Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – கனவைச் சுமந்தலைபவர்கள்

கனவைச் சுமந்தலைபவர்கள் – சேதுபதி அருணாசலம்

ஃபின்லாந்தின் வடபகுதியில் ஆர்க்ட்டிக் சர்க்கிளுக்கு அருகே இருக்கும் ‘கெமி’ (Kemi) என்ற ஒரு சுற்றுலா நகருக்கு ஒரு புத்தாண்டு தினத்தன்று நண்பர்களோடு சென்றிருந்தோம். அங்கே சென்று சேர்ந்தபோது எங்கே பார்த்தாலும் பனிப்பொழிவின் சாம்பல் கலந்த வெள்ளை நிறம். எங்கும் பனிபொழிந்து மூடிக்கிடந்தது. அது குளிர்காலத்தின் உச்சம். வெளியே -15 டிகிரி செல்ஸியஸ். அந்த ஊர் குளிர்கால விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்றது. பனிபொழிந்த காடுகளில் ‘ஸ்நோமொபில்’ என்ற பைக்கை ஓட்டுவது, பனிச்சறுக்கு விளையாட்டு இவற்றுக்காகத்தான் அங்கே சென்றிருந்தோம். தீவிரமான சுற்றுலாக் காலமாதலால் ஊருக்குள் தங்கும் இடம் கிடைக்கவில்லை. பத்து கிலோமீட்டர் வெளியே ஒரு காட்டேஜ் கிடைத்தது. அதற்குள்ளேயே உணவகமும் இருந்தது.அந்த காட்டேஜைச் சுற்றிலும் பனிப்பொழிவுதான். கண்ணுக்கெட்டியவரை வேறு ஏதும் கட்டடங்கள் இல்லை. அத்துவானத்தில் நின்றிருந்தது அந்த காட்டேஜ். கணவன் – மனைவி இருவர் சேர்ந்து அதை நடத்துகிறார்கள். கணவருக்கு 60 வயதிருக்கும். மனைவி ஆசிய சாயலில் இருந்தார். அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

கணவர் குளிர்கால உடைகளை அணிந்திருந்தாலும், எங்களைப் போல நிலவுக்குச் செல்லும் உடையில் இல்லாமல், மெல்லிய உடைகளில்தான் இருந்தார்.

“நீங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்ததால் உங்களுக்கு இந்தப் பனிப்பொழிவு சகஜமாக இருக்கும். என்னால் ஒருநிமிடம் கூட இந்தக் கையுறையைக் கழற்றிவிட்டு இருக்கமுடியவில்லை” என்றேன் அவரிடம்.

“இந்த ஊரை விடுங்கள், நான் இந்த நாட்டுக்காரனே கிடையாது” என்றார்.

“ஓ… இதைப் போலவே வேறேதாவது குளிர்பிரதேசமா?”

“இல்லை. நெதர்லாந்து”

“பிறகெப்படி இங்கே?”

“பெரிய கதை. நான் ஒரு நல்ல சமையல்காரன். நம்புங்கள். இரவுணவைச் சாப்பிட்டால் உங்களுக்கே தெரியும். எனக்கு ஊர் சுற்றுவதில் தீராத விருப்பம். என் சமையல் ஒருவருக்கு வெகுவாகப் பிடித்துப்போக, அங்கிருந்து என்னை லண்டனுக்கு ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்யக் கூட்டிப் போனார். அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குப் போனேன். ஜப்பானில் நான் வேலை செய்த உணவகத்தில்தான் இவளும் வேலை செய்துகொண்டிருந்தாள். அங்கிருந்து இருவரும் இங்கே பத்து வருடம் முன்பு வந்து சேர்ந்தோம். சொந்தமாக இந்த ஹோட்டலை நடத்துகிறோம்” என்றார்.

எனக்குப் பெரிய ஆச்சரியம். உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வசித்த ஒருவர், வருடத்தில் எட்டு மாதம் குளிரடிக்கும், ஆர்க்டிக் சர்க்கிள் அருகே எப்படி ஹோட்டல் தொடங்கினார்! அடக்கமுடியாமல் கேட்டும் விட்டேன்.

“வெளிப்படையாகச் சொல்லப் போனால், இந்த ஊருக்கு என் வழக்கப்படி கொஞ்சகாலம் தங்கலாம் என்றுதான் வந்தேன். சொந்தமாக ஃஹோட்டல் ஆரம்பிப்பது என் பல வருடக் கனவு. அந்தக் கனவு இந்த ஊரில் நிறைவேறியது. அப்படியே குடும்பத்தோடு தங்கிவிட்டோம். சந்தோஷமாக இருக்கிறோம்” என்றார்.

பிறந்த ஊரை விட்டு இப்படியொரு வேற்றுநாட்டில் அவர் கனவு நிறைவேறி நிலையாக வேர்கொண்டிருக்கும்போது கிட்டத்தட்ட அவர் ஐம்பது வயதை நெருங்கியிருப்பார். எனக்கு பிரமிப்பாக இருந்தது.

***

இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிபூதிபூஷண் பந்தோபத்யாயயின் ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோது ‘கெமி’யில் ஹோட்டல் நடத்தும் அந்த நெதர்லாந்துக்காரரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

அந்த நாவல் ஹாஜாரி என்றொரு தலைசிறந்த சமையல்காரரின் கதையைச் சொல்கிறது. அவர் கனவைச் சொல்கிறது. அவர் கனவெல்லாம் ராணாகட் என்ற சிறுநகரில் சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்குவதுதான். ஆனால் அவர் ஒரு பரம ஏழை. தான் செய்து கொண்டிருக்கும் சமையல் வேலை பறிபோனால் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அஞ்சி நடுங்குபவர். வயதும் நாற்பத்தைந்து ஆகிவிட்டது. கதை நடப்பதாகச் சொல்லப்படும் 1940களில், அந்த வயது பேரன் பேத்தி எடுத்து வானப்ரஸ்தம் போகும் வயது. ஆனாலும் சொந்தமாக ஹோட்டல் நடத்தும் ரகசிய ஆசையைப் பல வருடங்களாக அவர் சுமந்தலைகிறார்.

அவர் சமைத்த சாப்பாட்டை ஒரே ஒரு கவளம் சாப்பிட்டவர்களுக்குக் கூட அவர் சமையல்கலையில் ஒரு மேதை என்று புரியும். ராணாகட்டில் ‘பேச்சு சக்ரவர்த்தி’ என்பவர் நடத்தும் ஒரு ஹோட்டலில் அவர் சமையல்காரனாக வேலை செய்கிறார். கெட்டுப்போன பொருட்கள், மலிவான கலப்பட உணவுப்பொருட்களில் சமைப்பது, முந்தையநாள் உணவை அடுத்தநாள் உணவோடு கலந்து பரிமாறுவது, வாடிக்கையாளர்களிடம் அவர்கள் செல்லவேண்டிய ரயில் வந்துவிட்டது என்று பொய் சொல்லி அவர்களைப் பாதிச்சாப்பாட்டில் கிளப்பிவிடுவது என அந்த ஹோட்டலில் ஏகப்பட்ட முறைகேடுகள். இதெல்லாம் ஹாஜாரிக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. பல சமயங்களில் இந்த முறைகேடுகளுக்கு உடன்பட மறுக்கிறார் ஹாஜாரி. ஹாஜாரியின் இந்த நேர்மை முதலாளிக்கும், முதலாளியைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் வேலைக்காரி பத்மாவுக்கும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதனாலேயே ஹாஜாரியை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மிகக்குறைந்த சம்பளம். பல்வேறு காரணங்களுக்காக அபராதம் என்ற பேரில் அதிலும் பாதியைப் பிடுங்கிக் கொண்டு பாதியைத்தான் தருகிறார்கள்.

சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்கவேண்டும் என்ற கனவு ஹாஜாரிக்கு இருக்கிறது. இந்தக் கனவை நிறைவேற்றத் தேவைப்படும் பணத்தை, தன் பூர்வீக கிராமத்தின் ஜமீன்தாரிடம் கடனாகக் கேட்கிறார். ஹாஜாரியின் கனவே அவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்றும், கனவே இல்லாத மனிதன் பிணத்துக்குச் சமம் என்று ஜமீன்தார் சொல்கிறார். சொந்தமாக ஹோட்டல் தொடங்கும் கனவுதான் ஹாஜாரியை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. தினந்தோறும் வேலை முடிந்ததும், சூர்ணி நதிக்கரையிலிருக்கும் வேப்பமர நிழலில் நின்று, தான் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் ஆரம்பிக்கப்போகும் ஹோட்டலைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதுமே அவருடைய கவலையெல்லாம் பறந்து போய்விடுகிறது. ஒரு ஹோட்டல் நடத்துவதற்கான அத்தனை சூத்திரங்களையும் அனுபவத்தின் மூலம் கற்றுத் தேர்ந்திருக்கிறார் ஹாஜாரி. ஹோட்டலில் எப்படி வாடிக்கையாளர்களை உபசரிக்கவேண்டும், காய்கறிகளை எங்கிருந்து வாங்கிவர வேண்டும், வேலையாட்களை எப்படி நடத்தவேண்டும் இதையெல்லாம் யோசித்தபடி மனக்கோட்டை கட்டிக்கொண்டு தியான மனநிலையில் இருப்பார் ஹாஜாரி.

1940ல் இந்த நாவலை பிபூதிபூஷண் ஒரு பத்திரிகையில் தொடராக வெளியிட்டபோது ஏற்கெனவே அவர் ‘பதேர் பஞ்சாலி’ மூலம் வங்காளத்தில் புகழ்பெற்றிருந்தார். ‘பதேர் பாஞ்சாலி’ நாவலுக்கு ரபீந்த்ரநாத் தாகூர் உட்பட பல வங்க எழுத்தாளர்களும் கவனம் தேடிக் கொடுத்தார்கள். அந்த நாவலையடுத்து அபராஜிதோ, ஆரண்யகம் ஆகிய நாவல்களுக்குப் பின் பிபூதிபூஷண் எழுதியதுதான் ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்.’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பு பெற்று, உடனடியாகப் புத்தக வடிவமும் பெற்றது.

இந்த நாவலின் மிக முக்கியமான ஒரு அம்சம், ஹாஜாரிக்கு உதவ வரும் சாமானியமான குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுடனும், செல்வந்தரான ஜமீன்தாரின் மகளுடனும் ஹாஜாரிக்கும் இருக்கும் உறவு. ரத்த சம்பந்தம் இல்லாத இந்த மூன்று பெண்களையும் ஹாஜாரி, மகள்களாகவே கருதுகிறார். அவர்களும் இவரை தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். ஹாஜாரிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இந்திய இலக்கியத்தில் பிபூதிபூஷண் அளவுக்கு அப்பா-மகள் உறவை எழுதியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். ‘பதேர் பஞ்சாலி’யில் ஹரிஹர் ராய்க்கும் துர்க்காவுக்குமான உறவு அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கும். வேலைக்காரி பத்மா, இந்தப் பெண்களில் ஒருத்தியை ஹாஜாரியோடு தகாத விதத்தில் தொடர்புபடுத்திப் பேசும்போதெல்லாம் கூசிப்போகிறார் அவர்.

ஒருநாள் இரவு ஹோட்டலில் இருக்கும் பாத்திரங்கள் திருடு போய்விடுகின்றன. ஹாஜாரிதான் அவற்றைத் திருடிவிட்டார் என்று போலிஸில் புகார் செய்து, லாக்கப்பில் வைத்து நாலைந்து நாள் அடித்துத் துவைக்கிறார்கள். பிறகு குற்றத்தை நிரூபிக்கமுடியாமல் விட்டுவிடுகிறார்கள். லாக்கப்பில் கிடந்த ஹாஜாரி ஹோட்டலுக்கு வருகிறார். கொலைப்பசி வேறு. இங்கே எதற்கு வந்தாய் என்று முதலாளியும், பத்மாவும் திட்டுகிறார்கள். ‘ரெண்டு மாச சம்பள பாக்கியையாவது கொடுங்கள்’ என்று கெஞ்சுகிறார். அதுவும் தரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். ‘நான் ரயிலேறி ஊருக்கு எப்படிப் போய்ச்சேர்வேன்’ என்று கதறும் ஹாஜாரியின் முகத்தில் நாலணாவை விட்டெறிகிறார் முதலாளி. அதை நமஸ்கரித்து வாங்கிக்கொள்கிறார். பசியோடு படியிறங்கிப் போகும் ஹாஜாரியைக் கூப்பிட்டு சாப்பிட்டுப் போகச் சொல்லி, இரண்டு ரூபாயும் கொடுக்கிறாள் பத்மா. மகிழ்ச்சியோடு சாப்பிட்டு, காசையும் வாங்கிக்கொண்டு ‘எவ்வளவு நல்லவள் இந்த பத்மா’ என்று நினைக்கிறார் ஹாஜாரி!

இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு, ஜமீன்தாரின் மகள் அப்பாவுக்குத் தெரியாமல் வற்புறுத்தித்தந்த பணத்தைக் கொண்டு ராணாகட்டில் தான் கனவு கண்டு கொண்டிருந்த அந்த ஆதர்ஸ ஹோட்டலை ஆரம்பிக்கிறார் ஹாஜாரி. அந்த ஹோட்டலின் வரவு ராணாகட்டிலிருந்த மற்ற அத்தனை ஹோட்டல்களையும் காலி செய்துவிடுகிறது. இவரை அவமானப்படுத்திய ஹோட்டல் கடனில் மூழ்கி, ஹோட்டலை மூடியே விடுகிறார்கள். ஹாஜாரி மேலும் மேலும் உயர்ந்துகொண்டிருக்கிறார்.

ராணாகட் ரயில் நிலையத்தின் உணவகத்தின் ஒப்பந்தம் பல போட்டிகளையும் மீறி ஹாஜாரிக்கே கிடைக்கிறது. இவருடைய சமையல் திறனைக் கேள்விப்பட்டு, இந்திய ரயில்வேக்கு உணவு வழங்க ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரியாக இவரை இருக்கச் சொல்லி, அவர்களே நேரில் வந்து அழைத்துப் போகிறார்கள். இத்தனை உயரத்துக்குப் போகும்போதும், ஹாஜாரி அகங்காரியாவதில்லை. அதே சூர்ணி நதிக்கரையில், அதே வேப்பமர நிழலில் நின்று, தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம் நிஜம்தானா என்று வியந்து போகிறார்.

ஹாஜாரி, நிஜமாக அதே பெயரில் இருந்த ஓர் ஆளுமை என்று பிபூதிபூஷணின் டைரிக்குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது. அவரைத் தன் இளமைக்காலத்தில் சந்தித்து உரையாடியதை டைரிக்குறிப்புகளில் எழுதியிருக்கிறார். பிபூதிபூஷண், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இருக்கும் எளிய மனிதர்களைச் சந்தித்து உரையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருந்திருக்கிறார். அதற்காகவே கால்நடையாக வங்கதேசத்தைச் சுற்றியும் வந்திருக்கிறார்.

பிபூதிபூஷணின் பிரபலமான பிற நாவல்களான ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஆரண்யகம்’ இவற்றை ஒப்பிடும்போது ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ ஒரு எளிமையான நாவல். பிற நாவல்களை விட இயற்கை வர்ணனைகளும், அவலச்சுவையும் மிகவும் குறைவு. ‘வீழ்ந்தவன் வெல்வான்’ என்ற வகையிலான நேரடியான கதை. ஆனால் கதையின் உள்ளடுக்குகள், சிறு உணவகங்கள் செயல்படும் விதம் குறித்த நுண்ணிய சித்தரிப்புகள், அந்தக்கால இந்திய வறுமையையும், வாழ்க்கைமுறையையும் காட்டும் யதார்த்தமான சித்தரிப்புகளின் மூலம் இது மிக முக்கியமான படைப்பாக ஆகிறது. “பிபூதிபூஷண் அளவுக்கு சிறு உணவகங்களை நன்றாக அறிந்த எழுத்தாளர் வேறொருவர் இல்லை. அது முழுமையாக வெளிப்பட்டது ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ நாவலில்” என்று எழுதுகிறார் வங்க எழுத்தாளர் சதீஷ் ராய்.

இந்த நாவலில் ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ என்ற கருத்தின் மூலம் பிபூதிபூஷண் முன்வைப்பது ஹாஜாரி என்ற ஆதர்ஸ மனிதரையும்தான். ஹாஜாரி, எந்த சூழ்நிலையிலும் தன் தன்மானத்தை அடகுவைப்பதில்லை, வேறொருவருக்கு விலை போவதில்லை. அவருக்குத் தன் கலை மீது அசாத்திய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் அவருக்குத் தன் கனவு ஹோட்டலுக்கான உத்வேகத்தைத் தருகிறது. அந்த நம்பிக்கைதான் எந்தச் சூழ்நிலையிலும் அவரை நேர்மையாளராக வைத்திருக்கிறது. அந்த நேர்மை காரணமாகத்தான் ஹாஜாரி, லாபத்துக்காக ஒருபோதும் மலினமான, கலப்பட உணவைத் தன் ஹோட்டலில் விற்பதில்லை.

பிபூதிபூஷண் பந்தோபத்யாய திலீப் குமார் ராய்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “எனக்குப் பெரிய சம்பவங்களில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கையும், ஆனந்தமும் நுரைத்துக்கொண்டு, மெல்ல, பதறாமல் செல்லும் ஒரு காட்டருவி போன்ற தினப்படி வாழ்க்கையில், இலகுவான சுகதுக்கங்களைக் கண்டெடுப்பதுதான் முக்கியம். செயற்கைத்தனமான கதையம்சங்களைக் கட்டி உருவாக்கப்படும் எழுத்தை என்னால் எழுதமுடியாது. எதற்காக ஒரு நாவலை இத்தனை செயற்கையாக்க வேண்டும்? செயற்கைத்தனங்களோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. புறப்பூச்சில் மயங்காத உண்மையான தேடல் கொண்ட மனங்களை இந்த செயற்கைத்தனங்கள் ஒருபோதும் திருப்தி செய்யாது” என்கிறார்.

***

புத்தக வடிவமைப்பாளராக இருந்த சத்யஜித்ராய் 1944-இல் பிபூதிபூஷணின் ‘பாதேர் பாஞ்சாலி’நாவலின் ஒரு வடிவத்துக்கு அட்டை வடிவமைப்பு செய்ய நேர்ந்தது. அப்போது அப்புத்தகம் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட, அதைத் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் அவர் மனதில் துளிர்விட்டது. அதன்பின் பல்வேறு போராட்டங்கள், முயற்சிகளுக்கிடையே அத்திரைப்படத்தை எடுத்தார் சத்யஜித்ராய். அப்போது அவருக்குப் பெரிதாகத் திரைப்பட அனுபவம் இருந்திருக்கவில்லை. அவருடைய குழு முழுவதுமே பெரும்பாலும் புதியவர்களால் நிரம்பியிருந்தது. திரைப்படமும் அதுவரை இல்லாதவகையில் முற்றிலும் யதார்த்தமாக, நடிகர்களல்லாத சாதாரண ஆட்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. நடுவில் பல முறை பணப்பற்றாக்குறையால் திரையாக்கம் தடைப்பட்டது.

தொடர்ந்து படப்பதிவு நடத்த, சத்யஜித்ராய் தன்னுடைய காப்புரிமைப் பத்திரங்கள், அரிய கிராமஃபோன் ரெக்கார்டுகள், மனைவியின் நகைகளையெல்லாம் விற்க நேர்ந்தது. அப்படியும் பணம் போதாமல் படப்பதிவு முற்றிலுமாகக் கைவிடப்பட்டது. கல்கத்தா வந்திருந்த நியூயார்க் அருங்காட்சியகத்தின் தலைவர் இத்திரைப்பட முயற்சியைக் கேள்விப்பட்டு, அதுவரை எடுக்கப்பட்ட படக்காட்சிகளைப் பார்த்தார். அத்திரைப்படம் ஒரு மிக அரிய முயற்சி என்பதை உணர்ந்துகொண்ட அவருடைய தலையீட்டால், நியூயார்க் அருங்காட்சியகம் மேற்கொண்டு பண உதவி செய்தது. சத்யஜித்ராய் படத்தை எடுத்து முடித்தார். அத்திரைப்படம் வெளியாகி இன்றுவரை உலகெங்கும் பெரிதும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. இத்திரைப்படம் சத்யஜித்ராயை மட்டுமல்லாமல், பிபூதிபூஷணையும் உலக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததது. அவர் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. 1944-இல் சத்யஜித்ராய்க்குள் விழுந்த ஒரு சிறு பொறி, 1955-இல் திரைப்படமாக வெளியாகியது. அவருடைய கனவு மெய்ப்பட 11 வருடங்கள் ஆனது.

***

‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ நாவல் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் ‘லட்சிய ஹிந்து ஹோட்டல்’ என்ற பெயரில் சாகித்ய அகாடமி வெளியீடாக வந்தது. இப்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. நான் மலையாள மொழிபெயர்ப்பில், டெய்லிஹண்ட் செயலி மூலம் படித்தேன்.

-oOo-

Leave a Reply