Posted on Leave a comment

GST ஒரு புரிதல் – லக்ஷ்மணப் பெருமாள்


 சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. மத்திய,
மாநில சரக்கு மற்றும் சேவை வரி 2014ம் ஆண்டு லோக்சபாவில் ‘122வது பாராளுமன்ற சட்டத்திருத்த
மசோதாவாக’ நிறைவேறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியன்று ராஜ்யசபையில் சில திருத்தங்கள்
சேர்க்கப்பட்டு அங்கும் நிறைவேறியது. அடுத்த இரு தினங்களில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும்
லோக்சபாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை விதிக்கின்றன.
(1) பொருள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி (Excise duty), (2) பொருள்
விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, (3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது
எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் விதிக்கப்படும் மத்திய விற்பனை
வரி, (4) சேவைகள் மீது மத்திய அரசு விதிக்கும் சேவை வரி, (5) சினிமா போன்ற பொழுபோக்கு
வியாபாரத்தின் மீது மாநிலங்களால் விதிக்கப்படும் கேளிக்கை வரி, (6) ஒரு மாநிலம் அல்லது
ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது விதிக்கும் உள்ளூர் வரி அல்லது
ஆக்ட்ராய், (6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி எனப் பல வரிகள், பொருட்கள் மீதும் சேவைகள்
மீதும் விதிக்கப்படுகின்றன.
இதில் மத்திய அரசு விதிக்கும் பொருள் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும்
சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, செஸ், சிறப்பு கூடுதல் சுங்க வரி, சர்சார்ஜ்
உள்ளிட்ட அனைத்து பல்முனை வரிகளும் தொகுக்கப்பட்டு இனி ஒருமுனை வரியாக விதிக்கப்படும்.
மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (வாட்), மத்திய வரி, வாங்கும்போது விதிக்கப்படும்
வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம்
என மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும். பல்வேறு பெயரில்
விதிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஒருமுனை வரிவிதிப்பைக்
கொண்டுவருவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கம்.
வரி வசூலிக்கும் முறை
வரி வசூலிக்கும் முறை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.    மத்திய சரக்கு மற்றும் சேவை வரி
– சிஜிஎஸ்டி (CGST) – மத்திய அரசு வசூலிக்கும்.
2.    மாநில சரக்கு மற்றும் சேவை வரி
– எஸ்ஜிஎஸ்டி (SGST) – மாநில அரசு வசூலிக்கும்.
3.    மாநிலங்களுக்கிடையேயான சரக்கு மற்றும்
சேவை வரி – (IGST) – மத்திய அரசு வசூலிக்கும்.
வரி வசூலிப்பு எவ்வாறு பங்கு செய்யப்படும்?
உதாரணமாக 19% GST வரி என்று எடுத்துக்கொள்வோம். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில்
உற்பத்தி செய்யப்பட்டு அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் அந்த 19% ஜிஎஸ்டி வரியானது
சிஜிஎஸ்டி (Central GST) என்றும், எஸ்ஜிஎஸ்டி (State GST) என்றும் பிரிக்கப்பட்டுச்
சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக,
ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால்,
அதற்கும் 19% ஜிஎஸ்டி. அதில் மத்திய அரசின் பங்கு மத்திய அரசுக்குச் செல்லும். ஆனால்,
மீதமுள்ள பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்குச் செல்லும்.
இதனை ஐஜிஎஸ்டி என்ற பொதுக் கணக்கில் வரவு வைப்பார்கள். பின்பு பொருள் சென்று சேர்ந்த
மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரிப்பணம் சென்று சேரும்.
ஜிஎஸ்டியால் யாருக்கு லாபம்? யாருக்குச் சுமை?
ஜிஎஸ்டி
அறிமுகத்தால் இந்தியாவிற்கே லாபம்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதனால்
அதிகரிக்கும் (1 to 2%) எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தப் புதிய சரக்கு மற்றும் சேவை வரியால் உற்பத்தி
பொருட்களுக்கான வரி குறைவதால், பொருட்களின் விலையும் குறையும். இதனால் நுகர்வோர் பெரும்
பலனை அடைவர். விலை குறைவதால் வாங்கும் திறன் அதிகரிப்பதும், அதனால் உற்பத்தி அதிகரிப்பதும்
இயல்பாகவே நடக்கும். தொழில் உற்பத்தியாளர்களுக்கான வரியும் குறைவதால் நிறைய முதலீடுகளும்
புதிய உற்பத்தி நிறுவனங்களும் பெருகும். போட்டி உருவாவதால் பொருள் விலை குறையும். ஏற்றுமதிப்
பொருட்களுக்கான போட்டிகள் அதிகரிக்கும். ஒருமுனை வரி செலுத்துவதால் பொதுமக்களுக்கும்
குழப்பங்கள் நீங்கும். வரி ஏய்ப்பும் இதனால் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் வளர GST மசோதா வழிவகுக்கிறது.
உற்பத்தி, வணிகம், நுகர்வில் உள்ள சிக்கலான தடைகள் விலகும். வியாபாரிகள் பலமுனை வரிவிதிப்பிலிருந்து
விடுபடுவதால் அவர்கள் சிரமமின்றி வரியைச் செலுத்த இயலும். மேலும் சிறுவியாபாரிகளுக்கு
இந்த GSTயிலிருந்து வரிவிலக்கு அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சேவைத்துறையை மட்டும் நம்பி வணிகம் செய்தவர்களின் வரி உயருவதால் அவர்களுக்கு
இது பாதிப்பைத் தரும். தற்போது 14%தான் சேவை வரி விதிக்கப்படுகிறது. இனி புதிய சதவீத
(குறைந்த பட்சம் 18% க்கும் மேல்) வரியைச் செலுத்த வேண்டி வரும். அதேபோல சில பொருட்களின்
விலை உயருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் சில்லறை வணிக வரி இரட்டிப்பாவதற்கான சாத்தியக்கூறுகள்
உள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியும் 6% வரை உயரும். அனைத்துத் துறைகளும்
மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:
1. மது. (ஆனால் மருந்துகள், சுத்தம் செய்யும் பொருட்களில் உபயோகிக்கும் ஆல்கஹாலுக்கு
விலக்குக் கிடையாது.). 2. பெட்ரோலியப் பொருட்கள்.3. டீசல் 4. புகையிலை
மேற்கூறிய பொருட்களை GST க்குள் கொண்டு வர மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன்
அடிப்படையில் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மது மற்றும் பெட்ரோலியம் மூலமாகவே
மாநில அரசுகளுக்குத் தேவையான 40-45% வருவாய் கிடைப்பதே எதிர்ப்பிற்குக் காரணம். பெட்ரோலியப்
பொருட்கள் GST வரையறைக்குள் வராத பட்சத்தில் அது முழுமையற்ற GST என்ற கருத்தும் உள்ளது.
வங்கிகளை GST வரைமுறைக்குள் கொண்டு வந்தால் வங்கிகளின் சேவைச் செலவும் கூடுமாதலால்
அதற்கும் விலக்கு அளிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியை எவ்வாறு நிர்ணயிப்பது?
மத்திய மாநில அரசுகளின் தற்போதுள்ள வரி வருவாயைப் பாதிக்காத வண்ணமும், எதிர்காலத்தில்
புதிய வரி வருவாயை அதிகரிக்கும் வண்ணமும், வரிவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும். இதைத்தான்
Revenue Neutral Rate என்கிறோம். இதனால்தான் ஜிஎஸ்டி வரி RNRஐப் பொருத்தது என்கிறோம்.
தற்போதுள்ள நிலையில் முக்கிய வருவாயுள்ள பெட்ரோலியம், மது போன்ற பொருட்களை
GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் RNR அதிகமாக இருக்கும். அதாவது சரக்கு
மற்றும் சேவை வரி 18% க்குள்ளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பணவீக்கத்தைக்
கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். RNR அதிகமானால் சரக்கு மற்றும் சேவை வரி அதிகமாகும்.
அதனால் தற்காலிகமாக அதிக பண வீக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் இவ்வாறாகச் சொல்கிறார்.
“GSTக்கான வரி 18% ஆக இருப்பதே சிறந்தது. ஆனால் இதை மாநில அரசுகள் புரிந்துகொண்டதாகத்
தெரியவில்லை. அவர்களுக்கு அரசுக்கான வருவாயை அதிகரிக்க வரியை அதிகமாக்க வேண்டும். அப்படி
மட்டுமே அரசின் வருமானம் அதிகரிக்கும் என எண்ணுகிறார்கள். இதனால் இந்திய அளவில் பண
வீக்கம் அதிகரிக்கும் என்பதை உணரவேண்டும்” என்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மதுவிற்கு விலக்கு அளித்துவிட்டுக் கொண்டுவரப்பட்டுள்ள
GST அர்த்தமற்றது என்ற குரல்கள் குறித்துக்கேட்டபோது மிக அழகான பதிலை முன்வைக்கிறார்.
“இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அனைத்து மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்து
அவர்களின் ஒப்புதலுடன் முதலில் GSTயைக் கொண்டு வந்ததே மிகச் சிறந்த சாதனைதான். கூட்டாட்சித்
தத்துவத்தை மதித்துத்தான் திட்டங்களை அமல்படுத்த இயலும். அவ்வகையில் மாநில அரசுகளின்
அச்சத்தைப் போக்கித்தான் மத்திய அரசு செயல்பட முடியும். அதைத்தான் மோதியின் அரசு செயலாக்கி
உள்ளது. மேலும் எதிர்காலத்தில் மாநில அரசுகளே சில ஆண்டுகளுக்குப் பிறகு வருவாயைப் பொருத்தும்,
மக்கள் சுமையைப் புரிந்துகொண்டும் பெட்ரோலியப் பொருட்களையும் GST க்குக் கீழ் கொண்டு
வரச் சம்மதிப்பார்கள்.” எனவே பெட்ரோலியப் பொருட்கள் அல்லாத ஜிஎஸ்டி பயனற்றது என்ற வாதத்தைக்
காட்டிலும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்பதே முக்கியமானது. இது ஓர் இயக்கம்”
என்கிறார்.
உலக அளவில் சராசரியாக ஜிஎஸ்டி விகிதம் 16 to 20% ஆக உள்ளது. ஆஸ்திரேலியாவில்
10%, நியுசிலாந்தில் 15%, ஜப்பானில் 8%, ஜெர்மனியில் 23%, மலேசியாவில் 6% ஆக உள்ளது.
பிரான்ஸ், இங்கிலாந்தில் இரட்டை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை உள்ளது. இந்தியாவும் ஜிஎஸ்டி
விகிதத்தை சராசரி நிர்ணய அளவான 20%க்கு மிகாமல் வைத்திருக்கவும், ஏழை மக்களைக் கருத்தில்கொண்டு
சில பொருட்களுக்கு அடிப்படை விகிதமான 14% மட்டுமே வைத்திருக்கவும் திட்டமிட்டுச் செயல்படுகிறது.
சில ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக விகிதத்தில் வரி விதிக்கலாமா என்ற யோசனையிலும் உள்ளது.
இதில் எந்தத் திட்டவட்டமான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூடித்தான்
இந்த வரி அளவை நிர்ணயிக்க இயலும். ஜிஎஸ்டி விகிதம் அதிகமானால் நுகர்வோருக்கு அவநம்பிக்கை
ஏற்படும். இது அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிக்கலான வரி செலுத்தும் முறையா ஜிஎஸ்டி?
வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்துவதற்காக ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) என்ற
ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து 2013லேயே ஆரம்பித்துவிட்டன. முழுவதும்
கணினி மயமான வரி செலுத்தும் முறையை இந்த நிறுவனம் ஏற்படுத்திவிட்டது. தங்கள் வரி வசூலிக்கும்
நிர்வாக அலுவலகங்களைக் கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இந்
நிறுவனம் மாநிலங்களுக்கு உதவி செய்கிறது. பல தனியார்க் கணினி மென்பொருள் நிறுவனங்களும்
இந்த வேலையைச் செய்துள்ளன.
ஜிஎஸ்டி வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும். இணையத்தள வங்கிச் சேவையில் வரி
செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குத்
தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பங்குதாரராக மத்திய மாநில அரசு வங்கிகளின் பங்களிப்போடு,
தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, எல்ஐசி ஃபினான்ஸ் கம்பெனி ஆகியவையும் பங்குதாரராக
இருக்கும். வேறெந்தப் பொதுத்துறை வங்கியும் பங்குதாரராக இல்லை. ஜிஎஸ்டி வரியை வசூலிக்க
ஆரம்பச் செலவாக 4,000 கோடி நிர்வாக முதலீட்டுத் தொகை தேவைப்படுகிறது. இதை முழுவதுமாக
அரசு வங்கியாலோ பொதுத்துறை வங்கியாலோ ஏற்க இயலாது என்பதால், தனியார் வங்கிகளின் பங்களிப்போடு
செயல்படும் வகையில், சிதம்பரம் அமைச்சராக இருந்தபோதே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.
GSTN ன் பங்குதாரராக மத்திய, மாநில வங்கிகளின் பங்கு 49 சதவீதமும், தனியார் வங்கிகளின்
பங்கு 51 சதவீதமும் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. இதை எதிர்த்துப்
பிரதமருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளார். இது குறித்து முறையான நடவடிக்கையை நிதித்துறை
எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனக் கூறிவருகிறார் சுவாமி.
 ஜிஎஸ்டி கவுன்சில்
மத்திய மாநில அரசுகள் இணைந்தே வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவர இயலும். மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுவது கூட்டாட்சி
தத்துவத்திற்கு எதிரானது என்பதால் மாநில அரசுகளின் கோரிக்கைகளும் கேட்கப்பட்டு ஒரு
பொதுவான/ சமரசமான முடிவுகள் எட்டப்பட ஒரு கவுன்சில் அமைக்கப்படும். அதுவே GST கவுன்சில்.
அதன் தலைவராக மத்திய அரசின் நிதி அமைச்சர்
இருப்பார். இதன் உறுப்பினர்களாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களோ, வருவாய்த் துறையைச்
சார்ந்த அமைச்சர்களோ நியமிக்கப்படுவார்கள். சட்ட வரைவை மாற்ற வேண்டுமென்றால், குழுவிலுள்ள
உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு ஓட்டுக்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். கூட்டாட்சித்
தத்துவத்தை நிரூபிக்கும் வகையில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வாக்குகள் மத்திய அரசிடமும்,
மூன்றில் இரு பங்கு வாக்குகள் மாநிலங்கள் வசமும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சட்டவரைவிலோ, தற்போது ஜிஎஸ்டி வரையறைக்குள் வராத பொருட்களை எதிர்காலத்தில் கொண்டுவரவேண்டுமானால்
குறைந்த பட்சம் 75% வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாற்றம் கொண்டு வர இயலும்.
எளிதாக விளக்க வேண்டுமானால் 19 மாநிலங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மத்திய அரசால்
மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அதேபோல மாநிலங்களைப் பொருத்தவரையில், 12 மாநிலங்களின்
ஆதரவு இருந்தால் மத்திய அரசின் விருப்பப்படி நடக்காமல் தடுத்துவிட இயலும்.
மாநில உரிமைகளை ஜிஎஸ்டி சட்டம் பறிக்கிறதா?
ஜிஎஸ்டியை ஏப்ரல் 2017 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
அதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் 50%க்கும் கூடுதலான மாநிலங்கள் இந்த சட்டவரைவை ஏற்றுக்கொள்வதாகச்
சட்டசபையில் சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநில உரிமைகள்
எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற வகையில்தான் இந்த ஏற்பாடு.
அதிமுகவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஜிஎஸ்டி மசோதாவை ஏற்று ராஜ்யசபாவில்
வாக்களித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 23 மாநிலங்கள் GST யில் சேர்வதை
உறுதிசெய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. தமிழகம் தவிர்த்து அனைத்து
மாநிலங்களும் வெகுவிரைவில் தீர்மானம் நிறைவேற்றிட உறுதி கொண்டுள்ளன. இந்தியாவில் கூட்டாட்சித்
தொடர்பான ஷரத்துகளில் மாற்றம் கொண்டுவரவேண்டுமானால் சட்டத்திருத்த மசோதாவாக மட்டுமே
கொண்டுவர இயலும். எனவேதான் சட்டத்திருத்தம் 368 அறிமுகப்படுத்தப்பட்டு 122வது சட்டத்திருத்த
மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை எதிர்ப்பதற்கு அதிமுக கூறும் காரணங்கள்:
அதிமுகவின்
எதிர்ப்பினை முற்றிலும் புறந்தள்ளவிட முடியாது. அதில் நிச்சயமாக மாநில நலன் அடங்கியுள்ளது.
அதேபோல முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அதிமுக எதிர்ப்பதில் மிக முக்கியமான அம்சமாக இருப்பது, பொருள்
ஏற்றுமதி (IGST Inter State GST) வரியின்கீழ் கூடுதலாக 2% வரியை மாநிலங்கள் நேரடியாக
இதுவரையிலும் வசூலித்து வந்தன. பாஜக தனது ஆரம்ப சட்டவரைவில் இதை 1% இருக்குமாறு வைத்திருந்தது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் நுகர்வோர் மாநிலங்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக IGSTயிலிருந்த
1% வரியை நீக்க ஒப்புக்கொண்டுவிட்டது. மத்திய அரசே வசூலித்துப் பின்னர் பொதுக் கணக்கை
உருவாக்கி, நுகர்வோர் மாநிலத்திற்கும் உற்பத்தி மாநிலத்திற்கும் கொடுக்குமெனச் சட்டவரைவில்
திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு உற்பத்தி மாநிலமாக இருப்பதாலும், உற்பத்திப்
பொருட்களுக்கான புதிய வரி குறைவதாலும் மாநில அரசிற்கு ஆண்டிற்கு 9200 கோடி ரூபாய் இழப்பு
ஏற்படுவதைக் காரணமாகச் சொல்கிறது அதிமுக.
தன் மாநில நலன்கருதி அதிமுக முன்வைத்த குற்றச்சாட்டு மிகச் சரியானதே. இதேபோல
மகாராஷ்டிராவிற்கு ஆண்டிற்கு 20,000 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 10,000 கோடி ரூபாயும்,
ஹரியானாவிற்கு 3,000 ரூபாய் கோடிக்கு மேலாகவும் இழப்பு ஏற்படலாம். மற்ற மாநிலங்களை
பிஜேபி ஆள்வதால் மௌனம் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்தக் கட்டாயம் அதிமுகவிற்குக்
கிடையாது. மாநிலங்களுக்கான இந்த இழப்பை மத்திய அரசு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுசெய்யும்
என்ற உறுதியையும் கொடுத்துள்ளது. தற்போது மாநிலங்களுக்குச் சேவை வரி மூலம் கூடுதல்
வருவாயும் வர வாய்ப்புள்ளது. தமது மாநில நலனை முன்வைத்து எதிர்ப்பை அதிமுக பதிவு செய்ததை
வரவேற்கலாம். ஆனால், மத்திய அரசே GST கவுன்சிலில் இருக்கக்கூடாது என்றும், ஏற்கெனவே
இருந்த Empowered Committee மட்டுமே போதுமானது என்றும், ஜிஎஸ்டி மாநில உரிமைகளைப் பறிக்கிறது
என்றும், மாநிலப் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்றும் அதிமுக சொல்வதை ஏற்க
இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டு என்ற முறையை அதிமுக எதிர்க்கிறது. அதிமுகவின்
வாதம், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை உற்பத்தி செய்யும் மாநிலத்திற்கும்,
குறைந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கும், சரிசமமாக ஒரே ஓட்டு என்பது சரியானதல்ல
என்பதுதான். மேலும், மக்கள்தொகை விகிதத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து மாநிலங்களுக்கும்
ஒரே விதமாக ஒரு ஓட்டு என்ற முடிவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது அதிமுக.
அதிமுகவின் எதிர்ப்பால் தற்போதைய நிலையில் எந்தப் பலனும் கிடையாது. மேலும் உற்பத்தி
மாநிலங்களைக் காட்டிலும், மக்கள்தொகை அதிகமான உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்,
மத்தியப் பிரதேசம், ஒடிஸா, கேரளா போன்ற மாநிலங்கள் நுகர்வோர் மாநிலங்கள் என்ற இடத்தில்
இருப்பதால்தான் அந்த மாநிலங்கள் இது மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகப் பார்க்கவில்லை.
மற்ற மாநிலங்களைப் பொருத்தவரையில், மாநிலங்களுக்கு 2/3 பங்கு அதிகாரமுள்ளது என்பதால்,
தமது அதிகாரம் அதிகமாக இருப்பதாக நம்புகிறது. தத்தம் மாநிலங்களுக்கு வருமானம் அதிகமாக
புதிய GST வரிவிதிப்பு முறை உதவும் என்பதால்தான் மத்திய அரசுடன் ஒத்துழைத்துள்ளன என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவரக்கூடாது
என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு
மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் இவ்விஷயத்தில் பெரும்பாலான
மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான
வரிவிகிதத்தை அமைக்க வேண்டும். ஏழைகளைக் கணக்கில்கொண்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு
குறைந்தபட்ச வரி மட்டுமே விதிக்கப்படவேண்டும்.
எந்த வகையில் பார்த்தாலும் இந்தியாவின் புதிய வரிக்கொள்கை வரவேற்கப்படவேண்டியதே.
அற்ப அரசியல் காரணங்களைக் காட்டிலும், புதிய சரக்கு மற்றும் சேவை வரியால், பொதுமக்கள்
பெருவாரியான விஷயத்தில் பலனடைவார்கள். உலகப் பொருளாதார வளர்ச்சியில் தேசம் முக்கிய
இடத்தைப் பெறும். இந்த எளிய காரணங்களை முன்வைத்து ஒவ்வொரு இந்தியனும் இதைத் தாராளமாக
ஆதரிக்கலாம். பல ஆண்டுகளாக இழுத்து வந்த விஷயத்தை மோதியின் அரசு திறம்பட மாநில அரசுகளை
அனுசரித்து கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கும் வகையிலும் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார
வளர்ச்சியைக் கணக்கில்கொண்டும் இதை ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டிற்குள்ளாகக் கொண்டுவந்து
சாதனை படைத்துள்ளது.
உசாத்துணைகள்:
Leave a Reply