Posted on 1 Comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – பழைய பாடல் (சிறுகதை)

பழைய பாடல் – சுகா

தொண்டர் சன்னதி திருப்பத்திலேயே ‘மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ’ என்று சுப்பம்மாக்காவின் குரல் சோமு மாமாவின் வீட்டிலிருந்து கசிந்து வரும். மதியச் சாப்பாட்டுக்குப் பிந்தைய உறக்கத்தில் இருக்கும் பர்வத சிங்க ராஜ தெருவை மேலும் ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் விதமாக சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். வாசல் அழியை மட்டும் பொத்தினாற் போல சாத்திவிட்டு, பட்டாசல் நடையில் தலை வைத்து சோமு மாமா தூங்கிக் கொண்டிருப்பார். அவர் கால்களை மெல்ல அமுக்கியவாறே சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். மாமாவின் தலைமாட்டில் வெற்றிலைத் தட்டும், பித்தளைச் செம்பில் தண்ணீரும் இருக்கும். தொந்தி தரையில் சரிய, ஒருச்சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கும் சோமு மாமாவின் மெல்லிய குறட்டையொலி, சுப்பம்மாக்காவின் பாட்டுக்கு ஏற்ப, தம்பூரா சுதி போல சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும். பொதுவாக கச்சேரி இல்லாத நாள்களில்தான் இப்படி நடக்கும். கச்சேரி இருந்தால் அன்றைக்கு மதியம் வயிறு நிறையச் சாப்பிடமாட்டாள் சுப்பம்மாக்கா. சோமு மாமாவுக்கும் இட்லி, தோசை, உப்புமா எனப் பலகாரம்தான் செய்து கொடுப்பாள். எப்போதுமே உப்பும் புளிப்பும் குறைவாகச் சேர்த்த சமையல்தான். சோமு மாமா கொஞ்சம் காரசாரமாகச் சாப்பிடுபவர்.

“கூட ரெண்டு மெளகாவ நுள்ளிப் போட்டா என்னட்டி?” என்று அலுத்துக் கொள்வார். சுப்பம்மாக்காவின் தம்பி ‘தபலா குமாரும்’ அந்த வீட்டில்தான் இருந்தான். அவனுக்குக் காரம் ஆகாது. இத்தனைக்கும் குமாருக்கென்று தனியாகத்தான் சட்னியோ, குழம்போ எடுத்து வைப்பாள் சுப்பம்மாக்கா. அப்படியிருந்தும் சாப்பிடும்போது கண்களில் நீர் வழிய, ‘உஸ் உஸ்’ என்றபடிச் சாப்பிடுவான்.

“ஏன் மூதி உஸ் உஸ்ஸுங்கெ? அப்படியா எரிக்கி? ஒனக்கு தனியாத்தானே செஞ்சு வச்சேன்?”

அக்காவின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் தலையை இல்லை என்று ஆட்டியபடி அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பான் ‘தபலா குமார்’.

கச்சேரிகளில் தபலா வாசிக்கும் குமார், சோமு மாமாவை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதே இல்லை. என்ன கேள்வி கேட்டாலும் தலை குனிந்தபடிதான் பதில் சொல்லுவான். “அவன் வாய் பேசாததத்தான் வெரல் பேசுதுல்லா! பாரதி கண்ணம்மா பாட்டுக்கு அவன் உருட்டுத உருட்டுல நம்ம சேவியரு அடுத்த வரிய எடுக்காம எத்தன மட்டம் இவன் வாசிக்கதயே பாத்துட்டு நின்னிருக்கான்!” அதிகம் பேசாத தபலா குமாரின் சுபாவத்தை வயலினிஸ்ட் சந்திரன் இப்படித்தான் சிலாகிப்பார்.

சோமு மாமாவின் ‘சோமு டோன்ஸ்’ கச்சேரியின் முதல் பாடலாக ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்’ என்கிற ‘சாந்தி நிலையம்’ பாடலைப் பாடி சுப்பம்மாக்காதான் துவங்குவாள். பாடலின் துவக்கமாக ‘இறைவன் இறைவன் இறைவன்’ என்று சுப்பம்மாக்கா பாடும்போது, “ஏட்டி! சோமு கச்சேரி ஆரம்பிச்சுட்டு. சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா” என்று பெண்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு கச்சேரிக்குக் கிளம்புவார்கள்.

மெல்லிசைக் குழு வைத்து நடத்துபவர்களுக்கு அதன்மூலம் அப்படி என்னதான் வருமானம் கிடைத்துவிடுமோ தெரியவில்லை. ஆனால் சோமு மாமா போட்ஸாகத்தான் இருந்தார். தினம் இரண்டு உடுப்பு, மைனர் சங்கிலியுடன் தங்க ருத்திராட்சம், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், கட் ஷூ என அலங்காரத்துக்கு ஒரு குறைச்சலுமில்லை. சோமு மாமாவுக்கு கொஞ்சம் பூர்வீகச் சொத்து இருந்தது. அவரது அம்மா ஒரு பழைய பாடகி என்றும், அவருக்கு புளியங்குடியைச் சேர்ந்த ஒரு பண்ணையார் சில சொத்துக்களை எழுதி வைத்ததாகவும் அரசல்புரசலாகச் சொல்லுவார்கள்.

“நம்ம சோமு டோன்ஸ் சோமோட அப்பா நம்ம புளியங்குடி பண்ணையார்தாம் தெரியும்லா! ஒனக்கு சந்தேகமா இருந்தா ஒருநா என்கூட புளியங்குடிக்கு வா. பண்ணையார் வீட்டு வாசல்ல அவாள் போட்டோ ஒண்ணு மாட்டியிருக்கும். சாடை அப்படியே அச்சு அசல் நம்ம சோமுதான்.”

‘சோமு டோன்ஸ்’ சோமுவை வயதில் மூத்தோர் சோமு என்றும், இளையோர் ஏனோ சோமு மாமா என்றுமே அழைத்தனர். யாருமே அவரை அண்ணே என்றோ அண்ணாச்சி என்றோ அழைத்ததில்லை. சுப்பம்மாக்கா மட்டும் அவரை அத்தான் என்றுதான் அழைப்பாள். அதில் சோமு மாமாவுக்கு சங்கடம் உண்டு. எத்தனை பேர் கூடியிருக்கும் சபையிலும் சோமு மாமாவை ‘அத்தான்’ என்று சத்தம் போட்டே கூப்பிடுவாள் சுப்பம்மாக்கா. அவள் இப்படி கூப்பிடுவது தெரிந்ததும் வேக வேகமாக அவளருகில் வந்து, “எத்தன மட்டம் சொல்லியிருக்கென், இப்படி நாலு பேர் மத்தில அத்தான் நொத்தான்காதென்னு? என்ன விஷயம் சொல்லித் தொல” என்று ரகசியமாகக் கடிந்து கொள்வார். “நல்ல கதயா இருக்கெ! அத்தான அத்தான்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிட?” விகற்பமில்லாமல் சுப்பம்மாக்கா கேட்பாள். “என் தலைலெளுத்து” என்று தலையில் அடித்துக்கொள்வார் சோமு மாமா.

சுப்பம்மாக்காவை சோமு மாமா ‘ச்சுப்ப்பு’ என்றழைப்பார். கச்சேரிகளில் அவள் பெயரை சுப்பம்மா என்றே அறிவிப்பார்கள். ஆனால் சோமு மாமாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் அவள் சுப்பம்மாக்காதான். அவளை விட வயதில் மூத்தவரான ஃப்ளூட்டு கோபாலும் அவளை சுப்பம்மாக்கா என்றழைப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியாது. “கோவாலண்ணாச்சி! ஒங்க கடேசி தங்கச்சி விஜயாவும், நானும் அப்பர் கிளாப்டன்ல ஒரே செட்டு. என்னப் போயி அக்காங்கேளே! கேக்கதுக்கு நல்லாவா இருக்கு!” ஃப்ளூட்டு கோபால் அதற்கும், “இருக்கட்டும்க்கா” என்பார். தன் முதலாளி சோமுவின் மீது இருக்கும் மரியாதை காரணமாகவே கோபால் தன்னை அக்கா என்றழைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு மேலும் பேச்சை வளர்க்க மாட்டாள் சுப்பம்மாக்கா.

கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய பாடல்களை மட்டும் பாடுவார் சோமு மாமா. ‘அல்லா அல்லா, சம்போ சிவசம்போ, இக்கரைக்கு அக்கரை பச்சை, எதற்கும் ஒரு காலம் உண்டு’ போன்ற பாடல்களுக்கு மத்தியில் சுப்பம்மாக்காவுடன் இணைந்து சோமு மாமா பாடும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அவரது கச்சேரியின் ஸ்பெஷல் பாட்டு. சோமு மாமாவுடன் ஒன்றாக மேடையில் நின்று பாடும்போது சுப்பம்மாக்கா அநியாயத்துக்கு வெட்கப்படுவாள்.

“பால் போலவே பாட்டெல்லாம் அஸால்ட்டா பாடீருதே! ஆனா சொல்லத்தான் நினைக்கிறேன் பாடும்போது மட்டும் அந்த பதறு பதறுதே! ஏன்?” என்று கேட்டால், “பொறவு! அவ்வொ கூட ஒண்ணா நின்னுப் பாடணும்னா வெக்கமா இருக்காதா?” என்று பதில் சொல்வாள்.

விஸ்வநாதனின் குரலில் பாடுவதைத் தவிர மற்ற சமயங்களில் ஹார்மோனியத்தில் நின்று கொள்வார் சோமு மாமா. மற்றபடி சுசீலா, ஜானகி பாடிய பாடல்கள் அனைத்தும் சுப்பம்மாக்காதான் பாடுவாள். ஈஸ்வரி, வாணி ஜெயராம் பாடல்களைப் பாடுவதற்கென்றே சோமு டோன்ஸில் உள்ள பாடகிதான் நாஞ்சில் பிரேமா. சக பாடகியான பிரேமா பாடும் பாடல்களில், ‘தீர்க்க சுமங்கலி’யின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல், சுப்பம்மாக்காவுக்குப் பிடித்தமான ஒன்று. “சின்னப்பிள்ளைல அரசு பொருள்காச்சில வாணி ஜெயராமே பாடி கேட்டிருக்கென். ஆனா நீ பாடுததுதான் எனக்குப் புடிச்சிருக்கு பாத்துக்கொ” என்று பிரேமாவின் கைகளைப் பிடித்தபடிச் சொல்வாள் சுப்பம்மாக்கா.

சோமு மாமாவுக்கென்றே ‘நெல்லை லாட்ஜில்’ ஓர் அறை இருந்தது. மாலை நேரங்களில் சோமு மாமா நெல்லை லாட்ஜ் அறையில்தான் இருப்பார். சாயங்காலக் குளியல் முடித்து, சுப்பம்மாக்கா கையால் காபி வாங்கிக் குடித்துவிட்டு, சாலைக்குமார சாமி கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு நெல்லை லாட்ஜுக்கு சென்றாரானால் செகண்ட் ஷோ விடும் நேரம்தான் வீடு திரும்புவார். என்றைக்காவது வீடு திரும்பவில்லையென்றால் அன்று சோமு மாமா மருந்து சாப்பிட்டிருக்கிறார் என்பதை சுப்பம்மாக்கா புரிந்து கொள்வாள்.

ஆனால் நாளடைவில் மருந்து சாப்பிடாமலேயே சோமு மாமா வீட்டுக்கு வருவது குறைய ஆரம்பித்தது. கச்சேரியும் குறைய ஆரம்பித்தது ஒரு காரணமாக இருக்கலாம். சுப்பம்மாக்கா இல்லாமல் கச்சேரிகள் நடக்க ஆரம்பித்தன. அதற்கு ஒரு வகையில் சுப்பம்மாக்காவும் காரணம்தான். “இந்த மாரி அஸ்கு புஸ்கு பாட்டெல்லாம் என்னய பாடச் சொல்லாதிய” என்று சோமு மாமா நல்ல மூடில் இருக்கும்போது ஒருநாள் சொல்லி விட்டாள். அதற்குப் பிறகு சோமு மாமா கொஞ்சம் கொஞ்சமாக சுப்பம்மாக்காவை கச்சேரிக்கு அழைப்பதைக் குறைத்து, பின் சுத்தமாக நிறுத்திக் கொண்டார்.

“அவ்வொளும் என்ன செய்வா? கல்யாணக் கச்சேரி புக் பண்ணும்போதே பாட்டு லிஸ்ட் அவங்களே குடுக்காங்க. ஒரு பளைய பாட்டு இல்ல. எல்லாம் இப்பம் உள்ள இங்கிலீஸ் பாட்டுங்க. எனக்கு அதுல்லாம் வாய்லயெ நொளயாது. அதான் என்னய சங்கடப்படுத்த வேண்டாம்னு அவ்வொ கூப்பிட மாட்டங்கா… ஆனா அதுக்காக இப்படி ஒரேயடியா வீட்டுக்கு வராம இருக்கதத்தான் தாங்க முடியல.”

ரகசியமாக தன் தம்பி ‘தபலா குமாரிடம்’ சொல்லிக் கண்ணீர் சிந்துவாளே தவிர வேற்றாள்களிடம் சோமு மாமாவை சுப்பம்மாக்கா விட்டுக் கொடுத்ததே இல்லை.

‘நைட்டு லேட்டாத்தான் வந்தாக. ஒதயேத்துலயே எந்திரிச்சு சங்கரன்கோயில் கச்சேரிக்குக் கிளம்பிட்டாக’ என்று சொல்லிச் சமாளிப்பாள். ஆனால் இந்தச் சமாளிப்பெல்லாம் கொஞ்ச நாள்களுக்குத்தான் செல்லுபடியானது. சோமு மாமா வீட்டுக்கு வருவதே இல்லை என்பதை ஊரும், சுப்பம்மாக்காவும் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த விஷயம் இயல்பான ஒன்றாக ஆகிப் போனது.

“சோமு மாமாவைப் பாக்கணும்னா நெல்லை லாட்ஜ்லதான் பாக்கலாம். இல்லேன்னா பெருமாள்புரத்துக்குத்தான் போகணும். ஆனா அட்ரஸ் சரியாத் தெரியல. அவாள் யாருக்கும் பெருமாள்புரம் அட்ரஸ குடுக்கலெல்லா!”

ஹார்மோனியத்திலிருந்து கீ போர்டுக்கு மாறிய சோமு மாமா காலத்துக்கேற்றார் போல தானும் மாறி, தன் குழுவையும் மாற்றி அமைத்துக்கொண்டார்.

“முந்தில்லாம் சோமு டோன்ஸ்லதான் அத்தன வயலினைக் கேக்கலாம். சங்கீத சபால ‘ராஜபார்வை’ டைட்டில் மியூஸிக்லாம் சோமு டோன்ஸ் வாசிச்சுக் கேட்டது இன்னும் ஞாவம் இருக்கு. இப்பம் அவாளும்லா வாத்தியத்தைக் கொறச்சுட்டா. எல்லாம் கீ போர்டுலயே வாசிக்கானுவொ. நல்லாவால இருக்கு?”

சோமு மாமாவின் குழுவில் இப்போது சுப்பம்மாக்காவும் இல்லை. நாஞ்சில் பிரேமாவும் இல்லை. ஃப்ளூட் கோபால் எப்போதாவது வருகிறார். அவரது பீஸ்களையும் கீ போர்டிலேயே கிஷோர் வாசித்து விடுகிறான். வயலின், ஷெனாய், கிளாரினெட்டும் கிஷோர் கைகளுக்குள் அடைபட்டுவிட்டன. குழுவும் சுருங்கிப் போனது. புதிய பாடகி சவீதா குழுவுக்கும் சோமு மாமாவுக்கும் இணக்கமாகி விட்டாள்.

“பெருமாள்புரம் வீட்டுக்குப் போயிருந்தேன். கூட அந்த சவீதா இருக்கா.” குனிந்த தலை நிமிர்ந்து தன் அக்காவின் முகத்தைப் பார்க்க முடியாமல் சாப்பிட்டபடியே ‘தபலா குமார்’ சொன்னபோது சுப்பம்மாக்கா அதற்காகப் பெரிதாக ஒன்றும் வருத்தப்பட்டுக்கொள்ளவில்லை. “இதுல என்னலெ இருக்கு? அவ புதூ பாட்டுல்லாம் பாடுதாள்லா. சாம்பார் ஊத்தட்டுமா?” என்றாள் சுப்பம்மாக்கா.

-oOo-

1 thought on “வலம் அக்டோபர் 2016 இதழ் – பழைய பாடல் (சிறுகதை)

  1. இந்த பாட்டுக்காரிகளின் வாழ்க்கையை இதைவிட நாசுக்காகவும் பரிவோடும் சொல்ல முடியாது."சுப்பம்மாக்கா"-"சவிதா" நல்ல contrast . கதையின் பின் புலமாக இசையின் நசிவு புலப்படுகிறது. வாழ்த்துக்கள் "சுகா" —காஸ்யபன்.

Leave a Reply