Posted on Leave a comment

களங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் – ஆமருவி தேவநாதன்

‘பேச்சுரிமை மறுக்கப்படுகிறது’, ‘கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது’, ‘சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’, ‘பாசிச அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்படுகின்றன’ போன்ற கூக்குரல்கள் கடந்த இரு ஆண்டுகளாக ‘அறிவுஜீவி’களால் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ‘மனம் உடைந்து’, முன்னர் அரசிடமிருந்து பெற்ற விருதுகளைத் திருப்பித்தர பேரறிவாளர்கள் முனைந்து செயல்பட்டதும், இது உண்மை என்று நம்பிய அயல்நாட்டுப் பத்திரிகைகள் ஓலமிட்டு அழுததும் நாம் சமீபத்தில் கண்டவை.

அப்படிக் கூக்குரலிட்டவர்களில் முதன்மையானவர் நயந்தாரா சேஹல் என்னும் எழுத்தாளர். இவர் பண்டித நேருவின் உறவினர். தனக்கு அளிக்கப்பட்ட சாஹித்ய விருதைத் திரும்ப அளித்தார் இந்த எழுத்தாளர். இவரும், இவரைப்போன்ற பலரும் அடிக்கடிப் பேசிவரும் மொழி, ‘பாரதத்தில் பேச்சுரிமையை நிலை நாட்டியவர் நேரு; அவர் கடைசி வரை பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுரிமை என்பதையே முழுமூச்சாகக் கொண்டிருந்தார். அவரது கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன’ என்பதே. அது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம்.

விடுதலை அடைந்த பின் 17 ஆண்டுகள் பாரதத்தை வழிநடத்திய பண்டித நேரு அவர்கள், பத்திரிகை சுதந்திரம் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பலமுறை, பல கூட்டங்களில் சொல்லியே வந்திருந்தார். மார்ச் 8, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது,(1) நேரு பேசியது: “நாங்கள் பத்திரிகைகளிடம் அளவுக்கதிகமாகவே நீக்குப் போக்காக இருந்து வருகிறோம். அவர்கள் எங்கள் கொள்கைகளுக்கு எதிராக எழுதினாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதைத் தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்றார். நாடு அன்று இருந்த சூழலில் அவர் அப்படிப் பேசியது அவரைப் பெரிய முற்போக்காளர் என்றே காட்டியது.

பின்னர் டிசம்பர் 3, 1950 அன்று நாளேடுகளின் ஆசிரியர்கள் கூட்டத்தில் நேரு பேசியது மிக முற்போக்கான ஒன்றாகப் பார்க்கப்பட்டது(2). “பத்திரிகைகள் எடுத்துக்கொண்டுள்ள உரிமைகள் அளவுக்கதிகமானவை, ஆபத்தானவை என்று அரசு நினைத்தாலும், பத்திரிகைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை… அடக்கப்பட்ட, சுதந்திரங்களற்ற ஊடகங்களைக் கொண்டிருப்பதைக்காட்டிலும், ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக் கூடிய, கட்டுப்பாடற்ற சுதந்திரங்களைக் கொண்ட இதழ்களை இயங்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடே” என்றே பேசினார்.

ஆசிய ஜோதி பண்டித நேரு அவர்களின் வாக்கில் கருத்துச் சுதந்திர தேவி நடமாடாத நாளே இல்லை என்னும்படியாக, பெருவாரியான பொதுக்கூட்டங்களில், பத்திரிகையாளர் சந்திப்புக்களில் என்று பல நேரங்களில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

நாட்டிற்குத் தீமை விளையும் என்றாலும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் காப்போம் என்பதாக இருந்த நேருவின் நிலைப்பாடு ஓராண்டிலேயே தலைகீழாக மாறியது.

சென்னையில் இருந்து ரொமேஷ் தாப்பர் என்பார் நடத்திய ‘க்ராஸ் ரோட்ஸ்’ என்னும் இடதுசாரிப் பத்திரிகை நேருவின் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியபடி இருந்தது. இது காங்கிரஸாருக்குப் பெரும் நெருடலாகவே இருந்து வந்தது. இப்பத்திரிகையை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து, ‘அரசியலமைப்புச் சட்டத்தின் படி பேச்சுரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை மறுத்து பத்திரிகையைத் தடை செய்ய இயலாது’ என்று தீர்ப்பளித்தது(3). இது காங்கிரஸ் அரசையும் நேருவையும் பாதித்தது.

அதேநேரம் பஞ்சாப் அரசு ‘ஆர்கனைசர்’ என்னும் பத்திரிகையையும் தடை செய்ய வேண்டி பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. சென்னை வழக்கு போன்றே ‘அடிப்படை உரிமை’யை மறுக்க முடியாது என்னும் விதமாக இந்த வழக்கும் தோல்வி அடைந்தது.

இந்த இரு தீர்ப்புகளும் காங்கிரஸ் அரசை மிகவும் பாதித்தன. ‘அடிப்படை உரிமை’ என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. பலவாறு குழம்பிய காங்கிரஸ் மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடிவெடுத்தது. ஆம். ஜனவரி 26, 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், ஓராண்டுக்குள், முதல் முறையாக, பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் என்னும் அடிப்படை உரிமைகள் விஷயமாகத் திருத்தப்பட வேண்டும் என்று முடிவானது. இந்த முயற்சியை முன்னெடுத்தவர், அதுவரை பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலனாக அறியப்பட்ட நேருவேதான்.

மே 10, 1950 அன்று சுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மே 29 அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது நேரு, “பத்திரிகைச் சுதந்திரம் என்பது கட்டற்றது அல்ல. அதற்கான கட்டுப்பாடுகளுக்குள் அது அடங்குவதாக இருக்கவேண்டும். நடைமுறையையும், நாட்டின் சட்டங்களையும் மனதில் கொண்டு பத்திரிகைகள் நடந்துகொள்ள வேண்டும்”(4) என்றார். ஜூன் 18, 1951ல் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது சட்டத் திருத்தம்.

‘கட்டுப்பாடற்ற சுதந்திரம்’ என்பது அல்ல என்றாகி, ‘வரைமுறைகளுக்குள் அடங்கும் சுதந்திரம்’ (Reasonable Freedom) என்று ஆனது. 1950 டிசம்பர் மாதம் துவங்கி 1951 ஜூன் மாதத்திற்குள் கருத்துச் சுதந்திரம் மலை முகட்டிலிருந்து அதல பாதாளத்தில் விழுந்தது.

பாரதத்தில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி நூல்கள் தடை செய்யப்படும் போதும், இதே ‘நேரு கொடி’ தூக்கப்படும். ஆனால் எழுத்தாளரான நேருவின் காலத்திலேயே நூல்கள் தடை செய்யப்பட்டன என்பதை யாரும் வெளியே சொல்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி நோய் பரவுகிறதோ என்னவோ.

நேரு காலத்தில் தடை செய்யப்பட்ட நூல்கள் இவை:

Nine hours to Rama – Stanley Wolpert

1962ல் இந்திய அரசு, கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய  ‘Nine hours to Rama’ என்னும் நாவலைத் தடை செய்தது.  மஹாத்மா காந்தியின் இறுதி நாள் பற்றிய புனைவு நூலான இது, அரசு, காந்திக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்னும் கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது.

Lotus and the Robot – Arthus Koestler

ஆர்தர் கோஸ்லர் என்பார் எழுதிய ‘Lotus and the Robot ‘ என்னும் நூலை 1960ல் இந்திய அரசு தடை செய்தது. கோஸ்லர் தனது ஜப்பானிய மற்றும் இந்தியப் பயணங்களைப் பற்றி எழுதிய இந்த நாவலில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இருண்ட எதிர்காலமே இருப்பதாக எழுதியிருந்தார்.

The Heart of India  – Alexander Campbell

அலெக்ஸாண்டர் கேம்பெல் எழுதிய ‘The Heart of India’ என்னும் நூல், இந்தியாவின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளைக் கேள்வி கேட்பதாக இருந்தது. நேரு பற்றியும், காங்கிரஸ் கட்சி பற்றியும் அவதூறான கருத்துக்களை இந்த நூல் கொண்டிருந்தது.

Lady Chatterle’s Lover – D.H.Lawrence

டி.எச்.லாரன்ஸ் எழுதிய ‘Lady Chatterle’s Lover – D.H.Lawrence’ என்னும் நூலில் பாலியல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பிரிட்டன் முதலில் தடை செய்தது. பின்னர் தடை நீக்கப்பட்டாலும், இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நூலைத் தடை செய்தது. ஆயினும் இந்தத் தடையில் நேருவின் பங்கு பற்றி தெரியவில்லை.

பிறந்த குழந்தையைப் பாதுகாக்க வேண்டி சில முன்னேற்பாடுகள் செய்வது போல், விடுதலை அடைந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் போக்குடைய ஏடுகளை நேரு அடக்கி வைத்து நாட்டைக் காப்பாற்ற முயன்றார் என்று நாம் இன்று நினைத்துப்பார்க்கலாம். ஆனால் அதேபோல் இன்னும் பல மடங்கு ஊறு விளைவிக்கக்கூடிய விஷமப் பிரசாரம் செய்யும் ஊடகங்கள் நாட்டில் பெருகிவிட்ட நிலையில், ஊடக தர்மம் என்பதே தேசியத்தை எதிர்ப்பதுதான் என்னும் விதமாக ஆகிவிட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவது தெரியும் நிலையிலும்கூட, அவர்களை அடக்கவென்று சட்டங்களில் மாற்றங்கள் ஏதும் நடைபெறாத தற்காலத்தில், ‘கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்னும் கூக்குரல் எழுவது என்ன நியாயம்?

விரைவில் உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கும் வேளையில், கருத்துச் சுதந்திரப் போராளிகள் மறு அவதாரம் எடுக்கலாம். விருதுகளைத் திரும்ப வழங்கும் ஆராதனைகள் துவங்கலாம். அப்போது நாம் நினைவில் கொண்டு கேட்க வேண்டிய கேள்வி: கருத்துச் சுதந்திரத்தை முதலில் களங்கப்படுத்தியது யார்?

அடிக்குறிப்புகள்:

(1), (2) மற்றும் (4) –  https://www.sarcajc.com/Nehru_on_Indian_Press.html
(3)  https://indiankanoon.org/doc/456839/

Leave a Reply