Posted on Leave a comment

ஊழலும் கலாசாரமும் – அருணகிரி

ஊழலும் கலாசாரமும்
  • அருணகிரி
ஊழல் என்பது இந்திய கலாசாரம் என்ற ஒரு பிரசாரம் வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் எழுப்பப்படுகிறது. வாட்ஸ் அப்பில் வலம் வரும் எண்ணற்ற தினசரித் துணுக்குகளில் நியுசிலாந்துக்காரர் ஒருவர் எழுதியதாக வரும் மடல் ஒன்று, சாதி எப்படி இந்திய கலாசாரத்துடன் இணைந்ததோ அதேபோல் ஊழலும் இந்திய கலாசாரத்தின் அம்சம் என்று பிரசாரிக்கிறது. வெறும் வாட்ஸ் அப் விஷயம் மட்டுமல்ல இது.
சில வருடங்களுக்கு முன், 2ஜி ஊழல் உச்சத்தில் இருந்தபோது, அமெரிக்காவின் புகழ்பெற்ற வால்டன் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள்இந்திய மாணவர்கள்ஒரு கட்டுரையை வெளியிட்டார்கள். அதில் இந்திய புராண நாயகர்கள் எதிரித்தரப்பை வெல்ல தந்திரோபாயங்களைக் கைக்கொள்வதை எடுத்துக்காட்டி, அதனால்தான் இந்திய அரசியல்வாதிகளும் தந்திரமாக மக்களை ஏமாற்றுகிறார்கள் எனும் வகையில் அந்தக் கட்டுரை பேசியது. கவனியுங்கள்: இதை நம் ஃபேஸ் புக் திராவிட இயக்கக்காரர்களோ வாட்ஸ் அப் புரட்சியாளர்களோ எழுதவில்லை. 2ஜிக்கான சமூகவியல் காரணங்களை ஆராய்வது என்ற பெயரில் வார்ட்டன் மேலாண்மைக் கல்லூரி இப்படிப்பட்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதுவும் தனது இந்திய மாணவர்களை வைத்து இப்படியான ஒரு கட்டுரையை வெளியிட்டது. இதற்குக் கடுமையான எதிர்ப்புக் கட்டுரைகள் இந்துக்களின் தரப்பிலிருந்து எழுதப்பட்டன.
அமெரிக்காவின் ஆரம்ப நாட்களிலிருந்தே கார்ப்பொரேட் ஊழல்களில் அமெரிக்கா பெரும் சாதனை படைத்து வந்திருக்கிறது. சுதந்திரம் அடைந்த சிலவருடங்களிலேயே அமெரிக்கக் கருவூல உதவிச்செயலராக இருந்த வில்லியம் டூயர், அமெரிக்க பாண்ட் வெளியீட்டு விஷயங்களை முன்கூட்டியே மற்ற நண்பர்களுக்குக் கசிய விட்டு அதன்மூலம் லாபம் பார்த்தார். அமெரிக்க கார்ப்பொரேட் ஊழல்
அதன் உயர்மட்ட அரசியலுடன் கலந்தே வளர்ந்தது
. 1864-68ல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் ரயில் பாதை போடுவது, அன்றைய தேதியிலேயே 100 மில்லியன் டாலர் மதிப்பில் யூனியன் பஸிபிக் ரயில்ரோட் கம்பெனியின் காண்ட்ராக்டுக்கு விடப்பட்டது. யூனியன் பஸிபிக் ரயில்ரோட் கம்பெனியின் முதலாளிகள் க்ரெடிட் மொபிலியர் கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ரயில் பாதை வேலையை அதே நிறுவனத்துக்கு சப்காண்ட்ராக்டுக்கு விட்டனர்! அரசுப்பணம் தண்ணீராகச் செலவழிந்தது. அதில் பெருமளவு, முதலாளிகளின் பாக்கெட்டுக்குப் போனது. க்ரெடிட் மொபிலியர் கம்பெனி அமெரிக்க காங்கிரஸின் செனட்டர்களுக்குத் தள்ளுபடி விலையில் ஷேர்களை விற்றது. கைம்மாறாக அரசின் நிதியுதவி தொடர்ந்து இந்த ரயில் பாதை வேலைக்கு வருமாறு அவர்கள் பார்த்துக்கொண்டனர். அன்றைய தேதியில் இதுஅறிவியல் பூர்வமாகமிகவும் நுட்பமாக நடத்தப்பட்ட ஊழல் என்று இன்றும் அறியப்படுகிறது.
அரசியல்வாதிகளுடன்
இணைந்து பெரும் ஊழல் புரிந்து பெரும்பணக்காரர்களாக ஆனவர்கள் கொள்ளைக்காரக்
கனவான்கள் (Robber barons) என்று அழைக்கப்பட்டார்கள்.
சேவை நோக்குள்ள செல்வந்தர்களாக இன்று அறியப்படும் ராக்கஃபெல்லர், ஆண்ட்ரு கார்னகி, அண்ட்ரு மெல்லன், ஜே.பி.மார்கன் போன்ற பலரும் அன்று கொள்ளைக்காரக் கனவான்களாகவே கருதப்பட்டனர். இவர்கள் அத்தனை பேரிலும் மிகக்கொடுமையான கொள்ளைக்காரக் கனவானாகக் கருதப்பட்ட ராக்கஃபெல்லர், இவர்கள் அத்தனை பேரையும் விட ஆழமான கிறித்துவ நம்பிக்கையாளராகவும் விளங்கினார். ராக்கஃபெல்லர் கட்டுப்பாட்டில் இருந்த சுரங்க கம்பெனியைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது; தொழிலாளர் கூடாரம் தீப்பிடித்துப் பெண்களும் குழந்தைகளும் உட்பட 26 பேர்கள் கருகி இருந்தனர். லுட்லாவ் படுகொலை என்று அறியப்பட்ட இந்நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது. இத்தகைய கொடும்நிகழ்வைத் தடுக்க என்ன செய்திருப்பீர்கள் நீங்கள் என்ற கேள்விக்கு ராக்கஃபெல்லர் அளித்த பதில் குறிப்பிடத்தக்கது, அவர் சொன்னதுஒன்றும் செய்திருக்க மாட்டேன்.”
உலகையே அதிரவைக்கும் அமெரிக்கப் பெரும் ஊழல்கள் இன்றுவரை தொடர்கின்றன. கடந்த 15 வருடங்களில் நிகழ்ந்த பெரிய ஊழல்களில் அரை டஜன் ஊழல்கள் (லீமேன் ப்ரதர்ஸ், வோர்ல்ட்காம், ஏஐஜி, ஃப்ரெடி மாக், டைகோ, என்ரான்) மட்டும் ஏறத்தாழ 300 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி உலக நிதியமைப்பையே ஆட்டம் காண வைத்தன.
அமெரிக்கா பிறந்ததிலிருந்து நடந்து வரும்
இந்தவகையான எந்த ஒரு ஊழலுக்கும் அமெரிக்க மேலாண்மை அமைப்புகளோ அமெரிக்க ஊடகங்களோ
அதன் பெரும்பான்மை மதமான ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவத்தைக் காரணமாகக் காட்டுவதில்லை.
இதே கதைதான் பொருளாதாரத்தில் முன்னேறிய மேற்கின் பிற வளர்ந்த நாடுகளிலும் என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் நடக்கும் ஊழல்களுக்கு அதன்கலாசாரம்என்றுமே காரணமாக்கப்படுவதில்லை. ‘மன்னனுக்குக் கொடுப்பதை மன்னனுக்குக் கொடு, கடவுளுக்குக் கொடுப்பதைக் கடவுளுக்குக் கொடுஎன்று ஏசு சொன்னதால்தான், மேற்குலகின் கார்ப்பொரேட் கம்பெனிகள், ஒவ்வொரு தரப்புக்கும் அவரவர்களுக்கு வேண்டியதை வெட்டிக் காரியம் சாதித்துக்கொள்கின்றன என்று யாரும் ஆய்வுக்கட்டுரை எழுதப் போவதில்லை. இது மேற்கின் புகழ்பெற்ற மேலாண்மை கல்லூரிகளுக்குத் தெரிந்தே இருக்கிறது.
ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் ஊழல், அதன் கலாசாரம் மற்றும் மத நம்பிக்கைகளுடன் முடிச்சுப்போடப்படுகிறது.
ஏழ்மை குறித்த ஆய்வுகளிலும் இதே போன்ற அணுகுமுறையை மேற்கின் அமைப்புகள் கையாண்டு இருக்கின்றன. கறுப்பர்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு அது அவர்கள் கலாசாரத்தினால் என்று பதில் சொல்லப்படுகிறது. மாறாக, வெள்ளையர்களின் ஏழ்மைக்கு அரசின் கொள்கைகள் காரணமாகக் காட்டப்படும்.
ஏழ்மைக்கலாசாரம் என்கிற சித்தாந்தத்தை முதலில் கட்டமைத்தது ஆஸ்கர் லிவிஸ் என்கிற மானுடவியலாளர். ஐந்து மெக்ஸிகன் குடும்பங்களின் வாழ்க்கையை அருகில் இருந்து அவதானித்து அவர் எழுதிய ‘Five Families:
Mexican Case Studies in the Culture of Poverty (1959)’
என்கிற புத்தகம், ஏழ்மை என்பதை கலாசார அம்சங்களுடன் இணைந்த ஒன்றாகக் கண்டது. இந்த நோக்கு படிப்படியாக வலுப்பெற்றது. கறுப்பர்களின் ஏழ்மைக்குக் காரணம் அது அவர்களது சோம்பேறித்தனம், வன்முறை, பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறையின்மை, போதைப்பழக்கம் ஆகியவை காரணமாகக் காட்டப்படுகின்றன. இதுவே இன்று இதன் முக்கியப் பரிணாமம்.
அரசியல் விஞ்ஞானி சார்ல்ஸ் முர்ரே இதைத் தன் பெல் கர்வ் என்கிற புத்தகத்தில் கறுப்பின மரபணுக்களுடன் தொடர்புபடுத்தினார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் துணை அதிபராகப் போட்டியிட்ட பால் ரயான், சார்ல்ஸ் முர்ரேயின் கருத்தை வழிமொழிந்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். ஏழ்மைக் கலாசாரம் என்கிற கோட்பாடு 60களில் வலுப்பெற்ற ஒன்று என்றாலும், ஏழ்மை என்பதை கலாசாரத்துடன் முடிச்சுப்போடுவது என்பது, மேற்கின் கிறித்துவச் சாய்வு பல நூற்றண்டுகளாகக் கைக்கொண்டு வரும் ஒன்றுதான்.
19-ஆம் நூற்றாண்டில் பிராட்டஸ்டண்ட் பிரிட்டிஷ் அரசின் ஆளுமைக்குட்பட்டதாயிருந்த ஐரிஷ் நாட்டில் கடும் பஞ்சம் தொடங்கியது. பஞ்ச காலத்தின்போது அதன் நிவாரண அதிகாரியாக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட சர். சார்ல்ஸ் ட்ரவல்யான் பத்து லட்சம் உயிர்களைப் பலிகொண்ட அந்தக் கொடிய
பஞ்சத்திற்கு ஐரிஷ் மக்களின் கலாசாரமே காரணம் என்றார். ஐரிஷ்
மக்கள் கத்தோலிக்கர்கள். பிரிட்டனின் ட்ராவல்யன் கத்தோலிக்கத்துக்கு எதிரான ப்ராட்டஸ்டண்டு கிறித்துவம் சார்ந்தவர். 1943ல் இந்தியாவில் காலனிய அரசின் கொள்கைகளால் கடும் பஞ்சம் உருவானபோது, அப்போது பிரதமராக இருந்த சர்ச்சிலின் எதிர்வினையும் இதே போல்தான் இந்திய கலாசாரத்தைக் காரணம் காட்டி இழித்துரைப்பதாக இருந்தது.
இதை இங்கே எடுத்துக்காட்டக் காரணம் உண்டு. ஊழல், ஏழ்மை ஆகியவற்றை ஒரு சமூகத்தின் கலாசார அம்சங்களாகக் கட்டமைப்பதில் சிலவசதிகள்உண்டு. கறுப்பர்களின் ஏழ்மைக்கான காரணம் அவர்களது கலாசாரம் என்றும், அதன் விதையாக அவர்களது மரபணுவரை கொண்டு செல்லப்படுகிறது: அதாவதுஅரசின் நீண்ட காலக் கொள்கைச் செயல்பாடுகள், அரசின் நிவாரணங்கள் ஆகியவை எதுவுமே கறுப்பர்களுக்கு உதவப் போவதில்லை, ஏனெனில் ஏழ்மை என்பது அவர்களது உள்ளுறை கலாசாரத்துடன் பிணைந்தது. மாறாக வெள்ளை இனமக்களிடையே காணும் ஏழ்மை அவர்கள் கலாசார தொடர்புடைய அம்சம் கிடையாது. வெள்ளைக்காரர்களின் ஏழ்மைக்கான காரணம், அரசின் நிவாரணத் திட்டங்கள், வேலை வாய்ப்பு மற்றும் நிதி உதவி அவர்களுக்கு இல்லாதது; எனவே இவற்றை அவர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும். இதுதான் சட்டகம். இனமேன்மை என்பதைப் பல வார்த்தைகளில் மறைத்துச் சொன்னாலும், தெளிவாகவே இந்த வாதம் முன்வைப்பது வெள்ளை இன உயர்வுவாதத்தைத்தான்.
ஊழல் என்ற இந்தியாவின் எதிர்மறை விஷயம் ஒன்றுடன், இந்திய கலாசாரம் என்கிற சமூகத்தின் சாரமான உள்ளுறை அம்சம் முடிச்சுப்போடுவதற்குப் பின்னுள்ள காரணங்களும் இதே போன்றவைதான். இது ஒரு அப்பட்டமான
கிறித்துவ மேற்கு Vs இந்து இந்தியா என்கிற இருமையை முன்வைக்கும் பிரசார அணுகுமுறை.
சாக்கடை
ஓடும் இடமெல்லாம் இந்துப்பண்பாடு என்று போர்ட் மாட்டிவிட்டால் இந்துப்பண்பாடே சாக்கடை என்று சொல்லி, தான் உருவாக்கும் அத்தனை கழிவுகளையும் அதில் கொண்டு சேர்த்து விடலாம். இதில் பலதரப்புக்கும்நன்மைஇருக்கிறது.
இந்து கலாசாரத்தால் ஊழல் நடக்கிறது என்பது 2G விஷயத்தில் அரபு நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பிய கம்பெனிகளின் பங்கைப் புகைபோடுகின்ற அதே நேரத்தில், இது, இந்திய ஊழல்வாதிகளுக்கு, ‘அதானே! நானல்ல காரணம்என்று ஆசுவாசம் தருகின்ற விஷயமாகவும் ஆகிவிடும். ஊழலுக்கான முழுப்பொறுப்பையும் அரசின் பொறுப்பில் இருக்கும் சில தனி மனிதர்கள் மட்டும் சுமப்பது சிரமம் என்றால் இருக்கவே இருக்கிறது இந்துப் பண்பாடு. தூக்கிப்போடு பழியை ராமனின்மீதும் கிருஷ்ணனின்மீதும்! யார் கேள்வி கேட்பார்கள்?
ஊழல் என்பது ஒரு சமூகத்தில் களையப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை, அதேசமயம், பொருள்மையச் சமூகங்கள் எல்லாவற்றிலும் பொருளாதார ஊழல்கள் பயிரில் களைபோல் வளர்ச்சியோடு இணைந்து வளரும் ஒன்றுதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழலை கலாசாரத்துடனும் அதன் ஜீவசக்தியாயுள்ள தொல் இந்திய மரபுகளும், இந்து நம்பிக்கைகளுடன் இணைத்துப் பேசுகையில் உண்மையில் என்ன ஆகிறது? இந்துப்பண்பாடுதான் ஊழலுக்கு அடித்தளமாய் இருந்து இந்திய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விடுகிறது என்றாகிறது. எனவே இந்தியா அதன் இந்துத்தன்மையை இழந்து மேற்கின் கலாசாரத்தை, அதாவது மேற்கு தன் கலாசார அடித்தளமாகக்கருதும் கிறித்துவத்தன்மையை ஏற்றாலொழிய இந்தியா ஊழலை ஒழித்துப் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. உண்மையில் இந்தியர்கள் தம் பாரம்பரியத்தின்மீது சுயவெறுப்புக் கொண்டு, அதையே தம் சமுதாயத்தின் அத்தனை வீழ்ச்சிக்கும் காரணமாகக் காணத் தொடங்கிவிட்டால், இந்திய மக்களை மனதளவில் தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்து விட்டால், அதில் கிறித்துவ மேற்கின் மேலாண்மையை ஏற்றுவது சுலபம் என்பதுதான் இந்தப் பிரசாரத்தின் அடிப்படை விஷத்தன்மை.
இந்துக் கலாசாரத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத நேரு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் ஆமையாய் ஊர்ந்தபோது அதுஇந்து வளர்ச்சி விகிதம்என்று பேசப்பட்டது; பொருளாதார வளர்ச்சியுடன் ஊழலும் வளரும் காலத்தில் பொருளாதார வளர்ச்சியை வடிகட்டிவிட்டு ஊழல் மட்டும் இந்துக் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டு இழித்துரைக்கப்படுகிறது. இன்று இந்துத்தன்மையை வெளிப்படையாய் முன்னிறுத்திய ஒரு கட்சி பெரும் வெற்றி பெற்று, ஊழலைக்குறைத்துஅதே சமயம்பொருளாதாரத்தில் உலகிலேயே பெரும்பாய்ச்சலையும் நிகழ்த்தும் நாடாக முன்னேறி வருகையில் எவ்வகையிலும் அதன் இந்துத்தன்மையை இந்திய வெற்றிகளுடன் தொடர்புறுத்திவிடா வண்ணம் தடுப்பதில் இடது, வலது என்று மேற்கின் பல தரப்புகளும் ஒன்று சேர்கின்றன.
நம் கலாசாரம் நம் வெற்றிகளை உலகுக்குக்கொண்டு செல்லும் புரவியாக இருந்திருக்கிறது. இந்திய கலாசாரத்தின்
அடிநாதமாக உள்ளவை இந்து விழுமியங்களும் அவற்றைக் கட்டமைத்து நூறுநூறு தலைமுறைகளாய்
கொண்டு செலுத்தி வரும் புராணங்களும்தான்.
அவற்றின்மீது இன்றைய இந்திய சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும் சுமத்தி இந்திய கலாசாரத்தை ஒரு பொதிகழுதையாகக் காட்டுவதில் மேற்கிற்கு ஒரு மேலாதிக்கத் திட்டம் ஒன்று உள்ளது.
ஊழல் நம் கலாசார அம்சம் இல்லையென்றால் அதன் காரணங்களை எப்படிப் பார்ப்பது? ஊழலை கலாசாரம் என்று சொல்லும் சமூகம் உண்மையில் ஊழலை ஏற்றுக்கொள்ளும் கையறு மனநிலைக்குத் தள்ளப்படுகிறது. ஊழலை சமூகத்தின் வெளியுறை அம்சமாகக் காணும் சமூகம், அந்த ஊழலின் பங்குதாரர்களையும், அரசு நிர்வாகத்தின் பலவீனங்களையும் அடையாளம் கண்டு, கேள்விக்குள்ளாக்கும் தெளிவை நோக்கி நகர்கிறது.
ஊழலுக்கான அடிப்படைக் காரணங்கள் உண்மையில் அரசின் நிர்வாகம் சார்ந்தவை. நிர்வாகம் முடங்குகையில் பொருளாதார இயக்கத்தை ஊழல் கையில் எடுத்துக்கொள்கிறது. பிறகு லஞ்சமும் ஊழலும் பல்கிப்பெருக நிர்வாகம் துணைபோகிறது. இதையே ஒவ்வொரு பெரும் ஊழலிலும் நாம் கண்டு வந்திருக்கிறோம்.
ஊழலைச் சமூகத்தின் கலாசாரத்திற்கு வெளியே அரசின் நிர்வாகத்தோடு இணைத்து நிறுத்துகையில், அரசை ஊழலற்ற நிர்வாகத்திற்குப் பொறுப்பாளி ஆக்குகிறோம். அதில் வழுவுகையில் அந்த அரசைக் கேள்விக்குட்படுத்தவும் தேவைப்பட்டால் தூக்கி எறியவும் ஜனநாயக அமைப்பில் நாம் தயாராகிறோம்.


ஒவ்வொரு இந்தியனும் தனக்கு அளிக்கப்படிருக்கும் எளிய ஜனநாயக வாய்ப்பின் மூலம் இந்திய கலாசாரத்தை இழிவுறுத்தும் மேற்கின் பிரசாரங்களை முறியடித்து அவற்றை மிதித்து நடந்து மேல் செல்கிறான் என்பதுதான் பெரும் நம்பிக்கையளிக்கும் விஷயமாக உள்ளது.
Leave a Reply