காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
அது 1872ம் ஆண்டு. இன்று காந்தி என நாம் அறியும் மோகன் தாஸுக்கு வயது 3. அதே ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய சுயராஜ்ஜியத்தின் உயரதிகாரி ராபர்ட் நைஸ் எழுதினார்:
நம்முடைய அறுதியான நம்பிக்கை என்னவென்றால் இந்தியா தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணமான தன்னுடைய பொய்யான மதத்தை இழந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அதற்கு நாம் சுயராஜ்ஜியத்தை அளிக்க முடியாது.
ஒருவிதத்தில் காந்தியின் விடுதலை உணர்வு அவரது சமய உணர்விலிருந்துதான் தொடங்கியது எனலாம். 1857 விடுதலைப் போராட்டமே சமய உணர்வின் பொறி பற்றித்தான் எரிய ஆரம்பித்தது. இங்கிலாந்தில் காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் கிறிஸ்தவராக மதம் மாற பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார். அவர் அன்னை அவருக்கு அளித்த வைணவ மாலை ஒன்றை அவர் கழற்றிவிட வேண்டும் என்றும் ஒரு பண்பட்ட மனிதனுக்கு அத்தகைய மூடநம்பிக்கை அழகல்ல என்றும் ஒரு மிஷினரி கூறியபோது அவர் பெரும் மனவருத்தம் அடைந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஹிந்து தர்மத்தில் வேரூன்றி நிற்கப் பெரும் வலிமை அளித்தவர் ராஜ்சந்திரா என்கிற இளைஞர். சமண சமயத்தைச் சார்ந்த இவர் காந்தியிடம் சனாதன தர்மத்தின் பெருமையை விளக்கினார். பின்னாட்களின் காந்தியின் வாழ்க்கை ராஜ்சந்திராவின் வாழ்க்கையையே பிரதி எடுத்தது என்றுகூடச் சொல்லலாம். 1900ல் தம் இளவயதில் ராஜ்சந்திரா இறந்துவிட்டார்.
உண்மை என்பது ஒற்றைத்தன்மை கொண்டது என்பதே, அன்றைய ஐரோப்பிய காலனியத்தின் அடிநாதமாக விளங்கிய கிறிஸ்தவத்தின் ஆதாரப் பார்வை. ஆனால் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் ஹிந்து சமயத்தில் உண்மை முடிவிலிப் பரிமாணங்கள் கொண்டது. இந்த அடிப்படை வேறுபாட்டை காந்தி உணர்ந்துகொண்டார். ஆனால் இது வெறும் தத்துவமாக மட்டும் உணரப்படாமல், ஒவ்வொரு வாழ்க்கை வெளிப்பாட்டிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் ராஜ்சந்திராவிடமே கண்டறிந்தார். பிரிட்டனில் இளைஞனாக இருக்கும்போது கிறிஸ்தவ மிஷினரிகள் “நீ ஏன் இன்னும் ஹிந்துவாக இருக்கிறாய்?” எனக் கேட்டதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பெரும் மன வருத்தத்துக்கு உள்ளான காந்தி பின்னாட்களில் எழுதினார்:
ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். சித்தாந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து ஹிந்து தர்மம் தரும் சுதந்திரம், சுய வெளிப்பாட்டுக்கான மிகப்பெரிய வெளியை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமமானதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான். ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
சூழலியல் (Ecology) சிந்தனை வட்டங்களில் இன்றைக்கு காந்தியக் கருத்துகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. பல சூழலியல் சிந்தனைகளின் முன்னோடித்தன்மையை காந்தியில் காணலாம். இதற்கு ஒரு முக்கியக் காரணம், உண்மையின் பன்மைத்தன்மை குறித்த காந்தியின் அறிதலாகும்.
இந்த அறிதல் அவருக்கு அன்றைய ஐரோப்பிய அறிதலில் கோலோச்சிய நியூட்டானிய ஒற்றைத்தன்மைக்கும் இந்திய அறிதல் முறைகளின் பன்மைத்தன்மைக்குமான முரண் குறித்த அடிப்படைப் புரிதலிலிருந்தே கிடைத்தது. ஹிந்து சிந்தனையை – ஒற்றைத்தன்மையற்ற பார்வையை – அவர் மானுடத்தின் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால், பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் அறத்தை மட்டுமே நம்பிப் போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை. இந்த விதத்தில் இன்றைய சமுதாயத்துக்கு அவை இன்றியமையாதவை.
சூழலியல் சிந்தனைக்கான காந்தியப் பங்களிப்பைக் குறித்துப் பேசும் எவரும் அவரது நகர்ப்புற நாகரிகத்துக்கான எதிர்ப்பு மற்றும் இயந்திரங்களுக்கான எதிர்ப்பு ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுவார்கள். மேற்கத்திய சூழலில் தொழில்புரட்சியின் காலகட்டத்தில் ஏற்பட்ட இயந்திர வெறுப்பு ஒரு எதிர்வினை, அது பழமை நோக்கிச் செல்லும் ஏக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காந்தியின் காலனிய இயந்திரங்களின் எதிர்ப்பு வேறுவிதமானது. அது ஒருவிதத்தில் எதிர்கால அறிவியலை எதிர்நோக்குவது.
1904களில் தென்னாப்பிரிக்காவில் டர்பனின் அருகே காந்தி அமைத்த ஆசிரமம் இதற்கான தொடக்கப்புள்ளியாகக் கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் காந்தி டால்ஸ்டாயின் போதனைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்ததைக் காணமுடியும். ஆனால் காந்தி இந்தியப் பாரம்பரிய ஆன்மிக மரபை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றுவதற்குச் செய்த முயற்சியின் வெளிப்பாடே அவரது டால்ஸ்டாய் பண்ணை. இந்தியா வந்து அவர் மேற்கொண்ட பெரும் இந்தியப் பயணத்திலிருந்தே, அவரது சமுதாய-சூழலியக் கோட்பாடுகளின் பரிணாமத்தை நாம் முழுமையாகக் காணமுடியும். காந்தி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முன்னேற்றத்தையும் மறுக்கவில்லை என்பதையும் ஒரு பழமையான வாழ்க்கைக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்லவும் விரும்பவில்லை என்பதையும் நாம் அவரது சிந்தனையோட்டத்தில் காணமுடியும்.
காந்தி பாரம்பரியத்தின் வலிமைகளைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். மேற்கத்திய முன்னேற்றமே முன்னேற்றத்துக்கான ஒரே மாதிரி என்பதை அவர் மறுத்தார். பொருளாதார சுகாதார ஆன்மிக மேம்பாட்டை மாற்றுவழிகளில் அடைய முடியும் என்பதை அவர் திட்டவட்டமாக உரைத்தார். உதாரணமாக பசுப் பாதுகாப்புக் குறித்து அவர் பேசும்போது இந்தியாவெங்கும் மத நிறுவனங்களால் பாரம்பரியமாக நிர்வகிக்கப்படும் பசுக்களின் சரணாலயங்கள் (பசு மடங்கள்) கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்களாகவும் செயல்பட வேண்டும் எனக் கோரினார். இதன் மூலம் இந்தியாவின் பால் உற்பத்தியை அபரிமிதமாக அதிகரிக்க முடியுமென அவர் கருதினார், காந்திய சுதேசியின் ஒரு முக்கியக் கோட்பாடாக அவர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தினார். ராட்டை ஒரு குவித்தன்மையற்ற தொழில்நுட்பத்தின் குறியீடாக அமைந்தது. அந்த ராட்டையின் செயல்திறமையை மேம்படுத்தும் மாதிரிகளுக்கான போட்டிகள் அவரால் நடத்தப்பட்டன. மில் துணிகள் இந்த தேசத்தின் இயற்கை வளம், தொழிலாளர் நலம் ஆகியவற்றின் மீது செலுத்தப்பட்ட காலனிய ஆக்கிரமிப்பு என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது ராட்டை எத்தகைய ஒரு தொழில்நுட்ப எதிர்ப்புச் சின்னமாக விளங்கியது என்பது புரியும். சாண எரிவாயு, சூரிய ஒளி தொழில்நுட்பம் ஆகியவை காந்தியின் கனவுகளின் தொழில்நுட்ப வெளிப்பாடாகும்.
ஜேம்ஸ் லவ்லாக் அடிப்படையில் ஒரு இயற்பியலாளர். அவர் இன்று முக்கியமான சூழலியல் அறிதல் சட்டகம் ஒன்றை உருவாக்கியவராகக் கருதப்படுபவர். இந்த உலகின் புவியியல் மற்றும் உயிரியியல் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முழுமையாக அதி-உயிரித்தன்மையுடன் செயல்படுவதை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தார். இது Gaia (கயா – பழைய கிரேக்க பூமி தெய்வம்) என அழைக்கப்படுகிறது. இக்கருதுகோள் பலத்த சர்ச்சைக்குள்ளாயிற்று என்ற போதிலும் உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல அறிதல் சட்டகமாக இன்று விளங்குகிறது. இந்தக் கோட்பாட்டினை விளக்கும் அண்மை நூலில் லவ்லாக் இந்த புவி எனும் அதி-உயிரி இன்று எப்படி நோயடைந்திருக்கிறது என்பதையும் அந்த நோய்க்குக் காரணம் மானுடத்தின் பொறுப்பற்றச் செயல்பாடுகள் என்பதையும் இதனால் பல இயற்கைப் பேரிடர்கள் மானுடத்துக்கு ஏற்படும் என்பதையும் விளக்குகிறார். இதற்கான தீர்வில் நாம் என்ன பங்களிக்க முடியும் எனும் கேள்விக்கு அவர் கூறுகிறார்:
நமது பங்கு நம் வாழ்க்கையின் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதே ஆகும். முழுக்க முழுக்க மானுட விஷயங்களில் அவ்வாறு வாழ்வது எப்படி என்பதை காந்தி நமக்குக் காட்டினார். நமது நவீன சூழலுக்கான காந்திய மாதிரிகள் ஆழ்-சூழலியல் (Deep Ecology) இயக்கத்திலிருந்து வரக்கூடும்.
இங்கிலாந்தின் முதன்மை வெகுஜன அறிவியல் இதழான நியூ சயிண்டிஸ்ட் ஜேம்ஸ் லவ்லாக்கின் கோட்பாட்டை காந்தியின் தத்துவங்களுடன் ஒப்பிட்டது. அரசியலில் காந்தி கண்டடைந்ததைப் போலவே ஜேம்ஸ் லவ்லாக்கும் சூழலியல் உண்மைகளைக் கண்டடைந்திருப்பதாக அப்பத்திரிகை எழுதியது.
ஜேம்ஸ் லவ்லாக் ஆழ்-சூழலியல் எனும் பதத்தைப் பயன்படுத்தியது ஒரு தற்செயலான விஷயமோ, போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போன ஒன்றோ அல்ல.
மேற்கத்திய அறிவியக்கச் சூழலில் சூழலியலுக்கான அடிப்படைத் தத்துவ தளத்தின் தேவை ஒன்று அதிகமாகவே உள்ளது. நார்வேஜிய தத்துவவியலாளர் அர்னே நயீஸ் (Arne Naess) என்பவர் ஆழ்-சூழலியல் (Deep ecology) எனும் பதத்தை உருவாக்கினார். இதற்கான ஆதார மதிப்பீடுகளைப் பொருத்தவரையில் அவர் காந்தியை முன்னோடி சிந்தனையாளராக முன்வைக்கிறார். அத்துடன் காந்தியின் இப்பார்வைக்கு அவரது அத்வைத வேதாந்தம் அடிப்படையாக அமைவதாகக் கூறுகிறார்.
இங்கு வருத்தமளிக்கும் சுவாரசியம் ஒன்றைக் கூறியே ஆகவேண்டும். மேற்கத்திய உலகம் காலனியத்துக்குப் பிறகு ஒரு காந்தியைக் கட்டமைக்க விழைந்தது. டாமினிக் லாப்பயரும் லாரி காலின்ஸும் எழுதிய புகழ்பெற்ற ‘நள்ளிரவில் சுதந்திரம்’ நூலில், தன்னைச் சுற்றியிருக்கும் இந்தியர்களால் புரியப்படாத, ஆனால் ஐரோப்பிய மனதால் புரிந்து கொள்ள முடிந்த ஒரு மகத்தான ஆளுமையாக காந்தியை முன்வைத்தார். அடுத்து, மேற்கில் காந்தி குறித்த சித்திரத்தை உருவாக்கியதில் முக்கியமானவர் ரிச்சர்ட் அட்டன்பரோ. இதுவும் நேர்மறையான சித்திரமே. கணிசமாக வரலாற்று நேர்மையுடன் காட்டப்பட்டிருந்தாலும், அதில் காந்தியின் சில முக்கிய இந்தியத் தன்மைகள் முடிந்தவரை மழுங்கடிக்கப்பட்டே காட்டப்பட்டன. உதாரணமாக கோட்சேயால் சுடப்பட்டதும் அட்டன்பரோவின் காந்தி ‘Oh God’ என்கிறார். ஹே ராமுக்கும் ஓ காட் என்பதற்கும் இடையே உள்ள பண்பாட்டு – ஆன்மிக வேறுபாடுகள் இல்லாமலாகின்றன. ஆனால் அதன் பிறகும் கூட ‘காந்தி’ திரைப்படம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. போலி-தலித்தியவாதியான காஞ்சா இலியா அமெரிக்காவின் பிரதான புரோட்டஸ்டண்ட் பத்திரிகையான ‘கிறிஸ்டியானிட்டி டுடே’க்கு கொடுத்த பேட்டியில் காந்தி திரைப்படமே அட்டன்பரோ உருவாக்கிய பொய்க் கதை என்கிறார்.
டாமினிக் லாப்பயர் முன்வைக்கும் காலனிய காந்தியச் சித்தரிப்பை, இன்னும் விரிவாக, வரலாற்றறிஞர் மோஸ்தரில் ராமச்சந்திர குஹாவும், அவரை அடியொற்றிப் பிரதி எடுப்போரும் செய்து வருகின்றனர். இவ்விதத்தில் ஆழ்-சூழலியலில் காந்திக்கோ காந்தி மூலமாக இந்து சமயத்துக்கோ எவ்விதப் பெருமையையும் குஹா கொடுக்க விரும்பவில்லை. எனவே இரு காரணங்களைச் சொல்கிறார். ஒன்று, இந்த ஆழ்-சூழலியல் என்பதே இந்தியச் சூழலுக்கு ஒத்துவராத அன்னியமான விஷயம். இரண்டு, காந்தியின் சூழலியல் பார்வைக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்கும், ஏன் கீழை நாட்டு ஆன்மிகக் கோட்பாடுகளுக்குமே முடிச்சு போடுவது சரியில்ல என்கிறார் குஹா.
எனவே குஹாவின் பார்வையில் ஆழ்-சூழலியல் செய்யும் தவறு என்னவென்றால் “ஹிந்து மதம், பௌத்தம், தாவோயிஸம் எனச் சிக்கலான, தமக்குள் மாறுபடும் அமைப்புகளை எல்லாம், பொத்தாம் பொதுவாக இயற்கை மையத்தன்மை கொண்டவை எனச் சேர்த்துச் சொல்வது” – என்பதுதான். கிழக்கத்திய தத்துவ மரபுகளை காலத்தில் முன்னோடியாகவும், தற்காலத்தில் தம் செயல்பாட்டுடன் இணைவதாகவும் தொடர்ந்து ஆழ்-சூழலியலாளர் கூறுவதை அவர் விமர்சிக்கிறார். இறுதியாக ‘அரசியல் தீவிரத்தன்மை கொண்ட, யதார்த்தவாதியும், கிறிஸ்தவத்தால் தாக்கமடைந்த சிந்தனையாளருமான காந்திக்கு ஆழ்-சுழலியலில், அவருக்கு முழுக்க தகுதியேயற்ற முக்கிய இடம் அளிப்பதை’ விமர்சிக்கிறார்.
சூழலியலில் இந்து மதத்தை மட்டுமல்ல, கிழக்கத்திய ஆன்மிக மரபுகளைக் கொண்டு ஒரு தத்துவ அடிப்படை அமைவதே குஹாவுக்கு ரசிக்கவில்லை. காந்தியின் தீவிர அரசியல் செயல்பாடு, யதார்த்தத்தன்மை ஆகியவற்றை, ‘கிழக்கத்திய மரபிலிருந்து வேறுபட்டவர் காந்தி’ எனக் காட்ட குஹா முன்னிறுத்துகிறார். கிறிஸ்தவத் தாக்கம் கொண்ட சிந்தனையாளர் என்ற முறையில் ஆழ்-சூழலியலின் தத்துவப் பிதாமகராகக் காந்தியைக் கொள்வது அவருக்கு முழுக்க தகுதியற்ற ‘totally undeserved’ இடத்தை அளிப்பதாகும் என்கிறார். (Ramachandra Guha, Radical American Environmentalism and Wilderness Preservation: A Third world Critique, in Technology and Values: Essential Readings,Ed.Craig Hanks, John Wiley & Sons,2009. பக்.463)
உண்மையில், காந்தியின் சூழலியல் சிந்தனைகளில் ஆழ்-சூழ்நிலைத் தன்மையின் பரிமாணங்களை, அவரது காலகட்ட சிந்தனையோட்டங்களிலேயே கூட, அவரது சமகால இந்திய வேர்களிலிருந்து கண்டடையலாம். சுவாமி விவேகானந்தரின் வேதாந்தத் தாக்கம் ஜகதீஷ் சந்திர போஸிடம் இருந்தது. ஜகதீஷ் சந்திர போஸின் இணைப்புப் பார்வை அதன் தாக்கத்தை தாகூரின் இயற்கைப் பார்வையிலும் உருவாக்கியது. தாகூரின் தாக்கம் காந்தியின் இயற்கை குறித்த சிந்தனைகளில் அபரிமிதமானது. காந்தியின் சூழலியல் சிந்தனை, பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், வளம் குன்றா வளர்ச்சியிலும் ஜே.சி. குமரப்பாவால் (ஜோசப் கர்னீலியஸ் குமரப்பா) முன்னெடுக்கப் பட்டது.
இந்துத்துவச் சார்பு கொண்ட காந்தியரான கன்னையாலால் முன்ஷி விடுதலை பெற்ற பாரதத்தின் முதல் விவசாய மந்திரி. இவர் மண் ஊட்டச்சத்துக்களுக்கும் கால்நடைச் சாணங்களுக்குமான சுழல் உறவை வலியுறுத்தினார். இன்று இயற்கை வேளாண் விவசாயிகளாலும் சூழலியலாளர்களாலும் சுட்டப்படும் இவ்விஷயங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் நஞ்சாகும் உணவும் எதிர்கொள்ளப்படுவதற்குப் பல பத்தாண்டுகள் முன்னரே சொல்லப்பட்டன என்பது முக்கியமானது.
இந்த விரிவான வரலாற்றுக் கண்ணிகளை முழுமையாக உடைத்தும் மறைத்துமே, காந்திக்கு ஒரு நவீனத்துவ முலாம் பூச முடியும். டாமினிக் லாப்பெயர் முதல் குஹாவும் அவரைப் பிரதி எடுப்போரும் செய்வது அதைத்தான்.
காந்தியின் சூழலியல் சிந்தனைகளையும் இந்தியச் சூழலியல் இயக்கங்களையும் ஆராய்ச்சி செய்தவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர் டேவிட் கோஸ்லிங். சுவாமி விவேகானந்தர் ‘பிரபஞ்ச முழுமையுடன் தன்னை ஒருமைப்படுத்துதல்’ எனக் கூறுவதும், இந்த உலகின் யதார்த்தத்தை மறுக்காத வேதாந்தத்தை முன்வைத்ததும், கீதையின் கர்மயோகத்துக்கு அவர் கொடுத்த பார்வையும் காந்தியின் சிந்தனைகளில் கடும் தாக்கம் ஏற்படுத்திய கருத்தாங்கள். சூழலியலுக்கு உகந்த காந்தியின் பார்வைகளின் உருவாக்கத்துக்கு இது ஒரு முக்கியக் காரணம் என்கிறார் கோஸ்லிங். (David Gosling, Religion and Ecology in India and Southeast Asia, Routledge 2001, பக்.49.)
சூழலியல் மட்டுமல்ல, வரலாறு மானுடவியல் ஆகியவற்றிலும் காந்தியின் உள்ளுணர்வு சார்ந்த சில கருத்தாக்கங்கள் – அன்றைய காலனிய சூழலில் அறிவியலுக்குப் பொருந்தாதவை போலத் தெரிந்தவை – இன்று மிகப்பெரிய மாற்று உண்மைகளை நமக்குக் காட்டும் ஒளிவிளக்குகளாகியுள்ளன. உதாரணமாக, இந்தியாவின் கல்வியறிவு வெள்ளையரின் காலனியாதிக்கத்துக்கு முன்னால் எவ்வாறு இருந்தது என்பதனைக் குறித்த தரம்பாலின் விரிவான ஆராய்ச்சி, இங்கிலாந்தில் காலனிய ஆட்சியாளர்களுக்கு காந்தி அளித்த பதிலின் குறிப்புகளிலிருந்தே தொடங்குகிறது.
வனவாசிகளுக்கும் ஏனைய ஹிந்து சமுதாயத்துக்குமான மறுக்கவியலாத உறவை காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காலனிய மக்கட்தொகை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறுக்கப்பட்டுவந்த தொடர்பு அது. பின்னாட்களில் இந்தியா விடுதலை அடைந்தும்கூட ஆரிய இனவாத கோட்பாட்டு அறிதலின் அடிப்படையில் அந்தப் பிளவு பெரிதுபடுத்தப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மரபணுவியல் கோட்பாடுகளும் சமூகவியல் ஆராய்ச்சிகளும் காந்தியின் புரிதலின் சரித்தன்மையை உணர்த்துகின்றன.
சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் சமுதாயத்தின் ஆகச்சிறந்த மாதிரியாகவும் காந்தி முன்வைத்த மற்றொரு உருவகம் பேராழி வட்டம் (Oceanic Circle) என்பதாகும். மேற்கத்திய மனம் எதையும் ஒரு கீழ் மேலான கூம்புப் பிரமிடாகவே வகைப்படுத்துகிறது, சமுதாய உறவுகள் முதல் சூழலியல் மாதிரிகள், உளவியல் கருத்தாக்கங்கள் வரை அனைத்துமே பிரமிடுகளாகவே அமைக்கப்படுகின்றன. அடித்தளத்தில் சக்தியற்ற பெரும்பான்மையும், மேலே சக்தி-அதிகாரம்-அதீத அனுபவித்தல் ஆகியவை கொண்ட சிறுபான்மையுமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அவை. காந்தி இக்கட்டுமானத்தை அடிப்படை அலகாகவும் ஆதார மாதிரியாகவும் கொள்ள மறுத்தார். பாரதப்பண்பாட்டின் உருவகங்களிலும் குறியீடுகளிலுமிருந்து பெறப்பட்ட அவரது பார்வை பின்வருமாறு:
இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கும். அவை விரிந்தபடி இருக்கும் வட்டங்களாக இருக்குமேயன்றி ஒன்றின் மேல் ஒன்று ஏறுபவையாக இருக்காது. வாழ்க்கை என்பது அடிப்பகுதியால் தாங்கிப்பிடிக்கப்படும் உச்சிக் கூம்பு கொண்ட பிரமிடாக இருக்காது. ஆனால் அது ஒரு பேராழி வட்டமாக அமையும். அதன் மையமாக என்றென்றும் தனிமனிதன் இருப்பான். அவன் அவனைச் சுற்றி அமையும் கிராமத்துக்காகவும் ஒவ்வொரு கிராமமும் அக்கிராமங்களை சுற்றி அமையும் பிற கிராமங்களுக்காகவும் அமையும். இவ்வாறாக அனைத்தும் ஓருயிராக, ஆணவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு இல்லாததாக, தன்னடக்கதுடன் பேராழி வட்டத்தின் மகோன்னதத்தின் பங்காளிகளாக, அதன் இணைபிரியாத உறுப்புகளாக அமையும்.
அப்துல் கலாமின் ‘புரா’ (PURA – Providing Urban amenities in Rural Areas – நகர்ப்புறங்களிலுள்ள வசதிகள் அனைத்தையும் கிராமப் பகுதிகளிலும் ஏற்படுத்துதல்) இந்தப் பேராழி வட்டத்தின் தொழில்நுட்பப் பரிமாணமே. காந்தியின் இந்தப் பார்வை வழி வழியாக வந்த அனைத்துயிரையும் ஒன்றாகக் காணும் பாரதப் பார்வையே. இப்பார்வையை காந்தி மிகவும் இக்கட்டான சூழலில் சரியான பரிமாணங்களில் வெளிப்படுத்தினார். அத்தளங்களில் அன்றைய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தாண்டிய சாத்தியங்களை காந்திய மதிப்பீடுகள் கோரி நின்றன. அவற்றுக்கான வினை ஊக்கியாகவும் திகழ்ந்தன. அம்மதிப்பீடுகளின் வேர்கள் பாரத மண்ணில் ஆழப் பதிந்தவை.
-oOo-