Posted on Leave a comment

மனித வடிவில் காருண்யம்: ஸ்ரீ இராமானுஜர் – சுதர்ஸன்

 மோக்ஷம் என்று ஒன்று உண்டு. அதை, சென்றடையக்கூடிய இடம் என்று சிலரும், பற்றற்ற நிலையில் உள்ள மனம் என்று சிலரும் நம்புகிறார்கள். எதுவாக இருப்பினும் சரியே. மோக்ஷம் என்பது மறுபிறப்பு இல்லாத ஒரு நிலை. பசி, தாகம் என்ற உணர்வுகள் தோன்றாத நிலை. அந்த நிலையில் தேகத்திற்கும் வியாதி கிடையாது, மனமும் வருந்தாது; ஏன்,மகிழ்ச்சியில்கூட நாட்டம் கொள்ளாது. அங்கு வெற்றியில் மனதுமயக்கம் கொள்ளாது, தோல்வியில் வெறுமை கொள்ளாது.போட்டியிடக் காரணம் இருக்காது, வென்று குவிக்கப் போட்டியும் இருக்காது. அனைத்துக்கும் மேலாக, இந்த நிலை அனைத்தும் நீடிக்குமோ மாறிவிடுமோ என்ற பயம்கூட இருக்காது.

மோக்ஷம் ஓர்உயர்ந்த மனநிலையாக இருந்தால், அது எப்படிக் கைக்கூடும்? ஓர்உயர்வான இடமாக இருந்தால் அங்கு எந்த வழியில் செல்லமுடியும்? பெரும்பாலானோர் நினைக்கக்கூடியது, அவர்களுக்கென்று வகுக்கபெற்ற கடமைகளை இடைவிடாது புரிந்துகொண்டிருந்தால் மோக்ஷம் கிட்டும் என்பது. அந்திமக் காரியங்கள் மூலமாக மோக்ஷம் பெறலாம் என்றும் அதைச் செய்வதற்கென ஒரு மகனைப் பெற்றெடுத்து சம்பிரதாய முறையில் வளர்த்தால் போதும் என்றும் குறுகிய ஆச்சாரங்களில் தத்தளிப்போர் தீவிரமாகவே நம்புவதுண்டு. மற்றும் பலர், அதிகப்படியான தானங்கள் அளித்து மோக்ஷம் செல்லும் வழிக்கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். நம்பிக்கைளோ இப்படி இருக்க உபநிடதங்கள் இம்முறைகளை அங்கீகரிக்கிறதா என்றால்,இல்லை! அனைத்தும் அதனளவில் தர்ம காரியங்களாக இருந்தபோதிலும் மோக்ஷம் பெற இவை வழி என்று வேத உபநிடதங்கள் கூறுவதில்லை. சந்யாச யோகம் மூலமே மோக்ஷத்தைப் பற்றிய உயர்ந்த ஞானம் பெற இயலும் என்கிறது மகாநாராயண உபநிதத்தில் இடம்பெறும் சந்யாஸ சூக்தம்.

வேதாந்த-விஞ்ஞான ஸுநிஸ்சிதார்தா:
சன்யாஸ யோகாத்-யதய: -சுத்த-ஸத்வா:
தே-ப்ரஹ்ம-லோகேது பரா-ந்த காலே
பர-அம்ருதாத்-பரிமுச்யந்தி சர்வே

பொருளாக: வேதத்தின் தீர்மானங்களை உணர்ந்த, இறைவனின்பால் கொண்ட நாட்டத்தினால் தன் விருப்பங்களைத் துறந்த, லௌகிகத்திலிருந்து முற்றிலும் அப்பாற்பட்ட சந்யாசியானவர்கள், தன் வாழ்கையின் முடிவில் இப்பூவுலகில் பிறந்து-மடிவதிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைகிறார்கள்.

ஆகையால், கண்டிப்பான துறவிகளுக்கு மட்டுமே மோக்ஷத்தைப் பற்றிய ஞானமும் அதன்மூலம் மோக்ஷமும் கிட்ட வாய்ப்புள்ளதாக உபநிடதம் எச்சரிக்கிறது. இந்நிலையில் சந்யாசத்தைப் பற்றிய தெளிவு அவசியம் தேவைப்படுகிறது. சராசரி மக்களிடையே சன்யாசத்தைப் பற்றிய அறிவோ அவரவர்களுக்கு எட்டும் உயரத்திலேயே நின்று விடுகிறது. காவி உடை அணிவதே சந்யாசம் என்றும், எனவே காவி உடை அணிவதன் மூலம் மோக்ஷம் கிட்டிவிடும் என்றவரையில் புரிதல் தேங்கிவிடுகிறது.

‘சந்யாச யோகம்’ என்று குறிப்பிடப்படும் உபநிடதக் கருத்துக்களில் மிக வசதியாக ‘யோகம்’ என்ற சொல்லை மறந்துவிட்டுக் காவி உடை மட்டுமே சந்யாசம் என்று எண்ணிவிடுகிரார்கள். சந்யாசம் மட்டுமே மோக்ஷத்திற்கு வழி என்பது உண்மையானால், உண்மையில் சந்யாசம் என்பது என்ன, யார் சந்யாசம் பெற முடியும் என்பது தெளிவாக வேண்டும்.

நடைமுறையில் அனைத்து மக்களுக்கும் பொதுவான மோக்ஷத்தைப் பற்றிய இந்த ஞானமானது, துரதிருஷ்டவசமாக, ஒரு கட்டத்தில் அந்தணராகப் பிறந்தவர் மட்டுமே அடையமுடியும் என்று சாஸ்திரங்கள் சொல்வதாக சிலரால் விளக்கப் பட்டது. அந்தணராகப் பிறப்பினும் ஆண் பிறவி அவசியம் என்றும் மற்றவர் அனைவரும் பெற்ற அந்தப் பிறவியில், கல்வி கற்று, மணம் புரிந்து, மக்கள்பேறு பெற்று, தர்ம வழியில் உலக வாழ்க்கை நடத்திக்கொண்டு இறைச் சிந்தனையோடு வாழ்ந்து வந்தால் மற்றொரு பிறவியில் அந்தணராக, அதிலும் ஆணாக பிறக்க வாய்ப்பு பெறக்கூடும் என்றும், அதன்பிறகே மோக்ஷம் செல்ல வழி அமையும் என்றும் நம்ப, மக்கள் மனங்களைத் தயார் செய்தனர்.

வேதாந்தமோ, சந்யாசம் மூலமே மோக்ஷம் என்று உறுதியாகப் பிரகடனம் செய்கிறது. வேதாந்தத்தைப் பற்றிய ஒருசாராரின் விளக்கமோ, அந்தணராகப் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே சந்யாசம் என்று பிரசாரம் செய்தது. இந்த நிலையில் மற்றவர்களின் கதி என்ன? சந்யாசம் எனும் நிலை எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டதால் மற்றவர் அனைவரும் மோக்ஷதிற்கே தகுதியற்றவர் என்று கொள்வது சரியாகுமா? அனைவரும் தகுதி பெறலாம் என்ற சமாதானம் கொடுக்கப்பட்டது; ஒரு நிபந்தனையோடு; இப்பிறவியில் அல்ல, மற்றொரு பிறவியில் ஏற்படக்கூடும் என்பதுதான் சமாதானம்;ஓரிரண்டு பிறவியிலோ அல்லது ஓராயிரம் பிறவி கழித்தோ. இப்படிப் பிரசாரம் செய்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை எளிதாகவே கணிக்கலாம். அவர்களைப் பொருத்தவரையில் சந்யாசம் என்பது, மனைவி மக்களை விட்டு காஷாயம் அணிந்து கண்காணாத இடத்திற்குச் செல்வது; ஆண் துணையின்றி பெண் வாழ இயலாது என்ற தீர்மானம்; மற்றும் அவர்கள் அறிந்த சாதிக் கோட்பாடுகளில் மற்றவர் அனைவருக்கும் பிறப்பினால் ஒரு சமுதாயப் பொறுப்பு இணைக்கப்பட்டிருந்தது. அந்தணர்கள் மட்டும் அவர்களுக்கிருந்த பொறுப்புகளைத் துறக்க அனுமதிக்கப்பட்டார்கள். படித்த பல பண்டிதர்கள்கூட இதை உண்மை எனறே கருதி, இந்தக் கருத்துக்களை ஒட்டியே சமூகக் கட்டமைப்பு அமைய விரும்பினார்கள்.

சூழ்நிலை இப்படி இருந்த காலத்தில், இவ்வுலகம் உய்வதற்கு, பிறந்த குலம் எதுவாக இருப்பினும் அனைவருக்கும் அதே பிறவியில் மோக்ஷம் கிடைக்க வழி உண்டு; அதையே வேதம் சொல்கிறது; அந்த வேதத்தைப் பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; வேதத்தின் மீது பிழை இல்லை, வேதத்தை விளக்க வந்தவர்கள் குழம்பினார்கள் என்று உலகிற்கு எடுத்துக் காட்டிய பெரும் வள்ளல் ஸ்ரீ இராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜர், தன் சித்தாந்தத்தின் ஆதாரமாக ஜீவாத்மா-பரமாத்மா சம்பந்தத்தின் இயல்பைப் பற்றிய ஓர்எளிய கருத்தைஉணர்த்துகிறார். அனைத்து ஜீவாத்மாக்களும், வேறுபாடுகளோ பாகுபாடுகளோ அற்று, சமமான நிலையில் உள்ளனர் என்ற வேதாந்த உண்மையைப் பற்றி அவர் வெகு ஆழமாகச் சிந்தித்தார். ஆத்மாக்களுள் ஆண்-பெண் கிடையாது; ஆத்மாக்களுள் பிராமண-க்ஷத்ரிய-வைசிய-சூத்திரர் என்ற வர்ணம் கிடையாது என்று கண்டுணர்ந்தார். ‘பாண்டித்தியம் பெற்றவர்கள், நாயினுள் வசிக்கும் பரமாத்மனும், நாய் மாமிசம் உண்பவரினுள் வசிக்கும் பரமாத்மனும், நன்கு படித்துத் தெளிந்த பிராமணருக்குள் வசிக்கும் பரமாத்மனும், ஒரு குலத்தில் பிறந்துவிட்ட காரணத்தால் தன்னை பிராமணர் என்று அறிவித்துக் கொள்பவருள் வசிக்கும் பரமாத்மனும் ஒன்றே என்பதை உணர்ந்து சமத்துவத்துடன் வாழ்க்கையை அணுகுவர்’ என்று கிருஷ்ணர் கீதையில் உரைப்பதை தீவிரமாக உள்வாங்கினார். அனைத்து ஜீவனும் சமமாயின், அனைவருள் வசிக்கும் பரமன் ஒன்றாயின், ஒரு சிலருக்கு மட்டுமே மோக்ஷம் இப்பிறவியில் கூடும், மற்றவருக்கு மேலும் பிறவிகள் வேண்டும் என்ற கோட்பாட்டினை கேள்விகளுக்கு உள்ளாக்கினார்ராமானுஜர். இவை அனைத்தையும் ஆராய்ந்து, நன்கு சிந்தித்து,
பரவலாகப் புழக்கத்தில் இருந்த விளக்கங்களுக்கு வேதாந்த அங்கீகாரம் இருக்கமுடியாது என்ற ஒரு முடிவினை முன்வைத்தார். மேலும் அரைகுறை ஞானத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் இவை என்பதை தெளிவுபடுத்தினார்.

ராமானுஜரின் இந்தச் சிந்தனை வெள்ளத்தைத் தூண்டிய, அவரது தெளிவுரைக்கு ஆதாரமாகவும் அமைந்தஒரு நூல் ஆண்டாளின் திருப்பாவை. தன் பாசுரத்தின் முதல் வரியிலேயே மானுடர் அனைவரும் மார்கழி நோன்பில் கலந்துகொள்ளும்படி ஒரு திறந்த அழைப்பை ஆண்டாள் முன்வைக்கிறாள். ஏதேனும் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு ஆண்டாளின் காருண்யம் மிக்க பதில் ஒன்றுதான்; யார் ஒருவருக்குத் தீவிர விருப்பம் உள்ளதோ, அவர்கள் யாவரும் விரதத்தில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றவர் என்ற அறைகூவல். ஆகையால், ஒருவருக்கு விருப்பம் இருக்குமானால், அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தைத் தேடுவதற்கான தனது உரிமைகளை மறுக்க சாஸ்திரங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை,திருப்பாவையின் துணைகொண்டு இராமானுஜரால் மிக எளிதில் முன்னிறுத்த முடிந்தது. ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற அழைப்பிற்கு மேலாக ஆண்டாளும், ராமானுஜரும் விடுத்த அறைகூவல் – ‘திறந்தே இருக்கிறது, வாருங்கள்.’

ஆகவே, வைஷ்ணவ சித்தாந்தத்தின் வேர்களின்பால் ஆழ்ந்த த்யானம் மேற்கொண்டு, ஸ்ரீ ராமானுஜர், சந்யாசம் மற்றும் சந்யாச யோகம் என்பதன் உட்பொருள் என்னவென்று எடுத்துரைத்தார். உலகத் தொடர்பைத் துண்டித்து காவி அணிவது மட்டுமே சந்யாசம் அல்லஎன்பதை, சந்யாச யோகம் என்பது ‘தனது’ என்ற உணர்வைத் துறந்த நிலை என்ற உண்மையை வெறும் சொற்களில் கூறி அமர்ந்துவிடாமல், வாழ்ந்தும் காட்டினார். சந்யாசம் என்பது, மனித ஆன்மா தன்னைத் தானே காத்துக்கொள்கிறது என்ற உணர்விலிருந்து விடுபெறுவது என்றும்; சந்யாசம் என்பது பரமனுடன் இணைவதற்கு ஜீவன் எடுக்கக்கூடிய முயற்சிகளைத் துறப்பது என்றும்; தன் ஆன்மிக எழுச்சிக்கு முயற்சி தேவையில்லை, பரமாத்ம அநுக்ரஹம் ஒன்றே போதுமானது என்ற எண்ணத்துடன் முழுமையாக சரணாகதி மேற்கொள்வது என்றும்; மதிப்பற்ற இந்த ஜீவனை, பரமாத்மா தன் இச்சையால் ஆலிங்கனம் செய்துகொள்வதென்றும் விரிவுரைத்தார். விளைவாக, மோக்ஷத்தைக் கோருவோர், தேடல்களையும் பதற்றங்களையும் துறப்பாராயின், ‘தரப்படும்’ என்ற உத்தரவாதம் அளித்தார்.

சாரமாக, ராமானுஜரின் கற்பித்தலில் சந்யாசம் என்பது அடைக்கலம்; பரமாத்வாவின் ஆட்கொள்ளலுக்கு ஜீவாத்மாவின் சரணாகதியை தெரிவிக்கும் ஒரு நிகழ்வு மட்டுமே. இந்த நோக்கத்தின் முடிவிற்குக் கொண்டுசெல்ல வேண்டிய மற்ற அனைத்துப் பொறுப்பும் பரமாத்வாவிற்கே, ஏனெனில், மோக்ஷம் கோருவோரின் ஆசை மட்டுமே உண்மையானது.

ராமானுஜரின் மற்றொரு பெருமை, பக்தருக்கு அவர் வகுத்துக் கொடுத்த வாழ்கை முறை. சரணாகதி கோரிய பின்னும், நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய தெய்விகக் காரியங்கள், வெறும் உலக வாழ்க்கைக்கு மட்டுமே என்ற தெளிவும், மோக்ஷத்திற்கான உத்தரவு ஏற்கெனவே பெற்றாகிவிட்டது என்ற விழிப்புணர்வும் அவர் ஏற்படுத்திய பாரம்பரியத்தின் பெருமை. இதுவே உண்மை சந்யாச நிலை. இப்பேற்பட்ட சந்யாசம் பெற, பிறந்த சாதி பொருளற்றது, குலம் பொருளற்றது. ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்தின் உதவியால்பின் வந்த ஒரு மாபெரும் வைஷ்ணவ குருவான வேதாந்த தேசிகர், இந்தக் கருத்தைப் பற்றி மிகவும் ஆற்றல்மிக்க வரிகளை சமர்ப்பிக்கிறார்.

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்தடையும் வகை வண்தகவேந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே.
(அதிகார சங்க்ரஹம் – 18)

“எல்லை வரம்புகளற்ற பரம்பொருள், ஈடு இணையில்லா இறக்கத்துடன் நம்மை ரக்ஷிக்க காத்தருள்கிறார். சரணாகதியே அவரை அடைவதற்கான வழி என்று நம் ஆச்சார்யர்கள், அவர்களது ஆச்சார்யர்களிடமிருந்து கற்றறிந்தனர். அந்தணர் முதல் சமூகத்தின் எல்லையில் உள்ள அனைவருக்கும், மற்றும் சம்சாரத்தில் மூழ்கி தவிப்பருக்கும்கூட ஒருசீராக இவ்வழிப் பொருந்தும், மற்ற சிந்தனை தவிர்த்து ஒற்றைச் சிந்தனையுடன் பரம்பொருளை நாடுபவராயின்” – என்பது ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சமர்ப்பணம்.

பாரதத் தாயின் தவப்புதல்வர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவில் ராமானுஜரைப் பற்றி உரைக்கிறார்; “அறிவுச்சுடரான சங்கரரைக் காட்டிலும் ராமானுஜர் மிக்க இரக்கம் நிறைந்தவர் என்றே கூறவேண்டும். ராமானுஜரின் இதயம் விளிம்புநிலை மக்களுக்காக உருகியது. சிதைந்து கிடந்த சடங்குகளை ஒருங்கிணைத்து, சீரமைத்து, புதுப்பித்து அதை மீண்டும் அடித்தட்டு மக்களுக்கு சமர்ப்பித்தார். அதே சமயம் மூடி வைக்கப்பட்டிருந்த உன்னத ஆன்மிகக் கருத்துக்களின் கதவுகளைத் திறந்து அந்தணர் முதல் பறையர் வரை அனைவரும் ஒருசீராகப் பருகக் கொடுத்தார். அதுவே ராமானுஜரின் பணி.”

சாதியை ஒழிக்க நம் நாட்டில் பலவகையான அரசியல் சீர்திருத்த முயற்சிகள், பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவை உன்னதமான முடிவை எட்டியது கிடையாது. முயற்சிகள் நேர்மையற்றதாக அமைந்திருக்கக்கூடும், அல்லது கைக்கொண்ட வழிமுறைகளில் குறைபாடு இருந்திருக்கக்கூடும். ஒவ்வொரு அரசியல் சார்ந்த முயற்சியும் ஒரு சாதி சார்ந்த சங்கத்தையே உருவாக்கியது. முடிவில் அரசியல் போட்டியில் ஒரு சாதியினருக்குப் பல்வேறு அமைப்புகள் அமையப்பெற்று அவற்றுக்குள் பூசல்கள் ஏற்பட்டு, முயற்சி குன்றிப்போகும். ராமானுஜருடைய சீர்திருத்தம், சுவாமி விவேகானந்தர் கூறுவது போன்று கிளைகள் மட்டுமல்லாது வேர் வரை சென்று சீரமைக்கக்கூடிய ஒரு மாபெரும் எழுச்சி கொண்ட ஒன்று; சாமானிய மக்களை ஆன்மீக உணர்வில் வேரூன்றச் செய்யும் நம்பிக்கை இயக்கம். ஓராயிரம் வருடங்கள் முன் ஸ்ரீ ராமானுஜர் துவங்கிய இந்த இயக்கம் உலகம் முழுதும் சூழ்ந்து விரியக் கூடிய தன்மை கொண்டது.

Leave a Reply