‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
நாடு அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலேயே சுதந்திர இந்தியாவின் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதங்கள் பெருமளவில் நடந்து வந்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வெவ்வேறு காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்குக் கல்வித் திட்டம் பற்றிய கொள்கை முடிவுகள் நிபுணர் குழுக்களால் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரையறை செய்யப்பட்டு வந்திருக்கிறது.
ஆனால் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் இன்றையக் கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கோட்பாடு பயனற்றதாகிப் பின்தங்கிப் போயுள்ளது. புதிய சிந்தனைப் போக்குகளாலும் அறிவியல் வளர்ச்சியாலும் பல புதிய தொழிலதிபர்கள் உருவாகிவந்துள்ளனர். தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம், உலக மயமாக்கம் என்பவை இன்றையக் காலகட்டத்தில் மறுக்கமுடியாத தேவையாக மாறி இருக்கிறது.
நிரந்தர வேலைவாய்ப்பு என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று நாம் பார்க்கும் பல வேலைகள் இன்னும் பத்தாண்டுக் காலத்தில் இல்லாமலே போய்விடலாம். எப்படி சுருக்கெழுத்தும் தட்டச்சும் இன்று பயனற்றுப் போய்விட்டனவோ அதுபோல. பல தரப்பட்ட வேலைகள் கணினி மூலமாகவும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவும் செயல்படப் போகின்றன. இன்றைய நமது கல்விமுறை, தனது காலில் தானே நிற்கும் திறன்வாய்ந்த மக்களை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும்.
இந்திய நாட்டின் மக்கள்தொகையில் இரண்டில் ஒரு பங்கு, 25 வயதிற்கும் குறைவான இளைஞர்களே. இந்த மனிதவளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் அனைவருக்கான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். இல்லையென்றால் இந்த மனிதவளமே நாட்டிற்குப் பெரும் சவாலாக மாறிவிடும். இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தப் புதிய கல்விக்கொள்கை வரையறையைப் பரிசீலிக்க வேண்டி உள்ளது.
மாறிவரும் உலகில் நமது கல்வித் திட்டம் மட்டும் மாறாமல் இருக்கமுடியாது. நம்முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நமது கல்வித் திட்டத்தில் என்னவிதமான மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று விவாதிக்க மத்திய மனித வளத் துறை ‘தேசியக் கல்விக் கொள்கை – 2016’ என்ற அறிக்கையை மக்கள்முன் விவாதத்திற்கு வைத்துள்ளது. 240 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயம் இந்தியாவில் கல்வியைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தையும் இன்றைய நிலையையும் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்கான அணுகுமுறையையும் செயல்முறைகளையும் விவரிக்கிறது. மூன்றாவது அத்தியாயம் புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தையும், அடுத்த இரண்டு பிரிவுகள் புதிய கல்விக் கொள்கையின் தேவையையும் கல்வி ஆளுகையையும் பற்றி விவாதிக்கின்றன. ஆறாவது அத்தியாயம் பள்ளிக் கல்வி பற்றியும் ஏழாவது அத்தியாயம் உயர் கல்வி பற்றியும் எட்டாவது பிரிவு தேசிய அளவிலான கல்வி நிலையங்களைப் பற்றியும் பேசுகின்றன. கடைசி அத்தியாயம் எல்லாத் தலைப்புகளிலும் அளிக்கப்பட்ட பரிந்துரைகளைப் பட்டியல் இட்டுத் தருகிறது.
எதிர்க்கட்சிகள் இந்த அறிக்கைமீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமாவை, இந்த வரைவறிக்கையை தயாரிக்கும்போது கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்பதும், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுசெய்து இருக்கிறது என்பதும்.
இந்த அறிக்கை எப்படித் தயாரிக்கப்பட்டது என்று விளக்கப்பட்டிருக்கும் பகுதியில் இதற்கான தெளிவான பதில் இருக்கிறது. இதற்கு முந்தையக் கல்விக் கொள்கைகளை வரையறை செய்த முறைக்கும் இந்தக் கல்விக் கொள்கையை வகுத்த முறைக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. முந்தையக் கொள்கைகள் துறை சார்ந்த நிபுணர்களால் விவாதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன. அதாவது மேலிருந்து கீழாக அது பயணித்தது. ஆனால் இந்தக் கொள்கையோ கீழிருந்து மேலாகப் பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டு உள்ளது. கிராம நிலைகளில் விவாதிக்கப்பட்டு, அவை அடுத்த நிலைகளில் தொகுக்கப்பட்டு, மாவட்ட அளவிலான விவாதங்கள், பின்னர் மாநில அளவிலான விவாதங்கள் / பரிந்துரைகள் என்று தொகுக்கப்பட்டு உள்ளது. இரண்டரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் விவாதிக்கப்பட்டுப் பின்னர் ஆறாயிரம் கோட்டங்களில்
வடிகட்டப்பட்டு, அறுநூற்று எழுபதுக்கும் மேலான மாவட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மாநில அளவிலான கூட்டங்களில் தரப்பட்ட ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் பல்வேறு பொதுமக்களும் கல்வி பற்றிய தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். இவற்றைத் தொகுத்து ஐவர் அடங்கிய குழு தனது பரிந்துரையை அரசுக்கு வழங்கி இருக்கிறது.
இந்த அறிக்கையின் மிக முக்கியமான கருத்துகளை இவற்றைச் சொல்லலாம்:
1. நாட்டின் மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product) 6% நிதி கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும். இன்றைய நிலையில் 3.5% நிதிதான் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. அதாவது இதுவரை அளிக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இன்னும் ஒரு பங்கு கூடுதல் நிதி வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கான நிதி என்பது இந்த 6%இல் சேராது என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு தனியாக இருக்கவேண்டும் என்றும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
2. இன்று இருப்பது போல பட்டப்படிப்பு முடித்த பின்னர் ஆசிரியர் கல்வி என்றில்லாமல், பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கே ஆசிரியர் பணி அளிக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இதன்படி, எப்படி மருத்துவம் / பொறியியல் / சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தமாகிறார்களோ அதுபோலவே ஆசிரியர் பணிக்கும் முன்கூட்டியே மாணவர்கள் முடிவு செய்து சேர்வதால், உண்மையாகவே ஆசிரியர் பணியில் அக்கறையும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் உருவாகி வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கிராமப் பகுதிகளிலும், மலைவாழ்ப் பகுதிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அரசின் செலவில் தகுந்த கல்வி அளித்து அவர்களையே அங்கே உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தொலைதூரத்தில் உள்ள மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இனி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில முக்கியமான குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்:
சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறதா?
உண்மையைச் சொன்னால் ஜெர்மன், பிரெஞ்சு, அரபி முதலான பல மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கவேண்டும் என்றுதான் இந்த வரையறை கூறுகிறது.
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநிலத்தின் மொழியிலோதான் கல்வி இருக்கவேண்டும் என்றும், தொடக்கக் கல்வியில் இரண்டாவது மொழியையும் மேல்நிலை அளவில் மூன்றாவது மொழியையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்பதையும், அறிமுகம் செய்வதாக இருந்தால் அவை எந்த மொழிகளாக இருக்கவேண்டும் என்ற முடிவையும் மாநில அரசாங்கங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம் என்றுதான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதைவிட முக்கியமான அறிவுரை, மலைவாழ்ப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் பேசும் மொழியில் பாடங்கள் நடத்தப்படவேண்டும் என்பதும், அதற்கான பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதும்தான். ஆக சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. மொழிக் கொள்கையை என்பது மாநில அரசுதான் முடிவு செய்யும்.
யோகா திணிக்கப்படுகிறதா?
பாரதம் இந்த உலகுக்கு வழங்கிய கொடை யோகா. அதனால்தான் இன்று ஐக்கிய நாட்டுச் சபையே உலக யோகாசன தினத்தை உலகம் எல்லாம் கொண்டாட வகை செய்துள்ளது. இன்றைய மாணவர்களுக்கு உடல்பயிற்சி என்பது இல்லாமலே ஆகிவிட்டது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றுதான் கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. பல பள்ளிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை. பல நகரங்களில் பள்ளிகள் விரும்பினாலும் இடப் பற்றாக்குறையால் மைதானங்களை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலையில் மாணவர்களின் உடலை உறுதி செய்ய யோகா உதவும் என்றுதான் வரையறையில் கூறப்பட்டுள்ளது. யோகாவை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களே யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
சிறுபான்மையினரின் சிறப்புரிமை மறுக்கப்படுகிறதா?
முதலில் சிறப்புரிமை என்பது என்ன? அரசின் எந்தச் சட்டதிட்டங்களும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என்பதா? அப்படி என்றால் அது என்ன நியாயம்? கல்விக்கான உரிமைச் சட்டம் (Right to Education Act) எல்லாக் கல்வி நிறுவனங்களும் தங்களின் மொத்த மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்தச் சட்டம் சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படத் தேவையில்லை என்றிருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை, சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைத் தேவைப்படும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கூறுகிறது. இது, சமூகநீதியை முன்னெடுக்கும் கட்சிகளை ஏன் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பது புரியாத புதிர்.
எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்பது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே என்பதால் கல்வி மறுக்கப்படுகிறதா?
நல்லெண்ணத்தின் மீதேறி நரகத்திற்கும் போகலாம் என்று ஒரு பழமொழி உண்டு. எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்யவேண்டும், தேர்வு முறையில் அவர்கள் யாரையும் தோல்வி அடையச் செய்யக்கூடாது என்று, நடைமுறையில் இருக்கும் கல்வி உரிமைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இதன்மூலம் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வின்படி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 40% மாணவர்கள் இரண்டாம் வகுப்பில் கற்கவேண்டிய கல்வியைக்கூடக் கற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீண்ட விவாதத்தை நடத்தி இந்தக் கல்விக் குழு ஐந்தாம் வகுப்பு வரை எந்த மாணவர்களையும் தடை செய்யக்கூடாது என்றும் அதன் பிறகு தேர்வுகளில் தேர்ச்சி அடையும் மாணவர்களையே அடுத்தத்த வகுப்புகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதில் கல்வி மறுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
ஆனாலும், இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என்று இந்தப் பரிந்துரை வலியுறுத்துகிறது. மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகளாவது வழங்கவேண்டும் என்றும், தேவைப்படும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.
தேர்வு முறையில் மாற்றங்கள் மாணவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறதா?
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவர்களில் பெரும்பாலானோர் கணக்கு மற்றும் அறிவியல் பாடத் தேர்வுகளில்தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு பாடத்திலும் இரண்டு நிலையாகத் தேர்வு நடத்தலாம் என்றும் மேல்நிலைப் பாடங்களில் கணக்கோ அல்லது அறிவியலையோ பயிலாத மாணவர்களுக்கு எளிதான தேர்வு ஒன்றை அமைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
பதினொன்றாம் வகுப்பில் பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களில் பலர் உயிரியல் படிப்பு படிப்பதில்லை. மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் கணக்கைப் பயில்வதில்லை. வணிகவியல் / பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடங்களைப் படிப்பதில்லை. மேல்நிலையில் என்ன பாடங்களைப் படிக்கப்போகிறோம் என்று முடிவுசெய்யும் மாணவர்கள் ஏன் தேவை இல்லாமல் கடினமான தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டும்?
இதுபோல பத்திரிகை, மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன் துறைகளைத் தேர்வு செய்யும் மாணவர்களைக் கணக்கிலும் அறிவியலிலும் கடினமான தேர்வை எதிர்கொள்ள வைப்பது தேவையானதுதானா?
இரண்டு நிலைகளில் எந்த நிலையைத் தேர்வு செய்யலாம் என்ற தெளிவு மாணவர்களுக்கு இருக்காது என்று சொன்னால், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து உயர்வகுப்பில் எந்தத் துறை சார்ந்த படிப்பைப் படிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்யும் தெளிவு மட்டும் இருக்குமா? இதை ஏற்றுக்கொள்ளும்போது, புதிய கல்விக் கொள்கை முன்வைக்கும் நியாயமான ஆலோசனைகளை எதிர்க்கவேண்டியதன் அவசியம் என்ன?
இதுபோக, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்வுக்குப் பதிலாக ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாணவன் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வு என்பது பல மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை அளிக்கிறது. அதை மாற்ற இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோல வருட இறுதியில் நடைபெறும் தேர்வை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு பதில், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை உருவாக்கப் படவேண்டும் என்றும் ஆலோசனை உள்ளது. இந்த முறையில் மாணவர்களின் மொத்த ஆளுமைத் திறனும் அளவிடப்பட்டுச் சரியான முறையில் அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். தேர்வு நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற செய்திகளை நாம் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையின் அறிவுரைகள் இந்த அவலநிலைக்கு ஒட்டுமொத்தமான முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளன.
இன்றைய நிலையில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே கிடைப்பதில்லை. கற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. எங்கே கிடைக்கும் என்பதையும், எப்படிக் கற்பது என்பதையும் பள்ளிக்கூடங்கள் சரியாகச் சொல்லிக்கொடுத்தால் போதும்.
ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரம். இன்றையக் கல்விக் கொள்கை என்பது நாட்டை நாளை வழிநடத்தப்போகும் ஒரு முக்கியமான அறிக்கை. எனவே இதனை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, குறைந்தபட்சம் இந்த அறிக்கையை முழுவதும் படித்துவிட்டாவது அதைச் செய்யவேண்டும்.
-oOo-