Posted on Leave a comment

வலம் – அக்டோபர் 2016 இதழ் – கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்

கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்

எத்தனையோ வருடங்களாகிவிட்டன. உலகத் திரைப்பட விழா ஒன்றில் பார்த்த இத்தாலியப் படம் ‘லெப்பர்ட்’ (புலி). லாம்ப்படூஸோ என்ற இத்தாலியரின் நாவலை ஆதரித்த திரைப்படம். ஒரு ராஜவம்சம் அழிகிறது. அதற்கு எதிரான, அதை அழிப்பதற்கான நியாயமான காரணங்கள் எத்தனையோ இருக்கலாம். படத்தின் முடிவில் ராஜவம்சம் அழிகிறது. புரட்சியாளர்களின் கோலாகலக் கொண்டாட்டத்தோடு படம் முடிகின்றது. அந்த முடிவு எவ்வளவுதான் சரித்திர நியாயங்கள் கொண்டிருந்தாலும், மாற்றங்கள் எவ்வளவுதான் தவிர்க்க இயலாதது என்றாலும், புரட்சியாளர்களின் கோலாகலம், அநாகரிகமாகவும், கண்ணியமற்றதாகவும், ஓர் அராஜகத்தின் வெளிப்பாடாகவும் (இந்தப் புரட்சியை, அராஜகத்தை எதிர்த்த புரட்சி என்பது ஒரு விடம்பனம்) இருந்தது. காரணம், முந்தைய சமுதாயம் சார்ந்தது எதுவாயினும் – அது கலைப் பொருளோ, கலை உணர்வோ – அது வேண்டப்படாததே, அழிக்கப்பட வேண்டியதே என்பதே புரட்சியாளரின் எண்ணமாக இருந்து வருகிறது.

இது வரலாறு முழுவதும் திரும்பத் திரும்ப நிகழும் காட்சி. வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் அதே வரலாற்று நிகழ்வைத் திரும்பவும் நிகழ்த்திக் காட்டும் சாபத்திற்காளாவார்கள் என்ற ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. இதை அறிந்தவர்களும் திரும்பத் திரும்ப இதையே செய்துவருவது ஒரு விடம்பனம். எல்லாப் புரட்சியாளர்களும் தரும் ஒரு கொள்கை விளக்கம் உண்டு. மதிப்பீடுகளின் மாற்றம் என்பார்கள். அம்மதிப்பீடுகளைத் தாம் நிராகரிப்பதாகவும் சொல்வார்கள். ஆனால் கலைப்பொருட்களும் கலை உணர்வுகளும் இம்மதிப்பீடுகளையெல்லாம் மீறி எழுபவை.

ஒரு சமூக நிலையை, கட்டுமானத்தை, எதிர்த்தெழும் புரட்சியாளர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் செயலாற்றுபவர்களாகவும், கலை உணர்வு இல்லாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அத்தோடு வேறு எவ்விதச் சிந்தனையையும் அனுமதிக்காதவர்களாக, தம் பார்வைக்கு மீறியவற்றைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

உலகிலேயே அதற்கு இணையான ஒரு கலைச் சின்னம் இல்லை எனப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான, பாமியான் புத்தர் சிலையைக் குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான் தீவிரவாதிகளின் காரணம் அத்தகைய ஒன்று. சங்கீதம், ஓவியம், நாடகம், சிற்பம் என எந்தக் கலையின் வெளிப்பாடும், அது அம்மதத்தீவிரவாதிகளின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டது. எண்ணற்ற கிரேக்க, பௌத்த கலைப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆப்கன் அருங்காட்சியகங்கள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன. அவை தம் ஆட்சி எல்லையிலிருந்து அகற்றப்பட்டால் போதும் என்ற அளவில்கூட அவர்கள் பகைமை கட்டுப்பட்டதல்ல. பாமியன் புத்தகரைப் பாதுகாப்பாகத் தம் நாட்டிற்கு தம் செலவில் எடுத்துச் செல்ல அனுமதி கோரிய ஸ்ரீலங்காவின் கோரிக்கை மறுக்கப்பட்டு, அச்சிலைகள் தகர்க்கப்பட்டன.

இத்தீவிரம் சில இடங்களில் சில காலங்களில் அதிக காலம் நீடிப்பதில்லை. சீனப் புரட்சியின்போதும் பின் அது தீவிரமடைந்து, கலாசாரமே அல்லாத ‘கலாச்சாரப் புரட்சி’ என்று பெயரிடப்பட்ட அராஜகம் தலைவிரித்தாடிய போதும், அநேக சரித்திரச் சின்னங்கள், புராதனக் கட்டடங்கள் அழிக்கப்பட்டன. இவை அத்தனையும் கவிஞர் என்று சொல்லப்பட்ட மாவோவின் வழிகாட்டுதலில், அவரது ஆணைப்படி நடந்தன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகப் போகிறது. அச்சின்னங்களை, கட்டடங்களை மீண்டும் பழைய வடிவில் புனரமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. கலைப்பொருட்கள், கலை உணர்வு மாறிவரும் சமூக மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவை என்பது மாவோ என்ற கவிஞருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவருக்குப் பின் வந்த வெறும் கட்சிப் பிரமுகர்களுக்கு, தலைவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பாமியான் புத்தரைத் திரும்ப உருவாக்குவது எப்படி? ஆப்கன் அருங்காட்சியகத்திலிருந்த கிரேக்க, பௌத்த கலைப் பொருட்களைத் திரும்பப் பெறுவது எப்படி?

இம்மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடும் மனதில் எழும் பகைமை உணர்வு, பொறாமையையும் தன்னுள் ஒரு தூண்டுணர்வாகக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆப்கன் பாலைவனத்தில் விஸ்தாரத்தில் இக்கலைப் பொருட்களையும் சின்னங்களையும் அழித்துவிட்டால், நிகழ்ந்த சரித்திரத்தை அழித்து விட்டதான வெற்றிக் களிப்பும் தோன்றும்.

சில வருஷங்களுக்கு முன்பு, நான் டெல்லியில் இருந்த காலத்தில் சிற்சில இடைப்பட்ட காலங்களில் பாகிஸ்தான் தொலைக்காட்சியைப் பார்க்க முடிந்தது. பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை அது தடைப்படுத்தப்பட்டது. அப்போது பார்க்க இயன்ற காலங்களில், மதப்பிரச்சாரம் பற்றியோ, குர் ஆன் பாடங்கள் பற்றியோ வரும் பகுதிகளில், இஸ்லாம் தோற்றம், முகம்மது நபியின் தோற்றம் அல்லது குர் ஆனின் தோற்றம் பற்றிச் சொல்லும்போது, அதற்கு முன் உலகம் இருள் சூழ்ந்திருந்ததாகவும் முகம்மது நபியின் வாயிலாக, குர் ஆன் தோற்றத்தோடுதான் உலகில் ஒளியே தோன்றியதாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும். கி.பி. 570க்கு முந்திய உலகமே இருள் சூழ்ந்த உலகம்தான் அவர்களுக்கு.

இந்த உணர்வுத் தீவிரம்தான் பாமியான் புத்தரைக் குண்டு வெடித்து அழிக்கச் செய்திருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த சிற்பங்களிலேயே புத்தரின் உருவம்தான் உன்னதமான சிகரப் படைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சில புத்த வடிவங்களைப்போல அழகும் சாந்தமும் நிறைந்த, இவற்றுக்கு இணையாகச் சிற்ப வடிவங்கள் இருக்கக்கூடுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும். சிலர் மோனலிஸா புன்னகையைப் பற்றிச் சொல்லி மாய்ந்து போவார்கள்.

அதுபோன்ற ஒரு மாய, புதிர்த்தன்மை கொண்ட தெய்வீகப் புன்னகை புத்தர் வடிவங்கள் பலவற்றின் இதழ்களில் தவழும். சாதாரணமாக, இயல்பான சூரிய ஒளியில் பார்க்கும்போதே. சிறந்த தேர்ச்சி பெற்ற ஒளி அமைப்பாளனின் ஒளி வண்ண அமைப்பில் அதன் அழகுச் சின்னம் பளிச்சிட்டுத் தெரியும். அது ஒரு மாயப்புன்னகைதான்.

அத்தகைய புன்னகைக்கு இணை எங்கு இருக்கிறது என்று ஒருசமயம் கேள்வி எழுந்தபோது, பம்பாய்க்கு அருகே ஓர் தீவில் இருக்கும் எலிஃபெண்டா குகையில் இருக்கும் திருமூர்த்தியின் வடிவம் என் நினைவுக்கு வந்தது. அதன் பிரம்மாண்டம், அதன் தேர்ந்த கலை வடிவம், அதன் அழகு, அந்த இதழ்களில் வடியும் புன்னகை, சில புத்த வடிவங்களுக்கு இணையான புன்னகையாகும். அதன் அழகினும் கலை நேர்த்தியும் அவற்றில் உண்டு. நம் சிறந்த பொக்கிஷங்களில் இத்திருமூர்த்தி உருவமும் ஒன்று. திருவெண்காடு ரிஷபவாகன மூர்த்தி வெண்கலச் சிற்பம்போல, தீதார்கஞ்ச் யக்ஷியைப்போல, ஒரு சிகரப் படைப்பு என்று அச்சிற்பத்தைக் கூறலாம். 17ம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்கள் இங்கு கால் பதித்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு, இம்மூர்த்திகளைக் குறியாகக் கொண்டார்களாம். இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்களின் அதிகக் கொடூரமான மதமாற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அக்காலத்தில் போர்ச்சுகீசியர்களாகவே இருந்தனர்.

அவர்களது துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குக் குறி எலிஃபெண்டா குகை திருமூர்த்திச் சிற்பம். தாலிபான்களுக்கு பாமியான் புத்தர் சிலை. ஈராக் யுத்தம் தொடங்கும்முன் அமெரிக்கர்கள் தம் துப்பாக்கிப் பயிற்சிக்குக் குறியாகப் பயன்படுத்தியது ஸதாம் ஹூஸேனின் உருவம்.

இதன் விளைவுகள் பாமியான் புத்தர் சிலை சின்னாபின்னப்படுத்தப்பட்டதற்குக் குறைந்ததல்ல. இத்தாக்குதலுக்கு உந்துதலாக இருந்த வெறியுணர்வு தாலிபான்களின் மதவெறி உணர்வுக்குச் சற்றும் குறைந்ததல்ல.

அமெரிக்கர்கள் நீண்ட நெடிய சரித்திரம் அற்றவர்கள். ஒரு நாகரிகம், பண்பாட்டு வரலாறு என சொல்லிக் கொள்ளத் தகும் அளவுக்கு ஏதும் அற்றவர்கள். கலைகளில் அவர்கள் உலகுக்கு அளித்தது ஏதும் சொல்லிக்கொள்ளும் தகுதி அற்றது. ஆக்டபஸ் தன் கால்களைப் பரப்பி, தன் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்துவதுபோல, தம் ஆக்கிரமிப்பின் வழியிலேயே தம்முடையது எதையும் – தரமற்றதைக் கூட நிலைநிறத்திக் கொள்ளும் குணத்தவர்கள் அமெரிக்கர்கள். எதிலும் அவர்களது பங்களிப்பு, பிரம்மாண்டமே. பிரம்மாண்டமே ஒன்றின் குணத்தையும், பலத்தையும், நிரூபிப்பதாக ஸ்தாபித்துவிடும் மரபு அவர்களது. அவர்களுடைய கட்டடங்கள், சாலைகள் அத்தகையன.

(13.5.2003 அன்று எழுதப்பட்டது)

(சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான ‘கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)

-oOo-
Leave a Reply