Posted on Leave a comment

வலம் நவம்பர் 2018 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் நவம்பர் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

மாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு

யார் குரு? | சுமதி ஸ்ரீதர்

ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்

அறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் – 2  | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

நாடி ஜோதிடம் – புரியாத புதிரா? |  அரவிந்த் சுவாமிநாதன்

பொருத்தம்  (சிறுகதை) | இரா.இராமையா

சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்

Posted on Leave a comment

சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்

“எந்த ஊர் நீங்கள் எல்லாரும்?” என்று சீனமொழியில் கட்டைக் குரலில் கேட்ட டாக்சி ஓட்டுநரிடம் “இந் து” என்றேன். “ஓ..” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். சீன மொழியில் இந்தியர்களை “இந் து” என்றுதான் அழைப்பார்கள். “மோதி.. மோதி… நலமா?” என்றார்.  “நலமாக இருக்கிறார்” என்றேன். மோதியைப் பற்றி எதோ சிரித்துக்கொண்டே சொன்னார். நான், மாண்டரின் எனக்குக் கொஞ்சம்தான் தெரியும், சில வார்த்தைகள்தான் பேசமுடியும், நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் புரியவில்லை என்றேன். அவர் “பரவாயில்லை… நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள்” என்றார். இந்தப் பயணம் முழுவதுமே நான் சந்தித்த அத்தனை பேரும், எனக்குத் தெரிந்த சீன மொழியில் பேச முயற்சி செய்த போதெல்லாம், ஒரே ஆச்சரியமும் வியப்புடனும் என் சொற்பிழைகளை எல்லாம் விடுத்து என்னைப் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தைவிட சீன மொழியில் பேசுவதே சௌகரியமாக இருந்தது.

சீனாவில் காலடி வைத்ததிலிருந்து முதலில் தெரிவது கடலலை போன்று அலை அலையாக முகங்கள் முகங்கள், எங்கும் முகங்கள். குழந்தைகளுக்கு ஈடாக வயது முதிர்ந்தவர்களும் ஏராளமாகத் தென்பட்டனர். முதியவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியத்துடன், உடல் தளர்வின்றி இருப்பதாகப்பட்டது. அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது, எல்லோருமே ஒரு மாதிரி இரைந்து சத்தமாகப் பேசுவதாகப் பட்டது. சாலை நடுவில், பக்கத்தில் நிற்பவரிடம் கூட சாதாரணமாகப் பேசுவதைவிடக் கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொள்கிறார்கள். மேலும், இருவர் பேசும்போது, அவர்கள் பேசுகிற தொனியை மட்டும் கவனித்தால் கிட்டத்தட்ட சண்டை போட்டுக் கொள்வது போலவும், சிறிது நேரத்தில் இவர் அவரை அடித்து விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் ஏதாவது சாப்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

பீஜிங்கில் அகலமான சாலைகள். எட்டு அல்லது பத்து வழிச் சாலைகள் அதிகம் தென்பட்டன. நகரைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து வட்டச்சாலைகள் அமைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓரிடத்தில் நாங்கள் சென்ற ஒரு எட்டு வழிச்சாலை திடீரென்று முட்டுச் சந்தாகி விட்டது. அது இன்னும் முழுவதுமாக அமைக்கப்படவில்லை, பணிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். பீஜிங் நகரத்துக்குள் பெரிய சாலையமைப்பு பணிகள் எதுவும் நடக்காவிட்டாலும், அங்கங்கே பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காகவென்றே மேலும் பல கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

சாலைகளில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பெரும்பான்மையான மக்கள், சைக்கிள், மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையே உபயோகிக்கின்றனர். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஆயிரக்கணக்கில் இது போன்ற எலக்ட்ரிக் சைக்கிள்கள் இரைந்து கிடக்கின்றன. இரு பெருநிறுவனங்கள் இந்த சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். யாரும் சைக்கிள்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. மொபைல் செயலியில் சைக்கிள் மீது உள்ள கோட்-ஐ (Code) ஸ்கேன் செய்து இயக்கினால் சைக்கிள் பூட்டு திறந்து கொள்கிறது. பின்பு எவ்வளவு தூரம் செல்லவேண்டுமோ சென்ற பின் அங்கேயே சைக்கிளை விட்டுவிட்டுச் சென்று விடலாம். எவ்வளவு தூரம் சென்றோமோ அதற்குரிய தொகை நமது கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு விடும். குளிர் காலத்தில் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் மீது கோட் (Coat) மாதிரி ஒன்றைப் போடுகிறார்கள்.

சைக்கிளைத் தவிர பயணம் செய்வதற்கு ஊபர் மாதிரியான டாக்சிகளும், சப்வே ட்ரெயினும் செயல்படுகின்றன. இது தவிர பேருந்துகளும் உள்ளன. பேருந்துகள் சில இடங்களில் மின்சார ரயில் போல் மேலே மின்கம்பிகளைத் தொட்டுக் கொண்டும், அது இல்லாத இடங்களில் டீசலிலும் செல்லுகின்றன. எல்லோரும் பயமுறுத்தியதைப் போல, மாசு, புகை, மூச்சுத் திணறல் எதுவுமே நான் சென்ற பகுதிகளில் இல்லை. அங்கேயே வாழும் சீனர்களில் பலர் கூட மாசைக் கட்டுப் படுத்தும் மாஸ்க் அணிவதைப் பரவலாகக் காணமுடியவில்லை. ஓரளவு மாசு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. சாலையில் கண்ட மற்றொரு விஷயம், நடந்து செல்பவர்களுக்கு அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் சிக்னல் இல்லாதபோதும் குறுக்கே சாலையைக் கடக்க முயற்சிக்கும்போதும், யாரும் கோபப்பட்டு ஹாரன் அடித்து எரிச்சலை வெளிப்படுத்தவே இல்லை. பொதுவாகவே பல நிமிடங்கள் சாலையில் காத்திருக்கும்போதும், திடீரென்று யாராவது குறுக்கே செல்ல நேரிட்டாலும் யாரும் கோபப்படவே இல்லை.

*

அமெரிக்க நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் தனியாகவும், கடைகளும் அரசு அலுவலகங்களும் தனியாகவும் இருக்கும். ஆனால் பீஜிங்கில் நமது இந்திய நகரங்களைப் போலவே குடியிருப்புப் பகுதிகளும், அலுவலகங்களும் பெருவிற்பனைச்சாலைகளும் (mall) அருகருகே இருக்கின்றன. தெருக்களின் பெயர்கள், சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் உள்ளன. ஆனால் கடைகள், விற்பனைப் பொருட்கள், எதிலுமே சிறிதும் ஆங்கிலம் கிடையாது. ஓரிடத்தில் கொஞ்சம் பாலும் தயிரும் வாங்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் தயிர் என்றால் அதில் இனிப்பு சேர்க்கப்பட்டது மட்டுமே கிடைக்குமாம், வெறும் தயிர் கிடைப்பதில்லை. எங்கும் அசைவ மயம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தானே சமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

சீனாவின் மக்கள் தொகையோ நூற்று முப்பது கோடி. அவர்களில் நூறு கோடிப் பேர் அசைவம் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், எத்தனை கோடி மிருகங்கள் தினமும் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன, ஒரு வருடத்தில் எத்தனை மிருகங்கள் அழியும் என்று கணக்கிட்டால் வியப்பாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் கே.எஃப்.சி, மெக்டோனாட்ஸ் போன்ற உணவகங்களில் பன்றிக் கறி கிடைக்கிறது. இந்த உணவகங்கள் எல்லாமே உள்ளூர் பாணியில் உள்ளன. வால்மார்ட் போன்ற பெருவிற்பனைக் கூடங்களில் உயிருடன் உள்ள கடல் வாழ் உயிரினங்களை விற்கிறார்கள். சீனர்கள் உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எல்லா வீதிகளிலும் ஒன்றிரண்டாவது உணவகங்கள் உள்ளன.

சீனாவிலிருந்து ஆங்கிலேயர் எப்படித் தேயிலை பயிர்களைத் திருடி இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து நண்பர்களுடன் பேசினோம். இரண்டாம் உலகப்போரின்போது சீனப் போர்க் கைதிகளை நமது உதக மண்டலத்திற்குக் கொண்டுவந்து தேயிலை பயிரிட ஆங்கிலேயர் பயன்படுத்திய விவரம் குறித்தும் பேசினோம். ஹுவான் சுவாங், இ சிங் போன்ற யாத்திரிகர்கள் குறித்து பேச்சு தொடர்ந்தது. ஹுவான் சுவாங் நன்கு அறியப்பட்டவர், பள்ளிகளில் பாடங்களில் அவரது பயண விவரங்கள் உண்டு என்று எங்கள் சீன நண்பர் தெரிவித்தார்.

*

இரும்புத் திரை நாடு என்பார்கள். சீனாவிற்கு செல்லும்முன்பே எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்று விரிவாகச் சொல்லி இருந்தார்கள். மதத்தைப் பரப்புதல், மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வருகிறவர்கள், சந்தேகப்படும் வகையில் நிறைய பிரசுரங்கள் புத்தகங்கள் எடுத்து வருகிறவர்கள் போன்றவர்களைக் கூட சீன நாட்டுக்குள் உள்ளே நுழைய விடமாட்டார்கள். பௌத்த விஹாரங்கள் கூட சுற்றுலா செல்லும் இடம் போலச் செயல்படுகின்றன. சர்ச்சுகளும் அப்படித்தான். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பிஷப்புகள் வாடிகனின் பிரஜைகள், அவர்கள் எதாவது குற்றச்செயலில் ஈடுபட்டாலும் முதலில் வாடிகனில் அனுமதி வாங்கித்தான் கைது செய்ய முடியும் என்று சொல்வர். ஆனால் சீனாவில் சர்ச் அந்நாட்டு கம்யூனிச அரசுக்கே தன் விசுவாசம் என்று அறிவித்துவிட்டுத்தான் செயல்படுகிறார்கள். சீனர்களிடையே பெரும்பாலான கிறிஸ்தவ மதமாற்றம், தாய்வானிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் வருகிற சீனர்களிடமிருந்தே ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில், டிவி சானல்கள் எல்லாமே சீன மொழியில்தான் இருந்தன. பிபிசி மற்றும் CNBC சேனல்கள் மட்டுமே ஆங்கிலம். அதிலும், செய்திகளில் சீனா குறித்து ஏதேனும் செய்தி இருந்தால் உடனே அந்த சானல் பல நிமிடங்களுக்குக் கருப்பாகி முடங்கி விடுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில்தான், ஹாங்காங்கில் ஒரு மாணவர் குழு, தொழிலாளர்களுக்காகப் போராட்டத்தில் இறங்கி இருந்தது; பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை ஒருவர் புகார் அளித்தும், அவரே கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் செய்திகள் பிபிசியில் வரும்போதெல்லாம் முடங்கியது. சீன மொழி சானல்களில் நான் பார்த்தவரை எல்லாமே நேர்மறையான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. ஒரு கிராமத்தில் எப்படி விவசாயம் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது, எப்படி அங்கே எல்லாரும் செல்வந்தர்கள் ஆகி வருகிறார்கள் என்பது மாதிரியான செய்திகளே. சைனா டெயிலி போன்ற செய்தித் தாள்களிலும் இதே நிலைதான். உலகச் செய்திகளில் கூட எப்படி எல்லா நாடுகளும் சைனாவுக்கு சாதகமாக உள்ளன, அல்லது எதிராக நடந்துகொள்ளும் நாடுகள் எச்சரிக்கப்படுகின்றன என்பது போன்ற செய்திகளே காண முடிந்தது.

நான் பழகிய அளவில் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. இந்தியாவைக் குறித்து மிகக் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். நமக்கு பாகிஸ்தான் போல, சீனாவுக்கு ஜப்பான். ‘பொதுவாக நாங்கள் ஜப்பான் குறித்து எதுவும் பேசவே மாட்டோம். ஜப்பான் மீது ஆழ்ந்த வருத்தமும் கோபமும் உள்ளது’ என்றார் என் நண்பர்.

*

நாங்கள் சென்றிருந்த நேரம் Moon festival என்ற பண்டிகைக் கொண்டாட்டம். இந்தியாவில் புரட்டாசி பௌர்ணமி தினத்தை சரத் பூர்ணிமா என்று கொண்டாடுவர். சீனாவில் இந்த நாள் ஒரு அரசு விடுமுறை நாள். மதம், நம்பிக்கைகள் என்று எதுவும் இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அதற்கு முதல்நாள் சீனப் பெருஞ்சுவரைக் கண்டு வந்திருந்தோம். சீனப் பெருஞ்சுவர் சிறிய குன்றுகளின் மீது வளைந்து வளைந்து செல்கிறது. பல இடங்களில் அதற்கு அடியில் சுரங்கம் (tunnel) அமைத்தும், சில இடங்களில் அதன் குறுக்கேயும் சாலைகள் அமைத்துள்ளனர்.

நாங்கள் சென்ற பகுதியில், இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களைப் போன்றே கசகசவென்று கடைகள். ஆனால் நடைபாதைகள் படு சுத்தமாக இருந்தன. சுவரின் மீது ஏறி நடந்து செல்ல பல படிகள் ஏற வேண்டி இருந்தது. பல இடங்களில் புதிதாக சிமென்ட் / கான்க்ரீட் போட்டுப் பராமரித்திருந்தனர்.  ஒரு பக்கம் ஒரு காவல் கோபுரத்தில் இருந்து இன்னொரு காவல் கோபுரத்துக்கு ஓட்டப்பந்தயம் கூட நடந்து கொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களில், டிக்கட் வாங்கும்போது இந்தியர்களுக்கு ஒரு விலை, வெளிநாட்டினருக்கு ஒரு விலை என்று வைத்திருப்பார்கள். அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாருக்குமே ஒரே விலைதான்.

அதற்கும் முந்தைய தினம், பேலஸ் ம்யூசியம் என்கிற Forbidden Cityக்கு சென்றோம். (அண்மையில்தான் மோதி இங்கே வந்து சென்றார்). தஞ்சை பெரிய கோவிலைப் போல நான்கைந்து மடங்கு பெரிய அரண்மனை இது. ஒரு காலத்தில் அரச குடும்பம் வாழ்ந்த இடம். மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டின்கூரை அமைப்பை வைத்தே ஒருவரின் சமூக மதிப்பை கூறிவிடலாமாம். சாதாரண மக்கள் வீட்டுக் கூரைகள் கருப்பு/பழுப்பு நிறத்தில் இருக்கும். அரசர்களின் வீடுகள் மட்டும் கூரை மஞ்சள் நிறத்தில் பொன்னைப் போன்று இருக்குமாம். இங்கேயும் அரண்மனைக்குள் அப்படித்தான் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. அகன்ற ஒரு மைதானம், அதைக் கடந்ததும் அகழி, அதைத் தாண்டியதும் காவல் கோபுரங்களுடன் கோட்டைக் கதவு, அதைப் பூட்ட உபயோகிக்கும் பன்னிரண்டு அடி நீள ஒற்றை மரத்துண்டு, அதற்குப் பின் அரச தர்பார். அங்கே தரையில் டிராகன், சிங்கம், புலி போன்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அரசர்கள் அதன் மீது நடந்தது வருவார்களாம். அங்கங்கே ஐந்தடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவில் பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்கள், நீர் சேமிக்கவாம். அரசர்கள் உபயோகித்த பொன்னாலான சிம்மாசனங்கள் கூட அங்கே வைத்திருக்கிறார்கள்.

சென்ற இடமெல்லாம் ஏராளமான கூட்டம், முக்கியமாக கொரியர்கள் நிறைய இங்கே சுற்றுலா வந்திருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு இந்தியர் குழுவையும் கண்டேன்.

அடுத்து நான் பார்த்த பகுதி, சீனாவின் தேசிய அருங்காட்சியகம். இங்கே சீனாவில் கிடைத்த பழங்காலப் பொருட்கள், பழங்கால மக்களின் எலும்புத் துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் உபயோகித்த புத்தகங்கள், மூங்கில் துண்டுகள் என்று பலவும் இருக்கின்றன. ஏராளமான வெண்கலம், தங்கம், பிற உலோகங்களில் செய்த விதவிதமான புத்தர் சிலைகள், பௌத்த மதத் தேவதைகளின் பிரதிமைகள் பலவும் இங்கே அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன. அவற்றின் பெயரை சம்ஸ்க்ருத உச்சரிப்பு மாறாமல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நான் பேசிய பல சீன நண்பர்களுக்கு இந்து மதம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு பௌத்தம்தான் மிகவும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. பாலி மொழி குறித்து ஒரு சீன நண்பர் பல விவரங்கள் கூறினார். ஆனால் அவருக்கு சம்ஸ்க்ருதம் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தேசிய அருங்காட்சியகத்திற்கு அருகிலேயே தியானன்மென் சதுக்கம், அரசினர் மாளிகைகள் பலவும் உள்ளன. என்னுடன் வந்த சீன நண்பர் பயபக்தியுடன்  இங்கேதான் சேர்மன் இருக்கிறார். இதற்கு முன்பு சேர்மன் மாவோ இங்கிருந்துதான் அலுவல்களைக் கவனிப்பார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். 1989ம் ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி லேசாகக் கேட்டேன், அது எப்போதோ பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்தது, இப்போது அதெல்லாம் யாருக்கும் நினைவில் கூட இருப்பதில்லை என்று நகர்ந்து விட்டார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாதுகாப்பும் பலமாக உள்ளது. எக்காலத்திலும் பாஸ்போர்ட், ஐடி கார்டு இல்லாமல் செல்லக் கூடாது. யாரையும் எங்கேயும் நிறுத்தி சோதனை செய்வார்கள். ஏன் இத்தனை பலமான சோதனைகள், இங்கே தீவிரவாதிகள் குறித்து பயமா என்றேன். தீவிரவாத நிகழ்வுகளை விட, ஏதாவது போராட்டங்களே அடிக்கடி நிகழும், உடனே காவல்துறை வந்து அடக்கிவிடும் என்றனர். நான் சென்ற ஒரு வாரத்துக்குள் எனக்கு அப்படி எதுவும் சிக்கலான அனுபவம் நேரவில்லை.

இந்திய நகரங்களில் பெரும்திரளான மக்களின் நடுவே இருக்குபோது ஒரு நிம்மதியற்ற நிலை இருப்பதாக எனக்குப் படும். எதிலும் ஒரு அச்சம், தற்காப்பு, சுயலாபம், உயர்ந்தது தாழ்ந்தது என்று உணரமுடியாத நிலை, அலட்சியம் எல்லாம் தென்படும். பீஜிங்கில் நான் பார்த்தவரை, எரிச்சல்படாத டாக்சி ஓட்டுநர்கள், அவசரப்படாத வாகனங்கள், பொதுமக்களிடம் விதிகளை மீறாத பழக்கங்கள் இவையே என்னைக் கவர்ந்தன. நாட்டின் தலைநகரமாகையால் இப்படி இருக்கலாம், வேறு பல நகரங்களையும் கிராமங்களையும் சுற்றித் திரிந்து பார்த்தால்தான் அந்த மக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

Posted on Leave a comment

பொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா

கல்யாண மண்டபத்தில் ‘மணமகன்’ அறையில் நான், அம்மா, அப்பா மூவரும் அமர்ந்திருந்தோம். உள்ளே குளியலறையில் அண்ணன்.

“என்னை எல்லாரும் அவமானப்படுத்தினா நான் கிளம்பி வேணும்னா போயிடுறேன்” என்றார் அப்பா.

“போயிட்டா பரவாயில்லையே” என்றான் அண்ணன் உள்ளிருந்து.

வெளியே நாதஸ்வரச் சத்தம் கேட்டது. நிச்சயதார்த்தத்திற்கு அதிக நேரம் இல்லை.

“எல்லா வீட்லயும் புருஷன் சொன்னா கேக்குற பொண்டாட்டி உண்டு” என்றார் அப்பா விரக்தியுடன்.

எனக்கு ரத்தம் கொதித்தது.

“எதுக்கு அம்மாவ இழுக்குற?” என்று கத்தினேன். “அவ என்ன பண்ணா உனக்கு?”

“டாய், நீ சும்மா இர்ரா,” என்றான் அண்ணன் உள்ளிருந்து. “நீ ஒண்ணும் அம்மாவக் காப்பாத்த வேண்டாம்.”

சற்று நேரத்தில் அண்ணன் வெளியே வரும் போது அப்பா அம்மாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார். அண்ணன் என்னை நோக்கிப் பாய்ந்தான். அவன் என் சட்டையைப் பிடிக்கும் தருணம் யாரோ கதவைத் தட்டினார்கள்.

ஐயர்.

“புஷ்பம் கொஞ்சம் வேணும்; அப்புறம் ரெண்டு தாம்பாளம்…” என்று இழுத்தார். அப்பா இன்னும் அம்மா பின்னால். அண்ணன் அவனே பார்த்து வாங்கிய என் புதுச் சட்டையில் இருந்து கையை எடுத்தான்.

*

ஏழாம் வகுப்பு விடுமுறையில் திருவாரூர் சென்றிருந்தோம். அங்கே பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். எதிர் வெயில். பஸ்சும் வரவில்லை. அப்பாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதி ஏறிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், ஒருவேளை பஸ் வந்தால் நான் ஜன்னலோரமா இல்லை அண்ணனா என்று ஒரு சிறு தகராறு தொடங்கியது. அங்கேயே வழக்கம் போல கத்திக் கொண்டோம்.

யாரும் எங்களைக் கவனிக்கக் கூட இல்லை. அப்பா இதுபோன்ற தகராறுகளை பொதுவாக இருவரையும் நாலு சாத்துச் சாத்தித் தீர்த்து வைப்பார். அன்றும் அதே போல நடு பஸ் ஸ்டாண்டில் செய்யப் போய் சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அம்மா தள்ளிப் போய் நின்று கொண்டாள்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எங்கள் குடும்ப அடிதடிகள் வீட்டிற்குள்தான் என்று முடிவெடுத்து கஷ்டப்பட்டுச் செயல்படுத்தியும் வந்தோம். நாலு பேராக வெளியே கல்யாணம் கார்த்தி என்று போனால் உறவினர் வீட்டில் தங்க மாட்டோம் – தனியாக ஓட்டலில் அறை எடுத்து அடித்துக் கொள்வோம்.

*

நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் குலாவிக் கொண்டிருந்த நேரம். அண்ணன் அண்ணியுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது எங்களைப் பார்த்துக் கொண்டான். எங்கள் நால்வருக்குள்ளும் ஒரு இனம் தெரியாத பதற்றம் இருந்தது.

அப்பா, திடீரென்று என்னைக் கூப்பிட்டார். அண்ணனின் மாமனார் ஏதோ கேட்க வேண்டுமாம்.

“தம்பி எங்க இஞ்சினீர் படிச்சீங்க?” என்றார் அண்ணனின் மாமனார்.

அவர் பேசுவது முனகுவது போல இருந்தது. குரலே மேல் எழும்பவில்லை.

“திண்டுக்கல்” என்றேன்.

அவர் திரும்பி தம் மனைவியிடம் ஏதோ முனகினார். அந்த அம்மையார் என்னைப் பார்த்து அதைவிட சன்னமான குரலில் ஏதோ கேட்டார்கள். அவர் முகத்தில் சாந்தம் தவழ்ந்தது.

நான் அவர்களிடம் விடுபட்டு அண்ணன் அருகில் போனேன்.

“என்னடா அவங்க குடும்பம் இப்பிடி இருக்காங்க?” என்றேன்.

அவன் முதலில் பல்லைக் கடித்தான். பிறகு, அண்ணியைக் கண்ணால் காட்டி, “இவ அதுக்கு மேல” என்றான்.

*

பண்டிகை தினங்கள் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலே சிறு சிறு சச்சரவுகள் எங்கள் வீட்டில் தொடங்கும். முறுக்கு போடவா வேண்டாமா என்பதில் இருந்து பல வேறுபட்ட கேள்விகளில் முட்டிக் கொள்வோம். அப்பா ஏதாவது காரணம் சொல்லி ஓடிப் போக முயற்சி செய்வார்.

சென்னை மாற்றல் ஆகி வந்த இரண்டாவது நாள், அருகில் இருந்த வீடுகளில் சில பெண்கள் வீட்டுக்கு வரவேற்க வந்தார்கள். “என்ன ஹெல்ப் வேணா கேளுங்க” என்றெல்லாம் சொல்லிப் போனார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை – ஏனென்றால் மறுநாள் பொங்கல்.

மறு நாள் காலை, அப்பா, “இந்த ஊர்லயாவது என்ன நீங்க எல்லாரும் மரியாதையோட நடத்தலன்னா…” என்று எங்களிடம் புலம்பினார்.

பல்லைக் கடித்துக் கொண்டு மாலை வரை தள்ளி விட்டோம். நான் உள்ளே குளிக்கப் போயிருந்தேன். திடீரென்று வெளியே கூச்சல், குழப்பம். அண்ணன் கத்துவது கேட்டது.

அரைகுறையாக வெளியே வந்து பார்த்தால் அப்பா “நான் போறேன், நான் மகாபலிபுரம் போறேன்” என்று பனியன் போட்டுக் கொண்டிருந்தார். அண்ணன், “எங்க போற? நான் கொடுக்கற பணத்துலதான இப்போ வீடு நடக்குது?” என்று பனியனைத் தாவி பிடித்தான். பனியன் டர்ரென்று கிழிந்தது. நானும் ஓடிப் போய்க் கலந்து கொண்டேன்.

யாரோ நடுவே காலிங் பெல் அடித்து விட்டுச் சிரித்தபடி ஓடிப் போனார்கள். அன்று சண்டை முடிந்த போது அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் எங்கள் லட்சணம் தெரிந்து விட்டிருக்கும்.

*

திருமணம் முடிந்து விட்டது. அண்ணன் வீட்டிற்கு அண்ணியுடன் வந்துவிட்டான். ஆரத்தி எல்லாம் எடுத்து அழைத்து வந்து விட்டார்கள்.

அண்ணிக்கு அவள் அப்பாவுக்கு மேல் சன்னமான குரல். ஏதாவது வெளியே பட்டாசு வெடித்தால் திடுக்கிட்டு எங்களைப் பார்ப்பாள்.

ஒருநாள் அவள் உள்ளே இருந்தபோது, நாங்கள் நால்வரும் ஒரு மீட்டிங் போட்டோம்.

“எவ்ளோ நாள் தாங்குமோ தெரியாது” என்றாள் அம்மா. “எல்லாரும் சுமுகமா இருக்கும் போதே, நீ தனி வீடு பார்த்திட்டுக் கிளம்பிடு.”

“ஆமா, நீ போயிடு” என்றேன் நான்.

அண்ணன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். “ஏன்? நீங்க எல்லாம் போங்களேன்?” என்றான்.

“நான் ஏன்டா என் வீட்ட விட்டுப் போகணும்?” என்றார் அப்பா.

“உன் வீடா? இது அம்மா வீடும்தான்” என்று கத்தினேன் நான்.

உள்ளே இருந்து அண்ணி கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் அமைதியானோம்.

அண்ணி ஹாலிற்கு வந்தாள். “பஜ்ஜி பண்ணவா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

எங்களுக்கு அவளைப் பார்த்துப் பாவமாக இருந்தது.

*

அண்ணன் தீவிரமாகவே வீடு பார்த்தான். ஆனால் அதில் அவனுக்கு நஷ்டம்தான். அதற்கு நடுவில் அண்ணி அக்கம்பக்கத்தாருடன் நிறையப் பேசாமல் அம்மா பார்த்துக்கொண்டாள்.

“அவங்க எல்லாம் பயங்கர லோ கிளாஸ்” என்று அண்ணியிடம் சொல்லி வைத்தாள்.

அண்ணியுடன் பழகிப் பழகி நாங்கள் எல்லோரும் கூட கொஞ்சம் மெதுவாகப் பேசினோம். அவ்வப்போது நான் அண்ணனைப் பார்த்து புன்னகைப்பேன். அவனும் பதிலுக்கு. ஒரு வேளை நாங்கள் பயந்தது போல மானத்தை வாங்கிக் கொள்ள மாட்டோமோ என்று கூட நினைத்தேன்.

ஆனால் நடுவில் தீபாவளி இருந்தது.

தலை தீபாவளி என்பதால் அண்ணன் மாமனார் வீட்டிற்குப் போக வேண்டியது. ஆனால் அவர்கள் அமெரிக்கா போய் விட்டார்கள். நாங்கள் எல்லோரும் ஏர்போர்ட் போய் அனுப்பி வைத்தோம். கையைக் கூட மெதுவாக ஆட்டியபடி போய்ச் சேர்ந்தார்கள்.

தீபாவளியன்று காலை முறுக்குச் சாப்பிட்டபடி நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணன் அங்கிருந்து வந்தான்.

“அணைடா, காலங்காத்தால” என்று ரிமோட்டை எடுத்தான். பிறகு பயத்துடன் என்னைப் பார்த்தான்.

நான் அமைதியாகத் தலையாட்டி விட்டு எழுந்து போனேன்.

*

இரவு வரை அமைதி நிலவியது. சாப்பிடும் போது எல்லோரும் ஜோக் அடித்தபடி சாப்பிட்டோம்.

“மோர் எடு,” என்றான் அண்ணன்.

“அவனையே ஏண்டா எடுக்கச் சொல்ற,” என்று சிரித்தாள் அம்மா.

“ஏன்?” என்று கேட்டாள் அண்ணி, மெல்லிய குரலில். “மோர் பிடிக்காதா?”

நான் வெட்கத்துடன் தலையாட்டும் போது அண்ணன் எட்டி மோரை எடுத்தான். அது என் தட்டில் இரு துளிகள் விழுந்தன.

“என்னடா இது?” என்றேன்.

“சும்மா” என்றான்.

நான் தட்டையே பார்த்தேன். என் ரத்தம் கொதித்தது.

“ஹா ஹா” என்று கையை உதறினேன். அவன் முகம் முழுவதும் சோறு தெறித்தது.

“டாய்” என்று கத்தினான் அண்ணன்.

“சும்மா” என்றேன் நான்.

“படுபாவிகளா, படுபாவிகளா” என்று கத்தினாள் அம்மா.

“இதான், இதான், புருஷனுக்கு மரியாதை கொடுக்காட்டி, இப்படித்தான்” என்றார் அப்பா.

“இந்த மண்ணுக்குத்தான் நான் அப்பவே இவ அப்பன், அந்தாளு வீட்டுக்குப் போறேன்னேன்” என்றான் அண்ணன், முகத்தைத் துடைக்காமல்.

“கிளம்பு நீ முதல்ல” என்று நான் சொல்லத் தொடங்கினேன்.

ஆனால், இதுவரை நாங்கள் கேட்காத குரல் ஒன்று கேட்டது.

“எங்க அப்பன், அந்தாளா?” என்றாள் அண்ணி.

அண்ணன் திருதிருவென்று முழித்தான்.

“வந்து…”

“எங்க அப்பனா, அவரு? அந்தாளா?” என்றாள் அண்ணி மறுபடி. அவள் குரல் கிட்டத்தட்ட இரண்டு ஸ்தாயிகள் உயர்ந்திருந்தது.

நாங்கள் எல்லோரும் வெலவெலத்துப் போய் அண்ணியைப் பார்த்தோம்.

“நீ ஏண்டி என் புள்ளைய பாத்து இப்படிக் கத்துற?” என்று கத்தினாள் அம்மா.

‘டணார்’ என்று அண்ணி கையில் இருந்து ஒரு பாத்திரம் பறந்து சுவரில் மோதி விழுந்தது.

“புள்ளையாம் புள்ள, வளர்த்து வச்சிருக்கற லட்சணம்தான் தெரியுதே” என்று அலறினாள் அண்ணி.

அவர்கள் இருவரும் மாறி மாறி கத்திக் கொள்ளும் பொழுது, நான், அப்பா, அண்ணன் மூவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

அண்ணன் முகத்தில் சிறு நிம்மதி தெரிந்தது.

*

Posted on Leave a comment

நாடி ஜோதிடம் – புரியாத புதிரா? | அரவிந்த் சுவாமிநாதன்


ஊருக்கு ஊர் டீக்கடைகள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு நாடி ஜோதிட நிலையம் இருக்கிறது. “முனிவர்கள் கணித்து வைத்துள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் எதிர்காலப் பலன்களை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அகத்தியர், சுகர், வசிஷ்டர், பிருகு, விசுவாமித்திரர் என்று பல முனிவர்களின் பெயரைத் தாங்கிய பெயர்ப் பலகைகளை நாம் எங்கும் பார்க்க முடியும். உண்மையிலேயே இவையெல்லாம் இம்முனிவர்களால் உருவாக்கப்பட்டதுதானா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றப் போகும் ஒருவரது வாழ்க்கைக் குறிப்புகளை, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இம்முனிவர்களால் கணித்து எழுத முடிந்தது என்று நாடி ஜோதிடர்களிடம் கேட்டால், “அவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும்” என்பது நமக்கு பதிலாகக் கிடைக்கும்.

நம்மில் பலரும் நாடி ஜோதிடம் பார்த்திருப்போம். சிலருக்கு நாடியில் கூறியபடியே அனைத்துப் பலன்களும் நடந்திருக்கும். சிலருக்கு ஒன்றுமே நடந்திருக்காது. பொதுவில், பலன் பெற்றவர்கள் நாடி ஜோதிடம் உண்மைதான் என்பார்கள். நாடி சொன்னபடி தங்களுக்கு எதுவுமே நடக்காதவர்களோ, “சே, சுத்த ஏமாற்று வேலை, எல்லாம் பக்கா ஃப்ராடு. பொய்” என்பார்கள்.

அப்படியானால் உண்மைதான் என்ன?

நாடி ஜோதிடம் என்பது என்ன?

‘நாடி ஜோதிடம்’ என்பது தமிழர்களின் தொன்மையான ஆரூட முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா முழுமையும் இவ்வகை ஜோதிடமுறை பயன்பாட்டில் இருக்கிறது. தென்னாட்டில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கெளசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி போன்ற பலவகை நாடிகள் காணப்படுகின்றன. இவை அந்தந்தப் பெயர்கள் கொண்ட முனிவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றன. ஆனால் வடநாட்டில் இத்தகைய முனிவர்களின் பெயர்களினால் ஆன நாடிகளை விட சூர்ய நாடி, சந்திர நாடி, சுக்ல யஜூர் நாடி, சுக்ர நாடி, கெளமார நாடி, புத நாடி, பிரம்ம நாடி, துருவ நாடி, மார்கண்டேய நாடி, பிருகு நாடி, நாரத நாடி, கர்கர் நாடி, பராசரர் நாடி போன்றவை அதிகம் காணப்படுகின்றன.

ஒரு மனிதனின் பிறப்பு, வளர்ப்புமுதல் ஆயுள்வரையிலான பலன்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதே நாடி ஜோதிடம். நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள ஜோதிட முறை. கைரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல், சோழி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படும் ஜோதிடமே நாடி ஜோதிடம் என அழைக்கப்படுகிறது. ‘நாடி’ என்பதற்கு அணுகுதல், தேடுதல், விரும்புதல் எனப் பல பொருள்களுண்டு. ‘நாடி ஜோதிடம்’ என்பதற்கு ‘நாடி வந்து பார்க்கக் கூடிய ஜோதிடம்’ என்று பொருள் கொள்ளலாம். நாடி ஜோதிடம் பார்க்க விரும்பும் ஒருவரது கைப் பெருவிரல் ரேகையினைக் கொண்டு, பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் ஆராய்ந்து நாடி ஜோதிடர்கள் பலன்களைக் கூறுகின்றனர்.

உலக அளவில் நாடி ஜோதிடம்

பல நாடுகளிலும் பலவேறு வகையான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. சில நாடுகளில் ‘கப்பாலா’ (kabbalah) என்னும் ஓர் இரகசிய, பழமையான ஆருட முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ‘டேரட்’ எனப்படும் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுப் பலன் கூறும் முறை சீனாவில் மிகப் பிரபலமானதாகும். இதன் மூலம் பல துல்லியமான பலன்கள் தெரிய வருகிறது என்பது அதைப் பார்த்த சிலரது கருத்தாக உள்ளது. திபெத்தில் வழங்கிவரும் Akashik Records என்பதும் கூட நாடிஜோதிடத்தின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டதே! சீன நாட்டிலும் இதே போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பெயர் (Iching) ‘யீசிங்.’ ‘யீ’ என்றால் ‘மாறுதல்’ என்பது பொருள். ‘சிங்’ என்றால் ‘புத்தகம்’ என்பது பொருள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய கடந்த, நிகழ்கால, எதிர்காலச் சம்பவங்களைப் பற்றி விவரிப்பதே இதன் தனித் தன்மையாகும்.

நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் என்பது உண்மையா, பொய்யா? எதைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது? விரல் ரேகையின் மூலம் ஒருவரது எதிர்கால, கடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? எதிர்காலத்தில் நடக்க இருப்பதை எப்படி அறிய முடிந்தது? அவர்கள் ஏன் அதனை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர்? அந்த ஓலைச்சுவடி எழுத்துக்களை நாடி ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களால் ஏன் படிக்க இயலவில்லை?

இப்படியெல்லாம் பல கேள்விகள் நமக்குத் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான விடைகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. காரணம், நாடி ஜோதிடர்கள் அவற்றைத் தொழில் ரகசியமாகவும், மறை பொருளாகவும் வைத்துள்ளனர். சீடர்களாகப் பயிற்சியில் சேரும்போதே இவ்வகை ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டேன் என இறைவன், குரு, அகத்தியர் போன்ற சித்தர்கள் திருவுரு முன் சத்தியம் செய்து உறுதி ஏற்கின்றனர். அதனால்தான் நம்மால் இவற்றின் ரகசியங்களை முழுமையாக அறிய முடிவதில்லை.

அதேசமயம் நாடி ஜோதிடம் பலிக்காதது போல் நாடி ஜோதிடம் குறிப்பிட்டபடி பலருக்கும் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவேதான் நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு ஆய்வு முறைகள் தேவையாக இருக்கின்றன. ஒரே நபருக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு முறை நாடி ஜோதிடம் பார்த்தால்தான் அதன் உண்மைத் தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் விஷயமுமாகும்.

காண்டங்கள்

நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு காண்டங்கள் உதவியாக இருக்கின்றன. காண்டங்கள் என்றால் உட்பிரிவுகள் என்பது பொருள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எதிர்காலப் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும். பொதுக்காண்டத்தில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும். அதாவது ஒருவரது பெயர், தொழில் மற்றும் குடும்ப விபரங்கள் அதில் இருக்கும். விரிவான பலன்களை அறிய அதற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மொத்தம் 12 காண்டங்கள் உள்ளன. அவை தவிர்த்து சாந்தி காண்டம், தீக்ஷை காண்டம், ஔஷத காண்டம், ஞான காண்டம், பிரசன்ன காண்டம் போன்றவையும் உள்ளன. துல்லிய காண்டம், அரசியல் காண்டம், எல்லைக் காண்டம் போன்றவையும் இருக்கின்றன. சூட்சுமமான விஷயங்களை, ரகசியங்களை, மறை உபதேசங்களை, இறையருள் மற்றும் ஞானம் பெறும் ரகசிய வழிமுறைகளை, சித்தர்களுடனான தொடர்புகளை, ஆலயம் அமைப்பது பற்றிய செய்திகளைப் பற்றிக் கூறும் சூட்சும காண்டமும் உள்ளது. இவையே மற்ற ஜோதிட முறைகளுக்கு இல்லாத நாடி ஜோதிடத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.

நாடி ஜோதிடம் பார்க்கும் முறைகள்

நாடி ஜோதிடர்கள், தங்கள் நிலையத்தினை நாடி வரும் நபர்களுடைய கைப் பெருவிரல் ரேகையினை (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல் ரேகை; பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல் ரேகை), முதலில் ஒரு தாளில் பதிந்து கொள்கிறார்கள். பின்னர் அதற்கான ஓலையைத் தேடி எடுக்க முற்படுகின்றனர். அதற்கான நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. சிலருக்கு ஓலை உடனே கிடைத்து விடும். சிலருக்கு ஓரிரு நாள் கூட ஆகலாம். மற்றும் சிலருக்கு ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு நிலையத்திலிருந்துதான் தேடி எடுக்க வேண்டும் என்பதால் தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது.

ஓலைச்சுவடி கிடைத்ததும் நாடி வாசிப்பவர் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவரை அழைப்பார். அது அந்நபருக்குரிய ஓலைதானா என்பதனை அறியப் பல கேள்விகளைக் கேட்பார். நாடி பார்க்க வந்திருப்பவர் எந்த விபரங்களையும் (பெயர் உட்பட) முன்னதாகக் கூற வேண்டியதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’, அல்லது ‘இல்லை’ என்று மட்டும் பதில் கூறினால் போதும்.

பொதுவாகக் கீழ்க்கண்ட கேள்விகளைப் போன்ற பொதுவான கேள்விகளையே நாடிஜோதிடர்கள் கேட்பர். சரியான ஓலைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு கேட்பதாகச் சொல்கின்றனர். ஜோதிடம் பார்க்க வந்தவர் அதற்கான சரியான பதிலைக் கூறுவதன் மூலம் அவருக்கான ஓலையினைக் கண்டறிந்து பலன் கூற முற்படுகின்றனர். ஓலைச்சுவடியில் உள்ள பாடல்களைப் படித்து விளக்கம் கூறுகின்றனர். அவற்றை ஏட்டில் எழுதியும், ஒலிப்பதிவு நாடா/குறுந்தகட்டில் பதிவு செய்தும் தருகின்றனர்.

பொதுவான கேள்விகள் சில. (இவை பொதுவான கேள்விகள் மட்டுமே. ஆளுக்கு ஆள், சுவடிக்குச் சுவடி இவ்வகைக் கேள்விகள் மாறுபடும்.)

(1) தங்களுடைய தகப்பனார் அரசாங்கப் பணியாளரா? (2) தங்கள் தாயாரின் பெயர் அம்பாளின் பெயரைக் குறிப்பதாக இருக்குமா? (3) தங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வருக்கு மேலா? (4) தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? (5) நீங்கள் சட்டம் அல்லது மருத்துவம் பயில்பவரா? (6) உங்களுக்குக் காதல் திருமணமா? (7) முதல் குழந்தை பெண்ணா? (8) தகப்பனாரின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா? (9) மனைவி / கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா? (10) உங்களுடைய பெயர் முருகக்கடவுளோடு தொடர்புடையதா? (11) உங்கள் பெயர் வல்லினத்தில் தான் ஆரம்பிக்குமா? (12) நீங்கள் வளர்பிறையில் பிறந்தவரா?

இது போன்ற சில கேள்விகளுக்கு நாடி பார்க்க வந்தவர் கூற வேண்டிய பதில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பது மட்டுமே. இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான, சரியான பலன்களைத் தாங்கள் கூறுவதாக நாடிஜோதிடர்கள் சொல்கின்றனர். ஆனால், இக்கேள்விகள் மூலம் ஒருவரைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை ரகசியமாகக் குறித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பாடலில் வந்ததுபோல் படித்துக் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் உள்ளது.

ஒலைச்சுவடி பற்றிய விவரங்கள்

நாடி பற்றிக் கூறும் ஓலைச்சுவடியானது சுமார் பத்து முதல் பதினொன்று அங்குல நீளத்திலும், ஒன்று முதல் ஒன்றரை அங்குல அகலத்திலும் காணப்படுகின்றது. அந்த ஓலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, நன்றாகக் கட்டிவைக்கப்பட்டுளன. ஒவ்வொரு ஓலைக்கட்டிலும் சுமார் ஐம்பதுமுதல் நூறு ஓலைகள்வரை காணப்படுகின்றன. சிலவற்றில் அதைவிடக் குறைவாகவும் ஓலைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் பின்புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் காணப்படுவதில்லை. அவற்றில் உள்ள எழுத்துக்கள் கூட்டெழுத்துக்கள் என்கின்றனர் நாடி ஜோதிடர்கள். “ஒற்று நீங்கிய மிகவும் பழைய எழுத்துக்களாகக் காணப்படும் அவற்றைத் தங்களைப் போன்ற சிறப்புப்பயிற்சி பெற்றவர்களேயன்றி மற்றவர்களால் வாசிக்க இயலாது” என அவர்கள் கூறுகின்றனர். மேலும் எழுத்துக்கள் சுருக்க முறையில் குறியீடாக அதில் எழுதப்பட்டு இருக்கும் என்றும், அதனைப் பயிற்சி பெற்றுப் பல்லாண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் அனுபவம் வாய்ந்தவரே அன்றி மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இக்கூற்றை சுவடியியல் வல்லுநர்கள் மறுக்கின்றனர். “இத்தகைய எழுத்துக்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் வெறும் கிறுக்கல்கள். ஏமாற்றுவேலை” என்பதே அவர்களில் பலரது கருத்தாக உள்ளது.

நாடி ஜோதிடம் – சில விளக்கங்கள்

சிறு குழந்தைகளுக்கும் இறந்த நபர்களுக்கும் நாடி ஜோதிடம் பார்க்கப்படுவதில்லை. ஜாதகமே இல்லாதவர்களுக்கும் நாடி மூலம் ஜாதகம் கணித்துப் பலன்கள் கூற முடியும். சாதாரண ஜோதிடத்தை விட நாடி ஜோதிடம் பார்க்க அதிகம் பொருள் செலவாகும். அதிகக் கால விரயமும் ஏற்படும். அதேசமயம் பலன்களும் துல்லியமாக இருக்கும். பரிகாரம் செய்தால்தான் முழுப்பலன் என்று நாடி ஜோதிடம் கூறுவதால், அதுபற்றி ஒரு தெளிவான பார்வையுடன், அதாவது, செலவு, கால விரயம், அலைச்சல் போன்றவை பற்றி முன்னமேயே தீர்மானித்துத் திட்டமிட்டுக் கொண்டு நாடி பார்க்கச் செல்வது நலம். கூடுமானவரை நாடி ஜோதிடர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதனைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பது நலம். பொதுவாக, நாடி ஜோதிடம் பார்க்கும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் ஒருவருக்கு ஒருவர் உறவினராக இருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர். தங்களுக்குள்ளே நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.

பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு எப்படி ஒருவருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “அதெல்லாம் தொழில் ரகசியம். விரல் ரேகைகளில் சங்கு, வட்டம், கோணம், சக்கரம், பூபந்தம், கொடி, மணி, சிகிரி, சுழி, கீற்று என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு புள்ளி, இரு புள்ளி என்று பல உட்பிரிவுகள் உண்டு. முதலில் அவற்றைக் கண்டறிந்து அதன் மூலம் அந்த நபருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.

இவர்களுடைய சுவடிப் பரிமாற்றத் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரன் கோயில். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் உறவினர்கள் என்பதாலும், குருகுல முறைப்படி தொழிலைத் தொடர்பவர்கள் என்பதாலும், குலத்தொழில் என்பதாலும் சில நுணுக்கமான தகவல்களை, தங்களுக்குள் இரகசியமாகவே வைத்துள்ளனர். வெளிநபர்கள் யாரும் அதனை அறிவது மிக மிகக் கடினமாகும். உதாரணமாக விரல் ரேகைக்கு ஒரு நாடியில் வந்திருக்கும் பெயரானது மற்றொரு நாடியில் மாறுபடுவது ஏன் என வினவினால் சரியான விடை கிடைக்கவில்லை. கேட்டால் “தமிழ் நுணுக்கமான மொழி, ஒரே சொல்லுக்குப் பல பொருள் உண்டு, ஒவ்வொரு முனிவரும் அதனை ஒவ்வொரு மாதிரி குறிப்பிடுவர். அதன்படி மாறி இருக்கலாம் ஆனால் பலன் ஒன்றுதான்” என்று கூறுகின்றனர். ஆனால் இது பொருத்தமானதாக இல்லை.

நாடி ஜோதிடர்கள்

பெரும்பாலான நாடிஜோதிடர்கள் தூய்மையான வெண்மை நிற ஆடைகளையே உடுத்துகின்றனர். வாக்கு வன்மை பெற்றவராக இருக்கின்றனர். வருபவர்களின் சந்தேகங்களை நீக்க முனைபவராகவும் குறைகளைச் செவிமடுப்பவராகவும் உள்ளனர். இறைநாட்டம், ஒழுக்கம், பக்தி, பணிவு, திறமை கொண்ட இவர்கள், குருவினிடத்தே தீட்சை பெற்ற பின்னரே இப்பணியில் ஈடுபடுகின்றனர். பல வருடங்கள் குருகுல வாசம் இருந்து நாடி பற்றிய விவரங்கள், நுணுக்கங்கள், சூட்சுமங்களை விரிவாக அறிந்து, அனுபவ அறிவுடனும் குருவின் ஆசியுடனும் அனுமதியுடனும் இப்பணியில் ஈடுபடுவதாகச் சொல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஜோதிடம் முழுமையாகத் தெரியும் என்றும், தமிழில் பாடல் எழுதும் புலமையும் உண்டு என்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே, பல்வேறு கேள்விகள் கேட்டு அதனைச் ஓலைச்சுவடியில் வந்தது போல் பாடலாக எழுதித் தந்து ஏமாற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

நன்கு படித்தவர்களும் கூட நாடி ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சான்றாக டாக்டர், பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றுள்ள சிலரும் வைத்தீஸ்வரன் கோவிலிலும், சென்னையிலும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதைக் கூறலாம். அவ்வப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டிற்கும் இவர்களைப் போன்றவர்கள் சென்று பொருளீட்டி வருகின்றனர்.

போலி நாடி ஜோதிடர்கள்

அதே சமயம் நாடி ஜோதிடர்களில் பல போலி நாடிஜோதிடர்களும் உள்ளனர். உண்மையானவர்களை விட இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எனவே நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லாவிட்டால் ஏமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகி விடும். ‘உங்கள் சார்பாக நாங்களே அனைத்துப் பரிகாரங்களையும் செய்து விடுகின்றோம், நீங்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறுபவர்களிடம் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் ‘பரிகாரங்களைச் செய்யும் பொழுது தொடர்புடையவர் உறுதியாக அதில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம்தான் அவர்கள் தம் பாவங்கள் முழுமையாக நீங்குகின்றன’ என்பதே மூத்த ஜோதிடர்கள் பலரது கருத்தாக உள்ளது. போலி நாடி ஜோதிடர்கள் பல்வேறு நுணுக்கமான முறைகளைக் கையாள்வதால் நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

நாடி ஜோதிட நிலையங்கள்

தமிழகத்தின் பல இடங்களில் அகத்தியர், வசிஷ்டர், பிருகு, சுகர், சப்தரிஷி, கௌசிகர் எனப் பல முனிவர்களின் பெயரில் நாடி ஜோதிட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தலைமைப்பீடமாகத் திகழ்வது வைத்தீஸ்வரன் கோவில். ஆனால்,

இங்கு தரகர்களின் ஆதிக்கம் அதிகம். ஊருக்குப் புதியவர்கள் வந்தாலோ, பேருந்தில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாலோ உடனே தரகர்கள் வருவோரை அணுகி, நாடி ஜோதிடம் பார்ப்பது குறித்துப் பேரம் பேச ஆரம்பிக்கின்றனர். குறிப்பிட்ட நாடி ஜோதிடர் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், “அவர் இல்லை ஊருக்குப் போயிருக்கிறார்” என்றோ, “அவர் மகன்தான் இவர்” என்றோ அல்லது “அவர் உறவினர்தான் இவர்” என்றோ அல்லது யாரோ வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்தி “நீங்கள் குறிப்பிட்டவர்தான் இவர்” என்றோ கூறி ஏமாற்றுகின்றனர். வருபவர்களை வழிமறித்து, மனம் குளிரப்பேசி, சில குறிப்பிட்ட நாடி நிலையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மக்களைக் கூட்டி வருவதற்கு இவ்வகைத் தரகர்கள், வரும் நபரின் தராதரத்தைப் பொறுத்து, நபர் ஒருவருக்குத் தங்கள் கமிஷன் கட்டணமாக, ரூபாய் 50/- முதல் 100/- வரை நாடிஜோதிடர்களிடமிருந்து வாங்கிக் கொள்கின்றனர். ஆகவே இது போன்ற இடங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல நாடி நிலையங்களுக்குச் சென்னை, கோவை மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கிளைகள் உள்ளன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் பெங்களூர், டில்லி, புனே போன்ற வெளிமாநிலங்களில் நாடிஜோதிட நிலையம் அமைத்துத் தொழில் செய்து வருகின்றனர். சான்றாக சென்னையில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கு மும்பையில் கிளை உள்ளது. தாம்பரத்தில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கும் மும்பையில் கிளை உள்ளது.

நாடி ஜோதிடப் பாடலின் அமைப்பு

நாடியில் வரும் பாடலானது ‘அந்தாதி’ என்னும் இலக்கிய அமைப்பில் உள்ளது. ‘அந்தாதி’ என்பது ‘அந்தம் + ஆதி’ என விரியும். அதாவது முன் நின்ற பாடலின் ஈற்றசையோ, எழுத்தோ, சீரோ, அடியோ, தளையோ, தொடையோ வரும் பாடலின் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதே அந்தாதியாகும். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக ‘அந்தாதி’ விளங்குகிறது. தமிழில் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, பொன் வண்ணத்தந்தாதி, அற்புதத் திருவந்தாதி, எனப் பல அந்தாதி நூல்கள் உள்ளன.

சான்றாக ஒருவரின் நாடி ஜோதிடக் குறிப்பில் வந்த ‘அந்தாதி’ அமைப்பில் இருக்கும் பாடல்.

காலமதில் ஒளடதபதி தலைவன் தோற்றம்
காளையிவன் அறிவு முதல் திறமை யூகம்
மேலான அத்தன் சுகம் அன்னை வீவு
மேதினியின் ஈர்வேபடல் தந்தையர்க்கு
தந்தையர்க்கு முன்குடியாள் புதல்வனாகும்
தானிவர்க்கு ஆண்துணை ஓர் அரிவை இல்லை
துணைஆணும் வேறு குல மன்றல் தொண்டு
இயம்ப அது வாகனத்தின் ஓட்டம் தன்னில்

ஆனால், “இவ்வகைப் பாடல்கள் ‘அந்தாதி’ அமைப்பில் இருந்தாலும் இவை அகத்தியர் போன்ற முனிவர்களாலோ, சித்தர்களாலோ இயற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை” என்பதும், “சங்ககாலத்தில் ‘ஆசிரியப்பா’வே ஏற்றம் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் தோன்றிய ‘வெண்பா’ யாப்பில் இம்முனிவர்கள் பாடியிருக்க வாய்ப்பே இல்லை” என்பதும் தமிழார்வலர்களின் கருத்தாக உள்ளது. இவற்றிற்கு விளக்கம் கூறும் நாடி ஜோதிடர்கள், “அக்காலத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை அப்படியே பயன்படுத்துவதில்லை. அவற்றைப் பிரதியெடுத்தும், படி ஓலை தயாரித்துமே பயன்படுத்துகிறோம். அப்படி பிரதியெடுக்கும்போது பிழை நேர்ந்திருக்கலாம்” என்கின்றனர். ஆனால், இக்கருத்து ஏற்கக் கூடியதாக இல்லை.

அகத்தியர் போன்றவர்களால் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்பது நாடி ஜோதிடர்கள் கருத்து. ஆனால் அதில் பயின்று வரும் பாடல் வகையான அந்தாதி முறை ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலாக, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி கருதப்படுகிறது. இது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாக இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.)

நாடி ஜோதிடம் சில சந்தேக விளக்கங்கள்

சுவடியியல் அறிஞர்களிடம் நாடி ஜோதிடம் பற்றிக் கேட்டால், “இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர்.

ஆனால் நாடி ஜோதிடர்களோ, “இவையெல்லாம் பழங்காலத் தமிழ் எழுத்துக்கள்தான். எங்களைப் போன்று அதைப் படிப்பதற்கென்றே, தனியாக குரு மூலம் பயிற்சி பெற்றவர்களால் அன்றி மற்றவர்களால் அதைப் படித்து பொருள் காண முடியாது” என்கின்றனர். மேலும் “ஒரு வித மூலிகையை உள்ளடக்கி, சில ரகசிய மந்திரங்களை உச்சாடனம் செய்து, தனிமையில் அமர்ந்து தவம் செய்தால், அந்த எழுத்துக்களைப் படிக்கும் ஆற்றலும், வாக்குப் பலிதமும் உண்டாகும்” என்று இவர்கள் கூறுவது நம்பக் கூடியதாக இல்லை.

நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளின் தொன்மை, எழுத்துக்களின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு நாடி ஜோதிடர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல; ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக் கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) அது நாடி ஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவது போல மக்களை ஏமாற்றியும் வருகின்றனர். (பார்க்க படங்கள் : 2, 3) அதுவும் மொழி தெரியாத வெளிநாட்டுக்காரர்கள், வட இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது இன்னமும் எளிது. “உங்கள் பெயர் இதோ இருக்கிறது பாருங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் முனிவர் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலி; புண்ணியவான்; முனிவரின் அருள் பெற்றவர் “ என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி, ஓலைச்சுவடியைக் காட்டிப் பணம் பறிக்கின்றனர். இவர்களில் சிலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட சம்பவங்களும், சிலர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் கூட இருக்கின்றன.

நாடி ஜோதிடம் என்பது உண்மையா பொய்யா, ‘பொய்’ என்றால் ஏன் பொய்யாகிறது, அதற்குக் காரணம் என்ன, சிலருக்கு மட்டும் ஏன் நாடியில் வந்தது போலவே பலன்கள் நடக்கின்றன, அதற்கான சூட்சும காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. “நாடி ஜோதிடத்தில் ‘யக்ஷிணி’ போன்ற சில தேவதைகளின் பயன்பாடு உண்டு” என்ற கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் மிக விரிவாக, பலர் ஒன்றிணைந்து, பல்வேறு கால கட்டங்களில் பல முறை மீள மீளச் செய்ய வேண்டிய ஆய்வுகளாகும். என்றேனும் ஒருநாள் எதிர்காலத்தில் இது சாத்தியமாகக் கூடும் என்று நம்புவோம். அதுவரை ‘உண்மை’ என்றும் ‘பொய்’ என்றும் இரு வேறு கருத்துக்களுடன் இது புரியாத புதிராகவே நீடிக்கும். 

Posted on Leave a comment

அறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் – 2 | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

இந்திய சாஸ்த்ரிய இசையும், கலைகளும், கோவில்களோடு தொடர்புப்படுத்தப்பட்டிருந்ததே, அக்கலைகள் கலப்படம் ஆகாமல் இருக்க பேருதவியாக இருந்தன எனச் சென்ற இதழில் பார்த்தோம். (கலப்படம் ஆகிவிடக்கூடாது எனும் நோக்கத்தினால்தான் அவை கோவிலுடன் தொடர்புப்படுத்தப்பட்டிருந்தன எனக் கூற இயலாதுதான். ஆனால், அது ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.) ஆனாலும், கூட அதில் சில குழப்பங்கள் (passing-off) புகுத்தப்பட்டதையும் பார்த்தோம். அதாவது, பக்தி வேகத்தில், இறைவனைப் பற்றிய பாடல்களைப் பலரும் பாடினால், அவர்களுக்கும் பெரும் புண்ணியம் கிட்டும் எனும் நம்பிக்கையில், தான் எழுதிய பாடல்களை பிரபல பாடலாசிரியர்கள் எழுதியது எனச் சேர்ப்பதும் நடந்தேறியது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்த்தோம்.

அதைப் போலவே சிற்ப ஓவிய சாஸ்திரமும், கோவில்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டிருந்தமையாலேயே பெரிதும் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இசைக்கான விதியில் இருந்து முற்றிலும் வேறொரு வழியில்.

“சிற்ப, ஓவியக் கலைகளில் ஒரு யுனிக்னெஸை கொண்டு வருவதன் மூலம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி நடந்திருக்கிறது. அதற்கு வழியாக, ஆகம விதிகள், பாணிகள் அமைந்திருந்திருக்கின்றன.”

கர்நாடக இசையைப் பொருத்தவரையில், பாடலுக்கான வார்த்தைகளை எழுதியவரும், அதற்கான இசையை அமைத்தவரும் ஒருவராகவே இருக்கிறார். எனவேதான் அவர்களை ‘வாக்கேயகாரர்கள்’ எனச் சொல்கின்றனர். அதாவது வாக்கு (வார்த்தைகள்), கேயம் (இசை).

பாடல்களின் இசை (ட்யூன்) கர்நாடக இசையின் விதிகளைப் பின்பற்றி அமைந்திருந்தாலும், வார்த்தைகள் வாகேயகாரரின் எழுத்துக்களே.

இந்திய இலக்கிய/இசை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பின் வந்த காலங்களில் அவற்றில் ‘முத்திரை’ எனும் பெயரில் அதன் பாடல் வரிகளை எழுதியவரின் பெயரோ, ஏதேனும் அடையாளமோ வைக்கப்பட்டிருப்பதை ஓரளவுக்கு பாடல் வரிகளுக்கான ‘உரிமை கோரல்’ என எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக தியாகராஜரின் பாடல்களில், ‘தியாகராஜ’ எனும் வார்த்தையும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பாடல்களில், ‘குருகுஹ’ எனும் வார்த்தையும் வரும். ஆனால், தியாகராஜர் எனும் இறைவனின் பெயரில் எழுதப்பட்ட பாடல்கள் எல்லாமே தியாரராஜரின் சாஹித்யம் அல்ல என்பதை அதன் மொழிநடையின் தனித்துவத்திலிருந்து மட்டுமே அறிய இயலும்.

(அதே போல, பாடலில் இசை (tune) எந்த ராகத்தில் அமைய வேண்டும் எனவும் குறிப்பிடப்படுவதை ‘ராக முத்திரை” என்கிறார்கள். இவை எல்லாப் பாடல்களிலும் அமைவதில்லை எனினும், இவற்றை இசையை அடையாளம் காட்டும் கருவியாக மட்டுமே பயன்படுத்த இயலும்.)

அநேக சமயங்களில், ஒரு கலையை ‘போலச் செய்வதன்’ மூலமாகவே பல புதிய கலைகள் பிறக்கின்றன. நம் காலத்திய எடுத்துக்காட்டு எனில், மிமிக்ரி.

அதாவது பிரபலர்களின் நடை உடை குரல் பாவனைகளை ‘போலச் செய்வது’ உதாரணமாக, ரஜினியின் குரலும், அங்க அசைவுகளும். ரஜினியை (அசலை) நகல் செய்வது சட்டக் குற்றம் என எடுத்துக்கொண்டால், மிமிக்ரி எனும் கலையே பிறந்திருக்காது அல்லவா?

இதற்கு இன்னொரு சட்ட உதாரணமாக ஃபார்சூன் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் எதிர் தேவ் ஆனந்த் வழக்கை எடுத்துக் கொள்ளலாம். தேவ் ஆனந்த் எனும் ஹிந்தி நடிகர், தன்னைப் போல எவரும் ‘போலச் செய்தல்’ (Mimicry) கூடாது என வழக்கிட்டிருந்தார். அந்த வழக்கு அவருக்கு எதிராகவே முடிந்தது. காரணம் ‘போலச் செய்தல்’ இன்னொரு கலையை உருவாக்கும் என்பதால்தான்.

இந்தியாவில் 1957லேயே காபிரைட் சட்டம் வந்திருந்தாலும், 1994 காபிரைட் திருத்தச் சட்டத்தில்தான் நிகழ்த்து கலைஞரின் (Perfirmer’s right) உரிமை அங்கீகரிக்கப்பட்டது. நிகழ்த்து கலைஞர் எனில், ஒரு மேடைக் கச்சேரி, மேடைப் பேச்சு, நாட்டியம், நாடகம் இப்படிப் பலவும் அவற்றை நிகழ்த்துபவரின் உரிமையும் பிற்காலத்தில்தான் ஒரு அந்தஸ்தை, அங்கிகாரத்தை அடைந்தது. ‘போலச் செய்தல்’ இருந்தாலுமே அது முழு முற்றாக ஒன்றன் முழு நகலாக இருந்தால் அது சட்ட மீறல்; அதே சமயம் அதில் அப்படி ‘போலச் செய்பவரின்’ திறமையும் உழைப்பும் இருந்தால் அது இன்னொரு கலையாகவே பார்க்கப்படும். உதாரணமாக மிமிக்ரியில் அந்தக் கலைஞர், எந்த அளவுக்கு அசலைப் போலவே செய்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வெற்றி. அந்த அசலை நகல் எடுக்கும் நுணுக்கத்திற்கே மரியாதை. அதுவே மிமிக்ரி கலை.

இதையே சிற்பக் கலைக்கும் உதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. காரணம், ஏற்கெனவே இருக்கும் ஒரு சிலையை நகலாக மறுபடி வடிவமைக்க, சிற்பத் திறனும், நுணுக்கமும் தேவைதான். ஆனால் அந்த சிலையின் ‘முதல் வடிவம்’ (அடிப்படை வடிவம் – அடிப்படை ஸ்கெட்ச் எனச் சொல்லலாம்) என்பதில் நகல் எடுப்பவருக்கு உரிமை இல்லை. ஆனால், மிமிக்ரியில் அசலாக இருப்பதற்கு எதுவும் திறமையோ உழைப்போ தேவை இல்லை. ஆனால், நகல் எடுப்பதற்கே திறமை தேவை.

இதன் காரணமாகத்தான், சிற்ப, ஓவியக் கலைகளுக்கான விதிகள் வேறாகவும், இசை, மிமிக்ரி போன்றவற்றிற்கான விதிகள் கொஞ்சம் வேறாகவும் இருக்கின்றன.

சிற்ப, ஓவியக் கலைகளைப் பொருத்த வரையில், சட்ட மீறல் என்பதை மூன்று வகையில் பார்க்க வேண்டி இருக்கிறது. சிலை அல்லது ஓவியத் திருட்டு, சிலை அல்லது ஓவியத்தைப் பிரதி எடுத்தல், எடுத்த பிரதிகளையே ஒரிஜினல் எனச் சொல்வது.

சிற்ப சாஸ்திரத்தில், ஆகம விதிகளாக இருப்பவையே, அவை திருட்டிலிருந்தும் பிரதி எடுத்தலில் இருந்தும், எடுத்த பிரதிகளை அசல் எனச் சொல்வதிலிருந்தும் பாதுகாத்தன.

உதாரணமாக, அறுபத்து மூவர் சிலைகளைப் பல ஊர்களில் பார்க்கலாம். ஒவ்வொரு சிலையும் அந்த நாயன்மாரின் கதையை ஒட்டியே அமைந்திருக்கும். விநாயகர்/பிள்ளையார் உருவத்தைத் தவிர வேறெந்த சிலைகளும், ஒருவரின் தன் விருப்பப்படி சிற்பமாக ஆக்க ஆகம விதிகள் இடம் கொடுப்பதில்லை.

கோவில் சிற்பங்களைப் பொருத்த வரையில், அச்சிலைகள் அமையும் பீடம், கையின் வைப்பு முறை (அவற்றிற்குப் பல பெயர்கள். உதாரணமாக கடியஸ்தம்-தொடையில் விரல் மடக்கி வைப்பது, அபயஹஸ்தம்-அபயம் அளிப்பது போல வைப்பது, இப்படி) அந்த உருவத்திற்குரியவரின் இயல்பு/கதை இவற்றினைக் குறிக்கும் காரணிகள், நகைகள், இப்படிப் பலவற்றின் மூலம் ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு தனித்துவம் கொண்டுவரப்பட்டு விடுகிறது. அந்த தனித்துவத்தை மீறாதிருப்பதே ஆகமம் என ஆகிவிடுகிறது.

ஆகம விதிகளுக்கு அடுத்ததாக, ‘சிற்ப பாணி’ உதவுகிறது. சிற்ப சாத்திரம் அறிந்த ஒருவர், ஒரு சிலை யாருடையது என்றும், அந்தச் சிலை எந்தப் பாணியில் அமைந்தது என்றும், அந்தப் பாணியை வைத்து அது எந்த அரசர் காலத்தியது என்றும் சொல்லி விட முடியும். இதற்கு கார்பன் டேட்டிங் எல்லாம் தேவை இல்லை. அதன் நகலாக வேறெங்கேயும் சிலைகள் கிடைக்காது.

ஏனெனில், சிற்பிகள் ஆகம விதிகளை மீறக்கூடாது என்பது மிரட்டும் விதியாக வைக்காமல், இறைவனை மீறும் ஒரு செயலாக பார்க்கப்பட்டதும், அதற்கு அவர்கள் இசைந்திருக்கப் பழக்கப்படுத்தப்பட்டதுமே காரணம்.

வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகள் மூன்று வகையானவை. ஒன்று, அவை அரசர் காலத்திலேயே, போர்க்காலங்களில் வெற்றிச் செல்வமாக பிடுங்கிக் கொண்டு போகப்பட்டவை, அல்லது, இங்கிருந்து திருட்டுத்தனமாகக் கொள்ளையடிக்கப்பட்டவை, அல்லது, பிரதியெடுக்க வாய்ப்பு வந்தபின் பிரதி எடுக்கப்பட்டு, மாற்றி வைக்கப்பட்டு கொள்ளை போனவை.

இதே சூழல் வெளிநாடுகளில் வேறு வகையாகக் கையாளப்பட்டது.

(தொடர்வோம்…)

Posted on Leave a comment

ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்


முன்குறிப்பு: உலகின் ஓரிடத்தில் நடக்கும் ஒரு கலாசாரத் திருவிழாவின் கோலாகலக் குறிப்புகள் என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். மற்றபடி, குடி குடியைக் கெடுக்கும் என்பதிலும், குடியைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
*
ஜெர்மனியின் பவேரியத்தலைநகரமான ம்யூனிக்கில் கொண்டாடப்படும் இந்த அக்டோபர் திருவிழா (Oktoberfest) லிட்டர் லிட்டராக பியர் குடிப்பதைத்தான் முதன்மைப்படுத்துகிறது. சாராயம் குடிக்க திருவிழாவா என்று நாம் மிரட்சியுடன் கேட்டால் என்றால், அதனால் என்ன என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

நம் ஊர் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு மட்டையாவதற்கோ அல்லது காதல் தோல்வியில் புலம்புவதற்கோ அல்ல; இங்கே பியர் குடிப்பது ஒரு கலாசார அடையாளம். அதுவும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் திருவிழா 1810ம் ஆண்டு பவேரிய மன்னர் லுட்விக் (Ludwig 1786 – 1868) Saxe Altenburg என்னும் சிறிய ஜெர்மன் பிரதேசத்தின் இளவரசி தெரெஸாவைத் திருமணம் புரிந்துகொண்ட சமயத்தில் தொடங்கப்பட்ட கோலாகலம்.

தம் மன்னரின் திருமண வைபவத்தை பிரஜைகளும் கொண்டாடவேண்டும் என்பதற்காக ம்யூனிக்கின் வயல்வெளிகளில் மக்களின் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அக்டோபர்ஃபெஸ்ட் கடந்த இருநூத்திச்சொச்ச வருடங்களில் பல வடிவங்கள் மாறினாலும் இன்றும் உலகத்திலேயே மிக அதிக மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாவாகக் கருதப்படுகிறது. நகரமயமாக்கப்பட்டபின் இந்த விழாவுக்கென்றே ஒரு பெருந்திடல் அமைக்கப்பட்டு அதை தெரெஸா பசும்புல் வெளி (Theresa’s Meadow) என்றும் சுருக்கமாக ஜெர்மானிய மொழியில் வைஸென் (Wisen) என்றும் சொல்கிறார்கள்.

2018ம் வருட விழா தொடங்கிய ஞாயிறு (23 செப்டம்பர் 2018) காலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றது அலெக்ஸா. ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மரீன் ப்ளட்ஸ் என்னும், மிக அழகான ஃபௌண்டன் பன்னீர் தூவும் அந்த ராஜபாட்டையின் நடுவில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டேன். சரியாகப் பத்து மணிக்கு ஊர்வலம் நான் இருந்த பாட்டையில் வந்து முன்னேறியது.

வயதானவர்களும், பெண்களும் கட்டுமஸ்து இளைஞர்களும் சின்னப்பையன்களும் சிறுமியரும் சம்பிரதாய உடையில் கையில் அவரவர் ஊர்களின் விசேஷ சாமக்கிரியைகளுடன் (ஒரு சிலர் மிகப்பெரிய கத்தி, துருப்பிடிக்காத 18ம் நூற்றாண்டுத் துப்பாக்கி, பதப்படுத்தப்பட்ட செம்மறி ஆட்டைக் குச்சியில் தலைகீழாகக் கட்டி, கொத்துக்கொத்தாய் மலர்ப்பந்துகள் அடுக்கி என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்) கோலாகலமாக ஊர்வலம் வருகிறார்கள்.

இந்த ஊர்வலத்தின் சிறப்பு அவர்களின் உடைகள்தாம். பவேரிய உடைகளான டிரெண்டல் (Drendl) என்னும் உடையைப் பெண்கள் அணிகிறார்கள். இது மூன்று பீஸ் கொண்ட உடை – பாவாடை, பிளவ்ஸ் மற்றும் ஏப்ரன் எனப்படும் கவசம் போன்ற மார்புப்பகுதி உடை. ஆண்கள் லெதர்ஹோஸென் (Lederhosen) என்னும் தோலிலான அரை டிராயர் மற்றும் நம் ஊரில் அந்தக் காலத்தில் எலிமெண்டரி பள்ளிப் பிள்ளைகள் போட்டுக்கொள்ளும் டிராயர் பட்டி, மேலே இறுக்கமான சட்டை. ஒரு காலத்தில் இந்த டிரெண்டல் உடை, பாரில் மற்றும் எடுபிடி வேலை செய்யும் பெண்களின் உடையாக இருந்து வந்தது. அதே போல குதிரை லாயங்களில் வேலை செய்யும் ஆண்களின் உடை இந்த லெதர்ஹோஸென்! ஆனால் ஆஸ்திரிய மன்னர் ஃப்ரான்ஸ் ஜோசெஃப் (தன் திருமணத்துக்குப் போகும் வழியில் எதேச்சையாகப் பார்த்து மையல் கொண்டுவிட்ட ஸிஸ்ஸி என்னும் பவேரிய சாதாரணளைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டவர்!) இந்தவித உடையை அணிந்து அதற்கு பெரும் கௌரவத்தை ஏற்படுத்திவிட்டார்.

சம்பிரதாயமாகத் தொடங்கப்பெறும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் விழாவில், முதலில் பலவித மாநிலங்கள் மற்றும் பியர் கம்பெனிகளின் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்து வரும். அவற்றின் பின்னே தெரெசா மைதானத்தில் பணி புரியவரும் பெண்கள், காவல் காக்க வரும் ஆண்கள் என அனைவரும் அவரவர்களின் கலாசார உடையலங்காரங்களுடன் பெரும் ஊர்வலமாக வருகின்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய மறு ஆரவாரம் செய்து உற்சாகமூட்டுகிறார்கள். நான் கூட துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு ஆசாமியைப் பார்த்து கையை ஆட்டி வைத்தேன்.

குழு குழுவாகப் போகும் இந்த ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 90-100 குழுக்கள் ஊர்வலம் போகுமாம். அவர்களின் உற்சாகத்தில், தம் நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துகொள்ளும் பெருமிதம் நிரம்பி வழியும். வயது வித்தியாசமின்றி மழைத் தூறலையும் பொருட்படுத்தாத அழகான தாத்தாக்களும் பாட்டிகளும் குழந்தைகள் மாதிரிச் சிரித்துக் கைகளை வீசி ஆட்டிக்கொண்டு போகும் குதூகலம் நிச்சயம் ரசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த ஊர்வலம் மிகப்பெரிய ஒற்றுமை ஊக்கி என்பதில் சந்தேகமில்லை.

காலை ஒன்பது மணியளவில் தொடங்கும் இந்த ஊர்வலம் ம்யூனிக்கின் முக்கிய ராஜ பாட்டையின் வழியாகச் சென்று தெரெஸா பசும்புல்வெளியை சுமார் பன்னிரண்டு மணியளவில் அடைகின்றது. அங்கே ம்யூனிக்கின் மேயர் ஒரு அடையாள சுத்தியுடன் முதல் பியர் பீப்பாயைத் தட்டி உடைத்து பியரை வழியவிட்டு முதல் ஒரு லிட்டர் பியர் கோப்பையை பவேரிய மாநிலத்தின் தலைவருக்கு அளிக்க, ஆரவாரமாகத் தொடங்குகிறது இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் பியர் திருவிழா. ஒவ்வொரு வருடமும் மேயருக்கு எத்தனை சுத்தியல் அடி தேவைப்படுகிறது என்பது பற்றி பந்தயம் எல்லாம் கட்டுகிறார்கள். இதில் சாதனை செய்திருப்பவர் தாமஸ் விம்மர் என்னும் மேயர் – 1950ஆம் ஆண்டு இவருக்கு முதல் பீப்பாயை உடைக்க 19 சுத்தியல் அடி தேவைப்பட்டதாம். மூன்றே அடிகளில் உடைத்த மேயர்களும் உண்டு.

தெரெஸா பசும்புல்வெளியில் இந்த அக்டோபர்ஃபெஸ்டிவலின் போது தரப்படும் பியர் வேறெப்போதும் கிடைக்காதாம்.

ராஜபாட்டையில் ஊர்வலம் நடந்தபோது போக்குவரத்தை முழுமையும் நிறுத்தி சாலையை துப்புரவாகத் துடைத்துவிட்டிருந்தார்கள். ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கடக்கும் இந்த ராஜபாட்டையில் போக்குவரத்து விளக்குகள் மட்டும் எப்போதும் போல இம்மி பிசகாமல் சிவப்பு ஆரஞ்சு பச்சை என்று குறிப்பிட நேரத்துக்கு மாறாமல் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒழுக்கத்தில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது என்பேன்.

தெரெசா பசும்புல்வெளியில் இப்போது புல் வெளியெல்லாம் இல்லை. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். உள்ளே நுழையும்போதே கோலாகலத்தின் அடையாளங்கள் சந்தேகமின்றி வெளியில் தெருவிலேயே கேட்கின்றது. ஆம், அந்தச் சத்தம், பேச்சின் சளசளப்பு, சைக்கேடெலிக் வண்ணங்கள் கலந்து இழையும் விளக்குகள். பிறகு, அந்த சங்கீதம்! அபார துடிப்புமிக்க சங்கீதம். மிகப்பெரிய ‘பியர் கூடாரம்’ போட்டு, அங்கு ஆயிரக்கணக்கில் மேஜை நாற்காலிகள் போட்டு, பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் இரண்டு கைகளிலும் பியர் கோப்பைகளை அடுக்கியவாறே நடந்து சென்று விநியோகிக்க, கூட்டம் மேடையில் துடிக்கும் சங்கீதத்துக்குக் கூடவே பாடி ஆடி மாய்ந்து போகிறார்கள்.

சங்கீதம் என்று ஒரு வார்த்தையில் அதை முடித்துவிட முடியாது. தற்காலிக மேடை போட்டு சங்கீத உபகரணங்கள் வைத்து நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறார்கள். சைகேடலிக் வண்ணங்கள் ஊடாடிக் கொண்டிருக்க கிட்டத்தில் போய்ப் பார்த்தேன். அங்கே மேடையில் ஒரு குழு (Band) ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அபார சங்கீதம். அந்தத் தாளம், ரிதம், கிடாரிஸ்டுகளின் சேட்டையுடன் கூடிய வாசிப்பு, எல்லாம் நம்மை ஒரு வேறு உலகத்திற்கு அழைத்துப் போவதை உணர முடிகிறது. கொஞ்சம் நேரமாக நேரமாக, அந்த சங்கீதம் மேலே மேலே என்று போய் ஒரு உச்சத்தில் நரம்புகளைத் துடிக்க வைத்துச் சட்டென்று முடிவது, போதையான எல்.எஸ்.டி அனுபவம். முடிந்து அந்த சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் தருணத்தில் கூட்டம் முழுவதும் ஹோ வெனா ஆர்ப்பரிக்கும். ரகளை! ஆங்காங்கே ஜோடிகள். ஒரு கையில் பியர் இன்னொரு கையில் பெண் என்ற விகிதத்தில் அவ்வப்போது பியரைச் சப்பிக்கொண்டு இடையிடையே அந்தப் பெண்ணின் மூக்கை நிரடிக்கொண்டும் இருக்கும் காட்சிகள் சர்வ சாதாரணம்.

அக்டோபர் திருவிழாவில் பியர் தயாரிப்பதற்கான உட்பொருட்கள் என்ன என்பதைக்கூட 1516ம் யூனிக் சட்டம் சொல்லியிருக்கிறது. இவை தவிர இதில் ஈஸ்ட் மட்டும் கலக்க அனுமதி. ஏனென்றால் இந்தச்சட்டம் இயற்றப்பட்டபோது ஈஸ்ட் எனப்படும் சமாசாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கென்று தனி ஃபார்முலாவில் தயாராகும் பியர் மற்ற சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படக்கூடாது என்பதும், இந்த கம்பெனிகள் தவிர வேறு எந்த சாராய நிறுவனமும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் பியரைத் தயாரிக்க முடியாது என்பதும் சட்டம்.

இந்த தெரெசா மைதானத்து நுழைவிலேயே கடுமையான பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். இன்றைய பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தக் கெடுபிடி தேவைதான். ஏகப்பட்ட கூடாரங்கள் போடப்பட்டிருக்க அவற்றில் கூட்டம் கூட்டமாக ஜனம் அம்முகிறது. குறைந்த அளவு பியர் கோப்பையே ஒரு லிட்டர்தான். அதன் விலை கிட்டத்தட்ட பதினொரு யூரோக்கள் (சுமார் 900 ரூபாய்.) அதகளமாகப் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு பியர் குடித்த வண்ணம் இருக்கிறார்கள்.

கூடவே ஏகப்பட்ட உணவு வகைகளும் கிடைக்கின்றன. பவேரியன் மற்றும் ஜெர்மன் வகை உணவுகள்தாம் அதிகம். அதிலும் வறுத்த கோழி, பன்றி கட்லெட், ஸ்பாட்ஸீ என்று சொல்லப்படும் முட்டை உணவு, விதவிதமான காய்கறிகள் பழங்கள் என்று நிறைய வகைகள் இருந்தாலும் அந்தப் பச்சை மாமிச நாத்தம், நம் ஊர் போல மிளகு காரம் மசாலா சேர்க்காததாலோ என்னவோ, சில சமயம் நம் ஊர் ஊதுவத்திகளை விட மோசமாக இருக்கிறது.

லாங்கோஸ் (Langos) என்று ஒரு சாப்பிடும் வஸ்து. அங்கே கூட்டம் அல்லாடியது. என்னவென்று பார்த்தால் நம் ஊர் னான் போல, ஆனால் அப்பளமாகப் பொரிக்கப்பட்ட ஒரு மகா வட்ட சமாசாரத்தில் கொழகொழவென க்ரீம் தடவி, அதன் மேல் ஏகப்பட்ட சீஸைக்கொட்டி, மேலும் தக்காளி துண்டுகள் மற்றும் குரோய்ட்டர் என்னும் இலை தழை போன்ற சாலடுக்கான சாமக்கிரியைகளைப் பரப்பி, “உங்கள் உணவை எஞ்சாய் பண்ணுங்கள்” என்று கீச்சுக்குரலில் அழகிய இளம் பெண்கள் கௌண்டரில் தருகிறார்கள். இந்த னான் என்னும் அப்பளத்தை முகத்தில் க்ரீம் அப்பிக்கொள்ளாமல் சாப்பிடுகிறவர்களுக்கு, அதேதான், கேள்வி கேட்காமல் நம் வலது காதை வெட்டிக்கொடுக்கலாம்.

என்னுடைய ஸ்வெட்டர் காலி. மூக்குக்கண்ணாடி முழுக்க கிரீம்.

பியர் அருந்தும் ஸ்டால்களைத்தவிர குடும்பத்தோடு வருபவர்களுக்காக பலப்பலக் கேளிக்கைகளுக்கான சௌகரியங்களும் இருக்கின்றன. நம் ஊர் ஜெயண்ட் வீலின் பலதரப்பட்ட வடிவங்கள். அதன் உயரமும் சுழற்சியும் வீச்சும், புவிஈர்ப்பைக் காதலிக்கும் என் போன்ற ஆசாமிகளுக்கு வயிற்றில் ஈரப்பந்து சுருட்டிக்கொள்ள வைக்கின்றன. கூடவே உபத்திரவமில்லாத வளையம் எரிதல், துப்பாக்கிச் சுடுதல் வகை விளையாட்டுக்களும் பலப்பல உண்டு. விதவித பலூன்களைக் கொடுத்து குழந்தைகளைக் கிறீச்சிட வைக்கிறார்கள். நூல் தவறின ஒரு குழந்தையின் ஹீலியம் பலூன் வானத்தில் ஏறின காட்சியை ஏதோ பெரிய அதிசயம் போல ரசித்துப் பார்த்த கூட்டத்தில் நானும் அடக்கம்.

இந்தக் கோலாகல வட்டாரம் முழுக்கவே புகை பிடிக்க அனுமதியில்லை என்றுதான் இருந்ததாம். ஆனால் புகை பிடிக்கும் அன்பர்கள் சிணுங்கியதால் ஒரு சில இடங்களில் புகை பிடிக்க அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் கோலாகலத்தில் இரண்டு வாரங்கள் உல்லாசமாகக் கூட்டம் கூடி லிட்டர் லிட்டராக பியர் அருந்தி, உண்டு, அனுபவித்து, அதே சமயம் ஒரு சின்ன அசம்பாவிதத்துக்கூட இடமில்லாமல் இருக்கும் அவர்களின் ஒழுக்கம் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை நாம் யோசிக்கத்தான் வேண்டும்.

Posted on 1 Comment

யார் குரு? | சுமதி ஸ்ரீதர்


வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கிடைத்த இந்த 71 ஆண்டுகளில்தான் நம் நாட்டில் செப்டம்பர் மாதம் 5ம் தேதியை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் வழக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால், ஆசிரியர் தினம் கொண்டாடும் வழக்கம் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்தே நம் கலாசாரத்தில் குருவின் மகத்துவத்தைக் கொண்டாடும் மரபு இருந்து வந்திருக்கிறது. ஆனி மாதம் பெளர்ணமியன்று கொண்டாடப்படும் குரு பூர்ணிமா நம் ஆச்சார்யர்களைக் கெளரவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்நாளை பெளத்தர்கள், கௌதம புத்தர் தான் பெற்ற ஞானத்தை மானிட இனத்திற்குக் கொண்டு சேர்க்க சாரநாத்தில் கொடுத்த முதல் பிரசங்கத்தைக் குறிப்பதாக நம்புகின்றனர். இந்துக்கள் இந்த நாளில் ஆதியோகியான சிவனையும், வியாச மாமுனிவரையும் நினைவு கூர்கின்றனர்.

சரி, குருவும் ஆசிரியரும் ஒன்றுதானே, பிறகு நாம் ஆசிரியர் தினம், குரு பூர்ணிமா இரண்டையும் ஏன் தனித்தனியாக கொண்டாட வேண்டும்? காரணம் இல்லாமலில்லை. ஆசிரியரும் குருவும் ஒன்றல்ல. இருவருக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆசிரியர் என்பவர் லெளகீக விஷயங்களில் நம்மைத் தேர்ச்சி பெறச் செய்பவர். ஆனால் குருவோ இந்த லெளகீகத்தைத் தாண்டி நம்மை மெய்ஞானத்தை நோக்கி கூட்டிச் செல்பவர்.

இந்திய கலாசாரத்தில் ஆசிரியரைவிட குருவின் நிலை மிக உயர்ந்தது, சொல்லப்போனால் கடவுளுக்கும் மேலே.

ஒருமுறை கவியும் ஞானியுமான கபீரிடம், “உங்கள் முன்னால் நீங்கள் பூஜிக்கும் கடவுளும் உங்களுடைய குருவும் ஒரே நேரத்தில் தோன்றினால் நீங்கள் முதலில் யார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அவர், “நான் முதலில் என் குருவின் பாதங்களைத்தான் தொழுவேன், ஏனென்றால் அவர்தானே எனக்கு என் கடவுளையே அடையாளம் காட்டியவர்” என்றார்.

கபீர் மட்டும்தான் தன் குருவைத் தன் கடவுளுக்கு மேல் வைத்தாரா என்றால் இல்லை. நம் கடவுள்களே கூட மனித அவதாரம் எடுத்தபோது குருகுலவாசம் ஏற்றுத் தங்கள் குருமார்களிடம் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.

அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் யோகவாசிஷ்டம் என்னும் நூல் ராமர் தன் குரு வசிஷ்டரிடம் கேட்டு அறிந்துகொள்வதுபோல் படைக்கப்பட்டுள்ளது.

சாந்தீபநி என்னும் ஒரு மிகச்சிறந்த குரு கிடைக்காவிட்டால் வெண்ணெய் திருடிய கண்ணன் ஒரு கீதாச்சாரியனாக உருவாகி இருப்பானா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

சம்ஸ்க்ருத மொழியில் ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரூ’ என்றால் விலக்குவது என்றும் பொருள். குரு என்பவர் அறியாமை என்னும் இருளைப் போக்கித் தம் சீடனைக் கடவுளுக்கு அருகே கொண்டு சேர்ப்பவர் ஆகிறார். ஞானத்துக்கும் மோட்சத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நம் சமுதாயத்தில் குருவின் பங்களிப்பு மிக அதிகம். நாம் கூறும் கதைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு உன்னதமான குருவின் கதை திருமழிசை ஆழ்வாரின் கதை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சிறிய ஊரான திருமழிசை பாடல் பெற்ற ஸ்தலமாகும். அங்கு உறைந்திருக்கும் ஜகன்னாதப் பெருமாள் பாம்பணையில் காட்சியளிக்கிறார். பெருமாள்பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர் திருமழிசை ஆழ்வார். ஆழ்வாருக்கு கனிகண்ணன் என்னும் ஒரு சீடன் இருந்தான். அவன் தன் குருவைப் போலவே மிகுந்த ஞானம் உடையவன். இப்படிப்பட்ட தேஜஸ் கொண்ட சீடன் கிடைத்ததில் ஆழ்வாருக்கு மிகுந்த பெருமை. அவனிடம் அபரிமிதமான அன்பு கொண்டிருந்தார் அவர். ஒருநாள் கனிகண்ணன் கோவிலை வலம் வரும்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த ஒரு கூனிக் கிழவியைக் கண்டான். தன் சோர்ந்த உயிரையும், தளர்ந்த உடலையும் பொருட்படுத்தாது முழு மனதுடன் பகவத் சேவையில் ஈடுபட்டிருந்த அந்தக் கிழவியைக் கண்டு அவன் மனம் நெகிழ்ந்தான். அவளது கூனை நிமிர்த்தி அவளை மறுபடி ஒரு அழகான யுவதியாக மாற்றினான். தனக்கு மறுவாழ்வு அளித்த கனிகண்ணனுக்கு நன்றி சொன்ன அந்த யுவதி தனக்கு கிடைத்த புது வாழ்வை கோவில் நற்பணிகளிலேயே தொடர்ந்து கழிக்க முடிவு செய்தாள்.

இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட வயது முதிர்ந்த காஞ்சி மன்னன், கனிகண்ணனை அணுகி, தனக்கும் தன் இளமையை மீட்டுத் தரக் கோரினான். மன்னனுக்குத் தான் வாழ்ந்த சுகபோக வாழ்க்கையை மறுபடி வாழ ஆசை. இதையறிந்த கனிகண்ணன் பேராசை பிடித்த அந்த மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்தான். கோபமுற்ற மன்னன் கனிகண்ணனை நாடு கத்தினான். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆழ்வார் தன்னால் தன் அன்பான சீடனின்றி வாழ இயலாது என்பதை உணர்ந்து தானும் திருமழிசையை விட்டுச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அவர் செல்லும்போது தான்மட்டும் செல்லவில்லை. தான் தினந்தோறும் வணங்கும் பெருமாளையும் தன்னுடன் வரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவர் பெருமாளிடம், “உமது பக்தனான நானே இந்த ஊரை விட்டுச் செல்லும்போது உமக்கு இங்கென்னய்யா வேலை? நீரும் தங்களுடைய பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு என்னுடன் கிளம்பி வாருமய்யா” என்றார்.

பக்தன் கட்டளையிட்டபடி உடனே தன் நாகப்பாயான ஆதிசேஷனைச் சுருட்டிக்கொண்டு திருமழிசையை விட்டு அவரும் கிளம்பி விட்டார். ஆக கனிகண்ணனைப் பின்தொடர்ந்து ஆழ்வாரும், ஆழ்வாரைப் பின்தொடர்ந்து பெருமாளும் மூவருமாகச் சேர்ந்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஊரின் எல்லையைச் சென்றடைவதற்குள் இருட்டி விட்டது. அதனால் இரவுப் பொழுதை அங்கேயே கழித்துவிட்டு காலையில் மறுபடி தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர். பெருமாள் இல்லாத காஞ்சி முன்னைப்போல் செல்வச்செழிப்புடன் இருந்திட முடியுமா என்ன? திருமழிசையை விட்டு பெருமாள் செல்லும்போது தன் மார்பில் குடியிருக்கும் ஸ்ரீதேவியையும் அல்லவா கூட்டிச் சென்று விட்டார். ஸ்ரீதேவி விட்டுச் சென்ற காலி இடத்தில் மூதேவி வந்து குடி புகுந்தாள். நாடே இருளில் மூழ்கியது. தரித்திரமும் அமங்கலமும் வந்து சேர அந்நாட்டுச் செல்வந்தர்களெல்லாம் தங்கள் செல்வங்களை இழந்தனர். இந்த விபரீத நிகழ்வுகளைக் கண்ட காஞ்சி மன்னன் மிரண்டு போனான். உடனே நாட்டு எல்லைக்கு விரைந்தான். நேரே சென்று அங்கு தங்கியிருந்த பெருமாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரிடம் மறுபடி திருமழிசை திரும்பும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் பெருமாளோ தன் பக்தன் ஆழ்வாரை விட்டு தன்னால் வர முடியாது என்று கை விரித்து விட்டார். வேறுவழியில்லாமல் மன்னன் அடுத்து ஆழ்வாரின் காலைப் பிடித்தான். ஆனால் அவரோ தன்னுடைய சீடன் கணிகண்ணன் இல்லாமல் தான் திருமழிசை ஒருபோதும் திரும்ப முடியாதென்று உறுதியாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு நொந்து போன மன்னன் வேறு வழி தெரியாமல் கனிகண்ணனிடம் சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். மறுபடி அவனை திருமழிசை திரும்புமாறு வேண்டிக்கொண்டான். உடனே கனிகண்ணன் மனமிறங்கி ஊர் திரும்ப ஒப்புக்கொண்டார். சீடனுடனேயே ஆழ்வாரும் திருமழிசை திரும்பிவிட முடிவெடுத்தார். உடனே பெருமாளிடம் சென்று “நான் ஊர் திரும்பி விட்டால் நீர் மட்டும் இங்கிருந்து என்ன செய்வீர்? உம் பாயை சுருட்டிக்கொண்டு நீரும் மறுபடி என்னுடன் ஊர் திரும்பும்” என்றார். பெருமாளும் ஆழ்வார் ஆணையிட்டபடியே திருமழிசை திரும்ப முடிவு செய்தார். ஒருவழியாக சீடன் குரு மற்றும் பகவான் மூவரும் தங்களுடைய இருப்பிடத்திற்கே மீண்டும் திரும்பினர்.

தன் சீடனுக்காக ஒரு குரு கடவுளையே தனக்குக் கீழ்ப்படியச் செய்தது ஆச்சரியம் என்றால் தன்னுடைய சீடர்களுக்காகத் தன்னையே துன்புறுத்திக் கொண்ட குருமார்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான மணிமேகலையை இயற்றியதாகக் கூறப்படும் சீத்தலைச் சாத்தனார். தன் சீடர்கள் சரியாகப் படிக்காவிட்டால் எழுத்தாணியால் தன் தலையை தானே குத்திக் கொண்டார் என்றும், அதனால் அவர் தலை எப்பொழுதும் சீழும் ரத்தமும் ஒழுகிக் காணப்பட்டதாகவும் கூறுப்படுவதுண்டு. இதனாலேயே அவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் வந்ததாகக் கதையுண்டு.

மேலே கூறிய இரு கதைகளிலும் குருமார்கள் தங்களது சீடர்களைவிட வயது முதிர்ந்தவர்கள். ஆனால் ஞானமென்பது வயதையொட்டியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இளைய குருவுக்கானச் சாலச் சிறந்த உதாரணம் தட்சிணாமூர்த்தி. சிவனின் அவதாரமாகக் கருதப்படும் அவர் ஒரு மௌன குரு. ஆலமரத்தின் கீழ் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் அவரிடம் கேட்க இருந்த சந்தேகங்கள் எல்லாம் மாயமாக மறைந்து விடுகின்றன. தான் இயற்றிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுவது போல் ஞானத்தை போதிக்கும் குருவோ இளையவர், ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரும் தாடி நரைத்த முனிவர்கள்! ஆனால் இப்படிப்பட்ட ஞானகுருவான சிவனே ஒரு கட்டத்தில் சுவாமி மலையில் தன் மகன் முன் அடக்கத்துடன் அமர்ந்து ஓம்காரத்தின் பொருளை அறிந்துகொள்ள வேண்டி வந்தது.

ஞானபண்டிதனாக அறியப்படும் முருகனைப் பற்றிய இன்னொரு கதையுமுண்டு. கச்சியப்பர் கந்தபுராணம் இயற்றியதாகக் கருதப்படும் காஞ்சியின் குமரகோட்டத்தில் காட்சி தரும் முருகனின் பெயர் பிரம்மசாஸ்தா. படைக்கும் கடவுளான பிரம்மா பிரணவ மந்திரத்திற்குத் தவறாக அர்த்தம் சொன்னதால் முருகன் கையால் தலையில் குட்டுப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். பிரம்மாவிடமிருந்து சிருஷ்டிக்கும் பொறுப்பைத் தற்காலிகமாக கந்தசாமி ஏற்றுக்கொண்டதாகக் கதை. அதனால் அவர் பிரம்ம சாஸ்தா என்று அறியப்படுகிறார், அதாவது பிரம்மாவுக்கே ஆசான் ஆகியவர்.

இதே போல் பிஞ்சில் பழுத்த பழமாக உபநிடதங்களிலும் மகா புராணங்களிலும் பவனி வரும் குமாரர்கள் பிரம்மாவின் மானசீகப் புத்திரர்கள். இளம் பருவத்திலேயே பிரம்ம ஞானம் அடைந்தவர்கள். சாந்தோக்கிய உபநிடத்தில் மற்றும் மகாபாரதத்திலும் சனத்குமாரர் என்னும் குமாரர் நாரதருக்கு உபதேசம் செய்வதாக உள்ளது. சனத்குமாரருக்கு நிகரானவர் பௌத்தக் கதைகளில் (ஜாதகக் கதைகள்) தோன்றும் ஔடத குமாரர். இவர் புத்தரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

எப்படி வயதுக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லையோ, அப்படியே குரு என்பவர் ஒரு அந்தணராக மேட்டுக்குடியினராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் எங்கிருந்து வருகிறார் என்பது முக்கியமில்லை, அவர் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியம் என்ற கருத்தைப் பறைசாற்றுகின்றன நம் கதைகள்.

மகாபாரதத்தின் வனபர்வத்தில் அறத்துடன் வாழ்ந்த ஒரு கசாப்புக்காரனின் கதை வருகிறது. ஒருநாள் ஒரு அடர்ந்த வனத்தில் முனிவர் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்து ஒரு கொக்கு அவர் தலையில் எச்சம் இட்டுவிட்டது. கொதித்தெழுந்த முனிவர் அந்தக் கொக்கைத் தன் பார்வையால் எரித்துக் கொன்றார். சிறிது நேரத்தில் அவருக்குப் பசி தோன்ற பிட்சை கேட்டு வாங்குவதற்காக நகரத்துக்கு வந்தார். அங்கு ஒரு வீட்டின் முன் சென்று பிட்சை கேட்டுக் குரல் எழுப்பினார். அந்த வீட்டு எஜமானி வீட்டினுள் இருந்தபடியே அவரிடம் சற்றுப் பொறுத்திருக்குமாறு கூறினாள். தன் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதாகவும் முனிவர் சற்றுப் பொறுத்திருந்தால் தான் வந்து பிட்சையிடுவதாகவும் கூறினாள். ஆனால் முனிவருக்குப் பொறுமையில்லை. அவளுக்குச் சாபமிட்டு விடுவதாக எச்சரித்தார். இதைக் கேட்ட வீட்டு எஜமானி சிறிதும் கலங்காது முனிவர் தன்னைச் சுட்டெரித்துக் கொல்ல தானொன்றும் ஒரு பாவபட்ட கொக்கல்ல என்று பதிலடி கொடுத்தாள். இதைக்கேட்ட முனிவருக்கு ஆச்சரியம்! அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி இந்தப் பெண்மணி எப்படி அறிந்திருந்தாளென அவளிடம் கேட்டார். அதற்கு அவள் தன் கணவனுக்குப் பக்தி சிரத்தையுடன் சேவை செய்து வந்ததால் தனக்கு முக்காலமும் உணரும் சக்தி கிடைத்ததாக முனிவரிடம் கூறினாள்.

இதைக் கேட்ட அந்த முனிவர் வெட்கித் தலை குனிந்தார். தனக்கு உலகத்தில் கற்க வேண்டியது இன்னுமும் நிறைய உள்ளது என்பதை உணர்ந்தார். இதையறிந்த அந்தப் பெண்மணி முனிவரை மிதிலை மாநகரில் தன்னறத்துடன் வாழும் கசாப்புக்காரனைத் தன் குருவாக ஏற்கச் சொல்லி அனுப்பி வைத்தாள். உயர்குலத்து அந்தணனான தான் ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் என்ன கற்க முடியும் என்ற சந்தேகத்துடனே மிதிலைக்குச் சென்றார் அந்த முனிவர். அங்கு, கசாப்புக்காரனைச் சந்தித்து அவனிடம் இவ்வளவு இம்சை வாய்ந்த தொழில் செய்பவனுக்கு அறத்தைப் பற்றிப் பேச எவ்வாறு இயலும் என்று கேட்டார். அதற்கு அவன், எந்தத் தொழிலுமே களங்கமானதோ ஈனமானதோ இல்லை, அதன் மதிப்பு அதை நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதில் இருக்கிறது என்றான். அந்தக் கசாப்புக்காரனுக்கும் முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல் வியாத கீதை என்னும் பெயரில் அறியப்படுகிறது. ‘வியாத’ என்றால் சம்ஸ்கிருதத்தில் கசாப்புக்காரன் என்று பொருள். வியாத கீதை அறத்தைப் பற்றியும், பலனை எதிர்பாராது செய்யும் கருமத்தைப் பற்றியும் பேசுகிறது.

மறுபடி மறுபடி நம் கலாசாரத்தில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் குரு என்பவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ அல்லது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. எவர் ஒருவர் நமக்கு ஞானத்தை ஊட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறாரோ அவர் எந்த குலத்திலிருந்து வந்தாலும் நமக்கு ஞானகுருவாகிறார்.

இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் ஆதிசங்கரரின் கதையிலுள்ளது. ஒருமுறை சங்கரர் வாரணாசியில் தன் சீடர்களுடன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படிச் செல்லும் வழியில் எதிர்பாராமல் திடீரென ஒரு சண்டாளன் வந்து விட்டான். அவன் தீண்டத்தகாதவனாகையால் சங்கரரும் அவரது சீடர்களும் அவனை ஓரமாக ஒதுங்கி அவர்களுக்கு வழிவிடச் சொல்லிக் கேட்டார்கள். பதிலுக்கு அவன் அவர்களிடம், “நீங்கள் என் உடலை நகரச் சொல்கிறீர்களா அல்லது என் ஆன்மாவையா? ஆன்மா எல்லோர்க்கும் ஒன்றுதானென்றால் உடலால் அது அசுத்தமாகாது. அத்வைத உலகில், அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபடாத உலகில், ஒரு அந்தணனும் சண்டாளனும் எப்படி வேறுபட முடியும்?” என்று கேட்டான். இதைக் கேட்ட சங்கரருக்கு அதிர்ச்சி! இவ்வளவு நுட்பமாகக் கேள்வி கேட்கும் இந்த சண்டாளன் எப்படி ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியும்? அந்த நொடியிலேயே சண்டாளனை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார் அவர். பிறகு இந்தச் சம்பவத்தை வைத்து மனீஷா பஞ்சகம் என்ற செய்யுளை இயற்றினார்.

முன்னே சொன்னதுபோல குரு என்பவர் எப்படி மேட்டுக்குடியிலிருந்து வரவேண்டியது கட்டாயமில்லையோ, அப்படி அவர் சந்நியாசியாக, முற்றும் துறந்தவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இல்லறத்தில் ஈடுபடுபவன்கூட ஒரு முதிர்ந்த ஆசானாக இருக்க முடியம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஜனகர். மிதிலைக்கு அரசனான ஜனகர் இல்லறத்தில் இருந்துகொண்டே தாமரை இலை மேல் தண்ணீராக வாழ்ந்த ஒரு பிரம்மஞானி.

ஒருமுறை வேதவியாசர் தன் மகன் சுகரை ஜனகரிடம் சென்று தீட்சை பெற்றுவர அனுப்பி வைத்தார். ஆனால் சுகருக்கு அதில் நாட்டமில்லை. இல்லறத்தில் வாழும் ஜனகர் தன்னைப் போன்ற சந்நியாசிக்கு எவ்வாறு பிரம்ம ஞானத்தை அருளிட முடியும் என்ற சந்தேகம் அவருக்கு. தன் சந்தேகத்தை சுகர் ஜனகரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். இதற்கு ஜனகர் பதில் ஏதும் கூறவில்லை. மாறாக சுகரிடம் ஒரு பால் செம்பைக் கொடுத்து அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனையை சுற்றி வரச் சொன்னார். ஆனால் பாத்திரத்திலிருந்து பால் ஒரு சொட்டுக்கூட சிந்தக்கூடாது என்பது நிபந்தனை. சுகரும் ஜனகர் ஆணையிட்டபடியே அரண்மனையைச் சுற்றி வந்தார். அவர் சென்ற வழியெங்கும் கண்ணைக் கவர்ந்து நெஞ்சை அள்ளக் கூடிய பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப்புரத்துப் பேரழகிகள் ஆகட்டும், சமையலறை தின்பண்டங்களாகட்டும் அல்லது வழியெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆகட்டும், இவை எதுவுமே சுகரின் கண்களுக்குத் தென்படவில்லை. அவரின் கவனம் முழுவதும் அந்த பால் செம்பின் மேலேயே இருந்தது. சற்றுகூடக் கவனம் சிதறாமல், ஒரு சொட்டு பால் நிலத்தில் சிந்தாமல் ஜனகர் கூறியபடி தன் அரண்மனை வலத்தை முடித்த சுகர் வெற்றிக் களிப்புடன் ஜனகர் முன் ஆஜரானார். ஜனக மஹாராஜா அவரைப் பார்த்து, “தங்களுக்கு நான் வைத்த பரிசோதனையில் வெற்றி பெற்றுத் திரும்பி இருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம். இப.பொழுது கூறுங்கள், தாங்கள் சென்ற வழியில் தாங்கள் என்னவெல்லாம் கண்டீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்ட சுகர் தன் கவனம் முழுவதும் பால் செம்பில் இருந்ததால் மற்றவற்றில் தான் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அதற்கு ஜனகர், தானும் இல்லறத்தில் அவ்வாறே இருந்துகொண்டு பிரம்ம ஞானியாக வாழ்வதாகக் கூறினார். அறத்தைக் கடைப்பிடிப்பதில் தன் கவனம் முழுவதையும் செலுத்துவதால் தன்னைச் சுற்றியுள்ள சுகபோகங்கள் ஒருபோதும் தன்னைப் பாதிப்பது இல்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட சுகர் மனம் மாறி ஜனகரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். ஜனகருக்கும் சுகருக்கும் இடையிலான உரையாடல் மகா உபநிஷத்தில் வருகிறது.

ஆண்கள் மட்டுமல்ல, பெண் குருமார்களைப் பற்றிய கதைகளும் நம் கலாசாரத்தில் நிறைய உண்டு. திரிபுரா ரகசியம் மற்றும் யோக வாசிஷ்டம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டதுபோல் ஹேமலேகா மற்றும் சுபலா என்ற இரு பெண்மணிகள், தேக இன்பத்தை நாடும் தன் கணவன்மார்களைப் பிரம்மஞானத்தை நோக்கி அழைத்துச்சென்ற கதைகளும் உண்டு. எமனே குருவாக மாறி உபதேசித்த நசிகேதசின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இவ்வளவு ஏன், நம் கலாசாரத்தில் மிருகங்களும் பறவைகளும் கூட ஞானத்தை போதித்த கதைகள் உண்டு.

மேலே சொன்ன கதைகளில் கண்டது போல் குரு என்பவர் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் சீடனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பாலமாகிறார். சாரமற்ற இந்த சம்சாரத்தை நாம் கடந்து செல்ல உதவும் ஒரு தோணியாகிறார். இந்தத் தோணியில்லாமல் நாம் கரை சேர்வது கடினம்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு


பணம் முக்கியம். அதைவிட பத்துஜீ முக்கியம்

விவேகானந்தர் பாறைக் குழு வெளியிட்ட புத்தகத்தை நானும் கண்ணனும் விற்பனை செய்தோம், சாதனை செய்தோம், ஒரு வாரத்தில் பன்னிரண்டு புத்தகங்கள் விற்றோம் என்று சொன்னேன் அல்லவா? கணக்கு தப்பு. விற்பனை பன்னிரண்டு அல்ல, தொண்ணூற்று இரண்டு.

அது ஒரு தனிக் கதை. இந்தத் தனிக்கதை வீரக் கதையா, சோகக் கதையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நானும் கண்ணனும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போனோம். சைக்கிளில் போனால் வழி திறக்காது என்பதால் பேருந்தில் போய்விட்டு நடந்தே போனோம். அதுமட்டுமல்ல, அரை ட்ரௌசருக்கு அனுமதி கிடைக்காது என்பதால் சலவை செய்யப்பட்டு இஸ்திரி செய்யப்பட்ட முழுக்கால் சட்டையோடுதான் போனோம்.

வரவேற்பறையில் இருந்த பெண்மணிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ் தட்டுப்படவில்லை. என்னைப் பொருத்தவரை எவ்வளவுதான் ஆங்கிலப் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்தாலும் சம்பாஷணை சமயத்தில் அது கை கொடுக்காது என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். சில நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதத்தை அங்கு வந்த ஒரு பெரியவர் கவனித்துவிட்டார். குளுகுளு லிப்டில் ஏற்றி எங்களை அவருடைய அறைக்கு அழைத்துச்சென்றார். போகிற வழியில் அவருக்குக் கிடைத்த மரியாதையை வைத்தே அவர்தான் இங்கே முதலாளி என்பதை யூகித்துவிட்டோம்.

அந்த சவேரா ஹோட்டல் முதலாளி ராமராகவ ரெட்டி எங்களுக்குக் கொடுத்தது இனிய அதிர்ச்சி. விவேகானந்தர் பாறைக்குழு பற்றியோ இந்தப் புத்தகம் பற்றியோ எதையும் நாங்கள் அவருக்கு விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எண்பது புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் காசோலையை வாங்கிச் செல்லும்படிச் சொல்லிவிட்டார்.

எனக்கும் கண்ணனுக்கும் இடையே எப்போதும் ஒற்றுமைகள் குறைவு, வேற்றுமைகள் அதிகம் என்பதுதான் யதார்த்தம். இருந்தாலும் சவேரா ஹோட்டல் லிப்டில் இறங்கி வாசலைக் கடந்து வெளியே வந்த பிறகுதான் இருவருடைய புத்தியும் ஒரே திசையில் பயணித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். எண்பது புத்தகங்களை விற்றால் கமிஷன் தொகை மட்டும் ரூபாய் இரண்டாயிரம். தர்ம நியாயப்படி இதைப் பிரித்துக்கொண்டால் ஆளுக்கு ரூபாய் ஆயிரம். இதை எப்படி செலவு செய்வது என்கிற ரீதியில்தான் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தோம். கண்ணனுடைய தேர்வு புதுச் சட்டை புது பேண்ட். என்னுடைய தேர்வு எலிபன்ஸ்டன் தியேட்டரில் ஆங்கிலப் படம் என்று ஆரம்பித்து கற்பனை ஒருமாதிரி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது…

மறுநாள், பத்துஜீ என்று அழைக்கப்படும் பத்மநாபன்ஜீயை சந்தித்தோம். அவர்தான் எங்களை வழிநடத்துகிற மாலுமி. பத்துஜீ காரியத்தில் கவனமாக இருப்பார். கொள்கையில் உறுதியாக இருப்பார். நாங்கள் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றாலும் அவர் எடுத்த முடிவை நாங்கள் ரசிக்கவில்லை. இவ்வளவு பெரிய வியாபாரம் செய்துவிட்டு அதில் இவ்வளவு ரூபாய் கமிஷன் வரும் என்று வணிக ரீதியில் கணக்குப் போடுவது தவறு என்றும், தேச சேவைக்கு வந்தவர்கள் இதற்கெல்லாம் சபலப்படக்கூடாதென்றும் சொல்லி முடித்துவிட்டார்.

பிறகு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வருத்தப்படுகிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டதால் எங்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘புத்தகங்களை டெலிவரி செய்வது, காசோலையை வாங்கி வருவது என்பதற்கெல்லாம் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

பத்துஜீ புறப்பட்டுப் போன பிறகு எனக்கும் கண்ணனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பணம் முக்கியம் என்றாலும் அதைவிட பத்துஜீ முக்கியம் என்ற தீர்மானத்திற்கு முடிவில் வந்து அந்த விஷயத்தை அதோடு விட்டுவிட்டோம்.

காசு கம்மியாகவும் நாட்டுப்பற்று அதிகமாகவும் இருந்த அந்த நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. நான் கண்ணன் மூன்றாவதாக வாசு பிரசன் ஆகிய மூவரும் அடையாறு பகுதியில் சங்க நடவடிக்கைகளுக்கான தளம் அமைத்துக் கொண்டிருந்தோம். வாசு பிரசன் என்னுடைய கல்லூரித் தோழரான விஷ்ணுவின் தம்பி என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அடையாறு காந்தி நகரின் ஆற்றங்கரைப் பகுதியில் ஷாகா நடத்தினோம். இதில் வாசுவுக்கு ஓரளவு கொள்கைத் தெளிவு உண்டு. எனக்கும் கண்ணனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்பாடம். கொள்கை, தத்துவம் ஆகியவற்றில் நான் பின்தங்கியிருந்தாலும் கூட்டம் சேர்ப்பதில் எனக்குத்தான் முதலிடம். ஷாகாவிற்கு வருகிறவர்கள் இருபது இளைஞர்கள், இதில் பதினைந்து பேர் என்னால் கொண்டுவரப்பட்டவர்கள் என்கிற பெருமிதம் எனக்கு இருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியாக ஷாகாவுக்கு வருகிறார்கள். என்னுடைய பிரவேசத்தைப் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டேன். வாசு அன்றைய நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவன். கல்லூரியைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நண்பர்கள் அழைத்த கூட்டத்திற்கு வாசு போயிருக்கிறான். அங்கு போன பிறகுதான் தெரிந்தது, அது பகத்சிங்குடைய தாயார் வித்யாவதிக்கான வரவேற்புக் கூட்டம் என்று. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. பாராட்டிப் பேசுவதற்காக சிவாஜி கணேசனை அழைத்திருந்தார்கள். இதை எல்லாம் பார்த்துப் பரவசப்பட்ட வாசு உடனே வித்யார்த்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக்கொண்டான். எப்படியும் தாய்க் கழகத்திலும் தன்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் இணைந்துவிட்டான்.

கண்ணன் நல்ல வசதியான குடும்பத்துப் பையன். எனக்கு நெருக்கமானவன். மணிக்கணக்கில் நான் சங்கத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முகபாவம் மாறாமல் கேட்டுக்கொண்டிருப்பான். ஓரளவில் எனக்கே சலித்துப்போய் நானே நிறுத்திவிடுவேன்.

சென்னை லாயட்ஸ் ரோடில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு நான் போனோன். ஆர்ய சமாஜம்தான் முகாமுக்கான இடம். நான் போனது முகாமுக்கு முதல்நாள் – சில ஏற்பாடுகள் விஷயமாக. கண்ணனையும் என்னோடு அழைத்துப்போனேன்.

போன இடத்தில் அண்ணா சாலையில் உள்ள ஒரு கடைக்கு போகச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள் – ஏதோ ஒரு மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக. குறிப்பிட்ட மருந்துள்ள குறிப்பிட்ட கடையைக் கண்டுபிடித்து அது இங்கே கிடைக்காது, இன்னொரு இடத்தில் பார்க்கவும் என்று அவர்கள் சொன்னதன் பேரில் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.

நான் வந்த பஸ் லாயட்ஸ் ரோடு ஆர்ய சமாஜம் அருகில் வந்ததும் இறங்கிவிட்டேன். ஆர்ய சமாஜத்தின் உள்ளே நுழையும் முன் ஒரு ஆச்சரியம் என்னைத் தாக்கியது. பாத்திரங்கள் நிரம்பிய கட்டை வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு கண்ணன் உள்ளே போய்க்கொண்டிருக்கிறான். மேலே சட்டை இல்லை, பேன்டை மடித்துவிட்டு முக்கால் சைஸ் ஆக்கிவிட்டான். உடம்பெல்லாம் வியர்வை.

கண்ணனுடைய மாற்றத்திற்கு காரணம் என்ன? மணிக்கணக்காக நான் பேசியபோதெல்லாம் ஏற்படாத மாற்றம் இரண்டு மணி நேரத்தில் ஏற்பட்டது எப்படி என்பதைப் பிறகு பல சமயங்களில் கண்ணன் விரிவாகச் சொன்னான். அதை இப்போது ஒரு வரியில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். சங்கத்தின் அதிகாரியாக இருந்த பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அண்ணாமலைஜிதான் அந்த மாயத்தைச் செய்தவர். அவர்தான் ஆர்ய சமாஜத்தில் கண்ணனை மாற்றியமைத்திருக்கிறார்.

அடையாரின் ஆரம்ப ஷாகா நாட்களில் ஆர்வமாக இருந்தவர்கள் இரண்டு பேர். முதலில் பாலாஜி. பாலாஜியின் அப்பா அரசு வழக்கறிஞர், இனிமையானவர், அனுஷ்டானங்களுக்குட்பட்டவர். பாலாஜியை வர்ணிப்பதற்குச் சிரமப்பட வேண்டாம், இதற்கு எதிர்ப்பதம்! பாலாஜி அடையாறு ஆற்றங்கரையில் இருக்கும் செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியின் மாணவன். தன்னுடைய வகுப்புத் தோழன் சரத்தை பாலாஜி ஷாகாவுக்கு அழைத்து வந்தான்.

சரத், சென்னைக்குப் புதுவரவு. டெல்லியிலிருந்து வந்ததால் தமிழைவிட இந்தியில்தான் பழக்கம் அதிகம். சரத்தின் தந்தை சுயமரியாதைக்காரர். சரத்தின் அண்ணன் சுதர்சன் ஏற்கெனவே எனக்கு வேண்டப்பட்டவன் ஆகிவிட்டபடியால் சரத்தும் எனது உள் வட்டத்திற்குள் வந்து ஷாகாவிற்கும் வந்துவிட்டான்.

இதில் இன்னொரு சூட்சமத்தையும் சொல்லிவிடுகிறேன். ஷாகா நடக்கிற இடம் ஏற்கெனவே நாங்கள் கபடி ஆடிக்கொண்டிருந்த இடம்தான். எனவே நண்பர்களிடம் கபடியாட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குப் போவதற்கு முன் கொடி வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி சாதா கபடியை ஷாகா கபடியாக மாற்றிவிட்டேன்.

இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய பழைய கபடியின் விளையாட்டுத் திட்டத்தில் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. விளையாட்டின்போது தகராறு ஏற்பட்டு யாராவது சண்டை போட்டால் அவர்களை யாரும் தடுக்கக்கூடாது; இரண்டு பேர் சண்டை போட ஆரம்பித்தவுடன் மற்றவர்கள் விலகி வட்டமாக நின்று அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.

பாலாஜிக்கும் சரத்துக்கும் சண்டை வந்துவிட்டது. சண்டை வந்தவுடன் நாங்கள் வட்டம் கட்டினோம். முக்கிய சிக்ஷக்காக இருக்கிற வாசுவுக்கு இது புரியவில்லை. விசிலை ஊதினான், ஊதினான், ஊதிக்கொண்டே இருந்தான்.

பாலாஜியும் சரத்தும் காயங்களோடு வீட்டிற்குப் போய்விட்டார்கள். ஷாகாவில் சண்டை போடக்கூடாது என்பதையும் இதனால் இந்து ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதையும் பலவாறாக உணர்த்த வாசு முயற்சி செய்தான். எனக்கு அது சுவாரஸ்யப்படவில்லை. சண்டை போடக்கூடாது என்பதைச் சொன்னால் இருபது பேர் நம் கைவிட்டுப் போய்விடுவார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.

பத்துஜி வந்தவுடன் வாசு என்மீது குற்றப்பத்திரிக்கையை வாசித்தான். அதிகமாகச் சட்டம் போட்டால் ஆள் சேர்க்க முடியாது என்றேன் நான். பத்துஜி, “ஆள் கணக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், நாலு பேர் இருந்தாலும் ஷாகா ஒழுங்காக நடக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார். நிலைமையைச் சமாளிப்பதற்காக ஷாகா பெசன்ட நகருக்கு மாற்றப்பட்டது.

இன்று வாசு பெங்களூருவில் இருக்கிறான். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்து பதவிப் படிகளில் ஏறி லெப்டிநென்ட் கர்னலாகி ஓய்வு பெற்று பெங்களூருவில் வசிக்கிறான். பாலாஜியின் பணி ஒரு தொண்டு நிறுவனத்தில். சரத் என்கிற சரத்குமார், தமிழகத்தின் திரைப்பட நட்சத்திரங்களில் முன்னணியில் இருக்கிறான்(ர்).

(தொடரும்.)

Posted on Leave a comment

மாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்


இயற்கையாகப் பரிணமித்த மானுடப் பண்பாடுகளிலும் சமய பாரம்பரியங்களிலும் பெண்களின் மாதவிடாய் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. அது உயிர் சுழற்சியின் முக்கிய அடையாளம். எனவே அந்த நிகழ்வை ஒட்டி சடங்குகள், சம்பிரதாயங்கள், ஐதீகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சடங்கு சம்பிரதாயங்களில் தீட்டு, பெண்-இழிவு போன்ற கோட்பாடுகளும் காலப்போக்கில் ஒட்டிக்கொண்டன. ஆனால் அடிப்படையில் இந்தக் கோட்பாடுகளும் சடங்கு சம்பிரதாயங்களும், மனித சமுதாயம் மாதவிடாய் குறித்த சில ஆழமான புரிதல்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் உருவாக்கப்பட்டன. அவை பெண்ணின் உயிர்ப்பிக்கும் தன்மையை மையப்படுத்தி அமைந்தவை. மாதவிடாய்க் காலத்தின் உடல்நிலை மனநிலை ஆகியவற்றையும் அவை கணக்கில் கொண்டிருந்தன. எனவே இச்சடங்கு சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள் அல்லது பெண்களை அடிமைப்படுத்தும் சதியாலோசனைகள் என ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது மானுட சமுதாயத்துக்கு நன்மை தராது என்பது மட்டுமல்ல, அது தீமையாகவும் முடியும்.

இங்கு நாம் இது தொடர்பாக இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணப் போகிறோம். ஒன்று: யூத சமயத்தில் எப்படி மாதவிடாய் தொடர்பான தீட்டுக்கோட்பாடும் சடங்குகளும் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது. இங்கே நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. யூத மதச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் யூத விவிலியத்துக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கும் உண்மையான தொடர்புகள் எதுவும் கிடையாது. உதாரணமாக இங்கு கூறப் போகும் மாதவிடாய்ச் சடங்குகள் எதுவும் கிறிஸ்தவத்தில் இல்லை. கிறிஸ்தவம் யூத மதத்தின் மீது படர்ந்த ஒரு ஒட்டுண்ணியே தவிர அதனுடன் உண்மையான தொடர்பு கொண்ட மதம் இல்லை.

யூத மதத்தில் பெண் மாதவிடாய் முடிந்ததும் தூய்மையான இயற்கை நீரில் மூழ்கி அவளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவள் தன்னை மீட்டுருவாக்கிக் கொள்வதுடன் அவளது குடும்பத்துக்கும் ஐஸ்வரியம் அளிக்கிறாள். மிட்வா (Mitweh) எனும் இந்தப் புனித சட்டத்தை மிக எளிதாக பெண்-எதிர்ப்பு ஆணாதிக்கச் சட்டம் எனப் பேசமுடியும். மத்திய கால யூத சமயாச்சாரியார்கள் அப்படிப்பட்ட விதத்தில் எழுதியிருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு இஸ்ரேல் முதல் அமெரிக்கா வரை மிட்வாவுக்கான அமைப்புகள் மீண்டு உருவாகியுள்ளன. அங்கு பெண்கள் சென்று மாதவிடாய்க்குப் பிறகு குளிக்கின்றனர். அதை அவர்கள் தம் குடும்ப வாழ்க்கைக்கும் சமுதாய வாழ்க்கைக்கும் ஆன்மிக புத்தெழுச்சிக்குமான பாலமாகப் பார்க்கின்றனர். இத்தகைய மிட்வா – நீராடும் மையங்கள்- பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதுடன் அவற்றுக்கு முன்பதிவு செய்ய வேண்டியதுள்ளது. அது பெண்கள் கூடுவதற்கான ஒரு அமைப்பாகவும் செயல்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யூத சமுதாயத்தில் ‘ஃபெமிநாஸி’ எனப்படுகிற நம்மூர் ஈவேராத்தனமான மாவோயிஸ்ட் தனமான பெண்ணியவாதிகள் இல்லை. இல்லாவிட்டால் இந்த மையங்களை மூடச்சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்திருப்பார்கள். இம்மையங்களின் செயல்பாட்டிலும் கருத்தியலிலும் ஒரு முக்கியப் பெண்ணிய மாற்றம் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அது தீட்டு என்கிற கருத்தாக்கத்திலுலிருந்து மாதவிடாய் குறித்த சடங்கை ‘புத்துயிர்ப்பு’ என்கிற கருத்தாக்கத்துக்கு நகர்த்தியிருப்பதுதான்.

இதே போன்ற போக்குகள் இந்து சமுதாயத்திலும் நிகழ்கிறது. இந்து சமுதாயம், யூத சமுதாயம் போன்றவற்றில் இந்த மாற்றங்கள் மேலிருந்து சுமத்தப்படாமல் மிக இயல்பாகச் சமுதாயத்திலேயே உருவாகின்றன. ஆண்-மைய சமுதாய போக்குகளும் சமுதாய தேக்கநிலைகளும் இங்கும் உள்ளன. ஆனால் அதிலிருந்து விடுபடுவது என்பது ஒட்டுமொத்தமாக இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களையே அலட்சியப்படுத்துவதோ அல்லது வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதோ அல்ல.

அப்படிச் செய்ய முயன்றால் ஏற்படும் விபரீதங்கள் எப்படிப்பட்ட கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான பிரத்யட்ச ஆதாரத்தை நமக்கு அளித்திருக்கிறார் மார்க்ஸிஸ்ட் மகானுபாவன் மாவோ.

மாவோ

வரலாற்றுப் பேராசிரியர் ஃப்ராங்க் டிகோட்டர் (Frank Dikötter) ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். சீனாவின் ஆவணத்தொகுப்புகளைப் பார்க்கும் அரிய வாய்ப்புகள் கொண்ட வெகுசில மனிதர்களில் ஒருவர். அவர் 1958-62 சீனாவில் மாவோ தலைமையேற்று உருவாக்கிய பஞ்சம் குறித்து எழுதிய நூல் உலக பிரசித்தி பெற்றது. அறிவுலகத்தினரால் சீனாவின் 58-62 பஞ்சம் குறித்த சிறந்த ஆதாரபூர்வமான நூலாக அறியப்படுவது. ‘மாவோவின் பெரும் பஞ்சம்’ (Mao’s Great Famine 1958-62, 2010) எனும் அந்த நூலில் அவர் அன்று சீன சமுதாயத்தில் மார்க்ஸிய-மாவோயிஸ்ட்கள் செய்த கொடுஞ்செயல்களை அவர்களின் ஆவணங்களின் அடிப்படையிலேயே விவரித்துள்ளார். அவற்றுள் முக்கியமான ஒன்று எப்படி மாவோயிச மார்க்ஸிஸ்ட்கள் ஒற்றைப்படையான சமத்துவத்தைப் பெண்கள் மீது சுமத்தினார்கள் என்பது:

அனைவரிலும் மிகவும் பாதிக்கப்படும் சூழலில் இருந்தவர்கள் பெண்களே. ஏனெனில் உழைப்புக்கே உணவு என்பதை தாரக மந்திரமாகச் செயல்படுத்திய அரசு இயந்திரம், உடல் சார்ந்த எந்த பலவீனத்தையும் பட்டினியாகவே மாற்றியது. தொழிற்சாலைகளிலும், கூட்டுப்பண்ணை வயல்களிலும் கோரப்பட்ட இலக்குகளை அடைய உழைக்க வேண்டிய கட்டாயத்தில் மாதவிடாய் என்பது ஒரு பெரும் பிழையாகப் பார்க்கப்பட்டது. மாதவிடாய் தொடர்பாக பாரம்பரிய சீன மதத்தில் இருந்த விலக்குகள், தீட்டு தொடர்பாக இருந்த சில ஓய்வுகள் ஒரே நாளில் ஒரேயடியாக ஒழிக்கப்பட்டன. மாதவிடாய்க் காலங்களில் வேலைக்கு வராமல் இருப்பதற்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள் சிலர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாத விடாய்க்காக விடுப்பு கேட்ட பெண்களை மிகவும் அவமானப்படுத்தினார்கள். செங்டாங் எனும் பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சி உயரதிகாரி விடுப்பு கேட்ட பெண்களின் உள்ளாடைகளை இரத்தம் இருக்கிறதா எனும் சோதனைக்கு உள்ளாக்குவதை நடைமுறையாகவே மாற்றினார். இப்படிப்பட்ட அவமானகரமான சோதனைகளை சந்திப்பதைக் காட்டிலும் மாதவிடாய்க் காலங்களிலும் தொழிற்சாலைகளுக்கும் வயல்களுக்கும் சென்று உழைப்பதே மேல் எனப் பெண்கள் கட்டாய உழைப்பைத் தேர்ந்தெடுத்தனர். இது பெரும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியது. பல பெண்கள் இதன் காரணமாக மாதவிடாய் வேதனைகளில் கடுமையாகத் துன்புற்றார்கள். பின்னர் பேறுகாலங்களில் அதிகமாக இறக்கலானார்கள்.

இப்பகுதியில் வரிகளுக்கு நடுவே படிக்கும்போது ஒரு விஷயம் புரியும். சீனாவில் இருந்த பாரம்பரிய மாதவிடாய் தொடர்பான தீட்டுகளுக்கு மற்றொரு பரிணாமமும் இருந்தது. அது பெண்களுக்கு உடல் உழைப்பிலிருந்து ஓய்வு வழங்கியது. அதை மாவோவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘மௌன கீதங்கள்’ படத்தில் இயக்குநர் பாக்கியராஜ் மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் வேதனைகளையும் அழகாகக் காட்டியிருப்பார். அத்துடன் அதை ‘அந்த மூன்று நாட்கள்’ என்பது உடல் உறவு முடியாத நாட்கள் என்பதைத் தாண்டி எப்படி ஆண்கள் சிந்திக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதையும் சாட்டையடி போலக் காட்டியிருப்பார். இயக்குநர் பாக்கியராஜுக்கு பெண்களின் உளவியல் குறித்து இருந்த அறிதலில் நூற்றில் ஒரு பங்கு மாவோவுக்கு இருந்திருந்தால் எத்தனையோ பெண்களின் மரணமும் கொடும் வேதனைகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பாக்கியராஜுக்கு இருந்த பண்பாட்டு அறிவு மாவோவுக்கு இருக்கவில்லை. மாவோ ஒரு பண்பாட்டு அறிவிலி, அத்துடன் ஒரு கொடுங்கோலனும் கூட. பாரம்பரியப் பண்பாடுகளுக்கு எதிரான புரோட்டஸ்டண்ட் காலனிய மனோவியாதி மார்க்சிய மாவோக்களுக்கு இயல்பானது. இதன் விளைவுகளைப் பேராசிரியர் மேலும் விவரிக்கிறார்:

பட்டினியாலும் பெரும் அயர்ச்சியாலும் பெண்கள் மிகவும் பலவீனமடைந்தனர். எந்த அளவு பலவீனமடைந்தார்களென்றால் அவர்களுக்கு மாதவிடாய் வருவதே நின்றுவிட்டது. பெண்களுக்கு ஏதோ கொஞ்சம் மருத்துவ உதவிகள் கிடைத்த நகர்ப்புறங்களிலேயே இதுதான் நிலைமையாக இருந்தது. பெய்ஜிங்குக்கு தெற்கே உள்ள மாவட்டம் ஒன்றில் உலோக தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களில் பாதிப்பேருக்கு மாதவிடாய் வருவது நின்றுவிட்டது. அவர்களுக்கு பிறப்புறுப்புகளில் தொற்றுகளும், கருப்பைகளில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. அவர்கள் சுத்திகரித்து கொள்ளக்கூட வசதிகள் இல்லை… கிராமப்புறப் பெண்களின் நிலையோ இன்னும் படுமோசம். பலரின் கருப்பைகள் கட்டுடைந்து போயின.

சூழ்நிலை இப்படி இருக்க பெண்களின் உதவிக்கு மார்க்ஸும் வரவில்லை. கம்யூனிஸ்ட் அகிலமும் வரவில்லை. அவர்களில் பலரின் உயிர்களைக் காப்பாற்றியது ‘மூடநம்பிக்கை’ நிறைந்ததாகவும் பெண்ணடிமைத்தனம் என்றும் சொல்லி மார்க்ஸிஸ்ட்களும் மாவோயிஸவாதிகளும் வேட்டையாடிய பாரம்பரியச் சடங்கு சம்பிரதாயங்களும் அவை தொடர்பான மருத்துவ முறைகளும்தான். பேரா. டிகோட்டர் எழுதுகிறார்:

“கிராமத்தவர்கள் பலர் மருத்துவமனைகளுக்குச் செல்ல அச்சப்பட்டனர். அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களை அணுகினர். ஹுபேய் எனும் பகுதியில் பாரம்பரிய மருத்துவச்சிகள் காலம் காலமாகத் தலைமுறைகள் தோறும் கையளிக்கப்பட்டு வந்த மருந்துகள் மூலம் பெண்களை குணப்படுத்தினர். வாங்க் மாமி என அறியப்பட்ட மருத்துவச்சி பல நூறு பெண்களுக்கு இப்படிப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் அவர்களின் கருப்பைக் குழாய்ப் பிரச்சினைகளிலிருந்து குணப்படுத்தினார். வீட்டில் (இரகசியமாக) நாலைந்து பெண்களைத் தங்க வைத்து அவர் மருந்துகளைக் கொடுக்க அவர் கணவர் காடுகளுக்குச் சென்று தேவைப்படும் மூலிகைச் செடிகளையும் வேர்களையும் கொண்டு வருவார். ஆனால் இதெல்லாம் அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடக் கூடாது. அவற்றை கம்யூனிஸ்ட் அரசு சகித்துக் கொள்ளாது. இப்படிப்பட்ட மாற்று மருத்துவம் இல்லாத சூழலில் பெண்கள் வேறுவழியே இல்லாமல் கொடுமையான வேதனைகள் இருந்த போதிலும் மாவோயிஸ்ட் அரசுக்காகக் கடும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டார்கள்…”

ஆக மாவோ தாவோயிஸ்ட்களுக்கும், பௌத்தத்துக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் எதிராக மட்டும் வர்க்கப் போரை நடத்தவில்லை. சீனப் பெண்களின் கருப்பைகளுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினார். மார்க்ஸிஸம் என்பது ஸ்டாலினுக்கு யூத வெறுப்புக்கான ஆயுதமாகப் பயன்பட்டது போல மாவோவுக்கு ஹான் இனவெறிக்கான ஆயுதம். ஹிட்லருக்கும் மாவோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்தியாவிலும் இப்படிப்பட்ட இனவெறியும் வர்க்க வெறுப்பும் இணைந்த ஒரு கொடுங்கோல் இரத்தக் காட்டேறி ஆட்சியை நடத்த காம்ரேடுகள் தயாராகவே இருக்கிறார்கள். அதற்கான முதல் ஒத்திகைதான் சபரிமலை. ஆனால் இம்மண்ணில் சபரிமலை முதல் ஆற்றங்கால் வரை பாரம்பரியங்களின் பலமே இங்குக் கருப்பைகளுக்கு எதிரான கம்யூனிச வக்கிரத்தை நடத்தவிடாமல் தடுக்கிறது. எனவேதான் மார்க்ஸிஸ்ட்களுக்கு ஹிந்துத்துவத்தின் மீது அத்தனை வன்மையும் வக்கிரமும் கொண்ட ஆத்திரம்.

Posted on 3 Comments

சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம்

மஹாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவ விஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்பவாசம் புரியாமல் சங்கல்ப மாத்திரத்தில் அவதரித்தவர் மஹாசாஸ்தா. இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் சிவ விஷ்ணு சங்கமம் என்பது சக்திகளின் சேர்க்கையே. உடல் சேர்க்கை அல்ல.

சாஸ்தாவின் ஆவிர்பாவம் ஆனதும் அவர் கைலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் இரு தேவியரை மணந்து அவ்வுலகிலிருந்து அருளாட்சி நடத்தலானார்.

மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்து, ஆகாய கங்கைவழியாக பம்பையாற்றங்கரையில் ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமசிவன் கொடுத்த நவரத்தின மணிமாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால் – மணிகண்டன் என்று பெயரிடப்பட்டார், (எல்லோரும் கருதுவது போல, அடிக்கும் கோவில் மணியல்ல – சம்ஸ்க்ருதத்தில் அதற்கு கண்டா என்று பெயர். மணி என்றால் நவரத்தின மணி என்றே பொருள். மணிப்பூர் என்றொரு மாநிலம் உள்ளதும் இங்ஙனமே. Land of Jewel என்றே அதற்குப்பெயர்.)

கழுத்தில் நவரத்தினமணிகள் ஜொலித்த காரணத்தால் மணிகண்டன் என்று பெயரிட்டு ராஜசேகர பாண்டியன் வளர்த்து வந்தான். அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த மணிகண்டன் – மஹிஷியை சம்ஹாரம் செய்து, கலியுக வரதனாக கோவில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரிபர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன் வருடத்தில் ஒருநாள் மகர சங்க்ரமத்தன்று கண்விழித்து பக்தர்களை அனுக்ரகிப்பேன் என்று வாக்களித்தார்.

பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரிமலைக்கான விரத வழிமுறைகளைக் கொடுத்தவர். ஒரு மண்டல பிரம்மச்சர்யாதி விரதங்களை மேற்கொள்ளுவோரே சபரிமலை செல்லத் தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார்.

சபரிமலைக் கோவிலின் ஸ்தலபுராணம் இதுவே. பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரளகல்பப் பகுதியில் நமக்குக் கிட்டும் புராண சரிதம்.

புராண காலம் தொட்டே சபரிமலை ஆலயம் உண்டென்றாலும் – வருடம் ஒருநாள் மட்டுமே வழிபாடு என்பதால் வந்து செல்லும் பக்தர் கூட்டம் மிகக் குறைவு. விரத அனுஷ்டானங்கள் பெண்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாத காரணங்களால் ஆண்கள் மட்டுமே சபரிமலை சென்றார்கள். (இன்றைக்குமே பெண்கள் செல்லவே முடியாத, ஆண்களுமே 15-16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் பல சாஸ்தா ஆலயங்கள் உண்டு.)

வரலாற்று நாயகன் ஐயப்பன்:

புராண சரிதம் கடந்து பல நூற்றாண்டுகள் தாண்டி, பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் கேரளத்தில் புலம் பெயர்ந்து, பூஞ்சார், பந்தளம் எனக் கிளைகளாகப் பிரிந்தது. சபரிமலைக் கோவிலை பந்தள வம்சம் பராமரித்து வந்தது. அப்போதைய சபரிமலைப் பகுதி காட்டில் எல்லையாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்தது. வணிகர்கள் மிகுந்ததால் ஒரு காலகட்டத்தில் அப்பகுதி கொள்ளையர் வசமானது.

கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன் சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கி அழித்தான். பாண்டிய வம்சமான பந்தள ராஜ குடும்பத்தில், ராஜகுமாரிக்கு தெய்வாம்சத்துடன் ஆர்ய கேரள வர்மன் என்ற ஓர் மகன் பிறந்து, சபரிமலைக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்து மீண்டும் அங்கே சாஸ்தாவின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்கிறான். ஆர்ய கேரள வர்மன் என்ற அந்த ராஜகுமாரனின் செல்லப்பெயரும் ஐயப்பன். சபரிமலையின் தேவதையான மணிகண்ட சாஸ்தாவின் பெயரே கேரள வர்மனுக்கும் இருந்ததால் பின்னாளில் சிலபல குழப்பங்கள் உண்டாயின.

இஸ்லாமியரான வாவர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். அது புராணக் கதை அல்ல.

யாத்திரையின் நடைமுறை:

இது இப்படி இருக்க, கேரள மக்கள் சபரிமலை தர்மசாஸ்தாவை தங்கள் ரட்சக தேவதையாக ஆராதித்து சபரிமலை யாத்திரை செல்வது தொடர்ந்தது. ஆண்கள் மட்டுமே யாத்திரை மேற்கொண்டார்கள். சபரிமலை யாத்திரைக் கிரமங்களில் பண்டைய கால நடைமுறை – இருமுடி கட்டி அவரவர் வீட்டிலிருந்தே நடந்தே செல்வது. பகவான் மணிகண்டன் கட்டிக்கொண்டு போன இருமுடி போல, யோகத்தில் இருக்கும் பகவானுக்காக காராம்பசுவின் நெய்யை இருமுடியில் அடைத்து அவனுக்காக ஆத்ம சமர்ப்பணமாகக் கொண்டு சென்றார்கள்.

நடைபாதையாக வரும் பக்தர்கள் சென்றடையும் முதல் கேந்திரம் எருமேலி. பண்டைய கால நடைமுறை பற்றிக் கேட்டால் வியப்பு உண்டாகிறது. காளார்க்காடு அப்பு ஐயர் என்ற பக்தர் 1850களில் சபரிமலை வெளிச்சப்பாடு ஸ்தானம் வகித்து வந்தார். அவரே எருமேலி வரும் பக்தர்களின் விரதத்தை அங்கீகரித்து பெரியபாதைக்குள் செல்ல அனுமதிப்பார். அனுமதி இல்லாதோர் மீண்டும் வீடு திரும்பித்தான் வேண்டும். இதுவே அப்போதைய நடைமுறை.

பகவான் மணிகண்டன் பயணப்பட்ட வழியே பெரிய பாதை எனப்படும் பாரம்பரியப் பாதை. இதனையே பகவானின் பூங்காவனம் என்பார்கள். எருமேலி துவங்கி கரிமலை கடந்து சன்னிதானம் அடையும் கிட்டத்தட்ட 41 மைல் கொண்ட பாதை. பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் வணங்கி, பெரியபாதை வழியே வந்து, பதினெட்டாம் படி ஏறி சாஸ்தாவை வணங்கி, மீண்டும் பெரியபாதை வழியே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப் பாதை வழியே எறி, வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. சபரிமலை யாத்திரை என்பது பெரிய பாதையில் மட்டும் 7-8 நாட்கள் இருக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் ஐயப்பன்மார்கள் வீடு திரும்ப குறைந்தது 15-20 நாட்கள் ஆகும்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு ஒன்றிணைந்த தமிழக-கேரளத்தில், கேரள மக்களும், நெல்லை, குமரி பகுதி மக்களும், கோவை பாலக்காட்டு மக்களும் சபரிமலை யாத்திரையை சகஜமாக மேற்கொண்டவர்களே. என்னுடைய சிறிய பாட்டனார் ஸ்ரீ CV.கிருஷ்ண ஐயர் 1920-30களிலேயே சபரிமலை யாத்திரை மேற்கொண்டவர். அவருடைய டைரிக் குறிப்புகளில் கையில் அரிவாளுடன் பாதையை செப்பனிட்டுக்கொண்டு சென்ற சபரிமலைப் பயணம் பற்றி விவரித்திருக்கிறார். மற்ற தமிழகப் பகுதி மக்களுக்கு, நியமங்களுடன் கூடிய சபரிமலை யாத்திரை என்பது புதிய ஒன்றாக இருந்தது.

ஸ்வாமி ஐயப்பன் நாடகம்

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை

இப்படி இருந்த சூழ்நிலையில், கிட்டத்தட்ட 1940களில் ஒருமுறை கேரள மாநிலம் ஆலப்புழையில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகம் போட தன் குழுவுடன் வந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தொடர்புகொண்டு ஐயப்பன் கதையை நாடகமாகப் போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய ராஜமாணிக்கம் பிள்ளை, ஐயப்ப சரிதத்தைக் கேட்டவுடன் மனம் உருகி சபரிமலைக்குப் பயணப்பட்டார். அவருடன் நாடகக் குழுவில் பயணப்பட்ட நடிகர் மஞ்சேரி நாராயணன் என்பவரே பிற்காலத்தில் நம்பியார் குருசுவாமியாக அறியப்பட்ட எம்.என்.நம்பியார்.

முதன்முதலில் தமிழகத்தில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் ஸ்வாமி ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகம் மக்கள் மனதை ஈர்த்து தமிழகம் எங்கும் மக்கள் சபரிமலையை நாட ஆரம்பித்தார்கள். நாடகம் போட்ட நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தான் கேட்ட கதைகள் பலதையும் திரைக்கதையில் இணைத்து விட்டார். அதன் நம்பகத்தன்மையை முழுமையாக அவர் ஆராயவில்லை. முடிவாக : புராண காலத்து ஐயப்பனும் வரலாற்று ஐயப்பனும் குழப்பப்பட்டு விட்டார்கள். நாடகத்தில் இடைவேளைக் காட்சியில் மேடையில் கடல், கடலில் கப்பல், கப்பலில் வாவர் என ஜனங்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். அதுவே மனதில் நின்றுவிட்டது. இன்று ஏதோ வாவர் பள்ளிக்குப் போனால்தான் சபரிமலைக்குப் போன பலன் கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு அது வளர்ந்து விட்டது. பின்னாளில் வந்த புத்தகங்களும் இதே கதைகளையே சொல்ல ஆரம்பித்துவிட்டன.

புனலூர் சுப்ரமண்ய ஐயர், என்னுடைய தாத்தா CV ஸ்ரீநிவாஸ ஐயர், தளிப்பறம்பா நீலகண்ட ஐயர் முதலான பண்டைய குருமார்கள் தொட்டு தாணுலிங்க நாடார், எம்.என்.நம்பியார் வரை யாருமே வாவர் பள்ளிக்குச் செல்வதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்றே அடுத்த குழப்பம் – மாளிக்கைப்புறத்தம்மன் ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படும் வரலாறு. இதெல்லாம் நாடகத்தில் சுவைக்காகச் சேர்க்கப்பட்ட சம்பவங்கள். புராண ஆதாரம் ஏதும் கிடையாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு உருவம் கிடையாது. பல கேரள ஆலய பகவதி ஸங்கல்பம் போலவே கண்ணாடி பிம்பமாகவே இன்றும் பூஜிக்கப்படுகிறாள். மேலே கவசமே சார்த்தப்படுகிறது. அவள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமாகவே பூஜிக்கப்படுகிறாள். பாண்டிய குல தேவதையான மீனாக்ஷி ஸங்கல்பம் என்பதே பந்தள அரண்மனையின் நம்பிக்கை. அவள் ஐயப்பனுக்கு தாய் ஸ்தானமே அல்லாது, இணையாக புராணத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. மகரவிளக்கு உற்சவத்தில் யானை மீது சரங்குத்திக்கு பவனிவருவது மாளிகைப்புறத்து அம்மன் என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மையில் பவனி வருவது ஐயப்பனே- அந்த பிம்பத்தில் தெள்ளத் தெளிவாக மீசை உள்ளதைக் காணலாம்.

சபரிமலையும் திருவிதாங்கூர் அரசும்

1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில் திப்புவின் கேரள ஆக்ரமிப்பு துவங்கியபோது, போர்ச் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசரிடம் அடைமானம் வைத்தது. அடைமானத்தை மீட்க முடியாத நிலை உருவாகி, சபரிமலைக் கோவில் உட்பட மொத்தமும் திருவிதாங்கூர் அரசர் வசமானது. சபரிமலை ஆலயம் திருவிதாங்கூர் ஆளுகைக்குச் சென்றது இப்படித்தான்.

வழக்கமாக ஆலயத்தைக் கையகப்படுத்தும்போது அதன் நகைகளையும் எடுத்துக்கொள்ளும் அரசு, சபரிமலை விஷயத்தில் திருவாபரணத்தை பந்தள அரசரிடமே இருக்கும்படியும், அவரே மகர ஸங்க்ரமத்துக்குக் கொண்டு வரும் சம்பிரதாயத்தைத் தொடரும்படியும் சொல்லியது.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் பாலராமவர்மா தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவில்களை தனி அமைப்புடன் இணைத்தார். அதுவே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு. இப்படித்தான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் போர்டு கையில் சென்றது. தேவஸ்வம் போர்டு கேரள அரசின் ஒரு அங்கம் ஆனது.

சபரிமலையில் புனர் பிரதிஷ்டை

சபரிமலையில் பகவானின் யோகாக்னி காரணமாக ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்திக்கும் என்பது பெரியோர் நம்பிக்கை. அதே போல ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்தித்துள்ளது. பல முறை விக்ரஹமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்ரஹம், பஞ்சலோகம் எனப் பலமுறை மாற்றப்பட்டது. 1800களில் பல வருடங்கள் தாரு சிலை என்று சொல்லப்படும் மரவிக்ரஹம் கூட இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், மர விக்ரஹத்தில் நெய் அபிஷேகம் நேரடியாகச் செய்ய முடியாமல் இருமுடி நெய்யை நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் உண்டானது. அன்று பெரும்பாலும் வந்தவர்கள் கேரளத்தவர்களே. இன்றும் அந்தக் குறிப்பிட்ட சில ஊர்க்காரர்கள், இருமுடி நெய்யைக் கருவறையில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. நெய்த்தோணியிலேயே நெய்யைக் கொட்டி அதிலிருந்து சிறிதளவு பிரசாதம் எடுத்துச் செல்கிறார்கள்.

பின்னர் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1902ல் ஒரு தீவிபத்து ஏற்பட்டு, மேல்சாந்தியின் முயற்சியால் விக்ரஹம் காப்பாற்றப்பட்டு, 1904ல் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழு ஆலயமும் சீரமைக்கப்பட்டது. அப்போது வேறு பாதை இல்லை. எல்லாக் கட்டுமானப்பொருட்களும் பெரிய பாதை வழியாகவே சன்னிதானம் வந்தடைய வேண்டும்.

பந்தளம் அரண்மனையிலிருந்து திருப்பணிக்காக மரங்கள் எருமேலிக்குக் கொண்டு வரப்பட்டன. அழுதைவரை மரங்களைக் கொண்டுவந்துவிட்ட தொழிலாளர்கள் கல்தூண் போல கனத்த மரங்களை இனி மலையேற்ற முடியாது என்று பிரமித்துக் கைவிரித்தார்கள்.

திடீரென எங்கிருந்தோ அங்கே வந்து சேர்ந்த ஒரு பக்தர், உரத்த குரல் கொடுத்தார். ஆவேசம் வந்தவர் போல ஒரு பரவச நிலையில் காணப்பட்ட அவர், கட்டளை போல ஒரு வாக்கினைச் சொன்னார் : “இனி இந்தத் தூண்களை சுமப்பவர்கள், சன்னிதானம் அடையும் வரை எந்தச் சுமையையும் உணரவே மாட்டார்கள்.”

இவரது ஆவேசத்தால் உந்தப்பட்ட தொழிலாளர்கள் அவரது சத்திய வாக்குக்கு ஏற்ப சுமையே இல்லாமல் மயிலிறகு போலச் சுமந்து சென்றார்கள்.

சன்னிதானம் அடைந்து எல்லாவற்றையும் கீழே வைக்கும் வரை அதே ஆவேசத்துடன் உடன் இருந்த அந்த பக்தர், அடுத்த நொடி யார் கண்ணிலும் காணாமல் மறைந்து விட்டார். அப்படி உருவாக்கப்பட்டதே இன்று நாம் காணும் சபரிமலை அமைப்பு.

1950ல் உடைக்கப்பட்ட ஐயப்பன் விக்ரஹம்

சபரிமலையின் புகழ் நாளுக்கு நாள் அதிகமானது அங்கிருந்த சில ஆசாமிகளுக்குப் பொறுக்கவில்லை. கோவிலின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி அப்போதே நடந்தது. 1950ல் சதியின் காரணமாக சபரிமலையில் பெரு நெருப்பு உண்டாக்கப்பட்டு திருக்கோவில் சாம்பலானது. ஐயப்பனின் விக்ரஹமும் மூன்றாக உடைந்து சேதமடைந்தது. ஆனால் ஐயனின் திருவுள்ளம் வேறுவகையில் இருந்தது. எந்தக் காரணத்துக்காக இந்தச் சதிச்செயல் அரங்கேறியதோ அதற்கு நேர் எதிராக, மிகச்சிலர் மட்டுமே அறிந்திருந்த சபரிமலைக் கோவில் பார் முழுவதும் அறிய இந்த நெருப்பு காரணமாகி விட்டது. இதன் பின்னர் சில மாதங்கள் பின்னப்பட்ட விக்ரஹமே பூஜையை ஏற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் – தீவிபத்து குறித்து கேள்விப்பட்டு வந்த போலீஸும், தீயணைப்புத்துறை வீரர்களும் பம்பையில் பரிதவித்து நின்றார்கள். விரதமில்லாத நாம் எப்படி சபரிமலை ஏறுவது, அதனால் ஏதும் தெய்வதோஷம் உண்டாகுமோ என்ற பயம் அவர்களை ஏறவிடாமல் தடுத்தது. அப்போது என்னுடைய பாட்டனார் உட்பட அங்கிருந்த குருமார்கள் அவர்களுக்கு விபூதி கொடுத்துக் கடமையைச் செய்யுங்கள் என்று ஆசி கூறி மலையேறச் சொன்னதாக அவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.

இன்றைய ஐயப்ப பிரதிஷ்டை

இதன் பின்னர் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய புதிய விக்ரஹம் உருவாக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தா என்பவர் ஒரு விக்ரஹத்தையும், தமிழகத்தின் பிடி.ராஜனும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை இருவரும் சேர்ந்து ஒரு விக்ரஹத்தையும், என்னுடைய பாட்டனார் CVஸ்ரீநிவாஸ ஐயர் ஒரு விக்ரஹத்தையும் தயார் செய்தார்கள். 1952ல் இன்று நாம் காணும் ஐயப்பனின் விக்ரஹம், பிடி.ராஜன், ராஜமாணிக்கம் பிள்ளை கொணர்ந்த விக்ரஹம் தேவ ப்ரச்னத்தின் மூலம் ஏற்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தப் பிரதிஷ்டையை நடத்தியது கண்டரரு சங்கரரு. (பின்னர் ஐயப்பனைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, பிடிராஜன் தலைமையில் தென்னகம் எங்கும் எடுத்துச் செல்லப்பட்ட மற்றொரு விக்ரஹமும் உண்டு. அது ஹரித்வாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்வாமி விமோசனானந்தா உருவாக்கிய விக்ரஹம் காசியில் 18 படிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனது பாட்டனார் உருவாக்கிய விக்ரஹம், இன்றும் பாலக்காட்டில் எங்கள் பூர்வீக வீட்டில் உள்ளது.)

பின்னம் அடைந்த பழைய ஐயப்ப விக்ரஹம் மணியாக்கப்பட்டு சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப்பட்டது. மணி ரூபத்தில் காட்சி தரும் மணிகண்ட ஸ்வாமி, ஒலி ரூபமாகவும் அதாவது சப்தமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார். இதன் பிறகுதான் சபரிமலையின் ஒலி, உலகெங்கும் இன்னும் பிரவாகமெடுத்துப் பரவியது.

சின்னப்பாதை

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்சக் கொஞ்சமாக சபரிமலைக்கு பக்தர் கூட்டம் வரத்துவங்கியது. 1960களில் திரு விவி.கிரி கேரள மாநில கவர்னராகப் பணியாற்றினார். கவர்னருக்கு சபரிமலை செல்லும் ஆசை உண்டானது. ஆனால் பெரிய பாதையில் செல்ல அவரால் முடியாது. கவர்னர் விவி.கிரிக்காக சாலக்காயம் பாதை உருவானது. அதிலிருந்துதான் சின்னப்பாதை என்று சொல்லப்படும் பம்பை பாதை பிரபலமானது. இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம், ராமர் சன்னிதி போன்றவையெல்லாம் இதன் பின்னர் உருவானதே. பழமலைக்காரர்களைப் பொருத்தவரை பகவான் குழந்தையாக வந்திறங்கிய பம்பை என்பது பெரியானவட்டம் பகுதியில் ஓடும் பம்பைக்கரையே.

ஆக, அரசியல் தலையீடே பெரியபாதையை சுருக்கி சின்னபாதையை உருவாக்கிய காரணம். அதே போல டோலி முறை உருவாகவும் விவி.கிரியே காரணம். சின்னப்பாதையிலும் நடந்து ஏற முடியாத விவி.கிரி தன்னை நாற்காலியில் அமர்த்திச் சுமந்து செல்லும்படிக் கேட்டுக் கொண்டார். சபரிமலை விதிகளை மீறி அப்படி சுமந்து செல்ல எல்லோருமே பயப்பட்டார்கள். தன்னைச் சுமந்து செல்ல முன்வருபவர்கள் நால்வருக்கும், குடும்பத்துக்கு ஒரு ஆளுக்கு அரசு வேலை தருவதாக விவி.கிரி சொன்னார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி டோலி முறையும் சபரிமலைக்குள் வந்தது.

பெண்களுக்கான நிலை

சில விஷயங்கள் சட்டம் போட்டுத்தான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை. பாரம்பரிய நம்பிக்கை என்பது நம் பாரத மக்கள் உணர்விலேயே கலந்தது. ஆலயத்துக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்பது போர்டு எழுதி தெரிவிக்க வேண்டிய நிலை இந்தியாவில் இல்லை. ஆனால் அதை அறியாதவர்களுக்கே விதிகளை எடுத்துச் சொல்லவேண்டும்.

1820ல் வெளியான ஒரு கேரள அரசு சர்வே குறிப்பு சபரிமலை பற்றிப் பேசுகிறது. Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட அரசு வெளியீடு, பூப்படைந்த பெண்களும் மாதவிடாய் நிற்காத பெண்களும் சபரிமலை ஏறத் தடை இருப்பதைத் தெளிவாக உரைக்கிறது. ஆங்கிலேயர்களும் கூட அதற்கு மதிப்பளித்து அந்த ஆலய சம்பிரதாயத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

ஆனாலும் 1950கள் வரை ஒன்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு வந்தது கூடக் கேள்விப்பட்டது இல்லை. அது யோகபீடம் என்ற காரணத்தால், மாதவிடாய் சுழற்சி இருக்கும் பெண்களின் உடற்கூறுக்கு அந்த க்ஷேத்ரத்தின் யோக நிலை ஏற்றது இல்லை, அதனால் பாதிப்பு உண்டாகும் என்பதை பக்தர்கள் நம்பி, அதற்கு மதிப்பளித்தே இருந்தார்கள்.

திருவிதாங்கூர் அரசுக்கே அப்போது சபரிமலைக் கோவில் சொந்தமாக இருந்தது. ஆனால் திருவிதாங்கூர் மஹாராணி, ராணி பார்வதி பாய், கோவில் விதிகளை அனுசரித்து, 1942ல், தனது கருப்பை நீக்கப்பட்ட பின்பே சபரிமலை வந்து ஐயப்பனை தரிசித்தார்.

பம்பை கணபதி கோவில் உருவாக்கப்பட்டு, சின்னப்பாதையும் வந்த பிற்பாடே அதாவது 1960களுக்குப் பிறகே பெண்கள் சபரிமலைக்கு வரத்தலைப்பட்டார்கள். அப்போதும் இளம் வயதுப் பெண்கள் மலைக்கு வரவில்லை. யாரும் அழைத்து வரவும் இல்லை. தனது 50வது வயதுக்குப் பிறகு சபரிமலை யாத்திரை துவங்கி 40 மலை யாத்திரை முடித்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா மிகவும் பிரபலம். பஜனைப்பாடகியான பெங்களூர் ரமணியம்மாளும் தனது 55 வயதுக்குப் பின்னர் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு பெரும் குழுக்களையும் அழைத்துச் சென்றார். சபரிமலையுடனும் ஐயப்பனுடனும் தொடர்புடைய குடும்பங்களான தாழமன் இல்லம், கம்பங்குடியார், பந்தளம் ராஜ குடும்பம், ஆலங்காடு, அம்பலப்புழை சங்கம் என இவர்கள் குடும்பங்களில் யாரும் விதியை மீறித் தங்கள் குடும்பப்பெண்களைக் கூட மலைக்கு அழைத்து வருவதில்லை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

1900களில் வருடம் ஒருமுறை திறந்த சபரிமலை நடை, பின்னர் மண்டல பூஜைக்குத் திறக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, 1960க்குள் மாதா மாதம் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் பம்பா வழிப்பாதை உருவான காரணத்தால், வசதிகள் அதிகமாயின. பெண்கள் அதிகம் வரத்துவங்கினார்கள். 1975-80களுக்குப் பின் ஆந்திர கர்நாடக மாநில பக்தர்கள் அதிகம் வருவதும், அவர்கள் குடும்பத்துடன் வந்து, பம்பையில் பெண்களை விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் மேலே சென்று தரிசனம் கண்டு வரும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மாத பூஜைகளில் பலநாட்களில் ஆளே இல்லாத நிலை இருப்பதைக் கண்டு இந்தப்பெண்களில் சிலர் தன்னிச்சையாக மேலே வரத் துவங்கினார்கள்.

அதிகாரிகள் சிலரும் இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வந்தார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். 2017ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டி, பழைய கொடிமரம் பிரிக்கப்பட்டபோது ஒரு குட்டு வெளிப்பட்டது. 1965-66களில் சபரிமலைக்குக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தக் காலத்திலேயே வெறும் காங்க்ரீட் சிமெண்ட்டைக் கொண்டு கொடிமரம் போலக் கட்டி அதற்கு மேலே பித்தளைத் தகடுகளால் மூடும் அளவுக்கு அரசு அதிகாரிகள் ஜித்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் விதிகளை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களை அனுமதித்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இந்நிலையில், இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல எம்.என்,நம்பியார் நடித்த ‘நம்பினார் கெடுவதில்லை’ திரைப்படத்தை சபரிமலையிலேயே படமாக்க எண்ணினார்கள். 1986ல் சுதாசந்திரன், ஜெயஸ்ரீ போன்ற இளம் நடிகைகளுடன் படக்குழுவினர் அங்கே வந்து நடிக்க, படம் எடுக்கப்பட்டது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

கேரள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 1991ல் (பூப்பெய்திய பெண்கள், மாதவிடாய் நிற்காத பெண்கள் என்றெல்லாம் விதியில் எழுத முடியாத காரணத்தால், நாகரீகமாக) 10 வயதுக்கும் குறைவாகவும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி அமலானது.

1972ல் பரணீதரன் ஆனந்த விகடனில் கேரள விஜயம் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினார். அதில் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்: சபரிமலையில் ஒரு பெரியவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்த தகவல் பலகையைச் சுட்டிக் காட்டி, “இங்கே குழந்தைகளுக்கு அன்னப்ராஸனம் நடத்த கட்டணம் என்று போட்டிருக்கிறீர்களே, அம்மா இல்லாமல் கைக்குழந்தை எப்படி வரும்? நீங்களே இங்கே இளம் பெண்கள் வருவதை ஊக்குவிக்கிறீர்களா?” என்று சண்டை போட்ட சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

1994ல் இதே போல வத்ஸலா குமாரி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது 42வது வயதில், பணி நிமித்தமாக சபரிமலை செல்ல அனுமதி வேண்டி நீதிமன்றத்தை அணுகினார். பணிநிமித்தமாக மேலே செல்ல அனுமதி அளித்த நீதிமன்றம், ஆலய சம்ப்ரதாயத்தில் தலையிடக்கூடாது என்ற காரணத்தால் பதினெட்டாம்படி ஏறவோ, சன்னிதானம் செல்லவோ அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வத்ஸலா குமாரியும் 50 வயது வரை காத்திருந்தே ஐயப்பனை தரிசனம் செய்தார்.

அப்போதுமே பக்தர்கள் இது ஆலய ஸம்ப்ரதாயத்துக்கு எதிரானது என்று உணர்ந்து அதை கடைப்பிடிக்கவே செய்தார்கள், அதை மீற நினைத்தவர்களை எதிர்த்தும் இருக்கிறார்கள்.

இன்றைய நிலை

இன்று சபரிமலை மாறிவிட்டது; பழைய ஆசாரங்கள் பலதும் பலரும் கடைப்பிடிப்பது இல்லை. மண்டல விரதம் இன்ஸ்டண்ட் விரதம் ஆகிவிட்டது. பெண்கள் மட்டும் வந்தால் தவறா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இன்றைக்கும் மண்டல விரதத்தை திரிகரண சுத்தியோடு கடைப்பிடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 40 வருடம் ஆனாலும் ஒரே குருநாதருடன் அவர் கட்டளையை ஏற்றே மலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால் தவறு நியாயம் ஆகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐயப்பனைப் பக்தி பூர்வமாக நம்புபவர்கள் ஐயப்பன் வாக்கை மீற மாட்டார்கள். மீறி வர நினைப்பபர்கள் ஐயப்பனை முழுமையாக நம்பவில்லை என்றே பொருள்.

சபரிமலை ஆலயம் தனித்தன்மை கொண்டது. பகவான் சாஸ்தா மனிதனாக பூமியில் தோன்றி, நமக்காக தவக்கோலம் பூண்டு நைஷ்டீக பிரம்மச்சரியத்தில் தனியோகம் புரியும் மஹா யோக பீடம். இன்னும் அங்கே மணிகண்டன் ஜீவனோடுதான் இருக்கிறான். அதனாலேயே எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு விரத நியமம் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு பதினெட்டுப் படியும் அதற்கான பூஜையும் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு ஆத்ம சமர்ப்பண தத்துவமான இருமுடியும் நெய் அபிஷேகமும் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயத்தைதின் ஒரு பகுதியைத்தான் இன்று நீதிமன்ற ஆணை மூலம் தகர்த்துவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் இது ஒரு சோதனைக் காலம் என்றே பக்தர்கள் கருதுகிறார்கள். தீ விபத்தைக் காரணமாக்கி ஐயப்ப தர்மத்தை உலகறியச் செய்த பகவானின் லீலை போல, இந்தச் சோதனையை சாதனையாக்கி இன்னும் லீலைகள் நடத்துவான் ஹரிஹரசுதன்.

க்ஷத்ரிய தர்மத்தைக் கைவிடாமல், நீதிமன்றத் தலையீட்டை ஏற்காமல், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க குரல் கொடுக்க பந்தள ராஜா கூட்டிய கூட்டத்துக்கு 1 லட்சம் பக்தர்கள் – பெண் பக்தைகள் கூடி இருக்கிறார்கள். உண்மை பக்தர்கள் இருக்கும் வரை ஆலயத்தின் சம்பிரதாயங்கள் காக்கப்படும்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

குறிப்பு: கட்டுரையாசிரியர் கடந்த 22 வருடங்களாக ஐயப்பனைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சபரிமலையில் பங்குனி உத்திரத் திருநாளை துவங்கி நடத்திய கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயரின் பேரன் என்ற முறையில், இவரது குடும்பத்துக்கும் சபரிமலைக்குமான தொடர்பு நூறாண்டுகளுக்கும் மேலானது. இவர் ஐயப்பனைக் குறித்து மஹா சாஸ்தா விஜயம் என்ற 1000 பக்க நூலை இயற்றியுள்ளார்.