Posted on Leave a comment

கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் – பி.ஆர்.ஹரன்

கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும்
பி.ஆர்.ஹரன்
இவ்வருட நவராத்திரி கொண்டாட்டத்தில் நடந்த சம்பவம் இது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா அன்று மாலை, தாயார் சன்னிதியில் பழங்களைப் பிரசாதமாகப் பெற்றுக்கொள்ள, கோவில் யானை ஆண்டாள் பக்தர்களின் கூச்சல் மற்றும் ஆரவாரங்களுக்கு இடையே, ஒரு காலை மடக்கி, மூன்று கால்களால் நொண்டி அடித்தவாறு வந்து, பட்டரிடம் பிரசாதம் பெற்றுக்கொண்டு, தாயாரைத் துதிக்கையால் வணங்கிவிட்டு, பிறகு மௌத்ஆர்கன் வாசித்துவிட்டுச் சென்றது. இந்தக் காட்சியின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவ, விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்துப்போய்த் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.
கேரள மாநிலத்தை மையமாக வைத்து கோவில் யானைகளுக்கு இழைக்கப்படும் துன்பத்தை ஆவணப்படுத்திவிலங்கிடப்பட்ட கடவுள்கள்’ (Gods in Shackles) என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள கனடா நாட்டைச் சேர்ந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் தன் முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்துப் பதிவிட்டிருந்தார்.
இந்தச் சமயத்தில், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் கோவில் பசுக்கள் மற்றும் யானைகள் நலன் பற்றிய வழக்கு விசாரணைக்கு வரவே, இந்த காணொளியும் முதல் அமர்வு நீதிபதிகள் முன்பு காட்டப்பட்டது. அவர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, விளக்கம் கேட்டு அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
இதனால் கோபமுற்ற ஸ்ரீரங்கம் பக்தர்கள், சங்கீதா ஐயரையும், PETA அமைப்பையும் ஹிந்துக் கோவில்களுக்கு எதிராகவும், கோவில் பாரம்பரிய வழக்கங்களுக்கு எதிராகவும் இயங்குகிறார்கள்;
அவர்களுடைய நோக்கம் விலங்குகள் நலன் அல்ல, கோவில் பாரம்பரியத்தை அழிப்பதே
என்று கூறுகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து ஆண்டாள் யானையை வெளியேற்றுவதும் அவர்கள் நோக்கம் என்று தங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்கள்.
இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள். ஒன்று, கோவில்கள், சர்க்கஸ்கள், தனியார் வசம் இருக்கின்ற சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (Captive Elephants) கொடுமைப்படுத்தப்படுவது; மற்றொன்று, கோவில்களில் பல நூற்றாண்டுகளாக யானைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சில சம்பிரதாயங்கள். இதில், யானைகள் என்று வரும்போது, அவற்றின் உடலமைப்பு, அவை வாழ்வதற்கான சூழல், தேவையான உணவு மற்றும் குடிநீர், போன்ற யானைகளின் நலன் சார்ந்த பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். கோவில்கள் என்று வரும்போது, நமது தேசத்துப் பண்பாட்டுச் சின்னங்களாக அவை விளங்குவதால், நூற்றாண்டுகளாக அக்கோவில்களில் பின்பற்றப்பட்டு வரும் நமது ஆன்மிகப் பாரம்பரியம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் வேண்டும். ஆகவே, யானைகள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆன்மிகப்
பாரம்பரியமும் தொடரவேண்டும், என்கிற இரண்டு விஷயங்களையும் நிறைவேற்றுமாறு ஒரு நியாயமான
தீர்வு வேண்டும்.
பாலூட்டி வகையைச் சேர்ந்த யானை சராசரியாக 70 ஆண்டுகள் வாழக்கூடியது. குடும்பமாக, குழுவாக வாழும் வனவிலங்கு இது. நன்கு வளர்ந்த யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. யானையின் தோல் மிகவும் தடிமனானது. சுமார் 2.5 செண்டிமீட்டர் முதல் 3 செண்டிமீட்டர் அளவுக்குத் தடிமனாக இருக்கும். அதேசமயம் மென்மையாகவும் இருக்கும். கொசு, எறும்பு போன்ற மிகச் சிறிய பூச்சிகள் கூட அதைக் கடித்துத் துன்புறுத்த முடியும். யானையின் வாயைச் சுற்றியும் காதுகளின் உட்பகுதியிலும் தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.
கால்கள் பலமுள்ளவை. உடல் பெரியதாக இருந்தாலும், காட்டு விலங்கு என்பதால் மேடுகளிலும், பள்ளங்களிலும், மணல் சரிவுகளிலும், செங்குத்தான பாதைகளிலும் ஏறவும் இறங்கவும் முடியும். பாதங்கள் மிகவும் மென்மையானவை. மணல்தரை அல்லது புல்தரைதான் அதற்கு ஏற்றது. தார்ச் சாலைகள், கான்கிரீட் அல்லது கிரானைட் தரைகள் அதற்கு ஏற்றவையல்ல. அவற்றில் நடந்தால், பாதங்களில் சீக்கிரம் புண்கள் ஏற்படும், நகங்கள் பிளவுபடும் வாய்ப்பும் உண்டு. கால்கள் வீங்கிக்கொண்டு மூட்டு வலியும் ஏற்படும்.
யானைகள் வாழ்வதற்குப் பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. இயற்கைச் சூழலுடன் கூடியமரம் செடி கொடிகள் கொண்ட பகுதிகள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு வனவிலங்கை, காட்டிலிருந்து நகர்ப்புறத்துக்குக் கொண்டுவந்து, சர்க்கஸ், மடங்கள் மற்றும் கோவில்கள் ஆகிய இடங்களில் வைத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான இடங்களுக்கு வளர்ந்த யானைகளைக் கொண்டுவந்து பழக்க முடியாது. ஆகவே, கன்றாக இருக்கும்போதே பாலூட்டும் அதன் தாயிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்டு வருகிறார்கள். யானையின் வயதிற்கு ஏற்ப குச்சிகள், மூங்கில் கழிகள், இரும்புப் பூண்கள் பூட்டப்பெற்ற கழிகள், இரும்புக் கொக்கி கொண்ட அங்குசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதை அடக்குவார்கள். ஒரு குச்சியை அல்லது ஒரு கழியைப் பார்த்தாலே இருக்கின்ற இடத்தை விட்டு நகராத அளவுக்கு அதன் மனதில் ஓர் அச்சத்தை உருவாக்கிவிடுவார்கள்.
ஆண் யானைகளுக்கு 12 வயதிலேயே (Adolescent stage) மதநீர் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது அதை அடக்குவது கடினம் என்பதால் சங்கிலிகளால் அதன் கால்களையும் உடம்பையும் கட்டிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் அதற்குக் கொடுக்கப்படும் உணவின் அளவையும் குறைத்துவிடுவார்கள். வயது கூடிய பெண் யானைகளின் கால்களையும் சங்கிலிகளால் பிணைத்துவிடுவார்கள். யானைகள் முழுவதுமாக அடங்கி நடக்கும் வரை பலவிதங்களில் சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பங்களை அனுபவிக்கின்றன.
இந்நிலையில்தான், சில விலங்குகள் நல அமைப்புகள், யானைகளின் இருப்பிடம் காடுகள்தான்; சிறைப்படுத்தப்பட்ட யானைகளை அவற்றின் துன்பங்கள் மிகுந்த சூழ்நிலையிலிருந்து விடுவித்து சுதந்திரமாக இருக்கக்கூடிய காடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் போராடத்தொடங்கின. WRRC (Wildlife Rescue and Rehabilitation Center), Compassion Unlimited
Plus Action (CUPA)
ஆகிய அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின. இந்திய விலங்குகள் நலவாரியமான AWBI அமைப்பும் இவர்களுக்கு உதவுகின்றது. WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புகளுடன் PETA அமைப்பும் இணைந்து கொண்டது. இவர்களுக்கு உதவியாகக் கேரளத்தை மையமாகக் கொண்டு செயல்படும் Heritage Animal Task Force என்கிற அமைப்பும் செயல்படுகிறது.
இதனிடையே கனடா நாட்டிலிருந்து தன்னுடைய தந்தையாரின் நினைவு தினத்தை அனுசரிக்க வந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் இதே விஷயத்தைக் கையில் எடுக்கிறார். ஓர் ஆவணப்படம் எடுக்கத் திட்டமிடுகிறார். அவர் ஆவணப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் Save The Asian Elephants (STAE) என்கிற அமைப்பின் நிறுவனர் டன்கன் மெக்னாய்ர் இவ்விஷயம் தொடர்பாக இந்தியாவிற்கு வருகிறார். இவருடைய STAE அமைப்புக்கும் WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. இவர் இந்தியா வரும்போது லிஸ் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயப் பத்திரிகையாளரையும் அழைத்து வருகிறார்.
லிஸ் ஜோன்ஸின் கற்பனையும், பொய்யும், பாதி உண்மைகளும் கலந்து உருவான ஒரு கட்டுரை லண்டனில் வெளியாகும்தி மெயில்’ (The Mail) பத்திரிகையில் வெளியாகிறது. அதே நேரத்தில், ஆவணப்படத்தை முடித்த சங்கீதா ஐயர் அதை வெளிநாடுகளில் வெளியிட்டுப் பல விருதுகளையும் பெறுகிறார். (http://www.godsinshackles.com/). லிஸ் ஜோன்ஸின் கட்டுரையையும், சங்கீதா ஐயரின் ஆவணப்படத்தையும் மேற்கோள் காட்டி இந்தியப் பத்திரிகைகளும் கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடுகின்றன.
தற்போது ஆவணப்படம், கட்டுரைகள், செய்திகள், பேட்டிகள், வழக்குகள், சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் என்று ஒரு பெரும் பரபரப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அமைப்புகளில் AWBI அமைப்பு மட்டுமே இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்திய அமைப்பு. அரசியல் சாஸனப்படி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. மற்றவை எல்லாமே அன்னிய சக்திகளின் பின்னணியில், பெரும்பாலும் அன்னிய நிதியுதவி பெற்றுச் செயல்படுபவை. ஆகவேதான் அவற்றின் நோக்கம் ஹிந்து கலாசாரத்துக்கும், ஆன்மிகப் பாரம்பரியத்துக்கும் எதிரானது என்கிற சந்தேகம் ஆன்மிக ஆர்வலர்களுக்கு எழுந்துள்ளது.
இவர்களின் போராட்டங்களும், வழக்காடுதல்களும் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், தமிழகத்தில் திருக்கடையூர் கோவில் அபிராமி, ராமேஸ்வரம் கோவில் பவானி, கூடலழகர் கோவில் மதுரவல்லி, திருச்செந்தூர் கோவில் குமரன், தஞ்சாவூர் கோவில் வெள்ளையம்மாள், விருதுநகர் கோவில் சுலோச்சனா என்று வரிசையாகக் கோவில் யானைகள் இறந்துபோகின்றன. தென்னக மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்து போகின்றன. உதாரணத்துக்கு 2007 முதல் 2010 வரையிலான
மூன்று வருடங்களில் மட்டும் (கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களில்)
215 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துபோயுள்ளன
.(1)
சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் இறப்புகளுக்கும், துன்பங்களுக்கும் முக்கியமான காரணங்களாக, சிறுவயது முதல் தனிமை, தேவையான உணவின்மை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, பாகன்களின் சித்திரவதை, முறையான சிகிச்சையின்மை ஆகியவற்றைச் சொல்லலாம். யானைகளின் உரிமையாளர்களும் பாகன்களும் பலவிதமான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக யானைகளை வைத்திருத்தல், காலம்கடந்த, செல்லுபடியாகாத உரிமைச் சான்றிதழ்கள் வைத்திருத்தல், காயமுற்ற, நோயுற்ற, வேலைக்குத் தகுதியில்லாத யானைகளை வேலை செய்ய வைத்தல், தொடர்ந்து சங்கிலியாலும் கயிற்றாலும் யானைகளின் கால்களைக் கட்டுதல், இரும்பு அங்குசங்களைப் பயன்படுத்துதல், அங்கஹீனம் செய்தல், தேவையான குடிநீர், உணவு ஏற்பாடு செய்யாமல் இருத்தல், தங்குமிடங்களின் சூழ்நிலைகள் மற்றும் வசதிகளின் குறைபாடு, மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் முறையாகக் கொடுக்காதிருப்பது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்காமல் இருத்தல் என்று பல்வேறு சட்டமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
1972-இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (Indian Wildlife Protection Act 1972),
1960-
பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் (Prevention of
Cruelty to Animals Act 1960),
போன்ற சட்டங்கள் மட்டுமல்லாமல், 2011-தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகளும் (Tamil Nadu Captive Elephants –
Management and Maintenance – Rule 2011)
மீறப்படுகின்றன. அதே போல கர்நாடகத்திலும், கேரளாவிலும் கூட, சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் மீறப்படுகின்றன.
இதனால், இந்தியாவில் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் போன்ற பல மாநிலங்களில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் பற்றிய பிரச்சினைகள் எழுப்பப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் WRRC அமைப்பு 2014ம் ஆண்டு தொடர்ந்துள்ள ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
விலங்குகள் நல அமைப்புகள் தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கிற்கு ஆதாரமாக மறுக்கமுடியாத சான்றுகளை இணைத்துள்ளன. அவை வழக்கு தொடர்ந்திருப்பது, மாநில அரசுகளுக்கும் கோவில் தேவஸ்தானங்களுக்கும் எதிராக. ஏனென்றால் மாநில அரசுகளும், வனத்துறையும், அறநிலையத்துறையும், கோவில் தேவஸ்தானங்களும்தான் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்குப் பொறுப்பு.
அவ்வமைப்புகளுக்கு எதிராக, பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வரும் பாரம்பரியத்தை நிரூபிக்கும் வகையில் தேவஸ்தானங்கள் தங்களுடைய சான்றுகளை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும். மேலும் தங்களிடம் இருக்கும் யானைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். மாநில அரசுகளும், அறநிலையத்துறைகளும், கோவில் தேவஸ்தானங்களும் இதில் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
கோவில் வழிபாடுகளிலும் சம்பிரதாயங்களிலும் யானையின் பங்கு இன்றியமையாதது. பல நூற்றாண்டுகளாக, யானைகள் கோவில் பண்பாட்டின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன என்கிற உண்மையை மறுக்க முடியாது. அதற்கான இலக்கிய, கல்வெட்டு, வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. விலங்குகள் நல அமைப்புகள் சொல்வது போல, ஹிந்து மத நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக யானைகள் கோவில்களில் தேவையில்லை என்கிற முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில் கோவில் யானைகளின் துன்பச் சூழலும், அனுபவிக்கும் சித்தரவதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், கோவில்களிலிருந்து யானைகளை வெளியேற்றுமாறு உத்தரவிடுவதற்கு வாய்ப்புண்டு.       
ஹிந்து அமைப்புகளும், ஹிந்து கலாசார ஆர்வலர்களும் விலங்குகள் நல அமைப்புகளின்
நோக்கங்களைச் சந்தேகிக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகங்களை வலிமைமிக்கதாக ஆக்கத் தகுந்த
சான்றுகளை முன்வைக்க வேண்டும். ஹிந்து
அமைப்புகள் இரண்டு வகையில் செயலாற்ற வேண்டும். ஒன்று, கோவில் வழிபாடுகளிலும், சம்பிரதாயங்களிலும் யானைகளின் பங்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது என்பதற்கான வரலாறு, இலக்கிய மற்றும் கல்வெட்டுச் சான்றுகளைத் திரட்டி, உச்ச நீதிமன்றத்தில் தாங்களும் ஒரு மனுவைச் சமர்ப்பித்து அவ்வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, கோவில் யானைகளின் நலனுக்காக, தோப்புகள், மரம் செடி கொடிகள், நீர் ஆதாரங்கள் நிறைந்த நிலங்களைக் கோட்டங்களாகத் தயார் செய்து, அங்கே கோவில் யானைகளை வைத்துப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவற்றின் தேவைக்கேற்ப உணவுகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். இவ்விஷயத்தில் தேவஸ்தானங்களுடனும், அறநிலையத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இந்தியாவில் யானைகளைப் பழக்கப்படுத்தும் பண்பாடு ஆயிரமாயிரம் ஆண்டுகள் கொண்டது. யானைகளைப் பழக்கிப் பராமரிக்கும் பாகன்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்; கௌரவமாகவும் நடத்தப்பட்டார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்போது அந்தப் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான வள ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன.
ஒவ்வொரு மாநில அரசிலும் வனத்துறையும், கால்நடைத்துறையும் இருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து ஊழலின்றி செயல்பட்டு, சட்டங்களையும் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றி, யானைக்கோட்டங்களையும், யானைப்பாகன்கள் பயிற்சி மையங்களையும் சரியாகப் பராமரித்தால் யானைகளின் நலன் பூரணமாகப் பாதுகாக்கப்படும் என்பதோடு, கோவில் சம்பிரதாயங்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் தொய்வில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்.
Leave a Reply