Posted on Leave a comment

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – ராஜேஷ் குமார்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016
     ராஜேஷ் குமார்
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கு முன் அமெரிக்க அரசியல் அரங்கம் கண்டிராத பல புதிய விஷயங்கள் அரங்கேறி அச்சமூட்டுகின்றன. கொள்கை மற்றும் கட்சி ரீதியான சகஜமான பரஸ்பர வெறுப்புகளைத் தாண்டி தனி நபர் துவேஷம், பழி வாங்கல், இனப்பெருமை, மதவெறி எல்லாம் பெரிய அளவில் தலைதூக்கியிருக்கிறது. உலகத்தின் சக்திவாய்ந்த பொருளாதாரத்தின், உலகின் எதிர்காலப் போக்கையே மாற்றவல்ல சக்தி வாய்ந்த பதவிக்கான இறுதிப்போட்டியில் இருக்கும் இருவருமே சர்ச்சைக்குரிய வேட்பாளர்களாக இருக்கிறார்கள். ஒரு வழியாகத் தேர்தல் முடிந்தால் போதும் என்ற மனநிலையில், தேர்தல் நாளான நவம்பர் எட்டை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.
மிகவும் சுருக்கமாக அமெரிக்க அதிபர் தேர்தல் முறையைப் பற்றிப் பார்ப்போம். 35 வயது நிரம்பிய, அமெரிக்காவில் குறைந்தது 14 வருடங்கள் வாழ்ந்த, பிறக்கும்போது அமெரிக்கக் குடிமகனாக பிறந்த யார் வேண்டுமானாலும் அதிபர் பதவிக்குப் போட்டியிடலாம். அமெரிக்காவில் டெமாக்ரடிக் மற்றும் ரிபப்ளிகன் ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களே அதிபர் ஆக முடியும் என்ற நிலையே இதுவரை நிலவுகிறது. இரு கட்சிகளுக்கும் தேசிய கமிட்டி உண்டெனினும் அது இந்தியா போன்று வானளாவிய அதிகாரம் கொண்ட, தலைமையில் ஆரம்பித்து படிப்படியான வரிசைக்கிரம முறை கொண்ட அமைப்பு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு, தங்கள் நலன், தங்கள் ஓட்டு வங்கியின் ஆதரவு, பிறகு கட்சியின் நலன் என்பது போன்ற ஒரு ஏற்பாடு.
பொதுவாகக் கட்சி சார்ந்த தொழில்முறை அரசியல்வாதிகள்தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவார்கள். ஆனாலும் எந்த ஒரு தனி நபரும் தன்னை ஒரு பிரதான கட்சியோடு அடையாளப்படுத்திக் கொண்டு அக்கட்சி சார்பில் போட்டியிடலாம். இந்த முறை ரிபப்ளிகன் கட்சி சார்பில் வேட்பாளராகியிருக்கும் ட்ரம்ப் அப்படி திடீரென அறிவித்துக்கொண்டு போட்டியில் வந்தவர்தான்.
இந்த வருடம் ரிபப்ளிகன் கட்சி சார்பில் ட்ரம்ப் உள்ளிட்ட 12 பேரும், டெமக்ரடிக் கட்சி சார்பில் ஹில்லரி உள்ளிட்ட 3 பேரும் அதிபர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு களமிறங்கினார்கள். இப்படிக் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களில் இருந்து வடிகட்டி கட்சி சார்பில் ஒரே ஒரு பிரதான அதிபர் வேட்பாளரை முடிவு செய்ய முதலில் உட்கட்சி தேர்தல் பிப்ரவரி முதல் ஜூன் வரை மாநிலவாரியாக நடக்கும். அந்தந்தக் கட்சியை சேர்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் தேர்தலில் கலந்து கொண்டு delegates எனப்படும் வேட்பாளர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அதாவது ஹில்லரி அதிபர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் ஒரு டெமக்ரடிக் வாக்காளர் ஹில்லரி க்ளிண்டனின் பிரதிநிதிக்கு வாக்களிப்பார்.
இக்காலகட்டத்தில் வேட்பாளர்களுக்கு இடையில் கட்சி வாரியாக பல முறை விவாதங்கள் நடக்கும். அவை மீடியாவில் பரபரப்பாக விவாதிக்கப்படும். போதிய ஆதரவு இல்லாத வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள இறுதியில் இரண்டு கட்சிகளிலும் ஒன்றிரண்டு வேட்பாளர்களே எஞ்சுவார்கள். அப்படி எஞ்சும் வேட்பாளர்களில் இருந்து தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க என்று இரு கட்சிகளும் தனித்தனியாக மாநாடு நடத்தும்.
அப்படியாக டெமக்ரடிக் மாநாட்டில் பெரும்பான்மை டெலிகேட்ஸின் ஆதரவு பெற்று டெமக்ரடிக் கட்சி வேட்பாளர் ஆனவர் ஹிலரி க்ளிண்டன். ரிபப்ளிகன் மாநாட்டில் பெரும்பான்மை டெலிகேட்ஸின் ஆதரவு பெற்று ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் ஆனவர் டொனால்ட் ட்ரம்ப்.
இக்காலகட்டதிலேயே கணிசமான அளவு மக்கள் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பார்கள். முடிவெடுக்காத மக்களைத் தங்கள் பக்கம் திருப்ப இரு கட்சிகளின் பிரதான வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். இருவருக்கும் இடையில் மூன்று முறை நேருக்கு நேர் விவாதங்களும் நடைபெறும்.
நவம்பர் 8 அன்று பொதுத்தேர்தல். ஆனால் பெரும்பான்மை மாநிலங்களில் early voting என்ற முறையில் பல வாரங்கள் முன்பிருந்தே வாக்களிக்கலாம். நவம்பர் 8க்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும். தேசம் முழுவதும் பதிவான வாக்குளில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றவர் அதிபர் என்று முடிவு செய்யப்படுவதில்லை. பதிலாக, மாநில வாரியான எலக்டோரல் வாக்குகள் என்ற முறைப்படி அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அமெரிக்காவில் 50 மாநிலங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை மாறுபடும். கலிஃபோர்னியா மாநிலத்தின் மக்கள் தொகை 3.9 கோடி, வயோமிங் மாநிலத்திலோ 5.8 லட்சம். ஆகவே சமமான பிரதிநிதித்துவம் அளிக்க ஏதுவாக, மாநில வாரியாக மக்கள் தொகைக்கு ஏற்ப எலக்டர்ஸ் (electors) நம்பர் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கலிஃபோர்னியா எலக்டோடர்ல் வாக்குகள் எண்ணிக்கை 55. வயோமிங் 3. அதிபர் தேர்தல் முடிந்ததும் மாநில வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அந்தந்த மாநிலத்தில் அதிகளவு வாக்குகள் பெறும் வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் மொத்த எலக்டோரல் வாக்குகளும் அளிக்கப்படும். இறுதியில் 50 மாநிலங்களுக்கும் உள்ள மொத்த எலக்டோரல் வாக்குகளான 538ல் பெரும்பான்மை 270 வாக்குகளைப் பெறுபவர் அமெரிக்காவின் அடுத்த அதிபர்.
***
டெமக்ரடிக் கட்சி வேட்பாளர் ஹில்லரி க்ளிண்டன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி அரசியலில் இருப்பவர். கல்லூரி காலத்திலேயே சமூகச் செயல்பாட்டாளராகப் பல விஷயங்களை முன்னெடுத்தவர். அவர் கணவர் பில் க்ளிண்டன் அர்கான்ஸா மாநில கவர்னராக இருந்த காலத்தில் அர்கான்ஸாவின் முதல் பெண்மணியாக பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். பிறகு அமெரிக்காவின் முதல் பெண்மணியானார். ஒபாமா அரசாங்கத்தில் வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்தவர். 30 வருடச்
சாதனைகளோடும் அத்தனை வருடச் சர்ச்சைகளோடும் களத்தில் இருக்கிறார்.
ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு தொழிலதிபர். நேரடி அரசியலுக்குப் புதியவர். சில வருடங்கள் முன்பு வரை, ரிபப்ளிகன் கட்சி விசுவாசியோ, குறைந்தபட்சம் ரிபப்ளிகன் கட்சியின் அனைத்து அடிப்படைக் கொள்கைகளையும் ஆதரிப்பவரோ கூட அல்ல. ஒபாமா அதிபர் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட 2008ம் வருடத்திலிருந்து, ஒபாமா அமெரிக்காவில்
பிறக்கவில்லை, அவர் ஒரு கென்யர் என்பன போன்ற இனரீதியான பொய்க் குற்றச்சாட்டுகளை
விடாமல் பரப்பியதன் மூலம் அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டவர். ட்ரம்ப் என்றாலே
சர்ச்சை என்ற அளவில் களத்தில் இருக்கிறார்.
டெமக்ரடிக் வேட்பாளராக ஹில்லரி ஆவார் என்பது ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட விஷயம். ஆனால் ரிபப்ளிகன் வேட்பாளராக ட்ரம்ப் ஆனது முற்றிலும் எதிர்பாராதது. இன்றுவரை பொதுமக்கள், சமூக அறிவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியாத புதிர் ட்ரம்ப் நிகழ்ந்தது எப்படி என்பதுதான்.
அனைத்து நாடுகளையும் போலவே அமெரிக்காவிலும் அரசியல் அமைப்பின் மீது ஏமாற்றமும் கோபமும் இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், மருத்துவக் காப்பீடு போதாமைகள், கள்ளக் குடியேற்றப் பிரச்சினை, சிதிலமாகும் உள்கட்டமைப்பு, பொறுப்பற்ற முறையில் செலவிடப்படும் வரிப்பணம் ஆகிய முக்கியப் பிரச்சினைகள் எவற்றிலும் அக்கறை இல்லாமல் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துத் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே செயல்படும் அரசியல்வாதிகள் மீது மக்கள் பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்.
தான் ஒரு தொழில்முறை அரசியல்வாதி அல்ல. கார்ப்பரேட்களின் நன்கொடைகளை வாங்கிக்கொண்டு பிரதியுபகாரமாக கார்ப்பரேட் நலன்களுக்காக மட்டுமே பணியாற்றும் தொழில்முறை அரசியல்வாதிகளால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. கார்ப்பரேட் நன்கொடைகள் தேவைப்படாத, தொழில்முறை அரசியலுக்கு முற்றிலும் வெளியாளான தான் மட்டுமே மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்என்று சொல்லி Make America Great
Again
என்ற கவர்ச்சியான கோஷத்துடன் களமிறங்கினார் ட்ரம்ப்.
வேறொரு நல்ல தலைவராக இருந்திருந்தால் சுலபமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க முடியும். ஆனால் ட்ரம்ப் மோசமான தனித்துவமானவர். முதல் பேரணியிலேயே கள்ளக் குடியேற்றப் பிரச்சினையைக் கையில் எடுத்துமெக்சிகோ தனது குடிமக்களை அனுப்பும்போது சிறந்தவர்களை அனுப்புவதில்லை. அது ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்சினை கொண்ட மனிதர்களை அனுப்புகிறது. அவர்கள் வரும்போது போதை பொருட்களையும், குற்றங்களையும் சுமந்து வருகிறார்கள். அவர்கள் ரேப்பிஸ்டுகள்என்று ஆரம்பித்தபோது ஏற்பட்ட அரசியல் அதிர்வு அசாதாரணமானது.
ஹில்லரி க்ளிண்டன் மீது சர்ச்சைகள் உண்டு.
2012ல் லிபியா அமெரிக்கத் தூதரகத் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கத் தூதர் ஸ்டீவன்ஸ் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தூதரகம் தாக்கப்படலாம் என முன்பே வெளியுறவுத்துறைக்குக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. கோரிக்கைகள் கீழ்மட்ட அளவிலேயே பரிசீலிக்கப்படும், அதில் தனக்கு நேரடிப் பொறுப்பு இல்லை எனினும் வெளியுறவுத் துறையின் செயலாளர் என்ற வகையில் பிசகுக்குத் தான் தார்மீக பொறுப்பேற்பதாக ஹில்லரி அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கினர். பல விசாரணைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டுப் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. தூதரின் மரணத்திற்கு ஹில்லரிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன.
வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்தபோது அரசாங்க மின்னஞ்சல் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான வெளியுறவுத்துறை சர்வர்களின் மூலம் செய்யாமல் தனது தனிப்பட்ட உபயோகத்துக்கு என்று வைத்திருந்த வீட்டு சர்வர்களின் மூலமாகச் செய்தார். ரகசியக் கோப்புகளை பாதுகாப்பு இல்லாத வகையில் பரிமாறிக்கொண்டது தேசத்துரோக குற்றம் என்று ஹில்லரி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
ஹில்லரியின் கணவர் பில் க்ளிண்டனின் நடத்தையும் ஒரு முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் மட்டுமின்றி வேறு சில பெண்களிடமும் பில் க்ளிண்டன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பதும், அந்தப் பெண்களை அடக்கி வைத்ததில் தன் கணவரைக் காப்பாற்றும் வகையில் நடந்துகொண்டதில் ஹில்லரிக்கும் பங்கு இருந்தது என்பதுமே குற்றச்சாட்டுகள்.
ஆனால் சர்ச்சை ட்ரம்ப்தான்.
விவாகரத்தும் மறுமணமும் சாதாரணமாக நடக்கும் நாடுதான் என்றாலும் உயரிய பதவிக்கு வருபவர்களின் திருமண வாழ்வு சர்ச்சையற்றதாக இருக்கவேண்டும் என்பதையும், ஒரே ஒரு கணவன்/மனைவியுடனான வாழ்க்கையை ஒரு எழுதப்படாத தகுதியாகவுமே பார்த்து வருகிறார்கள். டிரம்ப் தற்போது வாழ்வது மூன்றாவது மனைவியோடு. முதல்முறை விவாகரத்துக்கான காரணம் ட்ரம்பின் கள்ளக்காதல். தன்னை ட்ரம்ப் தன் விருப்பமில்லாமல் வன்முறையாக பலாத்காரம் செய்தார் என்று முதல் மனைவி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக நியூயார்க் நீதிமன்றத்தில் ட்ரம்ப் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தவிரவும் இதுவரையான அமெரிக்க அரசியல் கலாசாரத்துக்கு முற்றிலும் எதிராக, பொதுவெளியில் பேசப்படாத, யாரும் பேசத்துணியாத ஆபத்தான ஒரு மொழியில் அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். பெண்கள், முஸ்லிம்கள், சிறுபான்மையினர், அரசியல் எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள், நிருபர்கள், உடல் ஊனமுற்றவர்கள், ராணுவத்தினர், நீதிபதிகள் என்று யாரும் அவரது அநாகரிகமான கீழ்த்தரமான மொழியில் இருந்து தப்ப முடியவில்லை.
அனுதினமும் அவரது
வெற்று ஆர்ப்பரிப்புகளும், சவடால் கோஷங்களும், சவால்களும் தொடர்கின்றன. தான்
அறிமுகப்படுத்தும் திட்டங்கள் செயல்வடிவம் பெறச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா
இல்லையா என்பது குறித்து அவர் அக்கறை கொள்வதில்லை.
மனதில் தோன்றியபடியெல்லாம் பேசுகிறார். பெரும்பாலும் பொய். பொய்யை ஆதாரபூர்வமாகச் சுட்டினால் அதற்குப் பதிலாக வேறொரு பொய். கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் தொடர்பற்று அலைபாய்ந்து கடைசி வரையில் பதிலைத் தவிர மற்ற அனைத்தையும் பேசும் அவரது பேச்சு இங்கே வெகு பிரபலம்.
ஆச்சரியமாக ஒரு சாரார் அவர் சொல்லும் எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டனர். அவருடைய ஓட்டு வங்கி, கல்லூரி செல்லாத வெள்ளை இன மக்கள். இது மட்டுமின்றி இன்னொரு ஆபத்தான கூட்டமும் ட்ரம்பின் பின் அணிதிரள ஆரம்பித்தது. அது, காலப்போக்கில் தாம் இழந்துவிட்டதாகக் கருதும் இனப்பெருமையை மீட்க வந்ததாக ட்ரம்பை நினைக்கும் இனவாதக் கூட்டம்.
வெள்ளை இனவாதக் கூட்டம்தான் என்றில்லை. இந்தியர்களில் ஒரு சாரார் ஏன் ட்ரம்பை ஆதரிக்கிறார்கள் என்று நியூயார்க்கில் NDTV கண்ட பேட்டியில் Indian Americans
for Trump 2016
என்ற அமைப்பைச் சேர்ந்த நியூயார்க் நகர டாக்டர் சுதிர் பாரேக் சொல்கிறார் ’…Our family
values are the same as Republican family values. Anti-abortion. Anti…
certain…I mean.. gender. We relate more towards republicans. Because we are
affluent community. We are not poor community like spanish community or other
communities that are struggling…’
ட்ரம்ப் ஆதரவு இந்தியர்களில் இன்னொரு பிரிவோ ட்ரம்பின் முஸ்லிம் வெறுப்பு காரணமாக ட்ரம்பை விரும்புபவர்கள். இன்று தனது சுயநலத்துக்காக முஸ்லிம்களை எதிர்க்கும் ஒருவர் நாளை அதே சுயநலத்துக்காக ஹிந்துவை நோக்கியும் வெறுப்பைக் கக்குவார் என்பதை அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.
***
ஒரு நாகரிக சமூகம் வெறுக்கக்கூடிய குணாதிசயங்களைக் கொண்ட ட்ரம்ப் போன்ற ஒருவரின் எழுச்சி இந்த எலக்ஷனின் மிகப்பெரிய ஆச்சரியம். ட்ரம்பின் வாக்கு வங்கி கட்சி சார்ந்தது அல்ல. சுயநல அரசியல்வாதிகளை எதிர்ப்பவர்களும் அல்ல. ஏனெனில் ட்ரம்பைவிட சுயநலவாதி யாரும் இல்லை என்பது அப்பவிகளுக்குக் கூடத் தெரியும். எனில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் யார்?
அமெரிக்கா போன்ற பன்முகக் கலாசாரம் கொண்ட சமூகத்தில் வேகமாக மாறி வரும் சமூக அமைப்பை ஏற்கவும் முடியாமல் அதே சமயத்தில் அதை மறுக்கவும் முடியாமல் ஒரு ஜனத்திரள் இருக்கிறது. இனம் சார்ந்த தமது பாரம்பரியப் பெருமையும் காலகாலமாகத் தான் பின்பற்றிய மதம் சார்ந்த நம்பிக்கைகளும் கண்ணெதிரே நீர்த்துப்போவதைக் காணச்சகியாமல் ஆத்திரத்தை அடியாழத்தில் புதைத்து வைத்திருந்த கூட்டம் அது. அவர்கள் கட்சி பேதமில்லாமல் பரவலாக இருந்தார்கள். அவர்களுக்கு ட்ரம்ப் நம்பிக்கையளிக்கிறார். அவர்களின் பயத்தைத் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர்கள் கேட்க விரும்பிய மொழியைப் பேசுகிறார். வெளியே இருந்து வரும் அந்நிய சக்திகளால் கலாசாரத்துக்கு மட்டுமல்ல, உடைமைக்கும் உயிருக்கும் கூட ஆபத்து என்று அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வுகளுக்கு ஒரு முகம் கொடுக்கிறார்.
அவரின் வாக்குறுதிகள் ஒரு சர்வாதிகாரியின் நடவடிக்கைகளோடு பொருந்தி வருகிறது. அந்தக் கூட்டம் விரும்புவதும் அதைத்தான். போர்க் குற்றம்
என்றாலும்கூட தீவிரவாதிகளின் குடும்பத்தை, பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரையும்
பூண்டோடு அழிப்பேன் என்ற
பிரகடனம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. மதச் சுதந்திரத்தை அரசியல் சாசனத்திலேயே அஸ்திவாரமாக்கிக் கட்டப்பட்ட நாட்டில்முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அனைவரும் நுழையத் தடை விதிப்பேன், மசூதிகளை மூடுவேன், தேசிய அளவில் முஸ்லிம்களைக் கண்காணிப்பதற்கான ஒரு தகவல் தளம் அமைப்பேன்என்ற சவடால்களை ஆரவாரத்தோடு வரவேற்கின்றனர்.
உலகமயமாக்கப்பட்ட சூழலில், காணாமல் போன மேனுவல் லேபர் வேலைகள் இனி திரும்பச் சாத்தியமேயில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். இருப்பினும் குடியேற்றம், பொருளாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு என்று எல்லாவற்றிலும் ஆறுதலான பொய்யைத் தற்காலிகமாகவேனும் அவர்கள் கேட்க விரும்புகிறார்கள்.
ஜனநாயகம் ஒரு சர்வாதிகாரியிடம் கையளிக்கப்படும் ஒரு வரலாற்றுத் தருணத்தை அமெரிக்கா கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருக்கிறது. தான் ஜெயித்தால் ஹில்லரியைச் சிறைக்கு அனுப்பி வைப்பேன், இல்லையெனினும், அரசியலமைப்பின் 2வது திருத்தம் தரும்ஆயுதம் ஏந்தும் உரிமையின்ஆதரவாளர்கள் ஹில்லரியின் உயிருக்கு ஆபத்தாக எதாவது செய்யலாம் என்றெல்லாம் பேசி வன்முறையை விதைக்கிறார். அரசியலில் தோற்பதைக் கௌரவமாக ஏற்றுக்கொள்ளும் கலாசாரம் மிகுந்த நாட்டில், தான் தோற்றால் அதற்குச் சதிதான் காரணமாக இருக்க முடியும் என்றும் தன் தொண்டர்கள் வாக்குச்சாவடிகளில் சென்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
***
இன்னொரு பக்கத்தில், அதிபர் பதவிக்கான
ஆகச்சிறந்த வேட்பாளர் ஹில்லரி அல்ல என்பது உண்மைதான். ஆனால்
துரதிர்ஷ்டவசமாக, மாற்று வேட்பாளர் ட்ரம்ப் அதிபராவது ஒரு மிகப்பெரிய வரலாற்றுப்பிழையாக முடியும்.

ட்ரம்ப் தோற்றால் அது ட்ரம்புக்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை. தனக்குக் கிடைத்த அளப்பரிய விளம்பரம்கொண்டு கணக்கிட முடியா வருமானத்தை ஈட்டிவிடுவார். ஆனால் ட்ரம்ப் ஜெயித்தால் ட்ரம்ப் தவிர்த்த வேறு யாருக்குமே அது நன்மையல்ல. God Bless America என்று சொல்வார்கள். நிஜமாகவே உலகின் அனைத்துக் கடவுள்களும் ஆசிர்வதிக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. நவம்பர் 8ல் அமெரிக்கா ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது சபிக்கப்பட்டிருக்கிறதா என்பது முடிவாகும்.
Leave a Reply