Posted on Leave a comment

பெர்சிபோலிஸ் – அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ – சந்திரசேகரன் கிருஷ்ணன்

பெர்சிபோலிஸ்அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ
 – சந்திரசேகரன் கிருஷ்ணன்
தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் நீண்ட வரலாற்றின் எச்சமாக இருக்கிறான் மனிதன். அச்சமூகத்தின் எதிர்காலத் துவக்கப் புள்ளியாக இருப்பவனும் அவனே. ஒரே சமயத்தில் சமூகத்தினால் உருவாக்கப்பட்டவனாகவும், சமூகத்தை உருவாக்குபவனாகவும் இருக்கும் அவன், தொடர்ந்து சமூகத்தில் தன் இருப்பை ஸ்தாபித்தபடியே அதன் கட்டமைப்பையும் செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் முனைப்பின்றிச் செய்யும் அந்தக் கட்டுமானத்தை சற்றுத் தள்ளி நின்று பார்த்தால், சமூகத்தின் உண்மையான அவலங்களும், சாத்தியங்களும் தெளிவாகத் தெரியும். அப்படித் தள்ளி நின்று பார்க்கும்போது கிடைக்கும் பற்றற்ற நடுநிலையான தரிசனத்திலிருந்தே சுய விமர்சனமும் உண்மையான சமூக மேம்பாடும் நிகழ்கின்றன.
பெர்சிபோலிஸ் என்னும் திரைப்படம், சமூகம் நோக்கி அப்படிப்பட்ட ஒரு விமர்சனத்தைத்தான் முன் வைக்கிறது. சமூகம்
அடையும் மாற்றங்களும், அம்மாற்றங்கள் சாமானியரின் வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்பையுமே இந்தத் திரைப்படம் பேசு பொருளாகக் கொண்டிருக்கிறது. இது அந்த
விதத்தில் அரசியல் விமர்சனத் திரைப்படமும் கூட.
1979ம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சி, அந்த நாட்டின் தலையெழுத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்தது. அது, மேற்கத்திய நாடுகளுக்குச் சார்பாக இயங்கிய மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு ஈரான் மாற விரும்பிய காலகட்டம். ஈரானின் எண்ணெய் வளத்தின் கணிசமானபகுதி மேற்கத்திய முதலாளிகள் வசம் செல்லத் துவங்கியது. மேற்கத்திய மக்களின் ஆதிக்கம் ஈரானியச் சமூகத்தில் கோலோச்சத் துவங்கி இருந்தது. ஈரான் தன் இஸ்லாமிய அடையாளத்தை மெல்ல இழந்து கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்தியக் கலாசாரத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. இந்த மாற்றம் இஸ்லாமிய மத குருமார்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மீண்டும் ஈரானை இஸ்லாமிய நாடாக மாற்ற அவர்கள் விரும்பினர்.
இச்சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அதிகார வெறியும், இடதுசாரி அமைப்புகளின் மேற்கத்திய முதலாளித்துவ வெறுப்பும், மன்னராட்சிக்கு முடிவு கட்ட மக்களைத் தூண்டியது. அதனால் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக ஈரான் இஸ்லாமியக் குடியரசாக உருவானது. ஆனால் அந்த மாற்றம் மக்களின் வாழ்வை மேம்படுத்தவில்லை. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அதே நேரத்தில், அது மக்களை முழுவதுமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கித் திருப்பியது. அதனால், மக்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன.
புரட்சிக்கு முந்தையக் காலகட்டத்தில் பிறந்து, பத்து ஆண்டுகள் சுதந்திரத்தை அனுபவித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்த அரசியல் நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் அடக்குமுறைகளும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதைத்தான் இத்திரைப்படம் பேசுகிறது.
இத்திரைப்படத்திற்கு இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
முதலாவது, இது ஒரு சுயசரிதை. இதன் முதன்மைக் கதாபாத்திரம், மார்ஜ்ஷியான் சத்ராபி. இவர்தான் இத்திரைப்படத்தின் இயக்குநரும்கூட. இந்தக் கதை முழுக்க முழுக்க இவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
படத்தின் காட்சிகள் முதன்மைக் கதாபாத்திரத்தின் மூன்று பருவ நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பத்து வயது சிறுமியின் பார்வை, பதின்ம வயதில் ஈரானில் இருந்து வெளியே சென்று வாழும் பெண்ணின் பார்வை மற்றும் ஈரானுக்குத் திரும்பி வந்து வாழும் இளம் பெண்ணின் பார்வை ஆகிய மூன்று பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. இப்பார்வைகளின் வழியாகச் சமூகத்தின் மாற்றங்கள் பார்வையாளனுக்குப் பகிரப்படுகின்றன.
இயக்குநரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதற்காக இத்திரைப்படம் முற்றிலும் ஆவணத்தன்மை கொண்டிருக்கவில்லை. தனித்துவமான திரைமொழி இதில் கையாளப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் நியோரியலிஸக் கூறுகளைக் கொண்டது என்றுகூடச் சொல்லலாம். படம் முழுவதும் உங்கள் அகம் எதிர் கொள்ள விரும்பாத ஒரு துயரத்தை எளிதாகக் கடந்து சென்று கொண்டிருப்பீர்கள்.
இரண்டாவது, இது ஓர் அனிமேஷன் திரைப்படம். தொழில்முறை நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. ஒருவேளை இதை மனிதர்களைக் கொண்டு வணிகத் திரைப்பட வடிவத்தில் எடுத்திருந்தால், இத்திரைப்படத்தில் தீவிரத்தன்மை கொஞ்சம் அதிகமாகி மிகவும் இறுக்கமான ஒரு திரைப்படமாக அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
உதாரணத்திற்கு, இறந்த காலச் சம்பவங்கள் முழுவதும் கருப்பு வெள்ளையில்தான் தோன்றுகின்றன. ஒரு காட்சியில், தான் சிறையிலிருந்து வெளியேறி மாஸ்கோ சென்ற அனுபவத்தை மார்ஜ்ஷியானின் சித்தப்பா விவரிக்கும்போது, பத்து வயதுச் சிறுமியான மார்ஜ்ஷியான், தேவதைக் கதைகளில் தோன்றும் சம்பவங்கள் போல் கற்பனை செய்து அதைப் புரிந்துகொள்கிறாள். அக்காட்சிகளில் இருக்கும் குழந்தையின் குதூகலம் பார்வையாளரையும் தொற்றிக் கொள்கிறது. இக்காட்சி எப்போதும்போல நடிகர்கள் நடித்திருக்கும் திரைக்காட்சியாக அமைந்திருந்தால், ஒரு வேளை அது மிக அதீத உணர்ச்சிகளைக் கொண்டு வந்து, பார்வையாளனின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கலாம்.
அதேபோல அந்தச் சிறுமியிடம் அடிக்கடி கடவுள் வந்து பேசுவார். ஆனால் அச்சிறுமி வளர்ந்த பின்னர் கடவுள்
தோன்றுவதே இல்லை.
குழந்தைகடவுள் என்ற பிம்பத்தைக் கடந்து தனக்கான வாழ்க்கையை வாழத் துவங்கியிருப்பாள். ஆனால் கடவுளின் இடத்தை அக்குழந்தையின் பாட்டி எடுத்துக் கொண்டு இருப்பாள். இவ்விரு கதாபாத்திரங்களும் முதன்மைக் கதாபாத்திரமான இயக்குநருக்கு ஓர் உற்ற நண்பனைப் போலப் படம் முழுவதும் பயணம் செய்வார்கள். பாட்டி, அற்புதமான பெண்மணி.
திரைப்படம் முழுவதும், இயக்குநரின் பார்வையிலேயே நகர்கிறது. அவர் பார்க்காத விஷயங்கள் பார்வையாளனுக்குச் சொல்லப்படவில்லை. உதாரணமாக, இயக்குநர் வியன்னாவில் வாழ்ந்த காலத்தில், ஈரானில் நடைபெற்ற சம்பவங்களின் பதிவோ, அது குறித்த கருத்துகளோ கிடையாது. அப்படி இருந்திருந்தால், அது திரைப்படத்தின் நேர்மையை நிச்சயம் பாதித்திருக்கும். வியன்னாவில் போர் அற்றச் சமூகத்தில் வாழ்ந்துகொண்டு பதிவு செய்யப்படும் போர் பற்றிய கருத்துகள் எந்த அளவிற்கு நேர்மையானதாக இருந்திருக்க முடியும்?
இத்திரைப்படத்தில், இயக்குநர் பங்கு பெறாத சம்பவங்கள் பற்றிய பதிவு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கின்றன. அச்சம்பவங்களும் காட்சிகளின் தொடர்புக்காகவும், நிகழ்வுகளைப் பார்வையாளன் புரிந்துகொள்வதற்காகவும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இச்சம்பவங்கள் குறித்த வர்ணனை, பின்னணிக் குரலாக ஒலிக்கின்றது.
இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைமொழியை நான் முதிர்ச்சியான திரைமொழி என்று கருதுகிறேன். போர் பற்றிய பதிவு இருந்தாலும் பெரிய வன்முறைக் காட்சிகள் எதுவும் கிடையாது. அரசியல் பிரசாரம் எதுவும் இல்லை. இடதுசாரி கொள்கைகளை ஆதரிக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும், பொதுவுடைமைச் சித்தாந்தம் எங்கும் பரப்பப்படவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளை நேரடியாகத் தாக்கிக் காட்சிகள் எங்கும் இல்லை. புரட்சியின் வெற்றி பற்றிய விவாதங்கள் எங்குமே இல்லை. பெண்ணின் பார்வையில் படம் இருந்தாலும் பெண்ணியக் கருத்துகள் என எதுவும் துருத்திக்கொண்டு நிற்கவில்லை.
திரைமொழி இப்படி அமைந்திருக்க முழுமுதல் காரணம், இயக்குநர் திரைப்படம் வாயிலாக அடைய விரும்பிய இலக்கு. அவர் நிச்சயம் தன் சொந்த சோகங்களையும், சமூகத்தின் அவலத்தால் அடைந்த துன்பங்களையும், பார்வையாளர்கள் முன் வைத்து நீதி கேட்கவில்லை. அவருக்குப் பார்வையாளரின் பச்சாதாபமும் தேவையில்லை. ஒரு நேர்மையான வாழ்க்கைப் பதிவாக இத்திரைப்படம்
அமையவேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். பார்வையாளனின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவன்
மனதில் ஒரு போலியான காழ்ப்புணர்ச்சியை இத்திரைப்படம் உருவாக்கவில்லை.
படம் முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் நேரடியான பாதிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, புரட்சிக்கு முன்பான, கட்டுப்பாடுகள் ஏதும் அற்ற சூழலில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வில், அடக்குமுறைகள் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தின என்பது திரைப்படம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
படத்தில் ஒரு காட்சியில், வியன்னாவிலிருந்து திரும்பிய இயக்குநர், காதல் வயப்படுகிறார். ஒரு கார் பயணத்தில், தன் காதலனுடன் கை கோர்த்துக் கொள்கிறார். ரோந்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் இதைக் கவனித்து விடுகின்றனர். அடக்குமுறையின் விளைவாக அபராதப் பணம் அல்லது கசையடி என்ற தண்டனையை இயக்குநர் எதிர் கொள்கிறார். இயக்குநரின் தந்தை அபராதம் கட்டி அவரை மீட்கிறார். அவர்கள் இருவரும் திரும்பி வரும் வழியில், அவர்களுக்கு இடையே நீண்ட மௌனம் நிலவுகிறது. அதைக் கலைக்கும் வகையில் அந்தத் தந்தை இவ்வாறு சொல்கிறார். “இதே சாலைகளில் நானும் உன் தாயும் பல நாட்கள் ஜோடியாகச் சென்றிருக்கிறோம். ஆனால் அப்போது அது வேறு ஒரு தேசமாக இருந்தது.” இப்படிச் சிறிய காட்சிகளின் மூலம் சாமானியரின் வலி பதிவு செய்யப்படுகிறது.
இதே புரட்சியின் பின்புலத்தில்தான் ஆர்கோ (ARGO – 2012) உருவாக்கப்பட்டது. ஆனால் அது ஓர் அமெரிக்க உளவு நிறுவனத்தின் வெற்றியை முன்வைத்து எடுக்கப்பட்ட படம். உண்மையில், உள்ளடக்கத்தைப் பொருத்தவரை அந்தத் திரைப்படத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் இது. ஆர்கோ திரைப்படத்தில், ஈரான் பற்றிய ஒற்றை வரி விமர்சனத்தைத் தவிர ஈரான் பற்றிய பதிவு எதுவும் இல்லை. உண்மையில், அது ஈரான் பற்றிய பதிவே அல்ல. அதற்கு ஆஸ்கர் விருது கூடக் கிடைத்தது. ஆனால், பெர்சிபோலிஸ் திரைப்படம், வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில், ஆஸ்கருக்கு இறுதிச் சுற்றுக்குக் கூட வரவில்லை. ஆனால் அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இறுதிச்சுற்று வரை வந்தது. ஆஸ்கர் என்பது உள்ளடக்கத்தையும், திரைப்படத்தின் முக்கியத்துவத்தை மட்டுமே வைத்துக் கொடுக்கப்படுவதில்லை!
இந்தப் படத்திலிருந்து நம் தமிழ்த் திரைப்படச் சமூகம் பெற வேண்டியது மிக அதிகம். இந்தத் திரைப்படம் பேசும் அளவு வீரியத்துடன் சாமானியன் மீதான அரசியலின் தாக்கத்தை நம் திரைப்படங்கள் இன்னும் பேசவில்லை. நம்மால் படைக்க முடிந்தது எல்லாம், செயற்கையான ஒரு அரசியல் நிகழ்வை உருவாக்கி, அதன் தாக்கமாகச் சித்தரிக்கப்பட்டப் பதிவுகள்தான். அவை அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வெகுஜனப் பார்வையாளனைக் கவரவேண்டும் எனத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள்.

உண்மையில், ஒரு நேர்மையான அரசியல் விமர்சன வெகுஜனத் திரைப்படம் எடுப்பதற்கு இணக்கமான சூழல் நம்மிடையே இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஒரு வேளை, மாற்றுத் திரை வடிவங்களைக் கையாள்வதன் மூலமும், திரையரங்கம் அல்லாத மாற்று வெளிகள் வாயிலாக அவற்றை எடுத்துச் செல்வதன் மூலமும் நம் திரைப்படங்கள் புதிய உச்சங்களை அடையலாம். அவற்றிற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் இப்போது இருக்கின்றன. அவற்றின் மூலம், நம் திரைப்படங்களை, நம் கலாசாரப் பின்புலத்தை அறியாதவர்கள்கூட அணுகக்கூடிய தளங்களுக்கு நாம் எடுத்துச் செல்லமுடியும்.
Leave a Reply