ஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம்
எஸ்.பி. சொக்கலிங்கம்
எதுவுமே அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. இந்தியாவிலேயே அதிக அளவில் திருத்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான். சுமார் 30,000க்கும் அதிகமான கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன. இதில் பெருவாரியான கோயில்கள் ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய கோயில்கள் புகழ் வாய்ந்தவை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் காலத்தை வென்று நிற்கின்றவை. இவற்றில் உள்ள மூர்த்திகளும், சிற்பங்களும் கீர்த்தி கொண்டவை. தமிழர்கள் கல்லிலே கைவண்ணம் கண்டவர்கள். அற்புதமான சிற்பங்கள் ஒரு புறம் என்றால், அழகான ஓவியங்கள் மற்றொரு புறம். இவை நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டவை. கருங்கற்களால் எழுப்பப்பட்ட இந்த ஆலயங்கள் ஆன்மிக விழிப்பை மட்டும் நமக்குத் தருவதில்லை. கூடவே நாம் கலையில் பெற்றிருந்த தேர்ச்சி குறித்த பெருமிதத்தையும் ஏற்படுத்துகின்றன. இவற்றின் பெருமைகளைக் கேட்கும்போது நமக்கு வானுயர வியப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
காலம் கடந்து நின்ற இந்த அற்புதங்கள் இன்று அதன் பாதுகாவலர்களாலேயே சிதைக்கப்படுகின்றன. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் நம் கண் முன்னே அழிவைச் சந்திக்கின்றன.
பழைய கோவில்களைப் புதிப்பிக்கிறோம், ஆலயத் திருப்பணி செய்கிறோம் என்று புராதனக் கோவில்களை நாசம் செய்கிறது அறநிலையத்துறை. மத்திய அரசாங்கம் 14வது நிதிக்குழுவின் மூலம் தமிழக அரசுக்குப் பல கோடி ரூபாய்களைக் கோவில் திருப்பணிக்காக ஒதுக்கியிருக்கிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறநிலையத்துறை இந்த நிதியைப் பயன்படுத்திப் புராதனக் கோவில்களைச் சீரமைப்பதாகச் சொல்லி செலவு செய்கிறது. செலவுதான் செய்யப்படுகின்றதே தவிர, கோவில்கள் சீரமைக்கப்படுவதற்குப் பதிலாகச் சிதிலமடைகின்றன.
இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை, தொல்லியல் துறையின் உதவியையும் முறையாகக் கேட்டுப்பெறுவதில்லை. ஸ்தபதிகளும் அறநிலையத்துறைக்குச் சில மறைமுகக் காரணங்களுக்காகச் சரியான வழிகாட்டுதல்கள் கொடுப்பதில்லை. இதனால் அறநிலையத்துறையின் திருப்பணியில் ஹிந்துக் கோவில்கள் சிக்கிச் சீரழிகின்றன.
கோயில் திருப்பணி செய்யக்கூடிய அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாகப் பொதுப் பணித்துறைப் பொறியாளர்கள், சாலை அமைக்கும் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விளைவு, கோயில்களின்
சிற்பங்கள் சிமெண்ட்டால் பூசப்படுகின்றன. ஓவியங்கள் வண்ணப் பூச்சுக்குள் காணாமல்
போகின்றன.
சிற்பங்கள் சிமெண்ட்டால் பூசப்படுகின்றன. ஓவியங்கள் வண்ணப் பூச்சுக்குள் காணாமல்
போகின்றன.
பொற்றாமரைக் குளங்களின் உள்ளே தரை போடப்பட்டு நீர் பம்புசெட்டின் மூலம் குளங்களுக்குள் கொட்டப்படுகிறது. விக்கிரகங்கள் பின்னமாக்கப்பட்டுக் குப்பையாகத் தூக்கி எறியப்படுகின்றன. புராதனப் பொருட்கள், ஐம்பொன் சிலைகள், நவரத்தினங்கள், ஸ்படிகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெரு முயற்சிக்குப் பின்னரே சிலவற்றை நம்மால் திரும்பப் பெற முடிந்திருக்கிறது. என்ன அவலம்!
இப்படி இத்தனை நாட்களாகக் கோயில் திருப்பணி என்ற பெயரில் நடத்தப்பட்ட அனர்த்தங்கள் யாவும் ஒரு முடிவிற்கு வந்தன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைக் கொண்ட முதல் அமர்வு பெஞ்ச் தாமே முன்வந்து புராதனச் சின்னங்கள்/கட்டடங்கள் பாதுகாப்புக் குறித்து ஒரு பொதுநல வழக்கை நடத்திவருகிறது. இதில் புராதனச் சின்னங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள், கோயில் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள், தங்களையும் மனுதாரர்களாக இணைத்துக்கொண்டு நீதிமன்றம் கொண்டுவந்த வழக்கைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அறநிலையத்துறை இந்த வழக்கினால் பெரிதும் கலவரப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தனக்கு ஆலோசனை கூற மூன்று வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அமிக்கஸாக நியமித்திருக்கிறது.
மனுதாரர்களின் வேண்டுதல்படி அறநிலையத்துறை எந்தத் திருப்பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை உத்தரவு போட்டிருக்கிறது. கூடவே புராதனக் கோவில்களைப் புனரமைக்க அறநிலையத்துறைக்குப் போதுமான அனுபவம் இல்லை என்பதால் திருப்பணி வேலைகளை மேற்கொள்ளும் பொறுப்பினை சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவிடம் கொடுக்க எத்தனிக்கிறது. இதற்காக யுனெஸ்கோவின் ஒப்புதலையும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. யுனெஸ்கோவும் இம்மாத இறுதிக்குள் தன்னுடைய குழுக்களை அனுப்பி முக்கியக் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொண்டு தன்னுடைய அறிக்கையை அளிப்பதாகச் சொல்லியிருக்கிறது.
கோயில்களின் பாதுகாப்பின்மீது அக்கறை கொண்டவர்களாலும், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலும் இன்று நம்முடைய முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற பொக்கிஷங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இது மென்மேலும் தொடரவேண்டும். இதனால் நம் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் அடையாளச் சின்னங்களும் அதன் பெருமைகளும் அடுத்த தலைமுறைகளுக்கும் தொடரும் என்பதில் ஐயமில்லை.
உசாத்துணைகள்:
http://www.finance.mp.gov.in/14fc_press_note_eng.pdf
http://www.tnhrce.org/thiruppani.html
http://www.thenewsminute.com/article/madras-hc-stops-renovation-tamil-nadu-heritage-temples-activists-say-work-’shoddy’-35096
http://www.thehindu.com/features/friday-review/not-just-brick-and-mortar/article9060404.ece
Images:
https://qph.ec.quoracdn.net/main-qimg-34b376acf152dce5cd7495aaea56e186-c?convert_to_webp=true