Posted on 3 Comments

மூத்த குயில் எஸ் ஜானகி – ரஞ்சனி ராம்தாஸ்

மூத்த குயில்
ரஞ்சனி ராம்தாஸ்
தென்னிந்தியத் திரையிசைக்கு ஒரு கலாசார, அழகியல் வரலாறு இருக்கிறது. துவங்கிய புள்ளியில் இருந்து இன்று அது வெகுதூரம் வந்திருக்கிறது. ஒவ்வொரு இசையமைப்பாளருமே அவ்வழகியல் வரலாற்றில் முக்கிய மாறுதல்களையோ, புதிய அழகியலையோ கொண்டுவந்து இணைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது புதிய பாணிகளின் வழியே திரையிசையை முன்னகர்த்தி இருக்கிறார்கள். ஜி.ராமநாதன், எஸ்.தக்ஷினாமூர்த்தி, டி.ஜி. லிங்கப்பா, கே.ராகவன், டி.ஆர்.பாப்பா, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ். பாபுராஜ், கே.வி.மஹாதேவன், ஜி.தேவராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், இளையராஜா, .ஆர் ரஹ்மான் போன்றவர்கள் அவ்வழகியகளிள் முக்கியக் கண்ணிகள் என்று சொல்லலாம்.
இவர்களின் வழியே திரையிசையில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் அடிப்படையானதாகவும் அதன் காரணமாகவே அவற்றிற்கிடையேயான தூரம் மிக அதிகமானதாகவும் இருக்கின்றன. பாடகர்கள், ரசிகர்களின் ரசனையும் இவர்களின் பாடல்கள் மூலம் ஒவ்வொரு பத்து வருடத்திலும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த மாற்றங்கள், தொழில்நுட்ப மாற்றங்களும், அழகியல்பாணிகளின் மாற்றங்களுமாகக் கலந்தே இருந்திருக்கின்றன. ஒருவகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் திரையிசையின் சாத்தியக்கூறுகளை நம் கற்பனைக்கெட்டாத அளவுக்கு விரிவாக்கியன. இது புதிய பாணிகளுக்கும், ஒலிக்கோர்வைகளுக்கும் வழிவகுத்தது.
திரைப் படப்பாடகர்களை அவர்களது திரையிசைப் பாடல்களை மட்டும் கொண்டு விமர்சிப்பது என்பது வியர்த்தமான முயற்சி. திரைப்பாடகருக்குக் கலைச்சுதந்திரம் என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதே. இசையமைப்பாளர் நினைப்பதை மிகச்சரியாகப் பாடுவதும், பாவத்தைக் குரலில் கொண்டுவருவதும் முதன்மையானவை. தம் சொந்தக் கற்பனையை முன்னிறுத்திப் பாடுவதற்கு முழுமையான சுதந்திரம் இருக்க வாய்ப்பில்லை. ஒப்புநோக்க செவ்வியல் கலைகள் கொடுக்கும் கலைச்சுதந்திரமும் அது கோரி நிற்கும் மனோதர்மமும் இங்கே செல்லுபடியாவதில்லை. இசையமைப்பாளர் நினைக்கும் பாவங்களை எவ்வளவு சரியாக வெளிப்படுத்த முடிகிறது என்பதில்தான் அவர்களது திறமை மதிப்பிடப்படுகிறது. இதனால் திரைப்படப் பாடகர்கள் ஒருவகை மதிப்பீட்டில் பாதிகலைஞர்கள் மட்டுமே.
செவ்வியல் கலைகள்
பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படையாக நடித்துக் காட்டுவதில்லை. ஆனால்,
திரையிசையில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் குரல்வழியே நடித்துக்காட்ட
வேண்டியிருக்கும். காரணம், அசல் படைப்பூக்கம் என்பது இசையமைப்பாளரைத்தான் சாரும்
. அதில் மேலதிகமான சில நகாசுகளை ஒரு பாடகர் செய்யக்கூடும், ஆனால் அதுவும், இசையமைப்பாளரின் அனுமதிக்குப் பின்னரே. எல்லாத் திரைப்பாடகர்களையும் இந்த எல்லையில் நின்றே பார்க்கவேண்டும், ஜானகி உட்பட.
ஜானகி, ரயில் பயணத்தில் நம்மைத்தொடர்ந்து வரும் நிலவு போல இந்த அத்தனை மாற்றங்களிலும் நம் கூடவே பயணித்தவர். தன்னை அத்தனை மாற்றங்களுக்கும் தகவமைத்துக்கொண்டு அந்த மாற்றத்தின் குரலாக இருப்பவர். இவரது திரை இசைப் பயணத்தின் மூலமாகவே நாம் தென்னிந்திய இசை வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து மாற்றங்களையும் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே மாறும் பாணிகளுக்கும், இசைவகைகளுக்கும் ஏற்ப நம்மை நெகிழ்த்திக்கொள்வது என்பது சுலபமல்ல. மாறிவரும் ஒலிப்பதிவுத் தொழில்நுட்பங்களுக்கேற்ப குரல் நுட்பங்களைச் செப்பனிட்டுக்கொள்வதும் கடினமானதே. உதாரணமாக, கர்நாடக இசையில் முழுப்பயிற்சிகொண்ட ஒரு குரலை நம்மால் வேறு எந்த வகையான இசை வகைக்கும் எளிதில் பயன்படுத்தமுடியாது. காரணம், அந்தக் குரல் அவ்வகைமாதிரிக்குப் பண்படுத்தப்பட்ட ஒன்று. அவ்வாறான நெகிழ்வற்ற இறுக்கமான பாடகராக இருக்கும் பட்சத்தில் ஒருவர் ஐம்பது வருடங்களுக்குத் மேலாகத் திரையிசை உலகில் கோலோச்சுவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உதாரணமாக, ‘‘இந்த மன்றத்தில் ஓடிவரும்பாடலைப்பாடிய அவரே தான்இந்த மின்மினிக்குபாடலையும் பாடியிருக்கிறார். ‘வெட்டிவேரு வாசம்பாடியேஅவரே தான்மார்கழி திங்களல்லவாவும் பாடியிருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்.
ஜானகி தொடர்ந்து மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு அவற்றின் சாதகங்களைப் பெற்றுக்கொண்டு தன்னைத் தகவமைத்துக்கொண்டதன் மூலம் தென்னிந்தியத் திரையிசை வரலாற்றில் இன்றுவரை செல்லுபடியாகும் பாடகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். ஜானகியைப்பற்றி பலரும் சொல்லும் ஒரு கருத்து உண்டு. அவர் இசையைப் பொருத்தவரை ஒரு ஏகசந்தாக்ரஹி. ஒருமுறை சொன்னால்
போதுமானது, அப்படியே புகைப்படமெடுத்தது போல அதை மறுமுறை நிகழ்த்திக்காட்டிவிடுவார்
என்பார்கள். ஒரு நல்ல கலைஞருக்கு இது மிகவும் முக்கியமானது. இளையராஜா, எஸ்.பி.பி. குறித்துச்சொல்லும்போதுஎஸ்பிபி ஒரு ப்ளாட்டிங் பேப்பர் போல. அப்படியே மொத்தமாகப் பிடித்துவிடுவார்என்பார். தான் நினைத்ததையும், அதைவிடச் சில படிகள் மேலேயும் (சுதந்திரமிருக்கும் பட்சத்தில்) பாடக்கூடிய இப்படிப்பட்ட பாடகர்களோடு வேலை செய்வது ஒரு இசையமைப்பாளருக்கு எத்தனை சௌகரியமானது.
இவரது குரல் மீது பலவகையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன, கீச்சுக்குரல், மூக்கால் பாடுகிறார், போலிக்குரலில் பாடுகிறார் என்பவை அவற்றில் முக்கியமானவை. இன்னும் சிலர் இவரது குரலில் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே குரல் தெரிகிறது என்றும் சொல்வார்கள். பொதுவாக இத்தகைய குற்றச்சாட்டுகள் அவரது சாதனைகளின் முன் செல்லாக் காசுகளாகிவிடுகின்றன. ஒரு கட்டத்தில் இவரது பாடும் முறைமையே பல நடிகைகளின் நடிப்பைத் தீர்மானித்தது. இவர் குரல் வழியே பல உணர்ச்சிகளைஉணர்வுகளை முன்னமே பாடல்களில் பதிந்துவிடுகிறார். நடிகர்கள் அதை நடித்துக்காட்டுதலே அடிப்படையில் போதுமானதாகிறது. ஒருவிதத்தில் அதீத பெண்மையைச் சுட்டுவதாகக் கருதப்படுவதால், திரையிசையைப் பொருத்தவரை ஒரு பாடகியின் குரல் சற்றே கீச்சென்று இருப்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபகாலமாக மந்திரஸ்தாயிகளில் ஒலிக்கும் பெண்குரல் அதிபெண்மையை சுட்டுவதாக மாறிவருவதையும் பார்க்கிறோம்.
இளையராஜா சில வருடங்களுக்குமுன், ‘ஜானகியின் குரல் அப்படியொன்றும் தனித்தன்மை வாய்ந்ததில்ல, அவர் பாடும் முறையிலேயே முக்கியமானதாகிறதுஎன்று சொன்னார். ஒருவிதத்தில் இது குற்றச்சாட்டுப் போல தொனித்தாலும், தன்னைத் துருத்திக்கொண்டு முன்னிறுத்தாது, இசையமைப்பாளர்களின் மனதில் உள்ளதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திப் பாடும் முறைமையைப் பாராட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாடகியாக எத்தகைய பாடலையும் பாடத் தயாராக இருக்கவேண்டும் என்றும், எந்த உணர்ச்சியையும் பாடலில் வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது என்றும், ஒரு பாடகியாகத் திரையில் வரும் பாத்திரத்தின் குரலாக ஒலிக்கவேண்டுமேயன்றி, தன்னை அதிலேற்றிப் பாடக்கூடாது என்பார். தன் குரலை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிச் சிறந்த கருவியாகப் பயன்படுத்திக்கொள்வதே அக்குரலுக்கு நாம் செய்யும் நியாயம் என்று சொல்லலாம். கத்தி மேல் நடப்பது போன்ற, கட்டுப்பெட்டித்தனங்களைக் கடந்த, அதே சமயம் மிக அதிகபட்ச மரியாதையையும் கோரிப்பெற்ற ஆளுமை அவருடையது. மிக எளிதாகத் தம்மை முன்வைக்கும், எந்த ஒரு நிமிடமும் அகங்காரம் அண்டாத பாடகியாகவே அவர் வலம் வந்தார்.
ஜானகியின் திரையிசைப் பயணத்தில் செமிக்ளாஸிக் பாடல்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. “கர்நாடக சங்கீதம் படிக்காமலேயே எப்படிப் பாடுகிறார்என்றான் என் நண்பன். “ஒரு வேளை அவர் அதைப் படிக்காததால் கூட இருக்கலாம்என்றேன். பண்பட்ட குரல்களுக்கே உடைய கட்டுப்பாடுகள், அவற்றின் சாத்தியக்கூறுகளைக் கட்டுப்படுத்திவிடுகின்றன என்று நினைக்கிறேன். மேலும் திரைப்படங்களில் வரும் கர்நாடக சங்கீதம் என்பது கர்நாடக சங்கீதம் போல உள்ளவையே இன்றி அதுவே அல்ல. ஒரு விதத்தில் கர்நாடக சங்கீதத்தை அது நடிக்கிறது எனலாம். ஸ்வர மழையாகப் பொழியும் பாடல்கள், சாட்டையைச் சுழற்றியதுபோல சங்கதிகள் வீசும் பாடல்கள் என செவ்வியலிசை சார்ந்த பல பாடல்கள் அவரது பயணம் முழுவதும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. ஜானகியின் திரையிசைப் பயணத்தில் இவ்வகை செவ்வியல் சார்ந்த பாடல்கள் பெரும் உந்துசக்தியாக இருந்தன.
ஜானகி எப்போதுமே குரல் வித்தைகள் செய்வதில் ஆர்வமுடையவராகவே இருந்திருக்கிறார். அதுவே அவர் மிகவும் சவாலான பாடல்களை எடுத்துப்பாடக் காரணமாக இருந்தது என்று சொல்லலாம். அவை அழகியல் ரீதியில் எவ்வளவு தூரம் பொருளுள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் குரலின் சாத்தியங்களுக்காகவே பேசப்படுவது. மிகவேகமாக ஸ்வரங்கள் பாடுவதிலும், அதிவேக சங்கதிகளை உச்சஸ்தாயியில் பாடுவதிலும் அவருக்குத் தன்னளவில் ஆர்வம் இருந்ததாகவே நினைக்கிறேன். அதை அவர் ஒரு தனித்துவமாக முன்னிறுத்துவதாகவே நினைக்கிறேன். உதாரணமாக சிவ சிவ என்னட நாலிகே [கன்னடம்], சிங்காரவேலனே தேவா [தமிழ்], ஆலாபனம் [மலையாளம்] போன்றவை. அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது கரணம் அடிக்கும் வித்தையை மிக லாவகமாகச் செய்திருப்பார்.
இளையராஜா மிக அதிகமாகப் பயன்படுத்திய பெண் குரல் ஜானகியுடையதாக இருக்கக்கூடும். இவரது குரலை எப்படியும் பயன்படுத்தமுடியும் என்பதை மிக விரைவாகப் புரிந்துகொண்ட இளையராஜா, தன் மனம் நினைப்பதைக் குரலில் கொண்டுவரும் இவரைத் தொடர்ந்து முன்னிறுத்தியது ஆச்சரியமில்லை. இளையராஜாவின் வரவு அப்போது முன்னனியில் இருந்த பலரைத் தாண்டி இவரது இடத்தை உறுதிப்படுத்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும் ஜானகி பெரும் ஆளுமையாக உருவெடுத்ததும் இந்தக் காலகட்டத்திலேயே.
பொதுவாகவே கிராமிய இசைப்பாடலைப் பாடுவதற்கு உச்சரிப்பிலும் பாடும் முறையிலும் மண் சார்ந்த இயல்புத்தன்மை மிகவும் முக்கியம். நாட்டுப்புறப்பாடலைப் பாடுவதற்குச் சற்றே திறந்த குரலும், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பும் உதவக்கூடும். இளையராஜா வரவினை அறிவித்த அன்னக்கிளி திரைப்படத்தில், அச்சு அசலான நாட்டுப்புறப்பாடல் பாடும் முறையை ஒத்த ஜானகியின் குரல் எல்லோரையும் கவர்ந்தது. அதைத்தொடர்ந்து இளையராஜா இசையில் வந்த பல நாட்டுப்புற இசை சார்ந்த பாடல்களை கிராமிய அழகியலிலிருந்து விலகாமல் பாடியிருப்பது இவரது குரல் வெவ்வேறு அழகியலுக்குள் தம்மைப் பொருத்திக்கொள்ளும் திறனைக் காட்டுகிறது.
ஜானகியின் குரல்
முழங்கும் குரலல்ல. அது வயலினின் மென்மையுடையது.
மிக மென்மையான உணர்ச்சிகளை மென்மையாகவே கடத்தும் குரல் அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்த மென்மையான குரலுக்காகவும், அதில் மலரும் உணர்ச்சிகளுக்காகவும் அவர் மிகவும் சிலாகிக்கப்பட்டாலும், அவரது மொழி உச்சரிப்புகளுக்காகவும் மிகவும் பாராட்டப்படுபவர். கன்னடரும், தமிழரும் அவரைத் தங்கள் மொழிக்காரர் என்றே நினைக்கும் அளவுக்கு அந்த அந்த மொழிகளில் மண்சார்ந்த உத்வேகத்துடன் பாடியிருக்கிறார். இதுவரை வந்த திரையிசைப் பாடல்களில் அந்தந்த மொழியில் மிகச்சிறந்த பாடல்களைத் தொகுத்தால் அவற்றில் ஜானகியின் பாடல்களுக்கு நிச்சயம் முக்கிய இடமிருக்கும்.
தென்னிந்திய இசையின் அடிப்படையே கமகங்கள். கமகங்கள் அறிந்தும் அறியாமலும் தொடர்ந்து நமது கிராமியப் பாடல்களிலிருந்து செவ்வியல் பாடல்கள் வரை விரிந்துகிடக்கின்றன. ஆனால் மேற்கத்திய இசைப்பாடல் பாடும்போது மிகவும் கறாராக அவற்றைத் தவிர்த்துவிடவேண்டியிருக்கிறது. ஸ்வரஸ்தானங்களை நீட்டி, முழக்கி, அசைத்து, குழைத்துப் பாடவேண்டியதில்லை. பட்டு கத்தரிப்பது போலப் பாடவேண்டும் என்பார்கள். இதில் பொருத்திக்கொள்ளமுடியாமலே பல பாடகர்களும், பாடகிகளும் தங்கள் பயணத்தை நீட்டித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இது மிகக்கவனமாகப் பயின்று ஏற்க வேண்டிய மாற்றம். சாதாரணமாக கமக சங்கீதத்திற்குப் பழகிய குரல்கள் சறுக்கிவிழும் இடமும் இதுவே. இதை மிகவும் வெற்றிகரமாகச் செய்துகாட்டியவர் ஜானகி. தொடர்ந்து செமிவெஸ்டர்ன் பாடல்களைப் பாடியிருக்கிறார். வெர்ஸடைல் பாடகர் என்பதற்கு ஆண்பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தைக் குறிப்பிடுவதுபோல, பெண் பாடகர்களில் மிகச்சிறந்த உதாரணமாக ஜானகியைக் குறிப்பிடலாம்.
எந்தவகையான பாடல்களையும் பாடத் தான் தயங்கியதில்லை என்று சொல்லும் அவர் பாடிய விரகவிரசப் பாடல்கள் சற்றேரக்குறைய 25-30 வரை இருக்கக்கூடும். அவற்றைப் பாடும்போதும் அந்தப் பாடல்களுக்கு முழு நீதி செய்யும் வகையில் பாடிக்கொடுக்கவேண்டும், இல்லையென்றால் நாம் என்ன கலைஞர் என்று ஒரு பேட்டியிலும் குறிப்பிட்டார். முகம் சுளிக்கவைக்கும் பாடல்வரிகளாக இருந்தாலும், முக்கல் முனகல் சப்தங்களாக இருந்தாலும், ஒரு பாடகராக அதையும் எவ்வித அருவருப்பும் இன்றிச் செய்துகொடுத்தவர். ஒரு கலைஞராக அந்த சுதந்திரம் அவருக்குக் கொடுக்கப்படவேண்டும். இதன் காரணமாகவே இவரைக் குறைத்து மதிப்பிடுபவர்களும், நிராகரிப்பவர்களும் இங்கு உண்டு. இசையமைப்பாளரின் / இயக்குநரின் தேவையையே இவர் கச்சிதமாகப் பிரதிபலித்தார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, இத்தகைய போலி நெறி சார்ந்த நிலைப்பாடுகள் அர்த்தமற்றதாகி விடுகின்றன, குறைந்தபட்சம், என்னளவிலாவது.
ஹம்மிங் பாடுவதற்கு ஒன்றும் பெரிய ஞானம் தேவையில்லை என்று நாம் நினைக்கக்கூடும். தற்காலம் போலல்லாது மொத்த இசைக்கலைஞர்களும் ஒருமித்து இருந்து பாடும்போது ஹம்மிங்கள் பாடுவதற்கு அதிக கவனம் தேவைப்படும். வார்த்தைகளின்றி ஓர் உணர்வைப் பிரதிபலிக்க இவை முக்கியமானதாகவும். சில சமயங்களில் வார்த்தைகளின் உணர்ச்சிவேகங்களைக் கூட்டவும் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஜானகியின் பல பாடல்களில் ஹம்மிங் மிக அழகாகச் சேர்க்கப்பட்டிருக்கும். நினைவோ ஒரு பறவை, ஆகாய கங்கை, கண்மணியே காதல் என்பது, காற்றில் எந்தன் கீதம் என்று பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இவரது பாடல்களில் ஹம்மிங் இல்லாத பாடல்களே மிகக்குறைவோ என்று நினைக்கும் அளவுக்குப் பெரும்பாலான பாடல்களில் ஹம்மிங் முக்கிய இடம்பெறுகிறது. ஒரு வயலினின் லாவகத்தோடு இவர் பாடிய கச்சிதமான ஹம்மிங்கள் இன்றும் பல பாடல்களை ஜீவனுள்ளதாக்குகின்றன. (ஜானகி பாடிய ஹம்மிங்களின் தொகுப்பு ஒன்று யூ டியூபில் கிடைக்கிறது : https://www.youtube.com/watch?v=zEqGFjUgnoI)

இவரைப் பன்முகத் திறமை கொண்ட, ஆற்றல் மிகுந்த, தேவைக்கேற்பத் தன்னை வெளிப்படுத்தும் திறமை கொண்ட வசீகரிக்கும் பாடகர் என்று சொல்லலாம். பல இசையமைப்பாளர்களின் உடனடித் தேர்வாக இருந்திருக்கிறார். பல பாடகிகளுக்குச்
சாத்தியமில்லாதவற்றைச் சாதித்துக்காட்டியிருக்கிறார். இளையராஜாவின் மாபெரும்
இசைக்கோட்டையின் மிக முக்கியமான பகுதி இவரைக்கொண்டு கட்டப்பட்டது. இப்போது
ஜானகி திரையிசைத்துரையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். தொழில்நுட்பம் நமக்களித்த வரம், இவரது பாடல்கள் நம் விரல் நுனியில் கிடைக்கின்றன என்பது. தென்னிந்தியாவில் எந்த ஒரு நிமிடமும் ஏதோ ஓர் இடத்தில், ஜானகியின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். சமகாலத்து வட இந்தியப் பாடகர்களுக்குக் கிடைக்கும் கவுரவங்களும், விருதுகளும் இவருக்குக் கிடைக்கவில்லை என்பது நம் அனைவரின் மீதான கறையாக என்றென்றும் எஞ்சியிருக்கும்.

3 thoughts on “மூத்த குயில் எஸ் ஜானகி – ரஞ்சனி ராம்தாஸ்

  1. Dr.S.Janaki Amma is the great Legend and she is very good Human Being. She treats her fans as her own Sons and Daughters, which we cannot see in Others. No one in the world can be like our Amma. Love you so much Amma….

  2. Dr.S.Janaki Amma is the great Legend and she is very good Human Being. She treats her fans as her own Sons and Daughters, which we cannot see in Others. No one in the world can be like our Amma. Love you so much Amma….

  3. எஸ்.ஜானகிக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது அவ்விருதுக்கே பெருமை அளிக்கும்…

Leave a Reply