள் அல்லது கல்லூரிக் காலத்தில் வகுப்பில் முதன்மை பெற்றிருந்தார்கள் என்று விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியும். கல்லூரியில் நன்றாகப் படிப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பணிக்குச் செல்வதில்லை. கல்விப் பணியில் ஆர்வம் உள்ள மாணவர்கள்கூட
B.Ed.
மற்றும் D.T.Ed. கல்வியியல் கல்லூரிக்குச் செல்லத் தயங்குகின்றனர். ஒழுங்காகப் படித்து முடித்தாலும் அரசு வேலை/அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்குமா என்ற எண்ணம்தான் காரணம். குறிப்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர்களைப் பணியமர்த்தும் விதம் பிரம்ம ரகசியம்.
அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுக் கல்வியியல் கல்லூரியில் படிக்கும் தலைசிறந்த மாணவர்களுக்குக் கணிசமான உதவித்தொகை தர வேண்டும். மேலும் அனுபவம் உள்ளிட்ட பல காரணங்களைக் கூறாமல் கல்லூரித் தேர்வுகளிலும், தகுதித்தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றால் அரசுப் பணி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஜாதி, மொழி, மதம், வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் திறமை அடிப்படையில்
100%
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே கற்பித்தலின் தரம் கூடும். திறமையான ஆசிரியர் ஒருவர் வேலைக்கு எடுக்கப்பட்டால் ஒரு சமுதாயமே முன்னுக்கு வரும்.
TET
தகுதித் தேர்வை அனைத்துப் பள்ளிகளில் (தனியார் பள்ளி உட்பட) பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கட்டாயத் தகுதியாக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு மற்றொரு தகுதித் தேர்வை வைக்க வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. ஆனால் அந்தச் சட்டபாதுகாப்பைக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கவேண்டுமா என்று அவர்கள் யோசிக்கவேண்டும்.
ஆசிரியர்களைத் திறமை அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் தேர்வு செய்வதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தகுதித் தேர்வு/புத்தாக்கத் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைவது கட்டாயமாக்கப்படவேண்டும்.
மக்கள்தொகைக்
கணக்கெடுப்பு, ஆதார் அட்டை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் ஆசிரியர்களை
ஈடுபடுத்தக்கூடாது. இந்தப்
பணிச்சுமைகள் கற்பித்தலைப் பாதிக்கும். இதனால் உருவாகும் அழுத்தம் வகுப்பறையில் பிரதிபலிக்கும். மேலும் இந்தப் பணிகளை எழுத்தறிவு உள்ள எந்த ஒரு கடைநிலை அரசாங்க ஊழியரும் செய்ய இயலும். இப்பணிக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அடுப்பை எரிப்பதற்கு ஒப்பானது. மாவட்டக் கல்வி அதிகாரி போன்ற பணி இடங்களைச் சுழற்சி முறையில் மாற்றினால், ஓர் ஆசிரியர் இறுதி வரை ஆசிரியராகப் பெருமிதத்தோடு இருக்கலாம். மாவட்டக் கல்வி அதிகாரி,
CEO /DEO
போன்ற பள்ளிக்கல்வி இயக்குநரகப் பணிகள் போன்ற நிர்வாகப் பணிகளுக்குச் செல்பவர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் அப்பணிகளில் இருக்கக் கூடாது. ஒருமுறை நிர்வாக பணிக்குச் சென்றால் அடுத்த ஆறாண்டுகளுக்கு மறு நியமனம் கூடாது.
அரசு, பள்ளித் தேர்வு தேர்ச்சி விகிதத்தைக் கண்காணிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
100%
தேர்ச்சி என்றாலே ஏதோ பிரச்சினை என்றுதான் பொருள். மாறாகக் கற்பித்தல் ஒழுங்காக நடக்கிறதா என்று கண்காணித்தால் போதுமானது. எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி அளித்து அவர்களைக் கொண்டு பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.
தனியார்ப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, எதுவானாலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன என்றால் அவற்றை அரசாங்கமே கைப்பற்றி நடத்த வேண்டும். அவை சேவை நிறுவனங்களே. வணிக நிறுவனங்கள் அல்ல. எனவே அரசாங்கம் தாராளமாக இதனைச் செய்யலாம்.
மாநில அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பாத பெற்றோர்கள் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாவில் தங்கள் குழந்தைகளை எப்பாடுபட்டாவது சேர்க்க முயல்கின்றனர். இது ஏன் என்பதை மாநிலக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும்.
பெற்றோர்கள்
Brand Value
ஐக் கொண்டு பள்ளிகளைத் தேர்வு செய்வதால்தான் பல முன்னாள் சாராய வியாபாரிகள் இன்று அதனைவிட லாபகரமாக இருக்கும் இந்தத் தொழிலில் குதித்துள்ளனர். உங்கள் குழந்தையின் கல்வி என்பது வாகனச் சேவை அல்ல. எந்தப் பள்ளியில் சேர்த்தாலும் உங்களது பங்களிப்பு, கவனம் ஆகியவை மட்டுமே உங்கள் குழந்தைகளுக்கு நன்மை தரும்.
மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்குச் செல்வதாலேயே குழந்தைகள் ஆன்மிகப் பேரொளியாகவோ, உத்தம சீலனாகவோ மாறப்போவதில்லை. ஒருவேளை மாணவர்கள் எதிர்த்திசையில் நடக்கும் வாய்ப்பும் உண்டு. ஆன்மிகத்தையும், ஒழுக்கத்தையும் உங்கள் வாழ்வில் இருந்து உங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ளட்டும். தமிழக் கல்வி முறையிலும் பள்ளிகளும் மாற்றங்களைச் செய்யவேண்டிய காலம் கடந்துபோய்விட்டது. இனியும் இந்நிலை நீடித்தால், கல்வி அறிவற்ற ஆனால் பட்டங்கள் பல கொண்ட ஒரு சமுதாயத்தைத்தான் நாம் விட்டுச் செல்வோம்.
அடிக்குறிப்புகள்: