Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி

வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி 
– சொல்வனம் ரவிஷங்கர்

அறுபதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்தில் உலவிய ஒரு விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதனுடன் எனக்கு நேரடிப் பழக்கம் குறைவுதான். கடிதங்கள் மூலம், அவரோடு பல வருடங்கள் பழகிய அனுபவம் உண்டு.

அவர் எழுதியதில் பகுதியைத்தான் நான் படித்திருக்கிறேன். நான் விட்டிருக்கிறவற்றில் அவர் அடைந்த வளர்ச்சி பரிணாம வளர்ச்சி என்பது பிற்காலத்து எழுத்தில் தெரிந்தது. இக்கட்டுரை,அவரின் அளிப்பைப் புரிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவரை வேறெந்தச் சமகால ஆளுமைகளுடனும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை என்பது குறிக்கப்பட வேண்டியது.

***

முதல் சந்திப்பிலிருந்து, முதல் கடிதத்திலிருந்து புலப்பட்ட அவருடைய பல குணங்களும், தேர்வுகளும், என் குணங்கள், தேர்வுகளிலிருந்து நிறைய விலகியவை. இந்த இடைவெளி துவக்கத்திலிருந்தே அவரைத் தள்ளி நின்று நோக்கும் நிலைக்கு என்னைச் செலுத்தி இருந்தது. அதே நேரம் எதிரிடையான நிலை இல்லை என்பதால் அகன்ற இடைவெளியைக் கடந்து பல கலை இலக்கியத் தேர்வுகள் மூலம் ஓரளவு இணைப்பும் சாத்தியமாகி இருந்தது.

தனிமனிதர் தேர்ந்தெடுக்கும் நிலைப்பாடுகளுக்கு வாழ்வின் தூல நிலைகள் ஓரளவு காரணமாக இருக்கும் என்று கருதுபவன் நான். தமிழல்லாத அயல் பண்பாடுகளில் பல வருடம் வாழ நேர்ந்தபோது தன்னடையாளத்தின் பல கூறுகளில் எவை உயிரோட்டம் உள்ளவை, எவை இரண்டாம், மூன்றாம் பட்சம் என்பது புரியத் துவங்கியது. இதனால், இந்தியத்தை மதிக்கத் துவங்கி உள்ளவனாக நான் ஆகி இருந்தாலும், பிற இந்திய மொழிப் பண்பாடுகளில் வெகு காலம் வாழ்ந்திருக்கிற அவருடைய இந்தியம் ஒப்பீட்டில் வலுவானது. இந்த வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் உண்டு. வளர்ந்தவராக வாழ்வைத் துவங்குகையில் நாம் பெறும் மதிப்பீடுகளில் நம்மிடம் சாரமாகத் தங்கியவையும், பின் தொடர்ந்து நாம் சேமிக்கும் பல அனுபவங்களின் படிப்பினைகளும் வேறுபாடுகளின் தோற்றுவாய்.

இப்படித் துவக்கப் புள்ளியில் விலகி இருந்த நான், பல பத்தாண்டுகளின் உலக அனுபவங்களாலும், வேறு சமூகங்களின் படிப்பினைகளாலும் நகர்ந்து, அவர் ஏற்கெனவே இருந்த பல புள்ளிகளில் வந்து சேர்ந்தேன்.[1] இப்போது, அவருடைய கருத்துலகின் தர்க்க நியாயம் ஓர் அளவாவது புரிந்தது. அதை அவரும் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் 2004க்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோது எங்களிடம் ஓரளவு நட்புணர்வு தோன்றி இருந்தது.

திரும்பிச் சந்தித்தபோதும், அவர் குறுக்கு விசாரணைக் கேள்விகளை என்பால் வீசாமல் இல்லை. ஆனால் இப்போது அவற்றை நேரடியாக எதிர்கொள்ள முடிந்தது. கூர்மையான சொற்கள், சுருக்கமான விளக்கங்களால் பேசுகிற அவருக்கு நெடிய, வார்த்தைப் பெருக்கு கொண்ட என் மசமசப்பான விளக்கங்கள் அத்தனை ருசியாக இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் கருத்துகளில், சில முடிவுகளில் அவ்வப்போது ஒற்றுமைகள் தோன்றின என்பது என்னளவில் விந்தை.

***

என் அனுபவத்தில், அவர் வயது வித்தியாசம் பாராமல் பழகுபவர். நம்மிடம் அவருக்கு ஏதும் குறை இருந்தால் நேராகக் கேட்டுவிடும் பழக்கமும், துணிவும் உள்ளவர். பாராட்டுதல்களும் அப்படியே, உடனடியாகக் கிட்டும். நாசூக்குப் பார்த்துக் கொண்டிராமல், கருத்து வேறுபாடுகளைப் பேசித் தெரிந்து கொள்வது நல்லது என்ற அணுகல் அவருடையது. இது எல்லாருக்கும் பொருந்தக் கூடிய அணுகல் இல்லை.

ஒருவரின் கருத்துத் தள நிலைப்பாடுகள் அவருடைய தனி நபர் வாழ்விலும் செயல்பட வேண்டிய அவசியத்தை, அப்படி ஓர் ஒருமையை வலியுறுத்துபவர் வெ.சா. இந்திய வாழ்வின் ஏகப்பட்ட அழுத்தங்கள், இல்லாமைகளால் தனிநபர் நடத்தையில் குறைபாடுகள் , அவ்வப்போது இடறல்கள், சறுக்கல்கள் நிகழும் என்பது அவருக்குத் தெரியும். அந்தச் சறுக்கல்களை நேராக ஒத்துக்கொண்டு பொறுப்பேற்பது தார்மிக நடத்தை என்பதே அவர் நிலை. எதிரிடையான நடத்தையை சகஜமாகவே கொண்டவர்கள், உன்னத அற நிலைகளை உலகுக்கு அறிவுறுத்துவது அவருக்கு ஏற்கவொண்ணாதது. இதை அவர் பகிரங்கமாகச்சொன்னார் என்பது சூழலால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தமிழ் எழுத்தாளர்களில் பலரும் நேரடியாகத் தம் கருத்துகளை எடுத்து முன்வைத்து, மற்றவரிடமிருந்தும் அப்படியே கருத்துகளைப் பெற முயல்பவர்கள் அல்ல. அதுவும் நேருக்கு நேர் வேறுபாடுகளை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவிக்கும் பழக்கம் அனேகரிடம் கிடையாது. எனக்கும் இப்படி எதிர் நிலைகளை முன்வைத்து, கறாராகக் கேள்விகள் கேட்டு வறுத்தெடுப்பது முடியாத செயல். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நான் பார்ப்பது, கருத்துத் தள நிலைப்பாடுகளுக்கும், சொந்த வாழ்வில் நடத்தைகளுக்கும் தொடர்பறுந்த நிலைதான். இதை அறப்பிறழ்வு என்று பார்க்க முடியும். ஆனால் இதோடு போருக்குப் போக ஒரு வகைத் தீவிரம் தேவை. அந்தத் தீவிரத்தைத் தன் ஐம்பதாண்டு இயக்கத்தில் தொடர்ந்து காட்டி வந்த விதத்தில் எனக்கு வெங்கட் சாமிநாதன் புதுமையானவராகத் தெரிந்தார், ஆனால் அதனாலேயே ஓரளவு பழமையானவரும்கூட.

***

எனக்கு முந்தைய தலைமுறையினரில்,விரி-குடும்ப உறவினர்களில் பலர், இப்படி எதையும் முகத்துக்கு நேராகக் கேட்கும் பழக்கமுள்ளவர்கள் என்பது என் அனுபவம். ஒப்பீட்டில் என் தலைமுறையினரிடையே, நேரடியாக வேறுபாடுகளின் வேர்கள் என்ன என்பதைக் கேட்டறிய முயல்வோர் குறைவு என்பது என் அனுபவம். இதைப் பொதுமைப்படுத்தலாமா என்பது குறித்து எனக்குத் தயக்கம் இருக்கிறது. ஆனால் வேறெப்படியும் மேலே செல்லப் பாதை இல்லை.

இதற்குக் காரணம் உண்டா என்று யோசித்தால் முந்தைய தலைமுறையினர், பேச்சு வழியே உருவமைக்கப்பட்டு, அப்படியே பெருமளவும் செயல்பட்ட சமூகத்தில் வாழப் பயின்றவர்கள். இளம் வயதிலிருந்தே உரையாடல்கள் வழியே சமூகத்தில் பொருத்தப்படுபவர்கள், அதன் வழியே பற்பல வேறுபாடுகளையும் தீர்த்துக் கொள்ளமுயல்வது சகஜம். அது அவர்களைப் பொருத்து சாதாரண நிகழ்வு.

அவருடைய தலைமுறையிலிருந்து வித்தியாசப்படும் வகையில் என் தலைமுறையினரில் நிறையப் பேர் படிப்பு மூலம், அதுவும் மௌன வாசிப்பு மூலம் சமூக மதிப்பீடுகளை அறிந்து கொள்வதிலும், அவற்றுக்கு ஏற்ப நடப்பதிலும் அதிகம் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எழுத்து, புத்தகம், வாசிப்பு என அச்சுப் பிரதிகளின் மூலமே அதிகளவும் சமூக உறுப்பினராக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். குடும்பங்களிலும், சிறு குழுக்களிலும் உரையாடல் என்பதை எதையும் அறியச் சிறந்த வழியாக நோக்காமல், ஊடகங்களின் வழிக் கற்பதை நாடிப் போகக் காரணம் இதுவாக இருக்கலாம்.

கடந்த 60 ஆண்டுகளில் குறைந்தது இரண்டு தலைமுறைகளாவது இந்த நெடிய மௌனத்தில் பயின்றவர்கள். அதற்கடுத்த தலைமுறைகளோ வாசிப்பை இழந்து, பிம்பங்களின், இசையின், இன்னும் பற்பல ஓசைகளின் உலகில் எதையும் கற்பவர்கள். உரையாடலோடு, எழுதுவதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைபேசிகளில் பேசுவதைக் கூடக் குறைத்துக் கொண்டு சுருக்கக் கடிதங்களில், சங்கேதங்கள் வழி கருத்துப் பரிமாற்றத்தில் சமூக வயப்படுகிறார்கள். அபிப்பிராயப் பரிமாற்றத்துக்கு ஒற்றைச் சொல் விவரணையே போதுமானதாகக் கருதும் பெரும் திரளே கூட உருவாகி இருக்கிறது. இந்த மாறுதல்களால் இந்தியாவிலும், தமிழிலும் கலை வெளிப்பாடுகள் என்ன வடிவ, உள்ளடக்க மாறுதல்களைப் பெறும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

***

வெங்கட் சாமிநாதன் தன் வாழ்வுப் பாதை பற்றி எழுதிய கட்டுரைகள் பலவற்றை ‘சொல்வனம்’ இதழில் வெளியிட்டிருக்கிறோம், அவற்றில் வெங்கட் சாமிநாதனின் சிறு பிராயத்திலிருந்து அவருடைய 60களின் இறுதி வரையான வாழ்வுப் பாதை தெரிந்தது. 1960களின் இறுதிப் பாதியில், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தெளிவாகவே பாதை பிரிந்து சென்ற ஒரு தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறைகளுக்கும் இடையே அவர் ஒரு பாலமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது. சாதனங்கள் பெருகத் துவங்கியதால், மரபு வழிநடத்தும் வாழ்விலிருந்து தமிழ்ச் சமூகம் அகலத் துவங்கிய காலத்தில் தன் சொந்த வாழ்வைத் துவங்கியவருக்கு முந்தைய சமூகத்தில்நல்ல பயிற்சியும் இருந்தது. அடுத்த நகர்வுக்கான பல முன் ஆயத்தங்களிலும் அவரே பங்கெடுத்திருக்கிறார் என்பதால் அடுத்தடுத்த தலைமுறைகளோடு அவரால் இயல்பாக உரையாட முடிந்திருக்கிறது.

சிற்றூரில் துவங்கி, மாநகர வாழ்வில் பல்லாண்டுகள் ஊறி, பன்மொழிப் பண்பாட்டில் சகஜமாக உலவிய அனுபவம் கொண்ட அவருக்கு, தமிழ் இலக்கியத்தினர் இந்தியத்தை அறவே ஒதுக்கி, அவர்களுக்குச் சிறிதும் நேரடிப் பரிச்சயமோ, மொழித் தேர்ச்சியோ இல்லாத, யூரோப்பிய, லத்தீன் அமெரிக்க மதிப்பீடுகள், அரசியல் நிலைப்பாடுகள் மூலம் தம் சொந்த அனுபவங்களை எடை போட முயன்றனர் என்பது கேலிக் கூத்தாகத் தெரிந்தது. இது, அடுத்த தலைமுறைகளில் சிலரிடமிருந்து அவரைவிலக்கி நிறுத்தியது என்றாலும், தமக்குக் கிட்டிய கடப்பு நிலைக்கு அவர் ஒரு காரணம் என்பதையும் பல படைப்பாளிகள் அறிந்திருந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் அவரைத் தேடிச் சென்று உரையாடியதை நாம் பல பத்தாண்டுகளிலும் பார்க்கலாம்.

அவர் உரையாடுவதில் வல்லவர் என்பதோடு மௌனத்தையும் கனமாக, அர்த்தத்துடன் பயன்படுத்தக் கூடியவர். எழுத்து வடிவில் அவர் கொடுத்தவற்றூடே உரையாடல் வழக்கம் முக்கியமாக இருப்பதாகவே நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நாம் இன்று அவருடைய எழுத்துகளை அனேகமாக மௌன வாசிப்பு வழியேதான் பெறுகிறோம். அது அவருடைய ‘தானே ஒரு பாலமாகும்’ முயற்சியில் கிட்டுவது.

உரையாடல் என்பதன் சமூக அவசியம் குறையத் துவங்கியபோது,இலக்கியத்திலும் பேச்சுமரபு படிப்படியாக ஈர்ப்பு இழந்துபோனதை, கரிச்சுரங்கத்துக்குள் கொல்லும் வாயுவை இனம் காட்ட, முன்னதாகக் கொண்டு போகப்படும் கூண்டுப் பறவையை ஒத்த கவிதைப்படைப்பு வெளிக்காட்டி விட்டிருந்தது. ஒலியொழுங்கிற்குத்தலைமை கொடுக்கும் வழக்கத்திலிருந்து கவிதை நகர்ந்து, புதுக்கவிதை எனப்படும் மாற்று வழியால், மௌன வாசிப்புக்கு வாசகர்களைக் கொணர்ந்ததற்குக் காரணம், அப்படி ஒரு வாழ்முறை மனிதருக்குப் பரந்த சமுதாயத்தில் நிறைய அமைந்ததுதான்.

புதுக்கவிதையை ஆதரித்த வெங்கட் சாமிநாதனுக்கு இது முதலிலேயே புலப்பட்ட மாறுதல். அவர் விரும்பிய வகைச் சினிமாவுமே, ஏற்கெனவே நாடகத்தை விலக்கிய, பேச்சைக் குறைத்த, அனேகமாக மௌனமான, காட்சி வழியேகதை சொல்வதை முன்னிலைப்படுத்திய சினிமாதான். (அவருடைய அபிமான இயக்குநர் பிரெஸ்ஸோன்.)

தமிழில்,பெருமளவும் பேச்சால் கதையை நகர்த்திய, அன்று பிரபலமாக இருந்த நாடகீயச் சினிமாவை ஒதுக்க அவருடைய காரணம் அதுவே. அவர் விரும்பிய நாடகமும் உடல் இயக்கத்தை மைய வலுவாகக் கொண்டு கதை சொல்லும் கூத்து வகை நாடகம். கூத்தில் இசை, நடனம், கதை சொல்லல், சிறிதளவு வசனம் ஆகியன உண்டு என்றாலும், பாவம் சார்ந்த நடனம் மையம் பெறும். அவர் ஒதுக்கிய அன்றைய தமிழ் நாடகங்கள் வசன ஒப்பித்தலும், ஸ்தம்பித்த உடல் பாவங்களும் கொண்ட ஒற்றைத் தடப் பாதைகளே.

மரபை நீட்டிப்பதற்காக மட்டுமே கூத்து என்பதை ஒரு நல்ல வேர்மூலமாக அவர் கருதவில்லை. விமர்சனச் சிந்தனை அற்ற மரபு வழி ஒழுகலைக் கூத்து எளிதாகவே அடியறுக்கிறது, அதே நேரம் மரபை அது அழிக்கவும் இல்லை, அது சுவடிகளைத் தாண்டி, அன்றாட அனுபவ உலகின் படிப்பினைகளை முதன்மைப்படுத்தி, மரபைப் புதுப்பிக்க வழி கோலுகிறது. அதன் இந்த இருமுகத் தன்மை அவருக்கு ஏற்ற அணுகல்.

கூத்து என்ற நாடக மரபு, வேர்ச்சமூகங்களின் தன்னியல்புகளை வெளிக்கொணரும் அதே நேரம்,ஏட்டுப் படிப்பைப் பரவலாகப் பயன்படுத்தாத சமூகங்கள், நெடும் பாரம்பரியமான இந்தியக் கூட்டுச் சமுதாயத்தின் பன்முகக் கவனிப்புகளையும், மதிப்பீடுகளையும் இழக்காமல் காத்து, அவற்றைத் தலைமுறைகளிடையே கைமாற்றிக் கொடுக்க உதவியதை அவர் கவனித்தார். அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்வனுபவங்களும் அரங்கேறி, சமூகம் தன் வெளிப்பாட்டைப் பெறவும், விமர்சனத்துக்கு உரியனவற்றை விலக்கத் தேவையான தர்க்கத்தை உண்டாக்கியும், சமூகங்கள் பரிணாம வளர்ச்சி பெற இது இடம் கொடுத்தது என்று களத்தகவல்களிலிருந்தும் நேரடி அனுபவத்திலிருந்தும் அவருக்குப் புரிந்திருந்தது.

தகவலாகவும், கேளிக்கையாகவும் நிகழ்த்த வந்த வேறு வகை ஊடகங்கள், தனி வாழ்விலும் ஊடுருவி, சமூக உறவுகளையும் பாதிக்குமளவு வளர்ந்து, ஒரு கட்டத்தில் சமூக இணைப்பு அமைப்புகளைத் தாமே கூட உருவாக்குமளவு ஆகிருதி பெறத் துவங்கிய கட்டத்தில், தனி நபர் உரையாடல்கள் அனேகமாகப் பொது அரங்கில் நடந்தேறும் ஆரவார நிகழ்வுகள் பற்றியனவாகவே மாறுகின்றன.

அங்கு ஒரு புரட்டல் நேர்வதை நாம் பலரும் கவனிக்கிறோம், ஆனால் நிஜமாகப் புரிந்து கொள்வதில்லை.

தனிநபர் உரையாடல்களால் உருவாகும் சமூக நிகழ்வுகள், பழக்கங்கள், தேர்வுகள் ஆகியனவற்றைப் பற்றியதாகப் பொது அரங்க நிகழ்வுகள் இருப்பது சமூகத்துக்குத் தன் முகத் தரிசன வாய்ப்பாக இருக்கலாம். மாறாக, சமூக உரையாடல்கள் பொது அரங்க நிகழ்வுகளையே தமக்கு வழிகாட்டியாகக் கருதத் துவங்குகையில் தனி மனிதர், தம் ஆளுமையை இழக்கிறார்கள். இந்த ஊடகங்கள் நவீன மயமாதலின் கருவிகள். உறுப்பினராக இயங்கும் மனிதரை உருவிழந்த உதிரிகளாக்குவது இவற்றின் ‘சாதனை’.

இப்படித்தான் நவீனத்தின் தாக்கம், அன்றாடப் பரிமாற்றங்கள் வழியே வாழ்வனுபவங்களின் தொகுப்பும், மாறுபட்ட பார்வையுள்ளவர்களின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பும் ஆங்காங்கே உள்ள மனிதரிடையே அவர் தேவைக்கேற்ற வழிகளில் நடப்பதை நிறுத்துகிறது. தம் வாழ்வின் தேவைகளைத் தாமே எடை போட்டு முடிவுக்கு வரும் தன்னாளுமையை இழக்கும் மனிதர், தொடர்ந்து திரளில் பொருந்தி, அனேக நேரம் செயலற்ற பார்வையாளராகி விடுகிறார். திரளில் உறுப்பினர்களின் பாரம்பரியத்தை வேரறுப்பது ஒப்பீட்டில் எளிது.

நவீனம் என்றால், முந்தையதை அழிப்பதாகவும், பாரம்பரியத்தோடு சமூகத்துக்கு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் அறுப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதோடு, பழமை என்பது மாறுதலை ஏற்காமல், புதிய எதையும் அழிக்கத் துடிப்பதுதான் என்றும், கடந்த காலத்தின் இயல்பான ஓட்டத்தைப் பொய்யாகச் சித்திரிப்பதன் மூலம் அந்த அழிப்பை நியாயப்படுத்தவும் வேண்டும் என்பதும் மேற்கத்திய அணுகல்.

தம் விருப்பத்துக்குச் சமூகம் இணங்காவிடில் சமூகத்தையே கொளுத்தி, வேரோடு அழிக்கலாம் என்ற அணுகலே முரணைத் தீர்க்கும் வழி என்பது செமிதிய/ யூரோப்பியக் கருத்தியல். 60களில், இவற்றை இறக்குமதி செய்வதுதான் தரமான கல்வி என்ற கற்பிதம் தமிழ்நாட்டில் வேரூன்றத் துவங்கியது. அன்றாட வாழ்வில் இத்தனை ஆண்டுப் பிரசாரங்களுக்குப் பிறகும் செல்வாக்குப் பெறாத இது, கருத்தியல் உலகில் கோலோச்சத் துவங்கி 60-70 வருடங்களாவது ஆகி இருக்கும்.

இப்படி ஊறி இருக்கும் ஒரு கருத்தியலை, வெ.சா. துவக்கத்திலிருந்து எதிர்த்திருக்கிறார். முரண் என்பது இந்தியப் பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தில் சகஜமாக நேர்வது, மாற்றம் வேண்டும் நோக்கு. இதை மாற்றுக்கான அவசியத்தை வலியுறுத்தல் என்றும், உரையாடல் மூலமும், இணை இயக்கங்கள் மூலமும் பாதை மாறிப் பயணிப்பதைக் கோரும் முயற்சி என்றும் நாம் அறிய முடியும். வேரோடு பொசுக்குவது என்பது தேவை இல்லாத இந்த நோக்குதான் வெங்கட் சாமிநாதனின் மொத்த அணுகலையும் வழி நடத்தியது என்று நான் கருதுகிறேன்.

***

வெங்கட் சாமிநாதனுக்கு அரசியலை இலக்கியத்தில் பேசுவது என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் இலக்கியத்தை அரசியலாக்குவது பிரச்சினை. இலக்கியம் என்பதில் மட்டுமல்ல, இதர கலைகளிலும் அப்படியே அவர் பார்வை இருந்தது. அவருடைய பார்வையில், மரபு என்பதோ, பாரம்பரியம் என்பதோ, பண்பாடு என்பதோ அழித்து ஒழித்துப் பின் மறுபடி புதிதாக களிமண்ணைக் குழைத்து அச்சு வார்த்துக் கட்டப்பட வேண்டியவை அல்ல. சக்கரத்தை மறுபடி மறுபடி கண்டுபிடிப்பதைப் போல ஓர் அறிவிலித்தனம் ஏதும் இல்லை. இதை அவர் பல பத்தாண்டுகள் சொன்னார் என்பது என் புரிதல். கேட்கத் தயாரில்லாதவர்கள் கொணர்ந்த பண்பாடு ‘பாலை’யாக இருந்தது என்பது அவர் வருணனை.

அவர் ஒரு பல்கலைவளாகத்து அறிவாளர் அல்ல. எந்தத் துறையிலும் முறையாகப் பயின்று அந்தக் கடிவாளங்களின்படிச் செலுத்தப்படாதவர் என்பதால், சுயமாகக் கற்றவர்களுக்கே உரிய சிதறலான அணுகலோடு இந்தப் பிரச்சினையை அணுகி இருக்கிறார். அதனாலோ, அல்லது தெரிந்தே தான் வகுத்துக்கொண்ட ஒரு வழிமுறையாலோ, வெங்கட் சாமிநாதனின் விமர்சன இயக்கத்துக்கு ஒற்றை முகம் இல்லை. ஒற்றைக் கருத்தியல் இல்லை. கோட்பாட்டு வழியே சென்று கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அவர் பார்க்கவும் இல்லை. ஆக, இந்த அணுகலில் மேலாளர்கள் கிடையாது. உள்வட்டம் பற்றிப் பேசியவர் அதை உருவாக்க முயலாதது , இந்த வட்டம் தன்னியல்பாக எழுந்து, மாறி வரும் என்று அவர் கருதியதை நமக்குச் சுட்டுகிறது.

இந்த எதிர்பார்ப்பு நம்மை நாமே மதிக்கக் கோருவது. நம்மிடம் போதுமான அளவு திறனும் ஆழமும் உண்டு என்பதை அடிப்படை அறிதலாகக் கொண்டு இயங்கச் சொல்வது. அண்மைப் பண்பாடுகளோடு ஆழ்ந்த பரிச்சயம் பெற வேண்டும் என்று கேட்பது. திரளாக ஒடிந்து அமராமல், ஊக்கமுள்ள சமூக உறுப்பினராக, படைப்புத் திறனோடு வாழ நம்மைக் கோருவது. உன்னதம் யாருக்கும் சாத்தியம், அதற்கான உழைப்பும், பிடிவாதமும், சீர்மையும் தேவை என்றும் சலியாமல் பறை சாற்றுவது.

இதை ஒரு குறையாக, இன்று அரசியல்தான் இலக்கியம் என்று நினைத்து இயங்கும் கூட்டம் தொடர்ந்து முன்வைக்கிறது. அவர்கள் வெங்கட் சாமிநாதனின் இயக்கத்தையோ, அதன் உள்ளீட்டையோ புரிந்துகொள்ள முடியாததற்குக் காரணமே அவர்கள் அணிந்திருக்கும் அந்த ஒற்றைக் கோட்பாட்டுக் கண்பட்டிதான். அது முற்றிலும் யூரோப்பியமும், செமிதியமும் விட்டுச் சென்ற கண்பட்டி.இவர்களுக்குப் பலபண்பாட்டியத்தைத் தன்னியல்பாகக் கொண்டு இயங்கிய வெங்கட் சாமிநாதன் போன்றாரின் தன்மையோ, நன்மையோ புலப்பட்டிருந்தால்தான் நான் வியந்திருப்பேன்.

[1] நேற்று இஸ்ரேலில் வசிப்பவரோடு நடந்த ஓர் உரையாடல் பற்றிக் கேட்டேன். மறுபுறம் இருந்த நபர், ஒரு யூதர். இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்குச் சில பத்தாண்டுகள் முன்னர் குடி பெயர்ந்தவராம், ‘இந்தியாவில் நான் யூதன், இஸ்ரேலில் நான் ஒரு இந்தியன்’ என்று சொல்லிச் சிரித்தாராம். அவரிடம் பேசியவர் தெரிவித்தார்.

-oOo-

Leave a Reply