Posted on Leave a comment

வலம் இதழ் – அக்டோபர் 2016 – அருகி வரும் யானைகள்

அருகி வரும் யானைகள் 
– பி.ஆர்.ஹரன்

காட்டு யானைகளின் அவலம்

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று இருவகைகளாக யானைகள் அறியப்படுகின்றன. 2003-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 40,000 முதல் 50,000 வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 30,000 யானைகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிய யானைகளை, இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature and Natural Resources – IUCN) என்கிற அமைப்பு, அருகிவரும் உயிரினமாக (Endangered Species) அறிவித்துள்ளது. 1972ம் ஆண்டு இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்ட வரைவின்படி யானை அருகிவரும் உயிரினமாகப் பட்டியல்-1-ல் (Schedule-1) இடம்பெற்று, முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மிருகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருகிவரும் உயிரினமான யானைகளைப் பாதுக்காக்கும் பொருட்டு, இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 1992-ஆம் ஆண்டு ‘ப்ராஜெக்ட் எலிஃபேண்ட்’ (யானைத் திட்டம் – Project Elephant) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது.(1) யானைகள் இருக்கும் 16 மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, அம்மாநில அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதி வழங்கி யானைகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு எண்ணிக்கையை அதிகரிக்க இயலவில்லை. 2007-ல் 27,682-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2012-ல் 30,711-ஆக உயர்ந்தாலும், அது 1990களின் எண்ணிக்கையைத்தான் ஒத்துப்போகிறது. இத்தனைக்கும், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ராஜெக்ட் எலிஃபேண்ட் திட்டத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 32 யானைப்பாதுகாப்பிடங்களை (Elephant Reserves) பராமரித்து வருகின்றது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘யானைத் திட்டம்’ மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியலிடலாம். காடுகள் மனிதர்களாலும், அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் பரப்பளவு குறைந்து வருவது; தந்தத்திற்காகக் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுவது; யானைகள்-மனிதர் மோதல்கள்; சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (CaptiveElephants) முறையாகப் பராமரிக்கப்படாதது; ஆண்யானை-பெண்யானை விகிதாசாரம் சரியாக இல்லாதது.

யானைத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்கள், (1) யானைகள், யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்கள் (Elephant Habitat), வனங்களினூடாகச் செல்லும் யானைகளின் வழித்தடங்கள் (Elephant Corridors), ஆகியவற்றின் பாதுகாப்பு.

(2) யானைகள்-மனிதர் மோதல்களுக்கான (Human-Elephant Conflicts) காரணங்களை ஆராய்ந்து அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தல். (3) சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன்.

கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் 14,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை நாம் இழந்துள்ளோம். இவற்றில் சுரங்கத்தொழில்களுக்காக 4,947 சதுர கிலோமீட்டர், பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1,549 சதுர கிலோமீட்டர், நீர்மின்சக்தி திட்டங்களுக்காக 1,351 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை இழந்துள்ளோம். தற்போது, 250 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இழந்துவருகிறோம். இன்று, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில், 21.34% மட்டுமே வனப்பகுதியாக இருக்கின்றது.

வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அழிக்கப்படும் காடுகளுக்கு நஷ்டஈடாகப் பயனாளிகள் மரங்கள் நடவேண்டும் என்கிற விதி உள்ளது. ஆயினும், காடுகள் அழிக்கப்படும்போது, மரங்கள் மட்டும் அழிக்கப்படுவதில்லை; ஓர் இயற்கை சுற்றுச்சூழலே (Ecosystem) அழிக்கப்படுகிறது. தாவர வளமும் உயிர் வளமும் (Flora & Fauna) அழிக்கப்படுகின்றன. ஆகவே வெறும் மரங்களை மட்டும் நட்டுத்தருவது ஏற்கெனவே நிலவிய சுற்றுச்சூழலுக்கு ஈடாகாது என்று வனமேலாண்மை நிபுணர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்தை அரசும் பாராளுமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், மக்கள்தொகை பெருகுவதும் நகரமயமாக்கம் அதிகரிப்பதும் காடுகளின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 15,000 சதுரகிலோமீட்டர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களும் அடக்கம். அவ்விடங்களில் புதிதாகக் கிராமங்கள் உருவாகி, தானியங்களும் காய்கறிகளும் பயிரிடுவதும் அதிகரிக்கின்றது. வனப்பகுதிகள் சுருங்கிவரும் சூழலில் இந்தப் பயிர்நிலங்கள் யானைகள் போன்ற மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாவது இயற்கையே. இதனால், மனிதர்-வன உயிரினங்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

யானைகள் தங்களின் விளைநிலங்களை அழிக்காமல் இருப்பதற்காக, நிலச் சொந்தக்காரர்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கின்றனர்; சிலர் ஆங்காங்கே தீ மூட்டுவதும் உண்டு. அருகில் வரும் யானைகளை விரட்ட முரசுகளை ஒலிப்பதும், பட்டாசுகள், வெடிகள் வெடிப்பதும் உண்டு. ஆனால் யானைகள் கூட்டமாக வரும்போது சில நிமிடங்களில் கிராமத்தையே அழித்துத் துவம்சம் செய்துவிடும் இயல்பு கொண்டவை. மனிதர்-யானைகள் மோதல்களால் இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் யானைகளைக் குறை சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பரிய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கம் (Wildlife Protection Society of India – WPSI) என்கிற அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில் 121 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் 781 கிலோ தந்தம், 69 தந்தங்கள், 31 தந்தத் துண்டுகள், 99 செதுக்கப்பட்ட தந்தங்கள், 75 தந்த வளையல்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. 1986-ஆம் வருடமே தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்துள்ளது.

கோடைக் காலங்களில் நீர்நிலைகள் வற்றி, தாவரங்களும், காய்கறிகளும் கிடைப்பது அரிதாகிவிடுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக நீரையும் உணவையும் தேடி அலையும். இந்தக் கோடைக் காலத்தைத்தான் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாமல், தேக்கு மற்றும் சந்தனக் கொள்ளையர்களும் யானைகளைத் தந்தங்களுக்காகக் கொல்வதுண்டு. வீரப்பன் போன்றவர்களே இதற்கு உதாரணம். உண்மையில் தந்தக் கடத்தல் தொழிலில் ஆரம்பித்துப் பின்னர்தான் சந்தனமரக் கடத்தலுக்கு மாறினான் வீரப்பன் என்றும், தந்தக் கடத்தல் தொழிலில் இருக்கும்போது கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்றுள்ளான் என்றும் இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ‘கடுந்துன்பத்தில் ஒரு கடவுள்’ (A God in Distress) என்கிற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வீரப்பன் போன்றவர்கள் மட்டுமல்லாமல், உல்ஃபா (ULFA), போடோ (BODO), நாகா (NAGA) தீவிரவாதிகளும், மக்கள் போர்க் குழு (PWG) மாவோயிஸ்டுகளும் தங்களுடைய இயக்கங்களின் பணத்தேவைக்காக அவ்வப்போது யானைகளைக் கொல்வதுண்டு என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.(2)

இந்திய விலங்குநல ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Veterinary Research Institute) ஓய்வுபெற்ற விஞ்ஞானியான டாக்டர் B.M.அரோரா மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 6,000க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 1990 முதல் 2012 வரை தென்னிந்தியாவில்தான் அதிகமாக, அதாவது 3,239 யானைகள் இறந்துள்ளன. வடகிழக்கு இந்தியாவில் 1,403 யானைகளும், கிழக்கு இந்தியாவில் 1,253 யானைகளும், வடக்கு மண்டலத்தில் 378 யானைகளும் இறந்துள்ளன. ,499 யானைகள் நோய்களால் உடல்நலன் குன்றி இறந்துள்ளன; 694 யானைகள் மின்சார வேலிகளைத் தீண்டியதால் இறந்துள்ளன; 562 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன; 1,276 யானைகள் இயற்கைக் காரணங்களால் இறந்துள்ளன; 875 யானைகளின் சாவுக்குக் காரணம் தெரியவில்லை.(3) வனப் பகுதியை ஆக்கிரமித்து உருவாகியுள்ள கிராமங்களில் பலர் சட்டத்திற்குப் புறம்பாக, அனுமதியின்றி மின்சார வேலிகள் அமைக்கின்றனர். இவ்விஷயத்தில் வனத்துறையினர் சரியான கவனம் செலுத்துவதில்லை. அரசியல் அழுத்தங்களால், அத்துமீறுபவர்களும் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ரயில் வண்டிகளில் அடிபட்டு யானைகள் இறந்துபோவது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன.

பல இடங்களில் இருப்புப்பாதைகள் மேடான பகுதிகளில் போடப்பட்டிருப்பதாலும், பாதையிலிருந்து கீழே நிலப்பகுதிக்குச் சரிவாக வரவேண்டியிருப்பதாலும், பருத்த உடலும் மெதுவான நகர்வும் கொண்ட யானைகள் ரயில்கள் வருவதற்குள் பாதையைக் கடக்க முடியாமல் அடிபட்டு இறந்துபோகின்றன. வழித்தடங்களை யானைகள் கடந்துசெல்லும்போது, ரயில் ஓட்டுநர்கள் ரயில்களை மெதுவாகக் குறிப்பிட்ட அளவு வேகத்தில்தான் செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் பல ஓட்டுநர்கள் அதைப் பின்பற்றுவது கிடையாது. ஓட்டுநர்களின் பார்வைக்கு, வழித்தடங்களைக் கடக்கும் யானைகள் தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கு, வழித்தடங்களில் இருக்கும் மரங்கள், பாறைகள் போன்றவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் வனத்துறையினருக்கு உண்டு.

சமீபத்தில் மேற்கு வங்க மாநில டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மஹானந்தா வன உயிரினக் காப்பகத்தின் வழியாக ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதையை நீட்டிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.(4) இந்தப் பாதையில் ஏற்கனவே 55 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உத்தர்கண்ட் மாநிலத்தில் ஹரித்வார், தேஹ்ராதூன், பௌரி கார்வால் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் ராஜாஜி தேசியப் பூங்காவில், 18 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் ரயில்பாதையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணங்கள், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதும், ரயில் ஓட்டுநர்களுக்கு ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைத்திருப்பதும், இருப்புப்பாதையை ஒட்டியிருக்கும் மேடான பகுதிகள் மற்றும் சரிவுகள் சமநிலைப்படுத்தப்பட்டதும், பார்வை மறைப்பு வளைவுகளில் (Blind Curves) உள்ள மறைப்புகளை அப்புறப்படுத்தியதும், ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும் ஆகும். இதே போன்ற நடவடிக்கைகள் மேற்குவங்க மஹானந்தா வன உயிரினக் காப்பகத்திலும் எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, இதுவரை மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 900 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும், சுற்றுச்சூழல் கெடாமல் இருக்கவும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்டிப்பாக எடுக்கும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டமும், மற்ற வழிகாட்டுதல்களும், விதிகளும் மீறப்படுவது; வனத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் மற்றும் பொறுப்பின்மை, இதனால் தொடர்ந்துகொண்டிருக்கும் வன ஆக்கிரமிப்புகள்; இவற்றின் விளைவாக வேகமாகச் சுருங்கிவரும் வனப்பகுதிகள் ஆகியவையே, அருகிவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள யானைகள் இறந்துபோவதற்கும், எண்ணிக்கை குறைவதற்கும் முக்கியக் காரணங்கள். இதில் யானைகளின் நலன் மனிதனின் கைகளில்தான் இருக்கிறது. மனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் மனிதனின் ஆக்கிரமிப்புகளாலும், வளர்ச்சித்திட்டங்களாலும், உள்கட்டமைப்புத் திட்டங்களாலும் காட்டு யானைகள் அழிந்து வரும் நிலையில், மறுபக்கம் தனியார் வசமும், வழிபாட்டுத் தலங்களிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் கடும் துன்பத்தையும் சித்தரவதையையும் அனுபவித்து இறந்துபோகின்றன. காட்டு யானைகளைப் பொருத்தவரையில் சித்தரவதை என்பது இல்லை. ஆனால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குக் கன்று வயது முதல் இறந்துபோகும் வரை துன்பமும் சித்தரவதையும்தான் வாழ்க்கை.

(சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் அவலங்கள் அடுத்த இதழில் வெளியாகும்.)

சான்றுகள்:

(1) https://en.wikipedia.org/wiki/Project_Elephant

(2) http://www.wpsi-india.org/images/a_god_in_distress.pdf, பக்கம் 30, 31.

(3) http://timesofindia.indiatimes.com/city/bareilly/Over-6000-elephant-deaths-in-two-decades/articleshow/47193313.cms?gclid=CMvrsMKn_c4CFdOFaAod3-wJQg

(4) https://www.scoopwhoop.com/inothernews/elephants-killed-on-railway-tracks/#.khj8bzrhv

-oOo-

Leave a Reply