Posted on Leave a comment

புள்ளிகள் கோலங்கள் – பாஸ்கர் நடராஜன்

புள்ளிகள் கோலங்கள்
  • பாஸ்கர் நடராஜன்வெங்கட் சாமிநாதன் குறித்து வலம் முதல் இதழில் ரவிசங்கர் எழுதிய கட்டுரையின் சில புள்ளிகளைப் பேசலாம் என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்தாகவோ, அவர் சொல்லத் தவறிய விஷயங்களை நிறைவு செய்வதாகவோ அல்ல, மேலே விரித்துச் செல்லும் வாய்ப்புகள் கொண்டிருக்கின்றன என்பதால்.

வெங்கட் சாமிநாதனால் எப்படி அவ்வளவு நேரடியாகப் பேச முடிந்தது, தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அத்தனை காலம் (நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள்) அவரால் தொடர்ந்து வலியுறுத்த முடிந்தது என்று ரவிசங்கர் எழுப்பும் கேள்வி உண்மையில் ஆச்சரியமானதுதான். இதற்கு விடை தேடும் விதமாக ரவிசங்கர் கூறும் சில கருத்துகள் சிறிது அருவத்தன்மை கொண்டிருக்கின்றன என்றாலும் அவை யதார்த்தத்தில் காலூன்றாமலில்லை. வெங்கட் சாமிநாதன் கிராமப்புறச் சூழலில் வளர்ந்தவர், அக்கால மனிதர்கள் மௌன வாசிப்பை விட நேரடி உரையாடல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் எந்த விஷயத்தையும் நேரடியாகப் பேசித் தீர்ப்பதே அவர்களுக்கு முதல் தேர்வாக இருந்தது என்கிறார் ரவிசங்கர். மேலும், நம்மைப் போல் அவர்களது சிந்தனை மௌன வாசிப்பால் செழுமையடைந்ததல்ல என்பதால் எந்த இடையீடும் இல்லாமல் உரையாடுவது அவர்களுக்கு எளிதாக இருந்தது, ஆனால் தற்போதைய தலைமுறை பெரும்பாலும் ஒலி-ஒளி ஊடகத்துக்குப் பழக்கப்பட்டுள்ளது. இது நம் சிந்தனையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்வது சிறிது மிகைச் சிந்தனையாக இருக்கிறது என்று எண்ணத்தைத் தோற்றுவித்தாலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை விவாதக் களமாய் பாவிக்கும் நாம், நம் விவாதங்கள் அத்தனையும் மீம்களின் அலையில் அடித்துச் செல்லப்படும் கையறு நிலைக்குப் புதியவர்களல்ல (தேர்தல் வெற்றி தோல்விகளில்கூட மீம்களின் பங்கு சாதாரணமானதல்ல) என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
வெங்கட் சாமிநாதன் பொதுவாகவே எந்த இடையூடும் இல்லாத பரிமாற்றத்தை விரும்புபவர் என்று சொல்லும் வகையில், கவிதை மற்றும் திரைப்படங்களில் மௌனத்துக்கும் கூத்துக்கலை மற்றும் நவீன நாடகங்களில் உடல் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அவர் ரசித்தார் என்றும் எழுதுகிறார் ரவிசங்கர். விமரிசனங்களில் பிற நூலாசிரியர்கள் மற்றும் விமரிசகர்களைத் தன் வாதத்துக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுவதே பொது மரபாக உள்ள நிலையில் வெங்கட் சாமிநாதன் இதுபோல் செய்வதில்லை என்பதும் ரவிசங்கர் சொல்லும் நேரடி அணுகலுக்கு வலுக்கூட்டுவதாகவே உள்ளது.

ஆனால், இதையே வேறு விதமாகவும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. எந்த இடையூடும் இல்லாத நேரடித்தன்மைக்கும் எந்தப் பிளவும் இல்லாத ஒருமைக்கும் எத்தனை வேறுபாடு இருக்கப் போகிறது?

வெங்கட் சாமிநாதனின் எழுத்தில் நாம் காணும் கவித்துவம் – (அப்படியொன்றைச் சொல்வதே முரண் போலில்லை?) மொழி அழகாலோ, கற்பனையின் வேகத்தாலோ வருவதல்ல. இதெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டு அவர் இதைச் சொல்கிறார் என்று நம்மை நம்பச் செய்யும் இடங்கள் அவர் எழுத்தில் எப்போதும் காண முடியாத ஒரு லயம் கொண்டிருக்கின்றன:

“கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை கோயில் நம் வாழ்வின் மையமாக இருந்தது (இன்று அந்த இடத்தை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது). அன்றைய நமது கலாசாரத்தைக் கோயில் கலாசாரம் என்றே சொல்லலாம். அப்படித்தான் சொல்லவேண்டும். (இன்றைய கலாசாரத்தை சினிமா கலாசாரம் என்று சொல்ல வேண்டும். சினிமா என்றால் அதன் அபத்த அர்த்தத்தில், மட்ட நிலையில்) நம் வாழ்வின் எல்லா அம்சங்களும், அதன் எல்லா நிலைகளும் கோயிலை மையமாகக் கொண்டிருந்தது. மையம் என்றால், பௌதீக, புற அம்சமாகக்கூட, கோயில் நகரத்தின் மையமாக, நகரம் அதைச் சுற்றி எழுந்த ஒன்றாக, உருவகமாக, யதார்த்த வெளிப்பாடாக, கோயில், இம்மண்ணில் அகன்று ஆழ்ந்து ஊன்றி ஸ்தாபிதமாகியிருந்தது. இதன் எல்லா அர்த்தங்களிலும் சங்கீதம், நாட்டியம், இலக்கியம், பக்திப்பாடல்கள், தத்துவம், மதம், அன்றாட வாழ்க்கை, அன்றாட வாழ்க்கைக்கான நியதிகள், நியமங்கள், சிற்பம், ஓவியம், உண்மையில் எல்லாக் கல்வியும், கலைகளும், சிந்தனைகளும், வாழ்க்கை இயக்கம் அத்தனையும், கோயிலின் கர்ப்பக்கிரகத்திலிருந்து உற்பவித்து, கோயில் பிரகாரங்களின் வழியாக, தெருவுக்குப் பிரவகித்தது. மக்களை அரவணைத்துக் கொண்டது. திரும்ப, அக்கோடி மக்களிடமிருந்து, தெருக்களின் வழியாகக் கோயிலின் பிரகாரங்களின் உட்புகுந்து, கோயிலின் கர்ப்பக்கிரகத்தை வந்தடைந்தது. அங்கிருந்து அது வானைச் சுட்டி, தன் லட்சியங்களுக்குத் திசை காட்டியது. வானைச் சுட்டி எழுந்த, நம் நாட்டின் எந்தக் கலையும், இலக்கியமும் தத்துவமும், அதன் உன்னத சிகரங்களிலும், மக்களின் அனைத்து கோடி மக்களின் வாழ்க்கை நிலையிலும் சிந்தனை நிலையிலும் பலவகைப்பட்ட அனைத்து மக்களின் பங்கேற்றலில் தன் இயக்கத்தை, ஜீவிதத்தைக் கண்டது. இது வெகுஜனங்களுக்கானது, பாமரர்களுக்கானது, மற்றதோ, உயர்குழுவினருக்கானது என ஒரு பாகுபாடு, வேற்றுமை இருந்ததில்லை.”

வேறோரிடத்தில், “தமிழ் வாழ்க்கையே அதன் சகல பரிமாணங்களிலும் கிராமப்புற வாழ்க்கைதான். அதன் நாகரிகம் கிராமப்புற நாகரிகம்தான். தமிழ்க் கலைகள் அத்தனையும், அது சாதித்த அத்தனையும், கிராமப்புற நாகரிகத்தின் பிறப்புகள்தாம். அதுதான் கலைகளின் சாஸ்திரிய உருவமும்கூட,” என்றும் அவர் எழுதுகிறார். கோயில் கலாசாரம் என்று அவர் சொல்வது பண்பாடு சார்ந்தே.
வெங்கட் சாமிநாதனை நாம் ஒற்றைப் புள்ளியில் புரிந்து கொள்கிறோம் என்றால், தனி வாழ்வில் இல்லாத அறத்தை பொது வாழ்வில் வலியுறுத்தக்கூடாது என்ற இடத்தில்தான். இது அவரை அறம் சார்ந்தவராக, நேர்மையை எதிர்பார்ப்பவராக உணர்த்துகிறது என்றாலும் அவரை இரட்டை வேடத்துக்கு எதிரான ஒழுக்கவாதியாக, நல்லறத்தை வலியுறுத்துபவராகப் புரிந்து கொள்வது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கும் வெங்கட் சாமிநாதனிடம் வெளிப்படுவது எந்தப் பிளவும் இல்லாத ஒருமைக்கான அழைப்பே:

“வாக்குச்சுத்தம், மனச்சுத்தம் வேண்டும் என்றால், தான் குளித்துவிட்டு வந்தால், என்னிடமிருந்து சிறந்த இலக்கியங்கள் பிறந்துவிடுமா என்று ஒரு கேள்வியைத் தூக்கி எறிகிறார்கள் வெற்றிக் களிப்புடன்… மேற்கத்திய சமூகத்தில் எந்த எழுத்தாளரது வாழ்க்கை மறைக்கப்பட்டுள்ளது? ஏன் இங்கு மாத்திரம் சம்பளம் வாங்கி வேலை செய்யும் நிறுவனத்தைக் காட்டி, தன் எழுத்துக்களை, தன்னை, தொழிலாளர் புரட்சி வீரராகப் பறையடித்துக் கொள்ள வேண்டும்? ஏன் தன் மனதில் இல்லாத இரக்கம், மனிதாபிமானம் இவற்றை தன் கதைகளுக்கு மாத்திரம் ஏற்றித் தன் செயல்களுக்குத் திரையிட வேண்டும்? இதில் எப்படி கலை பிறந்துவிடும்?”

இதில் எப்படி கலை பிறந்து விடும் என்று கேட்கிறார். கலை என்பது கற்பனைக்கெட்டாத உயர்ந்த நிலை என்றெல்லாம் பீடமேற்றுவதில்லை வெங்கட் சாமிநாதன். எது இயல்போ, எது யதார்த்தமோ, எது ஒளிவு மறைவில்லாமல் அந்தரங்கத்திலிருந்து வெளிப்படுகிறதோ, அதுவே அவருக்குக் கலையாகிறது. தனிப்பட்ட முறையில் வெங்கட் சாமிநாதனை அறியாத என் போன்றவர்களுக்கு அவரது எழுத்தும், அவரைப் பற்றிய பிறரின் எழுத்துமே அறிமுகமாகவும் அனுபவமாகவும் இருக்கிறது. அவர் யார், எப்படிப்பட்டவர், அவரது பங்களிப்பு என்ன என்ற விஷயத்தில் ஓரிரு நூல்களை மட்டும் வாசித்தவர்களுக்குக்கூட அவர் குறித்து தோன்றக்கூடிய சித்திரம் குழப்பமானது. அவரது வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் பிறரைக் குறித்தே இருந்தன- தான் கண்டறிந்த உண்மை என்று எதையும் முன்வைத்து அதை ஒரு கட்டுக்கோப்பான சிந்தனை அமைப்பாய் உருவாக்க அவர் எந்தப் பிரயத்தனமும் செய்யவில்லை. சொல்லப்போனால், யாருக்கும் தோன்றக்கூடிய விஷயங்களே இவை என்றுதான் சொல்லி வந்தார். “வானைச் சுட்டி எழுந்த, நம் நாட்டின் எந்தக் கலையும், இலக்கியமும் தத்துவமும், அதன் உன்னத சிகரங்களிலும், மக்களின் அனைத்து கோடி மக்களின் வாழ்க்கை நிலையிலும் சிந்தனை நிலையிலும் பலவகைப்பட்ட அனைத்து மக்களின் பங்கேற்றலில் தன் இயக்கத்தை, ஜீவிதத்தைக் கண்டது” என்று எழுதியவர் தன்னையும் தான் சொல்லும் விஷயங்களையும் எப்படி தனித்துயர்த்தி நிறுத்திக் கொள்ள இயலும்? இத்தனை நேரம் பேசாமல் விட்ட ஒரு விஷயம் அவரது சர்ச்சைகள். இத்தனை நேரம் படித்திருந்தால் அதன் நோக்கம் புலப்பட்டிருக்கும்- அது ஒரு பண்பாட்டு பங்கேற்புக்கான அழைப்பு என்று. அதுவும் ஒருங்கிணைவை நோக்கிய செயல்பாடே. ஆனால், அதில் அவர் அடைந்த ஏமாற்றம் எல்லையற்றது என்று தோன்றுகிறது.

“எந்த ஒரு புதிய கருத்தையும், புதிய எழுத்தையும், உடனே போற்ற அல்ல, எதிர்கொண்டு, விவாதித்து, ஏற்கவோ, நிராகரிக்கவோ, தன்னுள் திறன் கொண்ட சூழலை உருவாக்க வேண்டும். அது தமிழ் சூழலில் இல்லை”
என்று எழுதிய வெங்கட் சாமிநாதன், வேறோரிடத்தில்,
“என் குரல் தனித்த குரல். கேட்பார் யாரும் அற்று தனித்து பிரதாபிக்கும் குரல். இது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. என்னன்னமோ எதிர் கோஷங்களால் என் குரல் நசுக்கப்படும். கேட்க வியலாதவாறு மடிக்கப்படும் என்பதும் எனக்குத் தெரிந்தே இருக்கிறது. இருப்பினும் நான் வேறு எவ்விதமாகவும் செயல்பட முடியாது. எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும். கேட்பார் யாரும் இல்லையே எனத் தயங்கியோ, எதிர்ப்புக் கோஷங்களுக்குப் பயந்தோ, எனக்கு உண்மை என்று பட்டதைச் சொல்லாமல் விட்டேன் என்ற குற்றவாளியாக, என் முகத்தைப் பார்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை” என்று எழுதும்போது ஒரு உடைந்த குரலைத்தான் கேட்கிறோம்.ஆனால் இப்படி இருக்க வேண்டியதில்லை. வெங்கட் சாமிநாதனின் குரல் தனித்த குரலாக இருப்பதால் அது விலைமதிப்பில்லாத குரல் என்ற போற்றுதற்குரியது, கேட்பார் யாரும் அற்று தனித்து பிரலாபிக்கும் குரலாக இருக்க வேண்டியதில்லை என்றோ என்னவோ வலம் முதல் இதழில் ரவிசங்கர் அவரது குரலுக்கு செவிசாய்த்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவரோடு இணங்கியும் பிணங்கியும் இன்னும் பல கட்டுரைகள் தொடரும் என்று நம்புகிறேன், அவர் அக்கறை கொண்டிருந்த விஷயங்களைப் பேசும் பல தனிக்குரல்களுக்கு இடையே அவரது குரல் தனித்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு பரவலான பங்கேற்றலில்தான் நம் மரபும் தன் இயக்கத்தை, ஜீவிதத்தைக் கண்டடைந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதிய சிகரங்களைத் தொட முடியும்.

Leave a Reply