Posted on Leave a comment

சங்கப் பாடல்களின் ‘கவிதை’ – ஜடாயு

(1)

நவீன வாழ்க்கையில் மனிதன் முழுவதுமாக அன்னியப்பட்டுப் போய் விட்டான். அதன் கசப்புணர்வும் விரக்தியும்தான் நவீனத்துவ இலக்கியம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக எல்லா இலக்கிய விமர்சகர்களும் கூறுகிறார்கள். இந்தப் புறநானூற்றுப் பாடலை வாசிக்கும்போது, எல்லாக் காலகட்டங்களிலும், சில மனிதர்களுக்காவது நேர்வதுதான் அது என்று தோன்றுகிறது. அனேகமாக அவர்கள்தான் நல்ல கவிதைகளையும் எழுதுகிறார்கள்.

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.

– புறநானூறு 193 (ஓரேர் உழவனார்)

உரித்த தோலைப் பரப்பியது போன்ற
நீண்ட வெளிறிய சேற்று நிலத்தில்
ஒருவன் துரத்தி வரும் மானைப் போல
ஓடிப் பிழைக்கவும் கூடுமோ
சுற்றி நிற்கும் வாழ்க்கை தடுக்கும் போது.

இந்தப் பாடலுக்கு உரை கண்ட உ.வே.சா உள்ளிட்ட தமிழறிஞர்கள் அத்தனை பேரும், ‘ஒக்கல் வாழ்க்கை’ என்பதற்கு சுற்றத்தாருடனே கூடி வாழும் இனிய இல்வாழ்க்கை என்று பொருள் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாழ்க்கை இல்லாதவர்களுக்கே துறவும் தவ ஒழுக்கமும் தகும்; அந்த இனிய வாழ்க்கையை உடையவர்கள் துறவு நெறியில் ஓடிச் சென்று உய்தல் கூடாது. இதுதான் புலவர் கூறும் கருத்து என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்துபோன ஒருவனின் புலம்பலாகத்தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது. நூற்றாண்டுகள் கழித்தும் இந்தக் கவிதை வழியாக வந்து நம்மைத் தாக்குகிறது அந்த சங்கப் புலவனின் தனிமை.

ஓர் எளிய வாசகன் கூடத் தீண்ட முடிந்த கவிதையின் உள்ளத்தை பண்டித மனங்கள் பல நேரம் தவற விட்டு விடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம்.

(2)

சங்கப் பாடல்களின் இயற்கை வர்ணனைகள் எல்லாம் வரிகளை நிரப்புவதற்காகவோ அல்லது சூழலைப் பற்றிய தகவலைத் தெரிவிப்பதற்காகவோ சொல்லப்பட்டவை அல்ல. அவை அந்தப் பாடலின் உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்தவை. தனியாகத் தொக்கி நிற்பவை அல்ல. உண்மையில் இந்த நுட்பமும் வசீகரமுமே இப்பாடல்களைக் ‘கவிதை’யாக்குகிறது. சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்த ஏ.கே.ராமானுஜன் Interior landscape (அகநிலக் காட்சி) என்ற அழகிய சொல்லால் இதைக் குறிப்பிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஒருசில கவிதா ரசிகர்கள் தவிர்த்து சங்கப் பாடல்களைப் ‘படிக்கும்’ பெரும்பாலான தமிழர்களுக்கு அன்றும் இன்றும் இந்த விஷயம் மனதில் ஏறவில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது.

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.

– குறுந்தொகை 221(உறையூர் முதுகொற்றன்)

தோழி, அவரோ வாரார். முல்லையும் பூத்து விட்டது.
பனையோலையைக் கையிலேந்தி, குட்டிகளை ஓட்டிக் கொண்டு வந்து
பாலைக் கொடுத்து விட்டு கூழை வாங்கிச் செல்லும் இடையர்கள்
தலைநிறைய சிறிய முல்லை அரும்புகளைச் சூடிச் செல்கிறார்கள்.

அவ்வளவுதான். மிக எளிய பாடல். இதற்கு எழுதப் பட்ட உரைகள் எல்லாம் இந்த ரீதியில் உள்ளன:

முடிபு – முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம் முகையே; அவர் வாரார். கருத்து – கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.கார்ப்பருவத்தை உணர்த்துவதற்காகக் கூறப்பட்ட ஒரு காட்சி என்பதையும் பாட்டிலுள்ள இலக்கண சமாசாரங்களையும் சுட்டிக்காட்டிவிட்டு உரை நின்றுவிடுகிறது. .

ஒரு பூ கூட அவள் சூடாமல், எங்கிருந்தோ வந்துசெல்லும் இடையர்கள் தலைநிறைய சூடிக் கொண்டு செல்லப் பூத்த முல்லை எது? அதுதான் இதிலுள்ள கவிதை. உரைகள் அதைக் குறிப்புணர்த்துவது கூட இல்லை.

(3)

பல சங்கப் பாடல்களில் வரும் உவமைகள் நேரடியான பொருளுக்கு அப்பால் நின்று நிதானித்து நோக்கப் படுவதில்லை. ஆனால் நுண்ணுணர்வு கொண்ட வாசகனுக்கு அவை மேலும் ஆழ்ந்த பொருளை அளிக்கக் கூடும்.

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.

– குறுந்தொகை 99 (ஔவையார்)

எண்ணிப் பார்த்தேனன்றோ
மீண்டும் மீண்டும் நினைத்தேனன்றோ
உலகத்தின் இயல்பை எண்ணி மயங்கினேனன்றோ
உயர்ந்த மரத்தின் கிளையைத் தொட்டு ஓடும் பெருவெள்ளம்
பிறகு கையால் இறைத்து உண்ணும்படி சிறுகிச் செல்வது போல
பெரிய காதல் நோய் முடிவடையுமாறு
நான் மீண்டு வந்துவிட்டேன்.

பிரிந்து சென்ற காலத்தில் அவளை நினைத்தாயோ என்று கேட்ட தோழிக்குத் தலைவன் கூறுவதாக அமைந்த பாடல் இது.

“மரத்தின் கிளையைத் தொட்டுச் சென்ற வெள்ளம் நெடுந்தூரம் வந்து, இறைத்துண்ணும்படி சிறுகிப் பின்பு அற்றது போல, காம வெள்ளமானது மிகப் பெரிதாயிருந்து, நான் இங்கு மீண்டுவரும்போது வரவரக் குறைந்து, தலைவியோடு அளவளாவியவுடன் அறும் என்று உவமையை விரித்துணர்க” என்று உரை கூறுகிறது. இந்த நேரடியான பொருளைத் தாண்டி இப்பாடலில் ஒன்றுமே இல்லையா என்ன?

பெண்ணே, இதோ இந்தக் கணம் உன்முன் நிற்கையில் என்னுள் பொங்கும் காதல் நீ கையால் மொண்டு அறியும் சிறுவெள்ளம். ஆனால், உன்னைப் பிரிந்திருந்த போதில் என்னுள் பிரவகித்த காதல் கிளைதொட்டு ஓடிய பெருவெள்ளம். அதை என்றாவது உன்னால் அறிந்து விட முடியுமா? – இந்த ஆற்றாமை, இதிலுள்ள பெரும் தவிப்பு. இதுதான் இப்பாடலைக் கவிதையாக்குகிறது.

நூற்றாண்டுகள் கடந்தும் கவிஞனின் அகவெள்ளத்தை அதனோடு ஒத்திசைந்த சில மனங்களாவது தீண்டி அறிந்து விட முடியும். அதுவே கவிதையின் மாயம்.

Leave a Reply