Posted on 6 Comments

பைரப்பாவின் ’பித்தி’: பெருந்துயர்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

நான் பைரப்பாவின்
பெயரை முதல்முறை பார்த்தது ஜெயமோகனின் புத்தகத்தில்தான். கன்னட இலக்கியம் என்றாலே கிரீஷ்கர்னாட்,
ஆனந்த மூர்த்தி என்றுதான் கல்விபுலத்தில் பேசுவார்கள். அவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள்
அல்லவா? பைரப்பாவின் பெயர் அதிகமாகப் புழங்கியது இல்லை. பைரப்பாவின் படைப்புகளுள் நான்
முதலில் வாசித்தது ‘ஆவரணா.’ பின்னர் ‘வம்சவ்ருக்ஷ’, ‘மந்த்ரா’, ‘பர்வம்’ எனத் தேடித்தேடி
படிக்கத் தொடங்கினேன். பைரப்பாவைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள முயன்றபோது அதிகம்
தகவல்கள் கிடைக்கவில்லை. தத்துவப் பேராசிரியர், சாஹித்ய அகாதமி பரிசு பெற்றவர், இடதுசாரி
இலக்கிய ஏதேச்சாதிகாரத்திற்கு எதிரானவர் என்ற அளவில்தான் சில இணையக் கட்டுரைகள் கிடைத்தன.
இந்நிலையில் பெங்களூருவில் ஒரு சிறு புத்தகக் கடையில் புத்தக அடுக்குகளைக் குடைந்துகொண்டு
இருந்தபோது பைரப்பாவின் சுயசரிதையான ‘பித்தி’யின் (Bhitti) ஆங்கில மொழிபெயர்ப்பு சிக்கியது.
எஸ்.ராமஸ்வாமி மற்றும் எல்.வி.சாந்தகுமாரி ஆகியோர் இணைந்து மொழிபெயர்த்த இந்த 660 பக்கப்
புத்தகத்தை நான் வாசித்த ஆகச்சிறந்த சுயசரிதைகளில் ஒன்று என்று எந்தத் தயக்கமும் இல்லாமல்
சொல்வேன்.


I
பித்தி என்ற கன்னட
வார்த்தைக்கு இங்கே சித்திரச் சீலை என்பது நெருக்கமான ஒரு பொருளைத் தரும்.
பைரப்பா ஷானுபோகர்களாக
(ஊர் கணக்கர்கள் மற்றும் மிராசுதாரர்கள்) இருந்த பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவர்.
பெரிய குடும்பம். ஆனால் அதிக அளவு வருமானம் இல்லை. ஷானுபோகர்தான் நில அளவீடு, குத்தகைக்
கணக்கு, வரி வசூல் போன்றவற்றை ஒழுங்கு செய்ய வேண்டும். ஆனால் பைரப்பாவின் தந்தைக்கு
இதிலெல்லாம் ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் ஊரைச் சுற்றுவதிலும் உணவகங்களுக்குச் சென்று
விதவிதமாக உண்பதிலும்தான் இருந்தது. பொறுப்பு என்பது சிறது கூட இல்லை. தலைமுறை தலைமுறையாக
இருக்கும் பதவியும் பறிபோய், பிச்சை எடுக்க வேண்டிய நிலை வருமோ என்ற எண்ணம் பைரப்பாவின்
தாயாருக்கு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்மணியே குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு
ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, ஒரு ஷானுபோகர் செய்ய வேண்டிய கணக்கு வழக்கு பார்க்கும்
வேலையைச் செய்கிறார். ஆண்களை விடவும் தெளிவாக ஆவணங்களைப் பராமரிக்கிறார். பைரப்பாவின்
தந்தை பெயருக்குத்தான் அதிகாரி. ஆனால் கிராம அதிகாரி செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும்
பைரப்பாவின் தாய்தான் செய்கிறார்.
தீண்டாமை, ஜாதிப்
பாகுபாடு ஆகியவற்றைக் குறித்து பைரப்பா காட்டும் சித்திரம் விசித்தரமானது. பிராம்மணர்கள்
பிராம்மணரல்லாத ஜாதியை சார்ந்தவர்கள் வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
எதையும் உண்ணக்கூடாது என்ற கட்டுப்பாடு மிகத்தீவிரமாக இருந்த காலம்.
ஒருமுறை
பைரப்பா அவரது பிராம்மணரல்லாத நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து உணவருந்தி விடுகிறார்.
இதனைத் தெரிந்துகொண்ட வைதீக வாத்தியார் ஏகக்கலாட்டா செய்கிறார். விஷயம் கேள்விபட்ட
பைரப்பாவின் அம்மா அவரது நண்பரின் தாயைத் திட்டுகிறாள். உணவு கொடுத்ததற்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்
தெரியுமாறு கொடுத்ததற்கு. ‘ஏதாவது தூணுக்குப் பின்னாலோ அல்லது வீட்டிற்குள்ளேயோ வைத்துக்
கொடுத்திருக்க கூடாதா’ (பக்கம் 13) என்று கேட்கிறார்.
ஜாதி ரீதியான பாகுபாடு என்பது
1940களில் நாம் நினைத்ததைப் போன்று இறுக்கமானதல்ல.
பிளேக் அவரது ஒரு
சகோதரனையும் ஒரு சகோதிரியையும் வாரிச் செல்கிறது. இந்த அகால மரணங்கள் பைரப்பாவைக் கடுமையாகப்
பாதிக்கின்றன. இதற்குப் பிறகு, பள்ளிப் படிப்பிற்காக பைரப்பாவை அவரது அம்மா தமது அண்ணனிடம்
ஒப்படைக்கிறார். போலிஸ்காரராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வைதீக/கோவில் காரியங்களில்
ஈடுபட்டு வரும் மாமாவிடம் சிக்கி பைரப்பா படாத பாடுபடுகிறார். ஒருமுறை மாமாவையும் ஒரு
வேலைக்காரப் பெண்மணியையும் கோவிலுக்குள் வைத்து ரசாபாசமான கோலத்தில் பார்த்துவிடுகிறார்.
அதற்குப் பிறகு அடி உதை அதிகமாகிறது. இதைத் தொடர்ந்து பைரப்பாவிற்குக் கடவுளைக் குறித்த
கேள்விகள் எழுகின்றன. கோவிலை அசுத்தப்படுத்தும், அவ்விடத்தைக் கள்ள உறவிற்குப் பயன்படுத்தும்
தன் மாமாவைத் தண்டிக்காத கடவுள் எத்தகைய கடவுள் என எண்ணுகிறார்.
மாமாவின் சித்திரவதையிலிருந்து
எப்படியாவது தப்பிக்க வேண்டும், தனது அம்மாவுடன் ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த
வேளையில்தான் அடுத்த இடி இறங்குகிறது. ஒருநாள் காலையில் பள்ளி செல்லும் வழியில் செய்தி
வருகிறது. பிளேக் நோயில் சிக்கி பைரப்பாவின் தாய் இறந்துவிட்டிருக்கிறார். தாளமுடியாத
துயருடன் அம்மாவின் கிராமத்திற்குச் செல்கிறார். தம்பி, தங்கைகள், பாட்டி மட்டுமே இருக்கிறார்கள்.
தந்தை எங்கு சென்றார் எனத் தெரியவில்லை.மிகுந்த துயருடன் இறுதிச் சடங்குகளைச் செய்து
முடித்துவிட்டு மாமாவின் ஊருக்குச் செல்கிறார். அவரது தாயின் மரணத்தோடு குடும்பத்தின்
பொருளாதார நிலை இன்னும் மோசமாகிறது. ஷானுபோகர் பதவி மற்றொருவர் வசம் செல்கிறது. இக்காலகட்டத்தில்
நடந்த விஷயங்களை அவர் தமது ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் பதிவு செய்துள்ளார்.

II
மாமாவின் கொடுமை
தாங்காமல் வரான்ன முறையில் தனது படிப்பைத் தொடர முடிவு செய்கிறார். சில ஆசிரியர்கள்
பரீட்சைக்கான பணத்தையும் பள்ளிக் கட்டணத்தையும் கட்ட முன்வருகின்றனர். உணவுக்கு வரான்னம்.
வரான்ன முறை என்பது அந்தக் காலத்தில் ஏழை மாணவர்கள் இடையே இருந்த ஒரு பழக்கம். ஒவ்வொரு
நாளும் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு மதிய உணவு வேளையில் உணவு உண்ணச் செல்வார்கள். ஏழு
நாட்களுக்கு ஏழு வீடுகள். வசதியான பலரும் இதனை ஒரு தர்ம காரியமாக எண்ணிச் செய்து வந்தனர்.
பைரப்பாவும் இந்த முறையைக் கைக்கொண்டார். தினம் ஒரு வீடு என்று ஏழு வீடுகளைப் பிடித்துக்கொண்டார்.
ஆனால் அதிலும் பல பிரச்சினைகள். சில வீடுகளில் பெண்கள் இதனைக் கூடுதல் செலவாகவும் சுமையாகவும்
கருதினர். சில வீடுகளில் பிச்சைக்காரனைப் போல நடத்தினர். சில வீடுகள் பள்ளியிலிருந்து
வெகு தொலைவு. வரான்ன நாட்களில் நடந்த வேடிக்கையான விஷயம் ஒன்றை பைரப்பா கூறுகிறார்.
அவர் சென்ற வீடுகளில் ஒரு வீடு செல்வச் செழிப்பான வீடு. அங்கு உள்ளவர்கள் பைரப்பாவைத்
தங்களுடன் சமமாக அமர்ந்து உணவு உண்ணுமாறு வற்புறுத்துவார்கள். அவர்கள் கனமான காலை உணவை
உண்டிருப்பதால் எந்தப் பொருளை மதிய உணவிற்குப் பரிமாறினாலும் ஒரு கரண்டி கூட எடுத்துக்கொள்ளாமல்,
போதும் போதும் எனக்கூறி விடுவார்கள். காலை உணவே செரிக்காமல் இருக்கும் அவர்களுக்கு
ஒரு கரண்டி உணவு போதும். ஆனால் முந்தைய நாள் மதிய உணவிற்குப் பிறகு முழுதாக 24 மணி
நேரம் கழிந்து உணவிற்காகக் காத்திருக்கும் பைரப்பாவின் நிலை? வேலையாட்களும் சிறிதளவுதான்
பரிமாறுவார்கள்.
இப்படிச் சிக்கிச்
சீரழிந்து கொண்டிருந்கும் பைரப்பாவிற்கு ஹோட்டல் முதலாளி ஒருவர் ஒரு யோசனையைக் கூறுகிறார்.
‘நீ பிராம்மணனாகப் பிறந்தவன்தானே?
உனக்குப் பிச்சை எடுத்துப் படிக்க என்ன தயக்கம்?’
மதுக்கர விருத்தி என்று கூறுவார்கள்.
‘நான்கு வீட்டிற்குச் சென்று கைப்பிடி அரிசியை பவதி பிக்ஷ தேஹிம் எனக்கூவிப் பெற்றுக்கொள்.
பதினைந்து நிமிட வேலை. வெறும் அரிசி என்றால் மக்களும் தருவார்கள். பின் உனது வசதிப்படி
நேரம் கிடைக்கும்போது சமைத்துச் சாப்பிட வேண்டியதுதானே’ என்று கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட
பைரப்பா மறுநாளில் இருந்து தம் உணவிற்காக வீடு வீடாகச் சென்று யாசிக்கத் தொடங்குகிறார்.
அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு சமைத்து உண்டுவிட்டு அவசர அவசரமாகப் பள்ளி
சென்று படிக்கிறார். இதற்கிடையே தனி வகுப்புகளும் எடுத்து, தனது தம்பி தங்கைகளுக்கும்
பணம் அனுப்புகிறார். ஆனால் இதற்கும் ஒரு பிரச்சினை வருகிறது. ஒருநாள் பைரப்பாவின் தந்தை
அங்கு வந்து அவரிடம் பணம் கேட்கிறார். தானே பிச்சை எடுத்துப் படிப்பதைச் சுட்டிக்காட்டி
பைரப்பா மறுக்கிறார். உடனே பைரப்பாவின் அப்பா, ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் சென்று,
பைரப்பாவிற்கு இன்னும் உபநயனம் (பூணூல் அணியும் சடங்கு) ஆகவில்லை; ஆதலால் அவனுக்குப்
பிச்சை இடக்கூடாது; மேலும் பைரப்பா அணிந்திருப்பது கள்ளப் பூணூல் எனக் கூறி அதற்கும்
வேட்டு வைக்கிறார்.
III

இதற்கிடையில் அடுத்த
பெருந்துயர் வருகிறது. பைரப்பாவின் தம்பியும் பிளேக் நோயால் பலியான செய்தி வருகிறது.
அப்போது அந்தச் சிறுவனுக்கு வெறும் ஏழு வயதுதான் ஆகி இருந்தது. எண்ணற்ற கனவுகளோடு இருந்தான்.
பைரப்பாவிற்கு விரைவில் வேலை கிடைத்துவிடும்; அதன் பிறகு ஒருவேளை உணவையாவது திருப்தியாக
உண்ணலாம் என் எண்ணி இருந்தான். இரவோடு இரவாக ஊர் போய்ச் சேர்ந்த போது, அவரது பாட்டியும்
தங்கையும் மட்டுமே இறந்த உடலுக்குக் காவலாக இருப்பதை பைரப்பா காண்கிறார். அக்கம்பக்கத்துக்கு
வீடுகளில் உள்ளவர்கள் யாரும் உதவ வரவில்லை. துக்கம் விசாரிக்கக் கூட இல்லை. தம்பியின்
மரணம் ஒரு புறம் வேதனையைத் தந்தால் மறுபுறம் அவனது இறுதிச்சடங்கை எப்படிச் செய்வது
என்ற கேள்வி பைரப்பாவை மிரட்டுகிறது. வழமைபோல் அவரது தந்தை செலவுக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார்.
ஏனைய உறவினர்களும் கையை விரித்துவிட்டனர்.
கரடி என்றழைக்கப்படும்
பழைய பணியாள் ஒருவர் மட்டும்தான் உதவி செய்கிறார். அவர் குருப சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம்
சென்று நிலவரத்தைக் கூறிச் சிறிது விறகை வாங்கி வருகிறார். கரடியின் உதவியோடு இறுதிச்
சடங்குகளைச் செய்யத் தொடங்குகின்றனர். சடங்குகளின் ஒரு பகுதியாக வாய்க்கரிசி போடுவதற்குக்
கூட வீட்டில் அரிசி இல்லை. மறுபடியும் கரடிதான் உதவுகிறார். அங்கும் இங்கும் அலைந்து
கெஞ்சிக் கூத்தாடி மூன்று பிடி அரிசியை வாங்கிக்கொண்டு வருகிறார். வாய்க்கரிசி இட்ட
பிறகு பைரப்பா தமது தம்பியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு சுடுகாட்டிற்குச் செல்கிறார்.
விறகுகளைச் சுமந்துகொண்டு கரடியும் உடன் வருகிறார். தீ மூட்டிய பிறகு, பைரப்பாவே இரவு
முழுவதும் சிதைக்கருகில் இருந்து நாய் நரி எதுவும் உடலைக் கௌவிக் கொண்டு போகாதவாறு
காவல் புரிகிறார்.
IV

அகால மரணங்கள், விடாது துரத்தும்
துயரம் ஆகியவை பைரப்பாவைத் தத்துவம் நோக்கிச் செலுத்துகின்றன. எனவே அவர் கல்லூரியில்
தத்துவத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார். அவரது விண்ணப்பத்தைப்
பரிசீலித்த துறைத்தலைவருக்கும் அவருக்குமான விவாதம் குறிப்பிடத்தக்கது. துறைத்தலைவர்
கூறுகிறார்: “நண்பரே, தத்துவத்தால் உங்களுக்கு சாப்பாடு கிடைக்காது என்பது உங்களுக்குத்
தெரியாதா? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே. உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும்
என விரும்புகிறேன்.”
பைரப்பாவின் பதில்: “தத்துவத்தால்
சாப்பாடு கிடைக்காது என்றால், நான் ஒரு ஹோட்டலைத் திறந்து சாப்பாட்டைச் சம்பாதித்துவிட்டுப்
போகிறேன். மரணம், நேர்மை, தர்மம், வாழ்க்கை மதிப்பீடுகள், கடவுள், வாழ்வின் லட்சியம்
போன்ற பிரச்சினைகள் என்னைக் கொன்றுகொண்டிருக்கின்றன. நான் தத்துவத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக்
காரணம், இக்கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டடையத்தான்.

இதுவரை அவரைத் துரத்தித் துன்புறுத்தி
வந்த துரதிர்ஷ்டம் இப்போது வேறு ஒரு வடிவை எடுக்கிறது. அது பிராம்மண வெறுப்பு. பைரப்பாவின்
சுயசரிதையின் மூலம் கர்நாடகத்திலும் தமிழகத்திற்கு சற்றும் குறையாத அளவு இந்த இன வெறுப்பு
இருந்தது எனத் தெரிகிறது. பல்கலைக்கழகத்திலுள்ள சில்லறை முற்போக்குப் பேராசிரியர்கள்
எல்லாம் தத்துவத் துறையையே அந்தணர்களின் கூடாரமாகத்தான் பார்க்கிறார்கள். அத்துறையில்
மாணவர்கள் யாரும் சேராதபடி உள்ளடி வேலைகளைச் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தத்துவத்
துறையை சமூகவியல் துறையுடன் இணைக்கவும் செய்கிறார்கள். பைரப்பா பல்வேறு தொல்லைகளுக்கு
ஆளாகிறார். மிகுந்த துயர்களுக்கு இடையேயும் சிறப்பாகக் கற்கும் அவருக்கு எந்த உதவித்தொகையும்
கொடுக்கப்படவில்லை. ஆனால் பொழுதுபோக்கிற்காகக் கல்லூரிக்கு வரும் பெரிய செல்வந்தர்களின்
பிள்ளைகளுக்கு உதவித்தொகைகள் வாரி வழங்கப்படுகின்றன. அவர்கள் அத்தொகையை சிகரெட் குடிப்பதற்கும்,
ஊர் சுற்றுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இது குறித்து முறையிடும் பைரப்பாவிற்கு மூத்த
பேராசிரியர் ஒருவர் அளிக்கும் பதில்: “பிராம்மணர்கள் இதுவரைக்கும் அனுபவித்ததெல்லாம்
போதும். இனி அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவிடமாட்டேன்.”

பைரப்பா தங்க மெடலுடன் தேர்ச்சி
பெறுகிறார். ஆனால் அந்தத் தங்க மெடலைக் கூடப் பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் அவரால்
பெற முடிகிறது. பைரப்பாவிற்கு அந்த மெடலை, இன வெறுப்பினால் கொடுக்க விரும்பாத பல்கலைக்கழகம்,
அவ்வருடத்திலிருந்து தத்துவத்திற்கான மெடலையும் சமூகவியல் மாணவனுக்குத்தான் கொடுக்கவேண்டும்
என்று சட்டம் இயற்றுகிறது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் வழிக்கு வருகிறார்கள்.
V

வேலைக்குச் செல்வத்திலும், பின்னர்
வேலை செய்த இடங்களிலும் கூட ஏராளமான இடர்ப்பாடுகளை பைரப்பா சந்திக்கிறார். இதற்கிடேயே
இலக்கிய உலகிலும் பிரவேசிக்கிறார். கதை சொல்லுதல் என்பது பைரப்பாவிற்குச் சிறு வயதிலிருந்தே
இருக்கும் ஆற்றல். ஒருகாலகட்டத்தில் ஊர்ஊராகச் சென்று கதைசொல்லியும் தமது கல்விக்கான
கட்டணத்தைச் சேர்த்திருக்கிறார். இந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. இலக்கிய உலகத்திலும்
ஜாதி மற்றும் சித்தாந்த நிலைப்பாடுகளுக்காக குறிவைத்துத் தாக்கப்படுகிறார் பைரப்பா.
1975 பைரப்பாவின் Daatu நாவல் சாஹித்ய அகாதமி பரிசைப் பெறுகிறது. இது அவரைத்
தொடர்ந்து தாக்கி வந்த முற்போக்கு முகாமைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கு எரிச்சலைத் தருகிறது.
தினமும் இரவு நேரத்தில் அவரது வீட்டை நோக்கிக் கற்கள் வீசப்படுகின்றன.
காவல்துறையில் புகாரளித்தும் எந்தப் பயனும் இல்லை.
வேறு வழியில்லாமல் பைரப்பா தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார். அவரது
மனைவி இச்சம்பவத்தால் பயந்து பதற்றமடைந்து உறங்காமல் இருக்கத் தொடங்குகிறார். இதனால்
அவரது மனைவி உறக்கமின்மை நோய்க்கு ஆளாகி சுமார் இரண்டு வருடங்கள் மனநல மருத்துவரிடம்
சிகிச்சை பெற நேரிடுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் குற்றவாளிகளைக்
கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் இரு எளிய தலித் இளைஞர்கள். அவர்களுக்கும் பைரப்பாவிற்கும்
எந்தப் பகையும் இல்லை. ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள், அந்த இளைஞர்களை அழைத்து, பைரப்பா
தமது Daatu நாவலில் தலித்துக்களைக் குறித்துத் தவறாக எழுதி இருப்பதாகக் கூறி அவருக்கு
ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று என மூளைச்சலவை செய்திருக்கின்றனர். அப்போது அவசரகால
நிலை என்பதால் போலீஸாருக்கு வானளாவிய அதிகாரம் இருந்தது. போலீசார் பைரப்பாவிடம் இந்த
இளைஞர்களையும், அவர்களைத் தூண்டிவிட்ட அறிவுஜீவிகளையும் தடுப்புக்காவலில் வைத்து ஒரு
பாடம் புகட்டலாம் என்று கூறுகின்றனர். ஆனால் பைரப்பா அந்த அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை
பாதிக்கப்படக்கூடாது என்றுகூறி அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துகிறார்.

கன்னட இலக்கிய உலகில் நிலவி வந்த
ஏராளமான சில்லறை அரசியல்களை, ஒரு சிறு புன்னகையுடன் பைரப்பா சுட்டிக் காட்டுகிறார்.
அவரது குரல் எப்போதும் இலக்கிய உலகில் உள்ள குழு அரசியலுக்கு எதிராகவே இருந்தது. பைரப்பா
கூறுகிறார்: “இலக்கியம் ஒருகாலும் கூட்டு முயற்சியாக/குழு வெளிப்பாடாக இருக்கமுடியாது.
அது ஒரு அமைப்புச் செயல்பாடும் அல்ல. ஒவ்வொரு எழுத்தாளனும் அவனவனது உணர்வுக்கும் பார்வைக்கும்
தக்கவாறு எழுத வேண்டும்.” (பக்கம் 584). அவரை ஓர் இலக்கிய இதழின் ஆசிரியராக்க முயன்றவர்களிடம்,
“இலக்கிய இதழ் நடத்துவது இலக்கியத்தை உருவாக்க உதவும் என்று தோன்றவில்லை. இதழ்கள் இலக்கியப்
படைப்பாற்றலுக்குத் தடையாக இருக்க வாய்ப்பு அதிகம்” (பக்கம் 584) என்று கூறுகிறார்.
எந்த ஒரு விஷயத்தை நிராகரிப்பதற்கு முன்னும் அதனை ஐயமின்றி முழுமையாகக் கற்றுத் தெரிந்திருக்கவேண்டும்
என்பதும் அவரது கருத்து.

VI

பைரப்பாவையும்
அவரது படைப்புகளையும் இலக்கிய அரசியல்வாதிகள் அவர்களால் முடிந்த அளவிற்கு இருட்டடிப்பு
செய்தனர். இன்றளவும் பைரப்பா கர்நாடகத்திற்கு வெளியே அதிகம் விவாதிக்கப்படாததற்கு,
அவருக்கு எதிராக வெறுப்பரசியல் செய்த யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி முக்கியக் காரணம். ஆனால்
இத்தகைய இருட்டடிப்புகளைத் தாண்டி, பல வாசகர்கள் பைரப்பாவைக் கண்டடைந்திருக்கின்றனர்.
இலக்கியம் என்பது ஓர் அரசியல் செயல்பாடு அல்ல என்பதற்கு இது ஒரு சான்று. இன்று
Subaltern Autobiography என்பது உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய வகையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதற்கான இந்திய வரைமுறைகள் மிகவும் குறுகலானவை. பின்காலனிய திறனாய்வாளர்கள் அந்தணக்
குலத்தில் பிறந்து, பேராசிரியராகப் பணிபுரிந்து, இடதுசாரி அரசியல் சார்பு நிலைகள் இல்லாமலிருக்கும்
ஓர் ஆண் எழுத்தாளனை, Subaltern அல்லது விளிம்பு நிலை வாழ்க்கையை வாழ்ந்தவன் என்று ஏற்றுக்
கொள்ளவே மாட்டார்கள். ஆனால் பைரப்பாவின் சுயசரிதை இத்தகைய முன்முடிவுகளைத் தகர்க்கும்
ஆற்றல் பெற்றது. பைரப்பாவிடம் இருக்கும் ஆச்சரியப்படத்தக்க குணம், வாழ்க்கையில் அவருக்குப்
பெரும்தீங்கு செய்தவர்களைக் குறித்துக்கூடக் கசப்போடு எழுதவில்லை என்பதுதான். தவிர,
துயர்களின் நடுவே தத்தளித்த காலங்களிலும் அவர் சுயபச்சாதாபத்தில் மூழ்கவில்லை. மேலும்
பைரப்பா தமது சுயசரிதையினூடே ஒரு மாற்று வரலாற்றையும் கூறுகிறார். உதாரணம்: கிராமங்களில்
ஜாதி வேறுபாடு என்பது பெயரளவிற்குத்தான் இருந்தது. தமக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம்
பைரப்பா உதவி கேட்பது, கல்லே கௌடா, கரடி போன்ற பிற சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம்தான்.

இந்தக் காரணங்களுக்காக அவரது ‘பித்தி’ தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

6 thoughts on “பைரப்பாவின் ’பித்தி’: பெருந்துயர்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

  1. நல்ல கட்டுரை. குடும்பம் சிதைகிறது நாவலில் இதிலுள்ள இளமைகால சித்திரம் ஓரளவு முழுமையாகவே வருகிறது. ப்ளேக், சகோதர சகோதரிகளின் மரணம், வெகுவாக அமைத்யிழக்க செய்த நாவல்.

  2. மிகசிறப்பான பதிவு … பதிவு வாசிக்கும் போது Satyajit Ray பாடம் பாா்பது போல் கருபபு ெவள்ை காட்சியாக எண்ணங்கள் ஓடியது. அனீஷ் கிருஷ்ணன் நாயர், உங்களின் பேச்ை நாகா்ோவிலில் நடந்த அசோகமித்திரன் அஞ்சலி விழா கேட்ியிருக்கிறனே் நன்றாக இருந்தது.

  3. பைரப்பா படைப்பை குறித்து ஜெயமோகனின்"கண்ணீரை பின்தொடர்தல்"நூலில் படித்துள்ளேன் ஆனால்,உங்களின் இந்த பதிவின் மூலமாக அவரின் துன்பமான வாழ்க்கையை அறிந்து மனசு வலித்தது நல்ல முறையில் நல்ல கட்டுரை சுயசரிதயை படித்தது போல் இருந்தது.

  4. பைரப்பா படைப்பை பற்றி ஜெயமோகனின் "கண்ணீரை பின்தொடருதல்"நூலை படித்து தெறிந்துகொண்டேன்.ஆனால்,உங்களின் இந்த கட்டுரையின் மூலமாக அவரின் துன்பம் நிறைந்த வாழ்க்கையை படிக்கும் போது மனது வலித்தது அவரின் சுயசரிதை படித்தது போல் இருந்தது உங்கள் கட்டுரை.

  5. அன்புள்ள நண்பருக்கு,

    நானும் திரு.ஜெயமோகன் அவர்கள் மூலம் தான் பைரப்பா அவர்களின் எழுத்தை அறிந்தேன்.உங்களின் 'பித்தி'யின் மூலம் மேலும் அவரைப்பற்றி நன்கு அறிய முடிந்தது.மிக்க நன்றி.

  6. அருமையான பதிவு.தமிழில் பைரப்பாவை பற்றிய மிக சிறப்பான கட்டுரை.

Leave a Reply