Posted on Leave a comment

பீவர்களின் அணை – ஹாலாஸ்யன்


சிறுபிராயத்தில் வாழைப்பழம் ஒன்றை மரத்தினுள் வைத்துவிட்டு எடுக்க முடியாமல் திணறிய ஒரு குருவியின் கதையை எனக்குச் சொல்வார்கள்.

தாத்தா… தாத்தா…
அரைக்காசுக்கு ரெண்டு வாழைப்பழம் வாங்கினேன்
ஒண்ணைத் தின்னேன் ஒண்ணை பொந்துக்குள்ள வச்சேன்
பொந்தும் பொந்தும் பொருதிப் போச்சு
பொந்த வெட்டித் தராத தச்சன்
தச்சன அடிக்காத ராஜா
ராஜா காட்டை அழிக்காத மான்
மானைப் பிடிக்காத வேடன்
வேடன் வலையைக் கடிக்காத எலி
எலியைப் புடிக்காத பூனை
பூனையைக் கட்டி வைக்காத பாட்டி
பாட்டியை அடி தாத்தா

பழத்தை எடுக்கவும், எடுக்க வைக்கவும் ஒவ்வொரு ஆளாகக் குருவி மேல்முறையீடு செய்யும். ஒவ்வொரு ஆளிடமும் கதையைத் தொடக்கத்தில் இருந்து சொல்லும். குழந்தைகள் இதைக் கேட்கையில் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் ஆற்றல் வளரும்.

தச்சனில் இருந்து பாட்டி வரை செய்ய மறுத்ததை தாத்தா கருணைகொண்டு செயல்படுத்துவார். தாத்தா பாட்டியை அடிக்கப்போக, பாட்டி பூனையைக் கட்டிப் பிடிக்க, அது எலியைத் துரத்த, வேடனுடைய வலையை எலி கடிக்க என்று பின்னாலேயே போய், கடைசியில் தச்சன் குருவிக்கு மரப்பொந்தைத் திறந்து வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்து விடுவான். கேட்க மிகவும் சுவாரசியமாய் இருக்கும் இந்தக் கதையில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது.

உணவுச் சங்கிலி (food chain) பற்றிப் படித்திருப்போம். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் கரியமில வாயுவை நீருடன் சேர்த்து கார்போஹைட்ரேட்களை உற்பத்தி செய்யும்.  அவற்றைத் தாவர உண்ணிகள் சாப்பிட, மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்பதன் மூலம், தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெறுகின்றன. இவை எல்லாம் இறந்த பின்னர் வல்லூறு போன்ற பிணந்தின்னிகள் (scavengers) அந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாமிசத்தை உண்ணும். மீதம் கிடக்கும் எலும்பு உரமாகும். இப்படித்தான் உணவுச் சங்கிலி நிறைவடையும். இந்தச் சங்கிலியில் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்தாலும் சிக்கல்தான். உதாரணமாய் புலிகள் குறைந்தால் தாவர உண்ணிகளுக்குக் கொண்டாட்டம். அவை ஏகத்துக்கும் பெருகி காடு முழுக்க மேயும். மரமாக எதையும் வளர விடாமல் செடியிலேயே மொட்டையடிக்கும். மண்ணில் புல்லோ செடியோ இல்லையெனில் மண் அரிக்கப்படும். சத்து நிறைந்த மண் அரிக்கப்பட்டுவிட்டால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். இதை எப்படிச் சரிசெய்வது என்பதன் ஒரு வழியைத்தான் நாம் முதலில் சொன்ன கதையில் பார்த்தோம். அதில் நாம் பார்த்த தச்சன், ராஜா என எல்லோரையும் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கும் உணவுச் சங்கிலிபோல் எடுத்துக் கொள்வோம். பிரச்சினை உள்ள ஒரு சங்கிலியில், அதன் மேல்மட்ட ஆளை சரிசெய்கையில் எல்லாம் வழிக்கு வருகிறதல்லவா? உணவுச் சங்கிலியில் இப்படிப்பட்ட மேல்மட்ட ஆளை apex predator என்கிறார்கள். ஆற்றலை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகையில், அதிக உயிரிகள் இருக்கும் பாதையையே இயற்கை தேர்ந்தெடுக்கும். நிறைய வயிறுகள் நிறைகையில் அது சமநிலையுடன் இயங்கும். அப்படிக் கொன்று புசிக்கும் ஓர் உயிரினம் மறையத் தொடங்கினால் அது சூழியலுக்குப் பெரும் சேதமாக முடியும்.

 இவ்வாறு வேட்டையாடும் ஒரு விலங்கின், உணவுச் சங்கிலியின் மேல்மட்டத்தில் இயங்கும் ஒரு விலங்கின் எண்ணிக்கை மாறுவது, அடிமட்டம் வரை பாதிக்கும். இதனை trophical cascading என்கிறார்கள். Troph என்னும் சொல் உணவு தொடர்பானது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை சில காரணங்களால் குறையத் தொடங்கியது. ஓநாய்களின் உணவான கடமான்கள் (Elk) அதிகம் வேட்டையாடப்பட்டதால் உணவு குறைந்தும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை வேட்டையாடப் போகையில் சுடப்பட்டும் ஓநாய்கள் நூற்றுக் கணக்கில் இறந்தன. இதன் காரணமாய்க் கடமான்களை உணவாகக் கொள்ள ஆளில்லாமல், வசவசவென்று பெருகி புல்வெளிகளையெல்லாம் மேய்ந்து தீர்த்தன. வில்லோ மரங்களின் கன்றுகளை அவை  தின்றதால், புதிதாய் மரங்கள் இன்றி, மண் அரிப்பும் பறவைகள் இடம் பெயர்வதும் நடந்தது. கொல்ல ஆளில்லை என்னும் கர்வத்தில் அவை பேட்டை வஸ்தாது போல் திரிந்தன. கொரித்துண்ணி (Rodents) வகைகளில் காடுகளின் நலனுக்கு முக்கியமானதாய்க் கருதப்படும் பீவர்கள் (Beavers), மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துக் கொண்டு போய் அணை கட்ட, மரம் இல்லை. அணை இல்லாமல் நீர் தேங்காததால் மீன்வளம் பாதிக்கப்பட்டது.  பீவர்கள் கட்டும் அணையில் தேங்கும் நீரே மண்ணின் ஈரப்பதத்துக்கு ஆதாரம். அணையும் எனவே நீரும் இல்லாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்தது. இது மண்ணின் நுண்ணுயிரி விகிதத்தைப் பாதித்தது.  அங்குள்ள வ்யோமிங் (Wyoming) மாகாணத்தின் Yellowstone National Park  இந்தச் சூழியல் சிக்கலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் சூழியல் ஆராயப்பட்டு, வனவியல் மற்றும் சூழலியர் அறிஞர்கள் Trophical Cascadingஐ நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டனர். அதற்காக அருகில் இருக்கும் காடுகளில் இருந்து 41 ஓநாய்கள் இங்குக் கொண்டு வந்து விடப்பட்டன. அதன்பிறகு நடந்த மாற்றங்கள் ஆச்சரியமூட்டுபவை.

1.    ஓநாய்கள், அங்குப் பல்கிப் பெருகியிருந்த கடமான்களை வேட்டையாடின. இதனால் அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.
2.    தன்னை வேட்டையாடும் ஓர் உயிரினம் இருப்பதை உணர்ந்த அந்த மான்கள், இடம்விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தன. அதனால் ஒரு மரம் முழுவதுமாக மொட்டையடிக்கப்படுவது நின்று போனது.
3.    மாட்டிக்கொண்டால் தப்புவதற்கு கடினமான பள்ளத்தாக்குகளும் தாழ்வான பகுதிகளும் ஆபத்து என்று உணர்ந்து, அங்கெல்லாம் செல்வதை மான்கள் தவிர்த்தன. இதனால் அங்குப் புற்களும் மரங்களும் செழித்து வளர்ந்தன.
4.    மரங்கள் வளரத் தொடங்கி, மண்ணை வேர்கள் பிடித்துக் கொண்டதால், காற்றாலும் நீராலும் ஏற்படும் மண் அரிப்பு தடுக்கப்பட்டது.
5.    செழித்து வளர்ந்த மரங்கள், வண்டுகளையும் தேனீக்களையும் அழைத்துவந்தன. அவற்றால் நிறையப் பழங்கள் உருவாகவும், கரடிகளும் பறவைகளும் வந்தன.
6.    மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துப்போய் பீவர்கள் அணைகட்டின. பீவர் அணைகளுக்கு வில்லோ மரங்கள் முக்கியம். நிறைய வில்லோ மரங்கள் இருக்கவும் அவை நிறைய அணைகள் கட்டின. அங்குத் தேங்கிய நீரில் மீன்கள் வளர்ந்தன. மண்ணை அரிக்காத நதி தன் பாதையை சீர்செய்துகொண்டு அழகாகப் பாயத்தொடங்கியது. ஓநாய்கள் வருவதற்கு முன் ஒரே ஒரு பீவர் அணை இருந்த பூங்காவில் இன்று ஒன்பது அணைகள் இருக்கின்றன.

இப்படி கண்ணுக்குத் தெரிய பல மாற்றங்கள். அந்த ஓநாய்கள் பல மிருகங்களைக் கொன்று தின்பது மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் அவை ஏகப்பட்ட உயிர்களை வாழ வைக்கின்றன. புல் நுனியில் இருந்து பூதாகரமான கரடிகள் வரை. 2015ம் வருடத்தில், ஓநாய்கள் கொண்டுவந்து விடப்பட்ட பத்தாவது ஆண்டில், அந்தப் பூங்கா ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாறியிருக்கிறது. வெறும் 41 ஓநாய்களை அங்கு விடுதல் என்பது ஒரு முழு உணவுச் சங்கிலியை மீட்டெடுத்துக் கொண்டுவந்திருக்கிறது.

ஓர் உயிரினத்திற்கு வலுவான சந்ததி உண்டாவது வலுவான பெற்றோரால் மட்டுமே சாத்தியம். அப்படி வலுவில்லாத ஓர் உயிருக்குப் பிறக்கும் உயிரும் வலுவில்லாமல்தானே இருக்கும். அதைச் சரிசெய்ய, வேட்டையாடுகையில் வலுவில்லாத விலங்கைக் குறிவைத்து வேட்டையாடி உண்டு, அந்த விலங்கின் ஜீன் தொகுப்பை (gene pool) ஓநாய்கள் செறிவூட்டி வைக்கும்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நமக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

●     நம்முடைய காடுகளையும், தேசியப் பூங்காக்களையும் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?
●      மேற்குத் தொடர்ச்சி மலைகள், சுந்தரவனக் காடுகள் – இப்படித் தனிச்சிறப்பு வாய்ந்த காடுகளின் உணவுச் சங்கிலியை நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோமா?
●     ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும் மரங்கள் மற்றும் உயிரிகளை (Endemic species) பற்றியும் அவற்றின் உணவுச் சங்கிலிப் பங்களிப்பு பற்றியும் ஆய்வுகள் இருக்கின்றனவா?
●      இருக்கிறதெனில் சமநிலை பிறழ்ந்த வனங்களில் இதுபோன்ற trophic cascading செய்ய வாய்ப்புகள் உண்டா என்று ஆராய்ந்திருக்கிறோமா?
●      குறிப்பிட்ட உயிரினங்களின் முக்கிய உணவாக (staple food) இருக்கும் மரங்களையும், குறிப்பிட்ட உயிர்களாலேயே பரப்பப்படும் மர விதைகளையும் பற்றிய பட்டியல் இருக்கிறதா?

வெறுமனே விலங்குகளையும் காடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்று குரல்கொடுப்பது வேலைக்காகாது. வனவியல் அறிஞர்கள், காட்டில் வாழும் காட்டை வீடாகக் கொண்ட பூர்வகுடிகளின் தொல்லறிவோடு கை கோக்காத வரை இதற்குத் தீர்வு கிடைக்காது. அறுப்பதற்கு அல்லாமல் கொஞ்சம் அணைப்பதற்கும் நம் கைகள் வனங்களை நோக்கி நீளட்டும். அங்கிருந்து கிளைகள் எல்லாம் ஆதூரமாக நம்மை நோக்கி நீளும். அதுதான் நாம் அந்த இயற்கை அன்னைக்குச் செய்யும் உண்மையான கைம்மாறு.

Leave a Reply